சவுக்கு தளம் தொடங்கி நான்கு ஆண்டுகள் கடந்து விட்டன. இந்த நான்கு ஆண்டுகளில் இரண்டே இரண்டு திரைப்படங்களைப் பற்றித்தான் சவுக்கு தளத்தில் எழுதப்பட்டுள்ளது. ஒன்று அங்காடித் தெரு. மற்றொன்று வழக்கு எண் 18/19. இப்போது மீண்டும் எழுத வேண்டும் என்று தூண்டிய படம் மூடர் கூடம்.
அங்காடித் தெரு மற்றும், வழக்கு எண் 18/9 கதையம்சம் உள்ள உணர்வுபூர்வமான படங்கள். மூடர் கூடம் படம் அப்படிப்பட்டதா. அப்படி என்ன அப்படத்தின் சிறப்பான கதை ? நான்கு பேர் சேர்ந்து ஒரு வீட்டில் திருடுகிறார்கள். இதில் என்ன சிறப்பு இருக்கிறது… இது என்ன அப்படிப்பட்ட புதுமையான கதையா ? என்ற கேள்விகளுக்கான விடைதான் இந்தக் கட்டுரை.
ரிசர்வாயர் டாக்ஸ் திரைப்படம், ஹாலிவுட்டில் ஒரு புதிய அலையை ஏற்படுத்தியது. அந்தப் படத்தின் கதை என்ன ? ஆறு பேர் சேர்ந்து ஒரு வங்கியை கொள்ளையடிக்கிறார்கள். ஹாலிவுட்டின் போக்கையே மாற்றிய படம் என்று புகழப்பட்ட படம் பல்ப் ஃபிக்ஷன். அந்தப் படத்தின் கதை என்ன ? நிழல் உலகத்தைச் சேர்ந்த ஒரு எட்டு கேரக்டர்களிடையே நடக்கும் கதைதான் படம். இந்த இரு படங்களையும் எடுத்த இயக்குநர் க்வென்டின் டாரன்டினோ.
க்வென்டின் டாரன்டினோ
இந்தி சினிமாவில் இசையமைப்பாளராக இருந்த விஷால் பரத்வாஜ் இயக்கிய திரைப்படம் மக்பூல். இது ஷேக்ஸ்பியரின் மேக்பெத். அடுத்து அவர் இயக்கிய படம் ஓம்காரா. இது ஷேக்ஸ்பியரின் ஒதெல்லோ நாடகத்தின் தழுவல். இதே விஷால் பரத்வாஜ் எடுத்த மற்றொரு படம் கமீனே அந்தப் படத்தில் என்ன புதுமையான கதை ? இரட்டைப் பிறவிகளான இரண்டு சகோதரர்கள் நடுவே சண்டையிட்டுக் கொண்டு இறுதியில் ஒன்றாக சேர்கிறார்கள். ஒருவன் நல்லவன். ஒருவன் கெட்டவன். இறுதியில் இருவரும் திருந்தி ஒன்று சேர்கிறார்கள்.
விஷால் பரத்வாஜ்
விஷால் பரத்வாஜைப் போலவே பாலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு, நம்பிக்கையோடு விவாதிக்கப்படும் மற்றோரு இயக்குநர் அனுராக் காஷ்யப். இரண்டு பகுதிகளாக எடுக்கப்பட்ட கேங்ஸ் ஆப் வாசிபூர் (Gangs of Wasseypur) என்ற திரைப்படங்கள், கல்ட் க்ளாசிக் என்று கொண்டாடப்பட வேண்டிய அளவுக்கு வரவேற்பை பெற்றன. இந்தப் படத்தின் கதை என்ன ? மூன்று தலைமுறையாக இரு குடும்பங்களுக்கு இடையே நடக்கும் வன்முறையான மோதல்தான் கதை. கிட்டத்தட்ட சரத்குமாரின் நாட்டாமை கதைதான்.
அனுராக் காஷ்யப்
க்வென்டின் டாரன்டினோ, விஷால் பரத்வாஜ் மற்றும் அனுராக் காஷ்யப் ஏன் கொண்டாடப்படுகிறார்கள் ? அப்படி என்ன புதுமையைச் செய்து விட்டார்கள் ? காலங்காலமாக சினிமாவில் கதை சொல்லப்பட்டு வந்த விதத்தை மாற்றி, புதிய பாதையில் சினிமாவை பயணம் செய்ய வைத்ததாலேயே இந்த இயக்குநர்கள் கொண்டாடப்படுகிறார்கள்.
க்வென்டின் டாரண்டினோ, விஷால் பரத்வாஜ் மற்றும் அனுராக் காஷ்யப் ஆகிய இயக்குநர்களின் வரிசையில் நம்பிக்கை ஏற்படுத்தும் ஒரு திரைப்படம்தான் மூடர் கூடம்.
நான்கு பேர் சந்தர்ப்ப சூழலால் காவல் நிலைய லாக்கப்பில் சந்திக்கிறார்கள். அவர்கள் நான்கு பேருக்கும் அடுத்த வேளை சோற்றுக்கே வழியில்லாத பராரிகள். அவர்கள் நான்கு பேரும் சேர்ந்து, அந்த நான்கு பேரில் ஒருவரின் உறவினர் வீட்டில் திருடலாம் என்று முடிவெடுக்கிறார்கள். வழக்கமாக காவல் நிலையத்தில் சிக்குபவனை போட்டுப் புரட்டிப் புரட்டி எடுக்கும் காவல்துறை அதிகாரிகளையே காட்டும் சினிமாவிலிருந்து மாறுபட்டு, நிஜ வாழ்வில் அபூர்வமாக நடப்பது போல அந்த இன்ஸ்பெக்டர் எந்த வழக்கும் போடாமல் அவர்களை துரத்தி விடுகிறார். போகும்போது செலவுக்கும் பணம் கொடுத்து அனுப்புகிறார். அவர்கள் நால்வரும் வெளியேறி டாஸ்மாக் பாருக்குள் தண்ணியடிப்பதில் கதை தொடங்குகிறது. நவீன், சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் படித்தவன். செண்ட்ராயன், கஞ்சா வியாபாரி. குபேரன்,சமுதாயத்தால் முட்டாள் என ஒதுக்கப்பட்டவன்.வெள்ளை, அனாதையாக வேலைவாய்ப்புக்காக சென்னைக்கு வந்து இறங்குபவன்.
இவர்கள் நான்கு பேரையும் வைத்து, இவர்கள் நான்கு பேரும் கஷ்டப்பட்டு(?) முன்னேறும் அரைத்த மாவு சென்டிமென்ட் கதை உருவாக்கலாம். நான்கு பேரும் ஆளாளுக்கு ஒரு பெண்ணை காதலிப்பதாக வைத்து ஆளுக்கொரு டூயட் வைக்கலாம். எவ்வித பொறுப்புணர்வும் இல்லாமல் படம் நெடுக லொள்ளு சபா டைப் காமெடிகளை மட்டுமே வைத்து படமெடுக்கலாம். இன்னும் நூற்றுக்கணக்கான தமிழ் சினிமாவின் வழக்கமான சாத்தியக்கூறுகள் உள்ளன.
ஆனால் அந்த வழிகளைக் கையாளாமல் புதிய முறையில் பார்வையாளர்களையும் கவரும் விதமாகக் கதை சொல்லியதில்தான் இத்திரைப்படம் மாறுபட்டு நிற்கிறது. திரைக்கதையின் வடிவம் செம ஃப்ரெஷ். ஒவ்வொரு முக்கிய பாத்திரத்துக்கும் முன் கதையாக படத்தின் பல்வேறு இடங்களில் ஃப்ளாஷ் பேக்குகள். ஒவ்வொரு ஃப்ளாஷ் பேக்கிற்கும், இந்த சிறிய பட்ஜெட்டிற்குள்ளும் சினிமாவின் பல்வேறு யுக்திகளை உபயோகப்படுத்திருப்பதும் அவை ரசிக்கும்படியாகவும் இருப்பதும் தான் ஹைலைட். படத்தில் நடித்திருக்கும் நாய்க்குக் கூட பாடலுடன் முன்கதை.(இந்த ஃப்ளாஷ் பேக்கும் நவீனின் ஃப்ளாஷ் பேக்கும் இப்போது வெட்டப்பட்டுள்ளது வருத்ததிற்குறிய விஷயம்)
வீட்டுக்குள் திருடப் புகுந்ததிலிருந்து கதை விறு விறுவென்று நகர்த்தப்பட்டிருக்கிறது. அந்த வீட்டிற்குள் இருக்கும் கணவன், மனைவி. இரண்டு மகள்கள். ஒரு மகன். அந்த வீட்டுக்குள்ளே வேறு ஒரு காரணத்துக்காக திருட வந்த இன்னொரு திருடன். என்று முதல் பாதி பரபரப்பாக எடுக்கப்பட்டிருக்கிறது. தொடக்கத்தில் வந்தவர்கள் யாரென்று தெரியாமல், பணக்காரத் திமிரோடு குடும்பமே அந்த நாலு பேரையும் வேலை வாங்குகையில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற பரபரப்பை ஏற்படுத்துகிறது. அனால் இந்த பரபரப்புகளுக்கு திடீர் திருப்பங்கள் என்று செயற்கையாக எதையும் புகுத்தாமல் திரைக்கதையில் தனது சாகசத்தைக் காட்டியிருக்கிறார் இயக்குநர் நவீன்.
மூடர் கூடம் என்ற தலைப்பை முக்கிய கதாபாத்திரங்களாக வரும் நால்வருமே அடிக்கடி வெளிக்காட்டுகிறார்கள். நவீனின் கதாபாத்திரம் அந்த நான்கு பேருக்கும் தலைவனாக வழி நடத்துபவனாக நடந்து கொள்கிறது.அந்த கதாபாத்திரத்தின் இறுக்கமான முகம். உணர்ச்சிகளே இல்லாத டயலாக் டெலிவரி. ஆனால், இப்படி உணர்ச்சிகளே இல்லாத நவீனின் கதாபாத்திரம் பேசும் பல வசனங்களின் மூலமாக சமுதாய அவலத்தை புரிந்து கொள்ளவும் அதே சமயத்தில் பல இடங்களில் வெடிச்சிரிப்பும் ஏற்படுகிறது. இடைவேளைக்குப் பிறகு மேலும் சில பாத்திரங்கள் அறிமுகமாகின்றன. கேங்ஸ் ஆப் வாசிப்பூர் திரைப்படத்தில் வரும் சிறு சிறு பாத்திரங்கள் கூட முக்கியப் பங்கு வகித்து, படத்தின் சிறப்பைக் கூட்டுவது போலவே, இந்தப் படத்திலும் வரும் அத்தனை பாத்திரங்களும், சிறிது நேரமே வந்தாலும், திரைக்கதையின் விறுவிறுப்பைக் கூட்டுவதோடு, படத்தை சுவையுள்ளதாக ஆக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கேரக்டருக்கும் நபர்களைத் தேர்வு செய்யும் பணியை இயக்குநர் நவீன் மிகுந்த சிரத்தையோடு, மிக மிக கவனமாக செய்திருக்கிறார். இறுதிக் காட்சிகள் எதிர்ப்பார்த்தபடியே இருந்தாலும் கூட, இது ஏற்கனவே பார்த்ததுதானே, அல்லது தெரிந்ததுதானே என்ற அயர்ச்சி சிறிதும் ஏற்படவில்லை.
சென்ட்ராயன், நவீன், ரஜாஜ் மற்றும் குபேரன் சிறப்பாக நடித்துள்ளார்கள் என்று சொல்வது, அந்தத் திரைப்படத்தில் நடித்துள்ள மற்றவர்களை குறைத்து மதிப்பிடுவதாகும். ஃபோனில் பேசும் சிறு குழந்தை, நாய் உள்ளிட்ட அனைவரையும் இத்தனை சிறப்பாக நடிக்க வைத்த பெருமை, இயக்குநர் நவீனையே சாரும். குறிப்பாக சென்ட்ராயனிடம் இயக்குநர் வாங்கிய வேலை மலைக்க வைக்கிறது. சென்ட்ராயனுக்கு இது ஒரு life time character. பாத்திரப் படைப்புக்கு அடுத்ததாக, குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது இசை. க்வென்டின் டாரன்டினோ திரைப்படங்களில் இசைக்கு கொடுக்கப்படும் அதே முக்கியத்துவம் இத்திரைப்படத்திலும் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த திரைக்கதையை மேலும் செழுமையூட்டும் விதத்தில் இசையமைத்துள்ளார் நடராஜன் சங்கரன். இவரும் இயக்குநர் நவீனும் ஒன்றாக பணியாற்றி, ஒன்றாக வேலையை விட்டு, ஒன்றாகவே திரைத்துரையில் வாய்ப்பு தேடியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் முதுகெலும்பாக அமைந்துள்ள வசனங்களை தனித்தனியாக சொல்ல இயலாது. அது படம் பார்க்கும் அனுபவத்தை குறைக்கும். திரைப்படம் முடிந்து வருகையில் தமிழில் ஒரு அற்புதமான இயக்குநர் உருவாகியுள்ளார் என்ற நிறைவு இருந்தது.
இயக்குநர் நவீன் பற்றி கொஞ்சம்..
ஒரு பொறியாளர். தமிழகத்தில் உள்ள ஈஐடி பாரி நிறுவனத்தில் பணியாற்றிய பின்னர் சில காலம் டெல்லியில் ஹார்லிக்ஸ் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். நல்ல சம்பாத்தியம் இருந்தும், சினிமாவின் மீதான தணியாத காதலால் குடும்பக் கடமைகளை முடித்து விட்டு தமிழ்த் திரையுலகை நாடி வருகிறார். ஒரு சில படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றிய பின்னர், தனியாக கதை பண்ண வேண்டும் என்று முடிவெடுத்து உருவாக்கிய ஸ்க்ரிப்ட்தான் மூடர் கூடம். இப்படிப்பட்ட கதையை சில தயாரிப்பாளர்களிடம் சொல்லியிருக்கிறார். பல தயாரிப்பாளர்கள் என்ன சார் இது.. காமெடி படம்னு சொன்னீங்க.. காமெடியே இல்ல ? என்று கேட்டிருக்கிறார்கள். சிலர், சார்… எடுத்தவுடனே, டாஸ்மாக் பார்லயே குடித்து விட்டு டான்ஸ் ஆடுவது போல ஒரு குத்துப்பாட்டு வையுங்களேன் என்றிருக்கிறார்கள். தன் கதையை சிதைக்க விரும்பாத நவீன், தன் சகோதரி, அவர் கணவர் ஆகியோரிடம் பணம் வாங்கி படத்தை சொந்தமாக எடுப்பது என்று முடிவு செய்கிறார். படத்தை எடுக்கத் தொடங்கியதும் பல்வேறு சிரமங்கள் ஏற்படுகின்றன. பண நெருக்கடி மிரட்டுகிறது. ஆனால் அதிர்ஷ்ட வசமாக நண்பர்கள் செய்த உதவியால் ஒரு வழியாக படத்தை முடிக்கிறார். அவர் இயக்குநராக பணியாற்றிய பாண்டிராஜே இந்தப் படத்தை வெளியிட முடிவெடுத்து வெளியிட்ட பிறகுதான் இன்று வெள்ளித்திரையில் மிளிர்கிறது மூடர் கூடம்.
க்வென்டின் டாரன்டினோவின் பல்ப் ஃபிக்ஷன் திரைப்படத்தில் முதல் காட்சியில் பம்ப்கின் என்ற பாத்திரமும் ஹனி பன்னி என்ற பாத்திரமும் ஒரு ஹோட்டலில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்பார்கள். அந்தக் காட்சியில் மொத்தம் நாற்பது வார்த்தைகள் வந்தால் 35 வார்த்தைகள் கெட்ட வார்த்தைகளாக இருக்கும். குற்றத்தில் ஈடுபடும் நிழல் உலகத்தைச் சேர்ந்தவர்கள் அப்படித்தான் பேசுவார்கள். இதே போல கஞ்சா வியாபாரம் செய்யும், சென்ட்ராயன் கஞ்சா வாங்க வருபவர்களிடம் இப்படித்தான் பேசுகிறான். ஆனால், அந்த வார்த்தைகள் அனைத்தும், ம்யூட் செய்யப்பட்டிருக்கின்றன. அதே போல, சென்ட்ராயனை அறிமுகப்படுத்தும் காட்சியில் சென்ட்ராயன் கஞ்சா சிகரெட்டை தயார் செய்யும் காட்சியும் அப்படியே தூக்கப்பட்டிருக்கிறது.
ஏன் இந்த சமரசங்கள் செய்யப்பட்டன ? படத்துக்கு “யு” சர்ட்டிபிகேட் கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் இத்தனை சமரசம்.
ஏன் யு சர்ட்டிபிகேட் வேண்டும் ? யு சர்ட்டிபிகேட் கிடைத்தால்தான் தமிழக அரசின் வரிவிலக்கு கிடைக்கும். இப்படி வரிவிலக்கு கிடைப்பதற்காக பல்வேறு சமரசங்களைச் செய்யும்படி படைப்பாளிகள் நெருக்கடிக் குள்ளாக்கப்பட்டு வருகிறார்கள்.இது மூடர் கூடம் இயக்குநர் நவீனும் இது போன்ற நெருக்கடிக்குள்ளாக்கப்பட்டு இருப்பார் என்பதில் சந்தேகம் இல்லை. ஏ சர்டிபிகேட்டோடு எவ்வித வெட்டுக்களும் இல்லாத படமாக இது வந்திருக்க வேண்டும்.
இந்த வரிவிலக்குக்காகவே, யு சர்ட்டிபிகேட் பெற்று விட வேண்டும் என்று துடிக்கும் தயாரிப்பாளர்கள், அதை தொடர்ந்து தணிக்கைக் குழுவில் நடக்கும் அக்கிரமங்கள் பற்றி விரைவில் சவுக்கில் கட்டுரை எழுதப்பட உள்ளது
மூடர் கூடம் குழுவினருக்கு, குறிப்பாக இயக்குநர் நவீனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்கள் மீதான எதிர்ப்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் அடுத்த திரைப்படத்தை தருவதற்கு வாழ்த்துக்கள்.