வேட்டை நாய்கள் என்பன கண்ணில் தென்படும் இரையை வேட்டையாடுவதற்காகவே வளர்க்கப்படுகின்றன. அந்த நாய்களுக்கு, தாங்கள் எதைத் தாக்குகிறோம், எதற்காக தாக்குகிறோம் என்பது போன்ற எந்தப் புரிதலும் கிடையாது. அந்த வேட்டை நாய்களிடம் நியாய தர்மத்தையும் எதிர்ப்பார்க்க முடியாது.
அது போன்ற வேட்டை நாய்களை, தமிழக காவல்துறை பயிற்சி அளித்து உதவி ஆய்வாளர்களாக உலவ விட்டுக் கொண்டிருக்கிறது. காவல் நிலையத்துக்கு செல்ல வேண்டிய துர்ப்பாக்கிய நிலை அடைந்தவர்கள் யாருக்குமே, அந்த நேர்வு மகிழ்ச்சி அளிக்கக் கூடியதாக இருந்திருக்க வாய்ப்பில்லை. எந்த விஷயத்துக்காக காவல்நிலையம் சென்றாலும் காவல்நிலையம் தரும் அனுபவம் மிக மிக கசப்பானதாகவே இருக்கிறது. வரும் நபர் ஒரு முக்கிய அல்லது மிக முக்கிய பிரமுகராக இல்லாத பட்சத்தில், காவல்நிலையத்தில் இருப்பவர்கள் வருபவர்களை மரியாதையோடு நடத்துவதில்லை. எடுத்த எடுப்பிலேயே …………….த்தா என்றுதான் ஆரம்பிப்பார்கள்.
காவல் நிலையம் செல்வதற்கு முன்பாகவே, அந்த காவல்நிலையத்துக்கு பொறுப்பான உயர் உயர் அதிகாரியிடம் சொல்லி விட்டீர்கள் என்றால், காவல்துறையினர் உங்களிடம் குழையும் குழைவே தனி. “வாங்க சார்… உக்காருங்க சார்.. சொல்லியிருந்தா நானே வீட்டுக்கு வந்துருப்பேனே சார்.” என்று குழைவார்கள்.
குற்றவாளிகளை விசாரிப்பதில் காவல்துறையின் அணுகு முறை குறித்து பல பதிவுகளில் விரிவாகவே எழுதியாயிற்று. எடுத்த எடுப்பில் அடிதான். அடிக்குப் பிறகுதான் எல்லாமே.
இப்படிப்பட்ட காவல்துறையை சீரமைக்க நீதிமன்றங்கள் எடுத்த எல்லா முயற்சிகளையும் காவல்துறை தொடர்ந்து முறியடித்தே வந்துள்ளது.
தற்போது இந்தக் கட்டுரை எழுத வேண்டிய அவசியம் ஏற்பட்டதன் காரணம், கடந்த வாரம் நடந்த ஒரு சம்பவம். ஜுன் 10 அன்று செய்தித்தாளில், காவல்துறையினர் வழக்குரைஞர்கள் மோதல் என்று ஒரு செய்தி வெளியானது.
அந்த செய்தி பின்வருமாறு.
“வியாசர்பாடி எம்.கே.பி. நகர் பகுதியில் உள்ள ஒரு செருப்புக் கடையில் கல்பனா என்பவர் சனிக்கிழமை மதியம் செருப்பு வாங்கினாராம். ஆனால் அந்தச் செருப்பு வீடு செல்லும் வழியிலேயே அறுந்து விட்டதாம். இதனால் தனது சகோதரர் சுரேஷ் என்பரை அழைத்துக்கொண்டு செருப்புக் கடைக்கு சென்ற கல்பனா, செருப்பை மாற்றித் தரும்படி கேட்டாராம். இதற்கு கடையின் உரிமையாளர் மறுத்து விட்டாராம். இதனையடுத்து அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து சுரேஷ் எம்.கே.பி. நகர் காவல்நிலையத்தில் சனிக்கிழமை இரவு புகார் செய்துள்ளார். அப்போது அங்கு கடையின் உரிமையாளருடன் வந்த வழக்குரைஞர் ஹேமாநாத், போலீஸாரிடம் வழக்கு குறித்து விசாரித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து ஆய்வாளர் நடராஜனுக்கும் ஹேமாநாத்துக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டதாம்.
இதையடுத்து தனது வழக்குரைஞர் நண்பர்களை ஹேமாநாத் செல்போனில் அழைத்ததன் பேரில் 12 பேர் காவல்நிலையம் வந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது வாய்த்தகராறு முற்றி வழக்குரைஞர்கள் மற்றும் போலீஸாருக்கு இடையே அடிதடி ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதில் ஆய்வாளர் நடராஜன், காவலர்கள் சோனமுத்து, அரவிந்த், ஜெயமூர்த்தி ஆகியோரும், வழக்குரைஞர்கள் மைக்கேல், ரஞ்சித் ஆகியோரும் காயமைடைந்தனர். மேலும் இந்தத் தாக்குதல் சம்பவத்தில் காவல் நிலையத்தில் இருந்த மேசை, நாற்காலி, கண்ணாடிகள் மற்றும் காவல்துறை வாகனங்கள் சேதமடைந்ததாக கூறப்படுகிறது.
காயமடைந்த போலீஸார் மற்றும் வழக்குரைஞர்கள் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது குறித்து இரு தரப்பினரிடமும் புகார் பெறப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது என்று போலீஸார் தெரிவித்தனர்.
போலீஸார் தவறாக பேசி தங்களை தாக்கியதாக காயமடைந்த வழக்குரைஞர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இரவு 10 மணி முதல் 12.15 மணி வரை நடந்த இந்த மோதல் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.”
இது தினமணி நாளேட்டில் வந்த செய்தி. வராத செய்தி ஒன்று உள்ளது.
காவல் நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தியதில் ஈடுபட்ட வழக்கறிஞர்களில் ஒருவர் பூபாலன். இவர் வியாசர்பாடியில் வசிக்கிறார். இந்த பூபாலன் சில ஆண்டுகளுக்கு முன்பு சட்டம் படித்தார். ஆனால் சட்டம் முடித்தாரா, வழக்கறிஞராக பதிவு செய்தாரா என்ற விபரங்கள் இல்லை. இவருக்கு ஒரு தம்பி இருக்கிறார்.
அவர் மத்திய உளவுத்துறையில் (Intelligence Bureau) பணியாற்றுகிறார். சம்பவம் நடந்த அன்று வழக்கறிஞர்கள் காவல் நிலையத்தை தாக்கியதும், அன்று இரவுப் பணியில் இருந்த உதவி ஆய்வாளர்கள் பச்சமுத்து, அஷோக் தாமஸ், சோனியா காந்தி, இளையராஜா என்ற காவலர், கார்த்திக் என்ற உதவி ஆய்வாளர் ஆகியோர் கடும் கோபமடைகின்றனர். இதில் பச்சமுத்து, அஷோக் தாமஸ், சோனியா காந்தி ஆகியோர் 2011ம் ஆண்டு நேரடி உதவி ஆய்வாளர்களாக பணியில் சேர்ந்து, தற்போது தகுதிகாண் பருவத்தில் (Probation period) இருப்பவர்கள்.
இவர்கள் அனைவரும் ஒன்று கூடுகின்றனர். போலீஸ் ஸ்டேஷனுக்குள்ள புகுந்து, போலீஸ் காரனையே அடிச்சுட்டானுங்க… இவனுங்களுக்கு போலீஸ்னா என்னன்னு காட்டணும் என்று கருவுகின்றனர். இந்த தகராறில் ஈடுபட்ட பூபாலன் என்ற வழக்கறிஞரின் வீடு எங்கே என்று கண்டறிகின்றனர். அவர் வீடு வியாசர்பாடியில் என்றதும் நேராக வியாசர்பாடியில் உள்ள பூபாலனின் வீட்டுக்குச் செல்கின்றனர்.
20 பேர் வாகனத்தில் சென்று, கதவை தட தட வென்று தட்டுகின்றனர்.
பூபாலனின் தம்பி திருமுருகன் பதட்டத்தோடு வந்து கதவைத் திறக்கிறார். திறந்ததும் “எங்கடா பூபாலன் …………….. பையன்… ?” என்று அதிரடியாக கேள்வி. ”சார் அவன் எங்கன்னு தெரியாது… எனக்கும் அவனுக்கும் 8 வருஷமா பேச்சுவார்த்தை கிடையாது…” என்று பதில் கூறுகிறார்.
”நீ யாருடா ? ” என்று அடுத்த கேள்வி.
”சார் நான் பூபாலன் தம்பி சார்” என்று சொல்லி முடித்ததும் பொளேறென்று ஒரு அறை. பச்சமுத்து என்ற உதவி ஆய்வாளர், ”……………………. பையா.. ஏறுடா வண்டியில” என்று அவர் காலரைப் பிடித்து இழுத்து வருகிறார்.
”சார் நான் மத்திய உளவுத்துறை அதிகாரி. இன்டெலிஜென்ஸ் ப்யூரோ… நானும் சப் இன்ஸ்பெக்டர் ரேங்குல இருக்கேன்… ஐ.பி கவர்மென்ட் செர்வன்ட் சார்” என்று சொன்னதும் அடுத்த அடி.
”ஐபி னா என்ன பெரிய ………………. ? வாடா மயிறு…” என்று மேலும் சராமரியாக அடி. இவர் நடக்க நடக்க, பின்னாலிருந்து லத்தியில் சராமாரியாக அடி விழுகிறது.
வலியைப் பொறுத்துக் கொண்டே திருமுருகன், ”சார் என்னை ஒரு ரெண்டு நிமிஷம் பேச விடுங்க… ரெண்டே ரெண்டு நிமிஷம் சார். ப்ளீஸ்” என்று கெஞ்சுகிறார். மீண்டும் மீண்டும் அடி விழுந்து கொண்டே இருக்கிறது. வண்டியில் ஏற்றப்பட்டு, மகாகவி பாரதி நகர் காவல் நிலையத்துக்கு அழைத்து வரப்படுகிறார்.
காவல் நிலையம் வந்ததும் அவர் கட்டியிருந்த லுங்கி கழற்றப்படுகிறது. பச்சமுத்து என்ற உதவி ஆய்வாளர் திருமுருகனின் காலில் ஏறி நின்று கொள்கிறார்.
”லாடம் கட்டுங்கடா இந்த ………………… பையனுக்கு” என்கிறார் பச்சமுத்து. காலின் மீது பச்சமுத்து ஏறி நின்று கொள்ள, முகுந்தன் உதவி ஆய்வாளரும், அஷோக் தாமஸ் உதவி ஆய்வாளரும், சோனியா காந்தி உதவி ஆய்வாளரும் உள்ளங்காலில் லத்தியால் சராமாரியாக அடிக்கின்றனர். கையை நீட்டச் சொல்லி கையிலும் லத்தியால் அடிக்கின்றனர். உள்ளங்காலும், கைகளும் வீங்கிப் போகின்றன.
இதற்குள், திருமுருகனின் தாயார், அவரின் அடையாள அட்டையை ஒரு சிறுவனிடம் கொடுத்து விடுகிறார். காவல் நிலையம் வந்த அந்தச் சிறுவன், அடையாள அட்டையை சோனியா காந்தி உதவி ஆய்வாளரிடம் கொடுக்கிறார். அதை கையில் வாங்கிய அவர், என்னடா ஐபி… ஐபின்னா பெரிய மயிறா… என்று லத்தியை வைத்து மீண்டும் அடிக்கிறார். பச்சமுத்து அந்த அடையாள அட்டையை வாங்கிப் பார்த்து, கீழே போட்டு மிதிக்கிறார்.
இதற்குள் கார்த்திக் என்ற அதிகாரி, ”இந்த …………….. பையனை இங்கயே கொல்லனும் டா… ” என்று கூறிக்கொண்டே வெறித்தனமாக அடிக்கிறார்.
இன்னொரு காவலர், அந்த அடையாள அட்டையை எடுத்து, ”இதெல்லாம் சென்ட்ரல் கவர்மென்டுல வச்சுக்க… இது தமிழ்நாடு… உன் பருப்பு இங்க வேகாது.. ” என்று அடிக்கிறார்.
பெண் என்பதால் மனது இறங்கும் என்று நினைத்துக் கொண்டு, திருமுருகன், ”மேடம்… நான் என் சீனியர் ஆபீசர்ஸ்க்கு தகவல் சொல்லணும்.. ஒரே ஒரு போன் பண்ணிக்கிறேன் ” என்று கேட்கிறார்.
”ஏதாவது பேசுன.. வாயைக் கொழப்பிடுவேன்… …………………. பையா… உங்க அம்மா உன்னை ஒருத்தனுக்கு பெத்துப் போட்ருந்தா இப்படி பண்ண மாட்ட.. பறத். …………………. பையா…. என்னா திமுருடா உங்களுக்கெல்லாம்” என்று மீண்டும் அடிக்கிறார்.
”மேடம் என் போனை எடுத்துப் பாருங்க.. பூபாலன் நம்பர் என் போன்ல இருந்தா என்னை அடிங்க… நானும் அவனும் பேசி 8 வருஷம் ஆகுது. அவன் போன் நம்பர் கூட என்கிட்ட இல்ல” என்கிறார்..
”வாயை மூடுடா……………………… பையா…. வாயை ஒடச்சிடுவேன்” என்று மீண்டும் அடி. இந்தச் சம்பவங்கள் இரவு 12 மணி முதல் 2 மணி வரை நடக்கிறது.
விடியற்காலை 2 மணிக்கு, அந்த காவல் நிலையத்தின் ஆய்வாளர் சம்பத் வருகிறார்.
வந்ததும் பச்சமுத்து ஆய்வாளர், பெருமையாக, ”சார் அக்யூஸ்டோட தம்பியைத் தூக்கிட்டு வந்துட்டோம்….. ஏதோ ஐபில வேலை பாக்கறானாம்” என்கிறார். சம்பத்துக்கு என்ன நடக்கிறது என்று அப்போதுதான் உறைக்கிறது.
திருமுருகனை எழுந்து நாற்காலியில் அமர வைக்கிறார். ”தம்பி இங்க பாருங்க.. நடந்தது நடந்து போச்சு… ஹாஸ்பிட்டல்ல உங்களுக்கு ட்ரீட்மென்ட் குடுக்கச் சொல்றேன்… இதைப் பெருசு படுத்தாதீங்க, யாராவது கேட்டா கீழ விழுந்துட்டேன்னு சொல்லுங்க” என்கிறார்.
திருமுருகன் ”சார்… நான் இப்போ விடுமுறையில இல்லை.. ட்யூட்டியில இருக்கேன்.. சீனியர் ஆபீசர்ஸ்க்கு சொல்லாம என்னால இருக்க முடியாது.. ” என்கிறார்.
”உங்க நல்லதுக்கு சொல்றேன்.. பெருசு பண்ணாம விட்டீங்கன்னா இத்தோட போயிடும்.. நீங்க கம்ப்ளெயின்ட் குடுத்தீங்கன்னா, எங்களை எப்படி காப்பாத்திக்கிறதுன்னு எங்களுக்குத் தெரியும் அதுக்கு மேல உங்க இஷ்டம்” என்கிறார்.
”இல்ல சார் நான் என் சீனியர் ஆபீசர்ஸ்க்கு சொல்லித்தான் ஆகணும்” என்கிறார் திருமுருகன்.
அதற்கு மேல் என்ன சொல்வது என்று தெரியாத சம்பத் குமார், திருமுருகனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, சிகிச்சை அளித்து விட்டு வீட்டில் விட்டு விடுமாறு சொல்லுகிறார்.
பவித்ரா மருத்துவமனைக்கு திருமுருகன் அழைத்து செல்லப்படுகிறார். வலிக்கு ஒரு ஊசி போட்டதும், அட்மிட் செய்ய வேண்டும் என்கிறார் மருத்துவர். பச்சமுத்து அட்மிஷன் வேண்டாம் என்று கூறி விடுகிறார்.
திருமுருகனை வீட்டில் இறக்கி விட்டு விடுகின்றனர். வலி பொறுக்க முடியாததால், பக்கத்து வீட்டில் உள்ள பையனை போன் செய்து வரவழைத்து, அதிகாலை 5 மணிக்கு மருத்துவமனைக்கு செல்லலாம் என்று திருமுருகன் கிளம்ப எத்தனித்தால், வாசலிலேயே காவல்துறையினர் நின்று எங்கேயும் போகக்கூடாது என்று தடுக்கின்றனர்.
வேறு வழியின்றி திருமுருகன் வீட்டிலேயே இருக்கிறார். இதற்குள், தன் உயர் அதிகாரிகளுக்கு விபரங்களைச் சொல்லுகிறார் திருமுருகன். மறுநாள் உயர் அதிகாரிகள் வந்து பார்த்து அதிர்ந்து போகிறார்கள்.
திருமுருகனின் காயங்கள்.
உடனடியாக திருமுருகனை ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கிறார்கள். அங்கே அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மத்திய உளவுத்துறையின் இயக்குநர், தமிழக டிஜிபி ராமானுஜத்திடம் பேசி, உடனடியாக ராமானுஜம், உயர் அதிகாரிகளை திருமுருகனைப் பார்த்து வருவதற்கு அனுப்புகிறார்.
அதே தனியார் மருத்துவமனையில் ஆய்வாளர், சம்பத் குமாரும், உதவி ஆய்வாளர் பச்சமுத்துவும் திருமுருகனைப் பார்த்து, பணம் கொடுக்க முயற்சிக்கிறார்கள். மருத்துவமனை செலவுகளை ஏற்றுக் கொள்வதாக கூறுகிறார்கள். ஆனால் திருமுருகன், எதுவாக இருந்தாலும் என் உயர் அதிகாரிகளிடம் பேசிக் கொள்ளுங்கள் என்று கூறி விடுகிறார்.
திருமுருகனிடம் புகார் பெறப்பட்டு, விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. புளியந்தோப்பு துணை ஆணையர் சுதாகர் மருத்துவமனைக்கு சென்று திருமுருகனை நேரில் பார்த்து புகார் பெறுகிறார்.
தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திருமுருகனின் புகாரின் பேரில் விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறையினர் கூறுகின்றனர்.
இதில் சம்பந்தப்பட்ட பச்சமுத்து, பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். உதவி ஆய்வாளர்கள் முகுந்தன், அஷோக் தாமஸ் மற்றும் சோனியா காந்தி ஆகியோர் பணி மாறுதல் செய்யப்பட்டு உள்ளனர்.
இதுதான் காவல்துறையினர் நடத்தும் விசாரணையின் லட்சணம். சட்டப்படி இந்த நிகழ்வில் செய்ய வேண்டியது, எப்ஐஆர் பதிவு செய்து, சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளை கைது செய்ய வேண்டியதே.
மத்திய உளவுத்துறையின் அதிகாரி என்று சொன்ன பிறகும், இப்படி கடுமையான தாக்குதலை நடத்திய இந்த காவல்துறை அதிகாரிகள் காவல்துறையின் பணியாற்ற லாயக்கற்றவர்கள். உடனடியாக அனைவரையும் பணி இடை நீக்கம் செய்து, துறை நடவடிக்கை எடுப்பதோடு, அனைவரையும் கைது செய்து சிறையில் அடைப்பதே நியாயமான நடவடிக்கை. சாலையில் செல்லும் ஒருவன் இது போல மற்றொருவனால் தாக்கப்பட்டால் சட்டம் என்ன நடவடிக்கை எடுக்குமோ, அதே போலத்தான் இந்த நிகழ்விலும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆனால், எங்களை எப்படி தற்காத்துக் கொள்ள வேண்டும் என்று எங்களுக்குத் தெரியும் என்று காவல்துறை அதிகாரிகள் சொல்லுவதே, இதிலிருந்து அவர்கள் எப்படியும் காப்பாற்றப் படுவார்கள் என்ற அவர்களின் அதீத நம்பிக்கையைக் காட்டுகிறது. அது உண்மையாகவும் இருக்கலாம்.
கடந்த 4 ஆண்டுகளாக காவல்துறை கட்டுப்பாட்டில் இறந்தவர்கள், போலி என்கவுன்டர்கள் போன்றவை தொடர்பாக தொடரப்பட்ட 15க்கும் மேற்பட்டட வழக்குகளில் உயர்நீதிமன்றம் இது வரை எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை என்பதே தமிழகத்தில் மனித உரிமைகளின் லட்சணம் என்ன என்பதை பறைசாற்றுகிறது.
ஜெயலலிதாவின் ஆட்சியில் ஒரு மத்திய உளவுத்துறை அதிகாரியையே இந்த நிலைக்கு அவரின் காவல்துறை ஆளாக்கியிருக்கிறதென்றால், சாமான்யனின் நிலையை சொல்லவும் வேண்டுமா ?
குறிப்பு : உளவுத்துறை அதிகாரி என்பதால், திருமுருகனின் பெயர் உண்மைப் பெயர் அல்ல.