விசிலிடித்தபடியே மொட்டை மாடியில் நுழைந்த டாஸ்மாக் தமிழை புன்னகையோடு வரவேற்றார் கணேசன்..
“என்னப்பா குஜாலா இருக்க போலருக்கே… ? “
“நான் குஜாலா இல்லன்ணே… திமுக தலைவர்தான் குஜாலா இருக்கார். “ என்று பூடகமாக சிரித்தான் தமிழ்.
“என்னடா பொண்ணு எம்.பி ஆகப்போற சந்தோஷமா ? “ என்றான் பீமராஜன்.
“ஆமாம் மச்சான். பொண்ணு எம்.பி ஆயிடுவாங்கன்றத உறுதி செஞ்ச பின்னாடிதான், வேட்பு மனுவே தாக்கல் செய்ய சொன்னார். “
“என்னதான்டா நடக்குது ராஜ்யசபா தேர்தல்ல ? “ என்று தன் சந்தேகத்தை கிளப்பினான் ரத்னவேல்.
“ஒரு வாரமாவே பாருக்கு வந்தவங்கல்லாம் தேர்தலைப் பத்தித்தான் பேசிக்கிட்டு இருந்தாங்க… ஒவ்வொரு மணி நேரத்துக்கும் மாறுதல்கள் நடந்துக்கிட்டே இருக்கு. கடைசி வரைக்கும் விஜயகாந்தை நம்பிக்கிட்டு இருந்தாரு. ஆனா ஆதரவு தர்றதுக்கு விஜயகாந்த் வைச்ச கோரிக்கைகள் ஏத்துக் கொள்ள முடியாதபடி இருந்துச்சு… “
“அப்படி என்னடா கோரிக்கை… “ என்று வியப்புடன் கேட்டான் ரத்னவேல். திமுக பற்றிய செய்திகள் அவன் பணியாற்றும் ஜானி ஜான் கான் சாலையில் உள்ள பத்திரிக்கையில்தான் முழுமையாக வரும் என்ற நம்பிக்கை அவனுக்கு. எல்லா முடிவுகளையும், தன் இணை ஆசிரியர் காமராஜைக் கேட்டுத்தான் கருணாநிதி செய்வார் என்று அவனுக்கு அப்படி ஒரு நம்பிக்கை.
“கேப்டன் 2014 தேர்தல்ல 15 சீட்டும், செலவுக்கு 100 கோடியும் கேட்டுருக்காராம். 100 கோடியைக் கூட குடுத்துடுவாங்க. திமுகவுக்கு அதெல்லாம் ஒரு பிரச்சினையே இல்ல… 15 சீட்ட கேப்டனுக்கு குடுத்துட்டு இவங்க என்ன பண்றதுன்னு கவலையா இருக்காங்க. இந்த பேரம் படியாமத்தான் தொடர்ந்து இழுபறியா இருந்துச்சு.. கடைசியில பேரம் சுத்தமா படியாமப் போயிடுச்சு.
மத்திய அமைச்சர் சிதம்பரத்தோட தாயார் இறந்ததுக்கு, திமுக சார்பில யாரும் போயி துக்கம் விசாரிக்கல. ஆனா, சுதீஷ் உறவினர் இறந்ததுக்கு டிகேஎஸ் இளங்கோவன் போயி துக்கம் விசாரிச்சுருக்கார். கொஞ்ச நாளைக்கு முன்னாடி, தம்பி விஜயகாந்த் கட்சியை அழிக்கப் பார்க்கிறார்கள்னு பேசுனதெல்லாம் கேப்டன் ஆதரவை பெறனும்னுதான்.
ஆனா அதெல்லாம் நடக்காதுன்னு தெரிஞ்சதும், நான் எதுக்கு உங்களுக்கு ஆதரவு தரணும்னு, அவங்க கட்சியோட பொருளாளர் இளங்கோவனை வேட்பாளரா அறிவிச்சுட்டாங்க.“
“அவரு ஜெயிக்க முடியுமா ? “
“ஜெயிக்க முடியாதுன்னு நல்லா தெரிஞ்சுதான் இந்த வேலையைப் பண்றார் கேப்டன். “
“சரி கனிமொழியோட வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு ? “
“கனிமொழிக்கு திமுகவோட 23 எம்.எல்.ஏக்கள், காங்கிரஸ் கட்சியோட 5 எம்.எல்.ஏக்களோட, பாட்டாளி மக்கள் கட்சியோட எம்.எல்.ஏக்கள் 3 பேரோட ஆதரவும் கிடைக்க வாய்ப்பு இருக்கு. இந்த 31 சேத்து, புதிய தமிழகத்தோட 2 எம்எல்ஏக்கள் ஆதரவும் சேந்தா 33 ஆயிடுச்சு. இதுக்கு நடுவுல மனிதநேய மக்கள் கட்சிக்கிட்டயும் பேகிக்கிட்டு இருக்காங்க. மனித நேய மக்கள் கட்சி, அவங்க பங்குக்கு பெரிய பட்டியல் வச்சுருக்காங்க.
திங்கட்கிழமை காலையில டி.ராஜா ஜெயலலிதாவை சந்திச்சார். இந்த சந்திப்பு நடந்த கொஞ்ச நேரத்துலயே தேமுதிகவோட பொருளாளர் இளங்கோவன் ராஜ்ய சபை தேர்தல்ல போட்டியிடப் போறார்னு அறிவிப்பு வந்துச்சு. தேமுதிக போட்டியிடறதுனாலயும், திமுக எடுத்துருக்கற நிலைபாட்டாலயும், அதிமுகவோட ஐந்தாவது கேண்டிடேட் ஜெயிக்கறது கஷ்டம்னு தெரிஞ்சு போச்சு. அதனால, டி.ராஜாவை ஆதரிக்கறதுன்னு அறிவிச்சுட்டாங்க ஜெயலலிதா. “
“சரி.. இதை முன்னாடியே செஞ்சுருக்கலாம்ல… ? “
“செஞ்சுருக்கலாம்தான்… ஜெயலலிதா இப்படியெல்லாம் சிந்திச்சு முடிவெடுக்கற ஆளா ? ஜெயலலிதா மட்டுமில்லாம, விஜயகாந்தும் ஒரு முட்டாள் அரசியல்வாதின்றதை நிரூபிச்சுட்டார். “
“என்னடா சொல்ற ? “
“ஆமாம் மச்சான்… ஜெயலலிதா ஐந்தாவது வேட்பாளரை அறிவிச்ச உடனேயே, நான் சிபிஐ வேட்பாளரை ஆதரிக்கிறேன்னு ஒரு வார்த்தை சொல்லியிருந்தா.. அரசியல் சூழலே மாறியிருக்கும். ஜெயலலிதாவையும் பழி வாங்குன மாதிரி இருந்துருக்கும். ஆனா விஜயகாந்துக்கு தன்னோட பலம் என்னன்றதை ரொம்ப அதிகப்படியா மதிப்பீடு வச்சுருக்கார்.. இத்தனை ஆண்டு காலமா அரசியல்ல இருக்கற ஜெயலலிதாவுக்கு இருக்கற ஆணவம், அவருக்கு இப்பவே வந்துடுச்சு.. ஜெயலலிதாவுக்கு இருக்கற அமைப்பு பலம் அவருக்கு இல்லைன்றதை அவர் உணர மாட்டேங்கிறார்…
சுதீஷை மூலமா மார்க்சிஸ்ட் கட்சிக்கிட்ட பேசியிருக்கார். “
“நெசமாத்தான் சொல்றியா ? “
“ஆமாம் மச்சான்.. சுதீஷ் மார்க்சிஸ்ட் கட்சியை தொடர்பு கொண்டு, ராஜ்யசபா தேர்தல் தொடர்பா பேசணும்னு சொல்லியிருக்கார். அவங்க தேர்தல்ல போட்டியிடுறது, சிபிஐதான். நீங்க எதுவா இருந்தாலும் சிபிஐக்கிட்ட பேசுங்கன்னு சொல்லிட்டாங்க. சுதீஷ் எதுக்காக மார்க்சிஸ்ட் கட்சிக்கிட்ட பேசறார்ன்றதும் மர்மமாவே இருக்கு…“
“என்ன மச்சான் இவ்வளவு குழப்பமா இருக்கு“ என்று தன் சலித்துக் கொண்டான் ரத்னவேல்.
“குழப்பமாத்தான் என்ன பண்றது ? இந்த நேரத்துல வரலாறு கத்துக்குடுக்கற பாடத்தை கவனத்தில் கொள்ளனும்“
“என்னடா தத்துவம் பேசற… ? “
“தத்துவம் இல்லடா… உண்மையைச் சொல்றேன். 2011 தேர்தல் கூட்டணிப் பேச்சுவார்த்தையின் போது, மதிமுகவுக்கு இறுதியா 17 சீட் தர்றதா அதிமுகவுல சொன்னாங்க. முடியாது.. முடியாது.. சுயமரியாதைக்கு வந்த இழுக்குன்னு கோவிச்சுக்கிட்டு தேர்தல்ல போட்டியிடாம தவிர்த்தார் வைகோ. 17 சீட்ல போட்டியிட்டிருந்தா அப்போ இருந்த திமுக எதிர்ப்பு அலையில குறைஞ்சது 15 சீட்ல ஜெயிச்சுருப்பாரு. ரெண்டு சீட் வச்சுருக்கற புதிய தமிழகம், மனித நேய மக்கள் கட்சியெல்லாம் இன்னைக்கு காட்டற பந்தாவைப் பாத்தா, 15 எம்.எல்.ஏ வச்சுருக்கற வைகோ கிட்ட அரசியல் கட்சிகள் எப்படி மண்டியிட்டிருக்கும்னு யோசிச்சுப் பாரு. வைகோவுக்கு எவ்வளவு செல்வாக்கு கிடைச்சிருக்கும்… ? இதை வச்சே மக்களவைத் தேர்தலுக்கான பேச்சுவார்த்தையும் முடிவு செஞ்சுருக்கலாம்..
சரியான நேரத்துல சரியான முடிவை எடுக்க தவறும் நபர்களை காலம் நிராகரிக்கும்…“
“சரி இந்த சரவண பெருமாள் எப்படிப்பா ராஜ்ய சபா வேட்பாளரா ஆனாரு ? “
“இந்த ஆளு மாதிரி ஒரு தில்லாலங்கடியைப் பாக்கவே முடியாது. இவரோட வளர்ச்சி வேலு நாயக்கர் மாதிரியே வில்லங்கமானது. தூத்துக்குடி இவருக்கு சொந்த ஊரு… சைவ வேளாளர் சமூகத்தை சேர்ந்தவர். பள்ளர், தேவர், நாடார்கள்னு அந்தப் பக்கம் சாதிச் சங்கம் பலமா இருந்ததைப் பாத்து இவரும் சாதிச் சங்கம் ஆரம்பிச்சு கட்டப் பஞ்சாயத்து பண்றார். அப்படியே கடத்தல் தொழிலிலும் ஈடுபட்டார். பல வழக்குகள் இவர் மேல பதிவு செய்யப்பட்டுச்சு. அப்புறம் மதிமுகவுல சேர்றார். 1996 தேர்தல்ல போட்டியிட்டு தோத்துப் போறார்.. இனி மதிமுக சரிப்பட்டு வராதுன்னு முடிவு பண்ணி, திமுகவுல அப்போ செல்வாக்கா இருந்த ஏ.எல்.சுப்ரமணியனோட நெருக்கமாகி, திமுக காரங்களுக்கு போக வேண்டிய வேளாண்மை கூட்டுறவு சங்க நிர்வாக இயக்குநர் பதவியை மதிமுகவுல இருந்துக்கிட்டே வாங்கினார். திமுக காரங்களே அசந்து போனாங்க… அப்போதான் இவரு செல்வாக்கு வளர்ந்துச்சு. இவரோட நடவடிக்கைகள் தன்னை மீறி வளர்றதை பார்த்த ஏ.எல்.சுப்ரமணியம், இவரை கழட்டி விடறார்.
2001 தேர்தல்ல நயினார் நாகேந்திரன் அதிமுக வேட்பாளர். திமுக வேட்பாளர் ஏ.எல்.சுப்ரமணியம். சைவ வேளாளர் ஓட்டுகளை பிரிச்சாத்தான் ஜெயிக்க முடியும்னு நெனைக்கிற நயினார், ஏ.எல்.சுப்ரமணியத்துக்கு எதிரா, சரவண பெருமாளை நிக்க வைக்கிறார். சுயேச்சையா போட்டியிட்டு சரவண பெருமாள் 11 ஆயிரம் ஓட்டு வாங்குறார். அந்த தேர்தல்ல, நயினார் நாகேந்திரன் வெறும் 700 வாக்குகள் வித்தியாசத்துலதான் ஜெயிக்கிறார்.
அதுக்குப் பிறகு, சரவணபெருமாளை அதிமுகவுல சேக்கணும்னு முடிவு பண்ணி 2004ல் இவரை அதிமுகவுக்குள்ள கொண்டு வந்தது அப்போ உளவுத்துறை ஐ.ஜியா இருந்த ட்டி.ராஜேந்திரன்.
அதுக்குப் பிறகு சரவண பெருமாளுக்கு ஏறுமுகம்தான். டாக்டர் வெங்கடேஷோட நெருக்கமாகி, கொஞ்ச நாள்லயே இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை துணைச் செயலாளர், மாநில மாணவரணிச் செயலாளர்னு மேல போயிக்கிட்டே இருந்தாரு.
ட்டி.ராஜேந்திரன் மட்டுமில்லாம, பல காவல்துறை அதிகாரிகளுக்கு சரவணபெருமாள் நெருக்கம். குறிப்பா ஜாங்கிட்டுக்கு ரொம்ப நெருக்கம். இப்போ சென்னை மாநகர உளவுத்துறை இணை ஆணையரா இருக்கற வரதராஜுவுக்கும் சரவண பெருமாள் நெருக்கம். இந்த காவல்துறை அதிகாரிகளோட உதவியாலதான் சரவணபெருமாள் இந்த அளவுக்கு வளர்ந்தாரு.
ஐபிஎஸ் அதிகாரிகள் இல்லாம, திமுக ஆட்சியில உள்துறைச் செயலாளரா இருந்த ஞானதேசிகன் ஐஏஎஸ் கூட சரவணபெருமாளுக்கு நெருக்கம்தான்.
“இவ்வளவு மோசமான ஆளு எப்படிப்பா கேன்டிடேட்டா ஆனாரு… ?“
“இவரு எம்.பி கேன்டிடேட்டா அறிவிக்கப்பட்டதுல பூங்குன்றனோட பங்கு ரொம்ப அதிகம்னு சொல்றாங்கன்ணே… பூங்குன்றன் தவிர்த்து, ஜெயலலிதாவோட பாதுகாப்பு அதிகாரிகள் அத்தனை பேரும், சரவண பெருமாளுக்கு நெருக்கம். இவங்களை வச்சு, ஜெயலலிதா எங்க போறாங்க… என்ன ப்ரோக்ராம் எல்லாத்தையும் இவரு தெரிஞ்சுக்குவாரு..
நம்ப டிஜிபி ராமானுஜத்தையே இந்த ஆளு வளைக்க ட்ரை பண்ணாரு.. தன்னைப் பத்தி நல்ல விதமா அறிக்கை அளிக்கும்படி கேட்ருக்காரு.. ஆனா, ராமானுஜம், உண்மையை சொல்லிட்டாரு.. “
“சரி.. பத்திரிக்கை உலக செய்திகள் இருக்கா ? “
“நாம போன வாட்டி விவாதிச்சதுக்கு அப்புறம் ஜெயா டிவியில பல அதிரடி மாற்றங்கள் நடந்துருக்கு. “
“என்னடா நடந்துச்சு.. ? புதிய தலைமுறையோட போட்டி போடப் போறாங்களா ? “
“ஜெயா டிவியோட நிர்வாகம் நடக்கறதை வச்சுப் பாக்கும்போது, அவங்க கார்ட்டூன் டிவியோட கூட போட்டி போட முடியாது..
நான் போன வாட்டி பேசிக்கிட்டிருந்தப்போ, ரபி பெர்நார்ட் நிர்வாகப் பொறுப்புக்கு வந்த பிறகு, நிறைய மாற்றங்களை கொண்டு வரணும்னு முயற்சி பண்ணார்னு சொன்னேன். ஆனா எந்த மாற்றங்களையும் செய்ய விடாம, அங்க இருக்கற சில க்ரூப்புங்க முயற்சி பண்ணாங்கன்றதையும் சொன்னேன்.
அந்த க்ரூப்புகள் இப்போ வெற்றியடைஞ்சுடுச்சு…“
“என்ன மச்சான் ஆச்சு.. ? “ என்ற உண்மையான கவலையோடு கேட்டான் ரத்னவேல்.
“போன வாரம் 10 பேருக்கும் மேல ஜெயா டிவியிலேர்ந்து வேலை நீக்கம் செய்யப்பட்டாங்க…. “
“அடப்பாவமே யாருடா அவங்க… ? “
“பேச்சிமுத்துன்ற நிருபர், விஷுவல் எடிட்டர் சீனிவாசன், இன்னொரு விஷுவல் எடிட்டர் ராஜு, செய்தி தயாரிப்பாளர் அரசு ராஜ், ப்ரோக்ராம் பொறுப்பாளர் பூபதி, நிர்வாகப் பிரிவுல சந்தானம், டெக்னிக்கல் பிரிவுல தனலட்சுமி, மார்க்கெடிங்ல இருக்கற மீனா முரளி, கே.பி.சுனிலோட பி.ஏ கவிதா இவங்களெல்லாம் டிஸ்மிஸ் பண்ணிட்டாங்க. தனிப்பட்ட முறையில ஜெயா டிவிக்கு தயாரிப்பாளரா இருந்து, பின்னாடி ஜெயா டிவியோட ஊழியரா மாறி, ரபி பெர்னார்டோட சேந்து ஜெயா டிவியை சீரமைக்கிற வேலையில ஈடுபட்டுருந்த சௌபான்றவரையும் பணி நீக்கம் செஞ்சுட்டாங்க. இது போக இன்னும் சில பேரையும் பண்ணியிருக்காங்க. “
“எதுக்காக இவ்வளவு பேரை பணி நீக்கம் செய்யணும்.. ? “
“சில நாட்களுக்கு முன்னாடி ஜெயலலிதா ஸ்ரீரங்கம் போனாங்க. அங்க அரசு விழாவுல கலந்துக்கிட்டதுக்கு அப்புறம் இறுதியா ஸ்ரீரங்கம் கோயிலுக்கு பசு தானம் பண்ணாங்க. முதல்வர் நிகழ்ச்கிளை நேரடி ஒளிபரப்பு பண்ணிக்கிட்டிருந்த ஜெயா டிவி, பசு தானம் பண்ற காட்சிகளை ஒளிபரப்பறதுக்கு முன்னாடியே லைவ் ரிலேவை நிறுத்திட்டாங்க. இது தெரிஞ்சு யாரெல்லாம் திருச்சிக்கு போனதுன்னு கார்டன்லேர்ந்து பட்டியல் கேட்டாங்க…“
“சரி.. ஜெயலலிதா ஜெயா டிவி செய்திகளைப் பாக்கறாங்களா என்ன ? “
“என்ன மச்சான் இப்படிக் கேட்டுட்ட… ஒவ்வொரு நாளும் இரவு 7.30 மணி செய்திகளை ஜெயலலிதா தவறாம பாப்பாங்க… எந்த வேலை இருந்தாலும் செய்திகளைப் பாக்கறதை தவிர்க்க மாட்டாங்க.. அப்படிப் பாத்தப்போதான், ஏன் மாடு தானம் குடுக்கற காட்சி ஏன் வரலன்னு கடுமையா கோபமடைஞ்சுட்டாங்க…“
“சரி… யாருதான் அதுக்குப் பொறுப்பு ? “
“நாம ஏற்கனவே விவாதிச்ச மாதிரி, ஜெயலலிதாவோட எல்லா நிகழ்ச்சிகளையும் கவர் பண்ணு பொறுப்பு ரமணிக்குதான். ரமணிதான் ஸ்ரீரங்கம் நிகழ்ச்சியையும் கவர் பண்ணாரு. கார்டன்லேர்ந்து விசாரணையை தொடங்குனதும், சம்பந்தம் இல்லாத நபர்களோட பேரை போட்டுக் குடுத்துட்டாங்க. டிஸ்மிஸ் செய்யப்பட்ட சீனிவாசன்றவரு 12 வருஷமா ஜெயா டிவியில பணியாற்றிட்டு இருந்தாரு. ஜெயலலிதாவோட நிகழ்ச்சிகளை கவனமா எடிட் செய்யறதுல நிபுணர். ராஜுன்ற இன்னொரு விஷுவல் எடிட்டரும் ரொம்ப அனுபவம் வாய்ஞ்சவரு… ஆனா ரமணி கவனமா, தப்பிச்சுகிட்டு இவங்கள போட்டுக் குடுத்துட்டாரு.
ஜெயலலிதா டெல்லி போனப்போ, நடந்த லைவ் ரிலேவிலயும் சொதப்பல் நடந்துருக்கு… சரியான இடத்துல கேமராவை வைக்காம, விஷுவல்ல லைட்டிங் அதிகமாகி, அம்மாவோட முகமே சரியா தெரியலை. இது தொடர்பாவும் கார்டன் விசாரணையை நடத்தியிருக்காங்க… இதுவும் டிஸ்மிஸ்ஸலுக்கு காரணம்னு சொல்றாங்க.. “
“டெல்லி நிகழ்ச்சிக்கு யார் பொறுப்பு.. ? “ என்று பதட்டமாக கேட்டான் வடிவேலு.
“வேற யாரு.. இதுக்கும் ரமணிதான் பொறுப்பு. ரமணி டெல்லியில இருந்தப்போதான் இந்த சொதப்பலும் நடந்துச்சு…. ஆனா இந்த ரெண்டு சொதப்பலுக்கும் காரணமான ரமணி மேல நடவடிக்கை எடுக்காம, சம்பந்தம் இல்லாதவங்களை பணி நீக்கம் செய்துருக்காங்க…“
“யாருடா இப்படிப் பண்றது… யாரு இதுக்குப் பின்னணி ? “
“வேற யாரு.. சசிகலாதான்.. இது நாள் வரைக்கும், ஜெயா டிவியில செக் கையெழுத்து போடுற அதிகாரம் பூங்குன்றனுக்குத்தான் இருந்துச்சு. கொஞ்ச நாளைக்கு முன்னாடி, பூங்குன்றனுக்கு பதிலா சசிகலாவுக்கு அந்த அதிகாரம் குடுக்கப்பட்டுச்சு. சசிகலாவுக்கு அதிகாரம் வந்ததுலேர்ந்தே அவங்க கட்டுப்பாட்டுக்கு எல்லா விஷயங்களையும் கொண்டு வரனும்னு நெனைச்சாங்க.
டிடிவி தினகரனோட மனைவி அனுராதா ஜெயா டிவி நிர்வாகத்தை கவனிச்ச வரைக்கும், ஜெயா ப்ளஸ்ல வர்ற ஜோசிய விளம்பரம், ராசிக்கல் விளம்பரம், ரியல் எஸ்டேட் விளம்பரத்துலேர்ந்தெல்லாம் ஏகப்பட்ட பணம் பாத்துக்கிட்டு இருந்தாங்க. ரபி பெர்நார்ட் பொறுப்புக்கு வந்ததும், ஒரே நாள்ல இந்த டுபாக்கூர் நிகழ்ச்சிகளை தூக்கினது பத்தி ஏற்கனவே சொன்னேன்.
இந்த மாதிரி மாற்றங்களெல்லாம் வந்தது சசிகலாவுக்கு சுத்தமா புடிக்கல… அதனாலதான் முதல்ல செக் கையெழுத்து போட்ற அதிகாரத்தை கைப்பத்துனாங்க. அனுராதா இருந்தப்போ நிர்வாகம் நல்லா இருந்துச்சு… இப்போ எதுவுமே சரியில்ல… அதனாலத்தான் இத்தனை பேரை வேலை நீக்கம் செஞ்சேன்னு ஜெயலலிதாவுக்கு உணர்த்தர மாதிரி இப்போ வேலை நீக்கம் நடந்துருக்கு…“
“சரி.. இதெல்லாம் ஜெயலலிதாவுக்கு தெரியாதா ? “
“எப்படிப்பா தெரியாம இருக்கும்.. தெரிஞ்சும் ஏன் இதையெல்லாம் அனுமதிக்கறாங்கன்றதுதான் யாருக்கும் புரியல..
ஒரு சாதாரண ஊழியர் சம்பள அட்வான்ஸ் வாங்குறதுக்குக் கூட, சசிகலாதான் கையெழுத்துப் போடணும். பூங்குன்றன் இருந்த வரைக்கும் ஒரு நாள் ரெண்டு நாள் தாமதமானா, அவர்கிட்ட போன் பண்ணி பேசுவாங்க.. சகிலாகிட்ட யாரு பேச முடியும் ?
சம்பள அட்வான்ஸ் வாங்க முடியல… ஊதிய உயர்வு போடல.. பத்து வருஷம் பன்னென்டு வருஷம் வேலை பாத்தவனையெல்லாம் கேள்வி இல்லாம தூக்கறாங்க… புதுசா சங்கர்னு ஒரு சிஇஓ வந்துருக்கார்… வேலை நீக்கம் செய்யப்பட்டவங்களையெல்லாம் அவர்தான் கூப்புட்டு, இந்த ராஜினாமா கடிதத்துல கையெழுத்து போடுங்க.ன்னு கையெழுத்து வாங்கிட்டு ஒரு மாச சம்பளச் செக்கை குடுத்து அனுப்பிட்டார்.
நாங்கள்லாம் உழைக்கறது அந்த அம்மாவுக்காகத்தான்.. ஆனா, சாமி குடுத்தாலும் பூசாரி வரம் குடுக்காதுன்ற மாதிரி சசிகலா இப்படி எங்க வயித்துல அடிக்கிறாங்கன்னு ஜெயா டிவி ஊழியர்கள் புலம்பறாங்க மச்சான்…“
“ஜெயலலிதாதான் எனக்கும் ஜெயா டிவிக்கும் சம்பந்தம் இல்லன்னு சொல்லிட்டாங்களே… “ என்று சொல்லி விட்டு சிரித்தார் கணேசன்.
“அடப் போங்கன்ணே… சசிகலாவுக்கும் ஜெயலலிதாவுக்கும் சம்பந்தம் இல்லன்னு சொல்லுவீங்களே…“
“ஐபில் விசாரணை எப்படிடா நடக்குது ? “ என்று அடுத்த மேட்டருக்கு தாவினான் வடிவேலு.
“ஐபிஎல் சூதாட்டம் குறித்த விசாரணையில சிபி.சிஐடி போலீசார் ரொம்ப கவனமாத்தான் காயை நகத்துறாங்க… ஆனா இந்த விசாரணையை பயன்படுத்தி, சினிமா பி.ஆர்.ஓக்கள் அவங்க தொழில் பகையைத் தீர்த்துக் கொள்ள ட்ரை பண்றாங்க. சினிமா பி.ஆர்.ஓக்களான நிகில் முருகன் மற்றும் டைமன்ட் பாபு ரெண்டு பேரும் தொழில் போட்டியாளர்கள். டைமன்ட் பாபுவின் பெயர் சிபி.சிஐடி விசாரணையில் வந்துள்ளதுன்னும், அவர் பி.ஆர்.ஓவாக இருக்கும் நடிகைகளை விசாரிக்க உள்ளார்கள்னும் அவரோட போட்டியாளர் நிகில் முருகன் செய்தியை பரப்பி விட்டுட்டார். இதை நம்பி மாலை மலர், இன்னும் சில பத்திரிக்கைகள் செய்தியும் போட்டுட்டாங்க..”
“சரி அதிமுக செய்தி என்னப்பா இருக்கு… ? . “ என்றார் கணேசன்.
“அதிமுகவுல புதுசா நால்வர் அணி உருவாயிருக்குன்ணே… இந்த அணிதான் இருக்கதுலயே சக்திவாய்ந்த அணி. “
“அதிமுகவுலேர்ந்து பிரிஞ்சு போனவங்கதானேப்பா நால்வர் அணி அமைச்சாங்க… இது என்ன உள்ளுக்குள்ளயே… ? “
“அண்ணே… ஓ.பன்னீர் செல்வம், நத்தம் விஸ்வநாதன், வைத்தியலிங்கம், கே.பி.முனுசாமி இவங்க நாலு பேருதான் இந்த நால்வர் அணி.
இவங்க நாலு பேரும் வாரம் ரெண்டு முறை சந்திக்கிறாங்க… தொழில் அதிபர்கள், கான்ட்ராக்டர்கள் யாரு வந்தாலும், அம்மாவுக்கு இவ்வளவு தொகை வேணும்னு வெளிப்படையாவே கேக்கறாங்க. “
“இதெல்லாம் அம்மாவுக்கு தெரியுமா ? “
“யாருக்குத் தெரியும்… ? “ என்று சொல்லி சிரித்தான் தமிழ்.
“மச்சான். இந்த துக்ளக் ரமேஷை அம்மா திருப்பி கூப்புட்டு பேசுனாங்கன்றாங்களே.. உண்மையாடா ? “ என்று தன் சந்தேகத்தைக் கேட்டான் பீமராஜன்.
“அவரைக் கூப்பிட்டு பேசவெல்லாம் இல்லை மச்சான்.. போன வாரம் கட்சி அலுவலகத்துல ரமேஷை கூப்பிட்டு நீங்க என்ன கட்சிக்காரரா… எதுக்கு இங்க வர்றீங்க, எப்போப் பாத்தாலும் அமைச்சர்கள் அலுவலகத்துலயே இருக்கீங்க போலருக்கேன்னு கோபமா சத்தம் போட்டதுலேர்ந்து அவரை ஆளையே காணோம்…
அதுக்கப்புறம் இரண்டு நாட்கள் தலைமைச் செயலகம் வந்தாங்க.. ஒரு நாள் அடையாறு புற்று நோய் மருத்துவமனைக்கு போனாங்க.. எங்கயும் ரமேஷ் காணப்படவில்லை… திருப்பித் தலையைக் காட்டுனார்னா வேலைக்கே உலை வச்சுடுவாங்கன்னுதான் நெனைக்கிறேன்…“
“சரி நீதிமன்ற செய்திகள் இருக்கா மச்சான் ? “
சென்னை பெருநகர நீதிமன்றத்துல ரெண்டு வழக்குகள் நிலுவையில இருந்துச்சு… ஒன்று ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரி மேல… இன்னொன்று சத்ய சாய் மருத்துவக் கல்லூரி மேல… இந்த ரெண்டு கல்லூரிகளும் போதுமான உட்கட்டமைப்பு வசதியோடு இருக்கான்னு ஆய்வு பண்ண அகில இந்திய மருத்துவக் கழகத்தோட (Medical Council of India) அதிகாரிகள் நேர்ல ஆய்வு பண்ண வர்றாங்க. அப்படி வந்தப்போ, சத்ய சாய் மருத்துவக் கல்லூரி நிர்வாகம் 26 மருத்துவர்கள் அவங்க கல்லூரியில பேராசிரியர்களா பணியாற்றுவதா போலியா ஆவணங்களை தயாரிச்சு, 26 மருத்துவர்களை அவங்க கல்லூரியில பேராசிரியர்களா பணியாற்றுவது போல, ஆய்வு நடக்கற அன்னைக்கு நடிக்க வச்சாங்க.
இது தொடர்பா சிபிஐ நடத்துன விசாரணையில அந்த 26 மருத்துவர்களும், அந்தக் கல்லூரியில பேராசிரியர்களா பணியாற்றலை.. எல்லாம் ஒரு நாள் வந்து நடிச்சுட்டு போயிருக்காங்கன்னு தெரிய வந்துச்சு. இதையடுத்து சிபிஐ, சத்ய சாய் மருத்துவக் கல்லூரியின் சேர்மேன் எம்.கே.ராஜகோபாலன், துணை வேந்தர் டி.ஆர்.குணசேகரன், ஆகிய இருவர் மேலயும் வழக்கு பதிவு செய்து குற்றப் பத்திரிக்கை தாக்கல் செஞ்சாங்க.
இதே போல மோசடியில ஈடுபட்ட மற்றொரு கல்லூரி மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கல்லூரி. இந்தக் கல்லூரியோட மேலாண்மை இயக்குநர் ரமேஷ், செயலாளர் கருணாநிதி, டீன் சஷிகாந்த் படேல், நிர்வாக அதிகாரி ராமபத்ரன், ஆதிபராசக்தி கல்வி அறக்கட்டளையோட நிர்வாகிகளும் பங்காரு அடிகளாரோட மகன்களுமான அன்பழகன் மற்றும் செந்தில் குமார், பங்காரு அடிகளார் மனைவி லட்சுமி, மற்றும் கல்லூரி நிர்வாகிகள் டாக்டர்.ஸ்ரீதர் மற்றும் சுப்ரமணியம் ஆகியோர் மேல குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த விசாரணை, எழும்பூரில் உள்ள தலைமை நீதிமன்ற நடுவர் வி.பி.ரவீந்திரன் முன்னாடி விசாரணையில இருந்துச்சு. இந்த ரவீந்திரன் முன்னாடி, இரண்டு வழக்குலயும் இருக்கற குற்றவாளிகள், தங்களை குற்றச்சாட்டுலேர்ந்து விடுவிக்கனும்னு (Discharge petition) ஒரு வழக்கு தாக்கல் செஞ்சாங்க. பொதுவா, இது போன்ற மோசடி வழக்குகள்ல சம்பந்தப்பட்டவங்களை விடுவிக்க மாட்டாங்க. வழக்கு விசாரணை முடியட்டும்னு உத்தரவு போட்டுடுவாங்க. இந்த ரெண்டு கல்லூரி நிர்வாகமும், நீதிபதி ரவீந்திரனை அணுகியிருக்காங்க. அவரும், எல்லோரையும் விடுவிக்க சம்மதம்னு ஒரு கணிசமான தொகைக்கு ஒத்துக்கிட்டாரு. ஆனா, இவரு விடுவிக்கப் போற தகவல் வெளியில கசிஞ்சு, உயர் நீதிமன்றத்துக்கு புகார் அனுப்பிட்டாங்க. இது சம்பந்தமா இவரை விசாரணை செஞ்சதும் ஜனவரி 10ம் தேதி கொடுக்க வேண்டிய தீர்ப்பை தள்ளி வச்சுட்டார்.
அதுக்குப் பிறகு, ரெண்டு கல்லூரி நிர்வாகங்களும் சளைக்காம தொடர்ந்து இவரை அணுகியிருக்காங்க. அப்பவும் தயங்கிக்கிட்டே இருந்தார். ஒரு கட்டத்துல, உச்ச நீதிமன்றத்துல இருக்கற ஒரு தமிழ்நாட்டு நீதிபதியை அணுகியிருக்கு கல்லூரி நிர்வாகம்.
அவங்க கொடுத்த தைரியத்துல, இவருக்கு மாறுதல் உத்தரவு வந்த அன்னைக்கு, அவசர அவசரமா இந்த வழக்குல சம்பந்தப்பட்டவங்க அத்தனை பேரையும் விடுவிச்சு உத்தரவு போட்டுருக்கார்…“
“அடப்பாவிகளா.. ? இதை யாரும் விசாரணை பண்ண மாட்டாங்களா… “
“நல்லா பண்ணுவாங்களே… இப்போ என்ன நடந்துருக்குன்றதை கேட்டா இன்னும் அதிர்ச்சியாயிடுவீங்க.. “
“என்னய்யா நடந்துச்சு.. ? “
“நீதிபதி வி.பி.ரவீந்திரன் மேல பல புகார்கள் வந்துருக்கு… அவருக்கு உச்சநீதிமன்ற நீதிபதி சதாசிவத்துக்கிட்ட இருக்கற செல்வாக்கால எல்லா புகார்களையும் விசாரணை இல்லாமயே முடக்கிட்டார். இப்போ என்ன கூத்து நடந்துருக்குன்னா, தமிழகத்தில் உள்ள எல்லா நீதிபதிகள் மேலயும் வரக்கூடிய புகார்களை விசாரிக்க உயர்நீதிமன்றத்துல உள்ள விஜிலென்ஸ் செல்லுக்கு, கூடுதல் ரிஜிஸ்ட்ராரா வி.பி.ரவீந்திரன் நியமிக்கப்பட்டிருக்கார்… இப்படிப்பட்ட ஆளை விஜிலென்ஸ் ரிஜிஸ்ட்ராரா நியமிக்கிறாங்கன்னா, நீதி நிர்வாகம் எப்படி நடக்குதுன்னு பாத்துக்கங்க…“
“என்னய்யா இப்படி அக்கிரமம் பண்றாங்க… ? “
“என்னண்ணே பண்ணச் சொல்றீங்க.. இதுதான் நீதி நிர்வாகம்.. இது ஒரு பக்கம். ஊழல் புகாருக்கு ஆளாகி, பதவியை ராஜினாமா பண்ணிய பிடி.தினகரன் இருக்காரே அவரு பண்ண அநியாயம் பெரிய அநியாயம்.
அவர் மேல இருந்த ஊழல் புகார்கள் மேல விசாரணை தீவிரப்படுத்தப்பட்டதும் வேற வழியில்லாம ராஜினாமா பண்ணிட்டார். இப்போ அவரோட தோட்டத்துல வேலை பாக்கறதுக்கு யாரும் வர மாட்றாங்க.. “
“ஏன் யாரும் வர மாட்றாங்க… ? “
“வேலை செய்யறவனுக்கு கூலி கொடுத்தா ஏன் வர மாட்டேன்னு சொல்லப் போறாங்க.. யாருக்குமே கூலி கொடுக்கறதுல்ல… ஏழைங்க வயித்துல அடிக்கிறவன் தோட்டத்துக்கு யாரு வேலைக்குப் போவாங்க…“
“சரி.. அப்புறம்…“
“யாருமே வேலைக்கு வர மாட்றாங்கன்னு, அந்த திருத்தணி தாலுகாவுல இருக்கற கோபால கிருஷ்ணன்னு ஒருத்தர் தன் தோட்டத்துல புகுந்து மோட்டார், மருந்து அடிக்கும் இயந்திரம் எல்லாத்தையும் திருடிட்டு போயிட்டார்னு புகார் கொடுத்து, அவரை கைது பண்ணிட்டாங்க… இதுல விசேஷம் என்னன்னா, கைது செய்யப்பட்ட கோபாலகிருஷ்ணன், 70 சதவிகிதம் மன நிலை பாதிக்கப்பட்டவர். அப்படி மனநிலை பாதிக்கப்பட்டவர்கிட்ட ஒப்புதல் வாக்குமூலம் வாங்கினதா எழுதி, இன்னொருத்தரையும் கைது பண்ணியிருக்காங்க…“
“தினகரன் வாங்குன சொத்துக்களே ஊழல் பண்ணி திருடி சம்பாதிச்சது.. இதுல இவரு புகார் வேற குடுக்கறாரோ…“
“இந்த ஆள் நீதிபதி பதவியை ராஜினாமா செஞ்சதும் விட்டுட்டாங்க… இந்த ஆள் சொத்தையெல்லாம் பறிமுதல் பண்ணி நடுத்தெருவில விட்ருந்தா ஒழுங்கா இருந்துருப்பான்… அப்படிப் பண்ணாம விட்டதாலதான், இப்படி பொய்ப்புகார் குடுத்துட்டு உக்காந்துருக்கான்.. இந்த மாதிரி அயோக்கியனையெல்லாம் நடமாட விட்டுட்டு, 100 ரூபா லஞ்சம் வாங்குறவனை கைது பண்ணத்தான் நம்ப நாட்டுல சட்டம் இருக்கு.. என்னன்ணே பண்றது.. “
“நீதிபதிகள் நியமனம் எந்த நிலைமையில இருக்கு ? “
“வழக்கறிஞர்கள் என்ன போராட்டம் பண்ணாலும் ஏற்கனவே சொன்ன 15 பேரை நீதிபதியா நியமிக்கிறதுன்னு தீர்மானமா இருக்கிறார் சதாசிவம். அடுத்த மாதம் 15ம் தேதி அவர் இந்தியாவோட தலைமை நீதிபதியா பொறுப்பேற்கிறார். அதுக்காக தமிழ்நாட்டுலேர்ந்து 200 வழக்கறிஞர்கள் டெல்லி போறாங்க…
நீதிபதி சதாசிவம்
இதுக்கு நடுவுல, இவர் நீதிபதியா இருந்தப்போ சில வழக்குகள்ல தவறு பண்ணியிருக்கார். அந்த ஆதாரங்களையெல்லாம் எடுத்து அவருக்கு எதிரா ஒரு வழக்கு தாக்கல் பண்றதுக்கு, சென்னையில ஒரு டீமும், டெல்லியில ஒரு டீமும் ரெடியாயிட்டு இருக்கு.. கோவை பழமுதிர் நிலையத்துல நீதிபதி சதாசிவத்தோட முதலீடு இருக்குன்றதும் கூடுதல் தகவல்“ என்று சொல்லி விட்டு எழுந்தான் தமிழ்.
அவனைப் பின்பற்றி மற்றவர்களும் எழுந்தார்கள்.
1 Response
[…] குற்றச்சாட்டு சொன்னது சவுக்கு இணைப்பு அந்த நீதித்துறை நடுவர் மீது […]