வழக்கமான உற்சாகம் இல்லாமல் அமைதியாக உள்ளே நுழைந்தான். யாரும் அவனிடம் ஏன் அமைதியாக இருக்கிறாய் என்றும் கேட்கவில்லை. அழுத்தமான மவுனம் நிலவியது.
பீமராஜன் மவுனத்தை உடைத்தான். “என்னடா எதுவும் பேசாம இருக்கற ? “
“என்னத்தடா பேசச் சொல்ற… ஒரு பையன், ஒரு பொண்ணை காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிறது சாதாரணமான ஒரு விஷயம். இரண்டு தனி நபர்கள் சம்பந்தப்பட்ட விஷயம். இந்த விஷயத்துல, எல்லோரும் உள்ள நுழைஞ்சு, ஒருத்தனை அநியாயமா சாகடிச்சிட்டாங்களேன்னு வருத்தமா இருக்கு.“
“இப்போ பேசி என்னப்பா பிரயோஜனம்… இருக்கும்போது ஏதாவது உதவி பண்ணியிருக்கனும்…“ என்றார் கணேசன்.
“எவ்வளவுதான் மறுத்தாலும், இந்த மரணத்துல பாட்டாளி மக்கள் கட்சியோட பொறுப்பை யாருமே மறுக்க முடியாதுன்ணே. இளவரசன் திவ்யா ஜோடியை பிரிக்கணும்கிறதுல, கங்கணம் கட்டிக்கிட்டு வேலை செஞ்சாங்க. பசுமைத்தாயகம் அருள், டாக்டர் செந்தில், வழக்கறிஞர் பாலு, அன்புமணி, இவங்கள்லாம் முன்னாடி நின்று, இந்த திருமணத்தை எப்படியாவது பிரிக்கணும்னு நெனைச்சு அதில வெற்றியடைஞ்சுட்டாங்க.
திவ்யாவுக்கு தேவையான வசதிகளை செஞ்சு குடுத்து, திவ்யா போறதுக்கு கார், தங்க வீடு, எல்லாம் செஞ்சு குடுத்துருக்காங்க. அம்மாதான் முக்கியம், அம்மாவைப் பாத்துக்க, நீ போனா அம்மாவுக்கு யாரு இருக்கான்னு தொடர்ந்து வற்புறுத்தியிருக்காங்க. சின்ன பொண்ணு.. அதுவும் எவ்வளவு நாள்தான் சமாளிக்கும். ஒரு கட்டத்துல, நான் எங்க அம்மாவோடவே இருக்கேன்னு சொல்லிடுச்சு. நீதிபதிகள் தங்கள் அறையில கூப்புட்டு பேசுனப்போ, அந்தப் பொண்ணு, எங்க அம்மா சம்மதிச்சா நான் இளவரசன் கூடவே போறேன்னு சொல்லிச்சு. வழக்கை ஒத்தி வைச்ச நீதிபதிகள், அடுத்த முறை நீதிமன்றத்துக்கு, சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்கள் மட்டும் வந்தாப் போதும். திவ்யாவோ, அவங்க தாயாரோ வர வேண்டாம்னு சொல்லிட்டாங்க. ஆனா, அம்மா சம்மதிச்சா இளவரசனோட சேந்து வாழறேன்னு திவ்யா சொன்னதா செய்தி வெளியானதை பாமக காரங்களால தாங்கிக்க முடியலை.
இதனால, நீதிபதிகள் வரவேண்டாம்னு சொன்னாக் கூட, திவ்யாவை நீதிமன்றத்துக்கு அழைச்சு வந்து, நான் இனிமே இளவரசனோட சேந்து வாழவே மாட்டேன். எனக்கு எங்க அப்பா நினைவாவே இருக்குன்னு சொல்ல வச்சாங்க. கல்யாணம் ஆகி, ஒன்பது மாசம், இளவரசனோடு சந்தோஷமா வாழறப்போ இல்லாத அப்பாவோட நினைவு, திடீர்னு வாழ முடியாத அளவுக்கு தடையாயிடுச்சுன்றதை யாரும் நம்பலை. காடுவெட்டி குரு மேல ரெண்டாவது முறை தேசியப் பாதுகாப்புச் சட்டம் போடப்பட்டதால கடுமையா ஆத்திரமடைஞ்சவங்க, தங்களோட ஈகோவுக்காகத்தான் அன்னைக்கு திவ்யாவை நீதிமன்றத்துல மீடியாகிட்ட பேச வச்சாங்க. அதை பாமககோட அருள் தன்னோட இணையதளத்துல பெருமையா போட்டுக்கிட்டு, தருமபுரி காதல் : வினவு முகத்தில் கரி பூசிய திவ்யா ! அம்பலமாகும் புரட்சி பித்தலாட்டம் னு கட்டுரை எழுதினாரு.. இப்படி கட்டுரை எழுதி பெருமை பேசிக்கிறாங்கன்னா, எந்த அளவுக்கு திவ்யா இளவரசன் காதலை பிரிக்கனும்னு தீவிரமா இருந்தாங்கன்னு தெரியும். எப்படியாவது இந்தக் காதலை பிரிச்சே தீரணும்னு ரொம்பத் தீவிரமா இருந்தாங்க.
அன்னைக்கு திவ்யா பேசுனது, இளவரசனோட மனசுல கடுமையா பாதிப்பை ஏற்படுத்தியிருக்கு.”
”சரி இளவரசன் மரணம் கொலையா தற்காலையா ? ” என்று கேட்டான் வடிவேல்.
”இப்போதைக்கு எந்த முடிவுக்கும் வர முடியாது மச்சான். விசாரணை முடிஞ்சாத்தான் தெரியும். இப்போதைக்கு வர்ற தகவல்கள் குழப்பத்தை அதிகப்படுத்துற மாதிரிதான் இருக்கு. காவல்துறை விசாரணையில விரைவில் விஷயங்கள் வெளி வரும். இப்போதைக்கு நாம அதைப் பத்திப் பேசி விஷயத்தை பெரிசு படுத்த வேண்டாம். ”
”தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தோட கோரிக்கைப் பேரணியை தடை பண்ணிட்டாங்களே.. ஏன் மச்சான் ? எவ்வளவு ஏற்பாடு பண்ணியிருந்தாங்க. தப்பு இல்லையா ? ” என்று வருத்தப்பட்டான் வடிவேலு.
”அதிமுகவோட வாக்குகளையும் வாங்கி 2 எம்.எல்ஏ சீட்டுல ஜெயிச்சு, கனிமொழிக்கு ஆதரவு குடுத்தாங்களே அது தப்பு இல்லையா” என்றான் தமிழ்.
”என்னதான் ஆச்சு… ? ஏன் அனுமதி குடுக்கலை ? ” என்று கேட்டான் ரத்னவேல்.
”அனுமதிக்காக வியாழக்கிழமை காலையிலேர்ந்து தமுமுக நிர்வாகிகள் கமிஷனர் அலுவலகத்துலயே காத்துக் கிடந்தாங்க. எப்படியாவது கமிஷனரை சந்திச்சுடனும்னு முயற்சி பண்ணாங்க. ஆனா, கமிஷனர் இருந்துக்கிட்டே இல்லன்னு சொல்லச் சொல்லிட்டாரு. அரசாங்கத்துலேர்ந்து, பேரணிக்கு அனுமதி குடுக்கக் கூடாதுன்னு உத்தரவு வந்துடுச்சு. ”
”இந்த அளவுக்கு ஏன் ஜெயலலிதா உறுதியான நிலைபாட்டை எடுத்தாங்க.. ? ”
”ஜெயலலிதா தமுமுக, தனக்கு துரோகம் இழைச்சுட்டதா நினைக்கிறாங்க. பெரும்பான்மை இந்துக்களோட விரோதத்தை சந்திச்சுக்கிட்டு, விஸ்வரூபம் படத்தை இஸ்லாமியர்களுக்காக தடை செஞ்சு கெட்ட பேர் வாங்கிக்கிட்டேன். ஆனா, கனிமொழிக்கு ஆதரவு குடுத்து, தனக்கு துரோகம் இழைச்சுட்டதா நெனைக்கிறாங்க”
”சரி.. அந்த ரெண்டு ஓட்டு ஜெயலலிதாவுக்கு அவசியம் இல்லையே.. ”
”அவசியம் இல்லதான்.. ஆனா அந்த ரெண்டு ஓட்டு இல்லாம கனிமொழியும் தோத்துருந்தா, ஜெயலலிதாவுக்கு இரட்டிப்பு சந்தோஷம் இல்லையா ? நான்தான் உன்னை ஜெயிக்க வச்சேன்… இப்போ எதிர் முகாமுக்கு போறியா… நான் ஏன் உன் பேரணிக்கு அனுமதி குடுக்கணும் அப்படின்னு ஜெயலலிதா நெனைக்கிறாங்க
அரசு விதிச்ச தடையை மீறி, தமுமுக பேரணிக்கு நீதிமன்றத்துலயும் அனுமதி கிடைக்காம போனதுக்கு முக்கிய காரணம், தமுமுக அமெரிக்க தூதரகத்துல நடத்துன தாக்குதல். இந்த தாக்குதல் தொடர்பான புகைப்படங்களை பார்த்த நீதிபதிகள்தான், பேரணிக்கு அரசு விதிச்ச தடை சரிதான்னு தீர்ப்பளிச்சாங்க”
”சரி தமுமுகவுல என்ன நினைக்கிறாங்க… ? ”
”பேரணிக்கு அனுமதி குடுக்காததுக்கும், தங்களை அலைக்கழிச்சதுக்கும் சேத்து, கமிஷனர் ஜார்ஜ் மேல கடுமையான கோவத்துல இருக்காங்க… ஜார்ஜுக்கு சரியான பாடம் கத்துக்குடுக்கனும்னு நினைக்கிறாங்க..
இது மட்டுமில்லாம காங்கிரஸையும் சிபிஐயையும் இஷ்ரத் ஜஹான் வழக்குல சிறப்பா செயல்பட்டதுக்காக பாராட்டி, முஸ்லீம் அமைப்புகள் விரைவில் போஸ்டர்கள் ஒட்ட இருக்காங்க. காங்கிரஸ் இஷ்ரத் ஜஹான் வழக்கை பயன்படுத்தி, பிஜேபியை ஓரங்கட்டணும்னு நினைக்குது.”
”சரி திமுக தரப்பு செய்திகளைச் சொல்லுப்பா” என்றார் கணேசன்.
”அண்ணே… இப்போதைக்கு நேரடியா காங்கிரஸை எதிர்க்க முடியாது காங்கிரஸை நேரடியா எதிர்க்காத மாதிரி ஒரு போராட்டம் பண்ணனும்னு முடிவு பண்ணி அறிவிச்ச போராட்டம்தான் சேது கால்வாய் திட்டத்துக்கான ஆர்ப்பாட்டம். இந்த போராட்டம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்னு கருணாநிதி நினைக்கிறாரு… ஆனா, இதை யாருமே பெரிய விஷயமா எடுத்துக்கலை. சேதுக் கால்வாய் திட்டத்தை இவ்வளவு தீவிரமா ஆதரிக்கிறதுக்குப் பின்னாடி, பெரிய பண பேரம் இருக்குன்னுதான் ஜனங்க நினைக்கிறாங்க.. ”
”சரி தயாளு அம்மாளுக்கு என்ன ஆகும் ? ” என்று ஆர்வமாகக் கேட்டான் பீமராஜன்.
”தயாளு அம்மாளுக்கு அல்ஸைமர்ஸ் வியாதி. அவங்க பக்கத்துல இருக்கவங்களை அடிக்கிறாங்க. எதுவுமே ஞாபகத்துல இல்லன்னு சொல்றாங்க. ஆனா, இந்த மனுவை தாக்கல் செய்யறதுக்கு ஒரு நாள் முன்னாடிதான் கும்மிடிபூண்டி வேணு வீட்டு கல்யாணத்துக்கு தயாளு அம்மாள் போயிட்டு வந்தாங்க. இந்த விபரங்களையெல்லாம் சிபிஐ எடுத்து, சம்மன் வந்ததும் திடீர்னு அல்ஸைமர்ஸ் வியாதி வந்துடுச்சுன்னு சொல்லப்போறாங்க. டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் இந்த வழக்கை விசாரிக்க மாட்டேன்னு சொல்லிட்டதால, வழக்கு திங்கட்கிழமை அன்னைக்கு உச்சநீதிமன்றத்துல விசாரிக்கப்படும். அதுக்குப் பிறகுதான், ஞாபகமறதி வியாதிக்கு ஒரு முடிவு தெரியும். ”
”அவங்களுக்கு மட்டுமில்லாம, திமுக தலைவருக்கே ஞாபகமறதி இருக்கேடா ? ”
”அவருக்கு எங்கடா ஞாபகமறதி ? ”
”தமிழினத்துக்காக குரல் கொடுப்பேன்னு சொல்லிட்டு, தமிழினத்தை அழிக்கும்போது வேடிக்கை பாத்தாரே.. அது ஞாபக மறதி இல்லையா என்ன ? ” என்றான் வடிவேலு.
”காங்கிரஸ் கட்சியில என்ன நடக்குது ? ” என்றான் ரத்னவேல்.
”மச்சான் ஜி.கே.வாசன், இன்னும் தனிக்கட்சியா வேணாமான்ற யோசனையிலதான் இருக்காரு. அவர் தனக்கு சிதம்பரத்துக்கு கிடைக்கிற மரியாதை இல்லைன்னு நினைக்கிறாரு. ஆனா, கட்சியில சில மூத்த தலைவர்கள் அவசரப்படாதீங்கன்னு சொல்லியிருக்காங்க.
சிதம்பரத்தை திடீர்னு சிக்கல்ல இழுத்து விட்டுட்டாங்க…” என்றான் தமிழ்.
”என்னடா சிக்கல் ? ”
”சனிக்கிழமை அன்னைக்கு, ஈவிகேஎஸ்.இளங்கோவன்கிட்ட நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தோட பங்கு விற்பனை பத்தி கேட்டுருக்காங்க. அவர், நிலக்கரி நிறுவனத்தின் பங்குகளை விற்பது குறித்து கவலைப்படும் ஜெயலலிதா, டிஎன்பிஎல் நிறுவனத்தின் பங்குகளை விற்றபோது ஏன் கவலைப்படவில்லை என்று பேட்டி குடுத்துருக்கார். இந்தப் பேட்டியை எடுத்த சன்டிவி செய்தியாளர் என்ன செய்தி குடுத்தாரோ தெரியலை.. சன் டிவியில ஜெயலலிதாவுக்கு சிதம்பரம் கண்டனம் னு செய்தி போட்டுட்டாங்க. இந்த செய்தி ஒளிபரப்பானப்போ, சிதம்பரம் சோனியாவோட இருந்தாரு.
உடனடியாக கலாநிதி மாறனை புடிச்சி, நான் எங்க இந்த மாதிரி பேட்டி குடுத்தேன்னு சொன்னதும், மாத்தியிருக்காங்க.”
”தமிழ்நாட்டுல பிஜேபி கேப்டன் கூட கூட்டணி வைக்கப் போறதா ஒரு பேச்சு இருக்கே… ? ”
”மொதல்ல அவங்க கட்சியை தமிழ்நாட்டுல ஒழுங்கா நடத்தச் சொல்லு. அப்புறம் மத்ததையெல்லாம் பாக்கலாம்.
பிஜேபிக்கு தமிழ்நாட்ல ஒரு எம்எல்ஏ கூட இல்லை. அடுத்து வர்ற தேர்தல்லயும் ஜெயிப்பாங்களா இல்லையான்னு தெரியாது. ஆனா, அதுக்குள்ள அந்தக் கட்சியில நடக்கிற அடிதடி இருக்கே… திராவிடக் கட்சிகளையே மிஞ்சுற அளவுக்கு இருக்கு.
தமிழக பிஜேபி தலைவர்களா இருந்த எச்.ராஜா, சி.பி.ராதாகிருஷ்ணன், பொன் ராதாகிருஷ்ணன் எல்லாரையும் ஓரங்கட்டிட்டாங்க. தமிழக பிஜேபியோட அமைப்புச் செயலாளரா இருக்கவரு மோகன் ராஜுலு. இவர்தான் கட்சியை குட்டிச் சுவரா ஆக்கிட்டு இருக்காருன்னு பேச்சு.
பிஜேபியில ஒய்.எஸ்.கண்ணன்னு ஒருத்தர் இருந்தாரு. அவர் ஆர்எஸ்எஸ் காரரு. கட்சியோட போக்கு சரியில்லைன்னு அவர் அடிப்படை பதவியிலேர்ந்து விலகிட்டாரு- அவரு தமிழக பிஜேபியில மோகன் ராஜுலு, மற்றும் தமிழக பிஜேபி செயலாளர் வானதி ஸ்ரீனிவாசன் இவங்களோட ஊழலைப் பத்தி எழுதிக்கிட்டு வர்றாரு. இவரை பத்து நாளைக்கு முன்னாடி யாரோ சில அடையாளம் தெரியாத நபர்கள் அடிச்சு, இவரோட லேப்டாப்பை தூக்கிட்டுப் போயிட்டாங்க.. ”
நடுவில் இருப்பவர் மோகன்ராஜுலு
”அவரு என்ன எழுதுனாரு அப்படி ? ”
”வானதி ஸ்ரீனிவாசன் சின்ன வயசுலேர்ந்தே பிஜேபியில இருக்கறவங்க. பிஜேபியில இருந்தாலும், அவங்க வழக்கறிஞரா சேர்ந்த சீனியர் ஞானதேசிகன் என்கிற காங்கிரஸ் வக்கீல் கிட்ட. பிஜேபி ஆட்சி வந்ததும், வானதியோட கணவர் ஸ்ரீனிவாசன் போதைப் பொருள் தடுப்புப் பிரிவோட வழக்கறிஞர் ஆயிட்றாரு. அப்போ இவருக்கு பந்தல் கோவிந்தன் என்கிற போதை மருந்து கடத்தல் காரரோட பழக்கம் ஏற்படுது. அவரை ஒரு பெரிய வழக்குலேர்ந்து காப்பாத்தறாங்க. அதுல கிடைச்ச பணத்துலதான், இப்போ இவங்க குடியிருக்கிற வீட்டையே கட்டுனதா சொல்றாங்க. வானதி பிஜேபியோட செயலாளரா இருக்கறாங்க. ஸ்ரீனிவாசன், விஸ்வ இந்து பரிஷத்தோட செயலாளரா இருககுறாரு.
இந்த ஒய்.எஸ்.கண்ணன் என்கிற நபர், வானதி ஸ்ரீனிவாசன், பிஜேபியோட இன்னொரு தலைவரான தமிழிசை சவுந்தரராஜனை, வானதி மதிக்காம அவமானப்படுத்திக்கிட்டு இருக்கறதைப் பத்தியும், எப்படியாவது தமிழக பிஜேபி தலைவரா ஆகணும்னு, அமைப்புச் செயலாளர் மோகன் ராஜை காக்கா பிடிக்கிறதைப் பத்தியும் தொடர்ந்து எழுதிக்கிட்டு இருக்காரு.
இதனால இவர் தாக்கப்பட்டது மட்டுமில்லாம, வானதி ஸ்ரீனிவாசன் ஒய்.எஸ்.கண்ணன் மேல வழக்கு பதிவு செஞ்சு கைது செய்யனும்னு சென்னை சைபர் க்ரைம்ல புகார் குடுத்துருக்காங்க.
புகார் குடுத்தது மட்டுமில்லாம, பிஜேபி தேசிய தலைவர்களையெல்லாம் கமிஷனர்கிட்ட பேச வைச்சு, எப்படியாவது கண்ணனை உள்ள தூக்கி வைக்கணும்னு தொடர்ந்து அழுத்தம் கொடுத்துட்டு வர்றாங்க.. ”
”சரி… இவங்க வழக்கறிஞராச்சே… புகார் மேல நடவடிக்கை எடுக்கணும்னு நீதிமன்றத்துல வழக்கு போடலாமே… ? ”
”அது அவங்களுக்குத் தெரியாதா ? வழக்கு போட்டா செய்தி வெளியில தெரியும். புதிய தலைமுறை உள்ளிட்ட தொலைக்காட்சிகள்ல கருத்து சுதந்திரம் பத்தி வாய் கிழிய பேசிட்டு, தன்னை விமர்சனம் பண்ண ஆளை கைது செய்யணும்னு புகார் கொடுத்தா, அவங்களுக்கு அவமானமில்லையா…. அதுக்காகத்தான் பின் வாசல் வழியா, இந்த வேலை. ”
”அரசியல் தலைவரா ஆகணும்னு நினைக்கிறவங்க இப்படி விமர்சனத்தை சகிச்சுக்காம இருந்தா எப்படி ? அப்படி என்னதான் எழுதினாரு கண்ணன் ?”
“ஒரே ஒரு உதாரணம் சொல்றேன் கேளு..
நோகாமல் நோன்பு கும்பிடறது !
நோகாமல் நோன்பு கும்பிடறது அப்படின்னா என்ன என்று ஒரு பாட்டியை கேட்டேன்.” அதுவாப்பா நோன்புக்கான ஏற்பாடுகள் நிறைய இருக்கும்.எல்லா ஏற்பாடுகளும் செஞ்சு முடிஞ்சி சாமி கும்பிடற நேரம் வரும்.அந்த நேரத்திலே ஒரு ஆள் வருவார்.ஏற்பாடுகளுக்காக அவர் ஒரு துரும்பக் கூட எடுத்து போட்டிருக்க மாட்டார்.ஆனால் கடைசியில் வரும் அவர் “ எல்லாரும் என்ன செஞ்சிக்கிட்டிருக்கீங்க வாங்க வாங்க சாமி கும்பிடலாம் “ என்று ஆரத்தி தட்டை பிடுங்கிக்கிட்டு சாமிக்கு தீபாராதனை காட்டி எல்லா பெயரையும் தான் தட்டிக்கிட்டு போயிட நினைப்பார்.அத மாதிரி சில பேர் எந்த வேலையும் செய்யாம பெயரை தட்டிக்கிட்டு போயிட நினைப்பாங்க.அவங்களத்தான் ‘ நோகாம நோன்பு கும்பிடறவங்க‘ என்னு சொல்லுவாங்க “ என்று முடித்தார் பாட்டி.
இப்போ விஷயத்திற்கு வருவோம்.அந்த தேசிய கட்சியின் மாநில பிரிவு ‘ வளர்ச்சி நிதி ‘ வசூலில் இறங்கி உள்ளது.ஒவ்வொரு மாநில நிர்வாகிக்கும் சொந்த முயற்சியில் இவ்வளவு வசூல் செய்ய வேண்டும் என்று இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.அந்த வகையில் நம்முடைய ‘ வசந்த சேனா ‘ அவர்கள் 10 லட்சம் ரூபாய் வசூல் செய்து தருவதாக ஒப்புக் கொண்டாராம்.மாவட்ட,மண்டல் பொறுப்பாளர்களும் இலக்கு நிர்ணயம் செய்துக் கொண்டு வசூல் பணியை துவங்கி விட்டனராம்.ஆனால் நம்முடைய ‘வசந்த சேனா‘ அவர்கள் கோட்டத்தில் உள்ள பல பொறுப்பாளர்களை அழைத்து ,அவர்கள் வசூலிப்பதை தவிர தனக்கு கொடுக்கப்பட்டுள்ள ரசீது புத்தகங்களிலும் வசூல் செய்து கொடுக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தி புத்தங்களை கொடுத்துள்ளாராம்.நொந்து போன சிலர் என்னிடம் பேசினார்கள்.நான் சொன்னேன், “ முடியாது என்று சொல்ல வேண்டியதுதானே,அதென்ன நீங்கள் வசூல் செய்வது பெயரை அவர் தட்டி செல்வது.அதற்கு பதில் நீங்கள் 10 ஆயிரம் ரூபாய் வசூல் செய்வதாக ஒப்புக் கொண்டு 15 ஆயிரம் ரூபாய் வசூல் செய்தால் அந்த பெயர் உங்களுக்கு கிடைக்கும் அல்லவா இப்படி வாயில்லா பூச்சியாக இருக்காதீர்கள் “ என்றேன். மாநிலத் தலைவரும், ‘ அமைப்பின் சிகரமும்’ இதை உடனடியாக கவனிக்க வேண்டும் என்பது தொண்டர்களின் கோரிக்கை.” வசந்த சேனா அவர்களே உங்கள் முழு ‘ திறமையையும் ‘ காட்டி நீங்களாக வசூல் செய்து காட்டுங்கள் இப்படி ‘ நோகாமல் நோன்பு கும்பிட நினைக்காதீர்கள்.
இந்த இடத்தில் ப்ளாஷ் பேக் சம்பவம்.அந்த கட்சியின் மாநில மாநாடு நேரத்தில்,மாநாட்டு எற்பாட்டு செலவுகளுக்காக கட்சி நிதி வசூலில் இறங்கியது.மயிலாப்பூர் தொகுதியைச் சேர்ந்த முன்னால் கவுன்சிலர் ஒருவரும், ஒரு மாவட்ட நிர்வாகியும் நிதிக்காக ஒரு ஒட்டல் அதிபரை அணுகினர்.அவரும் ஒரு கணிசமான தொகையை கொடுப்பதாக ஒப்புக் கொண்டு அடுத்த வாரத்தில் வந்து பார்க்கச் சொல்லியிருக்கிறார்.இவர்களும் சரியென்று சந்தோஷமாக வந்து விட்டனர். இதைப் பற்றி கேள்விப்பட்ட வசந்த சேனா இவர்களுக்கு தெரியாமல் ஓட்டல் அதிபரை தொடர்பு கொண்டு 60 ஆயிரம் ரூபாய் பெற்றுக் கொண்டு விட்டார்.இதற்கிடையே மாநாடு ஏற்பாடுகளுக்காக மாவட்டத்தில் உள்ள 5 மண்டல் நிர்வாகிகளையும் அழைத்த வசந்த சேனா ஒவ்வொரு மண்டலுக்கும் 5 ஆயிரம் கொடுத்து இது தன்னுடைய ‘ PERSONAL CONTRIBUTION ‘ என்று சொல்லி இருக்கிறார்.ஆஹா தன் கை பணத்தை அள்ளிக் கொடுத்து விட்டாரே இந்த வள்ளல் என்று வந்தவர்கள் வாழ்த்தி சென்றனர்.இது நிற்க அந்த முன்னால் கவுன்சிலரும் மாவட்ட நிர்வாகியும் ஓட்டல் அதிபரை நிதிக்காக அணுக, அவர் வசந்த சேனா பணத்தை பெற்றுக் கொண்டு விட்ட விஷயத்தை தெரிவித்திருக்கிறார்.கோபம் கொண்ட மாவட்ட நிர்வாகி அம்மணியிடம் இது பற்றி கேட்டு அந்த பணம் எங்கே என்று வினவியிருக்கிறார்.” அதுதான் அன்னிக்கு ஒவ்வொரு மண்டலுக்கும் 5 ஆயிரம் கொடுத்தேனே “ என்றாராம்.” அது உங்கள் சொந்த பணம் என்றல்லவா சொன்னீர்கள் என்று மாவ்ட்ட நிர்வாகி கேட்க, “ இல்லையில்லை அது இந்த பணம்தான் “ என்று நெளிந்தாராம் வசந்த சேனா.” சரி அது 5 மண்டல்களுக்காக சேர்த்து 25 ஆயிரம் ரூபாய் கணக்குச் சரியாகி விட்டது என்று வைத்துக் கொள்ளுவோம்,பாக்கி 35 ஆயிரம் எங்கே என்று கேட்டதற்கு அது செலவாகி விட்டது என்று கூறினாராம்.வசூல் செய்த பணத்தை தன்னிச்சையாக செலவு செய்திருக்கிறார்,அதற்கு முறையான கணக்கும் இல்லை.இது பற்றி மாநிலத் தலைமைக்கு தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.
இது பளிச்சென்று கையும் களவுமாக பிடிப்பட்ட சம்பவம்.இன்னும் தெரியாமல் எவ்வளவு இருக்கிறதோ ? ‘வசந்த சேனா‘ விஷயத்தில் மாநிலத் தலைமையின் கரிசனத்திற்கு என்ன காரணம் என்று புரியாமல் தலையை பிய்த்து கொள்கின்றனர் தொண்டர்கள்!
”இதுல வசந்த சேனா ன்னு கண்ணன் குறிப்பிடறது, வானதியைத்தான். இந்த மாதிரி கண்ணன் எழுதினா வானதியோட உண்மை முகம் வெளிப்பட்டுடாதா… இதுக்காகத்தான் பின்வாசல் வழியா காவல்துறைக்கு நெருக்கடி குடுத்து, கண்ணனைக் கைது பண்ணணும்னு தீவிரமா முயற்சி பண்ணிக்கிட்டு இருக்காங்க. ?
வானதி ஸ்ரீநிவாசன் பெண் வழக்கறிஞர்கள் சங்கத் தேர்தல் சமயத்துலயே, அவங்களுக்காக கள்ள ஓட்டு போட வச்சங்கன்னு இவங்க மேல புகார் இருக்கு. இப்படிப்பட்ட நபர்களெல்லாம் பிஜேபி தலைவரா வந்தா என்ன ஆகும்னு யோசிச்சுப்பாரு…”
”காவல்துறை செய்திகள் என்னப்பா இருக்கு ? ” என்றார் கணேசன்.
”அண்ணே… வீரப்பனை சுட்டுக் கொன்னதுக்காக பதவி உயர்வு பெற்றவங்களுக்கு சீனியாரிட்டி கிடையாதுன்னு நீதிபதி பானுமதி மற்றும் நீதிபதி ரவிச்சந்திர பாபு ஒரு தீர்ப்பு குடுத்தாங்க. அந்தத் தீர்ப்பு ரொம்ப விரிவா, தெளிவா எழுதப்பட்ட தீர்ப்பு. பதவி உயர்வு எப்படி சட்டவிரோதமா கொடுக்கப்பட்டிருக்கு. இப்படிக் கொடுத்த பதவி உயர்வுக்கு சீனியாரிட்டி கொடுக்க சட்டத்துல இடமே இல்லைன்னு சொன்னதோட அல்லாம, இந்தப் பதவி உயர்வை ரத்து செய்யணும்னு வழக்கு தொடுக்கப்பட்டிருந்தா ரத்து செஞ்சிருப்போம். ஆனா, அந்த மாதிரி வழக்கு தொடுக்காததால, சீனியாரிட்டி கொடுக்கணும்னு போட்ட அரசாணையை ரத்து செய்யறோம்னு தீர்ப்பு குடுத்தாங்க.
அந்தத் தீர்ப்பை பின்பற்றி பதவி உயர்வுகள் வழங்குவாங்கன்னு பாத்தா, வீரப்பன் அதிரடிப்படையில இருந்த ரெண்டு டிஎஸ்பிக்கள் இந்தப் பதவி உயர்வு வழங்காம, அவங்களுக்கே திரும்பி சீனியாரிட்டி குடுக்கணும்னு முயற்சி எடுத்துக்கிட்டு இருக்காங்க. ”
”ரெண்டு டிஎஸ்பி எப்படிப்பா இதைப் பண்ண முடியும் ? ”
”அந்த ரெண்டு பேரும் ஜெயலலிதாவோட பாதுகாப்பு அதிகாரிகளா இருக்கறதால, டிஜிபி, உள்துறைச் செயலாளர் கூட இவங்க பேச்சைக் கேட்டு ஆடறாங்க.. ”
”ரெண்டு பேருமே நேர்மையான அதிகாரிகளாச்சே…”
”ரெண்டு பேரும் நல்ல அதிகாரிகள்தான். யாரு இல்லன்னது ? நீதிபதி பானுமதி டிவிஷன் பென்ச் வழங்கிய தீர்ப்பு மிக மிக தெளிவா சீனியாரிட்டி வழங்கக் கூடாதுன்னு இருந்தும், அதை கவனத்தில் எடுத்துக் கொள்ளாமல் அதிரடிப்படையில இருந்தவங்களுக்கு முன் தேதியிட்டு சீனியாரிட்டி வழங்கனும்னு டிஎன்பிஎஸ்சிக்கு கடிதம் எழுதியிருக்காங்க. ”
”எப்படிப்பா இந்த மாதிரி பண்ண முடியும் ? இது நீதிமன்ற அவமதிப்பாச்சே…”
”நீதிமன்றம் என்ன கிழிச்சுடும்னு ஒரு தைரியம்தான்… அவங்க நினைக்கிற மாதிரி நீதிமன்றம் என்ன கிழிச்சிடப்போகுது… இப்போ, பாதிக்கப்பட்ட ஆய்வாளர்கள், இந்த மாதிரி சீனியாரிட்டி வழங்க எடுத்த முயற்சிக்காக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தனியாவும், அதிரடிப்படை வீரர்களுக்கு குடுத்த பதவி உயர்வை ரத்து செய்யணும்னு ஒரு வழக்கு தனியாவும் தாக்கல் பண்றதா இருக்காங்க. ”
”வேற காவல்துறை செய்திகள் இல்லையா… ? ”
”ஆறுமுகம்னு ஒரு ஐஜி சமீபத்துல பதவியிலேர்ந்து ஓய்வு பெற்றாரு. ஓய்வு பெற்ற நாள்லேர்ந்து அவருக்கு வேலையே, என்ஜினியரிங், மெடிக்கல் சீட் வாங்கித் தர்றேன்னு ஒவ்வொருத்தர் கிட்டயா பணம் வாங்கறதுதான். இப்படி பல பேர்கிட்ட வசூல் பண்றதுக்கு அடிப்படையா, ஜெயலலிதா கூட எடுத்த புகைப்படத்தை பயன்படுத்தறாரு. சிஎம்முக்கே இவர் இவ்வளவு க்ளோசான்னு இவரை பாக்க வர்றவங்க, நம்பி பணம் குடுக்கறாங்க. ”
”மச்சான் நீதிமன்ற செய்திகள் இல்லையா மச்சான் ? ” என்றான் பீமராஜன்.
”நீதிமன்ற செய்திகள் என்ன… ? ஏற்கனவே அனுப்பப்பட்ட நீதிபதிகளோட பட்டியல், உச்சநீதிமன்றத்துலேர்ந்து திரும்பி வந்துடும்னு சொல்றாங்க.
சென்னை உயர்நீதிமன்றத்துல பி.ராஜேந்திரன்னு ஒரு நீதிபதி இருக்கார். இப்போ அவர் ஜாமீன் வழங்கும் நீதிமன்றத்துக்கு நீதிபதியா இருக்கார். அவர் கிட்ட, முன்ஜாமீன் கேட்டு கோவையில இருக்கற ராமகிருஷ்ணா பல்மருத்துவக் கல்லூரியோட தலைமைச் செயல் அலுவலர் ராம்குமார் மற்றும் மேனேஜிங் ட்ரஸ்டி விஜயக்குமார் ஆகிய ரெண்டு பேரும் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செஞ்சாங்க.”
”என்ன வழக்கு அவங்க மேல ? ”
“பல் மருத்துவக் கவுன்சில் உறுப்பினர் முருகேசன் சிபிஐ பிடியில சிக்கினார். அவங்க ஒப்புதல் கொடுத்த கல்லூரிகளையெல்லாம் சிபிஐ தனியா சோதனை செஞ்சாங்க. எந்தக் கல்லூரியும் போதுமான உட்கட்டமைப்பு வசதிகள் இல்லாம இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ராமகிருஷ்ணா பல் மருத்துவல் கல்லூரியை 2011ல் ஆய்வு செஞ்ச பல் மருத்துவக் கவுன்சில் அதிகாரிகள், கல்லூரி சிறப்பா இருக்குன்னு சான்றிதழ் கொடுத்ததன் அடிப்படையில 100 மாணவர்களை சேத்துக்க அனுமதி கிடைச்சது.
முருகேசன் சிக்கின பிறகு, அந்தக் கல்லூரியில சிபிஐ அதிகாரிகள் உதவியோட சோதனை செஞ்சாங்க. அப்படி செஞ்சப்போ, பல உட்கட்டமைப்பு வசதிகள் இல்லாம இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுச்சு. ஒரு சில பிரிவுகளுக்கு பேராசிரியர்களே இல்லாம கல்லூரி நடந்துக்கிட்டு இருந்தது தெரிய வந்துச்சு.
சிபிஐ வழக்கு பதிவு பண்ணி விசாரணை பண்ணிக்கிட்டு இருக்காங்க. இந்த நிலையிலதான் ராமகிருஷ்ணா பல் மருத்துவக் கல்லூரி நிர்வாகிகள் முன் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செஞ்சாங்க.
இந்த மனுவை விசாரிச்ச நீதிபதி ராஜேந்திரன், முன் ஜாமீன் தர்றேன்னு சொல்லனும், இல்ல தர முடியாது, டிஸ்மிஸ் பண்றேன்னு சொல்லனும்.. ஆனா வித்தியாசமா ஒரு உத்தரவு போட்ருக்கார்”
”என்ன உத்தரவு போட்டாரு… ”
”சிபிஐ அதிகாரிகளும், மருத்துவர்களும், இந்தக் கல்லூரியை மறுபடி சோதனை பண்ணணும். சோதனையில் ஏற்கனவே இருந்த குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்பட்டதா இல்லையான்னு ஆராஞ்சு ஒரு அறிக்கை தாக்கல் செய்யணும். அந்த அறிக்கையின் அடிப்படையில் விசாரணை தொடர்ந்து தடை விதிக்கனுமா, வேணாமான்னு நீதிமன்றம் முடிவு செய்யும். அது வரை விசாரணைக்கு தடை விதிக்கிறேன்னு உத்தரவு போட்ருக்கார். ”
”இது அதிகப்பிரசிங்கித்தனமாச்சே….”
”அதிகப்பிரசங்கித்தனம் மட்டுமில்ல. சட்டவிரோதமும் கூட. லஞ்ச ஒழிப்புச் சட்டம் பிரிவு 19 (3) (b) என்ன சொல்லுது தெரியுமா ?
(b) no court shall stay the proceedings under this Act on the ground of any error, omission or irregularity in the sanction granted by the authority, unless it is satisfied that such error, omission or irregularity has resulted in a failure of justice;
இந்தச் சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட எந்த வழக்கிலும், பிழை, தவறு, விடுபட்டுப் போதல், அனுமதியில் பிழை போன்றவற்றால், நீதிப் பிறழ்வு ஏற்பட்டிருக்கிறது என்ற காரணத்தைத் தவிர்த்து, எந்தக் காரணத்தினாலும் எந்த நீதிமன்றமும் விசாரணைக்கு தடை விதிக்கக் கூடாதுன்னு தெளிவா சொல்லுது.
23.02.2013 அன்னைக்கு சென்னையில் ஊழல் வழக்குகள் தொடர்பா விரிவுரை ஆற்றிய தலைமை நீதிபதி ஆகப்போற சதாசிவம், ஊழல் வழக்குகளில், நீதிமன்றங்கள் தடை உத்தரவு பிறப்பிக்கக் கூடாதுன்னு தெளிவா சொன்னார். அந்த விரிவுரையை இந்த நீதிபதி ராஜேந்திரனும் கேட்டார். அதுக்குப் பிறகும் இப்படி ஒரு தடை உத்தரவை பிறப்பிச்சிருக்காரு.”
”எதுக்காக இப்படி ஒரு உத்தரவை போட்டாரு ? ”
”இந்த வழக்கில். கல்லூரி சார்பா ஆஜரான வழக்கறிஞர் லோகநாதன், நீதிபதி ராஜேந்திரனுக்கு தெரிஞ்சவருன்னு சொல்றாங்க. இதைத்தாண்டி பணம் வாங்கிட்டு ராஜேந்திரன் இப்படி ஒரு உத்தரவை போட்டாரான்னு சொல்றதுக்கு ஆதாரம் ஏதும் இல்லைன்னு இது பத்தி பேசிக்கிட்டிருந்த வக்கீல் சொன்னாரு. ”
”அந்த வக்கீல் கிட்டயே, அந்த நீதிபதி ராஜேந்திரன் எப்படிப்பட்டவர்னு கேக்க வேண்டியதுதானே ? ”
”கேட்டேன். புலம்பித் தள்ளிட்டாரு. நீதிமன்றத்துல நீதிபதி ராஜேந்திரன் பேச்சு தனக்குத் தெரியாத சட்டமே இல்லன்ற மாதிரி இருக்குமாம். இப்படியெல்லாம் பேசிட்டு, முன் ஜாமீன் கேட்ட வழக்குல எப்படி இப்படி ஒரு உத்தரவை பிறப்பிக்க முடியும்னு ஆச்சர்யப்பட்றாரு அந்த வக்கீல்.
ஒரு ஜாமீன் வழக்கில், ஜாமீன் தர்றேன், தர முடியாதுன்னு இரண்டு தீர்ப்புதான் குடுக்க முடியும். முறைகேடுகள் நடந்திருக்கா, நடக்கலையான்னு ஆராயறது, நீதிமன்றத்தோட வேலை இல்லை. அது காவல்துறையின் வேலை. புதுசா, ஆய்வு பண்ணுங்கன்னு உத்தரவு போடறதுக்கு எந்த நீதிமன்றத்துக்கும் அதிகாரம் கிடையாது. அப்படி இருக்கும்போது, எதுக்காக நீதிபதி இப்படி ஒரு கிறுக்குத்தனமான உத்தரவு போட்டாருன்னு புரியலைன்னு சொல்றாரு அந்த வக்கீல். ”
”இது கிறுக்குத்தனமான உத்தரவு இல்லை தமிழ். வெவரமான உத்தரவுதான். புதுசா ஒரு சோதனை நடத்த இன்னும் ரெண்டு மூணு நாள் ஆகும். அந்த ரெண்டு மூணு நாளைக்குள்ள, கல்லூரி நிர்வாகம் எல்லா குறைபாடுகளையும் சரி செஞ்சுடும். குறைபாடுகளே இல்லைன்னு நீதிமன்றத்துல அறிக்கை தாக்கல் செஞ்சதும், இந்த வழக்கு விசாரணை நீடிக்கத் தேவையில்லைன்னு உத்தரவு போடுவாரு. ஜாமீன் வேணும்னு கேட்டதுக்கு, வழக்கையே ஊத்தி மூடிட்டா கல்லூரி நிர்வாகம் கவலைப்பட வேண்டியதில்லைல… ? அந்த ஐடியாவுலதான் இப்படி ஒரு தீர்ப்பை குடுத்துருக்காரு ராஜேந்திரன்.
”நீங்க சொல்றதும் சரிதான்ணே.. இந்த மாதிரி காலேஜ்ல படிச்சுட்டு வர்ற பல் மருத்துவர்கிட்ட இந்த நீதிபதியை சிகிச்சை எடுக்கச் சொல்லணும். சிகிச்சை எடுக்கறேன்னு நல்லா இருக்கற பல்லையெல்லாம் புடுங்கிடுவாங்க. அப்பத்தான், இந்த நீதிபதிக்கு எவ்வளவு பெரிய தப்பு பண்ணியிருக்கோம்னு புரியும். ”
”இவங்கள்லாம் ஏன்பா சின்ன மருத்துவமனைக்கு போகப்போறாங்க. இவங்களுக்கெல்லாம் அப்போல்லோ, இல்லன்னா பெரிய மருத்துவமனையில ஓசியில சிகிச்சை அளிக்கப் போறாங்க… இந்தக் கல்லூரியில படிச்சிட்டு வர்ற பல் மருத்துவர்கள்கிட்ட, நம்பள மாதிரி ஆளுதான் சிக்குவோம்….” என்று அலுத்துக் கொண்டார் கணேசன்.
”கார் இறக்குமதி வழக்குல சிக்கியிருக்குற அலெக்ஸ் சி ஜோசப் முன் ஜாமீன் மனு தாக்கல் பண்ணியிருக்காரு. இவருக்கு இருக்கற வழக்கறிஞர் பி.குமார் ஆஜராகுராரு. இந்த வழக்கும் நீதிபதி ராஜேந்திரன் கிட்டதான் விசாரணைக்கு வரும்”
அலெக்ஸ் சி.ஜோசப்.
”பி.குமார் ஜெயலலிதாவோட வழக்கறிஞர் ஆச்சே…?”
”ஜெயலலிதாவோட வழக்கறிஞர்தான். நான் ஜெயலலிதாவுக்கு 2001லயே ஒரு ஹம்மர் காரை பரிசா கொடுத்தேன். அதான் அம்மாவே பி.குமாரை எனக்கு ஆஜராக சொல்லி உத்தரவு போட்ருக்காங்கன்னு அலெக்ஸ் சொல்லிக்கிட்டு இருக்காரு. ”
”சரி கல்லூரியில முறைகேடுகள்னா மீண்டும் ஒரு முறை சோதனை செய்யுங்கன்னு உத்தரவு போட்றாரு. சட்டவிரோத கார் இறக்குமதிக்கு நீதிபதி என்ன உத்தரவு போடுவாரு ? ” என்று சந்கேத்தோடு கேட்டான் ரத்னவேல்.
”அந்தக் காரையெல்லாம் சிபிஐ அதிகாரிகள் ஓட்டிப் பார்க்க வேண்டும். கார் நல்லா ஓடுச்சுன்னா விசாரணை தேவையில்லை. இப்படி சிறப்பாக ஓடும் கார்களை இந்தியாவுக்கு கொண்டு வந்ததுக்காக அவரை பாராட்ட வேண்டும். அதை சரிபார்க்கும் வரை விசாரணைக்கு தடை விதிக்கிறேன்னு சொல்லுவாரு.. ” என்று சொல்லி விட்டு சிரித்தான் தமிழ்.
”சரி பத்திரிக்கை உலக செய்திகள் உண்டா ” என்றார் கணேசன்.
”இந்து தமிழ்ப் பத்திரிக்கையாள காமதேனுவுக்கு ஆள் சேர்க்கும் பணி தீவிரமா நடைபெற்று வருது. தினமணியிலேர்ந்து பல பேர் இங்க வந்துக்கிட்டு இருக்காங்க. தினமணியிலயும் பல மாதமா இன்சென்டீவ் போடாம தாமதிச்சிக்கிட்டு இருக்காங்க. போற போக்கைப் பாத்தா தினமணி கடையே காலியாயிடும் போலருக்கு.
இப்போ காமதேனுவுக்கு எடுக்கற ஆட்கள்ல வலதுசாரி சிந்தனை உள்ளவர்களையும் எடுக்கறாங்க. அவங்களுக்கும் அங்க ஸ்பேஸ் இருக்கணும்னு நெனைக்கிறாங்க.”
”இந்து பொதுவா இடது சாரி சிந்தனை உள்ளது இல்லையா ? ”
”வெறும் இடது சாரி சிந்தனை இருந்தா, கம்யூனிஸ்ட் காரன்தான் வாங்கிப் படிப்பான். மோடி ஆதரவாளர்கள் இன்னைக்கு வளந்துக்கிட்டே இருக்காங்களே.. அவங்களையும் படிக்க வைக்க வேண்டாமா ? முதலாளிக்கு வேண்டியது லாபம். லாபம். லாபம். அந்த லாபத்துக்காக அவன் யாரை வேணாலும் எடுப்பான். பேப்பர் வர்றதுக்கு இன்னும் ஆறு மாசம் ஆகும். அதுக்குள்ல யாரெல்லாம் சேர்றாங்கன்னு விபரம் சொல்றேன். ”
”போலாம்பா” என்று கணேசன் எழுந்ததும் அனைவரும் எழுந்தனர்.