1995ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நீதிபதி சிவராஜ் பாட்டில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்தார். ஜெயலலிதா மீது வழக்கு தொடுக்க அப்போது கவர்னராக இருந்த சென்னா ரெட்டி அனுமதி அளித்ததை எதிர்த்து, தொடரப்பட்ட வழக்கில் டாக்டர் சுப்ரமணிய சுவாமி ஆஜராகி வாதாடினார். அப்போது அவர் சொன்ன வாசகம் “A Pre-Nazi situation is prevailing in Tamil Nadu” தமிழ்நாடு நாஜிக்கள் ஆளுகைக்கு செல்ல இருப்பது போன்ற சூழல் உருவாகியிருக்கிறது.
கிட்டத்தட்ட அதே போன்றதொரு சூழல்தான் இப்போது நிலவுகிறது. கடந்த இரண்டரை ஆண்டுகால ஜெயலலிதா ஆட்சி முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மோசமாக இருந்தும், ஊடகங்களில் இது குறித்து ஒரு முணுமுணுப்பும் இல்லாத அளவுக்கு நிலைமை மிக மிக மோசமாக இருக்கிறது.
சுதந்திரத்துக்கு முந்தைய இந்தியாவில் ஊடகங்கள் வெகு சுதந்திரமாக இயங்க முடிந்தது. ஆனால், இன்று ஜெயலலிதாவின் ஆட்சியில் ஊடகங்கள் சுதந்திரமாக இயங்க முடியாமல், அரசை விமர்சிப்பது ஒரு புறம் இருக்கட்டும்; அரசுக்கு எதிரான செய்திகளைக் கூட வெளியிட முடியாத ஒரு அவல நிலை நிலவுகிறது.
199ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ஜெயலலிதாவின் ஆட்சியைப் போன்ற ஒரு அராஜக ஆட்சியை தமிழகம் கண்டதில்லை. அப்படிப்பட்ட அராஜக ஆட்சி நடந்தால் கூட, அன்று ஊடகங்கள் ஜெயலலிதா அரசுக்கு எதிராக மிகப்பெரிய போராட்டங்களை முன்னெடுத்தன. சுப்ரமணிய சுவாமி ஒற்றை ஆளாக, ஜெயலலிதா அரசை எதிர்த்து தனிப்பட்ட முறையில் போராடினார். அதற்காக அதிமுக மகளிர் அணியை வைத்து, ஜெயலலிதா மிகப்பெரிய அராஜகங்களை அரங்கேற்றினார். அந்த நேரத்தில் ஜெயலலிதாவை எதிர்த்து மிகப்பெரிய போராட்டங்களை முன்னெடுத்திருக்க வேண்டிய திமுக, தடா சட்டத்தின் கீழ் நேர்ந்த கைதுகளின் காரணமாக தொடக்கத்தில் வெகுவாக அடக்கி வாசித்தது. ஆனாலும் பின்னாட்களில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம், வாழப்பாடி ராமமூர்த்தி, போன்றோருடன் கூட்டு சேர்ந்து, ஜெயலலிதாவுக்கு எதிரான பெரிய போராட்டங்களை முன்னெடுத்தது திமுக. அப்போது ஜெயலலிதா ஆட்சிக்கு எதிராக சன் டிவி, நக்கீரன் உள்ளிட்ட ஊடகங்கள் ஆற்றிய பணி அளப்பறியது. ஊடகங்கள் ஆற்றிய அந்தப் பணியின் காரணமாகவே ஜெயலலிதா 1996 தேர்தலில் வரலாறு காணாத தோல்வியை சந்திக்க நேர்ந்தது. அதிமுக கூட்டணி போட்டியிட்ட 232 இடங்களில் நான்கில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. ஜெயலலிதாவே பர்கூர் தொகுதியில் மண்ணைக் கவ்வினார். 182 தொகுதிகளில் போட்டியிட்ட திமுக 173 தொகுதிகளில் பெற்றி பெற்றது. 40 தொகுதிகளில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட தமிழ் மாநில காங்கிரஸ், 39 தொகுதிகளில் வெற்றி பெற்றது. படுதோல்வியை சந்தித்த ஜெயலலிதா மீது பல்வேறு ஊழல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. ஜெயலலிதா இனி மீண்டு எழவே முடியாது என்று அனைவரும் கருதிக் கொண்டிருந்த நேரத்தில், 1998ம் ஆண்டு நடந்த பாராளுமன்றத் தேர்தலில் 23 இடங்களில் போட்டியிட்ட அதிமுக 18 இடங்களைக் கைப்பற்றியது.
1996ம் ஆண்டு அடைந்த படு தோல்வியில் இருந்து ஜெயலலிதா பாடம் கற்றுக் கொண்டிருப்பார் என்று எதிர்ப்பார்த்த அனைவரையும் ஏமாற்றினார். 2001ம் ஆண்டு, 140 இடங்களில் போட்டியிட்ட அதிமுக 132 இடங்களில் வெற்றி பெற்றது. ஜெயலலிதா மாறியிருப்பார், திருந்தியிருப்பார் என்றே தமிழக மக்கள் வாக்களித்தனர். ஆனால் நான் முன்பை விட இன்னும் மோசமாககிவிட்டேன் என்பதையே ஜெயலலிதா மக்களுக்கு பதிலாகத் தந்தார். ஆட்சிக்கு வந்த உடனேயே, கருணாநிதி நள்ளிரவு கைது, அரசு ஊழியர்கள் சலுகைகள் ரத்து, பத்திரிக்கைகள் மீது வழக்கு, பத்திரிக்கையாளர்கள் சிறையில் அடைப்பு, மதமாற்றத் தடைச் சட்டம், ஆடு மாடு கோழிகள் வெட்ட தடை என்று தன்னை ஒரு ஹிட்லர் போலவே கருதினார் ஜெயலலிதா. வாக்களித்த சில மாதங்களிலேயே, மக்கள் வருந்தி வேதனையுற்றனர். 2006ல் மீண்டும் திமுக ஆட்சி. கருணாநிதி வரலாற்றில் இல்லாத அளவுக்கு குடும்ப ஆதிக்கம் மேலோங்கியது. காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி அமைத்து, வெட்கமே இல்லாமல் தன் குடும்பத்தை முன்னிறுத்தினார் கருணாநிதி. ஜனநாயகம் இல்லாத சர்வாதிகார ஆட்சி நடந்த ஈராக் போன்ற நாடுகளில் நடப்பதைப் போல, பட்டவர்த்தனமாக துளியும் வெட்கமில்லாமல் தன் குடும்ப உறுப்பினர்கள் கொள்ளையடிப்பதை அங்கீகரித்தார் கருணாநிதி.
தினமணி நாளேட்டில் ஒரு கார்ட்டூன் வந்தது. அந்தக் கார்ட்டூனில், உதயநிதி தயாரிப்பில், அருள் நிதி நடிப்பில், கலாநிதி வெளியீட்டில், இந்தியத் தொலைக்காட்சிகளில் முதன் முறையாக என்று கருணாநிதியின் குடும்பத்தின் ஆதிக்கத்தை எள்ளி நகையாடி அந்த கார்டூன் வெளியிடப்பட்டிருந்தது. தன் குடும்பத்தின் திரைப்படத் துறை ஆதிக்கத்தை அப்பட்டமாக, வெட்கமின்றி நியாயப்படுத்தினார் கருணாநிதி. அன்று மாலை நடந்த ஒரு விழாவில் பேசிய கருணாநிதி
“காலையில் நான் ஒரு பத்திரிகையைப் பார்த்தேன். அந்தப் பத்திரிகையிலே ஒரு விகடத் துணுக்கு. என்ன விகடத் துணுக்கு என்றால்- “கலைஞர் வரலாற்றிலேயே முதன் முறையாக- கலைஞர் கதை வசனத்தில்- கலைஞர் பேரன் தயாரிப்பில்- கலைஞர் பேரன் இயக்கத்தில்- கலைஞர் பேரன் நடித்த- புத்தம் புதிய திரைக்காவியம்- கலைஞர் டி.வி.யில் மிக விரைவில் காணத் தவறாதீர்கள்” என்று இப்படியொரு விளம்பரம் போன்ற விகடத் துணுக்கு.
அந்தப் பத்திரிகையைப் படித்தவர்கள் எல்லாம் இதைக் கண்டிருக்கக் கூடும். “அடடே……!” என்ற தலைப்பில் வெளி வந்துள்ளது இது. என்ன..கலைஞருக்கு மகன் இருக்கக் கூடாதா? கலைஞருக்கு பேரன் இருக்கக் கூடாதா? கலைஞருக்கு பேத்தி இருக்கக் கூடாதா? அவர்கள் திரைப் படத்துறையிலே ஈடுபடக் கூடாதா? வேறு யாருக்கும் வாரிசுகள் இருந்து, அவர்கள் அந்தந்த துறையிலே ஈடுபட்டதே கிடையாதா? நான் உதாரணத்திற்காக சொல்கிறேன். இங்கேயுள்ள நம்முடைய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் மகள்கள், மருமகன் தனுஷ் ஆகியோர் இல்லையா? அந்தக் குடும்பத்திலே ரஜினி மட்டும் தான் நடிக்கலாமா? தனுஷ் நடிக்கக் கூடாதா?. அந்தக் குடும்பம் மாத்திரமல்ல. நான் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். இந்தியாவிலே பிரிதிவிராஜ் கபூர், பிரமாண்டமான நடிகர். மாநிலங்களவையிலே எட்டாண்டு காலம் உறுப்பினராக இருந்தவர்.
கலைஞர் வீட்டில் மாத்திரம் உதயநிதி, கலாநிதி, தயாநிதி, அருள் நிதி, அறிவு நிதி என்று வந்தால் அது ஆகாது. குறுக்கே நூல் போட்டவர்களுக்கு அது பிடிக்காது. இதற்காக ஒரு பெரிய கேலிச் சித்திரம் வரைகிறார்கள் என்றால் நான் அவர்களைக் கோபித்துக் கொள்ளவில்லை. அவர்கள் மீது வருத்தப்படவில்லை. ஆனால் உண்மையை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். பிரிதிவி ராஜ் கபூரின் பேரன் பேத்தி கொள்ளுப் பேரன், பேத்தி வரை இருக்கலாம் கலைத் துறையிலே- மற்றவர்களின் இல்லங்களில் இருக்கலாம்- என்னுடைய அருமை நண்பர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மகன் பிரபு இருக்கலாம், பிரபுவின் மகன் துஷ்யந்த்- அவர் இருக்கலாம், ஆனால் கருணாநிதி மாத்திரம் இருக்கக் கூடாது. ஏன் என்றால் கருணாநிதி செய்கிற ஒரே ஒரு குற்றம் திராவிட இனத்திற்காக அவன் பாடுபட்டுக் கொண்டிருக்கிறான், அவன் திராவிடச் சமுதாயத்திற்காக பாடுபட்டுக் கொண்டிருக்கிறான், அதை ஒழிக்க வேண்டும், அதை வீழ்த்த வேண்டுமென்ற குறுகிய நோக்கமே தவிர வேறு உண்மையான எண்ணமிருந்தால் என் பெயர் ஞாபகத்திற்கு வரும்போது, பிரிதிவி ராஜ் கபூரின் பெயரும் ஞாபகத்திற்கு வந்திருக்க வேண்டும். என் பெயர் ஞாபகத்திற்கு வந்த போது, நம்முடைய ரஜினி அவர்களின் பெயரும் ஞாபகத்திற்கு வந்திருக்க வேண்டும்.”
“இப்படி அப்பட்டமாக, தன்னுடைய குடும்பத்தின் ஆதிக்கத்தை நியாயப்படுத்திப் பேசினார் கருணாநிதி. கள்ள லாட்டரி விற்பவனின் தயாரிப்பில் கதை வசனம் எழுதி, கள்ள லாட்டரி நடத்தி சம்பாதித்த பணத்தில் கதை வசனம் தயாரிக்க தந்த 50 லட்சத்தை வெட்கமேயின்றி வாங்கிக் கொண்டார் கருணாநிதி.
கோவையில் செம்மொழி மாநாடு என்று கோடிக்கணக்கில் அரசு விழா நடத்தி, அதை ஏறக்குறைய தனது குடும்ப விழாவாகவே மாற்றினார் கருணாநிதி. கருணாநிதியின் குடும்பத்துக்காக மட்டும் 85 அரசு கார்கள் தயாராக நின்றன. கோவையின் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் 120 அறைகள் கருணாநிதி குடும்பத்துக்காக மட்டும் ஒதுக்கப்பட்டன. செம்மொழி மாநாட்டில், முதல்வருக்கு ஒதுக்கப்படுவது போல, கருணாநிதி குடும்பத்துக்காக மட்டும் தனிப் பாதை ஒதுக்கப்பட்டது. மாநாட்டு அரங்கத்தில் முதல் நான்கு வரிசைகள், கருணாநிதி குடும்பத்தினர் மட்டுமே அமர்வதற்காக ஒதுக்கப்பட்டது. அமைச்சர்கள், அதிகாரிகள் ஆகியோர் அதற்கு பின்னரே அமர வைக்கப்பட்டனர்.
நாளொரு பாராட்டு விழாவும், பொழுதொரு திறப்பு விழாவுமாக, கருணாநிதியின் புகழ் பாடுவதே அன்றாட நிகழ்வாக மாறிப்போனது. கருணாநிதி குடும்பத்தின் அப்பட்டமான ஆதிக்கத்தைப் பார்த்த மக்கள் அருவெறுப்படைந்தனர். 8 பிள்ளைகள், 80 பேரன்கள், 800 உறவினர்கள் என்று தமிழகம் முழுக்க அவர்கள் நடத்திய ஆதிக்கம் மக்களை கடும் கோபம் கொள்ளச் செய்தது. அந்த கடும் கோபத்தின் விளைவே, 2011 தேர்தலில், ஜெயலலிதாவுக்கு கிடைத்த அபிரிமிதமான வெற்றி.
1991 மற்றும் 2001 ஆகிய இரண்டு முறைகளும் ஜெயலலிதாவின் ஆட்சி குறித்தும், ஜெயலலிதா குறித்தும், மக்களுக்கு நன்றாகவே தெரிந்தாலும் கருணாநிதி மீதும், கருணாநிதி குடும்பத்தின் மீதும் இருந்த தீராத வெறுப்பின் காரணமாக, வெகுண்டெழுந்து ஜெயலலிதாவுக்கு வாக்களித்தனர். இந்த முறையும் ஜெயலலிதா நல்லாட்சி தருவார் என்ற நம்பிக்கை இல்லாவிடினும், கருணாநிதி ஆட்சியை விட்டு அகற்றப்பட்டே ஆக வேண்டும் என்பதில் தீர்மானமாக இருந்த மக்கள், தங்கள் கோபத்தை 2011 தேர்தலில் வெளிப்படுத்தினர்.
2011ல் ஆட்சிப் பொறுப்பேற்ற ஜெயலலிதா, நான் நேற்றும் ஜெயலலிதாதான், இன்றும் ஜெயலலிதாதான், நாளையும் ஜெயலலிதாதான் என்பதை தெளிவாக நிரூபித்தார். ஆட்சி பொறுப்பேற்றதுமே, “நான் ஆட்சிக்கு வந்ததும் தமிழகத்தில் இருந்த கொள்ளையர்கள், வழிப்பறித் திருடர்கள் அண்டை மாநிலத்துக்கு ஓடிப்போய் விட்டனர்” என்று சிறுபிள்ளைத்தனமாக பேசினார்.
அண்ணா நூலகத்தை மருத்துவமனையாக மாற்றுவது, அரசு அலுவலகத்துக்காக கட்டப்பட்ட தலைமைச் செயலகத்தை மருத்துவமனையாக மாற்றுவது, கடற்கரையில் எம்.ஜி.ஆர் நினைவகத்தில் இரட்டை இலைச் சின்னம் வைப்பது, சமச்சீர் கல்வியை ரத்து செய்வது, சாலைப்பணியாளர்களை வேலை நீக்கம் செய்வது, மக்கள் நலப்பணியாளர்களை பணி நீக்கம் செய்வது, என்று அற்பத்தனமான மற்றும் மக்கள் விரோத காரியங்களில் ஜெயலலிதா தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டு வருகிறார். அம்மா குடிநீர், அம்மா உணவகம் போன்று ஏழை மக்களுக்கு பயன்படும் நல்ல திட்டங்கள் இருந்தாலும், அதிலும் தன் அற்பத்தனத்தை வெளிப்படுத்தும் வகையில் அந்த குடிநீர் பாட்டில்களில் தன் படத்தையும், இரட்டை இலை சின்னத்தையும் பொறித்துக் கொள்கிறார் ஜெயலலிதா. ஜெயராம் அல்லது சந்தியா தேவி சம்பாதித்து வைத்த சொத்துக்களில் மக்களுக்கு மலிவு விலையில் குடிநீர் பாட்டில்களை வழங்கினால் ஜெயலலிதா தன் படத்தை போட்டுக் கொள்வது பொருத்தமாக இருக்கும். மக்கள் வரிப்பணத்தை நிர்வாகம் செய்யும் அதிகாரம் தன்னிடம் வந்து விட்டது என்ற ஒரே காரணத்துக்காக, வெட்கமேயில்லாமல், குடிநீர் பாட்டில்களில் தன் படத்தை போட்டுக் கொள்கிறார். அரசு வழங்கும் விலையில்லா மிக்சி மற்றும் கிரைண்டர்களில் தன் படத்தை போட்டுக் கொள்கிறார். மினி பேருந்துகளில் தன் படத்தை போட்டுக் கொள்கிறார். நாட்டை அடக்கியாள நினைக்கும் சர்வாதிகாரி எப்படி செயல்படுவாரோ, அதே போல செயல்படுகிறார் ஜெயலலிதா.
தேரான் தெளிவும் தெளிந்தான் கண் ஐயுறவும் தீரா இடும்பைத் தரும் என்ற வள்ளுவன் வாக்கிற்கு முழு உதாரணமாக திகழ்கிறார் ஜெயலலிதா.
கடந்த இரண்டரை ஆண்டுகளில் 14 முறை அமைச்சரவை மாற்றம் நிகழ்ந்துள்ளது. இந்தியாவில் வேறு எங்கும் இத்தனை அமைச்சரவை மாற்றங்கள் நிகழ்ந்திருக்குமா என்பது சந்தேகமே. முன்னாள் அமைச்சர்களின் பட்டியல் இந்நாள் வரை 17. எஞ்சியுள்ள நாட்களில் இன்னும் எத்தனை பேர் முன்னாள் அமைச்சர்களாவார்கள் என்பது யாருக்கு புரியாத புதிராக இருக்கிறது.
சென்னை நகரில் ஆறு நாட்களுக்கு பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்பட்டது கூட தெரியாமல் ஒரு முதலமைச்சர் ஆட்சி செய்யும் அளவுக்கு இணைப்பு நிலைமை மிக மிக மோசமானதாக இருக்கிறது. அதிகாரிகளோடு தொடர்பில்லை, அமைச்சர்களோடு தொடர்பில்லை, மக்கள் பிரதிநிதிகளோடு தொடர்பில்லை, சசிகலாவைத் தவிர வேறு யாரோடும் தொடர்பில்லாத நிலையில் உள்ள ஒரு முதல்வரால் தமிழகம் ஆளப்பட்டுக் கொண்டிருக்கிறது. மாநிலத்தை நிர்வாகம் செய்ய வேண்டிய முதல்வர், ஜோதிடர்களின் பேச்சைக் கேட்டு திருமணம் நடத்திக் கொண்டிருக்கிறார் இணைப்பு.
ஆட்சிக்கு வந்து நியமிக்கப்பட்ட உள்துறை செயலாளரான ஷீலா ராணி சுங்கத் 15 நாட்களில் மாற்றப்பட்டார். அதன் உள்துறை செயலாளராக வந்த ராமேஷ்ராம் மிஷ்ரா ஆறு மாதத்தில் மாற்றப்பட்டார். ராமேஷ்ராம் மிஷ்ரா மாற்றப்பட்டு ராஜகோபால் நியமிக்கப்பட்டார். ராஜகோபாலின் ஆயுளும் ஆறு மாதங்கள்தான். அதன் பின்னர் நிரஞ்சன் மார்டி நியமிக்கப்பட்டார். தற்போது நிரஞ்சன் மார்டியும் மாற்றப்பட்டு அபூர்வா வர்மா உள்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தின் மிக முக்கியமான துறையான தொழில் துறைச் செயலாளர்களும் இதே போல மாற்றப்பட்டுக் கொண்டே இருக்கின்றனர். காவல்துறை மாற்றங்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம்.
சமீபத்தில் மாற்றப்பட்ட உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி
இப்படி அடிக்கடி நிகழும் மாற்றங்களால், அமைச்சர்களும் சரி, அதிகாரிகளும் சரி எந்தப் பணியையும் செய்யத் தயங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நிர்வாகம் ஏறக்குறைய ஸ்தம்பித்துள்ளது. நேர்மையான அதிகாரிகள் மாற்றப்படுவார்கள் என்ற கருத்து அனைத்து அதிகாரிகள் மத்தியிலும் நிலவுகிறது. க்ரானைட் ஊழலை வெளிக்கொணர்ந்த ஐஏஎஸ் அதிகாரிகள் சகாயமும், அன்சுல் மிஷ்ராவும் மாற்றப்படுகின்றனர். சத்துணவுப் பணியாளர்கள் தேர்வில் கட்சிக்காரர்களின் தலையீட்டைத் தடுத்த பாலாஜி ஐஏஎஸ் மாற்றப்படுகிறார். டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் ஊழலை பெருமளவு குறைத்த உதயச்சந்திரன் மாற்றப்படுகிறார். இப்படி தங்கள் பணியைச் செய்தால் மாற்றப்படுவோம் என்ற கருத்து அதிகாரிகளுக்கு ஒரு புறம் இருந்தாலும், எப்படி இருந்தாலும் என்று மாறுதல் உத்தரவு வருமோ என்ற எண்ணத்தில் நாம் எதற்காக வேலை செய்ய வேண்டும் என்ற காரணத்தினாலும், அரசாங்கத்தில் எந்தத் திட்டங்களும் செயல்படாமல் முடங்கிப் போய் இருக்கிறது. அதிகாரிகள் அச்சப்படுவது போலவே, அமைச்சர்களும் எதை செய்தாலும் தப்பாகிப் போய்விடுமோ என்ற அச்சத்தில் எதையுமே செய்யாமல் இருக்கிறார்கள்.
இது ஒரு புறம் இருக்க, தேர்தல் செலவுக்காகவும், வழக்கமாக நடக்கும் வசூலின் ஒரு பகுதியாகவும் அமைச்சர்கள் கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறார்கள். கப்பம் கட்டாத அமைச்சர்களுக்கு பதவி பறிபோகும் என்பது பட்டவர்த்தனமாக தெரிந்த காரணத்தால், அத்தனை அமைச்சர்களும் வசூலை வாரிக் குவிக்கிறார்கள். போதாத குறைக்கு, தற்போது அமைச்சர்களுக்கு இடப்பட்டிருக்கும் உத்தரவு, தேர்தல் செலவுக்காக எவ்வளவு முடியுமோ, அவ்வளவு வசூலிக்க வேண்டும் என்பது.
ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தாலே சட்டம் ஒழுங்கு, லண்டன் மாநகரை விட சிறப்பாக இருக்கும் என்று, ஜெயலலிதாவை ஆதரிப்பவர்கள் சொல்வதுண்டு. ஆனால், இன்று கொலைகளும், கொள்ளைகளும், அன்றாட நிகழ்வாகி உள்ளன. தனக்கு பிடிக்காத மன்னார்குடி மாபியா கூட்டத்தைச் சேர்ந்தவர்களை சிறையில் தள்ளுவதற்காக, அப்பட்டமாகவும், வெளிப்படையாகவும், காவல்துறை இயந்திரத்தை பயன்படுத்தி பல்வேறு பொய் வழக்குகளில் அவர்களை சிறையிலடைக்கிறார் ஜெயலலிதா. அந்த மன்னார்குடி மாபியாவின் கொள்ளைகளால் கோபத்தில் இருந்த மக்கள், ஜெயலலிதாவின் அதிகார துஷ்பிரயோகத்தைப் பற்றிக் கவலைப்படாமல், மன்னார்குடி மாபியாக் கூட்டத்தினர் சிறைக்குச் செல்வதை மகிழ்ச்சியோடு வரவேற்ற வண்ணம் இருக்கின்றனர். இதற்கு முன்னால் வளர்ப்பு மகனாக இருந்த சுதாகரனோடு பிணக்கு ஏற்பட்டதும், அவரை ஹெராயின் வழக்கில் சிறையில் அடைத்த ஜெயலலிதா இந்த முறை நில அபகரிப்பு வழக்கை கையில் எடுத்திருக்கிறார்.
ஆண்டுக்கு நான்கு முறை கவலையே படாமல், கொடநாடு சென்று ஓய்வெடுக்கிறார் ஜெயலலிதா. கொடநாடு சென்றாலும் அரசு நிர்வாகம் தடையின்றி இயங்குவதாக தம்பட்டம் அடித்துக் கொள்ளும் ஜெயலலிதா, அப்படித் தடையின்றி இயங்குவதற்காக, அதிகாரிகள் மேற்கொள்ளும் விமானப் பயணத்தால் ஏற்படும் கூடுதல் செலவினம் எவ்வளவு என்று பேசுவதில்லை. ஜெயலலிதா கொடநாடு செல்வதால், முதல்வர் அலுவலகப் பணியாளர்களில் கணிசமானவர்கள் கொடநாடு செல்ல வேண்டியுள்ளது. தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர், டிஜிபி, உள்ளிட்ட இதர முக்கிய அதிகாரிகள் அவ்வப்போது கொடநாடு செல்ல வேண்டியுள்ளது. கொடநாடு செல்லும் ஜெயலலிதாவின் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காகவும் கணிசமான மக்கள் பணம் செலவிடப்படுகிறது.
நாட்டில் நடக்கும் பிரச்சினைகளைக் கூட அமைச்சர்களோ, அதிகாரிகளோ முதல்வரிடத்தில் தெரிவிக்க முடியாத ஒரு நிலை ஏற்பட்டிருக்கிறது. அதிகாரிகள் அஞ்சுகிறார்கள். அமைச்சர்கள் அஞ்சுகிறார்கள். சசிகலாவைத் தவிர வேறு யாருமே ஜெயலலிதாவை அணுகி எதையும் விவாதிக்க முடியாத ஒரு தீவில் இருக்கிறார் ஜெயலலிதா. அதிகாரிகளையோ, அமைச்சர்களையோ நேரில் சந்திக்கும்போது கூட, அவர்கள் விரும்பியதை பேசும் சுதந்திரம் இல்லாத நிலையே நீடிக்கிறது. எதையாவது பேசினால் அம்மா கோபித்துக் கொள்வாரோ என்ற பயம் அத்தனை பேரிடமும் உள்ளது. மனதில் பட்டதைச் சொல்லுங்கள் என்று ஜெயலலிதாவும் யாருக்கும் எந்த சுதந்திரத்தையும் வழங்காமல், அதற்கு பதிலாக தன்னைப் பார்த்து அனைவரும் பயப்படுவதை ஒவ்வொரு நொடியாக அனுபவித்து சிலாகிக்கிறார் ஜெயலலிதா.
1991 மற்றும் 2001ல் இல்லாத ஒரு மோசமான நிகழ்வாக ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகள் அதிமுக அடிமைகள் போல நடந்து கொள்ளும் மோசமான போக்கு இந்த அதிமுக ஆட்சியில் ஏற்பட்டிருக்கிறது. சமீபத்தில் நடந்து முடிந்த ஆட்சியர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்கள் மாநாட்டில் அதிகாரிகள் நடந்து கொண்ட விதம், அதிமுக அடிமைகளையும் விஞ்சும் விதமாக இருந்தது. தனிப்பட்ட முறையில் பேசும் இதர ஐஏஎஸ் அதிகாரிகள், சில அதிகாரிகள் முதல்வரின் காலைத் தொட்டு வணங்கி என் பேச்சை தொடங்குகிறேன் என்று பேசுவதும், புரட்சித் தலைவி அம்மா அவர்கள் என்று பேசுவதும் உங்கள் உடம்பைக் கூசச் செய்கிறது என்று கூறுகின்றனர். ஆனால் அதிகபட்சமாக 30 தொகுதிகள் மட்டுமே வெல்லக் கூடிய வாய்ப்பு உள்ள தன்னைப் பார்த்து, இந்தியாவின் பிரதமராக வேண்டும் என்று அதிகாரிகள் பேசுவதைப் பார்த்து புளகாங்கிதம் அடைகிறார் ஜெயலலிதா. வெறும் 30 தொகுதிகளில் வெற்றி பெறும் வாய்ப்பு மட்டுமே உள்ள தன்னை கிண்டல் செய்கிறார்களோ என்ற சந்தேகம் ஜெயலலிதாவுக்கு வந்திருக்க வேண்டும். மாறாக, அதை அப்படிய உண்மை என்று நம்பி இரும்பூது எய்துகிறார் ஜெயலலிதா.
ஒரு மூத்த பத்திரிக்கையாளர் பேசுகையில், ‘அதிமுக அரசியல்வாதிகள் அடிமை மனோபாவத்தோடு ஜெயலலிதாவின் காலில் விழுவதும், அவர் புகழ் பாடுவதும் இயல்பான விஷயம். ஆனால், படித்த ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், அரசியல்வாதிகள் போல ஒரு அலுவல் சார்ந்த கூட்டத்தில் பேசுகையில் ஜெயலலிதா அதை கண்டிக்க வேண்டும். மாறாக, அதை வரவேற்கிறார். இப்படி ஜெயலலிதா அதை வரவேற்பது மற்ற அதிகாரிகளுக்கு ஒரு செய்தி. என்னை இப்படி புகழ்வதை நான் வரவேற்கிறேன் என்ற செய்தியை அவர் சொல்லுகிறார். இதனால் நேர்மையாக பணியாற்றும் அதிகாரி கூட தன்னை ஒரு ஐஏஎஸ் அதிகாரி என்பதை மறந்து கட்சிக்காரராக மாறும் சூழலை ஜெயலலிதா ஏற்படுத்துகிறார்’ என்றார்.
இன்று அதிகாரிகள் புகழ்வதில் புளகாங்கிதம் அடையும் ஜெயலலிதாவுக்கு நாளை திமுக ஆட்சிக்கு வந்தால், இதே அதிகாரிகள் வாய் கூசாமல் கருணாநிதியை புகழ்வார்கள் என்பது புரியவில்லை. புரியவில்லையா, அல்லது புரிந்து கொள்ள விரும்பவில்லையா என்பது தெரியவில்லை.
புரிந்து கொள்ள விரும்பவில்லை என்பதே சரியாக இருக்க முடியும். 70 கோடி ரூபாய்க்கும் மேலாக செலவு செய்து, அமைச்சரவையில் உள்ள அத்தனை அமைச்சர்களையும் அனுப்பி, தானே நேரடியாக போய்ப் பிரச்சாரம் செய்து ஏற்காடு தேர்தலில் பெற்ற வெற்றியை இந்த ஆட்சிக்கு கிடைத்த அங்கீகாரமாகவே பார்க்கிறார் ஜெயலலிதா. ஏற்காடு இடைத்தேர்தலில், இத்தனை அதிகார துஷ்பிரயோகங்களையும் மீறி, திமுக வாக்கு வங்கி குறையவில்லை என்பதை கவனத்தில் கொள்ள மறுக்கிறார்.
டெல்லி போல, பிஜேபி காங்கிரஸ் கட்சிக்கு மாற்றாக ஆம் ஆத்மி கட்சி உருவானது போல, தமிழகத்தில் உருவாக வாய்ப்பு இல்லாத நிலையே ஜெயலலிதாவையும், கருணாநிதியையும் மீண்டும் மீண்டும் தவறிழைக்க வைக்கிறது. இரண்டு திராவிடக் கட்சிகளுக்கும் மாற்றே இல்லை என்ற நிலைமையே இந்த இருவரையும் இத்தனை இறுமாப்போடு நடந்து கொள்ள வைக்கிறது. 1991ம் ஆண்டு ஜெயலலிதா பதவியேற்றதும் ஒரு மூத்த பத்திரிக்கையாளரிடம், ஜெயலலிதாவுக்கும் கருணாநிதிக்கும் என்ன வேறுபாடு என்று கேட்கப்பட்டபோது அவர் சொன்னார். இருவருக்கும் வேறுபாடே இல்லை. “ஜெயலலிதா ஒரு வேட்டி கட்டிய கருணாநிதி, கருணாநிதி ஒரு புடவை கட்டிய ஜெயலலிதா” என்று. அதை மெய்ப்பிக்கும் விதமாகவே இருவரும் நடந்து கொண்டு வருகின்றனர்.
எம்.ஜி.ஆர் தன்னோடு நெருக்கமாக இருந்த ஒரு பத்திரிக்கையாளரிடம் சொன்னது…. “நான் ஏன் கருணாநிதியை தீய சக்தி என்று கூறுகிறேன் என்று நீங்கள் வருத்தப்படுகிறீர்கள். கருணாநிதி தன்னை எதிர்ப்பவரை, தன்னை விட மோசமான மனிதராக மாற்றும் வல்லமை படைத்தவர். அதனால்தான் அவரை தீயசக்தி என்கிறேன்” என்றார். கருணாநிதி தன்னை எதிர்த்த ஜெயலலிதாவை, அவரை விட மோசமான மனிதராக மாற்றியுள்ளார் என்பதே உண்மை.
யதார்த்த நிலைமைகளை புரிந்து கொள்ளாமல், தன்னுடைய அடிமைகள் சொல்வதை அப்படியே நம்புகிறார் ஜெயலலிதா. நாற்பதே தொகுதிகள் உள்ள தமிழகத்தில், நாற்பதிலும் வெற்றி பெற வாய்ப்பு இல்லை என்ற நிலையிலும், தன் அடிமைகள் நீங்கள்தான் பிரதமர் என்று கூறுவதை அப்படியே நம்பி மோசம் போகிறார் ஜெயலலிதா.
தமிழக வாக்காளர்கள் அறிவற்றவர்கள் அல்ல. அத்தனையும் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்து, தேர்தல் நேரத்தில் தக்க பாடத்தை புகட்டுவார்கள். அந்த பாடத்தை புகட்டுவதற்காக, மீண்டும் கருணாநிதிக்கு வாக்களிக்கவும் தயங்க மாட்டார்கள் என்பதை ஜெயலலிதா புரிந்து கொள்ளவில்லை. நல்ல ஆட்சி நடத்துவதை விட, திருமணங்கள் நடத்தி வைப்பதும், யானைகளுக்கு முகாம் நடத்துவதும், யாகங்கள் நடத்துவதுமே தனக்கு வெற்றி வாய்ப்பைத் தரும் என்ற பொய்யான நம்பிக்கையில் அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறார் ஜெயலலிதா.
ஜெயலலிதா கொடைக்கானலில் ப்ளசன்ட் ஸ்டே ஹோட்டல் கட்ட அனுமதி வழங்கியதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்ற நீதிபதி ஸ்ரீனிவாசன் சுட்டிக்காட்டிய திருக்குறளைத்தான் இப்போதும் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும்.
குறையை உணர்த்துவோர் இல்லாத அரசு தானாகவே கெடும்.
ஜெயலலிதாவின் ஆட்சிக்கு பொருத்தமான ஆதவன் தீட்சண்யாவின் கவிதை.
காலுக்குத் தொப்பியும் தலைக்கு செருப்பும் அணியுமாறு
இந்த நிமிடம்வரை உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படவில்லை
கண்ணிருக்கும் இடத்தில் கண்ணும்
காதிருக்கும் இடத்தில் காதுமே இருந்துவிட்டுப்போகட்டுமென்று
மாட்சிமை தங்கிய அரசு
குடிமக்களை இன்றும் அனுமதித்திருக்கிறது கருணையுடன்
தொடர்ந்தும் வாய்வழியாகவே உண்பதை மாற்றுவது குறித்து
இன்றைய அமைச்சரவைக்கூட்டத்திற்குப் பிறகு அறிவிக்கப்படும்
ஒரு மாறுதலுக்காகவும் காற்றை மிச்சப்படுத்தவும்
மூக்கின் ஒரு துவாரத்தை தூர்த்து மூடும் திட்டம்
நள்ளிரவு 12 மணி முதல் அமலுக்கு வருகிறது
உலகிலேயே முதன்முறையாக
தண்டவாளத்தில் பேருந்து தார்ரோட்டில் ரயில்
துறைமுகத்தில் விமானம் விமானநிலையத்தில் கப்பல் என்று
அரசு எடுத்துவரும் ஆக்கப்பூர்வ மாற்றங்களுக்கு ஆதரவளிக்குமாறு
குடிமக்கள் எச்சரிக்கப்படுகிறார்கள்
பிரசவ ஆஸ்பத்திரியை சுடுகாட்டுக்கு மாற்றியுள்ள அரசு
நாட்டையே சுடுகாடாக மாற்றும் திட்டம் படிப்படியாக நிறைவற்றப்படும்
கோன் எவ்வாறோ குடிக்களும் அவ்வாறேயானபடியால்
அவர்களும்
எதையும் எப்போதும்
ஒரே இடத்தில் நீடித்திருக்கவிடமாட்டார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
வழி தவறிய ஊடகங்கள். அடுத்த கட்டுரையில்