மூடர் கூடம் என்றவுடன் மீண்டும் நவீன் படத்தைப் பற்றிய கட்டுரை என்று நினைத்து விடாதீர்கள். இது வேறு மூடர் கூடத்தைப் பற்றியது. இந்தத் தலைப்பு ஏன் வைக்கப்பட்டது என்பதை கட்டுரையின் இறுதியில் நீங்களே புரிந்து கொள்வீர்கள்.
வீரப்பன். சந்தனக் கடத்தல் வீரப்பன் என்று பரவலாக அறியப்பட்ட வீரப்பன் நடத்திய சாம்ராஜ்யத்தால் பலனடைந்தவர்களை விட, படாதபாடு பட்டவர்களே அதிகம். 1970ல் தொடங்கிய வீரப்பன் சாம்ராஜ்யம் 2004ம் ஆண்டு வரை நீடித்த்து. வீரப்பனைத் தேடுகிறோம் என்ற போர்வையில் தமிழகம் மற்றும் கர்நாடக அதிரடிப்படையினர் நடத்திய சூறையாடல்கள் வரலாறு. வீரப்பனைத் தேடுவதற்காக சென்ற காவல்துறையினர், அந்தப் பகுதி பழங்குடியினரை என்ன பாடு படுத்தினார்கள் என்பதை முழுமையாக புரிந்து கொள்ள, பாலமுருகனின் “சோளகர் தொட்டி” படித்துப் பாருங்கள்.
இப்படி பல்வேறு அட்டூழியங்களை அரங்கேற்றிய காவல்துறையின் அதிரடிப்படைக்குத் தலைவராக விஜயக்குமார் பொறுப்பேற்றதும் இந்த அட்டூழியங்கள் அதிகரித்தன. அப்போது திடீரென்று ஒரு நாள் ஊடகங்களில் அறிவிப்பு. அதிரடிப்படையினர் வீரப்பன் மற்றும் அவன் கூட்டாளிகளை சுட்டுக் கொன்றனர் என்று. ஊடகங்கள் கொண்டாடின. மக்கள் வரவேற்றார்கள். ஜெயலலிதா புளகாங்கிதம் அடைந்தார். அதிரடிப்படைத் தலைவர் விஜயகுமாரை தலையில் வைத்துக் கொண்டாடாத குறை. இதற்கென்று நேரு உள் விளையாட்டு அரங்கில் ஒரு பாராட்டு விழா ஏற்பாடு செய்து அதில் ஜெயலலிதாவுக்கு விஜயக்குமார் பத்து முறை சல்யூட் அடித்த கூத்தெல்லாம் நடந்தது. வீரப்பனைக் கொன்றதில் சற்றும் பங்கு இல்லாத விஜயக்குமாரும், வெட்கமேயில்லாமல், அந்த பெருமைகளை ஏற்றுக் கொண்டார்.
கன்னட நடிகர் ராஜ்குமாரை கடத்தியபோது, அங்கிருந்து தப்பிச் சென்ற ராஜ்குமாரின் உறவினர், தப்பிச் செல்கையில் வீரப்பனின் கையில் வெட்டுக்காயத்தை ஏற்படுத்தி விட்டுச் சென்று விடுகிறார். அந்தக் காயத்துக்கு முறையான மருத்துவ சிகிச்சை எடுக்காத வீரப்பனின் கை பலவீனப்பட்டு, வேலை செய்யாத நிலையை அடைந்த்து. கண்ணில் புரை ஏற்பட்டு, வீரப்பன் ஏறக்குறைய குருடான நிலைக்கு ஆளானான். அப்படிப்பட்ட நிலையில்தான் மருத்துவ சிகிச்சைக்காக வந்த வீரப்பனை, மோரில் விஷம் வைத்துக் கொன்று விட்டு, சுட்டுக் கொன்றதாக நாடகமாடினார் விஜயக்குமார்.
இந்த நாடகத்தைப் பார்த்து புளகாங்கிதம் அடைந்த ஜெயலலிதா, அதிரடிப்படையில் பணியாற்றிய அத்தனை பேருக்கும் பரிசுகளை வாரி வழங்கினார். ஜெயராம் சம்பாதித்து வைத்த சொத்திலிருந்து அல்ல. மக்கள் வரிப்பணத்திலிருந்து !!!! அந்த அதிரடிப்படையில் பணியாற்றிய அத்தனை பேருக்கும் 3 லட்ச ரூபாய் வெகுமதி, ஒரு வீட்டு மனை மற்றும் ஒரு படி பதவி உயர்வு. அத்தனை பேருக்கும் என்றால், அத்தனை பேரும் வீரப்பனைத் தேடி காட்டுக்குள் பணியாற்றினார்கள் என்று பொருள் அல்ல. அதிரடிப்படையில் வேலை பார்ப்பதாக கணக்குக் காட்டி விட்டு, அதிகாரி வீட்டில் தோசை சுட்டவன், சப்பாத்தி சுட்டவனுக்கெல்லாம், இந்த வெகுமதி.
ஒரு படி பதவி உயர்வு என்பது காவலர் முதல் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வரை உள்ளவர்களுக்கு வழங்கப்பட்டது. முதலில் இந்த அதிரடிப்படை என்றால் என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள். அதிரடிப்படையில் பணியாற்றுவோர் சத்தியமங்கலத்தில் உள்ள முகாமில் பணியாற்ற வேண்டும். அந்த முகாமில் பணியாற்றுபவர்களுக்கு பல நாட்களுக்கு விடுமுறை கிடைக்காது. அந்த பணியிடம் ஒரு தண்டனை பணியிடமாகவே கருதப்பட்டது. மற்ற பணியிடங்களில் ஒழுங்காக பணியாற்றாதவர்களை வீரப்பன் அதிரடிப்படைக்கு மாற்றி விடுவார்கள். இப்படி ஒரு தண்டனைப் பணியிடமாக இருந்த இந்த அதிரடிப்படைதான் பின்னாளில் பெரும் வெகுமதியைப் பெற்றுத் தரும் பணியிடமாக மாறியது.
ஒரு படி கூடுதல் பதவி உயர்வு என்பது காவல்துறையில் வீரதீரச் செயல்கள் புரிந்தவர்களுக்கு வழங்கப்படும். இதற்கென்று விதிமுறைகள் இருக்கின்றன. இந்த விதிமுறைகள் வகுக்கப்பட்டது இதே ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோதுதான். இப்படி பதவி உயர்வு வழங்கலாமா வழங்கக் கூடாதா என்பதை முடிவு செய்ய ஒரு குழு செயல்படும். உள்துறை செயலாளர், பொதுத் துறை செயலாளர், பணியாளர் மற்றும் நிர்வாகத் துறை செயலாளர், டிஜிபி மற்றும் உள்துறை இணைச் செயலாளர் மற்றும் உளவுத்துறை கூடுதல் டிஜிபி ஆகியோரைக் கொண்ட குழு யாருக்கு கூடுதல் பதவி உயர்வு வழங்குவது என்று முடிவு செய்யும். இந்தக் குழு பரிந்துறை செய்யும் நபர்களுக்கு எவ்விதமான தண்டனைகளும் இருக்கக் கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு விதிகள் உண்டு.
ஆனால், இந்த அரசு ஆணையை சற்றும் மதிக்காமல் ஜெயலலிதா உத்தரவிட்டார் என்ற ஒரே காரணத்துக்காக 1100க்கும் மேற்பட்டோருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது. இப்படி பதவி உயர்வு வழங்கப்பட்டவர்கள், அடுத்த பதவியின் பணி மூப்பு பட்டியலின் கடைசியில் வைக்கப்படுவார் என்றும் உத்தரவிடப்பட்டது.
நடைமுறையில் உள்ள விதிகளின் படி, இப்படி கூடுதல் பதவி உயர்வு வழங்கப்பட்டவர்களுக்கு, அடுத்த பதவி உயர்வு, அவர்கள் பணியில் சேர்கையில் இருந்த பணி மூப்பின் அடிப்படையில் மட்டுமே வழங்கப்பட வேண்டும். உதாரணத்துக்கு, 19.10.1996ல் 400 பேர் உதவி ஆய்வாளர்களாக பணியில் சேர்கிறார்கள். அவர்களில் 4 பேர் அதிரடிப்படையில் இருந்தார்கள் என்பதற்காக 2004ல் ஆய்வாளர்களாக பதவி உயர்வு கொடுக்கப்படுகிறது. அவர்களோடு 1996ல் பணியில் சேர்ந்த மீதம் உள்ள 396 பேருக்கு 2006ல் ஆய்வாளர் பதவி உயர்வு வழங்கப்படுகிறது. இவர்களுக்கு அடுத்த பதவி உயர்வான டிஎஸ்பி முறைப்படி 2011ல் வழங்கப்படுகிறது என்று வைத்துக் கொள்வோம். 2011 அதிரடிப்படையில் இருந்த காரணத்துக்காக ஆய்வாளர் பதவி உயர்வு பெற்ற 4 பேரும், 2011ல்தான் டிஎஸ்பியாக வேண்டும். ஏற்கனவே அதிரடிப்படையில் பணியாற்றியதற்காக 2004ல் அவர்களோடு பணியில் சேர்ந்தவர்களுக்கு முன்னதாக பதவி உயர்வு பெற்றுவிட்டார்கள் என்பதற்காக முன்கூ ட்டிய பதவி உயர்வு கொடுக்கப்படக் கூடாது.
ஏன் கொடுக்க க்கூடாது என்றால், 1987ல் 300 பேர் உதவி ஆய்வாளர்களாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் என்றால், அவர்களின் பயிற்சி காலத்தில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் அவர்கள் ரேங்க் நிர்ணயிக்கப்படும். அந்த வரிசையின் அடிப்படையில்தான் அவர்கள் பணி ஓய்வு பெறும் வரை பதவி உயர்வு வழங்கப்படும்.
அதிரடிப்படையில் இருந்த காரணத்துக்காக ஒருவருக்கு பதவி உயர்வு வழங்கப்படுகிறதென்றால், அவருக்கான அடுத்த பதவி உயர்வு, அவர் பணியில் சேர்கையில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் பெற்ற ரேங்க்கின் அடிப்படையில்தான் வழங்கப்பட வேண்டும் என்பதே விதி. ஆனால் ஜெயலலிதா அரசு, ஒரு கட்ட பதவி உயர்வு வழங்கப்பட்டவர்களுக்கு அடுத்தடுத்து பதவி உயர்வுகளை வழங்க வகை செய்து, அரசாணை வெளியிட்டது. இதன் தாக்கம் என்னவென்றால், 2002ம் ஆண்டு ஒருவர் பணியில் சேர்கிறார். அவர் பயிற்சியில் பெற்ற பணி மூப்பு 380 என்று வைத்துக் கொள்வோம். 2004ம் ஆண்டு அதிரடிப்படையில் இருந்த தால் அவருக்கு ஆய்வாளராக பதவி உயர்வு வழங்கப்படுகிறது. அதற்குப் பிறகு அவருக்கும் அவரோடு பணியில் சேர்ந்தவர்களுக்கும் சம்பந்தமே இல்லை. அதற்குப் பிறகு அவருக்கு அடுத்தடுத்த பதவி உயர்வுகள் கிடைத்தபடி இருக்கும். அவரோடு பணியில் சேர்ந்தவர் டிஎஸ்பியாக பதவி ஓய்வு பெற்றால், அதிரடிப்படையில் இருந்தவர் எஸ்பியாக பதவி ஓய்வு பெறுவார்.
2007ம் ஆண்டு திமுக அரசு பதவியேற்ற பிறகு, இந்த விதி மாற்றப்பட்டது. அதிரடிப் படையில் இருந்தவர்களுக்கு கொடுக்கப்பட்ட பதவி உயர்வு ஒரு முறைதான். அவர்களின் அடுத்த பதவி உயர்வு, அவர்கள் பணியில் சேர்கையில் இருந்த பணி மூப்பின் அடிப்படையில் வழங்கப்படும் என்று உத்தரவிடப்பட்டது.
இதற்குப் பிறகுதான் இந்த விவகாரம் மூடர் கூடத்துக்கு வருகிறது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், அதிரடிப்படையில் பணியாற்றிய ஐபிஎஸ் அதிகாரிகள் மூன்று பேருக்கு ஜெயலலிதா அரசு பதவி உயர்வு வழங்கியது. அந்த மூன்று அதிகாரிகள் அப்போது கூடுதல் டிஜிபியாக இருந்த விஜயக்குமார், எஸ்.பிக்களாக இருந்த சண்முகவேல் மற்றும் செந்தாமரைக்கண்ணன். விஜயக்குமாரை டிஜிபியாகவும், சண்முகவேல் மற்றும் செந்தாமணைக்கண்ணன் டிஐஜியாவகவும் பதவி உயர்த்தப்பட்டனர் என்று அறிவிக்கப்பட்டது. இது போல பதவி உயர்வு கொடுக்க ஐபிஎஸ் விதிகளில் இடமில்லை என்று மத்திய உள்துறை தெரிவித்ததை அடுத்து இந்தப் பதவி உயர்வுகள் சத்தமில்லாமல் வாபஸ் பெறப்பட்டன.
அதிரடிப்படையில் இருந்தவர்களுக்கு சீனியாரிட்டி வழங்க இயலாது என்று திமுக அரசில் மாற்றப்பட்ட விதியை எதிர்த்து அதிரடிப்படையில் பதவி உயர்வு பெற்றவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கின்றனர். பத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி வெங்கட்ராமன் ஒரு விரிவான தீர்ப்பை வழங்குகிறார்.
நீதிபதி தனது தீர்ப்பில் இந்தப் பதவி உயர்வுகள் ஒவ்வொரு தனிப்பட்ட நபரின் வீரதீர சாகசத்தை ஆராய்ந்து கொடுக்கப்பட வில்லை. இந்தப் பதவி உயர்வு வழங்கிய, இதற்கென அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளைப் பார்க்கையிலும் பதவி உயர்வுகள் ஒவ்வொரு நபரின் சாகசத்தை ஆராய்ந்த பிறகு பரிந்துரை செய்யப்படவில்லை என்று தெரிகிறது. கூடுதல் பதவி உயர்வு வழங்குவதற்கென்று விதிமுறைகளை வகுத்து அரசு வெளியிட்ட 1996ம் ஆண்டு அரசாணை பின்பற்றப்படவில்லை. பணி மூப்பு, முதுநிலை (Seniority) பாதிக்கப்படுகிறது என்று அதிரடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்பட்டவர்களை விட மூத்தவர்கள் மனு அளித்தால், அதை பரிசீலிக்கும் உரிமை அரசுக்கு உண்டு. அதிரடிப்படையில் பதவி உயர்வு பெற்றவர்களுக்கு அடுத்தடுத்த பதவி உயர்வுகளுக்கு பணி மூப்பு கிடையாது என்று அரசு வெளியிட்டுள்ள அரசாணை சரியானதே என்று கூறி, அதிரடிப்படையினர் பணி மூப்பு கேட்டு தொடர்ந்த அத்தனை வழக்குகளையும் தள்ளுபடி செய்தார்.
இதை எதிர்த்து அதிரடிப்படையினர் சென்னை உயர்நீதிமன்ற டிவிஷன் பென்ச் முன்பு மேல் முறையீடு செய்கின்றனர். இதற்குள் மீண்டும் அதிமுக ஆட்சி வந்து விடுகிறது. திமுக ஆட்சி வந்தால் திமுக நீதிபதிகளாகவும், அதிமுக ஆட்சி வந்தால் அதிமுக நீதிபதிகளாகவும் நிறம் மாறுவது இயல்புதானே ? மேல் முறையீட்டின்போது, “நீதியின் ஒரே நாயகர் எலிப்பி தர்மாராவ்” நீதிபதி வெங்கட்ராமனின் தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதித்து 12.04.2012 அன்று உத்தரவிடுகிறது எலிப்பி தலைமையிலான டிவிஷன் பென்ச். இந்த இடைக்கால உத்தரவின் அடிப்படையில் அடுத்து என்ன செய்யலாம் என்று வாதப்புலி வண்டு முருகனிடம் கருத்து கேட்கின்றது அரசு. வாதப்புலி வண்டு முருகன் இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளதால், அதிரடிப்படையில் பதவி உயர்வு பெற்றவர்களுக்கு, பணி மூப்பு வழங்கி அடுத்தடுத்து பதவி உயர்வு வழங்க எந்த தடையும் இல்லை என்று கருத்து வழங்குகிறார் வண்டு முருகன். இந்தக் கருத்தின் அடிப்படையில் பணி மூப்பு வழங்கி புதிய அரசாணை வெளியிடப்பட்டு, பதவி உயர்வு வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.
நீதிபதி சித்ரா வெங்கட்ராமன்
இதை எதிர்த்து மேலும் 12க்கும் மேற்பட்ட வழக்குகள் தாக்கல் செய்யப்படுகின்றன. இந்த வழக்குகள் நீதிபதி சித்ரா வெங்கட்ராமன் தலைமையிலான டிவிஷன் பென்ச் முன்பாக விசாரணைக்கு வருகிறது. விசாரணையின்போது, அதிரடிப்படையில் உள்ளவர்களுக்கு எப்படியாவது பணி மூப்பு வழங்கி விட வேண்டும் என்று துடியாகத் துடிக்கிறார் நீதிபதி சித்ரா வெங்கட்ராமன். வாதங்கள் நடந்து கொண்டிருக்கும்போதே, “அதிரடிப்படையில் உள்ளவர்கள் உயிரைப் பணயம் வைத்து பணியாற்றியிருக்கிறார்கள்… அவர்களுக்கு ஏதாவது செய்ய நினைக்கும் அரசுக்கு நாம் உதவ வேண்டும்” என்று அடிக்கடி கூறுகிறார். வழக்கு தொடர்ந்தவர்களுக்கும், அதிரடிப்படையில் உள்ளவர்களுக்கும் இடையே சமாதானம் ஏற்படுத்த வேண்டும் என்று முயல்கிறார். ஆனால் எந்த சமாதானத்துக்கும் வழக்கு தொடர்ந்தவர்கள் ஒப்புக் கொள்ளவில்லை. கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கு இந்த சமாதான முயற்சி நடைபெறுகிறது. இறுதியாக எந்த சமாதான உடன்படிக்கையும் எட்ட முடியாத காரணத்தால், வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்றி உத்தரவிடுகிறார்.
இதன் பிறகு இந்த வழக்கு நீதிபதிகள் பானுமதி மற்றும் ரவிச்சந்திர பாபு ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வருகிறது. இந்த டிவிஷன் பென்ச் முன்பாக, மிக மிக விரிவாக விசாரணை நடைபெறுகிறது. விசாரணையின் இறுதியில் நீதிபதி பானுமதி தலைமையிலான டிவிஷன் பென்ச் இவ்வாறு தீர்ப்பளித்தனர்.
நீதிபதி பானுமதி
நீதிபதிகள் ரவிச்சந்திர பாபு மற்றும் இக்பால்
“ஆட்சிகள் மாறலாம். ஆனால் அரசு மாறாது. ஏற்கனவே ஒரு நீதிபதியின் முன்பு நடந்த விசாரணையின்போது அரசு எடுத்த நிலைபாட்டை (திமுக ஆட்சியில்) இப்போது மாற்றிக் கொள்ள இயலாது. குறிப்பாக, அந்த நிலைப்பாட்டின் அடிப்படையில் தீர்ப்பும் வந்துவிட்ட நிலையில் அவ்வாறு செய்ய இயலாது. ஏற்கனவே நாங்கள் செய்த வாதங்களை இப்போது மாற்றிக் கொள்கிறோம் என்று அரசு கூற இயலாது. கொள்கை முடிவு என்ற போர்வையில் ஏற்கனவே எடுத்த நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வதை அனுமதிக்க முடியாது. வழக்கு விசாரணையின் போது ஒரு நிலைப்பாட்டையும், மேல்முறையீட்டின் போது வேறொரு நிலைப்பாட்டையும் அரசு எடுக்க இயலாது. அதை அனுமதித்தோமேயானால் நீதி வழங்க இயலாது. அரசும் நீதிமன்றத்தின் முன் ஒரு வாதிதான் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
இந்த வழக்கில் அதிரடிப்படையினருக்கு பணி மூப்பு வழங்கும் 03.05.2012 நாளிட்ட அரசாணையை ரத்து செய்வதோடு நாங்கள் நின்றிருக்க முடியும். ஆனால், மேல்முறையீட்டின் முடிவுக்காக காத்திராமல் அவசர அவசரமாக 03.05.2012 நாளிட்ட அரசாணை வெளியிட்ட அரசின் செயலைக் கண்டு அதிர்ச்சி அடைவதோடு எங்கள் அதிருப்தியையும் வெளிப்படுத்துகிறோம். இதனால் அரசாணை எண் 332ஐ ரத்து செய்கிறோம்” என்று தீர்ப்பளித்தனர்.
மானம், ரோஷம், உள்ள ஒரு அரசாங்கமாக இருந்தால், இந்தத் தீர்ப்புக்குப் பிறகு அதிரடிப்படையினருக்கு பணி மூப்பு வழங்கும் திட்டத்தை கைவிட்டிருக்க வேண்டும். ஆனால் ஜெயலலிதா அரசிடம் அதை எதிர்ப்பார்க்க முடியுமா ?
அடுத்து என்ன செய்வது என்று யோசிக்கிறார்கள். ஏற்கனவே உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக வாதாடிய வாதப்புலி வண்டு முருகன் தற்போது டிஎன்பிஎஸ்சி தலைவராக இருப்பதால் அவரிடம் கருத்து கேட்க முடிவு செய்து கருத்து கேட்கிறார்கள். அவர், உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு, அடுத்த பதவி உயர்வு வழங்க ஏதுவாக, விதிமுறைகளில் மாற்றம் செய்ய தடையாக இல்லை என்று கருத்து தெரிவிக்கிறார். இந்தக் கருத்தின் அடிப்படையில் விதிகளில் மீண்டும் மாற்றம் செய்யப்படுகிறது.
வாதப்புலி வண்டு முருகன்
பிறகு…. ? பிறகென்ன ? மீண்டும் வழக்குகள் தாக்கல் செய்யப்படுகின்றன. நீதிமன்றத்தின் தீர்ப்பை மீறி விதிகளில் மாற்றம் செய்தது குறித்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த விதிமாற்றத்தை எதிர்த்த வழக்கு, நீதிபதி ஹரிபரந்தாமன் முன்னிலையில் விசாரணைக்கு வருகிறது. வழக்கை விசாரித்த நீதிபதி, ஒரு நிமிடமும் தாமதிக்காமல், விதிமாற்றத்துக்கு தடை விதித்த்தோடு அல்லாமல், நீதிபதி பானுமதியின் தீர்ப்புக்கு மாறுபட்டு எந்த பதவி உயர்வும் வழங்கக் கூடாது என்றும் உத்தரவிடுகிறார். நீதிபதி ஹரிபரந்தாமன் இருந்தவரை அரசு அமைதியாக இருந்தது. அவர் மாறுதலாகி வேறு நீதிமன்றத்துக்கு சென்றதும், இந்த வழக்குகளை விசாரிப்பதற்காக நிதிபதி கிருபாகரன் வருகிறார். கிருபாகரன் வந்ததும் அரசுத் தரப்புக்கு ஒரே கொண்டாட்டம்தான். வழக்கை வேக வேகமாக நடத்துகிறார்கள்.
அரசு தலைமை வழக்கறிஞரும், வண்டு முருகனாக உருவாகிக் கொண்டிருப்பவருமான சோமயாஜி வாதிட்டார். கிட்டத்தட்ட 8 ஆண்டுகளாக பதவி உயர்வு வழங்கப்படாமல் உள்ள 1979ம் ஆண்டு பணியில் சேர்ந்தவர்கள் டிஎஸ்பிகளாக இருக்கிறார்களே… அவர்களுக்கு ஏன் இன்னும் பதவி உயர்வு வழங்கவில்லை என்று நீதிபதி கேட்டதும், சோமயாஜி, அதிரடிப்படையினருக்கு வழங்காமல் அவர்களுக்கு வழங்க இயலாது என்று கூறுகிறார். ஒரு டிவிஷன் பென்ச், அதிரடிப்படையினருக்கு பணி மூப்பு இல்லை, அவர்களுக்கு பதவி உயர்வு வழங்கியதே தவறு என்று தெளிவாக உத்தரவு பிறப்பித்த பின்னரும், இந்த வாதத்தை எடுத்து வைக்கிறார் சோமயாஜி. 1979ம் ஆண்டு பணியில் சேர்ந்தவர்கள் பல ஆண்டுகளாக பதவி உயர்வு இல்லாமல் இருக்கிறார்களே… அவர்களில் பலர் ஓய்வு பெற்று வருகிறார்களே… இது குறித்து நான் விரிவான உத்தரவு பிறப்பிக்க உள்ளேன் என்று நீதிபதி கிருபாகரன் கூறியபோது, மூடர் கூடத்தைப் பற்றித் தெரியாத பல காவல்துறை அதிகாரிகள் புளகாங்கிதம் அடைந்தனர். சரி… நமக்கு ஒரு நல்ல தீர்ப்பு வர இருக்கிறது… டிவிஷன் பென்ச் தீர்ப்புக்கு எதிராக எதுவும் செய்யக்கூடாது என்று உத்தரவு பிறப்பிப்பார் நீதிபதி என்று மகிழ்ச்சியில் இருந்தார்கள்.
1979, 1981, 1987, 1996ம் ஆண்டு பணியில் சேர்ந்த டிஎஸ்பிக்களுக்கு பொது விதிகள் 39ன் படி அவர்கள் பணி மூப்புக்கு ஏற்ப பதவி உயர்வு வழங்க வேண்டும். இதற்கு நடுவே நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்ட க்ரூப் 1 டிஎஸ்பிக்கள் இருந்தால் அவர்களுக்கும் பதவி உயர்வு வழங்க வேண்டும்.
அதிரடிப்படையில் பதவி உயர்வு பெற்றவர்களுக்கு கூடுதல் தற்காலிக பணியிடங்கள் (Super numerary posts) உருவாக்கி கூடுதல் எஸ்பிகளாக பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
நீதிபதி கிருபாகரன்
இந்த தீர்ப்பு நீதிபதியின் தீர்ப்பு அல்ல. அரசு வழக்கறிஞர் சோமயாஜியின் தீர்ப்பு. ஏன் என்று பின்னால் பார்ப்போம். இந்த தீர்ப்பு வெள்ளிக்கிழமை அன்று வழங்கப்பட்டது. வழக்கமாக தீர்ப்பு வழங்கப்பட்டால், அன்றே வழங்கப்பட வேண்டும் என்று தெளிவாக உத்தரவிட்டாலே தவிர, தீர்ப்பின் நகல்கள் கிடைக்க நான்கு நாட்கள் ஆகி விடும். தீர்ப்பின் நகல்கள் நீதிமன்றத்திலிருந்து வந்தாலேயொழிய அரசு இம்மியளவும் நகராது. இதுதான் வழக்கமான நடைமுறை. ஆனால், இந்த விவகாரத்தில் வெள்ளிக்கிழமை தீர்ப்பு வெளியானதும், பத்திரிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பின் நகலை பெற்று, – அந்த தீர்ப்பு நீதிபதியின் திருத்தல்களோடு கையெழுத்திடாமல் இருந்த தீர்ப்பு – அதன் அடிப்படையில் சனிக்கிழமை அன்று தலைமை வழக்கறிஞரின் கருத்தை பெற்று, ஞாயிற்றுக்கிழமை அன்று அதிரடிப்படையினர் உள்ளிட்டோருக்கு பதவி உயர்வு வழங்கி, உத்தரவு நகல் வருவதற்கு முன்பாகவே போன் மூலம் பதவியேற்க உத்தரவிட்டு, ஞாயிற்றுக்கிழமை இரவு அன்று அத்தனை பேரும் பதவியேற்க வேண்டும் என்று உத்தரவு வழங்கப்பட்டது.
திருத்தங்களுடன் கையெழுத்தில்லாத நீதிபதியின் தீர்ப்பு
அரசாங்கம் இப்படி வேகமாக வேலை செய்து பார்த்திருக்கிறீர்களா ? இதற்கு முக்கிய காரணம், ஜெயலலிதாவின் பாதுகாப்புப் படையில் உள்ள மூன்று டிஎஸ்பிக்களும் இதில் அடக்கம். இது மட்டும் காரணமல்ல… திங்கட்கிழமை, நீதிபதி கிருபாகரனின் உத்தரவுக்கு தடை பெற்றுவிட்டால் ?
அவசர அவசரமாக வெளியிடப்பட்ட அரசாணை
சென்னை உயர்நீதிமன்றத்தின் ஒரு டிவிஷன் பென்ச், எந்தப் பதவி உயர்வுகளை விதிகளுக்கு முரணானது, அந்த பதவி உயர்வு பெற்றவர்களுக்கு பணி மூப்பு கிடையாது என்று தெளிவாக தீர்ப்பளித்திருந்ததோ, அப்படி பதவி உயர்வு பெற்றவர்களுக்கு அடுத்த பதவி உயர்வு வழங்கியே ஆக வேண்டும் என்று தீர்ப்பளிக்கிறார் நீதிபதி கிருபாகரன்.
இந்தப் பதவி உயர்வுகளை அடுத்து, திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் மேலும் ஒரு அரை டஜன் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட உள்ளன. ஏற்கனவே நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளன என்று பெரும் குறைபாடு இருக்கையில், மேலும் மேலும் வழக்குகளை வளர்க்கும் இந்த நீதிபதிகளின் போக்குகளைப் பார்த்தீர்களா ?
சரி.. இந்தத் தீர்ப்பு நீதிபதி கிருபாகரனின் தீர்ப்பு அல்ல. சோமயாஜியின் தீர்ப்பு என்பது எப்படி சரியாகும் ? . It is a settled legal proposition that relief not founded on the pleadings should not be granted. அதாவது, இப்படி ஒரு முடிவு வேண்டும் என்று கோராத முடிவை வழங்கக் கூடாது என்பது பல்வேறு உயர்நீதிமன்றங்கள் மற்றும் உச்சநீதிமன்றத் தீர்ப்புகளால் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன.
நீதிபதி கிருபாகரனின் முன்பாக நிலுவையில் இருந்த வழக்குகள் 5. முதல் வழக்கு 1979ம் ஆண்டு பணியில் சேர்ந்தவர்களுக்கு கூடுதல் எஸ்.பி பதவி உயர்வு கேட்ட வழக்கு. (WP 21192 of 2013)
இரண்டாவது வழக்கு அதிரடிப்படையினருக்கு சீனியாரிட்டி வழங்க அரசு கொண்டு வந்த சட்டத்திருத்தத்தை ரத்து செய்யக் கோரும் வழக்கு. (WP 18725 of 2013)
அடுத்த வழக்கு 1987ம் ஆண்டு பணியில் சேர்ந்தவர்களால் தாக்கல் செய்யப்பட்டது. இதில் நீதிபதி பானுமதியின் தீர்ப்பின்படி, அடுத்த பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று கோரிய வழக்கு. (WP 24461 of 2013)
அடுத்த வழக்கு 1981ம் ஆண்டு பணியில் சேர்ந்த பெண் உதவி ஆய்வாளர்களால் தாக்கல் செய்யப்பட்டது. இதில் நீதிபதி பானுமதியின் தீர்ப்பின்படி, அடுத்த பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. (WP 26365 of 2013)
நான்காவது வழக்கு பணி மூப்பு பட்டியலை வெளியிடவேண்டும் என்று 1996ம் ஆண்டு பணியில் சேர்ந்தவர்களால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு. (WP 17534 of 2013)
ஐந்தாவது வழக்கு பணி மூப்பு பட்டியலை வெளியிடவேண்டும் என்று 1994ம் ஆண்டு பணியில் சேர்ந்தவர்களால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு. (WP 26276 of 2013)
இந்த வழக்குகளில் ஏதாவது ஒரு வழக்கு அதிரடிப்படையினரால் தாக்கல் செய்யப்பட்டுள்ளதா ? அதிரடிப்படையினரைச் சேர்ந்த யாராவது ஒருவர் எங்களுக்கு பதவி உயர்வு வேண்டும் என்று கேட்டுள்ளனரா ? அப்படி அவர்கள் கேட்கக்கூட முடியாது. ஏனென்றால் ஒரு டிவிஷன் பென்ச்சின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றம்தான் செல்ல முடியும். ஒற்றை நீதிபதிக்கு அந்த அதிகாரம் கிடையவே கிடையாது.
இப்படி யாருமே கேட்காதபோது “அதிரடிப்படையில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும்” என்று எதற்காக தீர்ப்பு வழங்கினார் நீதிபதி ? உனக்கேன் அக்கறை.. ? உலகத்தில் யாருக்கும் இல்லாத அக்கறை ? என்று கேட்கலாம் என நினைக்காதீர்கள்.. நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பாயும்.
அரசு தலைமை வழக்கறிஞர் சோமயாஜி
இந்த காரணம் மட்டும், இது சோமயாஜியின் தீர்ப்பு என்று சொல்லப் போதுமானதா ? இல்லை.
நீதிபதி கிருபாகரன் தனது தீர்ப்பில், “நேரடியாக தேர்ந்தெடுக்கப் பட்ட க்ரூப் 1 டிஎஸ்பிக்கள் இருந்தால், அவர்களுக்கும் பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும்”. இதுதான், இந்த த் தீர்ப்பை இது சோமயாஜியின் தீர்ப்பு என்று உறுதி செய்கிறது. நீதிபதி கிருபாகரன் விசாரித்த வழக்குகள் எதிலும், க்ரூப் 1 டிஎஸ்பிக்களைப் பற்றி ஒரு வார்த்தை கூட இல்லை. மேலும் நீதிபதி கிருபாகரனுக்கு பதவி உயர்வு வழங்கப்பட வேண்டிய க்ரூப் 1 டிஎஸ்பிக்கள் இருக்கிறார்கள் என்பது கூட தெரியாது. அப்படி இருக்கையில் எதற்காக திடீரென்று க்ரூப் 1 டிஎஸ்பிக்களைப் பற்றி அக்கறை கொள்கிறார் ?
மேலும், நீதிபதி கிருபாகரன் பதவி உயர்வு வழங்கச் சொல்லிய டிஎஸ்பிக்கள் யார் தெரியுமா ? சவுக்கில் கொள்ளையோ கொள்ளை என்ற கட்டுரையைப் படியுங்கள். சென்னை உயர்நீதிமன்ற டிவிஷன் பென்ச், டிஎன்பிஎஸ்சி தேர்ச்சியையே ரத்து செய்த 14 டிஎஸ்பிக்களுக்குத்தான் பதவி உயர்வு வழங்க உத்தரவிட்டுள்ளார் நீதிபதி கிருபாகரன்.
நீதிமன்றத்தின் தீர்ப்புகளை அரசு மதிப்பதில்லை. டிவிஷன் பென்ச்சின் தீர்ப்புகளை ஒற்றை நீதிபதிகள் மதிப்பதில்லை. மதிக்கப்போவதில்லை என்பது தெரிந்தே மயிர்பிளக்கும் விவாதங்களை நடத்துகிறார்கள். பல்வேறு சட்ட நுணுக்கங்களை ஆராய்கிறார்கள். ஆனால் இவையெல்லாம் எதற்கு என்பதுதான் புரிய மறுக்கிறது.
இப்போது சொல்லுங்கள் இது மூடர் கூடமா இல்லையா ?