“வணக்கம்… எல்லாருக்கும் வணக்கம்” என்று மொட்டை மாடியில் நுழைந்தான் தமிழ்.
”வா மச்சான்.. உக்காரு.. ஒவ்வொரு மேட்டரா சொல்லு” என்று சிரிப்போடு அவனை வரவேற்றான் பீமராஜன்.
”நான் அமெரிக்கா போறேன்…” என்றான் தமிழ்.
”என்ன மச்சான்… திடீர்னு நீ அமெரிக்கா போயிட்டன்னா நாங்கள்லாம் என்ன பண்றது. உன் ரெகுலர் கஸ்டமர்கள் ஃபீல் பண்ணுவாங்களேடா…” என்றான் வடிவேல்.
”இப்படி நான் சொல்லலடா.. மோடிதான் சொல்லிக்கிட்டு இருக்காரு. பிரதமர் கனவுல இருக்கற மோடிக்கு, அமெரிக்க அரசாங்கம் விசா மறுத்த விவகாரத்தை மறக்கவே முடியலை. அமெரிக்க அரசாங்கம் விசா கொடுக்க சம்மதிச்சா, ஒரு முறை அமெரிக்கா போயி, அந்த கறையையும் துடைக்கணும்ன்ற ஐடியாவுலதான், ராஜ்நாத் சிங் அமெரிக்கா போகும்போது இதற்காக அமெரிக்காவுல சில அதிகாரிகளை சந்திக்க ஏற்பாடு பண்ணியிருந்தார்.
ஆனா, மோடிக்கு விசா குடுக்கக் கூடாதுன்னு எம்.பிக்கள் கடிதம் எழுதிய விவகாரம் வெளியானதால, ராஜ்நாத் சிங் நான் அந்த மாதிரி ஒரு கோரிக்கையோட அமெரிக்கா போகவேயில்லன்னு மறுத்துட்டாரு. ”
”அந்த கடிதத்துல நாங்க கையெழுத்து போடலன்னு எல்லா எம்.பிக்களும் மறுத்துட்டாங்களே… ? ” என்று சந்தேகத்தை எழுப்பினான் ரத்னவேல்.
”இந்த கையெழுத்து விவகாரத்துல திருமாவளவனைத் தவிர வேற யாரும் உண்மையை சொல்லல. அத்தனை பேரும் கையெழுத்து போட்டுருக்காங்க. சீதாராம் யெச்சூரியும் கையெழுத்து போட்டது உண்மை. அமெரிக்க ஏகாதிபத்தியத்திடம், ஒரு இந்தியனுக்கு விசா கொடுக்கக்கூடாதுன்னு பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை நிறுவப்போற கட்சி கேக்கறதான்னு பிரச்சினையாகும்னு கட்சி யோசிக்கிது. அது மட்டுமில்லாம, அருண் ஜெய்ட்லியும், இது தொடர்பா யெச்சூரிகிட்ட பேசியிருக்காரு. அதனாலதான் பச்சையா புளுகுறாரு யெச்சூரி. அவரோட பொய் இப்போ அப்பட்டமா அம்பலமாயிடுச்சு. கலிபோர்னியாவைச் சேர்ந்த தடய அறிவியல் நிபுணர், அந்த மனுவில் இருக்கக் கூடிய கையெழுத்துக்கள் அத்தனையும் உண்மையானவை, கட் அன்ட் பேஸ்ட் கிடையாது. ஒரே நேரத்தில் கையெழுத்திட்டவை என்று சொல்லிருக்காரு. இப்படி பச்சையா பொய் சொல்லி மாட்டிக்கிட்டு, நாளைக்கு வெக்கமே இல்லாம, மத்த கட்சிகளை குறை சொல்லுவாங்க மார்க்சிஸ்டுகள்.”
”விடு விடு… அவங்க இதுல மட்டுமா பொய் சொல்றாங்க. பாராளுமன்றத்தின் வழியா பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை நிறுவப்போறேன்னு சொல்றதே ஒரு பொய்தானே” என்றான் பீமராஜன்.
”சிபிஎம் இப்படி ஒரு நிலைபாடு எடுத்ததை விட, கருணாநிதி எடுத்த நிலைபாடுதான் சிரிக்க வைக்குது. ”
”ஆமாம். தலைவர் போன வாரம் மோடி விசா தொடர்பாக ஒரு விரிவான அறிக்கையை வெளியிட்டாரே.. ? ”
”அந்த அறிக்கையில, மோடிக்கு விசா வழங்கக்கூடாதுன்னு திமுக எம்.பிக்கள் கையெழுத்திட்ட விவகாரம் நிரூபணமானா, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்னு சொன்னாரு. மோடி ஒரு வேளை பிரதமராயிட்டா, நம்ப குடும்பத்தோட நலன்கள் பாதிக்கப்படும். கனிமொழியை காப்பாத்தக் கூடாதுன்ற பயம்தான் அதுக்கு காரணம்”
”இவர்தான் மதவாதத்தை ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்னு அப்பப்போ குரல் கொடுப்பாரே…”
”காங்கிரஸ் கட்சி சொல்லித்தான் இந்த ஏற்பாடுகளே நடந்துச்சு. காங்கிரஸ் கேட்டதால, மான மரியாதையையே அடகு வைச்ச கட்சிதானே திமுக ? கையெழுத்தா போட மாட்டாங்க ? ”
”ஏம்ப்பா.. தயாளு அம்மாளோட மருத்துவ பரிசோதனை என்னப்பா ஆச்சு ? ” என்றார் கணேசன்.
”அண்ணே.. குலாம் நபி ஆசாத் மூலமா பேச்சுவார்த்தை முடிஞ்சதுன்னு நான் ஏற்கனவே சொல்லியிருந்தேன்.. ஒரு முதியோர் நல மருத்துவர், ஒரு நரம்பியல் நிபுணர், ஒரு மனநல மருத்துவர், மற்றும் ஒரு பொது மருத்துவர் அடங்கிய குழு வந்து பரிசோதிச்சுட்டு டெல்லி போயிருக்கு. அந்த மருத்துவர் குழு அறிக்கையை உச்சநீதிமன்றத்துல சமர்ப்பிக்கும்.
உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகாமலே, நேரடியா உச்சநீதிமன்றத்துக்கு கருணாநிதி முயற்சியால நீதிபதியான சதாசிவம் இந்தியாவோட தலைமை நீதிபதியா இருக்கும்போது, கருணாநிதிக்கு என்ன கவலை ? ”
”அப்போ 2ஜி கேஸ் அவ்வளவுதானா ? ”
”சமீபத்துல செத்தார் தெரியுமா கொட்ரோச்சி…. ? ”
”ஆமா. போபர்ஸ் விவகாரத்துல முக்கிய புள்ளி. ”
”அவர் மரணத்தோட போபர்ஸ் வழக்கு இறுதியான முடிவுக்கு வந்தது போல, 2ஜி வழக்கும், முடிவுக்கு வந்துடும். வழக்கு விசாரணை இன்னும் பல வருஷங்கள் நடக்கும். தன் மேல உள்ள குற்றச்சாட்டுகளை ரத்து பண்ணணும்னு கனிமொழி உச்சநீதிமன்றத்துல வழக்கு போட்ருக்காங்க. இவரை மாதிரி மற்ற குற்றவாளிகளும் வழக்கு போடுவாங்க. இப்படியே ஜவ்வு மாதிரி இழுத்துக்கிட்டே இருக்கும்.
இந்தியாவுல எந்த குற்றவாளி ஊழலுக்காக தண்டிக்கப் பட்ருக்காங்க ? ”
”கொடநாடு க்ளைமேட் எப்படிடா இருக்கு ? ”
”கொடநாடு க்ளைமேட் கோல்டா இருந்தாலும், அம்மா ரொம்ப ஹாட்டா இருக்காங்க. ”
”என்ன மச்சான் சொல்ற… ? ” என்று வியப்பாக கேட்டான் ரத்னவேல்.
”சேலம் ஆடிட்டர் கொலை வழக்குல குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்ற வரைக்கும் உங்களை விட மாட்டேன். இன்னும் 15 நாள்ல கண்டுபிடிச்சே ஆகணும்னு கடுமையா சொல்லியிருக்காங்க. சென்னையை விட்டு எங்கயுமே நகராம, உக்காந்த இடத்துலயே பட்டறை போட்டுக்கிட்டு இருந்த அதிகாரிகள், இப்போ தமிழ்நாடு பூரா இந்த வழக்குக்காக அலைஞ்சுக்கிட்டு இருக்காங்க. ”
”உளவுத்துறையில கூடுதல் டிஜிபி போட்ருக்காங்களே தம்பி ? ” என்றார் கணேசன்.
”ஆமாம்ணே. மத அடிப்படைவாதத்தை காவல்துறை சரியா கணிக்கலைன்னு ஜெயலலிதா நினைக்கிறாங்க. ”
”அப்படி மோசமாவா இருக்கு நம்ப காவல்துறை ? ”
”அண்ணே… கொஞ்ச மோசமா இல்ல… ரொம்ப மோசமா இருக்கு. குறிப்பா உளவுத்துறை. ஜாபர் சேட் எப்போ உளவுத்துறை தலைவரா வந்தாரோ, அப்பவே உளவுத்துறை மோசமா ஆயிடுச்சு. மனிதர்களின் மூலம் உளவு பாக்கற கலையே அழிஞ்சு போச்சு. உளவுத்துறை நம்பியிருக்கிற ஒரே கருவி போன்தான். சம்பந்தப்பட்டவங்களோட மொபைல், லேன்ட் லைன் ரெண்டையும் ஒட்டுக் கேக்கறது. இது மட்டும்தான் உளவுன்னு உருவாக்கி வச்சுட்டாரு.
அந்த ட்ரெண்ட் இன்னை வரைக்கும் மாறல. அப்படியேதான் போகுது. இதுதான் இன்றைய பிரச்சினைக்கு பெரிய காரணம். குண்டு வைக்கிறவன் போன்ல பேசுவானா…. இது கூடத் தெரியாம, போனையே நம்பித்தான் உளவுத்துறை நடந்துக்கிட்டு இருக்கு.
இந்த மிகப்பெரிய பலவீனத்துனாலதான், மேலப்பாளையத்தில 17.5 கிலோ வெடிப் பொருட்களும், டெட்டனேட்டர்களையும் பதுக்கி வச்சுருந்தது பத்தி காவல்துறைக்கு கொஞ்சமும் தெரியாம இருந்துச்சு. இந்த வெடிப்பொருட்கள் கைப்பற்றப்படலன்னா, மோசமான சம்பவங்கள் நடந்துருக்க வாய்ப்பு இருக்கு. ஒரு குண்டு வெடிப்பு சம்பவம் நடந்துச்சுன்னா, அரசு இயந்திரம் மூர்க்கமா இறங்கும். இதனால பாதிக்கப்படுறது அப்பாவி முஸ்லீம்கள். இதையெல்லாம் தடுக்க வேண்டியது உளவுத்துறை. ஆனா, உளவுத்துறை முழுக்க முழுக்க ஒட்டுக்கேட்கும் துறையா மாறிடுச்சு.
அது மட்டுமில்லாம இஸ்லாமிய மத அடிப்படைவாதிகள் சிலர் பண்ற பிரச்சினையாலதான், ஒட்டுமொத்த சமூகத்துக்கே கெட்ட பேர் வருது. முஸ்லீம் பெண்கள் பர்கா அணிவது குறித்து விஜய் டிவியில நீயா நானா நிகழ்ச்சி நடத்துனப்போ, விஜய் டிவியை மிரட்டி, அந்த நிகழ்ச்சியை நடத்த விடாம தடுத்தது, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தான். அதே மாதிரி இன்னொரு சம்பவம் நடந்துருக்கு.
அமீனா வதூத். இவர் ஒரு இஸ்லாமிய மத அறிஞர். அமெரிக்காவில் பிறந்த கருப்பின பெண். இவரை இஸ்லாமிய பெண்ணியவாதி என்றும் அழைக்கலாம். இஸ்லாமியப் பெண்ணாக இருந்து, தொழுகைகளை வழிநடத்தியதால், இமாம்களின் வெறுப்புக்கு ஆளானவர். பெண்கள் ஏன் இமாம் ஆகக்கூடாது என்ற கேள்வி எழுப்பியவர்.
அமீனா வதூத்
2005ம் ஆண்டு அமெரிக்காவில், 60 பெண்களையும், 40 ஆண்களையும் ஒன்றாக அமரவைத்து தொழுகை நடத்தியவர். அதிலிருந்து இவர் உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையில் பல்வேறு மிரட்டல்களை மத அடிப்படை வாதிகள் விடுத்து வந்தனர்.இந்நிலையில், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள எஸ்ஐஈடி கல்லூரியில் அமீனா வதூத் திங்கள் மாலை ஒரு சொற்பொழிவு ஆற்றுவதா இருந்துச்சு. இந்த நிகழ்ச்சியையும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பு தன் தொண்டர்களை வைச்சு, போன் மூலமா கல்லூரி நிர்வாகத்துக்கும், சென்னை பல்கலைக்கழகத்துக்கும் மிரட்டல் விடுத்துருக்காங்க.இதுக்கு பாதுகாப்பு குடுக்க வேண்டிய காவல்துறை, இந்த மிரட்டலுக்கு பயந்து, நிகழ்ச்சியை ரத்து பண்ண வச்சுட்டாங்க.. ஜனநாயகத்தின் குரல்வளையை இது போன்ற மத அடிப்படைவாதிகள் நெறிக்கறதை ஏன் ஜெயலலிதா அனுமதிக்கிறாங்கன்னு தெரியலை. விஸ்வரூபம் விவகாரத்துல ஜெயலலிதா எடுத்த தவறான முடிவு, இந்த அடிப்படைவாதிகளோட வளர்ச்சிக்கு பெரிய உறுதுணையா இருந்துக்கிட்டு இருக்கு.
இதையெல்லாம் உணர்ந்த ஜெயலலிதா, உளவுத்துறையை சீர்படுத்தனும்னு ஜெயலலிதா முடிவெடுத்திருக்காங்க. முதல் கட்டமா, பொருளாதாரக் குற்றப்பிரிவு கூடுதல் டிஜிபியா இருந்த அஷோக் குமாரை, உளவுத்துறைக்கு நியமிச்சிருக்காங்க. வடக்கு மண்டல ஐஜியா இருந்த கண்ணப்பனை உள்நாட்டு பாதுகாப்பு ஐஜியா நியமிச்சிருக்காங்க.”
அஷோக் குமார் ஐபிஎஸ்
”கூடுதல் டிஜிபி அஷோக் குமாரும், ஜாங்கிட்டும் நெருக்கமாச்சே.. நாகர்கோயில்லேர்ந்து ஜாங்கிட் சென்னை வந்துடுவாரா…. ? ”
”கூடா நட்பு கேட்டில் முடியும்ன்றது, ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவரா இருந்தாலும், அஷோக் குமாருக்கு தெரியும். அந்தத் தப்பை பண்ண மாட்டார்னு சொல்றாங்க. ஏன்னா, டிஜிபியும் சரி, ஜெயலலிதாவும் சரி, ஜாங்கிட் மேல கடும் கோபத்துல இருக்கறதா சொல்றாங்க. முக்கியமான கட்டத்துல உளவுத்துறைக்கு சரியான நபரா அவரைக் கருதித்தான் நியமிச்சிருக்காங்க. இவரை மாதிரி ஓய்வு பாக்காம வேலை பாக்கற ஆள்தான் உளவுத்துறைக்கு வேணும்னு போட்ருக்காங்க. இந்த நேரத்துல இப்படி ஒரு ரிஸ்கை எடுத்து, தன்னோட பதவிக்கு ஆபத்து உண்டு பண்ண மாட்டார் அஷோக் குமார்.”
“தீயணைப்புத் துறைக்கு புது கூடுதல் டிஜிபி போட்ருக்காங்களே… ? ” என்றான் பீமராஜன்.
”ஆமாம் மச்சான். அந்தப் பதவியில இருந்த உபாத்யாய் இன்னைக்கு நாளைக்கு ஒய்வு பெற்றாரு. அவரு இடத்துலதான் ரமேஷ் குடவாலாவை நியமிச்சிருக்காங்க. ”
”உபாத்யாய் நேர்மையான அதிகாரின்னு சொல்றாங்களே.. ”
”அவரை மாதிரி நேர்மையான அதிகாரியை தமிழ்நாடு காவல்துறை பாத்துருக்குமான்னு தெரியல. நேத்து பாருக்கு வந்திருந்த ஒரு அதிகாரி அவரைப் பத்தி சொல்லிக்கிட்டு இருந்தாரு.
1991ல லஞ்ச ஒழிப்புத் துறை எஸ்.பியா இருந்தாராம். ரகசிய நிதியிலேர்ந்து ஒரு பைசா கூட எடுக்க மாட்டாராம். மெக்ரென்னெட் பேக்கரியிலேர்ந்து தினமும் கோதுமை ப்ரெட் வாங்கி, அதைத்தான் மதிய உணவா சாப்பிடுவார். ஒவ்வொரு நாளும், அந்த ப்ரெட்டுக்கு இவர்தான் பணம் கொடுப்பார்.
மீண்டும் 2007ல் லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநராக அதே துறைக்கு வந்த பிறகும், இதே அணுகுமுறைதான். இவருக்கு முன்னாடி இருந்த இயக்குநர்கள், ரகசிய நிதியை எடுத்து தங்கள் சொந்த செலவுக்கு பயன்படுத்தறதும், ஊழியர்களுக்கு பிரியாணி போட்றதையும் வழக்கமா வச்சுருந்தாங்க. ஆனா, இவர் வந்ததும், அந்த பழக்கத்தையெல்லாம் அப்படியே நிறுத்துனார். ரகசிய நிதியை சேமிச்சு மீண்டும் அரசாங்கத்துக்கு சரண்டர் செஞ்ச ஒரே அதிகாரி உபாத்யாய்தான். ஆனா, ஜெயலலிதா அரசாங்கம் இவரை சரியா பயன்படுத்திக்கலன்னுதான் சொல்லணும்.
இவர் தன்னோட தொலைபேசி உரையாடல்களை பதிவு செஞ்சு வச்சுருந்தார்னு இவர் மேல குற்றச்சாட்டு வந்தது. ஜெயலலிதா மேல பொய் வழக்கு பதிவு பண்ணணும்னு கருணாநிதி துடிச்சப்போ, இவரை அப்போதைய தலைமைச் செயலாளர் திரிபாதி தினமும் போன்ல பேசி தொல்லை பண்ணாரு. அந்த மாதிரி பண்றதுக்கு சட்டத்துல இடம் இல்ல. கொடநாடு எஸ்டேட் வாங்கின விஷயத்துல, ஜெயலலிதாவுக்கு எதிரா வழக்கு பதிவு பண்ண முகாந்திரம் இல்லன்னு தொடர்ந்து மறுத்து வந்தாரு. ஆனாலும், இவரை விடாமல் தொல்லை பண்ணாரு திரிபாதி.ஒரு நேர்மையான அதிகாரி என்ன பண்ண முடியும் ? இப்படி தலைமைச் செயலாளர் மிரட்டினார்ன்றதை நிரூபிக்க வேறு என்ன ஆதாரத்தை உருவாக்க முடியும் ? அதனாலதான் பதிவு செஞ்சாரு. அவர் அப்படி ஒரு உரையாடலை பதிவு செஞ்சு வச்சதாலதான், ஜெயலலிதா மேல பொய் வழக்கு போட கருணாநிதி முயற்சி செஞ்ச விவகாரமே வெளிச்சத்துக்கு வந்துச்சு…
ஆனா, ஜெயலலிதா அரசாங்கம், இவரோட பதவி உயர்வை தாமதப்படுத்துனது மட்டுமில்லாம, நல்ல பதவி கூட குடுக்காம இவரை அலைக்கழிச்சாங்க…”
”ஏன் ஜெயலலிதா இப்படிப் பண்ணாங்க ? ”
”தேரான் தெளிவும் தெளிந்தான்கண் அய்யுறவும்
தீரா இடும்பைத் தரும்” னு வள்ளுவர் சொன்னது, ஜெயலலிதாவுக்கு முழுக்க முழுக்க பொருந்தும்.
”காவல்துறையில மாற்றங்கள் இருக்குமா ? ” என்றான் வடிவேலு.
”மாற்றங்கள் இருக்கோ இல்லையா… ஆனா சில மாற்றங்களை செஞ்சே ஆகணும்.
கிழக்குக் கடற்கரைச் சாலையில சில அசைவ உணவகங்கள் இருக்கு. ஜெயலலிதா எப்போ சிறுதாவூர் போனாலும், காவல்துறையினர் இந்த உணவங்கள்ல பணம் கொடுக்காம உணவு வாங்கறது வழக்கம்.
எப்போ காவல்துறையினர் போனாலும், உணவங்களில் உணவு இலவசமாத்தான் குடுக்கறாங்க. அப்படி போன ஞாயித்துக் கிழமை இதே மாதிரி ஒரு அசைவ உணவகத்துல, சேகர்னு ஒரு உதவி ஆய்வாளர் மதிய உணவு கேட்டிருக்கார். அவருக்கு பிரியாணி வேணுமா சாப்பாடு வேணுமான்னு கேட்டதுக்கு சாப்பாடு போதும்னு சொல்லியிருக்கார். சாப்பாடு அனுப்புனதும், ஓட்டல் முதலாளிக்கு போன் பண்ணி, வெறும் சாப்பாடு அனுப்புனா எப்படிய்யா மனுசன் சாப்பிடுவான்… கூட மட்டன், சிக்கன் குடுத்தனுப்ப மாட்டியா… உனக்கு அறிவில்லையா ன்னு கேட்ருக்கார். ஓட்டல் ஓனர், என்ன சார் இப்படிப் பேசறீங்கன்னு சொல்லியிருக்கார். அவ்வளவுதான்.
ஹோட்டல் அருகே ஓரமாக நிறுத்தப்பட்டிருக்கும் கார்
மறுநாள் வந்த மற்றொரு உதவி ஆய்வாளர், ஓட்டலுக்கு சாப்பிட வந்தவர்கள் நிறுத்தியிருந்த கார்களையெல்லாம் பூட்டுப் போட்டு விட்டு போய் விட்டார். ஏன் சார் இப்படி என்று கேட்டால், நோ பார்க்கிங் என்று கூறியிருக்கிறார். நோ பார்க்கிங் போர்டு கூட இல்லை. போக்குவரத்துக்கு இடைஞ்சலாகக் கூட இல்லையே என்றதற்கு, சட்டம் பேசாதீர்கள் என்று கூறி விட்டு சென்று விட்டார். இந்த மாதிரியான நபர்களை, மணிமுத்தாறு பட்டாலியனுக்கு மாற்றினால்தான் அடங்குவார்கள்”
”முகம்மது ஷாஜிக்கு நீதிமன்றம் ஜாமீன் குடுத்துடுச்சாமே… ? ”
”ஆமாம்டா… ஆனா அதுக்கு முன்னாடி, ஷாஜியால, சிறை நிர்வாகம் கொள்ளை கொள்ளையா சம்பாதிச்சுது. சிறைத்துறை கூடுதல் டிஜிபி “சரிபாதி கேட்கும் திரிபாதி”க்கு கணிசமான தொகை கொடுத்திருக்காங்க. சிறைக் கண்காணிப்பாளர் கருப்பண்ணனுக்கு 10 லட்ச ரூபாய் கொடுத்திருக்காங்க. ”
”எதுக்கு இவ்வளவு பணம் ? ”
”அட என்னடா நீ… சிறையில சொகுசு வாழ்க்கை வாழ வேணாமா ? ”
”ஷாஜிக்கு கார்ட்டன் கார்ட்டனா வெளிநாட்டு சிகரெட், வீட்டு உணவு, ஸ்காட்ச் விஸ்கி இதெல்லாம் வேணும்னா பணம் இல்லாம எப்படி கிடைக்கும் ? ”
”அப்போ சொகுசாத்தான் இருந்தாரா ஷாஜி… ? ”
”சொகுசாத்தான் இருந்தாரு.. கருப்பண்ணன் இன்னொரு 5 லட்ச ரூபாய் வேணும்னு கேட்ருக்காரு. எவ்வளவுதான் தர்றதுன்னு குடுக்க முடியாதுன்னு சொல்லிட்டாங்க. அன்னைக்கு இரவே கருப்பண்ணன் சிறைக் காவலர்களை அனுப்பி, ஷாஜியோட அறையை சோதனை போட்ருக்கார். சோதனையின்போது 2 ஸ்காட்ச் பாட்டில், 30 பாக்கெட் சிகரெட் மற்றும் 2.5 லட்ச ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டுச்சு.. உடனே ஷாஜியை வேலூர் சிறைக்கு மாத்திட்டாங்க. ”
”இவங்க மேலயெல்லாம் நடவடிக்கை எடுக்க மாட்டாங்களா ? ”
”தெரிஞ்சாத்தானே நடவடிக்கை எடுப்பாங்க… ? ” என்று அடுத்த மேட்டருக்கு தாவினான்.
”சேலம் ஆடிட்டர் கொலை நடந்ததுல, யாருக்கு சந்தோஷமோ இல்லையோ, இந்தியா சிமென்ட்ஸ் சீனிவாசனுக்கு, பயங்கர சந்தோஷம். குருநாத் மெய்யப்பனை சிபி.சிஐடி போலீசார் விசாரணைக்கு கூப்பிடப் போறாங்கன்னு தெரிஞ்சதும், சீனிவாசனும், குருநாத் மெய்யப்பனும், ஒவ்வொரு ஜோசியக்காரனா பாத்து அலைஞ்சுக்கிட்டு இருந்தாங்க. ஒரு கட்டத்துல ரொம்ப பயந்து போய் இருந்தாங்க. சேலம் ஆடிட்டர் கொலை வழக்கு சிபி.சிஐடிக்கு மாறுனதும், காவல்துறையோட கவனம், அவங்க பக்கம் திரும்பியதால, இந்த வழக்கை அப்படியே விட்டுட்டாங்கன்னு அவங்களுக்கு நிம்மதி. இவங்களோட சேந்து நிம்மதியா இருக்கற இன்னொரு நபர், சம்பத் குமார் ஐபிஎஸ். ”
“சரி பத்திரிக்கை உலக செய்திகள் என்னப்பா இருக்கு ?” என்றார் கணேசன்.
”அண்ணே… ஒரு நகைச்சுவையோட தொடங்குவோம். போன வாரம், டிஜிபி ஒரு அறிக்கை வெளியிட்டாரு. அந்த அறிக்கையில, இந்து தலைவர்கள் கொலைகளை காவல்துறை சரியா விசாரிக்கலைன்ற தகவலை மறுத்து கூறியிருந்தாரு. இந்த செய்தியை ஜெயா டிவியில வெளியிட்டாங்க. ஜெயலலிதாவோட அறிக்கை பத்திய செய்திகள் போடும்போது, ஒரு பக்கத்துல அறிக்கையும், மறுபக்கத்துல ஜெயலலிதா படமும் போடுவாங்க. தமிழ்நாடு டிஜிபியோட அறிக்கையை போடும்போது தமிழ்நாடு போலீஸ் லோகோ போடணும்னு கூகிள்ல தேடியிருக்காங்க. எடுத்து போட்டு செய்தியும் ஒளிபரப்பாயிடுச்சு. அதுக்குப் பிறகுதான் தெரிஞ்சுச்சு, அவங்க போட்ட லோகோ, யாரோ ஒரு குசும்பு புடிச்ச நபர், TRUTH ALONE TRIUMPHSக்கு பதிலா BRIBE ALONE TRIUMPHSனு போட்ட லோகோவை ஜெயா டிவி செய்தியில ஒளிபரப்பிட்டாங்க. “
அந்த லோகோ
“யாரு இதுக்குக் காரணம்… ? “
“வேற யாரு… தனிக்காட்டு ராஜாவா 1 லட்சத்து 70 ஆயிரம் சம்பளம் வாங்கிற ஜெயா டிவி செய்தி ஆசிரியர் மதிவாணன்தான். இப்போதான் இவங்களுக்கு தில்லையோட அருமை தெரியுது. “
“இந்து நாளேட்டுக்கு ஆளெடுக்கும் பணி எப்படிப் போயிட்டு இருக்கு தம்பி“ என்றார் கணேசன். அவரும் அண்ணாசாலையில் உள்ள நாளிதழில் வேலை பார்ப்பவர் அல்லவா… அதனால் கூடுதல் ஆர்வம்.
“அண்ணே.. தமிழ் இந்து நாளேடு நிர்வாகம், எதை நோக்கிப் போகுதுன்னே தெரியலை. மார்கெட்ல நம்பர் ஒன்னா இருக்கற பேப்பரைத்தான் எல்லாரும் டார்கெட் பண்ணுவாங்க. ஆனா, இந்துவோட டார்கெட்டே தினமணியா இருக்கு. ஒரு நாளிதழுக்கு தானா வேலைக்குப் போறது இயல்பு. ஆனா, இவங்களா எல்லோரையும் போன் பண்ணி வேலைக்கு வாங்கன்னு கூப்புட்றது என்ன வகையான தர்மம்னு தெரியலை. லே அவுட் ஆர்ட்டிஸ்டையெல்லாம் கூப்புட்றாங்க..
கோலாகல சீனிவாஸ்ன்ற நபர், தான் ஒரு வலதுசாரி இந்துத்துவா வாதின்னு அறிவிச்சுக்கிட்டவர். இடது சாரி சார்பா இருக்கற இந்துவோட நாளிதழ்ல இப்படி வலதுசாரி நபரை முக்கிய பொறுப்புல உக்கார வச்சுருக்கறதே இவங்களோட நோக்கம் என்னன்னு சந்தேகத்தை ஏற்படுத்துது.
தமிழ் இந்துவோட வருகையால, தமிழ் பத்திரிக்கை சூழல்ல ஊதிய உயர்வு ஏற்பட்டிருக்கறது உண்மையா இருந்தாலும், தினமணியோட போட்டி போடணும்னு நெனைச்சு இந்து வேலை செய்யறதுதான் யாருக்குமே புரியலை. “
“சரி… இந்து இப்போ எதுக்காக தமிழ்ப்பேப்பர் ஆரம்பிக்கிறாங்க.. ஏதாவது சமுதாய நோக்கம் இருக்கா… ? “ என்றான் ரத்னவேல்.
“சமுதாய நோக்கமும் இல்ல… சமத்துவ நோக்கமும் இல்ல.. விளம்பர வருவாயை பெருக்கணும்ன்றது மட்டும்தான் அவங்க நோக்கம். விளம்பரத்துல டைம்ஸ் ஆப் இந்தியாவோட போட்டி போட முடியல.. தமிழ்நாட்டுல மட்டும்தான் நம்பர் ஒன்னா இருக்கு இந்து. இந்து தொடங்குன கொல்கத்தா பதிப்பு வெற்றி பெறலை. கேரளாவுல இந்து நம்பர் ஒன் இல்ல. டெல்லியிலயும் இல்ல. கர்நாடகாவுலயும், கேரளாவுலயும் கூட இரண்டாவது இடத்துலதான் இருக்கு. இதற்காக விளம்பர வருவாயை பெருக்கியே ஆகணும்ன்ற கட்டாயத்துலதான் இதைத் தொடங்கறாங்க.
தமிழ்நாட்டுல நம்பர் ஒன் தினத்தந்தி. நம்பர் 2 தினகரன். நம்பர் 3 தினமலர். இந்த செய்தித் தாள்களோட போட்டி போடணும்ன்ற எண்ணமே இல்லாம, நாலாவது இடத்துல இருக்கற தினமணிதான் தங்களுக்குப் போட்டின்னு நெனைச்சு வேலை பாக்கறாங்க. “
“சரி… இந்த தமிழ் நாளிதழ் வெற்றி பெறுமா ? “
“அதுதான் இந்து நிர்வாகத்துக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கு. நமக்கு இப்போதுள்ள சூழலில் எங்கே இடம் என்பதையே அவங்க முடிவு பண்ணல. தந்தி மாதிரி செய்தி பண்ண முடியாது. தினகரன், தினமலர் மாதிரியும் இருக்கக் கூடாது. எப்படி இதை உருவாக்கறதுன்றது அந்த நிர்வாகத்துக்கு இப்போ வரைக்கும் குழப்பமாத்தான் இருக்கு“
“சரி எப்போதான் பேப்பர் வரப்போகுதாம் ? “
“அது அவங்களுக்கே தெரியாது… நான் எப்படிடா சொல்ல முடியும் ? “
“தந்தி டிவியில என்ன நடக்குது ? “ என்றான் வடிவேல்.
“தந்தி டிவியில பெரிய கூத்து நடக்குது. “ என்று சொல்லி சிரித்தான் தமிழ்.
“சொல்லிட்டு சிரிடா… “
“தந்தி டிவியில ரங்கராஜ் பாண்டேன்ற நபர் ஆசிரியரா இருக்கார். அவரால பெரிய குழப்பம் நடந்துக்கிட்டு இருக்கு. இவர் வெளிப்படையான ஆர்எஸ்எஸ்காரர். பீகார் மாநிலத்தை பூர்வீகமா கொண்டவர். இதுக்கு முன்னாடி, தினமலர்ல தலைமை நிருபரா இருந்தார்.
ரங்கராஜ் பாண்டேவோடு ரஜினிகாந்த் (இப்படி சொன்னாத்தான் பாண்டே சாருக்குப் பிடிக்கும்)
மூவர் உயிரைக் காப்பதற்காக, தீக்குளிச்சு உயிரிழந்த செங்கொடியைப் பத்தி காதல் தோல்வியால தீக்குளிச்சாங்கன்னு செய்தி போட்ட புண்ணியவான். இவரை பூபதின்றவர்தான் தந்தி டிவிக்கு எடுத்தார். நிகழ்ச்சித் தொகுப்பாளராத்தான் எடுத்தார். ஆனா, இவர் தன்னுடைய உள்குத்து திறமையால ஆசிரியரா ஆயிட்டார்.
இவரை வேலைக்கு எடுத்த ஜெயசீலன், வேலையை விட்டுப் போகும்போது இவனை மாதிரி ஒரு மோசமான ஆளை பாத்ததேயில்லன்னு சொல்லிட்டுப்போயிட்டார்.
தன் கூட வேலை பாக்கற யாரா இருந்தாலும், அவங்களை மட்டம் தட்டி முன்னேற விடாம பண்றதுல ரங்கராஜ் பாண்டே கில்லாடி. தன்னோடு இந்து மத வெறியால, மாற்று சமூகத்தினரை மட்டம் தட்ற வேலையையும் பார்ப்பார்.
மை.பா நாராயணன் என்பவர் தந்தி டிவியில கேள்விக்கென்ன பதில்ன்ற நிகழ்ச்சியை நடத்திட்டு இருந்தார். அந்த நிகழ்ச்சியை ஓரங்கட்டி, நாராயணனையும் ஓரங்கட்டுனவர்தான் இந்த பாண்டே. இதுக்கு முன்னாடி இங்க வேலை பாத்த மதிவாணனையும் இதே மாதிரி ஓரங்கட்டுனதாலதான், நான் வேலையை விட்டுப் போறதுக்குக் காரணமே, பாண்டேதான்னு சொல்லிட்டுப் போயிட்டார்.”
தந்தி டிவியை நம்பர் 2 இடத்துக்கு கொண்டு வரணும்ன்றது தந்தி டிவி நிர்வாகத்தோட நோக்கம். செய்தித்தாள்ல நம்பர் ஒன்னா இருக்கற நம்பளால நம்பர் 2 இடத்துக்கு வர முடியலையேன்ற ஆதங்கம் நிர்வாகத்துக்கு இருக்கு. ஒரு மாசத்துக்கு சேனல் நடத்தறதுக்கு 2 கோடி செலவாகுது. ஆனா விளம்பர வருவாய் வெறும் 70 லட்சம் மட்டும்தான்.
குறைந்தபட்சம் ஃப்ளாஷ் நியூஸ்களை வேகமாகக் கொடுத்தால் கூட, பார்வையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். ஆனால், அதைக் கூட செய்ய விடாமல் தடுக்கிறார் பாண்டே. தனக்கு பிடித்தமான முக்கியமான செய்திகளை மட்டும், வருமாறு பார்த்துக் கொள்கிறார்.
பாண்டேவுக்கு அர்நப் கோஸ்வாமி போல ஆக வேண்டும் என்ற விருப்பம். இதனால், நேர்முகத்துக்கு வருபவர்களை பேசவே விடாமல், இவரே பேசிக் கொண்டிருப்பார்.
இவர் மீதுள்ள இன்னொரு குற்றச்சாட்டு, தமிழக பிஜேபி நிர்வாகியான வானதி ஸ்ரீநிவாசனை அடிக்கடி நிகழ்ச்சிக்கு அழைப்பது. கிட்டத்தட்ட வானதி ஸ்ரீநிவாசனை தந்தி டிவியின் நிலைய வித்வானாகவே ஆக்கி விட்டார்.”
”இவர் ஏன் பிஜேபிக்கு இப்படி முக்கியத்துவம் கொடுக்கிறார்… ? ”
”ரெண்டு காரணம். ஒன்று இவர் ஆர்எஸ்எஸ் என்பதால், அதைச் செய்கிறார். இன்னொன்று, இரண்டு பேருக்கும் இது வசதி அல்லவா ? வானதி ஸ்ரீநிவாசன் அடிக்கடி தொலைக்காட்சியில் வந்தால் அவர்தான் தமிழக பிஜேபியின் ஒரே முகம் என்று அவருக்கு பலன். இப்படி செய்வதால், பிஜேபி தலைவர்களிடம் ரங்கராஜ் பாண்டேவின் பெயரை அறிமுகம் செய்து, இவரை ராஜ்ய சபை எம்.பியாக்கலாம் என்ற திட்டமும் உண்டு. பாண்டேவுக்கு எம்.பியாக வேண்டும் என்பது நீண்ட நாள் கனவு. ”
”சரி தந்தி நிர்வாகம் ஏன் இதை அனுமதிக்குது ? ”
”பாண்டே என்னும் பூனைக்கு மணி கட்டுவதற்காகத்தான், சன் டிவி ராஜாவை நியமிக்கலாம் என்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்கள். தந்தி டிவியை இரண்டாவது இடத்துக்கு கொண்டு வருவதற்கு சரியான ஆள் ராஜாதான் என்று தந்தி டிவி மேலிடம் முடிவெடுத்தது. ”
”ராஜாவுக்கு சன் டிவியில சீட்டை கிழிச்சுட்டாங்களா ? ”
”இன்னும் முழுசா கிழிக்கலை. கிழிக்கப் போறாங்க. இப்போ அதுக்காகத்தான் ஒரு கண்துடைப்பு விசாரணை நடத்திக்கிட்டு இருக்காங்க. இந்த விசாரணை முடிஞ்சா தன்னை வேலைக்கு எடுத்துடுவாங்கன்னு ராஜா நினைச்சுக்கிட்டு இருந்தார். ஆனா சன் டிவி நிர்வாகத்தைப் பாத்துக்கிற கலாநிதி மாறனோட மகள் காவ்யா நான் இதை அனுமதிக்க மாட்டேன்னு உறுதியா சொல்லிட்டாங்களாம். அவங்க சவுக்கு தளத்தோட வாசகர் கூடவாம்.
ராஜா வந்துட்டா நம்ப சீட்டை கிழிச்சுடுவாங்கன்னு நெனைக்கிற ரங்கராஜ் பாண்டே, ராஜா தந்தி டிவிக்கு வரப்போறார்ன்ற செய்தி பொய் செய்தி.. ராஜா மாதிரி ஆளை தந்தி டிவியில எடுக்க மாட்டாங்கன்னு செய்தியை பரப்பிக்கிட்டு இருக்கார். ”
”அப்போ ராஜா வர்றது உறுதிதானா… ? ”
”உறுதியாத்தான் இருந்துச்சு.. ஆனா, ராஜாவை தந்தி டிவியில எடுக்கறாங்கன்ற செய்தியை யாரோ ஃபேஸ்புக்ல போட்டு அது தீயா பரவிடுச்சு. இதனால, இப்படிப்பட்ட நபரை எடுத்தா நமக்கு கெட்ட பேரோன்னு தந்தி நிர்வாகம் தயங்குது. ஆனாலும், பாண்டேவுக்கு மணி கட்டறதுக்கும், தந்தி டிவியை ரெண்டாவது இடத்துக்கு கொண்டு வர்றதுக்கும், ராஜாதான் சரியான நபர்னு நினைக்கிறாங்க. ”
“அண்ணே போலாமா…. டயர்டா இருக்கு…” என்று தமிழ் சொன்னதும், எல்லோரும் அவனை ஆமோதித்து எழுந்தனர்.