கோவையில் சத்குரு என்கிற ஜக்கி வாசுதேவ் என்கிற ஜெகதீஷ் என்பவர், ஈஷா யோக மையம் என்ற ஒன்றை நடத்தி வருகிறார். யோகா சொல்லித் தருகிறேன் என்ற பெயரில் இந்த அமைப்பு வனங்களை அழித்து, காட்டு யானைகளை துன்புறுத்தி, நிலங்களை ஆக்ரமித்து எப்படி ஆசிரமம் நடத்தி வருகின்றன என்பது குறித்து, ஏற்கனவே சவுக்கு தளத்தில் அத்தனைக்கும் ஆசைப்படாதே என்ற கட்டுரையில் விரிவாக எழுதப்பட்டிருந்தது.
பூவுலகின் நண்பர்கள் என்ற அமைப்பைச் சேர்ந்த வழக்கறிஞர் வெற்றிச் செல்வன் என்பவர், அனுமதி பெறாமல் ஏராளமான கட்டிடங்களைக் கட்டி வரும், ஈஷா யோக மையத்தின் கட்டிடங்களை இடிக்க வேண்டும் என்று கோரி பொது நல வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் ஈஷா மையம் மற்றும் தமிழக அரசு இவ்விஷயத்தில் பதிலளிக்க வேண்டுமென்று உத்தரவிட்டு அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
கோவை மாநகரம் 13 மணி நேர மின்வெட்டில் அவதிப்பட்டு, சிறுதொழில்கள் நசிந்து வரும் நிலையில், ஈஷா மையத்துக்கு 24 மணி நேர மின் வசதி சிறுவாணி மின் உற்பத்தி நிலையத்திலிருந்து வழங்கப்படுவதை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று கோரி வெற்றிச் செல்வன் தொடர்ந்த பொது நல வழக்கிலும், சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டது.
இந்நிலையில், ஈஷா மையத்தில் நடைபெற்று வரும் “ஈஷா சம்ஸ்க்ருதி” என்ற பள்ளியை உடனடியாக மூட வேண்டும் என்று தற்போது தொடர்ந்துள்ள பொது நல வழக்கில் கோரப்பட்டிருக்கிறது.
ஈஷா மையத்தில் ஈஷா சம்ஸ்க்ருதி என்று ஒரு பள்ளி நடைபெற்று வருகிறது. இந்தப் பள்ளியில் குழந்தைகள் 6 வயது முதல் 8 வயது வரை மட்டுமே சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.
இந்தப் பள்ளியில் வழக்கமான பள்ளிகளில் சொல்லித்தரப்படும், தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல், வரலாறு போன்ற எதுவும் சொல்லித் தரப்படாது. இதற்குப் பதிலாக, வேதம், சமஸ்கிருதம், கொஞ்சம் ஆங்கிலம், களரிப் பயட்டு, போன்றவை மட்டுமே சொல்லித் தரப்படும். இதில் படிக்கும் ஆண் குழந்தைகள் குடுமி வளர்க்க வேண்டும். இந்தக் குழந்தைகளுக்கு வெளி உலகம் என்றால் என்ன என்றே தெரியாத வகையில் வளர்க்கப்படுகிறார்கள்.
இந்தப் பள்ளியில் பிள்ளைகளைச் சேர்க்க முக்கிய நிபந்தனை, குழந்தையின் பெற்றோர் இருவரும், ஈஷா மையத்தின் அடிமைகளாக இருக்க வேண்டும். வருடத்துக்கு ஒரு முறை மட்டுமே குழந்தைகளுக்கு 20 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டு, பெற்றோரோடு இருக்க அனுமதிக்கப் படுவார்கள். மற்ற நாட்களில் ஆசிரமத்திலேயே தங்கியிருக்க வேண்டும். அதிகபட்சமாக 18 வயது வரை சம்ஸ்கிருதி பள்ளியில் மாணவர்கள் படிக்க அனுமதிக்கப்படவார்கள்.
பிரமச்சர்யமே சிறந்த வாழ்வு, சராசரி மனிதர்களைப் போல வாழக் கூடாது, பிரம்மச்சர்யத்தைக் கடைபிடித்தால், கடவுளை 2 கிலோ மீட்டர் தூரத்தில் சந்திக்கலாம் என்பது போன்ற கல்வி இந்தப் பள்ளியில் போதிக்கப்படுகிறது.
இது போன்ற கல்வித் திட்டம் எவ்விதமான அரசு அனுமதியும் பெறாமல் நடத்தப்படுகிறது. அரசு அனுமதி பெறாமல் பள்ளிகள் நடத்துவது சட்ட விரோதம். மேலும், அனுமதி பெறாத கட்டிடங்களில் இந்தப் பள்ளி நடைபெற்று வருகிறது. குழந்தைகளை அவற்றின் சம்மதம் இல்லாமலேயே பிரம்மச்சர்யத்துக்கு தள்ளுவது குழந்தைகளின் உரிமை மீறல் என்ற காரணங்களால் இந்த ஈஷா சம்ஸ்கிருதி பள்ளியை மூட வேண்டும் என்று வழக்கறிஞர் வெற்றிச் செல்வன் தன் மனுவில் கோரியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
Super Article.. Please Continue and post more about the isha insitute sir..