திமுகவில், சொம்படிக்க கவிஞர்கள், மேடைப் பேச்சாளர்கள், பத்திரிக்கையாளர்கள், உரையாசிரியர்கள், பாடலாசிரியர்கள், பட்டிமன்றப் பேச்சாளர்கள் என்று பஞ்சமே கிடையாது. அறிவாலயம், கோபாலபுரம் அல்லது சிஐடி காலனிப் பக்கம் போனாலே காது கிழியும் அளவுக்கு ஜால்ரா சத்தம் கேட்கும். அதுவும் கடந்த ஜுன் 3 அன்று போயிருந்தால், காதில் ரத்தம் வரும் அளவுக்கு ஜால்ரா அடித்தார்கள் உடன்பிறப்புகள்.
அதிமுகவை எடுத்துக் கொண்டால், இங்கே சொம்புகள் மிகக் குறைவு. உடனே, அதிமுக ஒரு சுயமரியாதை உள்ள கட்சி என்று அவசரப்பட்டு முடிவுக்கு வந்து விடாதீர்கள். சொம்படிப்பதற்குக் கூட உருப்படியான ஆட்கள் அங்கே கிடையாது. சொம்படிப்பதற்குக் கூட பயப்படுவார்கள். எந்த அளவு சொம்படிப்பது சரியாக இருக்கும்… எது அதிகம்…. எது மிதமான அளவு… எது குறைவு… அதிகமாக அடித்தால் கோபித்துக் கொள்வார்களோ… மிதமாக அடித்தால் தெனாவட்டாக சொம்படிக்கிறாயா என்று ஏசுவார்களோ… குறைவாக சொம்படித்தால், இவ்வளவு கம்மியாகவா சொம்படிப்பது என்று பதவியை விட்டுத் தூக்கி விடுவார்களோ என்று எதற்க்கெடுத்தாலும் பயம், பயம் பயம்தான். எடுக்க பயம், கொடுக்க பயம், நடிக்க பயம், அடிக்க பயம் என்பது போல, அதிமுகவில் சொம்படிப்பதற்குக் கூட பயம். இதனால், சொம்படிக்கும் வேலையை சரத்குமார், தா.பாண்டியன், செ.கு.தமிழரசன் போன்ற கூட்டணிக் கட்சித் தலைவர்கள் செய்வார்கள். அவர்கள் அடிக்கும் சொம்பை ஆனந்தமாக ரசிப்பார் ஜெயலலிதா.
பத்திரிக்கையாளர்களை எடுத்துக் கொண்டால், அவர்கள் அதிமுகவுக்கும் புரட்சித் தலைவிக்கும் அடிக்கும் சொம்பு அலாதியானது. திமுக ஆட்சிக் காலத்தில், கருணாநிதிக்கு காது கிழியும் அளவுக்கு அடித்த சொம்பை இப்போது அப்படியே திருப்பிப் போட்டு அடிக்கிறார்கள். அதிமுகவுக்கு சொம்படிப்பதற்கு, பெரிய அளவில் சிரமப்பட வேண்டாம். கருணாநிதியை விமர்சித்தோ, திட்டியோ செய்தி வெளியிட்டாலே, அது அதிமுகவுக்கு அடிக்கப்படும் சொம்புதான்.
இன்று நாம் பார்க்கப் போவது, ஒரு பத்திரிக்கையாளர் அடித்த சொம்பைப் பற்றி. அந்தப் பத்திரிக்கையாளர் கட்சி சார்ந்தவர் அல்ல. தமிழ்ப் பத்திரிக்கையாளரும் அல்ல. தற்போது முழு நேர பத்திரிக்கையாளர் தொழிலை விட்டு விட்டு வழக்கறிஞராக பணி புரிகிறார். அவ்வப்போது ஆங்கில ஊடகங்களில் தனது ஆழ்ந்த அரசியல் அறிவை வெளிப்படுத்தும் வகையில் கட்டுரைகள் எழுதுவார். அப்படி அவர் எழுதிய கட்டுரையில் ஒன்றைப் பற்றித்தான் நாம் இன்று பார்க்கப் போகிறோம்.
இதில் வருத்தத்திற்குரிய வேதனையான விஷயம் என்னவென்றால், இந்த சொம்புக் கட்டுரை வந்த பத்திரிக்கை டெஹல்கா. ஊடகத் துறையில் தனக்கென ஒரு தனி இடம் பிடித்து, ஸ்டிங் ஆபரேஷனின் வலிமை என்ன என்பதை, உலகுக்கு உயர்த்தி இன்றும் ஆங்கில வார இதழ்களில் ஒரு தனி இடத்தில் இருக்கும் டெகல்கா இதழில்தான் இந்த சொம்புக் கட்டுரை வெளி வந்திருக்கிறது. அந்த வேதனையை ஒரு புறம் வைத்து விட்டு, சொம்புக் கட்டுரையைப் பார்ப்போம். இணைப்பு
கட்டுரையின் தலைப்பே சிறப்பு. “ஏன் மோடி மட்டும் ? அம்மா ஏன் கூடாது ?” இந்தியாவுக்கு பெரிய அளவில் அறிமுகமாகியிராத தேவ கவுடாவும், ஐ.கே.குஜ்ராலுமே பிரதமராகும்போது, ஜெயலலிதா பிரதமர் ஆக வாய்ப்பு உள்ளதுதான் யாரும் மறுக்க முடியாது. ஆனால், 2014 தேர்தல் முடிவுகளை வைத்துதான் இது குறித்த எந்த முடிவையும் கூற முடியும். அது வரை அதிமுக அடிமைகள்தான், அம்மாதான் இந்தியாவுக்கே வழி காட்ட வேண்டும். அம்மாவால் மட்டும்தான் நாட்டை ஆள முடியும் என்று பேசிக்கொண்டிருப்பார்கள். கிட்டத்தட்ட ஒரு அதிமுக அடிமை போலவே கட்டுரையின் தலைப்பை வைத்திருக்கிறார் சஞ்சய் பின்டோ.
மோடி அடுத்த பிரதமரா என்று தொடர்ந்து எழுதி வரும் ஊடகங்கள், தென்னிந்தியாவின் ஒரு சக்திவாய்ந்த தலைவரும் அப்பதவிக்கு போட்டி போடுவாரா என்பதை இன்னும் உணரவில்லை என்றுதான் கட்டுரையை தொடங்குகிறார். இந்தியாவில் இரண்டு பெரிய கட்சிகள் என்று எடுத்துக் கொண்டால், காங்கிரஸ் மற்றும் பிஜேபி. காங்கிரஸில் ராகுல் காந்தியை அடுத்த பிரதமர் என்று சொல்வது இயல்பு. அதே போல மோடி பிரதமராக வேண்டுமென்று, சங் பரிவாரங்கள் கடந்த சில வருடங்களாகவே ஒரு பெரிய பிம்பத்தை கட்டமைத்துள்ளன. ஆனால் ஜெயலலிதா பிரதமராவார் என்று அதிமுக அடிமைகளைத் தவிர வேறு யாராவது சொல்கிறார்களா என்ன ? தேர்தலுக்குப் பின் வரும் சூழல்களைப் பொறுத்துத்தான் ஜெயலலிதாவுக்கு பிரதமராக 2 சதவிகித வாய்ப்பாவது இருக்கிறதா இல்லையா என்பதை முடிவு செய்ய முடியும். ஆனால், இவர் கட்டுரையின் தொடக்கமே, ஜெயலலிதா பிரதமராவதன் சாத்தியம் குறித்து ஊடகங்கள் இனிதான் விழித்தெழ வேண்டும் என்கிறார்.
அடுத்ததாக, மூன்றாவது அணி என்ற கருத்தை வைத்துப் பார்க்கையில், ஜெயலலிதா கிங் மேக்கராக அல்லாமல் அவரே ஒரு ராணியாக உருவாவதன் சாத்தியத்தை மறுக்க முடியாது. தேவ கவுடா போல, அம்மா என்ன வேண்டும் என்ற பட்டியலை டெல்லிக்கு அனுப்புவதற்கு பதிலாக 7 ரேஸ் கோர்ஸ் சாலையில் அமர்ந்து அதையெல்லாம் செய்து கொண்டிருப்பார் என்கிறார்.
ஜெயலலிதா மின் வெட்டுப் பிரச்சினையை மட்டும் சரி செய்து, இலவச மிக்சி, க்ரைண்டர், லேப்டாப் போன்றவற்றை ஓடச் செய்தாரென்றால் அம்மாவுக்கு 30க்கு குறையாத சீட்டுகள் கிடைக்கும்.
நீங்கள் எப்போது பிரதமராவீர்கள் என்ற நேரடிக் கேள்வியை கேட்ட இந்தியாவின் அரிதான பத்திரிக்கையாளர்களில் நானும் ஒருவன். அவ்வாறு கேட்டபோது, நோ கமென்ட்ஸ், ஆனால் உங்கள் பாராட்டுக்களுக்கு நன்றி என்று கூறினாராம். இப்படி ஒரு மொக்கையான கேள்வி கேட்டதற்கு சஞ்சய் பின்டோ நமது எம்.ஜி.ஆரில்தான் பணியாற்ற வேண்டும்.
ஜெயலலிதா எப்படி சிறந்த பிரதமராக இருப்பார் என்பதற்கான பத்து காரணங்களை பட்டியலிடுகிறார் சஞ்சய் பின்டோ. அவைகள் பின்வருமாறு.
முதல் காரணம். ஜெயலலிதாவின் தலைமைப் பண்புகளும், பெரும்பாலான தலைவர்கள் அவரை ஏற்றுக் கொள்ளுவதும் ஒரு முக்கிய காரணம். இடது சாரித் தலைவர்கள் அப்துல் கலாமை இரண்டாவது ஜனாதிபதியாக்குவதற்காக, அவர் வீடு தேடி வந்ததே இதற்கு சாட்சி. பி.ஏ.சங்மாவை ஜனாதிபதி ஆக்க வேண்டும் என்று முதல் முறையாக அறிவித்தவர் ஜெயலலிதா. இது குறித்து எல்.கே.அத்வானியே தலைமைச் செயலகம் வந்து ஜெயலலிதாவோடு விவாதித்தார்.
ஜெயலலிதாவின் தலைமைப் பண்புகள் என்னென்ன என்பதை அதிமுக அடிமைகள் விளக்கிச் சொல்வார்கள். தன்னை விட வயதில் மூத்தவர்களைக் கூட காலில் விழச் செய்து புளகாங்கிதம் அடையும் சிறந்த குணத்தை தலைமைப் பண்பென்கிறாரா சஞ்சய் என்று தெரியவில்லை. அவசரக் குடுக்கை போல, பி.ஏ.சங்மாவை குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவித்து, அந்த ஆணை மண்ணைக் கவ்வ வைத்ததுதான் தலைமைப் பண்பாம்.
இரண்டாவது காரணம். பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களோடு இவருக்கு இருக்கும் நெருக்கமான நட்பு. சமாஜ்வாதிக் கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், சிபிஎம்மின் பிரகாஷ் காரத், திரிணாமூல் காங்கிரஸின் மம்தா பானர்ஜி போன்றவர்களோடு இருக்கம் நல்ல உறவு… இதைத்தாண்டி, வேறு வழியில்லை என்ற காரணத்தாலும், அம்மா சிறந்த பிரதமராவார். மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு கட்சிகளை ஒருங்கிணைத்ததே இதற்கு சாட்சி.
அகிலேஷ் யாதவுக்கும், ஜெயலலிதாவுக்கும் ஒரே ஒரு முறை சென்னையில் சந்திப்பு நடந்தது. அது மரியாதை நிமித்தமான சந்திப்பு. இப்படி ஒரு சந்திப்பு நடந்ததால், இவர்கள் இருவருக்கும் நல்ல உறவா ? இந்த சந்திப்புக் காரணமாக, தன் தந்தை முலாயம் சிங் யாதவின் நீண்ட நாள் கனவான பிரதமர் பதவியை, ஜெயலலிதாவுக்கு விட்டுக் கொடுப்பார்களா… ? மம்தா பானர்ஜி, ஜெயலலிதாவை பிரதமராக்கி விட்டு, பஞ்சு மிட்டாய் சாப்பிட்டுக் கொண்டிருப்பாரா… ? மம்தாவுக்கு பிரதமர் ஆகும் ஆசை இருக்காதா ? புதுதில்லியில் நடந்த முதல்வர்கள் மாநாட்டில், மணியடித்தார்கள் என்று ஜெயலலிதா வெளியேறியபோது, ஒரே ஒரு மாநிலத்தின் முதல்வராவது ஜெயலலிதாவுக்கு ஆதரவு தெரிவித்து வெளியேறினாரா ? இதுதான் ஜெயலலிதாவின் நல்ல உறவின் லட்சணம். இப்படியெல்லாம் எழுத, சஞ்சய் பின்டோவுக்கு அறிவு இருக்கிறதா இல்லையா என்று தெரியவில்லை.
மூன்றாவது காரணம். இரும்புப் பெண் என்று அழைக்கப்பட்டாலும், தன் எதிரிகளையும், விமர்சகர்களையும் நெருங்கிய நண்பர்களாக மாற்றும் அற்புதத் திறன் படைத்தவர். மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை 18 மாதங்கள் போட்டா சட்டத்தின் கீழ் சிறையிலடைத்தார் ஜெயலலிதா. வெளியே வந்து இந்த பாசிச அரசை எதிர்ப்பேன் என்றார். சில மாதங்களில் அம்மாவோடு கைகோர்த்து, தமிழக அரசியல் வரலாற்றில் இதைப்போன்ற பொன்னான தருணம் இருக்க முடியாது என்றார். 2011 தேர்தலில் தொகுதிப் பங்கீடு சிக்கல் காரணமாக, தேர்தலையே புறக்கணித்தாலும், இப்போதும் ஜெயலலிதாவை தன்னுடைய சகோதரியாகவே வைகோ பார்க்கிறார்.
இது ஒரு காரணமா ? ஒரு மரை கழன்ற லூசுப்பயல் கூட, ஜெயலலிதா பிரதமராவதற்கு இதை ஒரு காரணமாகச் சொல்வானா ? வைகோ அம்மாவுக்கு விசுவாசமான அடிமையாக இருப்பதால், ஜெயலலிதா பிரதமராகி விடுவாரா இல்லை பிரதமராகும் தகுதியை அடைந்து விட்டாரா ? 18 மாதங்கள் சிறையிலிருந்து வெளியே வந்து, தான் சிறையிலிருந்து வெளி வருவதற்கு காரணமாக இருந்த திமுகவோடு சேராமல், இறுதி நேரத்தில், அதிமுக பக்கம் ஏன் தாவினார் என்பதை வைகோதான் விளக்க வேண்டும். இதையெல்லாம் ஜெயலலிதா பிரதமராக ஒரு காரணமாக சொல்கிறார் சஞ்சய் பின்டோ.
நான்காவது காரணம். இந்தியாவில் அரசியல்வாதிகளின் சராசரி வயதைக் கணக்கிடுகையில், 65 வயது ஜெயலலிதா இளமையானவர். மேலும், இவர் கட்சியின் மீது வைத்திருக்கும் முழுமையான கட்டுப்பாடு இவருக்கு பின்னாளில் பல பிரதமர்களுக்கு ஏற்பட்டது போன்ற சிக்கல்களை ஏற்படுத்தாது.
65 வயது. இது ஒரு காரணமா ? என்ன லாஜிக் இது ? 65 வயதில் இளமையான தலைவராக இருப்பதால் ஜெயலலிதா பிரதமராவாராம். எந்த முட்டாளாவது இப்படி ஒரு காரணத்தை சொல்லுவானா ? கட்சியில் முழுக்க முழுக்க அடிமைகளை மட்டுமே வைத்திருந்தால், கட்சி கட்டுப்பாடாகத்தான் இருக்கும். ஒரு பத்திரிக்கையாளராக இதைச் சுட்டிக்காட்டாமல், கட்சியை கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறார் என்று எழுதும், சஞ்சய் பின்டோ அதிமுக அடிமையா பத்திரிக்கையாளரா ?
ஐந்தாவது காரணம். மிக மிக கடுமையாக நடவடிக்கை எடுக்கக் கூடிய திறமையான நிர்வாகி என்பதை அனைவரும் ஒப்புக் கொள்வர். எப்போது சாட்டையை சுழற்ற வேண்டுமோ அப்போது சுழற்றுவார்.. வீரப்பனை ஒழித்ததாகட்டும், ஒரு லட்சம் அரசு ஊழியர்களை பணி நீக்கம் செய்ததாகட்டும், கூடங்குளம் போராட்டத்தை ஒடுக்கியதாகட்டும். அம்மாவின் அகராதியில் மென்மையான நடவடிக்கை என்பதே கிடையாது.
இந்த பரதேசியை கெட்ட வார்த்தையில் திட்டினால் என்ன ? வீரப்பனைப் பிடிக்கிறோம் பேர்விழி என்று நூற்றுக்கணக்கான மலைவாழ்ப் பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளானது இந்த எருமை மாட்டுக்குத் தெரியுமா தெரியாதா ? வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட ஒரே காரணத்துக்காக ஒரு லட்சம் அரசு ஊழியர்களை வீட்டுக்கு அனுப்புவது நல்ல நடவடிக்கையா ? அந்த அரசு ஊழியர்களின் பின்னால் ஒரு லட்சம் குடும்பங்கள் இருக்கின்றன.. அந்த குடும்பங்களின் கதி என்ன என்பது சஞ்சய் பின்டோவுக்கு தெரியுமா தெரியாதா ? அப்படி ஒரு லட்சம் அரசு ஊழியர்களை ஒரே நாளில் பணி நீக்கம் செய்த ஜெயலலிதாவுக்கு 2004 தேர்தலில் நாற்பதிலும் நாமம் போடப்பட்டது சஞ்சய் பின்டோவுக்கு தெரியுமா தெரியாதா ? அப்போது பட்ட சூடு ஜெயலலிதாவுக்கு இன்னும் மறக்காத காரணத்தால்தான், மத்திய அரசு அகவிலைப்படி அறிவித்த ஓரிரண்டு நாட்களில் மாநில அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படியை நிலுவையில்லாமல் வழங்குகிறார் என்பது பின்டோவுக்கு தெரியுமா ? கூடங்குளத்தில் போராடும் கிராம மக்கள் மீது போலீசை விட்டு தடியடி நடத்துவது ஒரு நல்ல ஆட்சியாளருக்கு அழகா ? இதைத்தான் பிரதமராகும் தகுதி என்கிறாரா சஞ்சய் பின்டோ ?
ஆறாவது காரணம் இரும்புக் கரத்தை வெல்வெட் உறையோடும் பயன்படுத்தத் தெரிந்தவர் ஜெயலலிதா. மாநில அரசு ஒரு லட்சம் கோடி கடனில் இருந்தாலும், 2011 தேர்தல் வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றுவதில் முனைப்பாக இருக்கிறார் ஜெயலலிதா. இந்த மூன்றாவது இன்னிங்ஸில், சிறுபான்மையினர், சாதிப் பிரிவுகள் என அனைத்துப் பிரிவுகளின் நலன்களையும் பேணிப் பாதுகாக்கிறார். குறிப்பாக ஏழை மக்கள். அம்மா உணவகங்கள், சூப்பர் ஸ்டாரின் திரைப்படத்தை விட சூப்பர் ஹிட்டாகியிருக்கிறது. இதே பார்முலாவின் அடிப்படையில் கூட்டணிக் கட்சிகளையும், மற்ற மாநிலங்களையும் கைகொள்வது, அம்மாவுக்கு விளையாட்டு.
இதைப் படித்ததும், அதிமுக அடிமை எழுதியது போலவே தோன்றுகிறதா இல்லையா ? அம்மா உணவகம் நடத்துவதற்கும், கூட்டணி கட்சிகளை வழிக்கு கொண்டு வருவதற்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா ? நான் ஒரு ரூபாய்க்கு இட்லி தருகிறேன், அதனால் என்னை பிரதமராக்குங்கள் என்று கூட்டணிக் கட்சிகளிடம் பேச முடியுமா ? பேசினால், நான் ஒரு ரூபாய்க்கு 10 இட்லி தருகிறேன், என்னைப் பிரதமராக்குங்கள் என்று சொல்ல மாட்டார்கள் ? சொம்படிப்பதற்கு எதையெல்லாம் காரணமாகக் கூறுகிறார் பாருங்கள் சஞ்சய் பின்ட்டோ.
ஏழாவது காரணம். தொடர்ந்து ஜெயலலிதாவைக் கவனித்து வருபவர்கள் ஜெயலலிதாவின் தேசியப் பார்வையை கவனிக்காமல் இருந்திருக்க முடியாது. தீவிரவாதத்துக்கு எதிரான உறுதியான நிலைபாடு, சட்டம் ஒழுங்கு அமல்படுத்துதல், போன்றவை உதாரணங்கள். ஈழத்தமிழர்கள் விஷயத்தில் அவரது ஈடுபாடு, தீவிரவாதத்தை ஒழிப்பதில் உறுதி போன்றவை, பாகிஸ்தானின் தீவிரவாதத்தை ஒழிப்பதற்கும், சிறந்த வெளியுறவுக் கொள்கை அமைப்பதற்கும் அடித்தளமாக அமையும்.
ஒரு மாநில முதலமைச்சராக தீவிரவாதத்துக்கு எதிராக உறுதியான நிலைபாடு என்ன எடுத்தார் தெரியுமா ? 1991-1996 ஆட்சிக் காலத்தில் அப்போது அமலில் இருந்த தமிழ் உணர்வாளர்களின் கையில் கிடைத்த அனைவரையும் தடா சட்டத்தில் சிறையில் அடைத்தார். 2001-2006 ஆட்சிக் காலத்தில் வைகோ, நெடுமாறன் உள்ளிட்ட தமிழ் உணர்வாளர்களை ஆள்தூக்கிச் சட்டங்களின் கீழ் சிறையில் நெடுங்காலத்துக்கு அடைத்தார். இதைத்தாண்டி மற்ற முதல்வர்களோடு ஒப்பிடுகையில் தீவிரவாதத்துக்கு எதிராக சிறப்பாக எதையும் செய்து விடவில்லை. மேலும், ஒரு இடத்தில் குண்டு வெடித்து அப்பாவிகள் இறக்கிறார்கள் என்றால், எந்த முதல்வர் நடவடிக்கை எடுக்காமல் அமைதியாக இருக்க முடியும் ? ஜெயலலிதாவின் இந்த நடவடிக்கைகளால், சிறந்த வெளியுறவுக் கொள்கை அமையும் என்பது எத்தனை பெரிய மோசடி ? ஜெயலலிதாவின் நடவடிக்கைகளால் பாகிஸ்தானின் தீவிரவாதத்தை ஒழிக்க முடியுமாம். ஐந்து ஆண்டுகள் ஆட்சியில் இருந்த பிஜேபி அரசாங்கத்தின் ஆட்சியில்தான் அதிகப்படியான குண்டுகள் வெடித்தன… கலவரங்கள் நடந்தன. பிஜேபி ஒழிக்காத தீவிரவாதத்தை ஜெயலலிதா ஒழித்துவிடுவாராம். சட்டம் ஒழுங்கு எப்படி சிரியாய்ச் சிரிக்கிறது என்பதை, திமுக தலைவர் அவ்வப்போது தீயாக அறிக்கை விட்டு அம்பலப்படுத்துகிறார். அதனால அதைப்பற்றி விரிவாகச் சொல்ல வேண்டியதில்லை.
எட்டாவது காரணம். உங்கள் அதிகாரிகள் யாரென்பதைச் சொல்லுங்கள். நீங்கள் எப்படிப்பட்ட தலைவர் என்பதைச் செல்கிறேன் என்பதே நிர்வாகத்துக்கான புது விதி. சிறந்த அதிகாரிகளை நியமிப்பதில் ஜெயலிதா தேர்ச்சி பெற்றவர். தற்போது பணியில் உள்ள அதிகாரிகள் அவருக்கு சாதகமாக சொல்வார்கள் என்று கருதுவீர்களோயானால் ஜெயலலிதாவிடம் பணியாற்றி ஓய்வுபெற்ற அதிகாரிகளைக் கேட்டுப்பாருங்கள். அம்மாவின் நிர்வாகத் திறமை, முடிவெடுக்கும் திறன், சிக்கலான விஷயங்களை எளிதாக புரிந்து கொள்வது போன்றவற்றில் அவருக்கு உள்ள திறமையைக் கூறுவார்கள். இந்தத் திறனை வைத்து, மத்திய அமைச்சரவையை அமைத்து விடுவார்.
ஒரு லட்சம் அரசு ஊழியர்களை ஒரே நாளில் வீட்டுக்கு அனுப்பி, பின் நாற்பதிலும் நாமம் கிடைத்ததும், அத்தனை அரசு ஊழியர்களையும் மீண்டும் பணிக்கு எடுத்துக் கொண்டு, பறிக்கப்பட்ட அனைத்து சலுகைகளையும் சத்தம் போடாமல் வழங்கியது ஜெயலலிதாவின் நிர்வாகத் திறன். மதமாற்றத் தடைச் சட்டம், ஆடு கோழி வெட்டத் தடை, என்று எடுத்த முடிவுகளையெல்லாம் எதிர்ப்புக் கிளம்பியதும் அந்தர் பல்டி அடித்து மாற்றுவது அம்மாவின் நிர்வாகத் திறன். சமச்சீர் கல்விக்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றம் சென்று, உச்சநீதிமன்றம் வரை தலையில் குட்டியதும் வேறு வழியின்றி அதை செயல்படுத்துவது அம்மாவின் நிர்வாகத் திறன். நன்றாக இருந்த அண்ணா நூலகத்தை மருத்துவமனையாக்கப் போகிறேன் என்று முடிவெடுத்து, நீதிமன்றம் குட்டியதும் அமைதியாக இருப்பது அம்மாவின் நிர்வாகத் திறன். ஆட்சிக்கு வந்த இரண்டு ஆண்டுகளில் நான்கு உள்துறைச் செயலாளர்கள். நூறுக்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம், 150க்கும் மேற்பட்ட ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம், நிலையில்லாத முடிவு, இவையெல்லாம் அம்மாவின் நிர்வாகத் திறன்.
ஒன்பதாவது காரணம். கான்வென்டில் படித்த, ஹீரோயினாக இருந்து அரசில் தலைவராக இருந்த ஜெயலலிதாவின் திறமையும், சாதுர்யமும் சர்வதேச தலைவர்களான பில் கேட்ஸ் மற்றும் ஹிலாரி க்ளின்டனையே பிரமிக்கச் செய்தவை. திரைத்துறையிலிருந்து வந்ததால், அவரது உரையாடல் மற்றும் பேச்சுத் திறமை, இந்திய அரசியல் உலகில் மிகச் சிறந்தவை. அவர் ராஜ்யசபா எம்.பியாக இருந்த காலம் இதற்கு மிகச் சிறந்த உதாரணம்.
ஆங்கிலம் நன்றாகத் தெரிந்தவர்கள் அறிவாளிகள் என்ற ஆணவப்போக்கு இது. சஞ்சய் பின்டோவும் ஆங்கிலப் பத்திரிக்கையாளர் என்பதால் வரும் திமிர் இது. ஆங்கிலம் நன்றாகத் தெரிந்தவர்களெல்லாம் தலைவர்களாக வேண்டுமென்றால், கல்லூரிகளில் ஆங்கிலத் துறை பேராசிரியர்கள் அனைவரும் தலைவர்களாகியிருக்க வேண்டுமா வேண்டாமா ? பிஜேபியின் அருண் ஜெய்ட்லியைப் போல, சிறப்பாக ஆங்கிலத்தில் உரையாற்ற வேறு சிறந்த தலைவர்கள் இருக்கிறார்களா என்பது சந்தேகமே.. அதே போல, பிஜேபியின் செய்தித் தொடர்பாளர்களான நிர்மலா சீத்தாராமன் மற்றும் ரவி சங்கர் பிரசாத் போன்றவர்கள், சிறப்பாக ஆங்கிலத்தில் உரையாற்றத் தெரிந்தவர்கள். ஆனால் அவர்கள் பிரதமர் வேட்பாளர்களாக வில்லையே… மோடியைத்தானே பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துகிறார்கள் ? பேச்சாற்றலையும் எடுத்துக் கொண்டால், ஜெயலலிதாவின் தேர்தல் பிரச்சாரப் பயணக் குழுவில் உள்ளவர்களை கேட்டுப்பாருங்கள். ஒவ்வொரு ஊருக்குச் செல்லும்போதும், ஜெயலலிதாவின் வாகனத்தின் உள்ளே, பெரிய அட்டையில் ஜெயலலிதா பேச வேண்டிய வாசகங்களை கம்ப்யூட்டரில் அடித்து ஒருவர் தூக்கிப் பிடிப்பார். அதைப்பார்த்துதான் ஜெயலலிதா பேசுவார். பேச்சாற்றல் என்று எடுத்துக் கொண்டால், கருணாநிதிக்கு நிகர் அவர்தான். 70 ஆண்டு காலமாக, வெறும் பேச்சு என்ற ஒற்றை மூலதனத்தை வைத்து ஒரு இனத்தையே ஏமாற்றி வந்திருக்கிறாரா இல்லையா ? ஒரு முறை, தேர்தல் சமயத்தில் ஒரு கல்லூரி விழாவுக்கு கருணாநிதியை பேச அழைக்கிறார்கள். அரசியல் பேசக்கூடாது என்று கண்டிப்பான உத்தரவு. இலக்கியம் தொடர்பாக உரையாற்றி முடித்த கருணாநிதி, கடைசியாக என்ன சொன்னார் தெரியுமா ? தற்போது விழா நிறைவு பெற இருக்கிறது. அடுத்து உங்களுக்கு விருந்து காத்திருக்கிறது. உணவு உண்டதும், “கை”யைக் கழுவி விட்டு, “இலை”யை தூக்கிப் போடுங்கள் என்றதும், அரங்கமே கரகோஷத்தில் அதிர்ந்தது. இந்தத் திறமையெல்லாம் ஜெயலலிதாவுக்கு சுட்டுப் போட்டாலும் வராது. பேசும்போது மணியடித்தான் என்பதற்காக மாநிலத்தின் நலன்களையெல்லாம் காற்றில் பறக்க விட்டு விட்டு, கோபித்துக் கொண்டு வந்த நபர்தானே இவர்.
அடுத்ததாக, பில் கேட்ஸ் ஒரு முதலாளி. பில் கேட்ஸின் கனவு, உணவு எல்லாமே, உலகில் உள்ள அத்தனை கம்ப்யூட்டர்களிலும் விண்டோஸ் மென்பொருள் மட்டுமே இருக்க வேண்டும் என்பதே. இதையொட்டி அவர் உலகில் யாரை வேண்டுமானாலும் சந்திப்பார். அமெரிக்க வெளியுறவுத் துறை செயலர் ஹிலாரி க்ளின்டன், அமெரிக்க நலன்களை முன்னெடுப்பதற்காக யாரை வேண்டுமானாலும் சந்திப்பார். தமிழக அரசின் இலவச மடிக்கணினிகளில் ஓபன் சோர்ஸ் இயங்கு மென்பொருளை பயன்படுத்தியிருந்தால், வாங்கும் விலையில் 2 ஆயிரம் ரூபாய் குறைந்திருக்கும். ஓபன் சோர்ஸ் மென்பொருளை பயன்படுத்த வேண்டும் என்ற அடிப்படையிலேயே டென்டர்களும் விடப்பட்டன. ஆனால், ஹிலாரி க்ளின்டன் வந்து சென்ற பிறகு, விண்டோஸ் இயங்கு பொருளை கொண்ட மடிக்கணினிகளை வாங்க வேண்டும் என்று அந்த உத்தரவு மாற்றப்பட்டது. மேலும், ஹிலாரி க்ளின்டன் ஜெயலலிதாவை மட்டுமா பார்த்தார் ? மம்தா பானர்ஜியைக் கூடத்தானே பார்த்தார். அதனால் மம்தா பானர்ஜியை பிரதமராக்கி விடலாமா ?
பத்தாவது காரணம். ஒரு தலைவரின் அறிவுத்திறனை, அவர் வெளியிடும் அறிக்கைகள், பத்திரிக்கையாளர் சந்திப்புகளை வைத்து முடிவு செய்யலாம். சர்வதேச விவகாரஙகள், தேசிய விவகாரங்கள், போன்றவற்றில் ஜெயலலிதாவின் அறிவு வியக்க வைக்கிறது. அவரது வழக்கறிஞர்கள் (யாரு வண்டு முருகனா ?) உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளைக் கூட ஜெயலலிதா ஆழ்ந்து கவனித்து வருகிறார் என்று என்னிடம் கூறுகறார்கள். ஒரு தலைவர் எந்தத் துறையிலும் குறை வைக்காமல், அனைத்து விவகாரங்களிலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சென்னை மாநகரில் ஒரு வாரத்துக்கு பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்பட்டது. தொடர்ந்து ஒரு வாரத்துக்கு ஏற்பட்ட பெட்ரோல் தட்டுப்பாட்டால், பெட்ரோல் பங்குகளில் அடிதடி ஏற்படும் அளவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. தன் மூக்குக்கு கீழே நடக்கும் இந்த விவகாரம் கூட, ஜெயலலிதாவுக்கு ஒரு வாரம் கழித்தே தெரிந்தது. 25 வருடங்களாக தன்னோடு உடன் பிறவா சகோதரியாக இருக்கும் சசிகலாவும், அவர் பரிவாரங்களான மன்னார்குடி மாபியாவும் 2011ல் ஆட்சிக்கு வந்ததிலிருந்தே அடித்த கொள்ளைகள் என்ன என்பதை ஊடகங்கள் எழுதியே வந்தன. குறிப்பாக 2001-2006 ஆட்சிக் காலத்தில் இந்த மன்னார்குடி மாபியா அடித்த கொள்ளைக்கு அளவே கிடையாது. ஆனால் டிசம்பர் 2011 வரை, ஜெயலலிதாவுக்கு இந்தக் கொள்ளைகள் எதுவுமே தெரியாதது போல கண்மூடித்தானே இருந்தார் ? திடீரென்று விழித்துக் கொண்டு நடவடிக்கை எடுப்பது இவரது ஆழ்ந்த அறிவா ? சமீபத்தில் நடந்த சம்பவம், ஜெயலலிதாவின் திறமைக்கு சிறந்த உதாரணம். சரவணபெருமாள் என்ற கடத்தல் புள்ளியை தன் கட்சியில் மாணவர் அணிச் செயலாளராக வைத்திருக்கிறார் ஜெயலலிதா. இந்த நபரை சமீபத்தில் ராஜ்ய சபை வேட்பாளராக அறிவித்தார். ஊடகங்கள் இந்த நபரின் பின்னணியை விலாவரியாக புட்டு வைத்த பிறகே, வேட்பாளரை மாற்றினார். இதுதான் ஜெயலலிதாவின் ஆழ்ந்த அறிவுக்கு உதாரணம்.
கட்டுரையின் இறுதிப் பகுதி. இதுதான் சிறந்த பகுதி. அதனால் ஊன்றிப் படியுங்கள்.
என் வாழ்க்கை முழுக்க நான் ஒரு நடுநிலையான அரசியல் விமர்சகராகவே இருந்து வந்திருக்கிறேன். ஆனால், ஒரு நபருக்கான உரிய அங்கீகாரத்தை வழங்கியே தீரவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். ஜெயலலிதாவுக்கு உயர்ந்த பதவியை அடைய வேண்டும் என்ற லட்சியம் உள்ளது. அவர் முட்டாள்களை சகித்துக் கொண்டு (சஞ்சய் பின்டோவைப் போல) விமர்சனங்களைத் தாங்கிக் கொண்டு, உள்நோக்கத்துடனான விமர்சனங்களாக இருந்தாலும், அவற்றை சகித்துக் கொள்ளும் பக்குவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். உண்மைதான்… பெங்களுரு சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து அவர் வெளி வந்தால் சென்னை சூப்பர் குயின், தேசிய அரசியலில் தங்கத்தை வெல்லுவார்.
ஸ்ஸ்ஸ்…. கண்ணைக் கட்டுதே….
இந்த சஞ்சய் பின்டோ, என்டிடிவியின் தமிழக செய்தியாளராக நெடு நாட்கள் பணியாற்றினார். பின்னர் என்டிடிவி இந்து என்ற செய்தித் தொலைக்காட்சி தொடங்கப்பட்ட பின்னர், அதன் ஆசிரியரானார். இவருக்கு தொலைக்காட்சிகளில் செய்தி வெளியிடுவதை விட, உயர் உயர் அதிகாரிகளைப் பற்றி செய்தி வெளியிட்டு, அதை அந்த அதிகாரிகளைப் பார்க்கச் செய்து, அவர்கள் அவரை அழைத்துப் பாராட்டச் செய்வதுதான் வேலை.
என்டிடிவி-இந்து தொலைக்காட்சியில் இவர் ஆசிரியராக இருந்தபோது, சென்னை மாநகர காவல்துறையில் யாராவது ஒரு அதிகாரி ஒரு மளிகைக் கடையை திறந்து வைத்தால் கூட, அதை தொலைக்காட்சியில் செய்தியாக வெளியிடச் செய்வார். திமுக ஆட்சிக் காலத்தில் வீட்டு வசதி வாரிய மனை ஒதுக்கீட்டு ஊழல்களை முதன் முதலாக வெளியிட்டது என்டிடிவி இந்து தொலைக்காட்சிதான். அந்தத் தொலைக்காட்சி நிறுவனத்திடம் அத்தனை ஆதாரங்களும் வழங்கப்பட்டன. அந்த செய்தியை வெளியிடுகையில், எல்லோருக்கும் வழங்கப்பட்ட ஒதுக்கீட்டை செய்தியாக்கிய சஞ்சய் பின்டோ, ஜாபர் சேட்டுக்கு வழங்கப்பட்ட ஒதுக்கீட்டை மட்டும் வெளியிடாமல் பார்த்துக் கொண்டார். அந்தச் செய்தியை வெளியிடாமல், பின்னர் ஜாபர் சேட்டை தொடர்பு கொண்டு, சார் உங்களைப் பற்றிய செய்தியை வெளியிடாமல் தடுத்து விட்டேன் என்று அவரிடம் நற்பெயர் வாங்கிக் கொண்டார். இப்படிப்பட்ட நேர்மையான பத்திரிக்கையாளர் சஞ்சய் பின்ட்டோ.
தற்போது டெஹல்காவில் வெளியான கட்டுரையை எப்படியாவது அம்மாவின் கவனத்துக்கு எடுத்துச் செல்லுங்கள் என்று தற்போது உளவுத்துறை அதிகாரிகளிடம் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்.
செட்டிநாட்டு சீமான் சிதம்பரத்தின் சீமந்தப் புத்திரன் கார்த்தி சிதம்பரம், அவரைப் பற்றி ட்விட்டரில் ஒருவர் விமர்சித்து எழுதிவிட்டார் என்ற காரணத்துக்காக, அவர் செல்வாக்கைப் பயன்படுத்தி பாண்டிச்சேரி காவல்துறையில் வழக்கு பதிவு செய்யச் சொல்லி அந்த நபரை கைது செய்ய வைத்தார். அந்த விவகாரம் அப்போது விவாதப் பொருளானபோது, ஒவ்வொரு தொலைக்காட்சி நிறுவனத்தையும் அழைத்து, நான் கார்த்தி சிதம்பரத்துக்கு ஆதரவாக பேசுகிறேன் என்னை விவாதத்துக்கு அழையுங்கள் என்று வான்டடாக போய் வண்டியில் ஏறியவர்தான் இந்த சஞ்சய் பின்ட்டோ.
2012ல் ஜெயலலிதாவின் ஓராண்டு ஆட்சி முடிவில், இதை விட ஒரு பெரிய சொம்புக் கட்டுரையை எழுதினார் சஞ்சய் பின்ட்டோ. இணைப்பு அந்தக் கட்டுரை தற்போது வெளிவந்துள்ள டெஹல்கா கட்டுரையை விட பெரிய சொம்புக் கட்டுரை.
தற்பொது பத்திரிக்கை துறையை விட்டு வெளியே வந்து, வழக்கறிஞராக தொழில் செய்யும் சஞ்சய் பின்ட்டோ மீண்டும் அம்மாவின் கவனத்தைப் பெற்று, ஏதாவது ஒரு பதவியை அடைய வேண்டும் என்ற நோக்கிலேயே, இந்த சொம்புக் கட்டுரையை எழுதியிருக்கிறார்.
ஜெயலலிதாவைப் புகழ்ந்தோ, ஜால்ரா அடித்தோ, சொம்படித்தோ கட்டுரை எழுதுவது ஒவ்வொருவரின் உரிமை. அதை அதிமுகவின் அடிமை என்று எழுதுவதே பொருத்தமானது. பத்திரிக்கையாளர் என்று அழைத்துக் கொண்டு எழுதுவது அல்ல….
பேசாமல் கரை வேட்டி கட்டிக் கொண்டு, தலைமைச் செயலகத்தில் அடிமைகளோடு அடிமைகளாக வரிசையில் நில்லுங்கள் சஞ்சய் பின்டோ… பத்திரிக்கையாளர் என்று உங்களை தயவு செய்து அழைத்துக் கொள்ளாதீர்கள்.
1 Response
[…] சஞ்சய் பின்டோ குறித்த ஒரு கட்டுரை இணைப்பு சென்னை உயர்நீதிமன்றம் சஞ்சய் […]