திருப்பூர் மாவட்டம் கண்ணகி நகரைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவர் 31.08.2012 அன்று அடையாளம் தெரியாத நபர்களால் கொல்லப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக அந்தப் பகுதியைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட நபர்கள் சந்தேகத்தின் அடிப்படையில் அழைத்துச் செல்லப்பட்டு திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் வைத்து விசாரிக்கப்பட்டனர்.
அப்போது திருப்பூர் உதவிக் காவல் கண்காணிப்பாளராக இருந்தவர் சிபிச் சக்ரவர்த்தி. இவர் 2009ம் ஆண்டு நேரடியாக ஐபிஎஸ் தேர்ச்சி பெற்றவர். 30க்கும் மேற்பட்ட நபர்களை காவல்நிலையம் அழைத்து வந்து சிபிச் சக்ரவர்த்தியே விசாரித்திருக்கிறார். இந்த 30 பேர்களுள் மோகன்ராஜ் மற்றும் ரமேஷ் ஆகிய சகோதரர்களும் அடக்கம்.
சிபிச் சக்ரவர்த்தி ஐபிஎஸ்
கைது செய்யப்பட்ட 30 பேரும், திருப்பூர் காவல் நிலையத்தில் சட்டவிரோத காவலில் வைக்கப்பட்டு, தொடர்ந்து அடித்துச் சித்திரவதை செய்யப்பட்டுள்ளனர். இவர்களை சிபி சக்ரவர்த்தியே நேரடியாக அடித்துள்ளார். மறு நாள் 01.09.2012 அன்று திருப்பூர் நீதித்துறை நடுவர் முன்பு, 30 நபர்கள் சட்டவிரோத காவலில் வைத்து சித்திரவதை செய்யப்பட்டு வருவது குறித்து புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதித்துறை நடுவர், உடனடியாக திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை அழைத்துள்ளார். இதை அடுத்து, 30 பேரில் 30 பேர் உடனடியாக விடுவிக்கப்பட்டுள்ளனர். மீதம் உள்ளவர்களில் மோகன்ராஜ் உள்ளிட்ட நால்வர் மட்டும் எங்கோ ஒரு இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
03.09.2012 அன்று மோகன்ராஜின் மனைவி, தாய், தந்தை ஆகியோரை காவல்துறையினர் அனுப்பம்பாளையம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர் அங்கிருந்து திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, மோகன்ராஜின் உடலைக் காண்பித்து, அவர் காவல்துறைக் கட்டுப்பாட்டிலிருந்து தப்பிக்க முயலுகையில் கீழே விழுந்து இறந்து விட்டார் என்று தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக சம்பிரதாயமான வருவாய்க் கோட்டாட்சியர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு, அந்த விசாரணையை இழுத்து மூடும் பணி நடைபெற்று வருகிறது.
மோகன்ராஜின் குடும்பத்தினரை மிரட்டி, இது தொடர்பாக நீதிமன்றத்தை நாடக் கூடாது என்று காவல்துறையினர் மிரட்டி வந்துள்ளனர்.
இதையடுத்து, தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் சார்பில், வழக்கறிஞர் புகழேந்தி, சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். மோகன்ராஜின் மரணத்துக்கு காரணமான சிபிச்சக்ரவர்த்தி ஐபிஎஸ், குமார் ஆய்வாளர் மற்றும் இதரக் காவல்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்த, அந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று கோரி வழக்கு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், சிபிச் சக்ரவர்த்தி, ஆய்வாளர் குமார், தமிழக காவல்துறை இயக்குநர், உள்துறைச் செயலாளர் ஆகியோருக்கு உரிய பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டனர்.
இந்த சிபிச் சக்ரவர்த்தி, தன்னை காக்க காக்க திரைப்படத்தில் வரும் சூர்யா கதாப்பாத்திரம் போல நினைத்துக் கொள்பவர். மிக மிக மோசமான கோழையான நபர் இவர். காவல்துறை சீருடை கொடுக்கும் துணிச்சலில், அப்பாவிகளை கட்டி வைத்து லத்தியில் அடித்து தன் வீரத்தை பறைசாற்றிக் கொள்ளும் டுபாக்கூர் பேர்விழி இவர்.
திருப்பூர் காவல்நிலையத்தில் இவர் செய்த கொலையை கண்ணால் பார்த்த சாட்சிகள் இருக்கிறார்கள். கிராமத்தினர் 30 பேரையும் ஒன்றாக வைத்து இவரே அடித்திருக்கிறார். மோகன்ராஜை இவர் கடுமையாக தாக்கியதை நேரில் பார்த்த சாட்சிகள் எவ்வளவு மோசமாக சிபிச் சக்ரவர்த்தி நடந்து கொண்டார் என்று விவரித்தார்கள்.
இவரைப் புகழ்ந்து தினமலர் இதழில் இவர் வரவழைத்த “பெய்ட் நியூஸ்”
சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டிருக்கும் வழக்கு, சிபிச் சக்ரவர்த்தியின் சினிமா வீரத்துக்கு முற்றுப் புள்ளி வைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.