ஜாபர் சேட். திமுக ஆட்சிக் காலத்தில் தமிழகத்தின் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்தவர் ஜாபர் சேட். திமுக ஆட்சியில் நினைத்ததை சாதித்தவர் ஜாபர் சேட். முக.அழகிரி, முக.ஸ்டாலின் மற்றும் கனிமொழி, இவர்களையெல்லாம் விட, கருணாநிதிக்கு நெருக்கமான நபர் ஜாபர் சேட்.
தமிழக காவல்துறை வரலாற்றிலேயே இவரைப் போல அதிகாரம் மிக்கவர் யாருமே இருந்ததில்லை எனும் அளவுக்கு அதிகாரத்தோடு திகழ்ந்தவர் ஜாபர் சேட். இவரை எதிர்கொள்ள ஏறக்குறைய யாருமே இல்லை என்ற நிலை ஜனவரி 2011 வரை இருந்தது. இப்படிப்பட்ட ஜாபர் சேட் வீட்டு வாரிய மனை ஒதுக்கீட்டில் செய்த ஊழல்கள் குறித்து முதன் முறையாக அம்பலப்படுத்தியது சவுக்கு இணையதளம். ஒரு மகிழ்ச்சி ஒரு சோகம் என்ற தலைப்பில், ஜாபர் சேட் வீட்டு வசதி வாரிய மனையை முறைகேடாகப் பெற்று, மோசடியில் ஈடுபட்டதை ஆவணங்களோடு சவுக்கு தளம் 19 ஜுலை 2010 அன்று அம்பலப்படுத்தியிருந்தது. இதையடுத்து ஜுன் 21ம் தேதி காலையே காவல்துறையினரை அனுப்பி கட்டுரை எழுதியவரை கைது (இணைப்பு) செய்ய வைத்தார் ஜாபர் சேட். இப்படி தான் நினைத்தவரை நினைத்த நேரத்தில் சிறையிலடைக்கும் வல்லமை படைத்தவர் ஜாபர் சேட். நியு உட்லண்ட்ஸ் ஹோட்டலில் துப்பாக்கியை எடுத்து வாட்ச்மேனை சுட்ட கருணாநிதியின் குடும்பத்தைச் சேர்ந்தவர் மீது வழக்கு வராமல், சம்பந்தப்பட்ட சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றிக் காப்பாற்றக் கூடியவர். கருணாநிதியின் செம்மொழி மாநாட்டுக்கு எதிராக சுவரொட்டி ஒட்டியவர்களையெல்லாம் கைது செய்து சிறையிலடைத்து, தனது கருணாநிதி விசுவாசத்தை பறைசாற்றியவர்.
சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டதும், ஜாபர் சேட்டை கொல்கத்தாவுக்கு தேர்தல் பார்வையாளராக நியமித்தது தேர்தல் ஆணையம். அந்தப் பதவியை ஏற்க மறுத்து விடுப்பில் சென்றவர்.
புதிய அரசு பதவியேற்றதும், சென்னை மதுரவாயலைச் சேர்ந்த சங்கர் என்பவர் தலைமைச் செயலாளருக்கு அனுப்பிய புகாரின் அடிப்படையில், தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு ஒன்றை பதிவு செய்தது. அந்த வழக்கின் புலன் விசாரணை கடந்த டிசம்பர் 2012லேயே முடிவடைந்தது.
ஜாபர் சேட், ஐபிஎஸ் அதிகாரி என்பதால், அவர் மீது வழக்கு தொடுக்க அனுமதி கேட்டு, மத்திய உள்துறைக்கு லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் கடிதம் அனுப்பப் பட்டது. ஊழல் வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள அரசு ஊழியர்கள் மீது வழக்கு தொடுக்க அனுமதி கேட்டால் அதிகபட்சமாக 4 மாதங்களுக்குள், அனுமதி வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம், வினீத் நாராயண் என்ற வழக்கில் தீர்ப்பளித்துள்ளது. சுப்ரமணிய சுவாமி, ஆ.ராசா மீது வழக்கு தொடுக்க அனுமதி கேட்டு தொடர்ந்த வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், 4 மாதங்களுக்குள் வழக்கு தொடர அனுமதி வழங்க வேண்டும், அப்படி வழங்காவிட்டால், அனுமதி அவசியம் இல்லாமலேயே குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யலாம் என்று மத்திய அரசு சட்டத்திருத்தம் கொண்டு வரவேண்டும் என்று பரிந்துரை செய்தது. ஆனால், இந்தத் தீர்ப்பின் அடிப்படையில் மத்திய அரசு எவ்விதமான சட்டத்திருத்தத்தையும் கொண்டு வரவில்லை.
இந்நிலையில் மத்திய உள்துறையிலிருந்து வழக்கு தொடர அனுமதி கிடைக்காத வகையில், ஜாபர் சேட் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி தாமதப்படுத்தினார். இத்தகவல் அறிந்ததும், புகார் கொடுத்த சங்கர் என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில், ஜாபர் சேட் மீது வழக்கு தொடுக்க அனுமதி வழங்க உள்துறை அமைச்சகத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தார். இந்த வழக்கில் மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த ஒரு ஆண்டாக பதில் மனுவும் தாக்கல் செய்யாமல், வழக்கு தொடர அனுமதியும் வழங்காமல் தாமதம் செய்து வந்தது. இந்நிலையில், தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை ஜாபர் சேட் மீது வழக்கு தொடர அனுமதிக்குக் காத்திராமல், சென்னை நீதிமன்றத்தில் ஜாபர் சேட், அவர் மனைவி பர்வீன் ஜாபர், முன்னாள் வீட்டு வசதித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, முன்னாள் முதலமைச்சரின் செயலாளர் ராஜமாணிக்கத்தின் மகன் துர்கா சங்கர் மற்றும் சிலர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர்.
வழக்கு தொடர அனுமதி பெறாமல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டதை எதிர்த்து ஜாபர் சேட் நிச்சயம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வார். அந்த வழக்கு எப்போது முடியும் என்பதை உறுதியாகச் சொல்ல இயலாது. இருப்பினும், இவ்வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருப்பது, ஒரு மிகப்பெரிய முன்னேற்றம். இவ்வழக்கில் புலனாய்வு செய்த, லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் எஸ்.பி சுப்பையா, தற்போதைய புலனாய்வு அதிகாரி முரளி மற்றும், இவ்வழக்கை சிறப்பாக கையாண்டு, குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுத்த லஞ்ச ஒழிப்புத் துறை இணை இயக்குநர் வெங்கட்ராமன் ஆகியோர் பாராட்டுக்குரியவர்கள்.