“ஆல் ப்ராப்ளம்ஸ் ஓவர் ப்ரோ” என்று சொல்லிக்கொண்டே உள்ளே நுழைந்தான் டாஸ்மாக் தமிழ்.
“என்னடா தலைவா ரிலீஸைப்பத்திதானே சொல்ற ?” என்றான் வடிவேல்.
”ஆமாம் மச்சான்.. உங்கப் பத்திரிக்கைக்குத்தான் கஷ்டம்”
”ஏன்டா.. எங்கப் பத்திரிக்கைக்கு என்ன கஷ்டம் ? ”
”ஆமாடா… ரெண்டு வாரமா தலைவா படத்தை வச்சு கவர் ஸ்டோரி பண்ணிட்டீங்க. ஊர்ல வேற பிரச்சினையே இல்லாத மாதிரி ரெண்டு இஷ்யூவுக்கு இதுதான் கவர் ஸ்டோரியா… ? வாரமிருமுறை பத்திரிக்கைக்கு செய்திகள் இல்லாம கஷ்டப்பட்றது உண்மைதான். அதுக்காக விஜய்க்கு இத்தனை முக்கியத்துவம் தரணுமா ? இதுதான் நிகழ்காலத்தின் குரலா ? ”
”தலைவா மேட்டர்தானேடா ஹாட் டாப்பிக் ? ”
”தலைவாதாண்டா ஹாட் டாபிக். ஆனா தலைவா மட்டுமா ஹாட் டாபிக் ? ”
”சரி இந்தப் பிரச்சினை எப்படிதாம்பா முடிவுக்கு வந்துச்சு ? ” என்றார் கணேசன்.
”தலைவா படப்பிரச்சினையை திமுக கையில எடுக்கப்போறாங்கன்னு தெரிஞ்சதும்தான் அரசாங்கம் வேக வேகமாக களமிறங்குச்சு. படம் வெளியாகலைன்னதும், தயாரிப்பாளர் சார்பில உண்ணாவிரதம் இருக்க அனுமதி கேட்டாங்க. ஆனா அனுமதி வழங்கப்படல. விஜய் தரப்புல ஏதாவது வேகமா செய்யப்போறாங்கன்னு எதிர்ப்பார்த்தா, விஜய் தரப்பு படத்தை வெளியிடறதுக்கு யார் கால்ல வேணா விழறதுக்கு தயாரா இருந்தாங்க. அதனால அரசாங்கமும் மெத்தனமா இருந்துச்சு..
இந்த நேரத்துலதான், கருணாநிதி இரண்டாவது முறையா இந்தப் படம் தொடர்பா பேட்டியளிச்சார். விஜய் உண்ணாவிரதத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது குறித்து, ஒரு படைப்பாளியாக என்ன நினைக்கிறீர்கள்னு கேட்டதுக்கு ஒரு படைப்பாளியாக பதைபதைக்கிறேன்னு பதில் சொன்னாரு.
அன்னைக்கு, மதுரவாயல் உயர்வழிச்சசாலை திட்டம் நிறுத்தப்பட்டது தொடர்பா கைது செய்யப்பட்டிருந்த திநகர் எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் ட்விட்டர்ல, 300 தியேட்டர்களில் தலைவா படத்தை வெளியிட நான் தயார்னு எழுதியிருந்தாரு. உடனே அரசாங்கம் களமிறங்குச்சு. மள மளன்னு காரியங்கள் நடந்தது. தலைவா படத் தலைப்பின் கீழ் எழுதப்பட்டிருக்குற “TIME TO LEAD” எடுக்கணும்னு சொன்னாங்க. சில வசனங்களை கட் பண்ணச் சொன்னாங்க. எல்லாத்துக்கும் விஜய் தரப்பு ஒத்துக்கிச்சு. மறுநாள் ஞாயித்துக்கிழமையே படத்தை ரிலீஸ் செய்யலாம்னு முடிவெடுத்தாங்க. சென்னையில தியேட்டர்கள் இருந்தாலும், வெளியூர்கள்ல தியேட்டர்கள் இல்லாததாலயும், TIME TO LEAD எடுக்கறதுக்கு இரண்டு நாள் அவகாசம் வேணும்னும், செவ்வாய்க்கிழமை படத்தை வெளியட்றதுன்னு முடிவெடுத்துட்டாங்க.
திமுக இந்த விவகாரத்தை கையில எடுக்கறதைப் பாத்ததும்தான் ஜெயலலிதாவுக்கு பிரச்சினை கை மீறிப் போயிடுமோன்ற பயம் வந்துச்சு.”
”விஜய் தரப்பு ஏன் இவ்வளவு அமைதியா இருந்தாங்க… ? ”
”விஜய்க்கு அரசியல்வாதியா ஆகணும்னும் ஆசை… ஆனா அதுக்காக வியாபாரத்தை இழக்கவும் தயாரா இல்லை. படம் வெளியில வர்லன்னு தெரிஞ்சதுமே, தன் வீட்லயே உண்ணாவிரதம் அறிவிச்சிருந்தார்னா, கூட்டம் சேந்துருக்கும். விஜய்க்கும் போராடக்கூடியவர்ன்ற ஒரு இமேஜ் கிடைச்சிருக்கும். ஆனா, அதை விட்டுட்டு, அப்பாயின்ட்மென்ட் இல்லாம கோடநாட்ல போயி காத்திருக்கறது.., அம்மாவைப் போல சிறப்பான ஆட்சி நடத்தறதுக்கு இந்தியாவிலயே ஆள் இல்லைன்னு பேட்டி தர்றது, இதெல்லாம் தன்னோட நலனுக்காக, கால்ல விழத் தயாரா இருக்கற விஜய்க்கும், அதிமுக அமைச்சர்களுக்கும் வித்தியாசமே இல்லைன்னு ஆயிடுச்சு. ”
”காங்கிரஸ்க்கு தேர்தல் ஜுரம் வந்துடுச்சா ? ” என்றான் பீமராஜன்.
”காங்கிரஸூக்கு மட்டுமில்ல.. எல்லா கட்சிகளுக்கும் தேர்தல் ஜுரம் வந்துடுச்சு. காங்கிரஸ்க்கு எப்படியாவது உணவுப் பாதுகாப்பு மசோதாவை சட்டமாக்கிடணும்னு நெருக்கடி. ஆனா, டெல்லி தலைமைச் செயலகத்துல பெரும்பாலான அமைச்சகங்கள்ல காங்கிரஸ் திரும்பவும் ஆட்சிக்கு வராதுன்ற உணர்வு வந்துடுச்சு. இதனால, பல்வேறு செய்திகளை ஊடகங்களுக்கு கசிய விடறாங்க.
நிலக்கரி இறக்குமதி ஊழல்ல. பல்வேறு கோப்புகள் காணாமல் போன விவகாரம் ஊடகங்கள்ல கசிஞ்சுருக்கு. இதையும், ராபர்ட் வதேராவோட நிலபேர ஊழல் குறித்தும், பாராளுமன்றத்துல பிரச்சினையை எழுப்பி நாடாளுமன்றத்தை செயல்பட விடாம தடுக்கறதுக்கு பிஜேபி திட்டமிட்டிருக்கு. இதனால, காங்கிஸ் அரசுக்கு கடுமையான நெருக்கடி இருக்கு. ”
”உணவுப் பாதுகாப்பு மசோதா நிறைவேறுமா நிறைவேறாதா ? ”
”எப்படியும் அதை நிறைவேத்தியே தீர்றதுன்ற முடிவுல இருக்கு காங்கிரஸ். உணவுப் பாதுகாப்பு மசோதாவால அந்தந்த மாநிலங்கள்ல என்ன தாக்கம் ஏற்பட்டிருக்கு, இது தேர்தலில் எப்படி பிரதிபலிக்கும்னு, மாநில நிர்வாகிகள் விரிவா ஒரு அறிக்கை தயார் செய்யணும்னு காங்கிரஸ் மேலிடம் உத்தரவு போட்டிருக்கு. தேர்தலுக்கான முழு ஆயத்தங்கள்ல காங்கிரஸ் கட்சி தீவிரமா இருக்கு. உணவுப் பாதுகாப்பு மசோதா நிறைவேரிட்டா, தேர்தலை முன்கூட்டியே நடத்துற திட்டமும் இருக்காம்.”
”சரி திமுக செய்திகள் என்ன இருக்கு ? ” என்றான் ரத்னவேல்.
”திமுக மாநிலங்களவை தலைவரா கனிமொழியை நியமிக்கணும்னு பேராசிரியர் அன்பழகன் கடிதம் எழுதிட்டாரு. தலைமைப் பதவிதான் நமக்கு இல்ல… கொறடா பதவியை கைப்பத்தணும்னு திமுகவுல கே.பி.ராமலிங்கத்துக்கும் செல்வகணபதிக்கும் கடுமையான போட்டி. ரெண்டு பேருமே செல்வாக்கான ஆளுன்றதுனால, யாருக்கு ஆதரவா முடிவெடுக்கிறதுன்னு குழப்பத்துல இருக்காரு தலைவரு. ”
”திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடந்துச்சே.. எதும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதா ? ”
”சொல்லிக்கிற மாதிரி பெரிய முடிவுகள் எதுவும் இல்ல. திமுகவைப் பொறுத்தவரை, காங்கிரஸ் கட்சியை விட்டு வெளிய போக முடியாத சூழல். கூட்டணியை விட்டு வெளியேறினா, 2ஜி வழக்கை நெருக்குவாங்க. அதனால தேர்தல் நெருங்கட்டும் அப்புறம் முடிவு பண்ணலாம்னு நெனைக்கிறார் தலைவர். தேமுதிக, காங்கிரஸ் சேர்ந்து தமிழகத்தைப் பொறுத்தவரை தனி அணி அமைச்சா அது தனக்கு சாதகமா அமையும், அந்தக் கூட்டணி வாக்குகளைப் பிரிக்கிறதுனால திமுகவு வெற்றி பெற வாய்ப்பு அதிகமாகும்னு நினைக்கிறாரு. ஆனா, இப்போதைக்கு கூட்டணி எப்படி அமையும்னு தெளிவடையாம இருக்கு நிலைமை ”
”கட்சிக்குள்ள மாற்றங்கள் செய்யப்போறதா சொல்றாங்களே.. ? ” என்றான் பீமராஜன்.
”ஆமாடா… திமுக மாவட்டங்களை மேலும் பிரிக்கிறதா பேச்சு இருக்கு. குறிப்பா வட தமிழகத்துல சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம் போன்ற மாவட்டங்களை புறநகர்னு தனியா பிரிக்கிறதா பேச்சு இருக்கு. ஸ்டாலின் கட்டுப்பாட்டுல கணிசமான மாவட்டங்கள் இருக்கு. கனிமொழி தன்னோட கட்டுப்பாட்டுல சில மாவட்டங்கள் வரணும்னு நினைக்கிறாங்க. புதுசா மாவட்டங்களை பிரிச்சு, அதை தன்னோட ஆதரவாளர்களால நிரப்பினா, நாளைக்கு கட்சியை கைப்பற்ற அது உதவும்னு நினைக்கிறாங்க. ”
”ஸ்டாலினுக்கு நிகரா அவங்களால அரசியல் பண்ண முடியுமா ? ஸ்டாலின் விட்டுடுவாரா ? ”
”டெல்லியைப் பொறுத்தவரை கனிமொழிதான் திமுகவோட முகம்னு ஆயிப்போச்சு. அடுத்து ஆறு ஆண்டுகளுக்கு கனிமொழி ராஜ்யசபா எம்.பியா இருப்பாங்க. நாளைக்கு டெல்லியில அமையப்போற ஆட்சியில, திமுக பங்கேற்றாலும், பங்கு எடுக்கலன்னாலும், கனிமொழி ஒரு முக்கிய பங்கு வகிப்பாங்க. அப்போ கட்சியில தனக்கு வலுவா செல்வாக்கு இருக்கணும்னு நினைக்கிறாங்க. தயாநிதி மாறன் மந்திரியா இருந்த வரைக்கும் அவருக்கு டெல்லியில செல்வாக்கு இருந்தாலும், கட்சியில அவருக்கு செல்வாக்கு இல்ல. அது மாதிரி தானும் ஆயிடக் கூடாதுன்னு நினைக்கிறாங்க. ”
”சரி கேடி சகோதரர்கள் எப்படி இருக்காங்க ? ”
”அவங்களுக்கென்ன ? அவங்கக்கிட்ட இருக்கற பணத்தால யாரை வேணாலும் விலைக்கு வாங்குவாங்க… பிஎஸ்என்எல் இணைப்புகளை மோசடியா சன் டிவிக்கு பயன்படுத்தினாங்கன்ற குற்றச்சாட்டு அவங்க மேல நெடுநாளா இருந்துச்சு. இது தொடர்பா சென்னை சிபிஐ இரண்டு ஆண்டுகளுக்கு முன்னாடி, ஒரு பூர்வாங்க விசாரணை தொடங்குனாங்க. பூர்வாங்க விசாரணை முடிஞ்சு இரண்டே மாசத்துல எப்ஐஆர் போடணும்னு டெல்லிக்கு அறிக்கை அனுப்பினாங்க. ஆனா, எப்ஐஆர் போட உத்தரவு வழங்கறதுக்கு பதிலா, அந்த வழக்கையே டெல்லிக்கு மாத்தி உத்தரவு போட்டுச்சு, சிபிஐ தலைமை அலுவலகம். அதுக்குப் பிறகு பல நாட்கள் எந்த முன்னேற்றமும் இல்ல.
இது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவு போடணும்னு ரெண்டு பொதுநல வழக்குகள் உச்சநீதிமன்றத்துல தாக்கல் செய்யப்பட்டுச்சு. ஒரு வழக்கை தொடர்ந்தவர், இந்த விவகாரத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த ஆடிட்டர் குருமூர்த்தி. இன்னொரு வழக்கு ட்ராஃபிக் ராமசாமி போட்டது. இந்த வழக்குகள் தொடரப்பட்டதுக்குப் பின்னாடி சமீபத்துல சிபிஐ இந்த விஷயத்துல எப்ஐஆர் பதிவு பண்ணாங்க. அந்த வழக்குல 440 கோடி இழப்பு ஏற்படக் காரணமா இருந்த தயாநிதி மாறனை குற்றவாளியா காட்டாம, அப்போ பிஎஸ்என்எல் பொது மேலாளரா இருந்த வேலுச்சாமி என்பவரை குற்றவாளியா காட்டி வழக்கு பதிவு பண்ணியிருக்காங்க.
2ஜி வழக்குல சிக்குன ஆ.ராசா போலவோ, கனிமொழி போலவோ, சிக்கிக்காம, தயாநிதி மாறன் எவ்வளவு கவனமா தப்பிச்சிக்கிட்டு வர்றாருன்னு இதுலேர்ந்தே தெரியுது. வழக்கு பதிவு பண்ணி விசாரணை தொடங்குன நாலே மாசத்துல ஆ.ராசாவை கைது பண்ண சிபிஐக்கு, இரண்டு வருஷமா தயாநிதி மாறனை விசாரிக்கக் கூட தோணல. உச்சநீதிமன்றம் எப்போ கேள்வி கேட்டாலும், மலேசியாவுல இருந்து ஆதாரங்கள் வரல… ஆப்பிரிக்காவில் இருந்து கோப்புகள் வரலனைன்னு கதை சொல்லிக்கிட்டு இருக்காங்க. இந்த செல்வாக்கு பத்தி நல்லா தெரிஞ்சதுனாலதான், திமுகவுல பெரும்பான்மையான ஆட்கள், கேடி சகோதரர்களை அடக்கியே வைக்கணும்னு நினைக்கிறாங்க.. ”
”சரி… அமைச்சரவை மாற்றம் எப்போப்பா…. அம்மா கோடநாட்ல இருந்து வந்து ஒரு வாரம் ஆகப்போகுதே… ? ”
”வெகு சீக்கிரம் அமைச்சரவை மாற்றம் இருக்கும்னு சொல்றாங்கண்ணே.. பல அமைச்சர்கள் வழக்கம் போலவே கலக்கத்துல இருக்காங்க. செந்தில் பாலாஜி பேர்தான் ரொம்ப அடிபடுது. அவரை காலி பண்ணிடுவாங்கன்னு பேச்சு இருக்கு. அவரைத் தவிரவும், அம்மா அமைச்ச ஒழுங்கு நடவடிக்கைக் குழு மீதே ஏராளமான புகார்கள் இருக்கறதால, அந்த கமிட்டியிலேர்ந்தும் சிலர் கழட்டி விடப்படுவதா சொல்றாங்க.
அமைச்சர்கள் தவிர்த்து, அதிகாரிகள் மட்டத்துலயும் பெரிய அளவுல மாற்றங்கள் எதிர்ப்பார்க்கப்படுது. தேர்தல் வர்றதுனால, அது வரைக்கும் ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தாமல் சிறப்பா செயல்படக் கூடிய அதிகாரிகள் வேணும்னு ஜெயலலிதா நினைக்கிறாங்க.
சமீபத்துல இந்தியா டுடே நடத்துன கருத்துக் கணிப்புல அதிமுக தனியா நின்னாவே 30 சீட் ஜெயிக்கும்னு சொன்னது, அம்மாவை ரொம்ப குஷியாக்கியிருக்கு. ஆனா அம்மாவோட டார்கெட் 35. 2004ல் திமுக கூட்டணி நாற்பதையும் அடிச்ச மாதிரி அடிக்கணும்னு பாக்கறாங்க. ”
”காவல் துறையிலயும் மாற்றம் இருக்குமாப்பா ? ”
”காவல்துறையிலயும் மாற்றம் இருக்கும்னு சொல்றாங்க. தமிழகத்தில் அதிகரித்து வரும் கொலை, கொள்ளை, சீரழியும் சட்டம் ஒழுங்கு குறித்து, உளவுத்துறை ஒரு அறிக்கை அனுப்பியிருக்காங்க. அந்த அறிக்கையைப் பார்த்த ஜெயலலிதா, கடும் அதிருப்தியில இருக்காங்க. எந்த அதிகாரி, சட்டம் ஒழுங்கை சிறப்பாக பார்த்துக்க தகுதியானவர்னு டிஜிபிக்கிட்ட ஒரு பரிந்துரை கேட்டிருக்காங்க… அந்த பரிந்துரையின் அடிப்படையில, தேர்தல் வரைக்கும் பிரச்சினை ஏற்படாத வகையில, பாத்துக்கக் கூடிய அதிகாரிகளா நியமிக்கணும்னு முடிவெடுத்திருக்காங்க.
மத்திய அரசை கடுமையா விமர்சிச்சு பேச, பல்வேறு ஆதாரங்களை அம்மா திரட்டிக்கிட்டு இருக்காங்க. வரக்கூடிய நாட்களில், மத்திய அரசை கடுமையா விமர்சிச்சு, ஏற்கனவே இருக்கக் கூடிய காங்கிரஸ் எதிர்ப்பு உணர்வை கூர்மைப்படுத்தி காங்கிரஸ் கட்சி தமிழகத்திலிருந்து விரட்டியடிக்கப்படக் கூடிய அளவுக்கு காங்கிரஸை கதறடிக்க ஜெயலலிதா திட்டம் போட்ருக்காங்க. ”
”சரி கேப்டன் என்ன பண்ணிக்கிட்டு இருக்காரு ? ” என்றான் ரத்னவேல்.
”கேப்டன் எதுவுமே பண்ணாம இருந்தாக் கூட அவர் கட்சி வளரும். ஆனா, கட்சியை உருப்பட விட மாட்டேன்னு தீர்மானமா இருக்காரு கேப்டன். காங்கிரஸ் கட்சியோட கூட்டணி பேச்சுவார்தை தொடங்கறதுக்கு முன்னாடி, பிஜேபியோட பேச்சு நடத்துங்க. அப்படிப் பண்ணீங்கன்னா, காங்கிரஸ் கட்சிக் கூட, அதிகமான சீட்களை கேட்க முடியும்… காங்கிரஸ் பயந்துக்கிட்டு அதிக இடங்களுக்கு ஒத்துக்குவாங்க ன்னு பன்ருட்டி ராமச்சந்திரன் ஆலோசனை சொல்லியிருக்கார். பன்ருட்டி ராமச்சந்திரன் சொல்றதைக் கேட்டா… மூத்த அரசியல்வாதிகளான ப்ரேமலதாவுக்கும் சுதீஷுக்கும் என்ன மரியாதை. அதனால பன்ருட்டி சொல்றதைக் கேட்காம தொடர்ந்து காங்கிரஸ் கூட பேசிக்கிட்டு இருக்கார் கேப்டன்.
தான் சொல்றது எதையுமே கேப்டன் கேக்காததால, தானும் ஏற்கனவே வெளியே போன ஏழு தேமுதிக எம்.எல்.ஏக்கள் வழியில போலாமான்னு பன்ருட்டியார் தீவிர யோசனையில இருக்கார். மேலும் சில எம்.எல்.ஏக்களை அழைச்சுக்கிட்டு, தனி அணியா செயல்படலாமான்னும் யோசிக்கிறார்.. ”
”அவரும் போயிட்டா கேப்டன் கதி… ? ”
”மூத்த அரசியல்வாதிகள் மற்றும் அரசியல் ஞானிகள் ப்ரேமலதாவும், சுதீஷும் இருக்காங்கள்ல.. ? அவங்க போதாதா ? ”
”சரி கோர்ட் செய்திகள் என்னடா இருக்கு ? ” என்றான் பீமராஜன்.
”சமீபத்துல நேரடியா தேர்வு செய்யப்பட்ட மாவட்ட நீதிபதிகள் தேர்வுல பல கீழமை நீதிபதிகள் கடுமையான வருத்தத்துல இருக்காங்க. ”
”ஏன்… தேர்வு நேர்மையான முறையில நடந்ததா பல வழக்கறிஞர்களே சொல்றாங்களே… ? ”
”இந்த மாவட்ட நீதிபதிகள் தேர்வுல கீழமை நீதிபதிகள் கலந்துக்க முடியாது. கீழமை நீதிபதிகள் அத்தனை பேருக்கும் உயர்நீதிமன்ற நீதிபதியாகணும்னு ஆசை இருக்கும். கடந்த ஐந்து ஆண்டுகளா தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கற பெரும்பாலான நேரடியான மாவட்ட நீதிபதிகள் சின்ன வயசா இருக்கறதால, கீழமை நீதிபதிகள் பலருக்கு மாவட்ட நீதிபதி பதவியை தாண்டி பதவி உயர்வு கிடைக்காது… இதனால, பதவி உயர்வே இல்லாம ஓய்வு பெற வேண்டிய சூழல்ல பலர் விரக்தியாயிருக்காங்க…”
”சரி அதுக்காக, மாவட்ட நீதிபதிகள் தேர்வை தப்புன்னு சொல்ல முடியாதுல்லயா ? ”
”கீழமை நீதிபதிகள் அவங்களோட குறைகளை சொல்றாங்க.. ஒன்னு அவங்களும் நேரடி மாவட்ட நீதிபதிகள் தேர்வுல கலந்துக்க வழிவகை செய்யணும். இல்லன்னா, அவங்களுக்கு விரைவா பதவி உயர்வு பெற ஏற்பாடுகளை செய்யணும். இது ரெண்டும் நடக்கலன்னா, கீழமை நீதிபதிகள் பலர் விரக்தியடைஞ்சுடுவாங்கன்னு ஒரு பேச்சு இருக்கு.. ”
”மற்றபடி இந்த மாவட்ட நீதிபதிகள் தேர்வுல குறை எதுவும் இல்லையா ? ”
”இந்தத் தேர்வுல 31 வயதான தீப்தி அறிவுநிதின்னு ஒரு பொண்ணு மாவட்ட நீதிபதியா தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கு. இந்தப் பெண் முற்பட்ட சமூகத்தை சேர்ந்ததால, 31 வயசுல மாவட்ட நீதிபதியா தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பெண் உச்சநீதிமன்றத்துக்கு போக வாய்ப்பு இருக்குன்றதாலயே தேர்ந்தெடுக்கப்பட்டதா ஒரு பேச்சு இருக்கு. ஆனா தேர்வுக் குழு தரப்புல, அப்படிப்பட்ட எந்த உள்நோக்கமும் தேர்வுக் குழுவில் உள்ளவர்களுக்கு கிடையாது.
எழுத்துத் தேர்வுல சிறப்பா எழுதி ஏராளமான மதிப்பெண்களை பெற்றிருந்த பலர், நேரடித் தேர்வுல சரியாவே பதில் சொல்லலை. இத்தனைக்கும் நேர்முகத் தேர்வின் போது, எந்த பிரிவுல அந்த வழக்கறிஞரா ப்ராக்டிஸ் பண்றாங்களோ, அந்த பிரிவுலேர்ந்துதான் கேள்விகள் கேட்கப்பட்டன. அந்தக் கேள்விகளுக்கும் பலர் சரியா பதில் சொல்லலை. நேரடித் தேர்வுக்கு குறைந்தபட்ச மதிப்பெண்கள் யாருக்கும் வழங்கப்படலை.
மாவட்ட நீதிபதியா நேரடியா தேர்ந்தெடுக்கப்படுபவர்கள், மிகச் சிறந்த தகுதியுடையவர்களா இருக்கணும்னு ஒரே நோக்கத்துலதான் இந்த தேர்ச்சி நடைபெற்றுச்சு. தேர்வில் கலந்துக்கிட்ட ஒரு நபரைப் பற்றிய அத்தனை பின்புலங்களும் விசாரிக்கப்பட்டு, அவர் மேல குற்றச்சாட்டுகள் இருக்கா இல்லையான்ற விபரங்கள் பரிசீலிக்கப்ப்டட பின்னாடிதான், மதிப்பெண்கள் வழங்கப்பட்டதுன்னு சொல்றாங்க.. ”
”அது சரிப்பா… எல்லா தரப்பையும் எப்படி திருப்தி செய்ய முடியும் ?”
”மச்சான்… திருவண்ணாமலை மாவட்ட நீதிபதியை பணி இடைநீக்கம் பண்ணியிருக்காங்களே என்னடா மேட்டர் அது.. ? ”
”அவர் பேரு நாகநாதன். அவருக்கு வேலையே தண்ணியைப் போட்டு தகராறு பண்றதுதான். சில வருஷத்துக்கு முன்னாடி, திருநெல்வேலியில இவர் வேலை செஞ்சப்போ, தண்ணியப் போட்டுட்டு, போலீஸ் ஸ்டேஷன்ல போய் தகராறு பண்ணியிருக்காரு. அப்போ இவர் மேல புகார் போயி, உடனடியா சஸ்பெண்ட் பண்ணிட்டாங்க. சரி இப்பவாவது ஒழுங்கா இருப்பாருன்னு பாத்தா, திருவண்ணாமலையில இவர் வீட்டுக்கு பாதுகாப்புக்கு ஒரு பெண் போலீசை போட்ருந்தாங்க. தண்ணியைப் போட்டுட்டு, அந்தப் பெண் போலீஸ் கிட்ட தகாத முறையில நடந்துக்க முயற்சி பண்ணியிருக்கார். அந்தப் பெண் உயர் அதிகாரிகள்ட புகார் சொல்லவும், உடனடியா அவரை பணி இடைநீக்கம் பண்ணிட்டாங்க.
இதே தவறை வேற ஒரு நபர் பண்ணியிருந்தா, அவர் இந்நேரம் கைது செய்யப்பட்டு சிறையில அடைக்கப்பட்டிருப்பார். ஏற்கனவே குன்னூர் மேஜிஸ்ட்ரேட் தங்கராஜை போலீஸ் கைது பண்ணப்போ, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் வெகுண்டெழுந்து, தானாக முன் வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்தாங்க.
இப்போ முறைப்படி அவங்ககிட்ட ஒரு புகார் வந்ததும், என்ன பண்ணியிருக்கணும் ? சட்டப்படி என்ன நடவடிக்கையோ எடுங்கன்னு உத்தரவு போட்ருக்கணுமா இல்லையா ? சாமான்ய மக்களுக்கு ஒரு சட்டம்…. நீதிபதிகள்னா வேற சட்டமா ? தண்ணியைப் போட்டுட்டு பொம்பளை போலீஸ்கிட்ட தகராறு பண்ணவன்லாம் இருக்க வேண்டிய இடம் சிறைதானே… ? ”
”சென்னை உயர்நீதிமன்றத்துக்கு புதிய நீதிபதிகள் நியமனம் ஒப்புதல் ஆயிடுச்சு போல… ?” என்றான் வடிவேல்.
”மொத்தம் 15 பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டது. அப்படி பரிந்துரை செய்யப்பட்டபோதே, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம், தலித் வழக்கறிஞர்களோட பெயர்கள் வேண்டாம்னு சொன்னதா ஒரு பேச்சு இருந்துச்சு. ஆனா, அதையும் மீறி இரண்டு பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுச்சு. ஆனா 15 பேர்ல 7 பேர் பெயர்கள் நிராகரிக்கப்பட்டு, இப்போ ஒப்புதல் அளிக்கப் பட்டிருக்க 8 நீதிபதிகள்ல ஒருத்தர் கூட தலித் இல்லை. ”
”ஆனா கவுண்டர் இருப்பாங்களே… ? ” என்று கூறி சிரித்தான் பீமராஜன்.
”கரெக்ட்டா சொன்னடா… இப்போ தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க எட்டு பேர்ல ரெண்டு பேர் கவுண்டர்கள். தண்ணீரை விட ரத்தம் அடர்த்தியானது அல்லவா ? ”
”சரி பத்திரிக்கை உலக செய்திகள் என்னப்பா இருக்கு ?” என்றார் கணேசன்.
”அண்ணே.. தமிழ் இந்துவோட ஆன்லைன் பிரிவுக்கு தலைவரா விகடன்ல ஆன்லைன் பாத்துக்கிட்டு இருந்த பாரதி தமிழன் நியமிக்கப்பட்டிருக்கார். அவர் விகடன்லேர்ந்து அடுத்த வாரம் ரிலீஸ் ஆவாருன்னு சொல்றாங்க. ”
”டேய்…. உனக்கு பத்திரிக்கை உலக செய்திகள்னா எங்க பத்திரிக்கை மட்டும்தானா… வேற பத்திரிக்கையே கிடையாதா… எப்போப் பாத்தாலும் எங்கப் பத்திரிக்கையைப் பத்தியே பேசறியே…”
”மச்சான் கோவப்படாத மச்சான்… காய்ச்ச மரம்தான் கல்லடி படும். இருக்கறதுல நம்பர் ஒன் பத்திரிக்கையைப் பத்திதான் எல்லோரும் பேசுவாங்க.. வாயைத் திறந்தாலே விகடன் பாரம்பரியம், விகடன் பாரம்பரியம்னு நீங்கதானேடா பேசறீங்க.. நானா பேசறேன்… இவ்வளவு கோவப்பட்றியே… 26 வருஷம் விகடன்ல வேலைப் பாத்துட்டு, ராஜினாமா பண்ணிட்டு போனாரே அசோகன்.. அவருக்கு இன்னை வரைக்கும் ஏன் ரிலீவ் ஆர்டர் குடுக்காம ஏமாத்தறீங்க ?
ஒரு மனுஷன் வேலையை ரிசைன் பண்ணா சந்தோஷமா அனுப்பி வைக்கிறதுதானே மரியாதை ? ஏன் இன்னும் ரிலீவ் பண்ணாம வச்சுருக்கீங்க.. சொல்லுடா… ? ”
”அது ஏதாவது நிர்வாகச் சிக்கலா இருக்கும் ” என்றான் பீமராஜன்.
”ஒரு புடலங்காய் சிக்கலும் இல்ல. ரிலீவ் பண்ணா அவருக்கு பிஎஃப், இதர பணப்பயன்களை கொடுக்கணும்னு தானே ரிலீவ் பண்ணாம வச்சுருக்கீங்க. ? இப்படி அற்பத்தனமா நடந்துக்கிட்டா உங்க பத்திரிக்கையைப் பத்தி எழுதாம என்ன பண்ணுவாங்க ? ”
”என்னப்பா இவ்வளவு மோசமா நடந்துக்கிறாங்க ?” என்றார் கணேசன்.
”அண்ணே இன்னொரு விஷயம் கேட்டா இன்னும் மோசமா திட்டுவீங்க. ”
”என்னப்பா அது ? ”
”விகடன்லேர்ந்து ராஜினாமா பண்ணிட்டுப் போன அசோகன் ஒரு மொபைல் நம்பர் வச்சுருந்தாரு. அந்த நம்பர் 9840985240. இந்த நம்பரை அசோகன் கிட்டத்தட்ட 15 வருஷமா வச்சுருக்காரு. இது விகடனோட நம்பர். ராஜினாமா பண்ணப்போ, இந்த நம்பரை மட்டும் நான் வச்சுக்கறேன்னு கேட்டார். விகடன் நிர்வாகமும் சரி வச்சுக்கங்க ன்னு சொல்லிட்டாங்க.
அசோகன் போயி ஒரு மாசம் கழிச்சு, ஏர்டல்லில் சொல்லி, விகடன் நிர்வாகம் போன வாரம் இந்த நம்பரை டீ ஆக்டிவேட் பண்ணிட்டாங்க. இப்படி ஒரு அற்பத்தனமான நிர்வாகத்தை பாத்திருக்கீங்களா ? சீப்பை ஒளிச்சு வைச்சா கல்யாணம் நின்னுடுமா ? இவர்களோட அற்பத்தனத்தை இதனால பாதிக்கப்பட்ட நபர்கள் வெளியில பேசத்தானே செய்வாங்க… அவங்க பேசறதுதானே அப்படியே கசிஞ்சு நம்ப பார் வரைக்கும் வருது.. ? அந்த விஷயத்தை நான் உங்கக் கூட பகிர்ந்துக்கிறது தப்பாண்ணே… ? ”
”அவன் கிடக்கிறான்… நீ சொல்லுப்பா…”
”விகடன் பதிப்பகம் மூடப்படும் நிலையில இருக்குன்ணே…”
”என்னப்பா சொல்ற… அவங்க வாரா வாரம் புது புத்தகம் போடுவாங்களே… மிக மிக வெற்றிகரமான பதிப்பகமா இருந்துச்சே…?”
”ஆமாம்ணே… வெற்றிகரமான பதிப்பகம்தான். தமிழ் இந்து தொடங்குனதும், பல லே அவுட் ஆர்ட்டிஸ்டுகள், விகடனை விட்டு, இந்துவுக்கு போயிட்டாங்க. இதனால, ஜுனியர் விகடன், ஆனந்த விகடன் இதழ்களுக்கு ஆட்கள் பஞ்சம் ஏற்பட்டு இருக்கு. இதனால ஆனந்த விகடன் ஆசிரியர் கண்ணன், பதிப்பத்துல இருந்த ஆட்களை, விகடனுக்கு கூப்பிட்டிருக்கார். பதிப்பகத்துல இருக்கற மாதிரி, விகடன்ல வேலை எளிது இல்ல. கஷ்டம். டெட் லைன் வச்சு வேலை வாங்குவாங்க. இதனால பலர், நாங்க பதிப்பகத்துலயே இருந்துக்கறோம்னு சொல்லிட்டாங்க.
இப்படியே இருந்தா சரிப்படாதுன்னு, பதிப்பத்துக்கு ஆட்களே வேண்டாம், நாம வெளியில குடுத்து இந்த வேலைகளைப் பாத்துக்கலாம், இப்போ பதிப்பகத்துல இருக்கறவங்களை விகடனுக்கு மாறுதல் பண்ணிடலாம்னு சொன்னதும், எம்.டியும் ஒத்துக்கிட்டார். பதிப்பகத்தை மூடப்போறோம்… ஒன்னு விகடனுக்கு வாங்க, இல்லன்னா வெளியில போங்கன்னு, கண்ணன் பதிப்பகத்துல வேலை பாத்தவங்க கிட்ட சொன்னதும், அவங்க என்ன பண்றதுன்னு தெரியாம முழிச்சிக்கிட்டு இருக்காங்க.”
”சரி… தமிழ் இந்து எப்போ வெளியில வருதாம் ? ”
”செப்டம்பர் இரண்டாவது வாரத்துல வெளிவர்றதா சொல்றாங்க. ஆட்கள் தேர்வு இன்னும் முழுமையா முடிவடையில. இதுக்கு நடுவுல திருவெங்கிமலை சரவணன், தமிழ் இந்துவுல ஜாயின் பண்றாருன்னு பரபரபப்பா பேச்சா இருக்கு. ஆனா, அவர் அங்க ஜாயின் பண்ணா, அதுக்கு எதிர்ப்பு தெரிவிச்சு ராஜினாமா பண்றதுக்கும் சிலர் தயாரா இருக்காங்க. ”
”சரி காவல்துறை செய்திகள் என்னடா இருக்கு ? ”
”பெருசா இந்த வாரம் செய்திகள் எதுவும் இல்ல. சென்னை மாநகர ஆணையாளர் மாற்றப்படுவார்னு செய்தி அடிபட்டுக்கிட்டு இருக்கு. அவர் மேல பல துணை ஆணையர்கள் வருத்தத்துல இருக்காங்க. எந்த துணை ஆணையர்கிட்டயும் ஜார்ஜ் பேசறதே கிடையாதாம். அவங்களை மனுஷனாவே மதிக்க மாட்ராறாம். வெறும் உத்தரவுகள்தான். அதுவும், இணை ஆணையர்கள் மூலமாத்தான் உத்தரவுகள்.”
”சரி மச்சான்.. மழை வர்ற மாதிரி இருக்கு.. போலாமா ? ” என்றான் ரத்னவேல்..
தூறல் போடத் தொடங்கியதும் அனைவரும் எழுந்தனர்.