“நந்தவனத்தில் ஓர் ஆண்டி – அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி
கொண்டு வந்தான் ஒரு தோண்டி – மெத்தக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி”
என்று பாடியபடியே மொட்டை மாடிக்குள் நுழைந்தான் டாஸ்மாக் தமிழ்.
“என்னடா பாட்டும் கூத்துமா வர்ற… ?” என்று தமிழை வரவேற்றான் வடிவேல்.
”கூத்து இல்லடா… பாட்டு மட்டும்தான்.. அதுவும் சிச்சுவேஷன் சாங். ” என்ன மச்சான் சிச்சுவேஷன் சாங். யாருக்காக இந்த பாட்டு ? ”
”ஜெயலலிதாவுக்காகத்தான்.. வேற யாருக்கு ? ”
”ஏன்ப்பா ? ஜெயலலிதாவுக்கு என்ன ? ” என்று விவாதத்துக்குள் நுழைந்தார் கணேசன்.
”அண்ணே.. சமீபத்துல முள்ளிவாய்க்கால் முற்றத்தை ஜெயலலிதா இடிச்சதைப் பத்திதான் சொல்றேன்.
தமிழ் தமிழர்னு சொல்லிக்கிட்டு கருணாநிதி பண்ண துரோகத்தை, புலம் பெயர்ந்த தமிழர்களும் சரி, தமிழக தமிழர்களும் சரி… மறக்கவேயில்ல. 2009 தேர்தல்ல ஜெயலலிதா எனக்கு வாக்களித்தால் இலங்கைக்கு ராணுவத்தை அனுப்பி, தனி ஈழத்தை பெற்றுத் தருவேன்னு சொன்னாங்க… இது நம்ப முடியாத விஷயமா இருந்தாலும், புலம் பெயர்ந்த தமிழர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளிச்சது..
தொடர்ந்து மீனவர் விவகாரமா இருந்தாலும் சரி, சிங்கள விளையாட்டு வீரர்கள் விவகாரமா இருந்தாலும் சரி, இலங்கை ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் விவகாரமா இருந்தாலும் சரி… ஜெயலலிதா எடுத்த நடவடிக்கைகள், கருணாநிதியோடு ஒப்பிட்டு, ஜெயலலிதாவுக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்துச்சு… புலம் பெயர்ந்த தமிழர்களும், தமிழ் உணர்வாளர்களும், ஜெயலலிதாவுக்கு வாக்களிக்க ஆதரவு தரணும் ன்ற அளவுக்கு பேச ஆரம்பிச்சாங்க..
சட்டமன்றத்தைக் கூட்டி, காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் கலந்து கொள்ளக் கூடாதுன்னு ஒரு தீர்மானம் இயற்றி, அதன் பிறகு சல்மான் குர்ஷீத் கலந்து கொள்வதும் தவறுன்னு இன்னொரு தீர்மானம் இயற்றி, தமிழ் உணர்வாளர்கள் அத்தனை பேர் மத்தியிலயும் நல்ல பேர் எடுத்திருந்தாங்க ஜெயலலிதா. ஆனா, அந்த அத்தனை பேரையும், முள்ளிவாய்க்கால் முற்றத்தை இடிச்சுத் தள்ளியதன் மூலமா ஒரே நாள்ல கெடுத்துக்கிட்டாங்க… “
“மத்திய அரசின் உள்துறைக்கிட்ட இருந்து ஒரு தாக்கீது வந்திருந்ததா ஒரு தகவல் அடிபட்டுச்சே… “ என்றான் ரத்னவேல்.
“என்ன தாக்கீது.. ?“
“அதாவது.. இந்த நினைவுச் சின்னத்தை அனுமதிக்கக் கூடாது. அப்படி அனுமதிச்சா, நாளை காலிஸ்தான், உல்ஃபா, காஷ்மீர் பகுதிகளைச் சேர்ந்த தீவிரவாதிகள் தங்களுக்கும் நினைவுச் சின்னம் வைக்க அனுமதி வேணும்னு கேப்பாங்கன்னு ஒரு தாக்கீது வந்ததால சொல்றாங்களே..“
“அப்படியே அந்த தாக்கீது வந்திருக்கறது உண்மைன்னு வச்சுக்கிட்டாலும், இதையெல்லாம் ஜெயலலிதா மதிக்கிற ஆளா என்ன ? ஜெயலலிதா இதை இடிச்சதுக்கு ஒரே காரணம், நடராஜன் இதுல இன்வால்வ் ஆகியிருக்கறதுதான். தனிப்பட்ட கோவத்துக்காக 2009ல இருந்து சம்பாதிச்சு வச்ச நற்பெயரை ஒரே நாள்ல போட்டு உடைச்சதுக்காகத்தான் அந்தப் பாட்டை பாடுனேன். “
“அது மட்டும் இல்லாம, 2009 தேர்தல் மற்றும் 2011 தேர்தல் ஆகியவை சொல்லிக் கொடுத்த பாடங்கள் என்னன்னா, ஈழ விவகாரம் தமிழகத்தில் வாக்கு பெற உதவாது ன்றதுதான்… இதை கருணாநிதியும் ஜெயலலிதாவும் நல்லாவே புரிஞ்சு வச்சுருக்காங்க. அதனாலதான், பொழுது போகலன்னா ஈழ விவகாரத்தை கையில் எடுத்து பேசறாங்க… “ என்றான் பீமராஜன்.
“நீ சொல்றது சரிதான் மச்சான். ஈழ தமிழர்கள் விவகாரத்தில் உண்மையில் அக்கறை இருந்தா, செங்கல்பட்டு மற்றும் பூந்தமல்லி சிறப்பு முகாமில் உள்ள அகதிகளை விடுதலை செய்து, அவர்கள் உறவினர்களோடு இருக்க அனுமதிச்சிருக்கனும்… ஆனா, இப்போ ஆட்சியில இருக்கற, ஜெயலலிதாவா இருந்தாலும் சரி… இதுக்கு முன்னாடி இந்த கருணாநிதியா இருந்தாலும் சரி… சிறப்பு முகாம் என்ற பெயரில் நடக்கும் சிறைகளை பற்றி கண்டு கொள்வதேயில்லை. க்யூ பிரிவு மூலமா வழக்கு போட்டு, அந்த ஏதிலிகளை வதைப்பதில், இருவருக்கும் வித்தியாசமே இல்லை.“
“அது சரி…. அரசாங்கம் இடிச்ச இடம் அரசுக்கு சொந்தமான இடமாமே… அதுனாலதான் இடிச்சாங்களாமே.. ?“ என்றான் வடிவேல்.
“அரசுக்கு சொந்தமான இடங்களை, வரி செலுத்தி, குத்தகைக்கு பயன்படுத்தும் வழக்கம் நெடுநாளாவே இருக்கு.. இந்த இடத்துக்கும் வரி செலுத்திக்கிட்டுத்தான் இருக்காங்க…. இதெல்லாம் தெரிஞ்சுதான் கட்டுமானப் பணிகள் நிறைவடையும் வரை, அரசாங்கம் அமைதியா இருந்துச்சு.. தமிழகத்தில், ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியிருக்கும் அரசு நிலங்கள் மற்றும் கோயில் நிலங்கள் ஆயிரக்கணக்கான ஏக்கர்கள் இருக்கு.. அது இல்லாம, ஜெயலலிதாவின் சிறுதாவூர் பங்களாவே பஞ்சமி நிலத்தை ஆக்ரமிச்சு கட்டிய நிலங்கள்தானே.. அதையெல்லாம் இடிச்சுட்டாங்களா ?
அனுமதியே வாங்காம 48 ஆயிரம் சதுர அடி கட்டிடங்களை கட்டியதுக்கு வனத்துறையும், நகர்ப்புற வளர்ச்சித் துறையும் எதிர்ப்பு தெரிவிச்சு இடிக்கனும்னு நோட்டீஸ் அனுப்பி ஆறு மாசம் ஆகியும், திருட்டுச் சாமியார் ஜக்கி வாசுதேவ் மேல எந்த நடவடிக்கையும் எடுக்கலை… ஆனா, எவ்விதமான நோட்டீசும் குடுக்காம, இரவோடு இரவா முள்ளிவாய்க்கால் முற்றத்தை இடித்திருக்கிறார் ஜெயலலிதா.
இதுல ஒரு நல்ல விஷயம் என்னன்னா… ஜெயலலிதா இத்தனை நாளா போட்டிருந்த ஈழத்தாய் வேடம் கலைந்ததுதான்… இனி தமிழ் உணர்வாளர்கள் நேரடியா புரட்சித்தலைவியை கழுவி ஊற்றலாம்..“
“சரி… அம்மாவோட சொத்துக் குவிப்பு வழக்கு எந்த நிலையில இருக்கு ?“ என்றான் ரத்னவேல்.
“அம்மாவுக்கு சிக்கலுக்கு மேல சிக்கல்தான். ஜெயலலிதா பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணும்னு கேட்டு ஒரு மனு போட்டாங்க நினைவிருக்கா.. ?“
“ஆமாம்.. அந்த மனு உச்சநீதிமன்றத்துல நிலுவையில இருக்கு. உச்சநீதிமன்றம் ஏற்கனவே செப்டம்பர் 30 அன்றைக்கு ஓய்வு பெற்ற சிறப்பு நீதிபதி பாலகிருஷ்ணாவின் பதவிக்காலத்தை நீடிப்பது பற்றி கர்நாடக அரசின் கருத்தை தெரிவிக்கவும் னு உத்தரவு போட்டிருந்தாங்க..
அதுக்கு பதில் மனு தாக்கல் செய்த கர்நாடக அரசு, ஏற்கனவே பதவியில் இருந்த பாலகிருஷ்ணா வின் பதவிக்காலத்தை நீட்டிப்பது பற்றி கர்நாடக அரசு பரிசீலிக்கவும் னு உச்சநீதிமன்றம் செப்டம்பர் 30 அன்று உத்தரவிட்டிருந்தது. ஆனால், அதே நாளன்று, நீதிபதி பாலகிருஷ்ணா தனிப்பட்ட காரணத்துக்காக தனக்கு பதவியில் நீடிக்க விருப்பமில்லை. அதனால், தன்னை விடுவிக்குமாறு கேட்டு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதன்படி அவர் விடுவிக்கப்பட்டார். அக்டோபர் 1 அன்று உயர்நீதிமன்றத்தின் உத்தரவுப்படி நீதிபதி முடிகவுடன் பொறுப்பு நீதிபதியாக்கப்ட்டார். அதன் பின், கர்நாடக உயர்நீதிமன்றத்தின் நிர்வாகக் குழு கூடி, நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா என்பவரை நீதிபதியாக நியமித்து உத்தரவிடப்பட்டது ன்னு மனு தாக்கல் பண்ணிட்டாங்க..”
”அடடா… வடை போச்சே…. ” என்றான் பீமராஜன்.
”ஆமாம் டா… வடை போச்சு… நீதிபதியே பணியில் நீடிக்க விருப்பமில்லைன்னு சொன்ன பிறகு, உச்சநீதிமன்றமே நினைத்தால் கூட பெட்ரோமாக்ஸ் லைட்டை கொடுக்க முடியாது..”
“அப்போ இப்போதைக்கு சிக்கல்தான்னு சொல்லு…. “
“அந்த சிக்கல் மட்டும் இல்ல… ஜெயலலிதாவுக்கு புது சிக்கல் உருவாக்க முயற்சிகள் நடந்துக்கிட்டு இருக்கு..“
“யாரு ? திமுக தரப்புல முயற்சிகள் நடந்துக்கிட்டு இருக்கா ?“
“சிக்கலை உருவாக்குவது, ஜெயலலிதா அரசின் வழக்கறிஞர்கள் மற்றும் உயர் அதிகாரிகள்தான்.. “
“என்னடா சொல்ற…. ? “ என்று வியப்போடு கேட்டான் ரத்னவேல்.
“ஆமாம் மச்சான்.. நான் உண்மைதான்… 2008ல் அமைச்சர் பூங்கோதை மற்றும் சில உயர் உயர் அதிகாரிகள் லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநரோடு பேசிய உரையாடல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. “
“ஆமாம்.. அதுக்காக ஒரு விசாரணை கமிஷன் அமைத்து, லஞ்ச ஒழிப்புத் துறையை சேர்ந்த ஒரு ஊழியரை கூட கைது செய்தாங்களே… “
“ஆமாம்.. அஞ்சு வருஷம் கழிச்சு இப்போ அந்த வழக்கு சூடு பிடிக்கத் தொடங்கியிருக்கு.. இப்போ இருக்கிற அதிகாரிகள், அந்த ஊழியருக்கு எப்படியாவது தண்டனை வாங்கிக் குடுத்து, அவர் நடத்திக்கிட்டு இருக்கறதா சொல்லப்பட்ற இணையதளத்தை முடக்கணும்னு முயற்சி எடுத்துக்கிட்டு இருக்காங்களாம்..“
“இது இயல்புதானேப்பா… அதிகாரிகள் அந்த நபரை சிறையில தள்ளத்தானே முயற்சி செய்வாங்க… இதுல ஜெயலலிதாவுக்கு எங்க இந்து சிக்கல் வருது ?“
“டெக்கான் க்ரானிக்கிள் நாளிதழில் வெளியான உரையாடலின் அடிப்படையிலதான் இந்த வழக்கே நடக்குது. அந்த உரையாடல் முழுக்க முழுக்க ஜெயலலிதா வாங்கிய கொடநாடு எஸ்டேட் பத்திதான்.. “
“அப்படி என்ன பேசறாங்க அந்த உரையாடல்ல… ?”
“அப்போ தலைமைச் செயலாளரா இருந்த திரிபாதி, லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் உபாத்யாய் கிட்ட, ஜெயலலிதாவோட கொடநாடு எஸ்டேட் வரைபடம் எங்க இருக்குன்னு கேப்பார்.. அதுக்கு உபாத்யாய் அது எங்க கிட்ட இல்லன்னு சொல்லுவார்… ஜெயலலிதா நவம்பர் 2000த்தில் கொடநாடு எஸ்டேட்டில் பங்குதாரராக சேர்ந்துள்ளார், அது குறித்து வருமான வரிக் கணக்கில் தாக்கல் செய்திருப்பார், பிறகு என்ன காரணத்துக்காகவோ அதிலிருந்து விலகி 2006ல் மீண்டும் பங்குதாரராக சேர்ந்திருப்பார், 2006 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக மார்ச் அல்லது ஏப்ரல் 2006ல் மீண்டும் விலகி, ஜுன் 2006ல் மீண்டும் பங்குதாரராக இணைந்துள்ளார். இது குறித்த விபரங்கள் பெங்களுரு சொத்துக் குவிப்பு வழக்கு ஆவணங்களில் இருக்கலாம். கொடநாடு எஸ்டேட்டின் மொத்த விலை 17.6 கோடி. அதில் ஜெயலலிதாவின் பங்கு 3.8 கோடி. சசிகலாவும் ஜெயலலிதாவும் சேர்ந்து, இந்தசொத்தை வாங்கியிருக்கின்றனர். நீங்கள் உடனடியாக இந்த வழக்கு குறித்த விபரங்களை வருமான வரித்துறையினரிடமிருந்து பெறுங்கள். இந்த பரிவர்த்தனை நடந்த காலத்தில் ஜெயலலிதா பொது ஊழியராக இருந்திருக்கிறார்.. இது தொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள வருமான வரிக் கணக்கை கேட்டுப் பெற்றால் விபரங்கள் தெரியும் என்று திரிபாதி உபாத்யாயிடம் கூறுவார்.”
“இது ஜெயலலிதா மேல புதுசா ஒரு வழக்கு போடறதுக்கு பண்ற ஏற்பாடாயில்ல இருக்கு… ?”
“ஆமாம்.. இந்த உரையாடலை மட்டும்தான் அரசுத் தரப்பு சார்ந்திருக்கிறது. வேறு எந்த உரையாடலையும் நாங்கள் சாரவில்லை. அதனால் வேறு எந்த உரையாடலின் நகலையும் நாங்கள் தர முடியாது ன்னு சிபி சிஐடி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அரவிந்தனும், அரசு வழக்கறிஞர் தம்பிதுரையும், சென்னை உயர்நீதிமன்றத்துல வாக்குமூலமே தாக்கல் பண்ணியிருக்காங்க.. “
“ஏன் இப்படி தாக்கல் பண்ணாங்க… ?”
“அப்படிக் கேளு…. நீதிமன்றத்துல தாக்கல் பண்ண ஆவணங்கள்ல, இன்னொரு உரையாடல் இருக்கு. அந்த உரையாடலில், இதுக்கு முன்னாடி தலைமைச் செயலாளரா இருந்த ஸ்ரீபதி, உபாத்யாய் கிட்ட பேசுவார். அவர், பேசும்போது, கல்யாணி ன்னு ஒரு பேராசிரியர் காவல் துறை உயர் அதிகாரிகள் நரேந்திர பால் சிங் மற்றும் கே.ராதாகிருஷ்ணன் ஆகியோரின் பிள்ளைகள் அண்ணா பல்கலைக்கழகத்தில் முறைகேடாக சீட் பெற்றது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று ஒரு மொட்டை பெட்டிஷன் அனுப்பியிருக்கிறார்”
“பேராசிரியர் பெயர் போட்டு அனுப்பிய மனு எப்படி மொட்டை பெட்டிஷன் ஆகும்”
“இதை நான் சொல்லலப்பா………. ஸ்ரீபதின்னு இருந்த ஒரு முட்டாள் தலைமைச் செயலாளர்தான் இப்படி சொன்னார். அப்படி சொல்லிட்டு, ஸ்ரீபதி என்ன சொல்லுவாருன்னா, அந்த மனுவை விசாரிக்காதீர்கள். னு சொல்லுவார். “
“என்னப்பா அநியாயமா இருக்கே….. புகார் வந்தா விசாரிக்கிறதுதானே முறை… ?”
“ஆமாம்டா…. விசாரிக்காதன்னு தான் சொல்லுவார்.”
“நீ பொய் சொல்ற… அப்போ ஸ்ரீபதி என்னவா இருந்தார் ?”
“ஸ்ரீபதி அப்போ விழிப்புப் பணி ஆணையரா (Vigilance Commissioner) இருந்தார்”
“விழிப்புப் பணி ஆணையரா இருந்துக்கிட்டு அவர் எப்படிடா அப்படி சொல்லுவார்.. நீ சொல்றது நம்பறதுக்கு கஷ்டமா இருக்கு…”
“நம்ப மாட்ட இல்ல… இந்தா நீயே கேட்டுக்க… இணைப்பு.
கேட்டியா ?”
“கேட்டேம்பா… இப்போ இந்த ஸ்ரீபதி எங்க இருக்காரு ?”
“இவர்தான் இப்போ தலைமைத் தகவல் ஆணையர்…. ஊழல் புகாரை விசாரிக்காதேன்னு சொன்ன ஆளுக்கெல்லாம் எப்படிப்பட்ட பதவி பாத்தியா ?”
“ஆமாம்பா… அதிர்ச்சியா இருக்கு… சரி.. அந்த அண்ணா பல்கலைக்கழகத்துல என்னதான் ஊழல் நடந்துச்சு ?”
“அந்த ஊழலைப் பத்தி நான் சொல்றத விட, தமிழகத்தின் சிறந்த பத்திரிக்கையாளர்களில் ஒருத்தரான வினோஜ், டெஹல்கா இதழில் எழுதிய கட்டுரையின் இணைப்பைத் தர்றேன்… நீயே படிச்சுக்க… இணைப்பு
“சரி… தனக்கு கீழ இருக்கிற அதிகாரிகள் இப்படியெல்லாம் தனக்கு எதிரா செயல்பட்றாங்கன்னு ஜெயலலிதாவுக்கு தெரியுமா ? “
“தெரியாதுப்பா… தெரிஞ்சா சும்மா விடுவாங்களா ? “
“சரி.. இந்த நரேந்திர பால் சிங் ன்ற ஆளுதானே ஐபிஎல் விவகாரத்துல பணம் பாத்தது… ?“
“அதே ஆளுதான். இந்த நரேந்திர பால் சிங் இப்படி நடந்துக்கிறதுக்கு தன்னோட மகளுக்கு மோசடியா சீட் வாங்கின விவகாரம் திரும்ப வெளியில வரக்கூடாதுன்றது மட்டும் இல்ல… டிஜிபி ராமானுஜத்துக்கு இரண்டு ஆண்டு பதவி நீட்டிப்பு கொடுத்ததால, நரேந்திர பால் சிங்குக்கு சட்டம் ஒழுங்கு டிஜிபி ஆகிற வாய்ப்பு போயிடுச்சு.. இந்த ஆளு ஏப்ரல் 2014ல் ஓய்வு பெர்றார். அந்த காண்டும் இந்த ஆளுக்கு இருக்கு. அதனாலதான் தன்னைப் பத்திய உரையாடலை விசாரிக்கக் கூடாது, ஆனா ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் பத்தி விசாரிக்கலாம்னு நடவடிக்கை எடுக்கிறார்…
இவங்க இப்போ பண்ணிக்கிட்டு இருக்கிற சிக்கலால, இந்த விஷயத்தை திமுக கையில் எடுக்கலாமான்னு யோசிச்சுகிட்டு இருக்காங்க“”
“அவங்க என்ன பண்ண போறாங்க… ?”
“ஜெயலலிதாவுக்கு சிக்கல் ஏற்படுத்தனும்னா அவங்களுக்கு கசக்குமா என்ன ? ஜெயலலிதா கொடநாடு எஸ்டேட் வாங்கியது தொடர்பான விசாரணை லஞ்ச ஒழிப்புத் துறையில் விசாரணை செய்யப்படாமலேயே மூடப்பட்டு விட்டது. அதனால, இதை சிபிஐ விசாரிக்கனும்னு ஒரு பொது நல வழக்கு தாக்கல் செய்யப்போறதா சொல்றாங்க…”
“கூட இருந்துக்கிட்டே நல்லா குழி பறிக்கிறானுங்கப்பா…. ?”
“குடும்பத்துக்குள்ளயே குழி பறிக்கிறவங்க இருக்கும்போது, இது என்ன பெரிய விஷயம் ?”
“யாருப்பா.. திமுக வா ?” என்றான் கணேசன்.
“அதேதான்ணே… திமுகவுல குடும்ப சண்டை உச்சகட்டத்துல இருக்கு. கனிமொழியை தலை தூக்க விடக்கூடாதுன்றதுல ஸ்டாலின் பிடிவாதமா இருக்கார்..”
“என்ன சொல்றார் தளபதி ?”
“நவம்பர் 15ம் தேதி, வட சென்னையில ஒரு நிகழ்ச்சியில ஸ்டாலின் கலந்துக்கிட்டார். அதுக்கு வைக்கப்பட்ட வரவேற்பு பேனர்களில், கேபிபி சாமி, ஸ்டாலின் படத்தோட கனிமொழி படத்தையும் வச்சுருந்தார்.
இதைப் பார்த்து கடுப்பான ஸ்டாலின், நேரடியாவே சாமியை கூப்பிட்டு கண்டிச்சிருக்கிறார். இது மட்டுமில்லாம, ஏற்காடு இடைத்தேர்தலுக்கு கனிமொழி பிரச்சாரத்துக்குப் போகக்கூடாதுன்னு கடுமையா நெருக்கடி கொடுத்திருக்கிறார். கருணாநிதியிடமே நேரடியா போயி, கனிமொழிக்கு டெல்லின்னு ஒதுக்கி குடுத்தாச்சு… மாநில அரசியலில் நான் தான்னு சொன்னீங்க… இப்போ… ஏற்காடுக்கு எப்படி பிரச்சாரத்துக்கு அனுப்பறீங்கன்னு சொல்லி சத்தம் போட்டிருக்கார்..”
“ம்ம்.. அதுக்கு தலைவர் என்ன சொன்னாராம்… கவிதை ஏதும் படிச்சாரா.. ?”
“கவிதை, கடிதமெல்லாம் உடன்பிறப்புக்குப்பா… ஸ்டாலின்கிட்ட கவிதையெல்லாம் படிச்சா, கடுப்பாயிடுவாரு… குடும்பத்து மானத்தையே காப்பாத்தியிருக்கா ய்யா அவ… யாருமே செய்யாத வேலையை அவ செய்ஞ்சிருக்கா.. அவ பழியை ஏத்துக்கிட்டு ஜெயிலுக்குப் போகலன்னா என்ன ஆயிருக்கும்னு யோசிச்சுப் பாரு… அவ எனக்கு பதிலா வர்றான்னு நெனைச்சுக்க” ன்னு சொல்லியிருக்கார். அதுக்கு என்ன பதில் சொல்றதுன்னே தெரியாம ஸ்டாலின், அமைதியாயிட்டார். 2ஜியை ஒழுங்கா விசாரிச்சா ஸ்டாலின்தான் ஜெயிலுக்குப் போயிருக்கணும்னு அவருக்குத் தெரியாதா ?”
“அம்மா ஆட்சியில புது நூல்களுக்கு ஆணை வழங்கியிருக்கிறதா பேசிக்கிறாங்களே…
திமுக ஆட்சியா இருந்தா, பதிப்பகம் வைத்திருக்கும் கவிஞர்கள் கோடிக்கணக்கில் புத்தக ஆணை வாங்கிட்டு, கலைஞருக்கு கவி பாடுவாங்க. ஆனா, இந்த கவி பாடுற வேலையெல்லாம் அம்மா ஆட்சியில நடக்குமா என்ன ?
புத்தக ஆர்டருக்கு 20 சதவிகிதம் கமிஷன்னு தெளிவா சொல்லிட்டாங்க. ஆரம்பப் பள்ளி இயக்குநரா இருக்கிற ராமேஷ்வர முருகன் தான் நூல் கொள்முதலுக்கு பொறுப்பு. 2010 மற்றும் 2011ம் ஆண்டுகளுக்கு தற்போது 2010 மற்றும் 2011 ஆகிய ஆண்டுகளுக்கு 60 கோடி மதிப்பிலான புத்தகம் வாங்க ஆணை வழங்கப்பட்டிருக்கு. இதுக்கு தெளிவா 20 சதவிகித கமிஷன் குடுக்கணும்னு சொல்லிட்டாரு.. பதிப்பகத்தை சேர்ந்தவங்க கொஞ்சம் கம்மி பண்ணுங்கன்ன சொன்னதுக்கு இதுல எனக்கு வெறும் 5 சதவிகிதம்தான்.. 10 சதவிகிதம் மந்திரிக்கு. மீதி உள்ள 5 சதவிகிதத்தை தலா இரண்டரை சதவிகிதம் வீதம் தரகர்கள் மற்றும் துணைத் தரகர்கள் பிரிச்சுக்குவாங்க.. கொஞ்சம் கூட குறைச்சுக்க முடியாதுன்னு சொல்லிட்டாராம்.. “
ராமேஷ்வர முருகன்
“விலைவாசி ஏறிக்கிட்டே போகுதுல்ல…. அவரு என்ன பண்ணுவாரு ?“
“மத்திய நிதி அமைச்சர் சிதம்பரத்தோட மகன் பிறந்தநாளை ஊர் முழுக்க சிறப்பா கொண்டாடியிருக்காங்களே… “ என்றான் ரத்னவேல்.
“ஸ்டாலினாவது கட்சியில பல ஆண்டுகளா உழைச்சிருக்கார்.. ஆனா, எந்த பின்புலமும் இல்லாமயே இவ்வளவு அல்லக்கைகளை வளத்து வைச்சுருக்கிறதுக்கு கார்த்தி சிதம்பரத்தை பாராட்டித்தான் தீரணும்.
சமீபத்துல மீனாட்சி மருத்துவக் கல்லூரியில வருமான வரித்துறை சோதனை நடத்தியது ஞாபகம் இருக்கா ?“
“ஏன் இல்லாம.. நல்லா ஞாபகம் இருக்கே.. “
“இந்த வருமான வரித்துறை சோதனைகளை முன்னின்று நடத்தியது முருகாலயம் சரவணன் ன்ற வருமான வரித்துறை அதிகாரி. அந்த அதிகாரியை எப்படியாவது சரிக்கட்டணும்னு அந்தக் கல்லூரியில உள்ள முக்கியமான பங்குதாரரான, கடல்சார் பல்கலைக்கழகத்தின் இயக்குநர் விஜயன், ப.சிதம்பரத்தை அணுகியிருக்கார். வருமான வரித்துறை சிதம்பரத்தின் கீழதானே வருது….. உடனடியா சரவணனை சரிக்கட்டிட்டார் சிதம்பரம். இனிமே மீனாட்சி கல்லூரியின் சோதனைகள் பனி போல் கரைந்து விடும்.”
”காவல்துறை செய்திகள் என்னப்பா.. ? ” என்றார் கணேசன்.
”நெறய்ய இருக்கு… ஒன்னு ஒன்னா சொல்றேன்..
”ஹஜ் பயணம் போயிட்டு, வந்த தன்னோட உறவினர்களைப் பாக்கிறதுக்காக விமான நிலையம் போயிருக்காரு மனிதநேய மக்கள் கட்சி எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா. அங்க தயாளன் மற்றும் கண்ணன் ன்னு ரெண்டு உதவி ஆய்வாளர்கள் தடுத்து நிப்பாட்டி கேள்வி கேட்டுருக்காங்க.. எம்எல்ஏவுக்கு கோவம் வந்துடுச்சு.. உடனே, கூடுதல் ஆணையர் தாமரைக்கண்ணன் கிட்ட விஷயத்தை சொல்லியிருக்கார். அந்த ரெண்டு பேரும் இப்போ விமான நிலையத்துல இருந்து கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்டிருக்காங்க..”
”உளவுத்துறை கூடுதல் டிஜிபி அஷோக் குமார் சிபிஐக்கு போறாராமே.. ?”
”ஆமா.. அப்படி ஒரு தகவல் உலவுது. அவருக்கு உளவு வேலையை விட, சிபிஐ பணிகள் பிடித்தமான பணி என்பதும் ஒரு காரணம்..”
”சென்னை மாநகரத்துல கட்டிடம் கட்ட, காவல்துறையின் அனுமதி கிடைக்காமல் ரொம்ப தாமதமாகிறதா ஒரு தகவல் இருக்கே… உண்மையாடா ?” என்றான் பீமராஜன்.
”அத்தனை கோப்புகளும், ஜார்ஜ் மன்னரின் டேபிளில்தான் இருக்குதாம். சாமான்யத்துல எந்த கோப்புக்கும் அனுமதி கிடைக்கிறதில்லையாம். மந்திரி, சிஎம்டிஏ, அதிகாரிகள் ன்னு அத்தனை பேருக்கும் கொட்டி அழுதாலும், மன்னர் அனுமதி கிடைக்காமல் பல்வேறு பில்டர்கள் புலம்பிக்கிட்டு இருக்காங்களாம்.
அது மட்டுமில்லாம, மைக் ல மன்னர் ஆங்கிலத்துல மட்டும்தான் பேசறாராம். அவர் வேகமா பேசறதால, சில உத்தரவுகள் புரியாம போயிடுச்சுன்னு புலம்பல் சத்தம் வேற காவல்துறையில கேக்குது.
ரெண்டு வாரத்துக்கு முன்னாடி, டிஜிபி ஆபீசுக்கு முன்னாடி, அதிகாலையில ஒரு கார் வேகமா போனதுல 3 பேர் இறந்து போனாங்க. ஆனால், விபத்து ஏற்படுத்திய நபர் கைது செய்யப்படவில்லை. வழக்கை பதிவு செய்து, வெறும் அபராதத்தோடு விட்டு விட முயற்சிகள் நடந்து வருகின்றன. இதுதான் விடுகதை.. காவல்துறை ஏன் இப்படி செயல்படுகிறது… ? சொல்லுங்கள் பார்ப்போம்..” என்று சொல்லி விட்டு அனைவரையும் பார்த்தான் தமிழ்.
”என்ன பெரிய அதிசயம்.. யாராவது விஐபியா இருப்பாங்க..” என்று சலிப்பாக சொன்னான் ரத்னவேல்.
”விஐபி இல்ல… விஐபியோட மகன் மிடாஸ் மோகன்…”
”ஒரு காவல்துறை அதிகாரிக்கு ரிட்ஸ் விருது குடுத்தாங்களாமே… யாருப்பா அவரு….” என்றார் கணேசன்.
”கூடுதல் ஆணையர் ராஜேஷ் தாஸ்தான் அந்த அதிகாரி. அவருக்கு சிறந்த காவல்துறை அதிகாரின்னு குடுத்த அன்னைக்கே வட சென்னையில 11 சங்கிலிப் பறிப்புகளும், ஒரு கொலையும் நடந்திருக்குன்னு சொல்லி சிரிக்கிறாங்க காவல்துறையில…
அது மட்டுமில்லாம, எனக்கு இந்த விருது கிடைச்ச காரணமே, பத்திரிக்கையாளர் சஞ்சய் பின்டோதான். அவர்தான் என்னுடைய சிறப்புகளை உலகுக்கு எடுத்து சொல்லியவர்னு புகழாரம் பாடியிருக்கார் ராஜேஷ் தாஸ்..”
”சரி மச்சான் நீதித்துறை செய்திகள் என்னன்னு சொல்லு…” என்றான் ரத்னவேல்.
”நீதியரசர் தனபாலனோட இரண்டாவது மகன் திருமணம் போன வாரம் ராணி மெய்யம்மை ஹாலில் நடைபெற்றது…”
”இந்த திருமணமும் வளர்ப்பு மகன் திருமணம் போல விமரிசையா நடைபெற்றுச்சா… ?”
”அதான் இல்ல… முதல் மகனோட திருமணம், வெகு விமரிசையா நடைபெற்றது. இது பத்தி சவுக்கு தளத்தில் யார் சிறந்த நீதிபதி ன்னு ஒரு கட்டுரை விரிவா வந்திருந்துச்சு.. இணைப்பு . ஆனா இந்த முறை அது மாதிரி நடக்கல. ரொம்ப சாதாரணமா தான் நடந்துச்சு. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் வந்திருந்தார். ஆனா, உயர்நீதிமன்றத்துலயே இருக்கிற பல நீதிபதிகள் வரல. வழக்கறிஞர்களில் கூட பல பேர் வரல. நேர்மையான நீதிபதிகள் இப்படித்தான் திருமணம் செய்ய முடியும். ஹோட்டல் லீலா பேலஸ்ல ஊழல் நீதிபதிகளால மட்டும்தான் பண்ண முடியும்..”
”நீதிபதி திருந்திட்டாரா ?”
”அடக்கி வாசிக்கிறாருன்னு வேணா சொல்லலாம். திருந்திட்டாருன்னெல்லாம் சொல்ல முடியாது.
வர்ற 23ம் தேதி நடைபெற இருக்கிற மெகா லோக் அதாலத் மாதிரி அடிக்கடி நடத்தணும்னு மேஜிஸ்ட்ரேட்டுகளும், நீதிபதிகளும் விரும்பறாங்களாம்.”
”வழக்குகளை விரைவா முடிக்க நினைக்கிறாங்களா… ? ”
”நல்லா நினைப்பாங்களே… வழக்குகள் விரைவா முடிஞ்சா அவங்க பொழப்புக்கு என்ன பண்ணுவாங்க…
உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி, இந்தியா முழுக்க 23 நவம்பர் அன்னைக்கு மெகா லோக் அதாலத் நடக்க இருக்கு. இதுல, இந்தியாவுலயே தமிழ்நாடு முதல் மாநிலமா வரணும்னு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்காம். இதுக்காக வழக்குகளை முடிக்க வேக வேகமா வேலைகள் நடந்துக்கிட்டு இருக்கு.”
”நல்ல விஷயம்தானே… இதுல என்ன தப்பு இருக்கு ?”
”சென்னைப் பெருநகர தலைமை நீதிபதியா இருக்கிற கோபாலன் தலைமையிலதான் இதுக்கான வேலைகளை முன்னின்று நடத்துறார். அவரோட உத்தரவு என்னன்னா… பழைய வழக்குகளை முடிக்க முடியலன்னா, புதுசா வழக்குகளை தாக்கல் செய்து, அதை உடனடியா முடிக்கும்படி உத்தரவு போட்டிருக்கார்.
உதாரணத்துக்கு, ஒவ்வொரு காவல் நிலையமும், போதையில் வாகனத்தை ஓட்டிய வழக்கு, அடிதடி தகராறு வழக்கு, சென்னை மாநகர காவல்துறை சட்டத்தின் படியான சிறு வழக்குகள் ஆகியவற்றை அதிக அளவில் தாக்கல் செய்து, அவற்றை உடனடியா முடிப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று சென்னையின் அத்தனை துணை ஆணையர்களுக்கும் கோபாலன் உத்தரவு போட்டிருக்கார். இதன் அடிப்படையில கடந்த ஒரு மாதமா, சென்னை மாநகர காவல்துறை வளைச்சு வளைச்சு வழக்குகள் பதிவு பண்ணிக்கிட்டு இருக்காங்க. இதன் அடிப்படையில முடிக்கப்படும் வழக்குகளின் எண்ணிக்கையை மட்டும் கணக்கு காண்பித்து, இந்தியாவிலயே முதன்மையான நீதிமன்றம் சென்னை நீதிமன்றம்தான் னு காண்பிக்கத்தான் இந்த ஏற்பாடு.
“கோபாலனோட இந்த உத்தரவை சிரமேற்கொண்டு செய்பவர்கள், கூடுதல் கூடுதல் நீதித்துறை தலைமை நடுவர் ரவி, 8வது நீதிபதி ஜெயஸ்ரீ, 2வது நீதிபதி விஜயராணி, 17வது நீதிபதி ராஜலட்சமி, 18வது நீதிபதி ஆனந்தவேல். இவங்க அத்தனை பேரும் கடந்த ஒரு மாத காலமா வசூல் வேட்டையில இறங்கியிருக்காங்க…”
“கேக்கவே பயங்கரமா இருக்கே… ?”
“இன்னும் நெறய்ய இருக்கு கேளு..”
“போக்குவரத்து விதிகளை மீறுபவர்களிடம் ஸ்பாட் ஃபைன் போட்டு வசூலிப்பது, வழக்கம். ஆனா, கடந்த இரண்டு மாதங்களா, ஸ்பாட் பைன் போடாதீர்கள், நீதிமன்றத்தில் வந்து ஃபைன் கட்டுமாறு உத்தரவிடுங்கள்னு, நீதித்துறையில இருந்து கடுமையான நெருக்கடி கொடுக்கப்பட்டு வருது. இது தவிரவும் புதுசா பெட்டி கேஸ் போடுங்க.. நாங்க இந்த லோக் அதாலத்துல 50 ஆயிரம் கேஸ் முடிக்கணும்னு, கோபாலன் எல்லா போலீஸ் அதிகாரிகள்கிட்டயும் சொல்லிட்டு வர்றாராம்.
8வது பெருநகர நீதிபதி ஜெயஸ்ரீ நீதிமன்றத்துல, ஓய்வு பெற்ற நீதிமன்ற ஊழியர் “ரசாக்” ன்றவர் வேலை பாக்கறார். இந்த ரசாக் மற்றும் அரசு ஊழியராகவே இல்லாத வெங்கடேசன் ன்ற நபரும் சேந்துதான் நீதிபதி ஜெயஸ்ரீ சார்பா வசூல் வேட்டையில் இறங்கிட்டு வர்றாங்க.
அதுவும் இந்த ஜெயஸ்ரீ வசூல் வேட்டை குறைஞ்சதுன்னா சண்டையே போட்ற அளவுக்கு வேகமா இருக்காங்க. ஒரு மாதத்தின் 1ம் தேதி முதல் 15ம் தேதி வரை, ஜார்ஜ் டவுன் மாலை நீதிமன்றத்துக்கு, நீதிபதி ஜெயஸ்ரீ பொறுப்புன்னும், 16 முதல் 30 வரை, 16வது நீதிபதி ஜெயவேலும் பணி புரிய வேண்டும்னு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கு.
16 முதல் 30 வரை, நீதிபதி ஜெயவேல் மாலை நேர நீதிமன்றத்துக்கு பொறுப்பா இருந்தா, வசூல் பாதிக்கப்படும்னு உணர்ந்த ஜெயஸ்ரீ, உத்தரவு பிறப்பிச்ச நீதிபதிக்கிட்ட போயி, “சார் சார்.. நான் நீதித்துறையின் பணிப்பளுவை குறைப்பதற்காக பாடுபடுகிறேன். அதனால் என்னையே 16ம் தேதி முதல் 30ம் தேதி வரை, மாலை நேர நீதிபதியா நியமியுங்கள்” னு சொல்லியிருக்காங்க. அந்த நீதிபதிக்கு இந்த விபரமெல்லாம் தெரியும். நீங்கள் ஆணியே பிடுங்க வேண்டாம். பிறப்பித்த உத்தரவு அப்படியே இருக்கட்டும் னு சொல்லிட்டார்.
அவ்வளவுதான் வந்ததே கோவம் ஜெயஸ்ரீக்கு… நேராக தலைமை பெருநகர நீதிபதி கோபாலனிடம் போய் முறையிட்டார்… நான் நீதித்துறையின் பணிப்பளுவை குறைப்பதற்காக வேலை செய்கிறேன் என்றால் எனக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது ன்னு சொன்னார். அவ்வளவுதான்…. என்ன நடந்துச்சோ தெரியலை.. ஜெயஸ்ரீயே நவம்பர் மாதத்தில் 1ம் தேதி முதல் 30ம் தேதி வரை மாலை நேர நீதிமன்றத்தை கவனிப்பார் னு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுச்சு… “
“ஏம்பா… இவ்வளவு ஆர்வமா வேலை செய்யற நீதிபதி நீதித்துறைக்கு பெரும் சொத்து இல்லையா… ?”
“நீதித்துறைக்கு பெரும் சொத்து இல்லை.. அவங்களுக்குத்தான் பெரும் சொத்து சேந்துக்கிட்டு இருக்கு.. அவங்க ஏன் இப்படி மாசம் பூரா வேலை செய்ய அலையறாங்கன்னு சொல்றேன் கேளு.
குடி போதையில் அதிகமாக விபத்து நடப்பதால், குடித்து விட்டு சிக்கும் வாகன ஓட்டிகளுக்கு 2000 ரூபாய் அபராதம் பல காலமாக விதிக்கப்பட்டு வருகிறது. ஜெயஸ்ரீயும் எல்லா குற்றவாளிகளிடமும் 2000 கட்டுங்கள் னு உத்தரவு போட்டுருவார்.”
“நல்லாத்தானேப்பா நடத்தறாங்க ஜட்ஜு…” என்று நீதிபதிக்கு சப்போர்டாக பேசினான் வடிவேல்.
“இருடா அவசரக் குடுக்கை. அப்படி விதிக்கப்படும் அபராதம் 2000த்தை சம்பந்தப்பட்ட நபர்கள் கட்டி விட்டு போய் விடுவார்கள். இதில் 300 மட்டுமே அரசுக்கு செலுத்தப்படும். மீதம் உள்ள தொகையில் 700 நீதியின் நாயகி ஜெயஸ்ரீ க்கு… மீதம் உள்ள 1000 ரூபாயில் ப்ரோக்கர்களாக செயல்படும் ரசாக், மற்றும் வெங்கடேசன் 600 ரூபாய் எடுத்துக்குவாங்க. மீதம் உள்ள 400 ரூபாய் சம்பந்தப்பட்ட போலீஸ் காரர்களுக்கு…
இது குடித்து விட்டு வாகனம் ஓட்டும் வழக்குகள். அடிதடி வழக்குகளில் அதிகபட்சமாக 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. இதில் 100 ரூபாய் மட்டுமே அரசுக்கு. மீதம் உள்ள 900 ரூபாய் நீதியின் நாயகி ஜெயஸ்ரீ, ரசாக், வெங்கடேசன் மற்றும் காவல்துறையினரால் பங்கு போட்டுக் கொள்ளப் படுகிறது.”
“இந்த நீதிபதிகள் பெரிய சம்பல் கொள்ளையர்களா இருப்பாங்க போல இருக்கே… ?”
“இன்னும் சொல்றேன் கேளு மச்சான்… இதுக்கே வாயை பிளக்குற.. ?”
“எழும்பூரில் விரைவு நீதிமன்ற நீதிபதியா சுஜாதான்றவங்க இருக்காங்க. இவங்க ப்ரோக்கர்கள் ரசாக் மற்றும் சீனிவாசனின் உதவியை பெறுவதில்லை. அதுக்கு பதிலா, அவங்க நீதிமன்றத்துலயே இருக்கிற ராமகிருஷ்ணன் ன்ற நீதிமன்ற ஊழியர் மூலமா வசூலில் ஈடுபட்றாங்க… 17வது நீதிபதி ராஜலட்சுமியும், 18வது நீதிபதி ஆனந்தவேலும், அவர்களுக்குன்னு தனியா ப்ரோக்கர் வச்சுக்கிட்டு வசூலில் ஈடுபட்றாங்க… இவங்களுக்கெல்லாம் தலைவர் ஒருத்தர் இருக்கார்… அவர்தான் வசூல்ராஜா கோபாலன்… அவர்தான் தலைமைப் பெருநகர நீதிபதி.
இது மாதிரி எல்லா நீதிபதிகளும் வசூலில் ஈடுபடுவதைப் பார்த்து 2வது பெருநகர நீதிபதியா நியமிக்கப்பட்டிருக்கும் விஜயராணியும் களத்தில் இறங்க முடிவெடுத்தா, அவங்க நீதிமன்றத்தில் போக்குவரத்து வழக்குகள் வருவதில்லை. அந்த வழக்குகள் வேறு நீதிமன்றத்துக்கு போகிறது…
நேரா வசூல் ராஜா கோபாலன்கிட்ட போய் முறையிட்றாங்க.. அவர் உடனே ஒரு உத்தரவை பிறப்பிக்கிறார். 12.11.2013 அன்று அவர் பிறப்பித்த உத்தரவின்படி, அண்ணாசதுக்கம், கீழ்ப்பாக்கம், அண்ணா நகர், கோயம்பேடு, சவுந்தரபாண்டியனார் அங்காடி, மற்றும் வில்லிவாக்கம் போக்குவரத்து காவல் நிலையங்களின் வழக்குகள் இனி 2வது பெருநகர நீதிமன்றத்தில்தான் தாக்கல் செய்யப்படும்னு ஒரு உத்தரவு போட்றார். “
“அது எப்படிப்பா அப்படிப் போட முடியும்… பெருநகர நீதிபதிக்கு அப்படி ஒரு அதிகாரமே கிடையாதே… ?“
“நான் என்ன பொய்யா சொல்றேன்… 12.11.2013 அன்னைக்கு கோபாலன் இப்படி ஒரு உத்தரவை பிறப்பித்திருக்கிறார். சென்னை உயர்நீதிமன்ற விஜிலென்ஸ் பதிவாளர் விசாரித்தால் இந்த உண்மை தெரியும்
இதோட முடியல.. 12.11.2013 அன்னைக்கு வசூல் ராஜா கோபாலன் இப்படி ஒரு உத்தரவு போட்டதும், நீதிபதி ஜெயராணி 13.11.2013 அன்னைக்கு அவங்க ஒரு உத்தரவு போட்றாங்க. அண்ணாசதுக்கம், கீழ்ப்பாக்கம், அண்ணா நகர், கோயம்பேடு, சவுந்தரபாண்டியனார் அங்காடி, மற்றும் வில்லிவாக்கம் ஆகிய காவல் நிலையங்களுக்கு கடிதம் எழுதி, அனைத்து வழக்குகளையும், தாமதம் செய்யாமல் உடனடியாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்து, விரைவாக முடிக்கவும் வேண்டும்னு ஒரு கடிதம் அனுப்பியிருக்காங்க… இந்த ஆவணமும் நீதிமன்றத்துல இருக்கு… “
“மக்கள் நீதிமன்றங்கள் ன்றது, பழைய வழக்குகளை விரைவாக முடிக்கணும்னு உருவாக்கப்பட்ட திட்டம். தீர்வாகாமல் இருக்கும் பழைய வழக்குகளை முடித்தா, நீதிமன்ற பளுவும் குறையும், பொதுமக்களுக்கும் நன்மை பயக்கும். லோக் அதாலத்ன்ற பேர்ல இவங்க அடிக்கிற கொள்ளை பயங்கரமா இருக்கே… “ என்றார் கணேசன்.
“அண்ணே அப்படியெல்லாம் பேசாதீங்க.. நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போட்டுடுவாங்க….“ என்று சொல்லி விட்டு சிரித்தான் தமிழ்.
“போலாம்பா… “ என்று சொல்லி விட்டு எழுந்தார் கணேசன். அனைவரும் கலைந்தனர்.
நீதித்துறையின் கேவலங்கள் ஒழிக்கப்பட சவுக்கில் எழுதுவதை பார்த்து என்றாவது ஒரு நாள் யாராவது ஒருவன் சாட்டையை எடுக்க வேண்டும்.எடுப்பான்.