“வாங்கண்ணா வணக்கங்கண்ணா.. செய்தியைச் சொல்லுங்கண்ணா” என்று தமிழ் உள்ளே நுழையும்போதே வரவேற்றான் ரத்னவேல்.
”டேய் என்னடா கிண்டலா ?” என்று கேட்டவாறே உள்ளே நுழைந்தான் டாஸ்மாக் தமிழ்.
“வெல்கம்மு வெல்கம்மு ப்ரோ…” என்று தன் பங்குக்கு தமிழை கலாய்த்தான் பீமராஜன்.
”டேய்… கோடிக்கணக்குல பணம் புழங்குற விவகாரம் இது… உங்களுக்கு ஜாலியா இருக்கா ?” என்றபடியே அமர்ந்தான் தமிழ்.
”என்னதான்டா நடக்குது தலைவா விவகாரத்துல ?” என்று கேட்டான் வடிவேல்.
”மச்சான்… இந்த பட விவகாரத்தால, ஒரு நல்லது நடந்தா சரி. கண்ட படத்துக்கெல்லாம் வரிவிலக்கு குடுக்குற வழக்கம் இத்தோட ஒழிஞ்சா சரி.
கருணாநிதி ஆட்சிக் காலத்துல தமிழில் பெயர் வைக்கும் படங்களுக்கு வரிவிலக்குன்னு அறிவிச்சார். சிவாஜிக்கெல்லாம் வரி விலக்கு குடுத்தாங்க. கேட்டா, அது பெயர்ச்சொல்னு விளக்கம் வேற. அரசாங்கத்துக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுச்சு. கோடிக்கணக்குல இவனுங்க லாபம் சம்பாதிக்கிறதுக்கு எதுக்காக அரசாங்கம் பணம் குடுக்கணும் ?
ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும், தமிழில் பெயர் இருந்தால் மட்டும் போதாது… தமிழ் கலாச்சாரத்துக்கு ஏற்றார்போல இருக்கணும்னு உத்தரவு போட்டாங்க. ”
”தமிழ் கலாச்சாரத்துக்கு ஏற்றார்போல இருக்கான்னு கலா மாஸ்டர் சொல்லுவாங்களா ? ” என்றான் பீமராஜன்.
”கலா மாஸ்டர் சொல்ல மாட்டாங்கடா… அதுக்குன்னு ஒரு குழு முடிவு செய்யும். இதுலயும் பணம் பூந்து விளையாட ஆரம்பிச்சுச்சு. சென்சார் போர்டுல “யு” சர்ட்டிஃபிகேட் வாங்கறதுக்கும் பணம் விளையாடுது. இந்த நிலையில, தலைவா படத்துக்கு வரி விலக்கு இல்லன்னு முடிவு செஞ்சது சர்ச்சையை ஏற்படுத்துனதால, இனி பெரும்பாலும் எந்த படத்துக்கும் வரிவிலக்கு இல்லைன்ற முடிவுக்கு அரசு வந்திருக்கறதா சொல்றாங்க. அதுதான் நல்ல விஷயம்னு சொன்னேன். ”
”சரி அந்த படம் ஏன்டா ரிலீஸ் ஆகல ?”
”வழக்கமா விஜய் படத்துக்கு நடக்கற வியாபாரத்தை விட, இந்தப் படத்துக்கு அதிக வியாபாரம் நடந்துருக்கு. வேந்தர் மூவிஸ் இந்தப் படத்தை 80 கோடிக்கு வாங்கியிருக்கறதா இன்டஸ்ட்ரியில பேச்சு. இந்த சூழல்ல 100 கோடியை படம் தொட்டாதான் லாபம் பாக்க முடியும். பாட்ஷா பட நூறாவது நாள் விழாவுல ரஜினி பேசிய சர்ச்சைக்குரிய பேச்சால ஏற்பட்ட சர்ச்சைக்குப் பிறகு வெளியான முத்து படத்துல ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போற மாதிரியே சில வசனங்கள் வைக்கப்பட்டிருந்தது. வைரமுத்து பாடல் வரிகள்ல கூட, ரஜினி வருகைக்காக தமிழகமே காத்துக்கிட்டிருக்கிற மாதிரி எழுதுனாரு. இதெல்லாம் ரஜினியோட வியாபார தந்திரம்.
இதே மாதிரி தலைவா படத்துக்கும் ஒரு ‘ஹைப்’ உருவாக்கி படத்தை 100 கோடியை தாண்ட வைக்கணும்னு ஒரு திட்டம் போட்டாங்க. அந்த திட்டத்தின் அடிப்படையிலதான் விஜய்யோட அப்பா, விஜய் அரசியலுக்கு வர்ற மாதிரி பேசிக்கிட்டு இருந்தாரு.
பல கோடி ரூபாய் முதலீடு பண்ண விநியோகஸ்தர்கள் இதை கொஞ்சமும் விரும்பலை. ஆனா அரசாங்கம் இந்தப் படத்தை பெருசா எடுத்துக்கலை. யாரோ ஒரு சிலர் போட்ட மொட்டை கடுதாசியை பெருசா எடுத்துக்கிட்டு, திரையரங்க உரிமையாளர்கள் நாங்கள் இந்தப் படத்தை திரையிடனும்னா அரசாங்கத்துக்கிட்ட இருந்து ஏதாவது ஒரு உறுதிமொழி வேணும்னு எதிர்ப்பார்த்தாங்க. வாண்டடா வந்து வண்டியில ஏறி விஜய் மாட்டிக்கிட்டா அம்மாவுக்கு என்ன கசக்கப் போகுதா ? இது நமக்கு சம்பந்தம் இல்லாத பிரச்சினை. இதுல நாம ஏன் தலையிடணும்னு முடிவெடுத்துட்டாங்க. ”
”விஜய் கூட ஜெயலலிதாவை பாக்க கோடநாடு போனாரே ? ”
”விஜய்க்கும் அவங்க அப்பாவுக்கும், அறிவே இல்லைன்றதுக்கு இது ஒரு பெரிய உதாரணம். அப்பாயின்ட்மென்ட் இல்லாம, ஓ.பன்னீர்செல்வமே ஜெயலலிதாவை பாக்க முடியாது. இவரு போனதும் ‘வாங்கண்ணா வணக்கங்கண்ணா’ ன்னு பாடிக்கிட்டே பாக்கறதுக்கு விஜய் என்ன அவ்வளவு பெரிய தேசிய தலைவரா ? ஜெயலலிதா உடனே பாக்கறதுக்கு.. ? யாராவது ஒரு பத்திரிக்கையாளர், அப்பாயின்ட்மென்ட் இல்லாம விஜய்யை பாக்க வர்றேன்னு சொன்ன பாத்துடுவாரா விஜய் ? அற்பத்தனமாக வியாபர தந்திரங்கள்ல ஈடுபட்டதால, விஜய்க்கும் அவங்க அப்பாவுக்கும் பல கோடி நஷ்டம்.”
”விஜய்க்கு எப்படி நஷ்டமாகும் ? அவங்கதான் படத்தை வேந்தர் மூவீஸ்க்கு வித்துட்டாங்களே ? ” என்றான் வடிவேலு.
”வித்துட்டா சினிமாவுல விட்டுடுவாங்களா ? அடுத்த படத்துக்கு இதை சரி செய்யலன்னா யாரும் படத்தை வாங்க மாட்டாங்க. சூப்பர் ஸ்டாரே தன்னோட பாபா படத்துக்கு பணத்தை திருப்பிக் குடுக்கும்போது, விஜய் என்ன சூப்பர் ஸ்டாரை விட பெரிய ஆளா ? விஸ்வரூபம் விவகாரத்துல, கமல்ஹாசனுக்கு, திரையுலகம் மற்றும் பொதுமக்கள்கிட்ட ஆதரவு இருந்துச்சு… ஆனா, விஜய்க்கு இந்த விஷயத்துல சுத்தமா ஆதரவு இல்லை.
படம் மற்ற மாநிலங்கள்லயும், வெளிநாடுகள்லயும் ரிலீஸ் ஆயிடுச்சு. இன்டர்நெட்டுலயும் ஏத்திட்டாங்க. படம் மொக்கைன்னு ரிவ்யூ வந்துடுச்சு. இனிமே தமிழ்நாட்டுல ரிலீஸ் ஆனாலும், வியாபாரம் ஆகறது கஷ்டம்.”
”இதுலேர்ந்து என்ன மச்சான் தெரியுது ? ” என்றான் ரத்னவேல்.
”என்னடா தெரியுது ? சொல்லு. எனக்குத் தெரியலையே என்றான் தமிழ்”
”ஓவர் பில்டப் உடம்புக்கு ஆகாது” என்று சொல்லி அவன் சிரிக்கவும், மற்றவர்களும் சிரித்தார்கள்.
”ஏம்ப்பா…. ராஜா சங்கர் கைது செய்யப்பட்டதா ஒரு தகவல் வந்துச்சே… அது என்னப்பா மேட்டர் ?” என்றார் கணேசன்.
”அண்ணே.. ராஜா சங்கர் உளவுத்துறை அதிகாரிகளால பிடிக்கப்பட்டது உண்மை. ராஜா சங்கரை பிடிச்சுட்டு, அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் ராஜா சங்கரை பிடிச்சுட்டதா செய்தியை கசிய விட்டாங்க. அப்படி செய்தியைக் கசியவிட்டதுக்கு பின்னணி இருக்கு.
காங்கிரஸ் கட்சி, 2014 தேர்தலில் ஜெயிக்க பிரதானமாக நம்பியுள்ளது உணவுப் பாதுகாப்புச் சட்டத்தைத்தான். தமிழகத்தைப் பொறுத்தவரை பொது விநியோகத் திட்டம் சிறப்பா செயல்பட்டுக்கிட்டு இருப்பதால, நமக்கு இதோட முக்கியத்துவம் புரியல. ஆனா, வட மாநிலங்களில், உணவு கிடைக்காமல் அல்லாடும் பல ஏழைகளுக்கு இந்தத் திட்டம் வரப்பிரசாதமா இருக்கும். இப்படி வேலையே செய்யாம, மானிய விலையில கோதுமை கிடைச்சா, அது ஏழை மக்களை சென்றடையும்னு காங்கிரஸ் கட்சி நினைக்குது. அதனால, அணு சக்தி ஒப்பந்தத்தை விட, இந்த திட்டத்தை எப்படியாவது நிறைவேற்றணும்னு காங்கிரஸ் கட்சி மும்முரமா இருக்கு. இந்த நேரம் பாத்து, கருணாநிதி, இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள உணவுப்பாதுகாப்பு தொடர்பான அவசர சட்டத்தின் சாதக பாதக அம்சங்களை ஆராய்வோம்னு’ சொன்னாரு.
ஐஏஎஸ் அதிகாரி துர்கா சக்தி நாக்பால் பணி இடைநீக்க விவகாரத்துல, சமாஜ்வாடி கட்சிக்கும், காங்கிரஸ் அரசுக்கும் நேரடியான மோதல் தொடங்கிடுச்சு. இந்த நேரத்துல, சமாஜ்வாதி கட்சி, இந்த சட்டத்துக்கு ஆதரவு தருவது சந்தேகம்னு காங்கிரஸ்க்கு தெரியும். அதனாலதான் திமுகவோட ஆதரவு கட்டாயம் வேணும்ன்ற நிலையில இருக்கற காங்கிரஸ்க்கு கருணாநிதியோட அறிக்கைகளும் பேட்டிகளும் கடும் எரிச்சலை ஏற்படுத்தியிருக்கு.
ராஜா சங்கர், ஸ்டாலினோட பினாமி. ராஜா சங்கரை பிடித்தால் ஸ்டாலினோட எதிர்காலமே காலின்றது மத்திய அரசுக்கு நல்லாத் தெரியும். அதனாலதான் திட்டமிட்டு இப்படி ஒரு செய்தியை பரப்பினாங்க.”
”ஆனா ஜெயலலிதா, கருணாநிதிக்கு கடும் நெருக்கடி குடுக்குற மாதிரி அறிக்கை விட்டாங்களே ? ” என்றான் ரத்னவேல்.
”ஆமா.. நேரடியா, திமுக இந்த மசோவுக்கு எதிரா வாக்களிக்குமா அளிக்காதான்னு கேட்டுட்டாங்க.. இந்தக் கேள்விக்கு நேரடியா கருணாநிதியால எப்படி பதில் சொல்ல முடியும் ? அவருக்கும் கடுமையா கோபம் வந்துடுச்சு.. அதனாலதான் நிதானம் தவறி, “ குறிப்பாக ஜெயலலிதாவை எடுத்துக் கொண்டால் கூட, அவருடைய அன்னையார் திரைப்படத்திலே நடித்தார். அவரைத் தொடர்ந்து ஜெயலலிதாவும் திரைப்படத்திலே நடிக்கவில்லையா? அதன் பிறகு தானே அவர் தன் தொழிலை மாற்றிக் கொண்டு அரசியலுக்கு வந்தார்” ன்னு அறிக்கை விட்டார்.
இதோட உண்மையான பொருள்… என்ன இருந்தாலும் நீ ஒரு நடிகைதானேன்றதுதான். இது ஜெயலலிதாவுக்கும் நல்லா தெரியும். அதனாலதான், கருணாநிதியை கடுமையா விமர்சிச்சு, நீங்கள் சென்னையில் அமர்ந்து கொண்டு மானாட மயிலாட பார்க்கிறீர்கள், சினிமாவுக்கு வசனமெழுதி பணம் சம்பாதிக்கிறீர்கள் னு அறிக்கை விட்டு பதிலுக்கு தாக்கினாங்க.”
”வெறும் பணம் சம்பாதிக்கலை… கள்ள லாட்டரி வித்து, காவல்துறையால தேடப்பட்டவனை தயாரிப்பாளராக்கி, அவன்கிட்ட 50 லட்ச ரூபாய் சம்பளம் வாங்கிய கேவலமானவருன்னு சொல்லலையா அறிக்கையில” என்று சொல்லிவிட்டு சிரித்தான் பீமராஜன்.
”நீ ஜுனியர் விகடன்ல வேலை பாக்கறதுக்கு, அந்த அம்மாவுக்கு அறிக்கை எழுதிக் குடுக்கப் போயிடலாம்பா… உங்க ஆபீஸ்லயே பல பேர் கோஸ்ட் ரைட்டர்ஸாத்தானே இருக்காங்க ? ”
”சரி.. அதை விடு. மோடியோட வளர்ச்சி பற்றி தலைவர் என்ன நினைக்கிறாரு.. ? ” என்றான் வடிவேல்.
”மோடியோட வளர்ச்சியை கவனமா பாத்துக்கிட்டு வர்றாரு. இல கணேசன் மூலமா அந்தப் பக்கத்துக்கும் தூது விட்டுக்கிட்டுத்தான் இருக்காரு. ”
”சரி சுப்ரமணிய சுவாமியோட கட்சியை பிஜேபியோட இணைச்சுட்டாங்களே. அவர் தமிழ்நாடு பிஜேபி தலைவராவதற்கு வாய்ப்பு இருக்கா ? ”
”தமிழ்நாடு பிஜேபியில சுப்ரமணிய சுவாமியை தலைவராக்க வாய்ப்பே இல்லை ஏற்கனவே இங்க குடுமிப்பிடி சண்டை நடந்துக்கிட்டு இருக்கு. இதுல அவருக்கு இடமிருக்க வாய்ப்பில்ல. அவரை கட்சியில இணைச்சுக்கிட்டாலும், அவருக்கு பதவி குடுக்கறதுல கட்சிக்குள்ள பலமா எதிர்ப்பு இருக்கு. அவரை கட்சியில சேத்ததால, தமிழக பிஜேபிக்கு பலத்த பின்னடைவு. பிஜேபிக்கு கொஞ்ச நஞ்ச ஆதரவு குடுக்கறவங்க கூட, சுப்ரமணிய சுவாமி வருகையால, கடுமையா எரிச்சலடைஞ்சிருக்காங்க.
ஆனா தேசிய அளவுல படிச்ச வர்க்கத்தின் மத்தியில சுவாமிக்கு இருக்கற பாப்புலாரிட்டிய வச்சு, வாக்குகளை அள்ளலாம்னு பிஜேபி திட்டம் போடுது. இது எந்த அளவுக்கு வெற்றி பெறும்னு தெரியல. சுவாமியோட ஜனதா கட்சிக்கு எந்தவிதமான தொண்டர் பலமும் இல்லை. தமிழகத்தில அந்த கட்சி ஒரு நபர் கட்சிதான். ஆனா, உச்சநீதிமன்றத்துல வழக்கு போட்றது மூலமா தனக்குக் கிடைச்ச புகழை வச்ச, பிஜேபியில பதவி வாங்கறதுக்கு பயன்படுத்தலாம்னு நினைக்கிறாரு.”
“வைகுண்டராஜன் மேட்டர் என்னடா ? அவர் நிறுவனத்தை ரெய்ட் பண்ண கலெக்டர் ஆஷிஷ் குமாரும் ஊழல் பேர்விழிதான்னு சொல்றாங்களே… ?” என்றான் ரத்னவேல்.
“அவர் ஊழல் பேர்விழியா இருந்தா, கடந்த இரண்டு ஆண்டுகளாக அவரை பதவியில தொடர விட்டது ஜெயலலிதாவோட தவறு. ஊழல் அதிகாரி என்பது எப்போது தெரிந்ததோ, அப்போதே இந்த ஆளை இடமாற்றம் செய்து, ஊழல் விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கணும். ஆனா, அதையெல்லாம் செய்யாம, விவி மினெரல்ஸ் நிறுவனத்துல என்னைக்கு ஆஷிஷ் குமார் ரெய்டு நடத்தறாரோ, அன்னைக்கு இரவே மாறுதல் உத்தரவுல கையெழுத்து போட்டா, இந்த குற்றச்சாட்டுகள் எழுத்தானே செய்யும். அனைத்து ஐஏஎஸ் அதிகாரிளின் மாறுதல் உத்தரவுலயும் ஜெயலலிதாதான் கையெழுத்து போட்றாங்க. அப்படி இருக்கும்போது இது ஜெயலலிவுக்கு தெரியாதா ? இது வைகுண்டராஜன் செல்வாக்கில நடந்த ட்ரான்ஸ்பர்தான்றதுல எந்த மாற்றமும் இல்லை”
”மார்க்சிஸ்ட் கட்சி கூட, ஆஷிஷ் குமார் மேல புகார் தெரிவிச்சுருக்கறதா சொல்றாங்களே” என்றான் வடிவேல்.
”அவங்க கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் கனகராஜ், தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு ஒரு கடிதம் எழுதியிருக்காரு. அந்தக் கடிதத்தோட விபரம், ஆகஸ்ட் 9ம் தேதி தீக்கதிர்ல வெளியாயிருக்கு. அந்த செய்தியை அப்படியே படிக்கிறேன் கேளு… “”””தூத்துக்குடி, ஆக. 9 -தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராகஇருந்தஆஷிஷ் குமாரின் பொறுப்புக்கு பொருந்தாத செயல்கள் குறித்து உரிய விவரங்களை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தியுள்ளது. தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணனுக்கு, கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது: தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷிஷ் குமாரின் பொறுப்பிற்கு பொருந்தா நடவடிக்கை களை தங்கள் மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.
கடந்த 27-4-2013 அன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷிஷ் குமார் தனது மகளின் முதலாம் பிறந்த நாளை கொண்டாடினார். தனது நேர்முக உதவியாளர் மற்றும் சில அதிகாரிகளின் மூலம் அதி காரிகள், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்கள் ஆகியோருக்கு அழைப்பு விடுத்துள்ளார். அழைக்கப்பட்ட பெரும்பாலோர் கலந்து கொண்டுள்ளனர். தங்கம், வெள்ளி, பணம் மற்றும் ‘பரிசுப்பொருளாக’ பெறப்பட்டவற்றின் மதிப்பு பல பத்து லட் சம் ரூபாய் என கூறப்படுகிறது. விழாவிற்கு அழைக்கப்பட்டவர்களும், ‘பரிசுப் பொருட்களை’ கொடுத்தவர்களும் மாவட்ட ஆட்சித் தலைவரால் முடிவெடுக்க வேண்டிய பல பிரச்சனைகளும், கோரிக்கைகளும் உள்ளவர்கள். எனவே, அத்தகைய பிரச்சனைகளில் தங்களுக்கு சாதகமான முடிவுகளை எதிர்நோக்கியோ ஏற்கனவே எடுக்கப்பட்ட சாதகமான முடிவுகளுக்கு கைமாறாகவோதான் இவை செய்யப்பட்டிருக்க வேண்டும். எனவே, இது அரசு மற்றும் பொது மக்களின் பாதுகாவலனாக இருக்க வேண்டிய ஒருவர் அவற்றை தவறாகப் பயன்படுத்தி சொந்த நலன்களை பெருக்கிக் கொள்வதாகும்.
இது முதல்முறையல்ல, கடந்த ஆண்டு மகனுக்கு பிறந்தநாள் விழா கொண்டாடி இதற்கு சற்றுகுறைந்த அளவில் வசூல் செய்தார். இதேபோன்று, வெள்ளிவிழா கொண்டாட்டங்களின் போதும், வசூலிக்கப்பட்ட தொகைகளுக்கான கணக்கு உரிய முறையில் பராமரிக்கப்படவில்லை என்றும், முறைகேடு செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது. மேற்கண்ட வற்றை கணக்கில் கொண்டு தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவரின் இந்த நடவடிக்கைகளின் மீது உரிய விசாரணை நடத்த வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
விழாவில் பங்கு கொண்டவர்களின் பட்டியல் அவர்கள் அளித்த பொருட்கள் ஆகியவற்றை கண்டறிந்து அவை சட்டத்தின் படி நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட வேண்டும். பொருட்கள் மற்றும் பணம் அளித்தோர் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் ஆட்சித்தலைவரின் நடவடிக்கைகள் முடிவுகள் முழுமையான தணிக்கைக்கு உட்படுத்தப் பட வேண்டும். மேற்கண்டோர் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் முடிவெடுப் பதை நிறுத்த வேண்டும். அதற்கு ஏதுவான முறையில் அவர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் பொறுப்பிலிருந்து மாற்றப்பட வேண்டும். இதேபோன்று கடந்த ஆண்டு பிறந்த நாள் விழாவில் பெறப்பட்ட பொருட்கள் மற்றும் பணம் குறித்து விசாரிக்கப்பட வேண்டும். மாவட்ட வெள்ளிவிழா கொண்டாட்ட வரவு செலவுகள் விசேஷ தணிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டும். இவை குறித்து விரிவாக விசாரணை நடத்தி முடிவுகள் வரும் வரை முக்கியமான முடிவெடுக்கும் பொறுப்புகளில் அவரை நியமிக்கக்கூடாது என கேட்டுக் கொள்கிறேன்.””” இதுதான் அந்தக் கடிதம்.
தீக்கதிர் ஆசிரியர் குமரேசன்
இந்தக் கடிதம் தொடர்பான செய்தி தீக்கதிர்ல பிரசரமானது, ஆஷிஷ் குமார் வைகுண்டராஜன் நிறுவனத்துல சோதனை நடத்தி மாறுதல் செய்யப்பட்ட பிறகு. இந்த செய்தி 9 ஆகஸ்டில் பிரசுரமானது பிழையே என்று தீக்கதிரின் செய்தி ஆசிரியர் குமரேசன் தெரிவிச்சிருக்கார். இவ்வளவு பெரிய செய்தி பிழையாக பிரசுரிக்கப்பட்டதுன்றதை ஒத்துக்கிட்டாலும், மார்க்சிஸ்ட் கட்சியோட வழக்கம் தவறான அதிகாரிகள் மேல புகார் அளிக்கிறது கிடையாது. எந்த அதிகாரி ஊழல் செய்கிறாரோ, அந்த அதிகாரியின் அலுவலகம் முன்னாடி ஆர்ப்பாட்டம் நடத்தறதும், போராட்டம் நடத்துறதும்தான் அக்கட்சியோட வழக்கம்.
தமிழ்நாட்டுல ஆஷிஷ் குமாரை விட பெரிய கொள்ளைக்காரர்கள் அதிகாரிகளா இருந்துக்கிட்டுதான் இருக்காங்க. ஆனா, மார்க்சிஸ்ட் கட்சி எந்த அதிகாரி மேலயும் இது போல புகார் குடுத்ததா தெரியல. மேலும் குமரேசன் சொல்வது போல, இந்தப் புகார் மே 8ம் தேதியே அனுப்பப்பட்டிருந்தாலும், அதன் மீது நடவடிக்கை எடுக்காமல், இப்போது ஆஷிஷ் குமாரை மாற்றியதே, இந்த மாறுதல் வைகுண்டராஜன் அழுத்தத்தால்தான்னு சொல்றாங்க. தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கனகராஜ், சென்னைக்கு வந்து செட்டிலாகி ரொம்ப நாள் ஆகுது. ஆனா, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரின் ஊழல் குறித்து அக்கறையா அவர் எழுதும் கடிதம், வைகுண்டராஜனின் செல்வாக்காலதான்னு நினைக்க வைக்குது. ஆஷிஷ் குமாரின் ஊழல் பற்றி கவனமா புகார் கடிதம் எழுதுற கனகராஜுக்கு, வைகுண்டராஜன், தூத்துக்குடி, திருநெல்வேலி, மற்றும் கன்னியாக்குமரி மாவட்டங்கள்ல எத்தனை ஆண்டுகளா மணல் கடத்தல் பண்ணிக்கிட்டு இருக்காருன்றது நல்லாவே தெரியும். ஆனா, வைகுண்டராஜனுக்கு எதிரா புகாரோ, போராட்டமோ அவர் நடத்துனதா தகவல் இல்ல… ஆட்சியருக்கு எதிரா புகார் குடுக்குறாரு”
“வைகுண்டராஜனை திமுகவாலயே ஒண்ணும் பண்ண முடியல… அவர்கிட்ட பணம் வாங்கிட்டு செட்டில் ஆயிட்டாங்க. சிபிஎம் மட்டும் விதிவிலக்காடா ? ” என்றான் பீமராஜன்.
”அதுவும் சரிதான் விடு.. ”
“அப்புறம் பத்திரிக்கை உலக செய்திகள் என்னப்பா ? “ என்றார் கணேசன்.
“தமிழ் இந்து நாளேட்டோட கவனம், இப்போ தினமணியிலேர்ந்து விகடன் பக்கம் திரும்பியிருக்கு. விகடன் கம்பெனி காலியாகற அளவுக்கு ஆட்கள் தொடர்ந்து போகப்போறாங்க. முக்கிய பொறுப்புல இருக்கறவங்க அங்க போகப்போறதா தகவல் வந்துருக்கு. “
“அப்போ விகடன்ல என்னப்பா பண்ணுவாங்க…. ? “
“அண்ணே.. தினமணியில, தமிழ் இந்துவோட போட்டியை சமாளிக்கிறதுக்காக, ஏறக்குறைய 80 சதவிகித ஊதிய உயர்வு வழங்கியிருக்காங்க. இதனால, தினமணியில பெரும்பாலான ஊழியர்கள் மகிழ்ச்சியா இருக்காங்க. மற்ற பத்திரிக்கைகளுக்கு போறது குறைஞ்சதோட இல்லாம, மற்ற ஊடகங்கள்ல இருந்து தினமணிக்கு வர்றவங்க எண்ணிக்கையும் அதிகரிச்சிருக்கு.
அது மட்டுமில்லாம தமிழ் இந்துவுல இனி ஆங்கில நாளிதழுக்கு இணையா ஊதியம் தர்றதை சுத்தமா நிறுத்திட்டாங்களாம். எந்த நாளிதழும் இவ்வளவு சம்பளம் தர்றதில்லை. நாம மட்டும் ஏன் இவ்வளவு குடுக்கணும்னு முடிவெடுத்துருக்காங்களாம்.”
”என்னடா சொல்ற… தமிழ் இந்து வரவுக்குப் பிறகுதானே, நல்ல தமிழ்ப் பத்திரிக்கையாளர்களுக்கு மரியாதையே கூடுச்சு. நல்லா சம்பளம் குடுத்துக்கிட்டு இருந்தாங்களே… ? ”
”இல்ல மச்சான். ரமேஷ் னு ஒரு நபர், தமிழ் இந்து எச்.ஆர் ல இருக்காராம். இனிமே யாருக்கும் இவ்வளவு சம்பளம் கிடையாதுன்னு சொல்லிட்டாராம். அதை விட அநியாயம் என்னன்னா, ஏற்கனவே வாங்கிக்கிட்டிருந்த சம்பளத்தை விட, பத்தாயிரம் ரூபா கம்மியா தர்றோம்.. வாங்கிக்கறீங்களா ன்னு கேக்கறாங்களாம்… இன்னும் பேப்பரே வெளியில வர்ல.. அதுக்குள்ள வாங்கிற சம்பளத்தை விட கம்மியா தர்றோம்னு சொல்ற அளவுக்கு திமிராயிடுச்சு பாத்தியா ? ”
” தமிழு…. இந்து ன்ற பேனரை வச்சுக்கிட்டு, இந்த பேச்சு பேசறாங்க. ஆனா, இது வெற்றி பெறுமான்றது வந்ததாத்தானே தெரியும் ? தமிழ் நாளிதழ் வாசகர்களுக்கு, கிளுகிளுப்பு, கிசு கிசு, பரபரப்பு இதெல்லாம் இருந்தாத்தான் பிடிக்கும். தந்தி மாதிரியோ, தினமலர் மாதிரியோ அதையெல்லாம் இவங்களால குடுக்க முடியுமா ? அதையெல்லாம் குடுக்காம எப்படி வியாபாரத்துல நம்பர் ஒன்னா இருக்கற தந்தியை நெருங்க போறாங்க… ஆங்கில இந்துவுக்கு நிகரான ஒரு தமிழ் நாளேட்டை கொண்டு வரணும்னா, நல்ல பத்திரிக்கையாளர்களுக்கு, நல்ல ஊதியம் குடுத்தாத்தானே வருவாங்க… வாங்கிக்கிட்டு இருக்கற சம்பளத்தை விட கம்மியா குடுத்தா எவன் வருவான் ?” என்றான் பீமராஜன்.
“சரி எங்க பத்திரிக்கையில என்ன நடக்குது. எங்க பத்திரிக்கையில என்ன நடக்குதுன்றது, அங்க வேலை பாக்குற என்னை விட உனக்குத்தானே நல்லாத் தெரியும் ?
” விகடனுக்கு எந்தக் கவலையுமில்ல. தன் கையைக் கடிக்காம எப்படியாவது பத்திரிக்கை நடத்துங்கன்னு உத்தரவு போட்ருக்காரு எம்.டி. மாணவப் பத்திரிக்கையாளர் திட்டத்துல சேர்றவங்களை அந்த பயிற்சி முடிஞ்சதுக்குப் பிறகு அனுப்பறதேயில்ல. அந்த மாணவர்களுக்கு மாசம் 3000 சம்பளம் குடுத்து அப்படியே வச்சுக்கிறாங்க. அந்த மாணவர்களும், தங்களுக்கு விகடன் நிருபர்னு அடையாள அட்டை கிடைச்சதால, அதை வச்சுக்கிட்டு பந்தாவா திரியிறாங்க. எப்பவாவது செய்தி வேணும்னு அலுவலகத்துல கேட்டா மட்டும்தான் அவங்களுக்கு வேலை. மற்ற நேரமெல்லாம் ப்ரஸ்னு கார்டை வச்சுக்கிட்டு அவங்க என்ன வேணாலும் பண்ணலாம். யாரை வேணாலும் மிரட்டலாம். அப்படித்தான் அந்தப் பத்திரிக்கையே நடக்குது. “
“கீழ இருக்கறவன் பணம் வாங்குனா கண்டிக்க மாட்டாங்களா ? “ என்று ஆச்சர்யமாகக் கேட்டான் பீமராஜன்.
“என்னடா தெரியாத மாதிரி கேக்குற.. ? நீ காசு வாங்கலன்னா யாருமே வாங்கலன்னு அர்த்தமா ?
என்ன நடக்குது தெரியுமா உங்க பத்திரிக்கை ஆபீஸ்ல ? என்ன செய்தார் எம்.பி ன்னு ஒண்ணு ஆரம்பிச்சிருக்காங்க தெரியுமா ?
“ஆமா, ஒவ்வொரு தொகுதி எம்பியும் என்ன செஞ்சாருன்னு விசாரிச்சு, இப்போ அந்த எம்.பிக்கு தொகுதியில நல்ல பேரான்னு கேட்டு மார்க் போட்றாங்க. “
“உங்க ஆபீஸ்ல யாரு இந்த வேலையைப் பாக்குறா ? “
“ராஜா திருவேங்கடமும், பாலகிருஷ்ணனும். “
“இவங்க ரெண்டு பேரும் ஒவ்வொரு எம்.பிக்கிட்டயும் எவ்வளவு வசூல் பண்ணியிருக்காங்கன்னு உனக்குத் தெரியுமா ? பல லட்சம் வசூல் பண்ணியிருக்காங்க. தஞ்சாவூர் எம்.பி பழனி மாணிக்கத்துக்கு தஞ்சை மாவட்டம் முழுக்க கெட்ட பேரு. சொந்தக் கட்சிக்காரனே கழுவி ஊத்தறான். ஆனா, பழனி மாணிக்கத்துக்கு பாஸ் மார்க். கரூர் எம்.பி தம்பிதுரைக்கு 40 மார்க். ஆனா, தம்பிதுரை மேல நில ஆக்ரமிப்பு உள்ளிட்ட ஊருபட்ட புகார்கள் இருக்கு.
“அழகிரி பாராளுமன்றத்துக்குப் போறதேயில்லன்னு ஊருக்கே தெரியும். அழகிரிக்கு 37 மார்க். வெயிட்டா கவனிக்கிற எம்.பிக்களுக்கு பாஸ் மார்க். சரியா கவனிக்காத எம்.பிக்களுக்கு பெயில் மார்க். சேலம் எம்.பி செம்மலை பாராளுமன்றத்துலயும் பேசறதில்லை…. தொகுதிக்கும் எதுவும் செய்யலை. அவருக்கு 38 மார்க். காமராஜ் தொகுதியில் காங்கிரஸை புதைக்கிறார் மாணிக் தாக்கூர் னு ஒரு கட்டுரை மார்ச் மாசம் ஜுனியர் விகடன்ல வந்துச்சு. அந்தக் கட்டுரையில மாணிக் தாக்கூரை கடுமையா தாக்கி எழுதியிருந்தாங்க. என்ன செய்தார் எம்.பியில அவருக்கு 38 மார்க்.
அழகிரி மதிப்பெண்கள்
காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி சரியா கவனிக்கலை போல… அவருக்கு 32 மார்க் போட்டு பெயில் பண்ணிட்டாங்க.
செம்மலைக்கிட்ட மட்டும் ராஜா திருவேங்கடம் 53 ஆயிரம் வாங்கியிருக்கறதா சொல்றாங்க. இது பத்தியெல்லாம் நிர்வாகத்துக்கு கடுமையான புகார்கள் வந்துக்கிட்டு இருந்தாலும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படலை.”
”இது மட்டும் இல்லடா… போன வாரம் முழுக்க பரபரப்பா பேசப்பட்ட விஷயம், வேலூர் விஐடி கல்லூரி வேந்தர் விஸ்வநாதனுக்கும், அவர் மகனுக்கும் நடக்கிற போராட்டம். ரெண்டு பேருக்கும் பெரிய தகராறு நடந்து விஷயம் நீதிமன்றம் வரைக்கும் வந்துடுச்சு. விஐடி பல்கலைக்கழகத்தோடு வேந்தர் விஸ்வநாதனோட மகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தாரு. இந்த வழக்குல, விஐடி பல்கலைக்கழகத்துல பல முறைகேடுகள் நடந்துருக்கு. அரசு நிலம் 14 ஏக்கர் ஆக்ரமிப்பு செய்யப்பட்டிருக்கு, யுஜிசி அனுமதியில்லாம ஏராளமான மாணவர்கள் சேர்க்கப்பட்டிருக்காங்கன்னு நிறைய்ய புகார்களை சொல்லியிருக்காரு.
இது பத்தின செய்திகளை வரவிடாம தடுக்கறதுக்காகவே நந்தகுமார்ன்னு ஒரு பி.ஆர்.ஓ 24 மணி நேரமும் பத்திரிக்கையாளர்களை சந்திச்சு பணம் குடுத்துட்டு இருக்காரு. குமுதம் ரிப்போர்டர்ல இது பத்தி இரண்டு பக்க செய்தி வந்துச்சு.
ஆனா ஜுனியர் விகடன்ல இதைப் பத்தி ஒரு வரி செய்தி கூட வரல. வேலூர் மாவட்ட ஜுனியர் விகடன் ரிப்போர்டர் யாரு தெரியுமா ? ”
”யாரு மச்சான் ? ”
”வேற யாரும் இல்ல. ராஜா திருவேங்கடத்தோட சொந்த மைத்துனர் சசிகுமார்தான் அந்த நிருபர்.
ராஜா திருவேங்கடம்
”சரி இதைப்பத்தியெல்லாம் எங்க முதலாளிக்கு அக்கறை இருக்கணும்.. நமக்கு என்ன ? ” என்று அலுத்துக் கொண்டான் பீமராஜன்.
”அணு உலை செயல்படத் தொடங்கிடுச்சு… அடுத்த வாரமே மின்சாரம் வரும்னு சொன்னாங்களே என்னப்பா ஆச்சு ?” என்றார் கணேசன்.
”அவங்க இது மாதிரி பல முறை சொல்லிட்டாங்கண்ணே. நாராயணசாமி மாதிரி இன்னும் 15 நாட்களில் மின்சாரம்னு விஞ்ஞானிகளே சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க. ஆனா, இப்போ அணு உலை செயல்படுதா… இல்லையான்ற விபரத்தை வெளியில சொல்ல மாட்றாங்க. இந்த விஷயத்துல கவனிக்க வேண்டிய விஷயம் என்னன்னா இந்த அணு உலையோட கட்டுமான பொருட்களில் பல்வேறு ஊழல்கள் நடந்திருக்கறதா சொல்றாங்க. இந்த கட்டுமானப் பொருட்களை இந்தியாவுக்கு வழங்கயி ரஷ்ய நிறுவனம் ரோசடாம் நிறுவன அதிகாரிகள் இரண்டு பேரை ரஷ்ய காவல்துறை கைது பண்ணியிருக்கு. இப்படிப்பட்ட ஊழல் நிறுவனத்திடமிருந்து, தரக்குறைவான பொருட்களை வாங்கி கட்டப்பட்ட கூடங்குளம் அணு உலை தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிடனும்னு தமிழக மக்கள் உரிமைக் கழகத்தோட செயலாளர் புகழேந்தி தாக்கல் செய்த வழக்கு இன்னும் நிலுவையில இருக்கு.”
”அப்போ அதனாலதான் இன்னும் அணு உலையை திறக்காம இருக்காங்களோ… ? ”
”அதனால திறக்காம இருக்காங்களோ… இல்ல அது ஒழுங்கா வேலை செய்யுதா இல்லையான்னு தெரியலை…”
”சரி மச்சான். ரஷ்யாவுல பதிவு செய்யப்பட்ட அந்த ஊழல் வழக்குகளோட விசாரணை எந்த நிலையில இருக்கு ? ” என்றான் வடிவேல்.
”அதைப் பத்தி விரிவா தமிழ் கூறும் நல்லுலகத்துக்கு செய்தி சேகரிச்சு சொல்றதுக்காகத்தான், புதிய தலைமுறை தொலைக்காட்சியிலேர்ந்து சண்முக சுந்தரமும், தினமலர் நாளிதழ் சார்பா முப்பிடாதி யும் ரஷ்யா போறாங்க…”
”இங்கேர்ந்து நிருபர்களை ரஷ்யாவுக்கு அனுப்பி செய்தி சேகரிக்கச் சொல்ற இந்த நிறுவனங்களை பாராட்டணும்டா… ”
”போடா இடியட்… புதிய தலைமுறையாவது பரவாயில்லை. தினமலர்ல, ரஷ்யாவுக்கு வேணாம். ராயபுரம் போனதுக்கு பெட்ரோல் குடுங்கன்னா கூட குடுக்க மாட்டானுங்க.. அவனுங்களா ரஷ்யாவுக்கு அனுப்புவானுங்க. இதெல்லாம் அணு சக்தி துறையோட செலவுடா. இங்கேர்ந்து இவங்க ரஷ்யாவுக்கு போயி, ரோசடாம் நிறுவனத்தை பாத்துட்டு வந்து, ரோசடாம் நிறுவனத்தைப் போன்ற பாதுகாப்பான நிறுவனம் உலகத்திலேயே இல்லை. அந்த ஊழல் அதிகாரிகள் அப்போதே வேலை நீக்கம் செய்யப்பட்டு விட்டார்கள்னு எழுதுவானுங்க.. ”
”சேரன் பொண்ணு வழக்கு என்னப்பா ஆச்சு ? ” என்றார் கணேசன்.
”செய்திகள்ல நீங்க பாத்ததுதான்ணே…. இரண்டு வாரம் அந்தப் பொண்ணை அந்தப் பொண்ணு படிச்ச பள்ளியோட கரெஸ்பான்டென்ட் வீட்ல வைக்கணும்னு நீதிபதிகள் உத்தரவு போட்ருக்காங்க”
”சரிப்பா… அன்னைக்கு அரை நாள் முழுக்க நீதிபதிகள் இந்த வழக்கை விசாரிச்சாங்களாமே.. ? ”
”ஆமாம்ணே… நீதிபதிகள் சி.டி.செல்வம் மற்றும் தனபாலன், மதியம் 2.15லேர்ந்து சாயங்காலம் 5 மணி வரைக்கும் இந்த வழக்கைத்தான் விசாரிச்சாங்க. ”
”சரிப்பா.. நீதிபதிகள் தனபாலனும், சி.டி.செல்வமும், ஒரு பெற்றோருக்கு இருக்க வேண்டிய கருணையோட விசாரிச்சாங்க. நல்லதுதான். நாளைக்கு சேரியில இருக்கற ஒரு அம்மா, என் பொண்ணு ஒரு பொறுக்கிய லவ் பண்றா.. அவனைத்தான் கல்யாணம் பண்ணுவேன்னு சொல்றா… ஜட்ஜ் அய்யா…. நீங்கதான் இதுக்கு ஒரு நியாயம் பண்ணனும்னு கேட்டா, இதே மாதிரி நீதிபதி தனபாலன் தன் சேம்பர்ல உக்காந்து அரை நாள் விசாரிப்பாரா ? இந்த நீதிமன்றம் ஏழைங்களுக்கு இருக்கா… இல்லை சினிமாக்காரங்க சொந்தப் பிரச்சினையை தீர்த்து வைக்கிறதுக்கு இருக்கா ? சேரன் சினிமா இயக்குனரா இல்லாம சேமியா விக்கிறவரா இருந்துருந்தா தனபாலன் இப்படி விசாரணை நடத்தியிருப்பாரா ? ”
”நீதிபதிகளின் கருணைப்பார்வை முக்கிய பிரமுகர்களுக்கு மட்டும்தான்ணே… முக்காத பிரமுகர்கள், சாதாரண பிரமுகர்களுக்கெல்லாம் கிடையாது”
”சரி. காவல்துறை செய்திகள் என்னப்பா ?”
” போன முறை சொன்னேன்ல…. சென்னை மாநகர உளவுத்துறை இணை ஆணையர் வரதராஜுவுக்கு, மாநில உளவுத்துறையை கண்காணிக்கும்படி ஜார்ஜ் அறிவுறுத்தியிருக்காருன்னு… அந்தத் தகவலை நேத்து வந்துருந்த ஒரு நபர் கூட உறுதிப்படுத்தினாரு. உளவுத்துறை அதிகாரிகளும் இதை கவனிச்சுக்கிட்டுத்தான் இருக்காங்க.
”வட இந்திய அதிகாரிகளோட கை தமிழ்நாட்டுல ஓங்கியிருக்கறதா சொல்றாங்க. ”
”என்னப்பா சொல்ற.. ? டிஜிபியா இருக்கற ராமானுஜத்தைத்தானே ஜெயலலிதா முழுமையா நம்பறாங்க…. ? ”
”ஜெயலலிதா நம்பறாங்கன்ணே…. ஆனா சசிகலா நம்பலையே…. ஜெயலலிதா பெருசா…. சசிகலா பெருசா ? ”
”அதுவும் சரிதாம்பா”
”சசிகலா, அவங்களோட மன்னார்குடி மாபியா தோட்டத்தை விட்டு வெளியேற்றப்பட்டு, பல வழக்குகள்ல சிறைக்கு போனதுக்கும், ராமானுஜம் ஒரு முக்கியமான காரணம்னு நினைக்கிறாங்க. இந்த மனக்கசப்பை பயன்படுத்திக்கிட்டு சில வட இந்திய அதிகாரிகள் சின்னம்மாவை அணுகியிருக்காங்க.. ”
”ஜெயலலிதா என்ன நினைக்கிறாங்க… …. ? ”
”ஜெயலலிதா ராமானுஜத்தின் மேல முழு நம்பிக்கையோட இருக்காங்க. எந்த வட இந்திய அதிகாரியையும் அவங்க நம்பத் தயாராக இல்லை”
”சரி… இந்த ஐபிஎல் விசாரணை எந்த நிலையிலதாம்பா இருக்கு ? ”
”அண்ணே… அரசியல் தலைவர் இறந்தா அரசு மரியாதையோட எப்படிப் புதைப்பாங்களோ, அதே மாதிரி இந்த விசாரணையையும் புதைக்கிற வேலையில சிபி.சிஐடி தீவிரமா இருக்கு…
தமிழகத்தைப் பொறுத்தவரை ஐபிஎல் விவகாரம் வெளிச்சத்துக்கு வந்ததே, க்யூ பிரிவோட விசாரணையாலதான். க்யூ பிரிவுல, வெளிநாட்டுக்கு போலி பாஸ்போர்ட் மூலமா ஆட்களை அனுப்புற ஒரு நபரை கண்காணிச்சிக்கிட்டு இருக்காங்க. அந்த நபரை தொடர்ந்து கண்காணிக்கும்போது, பலகோடி ரூபாய் பணம் புழங்குற விபரம் தெரிய வருது. அந்த நபரை தொடர்ந்து கண்காணிச்சதுல, அந்த நபருக்கு அஹமதாபாத்ல இருக்கற ஒரு நபரோட தொடர்பு இருக்கறதும், அஹமதாபாத் நபர், தாவூத் இப்ராஹிமோட நேரடி தொடர்புல இருக்கறதும் தெரிய வருது.
தாவூத் இப்ராஹிம் விவகாரத்தை க்யூ பிரிவு சிஐடி விசாரிக்கட்டும். ஐபிஎல் விவகாரத்தை சிபி.சிஐடிக்கு மாத்திடுவோம்னு ராமானுஜம், ஐபிஎல் விசாரணையை மட்டும் சிபி.சிஐடிக்கு மாத்தி உத்தரவு போட்றாரு.
சிபி.சிஐடிக்கு இந்த விசாரணை போனதுமே, அந்தப் பிரிவோட தலைவர் நரேந்திர பால் சிங்குக்கு கொண்டாட்டம்தான். இவரை காவல்துறையில “சைலன்ட் கில்லர்”னு சொல்லுவாங்க. அர்த்தசாஸ்திரத்துல ஒரு அரசு ஊழியர் எப்படி ஊழல் செய்வார்னு சொல்லியிருப்பாங்க. ஒரு மீன் தண்ணிக்குள்ள நீந்தும்போது, எப்போ தண்ணி குடிக்கும்னு யாருக்குமே தெரியாது. அது மாதிரி ஒரு அரசு ஊழியர் ஊழல் பண்றதையும் யாருமே கண்டுபிடிக்க முடியாதுன்னு கவுடில்யர் சொல்லியிருப்பார். அந்த மாதிரி கனகச்சிதமா வேலையை முடிக்கிறதுல நரேந்திரபால் சிங் கில்லாடின்னு சொல்றாங்க.
இந்த ஐபிஎல் பெட்டிங் அறிவியல்பூர்வமா தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நடக்குது. இந்த பெட்டிங்கை சென்னையில் இருந்து நடத்தியவர் ரேடிஸ்ஸன் ஹோட்டல் அதிபர் விக்ரம் அகர்வால். ரேடிஸ்ஸன் ஹோட்டலில் வைத்துத்தான் பெட்டிங் தொடர்பான பல முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கு.
விக்ரம் அகர்வால்
ஐபிஎல் மேட்சுகள்ல பெட்டிங் கட்றதுக்குன்னே ஒரு பிரத்யேக இணையதளத்தை விக்ரம் அகர்வால் நடத்தினார். அந்த இணையதளத்தோட முகவரி www.cricketlivebet.com. அந்த முகவரியை அடிச்சா ஒவ்வொரு முறையும் வேற வேற தளத்துக்கு ரீடைரெக்ட் ஆகும். அந்த இணையத்தளத்துல கொழுத்த பணம் வச்சிருக்கவங்கதான் உறுப்பினராக முடியும். அந்த இணையதளத்தோட சர்வர் ரஷ்யாவிலேர்ந்து இயங்குது. நேரடியா தெரிஞ்சவங்கள மட்டும்தான் இணையதளத்துல உறுப்பினரா சேத்துக்குவாங்க.
2013ல ஐபிஎல் முதல் மேட்ச்லேர்ந்தே பெட்டிங் நடக்கத் தொடங்கிடுச்சு. முதல் மேட்சுல 6 ஏப்ரல் அன்னைக்கு நடந்த முதல் மேட்சுல சென்னை அணி தோத்துடுச்சு. அதுக்குப் பிறகு, 10 மற்றும் 13ல நடந்த மேட்சுல ஜெயிச்சுடுச்சு. ஏப்ரல் 15 மேட்சுல பஞ்சாப் கூட தோத்துடுச்சு. அதுக்கப்புறம் ஏப்ரல் 18, 20, 22, 25, 28, 30, மே 2, ஆகிய நாட்கள்ல நடந்த 7 மேட்சுகள்ல தொடர்ந்து சென்னை அணி ஜெயிக்குது. ஆனா ராஜஸ்தான் அணி அப்படியில்ல. பல மேட்சுகள்ல வெற்றி தோல்வின்னு மாறி மாறி நடக்குது.
அப்படி இருக்கும்போதுதான் மே 12 அன்னைக்கு ராஜஸ்தான் அணிக்கும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் மேட்ச் நடக்குது. அந்த சமயத்துல சென்னை அணி மேல எவ்வளவு பெட் கட்டியிருக்காங்கன்னு இந்தியா சிமென்ட்ஸ் சீனிவாசனும், அவர் மகள் ரூபாவும் ஆய்வு பண்றாங்க. ஆய்வு பண்ணதுல, சென்னை அணி மேல 300 கோடி ரூபா பெட் கட்டினது தெரிய வருது. இந்த நேரத்துலதான் சென்னை அணியோட உரிமையாளர் சீனிவாசனுக்கும், அவர் மகள் ரூபாவுக்கும் ஒரு யோசனை தோணுது. இந்த மேட்ச்ல சென்னை அணி தோத்துட்டா, மொத்த 300 கோடியையும் இவங்களே எடுத்துக்கலாம்னு தோணுது. விக்ரம் அகர்வால்தான், இந்த யோசனையை சொல்றார். உடனே இந்த மேட்சை ஃபிக்சிங் பண்ற வேலை ரூபா கிட்ட ஒப்படைக்கப்படுது. ரூபா தோனிக்கிட்ட பேசறார். தோனி, நான் ஒத்துழைக்கிறேன். ஆனா ராஜஸ்தான் அணிகிட்ட பேசணுமேன்னு சொல்றார்…. தோனியின் உரிமையாளர், மன்னிக்கவும், சென்னை சூப்பர் கிங்ஸ் உரிமையாளர் ரூபா, அதை நாங்க பாத்துக்கறோம்… உனக்குக் குடுத்த வேலையை கச்சிதமா செஞ்சு முடின்னு சொல்றாங்க.
அந்த இடத்துலதான், மெய்யப்பனை பயன்படுத்திக்கறாங்க. குருநாத் மெய்யப்பன் மூலமா, விந்தூ தாராசிங்கை தொடர்பு கொண்டு, ஷில்பா ஷெட்டிக்கிட்டயும், குந்த்ரா கிட்டயும் பேசி, மே 12 மேட்சை பிக்சிங் பண்றாங்க. மேட்சை ஃபிக்சிங் பண்றதுக்கு ராஜஸ்தான் அணி வீரர்கள் ஸ்ரீசாந்த், அஜீத் சாண்டிலா, அங்கீத் சவான் ஆகியோர்கிட்ட பேசும்போதுதான், அவங்க மூணு பேரும் பெட்டிங்குக்கு உள்ளயே பெட்டிங் பண்றாங்க.
குருநாத் மற்றும் ரூபா
மே 12 மேட்ச்ல ராஜஸ்தான் அணி ஜெயிக்குது. ரூபா, குருநாத், சீனிவாசன் குழுமம் 300 கோடியையும் ஆட்டையைப் போட்றாங்க. இதுக்குப் பிறகுதான் மே 13 அன்னைக்கு 3 புக்கிகளை டெல்லி போலீஸ் கைது செய்யறாங்க. மே 14 அன்னைக்கு ராஜஸ்தான் அணியின் வீரர்கள் ஸ்ரீசாந்த், அஜீத் சாண்டிலா, அங்கீத் சவான் ஆகியோர் கைது செய்யப்பட்றாங்க.
இவங்க மூணு பேரும் கைது செய்யப்பட்டதும், எல்லா விஷயங்களும் தலைகீழா மாறிடுது. எங்க நம்ப மாட்டிக்கப் போறோமோன்னு அத்தனை பேரும் அமைதியாயிட்றாங்க.
விசாரணை சிபி.சிஐடிக்கிட்ட வருது. இவங்களும் தங்கள் பங்குக்கு, பணம் வசூல் பண்ற புக்கிகள் 12 பேரை கைது பண்றாங்க. அதுலயே முக்கியமான தரகர் கிட்டியை கைது பண்றாங்க.
பாக்தாத் திருடனும் அவர் மகளும்
ரங்கா கைது செய்யப்பட்றதுக்கு முன்னாடி ஜுன் 10 அன்னைக்கு ரேடிஸ்ஸன் ஹோட்டல் அதிபர் விக்ரம் அகர்வாலை கைது செய்யுது சென்னை சிபி.சிஐடி. கைது செய்யப்பட்ட விக்ரம் அகர்வாலுக்கு சிபி. சிஐடியில ராஜ மரியாதை. அவரை நேரா தன்னோட அறைக்கு அழைச்ச சிபி.சிஐடி டிஜிபி நரேந்திர பால் சிங், ஐபிஎல் பெட்டிங் இணைய தளத்தை திறக்க சொன்னாரு. மொத்தமா 300 கோடி ஆட்டையைப் போட்ட விபரத்தை நரேந்திர பால் சிங் பாக்குறாரு. இந்த 300 கோடியில 200 கோடியை நான் சொல்ற அக்கவுன்டுக்கு மாத்துனா, நீ சீக்கிரம் வெளியில வருவ. இல்லன்னா என்ன நடக்கும்னு உனக்குத் தெரியும்னு சொல்றாரு. ஐந்து நட்சத்திர ஹோட்டல் முதலாளி ஜெயிலைப் பாத்துருப்பாரா ? உடனே நரேந்திர பால் சிங் சொல்ற அக்கவுன்டுக்கு மாத்தறாரு.
மாத்துனதுக்கு அப்புறம் விக்ரம் அகர்வாலுக்கு ராஜ மரியாதை. 10ம் தேதி அவரை கைது பண்றாங்க. 11ம் தேதி அவருக்கு 2 நாள் போலீஸ் கஸ்டடி தர்றாங்க. போலீஸ் கஸ்டடிக்கு வந்த விக்ரம் அகர்வால், கவர்மென்ட் ஆபிஸ்க்கு போற மாதிரி காலையில வந்துட்டு சாயங்காலம் வீட்டுக்குப் போயிடுவாரு. வீட்டுக்கு போயிட்டு, திரும்ப மறுநாள் காலையிலதான் வருவாரு. போலீஸ் கஸ்டடி முடிஞ்ச மறுநாளே விக்ரம் அகர்வாலுக்கு ஜாமீன் வழங்கப்படுது. இந்த ஜாமீனுக்கு சிபி.சிஐடி எதிர்ப்பு தெரிவிக்காதது மட்டுமில்ல…. ஜாமீன் வழங்குன நீதிபதி சரவணனையும் கவனிச்சுட்டதா சொல்றாங்க.
புருஷன் ஜெயிலுக்குப் போனதும் சோகமா இருக்காங்களாமாம்….
இதுக்கெல்லாம் அப்புறமாத்தான், 26 ஜுன் அன்னைக்கு மகேந்திர சிங் ரங்கா ன்ற தரகர் கைது செய்யப்பட்றார். அவரை சிபி.சிஐடி விசாரிச்சப்போ, அவர் க்யு பிரிவு எஸ்.பி சம்பத் குமார் இந்த வழக்கை விசாரிச்சிக்கிட்டு இருக்கற விபரத்தை சொல்றாரு. சம்பத் குமார் இன்னும் விசாரிச்சிக்கிட்டு இருக்கறாருன்ற விபரம் தெரிஞ்சதும், நரேந்திர பால் சிங் டரியல் ஆயிட்றாரு… நம்ப 200 கோடி ஆட்டையைப் போட்ட விபரம் தெரிஞ்சுடுமோன்னு, மகேந்திர சிங் ரங்கா, சம்பத் குமார் எஸ்.பிக்கு லஞ்சம் குடுத்ததா ஒரு வாக்குமூலம் வாங்கறாரு.”
”வாக்குமூலம் வாங்குனா அவர் கையெழுதுத்து போட்ருப்பாரே… ? ”
”சிபி.சிஐடியில ரங்காவை செம அடி அடிச்சிருக்காங்க. அப்படி அடிச்சுட்டு, ரங்கா கையெழுத்து இல்லாம, இவங்களா வாக்குமூலம் எழுதிக்கிட்டாங்க. ரங்கா அவ்வளவு பெரிய ஆளெல்லாம் இல்லை. அந்த ஆள் ஒரு சாதாரண தரகர். பெரிய அதிகாரிகளை தெரிஞ்சு வைச்சுக்கிட்டு, காரியம் முடிச்சுத் தர்றேன்னு பணம் வாங்குற ஆளு. அந்த ஆள் 26ம் தேதி கைது செய்யப்பட்டார். அன்னைக்கு அவர்கிட்ட ஒரு வாக்குமூலம் வாங்கறாங்க.
அதுக்கப்புறம் அவரை போலீஸ் கஸ்டடி எடுத்து, இன்னொரு வாக்குமூலம் வாங்கறாங்க. இந்த ரெண்டாவது வாக்குமூலத்துலதான், சம்பத் குமாருக்கு 60 லட்ச ரூபாய் லஞ்சம் கொடுத்ததா சிபி.சிஐடி எழுதிக்கிறாங்க. ”
”அப்போ சம்பத் குமார் பணம் வாங்கலையா ? ”
”,இந்த ஊழல்ல பெரிய அளவுல சம்பந்தப்பட்டிருக்கற விக்ரம் அகர்வால் 4 நாள்ல ஜாமீன்ல வந்துட்டார். மற்ற புக்கிகள் ஒரு வாரத்துல வந்துட்டாங்க. ஆனா, ஒரு சாதாரண இடைத்தரகரான மகேந்திர சிங் ரங்கா மட்டும் ஒன்றரை மாசத்துக்கு பிறகுதான் ஜாமீன்ல வெளியில வர்றார். அவரோட ஜாமீன் மனுவுக்கு சிபி.சிஐடி அவ்வளவு எதிர்ப்பு தெரிவிச்சாங்க. ஒரு காவல்துறை அதிகாரிக்கு எதிரா சாட்சி சொல்ற நபரை ஒன்றரை மாசம் சிறையில வைக்க வேண்டிய அவசியம் என்ன ? சம்பத் குமார் பணம் வாங்கியது உண்மைன்னா, இன்னேரம் அவரை பணி இடைநீக்கம் செய்து கைது பண்ணியிருக்கணுமா இல்லையா ? இது தொடர்பா தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் சார்பில் ஒரு புகார் மனு அனுப்பப் பட்டிருக்கே…. ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்காம இருக்காங்க ? நடவடிக்கை எடுத்தா, சம்பத் குமார் உண்மையைச் சொல்லுவாருன்ற பயம்தான். ”
”ஏம்பா… இவ்வளவு பண்ணியிருக்காரு மலைமுழுங்கி மகாதேவன்…”
” யாரண்ணே சொல்றீங்க… ? ”
”அதாம்பா நரேந்திர பால் சிங். அவரை ஏன் இன்னும் சிபி.சிஐடி டிஜிபியா வச்சுருக்காங்க ? ”
நரேந்திர பால் சிங்
”அண்ணே… நரேந்திர பால் சிங்கோட அப்பா, பஞ்சாப்ல முன்னாள் அமைச்சர். காங்கிரஸ் அரசியல்வாதி. அது மட்டுமில்லாம, இந்த ஆளே ஒரு பெரிய அரசியல்வாதி. 200 கோடி ஆட்டையைப் போட்டார் இல்லையா ? இந்த இடத்துலதான் சசிகலா உள்ள வர்றாங்க. சசிகலாவுக்கு சீக்கிய இன மக்களோட நெருக்கமான நட்பா.. இல்ல உறவா ?. 200 கோடியில 100 கோடியை குடுத்தா, சிங் சிபி சிஐடியில இருப்பாரு. இல்லன்னா மண்டபம் முகாம்ல ஜாபர்சேட்டோட பேசிக்கிட்டு இருப்பாரு.
சசிகலாவோட ஏற்பட்ட இந்த நெருக்கத்தை வச்சுத்தான் பதவி நீட்டிப்புல இருக்கற ராமானுஜத்தை எப்படியாவது ஓரங்கட்டிட்டு தான் டிஜிபியா ஆயிட்டா, ரெண்டு வருஷத்துக்கு கவலை இல்லைன்னு காய் நகர்த்துறாரு நரேந்திர பால் சிங். ”
”பெரிய கொள்ளைக்காரனுங்களா இருக்கானுங்களேப்பா… ? ”
”அப்படியெல்லாம் சொல்லக்கூடாதுன்ணே… ஸ்காட்லாந்து யார்டு போலீஸ்க்கு நிகரானது தமிழ்நாட்டு போலீஸ்….?”
”அது சர்தான்.. ராமஜெயம் கொலை வழக்கை விசாரிக்கிறது இந்த சிபி.சிஐடிதானே… ? ஏன் இன்னும் கண்டுபிடிக்கலை ?”
”200 கோடியை எண்ணுறதுக்கு நேரம் ஆகாதான்ணே… ? பணத்தை எண்றதா விசாரணை பண்றதா… புரியாத ஆளா இருக்கீங்களேன்ணே. ”
”தலையை சுத்துது தம்பி.. தலையை சுத்துது…” என்று சொல்லிக் கொண்டே எழுந்தார் கணேசன். சபையைக் கலைத்தார்கள்.