உள்ளே நுழையும்போதே தலையை சொறிந்து கொண்டே வந்தான் டாஸ்மாக் தமிழ். வந்ததும் எதுவும் பேசாமல் அமைதியாக அமர்ந்தான்.
“என்னப்பா அமைதியா இருக்க… ? எதுவும் பிரச்சினையா… ? “ என்று தமிழைப் பார்த்து வாஞ்சையோடு கேட்டார் கணேசன்.
“எனக்கு எதுவும் பிரச்சினை இல்லண்ணே… ராஜ்யசபா தேர்தல்ல என்ன நடக்குதுன்னே புரிய மாட்டேங்குது. ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை நிலைமை மாறிக்கிட்டே இருக்கு. ஆதரவு தருவாங்கன்னு நெனைச்ச பாட்டாளி மக்கள் கட்சி முறுக்கிக்கிட்டாங்க.“
“அவங்க ஏன் மச்சான் முறுக்கிக்கிட்டாங்க… ? “ என்று உரையாடலுக்குள் நுழைந்தான் பீமராஜன்.
“செயற்குழு தீர்மானம்னு சொல்றாங்க. “
“அவங்க செயற்குழுவுல, டாக்டர் ராமதாஸுக்கு நெஞ்சு வலின்னுல தீர்மானம் போட்டாங்க….“
“ அது மட்டுமா போட்டாங்க… “தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவரான ராமதாஸ் அய்யா ஏற்கனவே இதய நோய், இரத்த அழுத்தம், நீரிழிவு நோய் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார். இத்தகைய சூழலில் 110 டிகிரி வெப்பநிலை நிலவிய திருச்சி மத்திய சிறையில் அடிப்படை வசதிகள் கூட இல்லாத ஒரு பிரிவில் அவரை தமிழக அரசு அடைத்துக் கொடுமைப் படுத்தியது. இதனால் ராமதாஸ் அய்யாவின் உடல் நலம் கடுமையாக பாதிக்கப்பட்டது. ராமதாஸ் அய்யா சிறையிலிருந்து உயிருடன் வெளிவருவாரா? என்ற ஐயம் ஏற்பட்டது. சிறையிலிருந்து வெளிவந்த உடனேயே ராமதாஸ்க்கு கடுமையான மூச்சுத் திணறல் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் அவருக்கு இதய பை-பாஸ் அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டிய நிலை உருவானது. “ ன்னு ஒரு தீர்மானம் போட்ருக்காங்க…
“இதுக்குப் பேரு தீர்மானமா… இது புலம்பல் மாதிரியில்ல இருக்கு… ? “ என்று சிரித்துக் கொண்டே கேட்டான் ரத்னவேல்.
“இன்னும் கொஞ்சம் கேளுடா… “ஏற்கனவே கழுத்து வலி, முதுகுத் தண்டு வலி ஆகியவற்றுக்காக சிகிச்சை பெற்று வந்த காடுவெட்டி உடல் நிலை, காவல்துறையினரின் அலைக்கழிப்புகள் காரணமாக மிக மோசமாக பாதிக்கப்பட்டிருக்கிறது“ இது குரு அண்ணனைப் பத்திப் போட்ட தீர்மானம். “
“இதையெல்லாம் இவங்க மருத்துவர்கிட்டல்ல சொல்லனும்.. எதுக்கு செயற்குழுவுல பேசறாங்க.. “ என்று சொல்லி விட்டு வாய் விட்டுச் சிரித்தான் வஜ்ரவேல்.
“என்னமோ பேசறாங்க… செயற்குழுவுலதான், ராஜ்யசபைத் தேர்தலில் விலகி இருக்கறதுன்னு முடிவெடுத்துருக்காங்க. “
“அது சரி.. செயற்குழுவுக்கு போதுமான உறுப்பினர்களே இருந்துருக்க மாட்டாங்களே… ? “ என்று உள்ளே நுழைந்தான் வடிவேல்.
“நீ சொல்றது ஒரு வகையில சரிதான் மச்சான். ராமதாஸ் கைதுக்குப் பிறகு நடந்த வன்முறை சம்பவங்களுக்காக 1153 பாட்டாளி மக்கள் கட்சிக் காரங்க கைது பண்ணப்பட்டாங்க. அதுல 122 பேர் இன்னும் குண்டர் தடுப்புச் சட்டம், தேசியப் பாதுகாப்புச் சட்டம் இதுல உள்ள இருக்காங்க. இதுல பெரும்பாலானவங்க செயற்குழு உறுப்பினர்கள். ஆனா அவங்கள்லாம் சிறையில இருக்கப்ப செயற்குழுவைக் கூட்டி, ராமதாஸுக்கு நெஞ்சு வலி.. காடுவெட்டி குருவுக்கு கழுத்து வலின்னு தீர்மானம் போட்ருக்காங்க. எல்லாரும் இருந்தா மட்டும் எதுத்து பேசிடுவாங்களா என்ன… திமுகல இருக்க மாதிரி, அன்புமணிதான் வாரிசுன்னு ஆயிடுச்சு. அப்புறம் என்ன……. நாளைக்கு அன்புமணி மனைவி தலைமையில செயற்குழு கூடுனா எதுத்துப் பேசிடுவாங்களா என்ன…-?“
“அதுவும் சரிதான்.. திமுகவும் அதிமுகவும் பல சாதி மடம்னா, இது வன்னியர் மடம். ராமதாஸ் மடாதிபதி. அவரு நியமிக்கிற ஆளுதானே அடுத்த மடாதிபதியாக முடியும் ? “
“சரி என்னதான் நடக்கப் போகுது தேர்தல்ல… ? “
“கனிமொழியை எம்.பியாக்க கருணாநிதி என்னென்ன பாடு பட்றாருன்னு நான் சொல்லியிருந்தேன். வெண்ணை திரண்டு வர்ற நேரம் தாழி உடையற மாதிரி, எதிர்ப்பாக்காத கட்சியெல்லாம் ஆதரவு குடுத்துடுச்சு… ஆனா எதிர்ப்பார்த்த பா.ம.கவும், காங்கிரஸும் காலை வாரிடுச்சுன்னு வருத்தத்துல இருக்காரு. “
“என்னதாம்பா நடந்துச்சு… ? “
“அண்ணே… மனிதநேய மக்கள் கட்சியோட 2 எம்எல்ஏ ஆதரவை அதிமுக கேட்டதும், பெரிய பட்டியலை நீட்டுனாங்க.. எங்க சின்னத்துலதான் போட்டியிடுவோம். 2 எம்.பி சீட் வேணும். வக்ஃப் போர்டு பதவி வேணும்னு சொன்னாங்க. நீங்க வச்சுருக்கற ரெண்டு எம்.எல்.ஏவும் தேவையில்லாத ஆணின்னு சொல்லி அனுப்பிட்டாங்க. அவங்களும், அக்கரைக்கு போயி சேந்துட்டாங்க.
அதே மாதிரி புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமியும் அக்கரைக்கு போயி சேந்துட்டார். ரெண்டு கட்சியும் வெளிப்படையா, எங்க வாக்குகள் வீணாப்போகும் அதனாலதான் ஆதரவு குடுக்கறோம்னு சொன்னாக் கூட, தலா 2 கோடியும், வெற்றி வாய்ப்பு உள்ள ஒரு பாராளுமன்றத் தொகுதியும்தான் திரைமறைவில் நடந்த பேரம். “
“வெளியில வந்து யோக்கியம் மாதிரி பேட்டி குடுத்தாங்களே… “
“அப்புறம் நாங்க ரெண்டு கோடிக்காகவும், ஒரு பாராளுமன்றத் தொகுதிக்காகவும் அணி மாறிட்டோம்னு பேசச் சொல்றியா…“
“சரி… காங்கிரஸ் பக்கம் என்ன சொல்றாங்க.. ? “ என்று ஆர்வமாக கேட்டான் ரத்னவேல்.
“காங்கிரஸ் பக்கம் ரொம்ப பிகு பண்றாங்க மச்சான். தேமுதிக போயி காங்கிரஸ்கிட்ட ஆதரவு கேட்டதும், ராகுல் காந்திக்கு தகவல் சொல்லப்பட்டிருக்கு. அவரு திமுகவுக்கு ஆதரவு குடுக்கறத விட, தேமுதிகவுக்கு குடுக்கறதுதான் நமக்கு நல்லதுன்னு சொல்லிட்டு டெல்லி போயிட்டார்.
தமிழக காங்கிரஸ்ல வாசன் மட்டும் திமுகவோட போகணும்னு நெனைக்கிறார். மற்ற காங்கிரஸ் கட்சித் தலைவர்கள், கடைசி நேரத்துல நம்பளை கழட்டி விட்டுட்டு போனவருக்கு எதுக்காக, நம்ப உதவி பண்ணணும்னு சொல்றாங்க.
இதுக்கு நடுவுல சுதீஷ் வெள்ளிக்கிழமை இரவு டெல்லி போயிட்டாரு. அங்க போயி சோனியாவோட ஆலோசகர் அகமது படேலை சந்திச்சுப் பேசிட்டாரு. அவர் கிட்டயே ராகுல் காந்தியை சந்திக்க நேரம் வேணும்னு கேட்டுருக்காரு. ராகுல் இப்போ லண்டன் போயிருக்கறதால, ஞாயிற்றுக் கிழமை தங்கியிருந்து பாத்துட்டு வர்றதுன்ற முடிவோட டெல்லியிலயே இருக்காரு…“
“சரி கேப்டன் என்ன சொல்றாரு… ? “
“கேப்டன் எப்படியாவது காங்கிரஸ் கட்சியோட கூட்டணி சேந்து பாராளுமன்றத் தேர்தல்ல பலமான கூட்டணிய அமைக்கணும், திமுகவுக்கும், அதிமுகவுக்கும் பாடம் புகட்டணும்னு நெனைக்கிறார். அதுக்குள்ள கட்சி எம்.எல்.ஏக்கள் ஒவ்வொருத்தரா காணாமப் போயிட்டு இருக்கறதால, 27ம் தேதி வரைக்கும் யாரும் வெளியில போகக் கூடாதுன்னு, கோயம்பேடு கட்சி ஆபீஸ்லயே எல்லாரையும் அடைச்சுப் போட்டு வச்சுருக்கார். ரமணா படத்துல வர்ற மாதிரி கட்டிப் போட்டு அடிக்கறாரான்னு தெரியல. ஆனா, எல்லோர் செல்போனையும் ஆப் பண்ணி வச்சுட்டார். எல்லோருக்கும் சரக்கு, சாப்பாடு எல்லாத்துக்கும் ஏற்பாடு பண்ணிக் குடுத்துட்டு, வெளியில போனா காலை ஒடச்சுடுவேன்னு சொல்லியிருக்காரு…“ என்று தமிழ் சொல்லி முடித்ததும் எல்லோரும் சிரித்தார்கள்.
“சரி… கருணாநிதி என்ன நம்பிக்கையில இருக்காரு ? “
“5 எம்எல்ஏக்களோட ஆதரவு குடுக்கறதுக்குப் பதிலா, காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சிகளுக்கு சேத்து 18 சீட்களை ஒதுக்கணும், சோனியாவுக்கு போன் பண்ணி ஆதரவு கேக்கணும். அதை நாங்க ஊடகங்களுக்கு சொல்லுவோம்னு விதிச்ச நிபந்தனையைப் பாத்து எரிச்சலாயிட்டாரு கருணாநிதி.
இதுக்கு நான் ஜெயலலிதாகிட்டயே ஆதரவு கேட்டுடுவேனே… நான் போன் பண்ணி ஆதரவு கேட்டா, அதையே சாக்கா வச்சு என்னை விமர்சனம் பண்ணுவாங்கன்னு ரொம்ப கடுப்பாயிட்டாராம்…“
ஆனா… அவருக்கு இன்னும் நம்பிக்கை இருக்கு. பணத்துக்கு மயங்காத ஆளு யாரு இருக்கா… வெளியில பேசறதையெல்லாம் பேசுங்க. எப்படி என் பொண்ணை ஜெயிக்க வக்கிறேன்னு பாருன்னு தெம்பா இருக்காரு. தேர்தல் முடியற வரைக்கும் அறிக்கை, கடிதம்னு விட்டு, குட்டையக் குழப்பக் கூடாதுன்னு அமைதியா இருக்காரு… பாப்போம்“
“சிதம்பரம் என்ன நெனைக்கிறாரு…. “ என்று கேட்டான் பீமராஜன்.
“சிதம்பரத்தோட தாயார் மறைவுக்கு திமுகவுலேர்ந்து யாரும் போகலன்னு அவருக்கு ரொம்ப வருத்தம். திமுக கூட்டணியிலேர்ந்து விலகுனப்போ, அவரை சமாதானப்படுத்த குலாம்நபி ஆசாத், ஏ.கே.அந்தோணி மற்றும் சிதம்பரம் வந்தாங்க… அப்போ செட்டியாரை கன்னா பின்னான்னு திட்டிட்டார் கருணாநிதி.. உன்னைய ஜெயிக்க வச்சதே நானு…. ஏதாவது ஒரு உதவி பண்ணியாய்யா ன்னு திட்டித் தீத்துட்டார்.. அதனால சிதம்பரமும், திமுகவுக்கு இப்போ உதவுற மூட்ல இல்லை. “
“அவரு பையன் மூலமா ட்ரை பண்ணுவாங்களே… “
“அவரு பையன் இன்னொரு என்.சீனிவாசன் மச்சான்.. என்.சீனிவாசன் எப்படி கிரிக்கெட்டை கைக்குள்ள வச்சுக்கணும்னு நெனைக்கிறாரோ, அதே மாதிரி கார்த்தி சிதம்பரம் டென்னிஸ் விளையாட்டை தன்னோட கைக்குள்ள வைக்கணும்னு நெனைக்கிறாரு.
தமிழ்நாடு டென்னிஸ் சங்கத்தோட துணைத் தலைவரா இருக்காரு கார்த்தி சிதம்பரம். ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி, இந்திய டென்னிஸ் சங்கத்துக்கு தலைமைச் செயல் அலுவலரா மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஹிரன்மோய் சாட்டர்ஜின்னு ஒரு ஆளை நியமிக்குது அகில இந்திய டென்னிஸ் சங்கம். இந்த நியமனத்தை எதுத்து, திருச்சி டென்னிஸ் சங்கத்தைச் சேர்ந்த விஸ்வநாதன்ற நபர், உயர்நீதிமன்றத்துல வழக்கு தொடுக்கறாரு. இந்த ஆளு என்னமோ டென்னிஸ் நலனுக்காக வழக்கு தொடுக்கறா மாதிரி வெளியில தெரிஞ்சாலும், இந்த ஆளு வழக்கு போட்டதே கார்த்தி சிதம்பரத்தோட தூண்டுதல்லதான்.
தமிழ்நாடு டென்னிஸை தன்னோட கைக்குள்ள வச்சுக்கிட்டு, இத பத்தி ட்விட்டர்லயும், ஃபேஸ் புக்லயும் எழுதிக்கிட்டு, விளையாட்டுப் புரவலர் மாதிரி சுத்தி வர்றதுதான் கார்த்தி சிதம்பரத்தோட நோக்கம். சில ஆண்டுகளுக்கு முன்னாடி, கருத்து டாட் காம்னு ஒரு இணைய தளத்தை கனிமொழியோட சேந்து தொடங்குனாரு… அப்போ பெரிய அப்பாடக்கர் மாதிரி பேட்டியெல்லாம் குடுத்தாரு. அப்புறம் அதை அப்படியே கை கழுவிட்டு, டென்னிஸ், ஃபாரின் கார்னு இறங்கிட்டாரு.. ஒன்னாம் நம்பர் ஃப்ராடு இந்த கார்த்தி சிதம்பரம். “
“என்னடா இப்படித் திட்ற… “
“பின்ன என்னடா… அப்பா அம்மா சம்பாதிச்ச சொத்துல உக்காந்து தின்னுக்கிட்டு, காங்கிரஸ் கட்சியோட அகில இந்திய பொதுச்செயலாளர் மாதிரி சீன் போட்டுட்டு சுத்தறான்… எவனோ ஒரு ஆளு ட்விட்டர்ல இந்த தறுதலையைப் பத்தி ட்வீட் பண்ணிட்டான்னு பாண்டிச்சேரி போலீஸ்ல ஈமெயில்ல புகார் கொடுத்து அந்த ஆளை கைது பண்ண வச்சான்.. இவருதான் கருத்து சுதந்திரத்துக்காக கருத்து டாட்காம் ஆரம்பிச்சாரு… இவனுக்கெல்லாம் என்னடா மரியாதை… “ என்று கோபமாகப் பேசித் தீர்த்தான் தமிழ்.
“சரி சரி… விடப்பா…. வேற மேட்டருக்கு வா… “ என்று தமிழை சமாதானம் செய்தார்
அமைதியாக இருந்தான் தமிழ். அவனை சமாதானப்படுத்தும் வகையில், “இந்து நாளேடு தமிழ்ப் பேப்பர் தொடங்கறாங்களாமே…“ என்று கேட்டான் பீமராஜன்.
“ஆமாடா.. பேரு காமதேனு. அதுக்கு உங்க பத்திரிக்கையில பப்ளிஷரா இருந்தவருதான் ஆசிரியர். ரெண்டு நாளுக்கு முன்னாடி அவர் உங்க பத்திரிக்கையில ராஜினாமா கடிதம் குடுத்துட்டு, இந்தப் பொறுப்பை ஏத்துக்கிட்டாரு. “
“யாரு மச்சான் அது.. ? “ என்று கேட்டான் வடிவேலு.
“அவரோட வரலாறு நம்ப பீமராஜனுக்கே தெரியாது மச்சான். பேரு அசோகன். சில இணையதளங்கள்ல சாம்ராட்னும் சொல்றாங்க விகடன்ல மாணவப் பத்திரிக்கையாளர் திட்டம் தொடங்குனாங்க. அந்தத் திட்டத்துல இவரு இரண்டாவது பேட்ச். அந்த ரெண்டாவது பேட்ச்ல சிறந்த மாணவப் பத்திரிக்கையாளரா தேர்ந்தெடுக்கப்பட்டாரு. வேலூர் ஊரிஸ் காலேஜ்ல பி.காம் படிச்சாரு. சிறந்த நிருபரா தேர்ந்தெடுக்கப்பட்டதும் இவரை கொஞ்ச நாளு வேலூர் சிறப்பு நிருபரா நியமிச்சுட்டு, பிறகு விகடன் தலைமை அலுவலகத்துக்கு எடுத்துக்கிட்டாங்க.
அசோகன்
விகடன்ல சேர்ந்ததும் படிப்படியா வளர்றாரு. இவரு வேலை பாக்கறப்போ மதன் இணை ஆசிரியராவும், ராவ் அசோசியேட் எடிட்டராவும், விஎஸ்வி என்கிற வி.சீனிவாசன் எக்சிக்யூட்டீவ் எடிட்டராவும் இருக்காங்க. அப்போ ஜுனியர் விகடனுக்கு பொறுப்பா சுந்தரம்னு ஒருத்தர் இருக்காரு. அந்த சுந்தரத்தை காலி பண்ணிட்டு அவரு இடத்துக்கு அசோகன் வர்றாரு. ஒரு கட்டத்துல ஜுனியர் விகடனோட மொத்த பொறுப்புக்கும் வந்துட்டாரு. ஆனந்த விகடன் ஆசிரியரா பாலசுப்ரமணியன் இருந்தாரு. அவர் மகன் சீனிவாசன் இணை மேலாண் இயக்குநரா இருந்தாரு. சீனிவாசன் பொறுப்புக்கு வந்ததுலேர்ந்தே அப்பாவை ஓரங்கட்டனும்னு நெனைச்சு வேலை பாக்கறாரு. மொதல்ல ஆனந்த விகடன்லேர்ந்து தூக்கறாங்க. அதுக்கு அப்பறம் ஜுனியர் விகடன்லேர்ந்தும் பாலசுப்ரமணியத்தைத் தூக்கிட்டு சேர்மேன் அப்படின்னு உயர்ந்த பதவியா குடுக்கறாங்க. ஆனா அந்த பதவிக்கு எந்த அதிகாரமும் இல்லை. எல்லாமே அவர் மகன் சீனிவாசன்தான். இந்த சண்டைக்கு அசோகனை பயன்படுத்தி அவரை ஆனந்த விகடனுக்கும், பின்னாளில் ஜுனியர் விகடனுக்கும் ஆசிரியரா ஆக்கறாங்க. அதுக்கு அப்பறம் தொடர்ந்து அசோகனுக்கு ஏறுமுகம்தான்.
அசோகன், விகேஷ், பாலகிஷன், சரவணக்குமார், கண்ணன், இவங்கள்லாம் ஒன்னா வேலை பாத்தவங்கதான். அசோகனோட குணம் என்னன்னா தனக்கு போட்டியா யாரு இருந்தாலும், அவங்களை திட்டம் போட்டு காலி பண்ணிட்டுதான் மறு வேலை பாப்பாரு. யாரையும் வளர விட மாட்டாரு. பல காவல்துறை அதிகாரிகளோட ரொம்ப நெருக்கம்.
இப்படி வளந்துக்கிட்டே இருக்கறப்போ, இவரோட நண்பர் விகேஷ் இவருக்கு ஆபத்தா உருவாவாருன்னு நெனைக்கிறாரு. ஏன்னா விகேஷ் அப்போ மேலாண் இயக்குநரா உருவாயிட்ட சீனிவாசனோட நெருக்கமா ஆகறாரு. விகேஷ் தன்னோட தொடர்புகளால வெளியிடுற பல செய்திகள், சீனிவாசனுக்கு மதிப்பையும் மரியாதையையும் ஏற்படுத்தி தருது. எங்க விகேஷ் எம்.டியோட நெருக்கமாயி தன்னை காலி பண்ணிடுவாரோன்னு நெனைச்சு நல்ல வாய்ப்புக்காக காத்திருக்காரு. அப்போ, ஒரு டெண்டர் விஷயமா ஜுனியர் விகடன் வெளியிட்ட செய்தியால புகழேந்தின்ற நபர், பெங்களுரு நீதிமன்றத்துல அவமதிப்பு வழக்கு தொடுக்கறாரு.
அவரு ஏன் அவமதிப்பு வழக்கு தொடுக்கறாருன்னா, அவருக்கு டெண்டர் வாங்கித் தர்றேன்னு சொல்லி, ஒரு கணிசமான தொகையை அசோகன் சரவணக்குமார் மூலமா ஆட்டையைப் போட்டுட்டாரு. என்கிட்ட பணத்தையும் வாங்கிட்டு என்னை ஏமாத்தவும் செஞ்சுட்டீங்களேன்னு புகழேந்திக்கு வருத்தம். இவங்கள நம்பி டெண்டர் வாங்கித் தர்றேன்னு, அந்த புகழேந்தி மும்பையைச் சேர்ந்த ஒரு நிறுவனத்துக்கிட்ட ஒரு பெரும் தொகையை வாங்கிட்டு டெண்டர் வாங்கித் தராததால, மும்பை நிறுவனம் புகார் கொடுத்து, புகழேந்தியை கைது செய்ய வச்சுடுச்சு.
இந்தப் பஞ்சாயத்து, எம்.டி வரைக்கும் போயி, அதுல பணம் வாங்கினதே விகேஷ்தான்னு போட்டுக் குடுத்து, விகேஷை வேலையை விட்டுத் தூக்குனாரு. அப்போ இவருக்கு துணையா இருந்தது சரவணக்குமார், கண்ணன், பாலகிஷன்.
விகேஷ் வெளியில போன பிறகு, இவரும், கண்ணனும், பாலகிஷணும் சேந்து, சரவணக்குமாரை இதே போல வெளியில அனுப்பறாங்க. இவருக் கிட்ட தொழில் கத்துக்கிட்ட கண்ணன், ஒரு கட்டத்துல எம்.டி சீனிவாசனுக்கு நெருக்கமாகி, அசோகனுக்கே செக் வைக்க ஆரம்பிச்சுட்டாரு. இது பல மாதங்களா தொடர்ந்து நடந்துக்கிட்டு வருது. “
“சரி.. இவருதானே எடிட்டர்.. ? இவரை யாரு என்ன பண்ண முடியும் ? “
“அங்கதான் தப்பு பண்ற. விகேஷ் வெளியில அனுப்பப் பட்டதும், இவருக்கு பதவி உயர்வு வருது. ஒரு கட்டத்துல கண்ணன் ஆசிரியரா ஆகிறாரு. கண்ணன் ஆசிரியரா ஆனதும், அசோகனை பதிப்பாளரா பதவி உயர்த்துறாங்க. “
“நல்லதுதானே….. ஆசிரியர் பதவியை விட பதிப்பாளர் பதவி உயர்ந்ததுதானே… ? “
“பதிப்பாளர் பதவி, குடியரசுத்தலைவர் பதவியைப் போல… எந்த அதிகாரமும் இல்லை. இப்படி மாத்துனதுமே அசோகனுக்கு விஷயங்கள் புரிஞ்சுடுச்சு. சரி. எப்படியாவது நம்ப அதிகாரத்தை நிலை நிறுத்தலாம்னு தொடர்ந்து வேலை பாத்துக்கிட்டு இருக்காரு. ஒரு கட்டத்துல, கண்ணன், அசோகனை சுத்தமா ஓரங்கட்டிட்டாரு. எல்லாமே கண்ணன்தான்னு ஆயிடுச்சு…“
“சரி. இதையெல்லாம் ஏன் மச்சான் எம்.டி சீனிவாசன் அனுமதிக்கிறாரு… ? “
“எம்.டிக்கு கீழ வேலை பாக்கறவங்க சண்டை போட்டுக்கிட்டே இருக்கணும். தனக்கு எந்த பிரச்சினையும் வரக்கூடாது. தன்னோட சாம்ராஜ்யம் மேலும் மேலும் விரிவாகணும்ன்றதைத் தவிர வேற எண்ணம் கிடையாது. ஆனா, அதுக்கு யாரைத் தேர்ந்தெடுத்து, எந்த பதவிக்கு நியமிக்கணும்னு சரியான கணிப்பு கிடையாது.
விகேஷ் இருந்தவரைக்கும் ஜுனியர் விகடனோட சர்குலேஷன் 2.75 லட்சம். விகேஷ் போன பிறகு, அந்தத் எண்ணிக்கையை இன்னைக்கு வரைக்கும் தொட முடியலை. 1.65, 1.80 இந்த அளவைத் தாண்ட மாட்டேங்குது. எப்பயாவது அட்டையில குஷ்பு படத்தையோ, இல்ல செக்ஸ் மேட்டரையோ போட்டா, அந்த இஷ்யூ மட்டும் 2 லட்சத்தைத் தாண்டும்“
“சரி மேல சொல்லு.. என்று அவசரப்படுத்தினார் பீமராஜன். அவன் வேலைப் பார்க்கும் பத்திரிக்கை குறித்த செய்தியல்லவா..
“ஒரு கட்டத்துல விகேஷ் தனக்கு ரொம்ப பாதிப்பை ஏற்படுத்துவாருன்னு அசோகன் யோசிச்சுக்கிட்டு இருக்கற நேரத்துல, அப்போதைய புறநகர் கமிஷனர் ஜாங்கிட்டைப் பத்தி ஒரு செய்தி வருது. ஜாங்கிட் பத்திரிக்கையாளர்களுக்கு பணத்தை அள்ளி இறைச்சாலும், அவர்கிட்ட பணம் வாங்காத பத்திரிகைகயாளர்களும் இருக்கத்தானே செய்யறாங்க.. ஜுனியர் விகடன்ல ஜாங்கிட்டுக்கு எதிரா செய்தி வந்ததும், தமிழ்நாடு முழுக்க, திருநெல்வேலி, திருச்சி, தஞ்சாவூர்னு ஜாங்கிட்டுக்கு ஆதரவா மான நஷ்ட வழக்கு பதிவு செய்யப்படுது. இதுக்கு அப்பறம், விகடன் நிர்வாகம் என்ன செய்யலாம்னு யோசிச்சு ஒரு சிறப்பான முடிவுக்கு வர்றாங்க…“
“என்ன முடிவு.. வழக்கை சந்திக்கலாம்னா ? “ என்று ஆர்வமாகக் கேட்டான் ரத்னவேல்.
“போடா லூசு.. அந்த சிறப்பான முடிவு என்னன்னா, ஜாங்கிட் கால்ல விழறதுன்ற முடிவுதான். சென்னை தியாகராய நகர்ல இருக்கற ரெசிடென்சி ஹோட்டல்ல ஜாங்கிட், அசோகன், கண்ணன் மூணு பேரும் சந்திக்கிறாங்க… ஜாங்கிட் வைக்கிற ஒரே கோரிக்கை “விகேஷை வேலையை விட்டுத் தூக்குது.. நம்பளைப் பத்தி நல்லா நியூஸ் போடுது. “ என்பதுதான். இதை நாங்கள் எப்படியாவது செய்து காட்டுகிறோம் என்று உத்தரவாதம் கொடுத்து விட்டுத்தான் வருகிறார்கள் அசோகனும், கண்ணனும்.
அதுக்குப் பிறகு, ஒரு சில நாட்கள்ல விகேஷ் வெளியேற்றப் படறார். கண்ணணுக்கும் பதவி உயர்வு. எல்லோரும் மகிழ்ச்சியா இருக்காங்க.
இப்போ இவரு கூட நகமும் சதையுமா இருந்த கண்ணனே அசோகனுக்கு ஆப்பு வச்சுட்டாரு. எம்.டி சீனிவாசனுக்கு கண்ணன் நெருக்கமானதுமே, அசோகன் டரியல் ஆயிட்டாரு. நாளடைவில, அசோகன் ஓரங்கட்டப்படறார்னு தெரிஞ்சதும், வெளியில வேலை தேட ஆரம்பிச்சுட்டாரு. விகடன்ல வேலை பாத்துக்கிட்டே, தொடர்ந்து பல இடங்கள்ல வேலை தேடிய அசோகனுக்கு கிடைச்சதுதான் காமதேனு ஆசிரியர் பதவி….“
“அது சரி.. ஒரு தகுதியில்லாத ஆளையா, இந்து நாளேட்டின் தமிழ் செய்தித்தாளுக்கு ஆசிரியராப் போடுவாங்க… “ என்று வியப்பாகக் கேட்டார் கணேசன்.
“அண்ணே.. அசோகனோட திறமையை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது. காமதேனு நாளேட்டுக்கு ஆசிரியரா இருக்க எல்லாத் தகுதியும் படைச்சவர். சிறந்த ஆசிரியர். சிறந்த படைப்பாளி. சிறந்த திரைப்பட ரசிகர். சிறந்த எழுத்தாளர். “
“அப்புறம் என்னப்பா ? “
“இருங்கண்ணே… ஆனா மோசமான மனிதர். “
“ஏம்ப்பா… ஒரு பத்திரிக்கை தொடங்கறவங்க யாரு நல்லா வேலை செய்யறாங்களோ, அவங்களைத்தானேப்பா தேர்ந்தெடுப்பாங்க… அசோகன் அரசியல் பண்ணா என்ன… பண்ணலன்னா அவங்களுக்கு என்ன… ? சரி இப்போ விகடன்ல யாரு முக்கிய பொறுப்பு கண்ணன்தானே… ?“
கண்ணன்
“கண்ணனேதான்…. அசோகன் வெளியில போனபிறகு நடந்த எடிட்டோரியல் மீட்டிங்லயே எம்.டி வழக்கமா உக்கார்ற சேர்லதான் கண்ணன் உக்காந்தார். இவரை எம்.டி மலை போல நம்பறார்… கொள்ளிக்கட்டையை வைச்சுதான் தலையை சொறியிவேன்னு சீனிவாசன் நெனைச்சா யாரால தடுக்க முடியும் ?
“மச்சான் வேற பத்திரிக்கை செய்தி எதுவுமே இல்லையா மச்சான் ? “ என்று கேட்டான் வடிவேலு.
“ஜெயா டிவியில ரமணியை வேலையை விட்டு தூக்கிட்டாங்க“
“என்ன மச்சான் சொல்ற… ? நாம கூட ரமணியைப் பத்தித்தானே பேசிக்கிட்டு இருந்தோம். டெல்லி அசைன்மென்டையும், ஸ்ரீரங்கம் அசைன்மென்டையும் சொதப்புனதால 13 பேரை வேலையை விட்டுத் தூக்கிட்டாங்கன்னு பேசிக்கிட்டு இருந்தோமே….“
“ஆமாம் மச்சான்… டெல்லி அசைன்மென்டை சொதப்புனது யாருன்னு கார்டன்லேர்ந்து லிஸ்ட் கேட்டதும், அந்த லிஸ்ட்ல ரமணி பேரை விட்டுட்டு, போயஸ் கார்டன்ல ஜெயலலிதா விமான நிலையத்துக்கு கௌம்பும்போது அங்க பைட் எடுக்கறதுக்காக ஜெயா டிவியிலேர்ந்து போன ஆளு பேரை அனுப்பிட்டாங்க. அன்னைக்கு அசைன்மென்டுக்குப் போனது பேச்சிமுத்துன்னு ஒரு ரிப்போர்டர்.
பேச்சிமுத்து, திருநெல்வேலி மாவட்டத்துல ஒரு விவசாயக் குடும்பத்துலேர்ந்து சென்னைக்கு பத்திரிக்கையாளரா ஆகணும்னு வந்த ஆளு. இதுக்கு முன்னாடி ராஜ் டிவியில வேலை பாத்தாரு. ராஜ் டிவியில கவர் வாங்காத ஆட்களே இல்லைன்ற அளவுக்கு கவர் வாங்குவாங்க. ஆனா இந்த ஆளு அங்கயும் கவர் வாங்க மாட்டாரு. ஜெயா டிவி ரிப்போர்டர்கள்ல பெரும்பாலான பேரு, போற எடத்துல கட்சிக் காரங்க செய்யற சலுகையை ஏத்துக்குவாங்க. ஆனா, இவரு, எந்த சலுகையையும் ஏத்துக்காதவரு. குடுத்த வேலை என்னவோ, அதை கச்சிதமா முடிச்சுடுவாரு. கூடுதலாவும் செய்ய மாட்டாரு. குறைச்சலாவும் செய்ய மாட்டாரு. அந்த ஆள்தான் டெல்லி அசைன்மென்டுக்கு போனாருன்னு அவரை வேலையை விட்டுத் தூக்கிட்டாங்க…“
“இப்போ அவரு எங்கடா இருக்காரு.. “
“வேலை போச்சு…. எங்க இருப்பாரு…. சொந்த ஊரு திருநெல்வேலிக்குப் போயிட்டாரு. “
“சரி ரமணியை ஏன் வேலையை விட்டுத் தூக்குனாங்க… ? “
“ஜெயலலிதா அசைன்மென்டுகளை சொதப்புனது மட்டுமில்லாம, இவர் சிஎம் ஆபீஸ் பி.ஆர்.ஓ மாதிரி செயல்படுறது தொடர்பா தொடர்ந்து புகார்கள் போயிக்கிட்டு இருந்துச்சு. மேலும், ரெண்டு அசைன்மென்டுகளை சொதப்புனதுக்கு இவருதான் காரணம்ன்றதை மறைச்சுட்டு, அப்பாவிகளை பலிகடா ஆக்கிட்டாருன்ற விபரமும், கார்டனுக்கு தெரிஞ்சுடுச்சு.
சனிக்கிழமை மதியம் 12 மணிக்கு, அவரைக் கூப்பிட்டாங்க. இதுல ஒரு கையெழுத்துப் போடுங்கன்னு சொன்னாங்க. அது அவரோட ராஜினாமா கடிதம். ஐடென்டிடி கார்டை குடுங்க, சிம் கார்டை குடுங்க. நீங்க போகலாம்னு சொல்லிட்டாங்க. “
“அடப்பாவமே…. !!! “ என்று அனுதாபப்பட்டான் ரத்தினவேல்.
“அனுதாபப்படாத மச்சான்… ஒரு அப்பாவியை மட்டுமில்லாம, 8 பேரோட வேலை பறிபோறதுக்கு இவர்தானே காரணமா இருந்தாரு. விதைத்தனை அறுத்துதானே ஆகணும் ? “
“சரி… இன்னும் சில பேரை வேலையை விட்டுத் தூக்கினதா செய்தி வருதே….. ? “ என்று வினா எழுப்பினான் வடிவேலு.
“ஆமாம் மச்சான்… அந்த தகவல் சரிதான். சரவணராஜன், ரமணி டைமன்ட் பாபு மற்றும் இன்னொருத்தரையும் தூக்கிட்டாங்க….“
“இந்த டைமன்ட் பாபு சினிமா பிஆர்ஓ தானேப்பா… “ என்றார் கணேசன்.
“ஆமான்ணே…. இவர் மேலயும் பல புகார்கள் வந்துருக்கு. அதனாலதான் ஜெயா டிவி ஊழியரா இருந்த இவரையும் தூக்கியிருக்காங்க….“
“சரி.. இந்த பெப்சி உமா குடுத்த புகார்ல கைது பண்ணி சிறைக்கு போனவர்தானே இந்த சரவணராஜன் ? “
“ஆமாம் மச்சான்… பெப்சி உமா, சன் டிவியோட ஆரம்ப காலத்துலேர்ந்து இருந்தவங்க. பெப்சி உங்கள் சாய்ஸ்ன்ற நிகழ்ச்சியை சன் டிவியில ரொம்ப நாள் தொகுத்து வழங்குனாங்க. சன் டிவியில இவங்கதான் பெரிய ஸ்டாரா இருந்தாங்க அப்புறம் திருமணமாகி தொலைக்காட்சியை விட்டு ஒதுங்கிட்டாங்க.
பல வருஷத்துக்குப் பிறகு, இப்போ ஜெயா டிவியில “ஆல்பம்“னு ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்குற வேலையை செஞ்சாங்க. இந்த நிகழ்சிக்கு அவ்வளவா வரவேற்பு இல்லன்னு முடிவு செஞ்ச ஜெயா டிவி நிர்வாகம், இந்த நிகழ்ச்சியை நிறுத்தனும்னு முடிவு பண்ணாங்க. அதனால அந்த நிகழ்ச்சி தயாரிப்பாளர் சரவணராஜனை கூப்புட்டு, நிகழ்ச்சிக்கு இனிமே ஷட்டிங் பண்ணாதீங்க. நிகழ்ச்சியை நிறுத்திடுங்க. நீங்க தயாரிக்கற பல நிகழ்சிகள் மொக்கையா இருக்கு உங்களையே தூக்க வேண்டி வரும்னு சொன்னாங்க. பயந்து போன சரவணராஜன், பெப்சி உமா கிட்ட, ஷுட்டிங் பண்ணாதீங்கன்னு சொல்லிட்டாரு. ஆனா, உமா தொடர்ந்து சரவணராஜனை தொல்லை பண்ணிக்கிட்டே இருந்தாங்க. ஒரு கட்டத்துல, என் ஷுட்டிங்கை நிறுத்துனா என்ன ஆகும் தெரியுமான்னு மெரட்ற அளவுக்கு போயிட்டாங்க….“
சரவணராஜனும், ஒரு நாள் கோபமாகி, உன்னைப் பத்தித் தெரியாதாடி ன்னு, கெட்ட வார்த்தையில திட்டி, ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்பிட்டாரு. “
“உமா, ஜெயா டிவி நிர்வாகத்துக்கிட்ட புகார் பண்ணாங்க. அவங்களும் நாங்க நடவடிக்கை எடுக்கறோம்னு சொன்னாங்க. “
“ஜெயா டிவியில நிர்வாகம்னு எங்கடா இருக்கு… ? “ என்று சொல்லி விட்டு சிரித்தான் பீமராஜன்.
“அதான் மச்சான்… ஒவ்வொரு நாளைக்கும் ஒவ்வொரு நிர்வாகம். அன்னைக்கு நிர்வாகத்துல இருந்தவங்க… நாங்க பாக்கறோம்னு சொன்னாங்க. “
ஒரு கட்டத்துல இனிமே நமக்கு நிகழ்ச்சி கிடைக்காதுன்னு உணர்ந்த பெப்சி உமா, கிண்டி காவல் நிலையத்துக்குப் போய் புகார் குடுத்துட்டாங்க… உயர் உயர் அதிகாரிகளைத் தொடர்பு கொண்ட காவல்துறை அதிகாரிகள், சரின்னு சம்மதம் கிடைச்சதும், சனிக்கிழமை காலையில 2 மணிக்கு சரவணராஜனை கைது பண்ணிட்டாங்க…“
“இதுக்குப் பின்னாடி இவ்வளவு விஷயம் இருக்கா“ என்று கேட்டு விட்டு வாயைப் பிளந்தான் வடிவேலு..
“இது மட்டும் இல்ல.. விரைவில் அனுராதா மீண்டும் ஜெயா டிவியோட நிர்வாகப் பொறுப்புக்கு வரப்போறாங்கன்னும் சொல்றாங்க. “
“என்னடா சொல்ற ? “
“ஆமாம்டா… ரபி பெர்நார்ட் பொறுப்பேத்துக்கிட்ட பிறகு, எப்படி தொடர்ந்து பணி நீக்கங்கள் நடந்துக்கிட்டு இருக்குப் பாரு. தொடர்ந்து பணி நீக்கங்கள், ரபி பெர்நார்ட் கொண்டு வந்த மாற்றங்களுக்கு முட்டுக்கட்டை இப்போ பாலியல் தொல்லை காரணமா ஒருத்தர் கைது….“
“ஆமா இதுக்கும் அனுராதா வர்றதுக்கும் என்ன சம்பந்தம் ? “
“அக்கா பாருங்கக்கா…. அனுராதா இருந்த வரைக்கும் எந்த பிரச்சினையும் இல்லாம இருந்துச்சு (அவங்க பணத்தை மட்டும்தான் ஆட்டையப் போட்டாங்க) ஆனா இப்போ தெனம் தெனம் பிரச்சினையா இருக்கு.. பேசாம அனுராதாவையே கொண்டு வந்துடலாம்கா னு ஒரு நல்ல நேரத்துல சசிகலா சொன்னா, ஜெயலலிதா ஓ.கே சொல்லப் போறாங்க… வேற என்ன சொல்லுவாங்க…..“
சசிகலாவிலிருந்து மூன்றாவதாக வருபவர் அனுராதா
“அப்போ அதுக்காகத்தான் எல்லாம் பண்றாங்களா… ? “
“அது மட்டும் இல்ல. ரபி பெர்நார்ட் ஒரு தலித். அனுராதா உக்காந்து இருந்த எடத்துல ஒரு தலித் எப்படி இருக்கலாம்ன்ற வெறுப்பும் இருக்கும். சசிகலா குடும்பத்துக்கு இருக்க ஜாதி வெறியைப் பத்தி சொல்லணுமா என்ன ? தூரத்து சொந்தத்துல பொண்ணு எடுத்தா, ஜாதி சுத்தமா இருக்காதுன்னு, அத்தனை பேரும், அக்கா பொண்ணு, மாமா பொண்ணைத்தானே கல்யாணம் பண்ணியிருக்காங்க. அந்த அளவுக்கு ஜாதி வெறி புடிச்சவங்க எப்படி ஒரு தலித்தை அங்க விடுவாங்க…“
“சரி குட்டிப் புலி வசூல் எப்படியாம்டா… “ என்று சினிமாவுக்குத் தாவினான் வடிவேலு.
“குட்டிப்புலி வசூலை அள்ளிக் கொட்டுது. அந்தப் படத்தை இணையத்துல கழுவி கழுவி ஊத்துனாலும், வசூல் பின்னுது. சன் பிக்சர்ஸ் வெளியீடு… சொல்லனுமா என்ன ? “
“மத்த படங்கள்லாம் அப்படி ஓட மாட்டேங்குதே… ? “
“மச்சான்… தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள்கிட்ட இருக்கற ஒரு சென்டிமென்ட் என்னன்னா, எந்த செய்தியா இருந்தாலும் அது தினத்தந்தியில மொதல்ல வந்தா படம் சூப்பர் ஹிட்டாயிடும்னு ஒரு சென்டிமென்ட். இதுக்காக தினத்தந்தி சினிமா ரிப்போர்டர் கங்காதரனுக்கு கவர் மேல கவரா குடுப்பாங்க. முதல் செய்தியா வரணும்னா 5 ஆயிரம், ரெண்டாவது செய்தியா வரணும்னா 3 ஆயிரம், இந்த மாதிரி ரேட்.
இந்த சென்டிமென்ட் பல காலமா வந்துக்கிட்டு இருக்கு. சினிமா பிஆர்ஓக்கள்தான் இப்படி கவர் குடுக்கற வேலையை கவனமா செய்யறாங்க. ஆனா இப்போ புகார் என்னன்னா, கவரையும் வாங்கிட்டு, செய்தியையும் கங்காதரன் போடறதில்லன்னு புகார் வந்துருக்கு…“
“படத்தை ஒழுங்கா எடுங்கடான்னா அதை செய்யாம, மொதல் செய்தி, ரெண்டாவது செய்தின்னு…. நல்ல படமா எடுத்து, அதைப் பத்தி தினத்தந்தியில செய்தி வராம இருந்துச்சுன்னா படம் ஓடாதா என்ன… ? லூசுப் பயலுங்க.. இந்த மாதிரி லூசுப் பயலுங்க இருக்கற வரைக்கும், கங்காதரன் மாதிரி ஆட்கள் காட்டுல மழைதான். “ என்றான் ரத்தினவேல்.
“தம்பி போலாமாப்பா…. “ என்ற கணேசனின் வார்த்தையைக் கேட்டு, அனைவரும் மொட்டை மாடியைக் காலி செய்தார்கள்.