“ஸ்டாம்பு மீது ஸ்டாம்பு வந்து என்னைச் சேரும்… அதை வாங்கித் தந்த பெருமையெல்லாம் ஆஸ்திரியாவைச் சேரும்…” என்று பாடியபடியே உள்ளே நுழைந்தான்…
”என்னப்பா ஸ்டாம்பு போஸ்ட் ஆபீஸ்னு பாட்ற” என்றார் கணேசன். அண்ணே… திமுக தலைவர் ஸ்டாம்பு விவகாரத்துல அசிங்கப்பட்டதுதான் சமூக வலைத்தளங்கள்ல இப்போ ஹாட் டாபிக். நம்ப பார்லயும் எல்லோரும் இதத்தான் பேசி சிரிச்சுக்கிட்டு இருந்தாங்க.
”என்ன மச்சான் மேட்டர் அது ? ”என்றான் ரத்னவேல்.
”ஜுன் 5 கருணாநிதி பிறந்தநாள் அன்னைக்கு, ஆஸ்திரிய நாட்டு அரசாங்கம் அவரின் சமுதாயப்பணிகளை பாராட்டி அஞ்சல் தலை வெளியிட்டதுன்னு பெரிய செய்தி வெளியிட்டாங்க…. இந்த அஞ்சல் தலை தொடர்பா விடுதலை நாளேட்டில், ”தமிழ்கூறு நல்லுலகின் தனிப்பெரும் தலைவர் கலைஞர் அவர்களின் 90ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி, அவர்தம் சமுதாயப்பணிகளைப் பாராட்டி, ஐரோப்பியக் கண்டத்தில் உள்ள ஆஸ்திரியா நாட்டில் வாழும் தமிழர் ‘வினையூக்கி’ செல்வகுமார் அவர்களின் முயற்சியில் அந்நாட்டு அஞ்சல் துறை, தலைவர் கலைஞரின் பிறந்த நாளான நேற்று முன்தினம் (3.6.2013) 90 யூரோசென்ட் மதிப்புள்ள, அஞ்சல் வில்லையை வெளியிட்டுள்ளது. தலைவர் கலைஞர் அவர்களின் படம், தி.மு.க. கொடி ஆகியவற்றுடன் அவரது வயதைக் குறிக்கும் வண்ணம் 90 என்று குறிக்கப்பட்ட இலச்சினையுடன் இந்த அஞ்சல் தலை வெளிவந்துள்ளது. இதை ஆஸ்திரியா நாட்டின் உள்நாட்டு மற்றும் அயல்நாட்டு அஞ்சல்களுக்கும் பயன் படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. வெகுவிரைவில் இந்த அஞ்சல் தலையை, தலைவர் கலைஞர் அவர்களை நேரில் சந்தித்து அவர்களிடம் வழங்க இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.” இப்படி முரசொலியில செய்தி வெளியிட்டுட்டாங்க.
இரண்டு நாளைக்கு முன்னாடி, முகநூல்ல ஆக்டிவா இருக்கற திமுக உடன்பிறப்பு ஒருத்தர் கருணாநிதியை நேரா சந்திச்சு இந்த ஆஸ்திரிய ஸ்டாம்பை குடுத்தார். இதைப் பத்தி கலைஞர் டிவியில “ஆஸ்திரிய தமிழர்” கலைஞரிடம் நேரடியாக ஆஸ்திரியா நாடு வெளியிட்ட ஸ்டாம்பை அளித்து வாழ்த்து பெற்றார்னு செய்தி வெளியிட்டாங்க. கலைஞரோட முகநூல் பக்கத்துலயும் இதைப் பத்தி பெருமையா போட்டுக்கிட்டாங்க.
அன்னைக்கே முகநூலில், பணம் கட்டினால் யாருக்கு வேண்டுமானாலும் ஆஸ்திரிய அரசாங்கம் ஸ்டாம்பு வெளியிடும்ன்ற விபரத்தை கண்டுபிடிச்சு, அதைப் பத்தி முகநூல் முழுக்க கிண்டல். இந்த ஸ்டாம்பு வெளியிட்ட டான் அஷோக்ன்ற நபர், ஆஸ்திரிய தமிழர் இல்லை, ஆரப்பாளையம் தமிழர்னும், அவருக்கு ஸ்டாம்படி சித்தர்னும் பேரு வச்சு, செம கிண்டல்… ரெண்டு நாளா முகநூலே களை கட்டுச்சு.. இந்த வயசான காலத்துல இவருக்கு இப்படி ஒரு வெட்டிப் பெருமை தேவையான்னு எல்லாம் சிரிக்கிறாங்க… 90 வயசுத் தலைவருக்காக ஆஸ்திரிய நாடு ஸ்டாம்பு வெளியிட்டா என்ன, வெளியிடாட்டி என்ன…”
”என்னடா செய்யறது, தற்புகழ்ச்சியும், போலி புகழும், திராவிட இயக்கத்தோட ஒரு அங்கமாச்சே….” என்றான் பீமராஜன்.
”தயாளு அம்மாளை சாட்சி சொல்ல வைக்கிறதுலேர்ந்து காப்பாத்தணும்னு தீவிரமா இருக்காரு கலைஞர். மத்திய சுகாதாரத்துறை அமைச்சரா இருக்கற குலாம் நபி ஆசாத் மூலமா, எய்ம்ஸ் மருத்துவமனையில இருக்கறதுல செட்டிங்குக்கு ஒத்து வர்ற டாக்டர்களை தேர்ந்தெடுக்கனும்னு கடும் முயற்சி பண்ணிக்கிட்டு இருக்காங்க. அதுக்கு குலாமும் ஒத்துக்கிட்டாரு. இந்த வேலை டி.ஆர்.பாலுக்கிட்ட ஒப்படைக்கப்பட்டிருக்கு. ”
”தயாளு அம்மாள் பக்கத்துல இருக்கற ஆளை திடீர்னு அடிக்கிறாங்கன்னு நீதிமன்றத்துல சொன்னாங்கள்ல…. எய்ம்ஸ் மருத்துவர்கள் பரிசோதனைக்கு வரும்போது, ஆளுக்கு ஒரு குத்து மூஞ்சி மேலயே விடச் சொல்லு… டாக்டர்கள் குத்து வாங்கிட்டு, ஆமா வியாதி முத்திடுச்சுன்னு சொல்லிடுவாங்க.. ” என்று சொல்லி விட்டு சிரித்தான் வடிவேலு.
”திமுகவுல குஷ்பு புயல் மீண்டும் வீச ஆரம்பிச்சுடுச்சு மச்சான்…” என்று கூறி விட்டு நிறுத்தினான் தமிழ்.
அனைவரும் ஆர்வமாக நெருங்கி அமர்ந்தனர். ”தென் சென்னைக்கு குஷ்புவைத்தான் வேட்பாளரா நிறுத்தப் போறேன்… உங்களால என்ன பண்ண முடியும்னு குடும்பத்தினர்கிட்ட சொல்லிட்டாரு. ஆனா, தென் சென்னைக்கு போட்டி கடுமையா இருக்கு.. ”
”வேற யார் போட்டி போட்றாங்க… ? ”
”பழைய மேயர் மா.சுப்ரமணியம் முயற்சி பண்றாரு. கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் முயற்சி பண்றாங்க…”
”தமிழச்சி கலைஞர் பிறந்தநாளுக்குக் கூட வரலயே…” என்று கேட்டான் ரத்னவேல்.
”அது ஒருபெரிய கதை மச்சான்… மே கடைசி வாரத்துலயே கருணாநிதியைப் போய் பாத்த தமிழச்சி, அய்யா, நான் ஜுன் முதல் வாரத்துல ஃப்ரான்ஸ் சுற்றுப்பயணம் போறேன். என்னால வர முடியாது. அதனால இப்பவே வாழ்த்து தெரிவிச்சுக்கறேன்னு சொல்லி பாத்துட்டுப் போயிட்டாங்க… ஆனா, அவங்க உண்மையில வெளிநாடு போனது 29 ஜுன் அன்னைக்குத்தான்…”
”அப்புறம் எதுக்கு பிறந்தநாள் அன்னைக்கு கலைஞரை பாக்கல ? ”
”பிறந்தநாள் அன்னைக்கு கலைஞரைப் பாத்தால், தன்னைப் பத்தி செய்தி ஊடகங்களில் வரும். அப்படி வர்றது, காவல்துறை டிஐஜியா இருக்கற தன் கணவருக்கு நல்லதில்ல… அதனால தவிர்த்துட்டாங்க.. ”
தமிழச்சியின் விமான டிக்கட்
”அது எப்படிப்பா இப்படி ஒரு பொய்யை சொல்லிட்டு பிறந்தநாள் அன்னைக்கு இங்கயே இருப்பாங்க…”
”இப்படித்தான் மச்சான் நானும் கேட்டேன்… அந்த திமுக உடன்பிறப்பு டிக்கட்டையே எடுத்து குடுத்துட்டாரு…
அது மட்டும் இல்ல… குஷ்பு விவகாரம் திமுகவுல பெரிசானதுக்கும், தமிழச்ச ஒரு பெரிய காரணம்னு சொல்றாங்க….”
”அவங்க என்ன பண்ணாங்க ? ”
”குஷ்புவுக்கு தென் சென்னை கிடைச்சால், தனக்குக் கிடைக்காதுன்னு தெரிஞ்ச தமிழச்சி, முக.ஸ்டாலின்கிட்ட, குஷ்புவோட ஆதிக்கம் கட்சிக்கு நல்லதில்லன்னு சொல்லிட்டு வர்றாங்கன்னும் ஒரு பேச்சு இருக்கு. ”
”தென் சென்னைக்கு யாரு யாருதான் போட்டி போடுவாங்க… ? ”
”தென் சென்னையை விடு… மத்திய சென்னைக்கே தயாநிதி மாறனுக்கு பதிலா வேற ஆளுக்கு குடுக்கணும்னு கட்சியில பேச்சு இருக்கு…. கேடி சகோதரர்கள் கட்சிக்காக எதுவும் செய்யல, திமுக செய்திகள் கூட சன் டிவியில இருட்டடிப்பு செய்யப்படுது, டெல்லி செல்வாக்கை தங்களோட சொந்த நலனுக்குத்தான் பயன்படுத்திக்கிறாங்க…. கட்சிக்காக எதுவுமே செய்யலன்னு சிலர் நினைக்கிறாங்க…
கனிமொழி தரப்போ, தனக்கு இவ்வளவு சிக்கல் வந்ததுக்கும் காரணம் மாறன்கள்தான், தன்னைப் பத்தி வட இந்திய ஊடகங்கள்ல தொடர்ந்து தவறான செய்திகள் வருவதற்கு காரணமே மாறன்கள்தான், அதனால, மாறனுக்கு மத்திய சென்னை குடுக்கக் கூடாதுன்னு நெனைக்கிறாங்க… தேர்தல்ல நடக்கற போட்டிய விட, திமுகவுல நடக்கிற போட்டி சிறப்பா இருக்கும்பா….”
”சரி மத்திய தேர்தல் எப்படிப்பா அமையும்னு நினைக்கிற… ? ” என்றார் கணேசன்.
”நாட்டை மத ரீதியா துண்டாடனும்னு காங்கிரஸ் கட்சி முடிவு பண்ணிடுச்சுன்னே.. ”
”என்னப்பா சொல்ற…. பிஜேபி தானே இந்த வேலையைப் பண்ணுவாங்க ? ”
”இல்லன்ணே… காங்கிரஸ்தான் இந்த வேலையை தீவிரமா பண்ணிக்கிட்டு இருக்காங்க… இந்தியா முழுக்க இருக்கற இஸ்லாமியர்களை தங்கள் பக்கம் எடுக்கணும்னு காங்கிரஸ் தீவிரமா வேலை செஞ்சிக்கிட்டு இருக்காங்க.
இஷ்ரத் ஜஹான் போலி என்கவுன்டர்ல இருந்து, 26/11 தாக்குதல் மற்றும் பாராளுமன்றத் தாக்குதல் பயங்கரவாத தடுப்புச் சட்டம் மற்றும் போடா சட்டங்கள் கொண்டு வருவதற்காக அரசாங்கமே நடத்துனதுன்னு உள்துறை அதிகாரி ஒருத்தர் சொன்னதா பத்திரிக்கையில வெளி வந்த செய்தி… இதெல்லாம் இந்தப் பின்னணியிலதான் வருது. ”
”யாரோ ஒரு உள்துறை அதிகாரி சொன்னா உண்மையாயிடுமா… இதை யாருப்பா நம்புவாங்க… ? ”
”இல்லடா… அங்கதான் தப்பு பண்ற… அந்த அதிகாரி சொன்னதா, டைம்ஸ் ஆப் இந்தியா முதல் பக்கத்துல செய்தி வெளியிட்டிருந்தாங்க… முஸ்லீம் பத்திரிக்கைகளான உணர்வு, மக்கள் உரிமை, எல்லாத்துலயும், அந்த செய்தியை விரிவா வெளியிட்டிருந்தாங்க…
திங்கட்கிழமை அன்னைக்கு காங்கிரஸ் கட்சியோட செய்தித் தொடர்பாளர் ஷகீல் அஹமது, இந்தியன் முஜாஹிதீன் அமைப்பு குஜராத் கலவரத்தோட வெளிப்பாடுன்னு ட்வீட் பண்ணியிருந்தார். இது பத்தி சர்ச்சை எழுந்ததும், உடனே இது அவரோட சொந்தக் கருத்துன்னு இதை மறுத்தது காங்கிரஸ். ஆனா, இது மாதிரி திட்டமிட்டு, தொடர்ந்து பல வேலைகளை காங்கிரஸ் கட்சி பண்ணும்.
இஷ்ரத் ஜஹான் கொலை வழக்குல சிபிஐ மற்றும் காங்கிரஸ் கட்சியைப் பாராட்டி, சுவரொட்டிகள் முஸ்லீம் அமைப்புகளால வெளியிடப்படும். இதுதான் காங்கிரஸ் கட்சியோட முக்கியமான தேர்தல் உத்தி…..”
”தமிழ்நாட்டுலயும் இந்து தலைவர்கள் கொல்லப்பட்டு வர்றாங்களே…”
”ஜெயலலிதா விஸ்வரூபம் பட விவகாரத்துல, இஸ்லாமியர்களோட தன்னை அடையாளப்படுத்திக்கிட்டாங்க… திரும்பவும் இந்தப் பெயர் வரக்கூடாதுன்னுதான், வர்றேன்னு ஒத்துக்கிட்ட இஃப்தார் பார்ட்டியை ரத்து பண்ணினாங்க… ஏற்காடு எம்எல்ஏ இறந்ததுக்காக ரத்து பண்ணாங்கன்னு செய்தி வந்தாலும், சேலம் பிஜேபி ஆடிட்டர் கொலை செய்யப்பட்டதுதான் உண்மையான காரணம்.
காவல்துறையும், இந்த விஷயத்துல மெத்தனமாத்தான் இருக்கு… அத்வானி பைப் பாம் வழக்குலயே போலீஸ் பக்ருதீன், பண்ணா இஸ்மாயில் தேடப்பட்டு வந்தாங்க… அதுக்கப்புறம், பெங்களுரு குண்டு வெடிப்புலயும் இவங்க தேடப்பட்டு வந்தாங்க…. ஆனா, இப்போதான் சென்னை மாநகர காவல்துறை இவங்க படத்தை வெளியிட்டு, தகவல் சொன்னா விருதுன்னு சொல்லியிருக்காங்க..
இந்தக் கொலைகளால, இந்து அமைப்புகள் ரொம்ப தீவிரமாயிருக்காங்க… பதிலுக்கு கொலை பண்ணனும்னு அந்த அமைப்புகள்ல பேச்சு இருக்கு.. மீண்டும் கொலைகள் தொடர்ந்தா ஆச்சர்யப்படறதுக்கு இல்ல. ”
”என்னப்பா நீ சொல்றதப்பாத்தா பகீர்னு இருக்கே….”
”ஆமாண்ணே… தேர்தல் நெருங்க நெருங்க, மதரீதியான சிக்கல்கள் நெறய்ய உருவாக வாய்ப்பு இருக்கு… சிமி அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் அனைவரும் சேந்து, எந்தெந்த இடத்துலயெல்லாம் இஸ்லாமியர்கள் எம்.பிக்களா தேர்ந்தெடுக்க வாய்ப்பு இருக்கோ, அங்கயெல்லாம், வலுவா கூட்டணி அமைக்கணும்னு முடிவெடுத்து இருக்காங்க.”
“சரி அமைச்சரவை மாற்றம் எப்போ நடக்கும் ? “ என்று கேட்டான் பீமராஜன்.
“கொடநாட்டுல இருந்து ஜெயலலிதா திரும்புனதும், மாற்றம் இருக்கும்னு சொல்றாங்க… இந்த முறை உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன், செந்தில் பாலாஜி ஆகியோர் பெயர்கள் மாற்றப் பட்டியல்ல இருக்கறதா சொல்றாங்க…“
செந்தில் பாலாஜி மேல ஏற்கனவே நெறய்ய புகார் இருக்கு… அமைச்சர் பழனியப்பன் கல்லூரிகளிடம் வசூல் வேட்டையில ஈடுபட்டு இருக்கறதா நெறய்ய புகார் போயிருக்கு…“
“மீடியா செய்திகன் என்னடா இருக்கு… ? “
“ஜெயா டிவியில இருந்த குழப்பங்கள் இன்னும் தீர்ந்தபாடு இல்ல… ஜெயா டிவியோட செய்தி ஆசிரியர் தில்லையை திடீர்னு பணி நீக்கம் பண்ணிட்டாங்க.. “
“அவரு நல்ல மனுஷனாச்சே…. காசு கீசு வாங்க மாட்டாரே…“
“ஜெயா டிவியில 15 வருஷம் இருந்துருந்தா இந்நேரம் அவர் கோடீஸ்வரான ஆயிருக்கணும். ஆனா, அவருக்கு பத்திரிக்கையாளர் குடியிருப்புல இருக்கற ஒரே வீடும் பணம் கட்டாததால ஏலத்துக்கு வந்துருக்கு.. இதுதான் இன்னைக்கு அவரோட பொருளாதார நிலைமை. “
“சரி என்னதான் தப்பு பண்ணாராம்… எதுக்கு அவரை நீக்குனாங்க.. ? “
“பெரிய குற்றம் ஒண்ணும் இல்லப்பா…. நெய்வேலி பங்குகளை வாங்கனும்ன்ற காமராஜரோட கனவை புரட்சித் தலைவி அம்மா அவர்கள் நனவாக்கிட்டாங்கன்னு செய்தி போட்டாரு… இது அம்மாவோட திட்டம், அம்மாவோட வெற்றி… காமராஜரோட பேரை எப்படி யூஸ் பண்ணலாம்னுதான்.. இதுதான் இவர் செஞ்ச தப்பாம்.. “
“என்னய்யா அநியாயமா இருக்கே… ? “
“அநியாயம்தான்… என்ன பண்றது ? இதுதான் ஜெயா டிவி… அந்த செய்தியை எப்படிப் போட்டு இருக்கணும்னா… “புரட்சித் தலைவி அம்மா அவர்கள், மத்திய அரசோடு போராடி, தமிழகத்தின் உரிமைகளை மீட்டெடுப்பதையே ஒரே லட்சியமாகக் கொண்டு, நெய்வேலி பங்குகளை வாங்கியிருப்பதன் மூலம், தமிழர்களின் பல ஆண்டு கால கனவை ஒரே நாளில் நனவாக்கியிருக்கிறார்…. இதனால், தமிழர்களின் வாழ்வில் விளக்கேற்றி வைக்கப்பட்டிருக்கிறது“ என்று கட் பண்ணி, சில அடிமைகளின் பைட்டை இந்த இடத்தில் போட வேண்டும்.
இப்படி செய்தி போட்ருந்தா ஒண்ணும் ஆயிருக்காது…“
“சரி அங்க புதுசா மதிவாணன்னு ஒருத்தர் போயிருக்காரே…. என்ன நடக்குது ? “
“மதிவாணன் கிட்ட வேலை செய்யறதுக்கு யாரும் தயாரா இல்ல.. என்ன காரணம்னா மதிவாணனை விட பணியில் மூத்தவர்கள் நெறய்ய பேர் ஜெயா டிவியிலயே இருக்காங்க.. மேலும் மதிவாணன், சன் டிவி ராஜாவோடஆளு… ரொம்ப நாளா ராஜாவோட நம்பிக்கைக்கு பாத்திரமா இருந்தாரு. அப்புறம் புதிய தலைமுறைக்கு போனாரு…. அங்க கொஞ்ச நாள் இருந்தாரு… அப்புறம் தந்தி டிவிக்கு போனாரு… அங்கயெல்லாம் இருந்துட்டு ஜெயா டிவிக்கு வந்த மதிவாணனுக்கு 1.70 லட்சம் சம்பளம். இது அவரை விட பணியில் மூத்தவங்களுக்கு எரிச்சலை ஏற்படுத்துது. அவங்கல்லாம் 30 , 40 ஆயிரம் சம்பளம் வாங்கிட்டு இருக்காங்க…
நெறய்ய பேர் போயி ரபி பெர்நார்ட் கிட்ட புகார் பண்ணியிருக்காங்க… ரபி பெர்நார்ட் அவங்களை பொறுமையா இருங்கன்னு சொல்லி சமாதானப்படுத்தியிருக்காரு….
சமீபத்துல ஏற்காடு எம்.எல்.ஏ இறந்ததுக்கு ஜெயலலிதா நேர்ல போயி அஞ்சலி செலுத்துனாங்க. ஜெயலலிதா எங்க போனாலும், சென்னையிலேர்ந்து ஜெயா டிவி யூனிட் போகும். ஆனா இந்த முறை போகாம கோட்டை விட்டுட்டாங்க.. ஜெயலலிதாவுக்கு, தனது ஓய்வு நேரத்தையும் ரத்து செய்து விட்டு, ஒரு கட்சி எம்எல்ஏவின் மரணத்துக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்னு பெரிசு பெருசா செய்த வரணும்னு ஆசை. ஜெயா டிவியில இந்த செய்தி லோக்கல் ரிப்போர்டரை வச்சு மொக்கையா எடுத்துருந்தாங்க… பாத்துட்டு செம கடுப்பான ஜெயலலிதா, மதிவாணனையும், ரபி பெர்நார்டையும் காய்ச்சி எடுத்துட்டாங்க..
இப்போ மீண்டும் தில்லையையே கூப்புடலாமான்னு யோசிச்சிக்கிட்டு இருக்காங்க… 15 வருஷமா ஜெயா டிவியிலயே இருக்கற தில்லைக்கு, இந்த விஷயத்துல நல்ல அனுபவம் இருக்கு… அவரை மாதிரி அனுபவம் வாய்ஞ்ச ஆளு இல்லன்னு திருப்பிக் கூப்புடப் போறதா பேசிக்கிட்டு இருக்காங்க.. “
“சரி… தமிழ் இந்து எப்படிப் போயிக்கிட்டு இருக்கு ? “
“ஆட்கள் சேர்க்கும் பணி முழு வீச்சுல நடந்துக்கிட்டு இருக்கு. தினமணியில அனைத்து ஊழியர்களுக்கும் கணிசமா சம்பளம் ஏத்திட்டாங்க. ஆனா விகடன்ல யாருக்கும் சம்பளம் ஏத்தல…. கொள்ளை கொள்ளையா லாபம் சம்பாதிக்கிற சீனிவாசன், இதுக்கு மேலயெல்லாம் யாருக்கும் சம்பளம் ஏத்த முடியாது… போறவன் போகட்டும்னு சொல்லிட்டாராம்…“
“ஆளு போயிட்டா எப்படிப்பா பத்திரிக்கை நடத்தறது….“
“அப்போல்லோ ஹாஸ்பிட்டல் இருக்குல்ல… அங்க வேலை பாக்கற நர்ஸ்கள் யாருன்னு நெனைக்கிற…. பெரும்பாலானவங்க, அப்போல்லோ நர்சிங் கல்லூரியில படிக்கிறவங்க…. அந்த செவிலியர்களை பயிற்சின்னு போட்டு வேலை வாங்கிட்டு, ப்ராக்டிக்கல்னு சொல்லிக்கறது….
அதே மாதிரிதான் விகடன்ல நடக்கற மாணவப் பத்திரிக்கையாளர் பயிற்சி திட்டமும்… அவங்களை வச்சு வேலை வாங்கிக்கறேன்னு சொல்லிட்டாராம் சீனிவாசன்…“
“என்னப்பா இவ்வளவு மோசமா பண்றாரு ? “
“அவங்க அப்பா பாலசுப்ரமணியம், பத்திரிக்கையை தவமா நடத்துனவரு…. புள்ளைக்கு வெறும் லாபம் மட்டும்தான். அந்த லாபம் புலனாய்வு செய்திகளை வெளியிட்டு வந்தாலும் சரி, டைம் பாஸ்ல ஜட்டி படம் போட்டு வந்தாலும் சரி….. லாபம் வந்தா போதும்னு நினைக்கிறாரு…“
இந்த வார டைம் பாஸில் வந்த படம்
விகடன மேலாண் இயக்குநர் சீனிவாசன்
“நக்கீரன்ல இளவரசன் உண்மை கதைன்னு தொடர் ஆரம்பிச்சுருக்காங்க போலருக்கே….“ என்றான் வடிவேல்.
“அந்தக் கதையை முழுக்க முழுக்க எழுதுனது ராஜ்குமார்னு ஒரு உதவி இயக்குநர். இளவரசனோடயே போயி ஒரு வாரம் தங்கியிருந்து எழுதுனார். இளவரசன் இறந்ததும், இதுக்கான மதிப்பு கூடிடுச்சு. விகடன் நிறுவனத்துலதான் முதல்ல பேசியிருக்கார். அவங்க பணமெல்லாம் தர முடியாது… எங்க பத்திரிக்கையில உங்க தொடர் வர்றது உங்களுக்கு பெருமைனு சொல்லியிருக்காங்க…
அந்த நேரத்துல கோபால் அண்ணாச்சி, அந்தப் பையனை புடிச்சு, ஒரு கணிசமான தொகை குடுத்து, தொடரை வெளியிட ஆரம்பிச்சுட்டாரு.
இப்போ அதுக்கும் சிக்கல் வரும் போல இருக்கு ? “
“அதான் தொடர் வந்துடுச்சே… அதுல என்ன சிக்கல்“ என்று பதற்றமாக கேட்டான் ரத்னவேல்… அவன் பணியாற்றும் பத்திரிக்கையாயிற்றே..
“இளவரசன் இறந்துட்டதால, என்கிட்ட காப்பிரைட் வாங்கணும். அப்படி வாங்காம வெளியிடறது சட்டவிரோதம்னு இளவரசனோட தந்தை வழக்கு தொடுக்கப் போறதா ஒரு பேச்சு இருக்கு.. “
“சரி நீதிமன்ற செய்திகள் என்னப்பா இருக்கு ? “
“தமிழ்நாடு வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் பிரபாகரன், தன்னோட சங்கத்துக்கு எப்படியாவது அங்கீகாரம் வாங்கிடனும்னு தீவிரமா இருக்காரு. இதுக்காக, தமிழ்நாடு பார்கவுன்சில்ல ஒரு தீர்மானம் எடுத்துட்டு வந்தாரு“
“பார் கவுன்சில்ல தீர்மானம் வர்றது அவருக்கு எப்படி உதவி பண்ணும் ? “
“அந்த தீர்மானத்தின் படி அவர் சங்கம் அங்கீகரிக்கப்பட்டா, உயர்நீதிமன்றத்தையும் அதை வச்சு அங்கீகரிக்க வச்சுடலாம்னு திட்டம் போட்டாரு. ஆனா, அவருக்கு ஆதரவா 10 வாக்குகளும், எதிரா 13 வாக்குகளும் விழுந்துச்சு. இதனால அவரு சங்கத்துக்கு அங்கீகாரம் வாங்குற முயற்சிகள் கொஞ்சம் பின்னுக்குப் போயிருக்கு. “
“ராமகிருஷ்ணா பல் மருத்துவக் கல்லூரி முன்ஜாமீன் தொடர்பா நீதிபதி ஒரு வித்தியாசமான தீர்ப்பு வழங்கியிருக்காருன்னு சொன்னியே அந்த வழக்கு என்னப்பா ஆச்சு…. ? “
“நீதிபதி ராஜேந்திரன் தன்னோட உத்தரவுல,
The Learned counsel for the respondent (CBI) submitted that the respondent is prepared for one more inspection to verify the documents relating to the administration of the petitioner institution.
Considering the submission of the counsels for both sides taking into consideration the interest of the Students, this court feels that there can be re-inspection of the college to ascertain whether the infrastructure facilities are lacking or not, as per the norms fixed by the Dental Council of India and whether the deficiency as pointed out in the counter has been rectified. Such inspection shall be carried out jointly by the respondent police (CBI) along with the official of the government Dental College, Madras and the officials of the college.
தீர்ப்புல, சிபிஐ வழக்கறிஞர் வாதாடுகையில் அந்தக் கல்லூரியை சரிபார்க்க மீண்டும் ஒரு முறை சோதனை நடத்த ஒப்புக் கொண்டுள்ளார். அதனாலும், மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டும், மீண்டும் ஒரு முறை சிபிஐ அந்தக் கல்லூரியில் உட்கட்டமைப்பு வசதிகள் இருக்கிறதா என்று சோதனை நடத்த உத்தரவிடுகிறேன் னு உத்தரவு போட்ருந்தார்.
சிபிஐ வழக்கறிஞர், நான் இந்த மாதிரி வாதாடவேயில்லன்னு ஒரு மனு தாக்கல் பண்ணினார்… கடுப்பான நீதிபதி, இந்த வழக்கை வேற நீதிமன்றத்துக்கு மாற்றுகிறேன்னு உத்தரவு போட்டுட்டார்.
“நல்ல நீதிபதியாத்தானேப்பா இருக்கறாரு ? “
“அண்ணே… இவரோட வரலாறு தெரியாது உங்களுக்கு. இப்போ மாவட்ட நீதிபதியா இருக்கற ஒருத்தர்கிட்ட, நீதிபதி ராஜேந்திரன் வழக்கறிஞரா இருந்தப்போ வாதாடியிருக்காரு. வாதாடி முடிஞ்சதும், அந்த நீதிபதியோட அறைக்கு போன ராஜேந்திரன், உங்களுக்கு என்ன வேணுமோ அதை செஞ்சு குடுத்துட்றேன் னு சொல்லியிருக்காரு… கடுப்பான அந்த நீதிபதி, இந்த மாதிரியெல்லாம் என்கிட்ட பேசாதீங்க.. வெளியில போங்கன்னு சொல்லிட்டாரு. “என்ன சார் பொழைக்கத் தெரியாத ஆளா இருக்கீங்கன்னு“ அவருக்கு அட்வைஸ் பண்ணிட்டு வந்தாராம் ராஜேந்திரன். இதுதான் இந்த நீதிபதியோட லட்சணம்… இவரை போயி நல்ல நீதிபதின்னு சொல்றீங்களேண்ணே…
நீதிபதி எப்படி இருக்கணும்னு ஒரு உதாரணம் சொல்றேன் கேளுங்க.. ஆதிபராசக்தி மருத்துக் கல்லூரி மேல, இதே மாதிரி ஒரு வழக்கு. அந்தக் கல்லூரியில உட்கட்டமைப்பு இல்லன்னு. இந்த வழக்குல சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் எல்லோரையும், நீதிபதி வி.பி.ரவீந்திரன் விடுவிச்சுட்டாருன்னு ஏற்கனவே நாம பேசிக்கிட்டு இருந்தோம். இதையடுத்து கல்லூரி நிர்வாகம், இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு அனுமதி குடுக்கணும்னு வழக்கு போட்டாங்க. இந்த வழக்குல எதிர் மனுதாரரா மருத்துவக் கவுன்சிலை மட்டும் சேத்துருந்தாங்க. எங்க மேல போடப்பட்ட வழக்குலேர்ந்து நீதிமன்றமே எங்களை விடுவிச்சுடுச்சு. அதனால அனுமதி குடுங்கன்னு கேட்டாங்க…
இந்த வழக்கு நீதிபதி கே.கே.சசீதரன் முன்னாடி விசாரணைக்கு வந்துச்சு. அப்போ நீதிபதி, சிபிஐ அமைப்பை இந்த வழக்குல சேர்த்து, அவங்க தரப்பையும் கேட்கணும்னு உத்தரவு போட்டுட்டாரு. இதனால கல்லூரி நிர்வாகம் ஆடிப்போயிருக்கு. நீதிபதி, சிபிஐயை சேக்காமலேயே இந்த வழக்கை முடிச்சுருக்க முடியும். ஆனா, உண்மையை கண்டு பிடிக்கணும்னு சிபிஐயை சேத்தாரு. ஒரு நீதிபதி எப்படி இருக்கணும்னுன்றதுக்கு இதுதான் உதாரணம்.”
”பணி ஓய்வு பெற்ற நீதிபதி எலிப்பி தர்மாராவ் எப்படி இருக்கார்டா ?”
”எப்படியாவது மாநில மனித உரிமை ஆணையத்தோட தலைவராகலாம்னு முயற்சி பண்றார். மனித உரிமை ஆணையத்தோட தலைவர்களா, ஓய்வு பெற்ற தலைமை நீதிபதிகள்தான் இருக்க முடியும்னு சட்டம். தமிழகத்திலிருந்து ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி டி.முருகேசன் இதுக்கு தகுதியானவர். ஆனா, அவர் இதை விட சிறப்பான பதவியை எதிர்ப்பாத்துக்கிட்டு இருக்காரு. தலைமை நீதிபதியாகவே இல்லன்னாலும், எப்படியாவது மனித உரிமை ஆணையத்தோட தலைவராகணும்னு முயற்சி பண்றார் எலிப்பி. மாநில அரசுக்கு ஆதரவா பல உத்தரவுகளை பிறப்பிச்சு இருக்கறதால, தமிழக அரசு அவருக்கு உதவி பண்ணும்னு நம்பறார். ”
”கூடங்குளம் வழக்கு என்ன ஆச்சு மச்சான்” என்று ஆர்வமாக கேட்டான் பீமராஜன்.
”கூடங்குளம் அணு உலையை எப்படியாவது திறந்துடனும்னு மத்திய அரசு தீவிரமா இருக்கு. அணு சக்திக் கழகம் அணு உலை திறக்கறதுக்காக அளித்த தடையில்லா சான்றிதழ் தவறுன்னு ஒரு வழக்கு தொடுத்தாங்க பூவுலகின் நண்பர்கள் அமைப்பினர். அப்போ பேசுன வில்சன், இந்த வழக்கு உச்சநீதிமன்றத்துலதான் தொடுக்கணும். இங்கே தொடுக்க முடியாதுன்னு சொன்னார். மனுதாரர் சார்பில் ஆஜரான ராதாகிருஷ்ணன், மத்திய அரசு வழக்கறிஞர் சட்டம் தெரியாமல் பேசறார்னு சொன்னார். நீதிபதிகள், தலைமை நீதிபதியிடம் இந்த வழக்கை மாற்றுகிறோம்னு சொல்லிட்டாங்க… இது மட்டும்தான் நடந்துச்சு.
மூத்த வழக்கறிஞர் பி.வில்சன்.
ஆனா வில்சன், வழக்குகளை வாபஸ் பெற வேண்டும்னு உச்சநீதிமன்றம் உத்தரவு போடலை… அது வெறும் பரிந்துரைதான்னு வாதாடுனதா, ஒரு செய்திக் குறிப்பை அடிச்சு, பத்திரிக்கையாளர்கள் எல்லாருக்கும் குடுத்துட்டாரு. இதை நம்பிய பத்திரிக்கையாளர்கள் அப்படியே இந்த செய்தியை போட்டுட்டாங்க.
கூடங்குளம் போராட்டக்காரர்கள் மீது வழக்கை வாபஸ் பெறுவதா தொடுக்கப்பட்ட வழக்கு மாநில அரசு சம்பந்தப்பட்டது. அந்த வழக்கில் வில்சன் ஆஜராகி வாதாடியதாக தெரிவித்துள்ளார். அதனால, வில்சன் தன் பதவியை ராஜினாமா பண்ணணும்னு தமிழக மக்கள் உரிமைக் கழகத்தோட செயலாளர் புகழேந்தி, வில்சனுக்கும், மத்திய சட்ட அமைச்சகத்துக்குமி புகார் கடிதம் அனுப்பிட்டாரு. இன்னொரு மத்திய அரசு வழக்கறிஞரா மாசிலாமணி இருந்தும், அவருக்கு எந்த வழக்கும் போகாம, எல்லா வழக்கையும் வில்சனே அபகரிச்சுக்கிறார்னு ஒரு புகார் ஏற்கனவே இருக்கு.”
”ஈஷா மேல போட்ட வழக்கு என்ன ஆச்சு ? ” என்றான் வடிவேல்.
”ஈஷா மேல போட்ட வழக்கு உயர்நீதிமன்றத்துல நிலுவையில இருக்கு. இந்த நிலையில, ஈஷா மையம், நாங்க கட்டுன கட்டிடங்களுக்கு அனுமதி குடுங்கன்னு கோவை மாவட்ட ஆட்சியருக்கு விண்ணப்பம் குடுத்துருக்காரு. அனுமதியில்லாம கட்டுன கட்டிடங்களை இடிக்க நோட்டீஸ் குடுத்து அது நிலுவையில இருக்கும்போது, கலெக்டர் இந்த விண்ணப்பத்தை நிராகரிச்சிருக்கணும். ஆனா, அதை நகர்புரம் மற்றும் ஊரக திட்டத் துறைக்கு ஃபார்வேர்ட் பண்ணியிருக்காரு.
கோவை மாவட்ட ஆட்சியரா இருக்கற கருணாகரன், ஈஷா யோகா மையத்தோட ரொம்ப நெருக்கமானவர். எப்படியாவது நான் உங்கள் கட்டிடங்களுக்கு அனுமதி வாங்கித் தர்றேன்னு உத்தரவாதம் குடுத்துருக்கறதா சொல்றாங்க…”
”காவல்துறை செய்திகள் என்னப்பா இருக்கு ? ” என்றார் கணேசன்..
”லஞ்ச ஒழிப்புத் துறை ஐஜி ஏஎம்எஸ் குணசீலனுக்கும், ஜெயலலிதாவோட சொத்துக் குவிப்பு வழக்கை விசாரிக்கிற டிஎஸ்பி சம்பந்தத்துக்கும் கடுமையான பனிப்போர் நடக்கறதா சொல்றாங்க… ஐஜி குணசீலன் மேல, சம்பந்தம் முதல்வர் அலுவலகத்துல புகார் சொல்லியிருக்காராம்”
”ஏம்பா… ஐஜி, டிஜிபியெல்லாம் இருக்கும்போது, டிஎஸ்பி எப்படி முதல்வர் அலுவலகத்துல பேச முடியும்… ? ”
”என்னய்யா பேசற…. சம்பந்தம் யாரு… ஜெயலலிதாவோட பெங்களுரு சொத்துக் குவிப்பு வழக்கோட விசாரணை அதிகாரி இல்லயா… ? முதல்வர் அலுவலகச் செயலாளர்கள் அத்தனை பேரும் அவர்கிட்ட பேசுவாங்க… அதனாலதான், சம்பந்தத்தோட முழு நேரத் தொழில் ரியல் எஸ்டேட்னு டிஜிபி ராமானுஜம் அறிக்கை அனுப்பியும் சம்பந்ததை யாராலயும் அசைச்சுக்க முடியலயே…. சம்பந்தம் கிட்டத்தட்ட லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் மாதிரிதான் நடந்துக்கறார். ”
” அப்புறம் ? ”
”ஜான் நிக்கல்சன் இஸ்லாமிய தீவிரவாதிகள் தொடர்பான வழக்குகளை பாத்துக்கற பிரிவுல டிஐஜியா இருக்கார். அந்தப் பிரிவுல வேலை பாக்கற காவலர்களை இவரு சொந்த ஊர்ல இருக்கற வயல்ல விவசாயம் பாக்கறதுக்கும், இவரு பிசினெஸை பாத்துகக்கறதுக்கும் அனுப்பிட்டாரு. அது மட்டுமில்லாம அரசு ஒதுக்குன ரகசிய நிதியை மொத்தமா ஆட்டையைப் போட்டுட்டாரு.
ஜான் நிக்கல்சன்.
இது தெரிஞ்ச டிஜிபி ராமானுஜம், ரகசிய நிதி ஒதுக்கீட்டை குறைச்சுட்டாரு… உடனே நிக்கல்சன், சேலம் ரமேஷ் கொலை வழக்கு மற்றும் இதுல சம்பந்தப்பட்ட இஸ்லாமிய தீவிரவாதிகளை பிடிக்க, இன்னும் ஏராளமான ரகசிய நிதியை ஒதுக்கணும்னு டிஜிபிக்கு ப்ரொப்போசல் அனுப்பியிருக்காரு…”
”தீவிரவாதிகயைப் பிடிக்கிறாங்களோ இல்லையோ… இதை சாக்கா வச்சு காவல்துறை அதிகாரிகள் நல்லா சம்பாதிக்கிறாங்க…. வாப்பா போகலாம்” என்றவாறு எழுந்தார் கணேசன். அனைவரும் அவரோடு எழுந்து கலைந்தனர்.
குறிப்பு : டாஸ்மாக் தமிழ் இனி செவ்வாய்தோறும் வெளியிடப்படும்.