தலித் இளைஞர்கள், ஜீன்ஸ் பேன்ட் அணிந்து கொண்டு, கூலிங் கிளாஸ் போட்டுக் கொண்டு வன்னிய பெண்களை கவர்ந்து ஏமாற்றுவதையே வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார்கள் என்று பகிரங்கமாக குற்றம் சாட்டினார் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாஸ்.
இங்கே நாம் பார்க்கப் போவது ஜீன்ஸ் பேன்ட் அணிந்த தலித் இளைஞனைப் பற்றிய கதை அல்ல. ஜீன்ஸ் பேன்ட் அணிந்து, ஒரு தலித் பெண்ணை காதலித்து திருமணம் செய்து, அவளை மகிழ்ச்சியாக வாழவைக்கும் ஒரு வன்னிய இளைஞனைப் பற்றியது இந்தக் கதை.
ராமதாஸைப் போல காழ்ப்புணர்ச்சியோடு அந்த வன்னிய இளைஞன் தலித் பெண்ணை காதலிப்பதற்காகவே ஜீன்ஸ் அணிந்தான் என்று நாம் சொல்லப் போவதில்லை. அந்தக் காதல் இயல்பாகவே மலர்ந்தது.
ஓசூரில் சுதா தன் பெற்றோரோடு வாழ்ந்து வருகிறாள். சுதா தலித் சமூகத்தைச் சேர்ந்த பெண். அவள் தந்தை ஓசூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறாள். அவளுக்கு சொந்த ஊர், தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பறையப்பட்டிதான் அவள் சொந்த ஊர்.
தருமபுரி மாவட்டம் வேப்பமரத்தூரைச் சேர்ந்தவன் சுரேஷ். அவரது உறவினர் வீடு, ஓசூரில் சுதா வசித்த வீட்டின் அருகே இருந்தது. அடிக்கடி தன் உறவினர் வீட்டுக்கு வந்த சுரேஷ் சுதாவோடு காதல் வயப்படுகிறார். இருவரும் சிறிது காலம் காதலித்த பின்னர், தங்கள் வீட்டில் திருமணத்துக்கு ஒப்புக் கொள்ள மாட்டார்கள் என்பதை உணர்கின்றனர். ஏப்ரல் 2010ல், இருவரும் ஒரு கோயிலில் திருமணம் செய்து கொள்கின்றனர்.
திருமணம் முடிந்ததும், இருவர் வீட்டிலும் தகவல் தெரிவிக்கப்படுகிறது. தொடக்கத்தில் கோபமடைந்த சுரேஷ் வீட்டில், பின்னர் சமாதானமடைந்து, பெண்ணின் சாதி என்ன என்பதை வெளியில் சொல்ல வேண்டாம் என்று முடிவெடுக்கின்றனர். சுரேஷின் சொந்த ஊரான வேப்பமரத்தூரில் திருமண வரவேற்பு நடைபெறுகிறது. அந்த ஊரில் உள்ள அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு வாழ்த்துச் சொல்கின்றனர்.
இரண்டு வருடங்கள் கழித்து மே 2012ல் சுதா- சுரேஷ் தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தை பிறக்கிறது. மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் சூழலில்தான் இளவரசன் திவ்யா திருமணத்தை தொடர்ந்து நத்தம் காலனியில் வன்முறை வெடிக்கிறது. அந்த வன்முறையைத் தொடர்ந்துதான் மருத்துவர் ராமதாஸ் சாதிவெறி என்ற ஆயுதத்தைக் கையில் எடுக்கிறார். மாவட்டம் மாவட்டமாக சென்று தலித் அல்லாத சாதியினரை ஒன்றிணைக்க முயற்சிக்கிறார். வன்னியர் சங்க நிர்வாகிகள், கலப்புத் திருமணம் செய்து கொண்டவர்களின் விபரங்களை சேகரிக்கின்றனர்.
இந்த ஆண்டு ஜனவரி முதலாகவே வேப்பமரத்தூர் கிராமத்தில் சுரேஷ் சுதா தம்பதியினரை ஒரு மாதிரியாக பார்க்கத் தொடங்குகிறார்கள். அரசல் புரசலாக, இவர்களைப் பற்றி பேசத் தொடங்குகின்றனர். ஆனால் பெரிய அளவில் எதுவும் நடக்காமல் இருந்ததால், பிரச்சினை ஏதும் இல்லை. ஆனால், ஜுன் மாத வாக்கில் பிரச்சினை தொடங்குகிறது. ஊர் திருவிழாவுக்காக, ஒவ்வொரு வீட்டுக்கும் வரி வசூலிக்கும் பணி நடைபெறுகையில், சுரேஷ் குடும்பத்தாரிடம் மட்டும் வரி வசூல் செய்யப்படவில்லை. சுரேஷும், யாரிடமாவது வரிப் பணத்தை செலுத்தலாம் என்று எடுத்த முயற்சிகளும் வெற்றி பெறவில்லை. என்ன ஏது என்று எவ்வித காரணமும் கூறாமலேயே வரியை வாங்க மறுக்கிறார்கள். சரி… திருவிழா முடிந்ததும் பார்த்துக் கொள்ளலாம் என்று இவர்களும் விட்டு விடுகிறார்கள்.
திருவிழா முடிந்த மறுநாள், சுரேஷ் குடும்பத்தாரே பஞ்சாயத்தைக் கூட்டுகிறார்கள். பஞ்சாயத்தில் ஊர்ப் பெரியவர்கள் அமர்கிறார்கள்.
வெளிப்படையாகவே கூறுகிறார்கள். உன் மனைவி தலித் சாதி என்று ஊருக்குள் பேசிக்கொள்கிறார்கள். அதனால்தான் உங்கள் குடும்பத்தில் வரி வாங்கவில்லை. அது பொய்யென்றால், உடனடியாக உன் மனைவியின் சாதிச் சான்றிதழை பஞ்சாயத்தில் சமர்ப்பிக்க வேண்டும். வேறு எந்த சாதியாக இருந்தாலும் நாங்க பொறுத்துக் கொள்வோம்… ஆனால், உன் மனைவி தலித் சாதி என்கிறார்கள்… அந்தப் பெண் கடந்த இரண்டு வருடங்களாக நம் ஊர் கோயிலுக்குள் நுழைந்திருக்கிறாள்… பொதுக் கிணற்றில் தண்ணீர் எடுத்திருக்கிறாள்.. உன் மனைவி தலித் இல்லை என்பதை நிரூபித்து விட்டு, மேலே பேசு என்று கூறியிருக்கிறார்கள்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சுரேஷ் குமார் குடும்பம், சுதா தலித் சமுதாயத்தைச் சேர்ந்த பெண்தான் என்பதை ஒப்புக் கொள்கின்றனர். பஞ்சாயத்தார்களிடம் சுரேஷ், நான் இந்தப் பெண்ணோடு இரண்டு வருடங்களாக வாழ்ந்து வருகிறேன். எங்களுக்கு குழந்தை இருக்கிறது. எங்களை ஊரை விட்டுப் போகச் சொன்னால் எங்கே போவோம்… எங்களால் யாருக்கும் எந்தப் பிரச்சினையும் கிடையாது… ஏன் எங்களை இப்படிச் செய்கிறீர்கள் என்று கேட்டதற்கு எந்தப் பதிலும் வராமல், எவ்வித முடிவும் எடுக்காமல் கூட்டம் முடிவடைகிறது. அதற்கு சில நாட்கள் கழித்து ஒவ்வொரு நாள் அமாவாசை அன்றும், அந்த ஊர் கூடி, பொது கணக்கு வழக்குகளை பார்ப்பது வழக்கம். அந்த ஊரில் நடத்தப்படும் பொதுச் சீட்டில் கடன் வாங்கியவர்கள் திருப்பிச் செலுத்துவதும், புதிய கடன் வழங்குவதும் அன்று நடைபெறும். கூட்டம் நடந்த அன்று, சுரேஷ் குடும்பம் வாங்கியிருந்த 13 ஆயிரம் கடனை உடனடியாக திருப்பிச் செலுத்த உத்தரவிட்டனர். அதைப் பெற்றுக் கொண்டதும், அந்த ஊர் மாரியம்மன் கோயில் கட்டுவதற்காக சுரேஷ் குடும்பத்திடமிருந்து பெற்றிருந்த 14 ஆயிரம் ரூபாயையும் திருப்பி அளிக்கின்றனர். திருப்பி அளித்து விட்டு, இதுதான் உங்களுக்கு கடைசி எச்சரிக்கை. இனி சுரேஷ் குடும்பம் இந்த ஊரில் இருக்க இயலாது. சுரேஷுக்கு ஆதரவு தெரிவித்தால், அவரது தம்பியையும், அவர் பெற்றோரின் குடும்பத்தையும் ஒதுக்கி வைப்போம். சுரேஷ் குடும்பத்தோடு யாரும் பேசக்கூடாது. எவ்வித கொடுக்கல் வாங்கலும் வைத்துக் கொள்ளக் கூடாது. ஊரில் உள்ள கடைகளில் சுரேஷ் குடும்பத்துக்கு எந்தப் பொருட்களும் வழங்கக் கூடாது என்று தீர்மானம் போடுகின்றனர். சுரேஷ் குடும்பத்தினர் மன்றாடியும் யாரும் மனமிறங்கவில்லை.
இதற்குப் பிறகு வேப்பமரத்தூரில் யாரும் சுரேஷ் குடும்பத்தோடு பேசுவதில்லை. பொதுக் கிணற்றில் தண்ணீர் எடுக்க அனுமதிப்பதில்லை. மீண்டும் சென்று ஊர்ப் பெரியவர்களிடம் பேசினாலும் எந்த மாறுதலும் ஏற்படவில்லை. ஒரு கட்டத்தில் சுரேஷின் மனைவி சுதா, இனியும் இந்த அவமானத்தை சகித்துக் கொண்டு இருக்க முடியாது என்று காவல்நிலையம் சென்று புகார் கொடுக்கிறார். ஊரில் கட்டப்பஞ்சாயத்து நடத்தி, தங்கள் குடும்பத்தை ஒதுக்கி வைத்துள்ளனர் என்று புகார் தருகிறார். அந்தப் புகாரை பரிசீலித்த காவல்துறையினர் (1) பெரியசாமி என்கிற ஊர் கவுண்டர் (2) மாரியப்பன் மந்திரி கவுண்டர் (3) தங்கராஜ் கோல்காரர், (4) சக்திவேல், கோயில் பூசாரி (5) ரங்கநாதன், முன்னாள் ஊராட்சித் தலைவர், (6) கோவிந்தன் (7) சின்னக்குஞ்சி என்கிற பெருமாள் (8) ராஜி, (9) கன்னியப்பன், (10) அழகேசன் (11) முருகன் (12) காந்தி (13) ராஜா (14) மனோகரன் (15) ஜெயவேல் (16) சண்முகம் (17) ருக்கு, (18) மாது, (19) ராதா (20) சத்யா (21) அசோதா (22) தனம்மாள் ஆகியோர் மீது புகார் தருகிறார் சுதா.
ஊருக்குள் வந்து நடந்த சம்பவங்களை விசாரித்த காவல்துறை, சுதாவின் புகாரின் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் 22 நபர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்படுகிறது. வழக்கு பதிவு செய்யப்பட்ட பின்னும், வேப்பமரத்தூரில் சுரேஷ் குடும்பத்தினர் மீதான வன்முறை தொடர்கிறது.
இதையடுத்து சுரேஷின் மனைவி சுதா, சென்னை உயர்நீதிமன்றத்தில், கட்டப் பஞ்சாயத்து நடத்தி தன்னையும் தன் கணவர் குடும்பத்தையும் ஒதுக்கி வைத்த 22 நபர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிடுமாறு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கிறார். இந்த வழக்கை விசாரித்து இடைக்கால உத்தரவு பிறப்பித்த சென்னை உயர்நீதிமன்றம், சுதா குடும்பத்துக்கு உரிய காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும், உத்தரவிடுகிறது.
இந்த வழக்கில் இடைக்காலத் தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கே.கே.சசீதரன், தனது தீர்ப்பில் இந்த வழக்கு, தமிழ்நாட்டில், குறிப்பாக தருமபுரி மாவட்டத்தில் நிலவும் வருந்தத்தக்க நிலையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது என்று கருத்து தெரிவித்து, மாவட்ட நிர்வாகம் மற்றும் வேப்பமரத்தூரைச் சேர்ந்த 22 நபர்களும் பதிலளிக்குமாறு உத்தரவிட்டார்.
நீதிபதி குறிப்பிட்டது போல தமிழகத்தில் வருந்தத்தக்க நிலைதான் நீடிக்கிறது. இந்த வருந்தத்தக்க நிலைக்கு ஒரே காரணம் மருத்துவர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் மற்றும் காடுவெட்டி குரு போன்றவர்களே.
தமிழகத்தை பல ஆண்டுகள் பின்னோக்கி ராமதாஸ் இழுத்துச் சென்று விட்டார் என்பதற்கு இந்த சம்பவங்கள் ஒரு சிறந்த உதாரணம். சுரேஷ் – சுதா தம்பதியினரின் விவகாரம், ஒரு உதாரணமே… தமிழகம் முழுக்க, கலப்புத் திருமண தம்பதிகள், தலித் சம்பந்தப்பட்ட கலப்புத் திருமண தம்பதிகளுக்கு பெரும் ஆபத்தை ராமதாஸ் கூட்டம் விளைவித்திருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. சமூக நீதி, சமத்துவம் என்ற கொள்கை முழக்கத்தோடு கட்சி தொடங்கிய ராமதாஸ் சாதி என்னும் சாக்கடைக்குள் தன்னை அமிழ்த்திக் கொண்டதோடு, அந்த சாக்கடையினுள், ஒட்டுமொத்த தமிழகத்தையும் அமிழ்த்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்.
திராவிட இயக்கங்கள் மற்றும் இடதுசாரி இயக்கங்கள் பெயரளவுக்காவது பேசிக்கொண்டிருந்த சாதி ஒழிப்பை நேரடியாக எதிர்த்ததன் மூலம், தமிழகத்தின் தீராத சாபக்கேடாக உருவெடுத்திருக்கிறார் மருத்துவர் ராமதாஸ்.
வேப்பமரத்தூரில் வாழும் வன்னியர்கள் சாதி வெறி பிடித்தவர்கள் அல்ல. சுரேஷ் சுதா தம்பதியினர் மே 2010ல் திருமணம் செய்து கொண்டபோது அந்தப் பெண்ணின் சாதி என்னவென்று கிராமத்தினருக்கு தெரியாமல் இருந்திருக்கலாம். ஆனால், கிராமப்புரங்களில், அதுவும் அதே தருமபுரி மாவட்டம் பறையப்பட்டியைச் சேர்ந்த ஒரு பெண்ணின் சாதியை வேப்பமரத்தூர் கிராமத்தினர் கண்டுபிடிக்காமல் இருந்தார்கள் என்று சொல்வதை நம்புவதற்கில்லை. சுதா ஒரு தலித் பெண் என்பது அந்த கிராமத்தினருக்கு நெடுநாட்களுக்கு முன்பே தெரிந்திருக்கும். ஆனால், அது அந்த வீடு சம்பந்தப்பட்டது… நாம் எதற்கு இதில் தலையிட வேண்டும் என்று கண்டும் காணாமலும் இருந்து வந்தவர்களை, கூட்டம் போட்டு ஊரை விட்டு ஒதுக்கி வைத்து அவர்களை சிறுமைப் படுத்தி விரட்ட வேண்டும் என்று நினைக்க வைத்தது ராமதாஸின் சாதி வெறி சதியாட்டமே…. சாதாரண வன்னிய மக்கள், சாதி வெறி பிடித்தவர்கள் அல்ல. தலித்துகளோடு பெண் எடுப்பது, பெண் கொடுப்பது கிடையாதே தவிர, அவர்கள் தலித்துகளை விரோதிகளாகப் பார்த்தது கிடையாது.
ராமதாஸ் என்ற சமூக விரோதியின் செயலால்தான் இன்று சாதாரண வன்னிய மக்கள் மத்தியிலும் விஷம் விதைக்கப்பட்டுள்ளது. ராமதாஸ் சொன்ன மற்றொரு குற்றச்சாட்டு, வன்கொடுமை சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது, அந்தச் சட்டத்தில் திருத்தம் வேண்டும் என்பது. சுதா வழக்கையே எடுத்துக் கொண்டாலும், 22 நபர்கள் மீது காவல்துறை வன்கொடுமை சட்டத்தின் கீழ் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்திருந்தாலும், ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை. காவல்துறையினரை சுதா அணுகியபோதெல்லாம் அவர்கள் சொன்ன பதில், 22 பேரும் தலைமறைவாக இருக்கிறார்கள் என்பதே.
வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யும் வழக்குகளில் முன்ஜாமீன் வழங்க இயலாது. இதுதான் சட்டம். ஆனால், இந்தச் சட்டத்தை வளைக்க பெரும்பாலும் என்ன செய்வார்கள் என்றால், சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் சென்று சரண்டர் ஆகி, கைது செய்யப்பட்டது போல கணக்கு காண்பித்து, அப்படியே ஜாமீனில் விடுதலையாவார்கள். இது காலங்காலமாக நடந்து வருகிறது.
இதே வழிமுறைதான் சுதா விவகாரத்திலும் கையாளப்பட்டது. சுதாவின் புகாரானது, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டிய ஒரு புகார். இந்தப் புகாரில், தவறு நடந்திருக்குமோ, நடந்திருக்காதோ என்று சந்தேகிக்க சற்றும் இடமில்லை. சம்பந்தப்பட்ட 22 பேரும் அதே ஊருக்குள் நடமாடிக் கொண்டிருந்தபோதும், அவர்களை கைது செய்ய காவல்துறை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. மாறாக, குறுக்கு வழியில் அவர்கள் முன்ஜாமீன் பெறுவதற்கு எல்லா உதவிகளையும் செய்தது.
ராமதாஸ் கூறுவது போல வன்கொடுமை தடுப்புச் சட்டம் பயன்படுத்தப்பட்டிருந்தால், சம்பந்தப்பட்ட 22 பேரும், சிறையில் அல்லவா இருந்திருக்க வேண்டும் ?
ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், காடுவெட்டி குரு போன்றவர்கள் தமிழகத்தின் பொது வாழ்விலிருந்தே ஒழித்துக் கட்டப்பட வேண்டியவர்கள். தமிழகத்தை 60 ஆண்டுகள் பின்னோக்கி இழுத்துச் சென்ற ராமதாஸ் போன்ற சமூக விரோதிகளுக்கு விழும் ஒவ்வொரு வாக்கும், நாகரீகத்துக்கும், ஜனநாயகத்துக்கும் விழக்கூடிய சாவுமணி. ராமதாஸ் வகையறாக்களை ஒழித்துக் கட்டவேண்டிய பணி, ஒட்டுமொத்த தமிழகத்துக்கும் இருந்தாலும், இந்தப் பணியில் முன்னணியில் நிற்க வேண்டியது வன்னிய மக்களே. அமைதியாக வாழ்ந்து வந்த வன்னியர்களை, மிகப்பெரிய சாதிவெறியர்கள் போல சித்தரிக்க முயலும் ராமதாஸ் வகையறாக்களை வேரோடு சாய்க்க அவர்கள்தான் முன்முயற்சி எடுக்க வேண்டும். இன்று முகநூலில் “சாதி வெறிக்கெதிரான வன்னியர்கள்” என்று தனிப்பக்கம் தொடங்கி பரவலான வரவேற்பை பெற்று வருகிறது. இது போன்ற பல்வேறு முயற்சிகள் வன்னிய மக்களளால் முன்னெடுக்கப்பட வேண்டும்.
ராமதாஸ் வன்னியர் நலனுக்காக என்று கட்சி தொடங்கி இன்று எத்தனை கோடிகளுக்கு அதிபதியாக இருக்கிறார் என்பதை வன்னிய மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். சாதாரண ஏழை வன்னியர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுக்கையில், மருத்தவர் ராமதாஸ் அப்போல்லோ மருத்துவமனையில்தான் சிகிச்சை எடுத்தார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். பன்னாட்டு நிறுவனங்களுக்கு எதிராக போர்ப்பரணி பாடிய ராமதாஸ் பெட்டிப்பாம்பாக மாறிய பின்னணி என்ன என்பதை யோசிக்க வேண்டும். ஒவ்வொரு வன்னியரும், ராமதாஸ் எங்கள் பிரதிநிதி அல்ல என்பதை பகிரங்கமாக அறிவிக்க வேண்டும். வன்னிய சமூக மக்களுக்கு அவப்பெயர் ஏற்படுத்திக் கொடுத்த ராமதாஸ் குடும்பத்தை பொது வாழ்விலிருந்து ஓரங்கட்டுவோம் என்பதை ஒவ்வொரு வன்னியரும் உறுதிமொழியாக ஏற்கவேண்டும். அதுதான், இன்று ஏற்பட்டிருக்கும் களங்கத்தைத் துடைக்க ஒரே வழி.