“என்னப்பா லேட்டு… எவ்வளவு நேரம் வெயிட் பண்றது“ என்று அலுத்துக் கொண்டார் கணேசன்.
“அண்ணே உங்களுக்காக செய்தியெல்லாம் சேகரிச்சிக்கிட்டு வரணுமில்ல. அதான் லேட்டாயிடுச்சு“ என்றான் டாஸ்மாக் தமிழ்.
“சரி.. இந்த வாரம் என்னடா விசேஷம். சொல்லு“ என்றான் பீமராஜன்.
தேர்தல் ஜுரம் எல்லா கட்சிகளையும் பிடிச்சு ஆட்டுது. தமிழகத்தைப் பொறுத்தவரை, கூட்டணி பேரங்கள் உச்சத்துல இருக்குது. அரசியல் தலைவர்கள் ஒரு பக்கம் கூட்டணிக்காக பேரம் நடத்திக்கிட்டு இருக்காங்கன்னா, இன்னொரு பக்கம் சாமியார்கள் கூட்டணி பேரத்தில் தீவிரமா இறங்கியிருக்காங்க..”
”சாமியார்களுக்கு என்ன வேலை ? ”
”சாமியார்கள்தான் அரசியல் ப்ரோக்கர்களா செயல்பட்டுக்கிட்டு இருக்காங்க. சமீபத்துல கொலை வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்ட ஜெயேந்திரர், ஒரு பக்கம் திமுக பிஜேபி கூட்டணிக்கு தீவிரமா முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கார். இன்னொரு பக்கம், ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், பிஜேபி பக்கம் கட்சிகளை இழுத்துக்கிட்டு வர்ற வேலைகளை செய்துக்கிட்டு இருக்கார்”
”ஜெயேந்திரருக்கு என்ன இதுல இவ்வளவு அக்கறை ? ”
”கொலை வழக்குல இருந்து அவரை தப்பிக்க வைச்சதுக்கு கருணாநிதி பண்ண உதவிக்கு கைமாறு பண்ண வேண்டாமா ? அதைத்தான் செய்துக்கிட்டு இருக்கார். வழக்கமா இது போன்ற வழக்குகளில் தீர்ப்பு வந்தால், நீதி செத்து விட்டது… அரசு மேல் முறையீடு செய்ய வேண்டும்.. பார்ப்பன ஆதிக்கம் வெற்றி பெற்று விட்டது ன்னு அறிக்கை விடும் கருணாநிதி, இந்த விஷயத்துல வாயே திறக்கலை கவனிச்சியா ? ”
”ஆமாம்… அவர் சீடர் குஞ்சாமணிதான் கிடந்து குதிச்சிக்கிட்டு இருக்கார். ஆனா, கருணாநிதி இதைப் பத்தி வாயே திறக்கலையே…”
”பார்ப்பன எதிர்ப்பையே அடிப்படையா கொண்டு, கட்சி தொடங்கி நடத்திக்கிட்டு இருக்கிற கருணாநிதி இந்தத் தீர்ப்பை பத்தி வாயைத் திறக்காம இருக்கிறது அவர் எப்படிப்பட்ட சமரசவாதின்றதை காட்டுது.”
“சரி. திடீர்னு காங்கிரஸ் பிஜேபி ரெண்டு கட்சி கூடவும் கூட்டணி கிடையாதுன்னு அறிவிச்சிட்டாரே தலைவர்… என்ன ஆச்சு அவருக்கு ? ” என்றான் ரத்னவேல்.
“ரொம்ப கோவமாத்தான் பேசியிருக்காரு… நேத்து பொதுக்குழு முடிஞ்ச நடந்த கூட்டத்துல பேசும்போது, பிஜேபியோடவும் கூட்டணி கிடையாது… காங்கிரஸோடவும் கூட்டணி கிடையாது.. ன்னு பேசுனதோட, காங்கிரஸை கடுமையா விமர்சனம் செய்திருக்கார்.
“கன்னியாகுமரியில் காமராஜருக்கு மணிமண்டபம் வைக்க வேண்டும் என்று வாஜ்பாயிடம் கேட்டோம். அப்போது வாஜ்பாய் அருகில் இருந்த அதிகாரிகள், கடற்கரை அருகில் வைப்பதால் இயற்கை சூழல் பாதிக்கப்படும். அதனால் அங்கு வைக்க வேண்டாம் என்று கூறினர்.
ஆனால் காமராஜருக்கு அந்த இடத்தில் வைப்பதுதான் சிறப்பாக இருக்கும் என்று வலியுறுத்தினோம். அதை வாஜ்பாய் ஏற்றுக்கொண்டார். அப்போது இருந்தது மனிதாபிமான பாஜக தலைமை. தற்போது அப்படிப்பட்ட பாஜக இல்லை.
ஒரு கட்சியுடன் கூட்டணி அமைப்பதற்கு முன்பு யார் தலைவர் என்பதையும் கவனித்துப் பார்க்க வேண்டும். எங்களைப் பொருத்தவரை வாஜ்பாயோடு பாஜகவின் வரலாறு முடிந்துவிட்டது. பாஜகவுடன் கூட்டணி இல்லை.
நன்றிகெட்ட காங்கிரஸ்: இப்படிக் கூறுவதால் காங்கிரஸýடன் கூட்டணி என்று நினைத்துவிடாதீர்கள். ஜீரோ ஜீரோ என்று ஏகப்பட்ட ஜீரோக்களைப் போட்டு அலைக்கற்றை ஊழலில் திமுக ஈடுபட்டதாக காங்கிரஸ் நம்மைச் சிக்க வைத்தது. ராசா, கனிமொழி ஆகியோரை சிறையிலடைத்தனர். அந்தக் காயம் நீங்கா வடுவாக நம் மனதில் உள்ளது. இது தனிப்பட்ட ராசாவுக்கு ஏற்பட்ட காயம் இல்லை. திமுகவுக்கே ஏற்பட்ட காயமாகும்.
சிபிஐ யார் கையில் இருக்கிறது. அதை எப்படிப் பயன்படுத்தினார்கள் என்பதையெல்லாம் அறிவோம். எனவே, நன்றிகெட்ட காங்கிரúஸாடு மீண்டும் கூட்டணி அமைக்கமாட்டோம். தனித்தே கூட போட்டியிடுவோம். ஆனால் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட்டால் தனித்து நின்றாலும் வெற்றிபெற முடியும்.” ன்னு பேசியிருக்காரு.
காங்கிரஸை நன்றி கெட்ட கட்சின்னு விமர்சனம் செய்துள்ளது, திமுக காங்கிரஸை கழட்டி விட முடிவு எடுத்திருச்சுன்றதை காட்டுது.”
“சரி… ஸ்டாலினும் ரொம்ப நாளாவே இதைத்தானே சொல்லிக்கிட்டு இருக்கார் ? ” என்றான் ரத்னவேல்.
“ஆமா, பொதுக்குழுவுக்கு வந்த எல்லார்கிட்டயும் ஸ்டாலின் காங்கிரசுக்கு எதிராத்தான் பேசணும்னு சொல்லிட்டார். பேசாதவங்க தொலைஞ்சாங்கன்னு தெரியும். அதான் ஸ்டாலின் சொன்னபடியே எல்லோரும் காங்கிரசுக்கு எதிரா பேசுனாங்க. அதைத்தான் ஸ்டாலினும் வழிமொழிஞ்சார்”
“சரி.. ஸ்டாலின் பிஜேபி பத்தி என்ன பேசுனார் ? “
“பிஜேபியை நாம் குறைத்து மதிப்பிட முடியாது… நான்கு மாநில தேர்தல் முடிவுகளை கவனத்தில் கொள்ளனும் னு சொன்னார்”
“சரி… அப்புறம் ஏன் தலைவர் பிஜேபி கூடவும் கூட்டணி கிடையாதுன்னு சொல்லிட்டார் ? “
“ரெண்டு மாசம் முன்னாடி மோடி பிரதமர் வேட்பாளரா அறிவிக்கப்பட்டது குறித்து கேள்வி கேட்டப்போ, இதை அத்வானியிடம் கேளுங்கள்னு சொன்னார். திடீர்னு மோடி வெறும் விளம்பரத்தால் பெரிய ஆளாகியிருக்கார். னு கரிச்சு கொட்றதுக்கு காரணம் இல்லாமல் இல்லை. கடந்த இரண்டு மாதங்களாகவே, எப்படியாவது பிஜேபி பக்கம் போயிடனும்னு கடும் முயற்சி எடுத்திருக்கார்.
ஆனா.. பிஜேபி இவரை சட்டை கூட செய்யல. இந்தத் தேர்தலில் ஊழலை அடிப்படையாக வைத்து பிரச்சாரத்தை மேற்கொள்ளனும்னு திட்டமிட்டிருக்கிற பிஜேபி, 2ஜி ஊழலின் முகவரியா இருக்கும் திமுகவோடு கூட்டணி வச்சுக்கிட்டு எந்த முகத்தை வைச்சுக்கிட்டு ஊழலைப் பத்தி பேச முடியும்னு முடிவெடுத்து திமுகவை கிட்ட சேக்கறதில்லைன்ற முடிவு எடுத்துட்டாங்க. இந்த அடிப்படையிலதான், வெறுப்புல பேசியிருக்கார் தலைவர்.
போன வாரம் கூட, பிஜேபி கூட கூட்டணியா ன்னு கேட்டப்போ, அதையெல்லாம் வெளிப்படையாக சொல்ல இயலாதுன்னு சொன்னார். இப்போ ச்சீ ச்சீ.. இந்தப் பழம் புளிக்கும் ன்ற மாதிரிதான் சொல்லியிருக்கார். “
“வெறுப்பில் பேசியிருக்காரா… ? “
“அது மட்டுமில்ல. தற்போது பிஜேபி கூட ஐக்கியமானா, இஸ்லாமியர்களோட வாக்குகளை தமிழகத்தைப் பொறுத்த வரை இழக்க நேரிடும். தற்போது கூட்டணியில் இருக்கும் மனிதநேய மக்கள் கட்சி விலகிப் போயிடும். அதனால, தேர்தல் முடியிற வரைக்கும் மதச்சார்பின்மை வேஷம் போட்டுக்கிட்டு, தேர்தல் முடிவுகளைப் பொறுத்து, காவி வேடமா, காங்கிரஸ் வேடமா ன்னு முடிவு பண்ணலாம்னு நெனைச்சு எடுத்த முடிவும் கூட…. “
“வைகோ பத்திரமா கூட்டணியில ஐக்கியமாயிட்டார் போலருக்கே.. ” என்றான் ரத்னவேல்.
“வைகோவுக்கு இந்த தேர்தலில் கோட்டை விட்டா, கம்பெனி காலியியாயிடும்னு நல்லா தெரிஞ்சு போச்சு. என்னதான் ஈழம், ஈழம்னு பேசிக்கிட்டு இருந்தாலும், கம்பெனியை நடத்தறதுக்கு ஒரு எம்.பி சீட்டாவது இருந்தாத்தான் வண்டி ஓடும்னு புரிஞ்சுக்கிட்டார். மேலும், பிஜேபி கூட சேந்தா தேர்தல் செலவுக்கு பிரச்சினை இருக்காதுன்றதும் வைகோவுக்கு தெரியும். அதனாலதான் பெரியார், நாத்திகம் னு பேசறதை மூட்டை கட்டி வச்சுட்டு, ராஜபக்ஷேவை இந்தியாவுக்கு அழைத்து ரத்தினக் கம்பளம் விரிச்ச அதே பிஜேபி கட்சியோடு கூட்டணி சேர்கிறார்.
ராஜபக்ஷே இந்தியா வந்தப்போ, வைகோ, சாஞ்சிக்குப் போயி பெரிய அளவில் போராட்டம் நடத்தினார். அப்போ, பேசிய வைகோ, “ராஜபக்ஷேவை யார் அழைத்தது.. ? மத்திய அரசுதான் அழைத்தது. மத்திய பிரதேச மாநிலத்தின் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் எனக்கு கடிதம் எழுதியிருக்கிறார். நாங்கள்தான் அழைத்தோம், பாரதீய ஜனதா அரசுதான் அழைத்தது என்று. எனவே மத்திய அரசு மீது பழி போட்டு தப்பிக்காதீர்கள்.
சுஷ்மா சுவராஜ் அவனைத் தனிமையில் சந்தித்தார். எதற்காக சந்தித்தார் ? ஒரு பெண் என்பதால் இத்தோடு விடுகிறேன்” ன்னு பேசியிருக்கார். இப்போ அதே பிஜேபியோடு கூட்டணி அமைக்க இருக்கிறார். எது நடந்தாலும் தன்னோட ஈழ வியாபாரத்துக்கு எந்த பாதிப்பும் வந்துடக் கூடாதுன்றதுல வைகோ கவனமா இருக்கார். “
“பாட்டாளி மக்கள் கட்சியும் பிஜேபி பக்கம் போயிடும் போல இருக்கே… “
“பாமக பிஜேபி கூட சேர்றது உறுதியாயிடுச்சு. பாட்டாளி மக்கள் கட்சி, மதிமுக, பிஜேபி மற்றும் பச்சமுத்துவோட இந்திய ஜனநாயக கட்சி ஒரு அணியாவும், ஒரு பக்கம் போட்டியிடும். இந்த அணிகளை உருவாக்குவதில், தமிழருவி மணியன் முன்னணியில் இருந்து பேச்சுவார்தைகள் நடத்திக்கிட்டு வர்றார். கூட்டணி தொடர்பாக பேசினாலும், கோடிகள் பரிமாற்றத்தைப் பொறுத்தவரை, தன்னால முடியாதுன்னு சொல்லிட்டாரு.
அதிமுக இடது சாரிகளோட ஒரு அணியா போட்டியிடும். திமுக, புதிய தமிழகம், மனிதநேய மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள் ஒரு அணியா போட்டியிடும் சூழல் ஏற்பட்டிருக்கு”
“கேப்டன் என்ன பண்ணப் போறார்.. ? “
“கேப்டன் காங்கிரஸ் மற்றும் பிஜேபி இரண்டு அணி கூடவும் பேசிக்கிட்டு இருக்கார். 300 கோடியா 500 கோடியா ன்றதுலதான் பிரச்சினை. கருணாநிதி கவனமாத்தான் காய் நகர்த்தியிருக்கார். இப்போதைக்கு அணிகள் உருவாயிட்டதால, விஜயகாந்துக்கு காங்கிரஸ் பக்கம் போறதுக்கான வாய்ப்புகள் குறைவு. காங்கிரஸ் கட்சி கடுமையான தோல்விகளை சந்திச்சிக்கிட்டு இருக்கறதால, காங்கிரஸ் கூட போட்டியிடறது தற்கொலைக்கு சமம்னு கேப்டனுக்கு தெரியும். பிஜேபி அணிக்கு போகலாம்னா, தேமுதிகவுக்கும், மதிமுகவுக்கும் இடங்கள் ஒதுக்கறதுல சிக்கல் ஏற்படும். இந்த சூழல்ல, கேப்டன் வேற வழியில்லாம, திமுக அணி பக்கம் வருவாருன்னு கருணாநிதி நம்பறார். “
“பண்ருட்டி ராமச்சந்திரன் தேமுதிக விலிருந்து விலகியது, கேப்டனுக்கு பலத்த பின்னடைவு. இத்தனை நாள், கட்சிகளோட கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடத்தறது, தேர்தல் யுக்திகளை வகுப்பது போன்ற வேலைகளை பண்ருட்டியார் செய்துக்கிட்டு இருந்தார். ஆனா, தனக்குத் தகவல் தெரிவிக்காமலேயே டெல்லியில தேமுதிக போட்டியிட முடிவெடுத்தது அவருக்கு கடுமையான மன வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கு.
ஆனா, கேப்டன் இதைப் பத்தியெல்லாம் கவலைப்படறதாயில்ல. மச்சான் சொன்னதே வேதவாக்குன்னு இருக்கார்.”
“மைத்துனர் கேப்டனை தெருவில நிக்க வைக்காம ஓய மாட்டாருன்னு நினைக்கிறேன்..” என்று சிரித்தான் வடிவேல்.
“சரி.. கூட்டணி நிலைமைகள் எப்போ முழுமையா தெளிவாகும் ? ” என்றான் ரத்னவேல்.
“இப்போ ஓரளவுக்கு தெளிவான மாதிரி தெரிஞ்சாலும், இன்னும் முழுமையா தெளிவடையலை. தலைவர் கருணாநிதி சொல்றதை அப்படியே எடுத்துக்க முடியாது. நாளைக்கே மதவாத சக்திகளின் வளர்ச்சியை தடுக்க வேண்டும் என்பதை மனதில் வைத்து, நாட்டு மக்களுக்கு உணவளித்த மணிமகலையோடு கூட்டு சேர்கிறேன்னு சொல்லுவாரு….
இல்லன்னா, ஈழத் தமிழருக்கு துரோகம் இழைத்த காங்கிரஸ் கட்சிக்கு பாடம் புகட்டுவதற்காக, பிஜேபியோடு கை கோர்க்க வேண்டும் என்று அரசியல் தலைமைச் செயற்குழு முடிவெடுத்திருக்குன்னு சொல்லுவாரு.. திமுக தலைவர் எடுக்கும் முடிவைப் பொறுத்துதான் தமிழகத்தில் கூட்டணி முடிவாகும்”
“சரி… காங்கிரஸ் என்னடா பண்ணப்போறாங்க… ? யாருமே அவங்களை விளையாட்டுக்கு சேத்துக்க மாட்றாங்களாமே.. ” என்றான் பீமராஜன்.
“ஆமாம் மச்சான்.. காங்கிரஸை செத்த கோழி மாதிரி எல்லாரும் ட்ரீட் பண்றாங்க. தற்போது வாசன் கோஷ்டியோட கை ஓங்கியிருக்கு. சமீபத்தில் நியமிக்கப்பட்ட நிர்வாகிகளில் வாசன் கோஷ்டியைச் சேர்ந்தவங்களுக்கு அதிக வாய்ப்பு கொடுக்கப்பட்டது, வாசன் கட்சியை பிரிச்சிக்கிட்டு போறதை தடுக்கிறதுக்காகத்தான். இப்போ அவர் பலம் கூடியிருக்கறதைப் பார்த்து, ப.சிதம்பரத்துக்கு ஆத்திரமா இருக்கு. காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் கூட்டணி அமைஞ்சாலும், அமையாவிட்டாலும் அவர் மட்டும் ஜெயிச்சுடணும்ன்றதுல தீவிரமா இருக்காரு”
“அவர் மட்டும் எப்படி ஜெயிக்க முடியும் ? “
“அது எப்படியோ தெரியலை… ஈழத் தமிழருக்கு தான்தான் உதவியா இருந்ததாகவும், தான் சொல்வதைக் கேட்டு இருந்திருந்தால் பிரபாகரன் உயிரோடு இருந்திருப்பார் என்றும் செய்திகளை, இணையதளங்கள் மூலமாவும், உளவுத்துறை மூலமாகவும் பரப்பும் முயற்சிகளில் ஈடுபட்டிருக்கார்”
“அது உண்மையா என்ன ? “
“இப்போ சொன்னா யார் சரி பார்க்க முடியும் ? ஈழத் தமிழருக்கு மிக மிக ஆதரவான ஒரே காங்கிரஸ் தலைவர் தான்தான் னு நிரூபிக்க ஏகத்துக்கு பிரயத்தனம் பண்ணிக்கிட்டு இருக்கார். சமீபத்துல அவர் நடத்திய ஈழம் தொடர்பான கூட்டமும் இந்த அடிப்படையிலதான் நடந்திருக்கு.
அந்தக் கூட்டத்துக்கு வந்திருந்த பழைய டிஜிபி அலெக்ஸாண்டரிடம் ஒரு பெரிய பொறுப்பை ஒப்படைச்சிருக்கார். தன்னுடைய வெற்றி வாய்ப்பை பற்றி ஒரு ரகசிய சர்வே எடுத்துத் தரணும்னு ஒரு அசைன்மென்ட் கொடுத்திருக்கார்”
“அவ்வளவுதானா ? “
முன்னாள் டிஜிபி அலெக்சாண்டர்
“அது மட்டுமில்லாம, நெடுமாறன் உள்ளிட்ட தலைவர்கள் கிட்ட சிதம்பரத்துக்காக பேசி, ஈழத் தமிழருக்கு ஆதரவான தலைவர் அவர்தான்னு ஆதரவு அலை ஏற்படுத்தும் வேலையிலும் ஈடுபட்டிருக்கார்”
“இதெல்லாம் ஆகிற கதையா ? ஈழப்போர் உச்சத்தில் இருந்தப்போ, மத்திய உள்துறை அமைச்சரா இருந்த ப.சிதம்பரத்தின் கீழ் செயல்பட்ட மத்திய உளவுத்துறைதான், தமிழகத்தில் நடந்த போராட்டங்களை முடக்கும் வேலையில் ஈடுபட்டுச்சு. அப்பாவி இலங்கைத் தமிழர்களை விடுதலைப் புலிகள்னு குற்றம் சுமத்தி சிறப்பு முகாம்களிலும், தமிழக சிறைகளிலும் அடைத்தது மத்திய உளவுத்துறைதான். அதையெல்லாம் மறந்துடுவாங்களா என்ன ? சரிப்பா காவல்துறை செய்திகள் என்ன இருக்கு ?” என்றார் கணேசன்.
“அண்ணே… கன்னியாக்குமரியில் போக்குவரத்துக் கழகத்தில் கூடுதல் டிஜிபியா இருக்கும் ஜாங்கிட் மீது லஞ்ச ஒழிப்புத் துறை விரிவான விசாரணை தொடங்கியிருக்காங்க”
“என்னப்பா சொல்ற…. இது மாதிரி பல தகவல்கள் உலாவியிருக்கு. அந்த அதிகாரி பெரிய கில்லாடியாச்சே… அவர் மேல விசாரணை வர்றதுக்கு விட மாட்டாரே…. “
“சொன்னா நம்ப மாட்டீங்கண்ணே… லஞ்ச ஒழிப்புத் துறை விரிவான விசாரணையோட எண் DE 48/2013/PUB/HQ” இந்த வழக்கில் இவரோட சேர்த்து, முன்னாள் காஞ்சிபுரம் மாவட்ட ஆணையர் பிரதீப் யாதவும் குற்றவாளியா சேர்க்கப்பட்டிருக்கார். சமீபத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளரா பதவி உயர்வு பெற்ற, முகம்மது இக்பால் ன்ற அதிகாரிதான் இந்த வழக்கை விசாரிக்கிறார். ஜாங்கிட் மீது நில அபகரிப்பு புகார்கள் மட்டுமில்லாம, இவர் மீது இருக்கும் மற்ற குற்றச்சாட்டுகளும் சேர்ந்து விசாரிக்கப் படுது”
“கடைசியில தப்பிக்கத்தானே போறார்…. “
“கடைசியில தப்பிச்சுடுவாருன்றது வேற விஷயம். ஆனா, இந்த விசாரணை முடிவடையும் வரை, இவர் ரொம்ப விரும்பும் விருதுகள் போன்றவை கிடைக்காது. அது மட்டுமில்லாம, இவரோட மிகப்பெரிய எதிரியான டிஐஜி பொன் மாணிக்கவேல் மீது இவர் உருவாக்கிய லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணையால அந்த அதிகாரி என்னென்ன கஷ்டம் பட்டாரோ, அதையெல்லாம் இப்போ இவர் படுவார்”
“ஏன் என்ன கஷ்டம் பட்டார் பொன் மாணிக்கவேல் ? “
“அந்த விசாரணையால அவர் பதவி உயர்வு பாதிக்கப்பட்டது. அவர் மீது துறை நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதை எதிர்த்து அவர் மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்துல வழக்கு தொடுத்தார். சில மாதங்களுக்கு முன்னால, அவர் உளவுத்துறைக்கு நியமிக்கப்பட்டப்போ, அதிகாரம் மிக்க பதவியில் இருந்ததால, அவர் மீதான விசாரணையை ரத்து பண்ண முயற்சி பண்ணார். அப்போ உள்துறை செயலாளர் அவரிடம், நீங்கள் தொடுத்திருக்கும் வழக்கு காரணமாக விசாரணையை ரத்து செய்ய முடியவில்லை. அதனால் அந்த வழக்கை வாபஸ் வாங்குங்கள்… வாங்கியதும் விசாரணையை ரத்து செய்கிறோம் னு சொன்னாங்க. அவரும் அதை நம்பிக்கிட்டு, வழக்கை வாபஸ் வாங்கிட்டாரு. அதுக்கப்புறம் அவர் உளவுத்துறையை விட்டு மாற்றப்பட்டதும், விசாரணையை ரத்து பண்ணாமல் விட்டுட்டாங்க.
இப்போ மறுபடியும் மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடுத்திருக்கிறார்”
“பாவமாத்தான் இருக்கு. நம்ப வச்சு கழுத்தறுத்துட்டாங்களே… “
“அரசு இயந்திரம்னா அப்படித்தான். நாளைக்கு இதே நிலைமை ஜாங்கிட்டுக்கும் வருவதற்கான வாய்ப்பு நெறய்ய இருக்கு”
“நீதிபதி சி.டி.செல்வத்தை, திமுக பிரமுகர் கே.சி.பழனிச்சாமியோட மகன் சந்திச்சதா சொன்னியே…. அந்த வழக்கு என்னப்பா ஆச்சு” என்றார் கணேசன்.
“அண்ணே… அந்த வழக்கு ஒரு நில பேரம் தொடர்பானது. கே.சி.பழனிச்சாமியோட மகன் கே.சி.பி சிவராமன்தான் அந்த வழக்கில் முக்கிய புள்ளி. இது தொடர்பாகத்தான் நீதிபதியை சந்திச்சாருன்னு சொல்லியிருந்தேன். அந்த வழக்கில் மொத்தம் மூன்று குற்றவாளிகள். கேசிபி.சிவராமன் இரண்டாவது குற்றவாளி. கேசிபி.சிவராமனைத் தவிர்த்து மீதம் உள்ள இரண்டு குற்றவாளிகளும் முன்ஜாமீன் கேட்டு மனு போட்றாங்க. அந்த மனு நீதிபதி சி.டி.செல்வத்துக்கிட்ட விசாரணைக்கு வந்துச்சு. அவருக்கு முன்னாடி, நீதிபதிகள் அக்பர் அலி, நீதிபதி மாலா மற்றும் நீதிபதி தேவதாஸ் ஆகியோர் கிட்ட விசாரணைக்கு வந்துச்சு.
நீதிபதி சி.டி.செல்வம், இரண்டு நாட்கள் மட்டும்தான் ஜாமீன் வழங்கும் நீதிமன்றத்துல உக்காந்தாரு. மொத நாளே இந்த வழக்கை விசாரிச்சுட்டு, உடனடியா சம்பந்தப்பட்ட ரெண்டு பேருக்கும் எந்த நிபந்தனையும் இல்லாம முன்ஜாமீன் வழங்கிட்டாரு.
இதுக்கு நடுவுல, வழக்கின் முக்கிய குற்றவாளி கேசிபி.சிவராமன், இந்த வழக்கின் எப்ஐஆரையே ரத்து பண்ணனும்னு ஒரு வழக்கு தாக்கல் செய்யறார். அந்த வழக்கு நீதிபதி சி.டி.செல்வத்துக்கிட்ட விசாரணைக்கு வரக்கூடாது… அவர் பல திமுக பிரமுகர்களுக்கு நெருக்கமானவர். அப்படின்னு ஒரு புகார் தலைமை நீதிபதியிடம் அளிக்கப்படுது. அந்தப் புகாரில், எந்தவிதமான நிபந்தனையும் இல்லாம முன்ஜாமீன் வழங்கப்பட்டது குறித்தும் புகார் தெரிவிக்கப்பட்டுச்சு.
இந்த விபரம் தெரிஞ்சதும், எந்த நிபந்தனையும் இல்லாம முன்ஜாமீன் வழங்கிய உத்தரவில் சிறிய மாற்றம் செய்துட்டார் நீதிபதி. சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் இருவரும், காவல்நிலையத்தில் இரண்டு வாரங்களுக்கு காலை கையெழுத்து போடணும்னு மாத்திட்டார்.
கேசிபி சிவராமன் தாக்கல் செய்த அந்த வழக்கு நீதிபதி சி.டி.செல்வத்துக்கிட்ட விசாரணைக்கு வந்தப்போ, வழக்கில் பாதிக்கப்பட்டவர் தலைமை நீதிபதிக்கிட்ட கொடுத்த புகார் மனுவை அப்படியே படிச்சார். இந்த மாதிரியெல்லாம் என் மேல புகார் அனுப்பறாங்க ன்னு வேதனைப் பட்டார்”
“வேதனைப் பட்டுக்கிட்டு என்ன பண்ணார்… இந்த வழக்கை நான் விசாரிக்க மாட்டேன்னு வேற நீதிபதிக்கு அனுப்பிட்டாரா ? “
“அட நீ வேற… இது மற்ற நீதிபதிகள் செய்யற காரியம். இவரா செய்வாரு… இந்த மாதிரியான மிரட்டல்களுக்கெல்லாம் நான் மசிய மாட்டேன். இந்த வழக்கை நான்தான் விசாரிப்பேன்னு சொல்லிட்டாரு-
“நீதிபதிகள் இப்படியெல்லாமா நடந்துக்குவாங்க.. ? “
“அதான் எல்லாருக்கும் ஆச்சர்யமா இருக்கு. நீதிபதிகள் மேல பொய்ப்புகார் கொடுக்கறதும் வழக்கமா நடக்கறதுதான். ஆனா, மீண்டும் மீண்டும் ஒரு நீதிபதி மேல இந்த மாதிரி புகார்கள் வரும்போது, அந்த வழக்கை அவர் விசாரிக்காமல் வேறு நீதிபதிக்கு மாற்றுவதுதான் மரபு, நியாயம். அதுவும், சம்பந்தப்பட்ட நபர், திமுகவின் முக்கிய பிரமுகரா இருக்கையில் அப்படிப் பண்ணுவதுதான் நியாயம். ஆனா, இவரே இந்த வழக்கை விசாரிப்பேன்னு சொல்றது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கு”
“ம் ம்.. என்ன பண்றது.. நீதிபதிகளுக்கே தெரியணும்.. “
“இவர் இப்படின்னா இன்னொரு நீதிபதி எப்படி இருக்கார் பாரு ? “
“யாருப்பா அது… ? “
“நீதிபதி தனபாலன்தான். இந்தியன் இன்ஸ்டியூட் ஆப் ஓசியன் டெக்னாலஜி ன்னு ஒரு மத்திய அரசு நிறுவனம் இருக்கு. அந்த நிறுவனத்துக்கு கடலில் ஆராய்ச்சி பண்ணுவதுதான் வேலை. அந்த நிறுவனத்துக்கு சொந்தமா நான்கைந்து கப்பல்கள் இருக்கு.
அந்த கப்பல்களில் ஒரு கப்பலின் பராமரிப்பு, ஏபிஎஸ் மரைன் சர்வீசஸ் ன்னு ஒரு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. மீதம் உள்ள கப்பல்கள், மத்திய அரசு நிறுவனமான ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆப் இந்தியாவிடம் இருந்தது. இந்த நிறுவனத்தின் ஒப்பந்தம் முடிவடைந்ததும், ஒப்பந்தத்தை புதுப்பிக்காமல், மத்திய அரசு நிறுவனமான ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆப் இந்தியாவிடமே ஒப்படைக்கலாம்னு ஓஷியன் டெக்னாலஜி இன்ஸ்ட்டியுட் முடிவெடுக்கிறாங்க. அதன்படி அதற்கான ஆணை வெளியிடப்பட்டதும், ஏபிஎஸ் நிறுவனம் இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கறாங்க.
இந்த வழக்கு விசாரணைக்கு வரும்போது, ஓஷியன் இன்ஸ்டியூட் நிறுவனத்தின் சார்பில் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கேட்கப்பட்டிருக்கு. அதுக்கு அவகாசம் கொடுத்துட்டு, ஏபிஎஸ் நிறுவனத்துக்கு எதிரா பிறப்பிக்கப்பட்டிருந்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிச்சிட்டார்.
ஓஷியன் இன்ஸ்டியூட் சார்பில், அந்த கப்பல் அன்டார்டிக்காவுக்கு ஆய்வுக்காக செல்கிறது…. இடைக்காலத் தடை விதித்தால், ஏபிஎஸ் நிறுவன ஊழியர்களே கப்பலில் இருப்பார்கள். கப்பல் எப்போது திரும்பி வரும் என்று தெரியாது. ஆகையால் இடைக்காலத் தடை விதிக்காதீர்கள். ஒப்பந்தம் மற்றொரு மத்திய அரசு நிறுவனத்துக்குத்தான் வழங்கப்பட்டிருக்குன்னு சொன்னாலும் கேட்காமல் இடைக்காலத் தடை விதிச்சுட்டார். பொதுத்துறை நிறுவனத்துக்கு ஆதரவா இருக்காம, தனியார் நிறுவனத்துக்கு ஆதரவா இடைக்காலத் தடை விதிக்கிறாறேன்னு வியப்பா பாக்கறாங்க
நீதிபதி இப்படி இருக்கார்னா… நீதிபதிகளையே மிரட்டும் அதிகாரிகளும் இருக்காங்க. “
“அது யாருடா அது” என்று வியப்பாக கேட்டான் ரத்னவேல்.
“58 வயதைக் கடந்தும் பிறகும், ஐஏஎஸ் அதிகாரிகள் வகிக்கும் பதவியான ஆணையர் பதவியை தன் செல்வாக்கால் தக்கவைத்துக் கொண்டிருப்பவர் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் தனபாலன். இவரது பணி நீட்டிப்பால் பாதிப்படைந்தவர்கள், இவரது பணி நீட்டிப்புக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தாங்க இந்த வழக்கை முதலில் விசாரித்த நீதிபதி நாகமுத்து, வழக்கிலிருந்து விலக விரும்புவதாக விலகி விட்டார். அடுத்ததாக விசாரித்த எம்.எம்.சுந்ரேஷும், வழக்கிலிருந்து விலகி விட்டார்”
“ஏன் ரெண்டு நீதிபதிகளும் விலகிட்டாங்க… ? “
“ரெண்டு பேரும் நல்ல நீதிபதிகள். அந்த வழக்கு தொடர்பா அவங்களுக்கு அழுத்தம் கொடுத்தவுடனே, ரெண்டு பேரும் விலகிட்டாங்க. ஒரு சாதாரண துறை அதிகாரி, நீதிபதிகளையே எப்படி ஆட்டிப் படைக்கிறார் பாத்தியா ? “
“இப்படி இன்னொரு நீதிபதியை ஆட்டிப் படைக்கலாம்னு பாக்கறாங்க. ஆனா நடக்க மாட்டேங்குது.. ” என்றான் தமிழ்
“யாரை ஆட்டிப் படைக்க முயற்சி பண்றாங்க ? “
“பெங்களுரு சொத்துக்குவிப்பு வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிபதி மைக்கேல் குன்னாவைத்தான் இப்படி ஆட்டிப் படைக்க ஜெயலலிதா தரப்பு கடும் முயற்சிகள் எடுக்குது”
“என்ன பண்றாங்க ? “
“நீதிபதி மைக்கேல் குன்னாவோட சட்டக் கல்லூரியில படிச்சவங்க, அவர் உறவினர்கள், அவரோடு பணியாற்றிய நீதிபதிகள், அவர் செல்லும் சர்ச், என்று எல்லா தரப்பிலயும் ஆட்களை வைச்சு அவரை செட்டிங் பண்ண முடியுமான்னு முயற்சிக்கிறாங்க..
ஆனா, அவர் வழக்கை நேர்மையா நடத்த என்னவெல்லாம் பண்ணனுமோ அதையெல்லாம் பண்றார். இது வரைக்கும் பெங்களுரில் இருந்த நீதிபதிகளில் யாருமே பண்ணாத வேலையை பிறப்பிச்சிருக்கார். வழக்கு சொத்துக்களான நகை, பணம், சொகுசு பஸ் உள்ளிட்டவற்றை பெங்களுரு நீதிமன்றத்தில் ஒப்படைக்கணும்னு உத்தரவு போட்டிருக்கார். ஒரு வழக்கில் நீதிபதி வழக்கு சொத்துக்களை பார்வையிடாமல் தீர்ப்பளிக்க முடியாது. ஆனா, இது வரை விசாரித்த நீதிபதிகள் யாரும் அப்படி ஒரு உத்தரவை பிறப்பிக்கலை. ஆனா, திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் தாக்கல் செய்த மனுவை ஏற்றுக் கொண்டு இப்படி ஒரு உத்தரவை பிறப்பித்திருக்கிறார். இந்த மனுவுக்கு அரசுத் தரப்பு வக்கீலா இருக்கிற பவானி சிங்கும் எதிர்ப்பு தெரிவிக்கலை.
நீதிபதி இப்படி ஒரு உத்தரவை பிறப்பித்திருக்கிறது ஜெயலலிதா தரப்பை ரொம்பவும் கலங்க வைச்சிருக்கு. என்ன நடக்குமோ, ஏது நடக்குமோன்னு பயந்து போய் இருக்காங்க. அதனாலதான் எப்படியாவது நீதிபதியை செட்டிங் பண்ணலாம்னு முயற்சி பண்றாங்க”
“அவங்க முயற்சி வெற்றி பெறுமா ? “
“நீதிபதி மைக்கேல் குன்னா ஒரு வித்தியாசமான நீதிபதின்னு கர்நாடகத்துல சொல்றாங்க. வழக்கில் சாட்சிகள் ஆவணங்களைத் தாண்டி எதைப் பத்தியும் கவலைப்பட மாட்டார்னு சொல்றாங்க. ஜெயலலிதா தரப்போட முயற்சி வெற்றி பெறுவது அவ்வளவு எளிதல்ல. அம்மா பாடு கஷ்டம்தான்”
“பண்ணியதுக்கெல்லாம் அனுபவிக்க வேண்டாமா ? ” என்று சொன்னவாறே எழுந்தான் கணேசன். சபையை கலைத்து விட்டு அனைவரும் எழுந்தார்கள்.