“சட்டம் ஒரு இருட்டறை.. “ என்று கூறியபடியே மொட்டை மாடியில் நுழைந்தான் டாஸ்மாக் தமிழ்.
“வா மச்சான்… என்ன இன்னைக்கு சீக்கிரம் வந்துட்ட “ என்று கேட்டபடியே அவனை வரவேற்றான் ரத்னவேல்.
விரித்திருந்த பெட்ஷீட்டில் ரத்னவேலோடு கணேசன், வடிவேல் மற்றும் பீமராஜன் அமர்ந்திருந்தனர்.
“இல்லடா…. திடீர்னு மூட் சரியில்லாம இருந்துச்சு… அதான் கிளம்பிட்டேன்“ என்று பதில் சொல்லியபடியே அமர்ந்தான் தமிழ்.
“என்னடா திடீர்னு சட்டம் ஒரு இருட்டறைன்னு சொல்லிக்கிட்டு வர்ற“ என்று தமிழ் வாயை பிடுங்கினான் ரத்னவேல்.
“இல்ல மச்சான்…. பணம் படைத்தவர்களும், அதிகாரம் படைத்தவர்களும் எப்படியெல்லாம் சட்டத்தை வளைக்கிறாங்கன்னு யோசிக்கும்போது இது என்ன ஜனநாயகம்னு வருத்தமா இருக்கு.“
“என்னப்பா இப்படிப் பேசற… என்ன ஆச்சு ? “ என்று அக்கறையோடு விசாரித்தார் கணேசன்.
“பெங்களுரு சொத்துக் குவிப்பு வழக்குல இருந்து ஜெயலலிதா விடுதலை ஆகப்போறாங்கன்ணே. ? “
“என்னப்பா சொல்ற… ? “
“ஆமாம்ணே… கிட்டத்தட்ட இந்த வழக்கு முடியும் தருவாய்க்கு வந்துடுச்சு. ஜெயலலிதா மற்றும் சசிகலா தரப்பு சாட்சியங்கள் அனைத்தும் முடிஞ்சுடுச்சு. மொத்தம் 133 சாட்சியங்கள் விசாரிக்கணும்னு மனு செய்த ஜெயலலிதா தரப்பு, நீதிபதி மற்றும் அரசு வழக்கறிஞர் பவானி சிங் தங்களுக்கு சாதகமா இருக்கறதால, வழக்கை விரைவா முடிக்கறதுக்கு தீவிரமா முயற்சி பண்ணுது ஜெயலலிதா தரப்பு. “
“அவ்வளவு சுலபமா முடிஞ்சுடுமாப்பா ? “
“அண்ணே.. திமுக தரப்புல சிறப்பு நீதிமன்ற வழக்கறிஞர் பவானி சிங்கை மாத்தனும், அவர் அரசுத் தரப்புக்கு சாதகமா செயல்பட்றானு பெங்களுரு உயர்நீதிமன்றத்துல வழக்கு போட்டாங்க. அந்த வழக்கு விசாரணை நடக்கும்போதே, கர்நாடக அரசு, பவானி சிங் நியமனத்தை ரத்து செய்து உத்தரவு போட்டுச்சு. அந்த உத்தரவுக்கு எதிரா ஜெயலலிதா உச்சநீதிமன்றத்துல மனு தாக்கல் செய்தாங்க. அந்த மனு விசாரணைக்கு வரும்போது, கர்நாடக அரசு, பவானி சிங்கை பதவி நீக்கம் செய்த உத்தரவை வாபஸ் வாங்குகிறோம். புதிய வழக்கறிஞர் நியமனம் செய்வது குறித்து, கர்நாடக தலைமை நீதிபதியோடு கலந்தாலோசித்து, முடிவு செய்கிறோம்னு சொன்னதன் அடிப்படையில வழக்கை முடித்து வைத்து உத்தரவு போட்டுச்சு உச்சநீதிமன்றம்.
இதையடுத்து கர்நாடக அரசு, வழக்கறிஞர் பவானி சிங்குக்கு ஒரு கடிதம் எழுதுது. அந்தக் கடிதத்துல “As the Government of Karnataka was of the view that your appointment was not made in accordance with the directions issued by the Supreme Court in that the requirement of consultation has not been complied with, the Government withdrew your appointment. In the circumstances the Government is of the view that it would be appropriate that pending consideration of the matter by Hon’ble the Chief Justice, you do not insist upon appearing before the Court in the aforesaid case as Special Public Prosecutor” ன்னு எழுதியிருந்தாங்க…”
”ஏய் தமிழ்ல சொல்லுடா…. நாங்கள்லாம் உன் அளவுக்கு படிக்கலடா.. நாங்க சாதாரண தமிழ் ஜர்னலிஸ்ட்டுடா.. ” என்று செல்ல கோபத்தோடு சொன்னான் பீமராஜன்.
”டென்ஷன் ஆகாத மச்சான்… அதாவது, உங்கள் நியமனம் உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி நடக்காத காரணத்தால், அரசு உங்கள் நியமனத்தை வாபஸ் பெறுகிறது. கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம், வழக்கறிஞர் நியமனம் குறித்த விவகாரம் நிலுவையில் இருப்பதால், தாங்கள் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று நிர்பந்திக்க வேண்டாம்” என்று அந்த கடிதத்தில் எழுதப்பட்டிருக்கு.
”சரி இது சரியான கடிதம்தானே.. ? ”
”இந்தக் கடிதத்துக்குத்தான் உச்சநீதிமன்றம் தடை உத்தரவு போட்டிருக்கு”
”என்னடா சொல்ற… ? அநியாயமா இருக்கு… இதுக்கு எதுக்காக தடை உத்தரவு பிறப்பிக்கனும் ? ”
”தடை உத்தரவு பிறப்பிச்சது கூட அநியாயம் இல்ல… ஆனா யார் தொடுத்த வழக்கில் தடை உத்தரவு பிறப்பிச்சாங்கன்றதுதான் விசேஷம். ”
”பவானி சிங் தானேப்பா வழக்கு தொடுத்தது… ? ”
பவானி சிங்
”அண்ணே… என்னன்ணே.. இன்னும் உலகம் புரியாத ஆளா இருக்கீங்க… ? பவானி சிங் ஏன் வழக்கு தொடுக்கறார்.. ஜெயலலிதாதான் வழக்கு தொடுக்கறாங்க. ”
”ஜெயலலிதா அக்யூஸ்டாச்சேப்பா.. அவங்களுக்கு யாரு அரசு வழக்கறிஞரா இருந்தா என்ன ? ”
”அதுதான்ணே வினோதமா இருக்கு… ஜெயலலிதா பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணும்னு மனு போட்றாங்க. அதையும் உச்சநீதிமன்றம் விசாரிச்சு தடை உத்தரவு பிறப்பிக்குது. வேற எந்த வழக்குல சம்பந்தப்பட்ட குற்றவாளி, அரசு வழக்கறிஞரை மாற்றக் கூடாதுன்னு மனு போட்டாலும், நீதிமன்றங்கள் யாரு அரசு வழக்கறிஞரா இருந்தா உனக்கென்ன ன்னுதான் கேள்வி கேக்கும். ஆனா வழக்கு தொடர்ந்தது ஜெயலலிதாவாச்சே… இதனால, உச்சநீதிமன்றம், பவானி சிங்கை வாபஸ் வாங்கி கர்நாடக அரசு எழுதிய கடிதத்துக்கு தடை உத்தரவு பிறப்பிச்சு உத்தரவு போட்டுருக்கு.
இதனாலதான் எப்போதும், நீதித்துறையை விமர்சிக்காத கருணாநிதி, இந்த முறை நீதித்துறையையும், லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி ரியல் எஸ்டேட் சம்பந்தத்தையும் விமர்சித்து நீண்ட கடிதத்தை எழுதியிருக்காரு.”
”இவரு மட்டும் யோக்கியமா.. ? பொண்டாட்டியையும் பொண்ணையும் காப்பாத்தறதுக்கு சோனியா காலடியில தன் சுயமரியதையை அடகு வைக்கலயா… ? நல்லா இருக்கற பொண்டாட்டிக்கு ஞாபக மறதின்னு மருத்துவர்கள் மூலமா அறிக்கை வாங்கலயா ? ”
”இதைத்தான்ணே அண்ணா சட்டம் ஒரு இருட்டறைன்னு சொன்னாரு.. ”
”சரிடா… திமுகவுல என்ன பண்றாங்க… இதை சும்மா விட மாட்டாங்களே… ? ”
”இப்போ இருக்கற நிலைமையில, பவானி சிங்தான் அரசு வழக்கறிஞர். ஜெயலலிதா தரப்பு சாட்சிகள் முடிஞ்சுட்டா, அடுத்து வாதம் மற்றும் குற்றவாளிகளிடம் கேள்வி மற்றும் தீர்ப்புதான். வாதங்கள் பண்றதுக்கு எழுத்துபூர்வமான வாதத்தை தாக்கல் செய்யறோம்னு சொல்லிட்டா ஒரே நாள்ல எல்லாம் முடிஞ்சுடும். அதையடுத்து 10 நாள்ல தீர்ப்பு வாங்கிடலாம்னு ஜெயலலிதா தரப்பு நினைக்குது. ”
”அது நடந்துடுமா ? அரசுத் தரப்புக்கு உதவி செய்ய அனுமதி வேணும்னு திமுக ஏற்கனவே நீதிமன்றத்துல வழக்கு தொடர்ந்ததுக்கு, எழுத்துபூர்வமான வாதங்களை மட்டும் தாக்கல் பண்ணலாம்னு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு போட்டிருக்கு. அந்த அடிப்படையில, திமுக தரப்பு, எழுத்துபூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய எங்களுக்கு கால அவகாசம் வேணும்னு மனு தாக்கல் செய்வாங்க. அந்த மனுவை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி பண்ணும். அதை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றம் போவாங்க. உயர்நீதிமன்றம் வழக்கு விசாரணைக்கு தடை விதிக்கும். அதுக்குள்ள, கர்நாடக சிறப்பு நீதிபதி ஓய்வு பெற்றிடுவாருன்னு திமுக தரப்பு முயற்சி செய்யறாங்க. இதுக்காக, திமுக வழக்கறிஞர்கள் பெங்களுருல முகாமிட்டிருக்காங்க. ”
”சரி ஒரு வேளை கர்நாடக உயர்நீதிமன்றம் தடை விதிக்கலன்னா ? ”
”விதிக்கலன்னா உச்சநீதிமன்றம் போவாங்க. திமுக தரப்போட ஒரே நோக்கம், செப்டம்பர் 30 நீதிபதி ஓய்வு பெறும் வரைக்கும் வழக்கை இழுத்தடிக்கிறதுதான். அதுக்கப்புறம் அடுத்த நீதிபதி நியமனத்தை பாத்துக்கலாம்னு நினைக்கிறாங்க…”
”சரி… பெங்களுரு உயர்நீதிமன்றத்துல, பேராசிரியர் அன்பழகன், பவானி சிங்கை மாற்றணும்னு தொடுத்த வழக்கு திங்கட்கிழமை விசாரணைக்கு வந்துச்சே… அது என்ன ஆச்சு ? ”
”அந்த வழக்குல தன்னையும் இணைச்சுக்கணும்னு ஜெயலலிதா தரப்புல மனு போட்ருககாங்க.. அந்த மனுவை ஏத்துககிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை 19ம் தேதி ஒத்தி வைச்சிருக்கார்.
திங்கட்கிழமை அன்னைக்கு இரவு, கர்நாடக அரசு பிறப்பித்த உத்தரவுல, சொத்துக்குவிப்பு வழக்கில் அரசுத் தரப்பில் ஆஜரான பவானி சிங்கை கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியோட கலந்தாலோசித்த பிறகு நீக்கி உத்தரவு பிறப்பிச்சிருக்காங்க.
”உச்ச நீதிமன்றத்துல தடை இருக்குதே… ”
”உச்சநீதிமன்றத்துல விதிக்கப்பட்ட தடை, 10.09.2013 நாளிட்ட கர்நாடக அரசின் கடிதத்துக்குத்தான். தலைமை நீதிபதியோடு கலந்தாலோசித்து எடுக்கப்படும் முடிவு புதிய முடிவு. அந்த முடிவை எதிர்த்து ஜெயலலிதா புதிய வழக்குதான் தாக்கல் செய்யணும். ”
”ஜெயலலிதா வழக்குல இருந்து விடுதலையாவாங்களா மாட்டாங்களா ? ”
”விடுதலையாவதற்கான எல்லா முயற்சிகளையும் ஜெயலலிதா தரப்பு எடுக்கறாங்க.. ஆனா, ஜெயலலிதாவோட தலைக்கு மேல தொங்கற ஒரே கத்தியும் போயிடுச்சுன்னா, அம்மாவோட ஆர்ப்பாட்டம் தாங்க முடியாதுன்னு திமுக நினைக்கிறாங்க.. செல்வாக்கு உள்ளவங்களுக்கு ஆதரவா, சட்டம், நீதிமன்றங்கள் எல்லாமே இருக்கும்னு, 2ஜி வழக்கு உள்ளிட்ட எல்லா வழக்குகள்ளயும், தொடர்ந்து நிரூபிக்கப்பட்டுக்கிட்டே வருது. ”
”சரி.. வளர்ப்பு மகன் சுதாகரன் விடுவிக்கப்பட்டுட்டார் போலருக்கே..”
”விடுவிக்கப்பட்டுட்டார்தான்.. ஆனா அதுக்காக அவர் பட்ட பாடு இருக்கே.. வெளியில சொல்ல முடியாது. ஏற்கனவே ஜெயலலிதாகிட்ட இருந்து ஆட்டையப் போட்டுட்டுப் போன பணத்தை திருப்பித் தரணும்… எக்காரணத்தைக் கொண்டும், பெங்களுரு சொத்துக் குவிப்பு வழக்குல முரண்டு பிடிக்கக் கூடாது. சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பா நீட்டுன இடத்துல கையெழுத்துப் போடணும்…. இதெல்லாம் நிபந்தனைகள். ”
”அவங்க எப்படி நிபந்தனை விதிக்க முடியும் ? வழக்கு நீதிமன்றத்துலதானே இருக்கு” என்றான் ரத்னவேல்.
”என்னடா இவ்வளவு முட்டாளா இருக்கற… எந்த நீதிபதி சுதந்திரமா தீர்ப்பு எழுதறாரு… சுதாகரன் வழக்கு தீர்ப்பு எழுதப்படும் நேரத்துல, நீதிபதிக்கு மிரட்டல் கடிதங்கள் வந்த செய்தியைப் படிக்கலையா ? அது மாதிரி பல மிரட்டல் கடிதங்கள் தொடர்ந்து வரும். சுதாகரன் வழக்குல தீர்ப்பே வராத அளவுக்கு அரசாங்கம் நினைச்சா பண்ண முடியும். இது சுதாகரனுக்கும் தெரியும்… அதனாலதான் அத்தனை நிபந்தனைகளுக்கும் ஒத்துக்கிட்டாரு. ”
”சரி… மோடி பிரதமராயிடுவாரா… ? ” என்றான் பீமராஜன்.
”மோடி பிரதமரா ஆயிடுவாரோ இல்லையோ… தேர்தலுக்குள்ள சிபிஐ அதிகாரிகளை வைத்து எப்படியெல்லாம் மோசடி பண்ண முடியுமோ அப்படியெல்லாம் பண்ணணும்னு காங்கிரஸ் முடிவு பண்ணிடுச்சு.
இஷ்ரத் ஜஹான் என்கவுன்டர் வழக்குல, மோடி சொல்லித்தான் இந்த என்கவுன்டரை செய்தோம்னு தன்னோட ராஜினாமா கடிதத்துல சொல்லியிருந்த வன்சாரா ன்ற காவல்துறை அதிகாரியை அப்ரூவரா மாத்தறதுக்கு காங்கிரஸ் தலைமை குடுத்த உத்தரவின்படி, சிபிஐ அதிகாரிகள், பேசிக்கிட்டு இருக்காங்க.. இவனுங்க பேச்சைக் கேட்டுட்டு அப்ரூவராயிட்டு, நாளைக்கு மோடி ஜெயிச்சு வந்துட்டா, உரிச்சுடுவானுங்கன்னு வன்சாரா பிடி கொடுக்காம இருக்காரு.. ”
”மோடி பிரதமர் வேட்பாளரா அறிவிச்சது பத்தி கருணாநிதி என்ன நினைக்கிறாரு ? ”
”அறிவிப்பு வந்த அன்னைக்கு, மோடி குறித்த அறிவிப்பு உட்கட்சி விவகாரமா இருந்தாலும், திமுக மதவாதத்தை ஒருபோதும் பொறுத்துக் கொள்ளாதுன்னு பேட்டி குடுத்துட்டாரு. குடுத்துட்டு, கலைஞர் டிவிக்கு சொல்லி, அந்த பைட்டை போடாதீங்கன்னு சொன்னாரு”
”ஏன் அவரே போட வேணாம்னு சொன்னாரு ? ”
”பிஜேபிக்கு எதிரா பேசப் பேச.. காங்கிரஸோட பேரம் நடத்தும் வாய்ப்பு குறைஞ்சு போயிடும்னு தெரிஞ்சுதான் இந்த வேலையை செஞ்சாரு. ”
”கூடங்குளம் அணு உலை இப்போதைக்கு வேலை செய்யாது போல இருக்கே.. ? ” என்று இடைபுகுந்தான் பீமராஜன்.
”அந்த அணு உலையோட கட்டுமானத்துல ஏகப்பட்ட ஊழல்கள் நடந்துருக்கு. அதை முறையா விசாரிக்கணும்… ஊழலில் உருவாகிய அணு உலையால லட்சக்கணக்கான மக்களோட உயிருக்கு ஆபத்துன்னு அணு உலை எதிர்ப்பாளர்கள் தொடர்ந்து சொல்லிக்கிட்டே வர்றாங்க.. போன வாரம் பேசுன நாராயணசாமி கூட, வால்வு பழுதுன்னு சொல்றார். இப்படி தொடங்கறதுக்கு முன்னாடியே பல்வேறு பழுதுகளோட தொடங்கும் அணு உலையை பாதுகாப்பா இருக்கும்னு விஞ்ஞானிகள் சொல்றாங்க.. இதுதான் வினோதமா இருக்கு.. ”
”கல்பாக்கம் அணு உலை சுற்றுச் சூழல் தடையின்மை சான்று இல்லாம செயல்படுவதற்கு எதிரா பொது நல வழக்கு போடப்போறாங்கன்னு சொன்னியே.. போட்டுட்டாங்களா ? ” என்றான் வடிவேல்.
”போட்டுட்டாங்க மச்சான். வெள்ளிக்கிழமை அன்னைக்கு இந்த வழக்கு விசாரணைக்கு வந்துச்சு. அப்போ மத்திய அரசு சார்பா ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், கல்பாக்கம் அணு உலைக்கு சுற்றுச் சூழல் தடையில்லா சான்று தேவையில்லன்னு வாதிட்டார்
”உடனே தலைமை நீதிபதி, தேவையில்லை என்று யார் சொல்ல வேண்டும் ? ” னு கேட்டார். அப்போ நீதிமன்ற நேரம் முடிஞ்சதால வழக்கு திங்கட்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்துச்சு. விசாரணைக்கு வந்ததுமே, தடையின்மை சான்று தொடர்பாகவும், கல்பாக்கம் பகுதியில் சேகரிக்கப்பட்டு உள்ள அணுக் கழிவுகள் தொடர்பாகவும், விரிவான அறிக்கை தாக்கல் செய்யணும்னு சொல்லி மத்திய அரசுக்கு உத்தரவு போட்டு, அறிக்கையை 8 அக்டோபர்க்குள்ள தாக்கல் செய்யணும்னு சொல்லிட்டாங்க”
வில்சன்
”சரி… எல்லா வழக்குலயும் மத்திய அரசு சார்பா வில்சனே ஆஜராகறாரே… மத்திய அரசுக்கு வேற வழக்கறிஞரே இல்லையா ? ”
”மத்திய அரசுக்கு இரண்டு மூத்த வழக்கறிஞர்கள் உண்டு. மூத்த வழக்கறிஞர் மாசிலாமணி மற்றும் வில்சன். மத்திய அரசின் நிலை வழக்கறிஞர்களா இருக்கற (Central Government Standing Counsel) அத்தனை பேரையும் தன் கட்டுப்பாட்டுல வச்சுருக்கற வில்சன், எல்லா வழக்குலயும் இவரே ஆஜராகிட்றாரு.. எந்த வழக்கும் மாசிலாமணிக்கு போறதே இல்ல…”
”சரி.. புதுசா ஐபோன் வெளியிட்டிருக்காங்களே.. பாத்தீங்களா.. ? ”
”அட என்னப்பா நீ… நாம வாங்கற சம்பளத்துக்கு, இந்த போனை வாங்கறதே பெரிய பாடா இருக்கு… நீ என்னடான்னா ஐபோன் டேபிள் பேன்னு சொல்லிக்கிட்டு இருக்க.. ” என்று அலுத்துக் கொண்டார் கணேசன்.
”என்னண்ணே நீங்க… இதுக்குப் போயி அலுத்துக்கறீங்க…. நம்ம கிட்ட பணம் இல்ல சாதாரண போன் வச்சுருக்கோம்… பச்சமுத்துகிட்ட ஐபோன் இருக்காதா…. ? ”
”டேய் நீ இப்போ எதுக்காக பார்கவகுல திலகம் பாரி வேந்தரை இழுக்கற ? ”
”அவர் வீட்டுல, மற்றும் அவரோட நிறுவனங்கள்ல வருமான வரித்துறை சோதனை நடத்துனாங்க ஞாபகம் இருக்கா.. ”
”ஆமா…”
”அப்போ, அவர் வச்சுருந்த ஐபோனை வருமான வரித்துறை அதிகாரிகள் வாங்கிட்டாங்க… உடனே பச்சமுத்து, அந்த போனை மட்டும் கொடுத்துடுங்க.. முக்கியமான அழைப்புகள் வரும்னு பதட்டமா சொன்னாரு… சந்தேகப்பட்டு அந்த போனை சோதனை செய்த அதிகாரிகளுக்கு, பாரி வேந்தர், ஒரு சொப்பனசுந்தரியை வச்சுருந்ததை கண்டுபிடிச்சாங்க… உடனே சொப்பன சுந்தரி வீட்டுலயும் சோதனை பண்ண உத்தரவிட்டாங்க.. சோதனை செஞ்சதுல, சொப்பன சுந்தரி வீட்டுல 200 கோடி ரூபாய் பணம் மற்றும் ஆவணங்கள் சிக்குச்சு…”
”மச்சான்… ஒரு முக்கியமான சந்தேகம்.. ” என்றான் பீமராஜன்.
”என்னடா… ? ”
”வேந்தர் வச்சுருந்த சொப்பன சுந்தரியை இப்போ யாரு வச்சுருக்கா ? ”
”அடி செருப்பால ” என்று செல்லமாக அடிக்க கையை ஓங்கினான் தமிழ்.
”இது மட்டும் இல்லடா… அந்த சோதனையில, பச்சமுத்து ஃப்ரான்ஸ் நாட்டுக்குப் போயி ஸ்டெம் செல் தெரப்பி சிகிச்சை எடுத்துக்கிட்டது தெரிய வந்தது. அதுக்கு மொத்தம் ஆன செலவு 2 கோடி.. ”
”இது என்னடா பெரிய விஷயம்.. அந்த ஆளுகிட்ட இருக்கற பணத்துக்கு 200 கோடி செலவு பண்ணலாமே…”
”இல்லடா கருப்புப் பணமா ஏராளமான பணம் இருக்கும். ஆனா வெளிநாட்டுல சிகிச்சை எடுக்கும்போது அந்நியச் செலாவணி சட்டத்தின்படி செலவு பண்ணனும் இல்லையா… அப்படி முறையா அனுமதி வாங்காம செலவு பண்ணதால, பச்சமுத்து மேல அமலாக்கப்பிரிவு வழக்கு பதிவு செய்திருக்காங்க. ”
”சரி.. திருப்பி ஒரு டவுட்டு ” என்றான் பீமராஜன்.
”டேய்.. ஏடாகூடமா ஏதாவது கேட்ட… இந்த வாட்டி நெஜம்மா அடிச்சுடுவேன்.. ”
”கோவப்படாத மச்சான்.. இது நெஜ டவுட்டு. பச்சமுத்து ஒரு மருத்துவக் கல்லூரி முதலாளி. அவர்கிட்ட சொந்தமா ஒரு மருத்துவமனை இருக்கு. அவரு எதுக்கு வெளிநாட்டுக்குப் போயி ஸ்டெம் செல் தெரப்பி சிகிச்சை எடுக்கணும் ?
“என்ன வியாதிக்கு சிகிச்சை எடுத்தாரோ… யாருக்கத் தெரியும் ? அதை விடு. முறையா அந்நியச் செலாவணி வாங்காம, இரண்டு கோடி செலவு பண்ணதுக்காக, அமலாக்கப் பிரிவு அவர் மேல புதிய வழக்கு பதிவு பண்ணியிருக்காங்க..”
”பணம் வச்சுருக்காரு பச்சமுத்து…. அவரு எங்க வேணாலும் சிகிச்சை எடுப்பாரு.. ”
”சரி.. காவல்துறை செய்திகள் என்னடா இருக்கு ? ” என்றார் ரத்னவேல்.
”போன வாரம் 13ம் தேதி அன்னைக்கு, சென்னை மாநகர ஆணையர் ஜார்ஜை சந்திக்கப் போன இணை ஆணையர், துணை ஆணையர் யாரையும் ஜார்ஜ் மன்னர் சந்திக்க மாட்டேன்னுட்டாராம். எல்லாரும் ரொம்ப நேரம் காத்துக்கிடந்துட்டு வெளியேறிட்டாங்க. ”
”ஏம்பா ஜார்ஜ் மவுன விரதத்துல இருந்தாரா…”
”இல்லடா… அன்னைக்கு செம மழை.. எல்லாரையும் உள்ள அனுமதிச்சா, அறையெல்லாம் சேறாயிடும்னு யாரையும் அனுமதிக்கலையாம்…”
”அவரு என்னடா அவ்வளவு பெரிய அப்பாடக்கரா…. ? ”
”அவரு அப்பாடக்கர்னு அவரே நெனச்சுக்கிறாரு.. என்ன பண்றது. மாநகர ஆணையர்களோட வேலைகளில் முக்கியமான வேலை, குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் ரவுடி மற்றும் கொடுங்குற்றமிழைத்தவர்களை அடைப்பது. இந்தக் கோப்புல வட கையெழுத்துப் போட ஜார்ஜ் மன்னருக்கு வலிக்குதாம். அதனால, துணை ஆணையர்கள் அதுல கையெழுத்துப் போடணும்னு சட்டத்திருத்தம் கொண்டு வர அரசுக்கு பரிந்துரைத்து அதுவும் கையெழுத்தாயிடுச்சு. ”
”சரி.. அவரு என்னதான் பண்ணுவாராம் ? ”
”வாட்ஸ்அப்புல கடலை போடுவாரு… மாமூல் வாங்குவாரு. இந்த மாதிரியான முக்கிய வேலைகள் இருக்கறதால, அவரால குண்டர் சட்டத்தில் கையெழுத்துப் போட நேரம் இல்லையாம்.. ”
“ஐபிஎஸ் அதிகாரி வருண் மேல கொடுத்த புகார் என்னப்பா ஆச்சு ?” என்றார் கணேசன்.
”அந்தப் புகார் மேல எந்த நடவடிக்கையும் எடுக்காம அப்படியே கட்டி வச்சிருக்காங்க. இதுக்கு நடுவுல, அந்த வருண் தாதா மாதிரி நடந்துக்கிறாரு”
”தாதா மாதிரியா ? என்ன பண்றாரு ? ”
”அவர் மேல புகார் கொடுத்த பிரியதர்ஷிணி வீட்டுக்கும், அவங்க வீட்டு ஓனருக்கும் வாடகை விஷயமா தகராறு இருக்கு. இது தொடர்பான வழக்கு, பூந்தமல்லி நீதிமன்றத்துல நடந்துக்கிட்டு இருக்கு.
இந்த வீட்டு ஓனரை அணுகிய வருண் குமார், பிரியதர்ஷினி வீட்டுல சண்டை போட்டு, விஷயத்தை போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு போங்க… நான் பாத்துக்கறேன். ஐபிஎஸ் அதிகாரி சொல்றதை மீறி எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டாங்கன்னு சொல்லி மிரட்டிக்கிட்டு இருக்காரு.. ”
”சரியான சல்லிப்பயலா இருப்பான் போலருக்கே.. ?”
”என்ன பண்றது.. இந்த சல்லிப்பய மேல நடவடிக்கை எடுக்க டிஜிபி கூட தயங்கறாரே… ? ”
”மத்திய அமைச்சர் நாராயணசாமிக்கும் பாண்டிச்சேரி முதலமைச்சர் ரங்கசாமிக்கும் மோதல் அதிகமாயிட்டே இருக்கு. ரங்கசாமியை கண்காணிக்கணும்னு நாராயணசாமி முடிவெடுத்துட்டார். இப்போவே தேர்தலுக்கு தயாரிப்பு வேலைகள்ல நாராயணசாமி இறங்கிட்டாரு.. ”
”என்ன பண்றாரு.. ? ”
”பாண்டிச்சேரியோட ஐஜியா இருக்கறவரை மாத்திட்டு, தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி காமராஜை பாண்டிச்சேரிக்கு மாற்ற ஏற்பாடு பண்ணிக்கிட்டு இருக்காரு. ”
”காமராஜ் இப்போ எங்க இருக்காரு ? ”
”காமராஜ் இப்போ டெல்லி காவல்துறையில இருக்காரு.. அவரை பாண்டிச்சேரிக்கு மாத்தி, ரங்கசாமியை கண்காணிப்பில் வைக்கணும்னு நாராயணசாமி திட்டம் போட்டுக்கிட்டு இருக்காரு. ”
”பத்திரிக்கை உலக செய்திகள் என்ன மச்சான் ? ” என்று ஆர்வமாக கேட்டான் பீமராஜன்.
”உங்க பத்திரிக்கையைப் பத்திதான்டா மொதல்ல சொல்லணும்”
”என்னடா எடுத்ததும் எங்க பத்திரிக்கையைப் பத்தி ஆரம்பிக்கிற ? ”
”போன இஷ்யூவுல வச்சுருந்த கவர் ஸ்டோரியை எவன்டா எழுதுனது ? ”
”ஏன் எங்க ஆபீஸ்ல எழுதியிருப்பாங்க… ”
”மோடி மதுரையில போட்டியிட்றாருன்னு யாருடா சொன்னது… ? ரெண்டு தொகுதியில போட்டியிடணும்னா குஜராத்துலயே ரெண்டு தொகுதியில போட்டியிடறார். இல்லன்னா உத்தரப்பிரதேசத்துல போட்டியிட்றார்… அப்படியே தென்னிந்தியாவுல போட்டியிடனும்னா கூட, கர்நாடகத்துல போட்டியிடுவாரா… தமிழ்நாட்டுல போட்டியிடுவாரா.. புளுவறதுக்கு ஒரு அளவே இல்லையா… கட்சிக்காரங்கள்லாம் படிச்சுட்டு காறித் துப்பறாங்க.. ”
”சரி.. விடு.. வாரத்துக்கு ரெண்டு முறை ஏதாவது கவர் ஸ்டோரி வேணும்ல…. ? ”
”டேய் பைத்தியக்காரா… 10 ரூபா இருந்த ஜூனியர் விகடனை 12 ரூபா ஆக்குனீங்களே… அதுக்கு நியாயமா செய்தி குடுக்க வேண்டாமா… இப்படியா கொள்ளையடிப்பீங்க.. ? ”
”சரி.. புது இந்து எப்படிப்பா இருக்கு ? ” என்றார் கணேசன்.
”உங்க பத்திரிக்கைக்குதான் போட்டியா இருக்கும்னு சொல்றாங்கன்ணே.. ”
கணேசன் அண்ணா சாலையில் உள்ள நாளிதழில் வேலை பார்ப்பவர்.
”சரி பேப்பரை பாத்தவங்க என்ன சொல்றாங்க.. ”
”அவங்க சொல்றது இருக்கட்டும். நீங்க என்ன நினைக்கிறீங்க.. ”
”தமிழ் இந்தியா டுடேவை நாளிதழ் வடிவில் குடுக்கற மாதிரி இருக்கு. பேப்பரைப் பாத்ததும் ஒரு அயற்சியை ஏற்படுத்துது. காலையில அவசரமா கிளம்பறவங்க படிச்சுட்டு கிளம்ப முடியாது. பணியில இருந்து ஓய்வு பெற்று, சாய்வு நாற்காலியில் அமர்ந்து, ஒரு வரி விடாமல் படிக்கிறவங்களுக்குன்னே வர்ற மாதிரி இருக்கு”
”எந்தப் பத்திரிக்கையோட வியாபாரம் பாதிக்கும்னு நினைக்கிறீங்க ? ”
”தந்தி ஒரு தனி கேட்டகிரி.. அதை நெருங்கவே முடியாது. தினகரன் மாதரி வண்ணமயமா இருந்தாலும், தினகரன் மாதிரி செய்திகளை போட முடியாது. எங்க பத்திரிக்கை மாதிரியான செய்திகள் இருந்தாலும், எங்க பத்திரிக்கை பயன்படுத்துற வார்த்தைகளை இந்து பயன்படுத்த முடியாது. எங்க பத்திரிக்கை மாதிரி வெளிப்படையா, இந்துத்வா ஆதரவு நிலைபாடும், அரசாங்க ஆதரவு நிலைபாடும் அவங்க எடுக்க முடியாது”
”நீ பாத்தியாடா ” என்று பீமராஜனைப் பார்த்துக் கேட்டான்.
”பாத்தேன்.. கொஞ்சம் ஓவர் டோஸா இருக்கறது உண்மைதான். ஆனா அதே நேரத்துல, இது ஒரு மாற்று முயற்சியா இருக்கலாம் இல்லையா… இது வரை வந்த நாளிதழ்களில் இருந்து மாறுபட்டதா கொண்டு வரணும்னு நினைக்கலாம் இல்லையா.. அதை எப்படி தப்புன்னு சொல்ல முடியும் ? ”
”கொண்டு வர்றது தப்பு இல்லடா… ஆனா, இதை தினமும் செய்ய முடியுமான்னு பாத்தியா.. ? மீண்டும் மீண்டும் ஒரே எழுத்தாளர்களை வச்சு எழுதுனா, ஒரு சலிப்புத் தன்மை ஏற்படும் இல்லையா.. ? செய்திகளை அவசரமா மேஞ்சுட்டு போறதுக்குத்தான் நாளிதழ்கள்னு நம்ம மனசு பழக்கப்பட்டிருக்கு விரிவா படிக்கணும்னா, அதுக்கு வாரமிருமுறை இதழ்களும், வார இதழ்களும் இருக்குன்னு நம்ம மக்கள் மூளையில பதிஞ்சு போச்சு. அதனால, இதை எப்படி எடுத்துக்குவாங்கன்னு தெரியல.. ”
”நீ படிச்சியாடா” என்று ரத்னவேலிடம் கேட்டான்.
”பாத்தேன்.. ஃபான்ட் தினமலர் ஃபான்ட் மாதிரி இருக்கு. அதை மாற்றுவதைப் பற்றி இந்து நிர்வாகம் யோசிக்குமான்னு தெரியல. இணையதளம் ஆங்கில இந்து எப்படி இருக்கோ அதே போல வடிவமைக்கப்பட்டிருக்கு. படிக்க எளிமையா இருந்தாலும், ஆங்கில இந்துவோட மொழி பெயர்ப்புன்ற உணர்வை ஏற்படுத்துது”
”நீ சொல்லு மச்சான்” என்று வடிவேலிடம் கேட்டான்.
”அண்ணா நகர் உள்ளிட்ட பல இடங்கள்ல பேப்பர் கெடைக்கவேயில்ல. இந்து போன்ற அதிக விற்பனையாகக் கூடிய ஒரு செய்தித்தாளோட தமிழ்ப்பதிப்புல இப்படியா கோட்டை விடறதுன்னு ஆச்சர்யமா இருக்கு. மத்தபடி பேப்பரோட வடிவமைப்பு, உள்ளடக்கம் எனக்குப் பிடிச்சுதான் இருக்கு. ஏற்கனவே இருக்கிற செய்தித்தாள்கள் மாதிரியே வர்றதுக்கு எதுக்காக ஒரு புதுப் பேப்பர். பெயரும், ஒரு தமிழ்ப் பெயரோட வந்துருக்கலாம். ஆனா, காப்பிரைட் போன்ற சிக்கல்களால இந்தப் பெயர்ல வருதுன்னு நினைக்கிறேன்.”
”சரி எங்ககிட்டயெல்லாம் கேக்கறியே…. நீ என்ன நினைக்கிற ? ” என்ற தமிழிடம் கேட்டான் பீமராஜன்.
”முதல்ல, இவ்வளவு பெரிய க்ரூப்புல இருந்து வரக்கூடிய ஒரு தமிழ்ப் பதிப்பு ஒரு பெரிய லான்ச்சுக்கு ஏற்பாடு பண்ணியிருக்கணும். ஆனா இப்படி ஒரு பேப்பர் வர்றதே பல பேருக்குத் தெரியலன்ற மாதிரியான நிலைமைதான் இருக்கு.
டைம்ஸ் ஆப் இந்தியா தமிழ்நாடு பதிப்பை தொடங்கும்போது பெரிய ஸ்கூப் ஒன்னு அடிச்சாங்க. சோனியாவோட மகள் பிரியங்கா காந்தியும், ராஜீவ் கொலை வழக்குல தண்டிக்கப்பட்டு சிறையில இருக்கற நளினியும் ஒன்னா சந்திச்ச செய்தியை வெளியிட்டாங்க. அதே நாள்ல, உயர் அதிகாரிகளோட தொலைபேசி உரையாடலை டெக்கான் க்ரானிக்கிள் வெளியிட்டுச்சு.
அந்த ஸ்கூப் டைம்ஸ் ஆப் இந்தியா மற்றும் டெக்கான் க்ரானிக்கிள் நாளிதழ்கள் இரண்டுக்கும் பெரிய அளவில உதவுச்சு.
அது மாதிரியான ஒரு பெரிய ஸ்கூப்பை தமிழ் இந்து செய்திருக்கணும். அப்படி சரியா அமையலன்னா, குறைந்தபட்சம், பாராளுமன்றத் தேர்தல் குறித்து ஒரு கருத்துக் கணிப்பையாவது வெளியிட்டிருக்கலாம்.. இரண்டும் இல்லாம ரொம்ப ரொம்ப சாஃப்ட் லான்ச்சா இருக்கு. இப்படி ஒரு சாஃப்ட் லான்ச்சோட, எப்படி பேப்பரை மக்கள் கிட்ட கொண்டு சேக்கப் போறாங்கன்னு தெரியல.
அடுத்ததா, இந்தியாவுல எந்த செய்தித்தாளும், ஈபேப்பருக்கு பணம் வாங்கறதில்ல. ஆனா, இந்து மட்டும்தான் ஈ பேப்பருக்கு சந்தா செலுத்துனாதான் படிக்க முடியும்னு வச்சுருக்காங்க. இன்னைக்குத்தான் சந்தைக்கே வரக்கூடிய ஒரு நாளிதழோட தமிழ்ப்பதிப்பையும் அதோட ஈபேப்பரை சந்தா செலுத்துனாதான் படிக்க முடியும்னு வச்சுருக்கறது, மோசமான போக்கா இருக்கு. நிர்வாகத்துக்கு லாபத்தின் மேல எவ்வளவு தீவிரமான அக்கறை இருக்குன்றது புரியுது. லாபம் சம்பாதிக்கிறது முதலாளியோட இயல்பான நடவடிக்கை என்றாலும், இந்த லாபம் குறையாம பாத்துக்கறதுக்காக, அரசாங்கத்துக்கு சொம்படிக்கிற வேலையை தமிழ் இந்து செய்யுமோன்ற அச்சத்தை ஏற்படுத்துது. செய்தியாளர்களோட பெயர்களைப் போட்டு செய்தி வர்றது நல்ல ஆரோக்கியமான போக்கு. ஆனா, தினமும் செய்திக் கட்டுரைகள் குடுக்கறது எளிதான வேலை இல்ல. செய்திக் கட்டுரைகள் குடுக்கணும்ன்ற நெருக்கடியில, இல்லாத செய்திகளை செய்தியாளர்கள் உருவாக்கும் போக்கு உருவாயிடக்கூடாதோன்னும் தோணுது. எப்படி இருந்தாலும், புதிய செய்தித்தாளுக்கும் நாம வாழ்த்துக்களை தெரிவிச்சுக்குவோம்”
”நீதித்துறை செய்திகள் என்னப்பா இருக்கு ? ” என்றார் கணேசன்.
”அண்ணே… தமிழை வழக்காடு மொழியாக்கக் கோரி உயர்நீதிமன்றத்துல பகத்சிங், வேல்முருகன் மற்றும் கயல் ஆகிய வழக்கறிஞர்கள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியிருக்காங்க. 2010ம் ஆண்டு, பத்து நாட்களுக்கு மேலாக உண்ணாவிரதம் இருந்த பகத்சிங் உள்ளிட்ட வழக்கறிஞர்களை கருணாநிதி அரசோட காவல்துறை கைது செய்தது. அப்போ அந்த வழக்கறிஞர்களை சந்தித்த, அதிமுக முக்கிய பிரமுகர்களான ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர், அம்மா ஆட்சிக்கு வந்தா, உடனடியாக இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்னு உத்தரவாதம் கொடுத்தாங்க. ஆனா, ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுக்கு மேல ஆகியும், இது வரைக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கல. இந்த நிலையில, மீண்டும் இந்தப் போராட்டம் சூடு பிடிச்சிருக்கு”
2010ம் ஆண்டு 13வது நாள் உண்ணாவிரதத்தில் மயங்கிய நிலையில் பகத்சிங்
”ஏம்ப்பா.. நாம ஏற்கனவே பேசிக்கிட்டு இருந்தோமே ஞாபகம் இருக்கா.. வி.பி.ரவீந்திரன்னு ஒரு நீதிபதி, அவர் மேல நிறைய்ய ஊழல் புகார் இருக்கு.. அவரை உயர்நீதிமன்ற விஜிலென்ஸ் நீதிபதியா போட்ருக்காங்கன்னு…”
“ஆமாம்ணே… ரெண்டு மாசம் முன்னாடி பேசிக்கிட்டிருந்தோம்“
“அவரை திருநெல்வேலிக்கு மாத்திட்டாங்களாமே… தெரியுமாப்பா..? “
“கேள்விப்பட்டேன்ணே.. நீதிபதி பானுமதிதான் அந்த நபரை மாத்தி அனுப்பியிருக்காங்களாம். அதுல ஒரு பெரிய தமாஷ் நடந்துச்சுண்னே.. இந்த வி.பி.ரவீந்திரன் மேல ஏகப்பட்ட ஊழல் புகார். சென்னை சிபிஐ நீதிமன்றத்தோட நீதிபதியா இருந்த டி.ரவீந்திரன் ஒரு அருமையான நீதிபதி. அவரை உயர்நீதிமன்ற நீதித்துறை பதிவாளரா போட்ருக்காங்க. இதுக்கு முன்னாடி விஜிலென்ஸ் பதிவாளரா வி.பி.ரவீந்திரனை போட்டது, இந்த சிபிஐ நீதிபதின்னு நினைச்சுக்கிட்டு போட்டுட்டாங்க. வி.பி.ரவீந்திரன் வந்து பணியில சேந்ததும்தான் தெரியுது இவரு ஊழல் ரவீந்திரன்னு. அவரை ஒரு நாள் கூட பணியில உக்கார விடாம, மாத்தி காத்திருப்போர் பட்டியல்ல வச்சுட்டாங்க. அதுக்கப்புறம் இப்போதான் அவரை திருநெல்வேலி தொழிலாளர் நல நீதிமன்ற நீதிபதியா நியமிச்சிருக்காங்க.. “
“இப்போ சிபிஐ நீதிமன்ற நீதிபதியா போட்டிருக்கற சோமசேகர் கூட மோசமான ஆளுன்னு சொல்றாங்களே…“
“ஆமாண்ணே.. சோமசேகர் பயங்கரமான கட்டிங் பார்ட்டின்னு எல்லோருக்கும் தெரியும். அப்படிப்பட்ட நபரை, சிபிஐ நீதிபதியா எப்படி நியமிச்சாங்கன்னு யாருக்கும் புரியல. சோமசேகர் நவம்பர் 30 அன்னைக்கு ஓய்வு பெறுகிறார். அதுக்குள்ள ஏதாவது வழக்குல பெரிய அமவுன்டா கட்டிங் வாங்கிடலாம்னு அவர் நினைக்கிறார். ஆனா, அவர் நீதிமன்றத்துல, சிபிஐ வழக்குகள் எதுவும் முடியும் தருவாயில இல்ல.
ஆனா, 400 கிலோவை பறிமுதல் செய்த, சுரானா நிறுவனத்தின் மீதான வழக்கு அவர் நீதின்றத்துலதான் இருக்கு. அந்த வழக்குல குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருக்காங்க. அந்த 400 கிலோவை விடுவிச்சு உத்தரவு போட்ருவாரோன்னு சிபிஐ அதிகாரிகள் வயித்துல நெருப்பைக் கட்டிக்கிட்டு இருக்காங்க…“
“இந்த மாதிரி ஆளையெல்லாம் எப்படிப்பா சிபிஐ நீதிபதியா போட்றாங்க.. ? “
“நீதிபதி பானுமதி கவனத்துக்கு இந்த ஆளைப்பத்தின தகவல்கள் வந்திருக்காது. வந்திருந்தா நிச்சயமா போட்ருக்க மாட்டாங்க.. பாப்போம் இப்பயாவது, இவரை தூத்துக்குடி இல்லன்னா கன்னியாக்குமரிக்கு போட்றாங்களான்னு“ என்று சொல்லி விட்டு தமிழ் எழுந்தான்.
சபை கலைந்தது.