“வணக்கம். எல்லோருக்கும் வணக்கம்” என்று மொட்டை மாடியில் நுழைந்தான டாஸ்மாக் தமிழ்.
“வாடா… வா… உக்காரு… தேர்தல் களம் சூடு பிடிச்சிடுச்சு போல.. பரபரப்பா என்னென்ன செய்திகள் வச்சுருக்க” என்றான் பீமராஜன்.
“கிட்டத்தட்ட அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் போல இந்திய தேர்தலும் ஆயிடுச்சு. அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தலில் இரண்டு வேட்பாளர்கள் மட்டும் மோதுவது போல, இந்தியாவிலும் மோடி, ராகுல் ஆகிய இரண்டு பேர்களுக்கு இடையேதான் போட்டின்னு ஆயிடுச்சு. மூன்றாவது அணிக்கான முயற்சிகளை முன்னெடுக்க வேண்டிய இடதுசாரிகள், மேற்கு வங்க தேர்தல் தோல்வியில இருந்தே வெளிவராமல் மீளா உறக்கத்தில் இருக்காங்க”
“அவங்க என்ன பண்ணனும் னு நினைக்கிற ? அவங்களே எத்தனை எம்பி வருமோ ன்னு கவலையில இருக்காங்க”
“ராஜீவ் காந்தியின் ஆட்சியை ஒழிச்சு தேசிய முன்னணி அமைந்ததுலயும், அதன் பிறகு ஐ.கே.குஜ்ரால், தேவகவுடா தலைமையில் ஆட்சி அமைந்ததிலும் இடது சாரிகளோட பங்கு மிகப் பெரியது. தற்போது மற்ற மாநிலங்களில் உள்ள பிராந்திய கட்சிகளோடு ஒரு கூட்டணி ஏற்படுத்த முயற்சியாவது எடுத்தால்தான் 2014 தேர்தலில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த முடியும். ஆனா இடது சாரிகள், எந்த மாநிலத்தில் எந்த கட்சியோடு கூட்டணி வைச்சு, எப்படி எம்.பி சீட்டுகளை பெறுவது, அதுக்கப்புறம் என்ன செய்யறதுன்னு பாத்துக்கலாம்னு, கிட்டத்தட்ட ஜெயலலிதா மாதிரியே இருக்காங்க”
“சரி.. அம்மா பிரதமர் கனவுல இருக்காங்க போல இருக்கு ? ” என்றான் ரத்னவேல்.
“அம்மா கிட்டத்தட்ட பவர் ஸ்டார் ரேஞ்சுக்கு போயிட்டாங்க”
“என்னடா அம்மாவைப் போய் பவர் ஸ்டாருன்னு சொல்ற ? ” என்று கோபப்பட்டான் வடிவேல்.
“பவர் ஸ்டார் என்ன பண்றாரு… ? அவரே காசு குடுத்து, கூட பத்து இருபது அல்லக்கைகளை கூட்டிக்கிட்டு போயி அண்ணன்தான் பவர்ஸ்டார், அண்ணனைப் போல வருமான்னு பேச வைக்கிறாரு. ஜெயலலிதா என்ன பண்றாங்க ? அவங்களால மந்திரியாக்கப்பட்டவர்களை வைச்சு நீங்கதான் இந்தியாவுக்கே வழிகாட்டணும்னு சொல்ல வைக்கிறாங்க.
தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி சேத்து மொத்தம் இருக்கறது 40 தொகுதி. இதுல பலமான அணி அமைஞ்சா கூட 30 சீட்டுக்கு மேல வெற்றி பெறுவது கஷ்டம். அப்படி இருக்கும்போது 30 சீட்டை வைச்சுக்கிட்டு பிரதமர் பதவிக்கு கனவு காண்றதும், பவர் ஸ்டார் பண்றதுக்கும் பெரிய வித்தியாசம் இல்ல. 85 சீட் இருக்கும் உத்தரப்பிரதேச அரசியல்வாதிகளான மாயாவதியும், முலாயம் சிங் யாதவும் கூட இந்த மாதிரி பேசல”
“என்னதான் ஜெயலலிதாவோட ஐடியா ? “
“பிஜேபி கூட கூட்டு சேர்றது இல்லன்றதுல தெளிவா இருக்காங்க. பிஜேபி கூட கூட்டு சேர்ந்தா தற்போது அணியில் இருக்கும் இடது சாரிகள் வெளியில போயிடுவாங்க. இடது சாரிகள், விடுதலை சிறுத்தைகள், தேமுதிக ன்னு ஒரு பெரிய அணியை கருணாநிதி அமைக்க அது வாய்ப்பா அமையும்னு நினைக்கிறாங்க ஜெயலலிதா. அதனால, நாற்பதிலும் நாமளே போட்டியிட்டு ஜெயிச்சுடலாம்னு நினைக்கிறாங்க. ஆனா ஜெயலலிதாவோட இந்த கணக்கு வெற்றி பெறுமான்றது சந்தேகம்தான்.
ஜெயலலிதா நான் பிரதமராவதை கட்சியினர் விரும்புகிறார்கள் னு அறிவிச்சதால, மோடி ஜெயலலிதாவை நிச்சயமா விரும்பமாட்டார். நாளை பிஜேபி 150 இடங்களில் வெற்றி பெற்றால் கூட, மோடி பிரதமராவதை ஜெயலலிதா விரும்ப மாட்டார்.
இந்த நிலைமையில, 40 தொகுதிகளுக்கும் வேட்பாளர் தேர்வு, தேர்தலுக்கான செலவுத் தொகை வசூல் உள்ளிட்ட வேலைகளுக்காக, செவ்வாய்க்கிழமை கொடநாடு போறதா இருக்காங்க”
“சரி… இடது சாரிகள் என்ன நிலைமையில இருக்காங்க ? ” என்றான் ரத்னவேல்.
“அவங்கதான் என்ன பண்றது.. எங்க போறது… யாருக்கிட்ட போய் பொலம்பறது ன்னு முழிச்சிக்கிட்டு இருக்காங்க. ஜெயலலிதா பொதுக்குழுவில் பேசியதைப் பாத்ததும் எல்லோரும் ஆடிப் போயிருக்காங்க. அந்த அம்மா பேசறதை வச்சுப் பாத்தா, இடது சாரிகள் ரெண்டு பேருக்கும் ஆளுக்கு ஒரு சீட் குடுக்கறதே பெருசுன்ற நிலைமைதான் உருவாகியிருக்கு. இப்போ திமுக பக்கமும் போக முடியாம ரெண்டு கெட்டான் நிலையில இருக்காங்க. ரெண்டு ரெண்டு சீட் குடுக்கலன்னா, இடது சாரிகள் ஒற்றுமையை பாதுகாக்கும் வகையில இடது வலது ரெண்டும் சேர்ந்து தனியா போட்டி போடலாம்னு வழக்கமா பண்ற அதே தமாஷை பண்றதுக்கு வாய்ப்பு இருக்க”
“சரி.. பெரியவரு ஏன் இத்தனை முறை அந்தர் பல்டி அடிக்கிறாரு ? “. என்றான் ரத்னவேல்.
“காரணம் இல்லாம அடிப்பாரா ? அவரோட கணக்கு பெரிய கணக்கு. கடந்த சில மாதங்களாகவே, தமிழருவி மணியன் மதிமுக, பாமக மற்றும் பிஜேபியை இணைத்து பெரிய அணியை உருவாக்க முயற்சிகள் எடுத்துக்கிட்டு வர்றது செய்திகளில் அடிபட்டுக்கிட்டு இருந்துச்சு. கடந்த திமுக ஆட்சி காலத்தில் கருணாநிதியை கடுமையாக விமர்சித்து கட்டுரைகள் எழுதியவர் தமிழருவி மணியன். அதனால் அவருக்கு வழங்கப்பட்ட வீட்டு ஒதுக்கீட்டைக் கூட ரத்து செய்து அவர் நீதிமன்றத்தை அணுகினார்.
அப்படிப்பட்ட தமிழருவி மணியன் ஒரு கூட்டணியை அமைத்து அது வெற்றி பெறுவதா ன்ற தனிப்பட்ட கோபம் கருணாநிதிக்கு நிறையவே இருந்துச்சு. இது தவிரவும், தமிழக பிஜேபியில உள்ளவங்களுக்கே மதிமுக, பாமகவோட கூட்டணி வைச்சு பாராளுமன்ற தேர்தலை சந்திக்கிறதுல உடன்பாடு இல்ல. ஏன்னா, நாளைக்கு டெல்லியில பிஜேபி ஆட்சி அமைஞ்சா, தமிழகத்தில் எம்.பியா இருக்கிறவங்கதான் அமைச்சராக முடியும். மதிமுகவோட கூட்டணி சேந்தா, பேருக்கு போட்டின்னு போட்டி போடலாமே தவிர, வெற்றி வாய்ப்பு உறுதி இல்ல. ஆனா, அதே நேரத்துல திமுகவோட கூட்டணி சேந்தா, நாலு எம்.பியாவது உறுதியா கிடைக்கும். இல.கணேசனெல்லாம் திமுக ஆதரவாளர்கள்தான். அவங்கள்லாம் தொடர்ந்து கருணாநிதியோட பேசிக்கிட்டிருக்கிறதோட வெளிப்பாடுதான், மோடியைப் பாராட்டி கருணாநிதி அளித்த பேட்டி.
அந்த டைம்ஸ் ஆப் இந்தியா பேட்டியை நல்லா தெரிஞ்சு, ஒரு முறைக்கு மூன்று முறை சரி பார்த்த பிறகே வெளியிட சம்மதம் தெரிவிச்சாரு கருணாநிதி. அவருக்கு நல்லாவே தெரியும் இது எப்படிப்பட்ட சர்ச்சையை ஏற்படுத்தும்னு. கருணாநிதியோட அந்த பேட்டிக்கு முன்னால, பிஜேபி மதிமுக கூட்டணின்னு பேசிக்கிட்டு இருந்தாங்க. இப்போ சத்தத்தையே காணோம். இதுதான் கருணாநிதிக்கு வேணும். கலங்கிய குட்டையில மீன் பிடிக்கிறதுல கருணாநிதிக்கு நிகரே இல்லை”
“சரி அவரோட திட்டம்தான் என்ன ?”
“அவரோட முக்கிய திட்டம் ஜெயலலிதாவும், பிஜேபியும் சேந்துடக் கூடாது. இப்போதைக்கு இருக்கும் திமுக, விடுதலை சிறுத்தைகள், புதிய தமிழகம், மனிதநேய மக்கள் கட்சி ஆகிய கட்சிகளை வைத்து தேர்தலை சந்திப்பது. மதிமுக மற்றும் பிஜேபி மற்றும் பாமக போட்டியிட்டா அவர்கள் கணிசமாக வாக்குகளை பிரிப்பார்கள். வேறு வழியே இல்லாம தேமுதிக தன் பக்கம் வந்து விடும். உறுதியா பல இடங்களை வெல்லலாம் னு கணக்கு போட்றாரு. அது எந்த அளவுக்கு வெற்றி பெறும்னு பொறுத்திருந்துதான் பாக்கணும்.
“சரி.. திமுக கழட்டி விட்டதைப் பத்தி காங்கிரஸ் கட்சி என்ன நினைக்குது ” என்று காங்கிரஸுக்கு கரிசனமாக கேள்வி கேட்டான் ரத்னவேல்.
“காங்கிரஸ் கட்சி திமுக மேல கடுப்புலதான் இருக்காங்க. ஒழுங்கா வழிக்கு வரலைன்னா, பெரிய ஆப்பா வைக்கணும்னு நினைக்கிறாங்க. இதுக்கான முதல் கட்ட வேலைகள் தொடங்கிடுச்சு”
“என்னடா பண்ணப் போறாங்க ? “
“திமுக சார்பில் ஓவரா சலம்பல் விட்டுக்கிட்டு இருக்கிறது டி.ஆர்.பாலுதான். ஆ.ராசாவுக்கு நிகரா 2004 காங்கிரஸ் அரசாங்கத்துல சம்பாதிச்சது டி.ஆர்.பாலுதான். இவர் ஓவரா பேசறதால, சேது சமுத்திரத் திட்டத்துக்கான ஆரம்பக் கட்டப் பணிகளில் நடந்த ஊழல்களை காங்கிரஸ் அரசு தோண்டி எடுக்க ஆரம்பிச்சிடுச்சு. அது வெளியில வந்தா, டி.ஆர்.பாலுவுக்கு பெரிய ஆப்பு காத்திருக்குன்னு டெல்லி வட்டாரங்கள் சொல்லுது”
“பாட்டாளி மக்கள் கட்சி என்ன முடிவு எடுத்திருக்காங்க ? ” என்றான் பீமராஜன்.
“பிஜேபி மதிமுக உடனான கூட்டணியில் சேர்ந்து ஆதரவு தரணும்னு பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர்கிட்ட தமிழருவி மணியன் பேசியிருக்கார். அவர்கிட்ட எங்களுக்கு அந்த மாதிரி எண்ணம் இல்லைன்னு சொல்லிட்டார்”
“அப்போ பாமக பிஜேபி கூட்டணியில சேராதா ? ” என்றான் பீமராஜன்.
“இருடா. அவசரப்படாத. தமிழருவி மணியன்கிட்ட முடியாதுன்னு சொல்லிட்டு, தனியா பிஜேபி கூட பேச்சுவார்த்தை நடத்துனாரு மருத்துவர் அய்யா. வெற்றி பெறக்கூடிய வகையில் 10 தொகுதிகள் ஒதுக்கனும். ஒரு மாநிலங்களவை உறுப்பினர் குடுக்கணும், தேர்தல் செலவுக்கு அத்தனை தொகுதிகளுக்கும் சேத்து ஒரு கணிசமான தொகை ஒதுக்கணும் னு அய்யா வச்ச கோரிக்கையைப் பாத்துட்டு பிஜேபி காரங்க அதிர்ச்சியாயிட்டாங்க”
“அய்யா இன்னும் பழைய நினைப்புலயே இருக்காரு போல இருக்கு”
“அய்யா ஒரு பெரிய திட்டம் வச்சிருக்காரு” என்று பீடிகை போட்டான் தமிழ்.
“என்னடா அப்படிப்பட்ட பெரிய திட்டம் ? ” என்று ஆர்வமாக கேட்டான் வடிவேல்.
“தேர்தலை ஒட்டி, வட மாவட்டங்களில், டாஸ்மாக் கடைகளை முற்றுகையிடும் போராட்டம் நடத்தி, அது சில இடங்களில் வன்முறையா மாறும் வகையில் போராட்டம் நடத்த திட்டம் போட்டிருக்கார். அது சரியா அமைஞ்சா, பெண்களின் பெரிய ஆதரவு தனக்கு கிடைக்கும்னு நினைக்கிறார் அய்யா”
“அது சாத்தியமா ? “
“ஏற்கனவே நடத்திய வன்முறைகள் காரணமாக சிறைக்கு போனவர்களோட வழக்குகளே இன்னும் முடியலை. பல பேர், கட்சி நமக்கு உதவலைன்னு வருத்தத்துல இருக்காங்க. இந்த நிலையில அய்யா அழைக்கும் இந்த போராட்டத்துக்கு எந்த அளவுக்கு ஆதரவு கிடைக்கும்னு தெரியலை”
“அய்யா ஏதாவது பண்ணி, அம்மாவுக்கு பாடம் புகட்டணும்னு நினைக்கிறாரு. பாப்போம். சரி. காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெயந்தி நடராஜன் ஏன் ராஜினாமா பண்ணாங்க ?” என்றான் ரத்னவேல்.
“அவங்க கட்சிப் பணியாற்றணும்னு முடிவெடுத்துட்டாங்க”
கருணாநிதியுடன் ஜெயந்தி நடராஜன் மற்றும் காயத்ரி தேவி
“டேய்.. இதெல்லாம் ஊடகங்களுக்கு குடுக்கிற அல்வா.. உண்மை காரணம் என்னன்னு சொல்லு”
“ஏறக்குறைய 14 லட்சம் கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு ஜெயந்தி நடராஜன் அனுமதி அளிக்காம காலம் கடத்தியிருக்காங்க. ஜெயந்தி நடராஜன் சுற்றுச் சூழல் அமைச்சரா இருந்தாங்க. பல திட்டங்களுக்கு சுற்றுச் சூழல் தடையின்மை சான்று வழங்காத காரணத்தால பல கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் அப்படியே தேங்கியிருந்திருக்கு.
தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு கோடி கோடியா வாரி வழங்கக் கூடிய தொழில் அதிபர்களின் தொழில்கள் பாதிக்கப்பட்டால் சும்மா விடுவாங்களா ? அவங்க அரசுலயே இப்படி நடந்தா எப்படி சும்மா இருப்பாங்க.
தொழில் அதிபர்கள் மட்டுமில்லாம, மற்ற துறைகளின் அமைச்சர்களும், ஜெயந்தி மேல ஏராளமான புகார்களை வாசிச்சிருக்காங்க., பெட்ரோலியத் துறை, இரும்புத் துறை, கனிம வளத்துறை, தரைவழிப் போக்குவரத்து ஆகிய துறைகளின் அமைச்சர்கள் புதிய திட்டங்களுக்கு ஏற்கனவே கட்டிங் வாங்கிட்டாங்க. கட்டிங் வாங்கியும் வேலை நடக்காம இருக்கிறதுக்கு காரணம் யாருன்னு பாத்தா, ஜெயந்தி நடராஜன் அமைச்சரவையில எல்லாம் நிலுவையில் இருக்குதுன்னு தெரிவிச்சாங்க. இந்த அமைச்சரவையிலிருந்து பிரதமருக்கு கடிதமே எழுதிட்டாங்க. சுற்றுச் சூழல் அமைச்சகத்திலிருந்து தடையில்லா சான்று வருவதற்கு ஒரு காலக்கெடு நிர்ணயிக்கணும்னு பிரதமருக்கு கடிதம் எழுதிட்டாங்க”
“புதிய திட்டங்கள் தொடங்கறதுக்கு இந்த அமைச்சர்களுக்கு இத்தனை ஆர்வமா ? ” என்றான் வடிவேல்.
“நீர் மணிக்கொரு முறை மங்குணி அமைச்சர் என்பதை நிரூபித்துக் கொண்டே இருக்கிறீர்” என்று கூறி விட்டு தொடர்ந்தான் தமிழ். ஆட்சி முடியப்போகுது. இன்னும் 2 அல்லது 3 மாசம்தான் பாக்கி இருக்கு. அதுக்கு அப்புறம் புதிய திட்டங்கள் தொடங்க முடியாது. அதுக்குள்ள எவ்வளவு சம்பாதிக்க முடியுமோ, அவ்வளவு சம்பாதிக்கலாம்னு பாத்தா, இந்த அம்மா நடுவுல உக்காந்து கட்டையை போடுது. அதான் தூக்கிட்டாங்க”
“சரி.. இந்த தொழில் அதிபர்கள் நினைச்சா இப்படி அமைச்சர்களையெல்லாம் மாற்ற முடியுமா என்ன ? ” என்று அப்பாவியாக கேட்டான் ரத்னவேல்.
“என்னடா புரியாதவனா இருக்கிற ? ஒரே ஒரு தொழில் அதிபர் இரண்டு முறை பெட்ரோலிய அமைச்சரை மாத்தலையா ? “
“யாருடா அது ? “
“முகேஷ் அம்பானிதான். முதல் முறை பெட்ரோலிய அமைச்சரா இருந்த மணி சங்கர் அய்யர் சொன்ன பேச்சை கேக்க மாட்றாருன்னு அவரை மாத்தினாங்க. அடுத்து அமைச்சரா இருந்த முரளி தியோரா, தன் சகோதரர் அனில் அம்பானியை சப்போர்ட் பண்றாருன்னு அவரை மாத்தினாங்க. கடைசியா பெட்ரோலிய அமைச்சரா இருந்த ஜெய்பால் ரெட்டி, ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு எண்ணை துரப்பன பணிகளில் சுணக்கம் காட்டியதற்காக, கட்டணத்தை உயர்த்திக் கொடுக்கக் கூடாது ன்னு முடிவெடுத்தார். ஒரே நாளில் அவரை மாத்தி அந்தப் பொறுப்பை வீரப்ப மொய்லிக்கிட்ட ஒப்படைச்சாங்க.
மத்திய அரசில் எத்தனையோ அமைச்சர்கள் இருக்கையில், ஜெயந்தி நடராஜனின் சுற்றுச் சூழல் அமைச்சகத்தையும், அவங்க ராஜினாமாவுக்குப் பிறகு, வீரப்ப மொய்லிக்கிட்டதான் குடுத்திருக்காங்கன்றதை மறந்துடாத” என்றான் தமிழ்.
“அப்போ மன்மோகன் சிங் எதுக்குத்தான் இருக்கார் ? “
“அவர் வெளிநாட்டுக்கு சுற்றுப் பயணம் போறதுக்கு மட்டும்தான் இருக்கார். வேற எதுக்கு ? ஜெயந்தி நடராஜன் நீக்கத்துனால கடுமையா பாதிக்கப்பட்டது முன்னாள் எம்.எல்.ஏ காயத்ரி தேவிதான்”
“ஏன் அவங்களுக்கு என்ன ? “
“அவங்கதான், சுற்றுச் சூழல் அமைச்சருக்கு சிறப்பு அதிகாரியா இருந்தாங்க. இந்தத் தேர்தலில் எம்.பி டிக்கெட் கேக்கலாம்னு நெனைச்சாங்க. ஆனா, இனிமே ஜெயந்தி நடராஜன் கதையே அம்போன்னு போயிடுச்சு. இதுல இவங்களுக்கு வேற எப்படி டிக்கெட் கிடைக்கும். அவ்வளவுதான்”
“தலைமைச் செயலக செய்திகள் என்னப்பா இருக்கு ?” என்றார் கணேசன்.
“அண்ணே.. பல ஐஏஎஸ் அதிகாரிகள், படிச்சு ஐஏஎஸ் அதிகாரிகள் ஆகறதுக்கு முன்னாடி பன்னி மேச்சிக்கிட்டு இருந்தாங்க போல”
“என்னப்பா இப்படி பேசற ? “
“ஆமாம்ணே… சமீபத்துல நடந்த கலெக்டர்கள் மாநாட்டில் அவனுங்கள்ளாம் பேசுன பேச்சை கேட்டீங்கன்னா சத்தியமா இவங்க பன்னிதான் மேய்ச்சிக்கிட்டு இருந்தாங்கன்னு நீங்களே சொல்லுவீங்க. அவ்வளவு மோசம். அதிமுக அடிமைகளுக்கு எந்த விதத்திலும் சளைக்காத வகையில் நடந்துக்கிட்டாங்க. இதைப் பத்தி ஜுனியர் விகடன் பத்திரிக்கையில் முழுமையா எழுதியிருக்காங்க. அதிலும் குறிப்பா சேலம் ஆட்சியர் மகரபூஷணம், மற்றும் விழுப்புரம் ஆட்சியர் சம்பத். ஆகியோர் முதல்வர் காலைத் தொட்டு வணங்கறோம்னு பேசியிருக்காங்க”
“கட்சிக்காரங்க மாதிரி நடந்துக்கறாங்களே… ? “
“கால்ல விழல.. அது மட்டும்தான் குறை. மத்தபடி மீதி எல்லாம் பண்ணிட்டாங்க. இவங்க இப்படின்னா, முதல்வரோட செயலாளர் ராம் மோகன ராவ் ஒரு பக்கம் வசூலை வாரிக் குவிச்சிக்கிட்டு இருக்காரு. இவர் அமைச்சர்கள்கிட்டயே வசூல் பண்ற அளவுக்கு தில்லாலங்கடியா இருக்காரு. கடந்த இரண்டரை ஆண்டுகளில் மட்டும் ராம் மோகன ராவ் வசூல் பண்ண தொகை 500 கோடியை தாண்டும்னு சொல்றாங்க. கவர்னர் தெலுங்கு காரர்ன்றதால, இந்த ஆளு தெலுங்குலயே பேசி, வேலையை முடிச்சுக் குடுப்பாருன்னு இவரை பக்கத்துல வச்சிருக்காங்க. அது மட்டுமில்லாம, பெங்களுரு சொத்துக் குவிப்பு வழக்கை செட்டிங் பண்றதுக்கும் இந்த ஆளு பயன்படுவாருன்னு இவரை மாத்தாம வச்சிருக்காங்க. இதைப் பயன்படுத்திக்கிட்டு இந்த ஆளு கொள்ளை அடிச்சிக்கிட்டு இருக்காரு.
இவரும் ஓ.பன்னீர் செல்வமும் கொள்ளையில பங்குதாரர்கள்னு சொல்றாங்க. இவர் கொள்ளையடிச்சு சேத்த பணத்தை டப்ளின் மற்றும் அயர்லாந்தில் சேமிச்சு வைக்கிறதா சொல்றாங்க”
“இவருக்கு மாறுதல் வரவே வராதா… ? ” என்று ஆயாசமாக கேட்டான் பீமராஜன்.
“இப்போதைக்கு வராதுன்னுதான் தோணுது. ஆனா ஜெயலலிதா ஆட்சியில, எதுவும் நடக்கும்”
“அமைச்சரவை மாற்றம் இருக்குமா ? ” என்றான் பீமராஜன்.
“இப்போதைக்கு அமைச்சரவை மாற்றம் அநேகமா இருக்காது. ஒவ்வொரு அமைச்சரும் பாராளுமன்றத் தேர்தலுக்கு தண்ணி மாதிரி பணத்தை செலவு பண்ணணும்னு உத்தரவு போட்டிருக்காங்க. அதனால அமைச்சர்கள் தேதி குறிப்பிட்டு வசூல் பண்ணிக்கிட்டு இருக்காங்க. அடுத்த மூணு மாசத்துக்கு வசூல் மட்டும்தான் ஒரே வேலை.
ஏற்காடு இடைத்தேர்தலுக்கு அதிமுக சார்பா செய்த செலவு மட்டும 70 கோடி. அந்த செலவையே எப்படி ஈடுகட்றதுன்னு தெரியலை. இதுல பாராளுமன்றத் தேர்தலுக்கு எப்படி வசூலிக்கிறதுன்னு அமைச்சர்கள் புலம்பறாங்க. “
காவல்துறை செய்திகள் ஏதாவது இருக்காப்பா ? ” என்றார் கணேசன்.
“தமிழ்நாட்டுல வட இந்திய லாபி நாளுக்கு நாள் ஸ்ட்ராங்காயிட்டு இருக்கு. உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டியோட ஆதிக்கம் அதிகமாவே இருக்கிறதா சொல்றாங்க. நிரஞ்சன் மார்டியும், உளவுத்துறை ஐஜி அம்ரேஷ் பூஜாரியும் ரொம்ப நெருக்கம். இதைப் பயன்படுத்திக்கிட்டு, பல முக்கிய பதவிகளுக்கு வட இந்தியர்களை நியமிக்கும் வேலையில் இறங்கியிருக்காங்க.”
“ராமானுஜம் ஓய்வு பெறப்போறார்னு ஒரு தகவல் இருக்கே.. “
“அண்ணே… டிஜிபி ராமானுஜம், தேர்தலுக்கு முன்பாகவே தன்னை விடுவிக்கும்படி ஜெயலலிதாகிட்ட சொல்லியிருக்கிறார்”
“ஏன்.. ? என்ன ஆச்சு.. ? அவருக்குத்தான் நவம்பர் 2014 வரை பதவிக்காலம் இருக்கே. ? “
“இல்லண்ணே. ஜெயலலிதா பணி நீட்டிப்பு கொடுத்தாலும், மத்திய உள்துறை அமைச்சகம் இவருடைய பணி நீட்டிப்புக்கான ஒப்புதலை இன்னும் வழங்கலை. இவருக்கு ஓய்வூதியம் கிடைகிறதே சிக்கலாயிடும் நிலைமை இருக்கு.
அது மட்டுமில்லாம, ராமானுஜம் இந்த அரசு வந்ததுல இருந்து டிஜிபி ராமானுஜம் உளவுத்துறை டிஜிபியாவும், சட்டம் ஒழுங்கு டிஜிபியாகவும் இருந்துட்டு வர்றாரு. இது இந்தியாவில் எந்த மாநிலத்திலயும் நடக்காத ஒரு விஷயம். அது மட்டுமில்லாம, அவர் ஓய்வு பெறும் அதே மாதத்தில் அவருக்கு இரண்டு ஆண்டுகள் பணி நீட்டிப்பு கொடுத்து ஜெயலலிதா உத்தரவிட்டிருக்காங்க.
இப்படி ஜெயலலிதாவுக்கு நெருக்கமான ஒரு அதிகாரி டிஜிபியாக தொடர்ந்தால், தேர்தல் ஒழுங்கா நடைபெறாதுன்னு திமுக நிச்சயமா மனு கொடுக்கும். அப்போ தேர்தல் ஆணையம் அதை பரிசீலனை பண்ணி தன்னை மாத்தி வேறு பதவிக்கு நியமிச்சா, அது தன்னோட கேரியருக்கே அசிங்கம்னு நினைக்கிறார்”
“அதனாலதான் உளவுத்துறை டிஜிபியா அஷோக் குமாரை நியமிச்சிருக்காங்களா ? “
“அதுதான் முக்கிய காரணம். ராமானுஜம் னாலே அவர் உளவுத்துறை அதிகாரின்னுதான் காவல்துறையில சொல்லுவாங்க. அவரை சட்டம் ஒழுங்கு டிஜிபியாகவும், அஷோக் குமாரை உளவுத்துறை டிஜிபியாகவும் நியமிச்சிருக்கிறதே வரக்கூடிய மாற்றத்துக்கான அறிகுறிதான்”
“முன்னாள் டிஜிபி நட்ராஜ் பிஜேபி கட்சியில சேரப்போறதா ஒரு பேச்சு அடிபடுதே.. ” என்றார் கணேசன்.
“அண்ணே.. அந்த மாதிரி ஒரு பேச்சு இருக்கிறது உண்மைதான். நட்ராஜ் போன்ற நல்ல பெயரெடுத்த அதிகாரிகளை, கட்சிக்குள்ள இழுத்து, ஆம் ஆத்மி கட்சி போல, தேர்தலில் எப்படியாவது வெற்றி பெறலாம்னு நினைக்கிறாங்க பிஜேபி. ஆனா இது விஷயமா இது வரை நட்ராஜ் எந்த முடிவும் எடுத்த மாதிரி தெரியலை”
“சரி.. ஜாபர் சேட் தப்பிச்சுட்டார் போல இருக்கே”
“மத்திய அரசு அவர் மேல வழக்கு தொடர அனுமதி மறுத்ததன் பின்னணியில், பழைய கவர்னர் அலுவலகத்தில் ப்ரோக்கரா இருந்த நஜிம்முதீன்தான் காரணம்னு சொல்றாங்க. நஜீம்முதீனும், நாராயணசாமியோட மகனும் ரொம்ப நெருக்கமா இருக்கிறாங்க. நாராயணசாமி மூலமாத்தான் இந்த வழக்கில் அனுமதி மறுக்கப்பட்டிருக்கு”
ஜாபரை பாத்ததும் பெருசு மூஞ்சுல என்னா சிரிப்பு ?
“நஜிம்முதீன் இன்னுமா பவர்ஃபுல்லா இருக்காரு ? ” என்று ஆச்சர்யமாக கேட்டான் பீமராஜன்.
“என்னடா இப்படி கேக்குற ? பயங்கர பவர்ஃபுல்லா இருக்காரு. ரெண்டு மாசம் கர்நாடகா போய் தங்கி, அம்மாவுக்கு பெங்களுரு சொத்துக் குவிப்பு வழக்கில் எப்படியாவது தண்டனை வாங்கிக் கொடுக்கறேனா இல்லையா பாருன்னு சபதம் போட்டிருக்காரு”
“அது அவரால முடியுமா என்ன ? “
“தானாவே தண்டனை ஆகக்கூடிய வழக்குதான் அது. ஆனா, நஜிம்முதீனுக்கு இருக்கக் கூடிய செல்வாக்கில் அது நடந்தாலும் நடக்கலாம்”
“நஜீம்முதீன் மேல லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நடந்துக்கிட்டு இருக்குல்ல .? “
“அண்ணா பல்கலைக்கழக ஊழல்களை ஒழுங்கா விசாரிச்சாலே நஜிம்முதீனை சிறையில் அடைக்க முடியும். ஆனா லஞ்ச ஒழிப்புத் துறையில் நடக்கும் விசாரணையின் வேகத்தைப் பார்த்தா 2025ல கூட விசாரணையை முடிக்க மாட்டாங்க. எப்ஐஆர் போட்டதும் சிபிஐயில் செய்வது போல, ஜாபர் சேட்டை கைது பண்ணியிருக்கணும். ஆனா, அவரும் ஐபிஎஸ் அதிகாரியாச்சே.. அதனால கடைசி வரைக்கும் கைது பண்ணலை. அது மாதிரிதான் நஜிம்முதீன் மீதான விசாரணையும்”
“சரி.. அவர் மீது வழக்கு தொடுக்க அனுமதி மறுத்துட்டாங்களே. இதை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத் துறை என்ன பண்ணப் போறாங்க ? “
“அவர்தான் அரசு அதிகாரி. அவர் மீது வழக்கு தொடுக்கத்தான் மத்திய அரசு அனுமதி வேணும். அவர் மனைவி தனி நபர்தானே. அரசு ஊழியருக்கு உதவி பண்ணதுக்காக அவர் மீது மட்டும் வழக்கை தொடர்ந்து நடத்தலாம்னு லஞ்ச ஒழிப்புத் துறை முடிவு பண்ணதா சொல்றாங்க. “
“நல்லது நடந்தா சரி.. சரி. சென்னை மாநகர ஆணையாளர் ஜார்ஜுக்கும், பத்திரிக்கையாளர்களுக்கும் ஏதோ உரசல்னு சொல்றாங்களே.. ? “
“ஆமா. சமீபத்தில் அவர் ஆங்கிலப் பத்திரிக்கையாளர்களை மட்டும் சந்திச்சு ஆட்டோ மீட்டர் தொடர்பா பேசினார். தமிழ்ப் பத்திரிக்கையாளர்களை பைசாவுக்கு மதிக்கிறதில்லைன்னு தமிழ் பத்திரிக்கையாளர்கள் புலம்பறாங்க. “
“ஏனாம்.. தமிழ்ப் பத்திரிக்கையார்களை அவர் ஏன் சந்திக்கிறதில்லை ? “
“அது என்னமோ தெரியலை.. ஆரம்பத்துல இருந்தே தமிழ்ப் பத்திரிக்கையாளர்னா அவருக்கு எளக்காரம். அவருக்குத்தான் எளக்காரம்னு பாத்தா, உளவுத்துறை இணை ஆணையர் வரதராஜுவுக்கும் இளக்காரமாத்தான் இருக்கு. ஜார்ஜுதான் மலையாளி. இவர் தமிழ் ஆளுதானே.. சமீபத்துல, வாட்சப் மென்பொருள் மூலமா, பத்திரிக்கையாளர்களுக்கென ஒரு க்ரூப்பை தொடங்கியிருக்கார்.
அந்த க்ரூப்புலயும் வெறும் ஆங்கிலப் பத்திரிக்கையாளர்கள் மட்டும்தான். தமிழ்ப் பத்திரிக்கையாளர்கள் ஒருத்தர் கூட இல்ல. ரெண்டு பேரும் வசமா சிக்கும்போது, தமிழ்ப் பத்திரிக்கையில கலா மாஸ்டர் மாதிரி கிழி கிழி ன்னு கிழிப்பாங்க. அப்போ இவங்களை காப்பாத்த ஆங்கிலப் பத்திரிக்கையாளர்கள் வர்றாங்களான்னு பாப்போம்”
“நீதித்துறை செய்திகள் என்னப்பா இருக்கு ? ” என்றார் கணேசன்.
“அண்ணே.. நாம ஏற்கனவே பேசிக்கிட்டு இருந்தோம் தெரியுமா ? “
“நெறய்ய விஷயம் பேசிக்கிட்டு இருந்தோம். எதைச் சொல்ற ? “
“வேலுமணி ன்ற பெண் வழக்கறிஞரை நீதிபதியாக்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் பரிந்துரை பண்ணார். அவங்க மேல ஊழல் புகார் இருக்குன்னு பிரதமர் அலுவலகம் திருப்பி அனுப்பியதையும், அவங்க கவுண்டர் சமூகத்தை சேர்ந்தவங்கன்றதால, அவங்களை எப்படியாவது நீதிபதியாக்கியே தீருவேன்னு நீதிபதி சதாசிவம் கங்கணம் கட்டிக்கிட்டு இருந்ததையும் சொன்னேன் ஞாபகம் இருக்கா ? “
“இருக்குப்பா… நீதிபதி ஆயிட்டாங்களா ? “
“எல்லா புகார்களையும் உதாசீனப்படுத்திட்டு அவங்களுக்கு மட்டும் தனியா நீதிபதிக்கான நியமன உத்தரவு வந்து அவங்க நீதிபதியாவும் பொறுப்பேத்துக்கிட்டாங்க. அதோட மட்டுமில்ல, அதிமுக ரத்தத்தின் ரத்தம் போல, நியமன உத்தரவு வந்ததும் ஜெயலலிதாவை சந்திச்சு ஆசி வாங்கிட்டாங்க”
“என்னப்பா சொல்ற ? நீதிபதிக்கான உத்தரவு வந்த பிறகு, ஜெயலலிதாவை சந்திச்சாங்களா ? “
“அண்ணே…. இந்த மாதிரி நீதிபதிகள் அரசியல்வாதிகளை சந்திக்கிற வழக்கத்தை முதல்ல தொடங்கி வச்சது கருணாநிதி. நீதிபதிகள் சி.டி.செல்வமும், ராஜா இளங்கோவும், நீதிபதி நியமன உத்தரவு வந்த பிறகு கருணாநிதியை சந்திச்சாங்க. இப்போ அதிமுக ஆட்சியில்லையா ? அதனாலதான் வேலுமணி போய் ஜெயலலிதாவை சந்திச்சிருக்காங்க”
“அம்மாவை சந்திச்சா கால்ல விழணுமே.. ? விழுந்தாங்களா ? “
“அதெல்லாம் விழாம இருந்திருப்பாங்களா ? விழுந்திருப்பாங்க. அதுக்கு உண்டான புகைப்படம் எடுக்காம பாத்துக்கிட்டு இருப்பாங்க. இந்த மாதிரி அதிமுக அடிமையெல்லாம் நாளைக்கு நீதிபதியா வந்து உக்காருவாங்க. அவங்களையும் வழக்கறிஞர்கள் மை லார்டுன்னு கூப்பிடணும்… தலையெழுத்து எப்படி இருக்கு பாத்தீங்களா ? “
“அற்புதம்பா.. அற்புதம்.. இப்போ நீதிபதிகளில் கொங்கு வேளாளர் பிரிவு தொடங்க போதுமான எண்ணிக்கையில் ஆட்கள் வந்துட்டாங்களா ? “
“வந்துட்டாங்க. ஆனா பட்டியல் இன்னும் முடியலை. இது வரைக்கும் உள்ள நீதிபதிகளில் எம்.ஜெயச்சந்திரன், எம்.எம்.சுந்தரேஷ், எம்.துரைசாமி, கேபிகே.வாசுகி, கல்யாணசுந்தரம் மற்றும் சமீபத்தில் நீதிபதியான வேலுமணியோட சேத்து ஆறு பேர் இருக்காங்க. ஏழு பேர் சேந்தாத்தானே சங்கம் ஆரம்பிக்க முடியும். அதனால, ஏழாவதா ஒருத்தர் பேரும் பரிந்துரைக்கப்பட்டிருக்கு”
“அது யாருப்பா அது ? “
“அண்ணே உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் சென்னை வந்த பிறகுதான், நீதிபதிகள் பட்டியல் டெல்லிக்கு போகும்னு ஏற்கனவே நான் சொன்னேன். அதே மாதிரி சதாசிவம் சென்னைக்கு சமீபத்தில் வந்தார். அவர் வந்த பிறகு பட்டியலுக்கு ஒப்புதல் கொடுத்த பிறகுதான் பட்டியல் டெல்லிக்கு போயிருக்கு. அந்தப் பட்டியலில் ஜி.வாசுதேவன், டி.கிருஷ்ணகுமார், அப்துல் குத்தூஸ், ராஜசேகர், வி.ஸ்ரீகாந்த், .அப்துல் ரஸாக், புகழேந்தி, எஸ்.எஸ்.சுந்தர், நிர்மலா ராணி, மற்றும் பிரபு ராஜதுரை ஆகிய பத்து பேர் போயிருக்கு. இது போக, கலையரசன் மற்றும் ஸஃபருல்லா கான் என்கிற பதவி உயர்வில் உயர்நீதிமன்ற நீதிபதி ஆகும் இரண்டு நீதிபதிகளின் பெயரும் போயிருக்கு”
“சரி. இதுல கவுண்டர் யாரு ? “
“கிருஷ்ணகுமார் என்பவர்தான் இதுல கவுண்டர். இப்போ மொத்தம் ஏழு பேர் ஆயிடுச்சா ? இப்போ கொங்கு வேளாளர் பேரவை நீதிபதிகள் பிரிவு ஆரம்பிக்கலாமா ? “
“பிரமாதம்பா.. நல்ல நீதி…. நியாயமான நீதி.. “
“அது மட்டுமில்ல. இந்தப் பட்டியலில் உள்ள நிர்மலா ராணி என்பவர், கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் உமாநாத்தின் மகள். ஜனநாயக மாதர் சங்கத்தின் தலைவர் வாசுகியின் சகோதரி. இந்த இரண்டு தகுதியையும் தவிர, இந்த அம்மாவுக்கு சட்டம் னா என்னன்னே தெரியாது. கிலோ என்ன விலைன்னு கேப்பாங்க. ஆனா இவங்க பெயர் போயிருக்கு”
“அப்படிப்பட்ட ஆளை எதுக்காக நீதிபதி சதாசிவம் பரிந்துரைக்கணும் ? “
“நிர்மலா ராணி கிட்டத்தட்ட சதாசிவத்தை மிரட்டி தன் பெயரை சேர்க்க வச்சதா சொல்றாங்க ? “
“எப்படி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை மிரட்ட முடியும் ? நீதிபதி கங்குலி மாதிரி ஏதாவது விவகாரமா இருக்குமோ ? ” என்றார் கணேசன்.
“அண்ணே.. விபரம் தெரியாம நாம அப்படியெல்லாம் பேசக்கூடாது. இடதுசாரி வழக்கறிஞர்களே, இந்த நிர்மலா ராணி எதுவுமே தெரியாத மக்கு வழக்கறிஞர் னு சொல்றாங்க. உண்மை தெரியாம நாம என்னைக்கும் அப்படி பேசக் கூடாது”
“சென்னை உயர்நீதிமன்றம் மிகச் சிறந்த நீதிமான்களான நிரப்பப்படப் போகுதுன்னு சொல்லு.. “
“மிக மிக மிக சிறந்த நீதிமான்களால் இந்த பாரம்பரியம் மிக்க நீதிமன்றம் நிரப்பப்படுவதற்கான பெருமை அத்தனையும், நீதிச்சக்ரவர்த்தி சதாசிவத்தையே சேரும். எல்லாம் சிவமயம்” என்று கூறி விட்டு தமிழ் எழுந்தான்.
“தம்பி.. இதை மட்டும் சொல்லிட்டுப் போப்பா.. புதிய தலைமுறையோட ஆங்கிலச் சேனலை ஊத்தி மூடிட்டாங்களாமே ? ” என்றார் கணேசன்.
“ஆமாம்ணே… ஊத்தி மூடிட்டாங்க. ஏக தடபுடலா தொடங்கப்பட்டு பல்வேறு முக்கிய பத்திரிக்கையாளர்களை வேலைக்கு எடுத்து ட்ரையல் ரன் ஓட்ற அளவுக்கு டெவலப் ஆயிடுச்சு. இப்போ திடீர்னு நிறுத்திட்டாங்க”
“என்ன காரணம்னு தெரியுமாப்பா ? “
“வருமான வரித்துறை சோதனைகளுக்குப் பிறகு பணப்பற்றாக்குறைன்னு சொல்றாங்கண்ணே”.
“தம்பி… பல்வேறு கல்லூரிகள் மூலமா மருத்துவப் படிப்பு, பல் மருத்துவப் படிப்பு, பொறியியல் படிப்பு, செவிலியர் படிப்பு ன்னு, கல்விக் கொள்ளை அடிக்கும் பச்ச முத்து கிட்ட பணம் இல்லன்னு சொன்னா, முட்டாள் கூட நம்ப மாட்டானேப்பா ? “
சிரித்தபடியெ சொன்னான் தமிழ் “பச்சமுத்துவைப் பத்தி நல்லா புரிஞ்சி வச்சிருக்கீங்கண்ணே… தென்னகத்தை மையமாகக் கொண்டு, ஒரு தேசிய ஆங்கிலச் சேனல் தொடங்கப்படுவது தங்களுக்கு நல்லது இல்லன்னு காங்கிரஸ் கட்சி நினைக்குது. பச்சமுத்து, ரொம்பவும் தீவிரமா பிஜேபியை சப்போர்ட் பண்றதால, இது சிக்கலை ஏற்படுத்தும்னு நம்பறாங்க. அதனால, வருமான வரித்துறை சோதனையை சுட்டிக் காட்டி, சேனல் தொடங்குனா, இன்னும் பல சோதனைகள் காத்திருக்கு. மொதல்ல தலையில இருந்து டோப்பாவை கழட்டிடுவோம் ன்னு சொன்னதும், பச்சமுத்து, வாயை மூடிக்கிட்டு சேனலையும் மூடிட்டார்” என்று சொன்னபடி எழுந்தான் தமிழ்.
சபை கலைந்தது.