18 செப்டம்பர் 1949 அன்று சென்னை பவழக்காரத் தெருவில் நடந்த அந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க அமைப்புக் குழுக் கூட்டத்தில்தான் திராவிட முன்னேற்றக் கழகம் உருவெடுத்தது. “நாம் இதுவரையில் பரப்பி வந்த கொள்கைகளையும் லட்சியத்தையும் தொடர்ந்து பரப்பவும், உடனடியாக வேலைகளைத் துவக்கி நடத்தவும் நாம் “திராவிட முன்னேற்றக் கழகம்” என்ற அமைப்பை ஏற்படுத்திக் கொண்டு செயலாற்றுவதெனவும் இக்கமிட்டி தீர்மானிக்கிறது.
நீண்ட சதுர வடிவத்தில் மேல் சரிபாதி கறுப்பு நிறமாகவும், கீழ் சரிபாதி சிவப்பு நிறமமாகவும் அமைந்திருக்க வேண்டும்.
கறுப்பு : அரசியல் பொருளாதார சமுதாய வாழ்விலுள்ள இருண்ட நிலையை உணர்த்தி நிற்கும் அறிகுறியாகும்.
சிவப்பு : அம்மூன்று துறைகளிலும் உள்ள இருண்ட நிலையைப் போக்கி ஒளி நிலையை உண்டாக்க வேண்டும் என்பதைக் காட்டும் அறிகுறியாகும். இருண்ட நிலையை ஒளிநிலை அழித்துக் கொண்டு வரவேண்டும். அழித்துக் கொண்டு வருகிறது. இருண்ட வானின் அடியில் தோன்றி எழும்பும் இளம்பரிதி ஒளி போல் என்ற கருத்துடன், கறுப்பு மேலும், சிவப்பு கீழும் வைக்கப்பட்டுள்ளது. இது திராவிட முன்னேற்றக் கழகத்தின் தற்காலிகக் கொடியாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது.”
இந்தத் தீர்மானத்தோடுதான் திராவிட முன்னேற்றக் கழகம் பிறந்தது. ராபின்சன் பூங்காவில் கொட்டும் மழையில் நடந்த அந்தப் பொதுக்கூட்டத்தில் மழையையும் பொருட்படுத்தாது நனைந்தபடி கேட்ட பொதுமக்களிடையே உரையாற்றிய அண்ணா
“திராவிடர் கழகமாகட்டும் – திராவிட முன்னேற்றக் கழகமாகட்டும். படை வரிசை வேறு என்றாலும் கொள்கை ஒன்றுதான். திட்டமும் வேறு அல்ல என்ற நிலை இருந்தே தீரும். படைவரிசை இரண்டுபட்டு விட்டது என்று எக்காளமிடும் வைதீகபுரிக்கும், வடநாட்டு ஏகாதிபத்யத்துக்கும் சம்மட்டியாக விளங்க வேண்டும். இரு கழகங்களும் இரு திக்குகளிலுமிருந்து வடநாட்டு ஏகாதிபத்யத்தை ஒழித்து, வைதீகக் காட்டை அழித்து சமதர்மப் பூங்காவை, திராவிடத்தை செழிக்கச் செய்தல் வேண்டும். அதிலே எந்தக் கழகம் பூங்காவை அமைத்தாலும் அதில் பூக்கும் பூக்கள், காய்கள், கனிகள், திராவிடத்தின் எழுச்சியை, மலர்ச்சியைத் தான் குறிக்கும். இரு பூங்காக்களும் தேவை. ஒன்றோடொன்று பகைக்கத் தேவையில்லை, அவசியமும் இல்லை. எது புஷ்பித்தாலும் மாலையாகப்போவது திராவிடத்துக்குத்தான் என்ற எண்ணம் வர வேண்டும்” என்று பேசினார்.
மொழி என்பது தமிழர்களின் ரத்தத்தோடு கலந்த ஒரு விவகாரமாக இருந்த காலம் அது. 1948ல் மாணவர்களின் இந்தி எதிர்ப்பு மாநாடு சென்னை செயின்ட் மேரி மண்டபத்தில் நடைபெறுகிறது. அந்த மாநாட்டில் அறிஞர் அண்ணா போராட்டத்தின் தளபதியாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
திமுக தொடங்கப்பட்ட பிறகு 1950 நவம்பர் 8 அன்று அதே செயின்ட் மேரி மண்டபத்தில் சத்தியேந்திரன் தலைமையில் திராவிட மாணவ முன்னேற்றக் கழக மாநாடு நடைபெறுகிறது. அம்மாநாட்டில் தனித்திராவிட நாடு உட்பட 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதைத் தொடர்ந்து 1955 நவம்பரில் திராவிட மாணவர் முன்னேற்றக் கழகத்தின் இரண்டாவது மாநாடு சென்னை கோகலே மண்டபத்தில் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து தமிழகமெங்கும் மாணவர் இயக்கங்களை திமுக கட்டமைத்தது.
இந்தி எதிர்ப்பு என்ற ஒற்றைக் கோரிக்கையை முன்வைத்து, 25 ஜனவரி 1965 தினத்தை மாணவர்கள் துக்க தினமாக அறிவித்தனர். மெரினா கடற்கரையில் 10 ஆயிரம் மாணவர்கள் கலந்து கொண்டனர் 21 அடி உயர இந்தி அரக்கி கொடும்பாவி கொளுத்தப்பட்டது. சில மாதங்களுக்கு முன் திருச்சியில் நடந்த போராட்டத்தில் நடத்தப்பட்ட தாக்குதலைப் போலவே காங்கிரஸ்காரர்கள் மதுரையிலும் போராடிய மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ராஜேந்திரன் என்ற மாணவர் உயிரிழந்தார். தமிழகமெங்கும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். அரசு கல்லூரி மற்றும் பள்ளிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அறிவித்தது. அந்த ஆண்டு முழுவதுமே தொடர்ந்து மாணவர்களின் போராட்டம் நடந்தவண்ணம் இருந்தது. இந்த போராட்டத்தின் வீச்சை அப்போதைய காங்கிரஸ் அரசு சரிவர மதிப்பிடத் தவறியது.
1967 தேர்தலுக்கு சற்று முன்னதாக நடந்த பொதுக்கூட்டத்தில் அண்ணா இவ்வாறு பேசினார். “ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும், அமைச்சரவை ஏற்க வேண்டும் என்பதுதான் கழகத்தின் இறுதி முடிவு என்று யாரும் கருதி விடக் கூடாது. அதுதான் லட்சியம் என்றால் பார்க்க வேண்டியவர்களைப் பார்த்து, கொடுக்க வேண்டியவைகளை கொடுத்து அழைக்க வேண்டியவர்களை அழைத்து பதவியைப் பெற முடியாது என்பது முடியாத காரியமல்ல…!! காமராசரிடம் சென்று நீங்களே இருங்கள் நாங்கள் கீழே இருந்து கொள்ளுகிறோம் என்று சொன்னால் அது முடியாத காரியமா ? இந்த முறை சரியானதல்ல என்று கருதுகிறேன்.
தமிழ் மொழியைக் காத்தாக வேண்டும். தமிழ் இனத்தை, தமிழ்ப் பண்பாட்டைக் காத்தாக வேண்டும். இதற்கு இன்னும் ஐம்பது ஆண்டுகளாவது தொடர்ந்து உத்வேகத்துடன் பாடுபட்டால்தான் உலக வரலாற்றில் நாங்கள் தமிழர்கள் என்று தலை நிமிர்ந்து கூறக்கூடிய நிலை ஏற்படும். எனவே, புதிய வரலாற்றில் சிறப்பான அத்தியாயத்தை தோற்றுவிக்க வேண்டும். அந்த லட்சியத்தை அடைய நான் மேற்கொள்ளும் பணியில் நீங்கள் பங்கு கொள்ள உங்களை அழைக்கிறேன்.” இதுதான் அறிஞர் அண்ணா திமுக ஆட்சிப்பொறுப்பேற்கும் முன் விடுத்த அழைப்பு. தமிழ் மொழியைக் காத்தாக வேண்டும், தமிழ் இனத்தை காக்க வேண்டும். இதுதான் அறிஞர் அண்ணாவின் லட்சிய மூச்சாக இருந்தது. எந்தத் தமிழினத்தைக் காக்க வேண்டும் என்று அறிஞர் அண்ணா உறுதிபூண்டு தேர்தல் களத்தில் குதித்தாரோ, அதே தமிழினத்தின் அழிவுக்கு வழிகோலிய ஒரு இயக்கமாக திமுக மாறிப்போனது காலத்தின் விசித்திர கோலமே.
எத்தனையோ ஏற்ற இறக்கங்களைச் சந்தித்த திமுக இன்று மீளாத சரிவுப்பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறது. தேசியம், தேசியம் என்று பேசி எந்தக் காங்கிரஸ் கட்சி தமிழினத்தை மீளாத்துயரில் ஆழ்த்தியதோ, அந்த காங்கிரஸ் கட்சியிடமிருந்து தமிழினத்தையும், தமிழகத்தையும் மீட்டெடுக்கப்போகிறோம் என்று சூளுரைத்து பதவியேற்றது திமுக.
ஆனால் அதே காங்கிரஸ் கட்சியிடம் தன் குடும்பத்துக்காக ஒரு இனத்தையே பலி கொடுத்த வரலாற்றையும் திமுகவே அரங்கேற்றியிருக்கிறது. 2004ல் காங்கிரஸ் கட்சியோடு ஏற்பட்ட உறவு 2ஜி ஊழல் பணத்தால் வலுவாக கட்டப்பட்டது. தன்னுடைய கட்சியின் ஆதரவினால் மட்டுமே நடந்த முதல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசிடமிருந்து, எப்படிப்பட்ட பசையான துறைகளைப் பெற முடியுமோ, அப்படிப்பட்ட பசையான துறைகளை மிரட்டிப் பெற்றார் கருணாநிதி. அப்படிப் பெற்ற துறைகளில் மூலமாக ஆயிரக்கணக்கான கோடிகளை தன் குடும்பத்தினரும், அமைச்சர் பெருமக்களும் கொள்ளையடிப்பதை அகமகிழ்ந்து ரசித்தார் கருணாநிதி.
தன்னுடைய பல ஆண்டு கால பொதுவாழ்வில் காணக்கிடைக்காத பணம் அவர் கண்ணை மறைத்தது. அந்த நேரத்தில் வளர்ந்து தலையெடுத்த குடும்பம், அவர் சிந்தையை முடக்கியது. தன் கணவனைக் கொன்றதற்காக ஒரு இனத்தையே அழிப்பேன் என்று கங்கணம் கட்டிக்கொண்டு களமிறங்கிய பெண்ணுக்கு, துணை நின்று, “ஒரு அடிமை இறைஞ்சுவதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்” என்றார். தன்னை நிரந்தர அடிமையாக்க, காங்கிரஸ் கட்சி 2ஜி என்ற வலையை விரித்து வைத்திருப்பதை உணரத் தவறிய அவர், வகை தொகை தெரியாமல் அந்த வலையில் தான் மட்டுமல்லாமல் தன் குடும்பத்தையும் சிக்க வைத்தார். தானாகவே வந்து வலையில் சிக்கிய திமுகவை தத்தளிக்க வைத்தது காங்கிரஸ். நீரா ராடியா உரையாடல்கள் உள்ளிட்ட வெவ்வேறு ஆதாரங்களை அவ்வப்போது ஊடகங்களில் வெளியிட்டு, கனிமொழிக்கு நெருக்கடி என்பதை உணர்த்தியே, ஈழப்போரில் சிங்களன் கையை வலுப்படுத்த, கருணாநிதியே கேடயமாக பயன்படுத்தியது காங்கிரஸ். தன் மீதும், திமுக மீதும் எரியப்பட்ட அத்தனை அம்புகளையும், தாங்கிக் கொண்டு காங்கிரஸ் கட்சிக்கும், மத்திய அரசுக்கும் முட்டுக் கொடுத்தார் கருணாநிதி.
தனது உயிருக்குயிரான ஆசை மகளை எப்படியாவது காப்பாற்றுங்கள் என்று கோபாலபுரத்திலும், சிஐடி காலனியிலும் வந்து பேசிய காங்கிரஸ் தலைவர்களிடமெல்லாம் மன்றாடினார் கருணாநிதி. ஆனால், நம்ப வைத்து கழுத்தறுத்தது காங்கிரஸ் கட்சி. பெற்ற மகள் திஹார் சிறையில் உழலுவதைப் பார்த்து எதுவுமே செய்ய முடியாத கையறு நிலையில் புலம்பினார் கருணாநிதி. ஆனால் அவர் புலம்பலைப் பார்த்து புளகாங்கிதம் அடைந்தனர் காங்கிரஸ் கட்சியினர். வசமாகச் சிக்கினான் நமக்கு ஒரு அடிமை என்று அகமகிழ்ந்தனர். புதைமணலில் சிக்கியவன் எது கிடைத்தாலும் கரையேறத் துடிப்பது போல, பிடிப்புக்காக அலைந்து காங்கிரஸ் கட்சி வீசிய கிளையைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார் கருணாநிதி. தனது சுயமரியாதைக்கும், கட்சியின் மரியாதைக்கும் சட்டமன்றத் தேர்தல் தொகுதிப் பங்கீட்டின்போது வந்த சிக்கலான நேரத்தில் ஒரு கணம் தடுமாறி கூட்டணியை விட்டு விலகுகிறேன் என்று வீராவேசமாக அறிவித்தார். காங்கிரஸ் கட்சி 2ஜி வழக்கை சுட்டிக்காட்டி, கையை முறுக்கியதும், எந்த 63 தர முடியாது என்று வீரவசனம் பேசினாரோ அதே 63 இடங்களை வழங்கியதோடல்லாமல், 63 நாயன்மார்கள் என்று வாழ்த்துப்பா பாடினார்.
2ஜி வழக்கில் உதவி செய்கிறோம், உதவி செய்கிறோம் என்று கடைசி வரை நம்ப வைத்துக் கழுத்தறுத்த காங்கிரஸ் கட்சிக்கு சரியான பாடம் புகட்டுவதற்காக காத்திருந்த கருணாநிதிக்கு வசதியாகக் கிடைத்தது, தமிழ் மாணவர்களின் போராட்டம். எந்த திமுகவும் கருணாநிதியும், ஈழப்போராட்டத்தை அழித்தார்களோ, அதே கருணாநிதி மாணவப் போராட்டத்தைக் காரணம் காட்டி காங்கிரஸ் கட்சிக்கான ஆதரவை வாபஸ் பெற நேர்ந்தது. ஐக்கிய நாடுகள் அவையில் எடுத்து வரப்பட்ட தீர்மானத்தைக் காரணம் காட்டி, காங்கிரஸ் கட்சிக்கு வழங்கி வந்த ஆதரவை வாபஸ் வாங்கினார் கருணாநிதி. எந்த ஈழத்தமிழர்கள் அழியக் காரணமாக இருந்தாரோ, அதே ஈழத் தமிழகர்கள் பேரால் முண்டா தட்டினார் கருணாநிதி. டெசோ அமைப்பால் ஈழத்தை பெற்றே தீருவேன் என்று சூளுரைத்தார்.
வாபஸ் வாங்குவதென்ற முடிவெடுத்ததும், செய்தியாளர்களிடம் ஈழத்தமிழர்களுக்காக முதலைக் கண்ணீர் வடித்தார்.
“செய்தியாளர் :- நீங்கள் கோரும் மாற்றம் செய்யப்படவில்லை என்றால், மத்திய அமைச்சரவையில் நீடிப்பதில்லை என்று ஏற்கனவே நீங்கள் எடுத்த முடிவு உடனடியாக எடுக்கப்படுமா?
கலைஞர் :- எங்கள் கோரிக்கையை ஏற்கவில்லை என்றால், எங்களுக்கும் இந்தக் கூட்டணிக்கும் உள்ள உறவு நீடிக்குமா என்பது சந்தேகம் – நீடிக்காது என்பது உறுதி.
செய்தியாளர் :- இந்தியா திருத்தங்களைக்கூறினால், அதனை அமெரிக்கா ஏற்றுக் கொள்ளும் என்று நினைக்கிறீர்களா?
கலைஞர் :- இந்தியா வலியுறுத்த தவறினால், அமெரிக்கா ஏற்றுக்கொள்ளாததை விட அது பெரிய தவறு. அமெரிக்கா ஏற்றுக் கொள்கிறதோ இல்லையோ, அதைக்கூட இந்தியா சொல்லத்தவறினால், அது இலங்கைத் தமிழர்களுக்கு இழைக்கப்படும் பெருத்த அநீதி என்று நாங்கள் கருதுகின்ற காரணத்தினால்தான், இந்தக்கூட்டணியிலே நீடிப்பதில் அர்த்தம் இருப்பதாகத் தெரியவில்லை என்று நான் ஏற்கனவே சொல்லியிருக் கிறேன். அதையே இப்போதும் சொல்கிறேன்.”
மத்திய அரசிலிருந்து, குலாம் நபி ஆசாத், ப.சிதம்பரம், ஏ.கே.அந்தோணி ஆகியோர் நேரில் வந்து முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக்கொண்ட போதும், முடியவே முடியாது…. மகளைக் காப்பாற்றாத உங்களுக்கு எதற்கு ஆதரவு தரவேண்டும் என்று உள்ளே பேசி விட்டு, வெளியே நிருபர்களிடம் “எனவே, ஈழத்தமிழருக்கு எந்த வகையிலும் பயன்படாத சூழ்நிலைகளே உருவாக்கப் பட்டுள்ள நிலையில், இதற்குப்பிறகும் இந்திய மத்திய ஆட்சியில் திராவிட முன்னேற்றக் கழகம் நீடிப்பது தமிழினத்திற்கே இழைக்கப்படும் பெரும் தீமை என்பதால், திராவிட முன்னேற்றக்கழகம் மத்திய அமைச்சரவையிலிருந்தும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்தும் உடனடியாக விலகிக் கொள்வதென முடிவு செய்யப்பட்டுள்ளது.“ என்று பசப்பு நாடகமாடினார்.
“இதற்குப் பிறகும், இந்திய மத்திய ஆட்சியில் திமுக நீடிப்பது தமிழினத்திற்கே இழைக்கப்படும் பெரும் தீமை“ எப்படிப்பட்ட கடுமையான வார்த்தைகள்…. ?
இந்த வார்த்தைகளைக் கேட்டு, உடன்பிறப்புகள் அகமகிழ்ந்தனர், ஆர்ப்பரித்தனர், ஆனந்தக் கூத்தாடினர்… விரலிடுக்கில் உறுத்திக் கொண்டிருந்த பேனா விலகிப்போனது என்றனர்… காலில் குத்திய நெருஞ்சி முள் பிடுங்கி எறியப்பட்டது என்றனர். இனி நாங்கள் யாருக்காகவும் சிலுவை சுமக்கவேண்டியதில்லை என்றனர்… பட்டாசு வெடித்தனர்… பண்டிகை போலக் கொண்டாடினர்…..
திகவின் மூத்த சொம்பு குஞ்சாமணி இது குறித்து அறிக்கை வெளியிட்டார்.
“ஈழத் தமிழர் வாழ்வுரிமையைக் காப்பாற்றத் தவறியதோடு, மனித நேயத்தையும் மறந்த இலங்கை ராஜபக்சே அரசின் தமிழர் இனப் படுகொலை, போர்க் குற்றங்கள் – ஆகியவற்றிலிருந்து இன்னமும் இலங்கை அரசைக் காப்பாற்ற சர்வதேச அரங்கிலும் முயற்சிக்கும் இந்திய அரசிலிருந்து தி.மு.க. வெளியேறுவது என்ற (கூட்டணியிலிருந்தும்கூட) அதன் முடிவு – மிகவும் பாராட்டி வரவேற்கப்பட வேண்டிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சிறந்த முடிவு ஆகும். காலத்தே எடுக்கப்பட்ட சரியான முடிவு – தேவையான முடிவும் கூட.
ஞாலம் வரவேற்கும் என்பது உறுதி. ஈழத் தமிழர்கள் வாழ்வுரிமைக்காக முன்பு இரண்டு முறை, தமிழ்நாட்டு ஆட்சியை – அரசைத் தியாகம் செய்த தி.மு.க. -இப்போது 9 ஆண்டுகளாக பங்கேற்ற மத்திய ஆட்சியிலிருந்து, அக்கூட்டணி அரசிலிருந்து வெளியேறி அதன் தியாக வரலாற்றில் மேலும் ஒரு வைரக் கல்லைப் பதித்து உயர்ந்துள்ளது.”
குஞ்சாமணியின் அறிக்கைகள் கருணாநிதியின் அறிக்கைகளே…
ஆனால் என்ன நடந்தது ? எந்த காங்கிரசோடு உறவாடுவது தமிழினத்திற்கே இழைக்கப்படும் பெரும் தீமை என்று வர்ணித்தாரோ, அதே காங்கிரஸிடம் பிச்சைப் பாத்திரம் ஏந்தி சென்றார். எந்த காங்கிரஸ் கட்சியைப் பார்த்து முண்டா தட்டினாரோ, அதே காங்கிரஸ் கட்சியிடம் இன்று மடிப்பிச்சை ஏந்தி நிற்கிறார். கூட்டணியிலிருந்து விலகியதிலிருந்து மீனவர் பிரச்சினைக்கும், கச்சத்தீவு பிரச்சினைக்கும் குரல் கொடுத்து வீராவேசம் பேசி வந்தவர், ஊட்டியில் சிங்கள ராணுவ அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வந்ததைக் கண்டும் காணாமலும் இருந்தார். நாள்தோறும் ஜெயலலிதாவை விமர்சித்து அறிக்கை வெளியிட்டு புளகாங்கிதம் அடைந்தவர், ஜெயலலிதாவைக் கூட பகைக்க விரும்பாமல் தேர்தல் முடியும் வரை எந்த அறிக்கைகளும் விடாமல் அமைதி காத்தார்.
திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இருந்த ஒன்பது ஆண்டுகால உறவில், என்றாவது ஒரு நாள், எந்த திமுக தலைவரின் கால்களாவது சத்யமூர்த்தி பவனில் பட்டிருக்குமா ? கருணாநிதி குடும்பத்தின் எந்த வாரிசாவது சத்யமூர்த்தி பவனில் கால் பதித்திருப்பார்களா ? ஆனால், கருணாநிதியின் மகள் கனிமொழியே நேராக சத்யமூர்த்தி பவன் சென்று காங்கிரஸ் தலைவர்களிடம் ஆதரவு கேட்கும் நிலை ஏற்பட்டது. குடியரசுத் தலைவராக இருந்தாலும் கருணாநிதியை வீட்டில் வந்து சந்திக்கும் நிலையில் இருந்த திமுகவின் வாரிசுகளில் ஒன்று சத்தியமூர்த்தி பவனில் மடிப்பிச்சை கேட்டது.
இப்படியெல்லாம் மன்றாடுவது எதற்காக ? செத்து மடியும் ஈழத்தமிழர்களை காப்பாற்றுவதற்காகவா ? ஈழத்தில் போரை நிறுத்துவதற்காகவா ? தமிழ் மொழியை காப்பாற்றுவதற்காகவா ? குறைந்தபட்சம் மாநிலத்தில் ஆட்சியைக் காப்பாற்றுவதற்காகவா ?
மகளை பாராளுமன்ற உறுப்பினராக்குவதற்காக இத்தனை தியாகங்களையும் செய்யத் துணிந்தார் கருணாநிதி. தன் குடும்பத்தின் நலனுக்காக, தன் சுயநலனுக்காக, எதை வேண்டுமானாலும் செய்யத் தயங்காதவர்தான் கருணாநிதி என்பதை கனிமொழியை எம்.பியாக்குவதற்காக அவர் நடத்திய நாடகம் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவில்லை என்று அறிவித்த மூன்று மாதங்கள் கூட வைராக்கியமாக இருக்க முடியாமல், தன் குடும்பத்துக்காக கூழைக்கும்பிடு போடுகிறார் கருணாநிதி. இதற்கு பிரதிபலனாக, அடுத்து எம்.பி பதவி முடியும் தருவாயில் இருக்கும் ஜெயந்தி நடராஜனை மீண்டும் எம்.பியாக்குவதற்கு அனைத்து உதவிகளையும் செய்யப்போகிறவர் இதே கருணாநிதிதான்.
“தமிழ் மொழியைக் காத்தாக வேண்டும். தமிழ் இனத்தை, தமிழ்ப் பண்பாட்டைக் காத்தாக வேண்டும். இதற்கு இன்னும் ஐம்பது ஆண்டுகளாவது தொடர்ந்து உத்வேகத்துடன் பாடுபட்டால்தான் உலக வரலாற்றில் நாங்கள் தமிழர்கள் என்று தலை நிமிர்ந்து கூறக்கூடிய நிலை ஏற்படும். “ என்ற லட்சியத்தோடு தொடங்கப்பட்ட திமுகவை இன்று குடும்ப நிறுவனமாக மாற்றியிருக்கிறார் கருணாநிதி. தமிழினத்தை அழிக்கத் துணைபோனவர் என்ற அவச்சொல்லையே அகற்ற முடியாத நிலையில் தத்தளித்துக் கொண்டிருக்கும் கருணாநிதி, மீண்டும் காங்கிரஸ் கட்சியின் ஆதரவைக் கேட்டுப் பெற்ற நிலையில், புதைகுழியிலிருந்து வெளி வர கிடைத்த கடைசி ஆதாரத்தையும் கைவிட்டு விட்டார்.
கனிமொழிக்காக காங்கிரஸிடம் கையேந்தி அவர் பெற்ற பதவி, அவர் குடும்பத்துக்குள் நிலவும் வாரிசுச் சண்டையை மேலும் கூர்மைப்படுத்தவே செய்யும். குறுகிய கால நினைவு உள்ள தமிழக மக்கள், தன் துரோகங்களை மறந்து விட்டு, மீண்டும் தன் குடும்பத்திடம் அதிகாரத்தை வழங்குவார்கள் என்று கருணாநிதி நினைப்பாரோயானால், அவரைப் போன்ற முட்டாள் யாரும் இருக்க முடியாது. திமுக என்ற ஆலமரத்தின் வேரில் வெந்நீர் ஊற்றும் வேலையை கருணாநிதி தொடர்ந்து செய்து வருகிறார். எந்தக் குடும்பத்தின் காரணமாக 2011 தேர்தலில் தன் ஆட்சியை இழந்தாரோ, அதே குடும்பத்தின் காரணமாகவே 2014 தேர்தலையும் இழக்கப்போகிறார். கருணாநிதி மற்றும் காங்கிரஸ் கட்சியின் மீது உள்ள வெறுப்பின் அடிப்படையிலேயே மீண்டும் ஜெயலலிதாவுக்கு மக்கள் வாக்களிக்கப் போகின்றனர். 2014
தேர்தலிலும், திமுகவை படுதோல்வியை நோக்கி இட்டுச் செல்கிறார் கருணாநிதி.
கருணாநிதியின் தொடர்ந்த தவறுகளால், திமுக மீள முடியாத அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. எத்தனையோ நெருக்கடிகளைச் சந்தித்து மீண்டெழுந்த திமுகவை, மீண்டெழ முடியாத மயான படுகுழியில் தள்ளியிருக்கிறார் கருணாநிதி.