சவுக்கு தளத்தில் இதற்கு முன்பாக கருப்பு ஆடுகள் 1 மற்றும் கருப்பு ஆடுகள் 2 என்று இரண்டு கட்டுரைகள் வழக்கறிஞர் சமூகத்தில் உள்ள கருப்பு ஆடுகள் குறித்து எழுதப்பட்டன. அந்தக் கட்டுரைகளை எழுதியதற்கு வழக்கறிஞர் நண்பர்களிடமிருந்து கடும் எதிர்ப்புகள் வந்தன. வழக்கறிஞர்கள் உனக்கு எவ்வளவு உதவிகள் செய்திருக்கிறார்கள்… ஏன் இப்படி வழக்கறிஞர்களைப் பற்றி எழுதுகிறாய் என்று. வழக்கறிஞர்கள் செய்து வரும் உதவி, மகத்தானது. வார்த்தைகளால் விவரித்து சொல்ல முடியாத அளவுக்கு அளப்பறிய உதவிகளை செய்து வருகிறார்கள். ஆனாலும், வழக்கறிஞர்களில் சில கருப்பு ஆடுகள் தவறிழைக்கையில் அந்த கருப்பு ஆடுகளை அடையாளம் காட்ட வேண்டியது சவுக்கு தளத்தின் கடமை. அந்தக் கடமையிலிருந்து தவறினால், சவுக்கு தளம் நடத்துவதற்கே பொருளில்லாமல் போய் விடும்.
வழக்கறிஞர்களில் பெரும்பாலானவர்கள் கடுமையான உழைப்பாளிகள். தங்களிடம் வந்த கட்சிக்காரர்களுக்கு நியாயம் பெற்றுத் தர கடுமையாக உழைப்பவர்கள். உழைத்து நன்றாக சம்பாதிக்க வேண்டும், நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்று போராடுபவர்கள். ஆனால், இவர்கள் மத்தியில் சில கருப்பு ஆடுகள் இருந்து கொண்டு, ஒட்டுமொத்த வழக்கறிஞர் சமூகத்துக்கே அவப்பெயர் ஏற்படுத்தி வருகின்றன. இந்த கருப்பு ஆடுகள் அம்பலப்படுத்தப் பட வேண்டுமா இல்லையா என்ற முடிவை வாசகர்கள், கட்டுரையின் முடிவில் எடுக்கலாம்.
முத்து என்ற நபர் சென்னை பல்லாவரத்தில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் கார் கடன் பெறுகிறார். அவர் வாங்கிய கார் ஹ்யுண்டாய் எலான்ட்ரா. சொகுசாக காரில் பயணம் செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்ட முத்து, கார்க் கடனை திருப்பிச் செலுத்தியிருக்க வேண்டுமா இல்லையா ? ஆனால் முத்து செலுத்தவில்லை. வங்கி அதிகாரிகள், அந்த கார்க்கடனை வசூல் செய்வதற்காக, கடன் வசூலிக்கும் தீர்ப்பாயத்தில் (Debt Recovery Tribunal) வழக்கு தொடுக்கின்றனர். வழக்கை விசாரித்த தீர்ப்பாய நீதிபதி, காரைப் பறிமுதல் செய்ய உத்தரவிடுகிறார். கார் எங்கே என்று கடன்கார முத்துவிடம் கேட்டால், அந்தக் காரை என் வழக்கறிஞர் துரைக்கண்ணன் வைத்திருக்கிறார் என்று கூறுகிறார். அதை எழுத்துபூர்வமாக எழுதித் தரும்படி நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கவும், அதை வாக்குமூலமாக முத்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கிறார்.
அந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நீதிமன்றம் முத்து எழுதிக் கொடுத்துள்ளபடி கார் வழக்கறிஞர் துரைக்கண்ணன் வசம் இருந்தாலோ, அல்லது வேறு எவரிடம் இருந்தாலோ உடனடியாக பறிமுதல் செய்யும்படி உத்தரவு பிறப்பிக்கிறது. அந்த பறிமுதல் உத்தரவை செயல்படுத்துவதற்காக, ஒரு வழக்கறிஞரை நீதிமன்றமே நியமிக்கிறது. அந்த வழக்கறிஞரின் பெயர் ராதாகிருஷ்ணமூர்த்தி. ஒரு சொத்தை ஆய்வு செய்வது, பார்வையிடுவது, பறிமுதல் செய்யப்படுவது போன்ற வேலைகளை நீதிபதிகளே நேரடியாக சென்று செயல்படுத்த முடியாது என்பதால், இது போன்ற வேலைகளுக்கு அட்வகேட் கமிஷனர் என்று வழக்கறிஞர்களை நியமிப்பது நீதிமன்ற நடைமுறை. இந்தப் பணிகளைச் செய்யும் வழக்கறிஞர்களுக்கு, நீதிமன்றமே கட்டணம் அளிக்கும். இப்படி நியமிக்கப்பட்டவர்தான் ராதாகிருஷ்ணமூர்த்தி.
ராதாகிருஷ்ணமூர்த்தியோடு வங்கிக் கிளையின் முன்னாள் மேலாளர் சிவானந்தம், இந்நாள் மேலாளர் முனீந்திர குமார் மற்றும் வங்கி ஊழியர்கள் ஜெய்சங்கர் மற்றும் துளசிராமன் ஆகியோர் வழக்கறிஞரோடு செல்கின்றனர். நேராக உயர்நீதிமன்றத்தில், தீயணைப்பு நிலையம் எதிரே உள்ள, வழக்கறிஞர்களின் அறையில், அறை எண் 208க்கு செல்கிறார்கள். உள்ளே சென்று, வழக்கறிஞர் துரைக் கண்ணனை சந்திக்கிறார்கள். வழக்கறிஞர் ராதாகிருஷ்ண மூர்த்தி நீதிமன்ற உத்தரவை துரைக்கண்ணனிடம் நீட்டுகிறார். “டேய்.. நான் பேங்குக்கும் போனதில்ல… ஷ்யூரிட்டியும் போட்டதில்ல.. யாரைக் கேட்டுடா என் பேரை ஆர்டர்ல போட்டு கொண்டு வந்த.. அறிவில்லையாடா உனக்கு…” என்று கத்தத் தொடங்குகிறார். துரைக் கண்ணன் கத்தி விட்டு, டேய் வக்கீலு நீ கௌம்பு.. இவனை நான் பாத்துக்கறேன் என்று கூறுகிறார். உடனே, வழக்கறிஞர் ராதாகிருஷ்ணமூர்த்தி சத்தம் போடாமல் அந்த இடத்தை விட்டு வெளியேறுகிறார்.
“நீ யார்றா.. எந்த பேங்கு… என்று சிவானந்தத்தை மிரட்டுகிறார். அவர் விபரத்தை சொல்லவும்.. அவன் சொன்னான்னா உடனே கோர்டு ஆர்டர் வாங்கிட்டு வந்துடுவியா…. வக்கீல் ஆபீசுக்குள்ள நுழையறதுக்கு என்னா திமிருடா உனக்கு… நீ மட்டும்தான் வந்தியா வெளியில யாரும் இருக்காங்களா சொல்லுடா… என்றதும், வெளியே மேலாளர் முனீந்திர குமார் மற்றும் வங்கி ஊழியர்கள் ஜெய்சங்கர் மற்றும் துளசிராமன் ஆகியோர் இருப்பது தெரிகிறது. உடனே அவர்கள் மூவரையும் உள்ளே அழைக்கிறார் அண்ணன் துரைக்கண்ணன். இதற்குள், துரைக்கண்ணன் அறைக்குள் பல வழக்கறிஞர்கள் வருகின்றனர். வெளியிலிருந்து வந்தவர்களையும் சேர்த்து, நான்கு வங்கி ஊழியர்களுக்கும் சராமாரியாக அடி விழுகிறது. “ஏண்டா… அண்ணன் யாரு தெரியுமா… அண்ணன் ரூமுக்குள்ளயே வந்து நோட்டீஸ் குடுக்க என்னா தைரியம்டா உனக்கு” என்று நால்வரையும் சராமாரியாக அடிக்கிறார்கள். இந்த சம்பவம் நடக்கையில் பிற்பகல் மணி மூன்று.
இதற்குள் விஷயம் அறிந்து சம்பவ இடத்துக்கு ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் துணைப் பொது மேலாளர் உள்ளிட்ட பல அதிகாரிகள் வருகின்றனர். இரவு 8 மணி. அது வரை, அவர்கள் நான்கு பேரும் உள்ளேயே அடைக்கப்பட்டு இருந்தார்கள். வங்கி உயர் அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்த பிறகு, இரவு 8 மணியளவில் நான்கு பேரையும் விடுவித்தார்கள். விடுவிக்கப்பட்ட நான்கு பேரும் காவல் நிலையம் சென்றனர். காவல் நிலையத்தில் இணை ஆணையர் சண்முகவேல் மற்றும் துணை ஆணையர் செந்தில் குமார் ஆகியோர் வந்திருந்தனர்.
துணை ஆணையர் செந்தில் குமார்
வங்கி அதிகாரிகள் காப்பாற்றப்பட்ட விபரம் அறிந்ததும் அவர்களிடம் புகார் பெற்றனர். அவர்களிடம் புகார் வாங்கி முடிவதற்குள், அண்ணன் துரைக்கண்ணன் தலைமையில் 20 வழக்கறிஞர்கள் காவல் நிலையத்துக்கு வந்தார்கள். வந்ததும் அவர்கள் ஒரு புகாரை அளிக்கிறார்கள். உண்மையை உள்ளபடி கூறும் அந்தப்புகார் பின்வருமாறு. “நான் இன்று மதியம் என்னுடைய வழக்கறிஞர் அறையில் எனது கட்சிக்காரருடன் பேசிக் கொண்டிருக்கும்போது திடீர் என்று திபு, திபு என ஐந்து நபர்கள் என்னுடைய அறைக்குள் நுழைந்து அதில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா பெர்சனல் பேங்கிங் மேனேஜர் பல்லாவரம் கிளை சிவானந்தம் என்று சொல்லிக் கொண்டு “எங்கடா வச்சுருக்க என் காரை” என்று சொல்லிக் கொண்டு அவருடன் வந்த அடியாட்கள் இருவர் என்னுடைய முகத்தில் ஓங்கிக் குத்தினார்கள். நிலை தடுமாறிய நான் சார் எதற்காக என்னை அடிக்கிறீர்கள் என்று கேட்டேன். அதற்கு xxதா XXXXX பையா வண்டி எங்கடா வச்சிருக்கிற, முத்து உங்கிட்டதான் வண்டியை கொடுத்து வச்சிருக்கேன்னு சொன்னான் என்று கூறினார். அதற்கு சார் நான் முத்துவின் வழக்கறிஞர் மட்டும்தான். அந்த வண்டிக்கும் எனக்கும் எவ்விதமான சம்பந்தமும் இல்லை என்று கூறினேன். xxதா அதெல்லாம் அடித்து விசாரிக்க வேண்டிய இடத்தில் விசாரிக்க வேண்டியிருக்கும் என்று சொல்லிக் கொண்டு அந்த பேங்க் மேனேஜர் சிவானந்தம் என் முகத்தில் பளார் என்று அடித்தார். அதில் என் தாடை கிழிந்து ரத்தம் வந்தது. வலி தாங்காமல் சத்தம் போட்டு அலறவே அருகில் இருந்த என் சக வழக்கறிஞர்கள் என்னை காப்பாற்றினார்கள்”
வங்கி மேலாளர்களைப் பார்த்திருப்பீர்கள். அந்த பிம்பத்துக்கு சற்றும் மாறாதவர் சிவானந்தம். ஒல்லியாக வெட வெடவென்ற உருவம். எப்போதும் பயந்துகொண்டு பேசுவது போலவே பேசுகிறார். அவர் அடித்து துரைக்கண்ணனின் தாடையைக் கிழித்தாராம். அதில் துரைக்கண்ணனுக்கு ரத்தம் வழிந்ததாம்.
காவல்துறை அதிகாரிகள் புகாரைப் பதிவு செய்யத் தயங்கியதும், நாங்கள் உடனடியாக தலைமை நீதிபதியிடம் சென்று முறையிடுவோம்.. நீதிமன்றப் பதிவாளரிடம் சென்று முறையிடுவோம் என்று வந்திருந்த வழக்கறிஞர்கள் உரத்த குரலில் வாக்குவாதம் செய்ததை அடுத்து, புகார் பதிவு செய்யப்பட்டது.
காவல் துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த பிறகே வழக்கறிஞர்கள் அந்த இடத்திலிருந்து அகன்றார்கள். தாடை கிழிந்து ரத்தம் வழிந்ததாக புகாரில் எழுதியிருக்கிறீர்களே…. ரத்தத்தின் சுவடே காணவில்லையே என்று புகார் அளிக்க வந்த துரைக்கண்ணனிடம் கேள்வி கேட்க காவல்துறை அதிகாரிகள் துணியவில்லை. இந்த விவகாரம் இத்தோடு முடியவில்லை. அண்ணன் துரைக்கண்ணன் தலைமையில் கடந்த புதன் கிழமை அன்று 20 வழக்கறிஞர்கள் காவல் நிலையம் சென்று, எப்போது வங்கி அதிகாரிகளை கைது செய்யப்போகிறீர்கள் என்று மிரட்டல் விடுத்து வந்துள்ளார்கள்.
வங்கி அதிகாரிகள் தேடிச் சென்ற அந்தக் கார் இன்னும் உயர்நீதிமன்ற வளாகத்துக்குள் அமைதியாக நிற்கிறது. இப்படிப்பட்ட மாவீரன் அண்ணன் துரைக்கண்ணன் யார் என்று தெரிந்து கொள்ள உங்களுக்கு ஆர்வமாக இருக்கும். மாவீரன் துரைக்கண்ணன் இவர்தான்.
பேர் பாடியில் “திருட்டுக்கார்” துரைக்கண்ணன்
திருட்டுக் கார் பயன்படுத்தியதற்காக பாராட்டப்படும் அண்ணன் “திருட்டுக்கார்” துரைக்கண்ணன்
படத்தில் அண்ணனின் வலது புறத்தில் இருப்பவர்தான், அண்ணன் யார் தெரியுமாடா என்று கேட்டு கூடுதலாக வங்கி மேலாளரை அடித்தவர்.
ஈழத் தமிழருக்கான போராட்டத்தில் அண்ணன் “திருட்டுக்கார்” துரைக்கண்ணன்
வங்கி மேலாளரின் புகார்
வங்கி மேலாளரின் புகாரின் மேல் அண்ணன் துரைக்கண்ணன் மீது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை
அண்ணன் திருட்டுக் கார் துரைக்கண்ணன் வங்கி மேலாளர் மீது அளித்த புகாரில் பதிவு செய்யப்பட்ட எஃப்ஐஆர்
இது சம்பவம் ஒன்று. அடுத்த சம்பவம்.
சென்னை நொளம்பூர் பகுதியில் வசிப்பர் நிஷா தோட்டா. இவர் வெளிநாட்டு வாழ் இந்தியர். பசுமை அமைப்பில் பணியாற்றுபவர். இவரது கணவர் லண்டனில் பணியாற்றி வருகிறார். இவருடைய ஃப்ளாட்டில் படுக்கையறையில் தொடர்ந்து தண்ணீர் ஒழுகி வருவது குறித்து, அந்த அடுக்கக சங்கத்திடம் புகார் அளித்துள்ளார். அவர்களும் இப்போது செய்கிறோம், அப்போது செய்கிறோம் என்று இழுத்தடித்து வந்துள்ளார்கள். ஒரு நாள் தண்ணீர் அதிகமாக ஒழுகவே, தொடர்ந்து அச்சங்கத்தின் தலைவர் ராம் என்பவரிடம் புகார் தெரிவித்துள்ளார் நிஷா. இதையடுத்து சங்கத் தலைவர் ராம் மற்றும் அச்சங்கத்தின் சட்ட ஆலோசகர் என்று சொல்லிக் கொள்ளும் துரைப்பாண்டியன் என்ற வழக்கறிஞரும் வருகிறார்கள். வந்து நிஷாவின் வீட்டுக்குள் அமர்ந்து, “ஏன் இப்படி ஒத்துழைக்க மறுக்கிறீர்கள்… நீங்கள் ஒத்துழைத்தால் உடனடியாக இந்தப் பிரச்சினையை சரி செய்துவிடலாம்” என்கிறார்கள். அவர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று சொல்வது, அந்த குழாய் ரிப்பேருக்கான முழுத் தொகையையும் அவரே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதே. அந்த சங்கத்தின் தலைவரான ராமுக்கும், துரைப்பாண்டியனுக்கும் என்ன வேலை என்றால், அங்கே உள்ள 90 ஃப்ளாட்டுகளில் எங்கே ரிப்பேர் நடந்தாலும், சம்பந்தப்பட்ட வீட்டில் குடியிருப்பவர்களை அதற்கான தொகையை ஏற்றுக் கொள்ளச் சொல்லி விட்டு, அந்த செலவுக் கணக்கை, சங்கக் கணக்கில் எழுதி பணத்தை கையாடல் செய்வதே இவர்கள் வேலை.
படுக்கையறையில் ஒழுகும் தண்ணீர்
நிஷாவின் வீட்டில் பழுதை சரி செய்வதற்கான செலவு 20 ஆயிரத்துக்கும் அதிகமாக வருவதால், நிஷாவிடம் வந்து பேரம் பேசிக்கொண்டு இருந்தார்கள்.
தொடர்ந்து நிஷாவை செலவை ஏற்றுக் கொள்ளுமாறு நிர்பந்திக்கிறார்கள். அவரோ, இதை சங்கம்தான் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறுகிறார். இப்படியே பேசிக்கொண்டேயிருந்த போது, திடீரென்று “போக போக ரொம்பதான் கெஞ்ச விடறியே.. என் ஃப்ரெண்டு ராமுக்காக பாக்கறேன்.. இல்லன்னா கன்னா பின்னான்னு பேசிடுவேன்” என்று கூறுகிறார். உடனே, நிஷா என்ன சார் பேசறீங்க… நீங்க யாரு மொதல்ல… என்று கேட்கிறார். உடனே, கோபமடைந்த வழக்கறிஞர் துரைப்பாண்டியன், “நீ யாருன்னு எனக்குத் தெரியாதாடி… இங்க உக்காந்து ப்ராத்தல்தானே நடத்திக்கிட்டு இருக்கிற.. ப்ராஸ்டியூட்தானேடி நீ.. ராத்திரி எத்தனை மணிக்கு வர்றன்னு எனக்குத் தெரியாத… உங்க வீட்டுக்கு வர்றவங்க யாரும் கேட்ல என்ட்ரி போட்றதில்ல… எனக்கு உன்னைப் பத்தி தெரியாதா.. ” என்று கன்னா பின்னாவென்று கத்துகிறார். நிஷாவும் பதிலுக்கு மரியாதையா பேசு, என்ன நினைச்சிக்கிட்டு இருக்க என்று கத்துகிறார்.
உடனே, “அட்வகேட்டுடி நானு.. என்ன உன்னால ஒன்னும் புடுங்க முடியாது. நான் நினைச்சா இப்பவே உன் வீட்டுக்கு நூறு பேரை அனுப்புவேன்” என்று கத்துகிறார். சங்கத்தின் தலைவர், ராம் அவரை வெளியே தள்ளிச் செல்கிறார். மீண்டும் உள்ளே வந்த ராம், நிஷாவிடம் “இதை பெரிது படுத்தாதீர்கள்.. இத்தோடு இந்த விஷயத்தை விட்டு விடுங்கள்” என்று கூறுகிறார். உடனே நிஷா, எப்படி சார் இதை சும்மா விட முடியும்… ? உங்கள் வீட்டுக்குள் வந்து, உங்கள் மனைவியையோ, உங்கள் மகளையோ இப்படிப்பேசினால் விட்டு விடுவீர்களா என்று கேட்கிறார். உடனே ராம் வெளியேறுகிறார். துரைப்பாண்டியன் இப்படிப் பேசுவதையெல்லாம் நிஷாவின் ஒன்றரை வயதுக் குழந்தை பார்த்து பயப்பட்டுக் கொண்டே இருக்கிறது.
தன் வழக்கறிஞரை அழைத்து தகவலைச் சொல்லி, நொளம்பூர் காவல் நிலையத்தில் சென்று புகாரளிக்கிறார் நிஷா. காவல்நிலையத்தில் இருந்த உதவி ஆய்வாளர் உடனே தொலைபேசியில் சங்கத் தலைவர் ராமை அழைத்து காவல் நிலையம் வரச் சொல்கிறார். அவர் இன்னும் அரை மணி நேரத்தில் வருகிறேன் என்று கூறி மூன்று மணி நேரமாகியும் வராமல் காலதாமதம் செய்கிறார். முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாமல், புகாருக்கான ரசீதை மட்டும் கொடுத்து அனுப்புகிறார்கள்.
மறுநாள் 11.30 மணிக்கு, நொளம்பூர் காவல் நிலையத்திலிருந்து அழைப்பு. வழக்கறிஞர் துரைப்பாண்டியன் 50க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்களோடு வந்திருப்பதாகவும், உடனடியாக காவல் நிலையம் வருமாறும் கூறுகிறார்கள். நிஷா, நேற்று நடந்த கலவரத்தில் குழந்தை மிகவும் பயந்து போயிருப்பதாகவும், அவனுக்கு காய்ச்சல் அடிப்பதாகவும் கூறி, உடனடியாக வர இயலாது என்று கூறுகிறார். அடுத்த ஒரு மணி நேரத்தில், வழக்கறிஞர் துரைப்பாண்டியன் இரு காவலர்களோ நிஷாவின் வீட்டுக்கு வருகிறார். நிஷாவின் தாயாரிடம், உடனடியாக நிஷாவை வெளியில் அனுப்புமாறு கூறுகிறார். நிஷாவின் தாயார் விபரத்தை சொன்னதும் அவர்கள் சென்று விடுகிறார்கள்.
ஒரு மணி நேரம் கழித்து மீண்டும் வீட்டுக்கு வந்த காவலர்கள், நிஷாவின் கார் உடைக்கப்பட்டிருப்பதாகவும், உடனடியாக காவல் நிலையம் வந்து புகாரளிக்குமாறும் கூறுகிறார்கள். ஏதோ ஆபத்து காத்திருப்பதை உணர்ந்த நிஷா, கார் உடைந்தால் பரவாயில்லை, நாளை சரிசெய்து கொள்கிறேன் என்று கூறி விடுகிறார். காரை உடைக்கும் அளவுக்கு சென்றவர்கள், இனி என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் என்று புரிந்து, உடனடியாக ஆணையர் ஜார்ஜை சந்திக்கிறார். ஜார்ஜின் உத்தரவின் படி, மறுநாள், இணை ஆணையர் சண்முகவேல் நிஷாவை நேரில் அழைத்து விசாரிக்கிறார். நடந்தவற்றை சொன்ன நிஷா, காரை உடைத்தவர்கள் நாளை தன்னையும் தாக்குவார்கள் என்று கூறி, தன் புகாரின் மீது நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறார்.
உடைக்கப்பட்ட நிஷாவின் கார்
வழக்கறிஞர் துரைப்பாண்டியன்
உடனடியாக நிஷாவுக்கு இரண்டு பெண் போலீசாரை பாதுகாப்புக்கு வழங்கியது காவல்துறை. ஆனால், நிஷா அளித்த புகாரின் மீது இது வரை நடவடிக்கை இல்லை. நிஷாவின் வீட்டுக்குள் இருந்த சிசிடிவி கேமராவில், வழக்கறிஞர் துரைப்பாண்டியன் நிஷாவை திட்டி, மிரட்டியது ஒலியில்லாமல் பதிவு செய்யப்பட்டிருந்து அந்த ஆதாரத்தை காவல் துறையினரிடம் கொடுத்தாலும், இது வரை நிஷாவின் புகார் மீது நடவடிக்கை இல்லை.
மூன்றாவது சம்பவம் சுங்கத் துறை அதிகாரிகள் தொடர்பானது. ஜாகிர் உசேன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருக்கிறார். இவரது கட்சிக்காரர் மகேஷ் குமார் என்பவரை பார்ப்பதற்கு, கஸ்டம்ஸ் அலுவலகம் சென்றபோது, அங்கிருந்த சுங்கத் துறை கண்காணிப்பாளரோடு வாக்குவாதமாகி அவரை தாக்கியதாக, சுங்கத் துறை கண்காணிப்பாளர் சீனிவாசன், காவல்துறையில் புகார் அளிக்கிறார். ஜாகிர் உசேனை கைது செய்த காவல்துறை, நீதிபதியின் முன் அவரை ஆஜர்படுத்துகிறது. ஆஜர்படுத்தியபோதே, ஜாகிர் உசேனை ஜாமீனில் விடுதலை செய்கிறார் நீதிபதி. ஜாகிர் உசேன் தரப்பில், பல கஸ்டம்ஸ் அதிகாரிகள் பணியாற்றிக் கொண்டிருக்கும் அவர்கள் அலுவலகத்துக்குள் சென்று, நான் எப்படி அவரை தாக்க முடியும் என்று சொல்லுகிறார். ஜாகீர் உசேன், கராத்தேவில் ப்ளாக் பெல்ட் வாங்கியவர் என்பது குறிப்பிடத் தக்கது. சுங்கத் துறை அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள் போல, பயிற்சி பெற்றவர்கள் அல்ல என்பதும் குறிப்பிடத் தக்கது.
இந்த ஜாகீர் உசேன், கள்ளக்கடத்தலில் ஈடுபட்டதற்காக காபிபோசா தடுப்புச் சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டவர் என்பது கூடுதல் தகவல்.
முன்னாள் சபாநாயகர் சங்மா வோடு ஜாகிர் உசேன்
இந்த மூன்று சம்பவங்களும் கடந்த வாரம் மட்டும் நடந்தேறியவை. இது போல பல்வேறு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் இந்த சம்பவங்களில் சம்பந்தப்பட்டுள்ள வழக்கறிஞர்களில் ஒருவர் கூட கைது செய்யப்படுவதும் இல்லை, சிறை செல்வதும் இல்லை. அப்படியே தப்பித் தவறி கைது செய்யப்பட்டாலும், நீதிமன்ற நடுவர் முன்பு நிறுத்தப்படுகையிலேயே அவர்களுக்கு ஜாமீன் வழங்கப்படுகிறது. சட்டம் தொடர்பான பணியாற்றுவதால், தங்களை சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்கள் என்று வழக்கறிஞர்கள் சிலர் நினைப்பதாலேயே, இது போன்ற கறுப்பு ஆடுகள் கட்டற்று வளர்ந்து கொண்டிருக்கின்றன.
இந்த வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய நீதிபதிகள், நமக்கு எதற்கு வம்பு என்று கண்டும் காணாமலும் இருக்கிறார்கள். முதல் சம்பவத்தில் சம்பந்தப்பட்ட துரைக்கண்ணன், எழும்பூரில் வழக்கறிஞர் ரஜினி கொலை சம்பவத்தில் குற்றவாளி. தற்போது திமுகவின் வடசென்னை மாவட்ட இணைச் செயலாளராக உள்ளார். திமுகவில் மாவட்ட இணைச் செயலாளராக இருக்கும் ஒரு நபர், பட்டப்பகலில் நான்கு வங்கி அதிகாரிகளை அறைக்குள் அடைத்து வைத்து, அடித்து, உதைத்து, அவதூறான வார்த்தைகளைப் பேசி சுதந்திரமாக நடமாட முடிகிறதென்றால், காவல்துறையில் துரைக்கண்ணனுக்கு உள்ள செல்வாக்கைப் பார்த்துக் கொள்ளுங்கள்.
ஒரு வழக்கறிஞரை ஒருவன் அடித்து விட்டான் என்று தகவல் கேள்விப்பட்டதும், அதில் உண்மை இருக்கிறதா இல்லையா என்பது பற்றி சற்றும் கவலைப்படாமல் அடித்ததாக சொன்ன நபரை தாறுமாறாக தாக்கும் மனநிலையில்தான் பெரும்பாலான வழக்கறிஞர்கள் இருக்கிறார்கள். உயர்நீதிமன்றத்துக்குள், வழக்கறிஞர் ஸ்டிக்கர் ஒட்டாத ஒரு காரைக் கூட நிறுத்த முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. எந்தத் தவறைச் செய்தாலும் தப்பி விடலாம். அடாவடியாக நடந்து கொள்வதன் மூலம் எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம் என்ற மனநிலை, வழக்கறிஞர்களிடையே மேலோங்கி வருகிறது. டோல் பூத்தை அடித்து நொறுக்கினாலும் சரி, ஹோட்டலில் வாடகை குறைக்க மறுத்த மேனேஜரை அடித்தாலும் சரி, இறப்பு சான்றிதழுக்கு ஐந்து ரூபாய் கேட்டதற்காக, அலுவலகத்தை அடித்து நொறுக்கினாலும் சரி.. நம்மை கேள்வி கேட்பதற்கே ஆளில்லை என்ற மனநிலைக்கு பெரும்பாலான வழக்கறிஞர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள்.
இவர்களைத் தட்டிக் கேட்க வேண்டிய நீதிபதிகள், நீதிமன்றத்திற்குள் இருக்கும் மனுநீதிச் சோழன் சிலையைப் போல, கல்லாய்ச் சமைந்திருந்தார்கள் என்றால், இது போன்ற கருப்பு ஆடுகளின் வளர்ச்சியை தடுக்கவே முடியாது.