தமிழ் மொட்டை மாடியில் நுழைவதைப் பார்த்ததும் வரவேற்றார் கணேசன். “வாப்பா தமிழ்“
“என்னண்ணே.. எல்லோரும் சீக்கிரம் வந்துட்டீங்க போல.. “ என்றபடியே உள்ளே நுழைந்தான் தமிழ்.
“ஆமாம் மச்சான், இன்னைக்கு எல்லோரும் கொஞ்சம் சீக்கிரமே வந்துட்டோம்.“ என்றான் பீமராஜன்.
“சொல்லுடா… பார்ல என்னென்ன சுவராஸ்யமான விஷயங்களைக் கேட்ட…. மொதல்ல, இளவரசன் மரண விவகாரத்துல என்ன நடக்குதுன்னு சொல்ல“
“அந்த விஷயத்துல என்னத்தடா சொல்ல… ? ஒரு வழியா ஞாயித்துக்கிழமை அன்னைக்கு, இளவரசனோட இறுதிச்சடங்கு நடக்கும்னு எதிர்ப்பாக்கறாங்க. இந்த விஷயத்துல நீதிமன்றமும், அரசியல் பண்ற மாதிரி வழக்கை இழுத்தடிச்சது பல தரப்புலயும் விமர்சனத்தை எழுப்பியிருக்கு. “
“நீதிமன்றம் என்ன பண்ணுச்சு ? “ என்றான் வடிவேலு.
“இளவரசனோடு உடலை போஸ்ட்மார்டம் பண்ற அன்னையிலேர்ந்தே தகராறுதான். போஸ்ட்மார்டம் நடக்க ஆரம்பிச்சதும், உயர்நீதிமன்றத்துல ஒரு வழக்கு தாக்கல் பண்ணியிருக்கு, அதனால போஸ்ட்மார்டத்தை நிறுத்தனும்னு ஒரு தரப்பு சொல்லி வழக்கு போட்டாங்க. இந்த வழக்கு ஹேபியஸ் கார்ப்பஸ் வழக்கு. இளவரசனோட நண்பர் தாக்கல செஞ்ச வழக்கு இது. ஹேபியஸ் கார்ப்பஸ் வழக்கு என்பதே உயிரோட இருக்கும் ஒருவரின் உயிருக்கு ஆபத்து என்றால் விசாரிப்பதற்காக உருவாக்கப்பட்டது. இந்தப் பிரிவுல, இறந்து போனவரோட உடலை போஸ்ட் மார்ட்டம் பண்றதுக்காக, ஹேபியஸ் கார்ப்பஸ் வழக்கு தாக்கல் செய்ததே தவறு. ஆனா, நீதிமன்றம் இதையும் விசாரணைக்கு ஏத்துக்கிச்சு.
தருமபுரி மருத்துவமனையில நடுவுல நிறுத்தப்பட்ட போஸ்ட்மார்டட்ம் காவல்துறை உத்தரவால தொடர்ந்து நடந்துச்சு. நடந்து முடிஞ்சதும் மதியம் நீதிமன்றத்துல வழக்கு விசாரணைக்கு வந்துச்சு.
விசாரணைக்கு வந்தப்போ, இளவரசனோட உடலை அப்படியே வச்சுருக்கணும். நீதிமன்றம் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை, எதுவும் செய்யக் கூடாதுன்னு உத்தரவு போட்டாங்க. அதன் பின்னர், நீதிபதிகளும், மற்ற தடயவியில் அறிஞர்களும், இதை பார்வையிடணும்னு நீதிமன்றம் உத்தரவு போட்டுச்சு. அதன்படி மருத்துவ வல்லுனர்கள் குழு பார்வையிட்டாங்க. அப்படி பார்வையிட்டதுல பெரும்பாலான வல்லுனர்கள், போஸ்ட் மார்ட்டம் சரியா நடந்துருக்கு, மறு போஸ்ட்மார்ட்டம் தேவையில்லன்னு சொல்லிட்டாங்க. ஆனா, ஒன்றிரண்டு மருத்துவர்கள், மறு போஸ்ட் மார்ட்டம் தேவையில்லன்னு சொன்னதுனால, மீண்டும் ஒரு வல்லுனர் குழு, பார்வையிடனும்னு சொன்னாங்க. மீண்டும் ஒரு வல்லுனர் குழு பார்வையிட்டது. அந்த வல்லுனர் குழுவில, ஒருத்தர் சரியாயிருக்குன்னாரு, இன்னொருத்தர் சரியா இல்லைன்னாரு. உடனே நீதிபதிகள், அகில இந்திய மருத்துவ நிறுவன மருத்துவர்கள் மறு போஸ்ட் மார்ட்டம் பண்ணும்னு உத்தரவு போட்டாங்க. இப்படிப் போட்டது கூட தப்பு இல்ல. ஆனா, அதற்கான உத்தரவுல நீதிபதிகள் சொன்னதுதான் கிறுக்குத்தனமா இருக்கு.
In the circumstances, though we have no reason to suspect any wrongdoing in the conduct of the post-mortem, we are conscious that it is not the intention of the petitioner to pursue before us an unjust cause. It is a cry for justice by the downtrodden and the oppressed. Such cry should not go unheard and this court has to respond appropriately.”
இருக்கும் சூழலை வைத்துப் பார்க்கையில், போஸ்ட் மார்ட்டத்தில் எந்த தவறும் இருப்பதாக நாங்கள் சந்தேகிக்கவில்லை. மனுதாரரின் நோக்கம், நியாயமற்ற நோக்கம் என்று நாங்கள் கருதவில்லை. ஏழை விளிம்பு நிலை மக்களின் நீதிக்கான கோரிக்கை இது. இப்படிப்பட்ட நீதிக்கான அழுகுரல் வீணாகாமல் நிவாரணம் வழங்க வேண்டியது நீதிமன்றத்தின் கடமை” அப்படின்னு தீர்ப்புல நீதிபதி தனபாலனும், நீதிபதி சி.டி.செல்வமும் சொல்லிட்டு, எய்ம்ஸ் மருத்துவர்கள் பரிசோதிக்கணும்னு உத்தரவு போட்டாங்க.
ஒரு சந்தேக மரணத்திற்கு மறு பிரேதப் பரிசோதனை கேட்பதில், ஏழை விளிம்புநிலை மக்களின் நீதிக்கான அழுகுரல் கேட்கிறதுன்னு தீர்ப்பு எழுதற நீதிபதிகளில் ஒருவர் திமுகவோடு தீவிர அனுதாபி. அழகிரியோடு அயோக்கியத்தனமான மகனுக்கு முன்ஜாமீன் கொடுத்தவரு. மற்றொரு ஏழை விளிம்புநிலை நீதிபதி, தன் ஏழை விளிம்புநிலை மகளுக்கு பல கோடி ரூபாய் செலவுல, எம்ஆர்சி கல்யாண மண்டபத்துலயும், ஹோட்டல் லீலாபேலஸ்லயும் திருமணமும் வரவேற்பும் நடத்துனவரு.
இதுல வேடிக்கை என்னன்னா, இதே நீதிமன்றம்தான் எய்ம்ஸ் மருத்துவர்கள், வழக்கறிஞர் சங்கரசுப்பு மகன் மரணம் தொடர்பாக கொடுத்த அறிக்கையை ஏத்துக்க மறுத்துச்சு.
தலித் அரசியல்வாதிகள்தான் இந்த விஷயத்தில் அரசியல் நடத்துறாங்கன்னா, நீதிபதிகளும், தங்கள் மேலும் புகழின் வெளிச்சம் படணும்னு கூத்தடிச்சிக்கிட்டு இருக்காங்க”
”தலித் அரசியல்வாதிகள் என்ன கூத்து பண்றாங்கன்ற… ? ” என்று வினவினான் ரத்னவேல்.
”இளவரன் இறந்ததும்…. “இளவரசா… இறந்து விட்டாயே…. உன்னை பறிகொடுத்து விட்டோமேன்னு கண்ணீர் வடிக்கிறாங்க… ஒவ்வொரு நாளும், இது தற்கொலை அல்ல… கொலைதான்னு புதுசு புதுசா தியரி கண்டுபிடிக்கிறாங்க. இளவரசன் படத்தை ஃபேஸ்புக்ல போட்டுக்கறாங்க. இது கொலை, கொன்னது பாமக தான்னு வீராவேசமா பேசறாங்க, எழுதறாங்க.
ஆனா, இளவரசன் சென்னையில் ரெசிடென்சி ஹோட்டல்ல தங்கியிருந்தப்போவே தன் கையை கத்தியால கிழிச்சிக்கிட்டானாம். அப்போ ஹோட்டல்ல இருந்த ரூம் பாயை சனிக்கிழமை இரவு சாட்சி சொல்றதுக்காக காவல்துறையினர் கூட்டிட்டுப் போயிருக்காங்க.
கையை கிழிச்சிக்கிற மனநிலையில இருக்கற ஒரு பையனை தனியா விடலாமா ? அவனுக்கு மனவியல் மருத்துவர்களின் ஆலோசனை வேண்டாமா… குறைந்தபட்சம் அவனை பாதுகாப்பா சென்னையில தங்க வச்சுருக்க வேணாமா… இதுக்கெல்லாம் எந்த உதவியும் செய்யாதவங்கதான் இன்னைக்கு, இளவரசனோட மரணத்தை வச்சு அரசியல் பண்றாங்க… தங்களை போராளிகளா காமிச்சுக்கணும்னு நினைக்கிறாங்க..
இளவரசனோட மரணத்துக்குப் பிறகும், யார் அரசியல் ஆதாயம் தேட்றதுன்னு, பிஎஸ்பியோட வழக்கறிஞர் ரஜினிகாந்துக்கும், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் போட்டி. இந்தப் போட்டியில, இளவரசனாட குடும்பத்தையும் இழுத்து அலைக்கழிச்சு, சட்டம் ஒழுங்கு பிரச்சினையை உண்டி பண்ணிட்டாங்க. காவல்துறை வேறு வழியே இல்லாமத்தான், இளவரசனையும், அவர் உறவினர்களையும் 144 தடை உத்தரவை மீறியதா கைது பண்ணிட்டாங்க. நீதிமன்றம் ஜாமீன் குடுத்தாலும், ஞாயித்துக்கிழமை இறுதிச்சடங்கு நடந்தா, வழக்கறிஞர் ரஜினிகாந்தாலா கலந்துக்க முடியாது. திருமாவளவனாலும் கலந்துக்க முடியாது. திருமாவளவனுக்கு கலெக்டர் அனுமதி மறுத்துட்டார். ரஜினிகாந்தோட ஜாமீன் உத்தரவுல எழுத்துப் பிழை காரணமா, புதிய உத்தரவு வேணும்னு சிறையில சொல்லிட்டாங்க. ”
”வேற விஷயத்துக்கு வாப்பா… தலை சுத்துது…”
தமிழ் சிரித்துக் கொண்டே, ”என்னண்ணே… இப்படி சொல்லிட்டிங்க… இப்படி நீங்க பேசுனீங்கன்னு தெரிஞ்சா, உங்களை தலித் விரோதின்னு சொல்லிடுவாங்க.. ” என்ற தமிழ் அடுத்த சப்ஜெக்டுக்கு தாவினான்.
”ஜெயலலிதா, நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தோட பங்குகளை வாங்கிக்கறதா சொன்ன ஆலோசனைப்படி, பங்குகள் வாங்க அனுமதி தரணும்னு கருணாநிதி சொல்லியிருக்காரே கவனிச்சீங்களா ? ”
”ஆமாம்பா… ஜெயலலிதா எதை செஞ்சாலும் தப்பு கண்டுபிடிக்கிறவரு, திடீர்னு ஏன் அவரு இந்த மாதிரி கடிதம் எழுதுனாரு, அதை பத்திரிக்கைக்கும் சொன்னாரு… ?”
”டி.ஆர்.பாலுவை மன்மோகன் சிங்கைப் பாக்க அனுப்புனதே, தயாளு அம்மாள் விஷயமா பேசத்தான். ஜெயலலிதா, நான் பங்குகளை வாங்கிக்கறேன்னு சொன்னது 25 ஜுன். கருணாநிதி கடிதம் போனது 12 ஜுலை. 17 கழிச்சு திடீர்னு என்ன இவருக்கு ஞானோதயம் ? நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தை மொத்தமா வித்தாக் கூட, அதுல எனக்கும் என் குடும்பத்துக்கும் பங்கு ஒதுக்குங்கன்னு கேட்பாரே ஒழிய, இவருக்கு என்ன அக்கறை ?
பாலு பிரதமர்கிட்ட பேசுனது, தயாளு அம்மாளை ஆய்வு செய்ய வரும் மருத்துவர்கள், அவருக்கு சாட்சி சொல்லும் அளவுக்கு உடல் நிலை சரியில்லைன்னு குடுக்கும்படி செய்யுங்கன்னு கேக்கத்தான். தலைவரோட ஒரே மனைவி… இல்லை, முக்கிய மனைவி. அவரை எப்படியாவது காப்பாத்துங்க. தலைவர் ரொம்ப கேட்டுக்கிட்டார்னு பேசியிருக்கார். இதுக்காகத்தான் நெய்வேலி, நோய்க்கோழின்னு கதையெல்லாம். ”
”சரி பிரதமர் என்ன சொன்னார்…”
”அவரு என்ன சொல்லுவார்… இதெல்லாம் நீதிமன்றம் சம்பந்தப்பட்ட விவகாரம். நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு விவகாரத்துல ஏற்கனவே பிரதமர் அலுவலகம் சிக்கியிருக்கு. நான் எப்படி இந்த விவகாரத்துல உதவ முடியும். இருந்தாலும் முயற்சி செய்யறேன்னு சொல்லி அனுப்பியிருக்காரு.”
”எய்ம்ஸ் மருத்துவர்கள் எப்படியாவது தயாளுவால சாட்சி சொல்ல முடியாதுன்னு சொல்ல வைக்கணும்ன்ற பொறுப்பு டி.ஆர்.பாலுகிட்ட கொடுக்கப்பட்டிருக்கு.
தயாளு அம்மாளுக்கு கொடுக்கப்பட்டிருக்க சம்மனால, அழகிரியும், கலைஞரோட மகள் செல்வியும் கடுமையான மன வருத்தத்துலயும், கோவத்துலயும் இருக்காங்க. ஸ்டாலின் அணியில சேர்ந்துட்டாருன்னு ஏற்கனவே ராசா மேல கடுப்புல இருக்கற அழகிரி, சம்மன் ரத்தாகலன்னா, ராசாவையும், கனிமொழியையும் விடவே மாட்டோம். என்ன பண்ணுவியோ தெரியாது… எப்படியாவது சம்மனை ரத்து பண்ணணும்னு பாலுகிட்ட சொல்லியிருக்காங்க.
இந்த விவகாரத்தை வச்சு, ராசாகிட்ட பணம் பண்ணலாம்னு பாலு ப்ளான் போட்டிருக்கார்“
”சரி மருத்துவர் அய்யா உடல்நிலை எப்படி இருக்கு ? “
“மருத்துவர் அய்யாவுக்கு உடல்நிலை முழுமையா குணமடைஞ்சாலும், கொஞ்ச நாளைக்கு வெளியில தலை காட்ட வேணாம்னு நினைக்கிறார். திருப்பி வெளிப்படையாக செயல்படத் தொடங்கினால், திருப்பி வழக்கு போட்டுடப் போறாங்கன்னு தலையை வெளியில காட்டாம இருக்கலாம்னு நினைக்கிறார்.
இப்போ திடீர் தலைமைப் பொறுப்புக்கு வந்துருக்கிற அன்புமணியை தொண்டர்கள் யாரும் சந்திக்கவே முடியலன்னு குற்றச்சாட்டு இருக்கு.
“சரி.. நீதித்துறை செய்திகள் என்னப்பா இருக்கு… ?“ என்றார் கணேசன்.
“நீதிபதி எலிப்பி தர்மாராவ் ஓய்வு பெற்றுட்டாரு. கடைசி நாள் வரைக்கும், அவருக்கு ஏதாவது ஒரு மாநில உயர்நீதிமன்றத்துல தலைமை நீதிபதி பொறுப்பு கிடைக்கும்னு பாத்தாங்க. ஆனா எங்கயுமே கிடைக்கலை.
அவரும், கடைசி காலத்துல எவ்வளவு வசூல் பண்ண முடியுமோ வசூல் பண்ணிட்டு போயிட்டார். ஏறக்குறைய 60 வழக்குகளுக்கு மேல, தீர்ப்பை ஆறு மாசத்துக்கு மேல ஒத்தி வச்சுருந்தார். ஓய்வு பெறுவதற்கு 20 நாளைக்கு முன்னால, ஒவ்வொரு வழக்கா தீர்ப்பு சொன்னார். எந்தெந்த வழக்குலயெல்லாம் டீல் செட் ஆகலயோ, அந்த வழக்கையெல்லாம் வேறு நீதிபதி விசாரிப்பார்னு போட்டுட்டார்.
இவர் ஓய்வு பெற்றதுல, சில வழக்கறிஞர்கள் சந்தோஷமா இருக்காங்க… பல வழக்கறிஞர்கள் வருத்தத்துல இருக்காங்க“
“யாரு வருத்தத்துல இருக்காங்க, யாரு சந்தோஷமா இருக்காங்க“
“நேர்மையா வாதாடி வழக்குல வெற்றி பெறணும்னு நினைக்கிற வக்கீல்கள், மகிழ்ச்சியா இருக்காங்க. செட்டிங் பண்ணியே வழக்கில் ஜெயிக்கணும்னு நெனைக்கிற வழக்கறிஞர்களுக்கு எலிப்பி தர்மாராவோடு ஓய்வு ஈடு செய்ய முடியாத இழப்பு. “
“சரி.. கார் கடத்தல்ல ஈடுபட்ட அலெக்ஸ் சி ஜோசப்போடு முன் ஜாமீன் விசாரணைக்கு வரும்னு சொன்னியே என்ன ஆச்சு ? “ என்றான் ரத்னவேல்.
“போன வாரம் முன்ஜாமீன் மனு விசாரணைக்கு வந்த போது, அலெக்ஸோட வழக்கறிஞர்களே இரண்டு வாரம் தள்ளி வைங்கன்னு தேதி வாங்கிட்டுப் போயிட்டாங்க. இந்த வழக்குல, ராமச்சந்திரா மருத்துவப் பல்கலைக்கழகத்தோட வேந்தர் வெங்கடாச்சலம், எப்படியாவது அலெக்ஸுக்கு ஜாமீன் வாங்கிக் குடுத்துடணும்னு தீவரமா இருக்காரு.“
“அவரு எதுக்குப்பா தீவிரமா இருக்காரு… அவரு என்ன வக்கீலா ?“
“அவரு வக்கீல் இல்லப்பா….. ஆனா சட்டவிரோதமா அலெக்ஸ்கிட்டேர்ந்து அரை டஜன்கார் வாங்கியிருக்காரே.. சட்ட விரோதமா சம்பாதிச்ச பல கோடி ரூபா பணம் இருக்கும்போது முயற்சி பண்ண மாட்டாரா ? அலெக்ஸை காப்பாத்தறது அவர் கடமை இல்லையா… ? இந்த வழக்குல நீதிபதி பி.ராஜேந்திரன், கோவை ராமகிருஷ்ணா பல்கலைக்கழகத்துல வழங்கிய தீர்ப்பு மாதிரி வித்தியாசமா அலெக்ஸுக்கு முன்ஜாமீன் குடுக்கப்போறாரா இல்லையான்னு தெரியாது… ஆனா, ஜெயலலிதா, இந்த முன் ஜாமீன் வழக்கை உன்னிப்பா பாத்துக்கிட்டு இருக்காங்க. “
“அவங்களுக்கு இதுல என்ன இன்ட்ரெஸ்ட்… ?“
“உதயநிதி ஸ்டாலின் வாங்கியிருக்கிற ஹம்மர் காரும், அலெக்ஸ் வாங்கிக் குடுத்ததுதான். இந்த வழக்குல அலெக்ஸ் மேல என்ன நடவடிக்கை வருதுன்றதை ஜெயலலிதா கவனிக்கிறதோட நோக்கம் இதுதான். நூத்துக்கணக்கான வெளிநாட்டுக் கார்களை சட்டவிரோதமா இறக்குமதி செஞ்சு, இந்தியாவுக்கு கோடிக்கணக்கான வருவாய் இழப்பை ஏற்படுத்துன அலெக்ஸ் ஜோசப்புக்கு உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்குமா, வழங்காதான்றதை வழக்கறிஞர்களும் தீவிரமா கவனிச்சிக்கிட்டு இருக்காங்க.. “
“வழக்கறிஞர்கள் ஏன் கவனிக்கிறாங்க ? “
“இப்போ ஜாமீன் வழங்குற நீதிபதி பி.ராஜேந்திரன், நீதிமன்றத்துல பேசற பேச்சு அந்த மாதிரி. என்ன வழக்குன்னு கேப்பாரு….. வழக்கறிஞர்கள் சொன்னதும்…. இப்படிப்பட்ட குற்றச்சாட்டை வைத்துக் கொண்டு, இந்த நபருக்கு என்ன தைரியத்தில் ஜாமீன் கேட்கிறீர்கள்… நான் இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறேன்… இப்படிப்பட்ட நபருக்கு ஜாமீன் கொடுத்தால், அது சமுதாயத்தையே பாதிக்கும்னு மொக்கை கேசுக்கெல்லாம் பெரிய பில்டப் கொடுப்பாரு… ஆனா ராமகிருஷ்ணா பல் மருத்துவக் கல்லூரி போல பெரிய வழக்குல, அந்தர் பல்டி அடிக்கிறாரு… அலெக்ஸ் கேஸ்ல என்ன டெவலப்மென்ட்னு பாப்போம்னு காத்திருக்காங்க. “
“பத்திரிக்கை உலக செய்திகள் என்ன மச்சான்“ என்றான் வடிவேல்.
“ஜெயா டிவியில எப்பவும் போல பெரிய குழப்பம் நீடிக்குது. ஜெயலலிதாவுக்கு எல்லாத்தையும் கவனிக்க நேரம் இருக்காதுன்னு, நிர்வாகத்தை சசிகலா கையில கொடுத்துட்டதா சொல்றாங்க. ஜெயா டிவியில சிசிடிவி கேமராக்கள் நிறுவற வேலை செய்யறதுக்காக சங்கர்னு ஒரு ஆடிட்டர் வந்தாரு. அவர் தொடர்ந்து ஆடிட் செஞ்சுக்கிட்டு இருந்தாரு. ஒரு கட்டத்துல, ஜெயா டிவியில ஆல் இன் ஆல் அவர்தான்னு ஆயிப்போச்சு.
எப்போப் பாத்தாலும் கார்டன்லேர்ந்து போன்… “எஸ் மேடம்.. பண்ணிட்றேன் மேடம்… உடனே முடிச்சுட்றேன் மேடம்னு யார்கிட்டயோ பேசிக்கிட்டே இருக்காரு. கார்டன்லேர்ந்து ஜெயலலிதா பேசறாங்களா, இல்ல அங்க சமையல் வேலை பொண்ணு பேசுதான்னு யாருக்குமே தெரியலை.
சன் டிவி, புதிய தலைமுறை, தந்தி டிவின்னு பல டிவிக்களில் பெரிய சம்பளத்தில் வேலைக்கு சேந்த மதிவாணன் இப்போ ஜெயா டிவியில தஞ்சமடைஞ்சுருக்கார். இவருக்கு 1.5 லட்சம் சம்பளம்னு சொல்றாங்க. நியூஸ் எடிட்டரா தில்லைன்னு ஒருத்தர் இருக்காரு. ஆனா, சேந்த முதல் நாளே தில்லையை ஓரங்கட்டிட்டு, இவரும் ஆடிட்டர் சங்கரும்தான் செய்திகளை முடிவு செய்யறாங்க.”
“தில்லை என்ன சொல்றாரு… ? அம்பாள் என்றைக்கடா பேசினாள் அறிவுகெட்டவனே.. ன்ற கலைஞர் வசனம் மாதிரி, அவரு என்னைக்கு பேசியிருக்காரு. என்னவாச்சும் பண்ணுங்கடா… எனக்கும் ஸ்கார்ப்பியோ காரை வர வச்சுடாதீங்கன்னு சொல்றார். “
“அது என்னடா ஸ்கார்ப்பியோ… ? “
“சமீபத்துல ஜெயா டிவியில 30 பேரை வேலையை விட்டு நீக்கினாங்க இல்லையா ? அந்த 30 பேரையும் வேலை நீக்கம் செஞ்சது 7576ன்ற எண் கொண்ட கருப்பு கலர் ஸ்கார்ப்பியோ கார்ல வந்தவங்கதான். அந்த ஸ்கார்ப்பியோ கார் வந்து நிக்கும். அதுலேர்ந்து 2 வக்கீல்களும், இன்னொருத்தரும் இறங்குவாங்க. சம்பந்தப்பட்டவங்க பேரை கூப்பிடுவாங்க. இதுல கையெழுத்து போடுங்கன்னு சொல்வாங்க. அந்த கடிதத்தில் சொந்தக் காரணங்களால் நான் என் வேலையை ராஜினாமா செய்கிறேன்னு இருக்கும். ஒரு மாசத்து சம்பள செக்கை குடுத்துட்டு, சிம் கார்டை குடுங்க, ஐடென்டி கார்டை குடுங்க, நீங்க போலாம்னு சொல்லுவாங்க.
எங்கே யாரை வேலையை விட்டு நீக்கினாலும், அவங்களுக்கு மூணு மாசம் சம்பளம் குடுத்து அனுப்பறதுதான் சட்டம். சின்ன நிறுவனங்கள் கூட மூணு மாசம் சம்பளம் குடுக்கும்போது, ஜெயா டிவியில வேலையை விட்டு அனுப்புனா ஒரு மாச சம்பளம்தான் தர்றாங்க. ஜெயலலிதா இப்படியெல்லாம் யாரையும் விதியை மீறி ஒரு மாச சம்பளம் குடுத்து அனுப்புங்கன்னு சொல்லியிருக்க மாட்டாங்க. ஆனா, நடுவுல இருக்கற பிச்சைக்காரனுங்க, ஏதோ தங்கள் பாக்கெட்லேர்ந்து பணம் குடுக்கறத மாதிரி தொழிலாளிகள் வயத்துல அடிக்கிறாங்க… எந்தத் தப்பு பண்ணியிருந்தாலும் மூணு மாசம் சம்பளத்தை குடுத்து அனுப்பக் கூட துப்பு இல்லை… ஆனா ஆளுங்கட்சி டிவின்னு இவங்களுக்கு பெருமை வேற…“
“சரி சரி… டென்ஷனாகாத… தண்ணி குடிடா“ என்று தண்ணீர் குடுத்த பீமராஜன், தமிழை மீண்டும் டென்ஷனாக்கும் அடுத்த டாப்பிக்கை எடுத்தான்.
“டேய் தமிழ். என்னமோ எங்க பத்திரிக்கையில மாறன்கள் பத்தி செய்தியே போட மாட்டாங்கன்னு சொன்ன. இந்த வாரம் மாறன்தான் கவர் ஸ்டோரி தெரியுமா ? “ என்று பெருமையாக கேட்டான்.
“மாறன் பத்தி அந்த செய்தியில என்ன இருந்துச்சுன்னு படிச்சியா ? “
“இல்ல மச்சான். இதோ இருக்கு புக். நீயே படி. எல்லாரும் கேக்கட்டும்“
“’சி.பி.ஐ. ஜவ்வாக இழுத்துக்கொண்டு இருக்கும் வழக்குகளுள் ஒன்று ஏர்செல் பங்குகளை மேக்சிஸ் நிறுவனத்துக்கு கட்டாயப்படுத்தி விற்க வைத்ததாகச் சொல்லப்படும் விவகாரம். ஏர்செல் சிவசங்கரனும் மேக்சிஸ் அனந்தகிருஷ்ணனும் சம்பந்தப்பட்ட விவகாரத்தில் தயாநிதி மாறன் பெயரும் சேர்ந்து அவரது பதவியையே காவு வாங்கியது. ஆனால், வழக்கின் விசாரணை அடுத்த கட்டத்துக்கு நகரவே இல்லை. இந்த வழக்கும் 9-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் உருண்டது. ‘இந்தியாவில் எங்கள் விசாரணை முடிந்துவிட்டது. ஆனால், மலேசிய அரசு இதற்கு ஒத்துழைக்கவில்லை’ என்று சி.பி.ஐ. சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் சொன்னார். ‘இதையே எத்தனை தடவை சொல்வீர்கள்? கடந்த ஏப்ரல் மாதமும் இதைத்தானே சொன்னீர்கள். மலேசிய அரசு ஒத்துழைக்கவில்லை என்றால் இந்தியத் தூதரகம் மூலமாக என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? இதுவரை கிடைத்த ஆதாரங்களைவைத்து குற்றப்பத்திரிகை தாக்கல்செய்ய முடியாதா?’ என்று கேள்வி மேல் கேட்டுவிட்டு ஆகஸ்ட் 1-ம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தனர். இதன்படி பார்த்தால் ஆகஸ்ட் 1-ம் தேதி இந்த வழக்கின் அடுத்த கட்டத்தை சி.பி.ஐ. தரப்பு சொல்லியாக வேண்டும். இப்படி தயாளு, கனிமொழி, தயாநிதி ஆகிய மூவரும் கிடுக்கிப்பிடிக்குள் சிக்கிவிட்டனர். இதிலிருந்து விடுபடுவதற்குள் போதும்போதும் என்றாகிவிடும்” என்ற கழுகார் அடுத்த மேட்டர்களுக்குத் தாவினார்.”
இதுல கழுகார் பகுதியில வர்ற மாதிரி என்னடா செய்தி இருக்கு ? ”
”அதான் கோர்ட்ல நடந்ததை போட்ருக்காங்களே… ? ”
”கோர்ட்ல நடந்ததை போட்றதுக்கு டெய்லி பேப்பர் இருக்கு. ஜுனியர் விகடன் எதுக்கு ? நீதிமன்றத்துல என்ன நடந்ததோ அது தேசிய நாளிதழ்கள், தமிழ் நாளிதழ்கள் எல்லாத்துலயும் விரிவா வந்துடுச்சே. இது எப்படிப்பட்ட மோசடின்னா, அட்டையில மாறன் படத்தை போட்டுட்டு, பெரிய செய்தி இருக்கற மாதிரி பாவ்லா காமிச்சுட்டு, உள்ள இந்த மாதிரி பழைய செய்தியை போட்றது. மாறனைப் பத்தி செய்தி போட்ட மாதிரியும் ஆச்சு, மாறனைப் பத்தி மொக்கை செய்தி போட்ட மாதிரியும் ஆச்சு.
அது மட்டும் இல்ல… இன்னொரு செய்தியும் அதே கழுகார்ல வந்திருக்கு.
“ஏற்கெனவே கனிமொழி மீது 2ஜி ஸ்பெக்டரம் வழக்கு டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. அதில் தினமும் ஆஜராகி வருகிறார். ‘கலைஞர் டி.வி-க்கு 200 கோடி ரூபாய் வந்தது கனிமொழிக்கு தெரியுமா? தெரியாதா?’ என்ற ஒரே ஒரு கேள்வியில்தான் கனிமொழியின் வழக்கு இருக்கிறது. கலைஞர் டி.வி-யின் நிதிஅதிகாரி அளித்த வாக்குமூலத்தில், ‘அவர் டே டு டே விவகாரங்களில் கலந்துகொள்ளவில்லை. எம்.பி. ஆனதும் போர்டு மீட்டிங்குகளில் கலந்து கொள்ளவில்லை. இயக்குநர் பதவியில் இருந்தும் விலகிவிட்டார்’ என்று சொன்னார். இது கனிமொழிக்கு ஆறுதல் அளிக்கும் விஷயமாக இருந்தது. ஆனால், இரண்டு நாட்களாக டெல்லியில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சுறுசுறுப்பாகி இருக்கிறார்கள். சி.பி.ஐ. தாக்கல்செய்த வழக்கைப் போலவே அமலாக்கத் துறை புதிய வழக்கு ஒன்றை தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகள் முடிவடையும் கட்டத்தை எட்டி உள்ளதாம்!”
இந்த செய்தியும் முழுக்க முழுக்க பொய். மாறன்கள் கொடுத்த நெருக்கடியில இப்படி ஒரு செய்தியைப் போட்டுட்டு, கூடவே மாறன் பத்தியும் ஒரு செய்தியைப் போட்டா யாருக்கும் தெரியாதுன்ற நெனப்புல பண்ண அயோக்கியத்தனம் இது.
2ஜி வழக்குல சிக்கிய தொலைத் தொடர்பு நிறுவனங்கள் மேல 3805.95 கோடி ரூபாய் அந்நியச் செலாவனி மோசடி செஞ்சதா அமலாக்கப் பிரிவு நோட்டீஸ் அனுப்பியிருக்கு.
இதுல லூப் டெலிகாம் நிறுவனத்துக்கு 549.45 கோடி, லூப் மொபைல் நிறுவனம் 26 கோடி, டிபி ரியாலிட்டி நிறுவனம் 2831 கோடி, ஈடிஏ ஸ்டார் ப்ராப்பர்டி டெவலப்பர்ஸ் நிறுவனம் 399.50 கோடி. இந்த நாலு நிறுவனங்களுக்குத்தான் அமலாக்கப்பிரிவு நோட்டீஸ் அனுப்பியிருக்கு. கனிமொழிக்கு நோட்டீஸ்னு செய்தி போட வச்சது, தயாநிதி மாறன்தான். எப்படிப்பட்ட ஆளு பாத்திய சீனிவாசன் ?
விகடன் சீனிவாசன் ஒரு கடைஞ்செடுத்த வியாபாரி. பத்திரிக்கையை தன்னோட லாபத்துக்காக மட்டுமே பயன்படுத்தற வியாபாரி. அந்த ஆளு தொழில் பங்குதாரர் மாறனைப் பத்தி செய்தி போடுவாரா ? மாறனைப் பத்தி என்ன செய்தி போடணும் ? 340 தொலைபேசி லைன்களை சட்டவிரோதமா பயன்படுத்துன வழக்குல ஏன் இன்னும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யலன்னு, ஜுனியர் விகடன்ல இருக்கற புலனாய்வுப் புலிகளை வச்சு விசாரிக்கணும்… அதை செஞ்சாரா ?
மீண்டும் மத்திய சென்னை தொகுதியை எப்படியாவது பெறணும்னு தயாநிதி மாறன், ஏகப்பட்ட வேலைகளை செஞ்சுக்கிட்டு இருக்காரு அதை செஞ்சாரா ?
சன் டிவியில ராஜான்னு ஒரு காமாந்தகன் பல பெண்களை சீரழிச்சதுக்காக கைது செய்யப்பட்டான். அதுக்காக அவனை காவல்துறை கைது செஞ்சாங்க, அதை செஞ்சாரா ?
இன்னும் கூட ராஜா மேட்டர்ல புதுப் புது டெவலப்மென்ட் இருக்கு. அதை செஞ்சாரா…. ? அதையெல்லாம் செய்யாம மொக்கை செய்தியை கவர் ஸ்டோரியா வச்சு ஏமாத்தறதுதான் சீனிவாசனோட வேலை.
”ஒரு பத்திரிக்கை எல்லாத்தையும் பத்தி செய்தி போட முடியுமா ? ” என்று சப்பைக் கட்டு கட்டினான் பீமராஜன்.
”எல்லாத்தையும் பத்தி செய்தி போட முடியலன்னா, “தமிழ் மக்களின் நாடித்துடிப்பு ன்றத மாத்திட்டு, கேடி சகோதரர்களின் பாடித்துடிப்பு ன்னு வச்சுக்கங்க… எதுக்காக மக்களை இப்படி ஏமாத்தணும் ?”
”சீனிவாசனோட வேலையே இப்படி ஃப்ராடு பண்றதுதான் மச்சான்….. ஒரு பக்கம், திராவிட அரசியலை விமர்சனம் பண்றது. இன்னொரு பக்கம், இளவரசன் திவ்யா காதலைக் கொன்ற சாதி அரசியல் னு சமூக அக்கறையோட இருக்கற மாதிரி செய்தி வெளியிட்றது.
இன்னொரு பக்கம் “டைம் பாஸ்”ன்ற பெயர்ல ஜட்டி படம் போட்டு விக்கிறது.
8 ஜுன் 2013 டைம் பாஸ் இதழ்ல வந்த செய்தியைப் பாரு.
சிகப்பு கலர் டாப்ஸும் டெனிம் டிரவுசரும் அணிந்து காற்றோட்டமாய் காமத்திபுரா பூராவும் வலம் வந்த வீணா மாலிக்கைப் பார்த்த அதிர்ச்சியில் உறைந்துபோனார்கள் அங்கு எதார்த்தமாய் வந்திருந்த கஸ்டமர்கள். (எதார்த்தமா வந்தவங்களுக்குப் பதார்த்தம்னு சொல்லலாமா பாஸ்?) இருக் காதா பின்னே… திண்ணை யில கெடந்தவனுக்கு திடுக்குனு கெடச்சுதாம் தீனிங்கிற மாதிரி… காற்று வாங்கப் போய் கவிதை வாங்கி வந்தால் சொல்லவா வேண்டும்? அப்புறமென்ன எல்லோரின் கைகளிலும் இருந்த மொபைல் போன்களில் வீணா மாலிக்கை 360 டிகிரி ஆங்கிள்களிலும் வளைத்து வளைத்துப் படம் எடுத்து மகிழ்ந்தனர். வீணாவும் எக்குத்தப்பாய் நெளிந்து போஸ் கொடுத்துக் கூட்டத்தை ஜிலீரிட வைத்தார். ராம் கோபால்வர்மா தயாரிப்பில் ராஜீவ் ரூயா இயக்கத்தில் 24-ம் தேதி ரிலீஸாகும் அவரது புதுப்படம் ‘ஸிந்தகி 50-50’ படத்தின் வினோத புரொமோஷன் ஐடியாதான் இது. காண்டம் ஐடியா வீணாவுடையதுதானாம். காரணம், படத்தில் பாலியல் தொழிலாளி கேரக்டரில் நடித்திருக்கிறார் வீணா.
இப்படி செய்தியைப் போட்டுட்டு, கீழே இந்த மாதிரி ஒரு படம். இதுதான் விகடன் நிறுவனத்தை நடத்தற சீனிவாசனோட லாப வெறியோட உண்மை முகம்.
ஆனா பேசற பேச்செல்லாம் பாரு….. விகடனுக்குன்னு ஒரு சமுதாய பொறுப்புணர்வு இருக்கு. சோசியல் ரெஸ்பான்சிபிளிட்டின்னு ஏகப்பட்ட பில்டப் குடுப்பாங்க… உங்க பத்திரிக்கையைப் பத்தி என்கிட்ட பேசாதடா…. இந்த மாதிரி ரெஸ்பான்சிபிளிட்டியைத்தான் வேணும்னு சொன்னாரா இவங்க அப்பா பாலசுப்ரமணியம் ?” என்று பொறிந்து தள்ளினான் தமிழ்.
”சரி விடு மச்சான் டென்ஷனாகாத.. காவல்துறை செய்திகள் என்னன்னு சொல்லு.” என்று டாபிக்கை மாற்றினான்
”வழக்கமா வர்ற உளவுத்துறை அதிகாரி இந்த வாரம் பாருக்கு வர்ல மச்சான்…” என்று அமைதியாக இருந்தான் தமிழ்.
”சரி போலாம்பா” என்று கணேசன் சொல்லவும் அனைவரும் கலைந்தனர்.