இந்த வாசகத்தை தமிழ்நாடு காவல்துறை அடிக்கடி பயன்படுத்திப் பார்த்திருப்பீர்கள். அந்த தமிழ்நாடு காவல்துறை ஒரு நேர்வில் தமிழக மக்களுக்கு எப்படிப்பட்ட நண்பனாக செயல்பட்டது என்பது குறித்தே இந்த கட்டுரை.
பேராசை பிடித்த மனிதர்களை பார்த்திருப்பீர்கள். பேராசையே வாழ்க்கையே வாழ்க்கையாக வாழ்ந்து கொண்டிருப்பவர்களும் நம்மிடையே இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு மனிதர்தான் பால் சந்தோஷ் ராஜ். ஒரு ட்ராவல்ஸ் நிறுவனம் ஒன்றை சிறிய அளவில் நடத்தி வருகிறார். அப்படி நடத்தி வருகையில் மற்றொரு ட்ராவல்ஸ் நடத்துபவர் மூலமாக சார்லஸ் ஜெகந்நாதன் என்பவர் அறிமுகமாகிறார். இந்த சார்லஸ் ஜெகந்நாதன், பால் சந்தோஷ் ராஜிடம், கருப்புப் பணத்தை வைத்துக் கொண்டு அதை எப்படி வெள்ளையாக்குவது என்று தெரியாமல் ஆந்திராவைச் சேர்ந்த ஒரு பெரிய கும்பல் விழித்துக் கொண்டு இருக்கிறது. என்னிடம் யோசனை கேட்டார்கள், நான் பணத்தை இரட்டிப்பாக கொடுத்தால் வெள்ளை பணத்தை தருகிறேன் என்று கூறினேன். அவர்களும் சரி என்று கூறினார்கள். ஒரு 15 லட்ச ரூபாய் ரெடி பண்ணிக் கொடுத்தால், அவர்கள் 30 லட்ச ரூபாய் கருப்புப் பணம் தருவார்கள். இஷ்டமாக இருந்தால் கொடுங்கள்.. இல்லையென்றால் நான் வேறு பார்ட்டியிடம் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்கிறார்.
பால் சந்தோஷ் ராஜ் உடனடியாக சரி என்கிறார். அவரை, ஆந்திரா எல்லையில் உள்ள கிருஷ்ணகிரிகுப்பம் என்ற இடத்துக்கு அழைத்துச் சென்று, ஏடிஎம்மில் எடுத்த பணத்தை, இதுதான் சாம்பிள் கருப்புப் பணம் என்று காட்டுகிறார்கள். உடனே மகிழ்ச்சியடைந்த பால் சந்தோஷ் ராஜ், 15 லட்ச ரூபாயை தயார் செய்வதாக கூறி விடுகிறார்.
பால் சந்தோஷ் ராஜிடம் முழுமையாக பணம் இல்லை. அதனால் அவர் தன்னைப் போலவே மேலும் மூன்று ஆடுகளை கூட்டு சேர்த்துக் கொள்கிறார். இதில் ஒரு ஆட்டின் பெயர் சங்கர். அவர் புழுதிவாக்கத்தில் மளிகைக் கடை வைத்திருக்கிறார். அவருக்கு கொஞ்சம் கடன் தொல்லைகள் உண்டு. இதனால் கடனை அடைத்து விடலாம் என்று வீட்டிலிருந்த நகைகளை அடகு வைத்து அவர் பங்காக 3 லட்ச ரூபாயை எடுத்து வருகிறா. இவரைத் தவிர மணி மற்றும் ஆறுமுகம் ஆகிய மேலும் இருவரும் சேர்ந்து மொத்தமாக 15 லட்ச ரூபாய் தயார் செய்கிறார்கள்.
இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று 02.12.2013 அன்று மீனம்பாக்கத்தில் செல்வம் என்பவரை அறிமுகம் செய்கிறார்கள். செல்வத்தோடு ப்ரதீஷ் குமார் மற்றும் ஒரு வட இந்தியரும் வருகிறார். அவர்கள் அனைவரும் அன்று மாலையே பால் சந்தோஷ் ராஜ் வீட்டுக்கு செல்கிறார்கள். பேச்சுவார்தைகள் முடிந்ததும், மொத்த பணத்தையும் 1000 ரூபாய் நோட்டுக்களாக மாற்றி வைக்குமாறு கூறி விட்டு சென்று விடுகிறார்கள். மறுநாள் ப்ரதீஷ் மற்றும் வட இந்தியர் மட்டும் வருகிறார்கள். வரும் போது பணத்தை எடுத்துச் செல்ல ஒரு பெரிய சூட்கேசும், ஒரு லெதர் பையும் எடுத்து வருகிறார்கள். பணத்தை சரி பார்த்து விட்டு, இந்தப் பணத்தை இங்கேயே வைத்து விடுங்கள். நாங்கள் நாளை முழு பணத்தையும் எடுத்து வந்து பணத்தை வாங்கிக் கொள்கிறோம். ஒரு டம்ளரில் தண்ணீர் எடுத்து வாருங்கள்.. ஒரு ரசாயனம் தடவி கள்ள நோட்டு இருக்கிறதா என்பதை கண்டு பிடிக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். பால் சந்தோஷ் ராஜும் அப்படியே செய்கிறார். பணத்தை பீரோவில் வைத்து பூட்டி விட்டு சென்று விடுகிறார்கள்.
சென்றவர்களிடமிருந்து எந்த தகவலும் இல்லை. மூன்று நாட்களாகியும் தகவல் இல்லாததால், பீரோவை திறந்து பார்க்கிறார் பால் சந்தோஷ் ராஜ். உள்ளே பணத்துக்கு பதிலாக கலர் கலராக கத்தரித்த காகிதங்கள் இருக்கின்றன. அதிர்ச்சியடைந்த பால் சந்தோஷ் ராஜ் உடனடியாக வழக்கறிஞரை தொடர்பு கொண்டு தகவலை தெரிவிக்கிறார். வழக்கறிஞர் காவல் நிலையம் செல்லலாம் என்று கூறியதும், அனைவரும் காஞ்சிபுரம் காவல் நிலையம் சென்று தகவல் தெரிவிக்கின்றனர். அப்போது தொலைபேசியில் அழைக்கிறார் முதன் முதலில் பால் சந்தோஷ் ராஜுவுக்கு அறிமுகமான சார்லஸ் ஜெகந்நாதன். மேலும் ஒரு நான்கு லட்ச ரூபாய் கருப்புப் பணம் இருப்பதாகவும், 2 லட்ச ரூபாய் கொடுத்தால் நான்கு லட்ச ரூபாய் கொடுக்கப்படும் என்று கூறுகிறார். உடனே இந்தத் தகவலும் காவல்துறைக்கு தெரியப்படுத்தப்படுகிறது.
காஞ்சிபுரத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளராக இருக்கும் சண்முகம், உடனடியாக ஒரு டீமை அமைத்து, பாலச்சந்திரன் என்ற டிஎஸ்பி மற்றும் ஆய்வளார் பிரபாகரன் ஆகியோருக்கு உத்தரவு பிறப்பிக்கிறார். அவர்களும் காத்திருக்கின்றனர். பணத்தை வாங்கிச் செல்ல சார்லஸ் ஜெகந்நாதன் வந்ததும், மொத்தமாக அள்ளுகின்றனர். அவனை விசாரித்ததும், சம்பவம் நடந்தது சென்னை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பீர்க்கங்கரணை காவல் நிலையத்தில் நடந்துள்ளது தெரிகிறது. அறிவார்ந்த அந்த காவல் துறையினர், புகார் கொடுத்த பால் சந்தோஷ் ராஜ் மற்றும் அவர் வழக்கறிஞரிடம் பிடிபட்ட சார்லஸ் ஜெகந்நாதனை ஒப்படைத்து, இவனை பீர்க்கங்கரணை காவல் நிலையத்தில் சென்று நீங்களே ஒப்படைத்து விடுங்கள் என்று அனுப்பி வைக்கின்றனர்.
மாற்றப்பட்ட கருப்புப் பணம் இதுதான்
இது என்னடா சோதனை…. என்று யோசித்தாலும், பறிகொடுத்த 15 லட்சத்தை எப்படியாவது மீட்டெடுக்க வேண்டும் என்று, அவர்களும் சார்லஸ் ஜெகந்நாதனை அழைத்துக் கொண்டு பீர்க்கங்கரணை காவல் நிலையம் வருகின்றனர். அங்கே காவல் நிலையத்தில் ஒரே ஒரு உதவி ஆய்வாளர் மட்டும் இருக்கிறார். “சார்… அதிகாரிங்க எல்லாம் வெளியில போயிருக்காங்க.. நான் மட்டும்தான் இருக்கேன்.. என்னால அக்யூஸ்டை வாங்க முடியாது. வெயிட் பண்ணுங்க” என்று கூறுகிறார். உடனே விஷயத்தை தெற்கு இணை ஆணையர் திருஞானத்திடம் போனில் தெரிவிக்கிறார்கள். அவர் சேலையூர் உதவி ஆணையரிடம் தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுக்கச் சொல்கிறார். உதவி ஆணையர் போன் மூலமாக அங்கேயே காத்திருக்குமாறும், ஆய்வாளர் வருவார் என்றும் கூறுகிறார். இரவு 11.30 மணிக்கு ஆய்வாளர் ஜோக்கின் ஜெர்ரி வருகிறார். விஷயத்தை கூறுகிறார்கள்.
ஆய்வாளர் ஜோக்கின் ஜெர்ரி “சார் எனக்கு இன்னைக்கு நைட் ட்யூட்டி. இப்போ ஒன்னும் பண்ண முடியாது. நீங்க போயிட்டு நாளைக்கு வாங்க” என்று கூறுகிறார். “சார், இவனுக்கு, மெயின் அக்யூஸ்டுகிட்ட இருந்து தொடர்ந்து போன் வந்துக்கிட்டு இருக்கு. ஒரு ஸ்பெஷல் டீம் போட்டீங்கன்னா, அத்தனை பேரையும் அரெஸ்ட் பண்ணிடலாம்” என்று கூறுகின்றனர். “சார்.. இந்த ஸ்டேஷன்ல லாக்கப்பே இல்ல. என் அக்யூஸ்டையே நான் சிட்லபாக்கம் ஸ்டேஷன்லதான் வச்சிருக்கன். கலெக்டர் மாநாடு வருது. அதுக்கு நான் டீடெயில்ஸ் எடுக்கனும். என்னால ஒன்னும் பண்ணண முடியாது நீங்க நாளைக்கு வாங்க” என்று கூறுகிறார். சரி என்று சார்லஸ் ஜெகந்நாதனை அழைத்துக் கொண்டு, இரவு முழுவதும் கண் விழித்து பாதுகாப்பாக காப்பாற்றுகிறார்கள். மறுநாள் காவல் நிலையம் அழைத்துச் செல்லலாம் என்று இருக்கையில், புழுதிவாக்கத்தில் மளிகைக் கடை வைத்திருந்து, இந்த சீட்டிங் பார்ட்டிகளிடம் 3 லட்ச ரூபாய் கொடுத்த சங்கர் என்பவர் தற்கொலை செய்து கொண்டார் என்ற தகவல் வருகிறது. சரி எப்படியாவது பணத்தை மீட்டு எடுத்து கொடுத்து விடலாம் என்று சார்லஸ் ஜெகந்நாதனை அழைத்துக் கொண்டு காவல் நிலையம் செல்கின்றனர்.
வழக்கறிஞர் ராஜ்குமார்
காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் இல்லை என்பதால் சேலையூர் உதவி ஆணையரிடம் சங்கர் என்பவர் தற்கொலை செய்து கொண்டார் என்ற விஷயத்தை சொல்கின்றனர். அவர், எனக்கு குண்டாஸ் தயார் பண்ண வேண்டிய வேலை இருக்கு. என்னால இப்போதைக்கு எதுவும் பண்ண முடியாது. நீங்க டி.சியை பாருங்க என்கிறார். சார்லஸ் ஜெகந்நாதனை வண்டியில் வைத்து அழைத்துக் கொண்டு துணை ஆணையர் சரவணனை பார்க்கச் செல்கின்றனர். துணை ஆணையர் அலுவலகத்தில் இல்லாத காரணத்தால், இனியும் தாமதித்தார் சரிப்பட்டு வராது என்று கூடுதல் ஆணையர் ராஜேஷ் தாஸை பார்த்து புகார் தெரிவிக்கலாம் என்று தினத்தந்தி அலுவலகம் அருகே உள்ள கமிஷனர் அலுவலகத்துக்கு வருகிறார்கள். கூடுதல் ஆணையர் மீட்டிங்கில் இருந்தால், அவர் உதவியாளரிடம் விஷயத்தைச் சொல்கிறார்கள். இந்த சந்திப்பெல்லாம் நடந்து கொண்டிருக்கும்போது, கமிஷனர் அலுவலகத்துக்கு உள்ளே, சார்லஸ் ஜெகந்நாதன் பத்திரமாக வண்டியில் அமர்ந்திருக்கிறார்.
இணை ஆணையர் திருஞானம்
அவர் “நீங்க எப்படி சார் அக்யூஸ்டை வச்சிருப்பீங்க… வம்புல மாட்டிக்காதீங்க. அடிஷனல் கமிஷனர் இப்போ பிஸியா இருக்கார். நான் டி.சிக்கு போன் பண்ணி சொல்றேன். உடனடியா போய் அவரைப் பாருங்க” என்று சொன்னதும், சார்லஸ் ஜெகந்நாதனை அழைத்துக் கொண்டு, பரங்கிமலையில் உள்ள துணை ஆணையர் அலுவலகத்துக்கு செல்கிறார்கள். துணை ஆணையர் சரவணனைப் பார்த்து விஷயத்தைச் சொல்கிறார்கள். திருச்செங்கோட்டிலிருந்து ஒரு நபர் 30 லட்ச ரூபாயை எடுத்துக் கொண்டு கொடுப்பதற்கு தயாராக இருப்பதாக போன் மூலம் சார்லஸ் ஜெகந்நாதனிடம் பேசிய விபரத்தையும் சொல்கிறார்கள்” உடனே துணை ஆணையர், ஆய்வாளரிடம் சொல்லுவதாக சொல்கிறார். அவர்கள் வெளியே வரும்போது, அந்த இடத்துக்கு ஆய்வாளர் ஜோக்கின் ஜெர்ரி வருகிறார். அவரிடம் துணை ஆணையர் இவ்வாறு தெரிவித்திருக்கிறார் என்று கூறியதும், நானே போய் டி.சிக்கிட்ட கேட்டுட்டு வர்றேன் என்று உள்ளே செல்கிறார். வெளியே வந்து “டி.சி அப்படியெல்லாம் நடவடிக்கை எடுக்கணும்னு என்கிட்ட சொல்லலையே…. சார்… நான் நேத்து ரெண்டு செயின் ஸ்னாட்சிங் கேஸ் புடிச்சேன். அக்யூஸ்டுகிட்ட நானே ஒப்புதல் வாக்குமூலம் வாங்கினேன். முந்தா நாள் நைட் ரவுன்ட்ஸ் போனேன்.. ரொம்ப பிசியா இருக்கேன் சார்” என்று அலுத்துக் கொண்டு, “நீங்க நாளைக்கு அக்யூஸ்டை கூட்டிக்கிட்டு வாங்க” என்று கூறி விட்டு சென்று விடுகிறார்.
வேறு வழியின்றி, இன்றைக்கும் கண் விழிக்க வேண்டும் என்று மீண்டும் சார்லஸ் ஜெகந்நாதனை அழைத்துக் கொண்டு செல்கின்றனர். புகார் கொடுத்த பால் சந்தோஷ் ராஜ் வீட்டிலேயே சார்லஸ் ஜெகந்நாதன் தங்க வைக்கப்படுகிறார். விடியற்காலை 4.30 மணிக்கு பாத்ரூம் போவதாக சொன்ன சார்லஸ் ஜெகந்நாதன், அங்கே இருந்த கண்ணாடியை எடுத்து கழுத்தை அறுத்துக் கொள்கிறார். பதறிப்போய் உடனடியாக விபரத்தை ஆய்வாளர் ஜோக்கின் ஜெர்ரியிடம் சொல்கின்றனர். அவர் “பாத்தீங்களா.. இதுக்குத்தான் நான் அவனை ஸ்டேஷன்ல வைக்க மாட்டேன்னு சொன்னேன். நான் நெனைச்ச மாதிரியே ஆயிடுச்சு பாத்தீங்களா” என்கிறார். பிறகு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சார்லஸ் ஜெகந்நாதனை அனுமதிக்கின்றனர். மறுநாள் காலையில் சேலையூர் உதவி ஆணையர் மருத்துவமனை வந்து பார்க்கிறார். இன்ஸ்பெக்டர் ஜோக்கின் ஜெர்ரியும் வருகிறார். வந்ததும், புகார் கொடுத்த பால் சந்தோஷ் ராஜ் மற்றும் அவர் வழக்கறிஞர் ராஜ்குமாரிடம், “சார்.. பிரச்சினை பெரிசாயிடும். இவனை டிஸ்சார்ஜ் பண்ணி இப்படியே கொண்டு போய் வீட்ல விட்டுடுங்க” என்று அறிவுரை கூறி விட்டு சென்று விடுகிறார்.
கழுத்தை அறத்துக் கொண்ட சார்லஸ் ஜெகந்நாதன்
இனி இப்படியே இருந்தால் ஒன்றும் நடக்காது என்று முடிவு செய்த வழக்கறிஞர் ராஜ்குமார், விபரத்தை பத்திரிகைக்கு தெரிவிக்கிறார். ஜுனியர் விகடனின் நிருபர், இந்த விஷயத்தைக் கையில் எடுத்து, இது தொடர்பாக கருத்தறிய இன்ஸ்பெக்டர் ஜோக்கின் ஜெர்ரி மற்றும் துணை ஆணையர் சரவணனிடம் பேசுகிறார். பேசியதும், காவல்துறை விழித்து எழுகிறது.
அவசர அவசரமாக நான்கு காவலர்கள் மருத்துவமனைக்கு அனுப்பப்படுகின்றனர். மருத்துவமனையிலேயே வைத்து சார்லஸ் ஜெகந்நாதன் கைது செய்யப்படுகிறார். அன்று மாலை தாம்பரம் நீதித்துறை நடுவர் மருத்துவமனைக்கு வரவழைக்கப்பட்டு ரிமாண்ட் செய்கிறார்.
இன்றைய நிலவரப்படி, சார்லஸ் ஜெகந்நாதன், மருத்துமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பிறகு, புழல் சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
பத்திரிக்கை தலையிட்ட பிறகே இந்த விவகாரத்தில் மிகத் தாமதமாக காவல்துறை செயல்பட்டு குற்றவாளியை கைது செய்துள்ளது. குற்றவாளியை கைது செய்தாலும், இந்த பண இரட்டிப்பு மோசடியில் சிக்கியுள்ள முக்கிய .குற்றவாளிகள் இனி பிடிட வாய்ப்பே இல்லை என்ற சூழலை காவல்துறை உருவாக்கியுள்ளது. உரிய நேரத்தில் சார்லஸ் ஜெகந்நாதனை கைது செய்திருந்தால், இரட்டிப்பு மோசடியில் ஈடுபட்ட அந்த கும்பலின் முக்கிய நபர்கள் கைது செய்யப்பட்டிருப்பார்கள். அந்தக் கும்பலின் பின்னணியில் கள்ள நோட்டுக் கும்பலோ, கள்ளக்கடத்தல் கும்பலோ இருந்திருக்கலாம். ஆனால் அவர்கள் யார் என்பதை கண்டறிய வாய்ப்பே இல்லாத நிலை உருவாகியிருக்கிறது.
ஆனால், சாவகாசமாக எருமை மாட்டின் மீது மழை பெய்தது போல காவல் துறை செயல்பட்டது மட்டுமல்ல.. குற்றாவளியை புகார் கொடுத்தவரின் பிடியிலேயே கொடுத்து, பத்திரமாக வைத்திருக்குமாறு அறிவுரை கூறிய அவலமும் அரங்கேறியிருக்கிறது.
இன்று சென்னை மாநகர காவல்துறை எந்த லட்சணத்தில் செயல்படுகிறது என்ற உண்மையை இந்த சம்பவம் பட்டவர்த்தனமாக அம்பலப்படுத்தியிருக்கிறது. ஒரு பக்கம், சராமாரியாக குண்டர் சட்டத்தின் கீழ், நூற்றுக்கணக்கானவர்கள் அடைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். குண்டர் சட்டத்தின் கீழ், திருத்த முடியாத ரவுடிகள், கொள்ளைக்காரர்கள் ஆகியோரை அடைப்பது என்பது போய், இன்று ஒவ்வொரு காவல் நிலையத்திலும் வாரத்துக்கு இரண்டு குற்றவாளிகளை குண்டர் சட்டத்தில் அடைத்தே ஆக வேண்டும் என்று மாநகர ஆணையர் ஜார்ஜால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. ஒருவரை குண்டர் சட்டத்தில் அடைப்பதென்றால், அதற்காக தயார் செய்யப்பட வேண்டிய ஆவணங்கள் பல நூறு பக்கங்களுக்கு இருக்கும். அந்த ஆவணங்களை தயார் செய்து, ஆங்கிலம் மற்றும் தமிழில் ஆவணங்களை மொழிபெயர்த்து, நகல் தெளிவாக இல்லாத ஆவணங்களை தட்டச்சு செய்து, அவற்றை நான்கு நகல்கள் எடுத்து, குற்றவாளிக்கு கொடுப்பதற்குள் தாவு தீர்ந்துவிடும். இப்படி தயார் செய்யப்பட்ட பிறகும், அவற்றில் ஏதாவது ஒரு தவறு இருப்பதை வழக்கறிஞர்கள் கண்டு பிடித்து, நீதிமன்றத்தில் வாதாடி, அந்த ஆணை உயர்நீதிமன்றத்தால் ரத்து செய்யப்படுவது தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இப்படி விழழுக்கு இறைத்த நீராக காவல்துறையினரின் உழைப்பை வாங்கும் பணியாக இந்த குண்டர் சட்டம் இருந்து வருவதாலேயே, மற்ற குற்றங்களைக் கண்டு பிடிக்கும் பணியில் காவல்துறையினர் ஈடுபட சுணக்கம் காட்டுகின்றனர்.
ஒரு சாதாரண குற்றத்துக்காக சிறை செல்பவன் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தைப் பாய்ச்சினால், அவர் ஒரு வருடம் கழித்து சிறையிலிருந்து வெளியே வருகையில், மோசமான குற்றவாளியாகவே வருகிறான் என்பது காவல்துறையில் உள்ளவர்களுக்கே தெரியும். ஆனால், நடைமுறைக்கு சாத்தியமில்லாத உத்தரவுகளை பிறப்பிப்பதையே வாடிக்கையாக வைத்துள்ள ஜார்ஜ், இது போன்ற உத்தரவுகளை தொடர்ந்து பிறப்பித்து வருகிறார். இப்படி குண்டர் சட்டத்தில் நூற்றுக்கணக்கானோரை அடைப்பதனால், சென்னை மாநகரத்தில் குற்றங்கள் குறைந்து விடவில்லை. இன்னும் சங்கிலி பறிப்புகளும், கொள்ளைகளும், திருட்டுக்களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. காவலர்கள் பற்றாக்குறையாலும், கடுமையான பணிப்பளுவாலும் ஏற்கனவே சிரமப்பட்டுக் கொண்டிருக்கும் சென்னை மாநகர காவல்துறையினர், வீட்டில் வாடகைக்கு குடியிருப்பவர்களின் விபரங்களை 30 நாட்களுக்குள் சேகரிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளதிலேயே, ஜார்ஜ் எப்படிப்பட்ட புத்தி “கூர்மையுள்ள” ஒரு உயர் உயர் அதிகாரி என்பதை புரிந்து கொள்ளுங்கள். ஜார்ஜ் போன்ற நபர்கள் சென்னை மாநகரத்தில் தொடர்ந்து ஆணையராக இருந்தால், ஆறு மாதத்தில் சென்னை மாநகர காவல்துறையை மட்டுமில்லாமல், சென்னை நகரத்தையே குட்டிச்சுவராக்கி விடுவார் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எப்படி உள்ளது என்பதை திமுக தலைவர் கருணாநிதி நேற்றைய அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளதை இந்த நேரத்தில் கவனத்தில் கொள்ள வேண்டும் ” ஒட்டுமொத்தமாக ஜெயலலிதா ஆட்சியில் சட்டம், ஒழுங்கு எவ்வாறு இருந்தது என்பதற்கு ஆதாரபூர்வ மாக விளக்கம் கூற வேண்டுமேயானால், இந்த இரண்டரை ஆண்டுகளில் ஏடுகளிலே வெளிவந்த கொலைகள் மாத்திரம் 3,231 – கொள்ளைகள் 1,170 – வழிப்பறி மோசடிகள் 691 – செயின் பறிப்புகள் 652! இதுதான் ஜெயலலிதா ஆட்சியில் சட்டம், ஒழுங்கு நன்கு பராமரிக்கப்படுவதற்கான இலட்சணம்!”
Erumaigala naigala pannigala vera vela illa
Loosu airivu illaya