r
“எல்லோருக்கும் இனிய மாலை வணக்கம்“ என்று சொல்லியபடி உள்ளே நுழைந்தான் டாஸ்மாக் தமிழ்.
“வணக்கம் வணக்கம்“ உக்காருடா. கட கட ன்னு தகவல்களைச் சொல்லு“ என்றான் பீமராஜன். ரத்னவேல், கணேசன் மற்றும் வடிவேல் சிரித்தபடியே தமிழை வரவேற்றனர்.
“டெல்லியிலேர்ந்து ஆரம்பிப்போமா ? “ என்று கேட்டு விட்டு பதிலுக்குக் காத்திராமல் தொடங்கினான் தமிழ்.
“இந்தியாவின் முன்னாள் ராணுவத் தலைமைத் தளபதி வி.கே.சிங் மேல பெரிய புகார் எழுந்திருக்கே கவனிச்சீங்களா ? “
“ஆமாம்டா.. அவர் ராணுவத்துல ஒரு ரகசிய அமைப்பை உருவாக்கினார். அந்த ரகசிய அமைப்பை வைத்து, காஷ்மீர் அரசாங்கத்தை கவிழ்க்க முயற்சி பண்ணார், 8 கோடி ரூபாய் ரகசிய நிதியை இதற்காக செலவு பண்ணார். இப்போதைய ராணுவத் தளபதி பிக்ரம் சிங்கை அந்தப் பதவிக்கு வர விடாம இருக்க முயற்சி பண்ணார்ன்னு பல புகார்கள் எழுந்திருக்கே…“
“அதோட பின்னணி தெரியுமா ? “
பாதுகாப்பு அமைச்சர் அந்தோணியுடன் வி.கே.சிங்
“அவர் நரேந்திர மோடியோட ஒரே மேடையில இருந்தார்னு சொல்றாங்க.. “
“அப்படித்தான் பிஜேபி சொல்லிக்கிட்டு இருக்கு. ஆனா அது உண்மை இல்ல. வி.கே.சிங் ஒரு புத்தகம் எழுதிக்கிட்டு இருக்காரு. அந்த புத்தகத்தோட பேரு “Courage and Conviction”. அந்தப் புத்தகம் இப்போ அச்சில் இருக்கு. டாட்ரா வாகனங்கள் வாங்கியதில் நடந்த ஊழல், ஆயுத பேரத்தில் சில இடைத்தரகர்கள் சிங்குக்கு லஞ்சம் கொடுக்க முயற்சி பண்ணது, அது பத்தி அவர் அனுப்பிய புகார்கள், ராணுவ அமைச்சர் அந்தோணியால கிடப்பில் போடப்பட்டது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களைப் பத்தி எழுதறாரு. அது வெளியில வந்தா, காங்கிரஸ் கட்சிக்கு பெரிய கெட்டப்பெயரா ஆகும். அந்தப் புத்தகம் வரதுக்கு முன்னாடியே, இவருக்கு கெட்ட பெயர் ஏற்படுத்திட்டா, அந்தப் புத்தகத்துல உள்ளதை யாரும் ஏத்துக்க மாட்டாங்கன்னு காங்கிரஸ் கட்சி நம்புவதோட விளைவுதான் இப்போ எழுந்திருக்கக் கூடிய இந்தப் புகார்கள். அது மட்டுமில்லாம, தற்போதைய தலைமைத் தளபதி பிக்ரம் சிங்குக்கு, மன்மோகன் சிங்கோட மனைவி குருசரண் கவுர் ரொம்ப நெருக்கம். பிக்ரம் சிங் மேல என்கவுன்டர் உள்ளிட்ட புகார்கள் எழுந்ததுல வி.கே. சிங்குக்கு பங்கு இருக்குன்னு அரசு நினைக்குது. “
தலைமைத் தளபதி பிக்ரம் சிங்
“ஏம்பா… அரசாங்கமே வி.கே.சிங் ஒரு ரகசிய யூனிட்டை உருவாக்கி பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகளின் தொலைபேசிகளை ஒட்டுக் கேட்டதாகவும், காஷ்மீர் அரசைக் கவிழ்க்க முயற்சி பண்ணதாகவும் ஒத்துகிட்டு இருக்கே..? “
“இதுதான்ணே சந்தேகத்தை ஏற்படுத்துது. ராணுவம், உளவுத்துறை, எல்லைப் பாதுகாப்புப் படை போன்ற அமைப்புகளில் இது போன்ற வேலைகள் சாதாரணமாக நடப்பது. பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் எதிரி நாட்டோட தொடர்புல இருக்காங்களான்னு ஒட்டுக் கேட்கிறது ரொம்ப சகஜம். இதை எந்த அரசாங்கமும் ஒத்துக்காது. ஆனா, முதல் முறையா ஒரு அரசாங்கமே இந்த மாதிரியான விஷயங்களை வெளிப்படையா ஒத்துக்கிறதுதான் சந்தேகத்தை ஏற்படுத்துது. வி.கே.சிங் இப்படி ஒரு ரகசிய அமைப்பை பாதுகாப்பு அமைச்சகத்துக்கும், உளவுத்துறைக்கும் தெரியாம நடத்தியிருக்க வாய்ப்பே இல்லை. ராணுவம் எப்படி எதிரிகளை கண்காணிக்குதோ, அதே மாதிரி ராணுவத்தையும், மத்திய உளவுத்துறை ஐபி மற்றும் ரா அமைப்புகள் கவனிக்கும். அந்த இரண்டு அமைப்புகளுக்குத் தெரியாம விகே.சிங் இது மாதிரியான அமைப்புகளை நடத்த வாய்ப்பே இல்லை. அப்போ அமைதியா இருந்த மத்திய அரசு, இத்தனை நாள் கழிச்சி, இப்போதான் இந்த விஷயம் தெரியும்ன்ற மாதிரி நடிக்கிறது பெரிய சந்தேகத்தை ஏற்படுத்துது. மேலும், வி.கே. சிங் இல்லன்னா, டாட்ரா வாகன ஊழல் வெளியுலகத்துக்கு வந்தே இருக்காது. அந்த ஊழல்களையெல்லாம் கண்டும் காணாமலும் இருந்த அந்தோணியும் காங்கிரஸ் அரசும் இருந்தாங்க. இப்போ திடீர்னு முழிச்சுக்கிட்ட மாதிரி நடிக்கிறாங்க.“
“பதவியில நீடிக்கிறதுக்காக காங்கிரஸ் கட்சி என்ன வேணாலும் செய்யும் போல இருக்கேடா“ என்று வியந்தான் ரத்னவேல்.
சேகர் குப்தா
“காங்கிரஸ் கட்சிதான் இந்தியாவை பல ஆண்டுகளா ஆண்டுக்கிட்டு இருக்கு. எப்படி ஆட்சியில நீடிக்கிறதுன்னு காங்கிரஸ் கட்சிக்கு தெரியாத தந்திரமா ? இதுக்கு உதவி பண்றதுக்குன்னே, டெல்லி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் ஆசிரியர் சேகர் குப்தா மாதிரியான ப்ரோக்கர்கள் இருக்காங்க. அவங்களோட வேலை, காங்கிரஸ் அரசுக்கு ஆதரவா, செய்திகளை போட்றதுதான். இந்திய ராணுவம் டெல்லியில ஆட்சியை கைப்பற்ற முயற்சி பண்ணுச்சுன்னு ஒரு செய்தி. இப்பா, ராணுவ விசாரணை அறிக்கையை வெளியிட்டு ஒரு எக்ஸ்க்ளுசீவ் செய்தி. சேகர் குப்தா கிட்டத்தட்ட ஒரு அரசியல் ப்ரோக்கர்.“
“சேகர் குப்தா ஒரு அரசியல் ப்ரோக்கர்னா, மோடியோட அரசியல் ப்ரோக்கர் தீவிர அரசியல் காய் நகர்த்தல்களை பண்ணிக்கிட்டு இருக்காரு…”
”அது யாருடா… ? ”
”நரேந்திர மோடியோட செயலாளர் கே.கைலாஷ்நாதன் ஐஏஎஸ். ”
”மோடியோட செயலாளர் எப்படி அரசியல் காய் நகர்த்தல்களில் ஈடுபடு முடியும்.. ? ” என்று வியப்பாகக் கேட்டான் ரத்னவேல்.
”கைலாஷ்நாதன் ஐஏஎஸ் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். இவர் தாய்மொழி மலையாளம். ஆனா, தமிழகத்தில் பிறந்தவர். குஜராத் கேடர் ஐஏஎஸ் அதிகாரியா இருந்தார். இந்த வருஷம் மே 31ல் ஓய்வு பெற்றார். ஓய்வுக்குப் பிறகு, முதலமைச்சரின் முதன்மைச் செயலாளரா நியமிக்கப்பட்டார். இந்த கைலாஷ்நாதன், தமிழகத்தில் மும்மையைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் மூலமா ஒரு ரகசிய சர்வேயை நடத்தியிருக்கார். அந்த சர்வேயோட முடிவுகளின்படி, பிஜேபி மதிமுக மற்றும் தேமுதிக வோட இணைந்து தேர்தலில் போட்டியிட்டா, கன்னியாக்குமரி, சென்னை மத்தி, தென் சென்னை, வேலூர், கிருஷ்ணகிரி, திருச்சி, சேலம், கோவை மற்றும் திருப்பூரில் வெற்றி வாய்ப்பு பலமா இருக்கு. தேமுதிகவோட 10 சதவிகித வாக்குகள் மற்றும் பிஜேபியோட வாக்குகள் சேந்தா இந்த தொகுதிகளில் ஜெயிக்கும் வாய்ப்பு இருக்குன்னு அந்த சர்வே முடிவுகள் சொல்லுது. இந்த கைலாஷ்நாதன், தமிழக பிஜேபி தலைவர்கள் அத்தனை பேரோடவும் ரொம்ப நெருக்கமா இருக்கார்”
கைலாஷ் நாதன் மற்றும் மோடி
”இதெல்லாம் ஜெயலலிதாவுக்குத் தெரியுமா ? ” என்று கேட்டான் வடிவேல்.
”ஜெயலலிதாவுக்கு தெரியுமா தெரியாதான்னு தெரியலை. ஆனா, இந்த அரசுல இருக்கற பல ஐஏஎஸ் அதிகாரிகளோட இந்த கைலாஷ்நாதன் ரொம்ப நெருக்கம் பாராட்றார். மலையாள பத்திரிக்கையாளர்கள், மற்றும் அதிகாரிகளோட நெருக்கமா இருக்கார் கைலாஷ். முதல்வரோட செயலாளர் ஷீலா ப்ரியா, முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி, சாந்தா ஷீலா நாயர், சென்னை மாநகர ஆணையாளர் ஜார்ஜ் போன்ற பல்வேறு அதிகாரிகளோட நெருக்கமா இருக்கார்.
ஜெயலலிதா இடது சாரிகளோட மட்டும்தான் கூட்டணி வைக்கப்போறாங்கன்ற தகவல் பரவி வரும் நிலையில் தனிக் கூட்டணி அமைப்பது பிஜேபிக்கு சாதகமா இருக்கும்னு கைலாஷ் அறிக்கை கொடுத்திருக்கார். ”
”அவர் ஐஏஎஸ் அதிகாரியா, பவர் ப்ரோக்கரா ? ”
”இதுல என்ன சந்தேகம்.. ? அவர் நிச்சயமா பவர் ப்ரோக்கர்தான். அதனாலான் மோடி அவரை பக்கத்துல வச்சுருக்கார் மோடி பிரதமராயிட்டா, நாமதான் பிரதமரின் செயலாளர்ன்ற நினைப்புலயும் இருக்கார்.”
”அம்மா குடிநீர் விற்பனை எப்படிடா இருக்கு… மக்கள் கிட்ட ஏக வரவேற்பாமே… ? ”
”அம்மா குடிநீருக்கு வரவேற்பு இருக்கறது உண்மைதான். இப்போ இருக்கிற டிமான்டை பாத்துட்டு, இன்னும் 9 ப்ளான்ட்டுகள் போட்ற திட்டம் வச்சுருக்காங்க. இந்த திட்டத்தால, மக்களை விட அமைச்சர்தான் அதிகம் பயனடைஞ்சிருக்கார். ”
”யாரு செந்தில் பாலாஜியா ? ”
”அவரேதான்.. செந்தில் பாலாஜி மேல ஏகப்பட்ட புகார்கள். எப்போ தூக்கப்படுவாருன்னு தெரியாத நிலைமை இருந்துச்சு. ஆனா, 85 நாட்கள்ல இந்த திட்டத்தை செயல்படுத்தி வெற்றிகரமா நடத்திட்டாரு. செந்தில் பாலாஜி அமைச்சரான பிறகு கிட்டத்தட்ட 300 ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் பணியில சேர்க்கப்பட்டிருக்காங்க. ஒவ்வொருத்தரும் தலா 2 லட்சம் குடுத்துருக்காங்க. எலெக்ட்ரானிக் போர்டுகள் அமைக்கிறதுல இருந்து, போக்குவரத்துத் துறை டெண்டர்கள் பலவற்றில் செந்தில் பாலாஜி வசூல் வேட்டை நடத்தியிருக்காரு. ஆனா, இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டதால, அவரை அம்மா கண்டுக்க மாட்டாங்கன்னு அவர் நம்பறாரு..”
”ஓ.பன்னீர் செல்வத்துக்கு உடல் நிலை சரியில்லையாமே… ? ” என்று அடுத்த அமைச்சரின் ஜாதகத்தை புரட்டினான் வடிவேல்.
”ஆமாம் மச்சான். போன வாரம் ரெண்டு நாள் ஓ.பன்னிர்செல்வம் அப்போல்லோ மருத்துவமனையில அனுமதிக்கப்பட்டிருந்தார். உயர் ரத்த அழுத்தம்னு காரணம் சொல்றாங்க. பன்னீர் மேல குவியும் புகார்கள் காரணமா ஜெயலலிதா அவர் மேல எப்போ வேணாலும் நடவடிக்கை எடுப்பாங்கன்னு பல்வேறு ஊடகங்களில் வந்த செய்திகள் காரணமா கடுமையான பதட்டத்துல இருக்காரு. அவரும் அவர் மகன் ஓ.பி.ரவீந்திரநாத்தும் சேந்துக்கிட்டு, முதல்வரோட செயலாளர் ராம் மோகன ராவ் மூலமா, பிஆர்பி க்ரானைட்ஸ் நிறுவனத்திடம் பல கோடி வாங்கிய விவகாரமும் ஜெயலலிதா காதுக்குப் போயிருக்கு. இதனால பன்னீர் அண்ணன் பதட்டத்துல இருக்காரு.”
”அப்போ மதுரை மாவட்ட ஆட்சியர் அன்சுல் மிஸ்ராவை மாத்துனதுல பன்னீர் அண்ணனுக்கு பங்கு இருக்கா ? ”
”அன்சுல் மிஸ்ராவை மாற்றியதில், பன்னீரும், அவர் மகன் ரவீந்திரநாத்தும், ராம் மோகன ராவும் பெரிய அமவுன்டை அடிச்சுட்டாங்கன்னு உளவுத்துறை அறிக்கை அனுப்பியிருக்காங்க.
தேனி மாவட்டம் வீரநாயக்கன் பட்டி கிராமத்துல ஒரு மலையவே பேத்து காணாம அடிச்சுட்டாங்க. அந்த மலையை வெட்டி கடத்துனதுல, ஓ.பன்னீர் செல்வத்துக்கு தொடர்பு இருக்கறதா சொல்றாங்க. இது சம்பந்தமா ஒரு இணையதளம் விரிவா செய்தி வெளியிட்டிருக்கு. இந்தப் புகார் மீதும் விசாரணை நடக்கிறதா சொல்றாங்க.”
”தலைமைச் செயலக செய்திகள் இருக்கா மச்சான் ” என்றான் ரத்னவேல்.
”நெறய்யவே இருக்கு.. தலைமைச் செயலகத்துல புதுசா ஒரு பத்திரிக்கை ஆசிரியர் உருவாயிருக்கார். ”
”யாரு அந்த பத்திரிக்கை ஆசிரியர்… ? தமிழரசு பத்திரிக்கையோட ஆசிரியரா ? ”
”அட இல்லடா.. முதல்வரோட செயலாளர் ராம் மோகன ராவ்தான் அந்த பத்திரிக்கை ஆசிரியர். விஜயகாந்தைப் பத்தி செய்திகள் வர்ற பத்திரிக்கைகளின் முதலாளிகளை அழைத்துப் பேசறது, அரசுக்கு எதிரா செய்திகள் போட்ற பத்திரிக்கைகள் மேல வழக்கு போட்றது, செய்தி ஆசிரியர்களை கூப்புட்டு மிரட்றது, இந்த வேலைகளை ராம் மோகன ராவ் தொடர்ந்து செய்துக்கிட்டு இருக்கார்.
இவரை மாதிரியே இன்னொரு எடிட்டர், முதல்வராட இன்னொரு செயலாளர் ராமலிங்கம். இந்த ராமலிங்கம் சொல்லித்தான் வேலூர் மாவட்ட ஆட்சியர் டைம்ஸ் நவ் தொலைக்காட்சி மேல வழக்கு தொடர நடவடிக்கை எடுத்திருக்கார். ஒரு மாசத்துக்கு முன்னாடி, வேலூர் அரசுப் பள்ளியில, மாணவர்களுக்காக வைக்கப்பட்டிருந்த முட்டைகளில் சில அழுகியிருக்கு, தவறுதலா இது மாணவர்களுக்கு வழங்கப்பட்டால், பெரும் ஆபத்து நிகழும்னு டைம்ஸ் நவ் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டது. அந்த செய்தியை ஒட்டி, மாவட்ட ஆட்சியர் சங்கர் உடனடியா நேரில் சென்று ஆய்வு நடத்தி, இரண்டு சத்துணவு ஊழியர்களை பணி இடைநீக்கம் செய்தார்.
இந்த செய்தியை வெளியிட்டதுக்காக, டைம்ஸ் நவ் செய்தியாளர், அதன் ஆசிரியர், தலைமை ஆசிரியர் அர்னப் கோஸ்வாமி ஆகியோர் மீது, அரசு வழக்கு தொடுத்திருக்கு. ஜெயலலிதாவே சும்மா இருந்தாலும், கூட இருக்கற ராம் மோகன ராவ் மாதிரியான அதிகப்பிரசங்கிகள் தேவையில்லாம அவதூறு வழக்கு போடலாம்னு தூண்டி விட்றாங்க.
”சரி.. இப்படிப்பட்ட அதிகாரிகளை ஏன் ஜெயலலிதா நம்பறாங்க.. ? ”
ராம் மோகன ராவ் ஐஏஎஸ்
”சும்மாவா சரக்கு உள்ள ஆளாச்சே ராம் மோகன ராவ்… சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பா பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணும்னு ஏன் ஜெயலலிதா அடம் பிடிக்கிறாங்க தெரியுமா ? செப்டம்பர் 30 தீர்ப்பு ஜெயலலிதாவுக்கு ஆதரவா முடியறதுக்கு மொத்தம் 350 கோடி பேரம் நடந்திருக்கு. அதுல 50 கோடி பவானி சிங்குக்கு. இந்த டீலை முடிச்சுக் கொடுத்தவர் ராம் மோகன ராவ்தான். ”
”அப்போ நல்ல அதிகாரிதான்.. ”
”அங்கதான் தப்பு பண்ற. சித்தூர் நீதிமன்றத்தில், அழகிரி வழக்கை முடிச்சுக் கொடுத்ததும் இதே ராம் மோகன ராவ்தான். இந்த விஷயம் ஜெயலலிதாவுக்கு தெரியுமான்னு தெரியல..
இவரை மாதிரி இன்னொரு எடிட்டர் செய்தி விளம்பரத்துறை செயலாளர் ராஜாராமன் ஐஏஎஸ். இவர் எந்த அளவுக்கு செய்தி ஆசிரியரா இருக்காருன்னா, அரசுக்கு சொம்பா இருக்கற நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையில, ஒவ்வொரு செய்திகளும், எந்த இடத்துல வரணும், என்ன சைஸ்ல வரணும்னு முடிவு பண்றார். இவரோட தயவுலதான் பத்திரிக்கைகளுக்கு விளம்பரம் கிடைக்கும்ன்றதால எல்லா பத்திரிக்கைகளும் சகிச்சுக்கிட்டுப் போகுது.
துணை இயக்குநரா இருக்கிற உமாபதி வசூல் மன்னனா இருக்காராம். பெரும்பாலான அமைச்சர்கள்கிட்ட, ஜெயா டிவி பேரைச் சொல்லி வசூல் வேட்டையில ஈடுபட்றாராம். ஏற்கனவே பி.ஆர்.ஓவா இருந்த ராஜா மாற்றப்பட்டதும் அதுல இருந்து வேற பிஆர்ஓ நியமிக்கப்படாத காரணத்தால இப்போ உமாபதியோட ராஜ்யம்தான்.
சமீபத்துல, தின இதழ் நாளிதழில், விஜயகாந்த் பிறந்தநாளை ஒட்டி சிறப்பு மலர் வெளியிட்டாங்க. அதுக்கு விஜயகாந்த் ஒரு பெரிய தொகையை கொடுத்திருக்காரு. அது எப்படி விஜயகாந்தைப் பத்தி செய்தி வெளியிடலாம்னு ராம் மோகன ராவ், அந்த பத்திரிக்கை முதலாளிக்கு பேசி ரொம்ப சத்தம் போட்டிருக்கார்.. ”
”சரி.. அந்த முதலாளி ஏன் இதையெல்லாம் கேக்கறாரு ? ”
”அப்புறம் கேக்காம என்ன பண்ணுவாரு ? மருத்துவக் கல்லூரி நடத்தறவன் எவன் யோக்கியமா நடத்தறான். வருமான வரி கட்டாம, வருமான வரித்துறை சோதனை நடத்தி, பல ஆவணங்களை அள்ளிக்கிட்டு போயிருக்காங்க. அதுக்குப் பிறகு இப்போதான் போயி 60 கோடி ரூபாயை வருமான வரியா செலுத்துனாங்க.
மீனாட்சி மருத்துவக் கல்லூரியோட இன்னொரு கல்லூரி, முத்துக் குமரன் மருத்துவக் கல்லூரி. இந்தக் கல்லூரி கட்டறதுக்கு இன்னைக்கு வரைக்கும் சிஎம்டிஏ அனுமதி வாங்கல. இது தவிர பல்வேறு நில ஆக்ரமிப்புகள் இருக்கு.. இத்தனை ஓட்டைய வச்சுக்கிட்டு, எப்படி அரசுக்கு எதிரா செய்தி போடுவாங்க…. ?
இதே ராம் மோகன ராவ்தான், விஜயகாந்தோட கேப்டன் செய்திகள் தொலைக்காட்சி, அரசு கேபிள் கார்ப்பரேஷனோட எந்த பிரிவுலயும் தெரியக்கூடாதுன்னு உத்தரவு போட்டது. இந்த மாதிரி அறிவுகெட்ட அதிகாரிகளாலதான் ஒவ்வொரு முறையும் ஜெயலலிதாவுக்கு கெட்ட பேர் ஏற்படுது.. இந்த முறையும் அதேதான் நடந்துக்கிட்டு இருக்கு.
இது மட்டுமில்லாம, தின இதழ் பத்திரிக்கையை தொடர்ந்து கவனிச்சிக்கிட்டு வந்தீங்கன்னா, கப்பல் துறை அமைச்சர் ஜி.க்கே.வாசனைப் பத்தி நிறைய்ய செய்திகள் வர்றதை பாக்க முடியும்”
”ஆமா நானும் பாத்திருக்கேன்.. வாசன் வந்தாரு, வாசன் பான் பராக் போட்டாரு… வாசன் பாத்ரூம் போறாரு.. வாசன் வாழக்கா பஜ்ஜி சாப்பிட்றாருன்னு ஏகப்பட்ட செய்திகள் வருதே.. ”
”கடல்சார் பல்கலைக்கழகத்தோட இயக்குநரா இருக்கிறவர் விஜயன். இந்த விஜயன் கடல்சார் பல்க்கலைகழகத்தோட துணை வேந்தரா இருந்தப்போ, அவர் மேல வருமானத்துக்கு அதிகமா சொத்த சேர்த்த வழக்கு பதிவு செய்யப்பட்டுச்சு. சிபிஐ இந்த வழக்கை விசாரிச்சு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யறதுக்காக, மத்திய அரசோட அனுமதி கேட்டு கடிதம் எழுதுனாங்க. இந்த அனுமதியை வழங்க வேண்டியது கப்பல்துறை அமைச்சகம். ஜி.கே.வாசன் கிட்டத்தட்ட ஒரு வருஷமா அனுமதி வழங்காம நிறுத்தி வைச்சுருக்கார். அதுக்கான கைமாறுதான் தின இதழில் வாசனைப் பற்றிய செய்திகள்”
விஜயன் மற்றும் வாசன்
”சரி மீனாட்சி கல்லூரிக்கும் விஜயனுக்கும் என்ன சம்பந்தம் ? ”
”சம்பந்தம் இல்ல.. சம்பந்தி… மீனாட்சி குழும கல்லூரிகளோட முதலாளி கல்விக் கொள்ளையன் ஏ.என்.ராதாகிருஷ்ணனும், டாக்டர் விஜயனும் சம்பந்திகள். ”
”அப்போ சோழியன் குடுமி சரியாத்தான் ஆடுது. ”
”சோ ராமசாமி ஜெயலலிதாவை சந்திச்சாரே… என்ன விசேஷம் ? ”
”பிஜேபிக்கான தூதுவராத்தான் சோ போயிருக்கார். ஆனா, அவர்கிட்ட ஜெயலலிதா பிஜேபிக்கு சேதி சொல்லி அனுப்பியிருக்காங்க. ”
”என்ன சேதிடா.. ? ”
”மோடியையும், ரஜினிகாந்தையும் சந்திக்க வைச்சு, ரஜினியை மோடிக்கு ஆதரவா பிரச்சாரத்துக்கு வரவழைக்க பிஜேபி தரப்புல கடும் முயற்சிகள் நடந்துக்கிட்டு இருக்கு. இதைக் குறிப்பிட்ட ஜெயலலிதா அப்படி ஒரு வேளை ரஜினி பிரச்சாரத்துக்கு வர்றதா இருந்தா, அதிமுகவுக்கும், பிஜேபிக்குமான உறவு பாதிக்கப்படும். இதை மோடிக்கிட்டயும் சொல்லிடுங்கன்னு சொல்லிட்டாங்க.. ”
”ரஜினிகாந்த் மேல இன்னுமா கோவமா இருக்காங்க ? ”
”ஜெயலலிதா போல ஈகோ பிடிச்ச ஒரு நபரால எப்படி ரஜினிகாந்தை மறக்க முடியும் ? அவ்வளவு சீக்கிரம் மறந்துடுவாங்களா என்ன ? ”
”சொத்துக் குவிப்பு வழக்கு என்னடா ஆச்சு ? ” என்றான் பீமராஜன்.
”ஜெயலலிதா பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணும்னு சொல்றாங்க… ”
”ஏன் இந்த பந்தம் கிந்தமெல்லாம் வேணாமாமா… ? ”
”வேணாமாம். பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணுமாம். உலகத்துலயே இல்லாத விந்தையா, ஒரு நீதிபதி பதவியில இருந்து ஓய்வு பெற்றாலும், அதே நீதிபதிதான் விசாரிக்கணும்னு உச்சநீதிமன்றத்துல மனு போட்டு இருக்காங்க. பல வருஷமா அப்பீல் செய்து, எப்போ விசாரிப்பாங்கன்னு காத்துக்கிட்டு இருக்கற லட்சக் கணக்கானவர்கள் இருக்கையில், அந்த வழக்குகளையெல்லாம் விசாரிக்காத உச்சநீதிமன்ற நீதிபதிகள், ஜெயலலிதா இப்படி கிறுக்குத்தனமா போட்ட மனுவை விசாரிக்கிறாங்க. 17 வருஷமா ஒரு வழக்கை இழுத்தடிச்சிக்கிட்டு இருக்கிற ஒரு நபர், எனக்கு இந்த வழக்கறிஞர்தான் வேணும், அந்த டவாலிதான் வேணும்னு மனு போட்றாங்க.. இதையும் உச்சநீதிமன்றம் விசாரிக்குது.. ”
”சரி.. ரியல் எஸ்டேட் சம்பந்தம் மேல ஏதோ விசாரணை நடக்குதாமே… ?”
”யாரு ஜெயலலிதா வழக்கோட விசாரணை அதிகாரி லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி சம்பந்தம் பத்திதானே கேக்கற.. ?
விசாரணை நடக்கிறது உண்மைதான். சம்பந்தம் 2002ம் ஆண்டுலேர்ந்து ஜெயலலிதா மேல நடக்கிற சொத்துக் குவிப்பு வழக்கோட விசாரணை அதிகாரியா இருக்கிறாரு. அதிமுக ஆட்சியிலயும் விசாரணை அதிகாரி.. திமுக ஆட்சி நடந்த 2006 முதல் 2011 வரையிலயும் விசாரணை அதிகாரி. திமுக ஆட்சியிலயும் ஆட்சியாளர்கள் கிட்ட நல்ல பேர் வாங்குனாரு. அதிமுக ஆட்சியிலயும் நல்ல பேர் வாங்கிக்கிட்டு இருக்காரு. இது எப்படி சாத்தியமாகும் ? இப்படிப்பட்ட பச்சோந்தியை நம்பிய அரசாங்கம் இப்போதான் இந்த ஆளு திமுகவுக்கும் தகவல் சொல்றாரோன்னு சந்தேகப்பட்றாங்க. இப்போ இவர் மேல உளவுத்துறையும், லஞ்ச ஒழிப்புத் துறையும் ரகசிய விசாரணை நடத்திக்கிட்டு இருக்காங்க. இவரோட ரியல் எஸ்டேட் பிசினெஸையும் தோண்டுறாங்கன்னு தகவல்”
”திமுகவுல என்ன நடக்குது மச்சான்.. ? இந்த வாரம் குடும்பத்துல யார் கை ஓங்கியிருக்கு… ? ” என்றான் ரத்னவேல்.
“தா.கிருஷ்ணன் கொலை வழக்குல மேல் முறையீடு தாக்கல் பண்ணதுமே அழகிரி பயந்து வெளிநாடு போயிட்டாரு. இந்த வாரம் அவர் கட்சிப் பதவிக்கு போட்டியிடல. போட்டி ஸ்டாலினுக்கும், கனிமொழிக்கும் இடையேதான். நான் போன முறை சொன்னது மாதிரி, கனிமொழியோட கை தொடர்ந்து ஓங்கிக்கிட்டே இருக்கு.
செவ்வாய்க்கிழமை, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியோட மாநில துணைப் பொதுச் செயலாளர் பதவியில் இருந்த ஷீபா, கனிமொழி தலைமையில திமுகவுல இணையறாங்க. “
ஷீபா
“சமத்துவ மக்கள் கட்சின்னா, புருஷன் பொண்டாட்டி கட்சிதானே.. ? “
“ஆமாம்பா அதே கட்சிதான். அதிமுகவோட நாடார் பிரிவு கட்சி. அந்தக் கட்சியில இருந்த ஷீபா போன வாரம் விலகுனாங்க. கட்சியில எனக்கு உரிய மரியாதை கிடைக்கலன்னு சொல்லி விலகினாங்க. இந்த ஷீபா, தலைமையில் 100 பெண்களோட கனிமொழி தலைமையில செவ்வாய்க்கிழமை காலையில இணையறாங்க. இந்த மாதிரி இணைப்பு சம்பவங்கள் மூலமா, கனிமொழியோட கை வளந்துக்கிட்டே இருக்கு. இதை ஸ்டாலின் தரப்பு செம கடுப்போட கவனிச்சிக்கிட்டு இருக்காங்க”
”இந்த கருப்பசாமிப் பாண்டியன் விவகாரத்துல என்னதாம்பா நடந்துச்சு ? ” என்றார் கணேசன்.
”அண்ணே, கருப்பசாமிப் பாண்டியன் பொம்பளை விவகாரத்துல வீக்கான ஆளுதான். அவர் வீட்டில் வேலை செய்த வேலைக்காரியிடம் சில்மிஷம் செய்த விஷயம் அவர் மனைவிக்கு தெரிஞ்சு அவங்க பிரிஞ்சுட்டாங்க. கருப்பசாமி எப்போதும் குற்றாலம் கெஸ்ட் ஹவுசுலதான் தங்குவாங்க.
கருப்பசாமிப் பாண்டியன்
அவர் மேல புகார் கொடுத்த தமிழரசி ஏற்கனவே இரண்டு முறை திருமணமானவங்க. அவங்களுக்கு கருப்பசாமிப் பாண்டியனோட ஏற்கனவே பழக்கம் இருந்திருக்கு. ஒரு வருஷத்துக்கு முன்னாடி தமிழரசியோட தம்பி திருமணத்துக்கு முக.ஸ்டாலினை வரவழைச்சு சிறப்பா நடத்துனது கருப்பசாமிப் பாண்டியன்தான். இந்த தமிழரசி குடும்பத்துக்கு பிசினெஸ் நடத்தி ஏகப்பட்ட நஷ்டம். ஊர்ல ரொம்ப கெட்ட பேரு. தமிழரசி கட்சியில பதவி வாங்குறதுக்காக, கருப்பசாமிப் பாண்டியனை சந்திக்க குற்றாலம் கெஸ்ட் ஹவுஸ் போனதாகவும், அப்போ அந்தப் பொண்ணோட அப்பாவை வெளியேறிச் சொல்லிட்டு, கருப்பசாமிப் பாண்டியன் அந்தப் பொண்ணை முத்தம் குடுக்கச் சொல்லிக் கேட்டதா சொல்றாங்க.
தமிழரசி
ஒரு அரசியல்வாதி சாயங்காலம் அஞ்சு மணிக்கு கெஸ்ட் ஹவுஸுக்கு திராவிட அரசியலைப் பத்தி விவாதிக்கவா வரச் சொல்லுவான் ? அதுவும் அவங்க அப்பாவை வெளியில போகச் சொன்னா வெளியில போற அவன் எப்படிப்பட்ட முட்டாப்பயலா இருப்பான் ? இந்தப் பொண்ணை கருப்பசாமிப் பாண்டியனோட எதிரிகளான மாலை ராஜா பயன்படுத்திக்கிட்டதா சொல்றாங்க. சென்னையில் உள்ள அறிவாலயத்துக்கு தமிழரசியை அழைச்சிக்கிட்டுப் போனதே, மாலை ராஜாதான், அதுக்கான சிசிடிவி ஆதாரங்கள் இருக்கறதா கருப்பசாமித் தரப்புல சொல்றாங்க.. ”
மாலை ராஜா
”திமுகவுல இந்த மாதிரியான நாறக் கதைகள் சகஜம்தான்.. ”
”ஏம்ப்பா தமிழ்.. நீ சொன்ன மாதிரியே பாண்டிச்சேரியோட ஐஜியை மாத்திட்டு டெல்லியில இருந்த காமராஜ் ன்ற ஐபிஎஸ் அதிகாரியை டிஜிபியா போட்டுட்டாங்களே.. ”
”அண்ணே.. டாஸ்மாக் பார்ல வேலை செய்யற பையன்.. இவனுக்கு என்ன தெரியும்னுதானே நெனச்சீங்க… ”
”ச்சே.. அப்படியெல்லாம் இல்லப்பா… உன்னோட திறமை எனக்குத் தெரியாதா.. ? ஒரே வாரத்துல நடந்துருச்சேன்னு பாராட்டிதாம்பா சொன்னேன். ”
”நானும் சும்மாதான்ணே சொன்னேன். நாராயணசாமி, புதுவை முதல்வர் ரங்கசாமியை ஆளுனர் மூலமாக கண்காணிக்கனும்னு நினைக்கிறாரு. அதுக்காகத்தான் டெல்லியில இருக்கற, காமராஜை பாண்டிச்சேரிக்கு அனுப்பியிருக்காரு. ”
”கூடங்குளம் அணு உலை என்ன நிலைமையில இருக்குடா… அடுத்த வாரம் மின்சாரம் வந்துடுமா ? ”
”மின்சாரம் வருதோ இல்லையோ… கூடங்குளம் அணு உலை ஆதரவாளர்களை ஒரு சாபம் துரத்தும்னு அந்தப் பகுதி மக்கள் நம்பறாங்க… ”
”என்னடா கதை உட்ற…? ”
”மச்சான்.. இதை அந்தப் பகுதி மக்கள் உறுதியா நம்பறாங்க. உலகத்துலயே இடிந்தகரையில உள்ள விஜயாபதியில மட்டும்தான் விஸ்வாமித்திரருக்கு கோயில் இருக்கு. அந்த மண்ணுக்கு தீமை விளைவிக்க நினைக்கும் அத்தனை பேரும் நாசமாப் போயிடுவாங்கன்னு அந்த மக்கள் நினைக்கிறாங்க.. ”
”நீ சொல்றது நம்பற மாதிரி இல்லடா” என்று அவநம்பிக்கையோடு தமிழைப் பார்த்தான் ரத்னவேல்.
”அவங்க சொல்ற ஆதாரத்தை நீயே கேளு. இந்த ஒப்பந்தம் இந்தியாவுக்கும் ஒன்றிணைந்த சோவியத் யூனியனுக்கும் இடையே போடப்பட்டது. அந்த ஒப்பந்தம் போட்ட இரண்டு வருடத்துல சோவியத் யூனியன் இருந்த இடம் தெரியாம போச்சு.
ஒப்பந்தம் கையெழுத்திட்ட ராஜீவ் காந்தி என்ன ஆனாருன்னு எல்லோருக்கும் தெரியும். கையெழுத்து போட்ட இன்னொருத்தரான கோர்ப்பச்சேவ், சோவியத் யூனியனோட கடைசி அதிபராயிட்டாரு.
1997-1998ல் இரண்டாவது ஒப்பந்தம் போட்ட தேவகவுடா கையெழுத்து போட்ட நாலாவது நாள் பதவியை இழந்தாரு. போரிஸ் எல்ட்சின் தேர்தலுக்கு முன்னாடியே பதவியை ராஜினாமா செய்துட்டு போயிட்டாரு.
கூடங்குளம் அணு உலையை வடிவமைத்த ரஷ்ய விஞ்ஞானிகள் கிட்ராப்ரெஸ், செர்கெய் ரைஸோவ், கென்னடி பான்யுக், நிக்கோலாய் ட்ரூனாவ் ஆகியோர் விமான விபத்துல ஒரே நாள்ல இறந்தாங்க. கூடங்குள அணு உலை இயக்குநர் எஸ்.கே.அகர்வால், திடீர்னு மர்ம்மான முறையில இறந்தாரு. அணு கார்ப்பரேஷனோட இயக்குநரா இருந்த எஸ்.கே.ஜெயினோட மனைவி ஒரு விபத்துல அகால மரணமடைஞ்சாங்க.
ரஷ்ய விமான விபத்து
இந்த பிரச்சினை தொடங்கிய கடந்த இரண்டு ஆண்டுகளா, சோனியாவோட உடல்நிலை மோசமடைஞ்சிருக்கு. நாராயணசாமியோட மனைவி ஒரு மோசமான விபத்தை சந்திச்சு, மயிரிழையில உயிர் தப்பினாங்க. இந்த பிரச்சினையை தீவிரமா அடக்க ஜெயலலிதா முயன்ற பிறகுதான், அவங்க மேல இருக்கற சொத்துக் குவிப்பு வழக்கு தீவிரமடைய ஆரம்பிச்சுச்சு… இடிந்தகரை மக்கள் மேல வழக்கு மேல வழக்கா போட்ட ஸ்டான்லின்ற டிஎஸ்பி, பதவி ஓய்வு பெறும் கடைசி நாளில் சஸ்பென்ட் செய்யப்பட்டார்..
இதெல்லாம் அந்தப் பகுதி மக்கள் அடுக்கும் ஆதாரங்கள்”
”நம்பற மாதிரியும் இருக்கு… நம்ப முடியாத மாதிரியும் இருக்கு” என்றான் ரத்னவேல்.
”டேய்.. அந்தப் பகுதி மக்களோட நம்பிக்கை. அத உங்க கிட்ட சொன்னேன். அவ்வளவுதான்.”
”கனிம வள குவாரிகளுக்கு அதிரடியா தடை விதிச்சிட்டாங்களே ஜெயலலிதா ? ” என்றான் வடிவேல்.
”ஆமாம் மச்சான். ஜெயலலிதாவோட நோக்கம் என்னவோ சரியாத்தான் இருக்கு. ஆனா, ஊழல் பெருச்சாளிகளான அதிகாரிகளை வச்சுக்கிட்டு என்ன பண்ணப்போறாங்கன்னு தெரியல. அதுல் ஆனந்த் ஐஏஎஸ்னு ஒரு மலை முழுங்கி மகாதேவன் இருக்கிறார். ஐஏஎஸ் அதிகாரிக்கு உண்டான அத்தனை சலுகைகளையும் அப்படியே அனுபவிக்கிறதுதான் இந்த ஆளுக்கு வேலையே. எல்காட்ல எம்.டியா இருக்கிற இந்த ஆளுக்கு மட்டும் எல்காட் நிறுவனத்தோட எட்டு கார்கள் ஓடுது. அப்படிப்பட்ட அயோக்கியன் இந்த ஆளு.
அதுல் ஆனந்த் ஐஏஎஸ்
இந்த ஆளு கடந்த இரண்டரை வருடமா கனிமம் மற்றும் சுரங்கத்துறையின் இயக்குநர் பொறுப்பை கூடுதல் பொறுப்பா கவனிச்சிக்கிட்டு இருக்கார்.. தமிழ்நாட்டுல வேற ஐஏஎஸ் அதிகாரிகளே இல்லாத மாதிரி, இந்த ஆளுக்கு கூடுதல் பொறுப்பு குடுத்துருக்காங்க. கூடுதல் பொறுப்பாவே இரண்டரை ஆண்டுகள் கனிம வளத்துறையை பாத்த முதல் ஆளா இந்த ஆளுதான் இருப்பாரு. இந்த ஆளுக்கு இந்த கூடுதல் பொறுப்பை வாங்கித் தந்ததே நம்ப வைகுண்டராஜன் அண்ணாச்சிதான். வழக்கமா ஒரு துறையோடு தொடர்பு இருக்கும் இன்னொரு துறையைத்தான் அதிகாரிகள் கூடுதல் பொறுப்பா கவனிப்பாங்க. ஆனா, அதுல் ஆன்ந்துக்கு மட்டும் சம்பந்தமே இல்லாத எல்காட்டும், கனிம வளத்துறையும் குடுத்துருக்காங்க”
”அண்ணாச்சி மேலதான் அம்மா விசாரணைக்கு உத்தரவிட்டிருக்காங்களே ? ”
”அதுல் ஆனந்த் மாதிரி முடிச்சவுக்கிகளை கனிம வளத்துறையில வச்சுக்கிட்டு இந்த அம்மா என்ன விசாரணை நடத்தப்போகுதோ தெரியலையே… ”
”சரி.. இந்த கனிமக் கொள்ளை பத்தி ஒரு புத்தகம் வருதாமே… ? ”
”வர்ற செப்டம்பர் 27ம் தேதி சென்னையில் இந்த புத்தகம் வெளியிடப் படப்போகுது. பத்திரிக்கையாளர் அன்பழகன் இந்த புத்தகத்தை தயாரிச்சிருக்கார். ”கனிமவள மாஃபியா பிடியில் தமிழகம்” ன்ற இந்த புத்தகத்தை திருச்சி வேலுச்சாமி வெளியிட்றார். கனிம குவாரிகளுக்கான லைசென்சுகள் வழங்குவதில், ஹன்ஸ்ராஜ் வர்மா, உள்ளிட்ட எத்தனை அதிகாரிகள் ஊழல் பெருச்சாளிகளா இருந்திருக்காங்கன்னு இந்த புத்தகம் வெளிச்சம் போட்டுக் காட்டப்போகுது. 13 வருஷத்துக்கு முன்னாடி வைகுண்டராஜன் குவாரி லைசென்ஸ் கேட்டு கொடுத்த விண்ணப்பத்துக்கு அதிமுக ஆட்சியில் கொடுக்கப்பட்ட அனுமதி, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும்போதே வைகுண்டராஜனுக்கு குவாரி லைசன்ஸ் கொடுக்கப்பட்ட விவகாரம், டால்மியா சிமென்ட்ஸ்க்கு முன்தேதியிட்டு அனுமதின்னு பல விவகாரங்களை இந்தப் புத்தகம் வெளிச்சம் போட்டுக் காட்டப் போகுது. ”
”வைகுண்டராஜனுக்கு சிக்கல்தானா ? ”
”அவருக்கு சிக்கல்லாம் வர்ற மாதிரி தெரியல. அவர் பணத்தை நாலா பக்கமும் வீசி அடிக்கிறாரு. ஏற்கனவே அவர்கிட்ட மாமூல் வாங்கிக்கிட்டு இருந்த ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் இன்னமும் அவருக்கு விசுவாசமாத்தான் இருக்காங்க. ஒவ்வொருத்தரும் அவருக்கு அரசாங்கத்துல நடக்கற விவகாரங்களை சொல்லிக்கிட்டுத்தான் இருக்காங்க.
அவரும், அவருக்கு எதிரா பத்திரிக்கைகளில் வரும் செய்திகளை கவனிச்சு, அதை எழுதும் பத்திரிக்கையாளரை குளிப்பாட்டும் வேலையில் இறங்கியிருக்கார். அவரோட வழக்கறிஞர் ரவீந்திரன் துரைசாமிதான் இந்த வேலையை செஞ்சுக்கிட்டு இருக்கார். புதுசா ஒரு நாளிதழும், ஒரு தொலைக்காட்சி சேனலும் தொடங்கும் வேலையில தீவிரமா இருக்கார். கல்விக்கொள்ளையர்கள் பத்திரிக்கையாளர்களா ஆகும்போது, கனிமக் கொள்ளையனும் பத்திரிக்கையாளரா ஆகணும்னு நினைக்கிறது இயல்புதானே.. ? ”
”காவல்துறை செய்திகள் சொல்லப்பா ” என்றார் கணேசன்.
”அண்ணே இந்துத் தலைவர்கள் கொலை வழக்கில் தேடப்படும் குற்றவாளிகளான பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் மற்றும் போலீஸ் பக்ருதீனை என்கவுன்டர்ல கொலை செய்ய காவல்துறை முடிவு செய்திருக்கறதா சொல்றாங்க. என்கவுன்டர்ல இவங்களை கொலை செய்ய முடிவெடுத்திருக்கிறதா சொல்றாங்க. ”
”என்னப்பா சொல்ற… இது இஸ்லாமிய சமூக மக்களை ரொம்ப கொதிப்படையச் செய்யுமே… ”
”செய்யும்தான்.. ஆனா, காவல்துறை அதிகாரிகளுக்கு இது எப்படித் தெரியும்… சுட்டுட்டா தொல்லை விட்டுச்சுன்னு நினைக்கிறாங்க… ”
”ஐபிஎல் விவகாரத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்போறதா சிபி.சிஐடி சார்பில் அறிக்கை விட்டாங்களே ? ”
”ஆமா குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்போறோம்.. குருநாத் மெய்யப்பன் மேல எந்த ஆதாரமும் இல்லன்னு சொல்றாங்க. ஆனா மும்பை போலீஸ் குருநாத் மெய்யப்பன் மேல, குற்றப்பத்திரிக்கை தாக்கல் பண்ணியிருக்காங்க.. சிபி.சிஐடி எந்த லட்சணத்துல விசாரிக்குது பாத்தியா ? ”
”கமிஷனர் எப்படி இருக்காரு ? ”
”கமிஷனர் நல்லாத்தான் இருக்காரு. ஆனா, அவரை தூக்கிட்டு ஆஷிஷ் பெங்காராவை சென்னை மாநகர ஆணையாளரா ஆக்கிடணும்னு வடநாட்டு அதிகாரிகள் துடிக்கிறாங்க.. ”
”ஏன் அப்படி ? ”
”வட இந்திய லாபி அவ்வளவு பவர்ஃபுல்லா இருக்கு. ஜார்ஜை எப்படியாவது மாத்திடணும்னு தீயா வேலை செய்யறாங்க. ”
”அது நடக்குமா என்ன ? ”
”சொல்ல முடியாது. இப்போதைய நிலைமையில வட இந்திய லாபி ரொம்ப அதிகாரத்தோட இருக்கு. உளவுத்துறை ஐஜியா இருக்க அம்ரேஷ் பூஜாரி இந்த லாபிக்காக தீவிரமா வேலை செய்யறார். பூஜாரி, ஐபிஎல் விவகாரத்துல கூட புகுந்து விளையாடியிருக்கார். இது சம்பந்தமா சவுக்கு தளத்தைச் சேர்ந்தவங்க விரிவா விசாரிச்சிக்கிட்டு இருக்காங்க.. ”
”மச்சான் நீதித்துறை செய்திகள் சொல்லுடா… ” என்றான் பீமராஜன்.
”நீதித்துறை பத்தி சொல்லணும்னா வசூல் ராஜா பிஏபிஎல் பத்திதான் சொல்லணும். ”
”என்னடா சொல்ற… வசூல் ராஜா எம்பிபிஎஸ் தான் கேள்விப்பட்டிருக்கேன். இது என்ன பிஏபிஎல் ? ”
”சென்னை மாநகர பெருநகர தலைமை நீதித்துறை நடுவர், மாண்புமிகு கோபால் இருக்காரே தெரியுமா ? ”
”ஆமாம்டா போன வாரம் நாம கூட பேசிக்கிட்டு இருந்தோமே… தயாளு அம்மாளை அவர்தானே விசாரிச்சிக்கிட்டு இருக்கார் ? ”
”அவரேதான்.. அவர்தான் வசூல் ராஜா எம்ஏபிஎல்”
”எங்க வசூல் பண்ணறார்.. கோபாலபுரத்துலயா ? ”
”அங்கயும் பண்ணுவார். ஆனா, இப்போ பண்ணிக்கிட்டு இருக்கறது நீதித்துறை நடுவர்கள்கிட்ட”
”என்னடா சொல்ற… ? நீதித்துறை நடுவர்கள் கிட்ட அவர் எப்படி வசூல் பண்ண முடியும் ? ”
”என்ன மச்சான்.. இப்படி வெவரம் புரியாமயே இருக்கியே… இவர்தான் சென்னை மாநகரத்துக்கு தலைமை நீதித்துறை நடுவர் (Chief Metropolitan Magistrate). இவருக்கு கீழதான் அனைத்து மேஜிஸ்ட்ரேட்டுகள் நீதிமன்றமும் வரும்.
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஒரு நீதிமன்றத்தை ஆய்வு பண்றதுதான் இவர் வேலை. கடந்த 13 செப்டம்பர் அன்னைக்கு சென்னை சைதாப்பேட்டையில் உள்ள 18வது நீதிமன்றத்தை ஆய்வு பண்ணார். அந்த நீதிமன்றத்தோட நீதிபதி ஆனந்தவேல்”
”இது அவரோட கடமைதானே… இதுல என்ன தப்பு இருக்கு ? ”
”பொறுமையா கேளுடா அவசரக்குடுக்கை” என்று ரத்னவேலை செல்லமாக திட்டியபடி தொடர்ந்தான் தமிழ்.
”ஆய்வு பண்ணி முடிச்சதும், 3 பவுனில், தங்க மோதிரத்தை பரிசா குடுத்தாரு ஆனந்தவேல். அப்படியே சந்தோஷத்துல திக்குமுக்காடிட்டார் வசூல் ராஜா. நமக்கு வாய்த்த அடிமை மிக மிக திறமைசாலின்னு அவரை மெச்சினா, இன்னொரு அதிர்ச்சி வச்சுருந்தார் ஆனந்தவேல். ”
”அது என்னடா அடுத்த ஆச்சர்யம் ? ”
”ஆய்வு முடிஞ்ச அன்னைக்கு இரவே, ஐடிசி க்ரான்ட் சோழாவுல கோபாலுக்கு இரவு விருந்து வழங்கினார் ஆனந்தவேல். ”
”என்னடா இது அநியாயமா இருக்கே.. ? நீதிபதிகள் இப்படியா நடந்துக்கிறாங்க ? ”
”அட நீ வேற மச்சான்.. நீதிபதிகளோட நடத்தையைப் பத்தி எழுதனும்னா எழுதிக்கிட்டே இருக்கலாம். கண்றாவியான கதைகள்லாம் இருக்கு… ”
”சரி… இவ்வளவு காஸ்ட்லியான பரிசும், விருந்தும் குடுக்க ஆனந்தவேலுக்கு ஏது பணம் ? ”
”அவர் என்ன தன் கை காசையா செலவு பண்ணுவாரு ? அந்த நீதிமன்றத்தோட கட்டுப்பாட்டுல ஒரு 8 காவல் நிலையங்கள் வருதுல்லயா ? அந்த காவல் நிலையங்கள்தான் இதையெல்லாம் ஏற்பாடு பண்ணணும். ஒவ்வொரு காவல் நிலையமும் வசூல் பண்ணி நகையை வாங்கி ஆனந்தவேல் ஐயாகிட்ட கொடுத்தா, அவர் கோபால் கொய்யா, சாரி மச்சான்.. கோபால் அய்யாகிட்ட குடுப்பாரு.”
”அது மட்டுமில்லாம இந்த ஆனந்தவேல் பத்தி ஒரு சுவையான கதை இருக்கு. ஆனந்தவேல் மேல தொடர்ந்து பல புகார்கள் வந்ததும் ஒரு நாள் கோபால் ஆனந்தவேலை கூப்பிட்டு கண்டிச்சிருக்கார். அவர் கண்டிச்சதும், ஆனந்தவேல் பயந்துட்டார். என்னடா இது இவ்வளவு கடுமையா இருக்காரே… இவரை எப்படி சரிக்கட்றதுன்னு யோசிக்கும்போதுதான், இவருக்கு தெய்வம் னு இன்னொரு நீதிபதியோட பழக்கம் கிடைக்குது. இந்த தெய்வமும், கோபாலும் ரொம்ப நெருக்கம்.
”தெய்வத்துக்கிட்ட போயி, கோபால் அய்யா என் மேல ரொம்ப கோவமா இருக்காரு… கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்கன்னு கேட்டதும், தெய்வம் கோபால்கிட்ட ஆனந்தவேலை பத்தி எடுத்துச் சொல்றாரு.. அதுக்கப்புறம் கோபாலும், ஆனந்தவேலும் நெருக்கமாயிட்றாங்க. அப்புறம் என்ன வார இறுதியில் கோபால், ஆனந்தவேல், தெய்வம் மற்றம் 9வது நீதிமன்றத்தின் அரசு வழக்கறிஞர் எல்லாம் சேந்து வெளியில கிளம்பிடுவாங்க.. வெளியில போயி, “சரக்கு வச்சுருக்கேன்….. எறக்கி வச்சுருக்கேன்” னு ஒரே கொண்டாட்டம்தான்..
”இவ்வளவு மோசமானவரா ஆனந்தவேல் ? ”
”இன்னும் சொல்றேன் கேளு. சைதாப்போட்டையில் தினந்தோறும் மாலை நீதிமன்றங்கள் நடக்கும். வழக்குகளின் நிலுவையை குறைக்கிறதுக்காக செய்யப்பட்ட ஏற்பாடு இது. பெரும்பாலும் சாதாரண சண்டை வழக்குகள், போக்குவரத்து விதி மீறல் வழக்குகள் போன்றவை இங்க வரும். எல்லா குற்றவாளிகளுக்கும் 100 ரூபாய் மட்டும்தான் அபராதம் போடுவாரு ஆனந்தவேல்”
”பரவாயில்லயே.. நல்ல நீதிபதியா இருக்காரே.. ? ”
”அட லூசுப்பயலே… அந்த 100 ரூபாய் கணக்குக்கு. 100 ரூபாய் அபராதம் விதிக்கணும்னா 500 ரூபாய் நீதிபதிக்கு தனியா தரணும். இதை வசூல் பண்ணிக் கொடுக்கற வேலை போலீஸுக்கும் நீதிமன்ற ஊழியர்களுக்கும். 500 ரூபாயில 100 ரூபாய் போலீஸுக்கு, 100 ரூபாய் நீதிமன்ற ஊழியர்களுக்கு. 300 ரூபாய் ஆனந்தவேலுக்கு… இது மாதிரி ஒரு நாளைக்கு 300 முதல் 500 வழக்குகளை தீத்து வைக்கிறார் ஆனந்தவேல். எவ்வளவு வரும்னு நீயே கணக்கு போட்டுக்கோ ”
”நல்ல திட்டமா இருக்கே.. ”
”ஆமா.. இந்தத் திட்டத்தால எல்லோருக்கும் மகிழ்ச்சி. குற்றவாளிகளுக்கு 1000 அல்லது 1500 ரூபாய்க்கு பதிலா வெறும் 500 ரூபா கட்ற மகிழ்ச்சி. தினந்தோறும் நிறைய்ய பணம் கிடைக்கும் மகிழ்ச்சி நீதிமன்ற ஊழியர்களுக்கு. காவல்துறை காவலருக்கும் மகிழ்ச்சி. எல்லோரும் இன்புற்றிருப்பதைத் தவிர வேறு என்ன இன்பம் இருக்க முடியும் ? ”
”தலையே சுத்துதுடா… ” என்றான் ரத்னவேல்.
”இதுக்கே தலை சுத்துனா எப்படி ? அடுத்த கதையை சொல்றேன் கேளு. 20 செப்டம்பர் அன்னைக்கு 17வது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்துல ஆய்வுக்கு போறார் கோபால். அந்த நீதிமன்றத்தோட நீதிபதி பேரு ராஜலட்சுமி. ராஜலட்சுமியோட கணவரும் வழக்கறிஞர், தந்தையும் வழக்கறிஞர். ஆய்வுக்கு வந்த அன்னைக்கு அவங்க 3 பவுன்ல தங்கச் சங்கிலி வாங்கித் தந்தாங்க. அதைப் பாத்ததும் கோபால் இன்னும் குஷியாயிட்டாரு. ”
”இவங்களாவது சொந்தக் காசுல வாங்கிக் குடுத்தாங்களா ? ”
”லூசாடா நீ… ? யாராவது சொந்தக் காசுல வாங்கிக் குடுப்பாங்களா ? இந்த நீதிபதி கட்டுப்பாட்டுல தியாகராய நகர் வருது. தி.நகர் பாண்டி பஜார் காவல் நிலையங்கள் 3 பவுன் செயினுக்கான பொறுப்பை ஏத்துக்கிட்டாங்க. ”
”ராஜலட்சுமிக்கு ஏதாவது முன் கதை இருக்கா ? ”
”ஏன் இல்லாம. மேஜிஸ்ட்ரேட்டுகளை திருமணம் செய்த அத்தனை பேரும் செத்தான். புருஷன் பொண்டாட்டி சண்டைகள் எல்லா வீட்டுலயும் சகஜம். ஆனா பெண் மேஜிஸ்ட்ரேட்டுகள் புருஷன்கள் சண்டை போட்டா, இந்த மேஜிஸ்ட்ரேட்டுகள் உடனடியா போலீசை கூப்பிடுவாங்க.
இதே மாதிரி இந்த ராஜலட்சுமிக்கும் அவங்க வீட்டுக் காரருக்கும் அடிக்கடி சண்டை நடக்கும். அந்த சண்டை வீட்டுக்கு வெளியே வந்து, பல முறை ராஜலட்சுமி போலீசுக்கு போன் பண்ணப் போயிருக்காங்க. ஒரு முறை ராஜலட்சுமிக்கும் அவங்க வீட்டுக் காரருக்கும் சண்டை வந்து, இதே மாதிரி போலீசுக்கு போன் பண்ணப் போனப்போ, பக்கத்துல இருக்கவங்க, இதுக்கெல்லாம் போலீஸை கூப்பிடாதீங்கன்னு அறிவுரை சொல்லியிருக்காங்க. உடனே ராஜலட்சுமி, பாருங்க என்னை எப்படியெல்லாம் அடிச்சிருக்கான்னு சொல்றாங்க. உடனே அவங்க வீட்டுக்காரர் உன்னை அடிச்சதை சொல்றியே… நீ என்னை அடிச்சதை ஏன் சொல்லலன்னு அவர் அடிபட்ட காயத்தையெல்லாம் அக்கம் பக்கத்துல உள்ளவங்க்கிட்ட காமிச்சிருக்கார். உடனே கோவமான ராஜலட்சுமி, திரும்ப போலீசுக்கு போன் போடவும், நீ எங்க எங்க யார் யார்கிட்டயெல்லாம் பணம் வாங்குறன்னு எனக்கு தெரியும்… ஹைகோர்ட் விஜிலென்சுக்கு சொல்லவான்னு கேட்டார்.. அவ்வளவதான்.. ராஜலட்சுமி வாயை மூடிக்கிட்டு போயிட்டாங்க.
“சரி… வசூல் ராஜாவின் இந்த திருவிளையாடல்களை நாம பாத்து ரசிக்கிற பெருமை யாருக்கு சேரும் சொல்லு.. ?
“தெரியலையேடா…. ? “
“வசூல் ராஜாவை சென்னை தலைமை பெருநகர குற்றவியல் நடுவரா நியமிச்ச உயர்நீதிமன்ற நீதிபதி பால் வசந்தகுமாருக்குத்தான் அந்த பெருமை சேரும். அவர்தானே வசூல் ராஜாவை சென்னைக்கு கொண்டு வந்தது. இப்படிப்பட்ட ஆளு, தயாளு அம்மாவை விசாரிச்சா எப்படி இருக்கும்னு பாரு… சரி… போதுமா முன்கதை.. ?
”யப்பா சாமி.. உன் கதையெல்லாம் போதும். இப்பவே தலை சுத்துது. ஆளை விடு” என்றவாறு எழுந்தான் ரத்னவேல்.
எங்களுக்கும்தாம்பா தலை சுத்துது என்று கணேசன் எழும் நேரத்தில் “அண்ணே இருங்க. போன வாரம், புதிய பத்திரிக்கை ஒன்னு பொறந்திருக்குன்னு சொன்னேன்ல… ?
“ஆமா.. “
“அந்த பத்திரிக்கையோட சாம்பிள் தர்றேன் பாருங்க.. மற்ற பத்திரிக்கைகளில் வர்ற மாதிரி ஒரு காலம் இருக்கு. அந்த காலத்துல சென்னை மாநகர ஆணையர் ஜார்ஜுக்கும், உளவுத்துறை இணை ஆணையர் வரதராஜுவுக்கும் எப்படி சொம்படிச்சிருக்காங்கன்னு பாருங்க.
“கமிஷனர் ஜார்ஜ், கடந்த திமுக ஆட்சி முழுவதும் ஒதுக்கியே வைக்கப்பட்டவர். அதிமுக ஆதரவு அதிகாரி என்ற சாயம் பூசப்பட்டுள்ளது. அதனால்தான் இந்த ஆட்சியில் அவருக்கு மிக உயரிய கவுரவமாக சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் பதவி வழங்கப்பட்டுள்ளது. பணியில் கொஞ்சம் கடுமையா இருப்பார். நிறைகுடம் தளும்பாது என்பது போல பெரிய அறிவாளி. வெளியில் காட்டிக் கொள்ள மாட்டார். கமிஷனரின் அதிரடி நடவடிக்கையால் ஓப்பியடித்த ஆயுதப்படை காவலர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுடுச்சு. அதனாலதான் அடிக்கடி கமிஷனரை மாத்தப்போராங்கன்னு புரளியை கிளப்பி விடுறாங்க.” எப்படி இருக்கு சாம்பிள் ?
கண்றாவியா இருக்கு… இந்தப் பொழப்புக்கு.. என்று சொல்லியபடி எழுந்தான் ரத்னவேல். அனைவரும் சபையைக் கலைத்தனர்.