தலைப்பை பார்த்தவுடன் என்னடா இதுவும் ஆண்டிமுத்து ராசாவைப் பற்றிய பதிவா என்று ஆச்சர்யப் படாதீர்கள்…
இது ஆண்டிமுத்து மகனைப் போலவே, மற்றொரு ஜகஜ்ஜாலக் கில்லாடியைப் பற்றிய பதிவு
ஆ.ராசா நான் குற்றமற்றவன் எந்தத் தவறும் செய்யவில்லை என்று ஊரை ஏமாற்றிக் கொண்டு சுற்றுவது போலவே, நான் நேர்மையானவன், என் மீது பொய்க் குற்றச் சாட்டு சுமத்தப் பட்டுள்ளது என்று ஏமாற்றிக் கொண்டு புலம்பித் திரியும் மற்றொரு தகத்தகாய கதிரவன் தான் சுனில் குமார் ஐபிஎஸ்.
இந்தக் குற்றச் சாட்டுகளெல்லாம் சுமத்தப் படுவதற்கு முன், இவரை பல பேர் தகத்தகாய கதிரவன் என்றே நம்பிக் கொண்டு இருந்தார்கள். அவ்வளவு ஏன்… சவுக்கே இவரை அப்படித் தான் நம்பிக் கொண்டிருந்தது. இவர் ஒரு பசுத்தோல் போர்த்திய புலி என்பதை விசாரிக்க விசாரிக்கத் தான் தெரிந்தது.
புதிய வாசகர்கள், சுனில் குமாரின் வண்டவாளங்கள் என்ன என்பதை தெரிந்து கொள்ள செப்டம்பர் மாதத்தின் இரு தலித்துகள் பதிவையும், உத்தரப் பிரதேச உத்தமப் புத்திரன் பதிவையும் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
சுனில் குமார் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளார் என்று தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர், லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் ஆகியோருக்கு, ஒரு புகாரும், சுனில் குமாரை லஞ்ச ஒழிப்புத் துறையிலிருந்து மாற்ற வேண்டும் மற்றும் பணி இடை நீக்கம் செய்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று 15.10.2010ல் ஒரு புகார் அனுப்பப் பட்டது. அந்தப் புகாரின் மீது எந்த விதமான நடவடிக்கையும் இல்லாததால் சென்னை உயர்நீதிமன்றத்தில் சுனில் குமார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, வழக்கு ஒன்றும் தொடுக்கப் பட்டது.
அந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கும், சுனில் குமாருக்கும் மூன்று வாரத்திற்குள் பதிலளிக்குமாறு உத்தரவிட்டது. இந்த செய்தியை எந்த ஊடகத்திலும் வர விடாமல் ஒரு சக்தி சுனில் குமார் சார்பாக தடுத்தது. அந்த சக்தி என்ன என்பது பற்றி பார்ப்பதற்கு முன்…. இத்தகவல் தெரிந்ததும் சுனில் குமார் என்ன சொன்னார் தெரியுமா…. ?
“ப்ளடி க்ளார்க்…. ஐ வில் ஃபினிஷ் தட் பாஸ்டர்ட். “ என்று கோபமாக கூறியிருக்கிறார். பிறகு மற்றொரு அதிகாரியிடம் “தட் ப்ளடி ஃபெலோ திங்க்ஸ் டூ மச் ஆப் ஹிம்செல்ஃப். ஹி ஹேஸ் டு பி டாட் ய லேஸ்ஸன்“ என்று கூறியிருக்கிறார். யார் யாருக்கு பாடம் கற்றுக் கொடுக்கப் போகிறார்கள் என்பதை பார்ப்போம் சுனில்.
சுனில் குமார் சார்பாக, பத்திரிக்கைகளில் சுனில் குமாருக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட செய்தியை ஒவ்வொரு பத்திரிக்கை அலுவலகமாக தொடர்பு கொண்டு, செய்தியை போடாதீர்கள் என்று கெஞ்சிக் கேட்டுக் கொண்டார். அதன் படியே பெரும்பாலான ஊடகங்கள் செய்தியை போடாமல் புறக்கணித்தன.
தினசரிகளைத் தாண்டி, வாரமிருமுறை பத்திரிக்கைகளுக்கும் இந்த நெருக்கடி தொடர்ந்தது.
இவ்வளவு நெருக்கடிகளையும் தாண்டி, இந்த வழக்கு பற்றிய செய்திகளை வெளியிட்ட குமுதம் ரிப்போர்ட்டர் வாரமிருமுறை இதழுக்கு சவுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது. இந்த குமுதம் ரிப்போர்ட்டர் இதழ் வெளி வந்தவுடன், சுனில் கோபத்தின் உச்சிக்கே சென்றார். லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்தின் ஊழியர்கள், குமுதம் ரிப்போர்ட்டர் இதழை ரகசியமாக பைல் நடுவே வைத்து ஒளித்து ஒளித்து படித்தார்களாம்.
இப்படி ஒவ்வொரு பத்திரிக்கை அலுவலகமாக கெஞ்சிக் கூத்தாடி, செய்தியை பிரசுரிக்க வேண்டாம் என்று சுனில் குமாருக்காக செயல்பட்ட சக்தி எது தெரியுமா… ?
பிரமோத் குமார் ஐபிஎஸ். இவர் எதற்காக சுனில் குமாருக்காக இப்படி வருந்தி வருந்தி உழைக்க வேண்டும். காரணம் இருக்கிறது தோழர்களே.. காரணம் இருக்கிறது. சோழியன் குடுமி சும்மா ஆடுமா என்ன ?
திருப்பூரில் பாசி என்ற நிதி நிறுவனம் தொடங்கப் பட்டது. இங்கு ரூ.1 லட்சம் பணம் டெபாசிட் செய்தால் 4 மாதம் கழித்து 2 1/2 லட்சம் திருப்பி தருவதாக இந்த நிறுவனத்தை நடத்தியவர்கள் தெரிவித்தனர்.அதன்படி முன்தேதியிட்டு செக் கொடுத்தனர். இதை நம்பி திருப்பூரை சேர்ந்த ஏராளமான தொழில் அதிபர்கள், பொது மக்கள் லட்சக்கணக்கில் பணம் கட்டினர். கூலி வேலை செய்பவர்களும் கடன் வாங்கி பணம் செலுத்தினர்.இந்த நிலையில் இந்த நிறுவனம் திடீர் என மூடப்பட்டது. அதனை நடத்திய 3 பேர் தலை மறைவாகி விட்டனர்.
இந்த நிதி நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்து இழந்தவர்கள் ஆயிரக்கணக்கானோர். அவர்கள் அனைவரும் காவல்துறையில் புகார் செய்தனர்.
இதையடுத்து காவல்துறையில் வழக்கு பதிவு செய்யப் பட்டு, தலைமறைவான குற்றவாளிகளை தேடும் நடவடிக்கை முடுக்கி விடப் பட்டது.
தலைமறைவான குற்றவாளிகள் எங்கிருக்கிறார்கள் என்று தெரிந்ததும், காவல்துறையினர் அவர்களோடு பேரம் பேசத் தொடங்குகிறார்கள்.
இந்த வழக்கை விசாரித்த முக்கிய காவல்துறை அதிகாரிகள் திருப்பூர் டிஎஸ்பி ராஜேந்திரன், குற்றப் பிரிவு இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ். இவர்கள் மூன்று பேரும் என்ன செய்தார்கள் தெரியுமா ?
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளுள் ஒருவரான கமலவள்ளி என்ற பெண்மணியை கடத்தி, வழக்கிலிருந்து தப்புவிக்கிறோம் என்ற வாக்குறுதியை அளித்து மாறி மாறி வன்புணர்ச்சியில் ஈடுபட்டனர். இதோடு நிற்காமல், ஆளுக்கு 2 கோடி என்று பேரத்தில் ஈடுபட்டு, அந்தப் பணத்தையும் பறித்தனர்.
இதோடு நிற்கலாமா… நின்றால் தமிழக காவல்துறையின் கவுரவம் என்னாவது… ?
வடக்கு மண்டல ஐஜியாக இருந்தவர் ப்ரமோத் குமார். கமலவள்ளியை நாசப் படுத்திய அந்த மூன்று பொறுக்கிகளும், ப்ரமோத் குமாரிடம் ஒப்படைக்கின்றனர். ப்ரமோத் குமார் தன் பங்குக்கு ஒரு வாரத்திற்கும் மேலாக கமலவள்ளியை அடைத்து வைத்து சீரழிக்கிறார்.
சீரழித்ததோடு மட்டுமல்லாமல், சிபிஐ ன் குற்றவாளிகள் பட்டியலில் உள்ள ஜான் ஆப்ரகாம் என்பவர் மூலம் கமலவள்ளியிடம் பேரம் நடத்தி 10 கோடி ரூபாய் வசூல் செய்கிறார்.
இத்தனை அநியாயங்களுக்கும் ஆளான கமலவள்ளி, பொறுமை இழந்து, நீதிமன்ற நடுவர் முன்னிலையில் ஆஜராகி, நடந்த அத்தனை உண்மைகளையும் எடுத்துரைக்கிறார். இவர் நீதிமன்ற நடுவர் முன்பு வாக்குறுதி கொடுத்த பின்னரே காவல்துறை வழக்கு பதிவு செய்து இன்ஸ்பெக்டர் மோகன்ராஜை கைது செய்கிறது. பிறகு வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப் படுகிறது.
சவுக்கு வாசகர்கள் சிலர், காவல்துறை அதிகாரிகளை பற்றி எழுதுகையில் மொழி நடையில் கவனம் தேவை என்று சொல்லியிருக்கிறார்கள்.
இந்த பொறுக்கிகளைப் பற்றி என்ன வார்த்தையில் எழுதுவது என்று நீங்களே கூறுங்கள்.
இந்த ப்ரமோத் குமார் மீது, லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு உத்தரவிடப் படுகிறது. அந்த விசாரணையை மேற்பார்வை செய்ய வேண்டியது யார் ? வேற யாரு… நம்ப தகத்தகாய கதிரவன் தான்.
விசாரணையை ஒரு அங்குலம் கூட நகர விடாமல் பார்த்துக் கொண்டார்.
இதற்கு கைமாறுதான் ப்ரமோத் குமார், பத்திரிக்கை அலுவலகங்களை தொடர்பு கொண்டு பிச்சை எடுத்தது.
ப்ரமோத் குமார் செய்த அக்கிரமங்கள் என்னவென்று பார்த்தீர்கள். இந்த ப்ரமோத் குமாரை காப்பாற்றும் சுனில் குமார் ப்ரமோத் குமாரை விட மோசமான நபர் என்றே சவுக்கு பார்க்கிறது.
அடுத்த நிகழ்வு இன்றும் சிறப்பானது. ப்ரமோத் குமாராவது, நேரடி நியமனத்தில் வந்த ஐபிஎஸ் அதிகாரி.
ஆனால் இந்த மேட்டரைப் பாருங்கள். மிகவும் சிறப்பு. மதுரையில் உணவுக் கடத்தல் தடுப்புப் பிரிவில் மாத மாமூல் வசூல் செய்கிறார்கள் என்று வந்த தகவலை அடுத்து, லஞ்ச ஒழிப்புத் துறை ஜுலை 2009ல் அதிரடி சோதனை நடத்தியது. அந்த சோதனை நடந்த இடம், உணவுக் கடத்தல் தடுப்புப் பிரிவின் எஸ்பி அலுவலகத்தில்.
அப்போது இந்த அலுவலகத்தின் எஸ்பியாக இருந்தவர், ஜெயஸ்ரீ. இவர் யார் தெரியுமா… மிகச் சிறப்பாக தேவாரப் பாடல்களைப் பாடக் கூடிய, வனிதா என்ற ஐபிஎஸ் அதிகாரியின் தங்கை.
சோதனையில் ரூபாய்.77,820 மற்றும் ரூபாய் 3,87,000 கைப்பற்றப் படுகிறது. மைக்கேல் டேவிட் என்ற தலைமைக் காவலர் மீது வழக்கு பதிவு செய்யப் படுகிறது. ஒரு நேர்மையான ஆய்வாளரிடம் இந்த வழக்கின் புலனாய்வு ஒப்படைக்கப் படுகிறது.
அந்த ஆய்வாளர் வழக்கின் விசாரணையை துவங்கியவுடன், தலைமைக் காவலர் மைக்கேல் டேவிட்டை விசாரிக்கிறார். விசாரித்தவுடன், டேவிட், அனைத்துப் பணமும், எஸ்.பி.ஜெயஸ்ரீக்காகத் தான் வசூல் செய்யப் பட்டது என்ற உண்மையை உரைக்கிறார். ஆய்வாளர் உடனடியாக ஜெயஸ்ரீ மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று தலைமை அலுவலகத்துக்கு அறிக்கை அனுப்புகிறார்.
இந்த ஜெயஸ்ரீ எஸ்.பிக்கும் மதுரையின் ஜுனியர் அஞ்சா நெஞ்சன் பொட்டு சுரேஷுக்கும் அடிக்கடி சட்டம் ஒழுங்கு பற்றிய விவாதம் நடத்தும் அளவுக்கு “நெருக்கம்“. ஜெயஸ்ரீக்கு ஒரு பிரச்சினை என்றதும் அண்ணன் பொட்டு சும்மா இருப்பாரா ? உடனடியாக லஞ்ச ஒழிப்புத் துறையின் அப்போதைய இயக்குநரான ராமானுஜத்தை தொடர்பு கொண்டு, வழக்கு விசாரணையை தாமதப் படுத்துமாறு கேட்கிறார்.
ராமானுஜத்திற்கு, பொட்டு அண்ணன் சொல்வது போல, விசாரணையை தாமதப் படுத்தச் சொன்னால் நமது கபட வேடம் கலைந்து விடுமே என்று விசாரணை அதிகாரியிடம் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருக்கிறார்.
உடனடியாக பொட்டு, உள் துறைச் செயலாளர் மாலதியிடம் பேசுகிறார். மாலதி உடனடியாக அந்த விசாரணை அதிகாரியை லஞ்ச ஒழிப்புத் துறையை விட்டு மாற்றி உத்தரவிடுகிறார். ராமானுஜம் அந்த அதிகாரியை காப்பாற்ற எந்த முயற்சியும் எடுக்காமல், பொட்டு அண்ணன் கட்டளையை ஏற்று அந்த விசாரணை அதிகாரியை லஞ்ச ஒழிப்புத் துறையிலிருந்து விடுவிக்கிறார். (இந்த ராமானுஜம் தான் நேர்மையின் சிகரம்னு சொல்லிக்கிட்டு திரியிராரு)
விடுவித்ததும், விசாரணை கிடப்பில் போடப் படுகிறது. இந்த விசாரணை இப்படியே நகர்ந்து நகர்ந்து மெல்ல சென்று கொண்டிருக்கும் தருவாயில், சோதனையின் போது வழக்கில் சிக்கிய மைக்கேல் டேவிட் என்ற தலைமைக் காவலர் தான் வசூல் செய்த பணம் அனைத்தும் ஜெயஸ்ரீ எஸ்.பிக்காகத் தான், அவர் உத்தரவுப் படியே வசூல் செய்தேன் என்று வாக்குமூலம் கொடுத்து விடுகிறார். வேறு வழியே இல்லாமல் ஜெயஸ்ரீயை இந்த வழக்கில் குற்றவாளியாக சேர்க்க வேண்டும் என்று வழக்கின் புதிய புலனாய்வு அதிகாரி லஞ்ச ஒழிப்புத் துறையின் தலைமையகத்துக்கு அறிக்கை அனுப்புகிறார்.
இந்த நேரத்தில் க்ரூப் 1 தேர்வு மூலம் நேரடி டிஎஸ்பியாக நியமிக்கப் பட்ட ஜெயஸ்ரீயை ஐபிஎஸ் அந்தஸ்து வழங்குவதற்கு அரசிடமிருந்து தடையில்லா சான்று கோரி லஞ்ச ஒழிப்புத் துறைக்கு கடிதம் வருகிறது.
வழக்கில் ஜெயஸ்ரீக்கு சம்பந்தம் இல்லை என்று தடையில்லா சான்று வழங்க கடிதம் அனுப்பும் படி இரண்டு ப்ரோக்கர்கள் சுனில் குமாரை நிர்பந்திக்கிறார்கள்.
முதல் ப்ரோக்கர், வேற யாரு…. நம்ப ஜாபர் சேட்டுதான். இரண்டாவது ப்ரோக்கர் சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி ராதாகிருஷ்ண நாயுடு.
இவர்கள் இரண்டு பேரின் உத்தரவை ஏற்று சுனில் குமார், ஜெயஸ்ரீ மீது குற்றச் சாட்டுகள் நிலுவையில் இல்லை என்று கடிதம் அனுப்புகிறார். அந்த கடிதத்தின் அடிப்படையில் ஜெயஸ்ரீ ஐபிஎஸ் அந்தஸ்துக்கு உயர்த்தப் பட்டு ஜெயஸ்ரீ ஐபிஎஸ் ஆகிறார்.
எப்பூடி…. இதற்குப் பிறகு ராதாகிருஷ்ண நாயுடுவும், ஜாபர் சேட்டும் என்ன பேசிக் கொண்டிருப்பார்கள் ? “நமக்கு வாய்த்த அடிமைகள் மிக மிக திறமைசாலிகள்“ என்று தானே….. ?
இந்தத் தடையில்லா சான்று அனுப்பி ஜெயஸ்ரீ ஐபிஎஸ் அதிகாரி ஆன பின்பு ஜெயஸ்ரீ அந்த வழக்கில் சேர்க்கப் பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தன் மீது ஊழல் புகார் வந்தவுடன், தையா தக்கா என்று குதிக்கிறாரே சுனில் குமார். இந்தக் காரியங்களுக்கெல்லாம் என்ன பெயராம்…. இது நேர்மையான செயலா…. ?
இப்போது சொல்லுங்கள். சுனில் குமார் தகத்தகாய கதிரவன் தானே….. ?