சவுக்கு தளத்தில், கடந்த வார டாஸ்மாக் தமிழில், தமிழ் இந்து நாளேட்டில் பணிபுரியும் சமஸ் என்பவருக்கும், அங்கே பணியாற்றும் கவிதா முரளிதரன் என்பவருக்கும் பனிப்போர் என்றும், சமஸ் வலதுசாரி சிந்தனை உடையவர் என்றும், செய்தி வெளியிடப்பட்டிருந்தது. சமஸ் இதை கடுமையாக மறுத்து ஒரு மறுப்பை அனுப்பியுள்ளார். தான் வலது சாரி அல்ல என்று மறுத்துள்ளார். மேலும், கவிதா முரளிதரன் மற்றும் சமஸ் இருவரிடையே எவ்விதமான பனிப்போரும் இல்லை என்றும் கூறியுள்ளார்.
சமஸ் அவர்கள் வலதுசாரி இல்லை என்பது குறித்து உள்ளபடியே நமக்கு மகிழ்ச்சி. அதே நேரத்தில், சமஸ் அவர்களுக்கும், கவிதா முரளிதரன் ஆகியோருக்கும் இடையே பனிப்போர் என்ற தகவல் விசாரிக்காமல் எழுதப்பட்டது அல்ல. அந்தத் தகவல் முழுமையாக விசாரிக்கப்பட்டு, பல பேரிடம் சரிபார்க்கப்பட்ட பின்னரே எழுதப்பட்டது. ஆனால் இதில் சம்பந்தப்பட்ட சமஸ் அவர்களே, அவருக்கும் கவிதாவுக்கும் எவ்வித முரணும் இல்லை என்று கூறுவது மகிழ்ச்சியே. சமஸ் அவர்கள் குறிப்பிட்டது போன்ற அணி உணர்வோடு (Team Spirit) தமிழ் இந்து நாளேடு வெளியாகி ஜனநாயகத்தை பலப்படுத்தும் பணியாற்ற வேண்டும் என்பதே நமது விருப்பம். இந்து நாளேட்டில் நடக்கும் குறைகளை சுட்டிக்காட்டுவது, அவை திருத்திக் கொள்ளப்படும் என்ற நோக்கிலேயே அன்றி, வேறு நோக்கத்தில் அல்ல.
சமஸ் அவர்களது மறுப்பு, பின்வருமாறு.
வணக்கம்.
நம் இருவருக்குமே முன் அறிமுகம் கிடையாது என்றபோதிலும், உங்கள் எழுத்துகளை நான் வாசித்திருக்கிறேன். காவல் துறை உள்ளிட்ட அதிகாரமட்டத்தின் ஊழல்கள் தொடர்பாகவும் முறைகேடுகள் தொடர்பாகவும் ஆவணங்களோடு துணிச்சலாக நீங்கள் வெளியிடும் ஆதாரபூர்வச் செய்திகளை ஒரு செய்தியாளனாக ஆச்சர்யத்தோடு பார்த்திருக்கிறேன். அதேசமயம், தனிப்பட்ட நபர்களைத் தாக்கும் விதத்தில் அவதூறான நடையில் எழுதப்படும் செய்திகளைப் பார்க்கும்போது எரிச்சலும் அடைந்திருக்கிறேன். எனினும், ஜனநாயகம் வலுப்பட இணையத்தை ஓர் ஆயுதமாக்கும் உங்களைப் போன்றவர்களை மரியாதையுடனேயே பார்த்துவந்திருக்கிறேன்.
ஆனால், இன்றைய தினம் சவுக்கு தளத்தில் நீங்கள் என்னைப் பற்றி வெளியிட்டிருக்கும் செய்தி நீங்கள் உங்களுடைய செய்திகளில் எந்த அளவுக்கு நம்பகத்தன்மைக்கும் நேர்மைக்கும் இடம் கொடுக்கிறீர்கள் என்கிற கேள்வியை எழுப்பியுள்ளது.
இந்து தமிழ்ப் பத்திரிகையில், திருமதி. கவிதா முரளிதரனுக்கும் எனக்கும் இடையே பனிப் போர் மூண்டிருப்பதாக நீங்கள் குறிப்பிட்டிருக்கும் செய்தி முற்றிலும் கற்பனையானது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். கூடுதலாக அந்தச் செய்தியோடு தொடர்புடைய ஏனைய குறிப்புகள் சார்ந்த உண்மைகளையும்…
1. இங்கு பணியில் சேருவதற்கு முன்னரே எனக்கு அறிமுகமானவர் கவிதா. அவருடனான என்னுடைய அறிமுகமே என்னுடைய கட்டுரைகளை முகநூலில் தொடர்ந்து அவர் பகிர்ந்ததின் அடிப்படையில்தான் உருவானது. இதுவரை எங்களுக்குள் சமூகப் பிரச்னைகள் சார்ந்துகூட எந்த விவாதமும் நிகழ்ந்தது இல்லை. இதற்கு அர்த்தம் நானும் கவிதாவும் எல்லாப் பிரச்னைகளையும் ஒரே கோணத்தில் பார்க்கிறோம் என்பது அல்ல. ஆனால், கருத்து வேறுபாடு உள்ள விஷயங்களைக்கூட விவாதிக்கும் வாய்ப்ப்போ சூழலோ இன்றுவரை எங்களுக்குள் உருவாகவில்லை என்பதே (முகநூல் பாருங்கள்).
2. சமஸ் என்பது சந்திரசேகரன் மலர்க்கொடி ஸ்டாலின் என்பதன் சுருக்கம் என்பது சரி. ஆனால், ஸ்டாலின் என்ற பெயரை நான் மாற்றிக்கொண்டது நான் வலதுசாரி என்பதால் அல்ல. அடிப்படையில் ஜனநாயகவாதியான நான் ஒரு சர்வாதிகாரியின் பெயரைச் சுமந்திருக்கக் கூடாது என்பதே. இடதுசாரிக் கொள்கையில்கூட தீவிரவாதம் கூடாது என்று நினைக்கும் நான் சர்வாதிகாரத்தின் அடிநிலமான வலதுசாரியாக எப்படி இருப்பேன் என்று நினைத்தீர்கள்?
இதுநாள் வரை வலதுசாரிகளைத் தகர்த்தெறியும் எழுத்துகளே என்னுடைய அடையாளமாக இருக்கின்றன. நீங்களும் படித்திருக்கக் கூடும். பின் எப்படி இவ்வளவு ஆழமாக முத்திரை குத்துகிறீர்கள்?
என்னுடைய முன்னோடி காந்தி. ஒரு காந்தியவாதி என்றே என்னை அடையாளங்காட்டிக்கொள்ள விரும்புகிறேன். இன்றைக்கு அருந்ததி ராய் எதற்காகவெல்லாம் குரல் கொடுக்கிறாரோ அந்த விஷயங்களில் எல்லாம் காந்தியாவாதிகளின் குரலும் இடதுசாரிகளின் குரலும் கிட்டத்தட்ட ஒன்றாகவே ஒலிக்கும். காரணம் வலதுக்கு எதிரான பார்வை. கவிதாவின் குரலும் என்னுடைய குரலும்கூட இதுவரை அப்படியே ஒலித்திருக்கின்றன; ஒலிக்கும்.
3. உண்மையில் இதுவரை தமிழ்ப் பத்திரிகை உலகுக்கு அறிமுகம் இல்லாத அணி உணர்வை இங்கு கொண்டுவர வேண்டும் என்றே முழுமையாக உழைத்துவருகிறோம். ஒரு நல்ல சூழல் இங்கு ஏற்படும்போது அது ஒட்டுமொத்தத் தமிழ்ப் பத்திரிகை உலகிலுமே நல்ல மாற்றங்களை உருவாக்கும் என்பது தாங்கள் அறியாதது அல்ல. அந்தக் கனவை ஆரம்பத்திலேயே குலைத்துவிடக் கூடியவை இத்தகைய செய்திகள்.
4. எழுத்து எவ்வளவு பெரிய ஆயுதம் என்று நான் உங்களுக்கு விளக்க வேண்டியது இல்லை. நீங்கள் ஒரு மனிதனைப் பற்றி எழுத முற்படும் முன் அவன் யார் என்பதை முழுமையாகத் தெரிந்துகொண்டு எழுதுவது முக்கியம். என்னைப் பொருத்த அளவில், நான் நம்பிக்கொண்டிருக்கும் அறநெறிகளும் கடைப்பிடித்துக்கொண்டிருக்கும் விழுமியங்களுமே நான் என்று நம்பி வாழ்பவன் நான். என் எழுத்து வேறு, நான் வேறு இல்லை. அந்த வகையில், உங்களுடைய எழுத்துகள் கடுமையாக என்னைக் காயப்படுத்தி இருக்கின்றன.
இது தொடர்பாக முழுமையாக விசாரித்து நீங்கள் மறுப்பு எழுத வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். செய்தி தவறானது என்கிற அடிப்படையில், இது மிக நியாயமான கோரிக்கை என்பதை உணர்வீர்கள் என்று நம்புகிறேன்.
நன்றி.
தங்கள்…சமஸ்.