“வெற்றி… வெற்றி…. வெற்றி…. மோடிக்கு வெற்றி.. மோடிக்கு வெற்றி” என்று கூறியபடியே உள்ளே நுழைந்தான் டாஸ்மாக் தமிழ்.
“என்ன மச்சான்… பண்டாரக் கட்சியில சேந்துட்டியா” என்று கிண்டல் அடித்தான் பீமராஜன்.
“நான் சேரலடா.. ஆனா, பிஜேபி காரங்க இப்படித்தான் சொல்லிக்கிட்டு இருக்காங்க. ஆனா, மோடியோட வளர்ச்சி கட்சிக்குள்ள பலத்த பூசலை உண்டாக்கிட்டு இருக்கு. ஏற்கனவே மோடி சர்வாதிகாரமா நடந்துக்கிறதா ஒரு குற்றச்சாட்டு இருக்கு. இந்த நிலையில, மூன்று மாநில தேர்தல் வெற்றிகள், மோடியை இன்னும் ஒரு மோசமான சர்வாதிகாரியா மாத்திடும்னு அவங்க கட்சிக்குள்ள இருக்கறவங்களே நினைக்கிறாங்க…
மோடி உத்தரப்பிரதேசத்துல போட்டியிட்டா, அந்த மாநிலத்துல கட்சிக்கு ஒரு உத்வேகமா இருக்கும்னு நினைக்கிறாங்க. மோடி உத்தரப்பிரதேசத்துல போட்டியிடறதுன்னு முடிவெடுத்துட்டாரு. கட்சித்தலைவர் ராஜ்நாத் சிங்கும் உத்தரப்பிரதேசத்துல போட்டியிட இருக்கிறதால, ராஜ்நாத் சிங்கை வேறு மாநிலத்தில் போட்டியிடனும்னு மோடி வற்புறுத்தறாரு.
சமீபத்துல மோடி கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங்கை கட்சியோட அனைத்து பொதுச் செயலாளர்களுக்கும் ஒரு கடிதம் எழுதச் சொன்னாரு. அந்தக் கடிதத்தில் “ஒற்றுமை ஓட்டம்” னு ஒன்றை நடத்த எல்லா பொதுச் செயலாளர்களும் ஒத்துழைக்கனும்னு சொல்லப்பட்டிருந்தது. அந்த ஒற்றுமை ஓட்டத்தை நடத்தறது “வெளிப்படையான நிர்வாகத்துக்கான குடிமக்கள்” ன்ற ஒரு என்ஜிஓ அமைப்பு நடத்துது. இந்த என்ஜிஓ மோடிக்கு நெருக்கமான என்ஜிஓ. இந்த ஒற்றுமை ஓட்டம் எதுக்கு நடத்தனும், ஏன் நடத்தனும் னு யாருக்குமே தெரியலை.
அடுத்ததா டெல்லி தேர்தல் பிரச்சாரத்துக்கு தயாரிக்கப்பட்ட விளம்பரங்கள் எதிலுமே மோடியோட பேரைத் தவிர வேறு யார் பேரும் இல்ல. டெல்லியோட முன்னாள் முதல்வர் சுஷ்மா சுவராஜ் பேர் கூட இல்ல. இதுக்கு சுஷ்மா எதிர்ப்பு தெரிவிச்சதும், கடைசி பத்து நாட்கள்ல, சுஷ்மா பெயரைப் போட்டு ரேடியோ விளம்பரங்கள் வந்துச்சு. அதுக்கு அப்புறம் அருண் ஜெய்ட்லி, ராஜ்நாத் சிங் பெயரிட்ட விளம்பரங்கள் வந்தன. டெல்லி தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையின் அட்டைப்படத்தில் கூட மோடியின் படம் மட்டுமே இருந்தது. பின்னர் மற்ற தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், அட்டைப்படம் மாற்றி வடிவமைக்கப்பட்டது”
“சரி.. அப்போ இது மோடி அலை கிடையாதா ? ” என்றான் ரத்னவேல்.
“மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சட்டீஸ்கர் போன்ற மாநிலங்களில் காங்கிரஸ் மற்றும் பிஜேபியைத் தவிர வேறு பெரிய கட்சிகள் கிடையாது. காங்கிரஸ் கட்சி மீது மக்களுக்கு கடுமையான கோபம் இருந்தது உண்மை. அப்போ அந்த கோபத்தை வெளிப்படுத்த மாற்று இல்லாமல், பிஜேபிக்கு வாக்களித்தார்கள் என்பதே உண்மை.
2011 தேர்தலில், தமிழகத்தில் அதிமுகவுக்கு விழுந்த வாக்குகள், பெரும்பாலும் திமுக மீதான கோபத்தில் விழுந்த வாக்குகள். வேறு வழியின்றி, மக்கள் பிஜேபிக்கு வாக்களித்துள்ளார்கள். அதனால் இதை மோடி அலைன்னு சொல்ல முடியாது. மோடி அலை இருந்திருந்தால், டெல்லியில் அது பிரதிபலிச்சிருக்கனும். மோடி டெல்லியில் 7 பேரணிகளை நடத்தியிருந்ததை மறக்கக் கூடாது. எந்த இடத்தில் மாற்று இருக்கிறதோ, அந்த இடத்தில், மக்கள் பிஜேபியை தேர்ந்தெடுக்கவில்லை என்பதையும் நினைத்துப் பார்க்க வேண்டும்”
“அப்போ இது செமி ஃபைனல்ஸ்.. இதுல ஜெயிச்சுட்டோம்.. அடுத்தது ஃபைனல்ஸ். அதுலயும் ஜெயிப்போம்னு பிஜேபி சொல்றாங்களே… ” என்றான் வடிவேல்.
“உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், கேரளா, ஆந்திரா, தமிழ்நாடு, ஒதிஷா போன்ற மாநிலங்களில் இப்போ பெற்ற வெற்றியைப் போலவே பிஜேபி பெற்றா, அப்போ ஜெயிப்பாங்கன்னு சொல்லலாம். ஆனா, மற்ற மாநிலங்களில் இது நடக்காதுன்னு பிஜேபிக்கு தெரிஞ்சதாலதான், கூட்டணிக்கு ஆள் பிடிக்க அலைந்து கொண்டிருக்கிறார்கள்.. “
“சரி.. கேப்டன் என்னப்பா ஆனாரு.. ? ” என்றான் ரத்னவேல்.
“டெல்லியில போட்டியிட்டதுமே கேப்டனுக்கு, செங்கோட்டையை ஜெயிச்சுட்டதா ஒரு நினைப்பு வந்துடுச்சு. அதனாலதான் என் தலைமையை ஏற்றுக் கொள்ளும் கட்சியுடன்தான் கூட்டணி ன்னு பேசியிருக்கார். அவர் கட்சி எம்எல்ஏக்களே அவர் தலைமையை ஏற்றுக் கொள்ளாமல்தான் அதிமுக பக்கம் சாய்ஞ்சிருக்காங்க. ஆனா, தன்னோட பலத்தை ரொம்பவும் கூடுதலா மதிப்பிட்டு இது போல பேசியிருக்கார். சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுக்கலைன்னா, கேப்டனும் வைகோ மாதிரி ஆயிடுவாரு.. “
“இந்தத் தேர்தல் முடிவுகள் கூட்டணிக் காட்சிகளை மாற்றி அமைக்குமாப்பா ” என்றார் கணேசன்.
“அண்ணே… பிஜேபியோட வெற்றி, காங்கிரஸை ரொம்ப சோர்ந்து போக வைச்சிருக்கு. இப்போ காங்கிரஸோட பேரம் நடத்தும் வலு குறைஞ்சிருக்கு… இப்போ திமுகவோட கை ஓங்கும். காங்கிரஸை கழற்றி விடவும் திமுக தயங்காதுன்னு சொல்றாங்க. இப்போ நடக்கும் பாராளுமன்றக் கூட்டத் தொடரிலேயே, பிஜேபியோடு இணைந்து செயல்படணும்னு திமுக எம்.பிக்களுக்கு அறிவுறுத்தப் பட்டிருக்கு.
திங்கட்கிழமை 2ஜி அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டப்போ, திமுக வெளிநடப்பு பண்ணதையும் கவனத்தில் கொள்ளணும்”
“அதிமுக என்ன பண்ணும் ? “
“ஜெயலலிதா, தேர்தலுக்குப் பிறகுதான் கூட்டுன்றதுல தெளிவா இருக்காங்க. ஏற்காடு இடைத்தேர்தலில், 52 தேர்தல் பொறுப்பாளர்களைப் போட்டு, ஒட்டு மொத்த அரசு நிர்வாகத்தையும் ஏற்காட்டில் இறக்கி விட்ட பிறகு கிடைச்ச வெற்றியை ஏதோ, பெரிய வெற்றியா இந்த அம்மா நினைச்சுக்கிட்டு இருக்காங்க..
உளவுத் துறை அறிக்கையே, இப்போ தேர்தல் வந்தா, அதிமுக 20 சீட்தான் ஜெயிக்கும்னு சொன்னாலும், ஜெயலலிதாவுக்கு எப்படியாவது ஜெயிச்சுடலாம்னு ஒரு குருட்டு நம்பிக்கை இருக்கு. தேர்தலில் ஜெயிக்கிறதுக்கு ஜெயலலிதா கட்சியையும் மக்களையும் நம்பறாங்களோ இல்லையோ, டிஜிபி ராமானுஜத்தை உறுதியா நம்பறாங்க. “
“அவர் எப்படிப்பா ஜெயிக்க வைப்பார்.. ? “
“2006 சட்டமன்றத் தேர்தலில் இறுதி நேரத்தில் வைகோவை திமுக கூட்டணியில இருந்து பிரிச்சு அதிமுக பக்கம் கூட்டிட்டு வந்தது ராமானுஜம்தான். ராமானுஜமே நேரடியா போயி வைகோகிட்ட பேசுனாரு. அது வரை, என்னை ஒன்றரை ஆண்டுகள் சிறையில் வைத்த ஜெயலலிதா ன்னு பேசிக்கிட்டு இருந்த வைகோ, சத்தம் போடாமல் தோட்டத்தில் ஐக்கியமாயிட்டாரு
அது மாதிரி இந்த முறையும் ராமானுஜம் ஏதாவது பண்ணுவாருன்னு ஜெயலலிதா நம்பறாங்க.. “
“சரி ராமானுஜத்தால அப்படிப் பண்ண முடியுமா ? “
“அவருடைய பணி நீட்டிப்புக்கு மத்திய அரசு இன்னும் ஒப்புதல் அளிக்கலை. அவருக்கு பென்ஷன் வருமோ வராதோன்னு கவலையில இருக்காரு… விட்டாப் போதும்னு நினைக்கிறாரு.. ஆனா, ஜெயலலிதா விட மாட்றாங்க. “
“ஜெயலலிதாவோட சொத்துக் குவிப்பு வழக்கு என்ன நிலையில இருக்கு.. ? ” என்றான் பீமராஜன்.
“பெங்களுரு சிறப்பு நீதிமன்ற நீதிபதியாக மைக்கேல் குன்னாவை நியமித்தாகி விட்டது. பழைய நீதிபதி பாலகிருஷ்ணா பணி நீட்டிப்பு வேண்டாம் என்று சொல்லி விட்டார். இது பற்றி உங்களோட கருத்து என்னன்னு ஜெயலலிதா தரப்பை உச்சநீதிமன்றம் கேட்டுச்சு. அதுக்கு பதில் மனு போட கால அவகாசம் வேணும்னு ஜெயலலிதா கேட்டதுக்கு இணங்க, வழக்கு ஒத்தி வைக்கப்பட்டிருக்கு.
இதற்கிடையே, புதிய விசாரணை நீதிபதி மைக்கேல் குன்னா, சொத்துக் குவிப்பு வழக்கில் உள்ள சொத்துக்கள் அத்தனையும் பார்வையிடனும்னு திமுக சார்பில் மனு போடப்பட்டிருக்கு”
“சரி ஜெயலலிதா தரப்புல என்னதான் பண்றாங்க ? “
“ஆள் தேடிக்கிட்டு இருக்காங்க”
“எதுக்கு ? “
“செட்டிங் பண்றதுக்குத்தான். ஆந்திராவில் ஆதிகேசவலு நாயுடுன்னு ஒரு சாராய ஆலை அதிபர் இருந்தார். அவர் பின்னாளில் தெலுங்கு தேசம் கட்சியில சேர்ந்து எம்.பி ஆனார். அப்புறம் காங்கிரசுக்கு தாவினார். முதல்வரோட செயலாளரா இருக்கிற ராம் மோகன ராவுக்கு அவர் நெருக்கம். அவர் மூலமா, பெங்களுரு நீதிபதி பாலகிருஷ்ணாவையும், அரசு வழக்கறிஞர் பவானி சிங்கையும் செட்டிங் பண்ணதா சொல்றாங்க. கிட்டத்தட்ட 800 கோடி ரூபாய் பரிவர்த்தனை நடந்திருக்கிறதா பேச்சு. அந்த ஆதிகேசவலு நாயுடு இறந்து போயிட்டார். அவர் இறந்த பிறகு, சிறப்பான முறையில “செட்டிங்” பண்றதுக்கு நல்ல நபரா யாரும் கிடைக்கலை. கார்டன் தரப்புல நல்ல ஆளை தேடிக்கிட்டு இருக்காங்க.. “
ஆதிகேசவலு நாயுடு
“கிடைச்சுட்டாங்களா ? ” என்றான் ரத்னவேல்.
“ஏன் நீ வேணா போயேன்… ஆனா போறதுக்கு முன்னாடி, போயஸ் தோட்டம் போன ஆடிட்டர் கதையை நினைச்சுப் பாத்துக்க” என்று சொல்லி விட்டு சிரித்தான் தமிழ்.
“திமுகவுல என்ன நடக்குது ? ” என்றான் பீமராஜன்.
“திமுகவுல ஏற்காடு இடைத்தேர்தல்ல கொஞ்சமாவது வாக்கு வித்தியாசம் குறையும்னு நெனைச்சாங்க. அதுனாலதான் இந்த தேர்தலை ரொம்பவும் சீரியசா எடுத்துக்கிட்டு பிரச்சாரம் பண்ணாங்க.. ஆனா, வாக்கு வித்தியாசம் அதிகரிச்சதுல கொஞ்சம் அப்செட்தான்.. “
“தலைவர் என்ன சொல்றாரு ? “
“தலைவருக்கு, முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி கங்குலி செக்ஸ் புகார்ல சிக்கியதுல யாரு சந்தோஷப்பட்றாங்களோ இல்லையோ, திமுக தலைவர் கருணாநிதிக்கு சந்தோஷமோ சந்தோஷம்… தன் மகள் சிறைக்கு போனதுக்கும், ஆ.ராசா மாட்டுனதுக்கும் கங்குலிதான் காரணம்னு நினைக்கிறாரு…
நம்பளை என்ன பாடு படுத்துனான் இந்த ஆளு… இப்போ என்ன கதிக்கு ஆளாயிருக்கான் பாத்தியான்னு சொல்லிட்டு, அந்த வழக்கு விபரங்களை அவ்வப்போது ஆர்வமா கேட்டுத் தெரிஞ்சிக்கிறாராம். “
“பொதுக்குழுவில் தலைவர் பதவியில் மாற்றம் இருக்குமா ? “
“கருணாநிதி உயிரோட இருக்கிற வரைக்கும் அவர்தான் தலைவர். ஏற்காடு இடைத்தேர்தல் திமுக வேட்பாளர் மாறன், ஒரு கூட்டத்தில் பேசும்போது எனக்கு கிடைக்கப் போகும் வெற்றியை தளபதி ஸ்டாலினின் காலடியில் சமர்ப்பிப்பேன்னு பேசியிருக்காரு…. இதைக் கேட்டதும் தலைவர், இப்பவே இப்படிப் பேசறானுங்க…. தலைவர் பதவியையும் குடுத்துட்டா என்ன நடக்கும்னு இப்பவாவது புரியுதான்னு கேட்டிருக்காரு”
“அப்போ பொதுக்குழுவில் பெரிய மாற்றம் எதுவும் இருக்காதா ? ” என்றான் வடிவேல்.
“எந்த மாற்றமும் இருக்காது.. தேர்தல் பொறுப்பாளர்.. கூடுதல் செயலாளர், மண்டல ஆய்வாளர்னு ஏதாவது புதிய பதவியை உருவாக்கி அதை ஸ்டாலினுக்கு குடுத்து சமாளிப்பார்”
“காவல்துறை செய்திகளைச் சொல்லுப்பா” என்றார் கணேசன்.
“அண்ணே ஜாபர் சேட் மீது வழக்கு தொடுக்க மத்திய அரசு அனுமதி மறுத்ததுதான் இப்போதைக்கு ஹாட் டாப்பிக்.
வீட்டு வசதி வாரியத்தின் மூலம், வீட்டு மனை வாங்கி, அதை தனியார் நிறுவனத்தோடு ஒப்பந்தம் போட்டு, அரசுக்கு 1.49 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தினதா, ஜாபர் சேட், அவர் மனைவி பர்வீன் ஜாபர் உள்ளிட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்தது லஞ்ச ஒழிப்புத் துறை.
ஜாபர் சேட் ஐபிஎஸ் அதிகாரின்றதுனால, மத்திய உள்துறையிடம் அனுமதி கேட்டார்கள். ஏறக்குறைய ஒன்றரை ஆண்டுகள் கழித்து, அனுமதி தர முடியாதுன்னு மத்திய அரசு சொல்லியிருக்கு. ஜாபர் சேட் மீது வழக்கு தொடர போதுமான ஆதாரங்கள் இல்லைன்னு சொல்லியிருக்காங்க”
“அது மாதிரி சொல்ல முடியுமா ? “
“வழக்கு தொடர அனுமதி அளிக்கும் அதிகாரிகள், நீதிமன்ற விசாரணையைப் போல ஆராயக் கூடாது… வழக்கு தொடர போதுமான முகாந்திரம் உள்ளதா என்பதை மட்டுமே பார்க்க வேண்டும் னு பல உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் இருக்கு. அப்படி இருக்கையில் இது போல அனுமதி மறுத்தது சட்டவிரோதமான காரியம்”
“ஜாபர் எப்படி இதை மேனேஜ் பண்ணார் ? “
“தமிழகத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி பிரதீப் யாதவ் மத்திய உள்துறையில் இயக்குநரா 2010 முதல் 2013 பிப்ரவரி வரை பணியாற்றினார். இப்போ மத்திய ரசாயனத்துறையில பணியாற்றுகிறார். இந்த பிரதீப் யாதவ், ஜாபர் சேட்டெல்லாம் கூட்டுக் களவாணிகள். தமிழகத்தின் மிகப் பெரிய கொள்ளைக்காரர்களா இருந்தாங்க. இப்போ, தன்னோட சகக் கொள்ளையர் ஜாபர் சேட்டுக்கு ஒரு ஆபத்தன்னதும், உதவியிருக்கார் பிரதீப் யாதவ்”
“சரி இதை ஒன்னுமே பண்ண முடியாதா ? “
“ஏன் பண்ண முடியாது ? “
“மத்திய உள்துறை வழக்கு தொடுக்க அனுமதி மறுத்ததை எதிர்த்து புகார் கொடுத்தவர் வழக்கு தொடுப்பார்.. அப்படியேவா விட்டுடுவாங்க ? “
“நல்லது நடந்தா சரி…. “
“சென்னை மாநகர ஆணையர் எப்படி இருக்காரு ? ” என்று ஜார்ஜை வம்புக்கு இழுத்தான் ரத்னவேல்.
“யாரு அப்பாடக்கர் ஜார்ஜை கேக்கறியா ? அவர் எப்பவும் போல அப்பாடக்கராத்தான் இருக்காரு. அவர் பண்ற அளப்பறை ரொம்ப அதிகமாயிட்டே இருக்கிறதா சொல்றாங்க..
பத்திரிக்கையாளர்கள் யாரையும் சந்திக்க மாட்றார். அவருக்கு வேண்டிய மலையாள பத்திரிக்கையார்களை மட்டும் சந்திக்கிறார். சந்திக்க யாரும் நேரம் கேட்டாலும் குடுக்கறதில்லை. வெளியில போராட்டங்கள் எங்கயாவது நடந்தா, அந்த இடத்துல இருந்து தொலைக்காட்சி சேனல்கள் பண்ணுவது போல இவருக்கு நேரடி ஒளிபரப்பு பண்ணனும். இவர் ரூம்ல இருக்கற டிவியில அதையெல்லாம் பாத்துக்குவார்.
சாதாரண டாக்சி ட்ரைவர்கள், பள்ளி வேன் ஓட்டுனர்கள் மீட்டிங்குகளை, கூடுதல் ஆணையர் தாமரைக்கண்ணன் பார்க்கனும். மென்பொறி நிறுவனங்களின் தலைவர்கள் வந்தா இவர் சந்திப்பார். கிட்டத்தட்ட பணக்காரர்களோட அதிகாரியாவே ஜார்ஜ் மாறிட்டதா சொல்றாங்க.
மென் பொறியாளர்களை சந்திக்கும் ஜார்ஜ் மற்றும் கூடுதல் ஆணையர் தாமரைக்கண்ணன்
கூடுதல் ஆணையரை சந்திக்கும் கால் டாக்சி உரிமையாளர்கள்
புதிய கமிஷனர் அலுவலகத்தின் போர்டிக்கோவுல, இவரோட கார் மட்டும்தான் நிக்கணுமாம். முதல் நுழைவாயில் வழியாக கூடுதல் ஆணையர்கள் உள்ளிட்ட யாருடைய வாகனமும் போகக் கூடாதாம். பத்திரிக்கையாளர்கள் வந்தா, கேமராவை எடுத்துக்கிட்டு போகக்கூடாதாம்.”
“இந்த ஆளு என்ன நிரந்தரமான கமிஷனர்னு நினைச்சுக்கிட்டாரா ? “
“கருணாநியின் நள்ளிரவு கைது காரணமாக திமுக ஆட்சியில் ஜார்ஜ் நாலு வருஷம் கன்னியாக்குமரியில் வச்சிருந்தாங்க.. ஜாபர் சேட்டை புடிச்சுதான் சென்னைக்கே வந்தாரு… இந்தப் பதவியில இருந்து மாற்றப்பட்டால் இவரை சீண்டறதுக்கே ஆளு இருக்காதுன்னு இவருக்கும் தெரியும்.. அப்படி இருந்தும் ஏன் இந்த ஆட்டம் ஆடறாருன்னு யாருக்கும் புரியலை”
“காவல்துறை செய்திகள் அவ்வளவுதானா ? ” என்றான் வடிவேல்.
“சிறை செய்திகள் ஒன்னு சொல்றேன் கேளு போன வாரம் வேலூர் சிறையில 11 மொபைல் போன், 8 பேட்டரி, 25 ஆயிரம் பணம், 3 சார்ஜர், 13 சிம் கார்டுகளை புடிச்சாங்க.. “
“நல்ல விஷயம்தானே… வழக்கு பதிவு பண்ணிட்டாங்களா ? “
“இதெல்லாம் பறிமுதல் செய்யப்பட்டது தருமபுரி பஸ் எரிப்பு வழக்கில் சிறையில் இருக்கும் தூக்கு தண்டனை கைதி மது என்கிற ரவீந்திரன் கிட்ட இருந்து.. “
“ஒரே ஆளு எதுக்கு இத்தனை போனை வச்சுருந்தார் ? “
“வாடகைக்கு விட்டு சம்பாதிக்கத்தான்… ஆனா, அவர்கிட்ட பறிமுதல் பண்ணா, அம்மா கோவிச்சுக்குவாங்களோன்னு, ஆலடி அருணா கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பாலமுருகன் என்பவரிடம் பறிமுதல் செய்ததா வழக்கு பதிவு பண்ணிட்டாங்க.. “
“நல்லா இருக்குப்பா சிறை அதிகாரிகளோட விசுவாசம்”
“சரி.. நீதித்துறை செய்திகள் என்னப்பா இருக்கு ?” என்றார் கணேசன்.
“இருக்குண்ணே… சொல்றேன்… இப்போதைக்கு பரபரப்பா பேசப்படும் தலைப்பு, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் பத்தித்தான். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் வரும் 19ம் தேதி சென்னையில் நடக்கும் ஒரு விழாவுக்கா வர்றார். அவர் வந்த பிறகுதான், சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியா இருக்கும் பணியிடங்களை நிரப்பணும்னு சொல்லியிருக்கார். அனுப்பப் பட இருக்கும் பட்டியலை அவர் பார்த்து ஒப்புதல் கொடுத்த பிறகுதான் அனுப்பனும் னு சொல்லியிருக்கார். அவர் ஓய்வு பெறுவதற்குள், அனைத்து காலியிடங்களையும் நிரப்பனும் னு நினைக்கிறார். “
“அவர் நினைச்சது நடக்குமா ? “
“நடக்கறது கஷ்டம்தான். உச்சநீதிமன்றத்தின் முதல் மூன்று நீதிபதிகள்தான் நீதிபதிகள் நியமனத்துக்கு பொறுப்பானவங்க. இப்போ இருக்கக் கூடிய முதல் மூன்று நீதிபதிகள் சதாசிவம், சிங்வி மற்றும் ஆர்.எம்.லோதா. சிங்வி இந்த மாதம் 11ம் தேதி ஓய்வு பெறுகிறார். அவர் ஓய்வு பெற்றதும், முதல் மூன்று நீதிபதிகளுக்குள் எச்.எல்.தத்து வந்து விடுவார். அவரும், லோதாவும் சேந்து, ஒரு நீதிபதியோட நியமனத்தை வேண்டாம்னு சொன்னா, நீதிபதி சதாசிவத்தால எதுவும் பண்ண முடியாது. நீதிபதி சதாசிவமும் ஏப்ரல் மாதம் ஓய்வு பெறுகிறார். தத்து 2015 வரை தலைமை நீதிபதியா இருப்பார். அதனால சென்னையில் உள்ள 15 நீதிபதி பணியிடங்கள் அத்தனையையும் அவரே நிரப்ப நிச்சயமா விட மாட்டாங்க”
இது ஒரு பக்கம். இன்னொரு பக்கம், உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களா பணியாற்றுபவர்களை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக்க எதிர்ப்பு இருக்குன்னு போன முறையே சொன்னேன்.. இப்போ சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கமே இது தொடர்பா கடிதம் எழுதியிருக்கு
அடுத்ததா, வழக்கறிஞர்கள் நீதிபதியாக்குவதில் பாரபட்சம் இருக்கு, தலித்துகள் ஒதுக்கப்படுகிறார்கள்னு, ஒரு புகார் கிளம்பியிருக்கு.. “
“இது என்ன புதுக் கதையா இருக்கு ? “
“நான் சொல்லலை.. நீதியின் வசந்தம் ன்ற ஒரு அமைப்பு, தற்போது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளா இருப்பதில் உள்ள அத்தனை நீதிபதிகளோட சாதியை குறிப்பிட்டு ஒரு துண்டறிக்கை வெளியிடப்பட்டிருக்கு. அந்த துண்டறிக்கையில், கீழமை நீதிபதிகளா இருந்து பதவி உயர்வு மூலமா வரும் நீதிபதிகளில் தலித்துகள் இருக்கிறார்களே ஒழிய, நேரடியாக வழக்கறிஞர்களைத் தேர்ந்தெடுப்பதில், தலித்துகள் பாரபட்சமாக நடத்தப்படுகிறார்கள்னு சொல்றாங்க…
மேலும், அந்தப் பட்டியலின்படி, தற்போது கவுண்டர்கள் மட்டும் 5 பேர் இருக்காங்க. ஒரே ஒரு வன்னியர், ஒரே ஒரு இஸ்லாமியர் னு பல தரப்பினருக்கு போதுமான பிரதிநிதித்துவம் இல்லைன்றதும் அந்த துண்டறிக்கையில் சொல்லப்பட்டிருக்கு”
“நீதிபதிகள் நியமனத்தில் இட ஒதுக்கீடு உண்டா என்ன ? “
“சட்டபூர்வமா நீதிபதிகள் நியமனத்தில் இட ஒதுக்கீடு இல்லைன்னாலும், நீதிபதிகளைத் தேர்ந்தெடுக்கும்போது, எல்லா தரப்பினருக்கும் பிரதிநிதித்துவம் இருக்குதான்னு பாத்துட்டுதான் பண்றாங்க”
“நல்லது நடந்தா சரிதான்… “
“மதுரையில் உள்ள சிபிஐ வழக்குகளை பார்த்துக் கொள்வதற்காக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் ரொசாரியோ சுந்தரராஜ். இவரை சிபிஐ வழக்கறிஞர் பதவியில இருந்து நீக்கிட்டாங்க”
“ஏன் ஒழுங்கா வாதாடலையா ? “
“ஒழுங்கா வாதாடலைன்னா கூட பரவாயில்ல… சிபிஐ குற்றவாளிகள் கிட்ட ஏராளமா பணம் வாங்கிட்டு, அவங்களுக்கு சாதகமா பல வழக்குகளில் நடந்துக்கிறதா தொடர்ந்து வந்த புகார்களை அடுத்து, அவரை நீக்கிட்டாங்களாம்.. “
“இதுதான் வேலியே பயிரை மேய்வதா ? ” என்றான் வடிவேல்.
“வேலியே பயிரை மேயிற கதை இன்னொன்னு இருக்கு. சில வழக்கறிஞர்களின் மோசமான நடவடிக்கைகள் குறித்து, சவுக்கு தளத்தில் விரிவா ஒரு கட்டுரை வந்திருக்கு பாத்தீங்களா ? ” இணைப்பு.”
“பாத்தேன்பா…. ரொம்ப பயங்கரமா இருந்துச்சே… “
“இன்னும் கூடுதலா பல தகவல்கள் சொல்றாங்க… அந்த வழக்கறிஞர் துரைக்கண்ணனுக்கு எழும்பூர் நீதிமன்றம்தான் கூடாரம். சாயங்காலம் ஆச்சுன்னா எழும்பூர் நீதிமன்றத்துக்குள்ளவே சரக்கடிக்கிறது, பெரிய தொகை சம்பந்தப்பட்ட வழக்குகள், பணக்கார குற்றவாளிகள் சம்பந்தப்பட்ட வழக்குகள் இதுலயெல்லாம் ஜாமீன் மனு போட்டு, வேற எந்த வழக்கறிஞரையும் உள்ள நுழைய விடாம அடாவடி பண்றது, மிரட்டி பணம் வாங்கறது இது போல பல வேலைகளை செய்துக்கிட்டு இருக்காராம்”
“இவரை யாருமே கேக்க மாட்டாங்களா ? “
வழக்கறிஞர் துரைக்கண்ணன்
“ஏற்கனவே இவர் மேல வழக்கறிஞர் ரஜினிகாந்த் கொலை வழக்கு இருக்கு. எழும்பூர் நீதிமன்றத்துல விபச்சார வழக்குகள் இருந்த வரைக்கும் வேற யாரும் ஜாமீன் போட முடியாதபடி வசூல் வேட்டையில ஈடுபட்டதாலதான், அந்த வழக்குகளே சைதாப்பேட்டை நீதிமன்றத்துக்கு மாறுச்சு. இப்போ சுங்கத்துறை தாக்கல் செய்யும் வழக்குகளிலும், இதே போல அடாவடியில இறங்கியிருக்காராம் துரைக்கண்ணன். இவரும் இவர் கூட இருக்கிற காமராஜும்தான் எல்லா அடாவடிகளிலும் ஈடுபடுவதுன்னு சொல்றாங்க… இவங்க பண்ற அடாவடிக்கு போர்வையா, தலித் வழக்கறிஞர்கள் சங்கம்னு ஒன்னு வச்சுக்கிட்டு, எல்லாரையும் மிரட்டுவதா சொல்றாங்க”
“யாருதான் இவங்களையெல்லாம் தட்டிக் கேக்கறது ? “
“யாரும் கேக்க முடியாது. இதெல்லாம் இப்படித்தான் தொடர்ந்துக்கிட்டே இருக்கும். அதே கட்டுரையில ஜாகிர் உசேன்னு இன்னொரு வழக்கறிஞரைப் பத்தி போட்டிருந்தாங்க தெரியுமா ? “
“ஆமா.. அவர் கூட ஒரு கஸ்டம்ஸ் கண்காணிப்பாளரை தாக்கிட்டதா சொல்லியிருந்தாங்களே”
“ஆமா அவரேதான்… மகேஷ் குமார்னு ஒரு நபர் 30 லட்ச ரூபாய்க்கு வாசனைத் திரவியங்கள் இறக்குமதி செய்திருக்கார். அந்த கன்டெயினரைத் திறந்து பாத்தா, வாசனைத் திரவியங்களுக்குப் பதிலா, வேற பொருட்கள் இருந்திருக்கு. இது தொடர்பா மகேஷ் குமாருக்காக, பேச்சுவார்த்தை நடத்த ஜாகிர் உசேன் போயிருக்கார். அப்போ வார்த்தைகள் முற்றி, அந்த கஸ்டம்ஸ் கண்காணிப்பாளர் சீனிவாஸ் என்பவரை அடிச்சிருக்கார் ஜாகிர் உசேன்.
வழக்கறிஞர் ஜாகிர் உசேன்
கஸ்டம்ஸ் அதிகாரிகள் புகார் கொடுத்ததும் உடனே எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு, ஜாகிர் உசேன் கைது செய்யப்பட்டிருக்கார். அவர் கைது செய்யப்பட்ட தகவல் தெரிந்ததும், வழக்கறிஞர் சங்கத்தோட முன்னாள் தலைவர் மோகனகிருஷ்ணன் மேலும் பல வழக்கறிஞர்களை கூட்டிக்கிட்டு போய் அந்த இடத்துல தகராறு பண்ணியிருக்கார்”
குத்து விளக்கேற்றும் மோகனகிருஷ்ணன்
“மோகன கிருஷ்ணன் எதுக்காக ஜாகிர் உசேனுக்காக போகணும் ? “
“சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் தேர்தலுக்காக மோகனகிருஷ்ணனுக்கு ஜாகிர் உசேன் கணிசமான தொகையை செலவு பண்ணியிருக்கிறதா சொல்றாங்க…
அதுக்கப்புறம் நீதிபதி முன்னாடி ஜாகிர் உசேனை ஆஜர்படுத்தியதும், எல்லா வழக்கறிஞர்களும் சேர்ந்து ஏறக்குறைய நீதிபதியை மிரட்டி ஜாமீன் வாங்கியிருக்காங்க.. ஜாகிர் உசேனை ரிமாண்ட் செய்யக் கூட அனுமதிக்கலை
வருவாய்ப் புலனாய்வுத் தலைவரா இருந்த ராஜன் என்பவர் லஞ்சம் வாங்கும்போது கையும் களவுமா சிபிஐ அதிகாரிகள் கிட்ட சிக்கிய வழக்கில் புகார்தாரர், இந்த ஜாகிர் உசேன்தான். இதை வைத்து, இவர் பல கஸ்டம்ஸ் மற்றும் வருவாய்ப் புலனாய்வுத் துறை அதிகாரிகளை மிரட்டுவதா தகவல் இருக்கு”
“அந்த ஜாகிர் உசேன் மனித உரிமை அமைப்பு ஒன்னு வச்சுருக்காராமே… “ரைட்ஸ் அவேர்னெஸ் ஆர்கனைசேஷன்” னு ஒரு அமைப்பு வச்சுருக்கார் ஜாகிர் உசேன். அந்த அமைப்பையே, கஸ்டம்ஸ் அதிகாரிகளை மிரட்டுவதற்காக பயன்படுத்தறாருன்னு சொல்றாங்க. தனக்கு சாதகமான அதிகாரிகளை கண்டுகொள்ளாமல் விட்டு விடுவது. தனக்கு வேண்டிய அதிகாரிகளைப் பற்றி போஸ்டர் அடிச்சு ஒட்டுவது ன்னு ஏறக்குறைய சுங்கத்துறையையே தன்னோட கட்டுப்பாட்டுக்குள்ள கொண்டு வரணும்னு முயற்சி பண்றதா கஸ்டம்ஸ் அதிகாரிகள் தெரிவிக்கிறாங்க”
“ஊழல் அதிகாரிகளைப் பற்றி தகவல் வெளியிடுவது நல்ல விஷயம்தானே.. ? “
“அப்படிப் பண்றது நல்ல விஷயம்தான்.. ஆனா, கஸ்டம்ஸ் துறையைத் தவிர்த்து இவர் எந்த துறையைப் பற்றியும் பேசுவதில்லை. எப்போ பாத்தாலும் கஸ்டம்ஸ் துறையையே குறி வைப்பதற்கான காரணம் என்ன ன்னு கேக்கறாங்க”
“அதுவும் நியாமாத்தான் இருக்கு”
“திங்கட்கிழமை அன்னைக்கு உயர்நீதிமன்றத்துல ஏதோ பரபரப்பான சம்பவம் நடந்துச்சாமே… என்ன மேட்டர் அது ? “
“நீதியின் அரசர், நீதிச் சக்கரவர்த்தி, நீதி நாயகன், நீதிதேவன், நீதிப்பேராளன், நீதி தயாபரன், நீதிராஜா, நீதிமான், கவரிமான்”
“டேய்.. போதும்டா.. விஷயத்துக்கு வா… “
“இப்படியெல்லாம் அழைக்கப்படும் நீதிபதி கர்ணன் திங்கட்கிழமை அன்னைக்கு ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு பண்ணார். “
“நீதிபதி அதுவும் உயர்நீதிமன்ற நீதிபதி பத்திரிக்கையாளர்களை சந்திக்கிறதா ? என்னடா சொல்ற… “
“நீதிபதி கர்ணன் பத்திரிக்கையாளர்களை சந்திச்சது பத்தி சவுக்கு இணையதளத்தில் ஒரு கட்டுரை வந்திருக்கு. இணைப்பு. அதே மாதிரி இன்னைக்கும் மதியம் 1.30 மணிக்கு ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்புன்னு உயர்நீதிமன்ற பத்திரிக்கையாளர்களுக்கு தகவல் சொல்லப்பட்டிருக்கு. பத்திரிக்கையாளர்கள் எல்லோரும் நீதியரசர் அறையில் ஒன்றரை மணிக்கு குழுமியிருந்தாங்க.
ஒன்றரை மணிக்கு தன் அறைக்குள்ள வந்த நீதிபதி கர்ணன்… “யாரைக் கேட்டு உள்ள வந்து உக்காந்திருக்கீங்க… இது என்ன ஜட்ஜ் சேம்பர்னு நெனச்சீங்களா.. உங்க வீடுன்னு நெனச்சீங்களா.. வாட் நான்சென்ஸ்.. ஆல் ஆப் யு கெட் அவுட்” னு கத்தியிருக்காரு.
“அது என்ன அவுரு வூடா… ? என்ன ஜட்ஜ் மாதிரியா பேசறாரு அந்த ஆளு… என்னடா இது” என்று கோபப்பட்டான் பீமராஜன்.
“சொன்னா நம்ப மாட்டல்ல… இந்த வீடியோவை பாரு…
கர்ஜிக்கும் சிங்கம்
“பாத்தியா… … எப்படிப் பேசறாரு பாத்தியா… நீதிபதி பத்திரிக்கையாளர்களை சந்திக்கிறதே தவறு… அதுவும் பத்திரிக்கையாளர்களை சந்திக்கிறேன்னு அழைச்சுட்டு, கெட் அவுட்டுனு மரியாதை இல்லாம வெரட்றது அயோக்கியத்தனம்..
தப்பா கூப்பிட்டுட்டேன்.. போயிட்டு வாங்கன்னு சொல்லாம, நான் நேத்துதான் கூப்புட்டேன்னு கூசாம பொய் சொல்றாரு பாரு. நேத்து கூப்பிட்டார்னா ஞாயித்துக்கிழமை வீட்டுக்கு கறி விருந்துக்கு கூப்பிட்டாராமா… இப்படி கொஞ்சம் கூட கூசாம பொய் சொல்ற ஒரு நபர் எப்படிப்பட்ட தீர்ப்புகள் வழங்கவாருன்னு நீயே முடிவு பண்ணிக்க”
“சரி… எதுக்காக இன்னைக்கு பத்திரிக்கையாளர் சந்திப்பாம் ? “
“போன முறை எதுக்காக பத்திரிக்கையாளர்களை சந்திச்சாரு…? அவர் மேல ஆதாரத்தோட ஊழல் புகார் போனதும், அதிலிருந்து தப்பிக்கிறதுக்கா, “மிஸ் என்னை கிள்ளிட்டான் மிஸ்” னு பக்கத்துல இருந்த ஜட்ஜ் என்னை கிள்ளிட்டாரு, உதைச்சிட்டாருன்னு பேட்டி கொடுத்தாரு. யாருய்யா கிள்ளுனதுன்னு கேட்டா…. அதை உரிய நேரத்தில் சொல்லுவேன்னு சொன்னாரு.. இன்னைக்கு வரைக்கும் அந்த உரிய நேரம் வரலை. இப்பவும் அதே மாதிரி இவர் மேல ஊழல் புகார் வந்திருக்கிறதா சொல்றாங்க.
இதிலிருந்து தப்பிக்க பத்திரிக்கையாளர்களை சந்திக்கிறதுதான் ஒரே வழின்னு இவருக்கு உயர்நீதிமன்றத்தில் உள்ள ஒரு பத்திரிக்கையாளர்தான் ஆலோசனை சொன்னதா சொல்றாங்க. இதுக்கு முன்னாடியும் இவர் பேட்டி கொடுத்ததுக்கு அந்த பத்திரிக்கையாளர்தான் ஆலோசனை சொல்லியிருக்கார். நீதிபதி பி.டி.தினகரன் மேல ஊழல் புகார் வந்தப்பவும் அந்த பத்திரிக்கையாளர்தான் அவரை பேட்டி கொடுக்க ஆலோசனை கொடுத்ததா சொல்றாங்க, பத்திரிக்கையில் பேட்டி குடுத்து, தன்னை ஒரு தலித் நீதிபதின்றதுனால யாரும் மதிக்க மாட்றாங்க, எனக்கு நல்ல போர்ட்ஃபோலியோ போட மாட்றாங்க. என்னை அவமரியாதை செய்யறாங்க ன்னு பேட்டி குடுத்துட்டா, உடனே தலித் வழக்கறிஞர்கள் பொங்கி எழுந்து போன முறை நடந்த மாதிரி தலைமை நீதிபதி அறைக்குள்ளயே போய் பிரச்சினை பண்ணுவாங்க. அப்புறம் கர்ணன் அய்யா கல்லா கட்ட எந்த தொந்தரவும் இருக்காது”
“சரி பத்திரிக்கையாளர் ஆயிரம் யோசனை சொல்லுவாங்க. நீதிபதிக்கு அறிவு வேணாமா… ? “
“அட போப்பா… தமாஷ் பண்ணிக்கிட்டு”
“ஈஷா யோக மையத்தோட வழக்கு என்ன ஆச்சு… ? “
“ஈஷா மையத்தின் கட்டிடங்கள் பொதுக் கட்டிடங்கள். இந்தக் கட்டிடங்கள் கட்டுவதற்கு மாவட்ட ஆட்சியர் மற்றும் நகர்புற வளர்ச்சித்துறையின் அனுமதி அவசியம். ஆனால் ஈஷா மையம் எந்த அனுமதியும் பெறவில்லை. மலைத்தளப் பாதுகாப்புக் குழுவின் அனுமதியையும் பெறவில்லை. அனுமதி கேட்டு ஈஷா மையம் அனுப்பிய விண்ணப்பமும் திருப்பி அனுப்பப் பட்டது. இது வரை அவர்கள் எந்த அனுமதியும் பெறாமல் கட்டிடங்களை தொடர்ந்து கட்டிக் கொண்டிருப்பதால், கட்டிடங்களை இடிக்க 05.11.2012 அன்று நோட்டீஸ் அனுப்பப் பட்டது ன்னு பதில் மனு தாக்கல் பண்ணியிருக்காங்க”
“யார் தாக்கல் பண்ணியிருக்கா ? “
“சபாபதின்னு ஒரு துணை இயக்குநர் தாக்கல் பண்ணியிருக்காரு. இடிப்பதற்கான நோட்டீஸ் அனுப்பி ஒரு வருஷமா என்ன பண்ணிக்கிட்டு இருந்தீங்க.. அமைதியா இருந்த துணை இயக்குநர் மீது துறை நடவடிக்கை எடுக்கனும்னு ஒரு பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட இருக்கு. அந்த சபாபதி அடுத்த வருஷம் ஓய்வு பெற இருக்கிறார் ன்றது கூடுதல் சிறப்பு”
“இத்தனை பேரு குடியை கெடுத்தாலும் அந்த சாமியார் அடங்க மாட்டான் போல இருக்கே… “
“அவன் கோடீஸ்வர சாமியார் டா… எப்படி அடங்குவான்” என்று சொல்லிக் கொண்டு தமிழ் எழுந்தான். அவன் எழுந்ததும் சபை கலைந்தது.