“சக்ஸஸ். இன்று முதல் நானும் ஒரு ஏமாற்றுக்காரன்” என்று கத்தியபடி உள்ளே நுழைந்தான் டாஸ்மாக் தமிழ்.
“என்னப்பா டிராமாவுல பேசற மாதிரி வசனம் பேசற… ? “ என்றார் கணேசன்.
“இது நான் பேசுன வசனம் இல்லன்ணே….. சிவாஜி பேசுன வசனம். பராசக்தி படத்தோட வசனம்“
“கருணாநிதி தானேப்பா அந்தப் படத்துக்கு வசனம் எழுதுனாரு… ? “
“அது வசனம் இல்லன்ணே… மனசாட்சியின் குரல். நான் எப்படிப்பட்டவன் என்பதை தன்னோட வசனங்கள் மூலமா அப்போவே உணர்த்தியிருக்கிறார்.. நாமதான் புரிஞ்சுக்கலை. “
“என்னப்பா சொல்ற… ? “
“நான் சொல்லலைன்ணே… நம்ப பாருக்கு வர்ற திமுக உடன்பிறப்போட அங்கலாய்ப்பு இது. “
“ஏன்டா உடன்பிறப்புக்கள் புலம்பறாங்க ? “ என்று உள்ளே நுழைந்தான் பீமராஜன். அவன் அண்ணா சாலையில் உள்ள வாரமிருமுறை இதழில் வேலை பார்ப்பவன்.
“அப்புறம் பொலம்பாம…. மார்ச் மாசம் கூட்டணியை விட்டு வெளியே வந்தப்போ இவங்க போட்ட சவுண்ட் ஞாபகம் இருக்கா இல்லையா ? என்னா பேச்சு…. ? இனி நிமிர்ந்து நிற்போம். பாரம் இறங்கியதுன்னு சவுண்ட் விட்டது இல்லாம, சோனியாவோட கொடும்பாவி எரிக்கறது வரை போனாங்க ஞாபகம் இல்லையா ?
“இப்போ என்ன ஆச்சு ? “ என்றான் ரத்னவேல். அவன் ஜானி ஜான்கான் சாலையில் உள்ள வாரமிருமுறை இதழில் வேலை பார்ப்பவன்.
“காங்கிரஸ் கட்சியோட இனி இணைந்து மத்திய அரசுக்கு ஆதரவு தருவதென்பது தமிழினத்திற்கே இழைக்கப்படும் பெரும் தீமைனு இவருதான் அறிக்கை விட்டாரு…. ஆனா, அதே காங்கிரஸ் கட்சியோட எம்எல்ஏக்கள் ஆதரவை பெறுவதற்கு இவர் போட்ட நாடகங்களைத்தான் நாடே வேடிக்கைப் பாத்துச்சே.. “
“அதுக்கு என்னப்பா பண்றது… பொண்ணை எம்.பியாக்க வேணாமா ? “
“அதுலதானேன்ணே மாட்டிக்கிட்டாரு… ஜெயலலிதா அற்புதமா காயை நகத்தி வசமா சிக்க வச்சுட்டாங்க. ஜெயலலிதா விரிச்ச வலையில வகை தொகை தெரியாம சிக்கிட்டாரு. “
“அவங்களும்தான் 5 கேன்டிடேட் போட்டு ஒன்னை வாபஸ் வாங்கினாங்களே மச்சான். “ என்றான் வடிவேலு. அவன் புரசைவாக்கத்தில் உள்ள வாரமிருமுறை இதழில் வேலை பார்க்கிறான்.
“போட்டாங்கடா.. ஜெயலலிதாவோட கணக்கு நாம 5 கேண்டிடேட் போட்டா, விஜயகாந்த் இடது சாரிகளுக்கு ஆதரவு தருவாரு. இடது சாரிகளுக்கு விஜயகாந்த் ஆதரவு கிடைச்சா இடது சாரிகளுக்கு கிடைச்ச மொத்த வாக்குகள் போக மீதமிருக்கும் வாக்குகளை வச்சு, அஞ்சாவது கேண்டிடேட்டை ஜெயிக்க வச்சுடலாம்னு கணக்கு போட்டாங்க“
“இடது சாரிகள் கோவிச்சுக்க மாட்டாங்களா ? “
“கோவிச்சுக்கிட்டு தனியா நின்னுடுவாங்களா.. தமிழகத்தைப் பொறுத்தவரைக்கும் இடது சாரிகளும், காங்கிரஸ் கட்சியும் ஒண்ணுதான். காங்கிரஸ் எப்படி இரண்டு திராவிடக் கட்சிகளோடயும் மாறி மாறி கூட்டணி வைக்குதோ, அதைத்தானே அவங்களும் செய்யறாங்க. இப்போ முறுக்கிக்கிட்டாலும் 2014 வந்ததும் ரெண்டு சீட் கெடைச்சா ஓடோடி வரப்போறாங்க. “
“அதுவும் சரிதான். நீ மேல சொல்லு“ என்று அவசரப்படுத்தினான் வடிவேலு.
“இதுக்குள்ள கேப்டனுக்கு நாமளே ஜெயிச்சா என்னன்னு ஒரு எண்ணம் உதிக்குது. காங்கிரஸ் கட்சியிலயும் அதுக்கு தூபம் போட்றாங்க. இப்பவே முதலமைச்சர் கனவுல இருக்கற கேப்டனுக்கு, காங்கிரஸ் நம்ப பக்கம் இருந்தா, நம்பளை யாராலயும் அசைச்சுக்க முடியாதுன்னு முடிவெடுத்து, அவரும் போட்டி போடப்போறேன்னு அறிவிச்சுட்டார்.
ரெண்டு கட்சியும் போட்டி போடுதுன்னு தெரிஞ்சதும், ஜெயலலிதா அஞ்சாவது வேட்பாளரை வாபஸ் வாங்கச் சொல்லிட்டு இடது சாரிகளுக்கு ஆதரவுன்னு அறிவிச்சுட்டார். தோழர்களும், “சோறு போட்றாங்க.. சோறு போட்றாங்க”ன்னு அம்மா உணவகத்துக்கு போயிட்டாங்க.
விஜயகாந்த் சாமர்த்தியமான ஆளாயிருந்திருந்தா, இடது சாரிகளுக்கும் ஆதரவு குடுத்துருக்கலாம்… திமுகவுக்கும் ஆதரவு குடுத்துருக்கலாம். அவர்கிட்ட அதிருப்தி எம்.எல்.ஏக்களை கழிச்சா மீதம் 22 எம்.எல்.ஏக்கள் இருக்காஙக., இடதுசாரிகளுக்கு 19 எம்.எல்.ஏக்கள் இருக்காங்க. அவங்களுக்குத் தேவையான 15 குடுத்தது போக, மீதம் உள்ள 7 ஏம்.எல்.ஏக்களை திமுகவுக்கு குடுத்துருந்தா, ஏற்கனவே திமுகவுக்கு இருக்கற 23 சேத்து 30 ஆயிருக்கும். மனிதநேய மக்கள் கட்சியோட 2, புதிய தமிழகத்தோட 2 சேத்து, 34 வந்துருக்கும். இடது சாரிகளுக்கும் ஆதரவு குடுத்த மாதிரி ஆச்சு… திமுகவுக்கும் ஆதரவு குடுத்த மாதிரி ஆச்சு. நாளைக்கு 2014ல் கூட்டணி அமைக்க இது ஒரு வலுவான அடித்தளமா அமைஞ்சுருக்கும்.
ஆனா விஜயகாந்துக்கு, காங்கிரஸ் கட்சியோட சேந்து 2014ல் கூட்டணி அமைக்கலாம்னு கனவு கண்டு, உள்ளதையும் இழந்துட்டு இன்னைக்கு அசிங்கப்பட்டு நிக்கிறாரு.
எந்த காங்கிரஸ் கட்சியோடு வெட்டப்பட்ட உறவுன்னு சொல்லி முண்டா தட்டுனாரோ, அதே காங்கிரஸ் கட்சியோட வாசல்ல போய் கருணாநிதியை கெஞ்ச வச்சு, திமுகவை நெருக்கடிக்கு தள்ளி, தன்னோட இரண்டு எதிரிகளையும், ஒரே அடியில வீழ்த்தியிருக்காங்க ஜெயலலிதா.
இனி காங்கிரஸ் கட்சியோட கூட்டணி வச்சாலும், வைக்கலன்னாலும், திமுகவுக்கு சரிவுதான். அந்த வகையில, இந்த ராஜ்யசபை தேர்தலைப் பொறுத்த வரைக்கும் கருணாநிதியை விட நான் ஒரு ராஜதந்திரின்னு ஜெயலலிதா நிரூபிச்சுட்டாங்க. இதுல எப்படிப் பாத்தாலும், ஜெயலலிதாவுக்கு லாபம்தான்.
“சரி… பாமக ஏன் இப்படி ஒரு நிலைப்பாட்டை எடுத்தாங்க.. ? “
“ராமதாஸுக்கு உடல் நிலை சரியில்லாததால அன்புமணிக்கிட்ட அதிகாரம் வந்துடுச்சு. அன்புமணிக்கு முண்டா தட்றதுல இருக்கற வேகம், அறிவோட முடிவெடுக்கிறதுல இல்லை. அனைத்து சமூகத்துலயும் ஓரளவுக்கு ஆதரவு இருக்கற வைகோவாலயே ஒண்ணும் பண்ண முடியல… ஆனா, ஒரே சமூகத்தோட ஆதரவை மட்டும் வச்சுக்கிட்டு 2016ல் பாமக ஆட்சியைப் பிடிக்கும்னு சொல்லிக்கிட்டு திரியிறாரு…. காரைக்குடியில ஆச்சியை வேணா பிடிக்கலாம்… கூட்டணி இல்லாம ஆட்சியை எப்பவும் பிடிக்க முடியாதுன்னு அன்புமணிக்கு தெரியலை. அதிமுக பக்கம் இனி எப்பவும் போக முடியாது. திமுகவோட அனுசரணையா நடந்துக்காம முட்டாள்த்தனம் பண்ணிட்டாரு அன்புமணி. “
“கட்சியில இதுக்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கிலியா ? “ என்றான் பீமராஜன்.
இந்த முடிவுக்கு கட்சியில எதிர்ப்பு இருக்கோ இல்லையோ…. அன்புமணியோட தலைமைக்கு கட்சியில எதிர்ப்பு இருக்கு. கட்சியோட மூத்த தலைவர் கோ.க மணிக்கு அன்புமணியோட தலைமை சுத்தமா புடிக்கல. வெளியில சொல்ல முடியாம நெளிஞ்சுக்கிட்டு இருக்காரு. முக்கியமான விஷயங்கள்ல கூட கோ.க.மணியை அன்புமணி கலந்து ஆலோசிக்கறது இல்ல. அவரைச் சுத்தி ஒரு ஜால்ராக் கூட்டத்தை வச்சுக்கிட்டு அவரு இஷ்டத்துக்கு எல்லாத்தையும் பண்றாருன்னு ஒரு நெனைக்கிறார். வேல்முருகன் பாணியில வெளியேறலாமான்னு யோசிச்சுக்கிட்டு இருக்கறார்.”
”மருத்துவர் அய்யா எப்படி இருக்கார் ? ”
”அவருக்கு உடல் நலமெல்லாம் நல்லா இருக்கு. மனநலம்தான் சரியில்ல….”
”என்னடா சொல்ற… ? ”
”ஆமாம் மச்சான். கிட்டத்தட்ட கருணாநிதி நிலைமை ஆயிடுச்சு அவருக்கு. பைபாஸ் அறுவை சிகிச்சை முடிஞ்ச பின்னாடி ஓய்வெடுத்துக்கிட்டு இருக்காரு. ராமதாஸோட மகள்கள், அவர் தொடர்ந்து அரசியலில் ஈடுபடணும்னு வலியுறுத்தறாங்க. ஆனா அவர் மனைவியும் அன்புமணியும், உடல் நிலையைக் கருத்தில் கொண்டு அவர் ஓய்வெடுக்கணும்னு விரும்பறாங்க. கருணாநிதிக்கு எப்படி குடும்பத்தால சிக்கலோ, கிட்டத்தட்ட அதே நிலைமைக்கு வந்துட்டார் ராமதாஸ். ”
”சரி… பாமக காரங்க யாரும் குடிக்க மாட்டாங்களே… அவங்க கட்சியைப் பத்தி உனக்கு எப்படி நியூஸ் வருது” என்று ஆச்சர்யமாகக் கேட்டான் வடிவேலு.
”க்கும்… மது தீமையானதுன்னு அவரு சொல்லிட்டா பாமக காரங்க குடிக்க மாட்டாங்களா…. போடா லூசு. மத்தக் கட்சிக்காரனாவது நிம்மதியா குடிக்கறான். பாமக காரங்க யாராவது பாத்துடுவாங்களோன்னு பயந்து பயந்து குடிக்கிறாங்க. ”
”சரி.. மனிதநேய மக்கள் கட்சியும், புதிய தமிழகமும் மக்களவைத் தேர்தல்ல திமுக கூட இருக்குமா ? ” என்று புதிய சந்தேகத்தை எழுப்பினான் ரத்னவேல்.
”அது அம்மாவுக்கு மட்டும்தான் தெரியும். இப்போதைக்குப் பாத்தா ரெண்டு கட்சியும் திமுக கூடவே இருக்கற மாதிரி தெரிஞ்சாலும், அடுத்த ஆண்டு என்ன நடக்கும்னு சொல்ல முடியாது. இப்போ ஒரு எம்எல்ஏவுக்கு ரெண்டு கோடி குடுத்ததும் போயிட்டாங்க. அடுத்த வருஷம் அம்மா அதிகம் குடுத்தா வரப்போறாங்க… இந்த டீலை முடிச்சுக் கொடுத்தது யார் தெரியுமா ? ”
”யார்டா ” என்றான் ரத்னவேல்.
”உங்க பத்திரிக்கையில வேலை பாக்குற இளையசெல்வனும், சுப.வீரபாண்டியனும்தான் முன்னுக்கு நின்னு முடிச்சாங்க இந்த டீலை. இரு வெளியில பல பேருக்கு தெரியாது”
”பத்திரிக்கையாளர்கள் இப்போ இந்த வேலையில கூட இறங்கிட்டாங்களா ? ”
”என்னடா புதுசா கேக்குற… வீர் சங்வியும், பர்கா தத்தும் என்ன பண்ணாங்க நீரா ராடியா கூட பேசும்போது… அதை சின்ன ‘லெவல்ல தமிழ்நாட்டுல பண்றாங்க. இதை கூட மன்னிச்சுடலாம், நட்பு அடிப்படையில பண்ணியிருக்காங்கன்னு…. ஆனா கான்ட்ராக்ட் கொடுக்கறது மாதிரியான விஷயங்கள்ல பத்திரிக்கையாளர்கள் தலையிட்டு, தங்களை ப்ரோக்கராவே மாத்திக்கறாங்க. அதுதான் வேதனையான விஷயம்”
”சரி. புது எம்.பி என்ன பண்ணப்போறாங்க…. -?” என்று கனிமொழியைப் பற்றி அக்கறையாக விசாரித்தார் கணேசன்.
”அண்ணே…. இந்த தேர்தல் வெற்றி, கனிமொழிக்கு ஒரு புது ரத்தம் பாய்ச்சியிருக்குன்னே சொல்லாம். அண்ணனோட எதிர்ப்பை நேரடியா எதிர்கொள்றதுன்ற முடிவுக்கு வந்துருக்காங்கன்னு சொல்லலாம். கனிமொழிக்கு இன்னும் 6 ஆண்டுகளுக்கு பதவி இருக்கு. அடுத்த நாடாளுமன்றத் தேர்தல்ல, திமுகவோட வெற்றி வாய்ப்புகள் பிரகாசமா இல்லைன்ற நிலைமையில, திமுகவோட டெல்லி முகமா கனிமொழி ஆகியே தீருவாங்க. அப்போ, ஸ்டாலினும் கனிமொழியை சார்ந்து இருக்க வேண்டிய நிலைமை உருவாகும். இது மட்டுமில்லாம கனிமொழியும் ஆக்டீவா குடும்ப அரசியலை எதிர்கொள்றதுன்ற முடிவுக்கு வந்துருக்கறதா சொல்றாங்க.”
”கனிமொழிக்கு சந்தோஷம்தானே… ? ” என்றான் ரத்னவேல்.
”கனிமொழிக்கு சந்தோஷம்தான். ஆனா உங்க இணை ஆசிரியர்க்குத்தான் வருத்தம். ”
”எங்க இணை ஆசிரியர்க்கு ஏன் வருத்தம்.. அவரு சந்தோஷம்தானே படுவாரு… ? ”
”அப்படித்தான் நானும் நெனைச்சேன். ஆனா நெனைப்பு பொழப்பக் கெடுக்கும்னு கேள்விப் பட்டிருக்கியா ? அது உங்க இணை ஆசிரியர் காமராஜுக்கு நல்லாவே பொருந்தும். ”
”டேய்… புரியிற மாதிரி சொல்லுடா…”
”ஒரு பத்து நாளைக்கு முன்னால, சுகுணவிலாஸ் க்ளப்புல காமராஜ் நண்பர்களோட சரக்கடிச்சிருக்கார். அஞ்சு ரவுண்ட் போன பிறகு, திடீர்னு “இந்தக் கிழவனுக்கு அறிவே இல்லை” னு சொல்லியிருக்கார். கூட இருந்த நண்பர்கள் என்ன ஏதுன்னு புரியாம பாக்கவும், “பின்ன என்னங்க… கனிமொழியை எம்.பி கேன்டிடேட்டா அறிவிச்சா யாரு ஏத்துப்பாங்க…. தளபதிக்கு சுத்தமா பிடிக்கல…” னு சொல்லி நிறுத்திட்டாரு. எல்லாரும் அவரு வாயவே பாத்துக்கிட்டு இருந்தாங்க.. போட்டாரு பாரு ஒரு குண்டை… ”என்னை கேன்டிடேட்டா போட்ருந்தா யாராவது எதிர்ப்பு தெரிவிச்சிருப்பாங்களா ? எல்லாரும் ஏத்துக்கறா மாதிரி கேண்டிடேட்டா நான் இருந்துருப்பேன். யாரும் எதிர்ப்பு தெரிவிச்சிருக்க மாட்டாங்கன்னு” போட்டாரே ஒரு போடு. எல்லோரும் வாயடைச்சுப் போயிட்டாங்க.
”டேய் உனக்கு எப்படி இது தெரியும் ? ” என்றான் ரத்னவேல் வியப்போடு
”டேய்.. நான் வேலை செய்யறதே பார்ல.. டாஸ்மாக் பார்ல இருந்தா, மத்த பார்ல இருக்கறவங்களோட பழக்கம் இருக்காதா ? நம்ப நெட்வொர்க் ரொம்ப பெருசு மச்சான்.”
”இப்படியா சொன்னாரு எங்க எடிட்டர்… ? ”
”சொல்றதும், ஆசைப்பட்றதும் தப்பு இல்லை மச்சான். ஆனா, தன்னோட ஆசை நிறைவேறாததால, கனிமொழிக்கு எதிரா செய்தி போடறதும், அவரை சிறுமைப்படுத்தறது மாதிரி செய்தி போடறதும் தப்பு இல்லையா ? ”
”அந்த மாதிரியெல்லாம் எதுவும் செய்தி போடலையே ” என்று தன் பத்திரிக்கைக்கு ஆதரவாக குரல் கொடுத்தான் ரத்னவேல்.
”ரெண்டு வாரம் முன்னாடி வந்த இதழ்ல, நான் எம்.பியாகனும் அப்படின்னு கனிமொழி அடம் பிடிச்சதா செய்தி போட்டாரு உங்க இணை ஆசிரியர். போன வாரம் வந்த இதழ்ல அட்டையில ரெண்டு பெண்களோட படம். ஒன்னு பெப்சி உமா. இன்னொன்னு கனிமொழி. ரெண்டு படமும் சம அளவில இருந்துச்சு. ஒரு கவர் ஸ்டோரி பெப்சி உமா கொடுத்த புகார் பத்தினது. இன்னொன்னு கனிமொழியோட ராஜ்ய சபை தேர்தலைப் பத்தினது. பெப்சி உமாவோட செய்தியும், கனிமொழியின் தேர்தலைப் பத்தின செய்தியையும் ஒப்பிட்டா நிச்சயமா கனிமொழியோட செய்திதான் முதன்மையான செய்தி. கனிமொழியோட படத்தைத்தான் பெரியதாக வச்சுருக்கனும். ஆனா, காமராஜ், பெப்சி உமாவையும், கனிமொழியையும் சரிசமமாக அட்டையில போட்டதால கனிமொழியை சிறுமைப் படுத்திட்டாராம். இப்படி ஒரு அற்ப சந்தோஷம் அந்த ஆளுக்கு.”
”என்னத்த சிறுமைப் படுத்திட்டாரு… அவங்க எம்.பியாயிட்டாங்க. இவரு நக்கீரன் நடுப்பக்கத்துல யாரோட தொப்புள் படத்தைப் போட்டா எடுப்பா இருக்கும்னு வாரத்துக்கு ரெண்டு வாட்டி ஆராய்ச்சி பண்ணிக்கிட்டு இருக்காரு.. ”
”கோவப்படாதீங்கண்ணே…. கனிமொழியும் 2ஜியில சிக்கினவங்க. என் வீட்ல கூடத்தான் 2ஜி சம்பந்தமா சிபிஐ ரெய்டு பண்ணியிருக்காங்க. அதனால நான் ஏன் எம்.பியாகக் கூடாதுன்னு நெனைக்கிறார். ஆனா கருணாநிதியைப் பத்தி இவ்வளவு நாளா தெரிஞ்சுக்கிட்டு, தன் பொண்ணை விட, ஒரு பத்திரிக்கையாளர், அதுவும் மஞ்சள் பத்திரிக்கையாளரை எம்.பியாக்குவாருன்னு இவருக்கு இப்படி ஒரு நெனைப்பு எப்படி வந்துச்சுன்னு தெரியலை. ”
”சரி… இப்படி பெப்சி உமாவையும், கனிமொழி படத்தையும் சரி சமமாக போடறதுக்கு எடிட்டர் எப்படிப்பா ஒத்துக்கறார் ? ”
”அட்டையை டிசைன் பண்றதே அந்த ஆளுதானே…. அந்த ஆளுக்கு தெரியாமையா இதெல்லாம் நடக்குது ? காமராஜ் வீட்ல சிபிஐ ரெய்டு நடந்தப்போ, நக்கீரன் பல சோதனைகளை சந்திச்சிருக்குன்னு கடிதம் எழுதுன ஆளுதானே இந்த ஆளு…. திமுகவுல எப்படி பேராசிரியர் அன்பழகன் இருக்காரோ, அது மாதிரி கோபால் நக்கீரன்ல இருக்காருண்ணே. அங்க காமராஜ் வச்சதுதான் சட்டம். இல்லன்னா 2ஜியில ஏகப்பட்ட பணத்தை சுருட்டிட்டு, சிபிஐயால விசாரிக்கப்பட்ட நபரை இணை ஆசிரியரா வச்சு, எல்லா செய்திகளையும் முடிவு பண்ண அனுமதிப்பாரா கோபால்…
கோபால் இந்த பத்திரிக்கையை பயன்டுத்தி வியாபாரம் பண்ண ஆரம்பிச்சு பல ஆண்டுகள் ஆயிடுச்சுன்ணே. ஒரு காலத்துல விற்பனையில கொடிகட்டிப் பறந்த நக்கீரன் இன்னைக்கு 50 ஆயிரம் காப்பிக்கும் கீழதான் போகுது. இந்தப் பத்திரிக்கையை தன் வியர்வையால வளர்த்தது கோபால்தான். அதே மாதிரி இந்தப் பத்திரிக்கை விற்பனையில சரிஞ்சு மஞ்சள் பத்திரிக்கையா ஆனதை வேடிக்கை பாக்கறதும் கோபால்தான். அது அவர் முடிவு…. நாம என்ன பண்ண முடியும்.. ”
”போலீஸ் நியூஸ் என்னடா இருக்கு” என்றான் வடிவேல்.
“வீரப்பனை கொன்னதா சொன்ன அதிரடிப்படையில இருந்தவங்களுக்கெல்லாம் பதவி உயர்வு கொடுத்தாங்க. அந்த பதவி உயர்வுக்கு சீனியாரிட்டியும் உண்டுன்னு அதிமுக அரசு ஒரு அரசாணை போட்டுச்சு. சீனியாரிட்டி குடுக்கக் கூடாது, அப்படிக் குடுத்தா மொத்த காவல்துறையையும் அது பாதிக்கும்னு பாதிக்கப்பட்ட ஆய்வாளர்கள்லாம் சேந்து வழக்கு போட்டாங்க.
இந்த வழக்கு நீதிபதிகள் சித்ரா வெங்கட்ராமன் மற்றும் துரைசாமிக்கிட்ட விசாரணைக்கு வந்துச்சு. அப்போ நீதிபதி சித்ரா வெங்கட்ராமன், ரெண்டு தரப்புக்கும் சமாதானம் பண்ணி வைக்கிறதுலயே மும்முரமா இருந்தாங்க. ஆனா இந்தத் தரப்பு ஒப்புக்கலை. இதுக்குப் பிறகு இந்த வழக்கு, நீதிபதிகள் பானுமதி, ரவிச்சந்திரபாபுக்கிட்ட விசாரணைக்கு வந்துச்சு.
அந்த வழக்கை விரிவா விசாரிச்ச நீதிபதி பானுமதி மற்றும் நீதிபதி ரவிச்சந்திர பாபு டிவிஷன் பென்ச், வீரப்பனை சுட்டதுக்காக குடுக்கப்பட்ட இந்த பதவி உயர்வுகள் அனைத்தும் சட்ட விரோதம். பதவி உயர்வே தவறுன்னு சொல்றப்போ, சீனியாரிட்ட குடுக்கலாமா, குடுக்கக் கூடாதான்ற கேள்வியே எழலைன்னு சிறப்பா ஒரு தீர்ப்பு குடுத்தாங்க.
சிறப்பு அதிரடிப்படை மூலமா பதவி உயர்வு பெற்றதுல, இரண்டு டிஎஸ்பிக்கள் முதல்வரோட பாதுகாப்பு அதிகாரிகளா இருக்காங்க. அவங்க, உள்துறை செயலாளர், டிஜிபின்னு கடுமையா ப்ரஷ்ஷர் குடுத்துட்டு இருக்காங்க. தீர்ப்பு அவங்களுக்கு எதிரா வந்ததும், அடுத்து என்ன பண்ணலாம்னு ஆலோசிச்சு, அரசு வழக்கறிஞரா இருந்தப்போ, அதிரடிப்படையில உள்ளவங்களுக்கு சீனியாரிட்டி குடுக்கலாம்னு ஒப்பினியன் குடுத்தாரு.
இப்போ நவனீதகிருஷ்ணன், டிஎன்பிஎஸ்சி தலைவரா இருக்கறாரு. இவரை முதல்வரோட பாதுகாப்பு அதிகாரிகள் அணுகியிருக்காங்க. உங்களுக்கு சீனியாரிட்டி உண்டுன்னு, டிஎன்பிஎஸ்சி சேர்மேன் என்கிற முறையில நான் ஒப்பினியன் தர்றேன். அதை வச்சு பதவி உயர்வு வாங்கிடுங்கன்னு சொல்லவும், டிஜிபி ஆபீஸ்ல இருந்து, இது சம்பந்தமா ஒரு கடிதம் போகுது.
இந்த விவகாரம் எதிர்த்தரப்பு ஆய்வாளர்களுக்கு தெரிஞ்சதும், உடனடியா நீதிமன்றத்துல வழக்கு போட்டாங்க. ஹரிபரந்தாமன்ற நீதிபதிக்கிட்ட இந்த வழக்கு விசாரணைக்கு வந்ததும், உடனடியா தடை உத்தரவு பிறப்பிச்சுட்டாரு. “
“நீதிமன்றத் தீர்ப்பை மீறி எப்படிப்பா பதவி உயர்வு குடுக்க முடியும்“ என்று வியந்தார் கணேசன்.
“அண்ணே….. இந்த வண்டு முருகன் இருக்காரே…. அவருக்கு எதைப்பத்தியும் பயம் இல்ல. சசிகலா நமக்கு துணையா இருக்கற வரைக்கும் யாரும் நம்மை எதுவுமே செய்ய முடியாதுன்னு நெனைக்கிறாரு… பதவி உயர்வு குடுத்தா, அதிக பட்சம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுப்பாங்க… அது பல வருஷத்துக்கு இழுத்துக்கிட்டு இருக்கும். அதுக்குள்ள எல்லாரும் ஓய்வு பெற்றுடுவாங்க.. நமக்கென்னன்ற திமிர்தான் இதுக்கு காரணம்.
இந்த மாதிரி அயோக்கியனையெல்லாம் பல பேரோட எதிர்காலத் தைதீர்மானிக்கிற டிஎன்பிஎஸ்சிக்கு தலைவரா போடறாங்களே ஜெயலலிதா…. அவங்களைச் சொல்லணும்.. “
“ஐபிஎல் விசாரணை எந்த அளவில இருக்கு மச்சான் ? “
”ஐபிஎல் சூதாட்ட விவகாரத்தில பிரசாந்த்னு ஒரு புக்கி கைது செய்யப்பட்டார். இந்த பிரசாந்துக்கு, மத்த புக்கிகள்லாம் சேந்து ஒரு வாரத்துக்கு 25 லட்ச ரூபாய் குடுத்தாங்க. இந்தப் பணம் ஐபிஎல் போட்டிகள் நடந்த சமயத்துல கொடுக்கப்பட்டது. இந்தப் பணம் சென்னை மாநகர காவல்துறை அதிகாரிகளுக்கு குடுக்கணும், எங்க மேல எந்தக் கேஸும் வரக்கூடாதுன்னு அக்ரிமென்ட். கேரள விளையாட்டு வீரர் ஸ்ரீசாந்த் மாட்டுனதும், எல்லாமே தலைகீழா மாறிடுச்சு. தமிழகத்தைப் பொறுத்தவரை, ஐபிஎல் விவகாரம் தொடர்பான விசாரணை சிபி.சிஐடிக்கு மாறிடுச்சு. அகில இந்திய அளவுல சூதாட்டப் புகார் சூடு பிடிச்சதும், வேற வழியே இல்லாம சிபி.சிஐடி போலீசாரும், சூதாட்ட புக்கிகள் பலரை கைது பண்ணாங்க. என்னய்யா எங்களை இப்படி மாட்டி விட்டுட்ட என்று பிரசாந்தைப் பார்த்துக் கேட்டதற்கு, நீங்கள் கொடுத்த தொகை சென்னை மாநகர காவல்துறைக்கே சரியாகப் போய் விட்டது… எப்படி சிபி.சிஐடிக்கு கொடுக்க முடியும்னு சொல்லிட்டாராம்…”
”சரி இப்போ சிபி.சிஐடி விசாரணை எப்படிப் போகுது… ? ”
”ஆரம்பத்துல இருந்த பரபரப்பு இப்போ இல்ல… மத்த எல்லா வழக்குகள் போலவும் இதுவும் ஆறப்போடப்பட்டது. ”
”சரி இது அட்மிஷன் டைம் ஆச்சே…. உயர் அதிகாரிகள் தங்கள் பிள்ளைகளுக்கு அட்மிஷனுக்காக அலையுவாங்களே… எதுவும் தகவல் இருக்கா ? ” என்று கேட்டான் பீமராஜன்.
”ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியில இந்த ஆண்டு காவல்துறை அதிகாரிகளின் பிள்ளைகள் ஆண்டுன்னே அறிவிக்கலாம். அந்த அளவுக்கு காவல்துறை அதிகாரிகளின் பிள்ளைகள் நெறய்ய பேர் அட்மிஷன் வாங்கியிருக்காங்க…”
”யாரு மச்சான்அது… ? ”
”இப்போதைக்கு தெரிஞ்ச தகவல் காவல்துறை அதிகாரிகள் வரதராஜு, ஸ்ரீதர், சந்திரசேகர் மற்றும் திரிபாதி ஆகியோர் பிள்ளைகளுக்கு இந்த ஆண்டு எம்பிபிஎஸ் சீட் கொடுக்கப்பட்டிருக்கு. இந்த அதிகாரிகள் தங்கள் பிள்ளைகளுக்கு வெங்கடாசலம் இலவசமா சீட் குடுத்ததா சொன்னாலும், அந்த மாதிரி யாருக்கும் இலவச சீட்டெல்லாம் குடுக்கல. இந்த ஆண்டு ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியில எம்பிபிஎஸ் சீட்டோட விலை 75 லட்சம். 75 லட்சத்தை இந்த அதிகாரிகளுக்காக இழக்க வெங்கடாச்சலம் லூசு இல்ல. பணம் கட்டித்தான் சீட் வாங்கியிருக்காங்க. ஆனா, எங்கேயிருந்து 50 லட்ச ரூபாய் பணம் வந்துச்சுன்னு கேப்பாங்களேன்னு இவங்களாவே வெங்கடாச்சலம் எங்களுக்கு இலவசமா சீட் குடுத்தார்னு தகவலை கசிய விடறாங்க. ”
”டிஐஜி ஸ்ரீதர் அவ்வளவு பணம் வச்சுருக்காரா என்ன ? ” என்று வாயைப்பிளந்தான் பீமராஜன்.
ஸ்ரீதர்
”என்ன மச்சான் இப்படிக் கேட்டுட்ட….. ஸ்ரீதர் இதுக்கு முன்னாடி சிபி சிஐடியில டிஐஜியா இருந்தாரு. அப்போ அங்க இருக்கற டிஜிபி நரேந்திர பால் சிங்குக்கும், ஸ்ரீதருக்கும் ரகசிய நிதியை பிரிக்கிறதுல பஞ்சாயத்தாயிடுச்சு. ”
”என்ன பஞ்சாயத்து ? ”
”என்ன பஞ்சாயத்து…. நான்தான் டிஜிபி. ரகசிய நிதி எல்லாமே எனக்குத்தான் குடுக்கணும் நான் யாருக்கும் தர மாட்டேன்னு அவர் நினைக்கிறார். ஸ்ரீதர் இதை எதிர்த்து பேசிட்டார் போலருக்கு. இப்போ நரேந்திர பால் சிங் ஸ்ரீதரைப் பத்தி விசாரிக்க ஆரம்பிச்சுட்டாரு. ஸ்ரீதருக்கு அடையாறில் இருக்கற 13 ஃப்ளாட்டுகள், பழைய மகாபலிபுரம் சாலையில வாங்கின பல கோடி மதிப்புள்ள நிலங்கள், இதைப் பத்தியெல்லாம் விசாரிக்கச் சொல்லியிருக்காரு சிங்.”
”இப்படியெல்லாமா நடக்கும் ? ” என்று வியந்தார் கணேசன்.
”இதெல்லாம் மாமூலா நடக்கிற பிரச்சினைன்ணே….”
”மத்திய மண்டல ஐஜி ராமசுப்ரமணியம் லெப்ட் ரைட்னு வசூலை அள்ளிக் குவிக்கிறார். தொழில் அதிபருங்க, பணக்காரங்க யாரு வேணாலும் அய்யாவை எப்போ வேணாலும் பாக்கலாம். பாக்கப் போறவங்க தொழில் அதிபருங்கன்னு தெரிஞ்சா, எழுந்து நின்று வணக்கம் வைக்கிறாரு. அவருக்குக் கீழே இருக்கற மாவட்டங்கள்ல ஸ்பெஷல் ப்ரான்ச் மூலமா வசூல் வேட்டை நடத்திக்கிட்டு இருக்காரு…”
”இதெல்லாம் ராமானுஜத்துக்குத் தெரியாதா ? ”
”தெரியும்.. எப்படித் தெரியாம இருக்கும் ? திமுக ஆட்சி நடந்த அஞ்சு வருஷமும், ராசாத்தி அம்மா கால்ல விழுந்தே எல்லாப் பதவியையும் வாங்கினாரு. இப்போவும் நல்ல பதவியில இருக்காரு.. இந்த மாதிரி ஆளை யாருதான் என்ன பண்ண முடியும் ?
”சரி… போலீஸ் வழக்கறிஞர்கள் பிரச்சினை முடிஞ்சுதா இல்லையா ?”
”அந்தப் பிரச்சினை முடியற மாதிரி தெரியலை. பிரபாகரன் தலைமையில டிஜிபி ராமானுஜத்தை சந்திக்க போனப்போ அவரு வழக்கறிஞர்களை அவமரியாதை பண்ணிட்டாரு, அவர் மேல நடவடிக்கை எடுக்கனும்னு போட்ட வழக்குல டிஜிபியை பதில் மனு தாக்கல் செய்யச் சொல்லியிருந்தாங்க. அந்த வழக்கு நடந்துக்கிட்டு இருக்கு.
வழக்கறிஞர்கள் தங்கள் பொசிஷனை இறுக்கமாக்கிட்டதால, காவல்துறையிலயும் கடுமையான நிலைபாடு எடுத்துட்டாங்க. இனி வழக்கறிஞர்கள் கட்டப்பஞ்சாயத்துக்காக காவல் நிலையம் வந்தா எந்த உதவியும் செய்யக் கூடாதுன்னு வாய்மொழி உத்தரவு போடப்பட்டிருக்கு.
வழக்கறிஞர்கள் மேல நிலுவையில இருக்கற வழக்குகளை தூசுதட்டி எடுத்து, எங்கெங்கே சந்தர்ப்பம் கிடைக்குதோ, அங்கே அவங்களை ரிமான்ட் பண்ணணும்னும் உத்தரவு போடப்பட்டிருக்கு. போன வாரம், அண்ணா சாலை காவல் நிலையத்துல போயி தகராறு பண்ணதா, சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் விஜய்ன்றவரை கைது பண்ணிட்டாங்க.
கைது ஒரு பெரிய பிரச்சினை இல்லன்னாலும், கட்டப்பஞ்சாயத்துக்கு காவல் துறை ஒத்துழைக்காததால பல பேரோட பொழப்புக்கு பாதிப்பு வந்துருக்கு. நீதிமன்றத்துக்கே வராம, வெறும் கட்டப்பஞ்சாயத்துலயே பொழப்பு ஓட்டிக்கிட்டு இருக்கற பலரோட தொழில் பாதிக்கப்படும். ”
”இப்படி எத்தனை நாளுக்குடா இருக்கும் ? ”
”கொஞ்ச நாளைக்கு அப்படித்தான்டா இருக்கும்… அப்புறம் எதுவுமே நடக்காதது மாதிரி வழக்கறிஞர்களும், காவல்துறையும் ஒண்ணா ஆயிடுவாங்க…”
”ஏன்… ? எப்படி சமாதானம் ஆவாங்க.. ? ”
”காசு.. பணம்… துட்டு… மணி மணி.
”காசு.. பணம்… துட்டு… மணி மணி.”
”அந்த மணி இருக்கட்டும். நமக்கும் மணியாயிடுச்சு… போலாமாப்பா..”
”போலாம்ணே…” என்று சொல்லி விட்டு எழுந்தான். அனைவரும் எழுந்து, கலைந்தனர்.