“எல்லோருக்கும் மாலை வணக்கம்“ என்று மொட்டை மாடியில் நுழைந்தான் டாஸ்மாக் தமிழ்.
“வணக்கம் தமிழ். மோடி கூட்டத்துக்கு திருச்சிக்கு போயிருந்தியா ? “
“தமிழ்நாட்டுல மோடி அலை வீசத் தொடங்கிடுச்சுன்னு பிஜேபி காரங்க பிரச்சாரம் பண்ணிக்கிட்டு இருக்காங்க. தமிழகத்தைப் பொறுத்தவரை, வலுவில்லாத கட்சியா ஏதாவது ஒரு திராவிடக் கட்சியை நம்பி இருந்த பிஜேபி, இந்த முறை தனியா ஒரு அணி அமைச்சு போட்டியிடும் மனநிலையில இருக்காங்க. திமுக பக்கமும் இடம் இல்லை, அதிமுக பக்கமும் இடம் இல்லைன்ற நிலையில மதிமுக மற்றும் தேமுதிகவோட சேந்து மூன்றாவது அணி அமைக்கும் முடிவுல இருக்காங்க. அதன் மூலமா, மோடி மற்றும் பிஜேபி ஆதரவாளர்களோட வாக்குகள் அப்படியே கிடைக்கும்னு நம்பறாங்க“
“வைகோவுக்கு இதுக்கு சம்மதமா ? “ என்றான் ரத்னவேல்.
“அவருக்கு வேற என்னடா வழி இருக்கு ? அதிமுகவுல இடம் கிடையாது. திமுக பக்கம் போனாலும், காங்கிரஸோட சேர்ந்து போட்டியிடனும். தனியா நின்னா, கடை காலியாயிடும். அதனால நிச்சயமா இந்தக் கூட்டணி அவருக்கு சம்மதம்தான்.. “
“திமுக என்ன முடிவெடுப்பாங்க..? “
“திமுக காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்த விசுவாசமான அடிமை. திமுகவால வேறு கூட்டணியைப் பத்தி நினைச்சுக் கூட பாக்க முடியாது. ஆனா, காங்கிரஸ் கூட தன்னோட செல்வாக்கை இழக்காமல் இருக்கறதுக்காகத்தான், கவனமா பேசறார். மோடியோட வருகை பத்தி கருத்து கேட்டார் ஒரு பத்திரிக்கையாளர். “பெரியார் பிறந்த மண்ணில் மதவாத சக்திகள் தலை தூக்குவதாக மோடியோட வருகை எண்ண வைக்குதே“ ன்னு கேட்டார். அதுக்கு பதில் சொன்ன கருணாநிதி, ஒரு ஜனநாயக நாட்டுல யார் வேண்டுமானாலும், கூட்டம் போடலாம், மேடை போட்டுப் பேசலாம் ஆனா, மக்களை அச்சப்படுத்தாமல் பேசணும் னு சொன்னார். ஆனா மோடி பிரதம வேட்பாளரா அறிவிக்கப்பட்டப்போ கருத்து சொன்ன கருணாநிதி, திமுக என்றைக்குமே மதவாத சக்திகளுக்கு எதிராத்தான் இருக்கும் னு சொன்னார்.
ஆனா 2ஜின்ற வழக்கு இருக்கும் வரைக்கும் திமுக காங்கிரஸ் கூட்டணியை விட்டு வெளியேறுவதற்கான வாய்ப்புகள் குறைவுதான். கூட்டுப் பாராளுமன்றக் குழு விசாரணையில ஆ.ராசாவை எல்லா தவறுகளுக்கும் பொறுப்பாக்கி அறிக்கை வரப்போகுது. அப்போ திமுக, ராசாவுக்காக பேசித்தான் ஆகணும். ராசாவுக்கு சப்போர்ட் பண்ணலன்னா, ஆ.ராசா வாயைத் திறப்பார். அப்போ கருணாநிதி குடும்பத்துக்கு பெரிய நெருக்கடி உருவாகும்“
“ஜெயலலிதா என்ன முடிவுல இருக்காங்க… “ என்றான் பீமராஜன்.
“ஜெயலலிதாவுக்கு எந்த கூட்டணியும் இல்லாம தனியாவே ஜெயிச்சுடலாம்னு நம்பிக்கை இருக்கு. ஆட்சி மேல பெரிய அளவில் அதிருப்தி இல்லாத காரணத்தால, தனியாவே ஜெயிச்சுடலாம்னு நினைக்கிறாங்க.. “
“ஆட்சி மேல குறையே இல்லையா ? “
“இப்போதைக்கு இல்ல.. ஆனா தேர்தல் நெருங்கும் வரைக்கும் இந்த நல்லெண்ணம் நீடிக்குமாங்கிறது சந்தேகம்தான். கனிம குவாரிகள் மற்றும் மணல் குவாரிகள் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டது பெரிய அளவில் வரவேற்பை பெற்றாலும், இது எல்லாமே நாடகமான்னு ஒரு சந்தேகத்தையும் ஏற்படுத்துது. “
“என்னடா இப்படி சொல்ற ? “
“உண்மைதான்டா. 19.04.2007ல் ஜெயலலிதா ஒரு பேட்டி கொடுத்தாங்க. அந்த பேட்டியில “வைகுண்டராஜன் என்று ஒரு தொழில் அதிபர் இருக்கிறார். அவர் விவி மினரெல்ஸ் என்று ஒரு நிறுவனத்தை நடத்தி வருகிறார். அவர்தான் ஜெயா டிவியின் மேஜர் ஷேர் ஹோல்டர். பெரும்பாலான பங்குகளை அவர்தான் வைத்திருக்கிறார். கடந்த ஆண்டு திமுக தமிழகத்தில் ஆட்சி அமைத்த பின்னர் கடந்த ஓர் ஆண்டு காலமாக தயாநிதி மாறன் பல முறை வைகுண்டராஜனை மிரட்டி இருக்கிறார்.
கடந்த ஓர் ஆண்டு காலமாக வைகுண்டராஜனுக்கு தொடர்ந்து தயாநிதி மாறனிம்மிருந்து மிரட்டல்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. தயாநிதி மாறனே பல முறை நேரடியாக பேசியிருக்கிறார். அதன் பிறகு அரசின் தலைமைச் செயலாளரிடம் பேசியிருக்கிறார். அரசு அதிகாரிகளும், தலைமைச் செயலாளரும் காவல்துறை உயர் அதிகாரிகளும் வைகுண்டராஜனை மிரட்டுகின்றனர். வைகுண்டராஜனிடம் இருக்கின்ற ஜெயா டிவி பங்குகளை அப்படியே தயாநிதி மாறனுக்கு கொடுத்து விட வேண்டுமாம். இதுதான் தயாநிதி மாறனின் வற்புறுத்தல். இதற்கு வைகுண்டராஜன் மறுத்திருக்கிறார்.
அதனால் அவருக்கு தொடர்ந்து கடந்த ஓர் ஆண்டு காலமாக தொழில் ரீதியாக பல்வேறு தொல்லைகளை கொடுத்து இல்லாத பொல்லாத வழக்குகளையெல்லாம் அவர் மீது ஜோடித்து, அவர் பல ஆண்டு காலம் நடத்தி வருகின்ற விவி மினரெல்ஸ் நிறுவனத்தையே இப்போது மூடும்படி செய்து விட்டார்கள். அவர் தொழில் நடத்த Pollution Control Board, Director of Geology and Mining, Chief Secretary என்று தமிழ்நாட்டில் இருக்கின்ற தமிழக அரசில் இருக்கின்ற அதிகார மையக்ள் என்னென்ன வகைகளில் தொந்தரவு கொடுக்க முடியுமோ அவ்வளவையும் செய்து அவர் தொழில் நடத்த முடியாதபடி அந்த நிறுவனத்தை முடக்கி விட்டார்கள்.
இப்போது கடைசியாக ஜெயாடிவி பங்குகளை அப்படியே கொடுத்து விட வேண்டும். இதை செய்கிறீர்களா அல்லது சிறைக்கு செல்கிறீர்களா ? ஜெயா டிவி பங்குகளை கொடுக்க வில்லை என்றால் கம்பி எண்ண வேண்டியிருக்கும் என்று மிரட்டுகிறார்கள். கைகுண்டராஜன் மறுத்ததால் அவரை குண்டர்கள் சட்டத்தில் கைது செய்து சிறையில் வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குண்டர்கள் சட்டத்தின் கீழ் ஒருவரை கைது செய்ய வேண்டுமென்றால் அதற்கு சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் அதற்கான கோப்பில் கையெழுத்திட வேண்டும். கன்னியாக்குமரி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கையெழுத்திட வற்புறுத்தியபோது, அவர் மறுத்து விட்டார். வைகுண்டராஜன் எந்த குற்றமும் செய்யவில்லை அப்படி இருக்கையில் நான் எப்படி அவரை குண்டர்கள் சட்டத்தில் கைது செய்ய கையெழுத்திட முடியும் என்று கேட்டிருக்கிறார். அதனால் வற்புறுத்தி கட்டாயப்படுத்தி கன்னியாக்குமரி மாவட்ட கலெக்டரை விடுமுறையில் செல்லும்படி அனுப்பி விட்டாக்ரள். கடந்த ஒரு வாரத்துக்கு முன்புதான் கன்னியாக்குமரி மாவட்டத்தில் பணிபுரிந்த டிஆர்ஓ விருதுநகர் மாவட்டத்துக்கு மாறுதல் செய்யப்பட்டார். தற்போது இந்த இழிவான காரியத்தை அவர் செய்ய ஒப்புக் கொண்டதால், அவரை கன்னியாக்குமரி மாவட்டத்தில் பணியமர்த்தியிருக்கிறார்கள். இப்போது குண்டர்கள் சட்டத்தில் கைகுண்டராஜனை கைது செய்து சிறையில் தள்ளவதற்கு கோப்பு தயாராகி விட்டது.
வைகுண்டராஜன் பல தொழில்கள் நடத்துகிறார். அவர் ஒரு கவுரவமான தொழில் அதிபர். இதுவரை அவர் எந்த குற்றமும் செய்த்தாக எந்த ரெக்கார்டும் இல்லை. இப்போது அவர் செய்துள்ள ஒரே குற்றம் ஜெயா டிவியில் பங்குகளை வைத்திருப்பதுதான். “
இதையடுத்து இது வைகுண்டராஜனுடைய பிரச்சினை, இதை நீங்கள் ஏன் எடுத்துக் கொள்ள வேண்டும் ? “ னு ஒரு நிருபர் கேள்வி கேட்கிறார்.
அதுக்கு ஜெயலலிதா “இது வைகுண்டராஜன் பிரச்சினை அல்ல. இது ஜெயா டிவி பிரச்சினை. அதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இப்போது லீகலா பைட் பண்ணா இது கோர்ட்ல ஜெயிக்கும். அந்த விஷயத்துக்கே போகாம ஒருத்தனை குண்டர் சட்டத்தில் உள்ளே போட்டா என்ன பண்ண முடியும் ? புரியாதவர் போல பேசுகிறீர்கள்… “ னு பதில் சொன்னார்.
“என்னடா வைகுண்டராஜனுக்கு இவ்வளவு சப்போர்ட் பண்ணியிருக்காங்க. “ என்று வியப்போடு கேட்டான் வடிவேல்.
“ஆமா… வைகுண்டராஜன் அதிமுகவுக்கு நிதிகளை வாரி வாரித் தரும் காமதேனு. என்னைக்குமே பத்திரிக்கையாளர்களை சந்திக்காத ஜெயலலிதா பத்திரிக்கையாளர்களை சந்திச்சு வைகுண்டராஜனுக்கு ஆதரவா மணிக்கணக்கா பேட்டி குடுத்துருக்காங்க.
இப்போ கூட, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடணும்னு தாக்கல் செய்யப் பட்ட மனுவை அரசு கடுமைய எதிர்க்குது. சட்டவிரோத கனிம குவாரிகள் குறித்த ககன்தீப் சிங் பேடியோட அறிக்கையை நீதிமன்றத்துல சமர்ப்பிக்காம தவிர்க்கறாங்க. அரசு வழக்கறிஞர், அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டிய அவசியம் இல்லைன்னு வாதிடுகிறார். அக்டோபர் 4 அன்றைக்கு அறிக்கை தாக்கல் செய்யப்படலன்னா, தேவையான உத்தரவுகளை நீதிமன்றம் பிறப்பிக்கும்னு, உயர்நீதிமன்றம் கடுமையா கண்டனம் தெரிவிச்சுருக்கு.
இதனால, இந்த விசாரணை மொத்தமாவே கண் துடைப்போன்னு தோணுது. பிஆர்பி க்ரானைட்ஸ் விசாரணையில, பிஆர்பி மேல பல வழக்குகளை தாக்கல் செஞ்சு, அவரை மாதக்கணக்கில் சிறையில வச்சுருந்தாங்க. ஆனா, இது வரைக்கும் வைகுண்டராஜன் மேல ஒரு வழக்கு கூட பதிவு பண்ணல. வைகுண்டராஜனும், அரசு கூட டீல் முடிஞ்சுடும்னு நம்பிக்கையோட இருக்கார்”
”ஜெயலலிதா வோட பேட்டியைப் பாக்கும்போது எனக்கு ஒரு விஷயம் ஞாபகம் வருது” என்றான் ரத்னவேல்.
”என்னடா ? ”
” விஸ்வரூபம் விவகாரத்தில் என்னைத் தனிப்பட்ட முறையில் குற்றம் சாட்டி பேசி வருகின்றனர். நான் ஒரு தனியார் டிவிக்கு ஆதரவாக,அதாவது ஜெயா டிவிக்கு ஆதரவாக நடந்து கொண்டதாக கூறுகிறார்கள்.
ஜெயா டிவிக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஜெயா டிவியின் நிர்வாகத்தில் நான் தலையிடுவதில்லை. அது அதிமுகவின் ஆதரவு டிவி, அவ்வளவுதான்.
ஜெயா டிவி நிறுவனத்தில் எனக்கு எந்தப் பங்கும் இல்லை. அதனுடன் எனக்கு எந்தத் தொடர்பும் இல்லை. இந்த நிலையில் படத்தை அடிமாட்டு விலைக்கு ஜெயா டிவிக்கு விற்காகததால்தான் நான் கோபமடைந்து தடை செய்ததாக கூறுவது அபத்தானது, தவறானது.
இப்படி என்னை ஜெயா டிவியுடன் இணைத்துப் புகார் கூறிப் பேசியவர்கள் மீதும், அதை செய்தியாக வெளியிட்டவர்கள் மீதும் நான் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுப்பேன்” விஸ்வரூபம் பட விவகாரத்துல இப்படி ஒரு பேட்டியை ஜெயலலிதா கொடுத்தாங்களே.. அதை நினைச்சேன்” என்று சொல்லி விட்டு சிரித்தான்.
”பொய் சொல்றதும், புரட்டிப் பேசுறதும், ஜெயலலிதா மற்றும் கருணாநிதிக்கு கை வந்த கலை. அதுல இவங்கள யாரும் மிஞ்சவே முடியாது”
”கனிமவள மாஃபியா பிடியில் தமிழகம்னு ஒரு புத்தகம் வரப்போகுதுன்னு சொன்னியே.. வந்துச்சா ? ” என்றான் பீமராஜன்.
”திருச்சி வேலுச்சாமி அந்த புத்தகத்தை போன வாரம் வெளியிட்டார். புத்தகம் சிறப்பா வந்திருக்கு. திமுக ஆட்சி, அதிமுக ஆட்சின்னு மாறி மாறி இரண்டு ஆட்சிகளிலும், வைகுண்டராஜனோட செல்வாக்கு எப்படியெல்லாம் வளந்திருக்குன்றதும் பல ஐஏஎஸ் அதிகாரிகள், வைகுண்டராஜனுக்கு கைப்பாவையா இருந்திருக்காங்கன்றதும், சுற்றுச் சூழல் விதிகள் உள்ளிட்ட எந்த விதிகளையும் மதிக்காம வைகுண்டராஜன் சகட்டுமேனிக்கு கொள்ளையடிச்சிருக்கிற விபரத்தையும் அந்த நூல் வெளிச்சம் போட்டுக் காட்டுது..
இதுக்கு நடுவுல வைகுண்டராஜனோட போட்டியாளர் தயா தேவதாஸ் உயர்நீதிமன்றத்துல ஒரு வழக்கு தொடுத்திருக்கார். அந்த வழக்குல விவி மினரெல்ஸ் விவகாரம் தொடர்பா சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடணும்னு கேட்டிருக்கார். ”
தயா தேவதாஸ்
”இந்த தயா தேவதாஸ் யாரு ? ”
”இந்த தயா தேவதாஸ் வைகுண்டராஜனோட போட்டியாளர். வைகுண்டராஜனை வீழ்த்தணும்னு நினைக்கிறார். ”
”சரி சொத்துக் குவிப்பு வழக்கு என்னடா ஆச்சு ? ” என்று கவலையோடு கேட்டான் வடிவேல்.
”ஜெயலலிதாவ விட நீ ரொம்ப கவலைப்படுவ போலருக்கே… ? ” என்று சொல்லி விட்டு தொடர்ந்தான் தமிழ்.
”இது வரை சொத்துக் குவிப்பு வழக்கை விசாரிச்சிக்கிட்டு இருந்த நீதிபதி பாலகிருஷ்ணாவை எப்படியாவது தொடர்ந்து பதவியில் நீடிக்க வச்சு தனக்கு சாதகமா தீர்ப்பு வாங்கிடணும்னு ஜெயலலிதா செய்த முயற்சிகள் தோல்வியில முடிஞ்சுடுச்சு. ஆனா, திங்கட்கிழமை உச்சநீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு ஜெயலலிதாவுக்கு முழுக்க முழுக்க சாதகமா இருக்கு. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சவுகான் மற்றும் போப்டே ஆகியோர், ஜெயலலிதாவின் உரிமைகள் மறுக்கப்படுவது குறித்து பலமா கவலைப்பட்டிருக்காங்க.
நீதிபதி சவுகான்
நீதிபதி போப்டே
பவானி சிங்கின் நியமனத்தை ரத்து செய்த கர்நாடக அரசோட உத்தரவை ரத்து செய்த நீதிபதிகள், நீதிபதி பாலகிருஷ்ணா பதவி ஓய்வு பெற்றாலும் அவருக்கு பதவி நீட்டிப்பு கொடுப்பது பற்றி, கர்நாடக அரசும், கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியும் சேர்ந்து ஒரு முடிவு எடுக்கணும், அப்படி எடுக்கும்போது ஜெயலலிதாவின் உரிமைகள் பாதிக்கப்படுவதை கணக்கில் எடுத்துக்கணும்னு சொல்லியிருக்காங்க.. ”
”நீதிபதிகள் ஜெயலலிதாவோட உரிமைகள் குறித்து இவ்வளவு தீவிரமா கவலைப்பட்றாங்களே… ”
”கவலைப்பட்றது நியாயம்தான்… ஆனா, ஒரு வழக்கை 17 வருஷமா இழுத்தடிச்சதுக்கு யார் காரணம்ன்றதை கேக்காம விட்டுட்டாங்க. லல்லு பிரசாத் யாதவ் மேல போடப்பட்ட வழக்குல 17 வருஷம் கழிச்சி தீர்ப்பு வந்திருக்கு.. ஆனா ஜெயலலிதா வழக்குல 17 வருஷம் கழிச்சும் தீர்ப்பு வருமா வராதான்னே தெரியாம இருக்கு.. ”
”இப்போ கர்நாடக அரசு, நீதிபதிக்கு பதவி நீட்டிப்பு கொடுத்தே ஆகணுமா ? ”
”அப்படி பதவி நீட்டிப்பு கொடுக்கறது கட்டாயம் இல்லாத மாதிரி தீர்ப்பு எழுதப்பட்டிருந்தாக் கூட, தீர்ப்புல பல இடங்களில் கட்டாயம்ன்ற மாதிரி எழுதப்பட்டிருக்கு. ஆனா, கர்நாடகாவுல இருக்கிற காங்கிரஸ் அரசு, நீதிபதியோட பதவி நீட்டிப்புக்கு ஒத்துக்காதுன்னு சொல்றாங்க.. ஏன்னா, ஏற்கனவே பவானி சிங் விவகாரத்துல தோல்வியை சந்திச்சதால, நீதிபதி விஷயத்தை கர்நாடக அரசு சும்மா விடாதுன்னு சொல்றாங்க.”
”காவல்துறை செய்திகள் என்னப்பா ? ”
”காவல்துறையில் இப்போதைக்கு பரபரப்பா பேசப்படும் விவகாரம் வீரப்பன் அதிரடிப்படையில் இருந்தவங்களுக்கு கொடுக்கப்பட்ட பதவி உயர்வுதான். நல்ல நீதிபதின்னு எல்லோரும் நினைச்சுக்கிட்டு இருந்த கிருபாகரன், அயோக்கியத்தனமான தீர்ப்பு ஒன்னு கொடுத்து, வீரப்பன் அதிரடிப்படையில இருந்தவங்களுக்கு பதவி உயர்வு வழங்க வகை செய்திருக்கார்.. ”
”அவர் நல்ல நீதிபதியாச்சே… ”
நீதிபதி கிருபாகரன்
”இப்படித்தான் எல்லோரும் நினைச்சிக்கிட்டு இருந்தாங்க. ஆனா, நீதிமன்றத்துல வழக்கே தாக்கல் செய்யாத 2005ம் ஆண்டு க்ரூப் 1 டிஎஸ்பிகளுக்கும் பதவி உயர்வு கொடுக்கணும்னு தீர்ப்பு வழங்கியிருக்கார். இரண்டு நீதிபதிகள் அடங்கிய டிவிஷன் பென்ச் வழங்கிய தீர்ப்பை தன்னோட தீர்ப்பால நீர்த்துப் போகச் செய்திருக்கார். காவல்துறை முழுக்க ஒரே பரபரப்பான பேச்சா இப்போ இதுதான் இருக்கு.. ”
”அந்த வழக்கோட விபரம் என்னப்பா… ? ”
”சவுக்கு தளத்துல இது பத்தி விபரமா ஒரு கட்டுரை வருதுண்ணே… அதைப் படிச்சு தெரிஞ்சுக்கங்க.. நம்ப மத்த விவகாரங்களை பேசலாம்.. ”
”சரி சொல்லுப்பா… ”
” தலைமையக கூடுதல் டிஜிபி ஸ்ரீ லட்சுமி பிரசாத்துக்கும், நிர்வாக கூடுதல் டிஜிபி சஞ்சீவ் குமாருக்கும் இடையே நடந்து வரும் பனிப்போர் உச்சகட்டத்தை எட்டியிருக்கறதா சொல்றாங்க. ஏற்கனவே ரெண்டு பேருக்கும் ஏழாம் பொருத்தம். இவங்களுக்குள்ள நடக்கிற மோதலால, நிர்வாகப் பணிகள் பாதிக்கப்படுவதா பேசிக்கிறாங்க..”
”பணி இடை நீக்கம் செய்யப்பட்ட ஜாபர் சேட் எப்படிப்பா இருக்கார்… அவர் வழக்குல குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துட்டாங்களாமே.. ”
”ஆமாம்ணே… குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துட்டாங்க. அவர் மற்றும் அவர் மனைவி உள்ளிட்டவர்கள் அக்டோபர் 28ம் தேதி லஞ்ச ஒழிப்பு நீதிமன்றத்தில் ஆஜராகணும்.
இதுக்கு நடுவுல, அவர் ஏற்கவே குடியிருந்த அண்ணா நகர் வீட்டை காலி பண்ணிட்டு, திருவான்மியூர் ஃப்ளாட்டுக்கு குடி போயிட்டார்”
”திருவான்மியூர்ல வீட்டு மனை ஒதுக்கப்பட்டதுக்காகத்தானே அவர் மேல வழக்கு போட்டாங்க ? ”
”அதே வீட்டு மனைதான். இவரும் முன்னாள் முதல்வரின் செயலாளர் ராஜமாணிக்கத்தோட மகன் துர்கா சங்கரும் சேந்து கட்டிய ஃப்ளாட்டுக்கு குடி போயிட்டார். ”
”அந்த சொத்தை லஞ்ச ஒழிப்புத் துறை நீதிமன்றத்தோட அட்டாச் செய்து உத்தரவு போட்டுட்டாங்களாமே… ”
”ஆமா போட்டுட்டாங்க. அந்த உத்தரவை எதிர்த்து சிறு வழக்குகள் நீதிமன்றத்துல ஒரு வழக்கு போட்டிருக்கார். ஆனா, வழக்கு முடியும் வரை, சொத்தை விடுவிக்க முடியாதுன்னு சொல்லிட்டாங்க. அவருக்கு சம்மன் கொடுக்க லஞ்ச ஒழிப்புத் துறை ஆயத்தமாயிட்டிருக்கு. ”
”வழக்கு எப்படி நடக்கும் ? ”
”ஜாபர் சேட்டோட செல்வாக்கு இன்னும் குறைஞ்சபாடில்ல. அவர் மேல வழக்கு தொடர இது வரைக்கும் மத்திய உள்துறை அனுமதி வழங்காம இழுத்தடிச்சிக்கிட்டு இருக்கு. பணி இடைநீக்கத்துல இருந்தாலும் இன்னும் அவர் வீட்டில 8க்கும் மேற்பட்ட காவலர்கள் பணியாற்றாங்கன்னா அவர் செல்வாக்கை பாத்துக்கங்க… ”
”உயர் உயர் அதிகாரியில்லயா… அவரை அவ்வளவு எளிதா சாச்சுட முடியுமா என்ன ? ”
“ஐபிஎல் கொள்ளைக்காரர் எப்படி மச்சான் இருக்கார் ? “
“யாரு… ? சிபி.சிஐடி டிஜிபி நரேந்திர பால் சிங்கை சொல்றியா ? “ என்று தமிழ் கேட்டதற்கு ஆமாம் என்று தலையசைத்தான் ரத்னவேல்.
“அவர் மேல புதுக்குற்றச்சாட்டு கிளம்பியிருக்கு.. ? “
“என்ன குற்றசாட்டுடா…. ? அடுத்த ஐபிஎல் மேட்சுக்கு அட்வான்ஸ் வாங்கிட்டாரா ? “
“அதெல்லாம் இல்லடா. சிபி.சிஐடி ஊழியர்களுக்காக ஒரு வீட்டு வசதி கூட்டுறவு சங்கம் அமைத்து, அதுக்காக இடம் பாத்துக்கிட்டு இருக்காங்க.. “
“நல்ல விஷயம்தானேப்பா..? “
“நல்ல விஷயம்தான்ணே… தண்டலம்ன்ற இடத்துல இடம் பாத்துட்டாங்க. சரி. அந்த இடத்தையே வீட்டு வசதி சங்கத்துக்கு முடிக்கலாம்னு பாத்தா, அந்த இடத்துல என்.பி.சிங்கோட மருமகன் ரியல் எஸ்டேட் பண்ணிக்கிட்டு இருக்காராம்.. “
“என்னடா சொல்ற… ? “
“ஆமாம்டா… வழக்கமா அதிகாரிங்கதான் ரியல் எஸ்டேட் பண்ணுவாங்க. இப்போ மருமகன் பண்ணிக்கிட்டு இருக்காரு. “
“இவங்க குடும்பமும் சோனியா குடும்பம் மாதிரியா… ? “
“சோனியா குடும்பத்துக்கும் இவருக்கும் என்னடா சம்பந்தம் ? “
“சோனியாவோட மருமகன்தானேடா ஹரியாணால ரியல் எஸ்டேட் பண்ணாரு.. அதே மாதிரிதான் இதுவும்“
“இந்த அதிகாரிகளுக்கெல்லாம் வேற வேலையே இல்லையா ? “
“மச்சான். ஐபிஎஸ் அதிகாரியா இருந்தாலும் அவங்களுக்கு குடுக்குற சம்பளம், அவரவர் வாழ்க்கை தரத்தைப் பொறுத்தவரை போதுமானதாத்தான் இருக்கும். வருமான வரி செலுத்துனது போக, அவர்களால ரொம்ப பெரிய அளவில் சேமிக்க முடியாது. சம்பளத்துல வாழ்க்கையை ஓட்டுற அதிகாரிகள் ஏதாவது வாங்கிறதா இருந்தாக் கூட ரொம்ப யோசிப்பாங்க. ஆனா, நரேந்திர பால் சிங் மாதிரியான ஆட்களுக்கு லஞ்சம்தான் மூச்சு. அப்படி சம்பாதிக்கிற பணத்தை என்ன பண்ணுவாங்க ? அந்தப் பணத்தைத்தான் இந்த மாதிரி ரியல் எஸ்டேட், பங்கு மார்க்கெட்டுனு முதலீடு பண்றாங்க. சிங்கோட மனைவிக்கு முழு நேர வேலை பங்கு மார்க்கெட்டில் முதலீடு செய்வதுதான்.
சர்வீஸ்ல சேந்ததுலேர்ந்து, நரேந்திர பால் சிங்குக்கு முழு நேர வேலை மாமூல் வசூல்தான். வசூல் பண்ண பணத்தை எங்கயாவது முதலீடு பண்ண வேணாமா.. ? “
“அதுவும் சரிதான்.. தலைமைச் செயலக செய்திகள் என்ன மச்சான் ? ” என்று கோட்டை நோக்கி விவாதத்தை திருப்பினான் ரத்னவேல்.
”தலைமைச் செயலகத்துக்குள்ள போனாலே செய்தியாளர்கள் புலம்பறாங்க”
”ஏன் செய்தி கிடைக்கலயா.. ? என்னன்னு பொலம்பறாங்க ? ”
”பேசாம, மும்பைக்குப் போயி ஆபரேஷன் பண்ணிக்கிட்டு பெண்ணா மாறிடலாமான்னு பேசிக்கிறாங்க…. ”
”ஏண்டா… அப்படி என்ன நடந்தது ? ”
”நடந்தது இல்ல.. நடந்துக்கிட்டு இருக்கு. முதல்வர் ஜெயலலிதாவோட செயலாளரா இந்த ஆட்சி வந்த அன்னையில இருந்து செயலாளரா இருக்கறவருதான் ராமலிங்கம். ஜெயலலிதாவோட அப்பாயின்ட்மென்டுகளை கவனிக்கிறது இந்த ஆளுதான். இத்தனை நாளா பூங்குன்றன் அப்பாயிண்ட்மென்டுகளை பாத்துக்கிட்டு இருந்தாரு. இந்த ஆளு சசிகலாவோட ஆளு. மன்னார்குடி மாஃபியா வெளியேற்றப்பட்டப்போ, இந்த ஆளையும் ஓரங்கட்டித்தான் வச்சுருந்தாங்க. ஆனா, அம்மாவோட விசுவாசி மாதிரி காமிச்சுக்கிட்டு தப்பிச்சுட்டார். பூங்குன்றன் ஜெயலலிதாவோட தீவிர விசுவாசி. அப்பாயின்ட்மென்டுகள் எல்லாமே பூங்குன்றன் மூலமா ராமலிங்கத்துக்கு வந்துக்கிட்டு இருந்துச்சு.
சமீப காலமா, பூங்குன்றனோட முக்கியத்துவத்தை குறைக்கும் வகையில, இந்த ஆளோ எல்லா அப்பாயின்ட்மென்டுகளையும் பாத்துக்கறார். அப்பாயின்ட்மென்டுகள் வாங்கிக் கொடுக்கறது மூலமா தன்னோட தொடர்புகளை வளத்துக்கிட்டு, தன்னையும் செழிப்பாக்கிக்கிறார்.. ஜெயலலிதாவுக்கு விசுவாசமா இருக்கற மாதிரி காமிச்சுக்கிட்டு, சசிகலாவுக்கு மிக மிக விசுவாசமா இருக்கார். ”
”சரி அந்த மும்பை ஆபரேஷன் மேட்டர் என்னப்பா ? ”
”இந்த ராமலிங்கம் ஆண் பத்திரிக்கையாளர் யார் போன் பண்ணாலும் எடுக்க மாட்டாராம். மெசேஜ் அனுப்பினாலும் பதில் இருக்காதாம். ஆனா, பெண் பத்திரிக்கையாளர்கள் யார் பேசுனாலும், அடுத்த வினாடியே போனை எடுத்துப் பேசுவாராம். பெண் பத்திரிக்கையாளர்களிடம் பேசறதுக்குன்னே ஒரு போனை தனியா வச்சுருக்கார். அந்த போன்ல, “வாட்ஸ்அப்ல” 24 மணி நேரமும் கடலை போட்டுக்கிட்டு இருக்கார் ராமலிங்கம். பெண் பத்திரிக்கையாளர்கள் கிட்ட, நான் திருமணம் ஆனாலும், மனதளவில் இன்னும் தனியாத்தான் இருக்கேன். எனக்குன்னு யாருமே இல்ல. உங்க கிட்ட பேசுறது எனக்கு ரொம்ப ஆறுதலா இருக்கு ன்னு அப்படியே கடலையை டெவலப் பண்ணுவாராம். ”
ராமலிங்கம் ஐஏஎஸ்
”பெண் பத்திரிக்கையாளர்கள் நேரா பாக்க வந்தா அவங்களுக்கு கவனிப்பே தனிதான். அவங்களை காக்க வைக்காம உடனே பாக்கறது. வந்ததும், உங்கள் செய்திகளை பார்த்திருக்கிறேன் / படித்திருக்கிறேன். நீங்கள் ஒவ்வொரு செய்தியிலும் ஒரு முத்திரை பதிக்கிறீர்கள். உங்கள் செய்திகளை நான் விரும்பிப் பார்ப்பேன்…. நாளைக்கு ஃப்ரீயா இருந்தா நாம டின்னர் போலாமா.. ” ன்னு அப்படியே கடலையை டெவலப் பண்ணுவார்.. ”
”ஒரு செய்தியாளரை பாராட்டுவது அவ்வளவு தப்பாடா.. ? ” என்று கிண்டலாக கேட்டான் வடிவேல்.
”செய்தியாளரை பாராட்டுவது தவறு இல்ல மச்சான். பெண் செய்தியாளர்களை மட்டுமே பாராட்டுவது தவறு இல்லையா… ஆண் பத்திரிக்கையாளர்கள் யாரு பேசுனாலும் போனை எடுக்கறது இல்லை. அவங்களை சந்திக்கிறதும் இல்லை. பெண்கள் போன் பண்ணா மட்டும் உடனே பேசறது… இதெல்லாம் தலைமைச் செயலக பத்திரிக்கையாளர்களை கொதிப்படைய வச்சுருக்கு… இதனாலதான் பல ஆண் பத்திரிக்கையாளர்கள் இந்த ஆளு செயலாளரா இருந்தா நம்ப பொழப்பு ஓடாது… பேசாம, மும்பைக்கு போயி ஆபரேஷன் பண்ணிக்கிட்டு பெண்ணாயிடலாமான்னு யோசிக்கிறாங்க… ”
”நீதிமன்ற செய்திகள் என்ன மச்சான் இருக்கு ? ”
”ஒரு உயர்நீதிமன்றத்தில் இருக்கிற முதல் மூன்று நீதிபதிகள்தான் அடுத்து நீதிபதிகளா ஆகப்போறவங்களை தேர்ந்தெடுப்பாங்க. இப்போ தலைமை நீதிபதி அகர்வால், நீதிபதி பானுமதி மற்றும் நீதிபதி சித்ரா வெங்கட்ராமன் இருக்காங்க. இவங்கதான் அடுத்த நீதிபதிகளை தேர்ந்தெடுக்கணும். ரெண்டு தமிழ் நீதிபதிகளும், ஒரு வட இந்திய நீதிபதியும் இருக்காங்க.
ஆனா, இப்போ சட்டீஸ்கர் மாநிலத்துல இருந்து சதீஷ் குமார் அக்னிஹோத்ரின்னு ஒரு நீதிபதியை நியமிச்சிருக்காங்க. இவர் பணி மூப்பில் மூணாவது நீதிபதியா இருக்கார். நீதிபதி பானுமதிக்கு வெளி மாநிலத்துக்கு மாறுதல் வந்துட்டா, மொத்தம் இருக்க வேண்டிய மூணு நீதிபதிகளில் இரண்டு பேர் வட இந்தியர்களாவும், சித்ரா வெங்கட்ராமன் மட்டும் தமிழ் நீதிபதியாவும் இருப்பாங்க. ஏற்கனவே 18 நீதிபதிகள் பணியிடம் காலியா இருக்கற நிலைமையில ரெண்டு வட இந்திய நீதிபதிகள் சேர்ந்து எப்படி நீதிபதிகளை தேர்ந்தெடுக்கப் போறாங்கன்னு பேசிக்கிறாங்க.. ”
”ஏற்கனவே அனுப்பப்பட்ட நீதிபதிகள் பட்டியல் என்னப்பா ஆச்சு. ? ”
”அண்ணே 15 பேர் பெயர்கள் பரிந்துரைக்கப் பட்டது. அது 10ஆ குறைஞ்சது. பிறகு எட்டா குறைஞ்சது. கடைசியா ஐஞ்சுதான் தேரும்னு சொல்றாங்க… ”
”இந்தப் பெயர்களை யாரு பரிந்துரை செய்தது ? ”
”முதல் மூன்று நீதிபதிகள்தான் பரிந்துரை செய்தாங்க.. ஏற்கனவே பரிந்துரை செய்யப்பட்ட நீதிபதிகளோட பெயர்களிலும் முணுமுணுப்பு இருக்கு. நீதிபதிகள் நியமனத்துல இட ஒதுக்கீடு இல்லன்னாலும், மறைமுகமா இட ஒதுக்கீடு கடைபிடிக்கப்பட்டு வருது. பிராமணர்கள், தலித்துகள், இதர சாதிகள், சிறுபான்மையினர் னு எல்லா தரப்பும் பிரதிநிதித்துவப் படணும்னு இந்த கொள்கை பின்பற்றப்பட்டு வருது. இப்போ இருக்கிற 42 பேர்கள்ல நீதிபதி ராமசுப்ரமணியம் மற்றும் நீதிபதி சித்ரா வெங்கட்ராமன் ஆகியோர் பிராமணர்கள். இப்போ தேர்ந்தெடுக்கப் பட்டு அனுப்பப்பட்டிருக்கிற வைத்தியநாதன் மற்றும் பி.என்.பிரகாஷும் பிராமணர்கள். சமுதாயத்துல இரண்டு சதவிகிதம் இருக்கிற பிராமண சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்ல 4 பேர் நீதிபதிகள், நீதிமன்றத்துல அமைதியான முறையில பார்ப்பனியம் நுழையுதுன்னு வழக்கறிஞர்கள் நினைக்கிறாங்க… ”
”அது உண்மையா என்ன ? ”
”அது உண்மையா இல்லையான்னு தெரியாது. ஆனா, நீதிபதி சித்ரா வெங்கட்ராமன் தலைவரா இருக்கும் ஜுடிஷியல் அகாடமியில, சத்தமில்லாம பார்ப்பனியம் புகுத்தப்படுதுன்னு சொல்றாங்க… ”
நீதிபதி சித்ரா வெங்கட்ராமன்
”என்னப்பா சொல்ற… ? அங்க என்ன பண்ண முடியும் ? ”
”அந்த ஜுடிஷியல் அகாடமியில ஒவ்வொரு வாரமும், நீதித்துறை நடுவர்கள் மற்றும் நீதிபதிகளுக்கு பயிற்சி நடக்கும். இந்த பயிற்சியை பல்வேறு பிரிவுகளில் விற்பன்னர்களா இருக்கும் வழக்கறிஞர்கள் வந்து எடுப்பாங்க.
போன சனிக்கிழமை நடந்த பயிற்சி வகுப்பை எடுத்தது யார் தெரியுமா ? ”
”யாருப்பா ? யாராவது ஒரு பார்ப்பன வழக்கறிஞரா ? ”
”பார்ப்பன வழக்கறிஞர் எடுத்திருந்தா கூட பரவாயில்ல. எடுத்தது ஒரு பார்ப்பன சினிமா நடிகர். சினிமா நடிகர் மோகன்ராம்தான் இந்த வகுப்பை நீதிமன்ற நடுவர்களுக்கு எடுத்தார்”
”ஏம்ப்பா… மோகன்ராமுக்கும் நீதித்துறைக்கும் என்ன சம்பந்தம் ? ”
நடிகர் மோகன்ராம்
”சம்பந்தம் இருக்கே… மோகன்ராமோட அண்ணன்தான் முன்னாள் அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன். அரசு வழக்கறிஞரா இருந்த விடுதலையை ராஜினாமா செய்யச் சொல்லிட்டு அந்த பதவியை ஒரு பார்ப்பனருக்கு கொடுத்தது பார்ப்பன எதிர்ப்பைப் பேசியே உயிர் வளர்த்த கருணாநிதிதான்.
அந்த பி.எஸ்.ராமனோட சகோதரர்தான் இந்த மோகன்ராம். திரைப்படத் துறையினரை வைத்து நீதிபதிகளுக்கு வகுப்பு எடுப்பதே தவறு. அதிலும் பல்வேறு ஜாம்பவான்கள் இருக்கும்போது, அவர்களையெல்லாம் விட்டு விட்டு, மோகன்ராமை அழைத்த து பார்ப்பனியம் மெள்ள மெள்ள நுழைவதன் அறிகுறி ன்னு பேசிக்கிறாங்க.. ”
“இப்படி நடிகர்கள் வகுப்பு எடுக்கறதாலதான், நீதிபதிகள்லாம் இப்படி இருக்காங்க… “
“எப்படி இருக்காங்க… எந்த நீதிபதியை சொல்ற நீ..? “
“எழும்பூர் கூடுதல் குற்றவியல் தலைமை நீதிபதியா ரவி ன்னு ஒருத்தர் இருக்கார். சிபிஐ வழக்குகளை விசாரிக்கும் நீதிபதி அவர்தான். அவர் முன்னாடி விசாரணையில் இருக்கிற வழக்குகள்ல உள்ள குற்றவாளிகளுக்கு சாதகமா சாட்சி சொல்லணும்னு சாட்கிகளையெல்லாம் நெருக்கறாராம்… இவருக்குன்னு சில ஏஜென்டுகளை வச்சுக்கிட்டு, குற்றவாளிகள்கிட்ட பணம் வாங்கறதாவும், பணம் வாங்கினதுக்கு விசுவாசமா தீர்ப்பு எழுத ஏதுவா, சாட்சிகளையும், அதிகாரிகளையும் மிரட்டறார்னு பேசிக்கிறாங்க… “
“அவர்கிட்ட அப்படி என்ன முக்கியமான வழக்குகள் இருக்கு ? “
“ராமர் பிள்ளை வழக்கும், டால்மியா வழக்கும் இந்த நீதிபதிக்கிட்டதான் இருக்கு. இந்த வழக்குகள்ல டீல் பேசிக்கிட்டு இருக்கறதா சொல்றாங்க”
”பத்திரிக்கை உலக செய்திகள் என்னடா… ? ”
”சன் டிவி ராஜா திங்கட்கிழமை அன்னைக்கு சன் டிவியில இருந்து ராஜினாமா பண்ணிட்டார். ”
”என்னடா சொல்ற… ? அவர் மேல விசாரணை நடந்துச்சே.. என்ன ஆச்சு ? ”
”உச்சநீதிமன்றத்தோட விசாகா வழக்கு தீர்ப்பின்படி, ஒரு கண்துடைப்பு விசாரணைக்கு சன் டிவி நிர்வாகம் ஏற்பாடு பண்ணுச்சு. அந்த விசாரணைக்கு ராஜா மேல புகார் கொடுத்த அகிலா ஆஜரானாங்க. அகிலாவுக்கு, மக்கள் கலை இலக்கிய கழகத்தின் மனித உரிமை அமைப்பான மனித உரிமை பாதுகாப்பு நடுவத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் ஒரு நாள் தவறாம தொடர்ந்து உதவி பண்ணாங்க. ராஜாவை இரண்டு நாள் குறுக்கு விசாரணை செய்தாங்க. அந்த குறுக்கு விசாரணையில ராஜா எனக்கும் செய்திக்கும் சம்பந்தமே கிடையாது, அந்த ஆடியோ உரையாடலில் நான் பேசவில்லை… அது என் குரல் கிடையாது… ஆனா குரல் சோதனைக்கு உடன்பட மாட்டேன் னு சொன்னார்… சன் டிவி நிர்வாகம் நியமிச்ச விசாரணை அமைப்புன்றதால, அந்த நீதிபதியம்மா சன் டிவி செலவுல, சரவண பவன் டிபன் சாப்பிட்டுட்டு, ராஜா மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படலன்னு தீர்ப்பு கொடுத்துட்டாங்க..
இப்படி ஒரு தீர்ப்பு வரும், இந்தத் தீர்ப்பை வச்சு திரும்ப சன் டிவிக்குள்ள நுழையலாம்னு பாத்தா, கலாநிதி மாறனோட மகள், ராஜாவை உள்ளே சேக்கக்கூடாதுன்னு ஸ்ட்ரிக்டா சொல்லிட்டாங்க… அதனால இன்னைக்கு சன் டிவிக்கு போன ராஜா, நான் இன்னையோட என் பதவியை ராஜினாமா பண்ணிட்டேன்னு சொல்லிட்டு கிளம்பிட்டார். ”
”நான் ஒரு ராசியில்லா ராஜா ன்னு பாட்டு பாடுனாரா… சன் டிவி அலுவலகத்துல பாடல. வீட்டுக்குப் போயி பாடியிருப்பாரு“
“சரி போலாம்டா.. நேரமாகுது“ என்றான் பீமராஜன்.
“போலாம். ஒரே ஒரு செய்தி மட்டும் கேட்டுட்டுப் போ. போன வருஷம் ஜுலை மாசம் பெரியார் திராவிடர் கழகப் பிரமுகர் பழனி கொலை செய்யப்பட்டார் ஞாபகம் இருக்கா ? “
“இருக்கேடா.. அந்த கொலைக்காக, எம்.எல்.ஏ தளி ராமச்சந்திரனை கைது செய்தாங்களே…. “
“ஆமாம். இப்போ அந்தக் கொலை வழக்கில் கண்ணால் பார்த்த ஒரே சாட்சியான பழனியின் மகன் வாஞ்சிநாதனை ராமச்சந்திரனுக்கு ஆதரவா மாத்த முயற்சிகள் நடந்துக்கிட்டு இருக்கு. “
“என்னடா சொல்ற… ? “
“ஆமாம் மச்சான். உண்மையைத்தான் சொல்றேன். இறந்து போன பழனிக்கு, அந்தப் பகுதியில ரியல் எஸ்டேட் பண்ற கலீல் ன்ற நபர் பெரிய அளவுக்கு பணம் கொடுக்கணும். அந்தப் பணத்தை கலீல்கிட்ட போய் வாஞ்சிநாதன் கேட்டப்போ, எம்.எல்.ஏ ராமச்சந்திரன் சொன்னா நான் தர்றேன்னு சொல்லியிருக்கார். ராமச்சந்திரனும், அவர் கூட இருக்கிற ரவுடிகளும் சேந்து வழக்குல ராமச்சந்திரனுக்கு எதிரா சாட்சி சொல்லாம இருந்தா, பணத்தை வாங்கித் தர்றோம்னு சொல்றாங்க.. “
“ராமச்சந்திரனோட வழக்கறிஞர் பவானி மோகன்தானே… அவர் என்ன சொல்றார்“
“அவர் இது வரைக்கும் இந்த விஷயத்துல தலையிடல. ஆனா தலையிட்டாலும் ராமச்சந்திரனுக்கு ஆதரவாத்தான் செயல்படுவாருன்னு சொல்றாங்க.. “
“என்னடா சொல்ற… அவர் தமிழ் தேசிய வழக்கறிஞராச்சே… “
வழக்கறிஞர் பவானி மோகன்
“தமிழ் தேசிய வழக்கறிஞர்தான். ஆனா, ராமச்சந்திரன் போன்ற அழித்தொழிக்கப்பட வேண்டிய மக்கள் விரோதிகளுக்காக ஆஜராகிறார். ராமச்சந்திரனெல்லாம் நிரந்தரமா சிறையில இருக்க வேண்டிய நபர். அவருக்காக மோகன் வாதாடுறார். இதுதான் பலருக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்துது. “
“சரி எந்திரிடா போலாம்“ என்று தமிழ் எழுந்ததும் சபை கலைந்தது.