உடன்பிறப்பே,
முதலமைச்சர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் தொடர்புடைய சென்னையில் உள்ள அசையும் சொத்துக்களை, வழக்கு விசாரணை நடந்து வரும் பெங்களூர் சிறப்பு நீதி மன்றத்துக்கு வரும் 21ஆம் தேதிக்குள் கொண்டு வர வேண்டுமென்று நேற்று (12-12-2013) தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.
சொத்துக் குவிப்பு வழக்கு பற்றி நான் 14-9-2013 அன்று வெளியிட்ட “உடன்பிறப்பு மடலில், “இந்த முக்கியமான வழக்கின் சான்றுப் பொருள்களாக உள்ள கைப்பற்றப்பட்ட நகைகள் சென்னை ரிசர்வ் வங்கியின் கருவூலத்தில் உள்ளன. சொத்துக் குவிப்பு வழக்கின் விசாரணையின்போது, ஏற்கனவே கைப்பற்றப் பட்ட நகைகள் அனைத்தும் சிறப்பு நீதிமன்றத் தின் பொறுப்பிற்குக் கொண்டு வரப்பட வேண்டும். அவ்வாறு இதுவரை கொண்டு வரப்படவில்லை. இறுதி வாதம் நடைபெறுவதற்கு முன்பாக, அந்த நகைகளை நீதிமன்றத்தில் ஒப்படைப்பது பற்றி சிறப்பு நீதிமன்றம் எந்த விதமான உத்தரவும் பிறப்பிக்கவில்லை. அந்த நகைகளைக் கொண்டு வந்து சிறப்பு நீதிமன்றத்தில் ஒப்படைத்து, விசாரணை நடத்துவதற்கு முன்பாகவே, இந்த வழக்கில் தீர்ப்பளித்து விட வேண்டுமென்று நீதிபதி அவசரப்படுவது, அவர் தன் பதவி ஓய்வு பெற்றுச் செல்வதற்கு முன்பாகவே தீர்ப்பளித்திட வேண்டும் என்று கருதித்தான் போலும்! நகைகளை பெங்களூரு நீதிமன்றத்திற்கே கொண்டு வந்து பார்வையிடாமல், சட்ட விதிமுறைகளின்படி இந்த வழக்கில் தீர்ப்பளிக்க முடியாது” என்று சுட்டிக்காட்டியிருந்தேன்.
அதன்படி, பேராசிரியர் அவர்களுக்காக கழக நாடாளுமன்ற உறுப்பினரும், வழக்கறிஞருமான தம்பி இரா. தாமரைச்செல்வன் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், “ஜெயலலிதா, சசிகலா வீடுகளில் லஞ்ச ஒழிப்புப் போலீசார் கடந்த 1997ஆம் ஆண்டு சோதனை நடத்தியபோது, தங்கம், வைரம், வெள்ளி ஆபரணங்கள், பட்டுச் சேலைகள், விலை உயர்ந்த கடிகாரங்கள் என்று 1066 அசையும் சொத்துக்களைப் பறிமுதல் செய்தனர். அந்தச் சொத்துக்கள், சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கி மற்றும் அரசுக் கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ளன. வழக்கு விசாரணை முடியும் நிலையில், சென்னையில் உள்ள அசையும் பொருள்கள் எதையும் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்துக்குக் கொண்டு வரவில்லை. என்னென்ன பொருள்கள் உள்ளன என்ற விவரங்கள் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இவற்றின் அடிப்படையில் தீர்ப்புக் கூறுவது சரியாக இருக்காது.
ஆகவே, சென்னை யில் உள்ள அசையும் சொத்துக்களை பெங்களூரு கொண்டு வரவேண்டும்” என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கு 6-12-2013 அன்று நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்ஹா முன்விசாரணைக்கு வந்த போது, வழக்கறிஞர் தாமரைச்செல்வன், “குற்றவியல் நடைமுறைச் சட்டங்களின்படி நகைகளை பெங்களூரு நீதிமன்றத்திற்குக் கொண்டு வருவதே சரியாக இருக்கும்”” என்றார். ஜெயலலிதாவின் வழக்கறிஞர் திரு. பி.குமார், “வழக்கில் தொடர்புடைய அசையும் சொத்துக் களை சென்னையிலிருந்து கொண்டு வரத் தேவையில்லை”” என்று வாதாடினார். பொதுச் செயலாளர் பேராசிரியர் சார்பில் வாதாடிய கழக வழக்கறிஞர் பி. குமரேசன் கூறும்போது, “நாங்கள் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இந்த மனுவைத் தாக்கல் செய்யவில்லை. அரசு வழக்கறிஞர் தமது கடமையை முறையாகச் செய்யாத காரணத்தால், வழக்குகள் நடைபெறும் இந்த நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டிற்குள், வழக்கு விசாரணை தொடர்பான நகைகள் அனைத்தும் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இந்த மனுவினைக் கொடுத்திருக்கிறோம். மேலும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் 452இன் கீழ் இந்த நீதிமன்றம், இந்த வழக்குத் தொடர்பான பொருள்களைத் தன் வசம் பெற்றுக் கொண்ட பின்னர்தான், இந்த வழக்கில் தீர்ப்புச் சொல்ல வேண்டும்”” என்று தெரிவித்திருக்கிறார்.
அதற்கிணங்க 12ஆம் தேதியன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, கழகத்தின் சார்பில் வழக்கறிஞர்கள் பி. குமரேசன், தாமரைச்செல்வன், சரவணன் ஆகியோர் ஆஜராகியிருக்கிறார்கள். அப்போது நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்ஹா அளித்த தீர்ப்பில், “இந்தச் சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட தங்கம், வெள்ளி, வைர நகைகள் உள்ளிட்ட 1066 அசையும் சொத்துக்களை பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்துக்குக் கொண்டு வர வேண்டுமென இந்த நீதிமன்றத்தைக் கோரிட மனுதாரருக்கு அதிகாரமில்லை என்று ஜெயலலிதா தரப்பு கூறுவதை நீதிமன்றம் ஏற்க முடியாது. ஏனென்றால் ஏற்கனவே இவ்வழக்கில் உச்சநீதிமன்றமும், கர்நாடக உயர் நீதிமன்றமும் மனுதாரருக்கு உள்ள உரிமையை அங்கீகரித்துள்ளன. இந்த மனுதாரருக்கு இந்த வழக்கில் அக்கறை இருக்கிறது
என்பது நிரூபணமாகிறது. இந்த வழக்கை நடத்தும் அரசு வழக்கறிஞரைத் தவிர்த்து விட்டு, நாங்களே இந்த வழக்கை நடத்த வேண்டுமென மனுதாரர் கோரவில்லை.
மாறாக, அரசு வழக்கறிஞர் சுட்டிக்காட்ட வேண்டிய செயலை, சுட்டிக்காட்டத் தவறியதால், அதனை இந்த மனுதாரர், இந்த மனு மூலமாக இந்த நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டு வருகிறார் என்றுதான் கொள்ள வேண்டுமே தவிர, இதனை வேறு நோக்கத்தில் பார்ப்பது நல்லதல்ல; அவ்வாறு பார்க்கவும் கூடாது.
மேலும் இதே சிறப்பு நீதிமன்றம், அரசு வழக்கறிஞருடன், இந்த வழக்கை நடத்துவதற்கு உதவி செய்யலாம் என்று ஏற்கனவே இந்த மனுதாரருக்கு அனுமதி வழங்கியுள்ளது. அந்த அடிப்படையில் மனுதாரர், இந்த மனுவினை அரசு வழக்கறிஞர் சார்பாகத்தான் தாக்கல் செய்துள்ளார் என்று ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று நீதிமன்றம் கருத்தில் கொள்வதால், மனுதாரரின் (பேராசிரியரின்) மனு ஏற்றுக் கொள்ளப்படுகிறது” என்று நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
மேலும் “இந்த வழக்குப் பொருள்கள், எந்த நீதிமன்றத்தில் வழக்கு நடக்கிறதோ, அங்கேதான் இருக்க வேண்டும். முதலில் சென்னை நீதிமன்றம், வழக்குப் பொருள்களைப் பெற்றுக் கொண்டு, அவற்றைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு வழக்கினை நடத்திக் கொண்டிருந்த போதுதான், வழக்கு இந்த நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. வழக்கை இந்த நீதிமன்றத்துக்கு மாற்றிய சென்னை நீதிமன்றம், இந்தப் பொருள்களை மாற்றியதற்கான எந்தவிதமான ஆதாரமும் தற்போது இல்லை. இந்த வழக்குக்கான சொத்துக்களை தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு வழக்கை நடத்துவதுதான் சட்டப்படியான முறையாகும். ஆகவே இந்த வழக்குக்கான சொத்துக்களை சென்னை உயர் நீதிமன்றத்திலிருந்து இந்த நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும். இந்தப் பொருள்களைப் பற்றி தொலைக்காட்சிகளிலோ, நாளிதழ்களிலோ செய்திகள் வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும்”” என்று தனி நீதிபதி விளக்கமாகத் தெரிவித்து விட்டார்.
இந்தப் பிரச்சினையில் அரசு வழக்கறிஞர் பவானிசிங்கும் நீதிபதிக்குக் கொடுத்த மனுவில், “தி.மு. கழக வழக்கறிஞர்களின் கோரிக்கை நியாயமானது”” என்று தெரிவித்திருக்கிறார். இந்த வழக்கறிஞர் பவானிசிங்தான் இதுவரை ஜெயலலிதா தரப்பினருக்கு ஆதரவாக இருந்தார். எனவே இவரை மாற்ற வேண்டுமென்று தி.மு.கழகம் கோரியபோது, இந்த வழக்கறிஞர்தான் அரசு வழக்கறிஞராக, அதாவது ஜெயலலிதா தரப்பினருக்கு விரோதமாக ஆஜராக வேண்டு மென்று உச்சநீதிமன்றம் வரை, குற்றம் சாட்டப் பட்டோர் வழக்காடினர் என்பதும் குறிப்பிடத் தக்கது.
அரசு வழக்கறிஞராக திரு. பவானி சிங் அவர்களே இந்த வழக்கில் தொடர வேண்டு மென்று ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தில் வைத்த விநோதமான கோரிக்கையோடு மற்றொரு விசித்திரமான கோரிக்கையையும் வைத்திருந்தார்.
அதுதான் இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி திரு. பாலகிருஷ்ணா அவர்கள் ஓய்வு பெற்ற பிறகும், தொடர்ந்து இந்த வழக்கினை விசாரிக்க வேண்டுமென்ற கோரிக்கையாகும். ஆனால் நீதிபதி பாலகிருஷ்ணா அவர்களே, தொடர்ந்து நீதிபதியாக நீடிக்க விரும்பாத காரணத்தால், தற்போது இந்த வழக்கினை நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்ஹா விசாரித்து இந்தத் தீர்ப்பினை வழங்கியிருக்கிறார்.
ஒரு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள், ஒரு குறிப்பிட்ட வழக்கறிஞர்தான் தங்களுக்கு எதிராக வாதாடும் அரசு வழக்கறிஞராக இருக்க வேண்டும்; ஒரு குறிப்பிட்ட நீதிபதிதான் ஓய்வு பெற்ற பிறகும் அந்த வழக்கினை விசாரித்துத் தீர்ப்பு வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை வைத்ததைப் பார்த்து அனைவரும் ஆச்சரியப்பட்டனர்.
நீதிபதி பாலகிருஷ்ணா அவர்களே இந்த வழக்கினைத் தொடர்ந்து நடத்த வேண்டுமென்று ஜெயலலிதா தரப்பினர் உச்சநீதிமன்றம் வரை சென்ற நேரத்தில் எனக்கொன்று நினைவுக்கு வந்தது.
“கோடநாடு எஸ்டேட்” பற்றி உச்சநீதி மன்றத்தில் 4-4-2008 அன்று சொல்லப்பட்ட ஒரு தீர்ப்பு அப்போதே “இந்து” நாளிதழில் வெளி வந்தது. நீலகிரி மாவட்டத்தில் பொதுமக்கள் நீண்ட காலமாகப் பயன்படுத்தி வந்த சாலையில் தடுப்பு (கேட்) ஒன்றை அமைத்து, அந்த வழியாக யாரும் செல்ல முடியாத அளவிற்கு கோடநாடு எஸ்டேட் மானேஜர் தடுப்பதாகக் கூறியும், அந்தத் தடுப்பினை நீக்கிட வேண்டுமென்று கூறியும், பொதுமக்கள், கோட்ட வருவாய் அலுவலரிடம் (சப்- டிவிஷனல் மேஜிஸ்திரேட்) முறையிட்டு; அவர் அப்போது பிறப்பித்த ஆணையில், சாலையில் உள்ள அந்தத் தடுப்பினை அகற்றவும், அதையும் 24 மணி நேரத்திற்குள் நிறைவேற்றிட வேண்டுமென்றும், தவறினால் இந்திய தண்டனைச் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப் படும் என்றும் உத்தரவிட்டார்.
அந்த உத்தரவை எதிர்த்து கோடநாடு எஸ்டேட் நிர்வாகத்தின் சார்பில், அதன் மேலாளர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடுத்தார். அந்த வழக்கு விசாரணைக்காக முதலில் ஒரு நீதிபதியிடம் போடப்பட்டு, அவர் அந்தக் குறிப்பிட்ட வழக்கினை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டு, பின்னர் அந்த வழக்கு வேறொரு நீதிபதிக்கு மாற்றம் செய்யப்பட்டது.
இவ்வாறு வழக்கு மாற்றப்பட்டதை எதிர்த்து, ஜெயலலிதா, சசிகலா தரப்பினர் அப்போதே உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியிடம் முறையிட்ட போது, “நீதிபதியை நிர்ணயம் செய்வது என்பது தலைமை நீதிபதியின் தனிப்பட்ட அதிகாரத்திற்கு உட்பட்டதாகும்” என்று உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி ஆணையிட்டார்.
அத்துடன் விட்டார்களா என்ன?
அந்த ஆணையை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்திற்கு கோடநாடு எஸ்டேட் மேலாளர் மேல் முறையீடு செய்தார். அந்த வழக்கு தான் 4-4-2008 அன்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியின் முன்பு வந்தது. அப்போது உச்சநீதி மன்றத் தலைமை நீதிபதி, கோடநாடு எஸ்டேட் மேலாளருடைய கோரிக்கை நியாயம் அற்றது என்றும், இதுபோன்ற வழக்குகளை ஏற்றுக் கொள்ள முடியாதென்றும் கூறினார். (When Counsel said that it was a bonafide petition, the Chief Justice of India said, “It is bereft of bonafide, we will not entertain such matters”)
உச்சநீதிமன்ற நீதிபதி, கோடநாடு எஸ்டேட் வழக்கறிஞரைப் பார்த்து, “உங்களுக்கு என்ன வேண்டும்? உங்களுக்கு எந்த நீதிபதி வேண்டுமென்று வேட்டை ஆடுகிறீர்களா? உங்களுக்குத் தெரியாத பல விஷயங்கள் சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதிக்குத் தெரியும். ஒரு குறிப்பிட்ட நீதிபதிதான் உங்களுடைய வழக்கை விசாரிக்க வேண்டுமென்று கோருவதற்கு உங்களுக்கு எந்தவிதமான உரிமையும் கிடையாது” என்றும் சொல்லியிருக்கிறார்.
(The Chief Justice of India asked : “What do you want? You are Bench hunting. The Chief Justice of the High Court knows many things which you may not know. You have absolutely no right to say that your matter should be heard by a particular Judge”)
என்றென்றும் நினைவில் நிலைத்திருக்கக் கூடிய சட்ட நீதி தோய்ந்த இந்த வார்த்தைகளையெல்லாம் தமிழ்நாட்டு மக்கள் மறந்திருக்கக் கூடுமென்றுதான் சிலர் எண்ணுகிறார்கள். ஆனால் பெங்களூரு சொத்துக் குவிப்பு வழக்கில் குறிப்பிட்ட நீதிபதிதான் அந்த வழக்கினைத் தொடர்ந்து விசாரிக்க வேண்டுமென்று வைக்கப்பட்ட கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டு, புதிய நீதிபதி ஒருவர் அங்கே விசாரணையை மேற்கொண்டு, நேற்றையதினம் ஒரு முடிவினை வழங்கியிருக்கிறார்.
இதுவே இந்த வழக்கில் முழுமையான தீர்ப்பல்ல. நீதிபதி பாலகிருஷ்ணாதான் இந்த வழக்கினைத் தொடர்ந்து விசாரிக்க வேண்டுமென்று உச்சநீதிமன்றத்தில் ஜெயலலிதா தரப்பினர் கோரிக்கை வைத்து, அது நிறைவேறாமல் போனபோதே சட்டம் தன் கடமையைச் சிறப்பாகச் செய்கிறது என்றுதான் கருதப்பட்டது. அதே வரிசையில் முழுமையான நிறைவான தீர்ப்பு உரிய நேரத்தில் வரும் என்றே தமிழ்நாடு எதிர்பார்க்கிறது.
அன்புள்ள,
மு.க.