“வணக்கம்” என்று சொல்லியபடி மொட்டை மாடியில் நுழைந்தான் தமிழ்.
“வா மச்சான்” என்று டாஸ்மாக் தமிழை வரவேற்றான் பீமராஜன். “ஏற்காடு இடைத்தேர்தல் பிரச்சாரம் எப்படி இருக்கு ? ” என்றான் ரத்னவேல்.
“ஏற்காடு தேர்தல் நல்லா சூடு பிடிச்சிருக்கு. ஜெயலலிதா நேரடியா பிரச்சாரத்துக்கு போறதுல இருந்து இந்தத் தேர்தலை அவங்க எப்படி சீரியசா எடுத்துக்கறாங்கன்னு தெரியுது. திமுக தரப்புல வன்னியர் வாக்குகளை பெறுவதில் ரொம்ப முனைப்பா இருக்காங்க. பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடாத காரணத்தால, வன்னியர் வாக்குகளை மொத்தமா அள்ளிடலாம்னு கணக்கு போட்றாங்க.
காடுவெட்டி குருவை சிறையில் வைச்சிருக்கறது, ராமதாஸ் உள்ளிட்ட பாட்டாளி மக்கள் கட்சி பிரமுகர்களை தொடர்ந்து கைது செய்தது, வீரபாண்டி ஆறுமுகத்தை அலைக்கழிச்சது, போன்ற விவகாரங்கள், வன்னியர்களை அதிமுக அரசு மேல கடும் கோவத்தை ஏற்படுத்தியிருக்கு. வழக்கமா இடைத்தேர்தலில் ஆளுங்கட்சிக்குத்தான் மக்கள் வாக்களிப்பார்கள் னாலும், இந்த இடைத்தேர்தலில், அதிமுகவின் வெற்றி அவ்வளவு எளிதா அமையாதுன்னுதான் பேசறாங்க. திமுகவும் தன்னோட பிரச்சாரத்துல, வீரபாண்டி ஆறுமுகம் இறந்ததுக்கு காரணமே, ஜெயலலிதா அவரை ஒவ்வொரு சிறையா மாற்றி, அலைக்கழிச்சதுதான்னு பிரச்சாரம் பண்றாங்க.. “
“என்ன பிரச்சாரம் பண்ணாலும் அம்மா போனாங்கன்னா அப்படியே தலைகீழா மாறிடாதா ? ” என்றான் வடிவேல்.
“அப்படித்தான் அம்மா நம்பறாங்க… பாப்போம்”
“டிசம்பர் முதல் தேதி அன்னைக்கு நடைபெற இருக்கும் திமுக பொதுக்குழுவில் என்னப்பா நடக்கப் போகுது ? ” என்றார் கணேசன்.
“அண்ணே, ஸ்டாலினை பொதுத்தேர்தலை சந்திக்க ஏதுவாக, தேர்தல் பணிக்குழு செயலாளர் பதவிக்கு நியமிக்கலாம்னு முடிவெடுக்கப்பட்டிருக்கு. இது பாராளுமன்றத் தேர்தலில் ஸ்டாலின் முழு வீச்சோடு செயல்பட அவருக்கு ஊக்கமாவும், தற்போதைக்கு ஸ்டாலினோட தலைவர் பதவி கோரிக்கையை தள்ளிப் போட பயன்படும் னு கலைஞர் நினைக்கிறாரு.. “
“ஸ்டாலின் அதுக்கு ஒத்துக்குவாரா ? “
“வேற வழி… ? ஆனா, இந்த ஏற்காடு இடைத்தேர்தலில் கணிசமான வாக்குகளைப் பெற்று, ஒரு நல்ல தாக்கத்தை ஏற்படுத்தணும்னு தீவிரமா வேலை செய்துக்கிட்டு இருக்காரு. அழகிரி போட்டியில இருந்து ஏறக்குறைய விலகிட்டதால, ஏற்காடு இடைத்தேர்தலில் தன்னோட பலத்தை காட்டணும்னு தீவிரமா வேலை செய்யறாரு.. “
“அவரை தலைவராக்கிட்டா இன்னும் வேகமா வேலை செய்வாரே… ” என்றான் வடிவேல்.
“அவரை தலைவராக்கிட்டா, கலைஞரை யாராவது மதிப்பாங்களா… இது கலைஞருக்குத் தெரியாதா ? “
“சொத்துக் குவிப்பு வழக்கு எப்படிப்பா இருக்கு ? ” என்றார் கணேசன்.
“அண்ணே சொத்துக் குவிப்பு வழக்கை விடுங்க. ஜெயலலிதாவுக்கு அடுத்த சிக்கலா பிறந்தநாள் பரிசு வழக்கு காத்திருக்கு. 1991-96 காலகட்டத்துல ஜெயலலிதாவுக்கு பிறந்தநாள் பரிசா, 3 லட்சம் அமெரிக்க டாலர்கள் வரைவோலையா தபால் மூலமா வந்துச்சு. இதை யாரு அனுப்பினாங்கன்னு ஜெயலலிதாவுக்கு தெரியாதுன்னு சொன்னாங்க. ஆனா, அந்தப் பணத்தை எடுத்து தன்னோட வங்கிக் கணக்குல போட்டுக்கிட்டாங்க. சிபிஐ இந்த வழக்கை விசாரிச்சு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தாங்க. இந்த வழக்கு நீண்ட தாமதத்துக்குப் பிறகு விசாரணைக்கு வந்துச்சு. அப்போ வழக்கு நீண்ட தாமதாகிவிட்டதால் ஜெயலலிதாவின் வாழும் உரிமை பாதிக்கப் பட்டிருக்குன்னு சொல்லி, சென்னை உயர்நீதிமன்றம் இந்தக் குற்றப்பத்திரிக்கையை ரத்து செய்தது. இது குறித்து சவுக்கு தளத்தில் விரிவா கட்டுரை வந்திருக்கு.
அதை எதிர்த்து சிபிஐ உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தாங்க. அந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் நிஜ்ஜார் மற்றும் இப்ராஹிம் கலிபுல்லா முன்னிலையில் போன வாரம் விசாரணைக்கு வந்தது. அப்போ ஜெயலலிதா தரப்புல, இந்த வழக்கை ஏப்ரல் மாதம் விசாரிக்கணும்னு சொன்னாங்க. ஆனா, நீதிபதிகள் அதை ஏத்துக்காம விசாரணையை ஜனவரி மாதம் தள்ளி வைச்சுருக்காங்க..”
“டான்சி வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள்ல உச்சநீதிமன்றத்தோட ஓபனிங் நல்லாத்தானேடா இருந்துச்சு.. ” என்றான் ரத்னவேல்.
“இந்த வழக்கை விசாரிக்கும் ஒரு நீதிபதி தமிழகத்தில் இருந்து உச்சநீதிமன்றத்துக்கு சென்ற நீதிபதி இப்ராஹிம் கலிபுல்லா. பாப்போம். “
“சொத்துக் குவிப்பு வழக்கு என்ன நிலையிலப்பா இருக்கு ? ” என்று தன் கேள்வியை மீண்டும் வலியுறுத்தினார் கணேசன்.
“அண்ணே… கர்நாடக சிறப்பு நீதிமன்ற நீதிபதியா இருந்த பாலகிருஷ்ணா தனக்கு பணி நீட்டிப்பு வேண்டாம்னு சொல்லி கடிதம் எழுதியதை ஏற்கனவே சொல்லியிருந்தேன். இதை கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்ததும், ஜெயலலிதா தரப்புல இது குறித்து விரிவா பதில் மனு தாக்கல் செய்யணும்னு இரண்டு வாரம் அவகாசம் கேட்டிருக்காங்க.. “
“இந்த வழக்கு தாமதப்படுவதால், ஜெயலலிதாவின் உரிமைகள் பாதிக்கப்படுது, அதனால் நீதிபதி பாலகிருஷ்ணா ஓய்வு பெறுவதற்குள் விரைவாக வழக்கை முடிக்கணும்னு இவங்கதானேடா அவசரப்பட்டாங்க” என்று ஜெயலலிதாவின் பழைய நிலைப்பாட்டை சுட்டிக்காட்டினான் பீமராஜன்.
“அது போன வாரம்… நான் சொல்றது இந்த வாரம்” என்றான் தமிழ்.
“இப்போ விசாரணையை தாமதப்படுத்துவாங்களா ? ” என்றான் ரத்னவேல்.
“இனிமே தாமதப்படுத்துவது அவ்வளவு எளிது கிடையாது. ஏற்கனவே, வழக்கை விரைவாக நடத்த வேண்டும் னு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் பண்ணியிருக்கிற ஜெயலலிதா, மேலும் மேலும் அவகாசம் வேணும்னு கேட்டுக்கிட்டு இருக்க முடியாது. இதற்கிடையே, பெங்களுரு சிறப்பு நீதிபதியா நியமிக்கப் பட்டிருக்கிற, மைக்கேல் கன்னா, தன்னோட விசாரணையை தொடங்கிட்டாரு. போன வாரம் வழக்கு விசாரணைக்கு வந்தப்போ, சொத்துக் குவிப்பு வழக்கில் புலன் விசாரணை செய்து, குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்த நல்லம்மா நாயுடு ன்ற அதிகாரியை மறு விசாரணை செய்யணும் னு திமுக தரப்பில் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு வருது”
“அவரைத்தான் ஏற்கனவே விசாரிச்சிட்டாங்களே… எதுக்காக திரும்ப விசாரிக்கணும்” என்று சந்தேகம் கிளப்பினான் பீமராஜன்.
“இந்த வழக்கின் புலனாய்வு அதிகாரியா தற்போது இருப்பவர் லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி சம்பந்தம். இவரை ஜெயலலிதா தரப்பு சாட்சியா சமீபத்துல விசாரிச்சாங்க. அப்படி விசாரிக்கும்போது, பல முக்கியமான ஆவணங்களை இவர், லஞ்ச ஒழிப்புத்துறை கைப்பற்றவேயில்ல… இது எப்படி வந்துச்சுன்னு தெரியாது.. ஒரு சில ஆவணங்களை, இவை போலியாவும் இருக்கலாம்னு சாட்சி சொல்லியிருக்காரு… “
“சம்பந்தம் இப்போதானே இந்த வழக்கை பாக்குறாரு… இந்த வழக்கின் புலனாய்வு நடந்தப்போ இவரு இல்லவேயில்லயே… “
“அதுக்காகத்தான் நல்லமா நாயுடுவை மீண்டும் விசாரிக்கணும்னு திமுக தரப்பில் மனு தாக்கல் செய்திருக்காங்க.
நல்லமா நாயுடு, லஞ்ச ஒழிப்புத்துறையிலயே 25 ஆண்டுகளுக்கும் மேலா பணியாற்றியவர். குறிப்பா சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணைகள்ல நிபுணர்னே சொல்லலாம். மிகச் சிறப்பா புலன் விசாரணை செய்து குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்தார். ஜெயலலிதா பொது ஊழியரா இருந்த 1 ஜனவரி 1991 முதல் 30 ஏப்ரல் 1996 வரை ஜெயலலிதாவின் மொத்த வருமானம் ஒன்றரை கோடி.”
“வெறும் ஒன்றரை கோடிதானா ? “
“ஆமாம்பா… அப்போ அம்மா வெறும் ஒரு ரூபாய்தான் சம்பளம் வாங்குனாங்க. அப்போ 1996 தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுகவினர், “ஒரு ரூபா சம்பளம்தானே… ஆனா ஊரெல்லாம் உம்பணம்தானே. ன்னு பாட்டெல்லாம் போட்டாங்க.” வருமானம் ஒன்றரை கோடி, செலவு மூணு கோடி”
“செலவு எப்படிப்பா மூணு கோடி வரும் ? “
“வளர்ப்பு மகன் திருமணம் மட்டுமே பல கோடி வந்துசசுப்பா…. ஏ.ஆர்.ரஹ்மான், இளையராஜா, கங்கை அமரன் கச்சேரி, சுதாகரனுக்கு பரிசளித்த நகைகள்னு ஏகப்பட்ட செலவு”
“அப்போ ஆகத்தானே செய்யும்”
ஜெயலலிதாவோட சொத்துக் குவிப்பு வழக்கை மற்ற எல்லா வழக்குகளையும் போலத்தான் அவர் விசாரிச்சார். ஆனா, ஜெயலலிதா முதல்வரா இருந்தப்போ பிப்ரவரி 2003ல் இவர் சாட்சியா சென்னையில் இருந்த சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டார். அப்போ, அரசு வழக்கறிஞரா இருந்த சந்திரசேகரனும், ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞரா இருந்த ஜோதியும், விசாரணைன்ற பேர்ல, இவரை அவமானப்படுத்தி, மன வேதனை அடைய வச்சாங்க.. “
“அரசு வழக்கறிஞர் எப்படி இவருக்கு எதிரா இருந்தார் ? “
“அப்போ ஜெயலலிதா முதல்வர்டா… இப்போ என்ன நடக்குது ? சம்பந்தம் அரசு அதிகாரிதான். அதிமுக அமைச்சர் மாதிரி செயல்படலையா ? அதேதான் அப்போ நடந்துச்சு.
வழக்கு ஆவணங்களை நான் பார்வையிடணும்னு நல்லம்மா நாயுடு நீதிமன்றத்திடம் கோரிக்கை வச்சப்போ, பாக்கக் கூடாது, ஞாபத்துல என்ன இருக்கோ, அதை சொல்லுங்க.. நீங்கள் திமுக உறுப்பினர்.. கருணாநிதி சொன்னதைக் கேட்டு வழக்கை விசாரிச்சீங்கன்னு கேட்டு ரொம்ப அவமானப்படுத்தினாங்க. எனக்கு ஆதரவு தரவேண்டிய அரசு வழக்கறிஞரே எனக்கு எதிராக செயல்படுகிறார் னு வேதனைப்பட்டார். அவருக்கு அப்போல்லோ மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை செய்த கட்டணத்தை அப்போதைய திமுக அரசாங்கம் ஒரு அரசு உத்தரவு மூலமா திருப்பியளிச்சது.
அந்தக் கட்டணத்தை அவர் திரும்ப செலுத்தணும்னு அவரை ஓய்வு பெற்ற பிறகு அற்பத்தனமா அலைக்கழிச்சாங்க. கடுமையான மன வேதனைக்கு நல்லமா நாயுடு ஆளாக்கப்பட்டார்.
ஆனா, காலச்சக்கரத்தின் சுழற்சி, இன்னைக்கு நல்லமா நாயுடு கையிலயே ஜெயலலிதாவின் தலையெழுத்தை ஒப்படைச்சிருக்கு.”
“இதுக்கும் ஜெயலலிதா தரப்புல எதிர்ப்பு தெரிவிப்பாங்களே.. ? “
“அப்புறம் தெரிவிக்க மாட்டாங்களா ? தெரிவிப்பாங்க. ஆனா, ஒரு வழக்கின் ஆவணங்களில் சந்தேகம் ஏற்படுத்தப்பட்ட பிறகு, அதை தெளிவுபடுத்துவதற்காக, அந்த வழக்கின் புலனாய்வு அதிகாரியை விசாரிப்பதே சரியான நடவடிக்கை. நேர்மையான நீதிபதி என்று பெயரெடுத்திருக்கக் கூடிய நீதிபதி குன்னா, இதை அனுமதிப்பார் என்றே சொல்லப்படுது. “
“அப்போ அம்மாவுக்கு சிக்கல்தானா ? “
“தண்ணீருக்கு நெருப்பின் மீது பயம் இருக்க வேண்டும். நெருப்புக்கு தண்ணீரின் மேல் பயம் இருக்க வேண்டும். இதுதான் இயற்கை நியதி. இது இல்லாவிட்டால், சமன்பாடுகள் மாறிவிடும். “
“அதுவும் சரிதான்” என்று ஆமோதித்தான் ரத்னவேல்.
“போலீஸ் பக்ருதீன் வழக்கு எந்த நிலையிலப்பா இருக்கு ? “
“நேற்று ராமநாதபுரம் போலீசார் பரமக்குடி முருகன் கொலை வழக்கில், போலீஸ் பக்ருதீனையும், பிலால் மாலிக்கையும் கைது செய்து ஆஜர் படுத்தியிருக்காங்க. இவங்க ரெண்டு பேரையும் வேலூர் சிறையில், தனித்தனியா வைத்திருக்காங்க. வழக்கறிஞர்கள், மற்றும் உறவினர்களைத் தவிர வேற யாரையும் சந்திக்க விடறதில்லை.
இவர்களை கைது செய்து நடவடிக்கை எடுப்பதெல்லாம் சரிதான். ஆனா, இவர்களை கைது செய்தார்கள் என்ற காரணத்துக்காக, சகட்டு மேனிக்கு காவல்துறையில் உள்ளவர்களுக்கு பரிசு கொடுக்கறதும், பதவி உயர்வு கொடுக்கறதும் இஸ்லாமிய மக்களை ரொம்பவும் அதிருப்தி அடைய வச்சிருக்கு. குற்றவாளியை பிடிப்பதற்காகத்தான் காவல்துறையினருக்கு சம்பளம் தருகிறார்கள். குற்றவாளியை பிடிக்கவில்லை என்றால் துறை ரீதியாக நடவடிக்கை எடுத்து தண்டனைதான் வழங்க வேண்டும். வாங்குகிற சம்பளத்துக்காக அவர்கள் வேலை செய்ய வேண்டும். வேலையை செய்ததற்காக, லட்சக்கணக்கில் பரிசு கொடுப்பதை பலரும் விரும்பலை..”
“இது குறித்து கருணாநிதி ஒரு அறிக்கை விட்டிருக்கிறாரே… ” என்றான் ரத்னவேல்.
“ஆமா… ஆமா.. விரிவா ஒரு அறிக்கை விட்டிருக்கார்… படிக்கிறேன் கேளு… “பரிசு பெற்றவர்களைப் பாராட்டு கிறேன். ஆனால் பயங்கரவாதிகள் பிடிபட உதவியவர்களுக்கு முதல்வர் நடத்திய பாராட்டு விழாவில் தான் எத்தனை குழப்பங்கள்?கொலைக் குற்றவாளிகள் போலீஸ் பக்ருதீன் குழுவினரா?அல்லது ஏற்கனவே டி.ஜி.பி. அறிக்கையில் தெரிவித்திருந்த நபர்களா ?
பக்ருதீன் எந்த இடத்தில் கைது செய்யப்பட்டார்? கைது செய்த போலீஸ் அதிகாரி யார்? பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள இந்தச் சந்தேகங்களைப் போக்கிடும் வகையில் அரசு அதைப் பற்றி ஏன் விளக்கமளிக்கவில்லை. நீதிமன்றத்தில் அரசு சார்பில் தாக்கல் செய்த மனுவில், “போலீஸ் பக்ருதீனை இன்ஸ்பெக்டர்கள் லட்சுமணன், ரவீந்திரன், வீரகுமார் ஆகியோர் கைது செய்யவில்லை. அவர்கள் 3 பேரும்பக்ருதீனை பிடித்து வைத்திருந்தனர். சம்பவ இடத்துக்கு இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை சென்று பக்ருதீனை கைது செய்தார்” என்று குறிப்பிட்டிருந்தார்கள். ஆனால், 9.10.2013 அன்று முதலமைச்சர் ஜெயலலிதா விடுத்த அறிக்கையில் “சென்னை பெரியமேடு காவல் நிலைய சரகம் சூளை அருகே தலைமறைவு எதிரிகளில் ஒருவரான போலீஸ் பக்ருதீன் 4.10.2013 அன்று மாலை அடையாளம் காணப்பட்டு, கைது செய்யப்பட்டார்” என்று தெரிவித்திருந்தாரே; இதில் எது உண்மை? மேலும் அந்த அறிக்கையில் எதிரிகளைக் கண்டு பிடிக்கும் பணியில் ஈடுபட்டவர்கள் என்று 21 பேர் பட்டியலைப் படித்து அவர்களுக்கெல்லாம் தன் வாடிநத்துகளை முதலமைச்சர் தெரிவித்துக் கொண்டு, அந்தப் பட்டியலில் இடம்பெற்ற 21 பேரையும் தலைமைச் செயலகத்திற்கு அழைத்து தலா 5 லட்சம் ரூபாய் பரிசாகவும் வழங்கினார். அந்தப் பட்டியலில் வீரகுமார் போன்றவர்கள் இடம் பெறவில்லையே, காரணம் என்ன என்று நான் கேட்டிருந்தேன்; ஒரு சில நாளேடுகளும் அதைப் பற்றி எழுதியிருந்தன. அதற்குப் பிறகு 15.10.2013 அன்று முதலமைச்சர் ஜெயலலிதா விடுத்த அறிக்கையில் பெரியமேடு காவல் நிலைய ஆய்வாளர் வீரகுமார், மதுரை சிறப்பு நுண்ணறிவுப் பிரிவுத் தலைமைக் காவலர் எம். விஜயபெருமாள், தலைமைக் காவலர் கே.மாரியப் பன், பெரியமேடு காவல் நிலைய பெண் காவலர் ராதிகா, மதுரை சிறப்பு நுண்ணறிவுப் பிரிவு ஆய்வாளர் எஸ். ராமமூர்த்தி, ஆய்வாளர் பி. பண்டரிநாதன் என்று 245 பேர் கொண்ட பட்டியலை வரிசைப்படுத்தியிருந்தார். தற்போது 238 பேருக்கு மட்டுமே ரொக்கப் பரிசு வழங்கியிருக்கிறார்.
கடந்த வாரம் வந்த செய்தியில், டாக்டர் அரவிந்த ரெட்டி கொலையில் குற்றவாளிகள் என்று கூறி ஒரு சிலரைக் கைது செய்த வேலூர் போலீஸ் அதிகாரிகள் கூண்டோடு மாற்றம் செய்யப்பட்டதாக ஒரு செய்தி வந்ததே; குறிப்பாக டி.எஸ்.பி. தெட்சணாமூர்த்தி போன்றவர்கள் மாற்றப்பட்டார்களே; அது எதற்காக ?
அரவிந்த் ரெட்டி கொலை வழக்கில் அமைக்கப்பட்ட தனிப்படையில் முக்கிய அதிகாரிகளாக பணியாற்றிய ஒருசிலருக்கு விளக்கம் கேட்டு துறையின் சார்பில் “நோட்டீஸ்” அனுப்பப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. வேலூர் போலீஸ் அதிகாரிகள் குறிப்பிட்ட நபர்களைத்தானே குற்றவாளிகள் என்று டி.ஜி.பி. முதலில் அறிக்கை கொடுத்தார்! இதிலே என்ன உண்மை? இதிலே அரசு தவறு செய்து விட்டதா ? இந்தப் போலீஸ் பக்ருதீன் கைது குறித்து நான் மட்டும் சந்தேகத்தை எழுப்பவில்லை. ஜூ.வி. வார இதழில், “காவல்துறை குழப்பங்கள்” என்ற தலைப்பில் கடந்த வாரம் பெரிய கட்டுரையே எழுதியிருந்தார்களே, அதற்காவது விளக்கம் தந்திருக்க லாம் அல்லவா? ஏன், இன்று வெளி வந்திருக்கும் ஜூ.வி. இதழிலே கூட, போலீஸ் பக்ருதீன் தனது பேட்டியில், “என் மனதாரச் சொல்கிறேன், நிச்சயமாக நான் எந்தத் தவறும் செய்ய வில்லை, நான் நிரபராதி. நான் யாரையும் கொலை செய்யவில்லை. கொலையானவர்கள்யார் என்பது கூட எனக்குத் தெரியாது. எங்களை அடித்துச் சித்ரவதை செய்த போலீஸ், நான் அனைத்துக் குற்றங்களையும் ஒப்புக்கொண்டு வாக்குமூலம் கொடுத்ததாகச் சொல்லி வருகிறது. நான் எந்த வாக்குமூலமும் கொடுக்கவில்லை.செய்யாத கொலைக்கு நாங்கள் எப்படி வாக்குமூலம் கொடுக்க முடியும். எங்களை அப்ரூவராக மாறச் சொல்லியும், கொலைகளை நாங்கள்தான் செய்தோம் என்று ஒப்புக்கொள்ளச் சொல்லியும் சித்ரவதை செய்கின்றனர்” என்றெல்லாம் கூறியிருப்பதாக ஜூ.வி. யில் செய்தி வந்துள்ளது.
காவல் துறையினரோ போலீஸ் பக்ருதீன்தான் கொலை செய்ததாக திரும்பத் திரும்பச் சொல்லி வருகிறார்கள். இதே காவல் துறையினர்தான் கடந்த மாதம் வேறு சிலர்தான் குற்றவாளிகள் என்று கூறினார்கள். ஆனால் தற்போது வெளிப்படையாக அரசு சார்பில் எந்த விவரத்தையும் தர முன்வராமல் இருக்கிறார்கள். ” ரொம்ப அழகா, போலீஸ் பக்ருதீன் விவகாரத்தில் நடந்த குளளுபடிகள் அத்தனையையும் அழகா எடுத்து வச்சிருக்கார். இந்த மாதிரி குளறுபடிகளாளத்தான் தேவையில்லாம கெட்ட பெயர் வருது ஜெயலலிதாவுக்கு. “
“இதையெல்லாம் அதிகாரிகள் எடுத்து சொல்ல மாட்டார்களா ? “
“அப்படி எடுத்து சொல்ற அதிகாரிகளையெல்லாம் ஜெயலலிதாவுக்கு புடிக்காதே… ராமானுஜமே இவ்வளவு நாள் எப்படி காலம் தள்றார்னு புரியலை… இன்னொரு விவகாரம் சொல்றேன் கேளு..
பரமக்குடி துப்பாக்கிச் சூடு சம்பந்தமா அமைக்கப்பட்ட சம்பத் கமிஷன் அறிக்கை சமீபத்துல சட்டமன்றத்துல வைக்கப்பட்டுச்சு. அந்த அறிக்கையை அரசு அப்படியே ஏத்துக்கிச்சு.”
“அப்படியே ஏத்துக்கிட்டாங்களா…. ? ஆச்சர்யமா இருக்கே.. ? ” என்று வியந்தான் ரத்னவேல்.
“இதுல ஆச்சர்யப்பட என்னடா இருக்கு ? குனி ங்கன்னு சொன்னா, தரையில தவழ்ற மாதிரியான ஆட்களைத்தானே இந்த மாதிரி விசாரணை கமிஷன் நீதிபதிகளா போடுவாங்க… அது மாதிரி ஆளுதான் சம்பத். தன்னோட அறிக்கையில நீதிபதி சம்பத், வாகனங்கள் எரிக்கப்பட்ட பிறகுதான் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. வானத்தை நோக்கி சுட்டு எச்சரித்த பிறகுதான் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்காவிட்டால், நிலைமை விபரீதமாகியிருக்கும் னு அறிக்கை குடுத்திருக்காரு”
காவல் துறை அதிகாரிகளோடு விவாதத்தில் நீதிபதி சம்பத்
“ரெண்டு பேரு காவல்துறையால அடிச்சே கொல்லப்பட்டாங்களே.. அதுக்கு என்ன சொல்றாரு சம்பத் சாரு… “
“அவங்க ரெண்டு பேரும் எப்படி இறந்தாங்கன்ற விவகாரம் மர்மமாவே இருக்கு ன்னு சொல்லியிருக்காரு. “
“நல்லா இருக்குய்யா இவரு விசாரிச்ச லட்சணம்… இதுக்குத்தான் இந்த கமிஷனுக்கு ரெண்டு கோடி செலவா ? ” என்றார் கணேசன்.
“அப்புறம் ஓய்வு பெற்ற நீதிபதிகள் எப்படித்தான் அவங்க விசுவாசத்தை காட்றது.. ? இப்படித்தான். இப்படி காவல்துறை எழுதிக் கொடுத்த அறிக்கையை விசாரணை ஆணைய அறிக்கை மாதிரி சம்பத் வெளியிட்டார்.
கோவையில் நவம்பர் 17 முதல் 19 வரை நடைபெற்ற மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு கூட்டத்தில் தீர்மானம் இயற்றினார்கள். அந்த தீர்மானத்தில் ” இமானுவேல் சேகரன் நினைவு தினத்தன்று பரமக்குடியில் காவல்துறை நிகழ்த்திய துப்பாக்கி சூட்டை நியாயப்படுத்துகிற ஒய்வு பெற்ற நீதிபதி சம்பத் கமிஷன் அறிக்கையை நிராகரிக்க வேண்டுமென்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)யின் மாநிலக்குழு வலியுறுத்துகிறது.
இரட்டைகுவளை எதிர்ப்பு மாநாடு உள்ளிட்டு தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராக செயல்பட்டு வந்த தியாகி இமானுவேல் சேகரன் நினைவு நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் மீது பரமக்குடியில் ( 2011 செப்படம்பர் 11) காவல்துறை நடத்திய கொடூரமான துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் கொல்லப்பட்டனர். துப்பாக்கிச் சூட்டை நேரில் பார்த்தவர்களும், ஊடகங்களும் மற்றும் தனி நபர்கள் எடுத்த வீடியோ காட்சிகளும் காவல் துறையின் எல்லை மீறிய அராஜகத்தை வெளி உலகத்திற்கு ஏற்கனவே கொண்டு வந்துள்ளன.
வழக்கமான போக்குவரத்துகள் முற்றிலுமாக மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டு, கடைகள் முழுவதும் காவல்துறையால் அடைக்கப்பட்டுவிட்ட சூழலில், நினைவஞ்சலி கூட்டத்திற்கு வருகிறவர்கள் மட்டுமே பரமக்குடி நகருக்குள் அனுமதிக்கப்பட்டனர். சுமார் 50 பேர் நடத்திய மறியல் போராட்டத்தை காரணமாக்கி காவல் துறை துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது. துப்பாக்கி சூடு முடிந்து பல மணி நேரம் பரமக்குடி நகரை தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொண்டு, காவல் துறை நடத்திய அராஜகம் ஜனநாயகத்திற்கு விடப்பட்ட சவாலாகும். பரமக்குடி துப்பாக்கிச் சூடு நிகழ்த்தப்பட்ட சில மணி நேரத்திற்குள் மதுரை மாவட்டம் சிந்தாமணி மற்றும் சிவகங்கை மாவட்டம் இளையான்குடியிலும் காவல் துறை தலித் மக்கள் மீது நடத்திய துப்பாக்கிச்சூடு வன்மையான கண்டனத்திற்குரியது.
ஆகவே தான், துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்ட மக்களும், போராடுகிற அமைப்புகளும் சி.பி.ஐ விசாரணை கோரி நீதி மன்றத்திற்கு சென்று தற்போது சி.பி.ஐ விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தான் தமிழக அரசால் நியமிக்கப்பட்ட நீதிபதி சம்பத் கமிஷன் அறிக்கை 30-10- 2013 அன்று தமிழக சட்டமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. சட்டமன்ற கூட்டத் தொடரின் இறுதி நாளில் அதுவும் தென் மாவட்டங்களின் பதட்டமான ஒரு தினத்தில் சம்பத் கமிஷன் அறிக்கை சட்டமன்றத்தில் முன் வைக்கப்பட்டுள்ளது சரியான அணுகுமுறையல்ல, சம்பத் கமிஷன் அறிக்கை காவல் துறையின் அராஜகத்தை மூடி மறைக்கிறது.
காவல்துறையின் நடவடிக்கையை பாராட்டுவதோடு, பாதிக்கப்பட்ட தலித் மக்கள் மீதே பழி சுமத்துகிறது. உண்மைக்கு மாறாக காவல் துறையை பாதுகாக்கும் சம்பத் கமிஷன் அறிக்கை ஏற்கத்தக்கதல்ல. தமிழக அரசு சம்பத் கமிஷன் அறிக்கையை நிராகரித்திட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)யின் தமிழ்நாடு மாநிலக்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.”
இப்படி அந்த தீர்மானம், சம்பத் கமிஷன் அறிக்கையை கடுமையா விமர்சித்தது.
அவ்வளவுதான் வந்ததே கோவம் அம்மாவுக்கு… நிறுத்துடா தீக்கதிருக்கு விளம்பரத்தை னு உத்தரவு போட்டுட்டாங்க. அன்னையில இருந்து தீக்கதிர் பத்திரிக்கைக்கு அரசு விளம்பரங்கள் நிறுத்தப்பட்டுச்சு.
மார்க்சிஸ்ட் கட்சி மீது ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும், அதன் கட்சிப் பத்திரிக்கையை மற்ற பத்திரிக்கைகள் போல சமமாக நடத்த வேண்டும் என்பதே நியாயம். ஆனால், ஜெயலலிதா எப்படி அற்பமாக நடந்துக்கிட்டிருக்கார் பாத்தியா… இத்தனைக்கும் மார்க்சிஸ்ட் கட்சி கூட்டணிக் கட்சி வேற…. “
“நீதித்துறை செய்திகள் என்ன மச்சான் ” என்றான் வடிவேல்.
“நெறய்ய இருக்கு. ஒன்னு ஒன்னா சொல்றேன் கேளு. ஏற்கனவே, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவத்தோட பரிந்துரையில, வேலுமணி என்ற பெண்மணியை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக்க கடும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதைப் பற்றி சொன்னேன். இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர்களா பணியாற்றி வரும், தனஞ்செழியன், நெடுமாறன் மற்றும் மோகனா என்ற வழக்கறிஞர்களை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக்க, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் கடும் முனைப்பில் இருப்பதாக சொல்லப்படுகிறது.
சதாசிவம் இவர்களை எப்படியாவது உயர்நீதிமன்ற நீதிபதியாக்கி விட வேண்டும் என்று முனைப்பில் ஈடுபட்டிருக்கும் அதே நேரம், இதற்கான எதிர்ப்பும் கிளம்பியிருக்கிறது”
எம்.ஜி.ஆரோடு நீதிபதி சதாசிவம்
“இந்த வக்கீலுங்களுக்கு வேற வேலையே இல்லைப்பா… எல்லாத்துக்கும் எதிர்ப்பு தெரிவிச்சிக்கிட்டே இருப்பாங்க… இந்த எதிர்ப்பு எதுக்காம் ? “
“அவங்க தெரிவிக்கிற எதிர்பில் நியாயம் இருக்கு. ஒரு உயர்நீதிமன்றத்துக்கு நீதிபதியாக இருப்பவர்களை தேர்ந்தெடுக்கும் பொறுப்பு, சம்பந்தப்பட்ட உயர்நீதிமன்றத்தின் முதல் ஐந்து நீதிபதிகளின் கைகளில்தான் இருக்கு. அந்த நீதிபதிகள்தான் ஒரு வழக்கறிஞர், எத்தகைய வழக்குகளை நடத்தியிருக்கிறார், அவர் திறமையானவரா, நேர்மையானவரா, சட்டத்தின் எந்தப் பிரிவில் திறமையானவர், எத்தனை வழக்குகளை நடத்தியிருக்கிறார், அவரது வாதத்திறமை என்ன, என்பது போன்ற விவகாரங்களை ஆராய்ந்து பரிந்துரைக்க வேண்டும்.
உச்சநீதிமன்றத்தில் பணியாற்றும் வழக்கறிஞர்கள், உண்மையிலேயே பணியாற்றுகிறார்களா, அல்லது பரோட்டா கடை வைத்திருக்கிறார்களா என்பது சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள நீதிபதிகளுக்கு எப்படி தெரியும் ? “
“அப்படி யாராவது பரோட்டா கடை வைத்திருக்கிறார்களா என்ன ? ” என்று ஆச்சர்யமாக கேட்டான் ரத்னவேல்.
“பரோட்டா கடை இல்ல… ஆனா, ஹோட்டல் வைச்சுருக்காங்க.. “
“யாருப்பா ஹோட்டல் வச்சுருக்கறது ? “
“நெடுமாறன் ன்றவரு டெல்லியில ஹோட்டல் வச்சுருக்கார். அதுதான் அவரது முழு நேர தொழில்”
“அப்புறம் எதுக்கு அவரை பரிந்துரை பண்றாங்க ? “
“அவர் கவுண்டராச்சே… உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஓய்வு பெறுவதற்குள் ஒரு நாலு கவுண்டர்களையாவது நீதிபதியாக்க வேண்டாமா ? “
“ஆக்கிட்டு அப்படியே, கொங்கு முன்னேற்றப் பேரவை, நீதிபதிகள் பிரிவுன்னு ஒன்னை தொடங்கிடச் சொல்லு. ” என்றான் ரத்னவேல்.
“இதெல்லாம் நடக்காதுன்னு சொல்ல முடியாது டா… நடந்தாலும் நடக்கும்”
” நெறய்ய இருக்குன்னு சொன்னியே அடுத்த மேட்டரை சொல்லு… ” என்று அவசரப்படுத்தினான் பீமராஜன்.
“சென்னை பசுமைத் தீர்ப்பாயத்தோட நீதிபதி சொக்கலிங்கம் ரொம்ப ஓவரா சீன் போட்றாராமே… கேள்விப்பட்டீங்களா ? “
“என்ன பண்றாராம் ? “
நீதிபதி சொக்கலிங்கம்
“வாயைத் தொறந்தா லார்ட் முருகா… லார்ட் முருகா ன்னு சொல்லிக்கிட்டு இருக்காரு…. வழக்குக்காக வாதாட வரும் இளம் வழக்கறிஞர்களை ரொம்ப டபாய்க்கிறாராம்….
“கடவுள் நம்பிக்கைன்றது தனிப்பட்ட விவகாரம். அவர் வீட்டுக்குள்ள சாமி கும்பிட்டாருன்னா, யாரும் எதுவும் சொல்லப்போறது இல்ல. நீதிமன்றத்துல உக்காந்துக்கிட்டு எப்போ பாத்தாலும், லார்ட் முருகா ஈஸ் க்ரேட் னு சொல்றது…. ராகு காலம் 11.30க்கு முடிஞ்சா அது வரைக்கும் நீதிமன்றத்துக்கு வராம இருக்கறது. 11.30க்கு வந்துட்டு, உணவு இடைவேளை கூட விடாம, வழக்குகளை நடத்தறது… இதெல்லாம் என்ன பழக்கம்… ?
“கூடங்குளம் தொடர்பான வழக்குல, தாமதமா வழக்கு பதிவு பண்றதை மன்னிக்கிறதுக்காக, அபராதம் போட்டிருக்காராமே… ?”
“உண்மைதான்… கூடங்குள அணு உலைகள் 3 முதல் 6 வரைக்கும் மத்திய அரசு, சுற்றுச் சூழல் தடையில்லா சான்று வழங்கியது தவறுன்னு, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மூலமா ஒரு வழக்கு தொடுக்கப்பட்டிருக்கு. அந்த வழக்கு தொடுப்பதில் ஏற்பட்ட 66 நாட்கள் தாமதத்தை மன்னித்து வழக்கை விசாரணைக்கு ஏற்கணும்னு ஒரு மனு. அந்த மனுவை விசாரித்த நீதிபதி சொக்கலிங்கம், தாமதத்தை மன்னித்து விட்டு, பசுமைத் தீர்ப்பாய வழக்கறிஞர்கள் சங்கத்துக்கு பத்தாயிரம் ரூபாய் கட்ட வேண்டும்னு தீர்ப்பளிச்சிருக்கார்.
வழக்கமா உயர்நீதிமன்றத்தில் தாமதமான வழக்குகளை விசாரணைக்கு ஏற்றுக் கொள்வார்கள். சில நேர்வுகளில் மட்டும் ஏற்க மாட்டார்கள். சில நேர்வுகளில் அபராதம் விதித்தாலும், இலவச சட்ட உதவி மையத்துக்குத்தான் அபராதத் தொகை செலுத்த வேண்டும் என்று உத்தரவிடுவார்கள் சில நேரங்களில், அனாதை ஆசிரமங்களுக்கு செலுத்துங்கள் என்று கூட சொல்லுவார்கள். ஆனால் வழக்கறிஞர்கள் சங்கத்துக்கு அபராதம் செலுத்துங்கள் என்று உத்தரவிடுவது விசித்திரமாக இருக்கிறது ன்னு சொல்றாங்க. அந்த வழக்கறிஞர் சங்கத்தின் நிர்வாகிகளாக இருப்பவர்கள், அதே பசுமைத் தீர்ப்பாயத்தில் அரசு சார்பாக ஆஜராகும் வழக்கறிஞர்கள் என்பது இன்னொரு விசேஷம்.
இது போல பல வழக்குகள்ல அபராதம் விதிச்சு அதை வழக்கறிஞர் சங்கத்துக்கு கட்டணும்னு உத்தரவு போட்டிருக்கறதா சொல்றாங்க… இது வழக்கறிஞர்கள் மத்தியில பலத்த அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கு.”
“என்ன பண்றது.. அவரு நீதிபதியாச்சே… ” என்று அலுத்துக் கொண்டான் பீமராஜன்.
“சரி நீ அடுத்த செய்திக்கு வா.. ” என்று அவசரப்படுத்தினான் ரத்னவேல்.
“ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியின் துணைப் பதிவாளர் சுப்ரமணியம் என்பவர், டைம்ஸ் நவ் தொலைக்காட்சி நடத்திய ஒரு ஸ்டிங் ஆபரேஷனில் மருத்துவ சீட்டுக்கு பணம் கேட்கையில் கேமராவில் மாட்டிக் கொண்டார். அவர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்து சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. அவரை வழக்கிலிருந்து விடுவிக்குமாறு தாக்கல் செய்த மனு, சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
அந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதி பெயர் சித்தார்த்தர். அவர் ஒரு நேர்மையான நீதிபதி”
“அப்புறம் என்ன பிரச்சினை.. ? “
“அந்த நீதிபதி மேல இல்லாததும் பொல்லாததுமா புகார்களைச் சொல்லி, அவரை சிபிஐ நீதிமன்றத்துல இருந்தே மாத்தறதுக்கு ராமச்சந்திரா கல்லூரி நிர்வாகம் முயற்சி எடுத்து வருது… “
“கோடிக்கணக்கான பணம் இருக்கு…. என்ன வேணாலும் பண்ணுவாங்க… “
“சரி… அடுத்த செய்திக்கு வா.. ” என்று அவசரப்பட்டான் பீமராஜன்.
“சென்னை மாநகரத்தைப் பொறுத்தவரை, விபச்சாரத் தடுப்புப் பிரிவால தாக்கல் செய்யப்படும் வழக்குகள் அனைத்தும், நான்காவது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்துலதான் வரும்”
“அதுக்கு யாரு நீதிபதி ? “
“சரவணன் ன்றவரு நீதிபதியா இருக்காரு”
“எந்த சரவணன்… ஐபிஎல் விவகாரத்தில் சிக்கிய புக்கிகள் அத்தனை பேரையும் தலைக்கு 20 லட்ச ரூபா வாங்கிக்கிட்டு ரெண்டே நாள்ல ஜாமீன்ல விட்டாருன்னு பேசிக்கிட்டாங்களே… அவரா ?
“அவரேதான்… வழக்கமா பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்கள், கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட்டால், அவர்களை மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பி, அரசு காப்பகத்துக்கு அனுப்ப வேண்டும். ஆனால் அந்தப் பெண்களுக்கு உறவினர்கள் யாராவது வந்தார்கள் என்றால், அவர்களிடம் ஒப்படைக்கலாம்.
சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஒரு பெரிய மாஃபியா கும்பலே இயங்கிக்கிட்டு இருக்கு. சந்தோஷ் குமார், வில்லியம் ஷேக்ஸ்பியர், ஜெய்சங்கர்னு வழக்கறிஞர்கள் இருக்காங்க. இவங்கதான் ஒட்டு மொத்த விபச்சார வழக்குகளுக்கும் குத்தகைதாரர்கள். இவர்கள் டீமில் இன்னும் 10 பேர் இருக்காங்க. இவங்களை மீறி, வேற யாரும் அந்தப் பெண்களுக்கு ஜாமீன் போட முடியாது. இந்த சந்தோஷ் குமார், நீதிபதி சரவணனுக்கு நெருங்கிய நண்பர்.
இந்த மாஃபியா டீம்தான் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட பெண்களுக்கு பெயில் போடுவார்கள். அந்த நீதிமன்றத்துக்குள்ளயே இதற்கென்றே சுத்திக்கிட்டு இருப்பவர்களை பிடித்து வந்து, அந்தப் பெண்ணுக்கு, மாமா, அத்தை, சித்தி, சித்தப்பா, அண்ணன், ஆட்டுக்குட்டி என்று கூறி ஜாமீன் கொடுப்பார்கள். இதற்காக கணிசமான ஒரு தொகை வசூல் செய்யப்பட்டு, நீதிபதிக்கும் கொடுக்கப்படும். கப்பம் வந்தால் ஜாமீன். கப்பம் வராவிட்டால் காப்பகம். காப்பகத்துக்கு போனால், உறவினர் வந்தாலே ஒழிய வெளியே வர முடியாது என்பதால், அந்தப் பெண்களும் வேறு வழியில்லாமல், ஒத்துக் கொண்டு ஜாமீனில் வெளியே வருகிறார்கள்.
அப்படி வெளியே வரும் பெண்கள், அந்த மாஃபியா கும்பலுக்கு சொந்தமான அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்படுவார்கள். “
“எங்க இருக்கு அந்த அலுவலகம் ? “
“சைதாப்பேட்டை நீதிமன்றத்துக்கு பின்னாடியே இருக்கு. அந்தப் பெண்கள் அப்படி எடுத்து செல்லப்பட்ட பிறகு, ப்ரோக்கர்கள் விலை கொடுத்து அந்தப் பெண்களை மீட்டுச் செல்ல வேண்டும். அது வரை அந்தப் பெண்கள் அந்த மாஃபியாவின் ஃப்ளாட்டிலேயே இருப்பார்கள். அவர்களின் நகைகள், க்ரெடிட் கார்டுகள், ஏடிஎம் கார்டுகள் உள்ளிட்டவை மாஃபியாவால் பறிமுதல் செய்யப்படும்… “
“என்னப்பா.. பகல்கொள்ளையா இருக்கே… இதெல்லாம் அந்த நீதிபதிக்கு தெரியுமா ? “
“அவர் கருமமே கண்ணாயினார்… பணம் வந்துச்சா, வேலையைப் பாத்தோமான்னு இருப்பார்… மத்த கதையெல்லாம் கண்டுக்க மாட்டார்”
“போதும் நிறுத்துப்பா… நீதித்துறை கதை கேக்கறதுக்கே பயங்கரமா இருக்கே… மனகே பொறுக்கலையேப்பா…. “
“ஆமாம்ணே… நாள் பூரா வெயில்ல நிக்கிற ட்ராஃபிக் கான்ஸ்டபிள், நிறுத்தக் கோட்டை தாண்டி நின்னா நம்பகிட்ட 100 ரூபா கேப்பாரு… அந்த 100 ரூபாய் லஞ்சம் நமக்கு பெரிய குத்தமா தெரியும்… அதப் பத்தி பேப்பர்ல எழுதுவோம்.. இன்டர்னெட்ல எழுதுவோம்.. பத்திரிக்கையில படம் புடிச்சு போடுவோம்..
ஆனா, சத்தம் போடாம லட்சக்கணக்கில இந்த நீதிமான்கள் சம்பாதிக்கிறதைப் பத்தி எழுதுனா, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு எடுப்பேன்னு மிரட்டுவாங்க… இதுதான் இன்னைக்கு நீதித்துறையோட நிலைமை. “
“ரொம்ப கொடுமையா இருக்குப்பா…. மெகா லோக் அதாலத் என்னப்பா ஆச்சு… நெறய்ய ஊழல் நடக்குதுன்னு சொன்னியே… “
“வெறும் புள்ளி விபரங்களுக்காகே இந்த லோக் அதாலத்தை நடத்தறாங்கன்னு சொன்னேன்ல.. அதே மாதிரியே 9 லட்சம் வழக்குகள் முடித்து வைக்கப்பட்டதா அறிவிப்பு வெளியிடப் பட்டிருக்கு. போன வெள்ளிக்கிழமை, கோவை மாவட்ட வழக்கறிஞர்கள் மட்டும், இந்த மோசமான போக்கை எதிர்த்து போராட்டத்துல குதிச்சாங்க.. அடாவடியா பல வழக்குகள் லோக் அதாலத்துக்கு எடுத்துச் செல்லப்படுது. இன்னைக்கு அபராதம் கட்டுறேன்னு சம்பந்தப்பட்டவங்க சொன்னாக் கூட, லோக் அதாலத்துல கட்டுங்கன்னு மிரட்றாங்க ன்னு போராட்டம் பண்ணாங்க.
உடனே தலையிட்ட மாவட்ட நீதிபதி, யாருடைய விருப்பத்துக்கும் மாறா, லோக் அதாலத்தில் வழக்குகள் முடிக்கப்படாது. கிரிமினல் வழக்குகள் முடிக்கப்படாது. சிவில் வழக்குகள் மட்டுமே முடிக்கப்படும் னு உத்தரவாதம் கொடுத்த பிறகு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது”
“சரி போலாமாப்பா. நேரமாகுது” என்றார் கணேசன்.
“போலாம்ணே.. ஒரே ஒரு கொசுறு செய்தி சொல்லிட்றேன்.. போன வாரம் ஈஷா வோட லீடர்ஷிப் நிகழ்ச்சிக்காக ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பு நடந்துச்சு”
“அப்படின்னா என்ன ? “
“இந்த ஜக்கி கார்ப்பரேட் சாமியார் இல்லையா… கார்ப்பரேட்ல பெரிய பெரிய முதலாளிகளை கூட்டிட்டு வந்து, யோகா பண்ணுங்க, நாம சேந்து பிசினெஸ் பண்ணலாம்னு சொல்லி ட்ராமா பண்ணுவார். இது தொடர்பா ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பு நடந்துச்சு. அப்போ ஒரு விழிப்பான பத்திரிக்கையாளர், நீங்க பேசறதெல்லாம் சரி.. ஆனா, அனுமதியே வாங்காம எதுக்காக இத்தனை கட்டிடம் கட்டிக்கிட்டு இருக்கீங்கன்னு கேட்டிருக்கார்.
உடனே திருட்டுச் சாமியார், எல்லாமே 100 சதவிகிதம் சரியா கட்டப்பட்டிருக்கு ன்னு சொல்லியிருக்கார். சரியா கட்டின கட்டிடத்துக்கு எதுக்காக இடிக்கணும்னு அரசாங்கம் நோட்டீஸ் குடுத்திருக்குன்னு கேட்டிருக்காங்க…
அவ்வளவுதான்.. பத்திரிக்கையாளர் சந்திப்பு முடிஞ்சதுன்னு சாமியார் காண்டாகி எழுந்து போயிட்டார். “
“கோவப்பட்றதெல்லாம் சரி… அரசாங்கம் ஏன் இந்த ஆளு கட்டிய கட்டிடங்கள் மேல இன்னும் நடவடிக்கை எடுக்காம இருக்கு… இந்த ஆளு கருணாநிதிக்கு நெருக்கமாச்சே… எப்படி இந்த அரசாங்கத்துல செல்வாக்கோட இருக்கார்… அரசாங்கம் இன்னும் ஏன் கட்டிடங்களை இடிக்காம இருக்கு ?”
“அந்த மர்மம் ஜெயலலிதாவுக்கே வெளிச்சம்… ஜெயலலிதாவை விடு. மெகா லோக் அதாலத் நடத்தி வழக்குகளை முடிக்கும் நீதிமன்றங்கள், ஈஷா தொடர்பான வழக்குகளை ஒன்றரை வருஷத்துக்கும் மேலா விசாரணைக்கே எடுக்காமல் கட்டி வச்சிருக்கு. அதுக்குள்ள அந்த ஆளு எல்லா கட்டிடங்களையும் கட்டி முடிச்சிட்டான்.. இப்படிப்பட்ட ஆமை நீதிமன்றங்கள் இருக்கறதாலதான், ஜக்கி மாதிரியான ஆட்கள் ஆட்டம் போட்டுக்கிட்டு இருக்காங்க… “
“சரி.. போலாம்பா…. ” என்று கணேசன் எழுந்ததும், அனைவரும் எழுந்தனர்.