வழக்கறிஞர்கள் தொழில் என்பது மருத்துவர்களின் தொழிலுக்கு நிகராக உயிரைக் காக்கும் தொழில் என்றால் அது மிகையாகாது. வழக்கறிஞர்களால்தான், இன்று நமது சமுதாயத்தில் நடைமுறையில் அமலில் இருக்கும் பல விதிமுறைகள், சட்டங்கள் போன்றவற்றின் பின்னணியில் பல வழக்கறிஞர்களின் உழைப்பு இருக்கிறது.
தூக்குக் கயிற்றின் நிழலில் நின்று கொண்டிருக்கும் பலரின் உயிரைக் காப்பாற்றியவர்கள் வழக்கறிஞர்களே. அரசாலும், நிர்வாகத்தாலும் மறுக்கப்படும் உரிமைகளை மீட்டெடுத்துத் தருபவர்கள் வழக்கறிஞர்களே…. …
1995ம் ஆண்டு சஞ்சீவ் தத்தா என்ற ஒரு வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் வழக்கறிஞர் தொழிலைப் பற்றி இவ்வாறு கூறியது.
Sanjiv Dutta, (1995) 3 SCC 619 : (1995 AIR SCW 2203), the Hon’ble Apex Court observed as under :–
The legal profession is a solemn and serious occupation. It is a noble calling and all those who belong to it are its honourable members. Although the entry to the profession can be had by acquiring merely the qualification of technical competence, the honour as a professional has to be maintained by the its members by their exemplary conduct both in and outside the court. The legal profession is different from other professions in that what the lawyers do, affects not only an individual but the administration of justice which is the foundation of the civilised society. Both as a leading member of the intelligential of the society and as a responsible citizen, the lawyer has to conduct himself as a model for others both in his professional and in his private and public life. The society has a right to expect of him such ideal behavior. It must not be forgotten that the legal profession has always been held in high esteem and its members have played an enviable role in public life. The regard for the legal and judicial systems in this country is in no small measure due to the tiredness role played by the stalwarts in the profession to strengthen them. They took their profession seriously and practised it with dignity, deference and devotion. If the profession is to survive, the judicial system has to be vitalised. No service will be too small in making the system efficient, effective and credible. The casualness and indifference with which some members practise the profession are certainly not calculated to achieve that purpose or to enhance the prestige either of the profession or of the institution they are serving. If people lose confidence in the profession on account of the deviant ways of some of its members, it is not only the profession which will suffer but also the administration of justice as a whole. The present trend unless checked is likely to lead to a stage when the system will be found wrecked from within before it is wrecked from outside. It is for the members of the profession to introspect and take the corrective steps in time and also spare the courts the unpleasant duty.
வழக்கறிஞர் தொழில் என்பது, ஒரு சிறந்த தொழில். அந்தத் தொழில் மேன்மையான தொழில். அத்தொழிலில் ஈடுபடுபவர்களும் மேன்மையானவர்களே. வழக்கறிஞர் தொழிலில் ஈடுபட, ஒரு பட்டப்படிப்பும், ஓரளவு சட்ட அறிவும் போதுமானது என்றாலும், மேன்மையானவர் என்ற பெயரெடுக்க, வழக்கறிஞர்கள், நீதிமன்றத்தின் உள்ளேயும், வெளியேயும் நடந்து கொள்ள வேண்டும். மற்ற தொழில்களை விட வழக்கறிஞர் தொழில் மாறுபட்டதும், சிறப்பானதும் ஆகும். ஏனென்றால், வழக்கறிஞர்களின் பணி ஒரு தனி நபரை மட்டும் பாதிப்பதில்லை, ஒரு நாகரீக சமூகத்தின் அடிப்படையாக இருக்கும் நீதிபரிபாலனத்தையே அது பாதிக்கிறது. அறிவுசார் சமூகத்தின் ஒரு அங்கமாகவும், ஒரு பொறுப்புள்ள குடிமகனாகவும் உள்ள வழக்கறிஞர்கள், தன் தனிப்பட்ட வாழ்விலும், பொதுவாழ்விலும் அடுத்தவர்களுக்கு உதாரணமாக இருக்கும் வகையில் நடந்து கொள்ள வேண்டும். வழக்கறிஞர் இப்படிப்பட்ட சிறந்த நடத்தையோடு இருக்க வேண்டும் என்று எதிர்ப்பார்க்க சமூகத்துக்கு உரிமை உள்ளது. வழக்கறிஞர் தொழில் சமூகத்தில் மிக உயர்ந்த மதிப்பைப் பெற்ற தொழில என்பதும், வழக்கறிஞர்கள் மற்றவர்கள் பொறாமைப் படும் அளவுக்கான நன்மதிப்பை பெற்றவர்கள் என்பதையும் மறந்து விடக் கூடாது. இந்த நன்மதிப்பு, வழக்கறிஞர்களில் நிபுணர்களாக இருந்தவர்களின் கடுமையான உழைப்பு காரணமாக கிடைத்தது என்பதை மறந்து விடக்கூடாது. அந்த மேன்மையாளர்கள் வழக்கறிஞர் தொழிலை மதிப்பு, மரியாதை மற்றும் பக்தியோடு நோக்கினார்கள். இத்தொழில் செழிக்க வேண்டுமென்றால், நீதி பரிபாலனம் உறுதிப்படுத்தப்பட வேண்டும். இத்தொழிலை மேன்மைப்படுத்தி செழிக்க வைக்க எந்த சிறிய செயலும் முக்கியமானதே.
The casualness and indifference with which some members practise the profession are certainly not calculated to achieve that purpose or to enhance the prestige either of the profession or of the institution they are serving. If people lose confidence in the profession on account of the deviant ways of some of its members, it is not only the profession which will suffer but also the administration of justice as a whole. The present trend unless checked is likely to lead to a stage when the system will be found wrecked from within before it is wrecked from outside. It is for the members of the profession to introspect and take the corrective steps in time and also spare the courts the unpleasant duty.
சமீப காலமாக சில வழக்கறிஞர்கள் வழக்கறிஞர் தொழிலை அலட்சியமாகவும், அக்கறையில்லாமலும் செய்து வருகிறார்கள். இத்தகைய தன்மை, வழக்கறிஞர் தொழிலுக்கும், நீதித்துறைக்கும் மரியாதைக்குறைவை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இத்தகைய வழக்கறிஞர்களின் நடவடிக்கையால் பொதுமக்கள் வழக்கறிஞர்கள் மீது நம்பிக்கை இழப்பார்களேயானால், அது வழக்கறிஞர்கள் தொழிலை மட்டுமல்ல…. ஒட்டுமொத்த நீதித்துறையையே பாதிக்கும். இத்தகைய போக்கை உடனடியாக கட்டுப்படுத்தாவிட்டால், இத்துறை வெளியிலிருந்து வரும் தாக்குதல்களில் அழிவதை விட, உள்ளிருந்து வரும் தாக்குதல்களாலேயே அழிந்து விடும். நீதிமன்றங்கள் தலையிடும் வரை காத்திருக்காமல், வழக்கறிஞர்களே தங்களை சுயபரிசோதனை செய்து, இத்தகைய போக்கை தடுத்து நிறுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.”
வழக்கறிஞர் பணியை உச்ச நீதிமன்றம் எத்தகைய மேன்மையோடு கருதுகிறது பார்த்தீர்களா ?
ஆனால் இன்று என்ன நடக்கிறது ?
கடந்த வாரத்தில் திங்கள் மற்றும் செவ்வாய் ஆகிய இரண்டு நாட்களில் தமிழகம் முழுக்க உள்ள நீதிமன்றங்களைப் புறக்கணித்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டார்கள் வழக்கறிஞர்கள். திங்களன்று நடந்த வேலை நிறுத்தம், கன்னியாக்குமரியில் உள்ள ஒரு ஹோட்டலில் நடந்த தகராறு காரணமாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்ததால் அதைக் கண்டித்து புகார் மனு அளிக்க தமிழ்நாடு வழக்கறிஞர் சங்கத் தலைவர் பிரபாகரன் தலைமையில் சென்றிருக்கிறார்கள். அப்போது, வழக்கறிஞர்கள் தலைவர் பிரபாகரன், மிகவும் பண்போடு, அவர் தலைமையில் 20 வழக்கறிஞர்கள் ஒன்றாக ஒரே நேரத்தில் டிஜிபியை பார்த்து மனு அளிக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார்கள். ஆனால் டிஜிபி அலுவலகத்தில் 4 பேர் மட்டும் டிஜிபி அறைக்குள் செல்லுங்கள் என்று அடாவடித்தனமாக கூறியிருக்கிறார்கள். அகில உலக அளவில் புகழ் பெற்று, சர்வதேச சட்ட நிபுணர் பிரபாகரனோடு வெறும் நாலு பேர் டிஜிபி அறைக்குள் நுழைந்தால் அது அடுக்குமா ? தமிழகம் பொறுக்குமா ? வழக்கறிஞர் சமூகத்துக்கு அடுக்குமா ?
பிரபாகரன் தலைமையில் டிஜிபி அறை வாயிலில் காவலுக்கு இருந்தவர்களை பிடித்து தள்ளிவிட்டு, மிகவும் பண்பான முறையில் டிஜிபி அலவலகத்துக்குள் 20க்கும் மேற்பட்டவர்கள் நுழைந்திருக்கிறார்கள். இவர்கள் உள்ளே நுழைந்ததைப் பார்த்த டிஜிபி ராமானுஜம், கொஞ்சம் கூட மரியாதையோ, இங்கீதமோ தெரியாமல், “என்ன இது இப்படி அடாவடி செய்கிறீர்கள்… ? வழக்கறிஞர்களான நீங்களே இப்படி நடந்து கொண்டால் எப்படி” என்று மரியாதைக் குறைவாக பேசியிருக்கிறார்.
இப்படிப்பட்ட அவமரியாதை நடந்த பிறகு பண்பான வழக்கறிஞர்கள் எப்படிப் பொறுமையாக இருக்க முடியும் ? வெகுண்டெழுந்தார்கள். உடனடியாக தலைமை நீதிபதியிடம் ராமானுஜத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முறையிட்டார்கள். தலைமை நீதிபதி, அனைத்து விபரங்களையும் ஒரு மனுவாக தாக்கல் செய்யுங்கள் என்று கூறினார். மனுத்தாக்கல் செய்தால், அது முடிவடைய எத்தனை ஆண்டுகள் ஆகும் என்பது வழக்கறிஞர்களுக்குத் தெரியாதா என்ன ? இருப்பினும், தலைமை நீதிபதியின் வார்த்தைக்கு மரியாதை கொடுத்து மனுவையும் தாக்கல் செய்கின்றனர். தலைமை நீதிபதியின் பேச்சைக் கேட்டு, வழக்கு தாக்கல் செய்தபின், அத்தோடு விட்டு விட முடியுமா ? நீதிமன்றப் புறக்கணிப்பு செய்து நீதிபதிகளை மிரட்டாவிட்டால் எப்படி சரியாக இருக்கும். அதனால் திங்கட்கிழமை அன்று தமிழகம் முழுக்க நீதிமன்றப் புறக்கணிப்பு. ஒரு நாள் முடிந்ததா ?
கடந்த 9ம் தேதி சென்னை மகாகவி பாரதி நகர் காவல் நிலையத்தில் ஒரு சம்பவம். சென்னை எழும்பூர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவராக இருப்பவர் மைக்கேல். இவர் வீடு அமைந்திருப்பது மகாகவி பாரதி நகரில். இவர் மகாகவி பாரதி நகர் காவல் நிலையத்துக்குச் சென்று கட்டப்பஞ்சாயத்து செய்யாத நாளே இல்லை எனும் அளவுக்கு, தொடர்ந்து கட்டப்பஞ்சாயத்துகளை செய்து வருபவர். ஞாயிறன்று இரவு, காவல்நிலையம் சென்று வழக்கம் போல கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டபோது, அவருக்கும் காவல் நிலையத்தில் இருந்த உதவி ஆய்வாளருக்கும் வாய்த்தகராறு ஆகி, அது முற்றி அப்போது பணியில் இருந்த உதவி ஆய்வாளர், மைக்கேலை தாக்கி விட்டதாகவும், அதன் பின் சற்று நேரத்தில் மைக்கேலின் ஆதரவாளர்கள் காவல் நிலையத்தில் புகுந்து, காவல் நிலையத்தை துவம்சம் செய்திருக்கிறார்கள். வழக்கறிஞர்களில் ஒருவரையும் கைது செய்யாமல், வழக்கறிஞர்களின் தம்பி ஒருவரை, மத்திய உளவுத்துறை அதிகாரியைக் கைது செய்து அவரை கடுமையாகத் தாக்கிய காவல்துறையினரைப் பற்றி வேட்டை நாய்கள் என்ற கட்டுரையில் விரிவாக எழுதப்பட்டுள்ளது.
இந்த இரண்டு சம்பவங்களும் வழக்கறிஞர்களின் போக்கை தெளிவாக எடுத்துக் காட்டக் கூடியன. முதல் சம்பவம் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம். கரூரைச் சேர்ந்த சில வழக்கறிஞர்கள் கன்னியாக்குமரிக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அங்கே ஒரு ஹோட்டலில் தங்கியிருக்கின்றனர். அந்த ஹோட்டலில் மதியம் 12 மணிக்கு மட்டுமே அறையைக் காலி செய்ய முடியும். அதைத் தாண்டினால் அடுத்த நாள் வாடகை தரவேண்டும். பல ஹோட்டல்களில் இது போன்ற விதி உள்ளது. சம்பவ தினத்தன்று, பிற்பகல் 3 மணிக்கு வழக்கறிஞர்கள் அறையைக் காலி செய்யச் சென்றுள்ளனர். கூடுதல் வாடகை வாங்கக் கூடாது என்று கேட்கின்றனர். ஓட்டல் மேனேஜர், விதி என்றால் விதிதான். அப்படியெல்லாம் வாடகையைக் குறைக்க முடியாது என்கிறார். “சார் நாங்கள்லாம் அட்வகேட்ஸ்” என்கிறார். அதன் பிறகு, நல்ல போதையில் அங்கே வரும் வழக்கறிஞர் ஒருவர் எப்படி நடந்து கொள்கிறார் என்பதை இந்த வீடியோவில் பாருங்கள்.
பார்த்து விட்டீர்களா ? இதன் பிறகு, ஹோட்டல் உரிமையாளர் வழக்கறிஞர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் செய்கிறார். காவல்துறையினர் அனைத்து வழக்கறிஞர்கள் மீதும் வழக்கு பதிவு செய்கின்றனர். இதை எதிர்த்துதான் பிரபாகரன் தலைமையிலான வழக்கறிஞர்கள் டிஜிபியிடம் சென்று முறையிட்டது.
மற்றவர்களுக்கு சட்டம் தெரிகிறதோ இல்லையோ… வழக்கறிஞர்களுக்கு சட்டம் தெரியும். தெரிந்திருக்க வேண்டும். காவல்துறை தவறாக எப்ஐஆர் பதிவு செய்திருக்கிறார்கள் என்றே வைத்துக் கொள்வோம். சட்டப்படி செய்ய வேண்டியது என்ன ? முதலில் அனைவருக்கும் முன்ஜாமீன் வாங்க வேண்டும். வாங்கிய பின், குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 482ன் கீழ் எப்ஐஆரை ரத்து செய்ய மனுத் தாக்கல் செய்தால், நிச்சயமாக அந்த எப்ஐஆர் ரத்து செய்யப்பட்டிருக்கும்.
வழக்கறிஞர்கள் மீது எந்த வழக்காக இருந்தாலும், அது குறித்து வாதாடுகையில் எடுத்த எடுப்பில் சொல்லும் விஷயம் “தி பெட்டிஷனர் ஈஸ் ய ப்ராக்டிஸிங் அட்வகேட் மைலார்ட்” என்பதுதான். இப்படிச் சொன்னதும், நீதிபதிகள் கனிவோடு பரிசீலிப்பார்கள். அடடா… நம்ப ஆள் ஒருத்தன் மாட்டிக்கிட்டானே… அய்யோ பாவம் என்ற எண்ணத்தில்தான் வழக்கையே அணுகுவார்கள். அப்படி வழக்கறிஞர் என்பதால், கனிவோடு பரிசீலிக்கவில்லை என்றால், அந்த நீதிபதியின் கதி அதோகதிதான்.. அங்கேயே கோஷம் போடுவார்கள். கத்துவார்கள். நீதிபதியை அவமரியாதையாகப் பேசுவார்கள். இதற்குப் பயந்து எந்த நீதிபதியும், இவர்கள் வழக்கறிஞர்கள் என்று சொன்னதும், என்ன வேண்டும் என்றுதான் கேட்பார்கள்.
ஆனால், இந்த விவகாரத்தில் இதைக் கூட செய்யவில்லை வழக்கறிஞர்கள். எடுத்த எடுப்பில், நீதிபதியிடம் முறையீடு. பின்னர் நீதிமன்றப் புறக்கணிப்பு.
இரண்டாவது நிகழ்வு இன்னும் மோசம். வழக்கறிஞரின் தம்பியான மத்திய உளவுத்துறை அதிகாரியைத் தாக்கிய காவல்துறை அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்படுவதோடு கைது செய்யப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், காவல் நிலையத்துக்குள் புகுந்து, காவல்நிலையத்தை சூறையாடிய வழக்கறிஞர்கள் மீது என்ன நடவடிக்கை ? இது வரை, அந்தச் சம்பவத்தில் சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்களில் ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை. இதற்காகத்தான் இரண்டாவது நான் வேலை நிறுத்தம்.
உச்ச நீதிமன்றம் பல தீர்ப்புகளில் வழக்கிறஞர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடக்கூடாது என்று தெளிவாக் கூறியுள்ளது. ஆனால், இந்தக் கருத்தை முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியாது. மக்களை பாதிக்கும் விஷயத்துக்காக, வேலை நிறுத்தம் செய்வது வழக்கறிஞர்களின் உரிமை மட்டுமல்ல…. கடமையும் கூட. ஆனால், சமீபத்தில் நடந்த இரண்டு நாள் வேலை நிறுத்தத்தை எப்படி நியாயப்படுத்த முடியும் ?
அரசியல் அமைப்புச் சட்டத்தின் மிகச் சிறந்த அறிஞரான எச்.எம்.சீர்வை இவ்வாறு கூறுகிறார்…
Lawyers ought to know that at least as long as lawful redress is available to aggrieved lawyers, there is no justification for lawyers to join in an illegal conspiracy to commit a gross, criminal contempt of court, thereby striking at the heart of the liberty conferred on every person by our Constitution. Strike is an attempt to interfere with the administration of justice. The principle is that those who have duties to discharge in a court of justice are protected by the law and are shielded by the law to discharge those duties, the advocates in return have duty to protect the courts. For, once conceded that lawyers are above the law and the law courts, there can be no limit to lawyers taking the law into their hands to paralyse the working of the courts.
சட்டபூர்வமான வழிகள் இருக்கையில் அவற்றை புறந்தள்ளி, நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் வழக்கறிஞர்கள் கூட்டுச் சதியில் ஈடுபடுவதென்பது, அரசியல் அமைப்புச் சட்டம் ஒவ்வொரு குடிமகனுக்கும் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளைப் பறிப்பதாகும் என்பதை வழக்கறிஞர்கள் உணர வேண்டும். வேலை நிறுத்தம் என்பது, நீதி பரிபாலனத்தைத் தடுப்பதே. இதில் அடிப்படைக் கருத்து என்னவென்றால், நீதிமன்றத்தில் பணியாற்றுவதற்கு வழக்கறிஞர்களுக்கு சட்டம் எப்படிப் பாதுகாப்பு அளிக்கிறதோ, அதே போல வழக்கறிஞர்களும், நீதிமன்றத்துக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும். வழக்கறிஞர்கள், சட்டத்துக்கும் நீதிமன்றத்துக்கும் அப்பாற்பட்டவர்கள் என்ற ஒரு நிலை உருவாகுமேயானால், வழக்கறிஞர்கள் சட்டத்தைக் கையிலெடுத்துக் கொண்டு நீதிமன்றத்தை முடக்கும் நடவடிக்கைகளுக்கு எல்லையே இல்லாமல் போய் விடும்.
இன்று இதுதானே நடந்து கொண்டிருக்கிறது ? மகாகவி பாரதி நகர் காவல் நிலையத்தில் நடந்த சம்பவத்துக்கும், தமிழகம் முழுக்க நீதிமன்றத்தை முடக்குவதற்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா ? கன்னியாக்குமரியில் ஒரு ஹோட்டலில் ஒரு சில வழக்கறிஞர்கள் குடித்து விட்டுத் தகராறு செய்வதற்கும், தமிழகம் முழுக்க நீதிமன்றம் புறக்கணிப்பு செய்வதற்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா ? ஒவ்வொரு நாளும் எத்தனை லட்சக்கணக்கான வழக்குகள் தமிழக நீதிமன்றங்களில் விசாரிக்கப்படுகின்றன தெரியுமா ? திங்கள் மற்றும் செவ்வாயன்று நீதிமன்றங்கள் இயங்கியிருந்தால் சில நூறு கைதிகள் சிறையிலிருந்து விடுதலையாகியிருப்பார்கள். வழக்கறிஞர்களின் வேலை நிறுத்தத்தால் அவர்கள் தேவையின்றி, மேலும் இரண்டு நாட்கள் சிறையில் இருக்க நேர்ந்தது. இதற்கு யார் பொறுப்பேற்றுக் கொள்வது… ? சிறையில் இருக்கும் கைதிகளின் உதாரணம் ஒரு மட்டுமே. இது போல பல பாதிப்புகள் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை நிறுத்தத்தின் காரணமாக பொதுமக்களுக்கு ஏற்பட்டது. பல லட்சக்கணக்கான வழக்குகள் தேவையின்றி தாமதமாயின.
வழக்கறிஞர் சங்கங்கள் அறிவிக்கும் இந்த வேலை நிறுத்தங்களுக்கு பெரும்பாலான வழக்கறிஞர்களின் ஆதரவு கிடையாது. பெரும்பாலான வழக்கறிஞர்கள், நீதிமன்றத்துக்கு வந்து வழக்குகளில் வெற்றி பெற்று, வாங்கிய கட்டணத்துக்கு நியாயமாக பணியாற்றி, கட்சிக்காரர்களுக்கும் பொதுமக்களுக்கும் நன்மை செய்ய வேண்டும் என்றே விரும்புகிறார்கள். வழக்குகள் தேவையின்றி தாமதமானால், அவர்களுக்கு வருமானம் போகும். சில மூத்த வழக்கறிஞர்களுக்கு, இந்த வேலை நிறுத்தத்தினால் லட்சக்கணக்கில் நஷ்டம் ஏற்படும். தவிரவும், வேலை நிறுத்தத்தின் காரணமாக சில வழக்குகள் தள்ளுபடி செய்யப்படும் சூழலும் நிலவுகிறது. ஆனாலும், இந்த பெரும்பான்மை வழக்கறிஞர்கள், வழக்கறிஞர் சங்கம் கட்டளையிட்டால் அதை கண்மூடித்தனமாக பின்பற்றுவதென்பது, தொடர்ந்து நடந்து கொண்டுதான் வருகிறது.
வழக்கறிஞர்கள் இது போன்ற தேவையற்ற வேலை நிறுத்தங்களில் மட்டும் ஈடுபடுவதில்லை. வழக்கறிஞர்கள் மீது புகார் என்றால், உடனடியாக புகார் கொடுத்தவரை அடிப்பது, குடும்ப நல நீதிமன்றங்களில் வழக்கில் சம்பந்தப்பட்ட ஆணையோ, பெண்ணையோ அடிப்பது, அப்படி அடிக்கையில் பத்திரிக்கையாளர்கள் யாராவது புகைப்படம் எடுத்தால், அவரை அடித்து கேமராவை உடைப்பது, நீதிமன்றத்தில் ஒரு சிறு சச்சரவு ஏற்பட்டால் அந்த நேரத்தில் கையில் கிடைக்கும் காவல்துறையினரை அடிப்பது என்று தொடர்ந்து இது போன்ற வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
சில வழக்கறிஞர்கள் இது போன்ற அடாவடிச் செயல்களில் ஈடுபடுவதால், ஒட்டுமொத்த வழக்கறிஞர் சமூகமுமே வெட்கித்தலைகுனியும் நிலை ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் வழக்கறிஞர்களை மிக மோசமான நிலையில் வைத்தே பார்க்கிறார்கள். வழக்கறிஞர்களை அவதூறாகப் பேசுகையில் வேதனையாக இருக்கிறது. எத்தனை ஜாம்பவான்களை உருவாக்கிய வழக்கறிஞர்கள் சமூகம் இன்று இத்தனை மோசமான இறக்கத்தை சந்தித்திருக்கிறதே என்று வேதனையாக இருக்கிறது.
வழக்கறிஞர் சமூகத்தின் இந்த வீழ்ச்சி, ஜனநாயத்துக்கு மிக மிக மோசமான ஆபத்தை உருவாக்கும். வழக்கறிஞர்களும், நீதித்துறையும், ஜனநாயகத்தின் மிக முக்கியமான தூண்கள். இந்தத் தூண் உளுத்துப் போய் உடையும் தருவாயை அடையும் முன்பாக, இந்தக் களைகளை அகற்ற, வழக்கறிஞர்களும், நீதிபதிகளும் சேர்ந்து பணியாற்ற வேண்டும்.
“”இத்தகைய போக்கை உடனடியாக கட்டுப்படுத்தாவிட்டால், இத்துறை வெளியிலிருந்து வரும் தாக்குதல்களில் அழிவதை விட, உள்ளிருந்து வரும் தாக்குதல்களாலேயே அழிந்து விடும். நீதிமன்றங்கள் தலையிடும் வரை காத்திருக்காமல், வழக்கறிஞர்களே தங்களை சுயபரிசோதனை செய்து, இத்தகைய போக்கை தடுத்து நிறுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.””
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.பி.சாவந்த் மற்றும் ஜீவன் ரெட்டி.