“ஒன்னுமே புரியல உலகத்துல…. என்னமோ நடக்குது… மர்மமா இருக்குது” என்று பாடியபடி மொட்டை மாடிக்குள் நுழைந்தான் டாஸ்மாக் தமிழ். மொட்டை மாடியில் விரித்திருந்த பெட்ஷீட்டில் கணேசன், பீமராஜன், வடிவேல், ரத்னவேல் அனைவரும் அமர்ந்திருந்தனர்.
பீமராஜன்தான் தமிழை வரவேற்றான். “வா மச்சான். என்ன சந்திரபாபு பாட்டோட வர்ற.. ? “
“இந்தப் பாட்டை தொடர்ந்து பாடிக்கிட்டு இருக்கறது நான் இல்லடா. அதிமுக அமைச்சர்கள்தான் தொடர்ந்து பாடிக்கிட்டு இருக்காங்க. “
“அதிமுக அமைச்சர்கள்னா இந்தப் பாட்டை பாடித்தானே ஆகணும்…“ என்றான் ரத்னவேல்.
“கோடநாட்டுலேர்ந்து ஜெயலலிதா திரும்பி வந்ததும் யாருக்கு கல்தா, யாருக்கு யோகம்னு அமைச்சர்கள் மத்தியில பரபரப்பா பேச்சு இருந்தது. பலர் பீதியில இருந்தாங்க. ஆனா, எந்த விதமான அச்சமும் இல்லாம, தெனாவட்டா சுத்திக்கிட்டு இருந்தவருக்குதான் முதல் ஆப்பு. “
“அவரு தெனாவட்டா சுத்திக்கிட்டு இருந்தாரா ? “
“ஆமாம் மச்சான். அதிமுக அமைச்சர்கள்லயே வைகைச் செல்வன் கொஞ்சம் தெனாவெட்டான ஆளுதான். லோக்கல் டிஎஸ்பியை மிரட்டுறது, கட்சியில இருக்கற மத்த அமைச்சர்களை மதிக்காம நடந்துக்கறது. இது மாதிரி இந்த ஆளு மேல ஏகப்பட்ட புகார்கள் உண்டு. அதுவும், இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் பாசறையோட செயலாளரா இருந்ததால இவருக்கு அம்மாவோட கருணைப்பார்வை உண்டுன்னு இவரா நெனைச்சுக்கிட்டாரு. உலகத்துலயே ஜெயலலிதாவோட கருணைப்பார்வை இருக்கறது, சசிகலாவுக்கு மட்டும்தான். ஆனா, அதிமுக அடிமைகள் பலரும், நம்பளை அம்மாவுக்கு பிடிக்கும் னு நெனைச்சுக்கிட்டு இருக்காங்க. “
“என்னதான்டா காரணம் வைகைச் செல்வன் நீக்கத்துக்கு ? “ என்றான் ரத்னவேல்.
“பலரும் பல காரணங்களைச் சொல்றாங்க மச்சான். ஜெயலலிதா அரசாங்கத்தைப் பொறுத்தவரை, அமைச்சரவை மாற்றங்களுக்கெல்லாம் காரணம், அந்த அம்மாவுக்கு மட்டும்தான் தெரியும். பத்திரிக்கைகள் ஆளாளுக்கு தெரிஞ்ச விவகாரத்தை எழுதிக்க வேண்டியதுதான். வைகைச் செல்வன் மேல பல புகார்கள் சொல்றாங்க. அவருக்கும் பள்ளிக் கல்வித் துறை செயலாளர் சபீதாவுக்கும் மோதல், இளம்பெண்கள் பாசறையில் உள்ள சில பெண்கள்கிட்ட விளையாடிட்டார், ஓ.பன்னீர் செல்வத்தோட மகன் ரவீந்திரன் கூட ரொம்ப நெருக்கம் காட்டிட்டார், ரவீந்திரனும் வைகைச் செல்வனும், மூணாறில் ஒரு பார்ட்டியில கலந்துக்கிட்டாங்க, வேளச்சேரியில ஒரு ஃபர்னிச்சர் கடை திறக்கப்பட்டிருக்கு, அந்தக் கடை வைகைச் செல்வனோட பினாமி நிறுவனம், சொம்படிச் சித்தர் கூட ஒரு விழாவுல கலந்துக்கிட்டு அவரை பாராட்டிப் பேசிட்டார்னு பல தகவல்கள் உலாவிக்கிட்டு இருக்கு“
“சொம்படிச் சித்தரைப் பாராட்டிப் பேசுனதெல்லாம் ஒரு விஷயமா அமைச்சரை மாத்துனதுக்கு ? “
“அட சொம்படிச் சித்தர்தான்டா அப்படியெல்லாம் சொல்லிகிட்டு திரியறாரு. சொம்படிச் சித்தரை திமுகவே ஒரு பொருட்டா மதிக்கிறதில்ல.. அதிமுகவுல எப்படி மதிப்பாங்க ? அதெல்லாம் ஒரு காரணமா நிச்சயமா இருக்காது. இந்த மாதிரி விவகாரங்கள்ல, உண்மை என்னன்றது, ஜெயலலிதாவுக்கு மட்டுமே தெரியும். ஆளாளுக்கு புடிச்சச விஷயத்தை, இதுதான் காரணம்னு நெனைச்சுக்க வேண்டியதுதான்.
அமைச்சர் வைகைச்செல்வன் ஆதரவாளர்கள், அவருக்கு ஆதரவா தலைமைச் செயலகத்துக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருக்காங்க…“
“என்ன இருக்கு அந்த மின்னஞ்சல்ல.. ? “
“அப்படியே சொல்றேன் கேட்டுக்க… “ சாதாரண தொண்டர்கள், கிளை நிர்வாகிகள், ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்கள் ஓடி உழைத்துத்தான் நம் ஆட்சி இன்று அரியணையில் உள்ளது. ஆனால் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தவுடன், கட்சிக்காரனுக்கு மரியாதை இல்லை. சபீதா ஐ.ஏ.எஸ் நினைத்தவுடன் நான்கு கல்வி அமைச்சர்களை மாற்ற முடிகிறது என்றால், இங்கு அதிகாரத்தில் இருப்பது யார் என்று கட்சி தொண்டன் மனதில் கேள்வி எழுகிறது. கட்சி தொண்டன் மனது வைத்தால் தேர்தல் நிதியை எடுத்து வைத்து கொண்டு களப்பணி செய்யாமல் முடங்கி கிடந்தால் மக்களவை தேர்தலில் வெற்றி பெறுவது எளிதா என்று அம்மா அவர்கள் சிந்திக்க வேண்டும். சபிதா ஐ.ஏ.எஸ் களப்பணியில் ஈடுபடுவாரா? நம் ஆட்சியில் மந்திரிகளுக்கு மரியாதை இல்லை. ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் வைத்ததுதான் சட்டம் என்ற நிலை. ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை எதிர்த்து நின்று கேள்வி கேட்க கூடிய அண்ணன் வைகைச்செல்வன் போன்றவர்கள் நீடிக்க முடியவில்லை. மூத்த மந்திரிகள் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை கண்டு மண்டியிடும் நிலை தொண்டனுக்கு பிடிக்கவில்லை. ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்தான் முக்கியம் என்றால், கடைக்கோடி தொண்டன் இனி களப்பணியில் ஆர்வத்துடன் இருக்கமாட்டான் என்பதை அம்மா அவர்களுக்கு பணிவன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம். மக்களவை தேர்தல் முடிந்தவுடன் தொண்டனின் மனநிலையை புரிந்துகொள்ள அம்மாவுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும்.
அண்ணன் வைகைசெல்வன் மூத்த அமைச்சர்களை மதிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு மிகவும் பொய்யானது, மற்றும் உண்மைக்கு புறம்பானது. அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தன் துறையில் உள்ள குறைகளை மறைக்க இப்படி வதந்திகளை பரப்பிவிட்டு வருகிறார். இதற்கு ஒரு சில உளவுத்துறை அதிகாரிகளும், சி.எம்.செல்லில் உள்ள அதிகாரிகளும் உடந்தை. மக்களவை தேர்தலையே பாதிக்கும் என்கிற மின்துறையை கையாளும் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பற்றி புகார் சொல்வது இல்லை, மதுரை கலெக்டர் மாற்றம், தூத்துக்குடி கலெக்டர் மாற்றம் போன்றவற்றின் பின்னணியில் இருக்கிறார் என்று பேசப்படும் நிதி அமைச்சர் மீது ரிபோர்ட் இல்லை, தூத்துக்குடி கலெக்டரை மாற்ற 200 கோடி வாங்கினார் என்று பேசப்படும் நிதி அமைச்சர் மகன் ஓ.பி. ரவீந்திர நாத் மீது புகார் ரிபோர்ட் இல்லை, இதையெல்லாம் உங்களுக்கு ரிப்போர்ட் கொடுக்காத உளவுத்துறையும், அம்மா அலுவலகத்தில் உள்ள அதிகாரிகளும் அண்ணன் வைகை செல்வன் மீது ரிப்போர்ட் கொடுத்து இருப்பது எங்களுக்கு சந்தேகத்தை கொடுக்கிறது. அண்ணன் வைகை செல்வனுக்கு உளவுத்துறையையும் சி.எம். செல்லில் உள்ள ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை கவனிக்கும் கலை தெரியவில்லையோ? ஓ.பி.எஸ் இடத்துக்கு, இரண்டாம் இடத்துக்கு வர, உயர்கல்வி அமைச்சர் பழனியப்பன் போல்,அமுக்கத்தனமாக இருந்துகொண்டு நம் கட்சி சார்பில், நிதி அமைச்சர் ஓ.பி.எஸ் சார்பில் பச்சையப்பா கல்லூரி அறக்கட்டளை டிரஸ்டி உறுப்பினர் பதவிக்கு நிறுத்திய வேட்பாளரை உள்ளடி வேலை செய்து தோற்கடிக்க செய்யும் கலை தெரியாதவர்தான் அண்ணன் வைகைச்செல்வன். அமைச்சர் கே.பி. முனுசாமி போல் இரண்டாவது இடத்துக்கு வர, பூங்குன்றனுடன் சேர்ந்து கொண்டு நாடாளுமன்ற குழு தலைவர் அண்ணன் தம்பிதுரையை அவர் மகள் திருமணத்துக்கே போக விடாமல் வத்தி வைக்க தெரியாதவர். அமைச்சர் கேவி ராமலிங்கம் போல் செங்கோட்டையன் பெண் விவகாரங்களை மற்றும் அது சம்பந்த அந்தரங்க விவகாரங்களை பத்திரிக்கைகளுக்கு மறைமுக செய்தி அனுப்ப தெரியாதவர்.
அண்ணன் வைகை செல்வனின் பதவி நீக்கம் எங்களை அதிர்ச்சியிலும் வருத்தத்திலும் ஆழ்த்தி உள்ளது என்பதை புரட்சி தலைவி அம்மாவுக்கு தெரியப்படுத்த விரும்புகிறோம். இனி ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் கொட்டத்தை அடக்க இரவு பகலாக உழைப்போம். தேவைப்பட்டால் எதிர்க்கட்சிகளுடன் சேர்ந்தும் உழைப்போம் என்பதை அம்மாவுக்கு தெரிவித்துக்கொள்கிறோம். “
“சரி.. இதையெல்லாம் ஜெயலலிதா எப்படி எதிர்கொள்ளப் போறாங்க… ? “
“அதை வரக்கூடிய நாட்கள்ல அவங்க நடவடிக்கைகள் சொல்லும். “
“தேசிய அரசியல் எப்படி இருக்கு ? “ என்றான் வடிவேல்.
“தேசிய அரசியல் மோடி மற்றும் ராகுலை சுத்தித்தான் நடந்துக்கிட்டு இருக்கு. தகவல் அறியும் உரிமைச் சட்டத்திலிருந்து அரசியல் கட்சிகளுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை பாரபட்சம் இல்லாம எல்லா கட்சிகளாலும் அங்கீகரிக்கப்பட்டிருக்கு. சிபிஎம் இந்த விவகாரத்துல முன்னணியில இருக்கு. வெளிப்படைத் தன்மையோட இருக்க வேண்டிய கம்யூனிஸ்ட் கட்சிகளே இப்படி நடந்துக்கிறது, மற்ற அரசியல் கட்சிகளுக்கும், இடது சாரிகளுக்கும் எந்த வித்தியாசமும் இல்லைன்ற எண்ணத்தை ஏற்படுத்தியிருக்கு.
ஆச்சர்யப்பட்ற விதமா, காங்கிரஸ் கட்சி, இறுதி நேரத்துல, இந்த விவகாரத்தை பாராளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பியிருக்கு. காங்கிரஸ் அரசோட மிகப்பெரிய சாதனையா கருதப்பட்ற தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் இந்தத் திருத்தத்தை உடனடியா கொண்டு வர வேண்டாம்னு சோனியா சொன்னதன் அடிப்படையில கடைசி நேர மாற்றம் நடந்துருக்கு.
உணவுப் பாதுகாப்புச் சட்டம், மற்றும் நேரடி மான்யம் வழங்கும் திட்டங்கள் இரண்டும், காங்கிரஸ் கட்சிக்கு ஓட்டு வாங்கத் தரும்னு நம்புது காங்கிரஸ் தலைமை. இப்போவே எப்.எம் வானொலி, தூர்தர்ஷன்ல, உணவுப் பாதுகாப்புச் சட்டம் தொடர்பா தொடர்ந்து விளம்பரங்கள் வந்துக்கிட்டு இருக்கு.”
”இவங்க நினைக்கிற பலனை இது தருமா என்ன ? ” என்று சந்தேகம் எழுப்பினான் ரத்னவேல்.
”2004 தேர்தலில் ”ஒளிரும் இந்தியா” ன்ற பேர்ல பிஜேபி செய்த மிகப்பெரிய விளம்பரங்கள்தான், பிஜேபி மேல ஒரு வெறுப்பு உருவாகக் காரணமா இருந்துச்சு. அதே தவறை காங்கிரஸ் செய்ய ஆரம்பிச்சுருக்கு. வீழும் ரூபாய் மதிப்பு, உயரும் விலைவாசி, ஊழல், கடந்த 9 வருட காங்கிரஸ் ஆட்சியோட அலுப்பு இது போன்ற பல்வேறு விவகாரங்கள் காங்கிரஸ் கட்சிக்கு எதிரா இருக்கு”
”இந்த எதிர்ப்பு பிஜேபிக்கு சாதகமா இருக்குமா ? ”
”சாதகமா இருக்கோ இல்லையோ, கடைசி நேர மாற்றம் ஏற்பட்டு, பிஜேபிக்கு ஆதரவு அலை வீசும்னு அந்த கட்சியினர் நம்பறாங்க. இந்தியாவில் 110 கோடி பேர் இருந்தாலும், இணையதளத்தை பயன்படுத்துறவங்க 12.5 கோடிதான். ஆனா, இந்த 12.5 கோடியை மட்டுமே நம்பியிருக்கு பிஜேபி. இணையதளத்துல ஏராளமா ஆதரவு தர்றதால நிச்சயமா ஜெயிக்கப் போறோம்னு நினைக்கிறாங்க. ட்விட்டர்லயே நமக்கு இவ்வளவு ஆதரவு இருக்கே. நம்பளால ஜெயிக்க முடியாதா என்ன ன்ற கனவுல இருக்காங்க. ஆனா, ட்விட்டர்ல இருக்கற பல பேர் ஏசி அறையை விட்டு வெளிய வந்து ஓட்டு கூட போட மாட்டாங்க. இந்தியாவில் பெரும்பான்மையானவர்கள் இன்னும் இணையதள வசதிகளை பெறாமல் இருக்காங்கன்றது பிஜேபிக்கு தெரியுதா இல்லையான்னு புரியல.
இது இல்லாம, கடைசி நேரத்துல, மோடிக்கு எதிரா, பிஜேபி கட்சியிலயே எதிர்ப்பு கிளம்பும் சூழல் இருக்கு. ”
”தமிழகத்துல எப்படி கூட்டணி அமையும் ? ”
தமிழக கூட்டணி சூழல் இன்னும் தெளிவாகல. கேப்டனுக்கு டிமான்ட் அதிகமாயிருக்கறதால, முறுக்கா இருக்கிறார். காங்கிரஸோட தனி கூட்டணியா, இல்ல காங்கிரஸ், திமுக கூட்டணியில ஐக்கியமா ஆகறதான்னு யோசனையில இருக்காரு. ”
”தமிழ்நாட்டு பாலிடிக்ஸ்க்கு வாப்பா.. ” என்று அங்கலாய்த்தார் கணேசன்.
”வர்றேன்ணே… மொதல்ல, திமுக விவகாரத்தைப் பாத்துடுவோம்”
”திமுகவுல என்னப்பா விவகாரம் ? ”
”ஓயாத அலைகள் மாதிரி, திமுகவுல வாரிசு மோதல் எப்போ ஓஞ்சுருக்கு ? ”
”அழகிரிதான் அமைதியாயிட்டாரே… இனிமே என்ன மோதல் ? ”
”அழகிரி அமைதியாயிட்டா மோதல் இல்லன்னு அர்த்தமா என்ன ? இனிமேதான் உண்மையான மோதல் ஆரம்பிக்க இருக்கு. இவ்வளவு நாள் அமைதியா இருந்த கனிமொழி நேரடியா களத்துல இறங்கிட்டாங்க., அப்பாவுக்காக பொறுத்துப் பொறுத்துப் பாத்த கனிமொழி, இரண்டாவது முறையா மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதுக்குப் பிறகு, தீவிர அரசியல்ல ஈடுபட ஆரம்பிச்சுட்டாங்க. ஸ்டாலின் தரப்பும், கனிமொழிக்கு தொந்தரவு கொடுக்க ஆரம்பிச்சுட்டாங்க. ”
”என்னப்பா தொந்தரவு கொடுத்தாங்க ? ”
”சமீபத்துல ராகுல் காந்தியை கனிமொழி சந்திச்சதா ஒரு செய்தி வெளியாச்சு இல்லையா.. அந்த செய்தியை கிளப்பி விட்டதே ஸ்டாலின் தரப்புதான். பாராளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் முழுக்க கனிமொழி பாராளுமன்றத்துல பேசியிருக்காங்க. முரசொலியில கனிமொழி பற்றிய செய்திகள வராத நாளே இல்லை. இது ஸ்டாலின் ஆதரவாளர்களை எரிச்சலடைய வச்சுது. தலைவர் கலைஞரை ஒரு முறை கூட மரியாதை நிமித்தமா கூட சந்திக்காத ஒரு நபரை போய் கனிமொழி பாத்துருக்காங்களே ன்னு கட்சிக் காரங்களே திட்டறதுக்கான ஏற்பாடுதான் இந்த வதந்தி. இதை கருணாநிதியை மறுக்கற அளவுக்கு இந்த வதந்தி பெரிசா பரவிடுச்சு.. ”
”சரி.. கனிமொழி நேரடியா களத்துல இறங்கிட்டாங்கன்னு சொன்னியே அந்த மாதிரி எதுவும் தெரியலையே… ? ”
”எழும்பூர் தொகுதியில ருக்மாங்கதன்னு ஒரு முன்னாள் கவுன்சிலர் இருக்காரு. அவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரு. அவருக்கும் திமுகவுக்கும் ஏழாம் பொருத்தம். எழும்பூர் பகுதியில பல முறை திமுகவினரோட அவருக்கு மோதல் ஏற்பட்டிருக்கு. காங்கிரஸ் கட்சியில அவருக்கு பிரச்சினை ஏற்பட்டதால, பல மாதங்கள் முன்னாடியே திமுகவுல சேர தூது விட்டிருக்காரு. ஆனா, ஸ்டாலின் அவரை சேத்துக்கல. இதுக்கு அப்புறமா கனிமொழியை சந்திச்சு, கட்சியில சேரணும்னு சொல்லியிருக்காரு. ஸ்டாலின் மறுத்துட்டாருன்ற விபரம் தெரிஞ்சதும் கனிமொழியும் தயங்கி அப்புறம் பாக்கலாம்னு சொல்லிட்டாங்க.
போன வாரம், சனிக்கிழமை, சென்னை மெரினா கடற்கரையில புற்றுநோய் விழிப்புணர்வு குறித்து ஒரு பேரணிக்கு ஏற்பாடு செஞ்சாரு இந்த ருக்மாங்கதன். இதில் கலந்து கொள்றதுக்காக கனிமொழிக்கு அழைப்பு விடுத்ததும், அவங்களும் சம்மதிச்சு கலந்துக்கிட்டாங்க.
கூடிய விரைவில், ருக்மாங்கதன், கனிமொழி தலைமையில் திமுகவில சேர்வதற்கான வாய்ப்பு அதிகமா இருக்கு. ”
”அப்போ போட்டி பலமாத்தான் இருக்கும்னு சொல்லுப்பா..”
”ஆமாம்ணே… அழகிரி ஏறக்குறைய ஒதுங்கி டம்மி பீஸாயிட்டதால, இனி போட்டி ஸ்டாலின் கனிமொழி இடையேதான். ”
”மச்சான்… கலைஞரை மத்திய அரசு ஏமாத்திடுச்சாமே… என்ன மச்சான் விஷயம் அது.. ? ”
”ஆமான்டா… அவரு போர் நிறுத்தம் ஏற்படுத்தணும்னு சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தாராம். போர் நின்னுடுச்சுன்னு மத்திய அரசு ஏமாத்திட்டதால, மதிய உணவு சாப்பிட்டாராம். வழக்கமா அவர் வெளியிடுற கேள்வி பதில் அறிக்கையில போன வாரம், இலங்கைக்கு போர்க்கப்பல் வழங்குவது தொடர்பா சொல்லியிருந்தாரு.. “ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள்” என்பதைத்தான் இது நினைவூட்டுகிறது. இலங்கையில் 2009ஆம் ஆண்டு நடைபெற்ற போரின்போது, இலங்கை அரசுக்கு இந்திய அரசு உதவி செய்ததாக சிலர் விமர்சனம் செய்த நேரத்தில், திராவிட முன்னேற்றக் கழகம் அதனை நம்பவில்லை. இலங்கை அரசைக் கண்டித்து, நான் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கிய நேரத்தில், இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டுவிட்டதாக வும், இலங்கை அரசு போரை நிறுத்திவிட்டதாகவும் எனக்குத் தகவல் கொடுத்து என்னுடைய உண்ணாவிரதத்தை முடிக்கச் செய்ததும் இந்திய அரசுதான்.” இப்படி அந்த அறிக்கையில சொல்லியிருந்தாரு.. ”
”போன வாரம்தானேடா சோனியா காந்தியை மணிமேகலைன்னு பாராட்டினாரு… ? ”
”பொய்யும், புரட்டுப் பேச்சும், கருணாநிதியோடு கூடவே பிறந்ததாச்சே.. சொல்லியா தரணும்… ? மத்திய அரசு உண்மையிலயே ஏமாத்துனதா வச்சுக்கிட்டாலும், அவர் முதலமைச்சரா இருந்தப்போ உளவுத்துறை ஏடிஜிபியா அனூப் ஜெய்ஸ்வால்ன்னு ஒரு அதிகாரி இருந்தாரு. அவரும், சரத் பொன்சேகாவும், மிலிட்டரி அகாடமியில ஒன்னா பயிற்சி எடுத்தவங்க. அவரை உளவுத்துறை ஏடிஜிபியா கொண்டு வந்ததே, இலங்கையில நடக்கற போர் நிலவரம் தொடர்பா உடனடி தகவல் தெரியணும்னுதான். அவர் சொல்லியிருப்பாரே…. போர் நின்று விட்டது என்று சொன்னீர்களே… ஆனால் இன்னும் குண்டுகள் வீசப்படுகிறதேன்னு கேட்டதுக்கு, மழை நின்றாலும் தூவானம் விடாதது போலத்தான் இதுவும்னு சொன்னாரே… மறந்துடுச்சா ? கூசாம பொய் சொல்றதுல கருணாநிதியை மிஞ்ச ஆளே கிடையாதே…”
”சரி.. தயாளு அம்மாளை எப்போடா விசாரிக்கப் போறாங்க… விசாரணையில என்ன நடக்கும் ? ” என்று தன் சந்தேகத்தைக் கேட்டான் பீமராஜன்.
”2ஜி வழக்கு ஏறக்குறைய முடிஞ்சு போன மாதிரிதான். கடைசியில இந்த வழக்குல தண்டனை அடையப்போறது, ஆ.ராசாவும், சரத்குமாரும்தான். கருணாநிதி குடும்பத்துல இருந்து ஒருத்தர் கூட இதுல மாட்டப்போறது இல்லை”
”என்னடா இப்படி சொல்ற ?”
”உண்மையைத்தான்டா சொல்றேன். எல்லாம் கோபால் கையிலதான் இருக்கு”
“கோபால் னா யாரு… புதிய பறவை படத்துல சரோஜாதேவி “கோபால்… கோபால்“ னு பேசுவாங்களே அந்த கோபாலா“ என்று கேட்டுடிவட்டு சிரித்தான் ரத்னவேல்.
“அந்த கோபால் இல்லடா… எழும்பூர் தலைமை நடுவரா இருக்க எம்.கோபாலன்தான். “
“அவர் என்ன பண்ண முடியும் ? “
“அவர்தான் எல்லாமே. இவர்தான் தயாளு அம்மாளை விசாரிக்கப்போற நீதிபதி. ஏற்கனவே, தயாளு அம்மாள் உடல்நிலை தொடர்பா தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம், “மருத்துவ அறிக்கைகளைப் பார்க்கையில், தயாளு கருணாநிதி தீவிரமான அல்ஸைமர்ஸ் வியாதியால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதும், அவர் மருத்துவ ரீதியாக சாட்சி சொல்ல தயார் நிலையில் இல்லை என்பதும் தெரிய வருகிறது. ஆகையால் இந்த வழக்கில் அவர் இருக்கும் இடத்திலேயே விசாரிக்கலாம்” னு ஒரு தீர்ப்பு வழங்கியிருக்காங்க. இது போதாதா கருணாநிதிக்கு….?”
”அடுத்து என்ன நடக்கும் டா ? ”
”இந்த இடத்துலதான் கோபால் வர்றாரு. கோபால் ஏற்கனவே, சென்னையில பத்தாவது பெருநகர நீதிபதியா இருந்தவரு. அப்போவே டோர் சர்வீஸ் பண்ணுவாருன்னு சொல்லுவாங்க. ”
”டோர் சர்வீஸ் னா ? ”
”வழக்குல சம்பந்தப்பட்டவங்க நீதிபதியை அணுகறதா இருந்தா, எப்படி அணுகறது, யார் மூலமா பேசறதுன்னு தவிக்க வேண்டியதேயில்ல.. இவரே நேரா சம்பந்தப்பட்டவங்க வீட்டுக்குப் போய் உங்களுக்கு என்ன வேணும், நான் பண்ணித் தர்றேன்னு செஞ்சு குடுத்துடுவாரு… அந்த அளவுக்கு நீதி பரிபாலனத்தின் மேல அக்கறையும், ஆர்வமும் உள்ளவரு. ”
”சரி இப்படிப்பட்ட நபர்களையெல்லாம் ஏன் முக்கியமான பதவிகள்ல போட்றாங்க…. இந்த இடத்துலதான் தண்ணீரை விட அடர்த்தியான திரவம் வேலை செய்யுது. இவர் நாடார் சமூகத்தைச் சேர்ந்தவரு. சென்னை உயர்நீதிமன்றத்துல நான்காவது மூத்த நீதிபதியா இருக்கறவரு பால் வசந்தகுமார். கீழமை நீதிபதிகளின் பணி நியமனம் தொடர்பா முடிவெடுக்கற மூன்று நீதிபதிகள் பானுமதி, சித்ரா வெங்கட்ராமன் மற்றும் பால் வசந்தகுமார். நீதிபதி பானுமதி மாறுதல் விவகாரங்கள்ல ஒரே ஒரு நிபந்தனைதான் வச்சாங்க. சென்னையிலயே பணியாற்றாம வெளியூர்ல இருக்கறவங்களை சென்னைக்கு மாத்துனாங்க. நீதிபதி சித்ரா வெங்கட்ராமன் இந்த உள் அரசியல்ல தலையிடுறதில்லை. மீதி எல்லா நியமனங்களும் நீதிபதி பால் வசந்தகுமார் சொல்றபடிதான். இதைப் பயன்படுத்தி சமீபத்துல நடந்த மாவட்ட நீதிபதிகள் மாற்றத்துல, நாடார் சமூகத்தைச்சேர்ந்த பல நீதிபதிகளை சென்னை உள்ளிட்ட நல்ல இடங்களுக்கு நியமிச்சுட்டதா சொல்றாங்க. இந்த நியமனத்துல சென்னை பெருநகர தலைமை நீதிபதியா நியமிக்கப்பட்டவர்தான் இந்த கோபாலன். ”
நீதிபதி பால் வசந்த குமார்
”சரி… கோபாலன் கோபாலபுரம் போயிப் பாத்துட்டாரா… ? ”
”இதையெல்லாம் பப்பிளிக்காவா செய்வாங்க… எதை, எங்க, எப்போ, எப்டி செய்யணும்னு திமுகவுக்கு தெரியாதா ? அதையெல்லாம் கச்சிதமா முடிச்சுடுவாங்க. மரண வாக்குமூலம் வாங்கறப்போ, சம்பந்தப்பட்ட நபர்கள் அலர்ட்டா இருக்காங்களான்னு செக் பண்ண, அவங்க கிட்ட, உங்க பேர் என்ன, உங்க கணவர் பேர் என்ன, இது மாதிரி சாதாரணமான கேள்விகளை கேப்பாங்க. அதுக்கு அவங்க சரியா பதில் சொன்னா, அடுத்தடுத்து கேள்விகளை கேப்பாங்க. சரியா சொல்லலன்னா, விக்டிம் நாட் கொஹெரன்ட் னு பதிவு பண்ணிடுவாங்க. அதே மாதிரி, தயாளு அம்மாளுக்கு தான் யாருன்னு தெரியல, தன் கணவர் யாருன்னு தெரியல, உலகம் முழுக்க பதுக்கி வச்சுருக்க பல ஆயிரம் கோடிகள் எங்க இருக்குன்னு தெரியல… அதனால இவங்ககிட்ட வாக்குமூலமே பதிவு செய்ய முடியாதுன்னு அறிக்கை அனுப்பப் போறாரு கோபால். வாக்குமூலமே பதிவு பண்ணலன்னா, அப்புறம் விசாரணை எங்கே, குறுக்கு விசாரணை எங்க..”
”இதனால என்ன ஆகும்… ? ”
”என்ன ஆகும்… ? கருணாநிதி குடும்பத்துப் பேச்சைக் கேட்டு, கலைஞர் டிவியோட எம்.டியா இருந்த பாவத்துக்காக, சரத்குமார் தண்டிக்கப்படுவாரு. கருணாநிதி குடும்பத்துல இருந்து அத்தனை பேரும் தப்பிச்சுடுவாங்க. ”
சரத் குமார்
”தன்னோட சுயநலத்துக்காக லட்சக்கணக்கான ஈழத் தமிழர்களை அழிச்சாரு.. இப்போ அவர்கிட்ட வேலை செஞ்ச நபரையே குடும்பத்துக்காக சிறைக்கு அனுப்பப் போறாரு… சாகறதுக்குள்ள இந்த கருணாநிதி இன்னும் என்னென்ன பண்ணப் போறாரோ…” என்று அங்கலாய்த்தார் கணேசன்.
”சரி… சொத்துக் குவிப்பு வழக்கு எந்த நிலைமையில இருக்கு ? ” என்றான் வடிவேல்.
”சொத்துக் குவிப்பு வழக்கைப் பொறுத்தவரை ஜெயலலிதாவுக்கு பின்னடைவுன்னுதான் சொல்லணும். ”
”எப்படிப்பா பின்னடைவு… கர்நாடக அரசுதான் அரசு வழக்கறிஞர் பவானி சிங்கை மாத்துன உத்தரவை வாபஸ் வாங்கிட்டாங்களே.. ? ”
”அப்படி வாபஸ் வாங்குனதே ஒரு தந்திரம்ணே… கர்நாடக அரசு அரசு வழக்கறிஞரை வாபஸ் வாங்குனது தவறுன்னு சொன்னதும், அதே வழக்கறிஞரை வைச்சு, வழக்கை உடனடியா நடத்துங்கன்னு உச்சநீதிமன்றம் சொல்லும், வழக்கை இப்போ இருக்கிற நீதிபதிக்கிட்டயே நடத்தி முடிக்கலாம்னு பாத்தாங்க.. ஆனா, கர்நாடக அரசு தந்திரமா, அரசு வழக்கறிஞர் பவானி சிங்கை நீக்கிய உத்தரவை திரும்பப் பெறுகிறோம், தலைமை நீதிபதி சம்மதிச்சா, வேறு வழக்கறிஞரை நியமிக்க, நான்கு வழக்கறிஞர்களின் பட்டியலை அளிக்கிறோம்னு சொன்னதும், உச்சநீதிமன்றம், இந்த வழக்கில் விசாரிக்க ஏதுமில்லைன்னு தள்ளுபடி பண்ணிட்டாங்க.
இப்போ அதே வழக்கறிஞர் இருந்தாலும், நீதிபதி செப்டம்பர் 30 ஓய்வு பெற்றிடுவாரு. புது நீதிபதி எப்படிப்பட்டவர்னு யாருக்கும் தெரியாது. அது மட்டுமில்லாம, கர்நாடக அரசு, புதிய நீதிபதியானாலும் சரி, புதிய வழக்கறிஞரானாலும் சரி, ஜெயலலிதாவோட இழுப்புக்கு வளையாத ஆளாத்தான் நியமிப்பாங்க. கர்நாடக தலைமை நீதிபதி, குஜராத்திலிருந்து வந்தவர். அதனால ஜெயலலிதா மோடி மூலமா, ஒரு முயற்சி பண்றதுக்கும் வாய்ப்பு இருக்கு. எப்படி இருந்தாலும், இப்போ இருக்கற சிறப்பு நீதிபதி பாலகிருஷ்ணா கிட்ட வழக்கை முடிக்க நினைத்த ஜெயலலிதாவோட கனவை திமுக தகர்த்துடுச்சுன்னு தான் சொல்லணும். ”
”மச்சான் ப்ரோ எப்படி இருக்காரு… ? ” என்று கிண்டலாக கேட்டான் பீமராஜன்.
”ப்ரோ ரொம்ப நொந்து போயி இருக்காருடா… இந்தத் தடவ மிஸ் ஆகாதுன்னு சொன்னாரு… ஆனா, இந்த தடவ இல்ல… அடுத்த தடவையும் மிஸ் ஆயிடும் போலருக்கு…
தலைவா படம் செம அடி வாங்கிடுச்சு. விநியோகஸ்தர்கள் போட்ட பணத்துல பத்து சதவிகிதம் கூட திரும்பி வரல. படத்தை வேந்தர் மூவீஸ் 80 கோடிக்கு வியாபாரம் பண்ணியிருக்காங்க. நஷ்டம் தியேட்டர் ஓனர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும் மட்டும்தான். விஜய்யோட அடுத்த படமான ஜில்லாவுக்கும் இதே மாதிரி அரசாங்கத்துக்கிட்ட இருந்து சிக்கல் வரும்னு அடுத்த படத்தை வாங்கறதுக்கே தயங்கற நிலைமை ஏற்பட்டிருக்கு. ப்ரோ கெரியர்ல இந்த மாதிரி இக்கட்டான சூழ்நிலையைப் பாத்ததே கிடையாது. ப்ரோ எந்த அளவுக்கு பயந்து போயிட்டாருன்னா, ரசிகர்கள் யாரும் அரசியல் பத்திப் பேசக்கூடாது, தன்கிட்ட இருந்து அறிக்கை வந்தாலே ஒழிய யார் எதைச் சொன்னாலும் நம்பக் கூடாதுன்னு சொல்லிட்டாரு. இதெல்லாம் ப்ரோ கடுமையான பயத்துல இருக்கறார்னு காட்டுது. அடுத்த படமும் சிக்கல்ல மாட்டுச்சுன்னா, ப்ரோ பாடு கஷ்டம்தான்…”
”ஈஷா மையத்தை இடிக்கனும்னு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துச்சே… அது அப்படியே நின்னு போச்சே மச்சான்.. என்ன நடக்குது ? ”
”கோவை மாவட்ட துணை இயக்குநர் சட்டவிரோதமா கட்டியிருக்கிற ஈஷா கட்டிடங்களுக்கு சீல் வைக்கணும்னு நோட்டீஸ் அனுப்பிட்டாரு. அந்தக் கட்டிடங்களை இடிக்க அனுமதி கேட்டு, சென்னையில் இருக்கிற இயக்குநர் அலுவலகத்துக்கு அவர் கடிதம் அனுப்பி 8 மாசம் ஆகுது. ஆனா, அங்க இயக்குநரா இருக்கிறவரு, இது வரைக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்காம ஃபைலை கட்டி வச்சிட்டு இருக்காரு. ”
”யாரு அந்த இயக்குநர் ? ”
”அந்த இயக்குநர் பேரு கார்த்திக் ஐஏஎஸ். இந்த கார்த்திக் ஐஏஎஸ் இப்போ பெரிய சிக்கல்ல மாட்டியிருக்காரு. இவரோட மனைவி ராஜலட்சுமி இவர் மேல சென்னை உயர்நீதிமன்றத்துல ஒரு வழக்கு தொடுத்திருக்காங்க. ஒரு ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதியோட மகளோட, கார்த்திக் ஐஏஎஸ்க்கு உறவு இருக்கிறதாவும், அந்த உறவின் காரணமா, தன்னையும் தன் குழந்தையையும் கைவிட்டு விட்டதாவும், இது தொடர்பா கார்த்திக் மேல ஒழுங்கு நடவடிக்கை எடுக்கச் சொல்லி, தலைமைச் செயலாளருக்கு புகார் அனுப்பியும் அவர் நடவடிக்கை எடுக்காததால, நடவடிக்கை எடுக்க உத்தரவு போடணும்னு கேட்ட வழக்குல, கார்திக்குக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டிருக்கு சென்னை உயர்நீதிமன்றம்…”
கார்த்திக் ஐஏஎஸ்
”இந்த வேலையில பிசியா இருந்ததாலத்தான், ஈஷா கட்டிடங்கள் தொடர்பான பைலை கவனிக்க முடியலையோ” என்று சொல்லிச் சிரித்தான் ரத்னவேல்.
”இந்த கூடங்குளம் அணு உலையை எப்போத்தாண்டா திறப்பாங்க ? ” என்று அடுத்த சப்ஜெக்டுக்குத் தாவினான் ரத்னவேல்.
”இன்னும் பத்தே நாட்கள்ல மின் உற்பத்தி தொடங்கும்னு கிட்டத்தட்ட ஒரு வருஷமா விஞ்ஞானிகள் சொல்லிக்கிட்டு இருக்காங்க. அணு உலை வேலை செய்யத் தொடங்கிடுச்சு. மின்சாரம் ஒரு வாரத்துல வரப்போகுதுன்னு ஜுன் மாசம் சொன்னாங்க. ஆனா, இன்னை வரைக்கும் மின் உற்பத்தி தொடங்கல. இப்போ என்னடான்னா வால்வ் பிரச்சினை ஏற்பட்டதால, மின் உற்பத்தி தொடங்க முடியலைன்னு சொல்றாங்க. அணு உலை தொடங்கறதுக்கு முன்னாடியே வால்வ் பிரச்சினை, வாழக்காய் பிரச்சினைன்னா, தொடங்குனதுக்கு அப்புறம் என்னென்ன பிரச்சினை வரும்னு தெரியலை. இதைத்தான் அந்தப் பகுதியில போராடுற மக்கள் காலங்காலமா சொல்லிக்கிட்டு இருக்காங்க.
கூடங்குளம் அணு உலைதான் இப்படின்னா, கல்பாக்கம் அணு உலைக்கு சுற்றுச் சூழல் தடையில்லா சான்றிதழே பெறாம, கிட்டத்தட்ட 30 வருஷமா செயல்பட்டுக்கிட்டு இருக்கறது, சமீபத்துல பெற்ற ஒரு தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆவணம் மூலமா தெரிய வந்துருக்கு. அணுக் கழிவுகளை சேமித்து வைக்கும் இடமான கல்பாக்கத்துக்கு 100 கிலோ மீட்டர் தொலைவில எரிமலைகள் இருக்கு, அது அணு உலையை பாதிக்குமா பாதிக்காதான்னு இப்போதான் ஆராய்ச்சி செஞ்சுகிட்டு இருக்கோம்னு சொல்றாங்க. சுற்றுச் சூழல் தடையில்லா சான்று இல்லாம எந்த அணு உலையும் செயல்படக் கூடாதுன்னு, மத்திய அரசே கொண்டு வந்த சட்டம். ஆனா இந்தச் சட்டத்தையே மதிக்காம, 30 வருஷமா ஒரு அணு உலை செயல்பட்டுக்கிட்டு இருக்குன்றது மக்களோட பாதுகாப்புக்கு அரசாங்கம் எப்படிப்பட்ட மதிப்பை தருதுன்றதை விளக்குது.
கல்பாக்கம் அணு உலை
சுற்றுச் சூழல் தடையில்லா சான்று இல்லாம செயல்படும் இந்த கல்பாக்கம் அணு உலையை மூடணும்னு ஒரு பொது நல வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்துல அடுத்த வாரம் தாக்கல் செய்யப்பட இருக்கறதா, வழக்கறிஞர் ஒருத்தர் சொன்னாரு.”
”தமிழகத்துல மணல் கொள்ளை எப்படி இருக்கு ?” என்றான் பீமராஜன்.
”மணல் கொள்ளையனுக்கு விருது குடுத்து கவுரவிக்கிற அநியாயம் தமிழகத்துலதானே நடக்கும் ? ”
”என்னடா சொல்ற… ? ”
மணல் கொள்ளையன் ஆறுமுகசாமி
”ஆமாம் மச்சான். தமிழகத்தின் நம்பர் ஒன் மணல் கொள்ளையன் ஆறுமுகசாமிக்கு புரவலர் விருது குடுத்து கவுரவிச்சிருக்கு சிறுதுளி ன்ற அமைப்பு. இந்த விருதை கொடுத்தது யார் தெரியுமா ? கூடங்குளம் அணு உலை பாதுகாப்பானதுன்னு சான்று கொடுத்த அப்துல் கலாம்தான். இந்த மாதிரி திருடனுக்கு விருது கொடுக்க, அப்துல் கலாம் மாதிரி ஒரு அரசாங்கக் கைக்கூலியை அழைத்தது ஒரு வகையில பொருத்தம்தான். ஆனா, வெளிப்படையா 1100 லாரிகளும், 450 பொக்லைன் யந்திரங்களையும் வச்சு மணல் கொள்ளையடிக்கிற ஒரு மாஃபியா கூட்ட தலைவனுக்கு விருது குடுக்குற அயோக்கியத்தனம் தமிழகத்துலதான் நடக்கும்.. ”
”இதே மாதிரி இன்னொரு அயோக்கியத்தனம் கோவையிலயே நடந்துக்கிட்டு இருக்குன்ணே.. ” என்று தமிழே தொடர்ந்தான்.
”என்னப்பா அது… ? ”
”அடுத்த தலைமைச் செயலாளர் கனவுல இருக்கறவர் மோகன் வர்கீஸ் சுங்கத். இவரோட மனைவி ஷீலா ராணி சுங்கத்தும் ஐஏஎஸ் அதிகாரிதான். புருஷன் பொண்டாட்டி ரெண்டு பேருக்கும் வேலையே சொத்து சேக்கறதுதான். தமிழ்நாடு பூரா நிலத்தை வாங்கிப் போட்டிருக்காங்க… இப்படி இவங்க வாங்கிப்போட்ட ஒரு நிலம் கோவை மாவட்டம் தொண்டாமுதூர் ஒன்றியம், நரசிபுரம் கிராமத்துல உள்ள 10.80 ஏக்கர். இந்த நிலத்தை கோவையைச் சேர்ந்த செவன்த் சேனல் ஹோம்ஸ் ன்ற நிறுவனத்துக்கு விக்கிறாரு மோகன் வர்கீஸ் சுங்கத்.
சுங்கத் தம்பதியினரின் சொத்துப் பட்டியல்
அந்த நிலத்தோட சந்தை மதிப்பு, ஒரு ஏக்கர் 20 லட்சம் ரூபாய் போகுது. ஆனா, இந்த நிறுவனத்துக்கு ஒரு ஏக்கர் 45 லட்ச ரூபாய்க்கு வித்திருக்கார் மோகன் வர்கீஸ் சுங்கத். இந்த நிலத்தை வாங்கிய நபர் யாருன்னா கோவையைச் சேர்ந்த ஒரு தொழில் அதிபர். அந்த தொழில் அதிபர், ஈஷா மையத்தோட ஜக்கி வாசுதேவோட அடிமை. இந்த அடிமை மூலமா, வர்கீஸுக்கு கொடுத்த லஞ்சம்தான் இந்த கூடுதல் விலைன்னு சொல்றாங்க…”
”ஈஷா எதுக்கு வர்கீஸுக்கு லஞ்சம் கொடுக்கணும்… ? ” என்று புரியாமல் கேட்டான் வடிவேல்.
”மச்சான்.. மோகன் வர்கீஸ் சுங்கத் இப்போ வனத்துறை செயலாளரா இருக்கிறாரு. ஈஷா நிறுவனம் சட்டவிரோதமா கட்டிய கட்டிடங்கள் மேல நடவடிக்கை எடுக்க வேண்டியது வனத்துறைதானே… ஈஷா கட்டிடங்களால வனத்துக்குதானே பெரிய ஆபத்து ? அதனாலதான் சுங்கத்துக்கு சுங்கம் கட்டியிருக்காரு ஜக்கி வாசுதேவ்… ? ”
”அந்த சாமியார் பெரிய ஆளா இருப்பாரு போல இருக்கே… ? ”
”அந்த சாமியார் மட்டுமில்ல… எல்லா சாமியாருங்களுமே திருட்டுப் பசங்கதான்… அதுலயும் இந்த ஜகதீஷ் என்கிற ஜக்கி வாசுதேவ் மிகப்பெரிய திருடன். இவனையெல்லாம் இந்த அம்மா இன்னும் விட்டு வச்சுருக்குன்றதுதான் வேதனையா இருக்கு… சரி அதை விடு. இப்போ நாம மீண்டும் சுங்கத் கதைக்கு வருவோம்.
இப்படி கூடுதல் விலை குடுத்து நிலத்தை சேனல் செவன் ஹோம்ஸ்க்கு மோகன் வர்கீஸ் சுங்கத் வித்துட்டாரு. அதை வாங்கின நிறுவனம், விவசாய நிலத்துக்கு நடுவுல இருக்கற அந்த 10.80 ஏக்கர் நிலத்துல, பண்ணை வீடுகள் கட்டி, வெளிநாட்டில இருக்கிற நபர்களுக்கு விக்க ஏற்பாடு பண்றாங்க.. சுற்றிலும் விவசாய நிலங்கள் இருக்கிற இடத்துக்கு நடுவுல வீடுகள் கட்டக் கூடாதுன்னு அந்தப் பகுதி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிச்சாங்க.
நரசிபுரம் பஞ்சாயத்து தீர்மானத்துல விவசாய விளை நிலங்களுக்கு நடுவில, வீடு கட்ட அனுமதி தரக்கூடாதுன்னு தீர்மானம் போட்டு, கட்டிடம் கட்டுவதற்கான அனுமதியை மறுத்துட்டாங்க. ஆனா, மோகன் வர்கீஸ் சுங்கத், கோவை மாவட்ட ஆட்சியர் கருணாகரனை மிரட்டி, நரசிபுரம் பஞ்சாயத்து தீர்மானத்தை ரத்து பண்ண வச்சிருக்கார். இப்போ, அனுமதியே இல்லாம, அந்த 10.80 ஏக்கர் நிலத்துல பண்ணை வீடுகள் கட்ட ரோடெல்லாம் போட்டுட்டாங்க. வெகு விரைவில வீடுகள் கட்டுமானப் பணியும் தொடங்கிடும்..”
நரசிபுரம் பஞ்சாயத்து தீர்மானம்
பஞ்சாயத்து தீர்மானத்தை ரத்து செய்த மாவட்ட ஆட்சியரின் ஆணை
ரத்து செய்த மாவட்ட ஆட்சியர் கருணாகரன் ஐஏஎஸ்
”சரி கோர்ட் செய்திகள் என்னப்பா இருக்கு ” என்றார் கணேசன்.
”அண்ணே… வரக்கூடிய நாட்கள்ல உயர்நீதிமன்றத்தில் தமிழ்ன்ற முழக்கம் அதிகமா கேக்கும். 2010ம் ஆண்டு மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கறிஞர் பகத்சிங் எடுத்த போராட்டம், விரைவில் சென்னையை நோக்கி திரும்ப இருக்கு. கடந்த வாரம் வெள்ளிக்கிழமை, ஒரு நாள் தமிழகம் முழுக்க நீதிமன்றப் புறக்கணிப்பு பண்ணி, வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்துனாங்க. இந்த முறை போராட்டத்தை தீவிரப்படுத்தும் பணியில வழக்கறிஞர்கள் தீவிரமா ஈடுபட்டிருக்காங்க….”
”உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தேர்தல் சூடு பிடிக்க ஆரம்பிச்சிருக்கு. தலைவர் பதவிக்கு முத்துராமலிங்கம், வேல்முருகன் மற்றும் இன்னாள் முன்னாள் தலைவர்கள் மோகனகிருஷ்ணன் மற்றும் பால் கனகராஜ் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்… வாக்களிக்கும் வழக்கறிஞர்களை இப்போதிருந்தே குளிப்பாட்டும் வேலைகள் பரபரப்பா நடந்துக்கிட்டு இருக்கு… கிழக்கு கடற்கரைச் சாலையில் பார்ட்டிகள், சந்தா செலுத்தாத உறுப்பினர்களின் சந்தாக்களை செலுத்துவது உள்ளிட்ட பல்வேறு வேலைகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் தீவிரமா இறங்கியிருக்காங்க…”
”பத்திரிக்கை உலக செய்திகள் என்ன மச்சான்… ? ” என்றான் பீமராஜன்.
”ஏற்கனவே சொன்னது போல செப்டம்பர் 16 அன்னைக்கு தமிழ் இந்து நாளிதழ் வெளிவருது. காமதேனுன்ற பெயர்லாம் இல்லாம, இந்து பேர்லயே வெளிவருது. செய்தித்தாளை வெளிக் கொண்டு வர்றதுக்காக, ஆசிரியர் அசோகன் தலைமையில ராத்திரி பகலா உழைக்கிறாங்க. ”
”வேற செய்திகள்… ?
”திறமை மூலமா முன்னேற நினைக்கும் பத்திரிக்கையாளர்கள் இருக்காங்க.. காக்கா புடிச்சே முன்னேற நினைக்கும் பத்திரிக்கையாளர்கள் சிலர் இருக்காங்க.. ”
”யாரப்பா சொல்ற ? ”
”ரங்கராஜ் பாண்டேதான். சமீபத்துல சீமான் கல்யாணம் நடந்துச்சுல்ல. அதுக்கு பாலசுப்ரமணிய ஆதித்தன் வந்திருக்காரு. ரங்கராஜ் பாண்டே, தந்தி டிவியோட செய்தி ஆசிரியர். ஆனா, ஒரு சாதாரண வாட்ச்மேன் மாதிரி, பாலசுப்ரமணிய ஆதித்தன் வந்ததும், அவருக்காக கூட்டத்தை விலக்கி விடறதும், வழி விடுங்க, வழி விடுங்கன்னு கத்தறதும்… பாக்கறதுக்கே கண்றாவியா இருந்துச்சுன்னு சொல்றாங்க…”
”பாண்டேகிட்ட இருந்து இன்னும் நெறய்ய எதிர்ப்பாக்கணும்.. இதெல்லாம் கம்மி”
”போலாமாப்பா…” என்றார் கணேசன்.
”ஒரே ஒரு செய்தி சொல்லிட்றேன்ணே… தமிழ் பத்திரிக்கை உலகின் ஒரு புதிய விடிவெள்ளி உதயமாகியிருக்கு…”
”தமிழ் இந்துவை சொல்றியாப்பா…. ? ”
”அடப் போங்கன்ணே… அதெல்லாம் விடிவெள்ளியா… ? ”அரசியல் அலசல்” னு ஒரு பத்திரிக்கை தொடங்கப்பட்டிருக்கு.
”யாருப்பா வண்ணாரப்பேட்டையில லாண்ட்ரி கடை வச்சுருக்கவங்க பத்திரிக்கை தொடங்கியிருக்காங்களா ? ”
”இல்லன்ணே… இல்ல… இந்தப் பத்திரிக்கையை தொடங்கியிருக்கறது ஸ்டார் டிவி என்கிற கேபிள் டிவி பாலா… ? முதல் இஷ்யுவுலயே.. சென்னை மாநகர ஆணையர் ஜார்ஜ் ஒரு மிகப்பெரிய அப்பாடக்கர்.. அவரை மாதிரி யாருமே கிடையாதுன்னு வானளாவ புகழ்ந்திருக்கார். கூடவே சேத்து, உளவுத்துறை இணை ஆணையர் வரதராஜுவையும் ஆகா ஓகோன்னு புகழ்ந்திருக்கார்.. ”
”சரி… எதுக்காக பாலா இப்போ பத்திரிக்கை ஆரம்பிச்சிருக்கார்.. ? ”
”என்னண்ணே இப்படி வெள்ளந்தியா இருக்கீங்க. போலீஸ் ரிப்போர்ட்டர், க்ரைம் நியூஸ், காவல் செய்திகள் ன்னு, பல்வேறு பெயர்கள்ல பத்திரிக்கைகள் வந்துக்கிட்டு இருக்கே… அதையெல்லாம் யாராவது படிக்கிறாங்களா என்ன ? ஒரு ஆயிரம் காப்பி அச்சிட வேண்டியது.. யாருக்கிட்டயாவது விளம்பரம் வாங்கிப் போட வேண்டியது. கார்ல ப்ரஸ் னு ஸ்டிக்கர் ஒட்டிக்க வேண்டியது. தனியா ஒரு பத்திரிக்கையாளர் சங்கம் ஆரம்பிக்க வேண்டியது. இனிமே உங்களை ஒரு பத்திரிக்கையாளரா எல்லோரும் பாக்க ஆரம்பிச்சுடுவாங்கல்ல….”
”நானும் இருவது வருஷமா பத்திரிக்கையாளராத்தான் இருக்கேன்… ஒருத்தர்கிட்டயும், போயி எதுக்காகவும் நின்னதுல்ல… ஆனா, பல்வேறு பத்திரிக்கையாளர்கள் முளைக்கிறதப் பாத்தா, இருவது வருஷத்தை வீணடிச்சுட்டோமோன்னு தோணுது…”
”அண்ணே.. பத்திரிக்கையாளரா பொழைக்கத் தெரியாததாலதான், நீங்கள்லாம் என் கூட வந்து மொட்டை மாடியில உக்காந்துக்கிட்டு இருக்கீங்க… பொழைக்கத் தெரிஞ்சா, ஹாரிங்டன் க்ளப்புல உக்காந்து அரசியலை அலசிக்கிட்டு இருப்பீங்க… வாங்கன்ணே போலாம்” என்று எழுந்ததும் அனைவரும் எழுந்தனர்.