மகா.தமிழ்ப் பிரபாகரன். இலங்கை ராணுவம் மற்றும் உளவுப் படையால் தற்சமயம் கடத்தப்பட்டு, இலங்கை தீவிரவாதக் குற்றத் தடுப்புப் பிரிவினரால் விசாரிக்கப்பட்டு வருகிறார்.
இந்த மகா. தமிழ்ப் பிரபாகரன், புலித்தடம் தேடி என்ற நூலின் ஆசிரியர். 22 வயது. தீவிரமான தமிழ் உணர்வு காரணமாக ஊடகத்துறைக்கு வந்தவர். குறிப்பாக புலிகளின் மீதும், ஈழத்தமிழர் விவகாரத்திலும் உள்ள ஆர்வத்தின் காரணமாகவே ஊடகத்துறைக்கு வந்தவர். விகடனின் மாணவப் பத்திரிக்கையாளர் திட்டத்தில் சேர்ந்து பயிற்சி பெற்றவர்.
பயிற்சியின் முடிவில் 2011ம் ஆண்டின் சிறந்த மாணவப் பத்திரிக்கையாளராக தேர்ந்தெடுக்கப்படுகிறார். சிறந்த மாணவப் பத்திரிக்கையாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதையொட்டி, அவரை ஜுனியர் விகடனிலேயே பணியில் சேரச் சொல்லி வழங்கப்பட்ட வாய்ப்பை நிராகரித்து விட்டு, புலம்பெயர்ந்த தமிழர்கள் மூலம் எனக்கு நார்வேயில் ஒன்றரை லட்சம் சம்பளத்தில் வேலை கிடைக்க உள்ளது என்று கூறி, விகடன் வாய்ப்பை நிராகரிக்கிறார். அதன் பின்னர், நார்வே வேலை கைகூடாத காரணத்தால், தந்தி டிவியில் சீமானின் மக்கள் முன்னால் நிகழ்ச்சியில் சில காலம் பணியாற்றுகிறார். ஈழத் தமிழர் விவகாரத்தில் உள்ள ஆர்வம் மற்றும் உணர்வின் காரணமாக, தன்னிச்சையாக இலங்கை சென்று, அங்குள்ள தமிழர் பகுதிகளை பார்வையிட்டு வந்தார். அந்த அனுபவங்களை தொடராக எழுத ஜுனியர் விகடனில் அனுமதி கிடைத்ததையொட்டி, “புலித்தடம் தேடி” என்ற பெயரில் அந்த அனுபவங்களை தொடராக எழுதுகிறார். அந்த தொடர், தமிழகத் தமிழர் மட்டுமல்லாமல், புலம் பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
அந்த தொடரை, நூலாக வெளியிட விகடன் பிரசுரமே முன் வருகிறது. விகடன் பிரசுரம் நூல் தயாரித்து முடித்ததும், விகடன் குழுமத்தில் யாரிடமும், தகவலும் தெரிவிக்காமல், அனுமதியும் பெறாமல், தன்னிச்சையாக ஒரு நூல் வெளியீட்டு விழாவை நடத்துகிறார் தமிழ்ப் பிரபாகரன். அந்த நூல் வெளியீட்டு விழாவில், பிரபல ஈழ வியாபாரி வைகோ கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறார். இது விகடன் நிறுவனத்தில் பெரும்பாலானோருக்குப் பிடிக்கவில்லை.
தொடர் எழுதும் முன்பாக இலங்கை சென்று வந்த பிரபாகரன், அதற்குப் பின்னால் நடந்த பல்வேறு விஷயங்களை, இலங்கையிலிருந்து வெளிவரும் சஞ்சிகைகள் மூலமாகவும், புலம் பெயர்ந்த தமிழர்கள் நடத்தும் இணையதளம் மூலமாகவும் தரவுகளை எடுத்து எழுதி வந்தார்.
ஆனாலும், அதன் பிறகும், விகடன் குழும இதழ்களுக்காக அவ்வப்போது கட்டுரைகளை எழுதிக் கொடுத்து வந்துள்ளார் தமிழ்ப் பிரபாகரன். இப்படியே சென்று கொண்டிருந்தபோதுதான், ஒரு நாள் திடீரென்று நான் இலங்கை செல்லப்போகிறேன்… தற்போது தமிழ் மக்கள் என்ன நிலையில் உள்ளார்கள் என்பதை கண்டறிந்து மீண்டும் ஒரு கட்டுரை எழுதப்போகிறேன் என்று தன் நண்பர்களிடம் கூறி, அதற்கான பொருளாதார உதவிகளைச் செய்யுமாறு கேட்டுள்ளார். ஆனால் பெரும்பாலான நண்பர்கள், அந்த முயற்சி ஆபத்தானது, அதனால், அதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தியதோடு, பொருளாதார உதவியும் செய்ய முடியாது என்று தெரிவித்து விட்டனர்.
இதற்குப் பிறகு எங்கிருந்தோ பொருளாதார உதவி பெற்று, யாரிடமும் சொல்லாமல், திடீரென்று கிளம்பி இலங்கை சென்றுள்ளார். இலங்கை சென்றவர், இலங்கையில் எதிர்க்கட்சி எம்.பியான ஸ்ரீதரன் உதவியோடு தமிழர் பகுதிகளை சுற்றிப் பார்த்துள்ளார். இலங்கை எம்.பி ஸ்ரீதரனின் பேட்டியையும் எடுத்துள்ளார் பிரபாகரன். பேட்டி எடுத்ததோடு தமிழர்ப் பகுதிகளில் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தபோது, கிளிநொச்சி மாகாணம், கிராஞ்சி என்ற இடத்தில், இலங்கை ராணுவத்தினரால் பிரபாகரன் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரபாகரன் கைது செய்யப்பட்ட தகவல், இலங்கை தமிழ் ஊடகவியலாளர்கள் மூலமாக வெளியுலகிற்கு எடுத்துச் செல்லப்பட்டது. நேற்று மதியம் கசிந்த இந்த செய்தி, இன்று காலை முதல், புலம் பெயர் இணையதளங்களால் பரவலாக வெளியிடப்பட்டது. இன்று காலை முதல், சமூக வலைத்தளங்களில் இச்செய்தி பரவி வருகிறது.
ஆனால், இந்த நிமிடம் வரை, விகடன் நிறுவனத்தின் இணையதளத்திலோ, அல்லது விகடன் குழும இதழ்களிளுக்காக தனித்தனியாக வைத்திருக்கும் சமூக வலைத்தள பக்கங்களிலோ தமிழ்ப் பிரபாகரனின் கைது குறித்து ஒரு வரிச் செய்தி கூட வெளியிடப்படவில்லை.
விகடன் தரப்பில், பிரபாகரன் மீது கோபம் இருக்கலாம். பிரபாகரன், மாணவ நிருபர் பயிற்சி முடித்த பிறகு கூட, செல்லும் இடங்களிலெல்லாம் தன்னை விகடன் நிருபர் என்றே சொல்லி வந்திருக்கிறார். சில மாதங்கள் முன்பு, ஈழ வியாபாரி வைகோ சாஞ்சி சென்று, பாரதீய ஜனதா கட்சியை எதிர்த்து போராட்டம் நடத்தியபோது, தமிழ்ப் பிரபாகரனும் வைகோவுடன் விகடன் சார்பாக சாஞ்சி சென்றார்.
இது போல, தொடர்ந்து விகடன் நிறுவனம், பிரபாகரனை தங்கள் தேவைக்கு ஏற்ப பயன்படுத்திக் கொண்டது. இதனால் இயல்பாக தன்னை விகடன் ஊழியராகவே பிரபாகரன் செல்லும் இடங்களிலெல்லாம் அடையாளப்படுத்திக் கொண்டார். இது குறித்து விகடன் குழுமத்தினருக்கு கோபம் இருப்பது நியாயமானதே. ஆனால் பல ஆண்டுகளுக்கு முன்பாக மாணவப் பத்திரிக்கையாளராக பயிற்சி முடித்தவர்களை இன்று வரை விகடன் நிறுவனம், தன்னுடைய பல்வேறு குழும பத்திரிக்கைகளுக்காக ஊதியமின்றி பயன்படுத்தி வருகின்றனர் என்பதே உண்மை. மாணவர்களாக உள்ள இளைஞர்களுக்கு, விகடன் நிறுவனம் வழங்கும் அடையாள அட்டை, சமுதாயத்தில் மிகப்பெரிய அங்கீகாரத்தை தருகிறது. அந்த அடையாள அட்டையை வைத்திருந்தால், குடித்து விட்டு வாகனம் ஓட்டலாம், காவல்துறையில் சென்று பஞ்சாயத்து பேசலாம், ஆசிரியர்களை மிரட்டலாம். இது போல் பல்வேறு பயன்களை ஊடக அடையாள அட்டை தருவதால், அந்த மாணவர்கள் எவ்வித தயக்கமும் இல்லாமல் ஊதியமின்றி வேலை செய்து வருகின்றனர்.
பிரபாகரன் போல, பல்வேறு முன்னாள், இன்னாள் மாணவப் பத்திரிக்கையாளர்கள் விகடன் பெயரைச் சொல்லிக் கொண்டிருப்பது விகடன் நிறுவனத்திற்கு தெரியாதது இல்லை. அப்படி இருக்கையில் குறைந்தபட்சம் மகா.தமிழ்ப் பிரபாகரனின் கைது குறித்து செய்தியை வெளியிடுவதில் என்ன தயக்கம் இருக்க முடியும் ? குறைந்தபட்சம், தங்கள் நிறுவனத்தில் மாணவப் பத்திரிக்கையாளராக இருந்தவர், புலித்தடம் தேடி தொடர் எழுதியவர் என்ற அளவிலாவது செய்தி வெளியிடலாம் அல்லவா ? இப்படி செய்தி கூட வெளியிட முடியாத அளவுக்கு விஷயத்தை இருட்டடிப்பு செய்து கொண்டு, மணலில் தலையை புதைத்துக் கொண்டுள்ளது விகடன் நிறுவனம்.
தற்போது கிடைத்த செய்தியின்படி, கைது செய்யப்பட்ட தமிழ்ப் பிரபாகரன், கொழும்பில் உள்ள தீவிரவாத குற்றத் தடுப்புப் பிரிவு கட்டிடத்தில் வைத்து விசாரிக்கப்பட்டு வருகிறார் என்று தெரிகிறது.
இன்று கைது செய்யப்பட்டுள்ள பிரபாகரன், சில நாட்கள் சித்திரவதைக்குப் பிறகு விடுதலை செய்யப்படுவார். ஆனால், இந்த விவகாரத்தால் விகடன் நிறுவத்தின் இரட்டை நிலைபாடு, மற்றும் அயோக்கியத்தனம் அம்பலமாகியுள்ளது. பிரபாகரன் மாணவப் பத்திரிக்கையாளராக இல்லாமல் கூடப் போகட்டுமே…. தமிழகத்திலிருந்து இலங்கைக்கு சுற்றுலா சென்ற ஒரு இந்தியப் பிரஜை என்ற அளவில் ஒரு செய்தி வெளியிடலாம் அல்லவா ?
மாவேயிஸ்டுகளால் ஐஏஎஸ் அதிகாரி அலெக்ஸ் பால் மேனன் கைது செய்யப்பட்டபோது, அலெக்ஸ் ஒரு முன்னாள் மாணவப் பத்திரிக்கையாளர் என்று பெருமையாக செய்தி வெளியிட்டது விகடன். தேவயானி கோபராகடே என்ற அதிகாரி அமெரிக்காவால் கைது செய்யப்பட்டபோது, அதைக் கண்டித்து செய்தி வெளியிட்டது விகடன். அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட தேவயானி பத்திரமாக உள்ளார். மாவோயிஸ்டுகளால் கைது செய்யப்பட்ட அலெக்ஸ் பால் மேனன் பத்திரமாக விடுதலை செய்யப்பட்டார்.
ஆனால் தன்னுடைய முன்னாள் மாணவப் பத்திரிக்கையாளர் ஒருவர், எவ்வித ஜனநாயக விதிமுறைகளுக்கும் கட்டுப்படாத ஒரு கொடுங்கோல் ராணுவத்தால் கைது செய்யப்பட்டு விசாரணைக்குள்ளாக்கும் செய்தியை நன்கு அறிந்தும், அது குறித்து தூதரகத்தை தொடர்பு கொண்டு, பிரபாகரனை மீட்க வேண்டிய பணிகளில் ஈடுபட வேண்டிய விகடன், இன்று செய்தி கூட வெளியிடாமல் கனத்த மவுனம் சாதிக்கிறது.
தமிழ் மக்களின் நாடித்துடிப்பு என்று ஊரை ஏமாற்றும் விகடன் குழுமம், மற்ற எந்த கார்ப்பரேட் நிறுவனத்துக்கும் சளைக்காத, ஒரு சுயநல முதலாளித்துவ கும்பல் என்பதையே விகடனின் இந்த கனத்த மவுனம் பறைசாற்றுகிறது.