தமிழ் மையம் என்ற வார்த்தை தீண்டத்தகாததா ? ஆம் தோழர்களே… இன்று சென்னை உயர்நீதிமன்றம் அப்படித்தான் தீர்ப்பு வழங்கியுள்ளது.
தமிழக அரசு சென்னை சங்கமம் தொடர்பாக வெளியிடும் விளம்பரங்கள் எதிலும் தமிழ் மையம் என்ற வார்த்தை இருக்கக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. சிபிஐ சோதனைகளக்குப் பிறகு, தன்னுடைய இமேஜை மீட்டு நிறுத்த, இந்நிகழ்ச்சியை பெரிதும் நம்பியிருந்த போலிப் பாதிரிக்கு இது மிகப் பெரிய பின்னடைவு. போலிப் பாதிரியின் பிசினெஸ் பார்ட்னரான கண்ணே பாப்பாவுக்கும் இது மிகப் பெரிய பின்னடைவு.
ஏற்கனவே, கஸ்பருக்கு புத்தாண்டுப் பரிசு என்று சவுக்கு எழுதியது போலவே, சிபிஐ சோதனைக்கு உள்ளான ஒரு அமைப்போடு தமிழக அரசு இணைந்து சென்னை சங்கமம் விழா நடத்துவது சட்ட விரோதமானது என்று வழக்கு தொடரப் பட்டது. சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் புகழேந்தி இவ்வழக்கை தொடர்ந்திருந்தார்.
டிசம்பர் 15 அன்று சிபிஐ, 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விசாரணையின் ஒரு பகுதியாக சிபிஐ நாடு முழுவதும் சோதனை நடத்தியது. தமிழ் மையம் அலுவலகமும் சோதனைக்கு உள்ளானது. இப்படி சிபிஐ விசாரணையில் இருக்கும் ஒரு நிறுவனத்துடன் இணைந்து தமிழக அரசு சென்னை சங்கமம் விழாவை நடத்துவது அந்நிறுவனத்துக்கு நற்சான்று வழங்குவதாகும் என்று புகழேந்தி தனது மனுவில் தெரிவித்திருந்தார்.
நேற்று இந்த வழக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் நீதிபதி டி.எஸ்.சிவஞானம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரரின் வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன், தேசமே அதிர்ந்து போன ஒரு ஊழல் ஸ்பெக்ட்ரம் ஊழல். இந்த ஊழலில் சம்பந்தப் பட்டதாக சந்தேகிக்கப் படும் ஒரு நிறுவனம் தமிழ் மையம். அந்த நிறுவனத்துடன் இணைந்து தமிழக அரசு சென்னை சங்கமம் என்ற நிகழ்ச்சியை நடத்துவதாக அறிவித்திருப்பது மிகுந்த வருத்தத்திற்குரிய விஷயம். நீதிமன்றம் தான் தலையிட்டு, நியாயம் வழங்க வேண்டும் என்று கூறினார். மேலும், உச்ச நீதிமன்றமே இந்த விசாரணையை நேரடியாக மேற்பார்வை செய்து கொண்டிருக்கும் இந்த சூழலில் தமிழக அரசு இது போல தமிழ் மையத்துக்கு முக்கியத்துவம் வழங்கக் கூடாது என்று வாதாடினார்.
அரசுத் தரப்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர் ராஜா கலிபுல்லா, கொடுக்கும் காசுக்கு சற்று அதிகமாகவே கூவினார். இந்த மனுதாரர் மனுவை விளம்பரத்திற்காக போட்டுள்ளார், இது தொடர்பாக ஒரு புகார் மனு கூட அனுப்பவில்லை, வேண்டுமென்றால், மனுதாரரை சென்னை சங்கமத்திற்கு ஒரு புகார் மனுவை அனுப்பச் சொல்லுங்கள். சிபிஐ சோதனை நடத்தியது என்பதற்காகவே ஒரு அமைப்பை குற்றம் சாட்டக் கூடாது என்று வாதாடினார். இதைக் காதில் வாங்கிக் கொள்ளாத நீதிபதி, மனு எதுவும் தரவில்லை என்பதை மறந்து விட்டு, விஷயத்திற்கு வாருங்கள் என்று கூறினார்.
அடுத்து பேசிய ராதாகிருஷ்ணன், தமிழ் மையத்தின் செயல்பாடுகளைப் பாருங்கள். நேற்று வரையில் அவர்கள் இணையத் தளத்தில் இருந்த இயக்குநர்களின் பட்டியல் இன்று நீக்கப் பட்டு விட்டது என்று கூறினார். உடனே, கலிபுல்லா, ஒரு தனியார் நிறுவனத்தின் இணையத் தளத்தில் ஒரு பக்கம் நீக்கப் பட்டதற்கு நான் என்ன சொல்ல முடியும் என்று கேட்டார். உடனே ராதாகிருஷ்ணன், இதற்காகத் தான் நான் சொல்கிறேன், தமிழ் மையத்திற்காக நீங்கள் வாதாடாதீர்கள் என்று கூறினார்.
அடுத்து கலிபுல்லா, மனுதாரர் செய்தித் தாளில் வந்த செய்திகளின் அடிப்படையில் வழக்கு தொடர்ந்துள்ளார். செய்தித் தாளில் வந்த செய்திகளை எப்படி நம்ப முடியும் என்று கூறினார்.
ராதாகிருஷ்ணன் கடும் கோபத்துடன், செய்தித் தாள்களையும் அனைத்து ஊடகங்களையும் தடை செய்து விடலாமா ? அரசு வழக்கறிஞர் செய்தித் தாள்களை நம்ப முடியாது என்று பேசுவது, துரதிர்ஷடவசமானது. ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி ஊழலை வெளிக் கொண்டு வந்தது செய்தித் தாள்கள் தான் என்பதை அரசு வழக்கறிஞர் மறந்து விட்டார் என்று கூறினார்.
இருவரது வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், அரசை விரிவான பதில் மனு தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு விட்டு, தமிழ் மையத்திற்கு நீங்கள் நோட்டீஸ் கொடுக்க முடியுமா என்று ராதாகிருஷ்ணனை பார்த்துக் கேட்டார். ராதாகிருஷ்ணன் சம்மதம் என்று தெரிவித்தவுடன், வழக்கை வெள்ளிக் கிழமைக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.
உடனடியாக தமிழ் மையத்திற்கு நோட்டீஸ் தயார் செய்யப் பட்டது. அந்த நோட்டீஸை தமிழ் மையத்திற்கு யார் சென்று கொடுப்பது என்ற கேள்வி எழுந்த போது, இந்த பேறு கிடைக்க யான் என்ன தவம் செய்திருக்க வேண்டும் என்று சவுக்கு இரண்டு கரங்களாலும் அந்த நோட்டீசை வாங்கிக் கொண்டது.
சவுக்கே நேரடியாக சென்று தமிழ் மையத்திற்கு நோட்டீஸ் வழங்குவதை விட வாழ்வில் வேறு என்ன பேறு கிடைக்க வேண்டும் ? நேரடியாக தமிழ் மையம் சென்று மதியம் சரியாக 2.40 மணிக்கு நோட்டீசை வழங்கியது சவுக்கு. அந்த அலுவலகம் முழுவதும் “ தமிழ் மையம் வழங்கும் சென்னை சங்கமம் 2011“ என்று பேனர்கள் இருந்தன. நாளை இந்த பேனருக்கு என்ன ஆகும் என்று யோசித்துக் கொண்டே, சவுக்கு புறப்பட்டது.
இன்று இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்தது. காலையில் சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பாக பதில் மனு தாக்கல் செய்யப் பட்டது. அந்த பதில் மனுவில், தமிழக அரசின் நிதி தமிழ் மையத்திடம் வழங்கப் பட மாட்டாது என்றும், தமிழ் மையம் நிகழ்ச்சிக்கான கலைஞர்களை மட்டுமே வழங்கும் என்றும் தெரிவிக்கப் பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, என்ன ராதாகிருஷ்ணன், அவர்கள் தான் இவ்வாறு சொல்லியிருக்கிறார்களே… என்ன சொல்கிறீர்கள் என்றார். பணம் தருவது மட்டும் விஷயம் இல்லை. சிபிஐ விசாரணையில் இருக்கும் ஒரு நிறுவனத்திற்காக அரசு விளம்பரம் செய்யக் கூடாது. இன்று தாக்கல் செய்யப் பட்டுள்ள பதில் மனுவில், நிகழ்ச்சியின் பெயரே, “தமிழ் மையத்தின் சென்னை சங்கமம்“ என்று போடப் பட்டுள்ளது. இந்நிகழ்ச்சிக்கு மொத்தம் ஒரு கோடி வழங்கப் படப் போவதாகவும், அதில் 67 லட்சம் கலைஞர்களுக்கு என்றும், 33 லட்சம் விளம்பரத்திற்காக செலவிடப் படும் என்றும் தெரிவித்துள்ளார்கள். இது போல கறை படிந்த ஒரு நிறுவனத்தை விளம்பரப்படுத்த மக்களின் வரிப்பணம் எதற்காக செலவிடப் பட வேண்டும் என்று பேசிய போது, அரசு வழக்கறிஞர் குறிப்பிட்டு, அரசு அவர்களுக்காக விளம்பரம் செய்யவில்லை, அவர்கள் நிகழ்ச்சிக்கான கலைஞர்களை வழங்குகிறார்கள் என்று கூறினார். உடனே ராதாகிருஷ்ணன், சரி, நான் அவர்களுக்கு தேவைப்படும் 1300 கலைஞர்களை வழங்குகிறேன், ராதாகிருஷ்ணன் சென்னை சங்கமம் என்று நிகழ்ச்சிக்கு பெயரிடுவார்களா ? செய்ய மாட்டார்கள், ஏனென்றால், இவர்களுக்கு இந்த நிறுவனத்திற்கு நற்சான்று வழங்குவதுதான் ஒரே நோக்கம் என்று கூறினார்.
நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் என்று அரசு வழக்கறிஞரை பார்த்து நீதிபதிகள் கேட்டவுடன், சரி, அரசு வெளியிடும் விளம்பரங்களின் தமிழ் மையத்தின் பெயர் இருக்காது என்று தெரிவித்தார். அரசு வழக்கறிஞரின் இந்த வாதத்தை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், சிபிஐ வழக்கறிஞரைப் பார்த்து, நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்று கேட்டார்கள்.
சிபிஐ வழக்கறிஞர் சந்திரசேகர், தமிழ் மையத்தில் சோதனை நடந்துள்ளது, விசாரணை நடைபெற்று வருகிறது என்று தெரிவித்தார். தமிழ் மையத்தின் வழக்கறிஞர், நாங்கள் குற்றவாளிகள் அல்ல, சோதனை மட்டும் தான் நடந்துள்ளது என்று தெரிவித்த போது சிபிஐ வழக்கறிஞர், குற்றவாளியா இல்லையா என்பது விசாரணையின் முடிவில் தான் தெரியும். இப்போது சொல்ல முடியாது என்றார்.
வழக்கின் தீர்ப்பை மதியம் 2.15க்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர். மதியம் தங்கள் தீர்ப்பை வாசித்த நீதிபதிகள், சென்னை சங்கமம் தொடர்பாக அரசு வெளியிடும் விளம்பரங்கள் எதிலும் “தமிழ் மையம்“ என்ற பெயர் இருக்கக் கூடாது என்று உத்தரவிட்டனர். கலைஞர்களை நிகழ்ச்சிக்கு தமிழ் மையம் வழங்குவதில் தடையேதும் இல்லை என்று உத்தரவிட்டனர்.
ஆக சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின் சாராம்சம் என்னவென்றால், தமிழ் மையம் கலைஞர்களை வழங்குவதைத் தவிர சென்னை சங்கமம் நிகழ்ச்சியில் வேறு பொறுப்புகள் இல்லை என்று அரசு தெரிவித்த கருத்தை ஏற்றுக் கொண்டுதான் நீதிமன்றம் இவ்வாறு தீர்ப்பளித்துள்ளது.
போலிப் பாதிரியும் கண்ணே பாப்பாவும் சேர்ந்து பேட்டியளித்தார்களே…. 2000 நிறுவனங்களிடம் ஸ்பான்சர்ஷிப் கேட்டு கடிதம் அனுப்பப் பட்டுள்ளது என்று…. அதையெல்லாம் இனி செய்ய முடியாது. வழக்கு முடிந்து பத்திரிக்கையாளர்களை ராதாகிருஷ்ணன் சந்தித்த போது, இவ்வாறு ஸ்பான்சர்ஷிப் கேட்டு 2000 நிறுவனங்களிடம் கடிதம் அனுப்பியுள்ளார்களே என்று கேட்டதற்கு, அவ்வாறு கடிதம் அனுப்பியது பற்றி நீதிமன்றத்தில் தமிழ் மையத்தின் வழக்கறிஞரும் தெரிவிக்கவில்லை, அரசு வழக்கறிஞரும் தெரிவிக்கவில்லை. ஆகையால் நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு தொடரப்பட்ட பிறகு, நீதிமன்றத்திற்கு தெரிவிக்காமல் தமிழ் மையம் நிதி வசூல் செய்தால், அது சட்ட விரோதமாகும். வசூல் செய்கிறார்கள் என்று தெரிந்தால், நீதிமன்றத்தை மீண்டும் அணுகுவோம் என்று தெரிவித்தார்.
கழுகுக் கண்களோடு, சவுக்கு தமிழ் மையத்தின் செயல்பாடுகளையும், ஸ்பான்சர்கள் பற்றிய விபரங்களையும் கண்காணித்துக் கொண்டே இருக்கும். தமிழ் மையம் நிகழ்ச்சி நடக்கும் அனைத்து இடங்களுக்கும் சென்று, எந்தெந்த ஸ்பான்சர்கள் பேனர்கள் கட்டியிருக்கிறார்கள் என்ற பல்வேறு விபரங்களை விசாரிக்கும். சென்னை சங்கமம் நிகழ்ச்சி முடிந்தவுடன், விரிவான ஆய்வுகளை நடத்தி விட்டு, ….. …. …… அப்புறம் என்ன போலிப் பாதிரிக்கு பொங்கல் பரிசாக அடுத்த வழக்குதான்.