“வணக்கம் எல்லோருக்கும் வணக்கம்” என்று சொல்லியபடி டாஸ்மாக் தமிழ் உள்ளே நுழைந்த்தும் யாரும் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தனர்.
”என்ன… எல்லோரும் அமைதியா இருக்கீங்க… பேச மாட்டீங்களா ? ” என்றான்.
மீண்டும் அமைதி.
“என்ன யாருமே பேச மாட்றீங்க… ? என்ன ஆச்சு ? “
“எல்லோரும் உன் மேல கோவமா இருக்காங்கப்பா… “ என்றார் கணேசன்.
“என்னண்ணே என்ன கோவம்… ? “
“பின்ன என்னப்பா… ஒரு மாசத்துக்கு மேல ஆளக் காணோம்.. சொல்லாம கொள்ளாம போயிட்ட. யாருக்கும் எந்தத் தகவலும் தெரியலை… அதான் கோவம். “
“அண்ணே…. ஒரு சின்ன விபத்து. வலது கையில எலும்பு முறிவு. அறுவை சிகிச்சை செய்ய வேண்டியதாயிடுச்சு. அதனால உங்களை யாரையும் தொடர்பு கொள்ள முடியலை. இதுக்குப் போயி கோவிச்சுக்கிட்டு பேசாம இருந்தா எப்படின்ணே… ? “
“சரி விடுங்கப்பா… தமிழ்தான் உடம்பு சரியில்லன்னு சொல்றான்ல… அதுக்கப்புறமும் பேசாம இருந்தா எப்படி… நம்ப பையன்பா அவன் “ என்று மற்றவர்களைப் பார்த்து சொன்னார்.
முதலில் சிரித்த முகத்தோடு தமிழைப் பார்த்து புன்னகைத்தான் பீமராஜன். “கை எப்படி மச்சான் இருக்கு ? “
“பரவாயில்லடா… இன்னும் முழுமையா சரியாகலை.. ஆனா, முன்னைக்கு இப்போ பரவாயில்ல. ஒரு மாசமா, ‘பார்’ல யாரையும் பாக்கல. நெறய்ய பேருக்கு என்னை மறந்தே போச்சு.
“சரி சரி ஓவரா மொக்கை போடாத.. மேட்டருக்கு வா… “ என்று தமிழை கலாய்த்தான் ரத்னவேல்.
“வர்றேன்டா இருடா. இப்போதைக்கு ஹாட் டாபிக் சிபிஐ அமைப்பு சட்ட விரோதமானதுன்ற கவுஹாத்தி உயர்நீதிமன்றத் தீர்ப்புதான். “
“அதுக்குதான் உச்சநீதிமன்றம் தடை விதிச்சுடுச்சே… ? “
“தடை விதிச்சதை விடு. அந்த வழக்கு, 2007ம் ஆண்டுல இருந்து, கவுஹாத்தி உயர்நீதிமன்றத்துல நடந்துக்கிட்டு இருக்கு. 1963ம் வருஷத்துல இருந்து இத்தனை நாளா, யாருமே சேலஞ் பண்ணாத ஒரு விஷயத்தை, தொலைபேசித் துறையில வேலை பாக்கற ஒரு சாதாரண நபர் சேலஞ் பண்றார். சட்டபூர்வமா, குடியரசுத்தலைவரோட ஒப்புதலோட உருவாகியிருக்க வேண்டிய ஒரு அமைப்பு. இதை ஒரு சாதாரண ஆணை மூலமா (Executive instructions) உருவாக்குனது தப்புன்றது, சிபிஐ மற்றும் மத்திய அரசு அதிகாரிகள் அத்தனை பேருக்கும் தெரியும். இந்த தவறை சரி செய்ய, மத்திய அரசு முன் தேதியிட்டு ஒரு சட்டத் திருத்தத்தை கொண்டு வந்திருந்தா, இந்த விவகாரம் இந்த அளவுக்கு சிக்கலாகியிருக்காது. “
“அப்புறம் ஏன் இத்தனை நாளா இதை செய்யல ? “
“ஏன் செய்யலன்னா, எந்த நீதிபதி இதை தப்புன்னு சொல்லப்போறாங்க… அப்படி சொல்றதுக்கு எந்த நீதிபதிக்கு தைரியம் இருக்குன்ற திமிர்தான்“
“நீதிபதிகள் எப்படி இருக்கணும்ன்றதுக்கு கவுஹாத்தி நீதிபதிகள் அன்சாரி மற்றும் இந்திரா ஷா ஒரு சிறந்த உதாரணம். அனைத்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளோட வாகனங்களிலும் இரட்டை இலை சின்னம் வரையப்பட வேண்டும் னு ஜெயலலிதா ஒரு உத்தரவு போட்டாங்கன்னு வச்சுக்குவோம். இதை எதிர்த்து யாராவது பொதுநல வழக்கு தொடுத்தா சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் என்ன தீர்ப்பு கொடுப்பாங்க தெரியுமா ?
”இலை என்பது சுற்றுச் சூழலை குறிக்கிறது. பொது மக்களைப் போல நீதிபதிகளும், இயற்கையை வளர்க்கும் உணர்வோடு இருக்க வேண்டும் என்பதற்காகவே அரசு இப்படி ஒரு உத்தரவை பிறப்பித்திருக்கிறது. நாடெங்கும் இயற்கை வளங்கள் அழிக்கப்படும் ஒரு சூழலில் இப்படிப்பட்ட அரசின் முயற்சிகள் வரவேற்கப்பட வேண்டியன. இயற்கை ஆர்வம் இல்லாமல், அரசின் கொள்கை முடிவுகளை எதிர்த்து தொடரப்படும் இது போன்ற பொதுநல வழக்குகள் நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்கின்றன” னு தீர்ப்பு கொடுத்துருப்பாங்க.
எம்.ஜி.ஆர் நினைவகத்துல இரட்டை இலை சின்னம் வச்சதை எதிர்த்து திமுக வழக்கு தொடுத்தப்பவே அதை தடை செய்திருந்தா, இன்னைக்கு மினி பஸ், மினரல் வாட்டர் ன்னு எல்லாத்துலயும் இரட்டை இலை சின்னம் அச்சடிக்கும் வழக்கம் இருந்திருக்காது. முதுகெலும்பை கழற்றி வச்சுட்டு இருக்கும் குமாஸ்தாக்களை நீதிபதிகளாக்கினா இப்படித்தான் நடக்கும்.”
”சரி டா அலுத்துக்காத… அம்மா ஆட்சி எப்படி இருக்கு” என்றான் பீமராஜன்.
”அம்மாவுக்கு ஆட்சி பண்றதை விட, பெங்களுரு சொத்துக்குவிப்பு வழக்குதான் மனசு முழுக்க ஆக்ரமிச்சிருக்கு. எப்படியாவது மத்தியில அதிகாரத்தை பிடிச்சு இந்த சொத்துக் குவிப்பு வழக்கை ஊத்தி மூடணும்னு நினைக்கிறாங்க. ஆனா, நாளுக்கு நாள் சொத்துக்குவிப்பு வழக்குல நெருக்கடி அதிகமாயிட்டுதான் இருக்கு.”
”என்னடா சொல்ற… உச்சநீதிமன்ற நீதிபதிகள்தான் ஜெயலலிதா என்ன மனு தாக்கல் பண்ணாலும் ஏத்துக்கிட்டு விசாரிக்கிறாங்களே… அப்புறம் என்ன ? ” என்றான் ரத்னவேல்.
”விசாரிக்கிறாங்கப்பா… இந்த வருஷம் மட்டும் இது வரைக்கும் சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பா ஜெயலலிதா இது வரைக்கும் 4 மனுக்கள் தாக்கல் செய்திருக்காங்க.. பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணும், வேற எந்த லைட்டும் வேணாம் னு கேட்டு 17 வருஷம் கழிச்சு ஜெயலலிதா தொடுக்கிற எல்லா வழக்கையும் பொறுமையா விசாரிச்சிக்கிட்டுதான் இருக்காங்க. எந்த அளவுக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி..எஸ்.சவுஹான் மற்றும் போப்டே ஜெயலலிதாவுக்கு ஆதரவா இருக்காங்கன்னா, 30 செப்டம்பர் 2013 அன்னைக்கு கொடுத்த தீர்ப்புல, கர்நாடக அரசு ஊழியர்கள் விதிகளில் ஒரு ஓய்வு பெற்ற ஊழியரை ஒப்பந்த அடிப்படையில நியமிக்க அந்த விதிகளில் இடமிருக்கு. அதே மாதிரி ஜெயலலிதா வழக்கை விசாரிக்கக் கூடிய நீதிபதியையும் மறு நியமனம் செய்யலாம். ஆனா அப்படி செய்யும்படி எங்களால் உத்தரவு பிறப்பிக்க முடியாது. ஆனா, எங்கள் தாழ்மையான கருத்தின்படி, கர்நாடக உயர்நீதிமன்றத்தின் ஆலோசனையோடு, கர்நாடக அரசு, இந்த வழக்கின் தன்மையை கருத்தில் கொண்டு, நீதிபதியை மறு நியமனம் செய்வதை பரிசீலிக்க வேண்டும் னு தீர்ப்பு கொடுத்திருக்காங்க.
”எனக்குத் தெரிஞ்சு, எந்த குற்றவாளிக்கும், இப்படி ஒரு கருணையை காட்டுனமாதிரி தெரியலை… என்னதான் எதிர்ப்பார்க்கிறாங்க ஜெயலலிதா ? ” என்றான் பீமராஜன்.
”இது வரைக்கும் இந்த வழக்கை விசாரிச்ச நீதிபதி பாலகிருஷ்ணாவேதான் தீர்ப்பு சொல்ற வரைக்கும் விசாரிக்கணும் னு எதிர்ப்பார்க்கிறாங்க”
”ஏன் பந்தம் கிந்தமெல்லாம் வேணாமாமா ? ” என்றான் வடிவேல்.
”பந்தமெல்லாம் வேணாமாம். அதே நீதிபதிதான் வேணுமாம். ”
”அதுக்கு என்ன காரணம் சொல்றாங்க ? ”
”வழக்கு ரொம்ப காலதாமதமாயிடுச்சாம். ”
”காலதாமதத்துக்குக் காரணமே ஜெயலலிதாதானே ? ”
”ஜெயலலிதாதான்.. ஆனா, இப்போ வழக்கை விரைவா முடிக்கணும்னு சொல்றாங்க. ”
”என்ன காரணம் அதுக்கு ? ”
நீதிபதி எச். எல். தத்து
”இப்போ இருக்கும் தலைமை நீதிபதி சதாசிவம், ஜெயலலிதாவுக்கு ஆதரவா இருக்கிறார். அதனாலதான், 17 வருஷமா ஒரு வழக்கை இழுத்தடிச்ச ஒரு நபர், எனக்கு இந்த நீதிபதிதான் வேணும், இந்த அரசு வழக்கறிஞர்தான் வேணும்னு தாக்கல் செய்யற வழக்கை உச்சநீதிமன்றம் விசாரிச்சிக்கிட்டு இருக்கு. சதாசிவம் 26.04.2014 அன்னைக்கு ஓய்வு பெர்றார். அவருக்குப் பின்னாடி, அஞ்சு மாசத்துக்கு 27 செப்டம்பர் 2014 வரைக்கும் ஆர்.எம்.லோதா தலைமை நீதிபதியா இருப்பார். அவர் ஓய்வு பெற்ற பிறகு எச்.எல்.தத்து தலைமை நீதிபதியா ஆகிறார். எச்.எல்.தத்து ஒரு வருடம் 3 மாசம், இந்தியாவின் தலைமை நீதிபதியா இருப்பார். எச்.எல் தத்து தான் இப்போவே கர்நாடக உயர்நீதிமன்றத்துக்கு பொறுப்பான உச்சநீதிமன்ற நீதிபதி. அவர், இந்த வழக்கு நேர்மையா நடக்கணும்னு நினைக்கிறார். அதனாலதான், இருக்கிற கர்நாடக நீதிபதிகள்ளயே சிறந்த நபரா அறியப்பட்ற மைக்கேல் துன்னாவை நீதிபதியா நியமிக்க பரிந்துரை பண்ணியிருக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் மற்றும் கர்நாடக அரசு. மைக்கேல் துன்னா, விழிப்புப் பணி பதிவாளரா கர்நாடக உயர்நீதிமன்றத்துல பணியாற்றியவர். நேர்மையான நீதிபதிகளைத்தான் உயர்நீதிமன்ற விழிப்புப் பணி பதிவாளரா நியமிப்பாங்க.
இதை நினைச்சுதான் ஜெயலலிதா பயப்படறாங்க. ”
”அதான் ஜெயலலிதா பயப்பட்றாங்களா ? ”
”அப்புறம் பயம் இருக்காதா ? அதனாலதான் எப்படியாவது உச்சநீதிமன்ற நீதிபதி சதாசிவம் ஓய்வு பெறுவதற்குள்ள எப்படியாவது வழக்கை முடிக்கணும்னு முயற்சி பண்றாங்க…”
”தேர்தல்ல ஜெயிச்சுட்டா.. வழக்கை சுலபமா முடிச்சுட முடியாதா ? ” என்றான் ரத்னவேல். வெறும் இடது சாரிகளை மட்டும் வச்சுக்கிட்டு இந்த தேர்தலில் 35 சீட் வாங்கிடலாம்கிறது ஜெயலலிதாவோட கணக்கு. ஆனா, ஏற்கனவே திமுக மற்றும் அதிமுகவுக்கு இருக்கிற வாக்கு வங்கிகளோட, இஸ்லாமியர்களோட வாக்குகள் சேர்ந்தா, திமுக 15 சீட்டுகளுக்கு மேல வாங்கக் கூடிய சூழல் இருக்கு. 1996ம் ஆண்டு தேர்தலில் படு தோல்வியை சந்திச்ச ஜெயலலிதா 1998ம் ஆண்டு நடந்த பாராளுமன்றத் தேர்தலில் 18 எம்.பி சீட்டுகளை வென்றதை மறந்துடக் கூடாது. அதனால, 40ம் நமதேன்ற ஜெயலலிதாவோட கனவு அவ்வளவு சுலபம் இல்ல”
”அம்மா பாடு கஷ்டம்தான்னு சொல்லு… ”
”கஷ்டம்தான்… கஷ்டம்தான்.. ”
”திமுகவுல என்ன மச்சான் நடக்குது ?” என்றான் பீமராஜன்.
”டிசம்பர் 1ம் தேதி நடக்க இருக்கிற பொதுக்குழுவில், அழகிரிக்கு அதிர்ஷ்டம் அடிச்சாலும் அடிக்கும். வழக்கமா, ஓரங்கட்டப்படும் போதெல்லாம் மோதல் போக்கை கடைபிடிக்கும் அழகிரி, கிட்டத்தட்ட அரசியலை விட்டே ஒதுங்கும் நிலையில் இருப்பது, கருணாநிதிக்கே பெரிய அதிர்ச்சியா இருக்கு.
அவர் அழகிரியிடமிருந்து இப்படி ஒரு முடிவை எதிர்ப்பார்க்கல. மேலும், தென் மாவட்டங்களில் அழகிரி கட்டுப்பாட்டில் இல்லாதது, பல்வேறு சிக்கல்களை உருவாக்கியிருக்கு. பல மாவட்டங்களில் தலைமை சொல்வதை செயல்படுத்தாமல் இருக்கும் சம்பவங்கள் அதிகமாயிட்டே இருக்கு. அதனால, அழகிரிக்கு ஒரு முக்கிய பொறுப்பு கொடுக்கலாம்னு கருணாநிதி நினைக்கிறாரு.. அது மட்டுமில்லாம, அழகிரியும், ஸ்டாலினும் சண்டை போட்டுக்கிட்டே இருந்தாத்தான் கருணாநிதி தலைவரா நீடிக்க முடியும். அழகிரி அமைதியாயிட்டா, அடுத்த ஆப்பு தன்னோட தலைவர் பதவிக்குத்தான்னு கருணாநிதிக்கு நல்லா தெரியும்… அதனால விரைவில், அழகிரி புதிய அவதாரம் எடுப்பதற்கான வாய்ப்புகள் நெறைய்ய இருக்கு.. ”
”கனிமொழி தரப்புல என்ன சொல்றாங்க.. ? ”
”கனிமொழி தரப்புல மகிழ்ச்சியோ மகிழ்ச்சியில இருக்காங்க. கலைஞர் டிவியின் நிதி ஆலோசகர் ராஜேந்திரனோட வாக்குமூலத்தின்படி, கனிமொழிக்கும் 200 கோடி கடன் வாங்கின கலைஞர் டிவி மீட்டிங்குக்கும் சம்பந்தம் இல்லன்னு ஏற்கனவே ராஜேந்திரன் சொல்லியிருந்தார். இப்போ, இந்த வழக்கில் சாட்சியம் சொன்ன, இந்த வழக்கின் உதவிப் புலனாய்வு அதிகாரி எஸ்.பி.சின்ஹா, 200 கோடி வாங்கணும்னு முடிவெடுத்த கலைஞர் டிவியின் போர்டு மீட்டிங்கில் கனிமொழி கலந்து கொள்ளவில்லை, தயாளு மற்றும் சரத்குமார் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர் னு சாட்சி சொல்லியிருக்கார். இது கனிமொழியை இந்த வழக்குல இருந்து முழுமையா விடுவிக்கும். அதனாலதான் இத்தனை மகிழ்ச்சியா இருக்காங்க… ”
”சரி தம்பி… 13.02.2009 அன்னைக்கு நடந்த போர்டு மீட்டிங்கில் கனிமொழி கலந்து கொள்ளலைன்றது இன்னைக்குத்தான் சிபிஐக்கு புதுசா தெரிஞ்சுச்சா ? ”
”அண்ணே… கலைஞர் டிவியோட போர்டு மீட்டிங்குகள் தொடர்பான மினிட் புக், புலனாய்வு அதிகாரியால 18.03.2011 அன்னைக்கு பறிமுதல் பண்ணப்பட்டுச்சு.. அந்த புத்தகத்தைப் பார்த்தாலே அந்தக் கூட்டத்துல கலந்துக்கிட்டது தயாளுவும், சரத்குமாரும் மட்டும்தான்னு தெளிவா தெரியும்.”
”அப்புறம் ஏம்பா கனிமொழியை சிபிஐ கைது பண்ணாங்க.. ? ”
”எல்லாம் ஒரு அட்ஜஸ்ட்மென்ட்தான்ணே… தயாளு அம்மாவுக்கு வயசாயிட்டதால, அவங்களால போயி திஹார் ஜெயில்ல இருக்க முடியாதுன்னுதான், கனிமொழியை காவு கொடுத்தாங்க.. ”
”சரி இதுக்கு சிபிஐ எப்படி ஒத்துக்கிட்டாங்க.. ? ”
”அதுதான் சிபிஐ… கனிமொழிக்கும் இந்த வழக்குக்கும் எந்த சம்பந்தமும் இல்லைன்னு தெரிஞ்சே கனிமொழியை கைது பண்ணாங்க. இப்போ கனிமொழி மேல சாட்சியங்கள் இல்லன்னு சொல்லிட்டாங்க. அம்மாவையும் காப்பாத்தியாச்சு.. மகளையும் காப்பாத்தியாச்சு… இந்த குடும்பத்துக்கு வாங்கிக் கொடுத்த ராசாவும், சரத் குமாரும் இப்போ ஜெயிலுக்குப் போகப்போறாங்க… ”
”காவல்துறை செய்திகள் என்ன மச்சான் இருக்கு” என்றான் ரத்னவேல்.
”அக்டோபர் முதல் வாரத்துல, சென்னை மாநகர காவல்துறையோட நில அபகரிப்புப் பிரிவு ஒரு வழக்கு பதிவு பண்ணாங்க. ராமராஜ், சங்கரம்மாள், தனம்மாள், மற்றும் செல்வி ன்ற நாலு பேரை கைது பண்ணாங்க. இந்த நாலு பேரும் என்ன பண்ணியிருக்காங்கன்னா, 1984ம் ஆண்டு செங்கல்பட்டு மாவட்ட துணை ஆட்சியர், சோழிங்கநல்லூர், பெரும்பாக்கத்தில் 9 ஏக்கர் நிலத்தை இவங்க பேருக்கு எழுதிக் கொடுத்த மாதிரி ஒரு ஆவணத்தை தயார் பண்ணாங்க. இந்த ஆவணத்தின் அடிப்படையில், அரசு ஆவணங்களையும் திருத்தியிருக்காங்க. அந்த திருத்தப்பட்ட ஆவணங்களில் அடிப்படையில 2008ம் ஆண்டு தாலுகா அலுவலகத்தில் பட்டா கேட்டிருக்காங்க. பட்டா மறுக்கப்பட்டதும், இவங்க என்ன நமக்கு பட்டா தர்றது.. நாமளே பட்டா உருவாக்கிக்கலாம்னு முடிவெடுத்து, இவங்களே ஒரு பட்டா தயாரிச்சுட்டாங்க. அந்த 9 ஏக்கர் நிலமும் முதலில் எல்காட் நிறுவனத்துக்கு ஒதுக்கப்பட்டு, பின்னால மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனத்துக்கு ஒதுக்கப்பட்டுச்சு. ”
”சரிப்பா… இது சகஜமா நடக்கறதுதானே… இதுல என்ன விசேஷம்..? ”
”இதுல என்ன விசேஷம்னா இந்த ராமராஜ் ன்ற நபர், 1996ம் வருஷம் லஞ்ச ஒழிப்புத் துறையோட சிறப்புப் புலனாய்வுக் குழுவில வேலை செய்தார். அப்பவே இவருக்கு முழு நேர வேலை ரியல் எஸ்டேட்தான். ரியல் எஸ்டேட்ல நிறைய்ய பணம் வந்ததும் இந்த ஆளு எந்த அதிகாரியையும் மதிக்க மாட்டா… அப்போ லஞ்ச ஒழிப்புத் துறையோட சிறப்புப் புலனாய்வு பிரிவு, நந்தனம் பெரியார் கட்டிடத்துல இயங்கி வந்துச்சு.. அதே கட்டிடத்தில்தான் எல்காட் நிறுவனமும் இயங்குச்சு.. அப்போதான் இந்த ராமராஜுக்கு எல்காட் நிறுவனத்தோட நிலத்தை பத்தி தெரிய வந்துருக்கணும்.. லஞ்ச ஒழிப்புத் துறையில வேலை பாத்த இந்த ஆளு, ஒரு சில வருஷத்துல விருப்ப ஓய்வு வாங்கிட்டு வேலையை விட்டுப் போயிட்டாரு.. ”
கைதான ராமராஜ் மற்றும் இதர குற்றவாளிகள்
”ஏன் வேலை பாத்துக்கிட்டே ரியல் எஸ்டேட் பண்ணியிருக்கலாமே.. நிறைய அதிகாரிகள் அப்படித்தானே இருக்கிறாங்க…
”அது கரெக்ட்தான்.. அந்த சமயத்துலதான் ராதாகிருஷ்ணன் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு ஐஜியா வர்றார்… அட டா.. இவ்வளவு சிறப்பான ரியல் எஸ்டேட் திறமைகளை வச்சுக்கிட்டு ஒரு ஆளு சாதாரண தலைமைக் காவலரா இருக்காரேன்னு அவர்கிட்ட தனக்கும் சேத்து நிலங்களை வாங்கிப் போட சொல்றாரு.. இப்படி ராதாகிருஷ்ணனுக்காக ராமராஜ் பல நிலங்களை வாங்கிப் போட்டதா சொல்றாங்க.. ”
”எல்லாம் நல்லாத்தானே போயிக்கிட்டு இருக்கு… அப்புறம் எதுக்கு விருப்ப ஓய்வுல போனாரு ராமராஜ் ? ”
”ராமராஜ் மேல, ரியல் எஸ்டேட் பண்றாரு. பத்திரப் பதிவு மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளை லஞ்ச ஒழிப்புத் துறை பதவியை பயன்படுத்தி மிரட்றாரு.. ராதாகிருஷ்ணன் ஐஜி பெயரை பயன்படுத்தி ரியல் எஸ்டேட் பண்றாருன்னு புகார் வந்துச்சு.”
ராதாகிருஷ்ணன் மற்றும் ராஜேந்திரன் ஐபிஎஸ்
”அந்தப் புகார்களெல்லாம் உண்மையா ? ”
”அத்தனை புகாரும் உண்மை. அப்போ லஞ்ச ஒழிப்புத் துறையில இருந்த ஒரு நேர்மையான அதிகாரிக்கிட்ட விசாரணைக்காக போகுது. அந்த அதிகாரி விசாரிக்கிறார்னு தெரிஞ்சதும், ராதாகிருஷ்ணன் உடனடியா, ராமராஜை கூப்பிட்டு, உடனே விஆர்எஸ்ல போயிடுங்க ன்னு சொல்லிட்டாரு… அவரோட அறிவுரையின் பேர்லதான் ராமராஜ் விருப்ப ஓய்வுல போனாரு. கடைசியா ஜெயிலுக்குப் போனாரு.. ”
”சரி மச்சான்… ராதாகிருஷ்ணனுக்காக இவ்வளவு உதவி பண்ணியிருக்காரே ராமராஜ்.. அவர் சிறைக்குப் போகாம காப்பாத்த ராதாகிருஷ்ணன் உதவி பண்ணலையா.. ? ”
”அப்புறம் பண்ணாம இருப்பாரா… ? இந்த விவகாரத்துல எப்படியாவது தலையிட்டு, வழக்கு பதிவு பண்ணாம ராமராஜை காப்பாத்தணும்னு எவ்வளவோ முயற்சி பண்ணியிருக்காரு ராதாகிருஷ்ணன். ஆனா, ஜார்ஜ் கமிஷனரா இருக்கறதால எதுவும் நடக்கல… அது மட்டுமில்லாம, வருவாய்த் துறை செயலரே, இந்த விவகாரம் தொடர்பா ஜார்ஜ் கிட்ட பேசியிருக்காரு. இப்போக் கூட, ராமராஜ், ராதாகிருஷ்ணனுக்கு நெருக்கம் ன்ற விபரம் ஜார்ஜுக்கு தெரியாது. தெரிஞ்சுருந்தா, இந்நேரம் ராமராஜ் மேல குண்டர் சட்டம் பாய்ஞ்சிருக்கும்… தெரியாத தாலதான் இன்னும் குண்டர் சட்டம் போடப்படல… ”
”தலையே சுத்துதே மச்சான்” என்று தலையில் கை வைத்தான் வடிவேல்.
”இதுக்கே தலை சுத்துனா எப்படி.. இன்னோரு ஐட்டம் சொல்றேன் கேளு….
இதுவும் நில அபகரிப்புதான். சமீபத்துல சென்னை முகப்பேர் அருகில் இருக்கிற நொளம்பூர் ல 9 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்கள் மூலமா அபகரிப்பு பண்ணிட்டாங்கன்னு ஒரு புகார் வருது. சென்னை மாநகர காவல்துறை இந்தப் புகாரை விசாரிச்சிக்கிட்டு இருக்காங்க. அது தொடர்பா அனைத்து ஆவணங்களையும் கேட்டு வருவாய்த் துறைக்கு ஒரு கடிதம் அனுப்பறாங்க.
காவல்துறை விசாரிக்கிறது தெரியாம, நில அபகரிப்பு பண்ணவங்க, தாலுகா ஆபீஸ்க்கு போயி, எங்க பேருக்கு பட்டா குடுங்கன்னு கேக்கறாங்க. கேட்டதும், தாசில்தான், காவல்துறை விசாரணையில் இருப்பதால் பட்டா கொடுக்க முடியாதுன்னு சொல்லிட்றார்…
நில அபகரிப்பு பண்ணவங்களுக்கு வந்ததே கோபம். ராஸ்கல்ஸ் எங்களுக்கே பட்டா இல்லையான்னு கடுமையா கோபம் அடைஞ்சுட்டாங்க… ”
”நில அபகரிப்பு பண்ணவங்க காவல்துறை விசாரணையின்ன பயப்படத்தானே செய்வாங்க… எதுக்கு கோவப்பட்றாங்க.. ? ”
”அபகரிப்பு பண்ணது, சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி டி.கே.ராஜேந்திரனோட மைத்துனரா இருந்தா கோவப்பட மாட்டாரா… ”
சிறந்த நில அபகரிப்பாளர் விருது
”அதுவும் சரிதான்.. ”
”உடனே கோவப்பட்டு, டி.கே.ராஜேந்திரன்கிட்ட சொல்றாங்க. அவருக்கு இன்னும் கோவம் வந்துடுச்சு…. யார் மேல நில அபகரிப்பு புகாரை விசாரிக்கிறீங்க… ஒரு ஏடிஜிபியோட மச்சானுக்கு நில அபகரிப்பு பண்றதுக்கு உரிமை இல்லன்னா, யாருக்கு உரிமை இருக்குன்னு கோவப் பட்டுட்டாரு… இப்போ மத்திய குற்றப் பிரிவு துணை ஆணையர்கிட்டயும், கூடுதல் ஆணையர்கிட்டயும், நொளம்பூர் நிலத்துக்கு பட்டா குடுக்க ஏற்பாடு பண்ணுங்கன்னு பேசிக்கிட்டு இருக்காரு.. ”
”படு பாவிகளா இருக்காங்களே… ”
”இதுக்கே வாயைப் பிளக்கறியே… இன்னொரு ஐட்டம் சொல்றேன் கேளு.
சில ஆண்டுகள் முன்னாடி, லஞ்ச ஒழிப்புத் துறை ஊழியர்களுக்காக ஒரு கூட்டுறவு சங்கம் அமைச்சு, செங்கல்பட்டு மாவட்டம் கடம்பூர் ன்ற கிராமத்துல 55 ஏக்கர் நிலம் வாங்கினாங்க…. அதை வாங்கி லே அவுட் போட்டு, அந்த ஊழியர்களுக்கு பகிர்ந்தளிச்சாங்க. ”
”நல்ல விஷயம்தானே… ? ”
”முழுசா கேளுடா அவசரக்குடுக்கை. அந்த நிலம் ஒரு ஏக்கர் 39 லட்சத்துக்கு வாங்கி, அந்த ஊழியர்களுக்கு ஒரு க்ரவுன்ட் 3 லட்சம் வீதம் கொடுக்கப்பட்டுச்சு. ஏறக்குறைய எல்லா ஊழியர்களும் நிலத்தை வாங்கிட்டாங்க.. காவலர்கள், தலைமைக் காவலர்களுக்கு முக்கால் க்ரவுன்ட். உயர் அதிகாரிகளுக்கு ஒரு க்ரவுன்ட். உயர் உயர் அதிகாரிகளுக்கு 2 அல்லது 3 க்ரவுன்ட் வீதம் வாங்கிட்டாங்க… ”
”அப்புறம் என்ன நடந்துச்சு… ? ”
”இப்போ போயி அந்த இடத்துல உள்ள கிராம மக்கள்கிட்ட விசாரிச்சா, ஒரு ஏக்கர் 18 லட்சத்துக்கு வாங்கியிருக்கறது தெரிய வந்துருக்கு… ”
”என்னடா சொல்ற… 18 லட்சம் எங்க இருக்கு… 39 லட்சம் எங்க இருக்கு…. பெரிய கொள்ளையா இருக்கே… ”
”ஆமாடா.. இந்த விஷயம் பல பேருக்கு தெரியாது… சாதாரண காவலர்கள் தலைமைக் காவலர்கள் வயித்துல அடிச்சு இந்த மாதிரி நிலத்தை வாங்கியிருக்காங்க… ”
”சரி… இப்படி மோசடியா வாங்கினது யாரு… ? ”
”அதே டி.கே.ராஜேந்திரன்தான்… அவருதான் அப்போ லஞ்ச ஒழிப்புத் துறை இணை இயக்குநர். இதுக்கு பிரதிபலனா, இவரோட மச்சான் பேர்ல 3 ஏக்கர் அதே கடம்பூர் பகுதியில வாங்கியிருக்காரு… அப்போ மத்திய சரக எஸ்.பியா இருந்த ஆசியம்மாள் ன்ற இன்னொரு பெண் அதிகாரியும் 3 ஏக்கர் வாங்கியிருக்காங்க… லஞ்ச ஒழிப்புத் துறை ஊழியர்களுக்கு மொத்தமா நிலம் வாங்கினதால, அந்தப் பகுதியில நிலம் விலை ஏறிடுச்சு… ”
”அநியாயமா இருக்கே… ”
”அநியாயம்தான்… 500 ரூபா லஞ்சம் வாங்கிய அரசு ஊழியர்களை கைது செஞ்சு, சிறைக்கு அனுப்பி, நீதியை நிலைநாட்டும் துறையில நடக்கிற ஊழலைப் பாத்தியா… ? ”
”அந்த ஊழியர்கள் யாருமே இதை கேள்வி கேட்கலையா… ? நீதித்துறை ஊழியர்களைப் போலவே, அந்தத் துறை ஊழியர்களும், வேலைக்கு சேந்ததுமே, முதுகெலும்பை கழட்டி வச்சுடுவாங்க. அதிகபட்சம் டீக்கடையில முணுமுணுக்கிறதோட சரி.. அதைத் தாண்டி எதுவும் பேச மாட்டாங்க…
ஆனா, இந்த ஊழலை எப்படியாவது வெளியில கொண்டு வரணும்னு ஒரு டீம் இப்போ களத்துல இறங்கியிருக்கு. ”
”இவங்களுக்கு ஜாங்கிட் எவ்வளவோ பரவாயில்ல போல இருக்கே.. ”
”ஜாங்கிட் மதுரையில, ரியல் எஸ்டேட் பண்ணாரு. பல காவலர்கள் மற்றும் தலைமைக் காவலர்களுக்கு மலிவு விலையில நிலம் கிடைக்கிற மாதிரி பண்ணாரு. மணப்பாக்கத்துல உயர் உயர் உயர் அதிகாரிகளுக்காக லே அவுட் போட்டாரு. அங்க இடம் வாங்கின பல உயர் அதிகாரிகள் மகிழ்ச்சியோட அந்த இடத்துல குடியிருக்காங்க… அவர்கிட்ட இருக்கிற ஜாப் எதிக்ஸ், ராதாகிருஷ்ணன் கிட்டயும், டி.கே.ராஜேந்திரன்கிட்டயும் இல்ல.
ஜாங்கிட் ரியல் எஸ்டேட் பண்றாருன்னு ஊர் பூரா பேசறதே ராதாகிருஷ்ணன்தான்… ஆனா கொஞ்சம் கூட ஜாப் எதிக்ஸ் இல்லாம அவரும், அவர் ஃப்ரெண்ட் டி.கே.ராஜேந்திரனும் ரியல் எஸ்டேட் பண்றாங்க… ஸோ சேட்.. ”
”இது மாதிரி லஞ்ச ஒழிப்புத் துறையில இன்னும் எத்தனை கருப்பு ஆடுகள் இருக்கோ ? ”
”லஞ்ச ஒழிப்புத் துறை ஓய்வெடுக்க கூடிய ஒரு மடம்னு பல அதிகாரிகள் நினைச்சுக்கிட்டு இருக்காங்க.. ராமராஜ் மாதிரியே சிறைக்கு போக வேண்டிய இன்னொரு அதிகாரிதான் ரியல் எஸ்டேட் சம்பந்தம். அவர்தான் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கோட புலனாய்வு அதிகாரி. இவரோட சொத்துக்கள் பல கோடி இருக்கு. இவரையும் வளர்த்து விட்டது ராதாகிருஷ்ணன் மற்றும் டி.கே.ராஜேந்திரன் என்ற இரண்டு லாரல் ஹார்டி ஜோடிதான். வாங்கிற சம்பளத்துக்கு வேலையைப் பார்றான்னா ரியல் எஸ்டேட் பண்ணிக்கிட்டு இருக்க ன்னு சஸ்பெண்ட் பண்ணியிருந்தா, சம்பந்தம், ராமராஜ் மாதிரி ஆளுங்க வளந்திருக்க மாட்டாங்க. ஆனா, அவர்களை மாதிரியான ஆட்களை ஊக்குவிச்சு, உற்சாகம் குடுத்து வளத்து விடுறதே இந்த லாரல் ஹார்டிதான்… ”
”சரி.. நீதித்துறை செய்திகள் என்னப்பா இருக்கு ? ” என்றார் கணேசன்.
”நீதிபதி பானுமதி சட்டீஸ்கர் மாநில தலைமை நீதிபதியா எப்பவோ போயிருக்கணும்.. என்ன காரணமோ தெரியல.. இன்னும் அவருக்கான உத்தரவு வராம கால தாமதம் ஆயிக்கிட்டே இருக்கு… உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம்தான் இதை தாமதப்படுத்தறாருன்னு சொல்றாங்க… ”
”அவர் பரிந்துரைத்த வழக்கறிஞர்கள்தான் நீதிபதிகளாயிட்டாங்களே… அப்புறம் என்ன ? ”
”ஆயிட்டாங்க… ஆனா, அவர் ரெண்டு கவுண்டர்களை பரிந்துரைத்தார். அதுல ஒருத்தர் நீதிபதியாயிட்டார். வேலுமணி ன்ற இன்னொரு பெண்மணி நீதிபதியாகல. அவங்க மேல ஏராளமான புகார்கள் இருக்குன்னு பிரதமர் அலுவலகத்துல திருப்பி அனுப்பிட்டாங்க… அதனால அவங்களுக்கு உத்தரவு வரல. ஆனா, வேலுமணியை எப்படியாவது நீதிபதியாக்கியே தீரணும்னு சதாசிவம் தீர்மானமா இருக்காறாம்… அவங்களுக்கு மட்டும் தனி உத்தரவு வரும்னு சொல்றாங்க…
நீதிபதி பால் வசந்தகுமார் பரிந்துரைத்த தங்கசிவம் ன்றவரை நீதிபதிய்யாக்கி உத்தரவு வரல. அவர் பெயர் நிராகரிக்கப் பட்டுடுச்சு. ”
”நீதிபதி பால் வசந்தகுமார் வருத்தமாயிருப்பாரே…. ? ”
”அவர் அதுக்கெல்லாம் அசர்ற ஆளா… நிக்சன் ன்னு இன்னொரு நாடார் கேன்டிடேட்டை நீதிபதியாக்கணும்னு முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கார்….
அவர் ஒரு பக்கம் முயற்சி பண்றார். தலைமை நீதிபதி சதாசிவம், இன்னொரு கவுண்டர் கேண்டிடேட்டை நீதிபதியாக்கணும்னு முயற்சி பண்றாராம்.. சென்னை உயர்நீதிமன்றத்துல இருந்து நீதிபதிகள் பரிந்துரைக்கும் பட்டியலை எழுத்துபூர்வமா அனுப்பறதுக்கு முன்னாடி, சதாசிவத்துக்கு வாய்மூலமா சொல்லி ஒப்புதல் வாங்கிட்டுதான் அனுப்பனுமாம்.. ”
”வேற என்ன பரபரப்பு செய்திகள்.. ? ”
”ஜுலை மாதம் வந்த ஏகலைவன் இதழில், எஸ்.ஆர்.எம் வேந்தர் பச்சமுத்து உடையார் மீது பாலியல் புகார்னு ஒரு அட்டைப்படக் கட்டுரை வந்துச்சு… ”
”ஆமா.. அதுக்கப்புறம், ஏகலைவன் இதழ் அலுவலகத்தை தாக்க வேந்தர் முயற்சி பண்ணதும், அவங்க சமாதானமாயிட்டாங்கன்னும் ஒரு செய்தி வந்துச்சு… ”
”ஆமாம்… அதுல சம்பந்தப்பட்ட திலகவதி ன்ற பெண்மணி, காவல்துறைக்கு ஒரு புகார் அளிச்சிருக்கார்… ”
”என்ன சொல்றார்… ”
”அவர் புகாரில், ”SRM நிறுவனர் பச்சமுத்துவும், அவரது அடியாட்களாகிய ரவுடிகளின் தலைவன் S.மதன் கூலிப்படைகள் வைத்தும், கூலிக்கு விலை போன ஏகலைவன் எடிட்டர் சிங்காரவேலன் ஆகியோர் சேர்ந்து என்னை கொலை செய்து என் தலையை தூத்துக்குடி கடலிலும், என் உடலை சென்னை மெரினா கடலிலும் போட்டு விடுவேன் என்றும் ஒரு வாரம் மட்டும் உனக்கு கெடு, என்னை சென்னையை விட்டு போய் விடுமாறு மிரட்டுகிறார்கள். இதற்கிடையில் ஏகலைவன் எடிட்டர் சிங்கார வடிவேலன் என் பிரச்சினையை காரணமாக வைத்து உண்ணாவிரதம் என்ற பெயரில் எனக்கு சேர வேண்டிய தொலை 30 லட்சத்தை ஏகலைவன் எடிட்டர் சிங்கார வடிவேலனுக்கு மதன் கொடுத்தார் என்பதற்கான சாட்சி CCTV கேமராவில் பதிவாகியுள்ளது. இதற்கு நான்கு பேர் சாட்சியாக உள்ளனர். இது சம்பந்தமாக காவல்துறையை அணுகும்போது, SRM நிறுவனர் பச்சமுத்து, தமிழ்நாட்டையே விலைக்கு வாங்கக் கூடியவர். அவர் மேல் புகார் சொல்கிறாயே… உனக்கு உன் உயிர்மேல் ஆசை இல்லையா என்று கேட்கிறார்கள்… ” இப்படி ஒரு புகாரை கொடுத்திருக்கிறார் திலகா…
”என்ன ஆச்சு இந்தப் புகார்… ? ”
”இந்தப் புகாரையும் காவல்துறை விசாரிச்சிக்கிட்டு இருக்கு… ”
”ஈஷா மேல போட்ட வழக்குகள் என்ன மச்சான் ஆச்சு. ? ”
”ஈஷா மேல உயர்நீதிமன்றத்துல தொடர்ந்த வழக்குகள் நிலுவையில இருக்கு. இப்போதைக்கு விசாரணைக்கே வராத நிலையில இருக்கு. வழக்குகள் நிலுவையில இருக்கும்போதே, ஈஷா மையத்துக்கு தடையில்லா சான்று வழங்கியிருக்காரு, இதுக்கு முன்னாடி இருந்த கலெக்டர் கருணாகரன். இவர் மட்டுமில்லாம, அரசாங்கத்துல பல அதிகாரிகள், ஈஷா மையத்தோட அடிமையா இருக்கறதால இந்த திருட்டு சாமியாரோட வண்டி ஓடிக்கிட்டு இருக்கு..
இதுக்கு நடுவுல ஈஷா மையத்தோட ஆடிட்டர் திலீப்போட மர்மமான மரணம் வேற சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கு.. ”
”என்னடா சொல்ற…. என்ன சர்ச்சை அது ? ”
”சமீபத்துல கோத்தகிரி மேட்டுப்பாளையம் சாலையில நடந்த ஒரு கார் விபத்துல ராஜரத்தினம் என்கிற திலீப் இறந்துட்டாரு. இந்த திலீப் பல வருஷமா ஈஷா மையத்துக்கு ஆடிட்டரா இருந்தாரு. இவருக்கு தெரியாத ரகசியங்களே இல்ல. ஈஷா மையத்துல நடக்கிற முறைகேடுகள் காரணமா சில ஆண்டுகளா ஈஷா மையத்துல இருந்து விலகி இருந்தாரு.
ராஜரத்தினம் என்கிற திலீப்
ஜக்கியோட பாடிகார்ட் மற்றும் உதவியாளரா இருக்கிறவரு வெங்கட் என்கிற வெங்கி. இந்த வெங்கி கூட டயோட்டா கரோல்லா கார்ல போகும்போதுதான் இந்த விபத்து நடந்திருக்கு. விபத்து நடந்தபோது, வெங்கியோட ஏர் பேக் மட்டும் வேலை செய்திருக்கு. அவர் எந்த காயமும் இல்லாம தப்பிச்சுட்டார். ஆனா, அவர் கூட போன திலீப் அதே இடத்துல இறந்துட்டார்…. இதுவும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கு… ”
”நேரமாச்சு… கௌம்பலாமா…. ” என்றார் கணேசன்.
”போலாம்ணே…. ஒரே ஒரு தகவல் மட்டும் சொல்லிட்றேன். தமிழ் இந்துவை தொடர்ந்து டைம்ஸ் ஆப் இந்தியாவும் தமிழ் நாளேடு ஆரம்பிப்பதற்கான பூர்வாங்க வேலைகளில் இறங்கியிருக்கிறதா தகவல். தினகரனில் பணியாற்றும் கதிர் என்பவர், ஜனவரி மாதத்துக்குப் பிறகு, அந்தப் பொறுப்பை ஏத்துக்குவாருன்னு பத்திரிக்கையாளர் வட்டாரங்கள் தெரிவிக்குது” என்று தமிழ் சொல்லி முடித்ததும் சபை கலைந்தது.