“எல்லாருக்கும் வணக்கம்” என்று புன்னகையோடு உள்ளே நுழைந்தான் டாஸ்மாக் தமிழ்.
“வா மச்சான்… வணக்கம்” என்று தமிழை வரவேற்றான் பீமராஜன்.
“என்ன சரக்குடா வச்சிருக்க… ? ” என்று செய்திகளை கொட்டுமாறு கேட்டான் ரத்னவேல்.
“ஒரு சிறந்த பத்திரிக்கையா இருந்திருக்க வேண்டிய டெஹல்கா, அதன் எடிட்டரோட மோசமான சூழ்நிலையால இன்னைக்கு அழியும் நிலையில் இருக்கு.. ” என்றான் தமிழ்.
“தருண் தேஜ்பால் சிறைக்கு போக வேண்டியவர்தானே.. ? ” என்றான் ரத்னவேல்.
“அதுல என்ன சந்தேகம் ? நிச்சயமா சிறைக்குப் போக வேண்டியவர்தான். ஆனா, அவரை மாதிரியே சிறைக்குப் போக வேண்டிய சில பத்திரக்கையாளர்கள் தமிழ்நாட்டுல தப்பிச்சுட்டாங்கன்றதுதான் வேதனை… “
“யாரை சொல்ற… ? “
“குமுதத்தில் இருந்த திருவேங்கிமலை சரவணன், தினமலர் ரமேஷ் ஆகியோர் மேலயும் இதே போல பாலியல் தொந்தரவு கொடுத்த புகார் இருந்தது… ஆனால் இவங்க ரெண்டு பேருமே தங்களோட செல்வாக்கால சிறைக்குப் போகாம தப்பிச்சுட்டாங்க..
இப்போ திருவேங்கிமலை சரவணன், தமிழ் இந்து வில் வேலைக்கு சேரப்போறார்ன்றதும் வேதனையான விஷயம்…
திருவேங்கிமலை சரவணனோ, தினமலர் ரமேஷோ, அவங்க மேல இருந்த பாலியல் புகாருக்காக சிறைக்குப் போயிருந்தா, மற்ற பத்திரிக்கையாளர்களுக்கு ஒரு பயம் இருந்திருக்கும்.. சன் டிவி ராஜா போன்ற நபர்கள் ஒழுங்கா இருந்திருப்பாங்க.. “
“அடுத்த மேட்டரை எடுத்து விடு” என்றான் ரத்னவேல்.
“ஜெயலலிதா ஆளுனர் ரோசய்யவை சந்திச்சது பத்தி அரசியல் நோக்கர்களால் பரபரப்பா விவாதிக்கப்படுது”
“அதுல விவாதிக்க என்ன இருக்கு ? அதான் சட்டம் ஒழுங்கு பத்தி விளக்கறதுக்காக போனதா அரசு செய்திக் குறிப்பு சொல்லுதே.. “
“ஜெயலலிதாவைப் பத்தி தெரிஞ்சவங்க யாரும் இதை நம்ப மாட்டாங்க. ஆளுனர் என்பவர் மத்திய அரசின் பிரதிநிதி. மத்திய அரசோட தொடர்ந்து மோதல் போக்கை கடைபிடித்து வரும் ஜெயலலிதா, ஆளுனரையெல்லாம் சந்திச்சு சட்டம் ஒழுங்கு பத்தியெல்லாம் விளக்கும் ஆள் கிடையாதுன்னு எல்லோருக்கும் தெரியும்
முதல்வர் ஆளுனரிடம் போய் சட்டம் ஒழுங்கு பத்தி விளக்கினால், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு மோசமா இருக்குன்னு அர்த்தம். ஜெயலலிதா அப்படியெல்லாம் ஒத்துக்கிற ஆளு கிடையாது. இது தவிர, ஜெயலலிதாவோட வரலாறே ஆளுனரோடு மோதல் போக்கை கடைபிடிப்பதுதான். 91ல் ஜெயலலிதா முதல்வரா இருந்தப்போ ஆளுனரா இருந்தவர் சென்னா ரெட்டி.
அவரோடு கடுமையா மோதிய ஜெயலலிதா அரசு வெளியிடும் நாட்குறிப்பில், சென்னா ரெட்டி படம் இருந்ததுக்காக அச்சடிக்கப்பட்ட அத்தனை நாட்குறிப்புகளையும் அழிச்சிட்டு, புதுசா நாட்குறிப்பு அச்சடிக்கச் சொன்ன சம்பவங்களெல்லாம் தமிழ்நாட்டில் அரங்கேறியிருக்கு… “
“அப்போ எதுக்காகத்தான் ஆளுனரை பாத்திருப்பாங்க.. ? ” என்றான் பீமராஜன்.
“ஜெயலலிதாவோடு கூட்டணி வைக்க காங்கிரஸ் கட்சியில் ஒரு தரப்பு முயற்சி எடுத்திருக்கு. ஜெயலலிதா சாமான்யத்துல கூட்டணிக்கு சரிப்பட்டு வரமாட்டாங்கன்றதை காரணமா வைச்சு, அவங்க மேல உச்சநீதிமன்றத்துல நிலுவையில இருக்கிற பிறந்தநாள் பரிசு வழக்கையும், சொத்துக் குவிப்பு வழக்கையும் காரணம் காட்டி அவங்களை மிரட்ட முயற்சி பண்ணியிருக்காங்க. ஆனா, ஜெயலலிதா, கூட்டணி தேர்தலுக்குப் பின்னாடிதான் றதுல தீர்மானமா இருக்காங்க. சமீபத்துல, அவங்களை சந்திச்ச சோ கிட்ட கூட இதைத்தான் சொல்லியிருக்காங்க.
இந்த ரகசிய உடன்பாடு தொடர்பாகத்தான் ரோசய்யாவை ஜெயலலிதா சந்திச்சிருக்கணும்னு அரசியல் நோக்கர்கள் கருதறாங்க.
“அதுக்கு ஜெயலலிதா நேர்ல போகாமயே முடியாதுன்னு சொல்லியிருக்கலாமே… சொத்துக் குவிப்பு வழக்கு ஜெயலலிதாவை அந்த அளவுக்கு அச்சுறுத்தி வைச்சிருக்கு… எப்படியாவது அதுல இருந்து வெளியில வரணும்ன்றதுதான் இப்போதைக்கு அவங்களுக்கு ஒரே நோக்கம்”
“தப்பிச்சுடுவாங்களா…. ? “
“நமக்கு இல்லன்னாலும் ஜெயலலிதாவுக்கு பாவ புண்ணியத்துலயெல்லாம் நம்பிக்கை இருக்கு… கும்பகோணம் மகாமகத்துல ஆரம்பிச்சு வரலாற்றை திரும்பிப் பார்… ” என்று சாபம் விடுவது போல சொன்னான் தமிழ்.
“சென்னையில் மீண்டும் மின்வெட்டு வந்துடுச்சே… ” என்றான் ரத்னவேல்.
“ஆறே மாதங்களில் தமிழ்நாட்டை மின் மிகை மாநிலம் ஆக்குவேன்னு வீராவேசமா பேசிட்டுத்தான் ஆட்சிக்கு வந்தார் ஜெயலலிதா. ஆனா, மின் வெட்டை தீக்கவே முடியலை. சென்னையில இப்போதான் மின்வெட்டு அறிவிக்கப்பட்டிருந்தாலும், வெளி மாவட்டங்களில் பல மணி நேர மின் வெட்டு அமலில் இருக்கு. ஆனா எல்லா பிரச்சினைக்கும் காரணம், மத்திய அரசுதான்னு பேசிக்கிட்டு இருக்காங்க ஜெயலலிதா.. “
“அப்போ மத்திய அரசு காரணமில்லையா ? “
“1991ல் ஜெயலலிதா முதல்வரா இருந்தப்போ, நெடுஞ்சாலைகளில் பேருந்துகளில் கொள்ளைகள் நடப்பதற்கே மத்திய அரசுதான் காரணம்னு சொன்னாங்க.. இது இன்னைக்கும் சட்டசபை குறிப்புகளில் இருக்கு.. எதற்கெடுத்தாலும் மத்திய அரசை குறை சொல்வது வசதியான விஷயம் இல்லையா ? “
“சரி.. கேப்டன் டெல்லிக்கு போய் பிரச்சாரம் பண்ணாரே… என்ன ரியாக்ஷன் ? ” என்றான் ரத்னவேல்.
“கேப்டன் டெல்லி தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்தினது, டெல்லி தமிழர்கள் பலருக்கு பிடிக்கலை… “
“ஏம்பா… தமிழர்களைத்தானே வேட்பாளரா நிறுத்தியிருக்காரு கேப்டன். ? “
“தமிழர்களைத்தான் நிறுத்தியிருக்காரு. இத்தனை நாளா டெல்லி வாழ் தமிழர்களை, காங்கிரஸ், பிஜேபி ரெண்டு கட்சியும் போட்டி போட்டுக்கிட்டு கவனிப்பாங்க. என்ன வேலைகள்னாலும் செய்து கொடுப்பாங்க. இப்போ கேப்டன் வேட்பாளர்களை நிறுத்தியதால, ரெண்டு கட்சிகளும் தமிழர்களை சந்தேகமா பாக்கறாங்க… நிச்சயமா ஜெயிக்கப்போறதில்லன்னு தெரிஞ்சு ஏன் இப்படி வேட்பாளர்களை நிறுத்தி எங்க உயிரை வாங்கறாருன்னு பொலம்பறாங்க..
இனி தமிழர்களுக்கு பழைய செல்வாக்கு இருக்குமான்னு பயப்பட்றாங்க.. “
“போன முறை போலீஸ் பக்ருதீன் கைது தொடர்பா அறிக்கை விட்டார் கலைஞர்னு சொல்லியிருந்தேன் ஞாபகம் இருக்கா ? ” என்று கேட்டான் தமிழ்.
“இருக்குடா சொல்லு” என்றான் வடிவேல்.
“ஜெயலலிதா தொடர்ந்து காவல்துறையினருக்கு விருதுகள் குடுக்கறது பல இஸ்லாமிய தலைவர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கு………. அவங்க இது பத்தி, கலைஞர்கிட்ட பேசியிருக்காங்க.. அதுக்குப் பின்னாடிதான் நீண்ட அறிக்கை விட்டிருக்கார் கலைஞர்..”
“வகுப்புக் கலவரத் தடுப்புச் சட்டத்தை பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தக் கூடாதுன்னு ஜெயலலிதா பிரதமருக்கு கடிதம் எழுதியிருக்காங்களே… ” என்றான் ரத்னவேல்.
“ஆமாம்டா… இஸ்லாமியர்கள் நமக்கு வாக்களிக்கப் போவதில்லைன்னு ஜெயலலிதாவுக்கு தெரிஞ்சு போச்சு… அதனாலான் இஸ்லாமியர்கள் ஆவலோட எதிர்ப்பாத்துக்கிட்டு இருக்க அந்த சட்டத்தை கொண்டு வரக்கூடாதுன்னு கடிதம் எழுதியிருக்காங்க.. ஆனா, காங்கிரஸ் அந்த மசோதாவை எடுத்துட்டு வர்றதுல தீவிரமா இருக்கு.. “
“ப.சிதம்பரம் திடீர்னு ஈழத் தமிழர்கள் மேல் அக்கறை காட்டறாரே….. தேர்தல் பயமா ? ” என்றார் கணேசன்.
“வேற என்னவா இருக்க முடியும்… ? போன முறை வெறும் 5000 வாக்கு வித்தியாசத்தில் ஜெயிச்சாரு… இந்த வாட்டி மிஸ் ஆயிடப்போகுதுன்ற பயம் நெறய்யவே இருக்கு… சிதம்பரமும், பொய்யும், பிரிக்க முடியாதவைன்றதுக்கு அவர் பேசிய பேச்சே சான்று… “இந்திய அரசின் முயற்சிக்கு உடன்பட்டிருந்தால், பிரபாகரன் உயிருடன் இருந்திருப்பார். இனப் படுகொலை நடந்திருக்காது. அதற்காக இனப் படுகொலையைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. இதுகுறித்து விரிவான, தெளிவான, நேர்மையான, உலக நாடுகள் ஏற்றுக்கொள்ளும் விசாரணை நடத்தி, குற்றவாளிகளை தண்டிக்கும் வரை, இந்திய அரசு ஓயாது. இலங்கைத் தமிழர்களை நாங்கள் கைவிட மாட்டோம் என்று ராஜீவ் காந்தியின் பெயரால் சூளுரைக்கிறோம்” னு பேசியிருக்காரு. ராஜீவ் கொலை வழக்கில், பிரபாகரனை தேடப்படும் குற்றவாளியா இந்திய அரசு அறிவித்திருந்தது.. பிரபாகரனை பிடித்து இந்தியாவிடம் ஒப்படைக்கும்படி இலங்கைக்கு கோரிக்கை விடுத்திருந்தது… அப்படி இருக்கையில், இந்திய அரசின் முயற்சிக்கு பிரபாகரன் உடனபட்டிருந்தால் உயிரோடு இருந்திருப்பார்னு சொல்றது எவ்வளவு பெரிய மோசடி.. ?”
“சிதம்பரத்துக்கு பொய் சொல்ல சொல்லியா தரணும்… தேர்தல் நெருங்கும் நேரத்தில் இப்படியெல்லாம் ஏதாவது பேசினால், காங்கிரஸின் துரோகத்தை மறந்து விடவார்கள்னு நெனைக்கிறாரு.. “
“ஆ.ராசா எப்படி இருக்காராம்.. ” என்று அடுத்த மேட்டருக்கு தாவினான் வடிவேல்.
“ஆ.ராசா ஆன்மீகவாதியா ஆயிட்டாராம் டா.. “
“என்னடா சொல்ற… ? “
“ஆமாம்பா… எனக்கே நம்பறதுக்கு கஷ்டமாத்தான் இருக்கு… இப்போவெல்லாம் அடிக்கடி கடவுளைப் பத்திப் பேசறாராம். 2ஜி வழக்கில் எனக்கு தண்டனை தரணும்னு பிடிவாதமா இருக்கிற அந்த நீதிபதி ஓ.பி.சைனி நல்லாவே இருக்க மாட்டாரு.. அந்த ஆண்டவன் அவரை சும்மா விட மாட்டான்னு பேசறாராம்.. “
“துன்பம் ஒரு மனிதனை எப்படி வேண்டுமானாலும் மாற்றும்.. “
“காவல்துறை செய்திகள் என்னப்பா இருக்கு ? ” என்றார் கணேசன்.
“அண்ணே.. சென்னை மாநகர ஆணையர் ஜார்ஜ், வாடகைக்கு குடியிருப்போர்கள் அத்தனை பேரும் தங்களோட விபரங்களை காவல்நிலையத்தில் ஒப்படைக்கணும்னு போட்ட உத்தரவுதான் இப்போ பெரும் சர்ச்சையை கிளப்பியிருக்கு…
தனி மனித உரிமையை பறிக்கக் கூடிய இந்த உத்தரவை சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சிகள் உள்ளிட்ட அத்தனை பேரும் எதிர்க்கறாங்க… இது போல வாடகைக்கு குடியிருப்பவர்கள், தங்கள் விபரங்ளை காவல்துறயில் தரணும் னு சொல்றது, அந்த விபரங்கள் காவல்துறை வசம் பாதுகாப்பா இருக்குமான்ற அச்சத்தையும் எழுப்பறாங்க…
லஞ்ச ஒழிப்புத் துறையில் ஜார்ஜ் இருக்கும்போது பணியாற்றிய ஒரு ஊழியர் சொன்ன தகவல் என்னன்னா, நடைமுறையில் சாத்தியமில்லாத இது போன்ற உத்தரவுகளை பிறப்பிப்பதில் ஜார்ஜுக்கு இணையே இல்லைன்றதுதான்…
லஞ்ச ஒழிப்புத் துறையில இணை இயக்குநரா இருந்தப்பவும் இதே மாதிரிதான்.. அனைத்து புலனாய்வு அதிகாரிகள் கூட்டம்னு ஒன்னை போட்டு, அந்தக் கூட்டத்தில் போட்டுக் காட்றதுக்காக பவர் பாயின்ட் ப்ரசன்டேஷன் தயார் பண்ணணும்னு சொல்லி, ஒட்டு மொத்த லஞ்ச ஒழிப்புத் துறையே, ஒரு வாரத்துக்கு வேற எந்த வேலையும் பாக்காம பவர் பாயின்ட் ரெடி பண்ண வைப்பாரு…
ஒரு நாள் அஞ்சு நிமிஷம் அதைப் பாத்துட்டு, நல்லா இல்ல… திரும்ப வேற பண்ணுங்கன்னு சொல்லிட்டுப் போயிடுவாரு… அங்க இருக்கிற ஊழியர்கள் இரவு முழுக்க உக்காந்து திரும்ப இதை ரெடி பண்ணணும்… இது மாதிரி பல கிறுக்குத்தனமாக உத்தரவுகளை போடுவதில் ஜார்ஜுக்கு இணையே இல்ல…”
“சென்னை நகரில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்படுபவர்கள் எண்ணிக்கையும் அதிகரிச்சிருக்கறதா சொல்றாங்களே… ? “
“குற்றவாளிகளை பிடிக்கிறதுக்கு டார்கெட் வைக்கிறது மாதிரி, குண்டர் சட்டத்தின் கீழ் குற்றவாளிகளை அடைக்கிறதுக்கும் ஒவ்வொரு ஸ்டேஷனுக்கும் டார்கெட் வைச்சிருக்காராம் ஜார்ஜ். ஒவ்வொரு ஸ்டேஷனும், ஒவ்வொரு மாசத்துக்கும் இத்தனை பேரை குண்டர் சட்டத்தில் அடைச்சே ஆகணுமாம்.. இது மட்டுமில்லாம பல வழக்குகளில் போலி குற்றவாளிகளை கைது செய்யறதும் தொடர்ந்து நடந்துக்கிட்டு இருக்கு.. கமிஷனர் கத்துவாரேன்னு அவர்கிட்ட இருந்து தப்பிக்கிறதுக்காகவே பல ஸ்டேஷன்களில் போலிக் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீதும் குண்டர் சட்டம் பாய்ச்சப்படுகிறது… “
“சரி.. இத்தனை பேரை குண்டர் சட்டத்துல அடைச்சிட்டாங்களே… குற்றங்கள் குறைஞ்சிடுச்சா… ” என்றான் பீமராஜன்.
“ஒரு தமாஷ் சொல்றேன் கேளு… போன வாரம், ஆந்திராவைச் சேர்ந்த ஒரு காவல்துறை அதிகாரி குடும்பத்தோட சோழவரத்துக்கு ஒரு கோயிலுக்கு வந்திருந்தார். அவரோட கார்ல இருந்த ஒரு லட்ச ரூபாய் பணம், பல பவுன் நகை எல்லாத்தையும் கொள்ளையடிச்சுட்டுப் போயிட்டாங்க… “
“நான் ஆட்சிப் பொறுப்பேற்றதும், தமிழகத்தில் இருந்த கொள்ளையர்களெல்லாம் வேறு மாநிலத்துக்குப் போயிட்டாங்கன்னு சொன்னாங்களே ஜெயலலிதா… “
“அவங்கள்லாம்.. வேறு மாநிலத்துக்கு போகலை…. அமைச்சர்களா ஆயிட்டாங்க… ” என்று சொல்லி விட்டு சிரித்தான் தமிழ்.
“நீதித்துறை செய்திகள் என்னடா ? ” என்றான் ரத்னவேல்.
“13 ஜுலை அன்னைக்கு நீதிபதி எலிப்பி தர்மாராவ் உயர்நீதிமன்ற நீதிபதியா இருந்து ஓய்வு பெற்றார்.. ஆனா, இன்னைக்கு வரை, அவருக்குன்னு ஒதுக்கப்பட்ட அரசுக் குடியிருப்பை காலி பண்ணலை”
“ஓய்வு பெற்றாலும் மூணு மாசம் அதுக்கப்புறம் இருக்க விதிகளில் இடமிருக்கே… “
நீதிபதி எலிப்பி தர்மாராவ்
“மூணு மாசம் இருக்கலாம்.. இப்போ நாலு மாசம் கடந்து ஐந்தாவது மாதம் நடக்குது. வீடு கூட பரவாயில்லை. ஆனா, அவருக்கு குடுத்த நீதிமன்ற வாகனத்தைக் கூட இது வரை அவர் திருப்பித் தரவில்லையாம்.. அது மட்டுமில்லாம, அந்த வாகனத்தை அவர் பயன்படுத்தறதை விட, அவர் மகன்தான் பயன்படுத்தறாராம்.. ஒரு ஓய்வு பெற்ற நீதிபதியா இருந்து சட்டத்தை இவரே மதிக்காமல் இருந்தால் இவர் பணிக்காலத்தில் எப்படிப்பட்ட நீதிபதியா இருந்திருப்பாருன்னு பேசிக்கிறாங்க… “
“அவர் மட்டும்தான் அப்படியா ? “
“அவர் மட்டுமில்ல.. இது வரை ஓய்வு பெற்ற நீதிபதிகளில் சந்துருவை தவிர, எந்த நீதிபதியும் அவர்களுக்கு வழங்கப்பட்ட செல்போனை திருப்பித் தருவதேயில்லை. நம்பர் வேணும்னு சிம் கார்டை வைத்துக் கொள்வது இயல்பு.. அதை யாரும் கேள்வி கேட்கப் போவதில்லை.. ஆனால், செல்போனைக் கூட யாரும் திருப்பித் தருவதில்லைன்றதுதான் வேதனையான விஷயம்.. “
“இப்போ இருக்கும் நீதிபதிகள் சரியா இருக்காங்களா ? “
“இப்போ இருக்கும் நீதிபதிகளில் இரண்டு பேர் வட மாநிலங்களுக்கு மாறுதலாகிப் போக வாய்ப்பு இருக்குன்னு சொல்றாங்க.. “
“யாரப்பா அந்த நீதிபதிகள் ? “
“நீதிபதி கே.கே.சசீதரன் முதல் நீதிபதி”
“ஏன் அவருக்கென்ன… அவர் நல்ல நீதிபதியாச்சே… “
“அப்படித்தான் பலரும் நினைச்சுக்கிட்டு இருந்தாங்க. ஆனா சமீபத்தில் ஜெனரல் மிஸ்லேனியஸ் பிரிவு வழக்குகளை கடந்த மூணு மாசமா கவனிச்சதில், பல்வேறு கல்வி நிறுவனங்களுக்கு சாதகமா பல தீர்ப்புகள் வழங்கியிருக்காருன்னு இவர் மேல புகார் எழுந்து, அது மத்திய உளவுத்துறையால விசாரிக்கப்படுவதா சொல்றாங்க. இவர் தீர்ப்பளித்த வழக்குகள் ஆராயப்படுவதாகவும் சொல்றாங்க.. தனக்கு வேண்டப்பட்ட வழக்குகள், பழைய வழக்காக இருந்தாலும், அதை மட்டும் பட்டியலில் சேக்க சொல்லி உத்தரவு போட்டிருக்கார். அந்த விபரங்களும் உளவுத்துறையால சேகரிக்கப்பட்டு வருது.. “
நீதிபதி கே.கே.சசீதரன்
“நல்லது நடந்தா சரி… “
“இப்போ அவர்தான் மாறிட்டாரே.. ஜெனரல் மிசிலேனியஸ்க்கு வேறு நீதிபதி வந்துட்டாரா.. வந்துட்டார்… நீதியரசர் தனபாலன்தான் இப்போ அந்த பொறுப்புக்கு வந்திருக்கார்.. “
“இவர் சரியா இருப்பாரா ? “
“இவர் சரியா இருப்பாரா இல்லையான்ற விபரம் ஏற்கனவே சவுக்கு தளத்தில் எழுதியிருக்காங்க. இவர் மகன் பிரபு ஒரு வழக்கறிஞர். சென்னை அடையாறில் அலுவலகம் வைத்திருக்கிறார். சிவில், கிரிமினல், கம்பெனி லா, விவாகரத்து, அரசியல் அமைப்பு சட்டம், சர்வீஸ் மேட்டர் என்று சட்டத்தில் உள்ள அனைத்துப் பிரிவுகளிலும் இவருக்கு… …. ” என்று சொல்லி விட்டு நிறுத்தினான் தமிழ்.
“அனைத்துப் பிரிவுகளிலும் இவருக்கு வழக்கு இருக்கா ? ” என்று ஆர்வமாக கேட்டான் பீமராஜன்
“அனைத்துப் பிரிவுகளிலும் இவருக்கு வழக்கே இல்லை னு சொல்ல வந்தேன்”
நீதிபதி தனபாலனின் மகன் பிரபு
“அப்புறம் எதுக்கு அடையாறில் ஆபீஸ் ? “
“அப்பா நீதிபதியா இருக்காருல்ல…. “
“அப்பா நீதிபதியா இருந்தா இவருக்கு எதுக்கு ஆபீஸ் னு கேக்கறேன்” என்று மீண்டும் கேட்டான் ரத்னவேல்.
“சரி… நான் ஒன்னு கேக்கறேன். அதுக்கு விளக்கம் சொல்லு” என்று எதிர் கேள்வி கேட்டான் தமிழ்.
“சரி கேளு. ஜே.எம்.ஹாரூன் எம்.பி இருக்காரு தெரியுமா ? “
ஜே.எம்.ஆரூண் எம்.பி
நீதிபதி தனபாலன்
“ஓ நல்லா தெரியுமே… அவர் கடத்தலெல்லாம் பண்ணதா சொல்லுவாங்க”
“அவரேதான். அவருக்கு சொந்தமான சொகுசு காரை நீதிபதி தனபாலன் தன்னோட வீட்டு கல்யாணத்துக்கு வாங்கிட்டு அவர் மகன் தான் ஓட்டிட்டு இருந்தாரு. திருப்பி குடுத்தாரா என்னான்னு தெரியலை. இந்த கார் விவகாரத்த பத்தி விரிவா வரும் நாட்களில் சொல்றேன்” என்றான் தமிழ்.
“அவ்வளவுதானா நீதித்துறை செய்திகள்” என்று கேட்டான் ரத்னவேல்.
“இருக்கு இரு வர்றேன்… போன சனிக்கிழமை, நீதிபதி சி.டி.செல்வத்தை, கரூர் கே.சி.பழனிச்சாமியோட மகன் கேசிபி.சிவராமன் மாலை 4.30 மணிக்கு சந்திச்சிருக்கார்… “
“இதுல என்ன தவறு இருக்கு ? ஒரு அரசியல் பிரமுகரோட மகன், ஒரு நீதிபதியை சந்திக்கக் கூடாதா ? “
“சந்திக்கலாம் தப்பில்ல… ஆனா, சந்திச்சு என்ன பேசினாங்கன்றதுதானே விவகாரம்”
“என்ன பேசினாங்களாம்.. நீதிபதி சி.டி.செல்வம், திங்கட்கிழமையில இருந்து, குற்றப்பத்திரிக்கை மற்றும் எப்ஐஆர்களை ரத்து செய்யும் 482 குற்றவியல் நடைமுறை சட்ட வழக்குகளை பார்க்கும் நீதிமன்றத்தின் நீதிபதியா இருக்காரு. கேசிபி சிவராமன் மேல ஒரு வழக்கு நிலுவையில இருக்கு. அது தொடர்பா நேராப் போயி பாத்து, வழக்கு தொடர்பா விவாதிச்சதாகவும், அந்த வழக்கு, புதன் அல்லது வியாழன் அன்னைக்கு, நீதிபதி சி.டி.செல்வம் முன்னலையில் விசாரணைக்கு வரும்னு சொல்றாங்க.. “
“இப்படியெல்லாமா போயி விவாதிப்பாங்க ? “
“இதுல என்ன இருக்கு ? நீதிபதி சி.டி.செல்வம் எப்பவுமே தன்னை ஒரு கழக உடன்பிறப்பா தான் நினைச்சுக்கிறார். 100 நாளைக்கு மேல சட்டத்தின் பிடியில இருந்து தப்பிச்சு ஓடிய ஒரு தேடப்படும் குற்றவாளிக்கு ஜாமீன் குடுக்கலையா ? “
“யாருப்பா அது… ? “
“மு.க.அழகிரியோட சீமந்தப் புத்திரன்தான்… இன்னைக்கு என் படத்துல சன்னி லியோன் ஒரு பாடலுக்கு ஆடுகிறார் னு பெருமையா அறிவிப்பு வெளியிடும் திராவிட இயக்க கொழுந்துதான் அந்த தேடப்படும் குற்றவாளி. 100 நாளைக்கு மேல, ஓடி ஒளிஞ்சு, காவல்துறை கண்ணில் மண்ணைத் தூவிய ஒரு நபருக்கு தயக்கமே இல்லாம முன்ஜாமீன் வழங்கறாருன்னா, அவருக்கு சட்டத்தை விட கட்சித் தலைவர் மேல எவ்வளவு விசுவாசம் பாருங்க…
கடந்த திமுக ஆட்சிக் காலத்துல கருணாநிதிக்கு பாதுகாப்பு அதிகாரிகளா இருந்த பாண்டியன், வினோதகன் மற்றும் கணேசன் ஆகியோருக்கு தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய நிலத்தை சட்டவிரோதமா ஒதுக்கீடு பண்ணாங்க. அந்த வீட்டு மனைகளுக்குரிய தொகையான ஒரு கோடிக்கும் அதிகமான ரூபாயை கட்ட, இவர்களிடம் பணமிருக்க வாய்ப்பில்லை… நிலத்தை ஒதுக்கீடு பெற்றதும் மற்றொருவருக்கு விற்று லாபமடைந்திருக்கிறார்கள்… அதனால், அவர்கள் மீது லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நடத்த வேண்டும் னு ஒரு சமூக ஆர்வலர் வழக்கு போட்டார். அந்த வழக்கை நீதிபதி சி.டி.செல்வம்தான் விசாரிச்சாரு.. எடுத்த எடுப்பிலேயே வழக்கை தள்ளுபடி பண்றேன்னு சொன்னாரு… பிறகு நீண்ட வாதங்களை கேட்ட பிறகு, வழக்கை தள்ளுபடி பண்ணாரு. அந்த வழக்கு விசாரணை பத்தி சவுக்கு தளத்துல விரிவா எழுதியிருந்தாங்க.. இணைப்பு.
அந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி சி.டி.செல்வம், பாண்டியன் உள்ளிட்ட பாதுகாப்பு அதிகாரிகள் தங்களுக்கு வழங்கப்பட்ட வீட்டு மனைகளுக்கான தொகையை செலுத்த முடியாத காரணத்தால், வேறு ஒருவரோடு ஒப்பந்தம் போட்டுள்ளனர். ஒப்பந்தம் போட்டவர் வீட்டு மனைக்கான தொகையை செலுத்தியிருக்கிறார். அதற்கு பதிலாக, புதிதாக கட்டப்பட உள்ள கட்டிடத்தில் ஒரு பகுதி அந்த பாதுகாப்பு அதிகாரிகளுக்கு வழங்கப்படும். இதில் எந்த ஊழலும் நடைபெறவில்லை, ஆகையால் எந்த விசாரணையும் நடைபெற வேண்டியதில்லைன்னு தீர்ப்பு கொடுத்தாரு.
ஆனால், ஆவணங்களில் வேறு மாதிரி இருக்கு”
“என்ன மாதிரி இருக்கு.. ? “
“பாண்டியன் உள்ளிட்ட பாதுகாப்பு அதிகாரிகள் ஒப்பந்தமும் போடலை ஒரு புண்ணாக்கும் போடலை… பத்மா என்ற பெண்மணிக்கு வீட்டு மனையை அப்படியே விற்று விட்டார்கள். அரசிடமிருந்து வீட்டு மனை ஒதுக்கீடு வாங்கி, அப்படியே கைமாற்றி விட்ட வகையில் தலா 20 லட்சம் லாபமடைந்தார்கள்… இப்படி உண்மைக்கு மாறான ஒரு விஷயத்தை தீர்ப்பா வழங்கியவர்தான் நீதிபதி சி.டி.செல்வம்.
எந்த புகாரை விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லைன்னு நீதிபதி சி.டி.செல்வம் தீர்ப்பு கொடுத்தாரோ… அதே புகாரின் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திக்கிட்டு இருக்காங்க. இப்படி வெளிப்படையான திமுக உடன்பிறப்பா தன்னை அடையாளப்படுத்திக்கிட்டு இருக்கும் நீதிபதி சி.டி.செல்வமும் வெளி மாநிலத்துக்கு மாற்றப்பட வாய்ப்பு இருக்குன்னு பேசிக்கிறாங்க..”
“போகட்டும் போகட்டும்.. மிஸோராம் மணிப்பூர் போன்ற இடத்துக்கு மாத்தச் சொல்லு” என்றான் ரத்னவேல்.
“நீதிபதி தமிழ்வாணன் மேல கீழமை நீதிபகளெல்லாம் கடுமையான அதிருப்தியில இருக்காங்க”
“ஏன் அவர் என்ன பண்ணாரு ? “
“அவரோட கட்டுப்பாட்டில் இருக்கும் கடலூர் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கீழமை நீதிபதிகளையெல்லாம் ரொம்பவும் அவமரியாதையா பேசறதா சொல்றாங்க… ஏகவசனத்தில் கன்னா பின்னா ன்னு பேசறாராம்… திருவண்ணாமலை தீபத்துக்கு அவர் போயிருக்காரு. இவர் போறதால, மாவட்ட நீதிபதி உள்ளிட்ட அத்தனை பேரும் இவரை வரவேற்கனும். தீபம் நடக்கற அன்னைக்கு போனதால, ஏராளமான மக்கள் கூட்டம். அதனால இவருக்கு விஐபி ட்ரீட்மென்ட் குடுக்க முடியலன்னு ரொம்ப கோவப்பட்டாராம்”
நீதிபதி தமிழ்வாணன்
“இவர் கோயிலுக்கு போறதுன்னா இவரா போக வேண்டியதுதானே.. எதுக்காக மாவட்ட நீதிபதியெல்லாம் வரணும் ? “
“நீதித்துறையில என்ன நடக்குதுன்னே உனக்குத் தெரியாது. ஒரு உயர்நீதிமன்ற நீதிபதி, ஒரு மாவட்டத்துல உள்ள ஒரு கோயிலுக்குப் போறதா இருந்தா, மாவட்ட நீதிபதி முதல் டவாலி வரை அத்தனை பேரும் அவரை வரவேற்கனும். மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு ஒரு உயர்நீதிமன்ற நீதிபதி போறதா இருந்தா, மாவட்ட நீதிபதி கோட் சூட்டெல்லாம் போட்டுக்கிட்டு அவரை வரவேற்கனும். கோயிலில் பூரண கும்ப மரியாதை உள்ளிட்ட அத்தனையும் செய்யணும். இதில் ஏதாவது குறைகள் இருந்தா நீதியரசர் ரொம்ப கோவிச்சுக்குவார். கீழமை நீதிபதிகளுக்கும், உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கும் இருக்கும் உறவைப் பற்றி சொல்லணும்னா, ஜெயலலிதாவுக்கும், அதிமுக அமைச்சர்களுக்கும் உள்ள உறவுதான்.”
“ஈஷா விவகாரம் என்னப்பா ஆச்சு… ? கட்டிடத்தை இடிக்கிறாங்களா இல்லையா ?”
“கட்டிடத்தை இடிக்காம காப்பாத்தலாம்னு திருட்டுச் சாமியார் என்னென்னவோ ததிங்கினத்தோம் போட்றாரு.. இதுக்கு முன்னாடி இருந்த கோவை கலெக்டர் கருணாகரன் ஐஏஎஸ், திருட்டுச் சாமியாரோட கைக்கூலியா இருந்தாரு. எல்லா விதிகளையும் காற்றில் பறக்க விட்டுட்டு விதிகளை மீறி கட்டிய அந்தக் கட்டிடங்களை இடிக்காம, அந்தக் கட்டிடங்களுக்கு தடையில்லா சான்று வழங்கினாரு.
இப்போ வந்திருக்கிற புது ஆட்சியர் அர்ச்சனா பட்னாயக், தடையில்லா சான்று குடுக்க தயங்கறாங்க. இது இல்லாம கோவை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள், வெள்ளியங்கிரி மலைப்பகுதியில் குடியிருப்பவர்கள், கொங்கு பேரவை நிர்வாகிகள் எல்லாரும், மாவட்ட ஆட்சியரை சந்திச்சு, ஈஷா கட்டிடங்களை இடிக்கணும்னு புகார் சொல்லியிருக்காங்க. இதையெல்லாம் மீறி தடையில்லா சான்று வழங்கினா அந்தப் பகுதி மக்கள் போராட்டம் நடத்துவாங்கன்ற விஷயத்தை மாவட்ட ஆட்சியர் நல்லாவே புரிஞ்சு வச்சுருக்காங்க”
மக்களை சந்திக்கும் மாவட்ட ஆட்சியர்
“நீதிமன்றத்துல நிலுவையில இருந்த வழக்கு என்ன ஆச்சு ? “
“அந்த வழக்குல அரசாங்கம் பதில் மனு தாக்கல் பண்ணாம தாமதம் பண்ணிக்கிட்டே இருந்தாங்க. போன வாரம், நகர்ப்புர வளர்ச்சித் துறை பதில் மனு தாக்கல் பண்ணியிருக்காங்க. அதுல, ஈஷா மையத்தில் உள்ள அத்தனை கட்டிடங்களும் விதிகளை மீறி கட்டப்பட்டிருக்கிறது. அந்தக் கட்டிடங்களை இடிப்பதற்கான நோட்டீஸ் ஜனவரி 2013ல் அனுப்பப் பட்டது ன்னு அந்த பதில் மனுவில் சொல்லியிருக்காங்க.. “
“ஜனவரி 2013ல் நோட்டீஸ் அனுப்பிய பிறகு, 11 மாதங்களாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல், தொடர்ந்து கட்டிடங்களை கட்ட அனுமதித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் னு கேட்டு, புது வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட இருக்கு”
“சாமியார் பொழப்பு கஷ்டம்தான் போல இருக்கே… “
“இந்த ஆளு பின்னாடி 100 முட்டாள் போனாங்கன்னா, ரெண்டு பேர் கூடவா சுதாரிப்பா இருக்க மாட்டாங்க… “
“பத்திரிக்கை உலக செய்திகள் எதுவும் இல்லையாப்பா ? ” என்றார் கணேசன்.
“இருக்குண்ணே.. மிகுந்த படோடாபத்தோடு தொடங்கப்பட்ட தமிழ் இந்து நாளேட்டில் அதன் ஊழியர்கள் மிகுந்த மனக்கசப்பில் இருக்கிறார்கள்”
“ஏன் சம்பளம் குடுக்கலையா ? “
“அதெல்லாம் இல்லை. வேலையில் சேர்ந்து இத்தனை நாளாக வேலை பார்த்த பிறகு, திடீரென்று ஒரு ஒப்பந்தத்தை நீட்டியிருக்கிறார்கள்”
“என்ன ஒப்பந்தம் ? “
“அந்த ஊழியர்கள் என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது, எப்போது வேண்டுமானாலும் வேலை நீக்கம் செய்ய நிர்வாகத்துக்கு உரிமை உண்டு, நிர்வாகத்துக்கு திருப்திகரமாக நடந்து கொள்ள வேண்டும், இது போல பல நிபந்தனைகளை விதிச்சு ஒரு ஒப்பந்தம்”
“ஆங்கில இந்து ஊழியர்களுக்கு இது உண்டா ? “
“ஆங்கில இந்து ஊழியர்களுக்கு இது கிடையாது. இருக்கும் ஊடகங்களிலேயே தொழிலாளர் நலனில் அக்கறை கொண்ட ஊடகங்களில் சிறந்த ஊடகமாக இந்து இருந்து வந்திருக்கிறது. அப்படி இருக்கையில், திடீரென்று இது போல ஒரு அடிமை சாசனத்தை ஏன் ஊழியர்கள் தலையில் திணிக்கிறார்கள்னு தெரியலை… இந்து ராமுக்கு இந்த விவகாரமெல்லாம் தெரியுமா தெரியாதான்னு தெரியலை… “
“மற்ற நிறுவனங்களில் இதெல்லாம் கிடையாதா… ? “
“தமிழ் இந்து அதன் ஊழியர்களை இப்படி வதைக்கிறதென்றால், விகடன் குழுமம் வேறு மாதிரி டார்ச்சர் தருகிறது. “
“அங்க என்ன நடக்குது ? “
“ஒரு அலுவலகத்தின் நுழைவு வாயிலில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது வழக்கம். ஆனால், அலுவலகத்தில் எடிட்டோரியல் அறை உட்பட அலுவலகத்தில் எல்லா இடங்களிலும் கேமராக்களை பொருத்தியிருக்கிறது விகடன் நிர்வாகம்.
சொந்த ஊழியர்களையே இப்படி கண்காணிக்கிறது சரியான செயலான்னு வருத்தப்பட்றாங்க ஊழியர்கள்”
“சரி போலாம்பா” என்று கணேசன் எழுந்தார். அவர் எழுந்ததும் சபை கலைந்தது.