கருணாநிதியின் மகிழ்ச்சி… மற்றும் சோகம்
“அன்பின் பிறப்பிடம், அற நெறியின் இருப்பிடம், கருணை வடிவம், கற்பின் திருவுருவம், மாசற்ற மாணிக்கம், மாற்றுக் குறையாத தங்கம்” என்று வேகமாக வசனம் பேசியபடியே உள்ளே நுழைந்தான் டாஸ்மாக் தமிழ்.
“ என்னப்பா மனோகரா வசனத்தோடு உள்ள நுழையற… ? “
“மனோகரா படத்துல சிவாஜி அவங்க அம்மாவைப் பத்திப் பேசுன வசனத்தை, இப்போ கருணாநிதி அவர் மனைவியைப் பத்திப் பேசறாரு… அந்த வசனங்களோட சேத்து, ‘உடல் நலிந்தவர், நினைவாற்றலை இழந்தவர், முற்றிலும் மறந்தவர், நடைபிணமாய் இருப்பவர்” னு சொல்லிக்கிட்டு இருக்காரு.
“அதான் அவங்க நினைச்ச மாதிரியே நடந்துடுச்சே…. ? தலைவருக்கு சந்தோஷம்தானே… ? “ என்றான் பீமராஜன்.
“சந்தோஷம், சோகம் ரெண்டும் இருக்கு.. “ என்றான் தமிழ்.
“சந்தோஷம் ஏன்… சோகம் ஏன்.. விளக்கமா சொல்லு. “
“சந்தோஷம் உச்ச நீதிமன்றத் தீர்ப்பால. தயாளு அம்மாள் டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில சாட்சி சொல்லணும்.. அவங்களுக்கு உடல் நிலை மோசமா இருக்கு. அவங்களுக்கு ஞாபகமறதி நோயான அல்ஸீமர்ஸ் நோய் பாதிச்சிருக்கு ன்னு தயாளுவோட பொண்ணு செல்வி தொடுத்த வழக்கின் அடிப்படையில, எய்ம்ஸ் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்கள் குழு தயாளு அம்மாளை பரிசோதிக்கணும்னு உச்சநீதிமன்றம் உத்தரவு போட்டுச்சு. அந்த உத்தரவின் அடிப்படையில மருத்துவர் குழுவை அனுப்புனாங்க. அந்த மருத்துவர் குழுவை குலாம் நபி ஆசாத் மூலமா “செட்டிங்” பண்ணிட்டாங்க. அந்த மருத்துவர்கள், தயாளுவை பரிசோதிச்சுட்டு, சாட்சி சொல்லலாம்.. ஆனா பயணம் பண்ண முடியாதுன்னு அறிக்கை குடுத்துட்டாங்க.
இதுக்குப் பின்னால கதையில ஒரு ட்விஸ்ட் இருக்கு…” என்று கூறிவிட்டு அமைதியானான்.
”டேய் சொல்லுடா.. என்னடா சஸ்பென்ஸ் வைக்கிற ? ”
திமுக அதிமுக கூட்டணி
”திமுக அதிமுக கூட்டணி அமைஞ்ச கதை தெரியுமா ? ” என்றான் தமிழ்.
”டேய்… இந்தக் கதையை முடிச்சிட்டு அடுத்த கதைக்கு போடா சனியன் புடிச்சவனே.. ” என்று தன் பங்குக்கு தமிழை திட்டினான் வடிவேல்.
”திட்டினா சொல்ல மாட்டேன்” என்று மீண்டும் பிகு பண்ணிக் கொண்டான்.
”சரி சொல்லித் தொலைடா….”
”ராஜ்யசபைத் தேர்தல் அப்போ, கருணாநிதி நேரடியாவே ஜெயலலிதாவுக்கு தூது விட்டிருக்கார் தெரியுமா ? ”
”என்னடா சொல்ற… ? ”
”ஆமாம் மச்சான்… கனிமொழியை எப்படியாவது எம்.பியாக்க உதவுங்கன்னு கேட்டிருக்கார். ”
”அதுக்கு அம்மா என்ன சொன்னாங்களாம் ? ”
”கனிமொழி எம்.பியாக்கறது பிரச்சினை இல்ல… ஆனா, பெங்களுரு வழக்கை திமுக பெரிசு படுத்தக் கூடாது. இது சம்பந்தமா திரும்பவும் மனு தாக்கல் பண்ணி தொல்லை குடுக்கக் கூடாதுன்னு சொல்லியருக்காங்க. அதுக்கு கருணாநிதியும் சம்மதிச்சிட்டாரு. ”
”இந்த நேரத்துலதான், சிதம்பரம் மூலமா, அதிமுக கூட்டணிக்கு காங்கிரஸ் ஒரு முயற்சி பண்ணியிருக்கு. ஆனா ஜெயலலிதா முடியவே முடியாதுன்னு சொல்லிட்டாங்க. இதனால, பெங்களுரு வழக்கை நெருக்கணும்னு காங்கிரஸ் முடிவு பண்ணுச்சு.
அதோட வெளிப்பாடுதான் திமுகவுக்கு நேரடியான மிரட்டல். பெங்களுரு கேஸை துரிதப்படுத்த வேலையை ஆரம்பிங்க. அப்படிப் பண்ணலன்னா, தயாளு அம்மாள் டெல்லியில சாட்சி சொல்ல வேண்டி வரும்னு.
தயாளு அம்மாள் டெல்லிக்கு வர அவசியம் இல்லாத படி நாங்க ஏற்பாடு பண்றோம், நீங்க பெங்களுரு கேஸை பாத்துக்கங்க ன்னு காங்கிரஸ் தரப்புல கடும் நெருக்கடி. பொண்டாட்டியை காப்பாத்துனா போதும்னு சரின்னு ஒத்துக்கிட்டார். தயாளு டெல்லிக்குப் போக வேண்டியதில்லைன்னு உச்சநீதிமன்றம் தீர்ப்பு குடுத்துடுச்சு.
பதிலுக்கு திமுக தரப்புல, பெங்களுரு வழக்குல அரசுத் தரப்புக்கு உதவி செய்ய அனுமதிக்கணும்னு மனு தாக்கல் செஞ்சாங்க. இந்த மனுவால, ஜெயலலிதாவுக்கு பெரிய சிக்கல் உருவாகும். அதோட இப்போ அடுத்த மனுவும் தாக்கல் பண்ணியிருக்காங்க. அரசு வழக்கறிஞரை மாத்தணும்னு ஒரு மனு தாக்கல் பண்ணியிருக்காங்க. இதுவும் ஜெயலலிதாவுக்கு சிக்கல்தான்.”
”ரெண்டு சந்தேகம் மச்சான் ? ” என்று கேட்டான் ரத்னவேல்.
”சொல்லு… தயாளு அம்மாள் தொடர்பா உத்தரவு பிறப்பிக்க வேண்டியது உச்சநீதிமன்றம். இதுல காங்கிரஸ் கட்சிக்கு என்ன ரோல் இருக்கு ? ”
” என்னடா லூசு மாதிரி பேசற… காங்கிரஸ் கட்சிதான் இந்த நாட்டில் நீதிமன்றம், அரசு, எல்லாமே… அவங்களை மீறி என்ன நடந்துட முடியும். காங்கிரஸ் கட்சிக்கு இந்த நாட்டை 50 வருஷத்துக்கு மேல ஆட்சி செஞ்ச அனுபவம் இருக்கு. அவங்க நெனைச்சா என்ன வேணாலும் செய்ய முடியும்.
மருத்துவர்கள், தயாளுவால பயணம் பண்ண முடியாதுன்னு அறிக்கை குடுத்த பிறகு நீதிமன்றம்தான் என்ன செய்ய முடியும் ? பயணம் பண்ணியே தீரணும்னு சொல்ல முடியுமா ? இதுதான் காங்கிரஸ் சாமர்த்தியம். கருணாநிதி ஒத்து வரலன்னா, இதே மருத்துவர்கள், தயாளுவால தாராளமா பயணம் பண்ண முடியும்னு சொல்லியிருப்பாங்க. ”
”சரி உன்னோட ரெண்டாவது சந்தேகத்தைக் கேளு… ? ”
”திமுக இந்த வழக்கை ஆரம்பத்துல இருந்தே கவனிச்சிக்கிட்டுதானே வர்றாங்க.. அவங்க அரசுத் தரப்புக்கு உதவி பண்றேன்னு மனு போட்டதுல என்ன தவறு ? ”
”ஆரம்பத்துல இருந்தே கவனிச்சிக்கிட்டு இருந்தவங்க, இத்தனை நாள் இந்த மனுவை ஏன் தாக்கல் செய்யல ? ”
”அப்போ வழக்கு நல்லா நடந்துக்கிட்டு இருக்குன்னு நெனைச்சிருக்கலாமே.. ? ”
”இந்த வழக்கு எப்பவுமே நல்லா நடக்கலையே… வாய்தா மேல வாய்தா போட்டு இந்த வழக்கு 96லேர்ந்து இழுத்துக்கிட்டுதானே இருக்கு ? 17 வருஷமா இது மாதிரி எந்த மனுவும் போடாம, இப்போ போட வேண்டிய அவசியம் என்ன ? எல்லாம் காங்கிரஸ் நெருக்கடிதான்.”
”சரி.. ஜெயலலிதா, திமுகவோட இந்த துரோகத்தை எப்படிப் பாக்கறாங்க ? ”
ஜெயலலிதாவின் பதிலடி
”ஜெயலலிதாவுக்கு கடுமையான கோபம்தான். அதுக்குப் பதிலடிதான், அழகிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு. ஜெயலலிதா நெனைச்சிருந்தா, 2011லயே இந்த விவகாரத்துல மேல் முறையீடு பண்ணியிருக்க முடியும். ஆனா என்ன காரணத்துனாலேயோ விட்டுட்டாங்க. நீ பெங்களுரு வழக்கை தொட்டா, நான் என்ன பண்றேன் பாருன்னு காமிச்சிட்டாங்க. ”
”அழகிரி என்ன ஆனாரு… ? ”
”அழகிரி ஒண்ணும் ஆகலை. மொத்தமா ஜாகையை மாத்திக்கிட்டு, சென்னைக்கு வந்துட்டாரு”
அஞ்சா நெஞ்சன் அழகிரி
”இந்த மேல் முறையீட்டாலயா ? ”
”இதனால இல்ல. தா.கிருஷ்ணனோட ஊரு திருப்பாச்சேத்தி பக்கத்துல ஆவாரங்காடு. அந்த ஊரு பழிவாங்கும் கொலைகளுக்கு பெயர் போன ஊரு. சமீபத்துல தா.கிருஷ்ணன் இறந்து ஆறு வருஷம் ஆன நினைவு தினம் வந்துச்சு. அந்த நினைவு தினத்தின்போது, தா.கிருஷ்ணன் கொலைக்கு பழிவாங்கியே தீரணும்னு ஒரு சிலர் சபதம் போட்டதா தகவல் அண்ணனுக்கு வந்துச்சு. அண்ணன்தான் அஞ்சா நெஞ்சராச்சே… உடனே பெட்டி படுக்கையெல்லாம் எடுத்துக்கிட்டு சென்னைக்கு வந்துட்டாரு. கட்சியில குழப்பம் உண்டு பண்ணலாம்னு பாத்தா, ஜெயலலிதா தா.கிருஷ்ணன் வழக்குல மேல் முறையீடு பண்ணிட்டதால, வாயைத் தொறக்காம அமைதியா இருக்கறாரு.. ”
”சரி பாராளுமன்றத் தேர்தல் கூட்டணி எப்படிப்பா அமையும்… ? ” என்றார் கணேசன்.
பாராளுமன்றக் கூட்டணி
”அண்ணே.. காங்கிரஸ் அதிமுக பக்கம் போக எடுத்த முயற்சிகள் வெற்றி பெறாததால, திமுக மாதிரி ஒரு அடிமை நமக்கு கிடைக்காதுன்னு முடிவெடுத்துட்டாங்க. திமுகவும், 2ஜி வழக்கை மனசுல வச்சு, ”ஆலம்பனா…. நான் உங்கள் அடிமைன்னு” கிடக்கறாங்க. கேப்டன் இப்போதைக்கு முறுக்கிக்கிட்டு இருந்தாலும், காங்கிரஸ் கூட்டணியோட ஐக்கியமாயிடுவாரு. திமுக, காங்கிரஸ், தேமுதிக, புதிய தமிழகம், மனிதநேய மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள் னு ஒரு பெரிய வானவில் கூட்டணியை உருவாக்கலாம்னு காங்கிரஸ் கட்சி திட்டம் போட்டிருக்கு. ”
”சரி… இதுக்கு கருணாநிதி ஒத்துக்கிட்டாரா…. ? என்னப்பா பேசற…. ஆட்டை வெட்டும்போது அதை கேட்டுக்கிட்டா வெட்டுவாங்க… ஒரு பக்கம் கனிமொழிக்கு செக். இன்னொரு பக்கம் தயாளு அம்மாளுக்கு செக். இன்னொரு பக்கம் ராஜா சங்கர் மூலமா ஸ்டாலினுக்கு செக். தா.கிருஷ்ணன் வழக்கு மூலமா அழகிரிக்கு செக். என்னதான் பண்ணுவாரு கருணாநிதி ? ”
”மருத்துவர் அய்யா என்ன பண்ணுவாரு ? ”
”அவரும் வானவில் கூட்டணிதான்.. ”
”என்ன மச்சான் சொல்ற…. அவர்தான் திராவிடக் கட்சிகளோட கூட்டணி கிடையாதுன்னு சொல்லிட்டாரே… ? ” என்று வியந்தான் ரத்னவேல்.
”இது காங்கிரஸோட அமைந்த கூட்டணி. அந்தக் கூட்டணியில் திமுகவும் இருக்கு. அதனால் இது திராவிடக் கட்சிகளோடு அமைந்த கூட்டணி இல்லைன்னு புது விளக்கம் தருவார் மருத்துவர் அய்யா. அவர் பையன சிபிஐ வழக்குலேர்ந்து காப்பாத்த வேணாமா ? ”
”சரி… ஜெயலலிதாவோட திட்டம் என்ன ? ”
பாராளுமன்றத் தேர்தல் ; ஜெயலலிதாவின் வியூகம்
”இப்போ தேர்தல் நடந்தா, இருக்கிற கூட்டணியை வைச்சே 28 இடங்களில் அதிமுக ஜெயிக்கும்னு உளவுத்துறை அறிக்கை குடுத்துருக்கு. ஜெயலலிதா, எந்தக் கூட்டணியும் வேணாம்.
இரண்டு இடது சாரிகளுக்கும் ஆளுக்கு ரெண்டு ரெண்டு வழக்கம் போல குடுத்துட்டு, மீதம் உள்ள 36 இடங்களிலும் போட்டியிடணும்னு அம்மா முடிவு பண்ணியிருக்காங்க. 36ல போட்டியிட்டு 30லயாவது ஜெயிக்கணும்னு அம்மாவோட கணக்கு.”
”அப்போ மதிமுகவோட கதி ? ”
”சட்டசபைத் தேர்தல்ல கழட்டி விட்டுட்டுப் போனீங்கள்ல… இப்போ நான் உங்களை கழட்டி விடறேன்னு அம்மா சொல்ல வாய்ப்பிருக்கு. வைகோ வழக்கம் போல, மறுமலர்ச்சி திமுகவுக்கு உரிய மரியாதை அதிமுகவால் கொடுக்கப்படவில்லை…. ஆனாலும், லட்சோபலட்சம் மதிமுக தொண்டர்களின் விருப்பத்திற்கிணங்க, மதிமுக தனித்துப் போட்டியிடுகிறது ன்னு அறிவிப்பார். ”
”சரி…. ஜெயலலிதாவுக்கு என்ன அப்படி ஒரு தைரியம்… தனியா நின்னு ஜெயிச்சுடலாம்னு ? ”
”என்ன தைரியம்னு தெரியாது… அது ஆணவமா, தன்னம்பிக்கையான்றது தேர்தல் முடிவுகள் சொல்லும். ஆனா, ஜெயலலிதா, கண்டிப்பா ஜெயிச்சுடலாம்னு நினைக்கிறாங்க.. 2011 சட்டமன்றத் தேர்தல்லயே, விஜயகாந்தை தேவையில்லாம சேத்துட்டோம்னு நினைக்கிறாங்க… கேப்டனுக்கு பதிலா வைகோ வை சேத்துருந்தா கூட விசுவாசமா சொல்ற பேச்சைக் கேட்டுட்டு இருப்பாரு… இந்த ஆளு நாக்கை துருத்திக்கிட்டு என் முன்னாடியே சண்டை போட்றான்… தேவையில்லாம கேப்டனை வளத்து விட்டுட்டோம்னு நினைக்கிறாங்க..
அது மட்டுமில்லாம, தனக்கு எதிரான சூழல் தமிழகத்தில் இல்லன்னு நினைக்கிறாங்க… மின் வெட்டு பெருமளவுக்கு சரி பண்ணியாச்சு. கருணாநிதி மேலயும், காங்கிரஸ் மேலயும் கடுமையான அதிருப்தி இருக்கு… இந்த அதிருப்தி, தேர்தல் நெருங்க நெருங்க அதிகமாகும்னு நினைக்கிறாங்க… அதனால ரொம்ப ஈசியா ஜெயிச்சுடலாம்னு நினைக்கிறாங்க. ”
காங்கிரஸின் திட்டம்
“சரி.. காங்கிரஸோட திட்டம் என்னப்பா ? ” என்றார் கணேசன்.
”அண்ணே… காங்கிரஸ் கட்சி எப்படியும் இந்தத் தேர்தலில் ஜெயிச்சே ஆகணும்னு மும்முரமா இருக்காங்க… எல்லா கார்ப்பரேட்டுகளையும் களத்தில் இறக்கறாங்க. உங்களுக்கு வேணும்ன்றதை நாங்க செஞ்சு தர்றோம். பிஜேபி வந்தா அப்படியெல்லாம் செய்ய மாட்டாங்கன்னு பேசியிருக்காங்க.. கார்ப்பரேட்டுகள், காங்கிரஸ் கட்சிக்காக பணத்தை இறக்கறாங்க. பிஜேபியும் சில கார்ப்பரேட்டுகள்கிட்ட பேசிக்கிட்டு இருந்தாலும், காங்கிரஸ் கட்சிக்கு இருக்கற ஆதரவு பிஜேபிக்கு இல்லை. ஆனா, இறுதி நேரத்துல ஒரு பெரிய அலை அடிச்சு ஜெயிச்சுடுவோம்னு பிஜேபி நம்பறாங்க.”
”காங்கிரஸ் இன்னோரு அயோக்கியத்தனத்தை சத்தமில்லாம அரங்கேத்த இருந்தாங்க கவனிச்சியாப்பா… ? ”
”ம்ம்… அதப் பத்தியும் ஒரு அதிமுக காரரு பார்ல பேசிக்கிட்டு இருந்தாருண்ணே… ”
”அது என்னடா மேட்டர் ? ”
”காங்கிரஸ் கட்சி சத்தமில்லாம, 2ஜி விவகாரத்தை விசாரிக்கிற திமுக உறுப்பினர் திருச்சி சிவாவும், காங்கிரஸ் உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பனும் ஓய்வு பெற்றதால ஏற்பட்ட காலியிடத்தை காங்கிரஸ் உறுப்பினர் பட்டாச்சார்யா மற்றும் நியமன உறுப்பினர் அஷோக் கங்குலியை வைச்சு நிரப்பப் பாத்தாங்க. ஆனா, கவனமா இதைப் பாத்துக்கிட்டு இருந்த அதிமுக ராஜ்ய சபா உறுப்பினர் மைத்ரேயன்தான் இதைத் தடுத்தாரு. அதிமுகவுக்கு இப்போ அதிகமா உறுப்பினர்கள் இருக்காங்க… அதனால, அதிமுக உறுப்பினர்களை அந்தக் குழுவில நியமிக்கனும்னு குரல் கொடுத்தாரு. இதைப் பாத்ததும் பிஜேபியும், இடது சாரிகளும் எதிர்ப்புக் குரல் கொடுத்ததும் அந்த தீர்மானம் கைவிடப்பட்டுச்சு…”
”தமிழ்நாட்டுல காங்கிரஸ் கட்சியோட நிலைமை என்ன மச்சான்.. ? ”
மாற்றப்படுவாரா ஞானதேசிகன்
”தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் ஞானதேசிகனை மாற்றியே தீரணும்னு கருணாநிதி சொல்லியிருக்கார் போல. திமுகவோட அனுசரணையா போக, ஞானதேசிகன் சரிப்பட்டு வர மாட்டாருன்னு காங்கிரஸ் தலைமையும் நினைக்கிது.. ஞானதேசிகனுக்கும், கருணாநிதிக்கும், போன வாரம் நடந்த வாய்க்கால் தகராறு அதுக்கு பெரிய உதாரணம்”
”வேற யாரைப்பா தலைவரா போட்றது… ? ”
”அதுக்கு காங்கிரஸ் கட்சிக்குள்ள ஊருப்பட்ட பஞ்சாயத்து நடக்குது. அதிசயமான விஷயம் என்னன்னா, சோனியா, மன்மோகன் ராகுல் உட்பட எல்லோருக்கும் பிடிச்சமான நபரா நாராயணசாமி உருவாகியிருக்கறதுதான். ”
”என்னடா சொல்ற ? ” என்று வியந்தான் ரத்னவேல்.
”ஆமாடா… நாராயணசாமியாலதான், கருணாநிதியையும் திமுகவையும் இன்னும் காங்கிரஸ்கிட்ட இருந்து விலகாம வச்சுருக்க முடிஞ்சுது… ஒரு கைதேர்ந்த அரசியல்வாதியா சாதுர்யமா செயல்பட்றாரு நாராயணசாமின்னு நினைக்கிறாங்க.. ”
”அப்போ அவருக்கு யோகம் இருக்குன்னு சொல்லு… ”
”நிச்சயமா… முக்கியமான அதிகார மையங்களோட கருணைப் பார்வை இருக்கு.. அப்புறம் என்ன ? ”
”சரி… அடுத்த பரபரப்புச் செய்திகள் என்ன ? ”
”தமிழ்நாட்டுல கேடி சகோதரர்கள் போலவே இன்னொரு பூதம் உருவாகியிருக்குடா… ? ”
கேடி சகோதரர்கள் போன்ற புதிய தீயசக்தி
”என்னடா சொல்ற ? யாரு அந்த பூதம் ?”
விக் சூப்பரா இருக்கு சார்.
”அந்த பூதம் வேற யாரும் இல்ல மச்சான். தாண்டவராயபுரம் ராமசுவாமி பச்சமுத்துதான் அந்த பூதம். கேடி சகோதரர்கள் எப்படி மிகப்பெரிய தீயசக்தியா வளர்ந்திருக்காங்களோ… அதே போல ஒரு தீய சக்தியா எஸ்ஆர்எம் குழுமம் வளந்துக்கிட்டு இருக்கு.
பச்சமுத்து ஒரு பெரிய தீயசக்தியா வளந்துக்கிட்டு இருக்காரு. இந்த வைகுண்டராஜனோட மணற்கொள்ளை பத்தி புதிய தலைமுறை தொலைக்காட்சி பிரமாதமா கவரேஜ் பண்ணிக்கிட்டு இருந்தாங்க. இந்தக் கவரேஜ், வைகுண்டராஜனை ரொம்ப கவலையடைய வச்சுடுச்சு. இந்த ரேஞ்சுல போச்சுன்னா வௌங்காதுன்னு முடிவு பண்ணிட்டு, திருப்பி அடிக்கலாம்னு முடிவு பண்ணிட்டாரு…”
”அவரும் டிவி சேனல் ஆரம்பிக்கப் போறாரா ? ”
”அவரு ஏண்டா டிவி சேனல் ஆரம்பிக்கணும் ? எரியறதை புடுங்குனா கொதியறது அடங்குது. ”
”என்னடா பண்ணாரு ? ”
”அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை அரசு எடுத்து நடத்துனதைப் போலவே, எஸ்ஆர்எம் பல்க்கலைக்கழகத்தையும் அரசு எடுத்து நடத்தணும்னு வைகுண்டராஜன் சார்பா, ஊரு பூரா போஸ்டர் அடிச்சு ஒட்டிட்டாங்க… இந்தப் போஸ்டர்களைப் பாத்ததும், எஸ்ஆர்எம் தரப்பு அலறிட்டாங்க…”
”என்ன பண்ணாங்க… மரியாதை நிமித்தமா பச்சமுத்துவோட பிறந்தநாளுக்கு மொத நாள் புதிய தலைமுறையோட மேலாண் இயக்குநர் சத்யநாராயணன், சென்னையில ஒரு ரகசிய இடத்துல சந்திச்சதா பலமான பேச்சு அடிபட்டுச்சு… உளவுத்துறையும், வைகுண்டராஜனோட ட்ரான்ஸ்வேர்ல்ட் கார்னெட்ஸ் நிறுவனத்தின் பெசன்ட் நகர் அலுவலகத்தை தீவிர கண்காணிப்புல வச்சுருந்தாங்க. ஆனா, சந்திப்பு வேற ஒரு கெஸ்ட் ஹவுஸ்ல நடந்திருக்கு.
வைகுண்டராஜன் வீட்டு வைபவம்
வைகுண்டராஜனும் தன் பங்குக்கு பணத்தை வாரி வாரி இறைக்கிறாரு. தனக்கு எதிரா ஊடகங்கள்ல செய்தி வரக்கூடாதுன்ற அடிப்படையில புதிய தலைமுறை தவிரவும், மற்ற ஊடகங்களையும் வளைச்சுப் போட்றதுக்கு எல்லா ஏற்பாடுகளையும் செய்யறாரு. வைகுண்டராஜன் வீட்டுத் திருமணம் வர்ற செப்டம்பர் 11ம் தேதி க்ராண்ட் சோழா ஹோட்டலில் நடைபெற இருக்கு. இந்த திருமண நிகழ்ச்சிக்கு அழைப்பிதழ் போகாத உயர் அதிகாரிகளோ, பத்திரிக்கையாளர்களோ கிடையாது. பணத்தை தண்ணி போல இறைச்சுக்கிட்டிருக்காரு.”
”இதை வச்சு, எப்படிடா பச்சமுத்துவை கேடி சகோதரர்களோட ஒப்பிட முடியும் ? ”
ஏகலைவனின் ரகசிய உடன்பாடு
”அவசரப்படாதடா… அடுத்த விவகாரம் ஏகலைவன் பத்திரிக்கை சம்பந்தப்பட்டது. ஏகலைவன் பத்திரிக்கையில, பச்சமுத்து மேல ஒரு பெண் கொடுத்த பாலியல் புகார் தொடர்பா ஒரு கட்டுரை போட்டிருந்தாங்க. இதையடுத்து, பச்சமுத்து கட்சியோட 50 ரவுடிகள், அந்த அலுவலகத்தை முற்றுகையிட்டு மிரட்டுனாங்க. ”
”ஆமாப்பா… இதைப்பத்தி சவுக்கு தளத்துல கூட, ஏகலைவன் பத்திரிக்கையோட கட்டுரையை மறுபிரசுரம் செஞ்சுருந்தாங்க… ”
”ஆமாம்ணே… அதுக்கப்புறம், ஏகலைவன் சார்பில் உண்ணாவிரதம் இருக்க ஏற்பாடுகள் நடந்துச்சு… பெரிய அளவில் இந்தப் பிரச்சினை வெடிச்சு, அரசோட கவனத்துக்கு இது வரும்னு எல்லோரும் எதிர்ப்பார்த்துக்கிட்டு இருந்தப்போ, திடீர்னு ஏகலைவன் தரப்பும், பச்சமுத்து தரப்பும் சமாதானமா போயிட்டாங்க. உண்ணாவிரதம் கைவிடப்பட்டுச்சு.
ஏகலைவன் தரப்புல பச்சமுத்து மன்னிப்புக் கேட்டார், அதனால நாங்க இதைப் பெருசு படுத்தலன்னு சொல்றாங்க. ஆனா, பின்னணியில பணம் கைமாறியிருக்கறதா, பத்திரிக்கை உலகத்துல பரபரப்பா பேசப்படுது. பச்சமுத்து சார்பில், இனி ஏகலைவன் பத்திரிக்கையில விளம்பரங்கள் வரும்னும், அவரைப் பாராட்டி செய்திகள் வரும்னும் சொல்றாங்க…
இதுல தமாஷ் என்னன்னா, சவுக்கு தளத்தோட பேரைச் சொல்லியும், பச்சமுத்துகிட்ட வசூல் பண்ணியிருக்கறதா சொல்றாங்க. ”
”இது உண்மையிலேயே தமாஷ்தான்.. இப்போ கிட்டத்தட்ட கேடி சகோதரர்கள் மாதிரி இவரு உருவாயிட்டு வர்றார்ன்றது நம்பற மாதிரி இருக்கு…”
”அடுத்த ஐட்டம் சொல்றேன் கேளு…. இதுதான் இருக்கறதுலயே ஆபத்தானது.
தமிழ் சினிமாவைக் கைப்பற்ற பச்சமுத்துவின் பலே திட்டம்
”பச்சமுத்துவோட எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகமும், இயக்குநர்கள் சங்கமும் சேர்ந்து போட்ட ஒப்பந்தம் ரொம்ப முக்கியமானது. இந்த ஒப்பந்தத்தின்படி, இயக்குநர்கள் சங்க உறுப்பினர்கள் அவர்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எஸ்ஆர்எம் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை வழங்கறாங்க… இது வரவேற்கத்தக்க விஷயம். திரைப்பட இயக்குநர்கள், எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தோட விஷுவல் கம்யூனிகேஷன் பிரிவுல போய் பாடம் எடுப்பாங்க. இயக்குநர்கள் குறும்படம் எடுக்க, 5 கேமராக்கள் மற்றும் எடிட் ஸுட் கொடுக்குது எஸ்ஆர்எம்.
முக்கியமான விஷயம் என்னன்னா, ஒவ்வொரு ஆண்டும், இயக்குநர்கள் சங்கம் பரிந்துரைக்கும் 10 நபர்களுக்கு எஸ்ஆர்எம் பல்க்கலைகழகத்தோட கல்லூரிகள்ல இலவச சீட்கள் வழங்கப்படுமாம்.
இந்த ஆண்டு எஸ்ஆர்எம் மருத்துவக்கல்லூரியில ஒரு சீட்டோட விலை 75 லட்சம். இதுல இயக்குநர்கள் சங்கத்து உறுப்பினர்கள் எப்படிப்பட்ட ஊழல்ல ஈடுபடுவாங்கன்னு சொல்ல வேண்டியதில்லை. இது மட்டுமில்லாம, சினிமாக்காரன்றதுக்காக, 10 சீட்டை இலவசமா தூக்கிக் கொடுக்க பச்சமுத்து பெரிய புரவலரெல்லாம் இல்லை..
இந்த ஒப்பந்தத்தின் மூலமா, மொத்த திரைப்பட உலகத்தையும் தன் கைப்புடிக்குள்ள கொண்டு வந்து, ஒரு காலத்துல சன் பிக்சர்ஸ் சினிமா உலகத்தை ஆட்டிப் படைச்ச மாதிரி, வேந்தர் மூவீஸை வைச்சு மொத்த திரையுலகத்தையும் தன் கைக்குள்ள கொண்டு வரணும்னு பச்சமுத்து போட்ட திட்டத்தோட ஒரு பகுதிதான் இயக்குநர்கள் சங்கத்தோட இந்த ஒப்பந்தம்…”
”என்ன மச்சான்… நீ சொல்றதைப் பாத்தா ரொம்ப மலைப்பா இருக்குதே… ? ”
”மலைப்பாத்தான் இருக்கு. ஜெயலலிதாவும் சரி, கருணாநிதியும் சரி, பச்சமுத்து மாதிரியான ஒரு முதலையை வளர விடறது பெரிய ஆபத்துன்னு புரிஞ்சுக்கிட்டா சரி.. ”
”பச்சமுத்து சரி… வேற என்ன பத்திரிக்கை உலக செய்திகள் ? எங்க பத்திரிக்கை பத்தி செய்திகள் எதுவும் இல்லையா…. எங்க பத்திரிக்கை பத்தி பேசலன்னா உனக்கு தூக்கம் வராதே… ? ” என்றான் பீமராஜன். அவன் அண்ணா சாலையில் உள்ள பாரம்பரியமிக்க வாரமிருமுறை இதழில் வேலை பார்ப்பவன்.
”உங்க பத்திரிக்கைக்கு இந்த வாரம் லீவ்… இன்னொரு மேட்டர் சொல்றேன் கேளு… ஊரையே ஏமாத்தி வளைச்சு போட்டவரு நம்ப நக்கீரன் காமராஜ். அவருக்கே தண்ணி காட்டிட்டாங்க தெரியுமா ? ”
”என்னடா… அவங்க பத்திரிக்கையை விட்டுட்டு எங்க பத்திரிக்கைக்கு வந்துட்டியா ? ” என்றான் ரத்னவேல். அவன் ஜானி ஜான்கான் ரோட்டில் வேலை பார்ப்பவன்.
நக்கீரன் காமராஜையே ஏமாற்றிய பலே கில்லாடி
”காமராஜ் ஐந்திரம் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் பிரைவேட் லிமிட்டெட் னு ஒரு கட்டுமான நிறுவனம் ஆரம்பிச்சாரு தெரியுமா ? அந்த நிறுவனம் சார்பில திருச்சியில ஒரு பொறியியல் கல்லூரி கட்டினாங்க. ஆனா கட்டுனதுக்கு, அந்தக் கல்லூரி நிர்வாகம் இது வரைக்கும் பணம் தராம ஏமாத்திட்டாங்க போலருக்கு… இதுக்காக காமராஜ் இதுல தலையிட்டு…….”
”ஏய் நிறுத்து… காமராஜ் இந்த நிறுவனத்தில இருந்து 2010லயே விலகிட்டதா சவுக்கு தளத்துல கட்டுரை வெளியிட்டாங்களே… (இணைப்பு). பிரச்சினை வந்துடுமோன்னு விலகின மாதிரி நடிச்சார் காமராஜ்… அதுக்காக அப்படியே விலகிடுவாரா என்ன ? பணம் வரலையேன்னு இங்கயும் அங்கயும் அலையிறாரு… அவருக்கு தெரிஞ்ச காவல்துறை அதிகாரிகள்கிட்டயெல்லாம் பேசறாரு. ஆனா, இது திமுக ஆட்சியா என்ன ? யாரும் உதவி பண்ணத் தயாரா இல்ல. அப்படி இருந்தும், அந்த கல்லூரி சம்பந்தப்பட்ட ஒரு நபரை காவல்நிலையத்துல வச்சு ஒரு நாள் முழுக்க விசாரிச்சிருக்காங்க… புதுசா திருச்சிக்குப் போன ராஜேஸ்வரி ன்ற காவல் கண்காணிப்பாளர் உதவி பண்ணதாவும் சொல்றாங்க.. ஆனாலும் பணம் வரலையாம்..”
”ஐந்திரம் கட்டுமான நிறுவனமெல்லாம் காமராஜ் நக்கீரன்ல வேலை பாத்து சம்பாதிச்சதா…. 2ஜியில ஆ.ராசா கூட சேந்து கொள்ளையடிச்சதுதானே… அப்படித்தான் போகும்” என்றான் ரத்னவேல்.
”அந்தப் பத்திரிக்கையிலயே வேலை பாத்துக்கிட்டு அவரையே திட்டுறியேடா….” என்று வியந்தபடி கேட்டான் தமிழ்.
”ஏன் அந்தப் பத்திரிக்கையில வேலை பாத்தா எனக்கு மனசாட்சியே கிடையாதா… ? பொழப்புக்காக வேலை பாக்கறோம். ”
”வேற பத்திரிக்கை உலக செய்திகள் கிடையாதா மச்சான் ?” என்றான் வடிவேல்.
”புதுசா ஒரு டிவி சேனல் வரப்போகுது ” என்று கூறிவிட்டு நிறுத்தினான் தமிழ்.
”என்னடா சொல்ற… ? இருக்கற சேனல்லாம் பத்தாதா ? ”
அம்மா டிவி உதயம்
”அம்மா டிவி ன்ற பேர்ல ஒரு சேனல் வரப்போகுது. ஜெயா டிவியிலயும், ஜெயா ப்ளஸ்லயும் அம்மாவுக்கு அடிக்கிற சொம்பு பத்தாதுன்னு, 2014 தேர்தலை மனசுல வச்சு, இந்த சேனலை தொடங்கப் போறாங்க. இந்த சேனலில் பணியாற்றுவதற்கான நேர்முகத் தேர்வை ஜெயா டிவியில இருக்க மதிவாணன் போன வாரம் ரெயின் ட்ரீ ஹோட்டலில் வச்சு நடத்தியிருக்காரு. இந்த சேனல்ல சேர்றவங்க வேலையாவது பத்திரமா இருக்குமான்னு தெரியல..”
”ஊடக செய்திகள் அவ்வளவுதானா ? ” என்று கேட்டான் வடிவேல்.
திருமாவளவன் டிவி
”இருக்குடா… ஜி டிவி ஒளிபரப்பு நிறுத்தப்பட்டிடுச்சு. ரொம்ப நாளாவே அங்கே பணியாற்றும் ஊழியர்களுக்கு சம்பளம் சரியா தர்றதில்ல. இப்போ ஒளிபரப்புக்கு பணம் கொடுக்காததால, அதையும் நிறுத்திட்டாங்க. ஏற்கனவே தொலைக்காட்சி ஆரம்பிக்கிற எண்ணத்துல இருந்த திருமாவளவன், இந்தத் தொலைக்காட்சியில பணம் போட்டு, இதை மீட்டெடுக்க முயற்சி எடுக்கிறதா ஒரு தகவல்”
தமிழ் இந்து நாளேட்டில் பனிப்போர்
“தமிழ் இந்து எப்போ மச்சான் வருது… ?”
”தமிழ் இந்து அனேகமா செப்டம்பர் 16 அன்னைக்கு வெளியில வந்துடும்னு எதிர்ப்பாக்கறாங்க. எல்லீஸ் ரோடு முனையில தமிழ் இந்துவுக்குன்னு தனியா அலுவலகம் திறந்துட்டாங்க. வேலைகள் மும்முரமா நடந்துக்கிட்டு இருக்கு. ”
”பேப்பர் சிறப்பா வரட்டும் மச்சான். ”
”அப்படி சிறப்பா வரணும்னுதான் எல்லாம் விரும்பறாங்க. ஆனா, அங்கயும் உள் அரசியல் அதிகமா இருக்கு… ”
”என்னடா சொல்ற… ? ”
சமஸ்
”ஆமாம் மச்சான். தினமணி மற்றும் விகடனில் பணியாற்றி விட்டு தமிழ் இந்துவுக்கு போன சமஸ்ன்ற நபரும், வீக் இதழ்ல பணியாற்றிட்டு இப்போ தமிழ் இந்துவுல இருக்கற கவிதா முரளிதரனுக்கும் கடுமையா பனிப்போர் நடந்துக்கிட்டு இருக்கறதா சொல்றாங்க.
கவிதா முரளிதரன்
சமஸோட இயற்பெயர் ஸ்டாலின். அந்தப் பேர் நல்லா இல்லன்னு அவர் சமஸ்ன்னு பேரை மாத்தி வச்சுக்கிட்டாரு. சமஸ் வலதுசாரி கொள்கை உடையவர். கவிதா முரளிதரன் இடதுசாரி கொள்கை உடையவங்க. இவங்க இரண்டு பேருக்கும் நடக்குற பனிப்போர் ப்ரொடக்டிவிட்டியவே பாதிக்குதுன்னு மேனேஜ்மென்ட்லயே நினைக்கிறாங்க.”
”சரி காவல் துறை செய்திகள் என்னய்யா இருக்கு ? ” என்றார் கணேசன்.
சிபி.சிஐடியின் விருந்து
”சிபி.சிஐடியில கொடுத்த விருந்துதான் இந்த வாரம் பரபரப்பா பேசப்பட்டுச்சு. ஒவ்வொரு வருஷமும், அரசின் காவல்துறை விருதுகள் அறிவிக்கப்பட்டதும், சிபி.சிஐடியில விருந்து குடுக்கிறது வழக்கம். ”
”இதுக்காக அரசாங்கம் பணம் ஒதுக்குதா ? பரவாயில்லயே… ? ”
”அரசாங்கம் இந்த காவல்துறை அதிகாரிகள் பிரியாணி தின்னுக்கிட்டு லெக் பீஸ் கடிக்கிறதுக்கா பணம் ஒதுக்கும்.. அறிவில்லாம பேசறியேடா… அரசாங்கம் விசாரணைக்குன்னு, ரகசிய நிதியை ஒதுக்கும். அந்த ரகசிய நிதியை பங்கு போட்டுக்கிட்டது போக, இருக்க நிதியில இந்த மாதிரி விருந்து கொடுப்பாங்க. சிபி.சிஐடி விசாரணைக்கு ஒப்படைக்கப்பட்ட ராமஜெயம் கொலை வழக்குல எந்த முன்னேற்றமும் இல்ல… ஐபிஎல் விசாரணையை ஊத்தி மூடிட்டாங்க. சேலம் ஆடிட்டர் கொலை வழக்குல முன்னேற்றம் இல்ல. விசாரணை பண்ணுங்கடான்னா உக்காந்து லெக் பீஸ் கடிச்சிக்கிட்டு இருக்காங்க.. என்ன பண்றது ? ”
”சரி.. அந்த அதிகாரிங்க விருந்து குடுத்துக்கிறாங்க.. அதுக்கென்ன பண்றது” என்று அதிகாரிகளுக்கு ஆதரவாகப் பேசினான் பீமராஜன்.
”அதிகாரிகளுக்கு விருந்து கொடுத்தாக் கூட பரவாயில்லடா… பத்திரிக்கையாளர்களுக்கு சிபி.சிஐடி விருந்துக்கு எதுக்கு அழைப்பு ? பத்திரிக்கைக்காரங்க சம்பளம் வாங்கறது இல்லையா… ? சிபி.சிஐடியில் பணியாற்றும் காவலர்கள், தலைமைக் காவலர்கள் குடும்பத்துக்கு விருந்து குடுத்தா அதுல ஒரு அர்த்தம் இருக்கு. குறைவாக சம்பளம் வாங்கும் அவர்கள் மனசு நிறைஞ்சு போவாங்க. பத்திரிக்கைக்காரங்க சம்பளம் வாங்கறது இல்லாம கவரும் வாங்கறாங்க… அவங்களுக்கு எதுக்குடா சிபி.சிஐடி விருந்து ? அதுவும், மற்ற அதிகாரிகள் யாரும் சாப்பிடறதுக்கு முன்னாடி, பத்திரிக்கையாளர்கள்தான் உள்ள அனுமதிக்கப்பட்டாங்களாம்… முக்கிய பத்திரிக்கையாளர்களோட, சிபி.சிஐடி டிஜிபி நரேந்திரபால் சிங் வழிஞ்சு வழிஞ்சு பேசுனாராமே…. ? ”
”அந்த ஆளு பத்திரிக்கையாளர்கள்ட பேசவே மாட்டாரே… எதுக்கு திடீர் கரிசனம் ? ”
”சிங்கு தலைப்பா சும்மா ஆடுமாடா ? சிங்குக்கு எப்படியாவது டிஜிபியாகி, பெரிய அமவுன்டை கொள்ளையடிக்கணும்னு ஆசை. அதுக்கு பத்திரிக்கையாளர்களை கைக்குள்ள போட்டுக்கிட்டா காரியம் நிறைவேறிடும்னு நினைக்கிறாரு. அதுக்குத்தான் இந்த விருந்து, உபசாரம் எல்லாம். ”
”வேற செய்திகள் இல்லையாப்பா ? ”
வசூல் வேட்டையில் திருவாரூர் எஸ்.பி
”இருக்குண்ணே… திருவாரூர் மாவட்ட எஸ்.பி மகேஸ்வர் காளிராஜ், வசூலை வாரிக் குவிச்சுக்கிட்டு இருக்காராம். லெப்ட் ரைட் சென்டர்னு வசூல்தானாம். அந்த மாவட்டத்துல வேலை செய்யற டிஎஸ்பிக்கள் இன்ஸ்பெக்டர்கள்லாம் அலர்றாங்களாம்… இந்த ஆளு காஷ்மீர்ல குண்டடி பட்டதால, தமிழ்நாட்டுக்கு அயல்பணியா அனுப்பபப் பட்டவரு. பரமக்குடி துப்பாக்கிச் சுடு நடந்ததுக்கு செந்தில் வேலனோட சேத்து, இந்த ஆளும் ஒரு பெரிய காரணம். வேலையெல்லாம் ஒழுங்கா செய்ய வக்கு கிடையாது… ஆனா வசூலுக்கு ஒரு குறைச்சலும் இல்லை. ”
”சரி.. வட இந்திய லாபியோட வேலைகள் எப்படி இருக்கு ? ”
காவல்துறைக்குள் முட்டி மோதும் வட இந்திய லாபி
”வட இந்திய லாபி இன்னமும் தீவிரமா ராமானுஜத்தை தூக்கறதுக்கு தீவிரமா முயற்சி செய்துக்கிட்டு இருக்கு. ஓ.பன்னீர்செல்வம் வரைக்கும் பாத்து பணம் கொடுத்து இருக்கறதா சொல்றாங்க. இப்போ உளவுத்துறை கூடுதல் டிஜிபியா நியமிக்கப்பட்டு இருக்கற அஷோக் குமாருக்கும், ராமானுஜத்துக்கும் எப்படியாவது மோதலை உருவாக்கணும்னு கடுமையா முயற்சி செய்யறாங்க. ஆனா, அந்த ரெண்டு அதிகாரிகளுக்கு இடையே உறவு நல்லாத்தான் இருக்கு. அவங்க ரெண்டு பேரும் மோதிக்கிட்டா, வட இந்திய லாபி ஜெயிச்சுடலாம்னு நினைக்கிறாங்க. ”
”சரி போலாமாப்பா… ”
வசமாய் சிக்கும் வருண் குமார்
”கடைசியா ஒரு கொசுறு செய்தி சொல்லிட்றேன்ணே… வருண் குமார் ஐபிஎஸ் னு ஒரு அதிகாரி ஐபிஎஸ்க்கு படிக்கும்போது பிரியதர்ஷினின்னு ஒரு பொண்ணை காதலிச்சாரு. அப்புறம் இந்த ஆளு ஐபிஎஸ் க்கு தேர்ச்சி பெற்றதும், அவங்க வீட்ல பிஎம்டபிள்யு கார், ஏகப்பட்ட பணம் வரதட்சிணை கேட்ருக்காங்க. இதுக்கு நடுவுல, ஐபிஎஸ் அதிகாரியான இன்னொரு பொண்ணு கூட, வருண் குமாருக்கு சம்பந்தம் பேசறதை கேள்விப் பட்ட அந்த பிரியதர்ஷினி சென்னை காவல்துறையில புகார் செஞ்சாங்க… அவங்களும் வழக்கு பதிவு செய்யாததால நீதிமன்றத்தை அணுகியிருக்காங்க. நீதிமன்றம் இந்த ஆளு மேல வழக்கு பதிவு பண்ணணும்னு உத்தரவு போட்டதும் வழக்கு பதிவு பண்ணப் பட்டுச்சு.
இப்போ வழக்கு நிலுவையில இருந்தும் கூட, இந்த ஆளை திருப்பத்தூர் உதவிக் காவல் கண்காணிப்பாளரா நியமிச்சு உள்துறைச் செயலாளர் உத்தரவு போட்ருக்காரு. கிரிமினல் வழக்கு நிலுவையில இருந்தா, கான்ஸ்டபிள் வேலைக்கே சேர முடியாது. ஐபிஎஸ் அதிகாரியா ஒருத்தனை எப்படி வேலைக்கு எடுத்தாங்க ?”
”கான் ஸ்டபிள்தாம்பா கிரிமினல் வழக்கு இருந்தா வேலைக்குச் சேர முடியாது. ஐபிஎஸ் அதிகாரி சேரலாம். ”
”இப்போ அந்தப் பொண்ணு வருண் குமாரை பணி இடைநீக்கம் செய்து துறை நடவடிக்கை எடுக்கணும்னு சென்னை உயர்நீதிமன்றத்துல வழக்கு போட்டு இருக்கு.. இந்த வழக்கு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வருது. ”
வருண் குமார் மற்றும் பிரியதர்ஷினி
”அந்தப் பொண்ணுக்கு நியாயம் கிடைச்சா சரிப்பா. ஒரு பெண் உதவி ஆய்வாளரை ஒரு மேஜிஸ்ட்ரேட் ஏமாத்துனதா புகார் வந்தா, அன்னைக்கே கைது பண்றாங்க.. ஐபிஎஸ் அதிகாரிக்கு வேலை குடுக்கறாங்க.. நல்லா நடத்தறாங்கப்பா காவல்துறையை…”
பீமராஜன் எழுந்து ”போகலாம்” என்றதும், சங்கத்தை கலைத்தார்கள் அனைவரும்.