தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை, லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்களை கையும் களவுமாக பிடித்தது குறித்த பல்வேறு செய்திகளைப் பார்த்திருப்பீர்கள்.
சமீபத்திய செய்தித்தாள்களில் வந்த சில செய்திகள்.
ஜாதிச் சான்றிதழ் வழங்க ரூ.1500 லஞ்சம் வாங்கிய வேலூர் பெண் விஏஓ சங்கீதா, வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள புளியம்பாடியைச் சேர்ந்த முத்துவேல் புகார் மீது நடவடிக்கை எடுக்க 2000 லஞ்சம் வாங்கிய கபிஸ்தலம் காவல் ஆய்வாளர் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
பட்டா மாற்று சான்றிதழ் வழங்க, 5,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய பெண் வி.ஏ.ஓ.,வை, லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கைது செய்தனர்.
சேலம் கிச்சிப்பாளையம் போலீஸ் நிலையத்தில் சப்–இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் ராஜேந்திரன் (வயது 48). இவர் சேலம் புதிய பஸ்நிலையம் அருகில் உள்ள பகுதியில் வசித்து வருகிறார். இந்த நிலையில் சன்னியாசி குண்டு கடம்பூர் முனியப்பன் கோவில் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் கிண்டல்– கேலி செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த ராஜேந்திரன், இரண்டு தரப்பினரையும் அழைத்து கடந்த ஒருவாரத்திற்கும் மேலாக விசாரித்து வந்தார். பின்னர் ராஜேந்திரன் இந்த வழக்கு தொடர்பாக பிரகாஷ்,. உசேன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தார். இதனால் இவர்கள் தங்களை சொந்த ஜாமீனில் விட வேண்டும் என வலியுறுத்தி வந்தனர். அப்போது ராஜேந்திரன் அவர்களிடம் இருவரும் தலா ரூ.2ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என்று கேட்டு வாங்கும்போது லஞ்ச ஒழிப்புப் போலீசார் மறைந்திருந்து கைது செய்தனர்.
தேக்கு மரங்களை வெட்ட 5000 லஞ்சம் பெற்ற வனச்சரகர் பாலமுருகன் மற்றும் வனவர் வேலுச்சாமியை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்தச் செய்திகளெல்லாம் சமீபத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையால் கைது செய்யப்பட்ட அரசு ஊழியர்களைப் பற்றி ஊடகங்களில் வந்த செய்திகள். இதில் சம்பந்தப்பட்ட தொகைகள் ஒன்றும் பெரிய தொகைகள் அல்ல. 500 முதல் 5000 வரை. இப்படி லஞ்சம் வாங்கிய அனைத்து அதிகாரிகளும் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்று, பணி இடைநீக்கம் செய்யப்பட்டு வழக்கை எதிர்நோக்கயுள்ளனர். மகிழ்ச்சிதான்.
60 லட்ச ரூபாய் லஞ்சம் வாங்கிய ஒரு உயர் உயர் அதிகாரியை, கைது செய்யாமல், வெறும் இடமாற்றம் மட்டும் செய்து, அவர் மீதான விசாரணையையும் இழுத்து மூடுவதற்கு ஏற்பாடு செய்கிறார்கள் என்பதை அறிந்தால் என்ன சொல்வீர்கள்…. ? அதுதான் நடந்து கொண்டிருக்கிறது.
சம்பத்குமார். தொண்ணூறுகளின் தொடக்கத்தில் க்ரூப் 1 மூலமாக டிஎஸ்பியாக பணியில் சேர்ந்தவர் சம்பத் குமார். இவரோடு பணியில் சேர்ந்தவர்கள் ஐபிஎஸ் அந்தஸ்து பெற்று டிஐஜியாக பதவி உயர்வு பெற்ற நிலையில் சம்பத்குமாருக்கு ஐபிஎஸ் ஒரு சில வருடங்களுக்கு முன்புதான் கிடைத்தது. ஆனால் இன்னும் டிஐஜி பதவி உயர்வு கிடைக்காமல் எஸ்.பியாகவே உள்ளார். ஏற்கனவே திருமணமான சம்பத் குமார், பணியில் சேர்ந்ததும், மற்றொரு காவல்துறை அதிகாரியான வனிதா என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்த காரணத்தால், இவருக்கு பதவி உயர்வு வழங்கப்படாமல் இருந்து வந்தது. தற்போது இவர் மீதான குற்றச்சாட்டுகளை முடித்து, உரிய பதவி உயர்வுகளை பெறுவதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்.
சம்பத்குமார் ஏறக்குறைய மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக க்யூ பரிவு எஸ்.பியாக பணியாற்றி வருகிறார். தமிழக காவல்துறையின் க்யூ பிரிவு என்பது, நக்சலைட்டுகள், விடுதலைப்புலிகள் போன்றவர்களை கண்காணித்து அவர்கள் மீது வழக்கு போடுவதற்காக உருவாக்கப்பட்ட பிரிவு. இந்தப் பிரிவில் பணியாற்றி வந்த சம்பத்குமார் மீது, இலங்கைத் தமிழர்களை மிரட்டிப் பணம் பறிக்கிறார் என்ற குற்றச்சாட்டு நெடுநாட்களாகவே உண்டு. ஆனால், க்யூ பிரிவைப் பார்த்து அஞ்சும் இலங்கைத் தமிழர்கள், தங்களிடம் பணம் பறித்த விவகாரத்தை வெளியில் சொல்லக் கூட அஞ்சிய காரணத்தால், சம்பத் குமார் எந்த சிக்கலிலும் மாட்டாமல் இருந்தார்.
வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்புவது தொடர்பாக ஒரு ரகசிய விசாரணையை சம்பத்குமார் நடத்தி வந்தபோதுதான் ஒரு நபரிடமிருந்து பல லட்ச ரூபாயை பறிமுதல் செய்கிறார். அந்த நபரை விசாரித்தபோது, அந்தப் பணம் மொத்தமும் ஐபிஎல் சூதாட்டம் தொடர்பான பணம் என்பது தெரிய வருகிறது. இது தொடர்பான விசாரணையை சம்பத் குமார் நடத்தி வந்தபோதுதான், வழக்கு விசாரணை சிபி.சிஐடிக்கு மாற்றப்படுகிறது. விசாரணை சிபி.சிஐடிக்கு போன பிறகும் சம்பத்குமார் தொடர்ந்து இந்த வழக்கை கண்காணித்து வருகிறார். ஐபிஎல் பெட்டிங்கில் சம்பந்தப்பட்ட முக்கியமான தரகர்கள் விசாரணை வளையத்துக்குள் வருகின்றனர். இந்த நிலையில், காவல்துறை அதிகாரிகள் பலரை எனக்குத் தெரியும் என்று கூறிக்கொள்ளும், மஹேந்திர சிங் ரங்கா என்ற நபர் களமிறங்குகிறார்.
என்னிடம் பணம் கொடுத்தால் நான் அனைவரையும் காப்பாற்றுகிறேன் என்று ரங்கா கொடுத்த வாக்குறுதியை நம்பி, பிரபல சூதாட்ட தரகர் கிட்டி, உள்ளிட்ட பலர் ரங்காவிடம் பணத்தை கொடுக்கின்றனர். மஹேந்திர சிங் ரங்காவிடம், நான் உன்னையும் மற்ற தரகர்களையும் காப்பாற்றுகிறேன் என்று வாக்குமூலம் அளிக்கிறார் க்யு பிரிவு எஸ்.பி சம்பத்குமார். அந்த வாக்குறுதியின்படி, சம்பத்குமாரிடம் 60 லட்ச ரூபாய் பணத்தைக் கொடுக்கிறார் ரங்கா.
விசாரணை சிபி.சிஐடி பிரிவிடம் சென்று விட்டதால் யாரையும் காப்பாற்றும் நிலையில் தான் இல்லை என்பதை உணர்ந்தும், பணத்தை வாங்கிக் கொள்கிறார் சம்பத் குமார். இந்தச் சூழலில்தான் பல்வேறு சூதாட்ட புக்கிகள் சிபி.சிஐடியால் கைது செய்யப்படுகிறார்கள். கைது செய்யப்பட்டு சிறை சென்று வெளியே வந்த புக்கிகள், கொடுத்த பணத்தை திருப்பித் தருமாறு, ரங்காவை நெருக்குகிறார்கள். நான் எல்லா பணத்தையும் சம்பத்குமாரிடம் கொடுத்து விட்டேன், என்னிடம் பணம் இல்லை என்று சொன்னதும், பணம் கொடுத்தவர்களில் ஒருவர், சிபி.சிஐடியிடம் புகார் அளிக்கிறார். அந்தப் புகாரின் அடிப்படையில் மஹேந்திர சிங் ரங்காவை கைது செய்து விசாரித்ததில், பல உண்மைகளை சொல்லுகிறார்.
ரங்கா 26.06.2013 அன்று கைது செய்யப்படுகிறார். அவரிடமிருந்து 2.42 லட்சம் ரொக்கம், ஒரு கம்ப்யூட்டர், 200 கிராம் எடையுள்ள ஒரு வெள்ளிக்கட்டி ஆகியவற்றை கைது செய்கிறார்கள். அப்போதே ரங்கா, காவல்துறை அதிகாரிகளிடம், சம்பத் குமாருக்கு பணம் கொடுத்த விவகாரத்தை சொல்கிறார். ஆனால், அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்படவில்லை.
இதன் நடுவே காவல்துறை அதிகாரி மூலமாக, சம்பத்குமார் என்ன செய்தார் என்ற தகவல், ஊடகத்திற்கு கசிகிறது. டைம்ஸ் ஆப் இந்தியா நாளேடு, முதல் பக்கத்தில் சம்பத்குமாரைப் பற்றிய செய்தி வெளியிடுகிறது. அதன் பிறகு, ரங்காவிடம் மீண்டும் ஒரு வாக்குமூலம் 03.07.2013 அன்று பதிவு செய்யப்படுகிறது. அந்த இரண்டாவது வாக்குமூலத்தில்தான் பல உண்மைகளை கூறுகிறார் ரங்கா.
“இது சம்பந்தமாக Q Branch SP திரு.சம்பத்குமார் அவர்கள் ஏற்கனவே IPL கிரிக்கெட் சூதாட்ட கேஸ் சம்பந்தமாக விசாரித்ததால் நான் அவர்களைச் சந்தித்து எங்கள் ஜெயின் சமூகத்தினர்கள்தான் கிரிக்கெட் புக்கிகளாக போலீஸ் கேசில் அதிகமாக இருக்காங்க. இவங்க நான் சொன்ன கேப்பாங்க. ஆகையால் நீங்க அவங்களை காப்பாத்தணும். நான் உங்களுக்கு ஏதாவது செய்யறேன்னு சென்னேன். அவரும் எரி என்றார். இது சம்பந்தமாக நான் பணம் வாங்கிய விபரத்தை நான் SP சார் அவர்களுக்கு தெரியப்படுத்தினேன். அவர்களுக்கு கொடுப்பதாக சொன்ன பணத்திலிருந்து ரூபாய் 30,00,000/- அவர் சொல்லுகின்ற நபர்களிடம் கொடுக்கச் சொன்னார்.அவர் சாத்தப்பன் என்ற பெயரை சொல்லி 9840964577க்கு போன் செய்து அந்த நபரிடம் பணத்தை கொடுக்க சொன்னார். நானும் அவர் சொன்னது போல 98409 64577 என்ற நம்பருக்கு போன் செய்து அந்த நபரை, சென்னை, எழும்பூர், பாந்தியன் ரோட்டில் அமைந்துள்ள Ashoka Hotel Car Parking Area 22.05.2013 அன்று இரவு 10 மணிக்கு வரச் சொன்னேன். அதே போல் அங்கு வந்த சாத்தப்பனிடம் ரூ பத்து லட்சத்தை கொடுத்தேன். நான் பணம் கொடுத்ததாக Q Branch SP திரு சம்பத்குமார் சாரிடம் அவரது செல்போன் 98401 66066ல் தொடர்பு கொண்டு பணம் கொடுத்த விபரத்தை தெரியப்படுத்தினேன். அதே போல் அடுத்த நாள் 23.05.2013 தேதி மதியம் சுமார் 1.15 மணியளவில் SP திரு சம்பத் குமார் போனில் தொடர்பு கொண்டார். அவருடைய நண்பர் முருகன் அடையார் சாமி @ சுப்பிரமணி என்பவர் வருவதாகவும் அவருடைய போன் நம்பர் 94444013108 என்று கூறி அவரிடம் ரூ 15,00,000/- கொடுக்க சொன்னார். அதனாலே நானும் அண்ணா நகரிலிருந்து வந்த சாமி @ சுப்பிரமணி என்ற நபருடம் போனில் பேசி ரூ 15 லட்சத்தை Ashoka Hotel car parkingல் வைத்து பகல் சுமார் 1.15 மணிக்கு கொடுத்து விட்டு அங்கேயே காத்திருந்தேன். அதனால் சுமார் 10 நிமிடங்களுக்கு பிறகு SP சொன்ன இன்னொரு நபர் பெரம்பூரிலிருந்து வருவதாகவும் அவரது போன் நம்பர் 99620 30421 என்றும்அவரது பெயர் சசிகுமார் என்றும் அவரிடம் தொடர்பு கொண்டு நான் 5 லட்சத்தை கொடுக்க சென்னதன் பேரில் நான் SP திரு.சம்பத் குமார் சார் சொன்னது போல 99620 30421 என்ற நம்பரை தொடர்பு கொண்டு மதியம் சுமார் 1.30 மணியளவில் பேசியபோது Car Parking அருகில் வந்த சகிகுமார் என்பவரிடம் 5 லட்சம் கொடுத்தேன்.
அவர் பெரம்பூர் மாதவரம் NH அரிசிக்கடையில் வேலைசெய்து வருவதாக சொன்னது ஞாபகம் உள்ளது. மேலும் அன்று இரவு சுமார் 9 மணிக்கு Q Branch SP சம்பத் குமார் அலுவலகம் சென்று ரூ 30,00,000/- ஒருரு பிளாஸ்டிக் பையில் எடுத்துச் சென்று கொடுத்தேன். இதில் நான் கௌதம், மகாவீர் ஆகியோர்கள் கொடுத்த 10 லட்சம் பணத்தில் 5 லட்சம் பணத்துக்கு வெள்ளிக்கட்டி வாங்கி ஆபீசில் வைத்திருந்ததை நீங்கள் கைப்பற்றினீர்கள். மீதி பணம் 2,42,500 வைத்திருந்தேன். அதையும் நீங்கள் கைப்பற்றினீர்கள். உக்கம் ராஜ் சுராணாவிடமிருந்து வாங்கிய 5 லட்சம் மற்றும் 3,50,000 மற்றும் கிட்டியிடம் ஏமாற்றிய பணத்தையும் சேர்த்து என் மனைவியின் அண்ணன் கர்பந்திடம் கொடுத்தேன். நான் கிரிக்கெட் புக்கிகளிடம் பணத்தை வாங்குவதற்காகவும், அதை செட்டில் செய்வதற்காகவும் பயன்படுத்திய செல்போனை கர்பந்தின் மகன் அவ்கிட் பாபேல் என்பவரிடம் கொடுத்துள்ளேன். அபார்ட்மென்ட் வாங்கிய கடனுக்காகவும், எனது மகன் காலேஜ் பீஸ் கட்டுவதற்கும் பல லட்சங்கள் செலவு செய்துள்ளேன். HDFC வங்கி வேப்பேரி கிளையில் 3 லட்சம் டெபாசிட் செய்ததில் சிறுக சிறுக செலவு செய்ததுபோக 90 ஆயிரம் இருப்பில் உள்ளது. மேலும் ICICI க்ரெடிட் கார்ட் பயன்படுத்திய வகையில் 50 ஆயிரம் செலவு செய்துள்ளேன். தரகர்களிடம் மோசடியாக பெற்ற பணத்தில் Five Star ஹோட்டலுக்கு சன்று ஜாலியாக செலவு செய்து விட்டேன். அடையார் IOB வங்கியில் 36 ஆயிரம் ICICI நுங்கம்பாக்கம் வங்கிக் கிளையில் 90 ஆயிரம் டெபாசிட் செய்த தொகையி செலவு போக மீதி உள்ளது. என்னை அழைத்து சென்றால் எனது செல்போனில் தொடர்பு கொண்டு பணம்பெற்றுச் சென்றநபர்களை அடையாளம் காட்டியும், அவர்களிடம் பணம் கொடுத்த விபரத்தை சொல்லி பணத்தை மீட்டுத் தருகிறேன் என்றும் மேலும் எனது மனைவியின் அண்ணன் கண்டர் பாகேல் அவர்களிடம் பணம் ரூ 26 லட்சம் பிளாஸ்டிக் கவரில் பத்திரமாக வைத்திருக்கும்படி கொடுத்து வைத்துள்ளேன். என்னை அழைத்துச் சென்றால் நான் கிட்டி அனுப்பிய நபர்கள் மூலமாக பணம் பெற்ற இடம் மற்றும் நபர்களையும், அந்த பணத்தை நான் சொன்ன அதிகாரி அவர்கள் சொன்னதன் பேரில் அவர் கொடுத்த தொலைபேசி நம்பர்களில் தொடர்பு கொண்டு என் மூலமாக பணம் பெற்றுச் சென்ற நபர்களையும் அடையாளம் காட்டுகிறேன்.”
இதுதான் மஹந்திர சிங் ரங்கா அளித்த வாக்குமூலம். இந்த வாக்குமூலத்தை எப்படி நம்புவது ? யாரோ ஒரு குற்றவாளி, நான் ஒரு அதிகாரிக்கு பணம் கொடுத்தேன் என்று பொய் கூட சொல்லலாம் அல்லவா ? இதை எப்படி உண்மை என்று எடுத்துக் கொள்வது ?
ரங்கா சொன்னபடி, அவரிடம் பணம் பெற்ற நபர்கள் சிபி.சிஐடி போலீசாரால் விசாரிக்கப்பட்டார்கள். அவர் சொன்ன சாத்தப்பன், சுப்பிரமணி, சசிகுமார் ஆகிய அனைவரும் விசாரிக்கப்பட்டார்கள். அவர்கள், சம்பத் குமார் எஸ்.பி எங்களிடம் பணம் வாங்கி வைக்கச் சொன்னார். நாங்கள் வாங்கி வைத்தோம். இந்தாருங்கள் அந்த பணம் என்று அப்படியே எடுத்துக் கொடுத்து விட்டார்கள். பொய்யாக யாராவது 15 லட்சம் பணத்தை எடுத்துத் தருவார்களா ? சரி இவர்களும் பொய் சொல்லுகிறார்கள் என்றே வைத்துக் கொள்வோம். ரங்காவின் செல்பேசியின் கால் ரெக்கார்டுகள் பொய் சொல்லுமா ? ரங்கா, மற்றும் சம்பத்குமாரின் செல்பேசி ரெக்கார்டுகளை வாங்கிப் பரிசீலித்ததில், ரங்கா வாக்குமூலத்தில் சொன்னது அத்தனையும் உண்மை என்பது நிரூபணமாகியிருக்கிறது.
இந்தப் புகார்கள் விசாரிக்க முகாந்திரம் இருக்கும் பட்சத்தில் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் ? ஒரே ஒரு நடவடிக்கைதான். சம்பத்குமார் கைது செய்யப்பட்டு, கஸ்டடி எடுக்கப்பட்டு, அவர் வழக்கமாக க்யூ பிரிவு கைதிகளை விசாரிப்பாரே, அதே போல, ஜட்டியோடு தலைகீழாக கட்டித் தொங்க விடப்பட்டு, விசாரிக்கப்பட்டிருக்க வேண்டும். சரி அப்படி கூட விசாரிக்கப்பட வேண்டியதில்லை. குறைந்தபட்சம் கைது செய்யப்பட்டிருக்க வேண்டுமா வேண்டாமா ? சரி அது கூட வேண்டாம். குறைந்தபட்சம் பணி இடைநீக்கம் செய்திருக்க வேண்டுமா வேண்டாமா ? இது எதுவுமே செய்யாமல், சம்பத்குமாரை திருச்சி ரயில்வே பிரிவு எஸ்.பியாக மாற்றியிருக்கிறது அரசு.
சிபி.சிஐடி மெட்ரோ குற்றப்பிரிவு குற்ற எண் 2/2013 என்ற வழக்கில் சம்பத்குமார் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு, கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டிருக்க வேண்டும். அவரை கைது செய்வதற்கான பூர்வாங்க ஆதாரங்கள் ஏராளமாக உள்ளன. ஆனால், சம்பத்குமார் உயர் உயர் அதிகாரியாயிற்றே… உயர் உயர் அதிகாரிகள் செய்யும் தவறு என்றைக்கு வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது ?
நாம் தினந்தோறும் சாலையில் செல்கையில், போக்குவரத்து விதிகளை மீறி, அதற்காக பணம் வாங்கும் போக்குவரத்து காவலர்களைப் பற்றி எப்படிக் கோபப்படுகிறோம் ? அவர்கள் பணம் வாங்குவதை படம் பிடித்து முகநூலில் ஏற்றுகிறோம். அவர்களைப் பற்றி உயர் அதிகாரிகளுக்கு புகார் அனுப்புகிறோம். அந்த உயர் அதிகாரிகளும், “We Don’t tolerate corruption” என்று பேட்டியளிப்பார்கள். நாள் முழுவதும், அந்தப் புகையை சுவாசித்தபடி, நின்று கொண்டிருக்கும் அந்தக் காவலர் செய்வது பெருங்குற்றமா ? ஏ.சி அறையில் உட்கார்ந்து கொண்டு, குற்றவாளியிடம் 60 லட்ச ரூபாய் லஞ்சம் வாங்குவது பெருங்குற்றமா ? ஆனால், சாலையில் 50 ரூபாய் லஞ்சம் வாங்கும் காவல்கள் மீது துரிதமாக நடவடிக்கை எடுக்கும் இதே அரசு, சம்பத்குமாரைப் போன்ற ஒரு அயோக்கியனை திருச்சி ரயில்வே எஸ்.பியாக வைத்து அழகு பார்த்துக்கொண்டிருக்கிறது.
சிபி.சிஐடியின் டிஜிபி நரேந்திரபால் சிங் லஞ்ச ஒழிப்புத் துறையில் பணியாற்றுகையில் தன் மகளின் பொறியியல் படிப்புக்காக அலுவலக கம்ப்யூட்டரை திருடிச் சென்று வீட்டில் வைத்தவர். அவர் சம்பத் குமாரிடம் கணிசமான தொகை பெற்று, அவரைக் காப்பாற்றியிருப்பார் என்று கருத எல்லா முகாந்திரமும் உள்ளது. ஆனால், டிஜிபி ராமானுஜம் இதை எப்படி அமைதியாக பார்த்துக்கொண்டிருக்கிறார் என்பதுதான் புரியாத புதிராக உள்ளது. நம் எல்லோரையும் விட, ராமானுஜத்துக்கு, சம்பத்குமார் யார், அவர் எப்படிப்பட்ட தில்லாலங்கடி என்பது நன்றாகவே தெரியும். அவரும் அமைதியாக உள்ளதுதான் வேதனையாக உள்ளது.
தமிழக காவல்துறையின் வரலாறே, கடைநிலைக் காவலர்களை பலிகடாக்களாக்கி, உயர் அதிகாரிகள் தப்பிப்பது. அந்த வரலாறு சம்பத் குமார் விஷயத்திலும் நிரூபணமாகியுள்ளது.
நம் பங்குக்கு நாம் அமைதியாக இருக்கக் கூடாது அல்லவா ? சம்பத் குமாரை உடனடியாக பணி இடை நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரி, தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் சார்பில், உள்துறைச் செயலாளருக்கு புகார் ஒன்று அனுப்பப் பட்டுள்ளது. அப்போதும் நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்படும்.