தலைப்பைப் பார்த்ததும் பயந்து விடாதீர்கள். கட்டுரையை முழுமையாக படியுங்கள்.
காமராஜ். எளிமை என்பதன் மறுபெயர் காமராஜ். தனக்கென்று சொத்துக்களை சேர்த்து வைத்துக் கொள்ளாத ஒரு அரிய அரசியல்வாதி காமராஜ். ஆனால், பிச்சையெடுத்துக் கொண்டிருப்பவனுக்கு கோடீஸ்வரன் என்று பெயர் வைப்பதில்லையா ? அது போல, ஒரு கடைந்தெடுத்த அயோக்கியனுக்கு அண்ணாமலை என்பவர் காமராஜ் என்று பெயர் வைக்கிறார். காமராஜ் போல வளர்ந்து முதலமைச்சராக வில்லையென்றாலும், காமராஜ் போல கண்ணியமாக நடந்து கொள்வான் நம் மகன் என்றுதான் எண்ணி அந்தப்பெயரை அண்ணாமலை வைத்திருப்பார். ஆனால், அந்தப் பெயருக்கு நேர் மாறாக உருவானார் காமராஜ்.
அப்படி நேர்மாறாக உருவான காமராஜ் வேறு யாரும் அல்ல… பிரபல பத்திரிக்கையாளர் என்று சமூகத்தில் பெயரெடுத்து, கருணாநிதிக்கு நெருக்கத்திலும் நெருக்கமான திமுகவின் பத்திரிக்கை உலக சொம்புதான் அந்த காமராஜ். இவரை வெறும் காமராஜ் என்று அழைத்தால் ஒருவருக்கும் தெரியாது. நக்கீரன் காமராஜ் என்று அழைத்தால்தான் வெளியுலகிற்கு தெரியும். அந்த அளவுக்கு நக்கீரன் கோபால் என்ற மோசடிப் பேர்விழியின் கண்களும் காதுகளுமாய் உருவாகியிருக்கிறார் காமராஜ்.
இந்தக் காமராஜைப் பற்றி சவுக்கு தளத்தில் எத்தனையோ கட்டுரைகள் வெளியிடப்பட்டுள்ளன. காமராஜின் அசல் முகத்தை முதன் முதலாக வெளியுலகிற்கு அம்பலப்படுத்தியதே சவுக்கு தளம்தான். சவுக்கு தளம் அம்பலப்படுத்திய பிறகே, காமராஜ் வீட்டில் 2ஜி வழக்கு தொடர்பாக சோதனைகள் நடத்தப்பட்டன. காமராஜ் வீட்டில் சோதனைகள் நடத்தப்பட்ட பிறகே, வெளியுலகுக்கு காமராஜ் என்பவர் பத்திரிக்கையாளர் அல்ல… அவர் ஒரு ப்ரோக்கர். முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் பினாமி என்ற விஷயங்கள் வெளியுலகுக்கு அம்பலமான பின்னரே, சவுக்கு தளத்தில் வெளியான கட்டுரைகளின் மீதான நம்பிக்கை அதிகரித்தது. அது வரை, காமராஜின் நண்பர்கள் பலர், காமராஜ் மீது ஏதோ கடுமையான உள்நோக்கம் இருப்பதாகவும், அவர் மீதான தனிப்பட்ட கோபத்தின் காரணமாக இப்படியெல்லாம் எழுதப்படுகிறது என்றும் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தனர். ஆனால் சிபிஐ நடத்திய சோதனைகள், பத்திரிக்கையாளர் என்ற காமராஜின் முகமூடியை கிழித்தெறிந்தது. நக்கீரனின் மீசைக்கார அண்ணாச்சி கூட, காமராஜ் வீட்டில் சிபிஐ சோதனைகள் நடத்தியதும் வரிந்து கட்டிக்கொண்டு அதை எதிர்த்து எழுதினார். நக்கீரன் பல்வேறு மிரட்டல்களை சந்தித்திருக்கிறது, அதில் இது ஒரு வகையான மிரட்டல் என்று 2ஜி சோதனைகளை, நக்கீரன் பத்திரிக்கைக்கு வந்த சோதனையாகவே மாற்றினார். ஆனால், காமராஜ் அன்று முதல் இழந்த பெருமையை மீட்டெடுக்க முடியவேயில்லை. சவுக்கு தளத்தின் மீது இருந்த கோபத்தை நேரடியாக வெளிக்காட்ட முடியாமல், சவுக்கின் நண்பர்கள் மீது அவதூறு வழக்கு தொடுத்து அதை இன்று வரை நடத்திக் கொண்டிருக்கும் வகையில் அற்பத்தனமான மனிதர் காமராஜ்.
இந்த காமராஜ் வெறும் பத்திரிக்கையாளர் அல்ல, அவர் கான்ட்ராக்டர் காமராஜ் என்ற விபரத்தையும் முதன் முதலாக வெளியுலகுக்கு அம்பலப்படுத்தியது சவுக்கு தளமே. (இணைப்பு). காமராஜ் அய்ந்திரம் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் என்ற பெயரில் ஒரு கட்டுமான நிறுவனத்தை நடத்தி வருவதும், அந்தக் கட்டுமான நிறுவனத்தின் மூலமாக 2ஜியில் வந்த கருப்புப் பணத்தை வெள்ளையாக்க முயற்சி செய்ததும் ஏற்கனவே எழுதப்பட்டது.
தற்போது காமராஜ் மீது எழுந்துள்ள புதிய குற்றச்சாட்டு என்னவென்றால், பொறியியல் கல்லூரி கட்டித் தருகிறேன் என்று ஒப்பந்தம் போட்டுவிட்டு, ஒப்பந்தப்படி முழுமையான இரும்பு பயன்படுத்தாமல், பாதியளவு இரும்பைப் பயன்படுத்திவிட்டு, அதற்கான தொகையையும் கேட்கிறார் என்பதுதான்.
தொழிலில் முரண்பாடுகள் ஏற்படுவதும், அவை இழுபறியில் போய் முடிவதும் சகஜமே. ஆனால், தனக்கு அரசியல் செல்வாக்கு இருக்கிறதென்பதற்காக, இந்த தொழில் தகராறை காவல் நிலையத்துக்கு எடுத்துச் சென்று, தன் செல்வாக்கைப் பயன்படுத்தி, சம்பந்தப்பட்ட நபரை கைது செய்ய வைத்து, அதன் மூலம் அந்தப் பணத்தை வசூல் செய்ய முயற்சிப்பது எந்த வகையில் சரியாக இருக்கும் ? இதைத்தான் காமராஜ் செய்திருக்கிறார்.
கேஆர்கே கல்வி அறக்கட்டளை சார்பில் நடத்தப்படும் பொறியியல் கல்லூரி ஓஏஎஸ் இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜி அன்ட் மேனேஜ்மென்ட். இந்த கல்வி அறக்கட்டளை திருச்சி, முசிறி தாலுகா, புலிவலம் என்ற இடத்தில் ஒரு பெரிய பொறியியல் கல்லூரியைக் கட்ட முனைகிறது. பெரம்பலூரை சொந்த ஊராகக் கொண்ட காமராஜ், தனது செல்வாக்கு காரணமாக இந்த கல்லூரி கட்டுவதற்கான ஒப்பந்தத்தை பெறுகிறார். திமுக ஆட்சிக் காலத்தில் மார்ச் 2010ல் இந்த ஒப்பந்தம் காமராஜின் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. டிசம்பர் 2011ல் மொத்த கட்டுமானமும் நிறைவடைகிறது. நிறைவடைந்து, கல்லூரியும் செயல்படத் தொடங்குகிறது.
அதன்பிறகு, தாங்கள் வேலை செய்ததற்கான தொகையை வழங்குமாறு காமராஜின் அய்ந்திரம் நிறுவனம், கேஆர்கே கல்வி அறக்கட்டளையிடம் கேட்டபோது அறக்கட்டளையினர் அதிர்ச்சி அடைகிறார்கள். அதிர்ச்சிக்கு என்ன காரணம் ? ஏறக்குறை ஒரு லட்சம் சதுர அடி கட்டடித்தை அய்ந்திரம் நிறுவனம் கட்டியிருக்கிறது. அந்த ஒரு லட்சம் சதுர அடிக்கு, ஒப்பந்தத்தின்படி அய்ந்திரம் நிறுவனம் பயன்படுத்தியிருக்க வேண்டிய இரும்பின் அளவு 500 டன். ஆனால், அய்ந்திரம் நிறுவனம் வெறும் 250 டன் இரும்பை மட்டுமே பயன்படுத்தியிருந்தது தெரிய வந்தது.
500 டன் இரும்புக்கும், 250 டன் இரும்புக்குமான விலை வேறுபாடு 1.25 கோடி. காமராஜோ, 500 டன்னுக்கான விலையைக் கேட்க, கல்லூரி நிர்வாகமோ, 250 டன்னுக்கான விலையை மட்டுமே தர முடியும் என்று சொல்ல, இப்படியே தகராறு நீடித்தது.
இனி கல்லூரி நிர்வாகத்திடம் பணத்தைப் பெற முடியாது என்று உணர்ந்த காமராஜ் அய்ந்திரம் கட்டுமான நிறுவனம் சார்பில், திருச்சி மாவட்ட நில அபகரிப்புப் பிரிவில் புகார் மனு ஒன்றை அளிக்கிறார். சாதாரணமாக புகாரின் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்து விடுமா என்ன ? காமராஜ் தனக்கு தெரிந்த காவல்துறை அதிகாரிகளை வைத்து, கல்லூரி நிர்வாகத்தையும், இந்தக் கல்லூரியை கட்டிய பொறியாளரையும் (Architect) விசாரணைக்கு வரவைக்கிறார் காமராஜ்.
ஒரு பொறியியல் கல்லூரியைக் கட்டுபவர்கள் மட்டும் என்ன சாதாரணமான ஆட்களா ? அவர்களுக்கும் செல்வாக்கு இருக்காதா என்ன ? அவர்களும் காவல்துறை விசாரணைக்கு சென்று, இது ஒரு சிவில் வழக்கு… ஒரு தொழில் தகராறு என்பதை விசாரிக்கிறார்கள். உண்மையில் ஏமாற்றியது கல்லூரி நிர்வாகம் அல்ல, அய்ந்திரம் கட்டுமானக் கழகமே என்பதை விளக்குகிறார்கள். இந்தக் கட்டிடம் கட்டுவது தொடர்பான ஒப்பந்தத்தின்படி, பொறியாளர் (Architect) கருத்தே இறுதியானது. இந்தக் கட்டிடத்தை ஆய்வு செய்த பொறியாளர், 250 டன் இரும்பு மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதைக் கூறியுள்ளார் என்றும், கட்டிடத்தின் ஸ்திரத்தன்மையே பாதிக்கும் வகையில் இந்தக் கட்டிடத்தை அய்ந்திரம் நிறுவனத்தினர் கட்டியுள்ளனர் என்றும், காமராஜ் அதை ஏற்றுக் கொள்ள மறுக்கிறார் என்பதையும் விளக்குகின்றனர்.
உயர் அதிகாரிகளின் அழுத்தம் இருந்தாலும், காவல்துறை, இந்த விவகாரத்தில் இனியும் ஏதாவது செய்தால், தங்கள் தலைக்கு கத்தி வந்து விடும் என்பதை உணர்ந்து, நீதிமன்றத்தை அணுகுமாறு அய்ந்திரம் நிறுவனத்தாருக்கு அறிவுறுத்தி அனுப்பி வைக்கின்றனர். காமராஜ் தனது அரசியல் செல்வாக்கால் இந்த வழக்கில், கல்லூரி நிர்வாகத்தினரை கைது செய்ய வாய்ப்பு இருக்கிறதென்று அஞ்சிய நிர்வாகத்தினர், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையை அணுகியுள்ளனர். உயர்நீதிமன்றம், சமரச மையத்தை அணுகி இவ்விவகாரத்தில் நியாயம் பெறுமாறு உத்தரவிட்டுள்ளது.
கட்டுவது ஒரு பொறியியல் கல்லூரி என்பது காமராஜுக்கு தெரியுமா தெரியாதா ? இளம் மாணவர்கள் படிக்கும் கல்லூரி என்பதால், அந்தக் கல்லூரி கட்டுகையில் அந்தக் கட்டிடம் மிகச்சிறந்த உறுதியோடு கட்டப்பட வேண்டும் என்பது காமராஜுக்குத் தெரியாதா என்ன ? அப்படி இருந்தும், குறைந்த அளவிளான இரும்பைப் பயன்படுத்தி காமராஜ் இது போன்றதொரு கட்டிடத்தைக் கட்டியிருக்கிறார் என்றால், காமராஜ் எப்படிப்பட்ட லாபவெறி கொண்டவராக இருப்பார் ?
வேறு யாரோ ஒருவர் இப்படிப்பட்ட கட்டிடத்தைக் கட்டியிருந்தால் நக்கீரனின் கவர்ஸ்டோரி எப்படி இருந்திருக்கும் தெரியுமா ? “இடியும் நிலையில் பொறியியல் கல்லூரி. தரம் குறைந்த கட்டுமானம். ஒரு பகீர் ரிப்போர்ட்.” இப்படி வந்திருக்குமா வந்திருக்காதா ? நக்கீரனின் இதழியல் நெறிகள் குறித்து ஏற்கனவே பலமுறை சவுக்கில் எழுதப்பட்டுள்ளது. வாசகர்களுக்கும் அது தெரியாதது அல்ல.
இந்த கட்டுரைக்காக கல்லூரியை வடிவமைத்த பிரசாத் யாதவ் அவர்களை தொடர்பு கொண்டபோது, அவர் வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் இது குறித்து பேச முடியாது என்று மறுத்து விட்டார்.
கல்லூரி நிர்வாகம், காமராஜின் அய்ந்திரம் கட்டுமான நிறுவனம், பாதி அளவிளான இரும்பைப் பயன்படுத்தி தரம் குறைந்த கட்டிடத்தைக் கட்டியிருக்கிறது என்று புகார் தெரிவித்திருக்கிறது. தரம் குறைந்த கட்டுமானம், 500க்கு பதிலாக வெறும் 250 டன் இரும்பு மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது வெறும் வாய்மொழியான குற்றச்சாட்டு அல்ல. நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றச்சாட்டு. இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த குற்றச்சாட்டு. ஆயிரக்கணக்கான மாணவர்கள் படிக்கும் ஒரு கட்டிடம் தரக்குறைவாக கட்டப்பட்டுள்ளது என்பதை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. ஊருக்கெல்லாம் நியாயம் சொல்லும் காமராஜ், ஒரு பத்திரிக்கையாளர் என்ற முறையில் இந்தக் குற்றச்சாட்டுக்கு காமராஜ் பதில் சொல்லக் கடமைப் பட்டவர்.