“சோதனை மேல் சோதனை…. போதுமடா சாமி… வேதனைதான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி” என்று பாடியபடியே வந்தான் டாஸ்மாக் தமிழ்.
”என்ன மச்சான்… சோகப்பாட்டா பாடுற ? ” என்று தமிழ் அமரும் முன்பாகவே கேள்வி கேட்டான் பீமராஜன். அவனோடு வடிவேல், ரத்னவேல் மற்றும் கணேசன் ஆகியோர் அமர்ந்திருந்தனர். புன்னகையோடு தமிழை வரவேற்றனர்.
“இந்தப் பாட்டை நான் பாடலடா… ஜெயலலிதா பாடிட்டு இருக்காங்க. சொத்துக் குவிப்பு வழக்கை எப்படியாவது தேர்தல் வரைக்கும் தள்ளிடலாம்னு பாத்தாங்க.. ஆனா, திமுக எடுத்துக்கிட்டு இருக்க நடவடிக்கைகள் வழக்கை மேலும் சிக்கலாக்கிடுச்சு. தேர்தல் வரைக்கும் தள்ள முடியுமான்னு சந்தேகப்படறாங்க. வழக்கு இறுதிக் கட்டத்துக்கு வந்துடுச்சு”
”இப்போ அவங்களுக்கு என்ன பின்னடைவு ஏற்பட்டுச்சுன்னு சொல்ற ? ”
”சொத்துக் குவிப்பு வழக்குல பெரிய சிக்கலா இருந்தது, அரசு வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யா. அவரை மிரட்டி பதவியை ராஜினாமா செய்ய வச்சுட்டாங்க. அப்போ இருந்த பிஜேபி அரசுகிட்ட தனக்கு இருக்கற தொடர்புகள் மூலமா, தனக்கு சாதகமான வழக்கறிஞர் பவானி சிங்கை நியமிச்சாங்க. பவானி சிங் ஜெயலலிதா தரப்புக்கு எல்லா உதவிகளையும் செஞ்சாரு”
”வழக்கு முடியற கட்டத்துல அவர் என்ன உதவி செய்ய முடியும் ? ” என்றான் ரத்னவேல்.
”இப்போ ஜெயலலிதா தரப்பு சாட்சிகளை விசாரிச்சிக்கிட்டு இருக்காங்க. இந்த வழக்கோட விசாரணை அதிகாரியா “ரியல் எஸ்டேட் சம்பந்தம்” இருக்காரு. அவரை விசாரிச்சாங்க. அவர் மூலமா பல ஆவணங்களோட நகல்களை நீதிமன்றத்துல சமர்ப்பிச்சாங்க. இது ஏற்றுக் கொள்ள முடியாதது”
”இதுல என்ன தப்பு இருக்கு. விசாரணை அதிகாரியை எதிரி தரப்பு விசாரிக்கிறது இயல்புதானே… ? ”
”விசாரணை அதிகாரியை எதிரி தரப்பு விசாரிக்கறது தப்பு இல்லை. ஆனா, நீதிமன்றத்தைப் பொறுத்த வரைக்கும், அசல் ஆவணங்கள் மட்டுமே தாக்கல் பண்ணணும். நகல்களை நீதிமன்றங்கள் ஏத்துக்காது. ஆனா, சம்பந்தம் நகல்கள் தாக்கல் செய்தாரு. இப்படி நகல்களை தாக்கல் செய்யறதுக்கு, அரசுத் தரப்பு எதிர்ப்பு தெரிவிக்கணும். ஆனா எந்த எதிர்ப்பும் தெரிவிக்கலை. ஜெயலலிதா 2001-2006ல் பதவியில் இருந்தப்போ, சென்னையில இந்த வழக்கு விசாரணை எப்படி நடந்துச்சோ, அதே மாதிரி நடக்குது. அரசுத் தரப்பு, எதிரித் தரப்பு எல்லாம் ஒண்ணா சேந்து வேலை செய்யறாங்க. இதைத்தான் பேராசிரியர் அன்பழகன் குறிப்பா சுட்டிக்காட்டியிருக்காரு. பவானி சிங் பிப்ரவரி மாதம் பதவியேற்றதுமே, கேட்ட முதல் கோரிக்கை, இந்த வழக்கு ஆவணங்களை பரிசீலிக்கிறதுக்கு தனக்கு 2 மாதம் அவகாசம் வேணும்ன்னு. ஆனா, நீதிபதி அவருக்கு 2 வாரம் அவகாசம் கொடுத்தாரு.”
பவானி சிங்
”ஆனா ஜெயலலிதா தரப்புல, வழக்கறிஞர் பவானி சிங்கை மாற்றுனது, அரசியல் உள்நோக்கம் கொண்டதுன்னு சொல்றாங்களே…”
”உலகத்துலயே, தனக்கு எதிரா வழக்கு தொடுத்த அரசு வழக்கறிஞரை மாற்றியது தப்புன்னு வழக்கு தொடுத்த முதல் குற்றவாளி ஜெயலலிதாவாத்தான் இருப்பாங்க. ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்குல குற்றவாளி. யார் வழக்கறிஞரா இருந்தா என்ன ? அன்பழகன் பவானி சிங்கை மாத்தணும்னு தொடுத்த வழக்குல சொல்லியிருந்த முக்கியமான காரணம், பவானி சிங், ஜெயலலிதா தரப்போட கூட்டு சேர்ந்து பவானி சிங் செயல்படறார்னு. பவானி சிங்கை மாத்துனது தப்புன்னு ஜெயலலிதா வழக்கு தொடர்ந்தது மூலமா, அன்பழகன் சொன்ன குற்றச்சாட்டுகள் உண்மைன்னு நிரூபிச்சுட்டாங்க”
”அந்த நீதிபதி எப்படி… ? ”
”எதிரித் தரப்போ, அரசுத் தரப்போ நகல்களை ஆவணங்களா தாக்கல் செய்ஞ்சா, அதுக்கு சம்பந்தப்பட்டவங்களோட எதிர்த்தரப்பு எதிர்ப்பு தெரிவிக்கணும். அப்படி அவங்க எதிர்ப்பு தெரிவிக்கலைன்னா, நீதிபதி அதுக்கு அனுமதி குடுக்கக் கூடாது. ஆனா, இந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதி எம்.எஸ்.பாலகிருஷ்ணா, நகல்களை தாக்கல் செய்ததை அனுமதிச்சிருக்காரு. அது மட்டுமில்லாம, பவானி சிங்கை மாத்துனத எதிர்த்து வழக்கு தாக்கல் செய்த ஜெயலலிதா தரப்பு உச்சநீதிமன்றத்துல வச்ச முக்கியமான வாதம், நீதிபதி செப்டம்பர் 30 அன்னைக்கு ஓய்வு பெறுகிறார். அதுக்குள்ள வழக்கை முடிக்கணும்னு. இதுவும், நீதிபதி மேல சந்தேகத்தை எழுப்புது. 17 வருஷமா ஒரு வழக்கை இழுத்தடிச்ச நபர், நீதிபதியை மாத்தக் கூடாதுன்னு கேக்கறதே, ஏதோ உள்குத்து இருக்குன்ற சந்தேகத்தை ஏற்படுத்துது.”
”சரி… இந்த டெவலப்மென்டுகள், கருணாநிதி தரப்பை குஷி படுத்தியிருக்கா ? ” என்றான் வடிவேல்.
”கருணாநிதிக்கும் முழுமையா நிம்மதி இல்ல. காங்கிரஸ் கட்சியை விட்டுட்டு, இனி எங்கயும் போக முடியாதுன்னு ஆயிடுச்சு. அதுனாலதான், சோனியாவை மணிமேகலைன்னு பாராட்டி பேசினார். தயாளு அம்மாவை டெல்லிக்கு போகாம சென்னையிலயே விசாரிக்க உதவி செஞ்ச சோனியா மேல அபார நன்றியுணர்ச்சியில இருக்காரு கருணாநிதி. அதனாலதான், மணிமேகலை, காயசண்டிகைன்னு பேசிக்கிட்டு இருக்காரு. ”
”எப்படி இருந்தாலும் தயாளு அம்மாளை விசாரிக்கத்தானே போறாங்க. இது என்ன பெரிய உதவி ? ”
”என்னடா பேசற… ? போன முறை, கலைஞர் டிவி பொது மேலாளர் ராஜேந்திரனை விசாரிச்சப்போ, ஷாஹீத் பல்வா, ஆ.ராசா, மற்ற குற்றவாளிகள் தரப்புல அவரை பெரிசா குறுக்கு விசாரணை செய்யல. ஆனா, இந்த வழக்குல தண்டனையாகுற வாய்ப்பு இருக்க சரத்குமார் தரப்புதான் கடுமையா குறுக்கு விசாரணை செஞ்சு, பல உண்மைகளை வாங்குனாங்க. தயாளு அம்மாளோட குறுக்கு விசாரணைதான், சரத் குமாரை காப்பாத்தும். சென்னையில விசாரணை நடந்துச்சுன்னா, சரத்குமார் தரப்பு என்ன கேள்விகள் கேக்க முடியும் ? எது கேட்டாலும், தயாளு அம்மா தெய்வத் திருமகன் விக்ரம் மாதிரி “நிலா.. சாக்லேட்… ஊட்டி”ன்னு பேசுவாங்க. ஓவரா கேள்வி கேட்டா, சரத்குமார் சென்னையை விட்டு வெளிய போக முடியுமா ? கழக உடன்பிறப்புகள், சரத்குமார் குடும்பத்தை விட்டுடுவாங்களா என்ன ? ”
”ஜெயலலிதாவுக்கு கருணாநிதி கொஞ்சமும் சளைச்சவங்க இல்லை போலருக்கே ?.”
”சாதாரண குற்றவாளிகளே, வழக்குல இருந்து தப்பிக்க எல்லா முயற்சிகளையும் எடுக்கும்போது, இவ்வளவு பணமும் செல்வாக்கும் இருக்க குற்றவாளிகள் சும்மாவா இருப்பாங்க. தங்களால முடிஞ்ச முயற்சிகளை செய்யத்தானே செய்வாங்க ? ”
”சரி.. 2ஜி விசாரணை எப்படித்தான் நடக்குது ? ” என்றான் பீமராஜன்.
”2ஜி வழக்கை விசாரிக்கிற பாராளுமன்றக் கூட்டுக்குழுவுல இருந்து, திமுக சார்புல இருந்த திருச்சி சிவா ஓய்வு பெற்றார். அவருக்கு பதிலா திமுக சார்பில் ஒரு ராஜ்யசபா உறுப்பினரை நியமிக்கணும். திமுக சார்புல செல்வகணபதியோ, இல்ல கே.பி.ராமலிங்கத்தையோ பரிந்துரைப்பாங்கன்னு பாத்தா, வசந்தி ஸ்டான்லியை பரிந்துரைச்சாங்க. ”
”வசந்தி ஸ்டான்லி சிஐடி காலனிக்கு நெருக்கமாச்சே… ? ”
வசந்தி ஸ்டான்லி
”ஆமாம்… ஆமாம். அதுதான் விஷயமே. வசந்தி ஸ்டான்லியை ஒப்பிடும்போது, செல்வகணபதியும் சரி, ராமலிங்கமும் சரி. விபரமானவங்க. திருச்சி சிவாவோட தகுதிக்கு இணையானவர் செல்வகணபதி. ஆனா, அவங்களை நியமிச்சா, கனிமொழிக்கு ஆதரவா இருக்க மாட்டாருன்னு, சிஐடி காலனி கொடுத்த நெருக்கடியிலதான் வசந்தி ஸ்டான்லியை நியமிச்சாங்க. வசந்தி ஸ்டான்லியைப் பத்தி சவுக்கு தளத்துல ஏற்கனவே ஒரு கட்டுரை வந்துருக்கு. (இணைப்பு) வசந்தி ஸ்டான்லி, கனிமொழி சிறையில இருந்தப்போ, அவங்க வெளியில வரணும்னு மொட்டை போட்டு தன்னோட விசுவாசத்தைக் காண்பிச்சாங்க. 2ஜி வழக்குல பாராளுமன்ற கூட்டுக் குழுவில, கனிமொழிக்கு ஆதரவா செயல்பட்டா, இரண்டாவது தடவையும் எம்.பியாக்குறோம்னு வாக்கு குடுத்துருக்காங்க.”
”அப்போ திமுக குடும்பத்துல சிஐடி காலனி கை ஓங்குதா ? ”
”கை ஓங்குதான்னு சொல்ல முடியாது. இப்போ போட்டி, ஸ்டாலின் மற்றும் கனிமொழிக்கு இடையேன்னு ஆயிட்டு வருது. அழகிரி, கிட்டத்தட்ட ஓய்வு பெற்ற நிலைக்கு வந்துட்டார். எவ்விதமான அரசியல் நடவடிக்கைகள்லயும் ஈடுபடாம இருக்கறதால, ஸ்டாலினும் அவரை கண்டுக்கிறதில்லை. கனிமொழி தீவிர அரசியல் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க. ஆனா, கனிமொழி தனக்கு நேரடி போட்டி இல்லன்னு தெரிஞ்சதால, ஸ்டாலின் பெரிய அளவுல எதிர்ப்பு தெரிவிக்காம இருக்கறார். ”
”பாட்டாளி மக்கள் கட்சி கூட்டணியில சேருமா சேராதாப்பா ? ” என்றார் கணேசன்.
”கூட்டணியில சேரலன்னா ஜெயிக்க முடியாதுன்னு அவருக்குத் தெரியாதாண்ணே.. ? அன்புமணி ராமதாஸ் ஒரு பக்கம் திராவிடக் கட்சிகளோடு கூடடணி கிடையாதுன்னு தீவிரமா பேசிக்கிட்டிருக்காரு. இன்னொரு பக்கம் திமுகவோட நெருக்கமாகிற வேலையும் நடக்குது. போன வாரம், தமிழகத்தில் நெருக்கடி நிலை என்று ஜி.கே.மணி கடிதம் எழுதி அதை நேரடியாக கருணாநிதியிடம் கொடுத்தபோது அன்புமணி இது போலப் பேசி வருவதை கருணாநிதி சுட்டிக் காட்டியிருக்கிறார். அந்தக் கருத்து அன்புமணியின் கருத்து, கட்சியின் கருத்து அல்லன்னு சமாதானம் சொன்ன ஜிகே மணி காடுவெட்டி குரு மீண்டும் மீண்டும் தேசியப்பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டதுக்கு திமுக தரப்புல எதிர்ப்பு தெரிவிக்கணும்னு சொல்லியிருக்காரு. திமுக தலைவரை ஜிகே மணி நேரடியா சந்திச்சு ஆதரவு கேட்டது, பாமக திமுகவோட நெருங்கி வர்றதைத்தான் காட்டுது.”
”சரி.. அமைச்சரவை மாற்றம் எப்போ நடக்கப் போகுது… இதோ அதோன்னு சொல்றாங்க ஆனா ஒண்ணும் நடக்கலையே.. ? ”என்று அடுத்த சப்ஜெக்டுக்கு தாவினான் ரத்னவேல்.
”அமைச்சரவை மாற்றம் எப்போ வேணாலும் நடக்கும் மச்சான். யாரை மாத்தறது, யாரை வச்சுக்கறதுன்னு அம்மா ஒரே குழப்பத்துல இருக்காங்க. அவ்வளவு பேரும் திருடனுங்களா இருக்காங்களேன்னு குழப்பம். ஓ.பன்னீர் செல்வம் மேல ஊருபட்ட புகார்கள்.
அம்மாவோட கோபப்பார்வைக்கு ஆளாகியிருக்க ஓ.பன்னீர் செல்வத்தின் மீது ஏராளமான புகார்கள் இருந்தாலும், அம்மா கோவத்துக்கு காரணம் வைகுண்டராஜனோடு ஏற்பட்ட ரகசியக் கூட்டுன்னு சொல்றாங்க. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமார் மாற்றப்பட்டதும், பன்னீர் செல்வத்தின் ஆலோசனையின் படி நடந்திருக்கு. அந்த மாறுதல் உத்தரவை வச்சு, பன்னீர் செல்வத்தின் மகன் வைகுண்டராஜன்கிட்ட, 200 கோடி ரூபாய் வசூல் செய்துள்ள விபரமும் ஜெயலலிதாவுக்கு தெரிஞ்சுடுச்சு. இதுவும் கடுமையான கோவத்துக்கு காரணம்னு சொல்றாங்க.”
”சரி. தேர்தலை சந்திக்க ஜெயலலிதா தயாராயிட்டாங்களாப்பா. கூட்டணியெல்லாம் முடிவாயிடுச்சா ?”
”கூட்டணிக்கு முன்னாடி, சட்டம் ஒழுங்கை சரி பண்ணணும்னு ஜெயலலிதா தீவிரமா இருக்காங்க. போன வாரத்துல காவல்துறை உயர் அதிகாரிகள் ஜெயலலிதாவை சந்திச்சாங்க. அப்போ கடுமையாக அவர்களிடம் பேசியிருக்கார் ஜெயலலிதா. தமிழகத்தை நெருக்கடிக் குள்ளாக்கிய மின்வெட்டைக் கூட சமாளிச்சுட்டேன். சட்டம் ஒழுங்கு பிரச்சினையைத்தான் என்னால் சமாளிக்க முடியல. உங்களுக்கெல்லாம் எதுக்கு சம்பளம் ? வேலை செய்ய முடிஞ்சா செய்யுங்க. இல்லன்னா இடத்தை காலி பண்ணுங்கன்னு ரொம்ப கோவமா பேசியிருக்காங்க. ஜெயலலிதா ஆட்சியில சட்டம் ஒழுங்கு நல்லா இருக்கும்னு வழக்கமா பேசற பேச்சு, இந்த முறை பொய்யாயிடுச்சேன்னு அவங்களுக்கு ரொம்ப வருத்தம். தேர்தல் நேரத்துல இது ஒரு சிக்கலை உருவாக்கும்னு நினைக்கிறாங்க.
மலிவு விலை தண்ணீர் வசதியை வீடுகளுக்கும் குடுக்கலாமான்னு நினைக்கிறாங்க. அம்மா உணவகங்கள் பெரும் வெற்றி பெற்றதையடுத்து, பேருந்துகளில் பாட்டில் நீர் குறைந்த விலையில் குடுக்கற திட்டத்தை அறிவிச்சி இருக்காங்க. இதே மாதிரி, வீடுகளுக்கு வழங்கப்படும் 20 லிட்டர் தண்ணீர் கேன்களையும், மலிவு விலையில வழங்கலாமான்னு ஆலோசனைகள் நடக்குது. “
“நல்ல விஷயம்தான். நல்லது நடந்தா சரி. கூட்டணி முடிவாகலையா இன்னும் ?“
“அண்ணே… தமிழகத்தைப் பொறுத்த வரைக்கும் எந்தக் கூட்டணி முடிவாச்சோ இல்லையோ, அதிமுகவுக்கும் இடது சாரிகளுக்குமான கூட்டணி இறுதியாயிடுச்சு “
“சிபிஐக்கு ஆதரவு கொடுத்தரை சொல்றியா ? “
“சிபிஐ ஆதரவு ஏற்கனவே முடியாயிடுச்சு. ராஜாவை எம்.பி ஆக்கும்போதே சிபிஐ ஆதரவு முடிவான விஷயம். அதுக்கு முன்னாடியில இருந்தே, தா.பா அம்மா லாவணிதானே பாடிக்கிட்டு இருந்தாரு.. அது ஒண்ணும் பெரிய சிக்கல் இல்ல.
சிபிஎம் கூட்டணி முடியாவனதுதான் இப்போ புதிய தகவல். “
“எப்போ முடிவாச்சு.. எந்த அறிவிப்பும் வரலயே.. ? “
“போன வாரம் பிரகாஷ் காரத் சென்னை வந்தார். வந்து ஜெயலலிதாவை தலைமைச் செயலகத்துல போயி சந்திச்சார். “
“ஆமாம் அது மரியாதை நிமித்தமான சந்திப்புன்னு சொன்னாங்க. “ என்று சந்தேகத்தோடு கேட்டான் பீமராஜன்.
“அரசியல்ல மரியாதை நிமித்தமான சந்திப்புன்னா, அதுக்குப் பின்னாடி ஏதோ சங்கதி இருக்குன்னு அர்த்தம்… என்ன ஜர்னலிஸ்ட் நீ… இது கூட தெரியாம. தமிழக சிபிஎம் சார்பில் ராஜ்யசபை எம்.பியா இருக்கறவர், டி.கே.ரங்கராஜன். அவரோட பதவிக்காலம் 2014ல் முடியுது. அவர் பதவிக்காலம் முடிஞ்சதும், அடுத்த எம்.பி சிபிஎம்முக்கே கிடைகிறதுக்கு, ஆதரவு தரணும்னு கேக்கறதுக்காகத்தான் போனார் காரத். “
“இவங்களும் பிச்சை பாத்திரம் ஏந்திட்டாங்களா… ? “
“இரண்டு இடது சாரிகளும், தமிழகத்தை பொறுத்தவரை திராவிடக் கட்சிகளோட நிழல்ல, அண்டிப்பிழைச்சதுதானே வரலாறு… எப்பயாவது ஒரு முறை தனியா நிப்பாங்க. அடுத்த தேர்தல் வந்ததும், திரும்பவும், ஜெயலலிதாகிட்டயோ, கருணாநிதி கிட்டயோ போயி, “பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்” னு பாடிக்கிட்டே போயிடுவாங்க. மதவாத சக்திகளை ஓரங்கட்டணும், காங்கிரஸை எதிர்க்கணும், அதுக்காக கூட்டு சேர்ந்தோம் னு ஏதாவது மொக்கையா ஒரு விளக்கம் குடுத்துட்டு, திரும்ப திருவோட்டை ஏந்துவாங்க. இதுதானே இவங்க வரலாறு…“
“அதனாலதான் சிபிஎம், மணல் கொள்ளை, சட்டம் ஒழுங்கு ன்னு எந்த பிரச்சினைக்கும் போராட்டம் நடத்தலையா ? “
“இது மட்டுமில்ல… கடந்த ஒரு மாசம் தீக்கதிரை எடுத்துப் பாரு. ஒன்னு அதிமுக அடிமைகள் கொடுத்த விளம்பரம் இருக்கும். இல்லன்னா, அரசு விளம்பரம் இருக்கும். தமிழக அரசை விமர்சிச்சு எந்த செய்தியும் இருக்காது. தேர்தல் வரைக்கும் தமிழக அரசை எதிர்த்து எந்தப் போராட்டமும் நடத்தி அம்மாவோட கோபத்தை சம்பாதிச்சுக்கக் கூடாதுன்னு ரொம்ப கவனமா இருக்காங்க. “
“பிரகாஷ் காரத்துக்கு சந்தோஷமா ? “
“அவரு சந்தோஷத்தை விடு. பிரகாஷ் காரத் சந்திப்புலயும், ஒரு தமாஷ் நடந்துச்சு. ஜெயலலிதாவோட உதவியாளரா இருக்க பூங்குன்றன்தான், ஜெயலலிதாவுக்கு வர்ற கடிதங்களை பிரிச்சு வைப்பாரு. அப்படி கடிதங்களை வைக்கிறதுல, அந்த ஆளு நிறைய்ய பணம் பண்ணிட்டாருன்னு, அந்த வேலையை அவர்கிட்ட இருந்து பிடுங்கிட்டாங்க. ஜெயலலிதாவோட அப்பாயின்ட்மென்ட் நேரங்களை முடிவு செய்யற வேலை மட்டும் அவர்கிட்ட இருந்துச்சு. பிரகாஷ் காரத் அப்பாயின்ட்மென்ட் கேட்டதும் பூங்குன்றன் 12.20க்கு பாக்கலாம்னு சொல்லிட்டாரு. அன்னைக்கு அமைச்சர் வைத்தியலிங்கம் வீட்டுத் திருமணம். ஜெயலலிதா அந்த திருமணத்துக்குப் போயிட்டு, குட்டிக் கதைகள் சொல்லி, நாற்பதும் நமதேன்னு முழங்கிட்டு வர்றதுக்கு 12.45 ஆயிடுச்சு.
12.10க்கே தலைமைச் செயலகம் வந்த காரத், காத்துக்கிட்டு இருந்தாரு. அவர் பாத்து முடிச்சுட்டு போறதுக்கு 1.30 ஆயிடுச்சு. அவர் போனதுக்கு அப்புறம் காரத் முன்னாடியே வந்து காத்திருந்தது ஜெயலலிதாவுக்கு தெரிஞ்சதும், பூங்குன்றனை கன்னா பின்னான்னு திட்டியிருக்காங்க. “
“யாரையும் காக்க வைக்கிறதைப் பத்தி ஜெயலலிதா கவலைப்பட மாட்டாங்களே…. ? “
“கவலைப்பட மாட்டாங்கதான். ஆனா, நாளைக்கு ஜெயலலிதா பிரதமராகறதுக்கு, காரத்தோட ஆதரவு தேவைப்படலாம் இல்லையா… ? அதனாலதான் காரத் மீது தனி அக்கறை“
“தமிழக கல்லூரிகள்ல மாணவிகளுக்கு உடை கட்டுப்பாடு கொண்டு வரப்போறதா சொன்னாங்களே… ? “
“அது பெரிய பஞ்சாயத்தாயிடுச்சு. அப்படி ஒரு திட்டம் இருந்தது உண்மைதான். அதை உரிய நேரம் பாத்து கொண்டு வரலாம்னு அரசாங்கம் நினைச்சுக்கிட்டு இருந்தப்போ, கல்லூரிகள் இயக்குநர் செந்தமிழ் செல்வி, பத்திரிக்கையில, ஆமா, நாங்க உடைக்கட்டுப்பாடகள் கொண்டு வரப்போறோம்னு சொல்லிட்டாங்க. இது பத்திரிக்கைகளில் வெளியானதும், கடுமையான எதிர்ப்பு கிளம்பிடுச்சு… அரசு மேல மாணவர்கள் கடும் கோபமடைஞ்சாங்க… மகாராஷ்டிரா மாதிரி தமிழக அரசும் நடந்துக்குதுன்னு சொன்னாங்க.
அதுக்கப்புறம் அவசர அவசரமா, தமிழக அரசுக்கிட்ட அது மாதிரி ஒரு திட்டம் இல்லைன்னு சொல்லிட்டாங்க. உயர்கல்வித் துறை செயலாளரும், அமைச்சரும், செந்தமிழ் செல்வியை கூப்பிட்டு செம டோஸ் விட்ருக்காங்க. “
“தஞ்சாவூர்லேர்ந்து சென்னைக்கு புதுசா உழவன் எக்ஸ்பிரஸ் ரயில் விட்டிருக்காங்க போல இருக்கு… மக்கள்கிட்ட இதுக்கு வரவேற்பு இருக்கா ? “ என்று புதிய விஷயத்தை தொடங்கினான் பீமராஜன்.
“வரவேற்பு இருக்கோ இல்லையோ…. ஆனா, அந்த ரயிலை கொடியசைச்சு தொடங்கி வைக்கிற அன்னைக்கு திமுக அதிமுக இடையே நடந்த பஞ்சாயத்து பெரிய தமாஷா இருந்துச்சு. அதிமுக காரங்க அற்பத்தனமா நடந்துக்கிட்டதா தஞ்சாவூர் முழுக்க பேச்சா இருக்கு. “
“என்னடா நடந்துச்சு ? “
“போன ஞாயித்துக்கிழமை இரவு, ரயிலை கொடியசைச்சு தொடங்கி வைக்கனும்னு திட்டம். இந்த ரயில் தமிழகத்துக்கு வந்ததுக்கு, திமுக எம்.பி பழனி மாணிக்கம் முக்கிய காரணம். அதனால அவரும் ரயில்வே அதிகாரிகளும் பங்கேற்பாங்கன்னு ஏற்பாடு. திடீர்னு, நிகழ்ச்சி அன்னைக்கு காலையில வீட்டு வசதித் துறை அமைச்சர் வைத்தியலிங்கம் பங்கேற்பார்னு சொன்னாங்க.
கொடியசைத்து ரயிலை தொடங்கி வைக்கும் வைத்தியலிங்கம்
நிகழ்ச்சி தொடங்கறதுக்கு ஒரு மணி நேரம் முன்னாடியே திமுக தொண்டர்கள், திமுக கொடிகளோட பெரும் அளவுல கூடிட்டாங்க. அமைச்சர் வந்ததும், அதிமுக ரத்தத்தின் ரத்தங்களும் வந்தாங்க. மேடையில பழனி மாணிக்கம் ஏறுனதும், டாக்டர் கலைஞர் வாழ்க, தளபதி ஸ்டாலின் வாழ்கன்னு கோஷம். அவர் தொண்டர் பரிவாரங்கள் புடைசூழ போயி நிக்கிறாரு. திடீர்னு அதிமுக மந்திரி வந்ததும் அவரோட தொண்டர்களும் வந்தாங்க. ஒரு பக்கம் திமுக கோஷம், இன்னொரு பக்கம் அதிமுக கோஷம். யாரு கொடியசைக்கிறதுன்னு அதிகாரிகளுக்கு குழப்பம். என்ன இருந்தாலும் ஆளுங்கட்சின்னு, அமைச்சரையே கொடியசைக்க வச்சாங்க. ஒரு ரயில் தொடக்க நிகழ்ச்சியில கூட, அற்பத்தனமா அரசியல் செஞ்ச அதிமுகவினர் மேலதான் மக்கள் வெறுப்பா இருந்தாங்க. ஏன்னா, நிகழ்ச்சிக்கு இறுதி வரைக்கும் பழனி மாணிக்கம் மட்டும்தான் வர்றதா இருந்துச்சு…. ரெண்டு திராவிடக் கட்சிகளோட அற்பத்தனங்களில் இருந்து நமக்கு எப்போதான் விடிவுகாலமோன்னு மக்கள் முணுமுணுத்தாங்க.. “
“சரி பத்திரிக்கை உலக செய்திகள் என்னடா இருக்கு ? “ என்று தன் பத்திரிக்கை பத்தி செய்திகள் இருக்கிறதா என்ற ஆர்வத்தில் கேட்டான் பீமராஜன்.
“ஜெயா டிவியில இருந்து வெளியேறிய கே.பி.சுனில், தந்தி டிவியில வைஸ் ப்ரெசிடென்ட் நியூசா சேர்றார். “
“என்னடா சொல்ற… சுனிலா…. ? அங்கதான் பாண்டே எடிட்டரா இருக்காரே… ? “
“ஆமாம்பா… ரங்கராஜ் பாண்டே ரகுநாதசார்யா தான் அங்க ஆசிரியரா இருக்கார். அவர் மேல பல ஊழியர்கள் தொடர்ந்து புகார் கொடுத்துக்கிட்டு இருக்காங்க… அவர் சொல்றதுதான் செய்தியா வரணும். மற்ற ஊழியர்களை மட்டம் தட்றார்னு பல புகார்கள். டிவி தொடங்கின மூணு மாசத்துல நம்பர் 2 இடத்துக்கு கொண்டு வரணும்னு அவருக்கு கட்டளை. ஆகஸ்ட் 2வது வாரத்துலதான் தந்தி டிவி மூணாவது இடத்துக்கே வந்துச்சு. பாண்டே இதுவும் தன்னாலதான்னு சொன்னாரு. ஆனா, நிர்வாகம் அதை ஏத்துக்கல… சுதந்திர தினம் அன்னைக்கு, போட்ட சில டாக்குமென்டரிகள், அப்புறம் சில சிறப்பு நிகழ்ச்சிகளாலதான் மூணாவது இடத்துக்கு வந்துச்சு. செய்தியால வரல. செய்திகளைப் பொறுத்தவரைக்கும், தந்தி பின்தங்கித்தான் இருக்கு. இன்னும் செய்திகளில் புதிய தலைமுறை, ஜெயா டிவி மற்றும், சன் டிவிதான் நம்பர் ஒன்.
ரங்கராஜ் பாண்டே
இந்த காரணத்தால, பாண்டேவுக்கு மேல ஒருத்தரை போடணும்னு நெனைச்சப்போதான், சுனில் கிட்ட பேசறாங்க. அவர், ஒரு மூத்த பத்திரிக்கையாளர்ன்ற அடிப்படையில, தந்தி டிவியை தூக்கி நிறுத்துவாருன்னு நம்பறாங்க. அவருக்கு இருக்க அனுபவத்துல இதை செய்ய முடியும். “
“அப்போ தந்தி டிவியும் இனி போட்டியில இருக்கும்னு சொல்லு.. “
“சுனில் நிச்சயமா செய்திகளில் மாற்றத்தைக் கொண்டு வருவார். அவரோட அனுபவம் இதுக்கு கை கொடுக்கும். “
“அப்போ சன் டிவி ராஜா ? “
“சன் டிவி ராஜா தந்தியில சேர்றதா வந்த தகவல்கள் உண்மைதான். ஆனா, அவர் ஜாயின் பண்ணப் போற விஷயம் வெளியில கசிஞ்சதால, தந்தி டிவி ஊழியர்கள்லயே பல பேர் போயி, இப்படிப்பட்ட ஆளை எடுக்கக் கூடாதுன்னு நிர்வாகத்துல புகார் பண்ணியிருக்காங்க. பல தளங்கள்ல இருந்து புகார் வந்ததும், நிர்வாகம் யோசனை பண்ண ஆரம்பிச்சுட்டாங்க. “
“ராஜா மேல இருந்த புகார்கள் விசாரணை எப்படி நடந்துக்கிட்டு இருக்கு ? “
“சன் டிவி அகிலா ராஜா மேல குடுத்த புகார்களை விசாரிக்க, விசாகா தீர்ப்பின் அடிப்படையில ஒரு குழு அமைச்சு விசாரிச்சிக்கிட்டு இருக்காங்க. அகிலா சார்பில வழக்கை நடத்தறது, மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மனித உரிமைப் பிரிவு. விசாரணையை கவனமா கையாளுறாங்க. அகிலா சார்பில மூத்த கிரிமினல் வழக்கறிஞர் விஜயக்குமார், ராஜாவை மூன்று நாள் குறுக்கு விசாரணை செஞ்சார். அந்த விசாரணையில, ராஜா பல பதில்களை முன்னுக்குப் பின் முரணா சொல்லியிருக்கார். அவர் அந்த விசாரணையில இருந்து வெளியில வர்றது கஷ்டம்தான்.. “
“அப்போ சன்டிவிக்கும் அந்த ஆளு திரும்ப முடியாதா ? “
“ஊழ் வினையப்பா… அதிலிருந்து தப்பிக்க முடியுமா ? “
“பெண் விவகாரத்துல சிக்கினா சிரமம்தான்…“ என்று வருத்தப்பட்டான் ரத்னவேல்.
“தந்தி டிவியிலயும் இதே மாதிரி ஒரு விவகாரம் நடந்துருக்கு. அங்க வேலை செய்யற ஒரு பெண் கிட்ட, கேமரா மேன்களும், ஒரு நிருபரும், தவறா நடந்துக்க முயற்சி பண்ணியிருக்காங்க. அந்தப் பெண்ணோட புகாரை ஏத்துக்கிட்ட நிர்வாகம், அவங்களை அலுவலகத்துக்கு மாத்திட்டு, சம்பந்தப்பட்டவங்களை பணி இடைநீக்கம் பண்ணியிருக்காங்க.“
“எல்லா சேனலும் இப்படித்தானா ? “
“ஒவ்வொரு சேனல்லயும் ஒவ்வொரு மாதிரி. கலைஞர் டிவியில ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கறதுல பெரும் பாரபட்சம் நடந்துருக்கறதா புகார்கள் வந்துருக்கு…“
“அங்கயும் பஞ்சாயத்தா ? “
“அங்க டாயல் னு ஒருத்தர் ஆசிரியரா இருக்காரு. அவர் தீவிரமான கிறித்துவப் பற்றாளர். அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள், மாலை போட்டுக் கொண்டு, கருப்பு வேட்டியெல்லாம் கட்டிக்கிட்டு வரக்கூடாதுன்னு ஏற்கனவே ஒரு கட்டுப்பாடு விதிச்சு சர்ச்சையாச்சு. இப்போ, கிறித்துவர்களுக்கு மட்டும், ஊதிய உயர்வு வழங்கியிருக்காரு. கலைஞர் டிவி தொடங்கியதுல இருந்து வேலை செய்யறவங்களுக்கு சுத்தமா ஊதிய உயர்வு வழங்கலை.
இதை எதிர்த்து நேரா டாயல்கிட்டயே போய் ஊழியர்கள் கேட்டிருக்காங்க. மேலிடத்திலேர்ந்து வந்த உத்தரவுன்னு சொல்லியிருக்காரு. அவங்க வைஸ் ப்ரெசிடென்டுகிட்ட போயி, என்ன இதுன்னு புகார் பண்ணியிருக்காங்க. அவர், டாயல் யாரை பரிந்துரைத்தாரோ, அவங்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்பட்டதுன்னு சொன்னதும், பாதிக்கப்பட்டவங்க, நாங்க அறிவாலயத்துலயே தர்ணா பண்ணுவோம்னு சொல்லியிருக்காங்க.
இப்போ பேச்சுவார்த்தை நடந்துக்கிட்டு இருக்கு.“
“காவல்துறை செய்திகள் என்னப்பா இருக்கு ? “ என்றார் கணேசன்.
“சென்னை மாநகர காவல்துறை ஆணையர் எப்படியாவது அம்மாகிட்ட நல்ல பேர் வாங்கிடணும்னு கடுமையா முயற்சி செய்துட்டு இருக்காரு… தமிழகத்துலயே அதிகமான நபர்களை குண்டர் சட்டத்தின் கீழ் அடைக்கணும்னு எல்லாருக்கும் வாய்மொழி உத்தரவு போட்டுருக்காரு. அதனால, சாதாரண கேஸ்ல மாட்டுனவன் எல்லாத்தையும் கூட, குண்டர் சட்டத்துல தாறுமாறா அடைச்சிக்கிட்டு இருக்காங்க…“
“லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் எப்போப்பா ஓய்வு ? “
“இந்த வருஷம் டிசம்பர் மாதம் ஓய்வு பெறணும். அவருக்கு மற்ற எல்லா வேலைகளையும் விட, ஜெயலலிதாவோட சொத்துக் குவிப்பு வழக்கை கையாள்றதுதான் முக்கிய பணி. ஆனா, அவர் அந்தப் பணியைக் கூட கவனிக்காம, கீதா உபதேசம் பண்ணிக்கிட்டு இருக்காரு. ? “
எஸ்.கே.டோக்ரா ஐபிஎஸ்
“கீதாவுக்கு ஏன் உபதேசம் பண்றாரு… “
“கீதாவுக்கு உபதேசம் இல்லடா… பகவத் கீதை லெக்சர். கிருஷ்ண ஜெயந்தி அன்னைக்கு பகவத் கீதை பத்தி தமிழ், ஆங்கிலம், பஞ்சாபி மொழிகள்ல இவர் பேசுனதை யு.ட்யூப்ல அப்லோட் பண்ணியிருக்கார். இணைப்பு www.dogratamil.com னு ஒரு இணையதளம் தொடங்கி, அவரோட கதை, கவிதை கட்டுரைகளை வெளியிட்டுக்கிட்டு வர்றார்.”
”ஒரு அதிகாரி இப்படி தமிழார்வத்தோட இருக்கறது நல்லதுதானேப்பா ? ”
”என்னன்ணே சொல்றீங்க.. ? இந்த ஆளு இந்த வேலையெல்லாம் வீட்டுல உக்காந்தா பாப்பாரு… இதையெல்லாம் அவருக்குக் கீழ் பணியாற்றும் அரசு ஊழியர்களை வச்சு, அரசு நேரத்துல செய்றாரு. இதுக்கா அவருக்கு சம்பளம் கொடுக்கறது. அது மட்டுமில்லாம பல்வேறு மதத்தினர் பணியாற்றும் இடத்துல, இந்து மதத்தோட அடையாளமான பகவத் கீதையைப் பத்தி லெக்சர் குடுக்கறது, மற்ற மதத்தினரை புண்படுத்தாதா ? அரசு அதிகாரிகள் மதச்சார்பற்று இருக்க வேண்டாமா ? இப்படியா மதச்சாயத்தை எடுத்துப் பூசிக்கறது ? ”
”நீ சொல்றதும் நியாயம்தாம்பா…” என்று ஆமோதித்துக் கொண்டே எழுந்தார் கணேசன். ”போலாமாப்பா” என்று கேட்டதும், அனைவரும் எழுந்து சங்கத்தை கலைத்தனர்.