இந்திய ஊடகம் சந்தித்த மிகப்பெரிய நெருக்கடி 1975ம் ஆண்டு இந்திரா காந்தியால் அறிவிக்கப்பட்ட நெருக்கடி நிலை. இந்தியாவில் உள்ள அத்தனை பத்திரிக்கைகளும் மண்டியிட்டன. அனைத்து பத்திரிக்கைகளும் சென்சார் செய்யப்பட்ட பிறகே வெளியிட அனுமதிக்கப்பட்டன. அரை நிர்வாண படங்களை வெளியிடும் டெபோஅனேர் கூட, மத்திய அரசின் தணிக்கை அதிகாரிகளால் சென்சார் செய்யப்பட்டது. முதல் முறையாக சென்சார் செய்யப்படுகையில் சென்சார் அதிகாரிகளை சந்திக்கச் சென்ற, அப்போதைய டெபோனேர் ஆசிரியர் மற்றும் தற்போதைய அவுட்லுக் ஆசிரியர் வினோத் மேத்தாவிடம் சென்சார் அதிகாரிகள் சொன்னது “நிர்வாணப் படங்கள் வெளியிடுங்கள். ஆனால் அரசியல் எழுதாதீர்கள்”. அந்த அளவுக்கு கடுமையான தணிக்கைக் கட்டுப்பாடுகள் நிலவின.
அதன் பிறகு நேரடியான நெருக்கடிகளை ஊடகங்கள் சந்திக்காவிடினும் மறைமுக நெருக்கடிகள் இருந்தே வந்தன. 1984ம் ஆண்டு இந்தியன் எக்ஸ்பிரஸ் தொடுத்த வழக்கில் ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியது. செய்தித்தாள் உருவாக்குவதற்கான காகிதத்துக்கு கடுமையான வரி விதித்தது காங்கிரஸ் அரசு. அந்த வரி விதிப்பானது, ஊடக சுதந்திரத்துக்கு எதிரானது என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில், அந்த வரி விதிப்பை ரத்து செய்த உச்சநீதிமன்றம் தன் தீர்ப்பில் இவ்வாறு கூறியது. “ஒரு ஊடகத்தின் பணியானது, வாக்களிக்கும் மக்கள் சரியான முடிவை எடுக்க ஏதுவாக செய்திகளையும் கருத்துக்களையும் வெளியிடுவதே. பொது நிர்வாகம் தொடர்பான மக்களின் கருத்தையும், செய்திகளையும், ஒரு ஊடகம் வெளியிடுகையில், அதிகாரிகளுக்கும், அரசுகளுக்கும் அது உவப்பாக இருக்காது. ஊடகங்களில் வெளியிடப்படும் கட்டுரைகளின் ஆசிரியர்கள், அரசின் நடவடிக்கைகளில் தவறு கண்டுபிடித்து, அவற்றை விமர்சித்து, அதில் உள்ள குறைகளை அம்பலப்படுத்த வேண்டும். இது போன்ற கட்டுரைகள், அரசுக்கு எரிச்சலூட்டுவதாகவும், சமயத்தில் அரசுக்கே ஆபத்து விளைவிப்பதாகவும் அமையும். ஆண்டாண்டு காலமாக உலகெங்கும் உள்ள அரசுகள் ஊடகத்தைக் கட்டப்பாட்டுக்குள் வைக்க பலவேறு வழிமுறைகளை கையாண்டு வந்துள்ளன. கேரட்டும், கம்பும் என்ற வழிமுறையை கையாண்டுள்ளன. ரகசியமாக பணம் அளித்தல், வெளிப்படையாக மான்யங்கள் வழங்குதல், மலிவான விலையில் நிலம் ஒதுக்குதல், தபாலில் பத்திரிக்கைகளை அனுப்ப சலுகை அளித்தல், அரசு விளம்பரங்களை அளித்தல், ஆசிரியர்களுக்கு பட்டங்கள் வழங்குதல், ஆசிரியர்களுக்கு அரசு பதவிகள் வழங்குதல், ஆசிரியர்களையும், பத்திரிகையாளர்களையும், முக்கிய ஆலோசகர்களாக நியமித்தல் போன்றவை ஊடகங்களை கட்டுக்குள் கொண்டு வரும் வழிகளில் ஒன்று” என்று தெரிவித்தனர்.
உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டிய அத்தனை வழிகளும் இன்று ஊடகங்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர பயன் படுத்தப்படுகின்றன. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இன்று ஊடகங்கள் முதுகெலும்பை இழந்து, ஊழல் உறக்கத்தில் ஆழ்ந்திருக்கின்றன.
1991 முதல் 1996 வரையிலான ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் மக்கள் மீதான நெருக்கடி எந்த அளவுக்கு அதிகமாக இருந்ததோ, அதே அளவுக்கு ஊடகங்கள் மிக மிக அற்புதமான பணியைச் செய்தன. குறிப்பாக நக்கீரன் அந்த காலகட்டத்தில் ஆற்றிய பணி மிக மிக சிறப்பானது. நக்கீரன் பத்திரிக்கையை முடக்க ஜெயலலிதா என்னென்ன முயற்சிகள் செய்ய முடியுமோ, அத்தனை முயற்சிகளையும் செய்தார். இல்லஸ்ட்ரேட்டட் வீக்லியின் தமிழக செய்தியாளர் கே.பி.சுனிலை, சட்டசபை உரிமை மீறலைக் காரணம் காட்டி சுனிலை கைது செய்ய வாரண்ட் பிறப்பித்தார் அன்றைய சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா. இந்த நெருக்கடிகளையெல்லாம் அன்றைய பத்திரிக்கை உலகம் மிகச் சிறப்பாக போராட்ட குணத்தோடு எதிர் கொண்டது. அந்த காலகட்டத்தில் சன் டிவி ஆற்றிய பணி ஊடக உலகில் என்றென்றும் பதிவு செய்யப்பட வேண்டியது. சாட்டிலைட் தொலைக்காட்சிகள் வளர்ந்து வந்த நேரத்தில், இந்தியாவிலிருந்து மணிலாவுக்கு வீடியோ கேசட்டை அனுப்பி செய்தி ஒளிபரப்பிக் கொண்டிருந்த காலகட்டத்தில், வளர்ப்பு மகன் திருமணம் குறித்த பல்வேறு விபரங்களை வெளியிட்டு, ஜெயலலிதாவுக்கு கடுமையான நெருக்கடிகளை கொடுத்தது சன் டிவி.
அதற்குப் பிறகு 2001-2006 ஆட்சி காலத்திலும் ஜெயலலிதாவின் பத்திரிக்கைகள் மீதான ஒடுக்குமுறைகள் தொடர்ந்தே வந்தன. ஆட்சியைப் பிடித்ததும் கஜானா காலி என்றார் ஜெயலலிதா. கருணாநிதி நான் அரிசியாக வைத்திருக்கிறேன் என்றார். அத்தனை அரிசியும் புழுத்த அரிசி, மாட்டுத் தீவனமாகக் கூட பயன்படாது என்றார் ஜெயலலிதா. அந்த அரிசி புழுத்த அரிசி அல்ல என்பதை நிரூபிக்க உணவு தானியக் கிடங்குக்குள் சன் டிவி நிருபரை, முன்னாள் அமைச்சர் பொன்முடி அழைத்துச் சென்றார். கிடங்குக்குள் அத்துமீறி நுழைந்ததாக, சன் டிவி நிருபரை, ஆட்சிக்கு வந்த முதல் 15 நாட்களுக்குள்ளாகவே கைது செய்தார் ஜெயலலிதா. அதையொட்டி பத்திரிக்கையாளர்கள் தலைமைச் செயலகத்தின் முன்பாகவே போராட்டத்தில் இறங்கினர். அதைத் தொடர்ந்து இந்து குழும ஆசிரியர்களை கைது செய்யும் முயற்சியில் இறங்கினார் ஜெயலலிதா. இந்து நாளேட்டின் ஆசிரியர் மற்றும் சிலர், சட்டப்பேரவையின் உரிமையை மீறி விட்டதாக அப்போதைய அதிமுக அடிமை பொன்னையன் தலைமையிலான உரிமை மீறல் குழு அளித்த தீர்ப்பின் அடிப்படையில், இந்து நாளேட்டின் பதிப்பாளர், ஆசிரியர், செய்தி ஆசிரியர் மற்றும் கட்டுரை எழுதிய ஜெயந்த் மற்றும் நிருபர் ராதா வெங்கடேசன் ஆகியோர் குற்றம் இழைத்துள்னர் என்பது நிரூபணம் ஆகியுள்ளதால், உடனடியாக அவர்களை கைது செய்ய வேண்டும் என்று சட்டப்பேரவை சபாநாயகர் உத்தரவு பிறப்பித்து, அதன் அடிப்படையில் நவம்பர் 2003ல், இந்து அலுவலகத்துக்குள் சோதனை நடத்தியது ஜெயலலிதா அரசு. அந்த சோதனையை மற்றும் கைது நெருக்கடியை இந்து நிர்வாகமும் ஊடக உலகமும், சிறப்பாகவே எதிர்கொண்டனர். உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு, சபாநாயகரின் அந்த உத்தரவுக்கு தடை பெறப்பட்டது. அந்த வழக்கு இன்னும் நிலுவையில் இருப்பதாக நினைவு.
அதே போல நக்கீரன் குழுமத்தை ஜெயலலிதா அந்த காலகட்டத்தில் படுத்திய பாடு சொல்லி மாளாது. எத்தனை கொடுமைகள் இழைக்க முடியுமோ, அத்தனை கொடுமைகளையும் இழைத்தார் ஜெயலலிதா. நக்கீரன் இதழின் ஆசிரியர் கோபால் ரிவால்வர் வைத்திருந்தார் என்றும், ராஜ்குமார் கடத்தலில் தொடர்பு உள்ளவர் என்றும், தடை செய்யப்பட்ட இயக்கங்களின் துண்டறிக்கைகளை கையில் வைத்திருந்தார் என்றும் பல்வேறு காரணங்களைக் காட்டி, கோபாலை போட்டா சட்டத்தின் கீழ் கைது செய்தது ஜெயலலிதா அரசு. நக்கீரனின் நிருபர் சிவ சுப்ரமணியமும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். விசாரணை என்ற பெயரில் கோபாலை எவ்வளவு அலைக்கழிக்க முடியுமோ, அவ்வளவு அலைக்கழித்தனர் காவல்துறையினர். ஜெயலலிதா ஊடகங்களுக்கு அளித்த இந்த நெருக்கடிகள், ஊடகத்தினரை, வெகுண்டெழுந்து ஜெயலலிதாவுக்கு எதிராக பேசவும் எழுதவும் வைத்தன. நக்கீரன் கோபாலுக்கு ஊடகவியலாளர்கள் மத்தியில் பெருத்த ஆதரவு எழுந்தது. பல்வேறு போராட்டங்கள் கிளர்ந்தெழுந்தன. அந்தப் போராட்டங்களை அடக்கவியலாமல் தவித்தார் ஜெயலலிதா. ஊடகங்கள் நடத்திய போராட்டங்களோடு சேர்ந்து, மக்கள் மத்தியிலும் ஏற்பட்ட கடும் எழுச்சியின் காரணமாக, 2004 பாராளுமன்றத் தேர்தலில் ஜெயலலிதாவுக்கு நாற்பதிலும் நாமம் சாத்தினர் மக்கள். நாற்பதிலும் சாத்தப்பட்ட நாமம், ஜெயலலிதாவை அடங்கிப் போக வைத்தது.
2006ம் ஆண்டு கருணாநிதி முதல்வராக பதவியேற்றார். முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பாராட்டு விழாக்களும் படோடாபங்களும் பரபரத்தன. கருணாநிதி அறிக்கைகளை வெளியிடாத பத்திரிக்கைகளின் “உரிமையாளர்களை” காலை ஐந்து மணிக்கே தொலைபேசியில் அழைத்து கருணாநிதி திட்டத் தொடங்கினார். பாராட்டு விழாக்களுக்கு நிருபர்களை அனுப்பாத ஊடகங்களை வறுத்தெடுத்தார்.
தனக்கு சாதகமாக செய்தி வெளியிட்ட ஊடகங்களுக்கு அரசு விளம்பரத்தை வாரி வாரி வழங்கினார். ஊடகங்களை எப்படி வழிக்கு கொண்டு வருவது என்ற கலையை உலகுக்கே உணர்த்தினார் கருணாநிதி என்று சொன்னால் மிகையாகாது. விளம்பரங்களை லஞ்சமாகக் கொடுத்து ஊடகங்களை வளைத்தார். வளையாத ஊடக அதிபர்களை நேரில் அழைத்துப் பேசினார். ஊடகங்களில் உள்ளே இருக்கும் பங்குத் தகராறில், காவல்துறையை நுழைத்து குளிர்காய்ந்தார். அதையும் மீறி அரசுக்கு எதிராக செய்திகளை வெளியிட்ட ஊடகங்களையும், நிருபர்களையும் வழக்கு போட்டு மிரட்டினார். ஊடகங்களை கருணாநிதி மிரட்டுவதற்கு அவதூறு வழக்குகளைப் பயன்படுத்தினார். அதற்கும் மசியாத பத்திரிக்கைகளின் ஆசிரியர்களை பொய் வழக்குகளில் கைது செய்தார். அழகிரியின் ரவுடிகளை விட்டு முக்கிய ஊடகங்களை மிரட்டினார்.
நெருக்கடி நிலையின்போது இந்திரா காந்தி இதே போல ஊடகங்களுக்கு தணிக்கையை அமல்படுத்தி மிரட்டியபோதும், இந்தியன் எக்ஸ்பிரஸ் போன்ற நாளேடுகள், முதல் பக்கத்தில் தலையங்கப் பக்கத்தை காலியாக அச்சடித்து, தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தின. இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸின் ராம்நாத் கோயங்காவை மிரட்டிப் பணிய வைக்க இந்திரா காந்தி எத்தனையோ வழிமுறைகளைக் கையாண்டார். இது குறித்து ராம்நாத் கோயங்கா “இந்திராவின் உத்தரவின்படி அரசு அதிகார துஷ்பிரயோகத்தின் மூலம் சட்டத்தையும் விதிமுறைகளையும் காற்றில் பறக்கவிட்டு, பொருளாதார ரீதியாக என்னையும், எனது நிறுவனங்களையும் முடக்கி, என்னை நடு வீதிக்கு கொண்டு வந்து அவமானப்படுத்த முயன்றது” என்று தெரிவித்தார். நெருக்கடி நிலை காலகட்டத்தில் ராம்நாத் கோயங்கா, அருண் ஷோரி மற்றும் சோ ராமசாமி போல, அந்த நெருக்கடிகளை எதிர்த்து நிற்க இன்று ஒரு பத்திரிக்கையாளர் கூட இல்லை என்பதுதான வேதனையான விஷயம்.
அப்படியெல்லாம் நெருக்கடிகளைச் சந்தித்து பீனிக்ஸ் பறவை போல எழுந்து வந்த ஊடகம், கருணாநிதி ஆட்சி காலத்தில் ஆட்சியாளர்களிடம் மண்டியிட்டது. எலும்புத் துண்டுகளுக்காக வாலாட்டும் நாய் போல, அனைத்து ஊடகங்களும் கருணாநிதியின் காலடியைச் சுற்றிச் சுற்றி வந்தன.
அந்தச் சூழலில்தான், ஜனநாயகத்தைக் காக்க வாருங்கள் பதிவர்களே என்ற கட்டுரை சவுக்கில் எழுதப்பட்டது. செப்டம்பர் 2010ல் எழுதப்பட்ட அந்தக் கட்டுரை இது வரை ஒரு லட்சத்து 20 ஆயிரம் வாசகர்களுக்கு மேல் படிக்கப்பட்ட கட்டுரையாக உள்ளது. இணைப்பு
2011 ஜனவரி மாதம் தேர்தல் வரப்போவதையொட்டியே, ஊடகங்களின் மீளா உறக்கம் லேசாகத் தெளிந்தது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னரே வெகுண்டெழுந்தன ஊடகங்கள். தேர்தல் வரும் வரையில், திமுகவையும், கருணாநிதியையும் வறுத்து எடுத்தன ஊடகங்கள். எதிர்க்கட்சி அந்தஸ்தைக் கூட பெற முடியாமல் படு தோல்வி அடைந்த திமுகவின் தோல்வியில் ஊடகங்கள் ஆற்றிய பங்கை மறுக்க முடியாது.
2011ல் அதிமுக ஆட்சிப் பொறுப்பேற்றதும் பத்திரிக்கையாளர்களை சந்தித்த ஜெயலலிதா, வாரம் ஒரு முறை பத்திரிக்கையாளர்களை சந்திப்பேன் என்றார். ஜெயலலிதாவின் பேச்சை, கூவம் ஆற்றில்தான் எழுதி வைக்க வேண்டும் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்தார். பத்திரிக்கையாளர்களை ஜெயலலிதா சந்திப்பது இருக்கட்டும். அவரது அமைச்சரவை சகாக்களும், அரசு அதிகாரிகளுமே ஜெயலலிதாவை சந்திக்க முடியாத நிலை ஏற்பட்டது. சசிகலாவைத் தவிர வேறு யாரும் ஜெயலலிதாவோடு உரையாட முடியாது என்று ஏற்கனவே இருந்த நிலை அப்படியே தொடர்ந்தது.
ஆட்சிக்கு வந்ததும் வராததுமாக, சமச்சீர் கல்வி என்ற அற்புதமான திட்டத்தை ரத்து செய்தார். அதைக் கண்டித்து தலையங்கங்களும் கட்டுரைகளும் வெளியிட வேண்டிய ஊடகங்கள், ஆட்சிக்கு வந்த 100 நாட்களுக்கு விமர்சிக்கக் கூடாது என்று தங்களுக்குத் தாங்களே கட்டுப்பாடுகள் விதித்துக்கொண்டன. தொடர்ந்து சாலைப்பணியாளர் மற்றும் மக்கள் நலப் பணியாளர் நீக்கம் என்று மக்கள் விரோத உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டபோது, மக்கள் நலப் பணியாளர்களால் உண்மையிலேயே மக்களுக்கு நலனா என்று ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதின.
மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கொடநாடு சென்று ஓய்வெடுத்தார் ஜெயலலிதா. அதை கண்டித்து எழுத வேண்டிய ஊடகங்கள், கொடநாடு சென்றாலும், ஜெயலலிதா அதிகாரிகளை சந்தித்து முக்கிய கோப்புகளை கவனித்து வருகிறார், நிர்வாகத்தை தொய்வில்லாமல் நடத்துகிறார் என்று பாராட்டி எழுதின. தப்பித்தவறி ஜெயலலிதாவை எதிர்த்து எழுதிய அத்தனை ஊடகங்கள் மீதும் அவதூறு வழக்கு தொடர்ந்தார் ஜெயலலிதா. ஒரு ஊடகம் மீதான அவதூறு வழக்கு என்பது, அந்த ஊடகம் சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்பதற்கான சான்று. இந்தியா டுடே, ஜுனியர் விகடன், இந்து, டைம்ஸ் ஆப் இந்தியா, முரசொலி உள்ளிட்ட பத்திரிக்கைகள் மீது அவதூறு வழக்குகள் தொடுக்கப்பட்டன. வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு, கேப்டன் டிவியில் செய்தியை வாசித்த செய்தி வாசிப்பாளர் மீது கூட அவதூறு வழக்கு தொடுக்கப்பட்டது.
கட்சி சார்ந்த ஊடகங்களான முரசொலி, தினகரன், கேப்டன் டிவி தவிர்த்து இதர ஊடகங்கள் அரசின் இந்த அடக்குமுறையை எப்படி எதிர்கொண்டன என்றால், பாவ்லாவின் கண்டிஷனிங் தியரியில் உள்ள நாயைப் போல எதிர்கொண்டன. நாளைய செய்தித்தாளுக்கு இன்று எத்தனை விளம்பரங்கள் என்பதை மனதில் வைத்தே செய்திகளைத் தீர்மானித்தன. கருணாநிதியைப் போலவே ஜெயலலிதாவும் ஊடகங்களுக்கு விளம்பரங்களை அள்ளி அள்ளி வழங்கினார். பரமக்குடியில் நடந்த கலவரத்தை விசாரித்த சம்பத் விசாரணை ஆணையத்தின் முடிவுகள் தவறு என்று மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அறிவித்த காரணத்தால், தீக்கதிருக்கான அரசு விளம்பரங்கள் நிறுத்தப்பட்டதால், ஒரு நாளைக்கு எட்டு லட்ச ரூபாய்க்கு மேல் நஷ்டத்தை சந்தித்தது தீக்கதிர்.
கடந்த ஆட்சி காலத்தில், கருணாநிதியின் குடும்பத்தைப் பற்றி எந்த செய்தியும் வெளியிடுவது இல்லை என்று எப்படி ஊடகங்கள் முடிவெடுத்தனவோ, அதே போல ஜெயலலிதாவைப் பற்றியும், ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கு பற்றியும் தப்பித் தவறிக் கூட செய்தி வெளியிடக் கூடாது என்ற தீர்மானமான முடிவுக்கு பல்வேறு ஊடகங்கள் வந்திருக்கின்றன. ஒரு மாநிலத்தின் முதல்வர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் என்ன நடக்கிறது என்பதை விரிவாக மக்களுக்குத் தெரிவிக்க வேண்டிய கடமை ஒவ்வொரு ஊடகத்திற்கும் இருக்கிறது. ஆனால் திமுக சார்பு ஊடகங்கள் மற்றும் இந்துவை தவிர்த்து எந்த ஊடகங்களும் இது குறித்து செய்தி வெளியிடுவது இல்லை.
ஜெயலலிதாவின் இந்த மனநிலை, மற்றும் அரசு இன்று இருக்கும் சூழல் ஆகியவற்றைக் கருத்திக் கொண்டு, அரசுக்கு துதிபாடுவதையே முழு நேரப் பணியாகக் கொண்டு அரசியல் அலசல், மாநகராட்சி ரிப்போர்டர் போன்று பல்வேறு சொம்பு பத்திரிக்கைகள் புற்றீசல் போல கிளம்பியிருக்கின்றன. இந்தப் பத்திரிக்கைகளுக்கு அரசு விளம்பரங்களைத் தவிர, அதிகாரிகளின் ஆதரவும் அமோகமாக இருந்து வருகிறது.
கடந்த ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் மிக மிக சிறப்பாக தன் பணியை ஆற்றிய இந்து நாளேடு, தற்போது சித்தார்த் வரதராஜன் நீக்கப் பட்ட பிறகு, மிகவும் அடக்கி வாசிக்கிறது. ஊடக சுதந்திரம், எழுத்து சுதந்திரம் என்று வாய் கிழிய பேசும் என்.ராம், சித்தார்த் வரதராஜன் என்ற அற்புதமான ஆசிரியரிடம் இந்து நாளேடு இருக்கக் கூடாது என்று இந்து நாளேட்டை தன் குடும்ப சொத்தாகவே பாவித்து வரதராஜனை வெளியேற்றினார். சித்தார்த் வரதராஜன் இந்து நாளேட்டின் ஆசிரியராக இருந்தபோது, மிகவும் துணிச்சலாகவும், வெளிப்படையாகவும், இந்து நாளேட்டை நடத்தினார். அப்போல்லோ மருத்துவமனையில் இருந்த செவிலியர்கள் வேலை நிறுத்தம் செய்தபோது, துளியும் அச்சமின்றி செவிலியர்களின் பக்கம் இருந்த நியாயத்தை எழுதினார். இதன் காரணமாக, அப்போல்லோ மருத்துவமனை சார்பாக இந்துவுக்கு வழங்கப்பட்டுக் கொண்டிருந்த அத்தனை விளம்பரங்களும் ஒரே நாளில் நிறுத்தப்பட்டன. ஆனாலும் அது குறித்து எந்த அச்சமும் இன்றி, நியாயத்தை எழுதினார் சித்தார்த் வரதராஜன். மாலினி பார்த்தசாரதி ஆசிரியராக வந்து விடப்போகிறாரே என்ற ஒரே அச்சத்தினால், சித்தார்த் வரதராஜனை ஆசிரியராக நியமித்த என்.ராம், குடும்பத்தில் சிக்கல் தீர்ந்தவுடன், தன் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரை ஆசிரியராக நியமித்தார்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் மற்றும் தினமணி குழும நாளேடுகள், இத்தனை நாளாக பத்திரிக்கை நடத்தி வருகிறோம் என்ற கடமைக்காக பத்திரிக்கைளாக வெளி வந்து கொண்டிருக்கின்றன. ஜெயலலிதா அரசை எதிர்த்து மட்டுமல்ல, அரசு அதிகாரிகளுக்கு எதிராகக் கூட செய்திகள் வெளியிடுவதற்கு மிகுந்த தயக்கம் காட்டுகின்றன எக்ஸ்பிரஸ் குழும நாளேடுகள். மற்ற பத்திரிக்கைகளோடு போட்டி போட்டு, பிரத்யேக செய்திகளை வெளிட வேண்டும், அரசுக்கு எதிரான செய்திகளை வெளியிட வேண்டும் என்பதில் எந்த முனைப்பும் இந்தக் குழுமத்தின் நாளேடுகளுக்கு இல்லை. விற்பனையில் நான்காவது இடத்தில் இருப்பதால், அரசு விளம்பரங்கள் போதுமான அளவுக்கு வந்தால், அச்சடிக்கும் நாளேடுகளின் எண்ணிக்கையைக் கூட குறைக்கும் நிலையில் உள்ளன எக்ஸ்பிரஸ் குழும நாளேடுகள்.
அரசு செய்யும் சாதனைகள் குறித்து அரசு செலவில் செய்யும் விளம்பரங்கள் வெளியிடுவதை விமர்சித்து மூத்த வழக்கறிஞர் சோலி சோரப்ஜி, இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டில் ஒரு கட்டுரை எழுதினார். அந்தக் கட்டுரைக்கான படமாக, ஜெயலலிதா அரசு வெளியிட்ட விளம்பரத்தை வைத்த ஒரே காரணத்துக்காக எக்ஸ்பிரஸ் குழும இதழ்களுக்கான அத்தனை விளம்பரங்களையும் நிறுத்தியது ஜெயலலிதா அரசு. அன்று ஜெயலலிதாவிடம் மண்டியிட்ட எக்ஸ்பிரஸ் நிர்வாகம், இன்று வரை எழுந்திருக்கவே இல்லை. எக்ஸ்பிரஸ் மற்றும் தினமணி குழுமத்தில் பணியாற்றும் செய்தியாளர்களுக்கான நிலையான அறிவுரை என்னவென்றால், அரசுக்கு எதிராக எந்த செய்தியும் வெளியிடக் கூடாது என்பதே. அரசுக்கு எதிராக மட்டுமல்ல, அரசுத்துறைகளில் செல்வாக்காக இருக்கும் எந்த அதிகாரிக்கு எதிராகவும் செய்திகள் வெளியிடக் கூடாது என்று அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இன்று எக்ஸ்பிரஸ் நாளேட்டில், எந்த செய்தி எந்த இடத்தில் வர வேண்டும் என்பதைக் கூட தமிழக அரசின் செய்தி விளம்பரத்துறை அதிகாரிகளே தீர்மானிக்கும் அளவுக்கு நிலைமை மோசமாக ஆகியிருக்கிறது. சென்னைப் பதிப்பில் வர வேண்டிய செய்திகள், ஜெயலலிதா கொடநாட்டில் இருந்தால் கோயம்பத்தூர் பதிப்பில் வெளியிடும் அளவுக்கு நிலைமை சீரழிந்து போயிருக்கிறது.
பீகார் மாநிலத்தில் குழந்தைகளுக்கான மதிய உணவோடு சேர்த்து வைக்கப்பட்டிருந்த பூச்சிக் கொல்லி மருந்துகளால் பல்வேறு குழந்தைகள் இறந்த செய்தியின் தொடர்ச்சியாக டைம்ஸ் நவ் தொலைக்காட்சியில் வேலூர் மாவட்டத்தில் குழந்தைகளின் மதிய உணவுக்காக வைத்திருந்த முட்டைகளில் 15 ஆயிரம் முட்டைகள் அழுகிய நிலையில் இருந்ததை செய்தியாக வெளியிட்டது. இதைத் தொடர்ந்து, முதலமைச்சரின் திட்டமான மதிய உணவுத் திட்டத்தை எப்படிக் குறை கூறலாம் என்று டைம்ஸ் நவ் தொலைக்காட்சி மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது.
ஜெயலலிதா சசிகலாவை போயஸ் தோட்டத்திலிருந்து வெளியேற்றிய பின், மீண்டும் இணைந்தார்கள். மீண்டும் இணைந்ததும், கோட்டூர்புரத்தில் இருந்த ஒரு கோயிலுக்கு விடியற்காலையில் சென்று வழிபட்டார்கள். இந்தச் செய்தியை வெளியிட்ட குற்றத்துக்காக டெக்கான் க்ரானிக்கிள் நாளிதழுக்கான விளம்பரங்கள் நிறுத்தப்பட்டன. இணைப்பு. இதற்குப் பிறகு டெக்கான் க்ரானிக்கிள் ஜெயலலிதா அரசின் ஓராண்டு சாதனைகள் குறித்து விரிவாக விரிவாக விரிவாக எழுதி, விளம்பரங்கள் போல செய்திகளை வெளியிட்ட பிறகு மீண்டும் விளம்பரங்கள் வழங்கப்பட்டன.
அதைத் தொடர்ந்து, ஒவ்வொரு முதலமைச்சரும் தங்கள் சொத்துக் கணக்கை வெளியிட வேண்டும் என்ற விதியை எந்த முதலமைச்சரும் பின்பற்றவில்லை என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கிடைத்த தகவலின் அடிப்படையில் டெக்கான் க்ரானிக்கிள் வெளியிட்ட ஒரு கட்டுரை மீண்டும், ஜெயலலிதாவை கோபப்படுத்தி விளம்பரங்கள் நிறுத்தப்பட்டதோடு, சட்டப்பேரவையில் பத்திரிக்கையாளர்களுக்கு இருக்கை ஒதுக்கும் கமிட்டியில் இருந்து டெக்கான் க்ரானிக்கிள் நீக்கப்பட்டது.
டைம்ஸ் ஆப் இந்தியா நாளேடு ஓரளவுக்கு நடுநிலையோடு செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருந்தது. அப்போது ஜெயலலிதா அடுத்த வாரம் கொடநாடு செல்கிறார் என்று ஒரு செய்தி வெளியிட்டது. அந்தச் செய்தியை மறுத்து அதிமுக வழக்கறிஞர்கள் சார்பில் ஒரு வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அந்த நோட்டீஸை அப்படியே முதல் பக்கத்தில் வெளியிட்டு TIMES OF INDIA APOLOGISES என்று ஜெயலலிதாவின் காலில் மண்டியிட்டது டைம்ஸ் ஆப் இந்தியா. அதே வாரத்தில் ஜெயலலிதா கொடநாடு சென்றார் என்பது வேறு விஷயம்.
திமுக பொதுச் செயலாளர் மு.க.ஸ்டாலின் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் சமரசம் ஏற்பட்டதையொட்டி, அந்த முதல் தகவல் அறிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. அந்த செய்தியை முதல் பக்கத்தில் வெளியிட்டதற்காக இந்து நாளேட்டுக்கு வழங்கப்பட்டு வந்த விளம்பரங்களை நிறுத்தினார் ஜெயலலிதா.
சீரியசாக வரும் கட்டுரைகளுக்கு கோபப்படுவது ஒரு புறம் இருக்கட்டும். நகைச்சுவை நிகழ்ச்சிகளை பொதுவாக எல்லோரும் வரவேற்பார்கள். ஆனால் நகைச்சுவை நிகழ்ச்சியில் ஜெயலலிதாவை கிண்டல் செய்ததைப் பார்த்து வெகுண்டேழுந்தார் ஜெயலலிதா. சிஎன்என் ஐபிஎன் தொலைக்காட்சியில் ஒவ்வொரு ஞாயிறன்றும், சைரஸ் ப்ரோச்சா என்பவர் நடத்தும் நிகழ்ச்சி தி வீக் தட் வாஸ்ன்ட். அமெரிக்க அதிபர் முதல், அன்டார்டிகா ஆராய்ச்சியாளர் வரை ஒருவர் விடாமல் கலாய்ப்பார்கள். இந்த நிகழ்ச்சியில் ஜெயலலிதாவை பகடி செய்ததை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் அவதூறு வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த அவதூறு வழக்கை சிஎன்என் ஐபிஎன் நிறுவனம் நேரடியாக எதிர்கொண்டிருக்க வேண்டும். நீதிமன்றம் மூலம் நிவாரணம் தேடியிருக்க வேண்டும். ஆனால் அதற்குப் பதிலாக, அதிமுக மாநிலங்களவை எம்.பி மைத்ரேயன் மூலமாக, ஜெயலலிதாவின் அப்பாயின்ட்மென்ட் கேட்டு கடிதம் கொடுக்கப்பட்டிருக்கிறது அந்நிறுவனம் மூலமாக. நேரில் சந்தித்ததும், எப்படியாவது ஜெயலலிதா காலில் விழுந்து மன்றாடி, மன்னிப்பு பெறலாம் என்று தவிக்கின்றனர் சிஎன்என் ஐபிஎன் நிர்வாகத்தினர்.
இதே போல என்டிடிவியில் ஒரு நிகழ்ச்சி. என்டிடிவி குட் டைம்ஸ் என்று வரும் நிகழ்ச்சியிலும், இதே போல அரசியல் தலைவர்களை கிண்டல் செய்வார்கள். இந்த நிகழ்ச்சியில் ஜெயலலிதாவை கிண்டல் செய்த காரணத்தால், என்டிடிவி மீது அவதூறு வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த நிறுவனமும் இந்த வழக்கை நீதிமன்றத்தின் மூலமாக எதிர் கொள்வதை விடுத்து, அந்நிறுவனத்தின் முன்னாள் பத்திரிக்கையாளர் ஜெனிஃபர் அருள் மூலமாக, ஜெயலலிதாவின் காலில் விழுந்து மன்றாடியிருக்கிறது.
ஜெயலலிதா அரசு தனக்கு பணியாத ஊடகங்களை மிரட்டுவதற்கு இது வரை இல்லாத வகையில் ஒரு புது உத்தியை கையாண்டு வருகிறது. அரசுக்கு எதிராக செய்தி வெளியிட்டால், அந்த நிறுவனத்தை மிரட்டலாம் என்றால், அரசுக்கு எதிராக ஒரு வரி செய்தி கூட வருவதில்லை. இந்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவர்களின் அறிக்கைகளை வெளியிடும் ஊடகங்களின் மீதும் அவதூறு வழக்குகள் பாய்ந்து வருகின்றன. மருத்துவர் ராமதாஸின் அறிக்கையை வெளியிட்டதற்காக இந்து நாளேட்டின் மீது அவதூறு வழக்கு போடப்பட்டுள்ளது.
ஆங்கில ஊடகங்கள் மற்றும் தேசிய ஊடகங்களே இப்படி ஜெயலலிதாவிடம் மண்டியிட்டால், தமிழ் ஊடகங்களைப் பற்றிக் கேட்கவே வேண்டாம்.
தினகரன், முரசொலி, சன் டிவி, கலைஞர் டிவி, மக்கள் டிவி, கேப்டன் டிவி போன்ற ஊடகங்கள் கட்சி சார்ந்து இருப்பதால், அந்த ஊடகங்களிலிருந்து நடுநிலையையோ, நேர்மையையோ எதிர்ப்பார்க்க இயலாது.
வாரமிருமுறை மற்றும் வார இதழ்களை எடுத்துக் கொண்டால், விகடன் குழும இதழ்கள், இருக்கும் இதழ்களிலேயே சிறப்பான இதழ்களாக செயல்பட்டுக் கொண்டுள்ளன. ஜுனியர் விகடன் இதழ்களில் மட்டும்தான் ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கு குறித்து தொடர்ந்து செய்திகள் வந்து கொண்டுள்ளன. அரசு அதிகாரிகளின் செயல்பாடுகள் பற்றியும், ஆறுதல் அளிக்கக் கூடிய வகையில் செய்திகள் வருகின்றன.
குமுதம் குழுமத்தில் நடக்கும் பாகப்பிரிவினையை ஒட்டிய வழக்குகள் இன்றும் முடிவடையாத காரணத்தால், ஜெயலலிதாவுக்கு எதிராகவோ, சொத்துக் குவிப்பு வழக்கு குறித்தோ, நிர்வாகத்தில் ஏற்பட்டுள்ள தேக்க நிலை குறித்தோ, தப்பித் தவறிக் கூட ஒரு வார்த்தை வராமல் பார்த்துக் கொள்கிறார்கள்.
ஜெயலலிதா ஆட்சியில் முதல் முறையும் சரி, இரண்டாவது முறையும் சரி, ஊடகப் பணியை சரியாக செய்ததோடு அல்லாமல் பல்வேறு போராட்டங்களையும் சந்தித்தனர். ஆனால், நக்கீரன் இதழின் வீழ்ச்சி, இன்று ஒட்டுமொத்த ஊடகங்களின் வீழ்ச்சிக்கு ஒரு குறியீடு. ஜெயலலிதாவைப் பற்றியும், அவர் அரசின் அதிகாரிகள் பற்றியும், அது முழுக்க முழுக்க உண்மையா என்பது பற்றித் துளியும் கவலைப்படாமல் செய்தி வெளியிட்ட ஊடகம் நக்கீரன். ஆனால், இன்று நக்கீரனில், அரசு அதிகாரிகளில், முக்கிய அதிகாரிகளுக்கு எதிராக எந்த செய்திகளும் வருவதில்லை.
ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த உடனேயே, மாட்டுக்கறி சாப்பிடும் மாமி நான் என்று ஒரு முட்டாள் தனமான கட்டுரையை நக்கீரன் வெளியிட்டது.
கடந்த திமுக ஆட்சி காலத்தில், நக்கீரன் இணை ஆசிரியர் காமராஜுக்கு அதிகாரிகளோடு ஏற்பட்ட தொடர்பு அதிகார மையங்களோடு அவரை நெருக்கமாக்கியது. 2ஜி ஊழலில் கிடைத்த பணமும், சொகுசும், பத்திரிக்கையாளர் என்ற நிலையிலிருந்து அவரை ஒரு தொழில் அதிபராக மாற்றியது. இந்த மாற்றம் முக்கிய அரசு அதிகாரிகளுக்கு எதிராகவோ, அதிமுகவில் செல்வாக்கு பெற்ற புள்ளிகளுக்கு எதிராகவோ எந்த செய்தியும் வெளியிடால் தடுக்கும் நிலைக்கு காமராஜை மாற்றியது. சென்னை மாநகரைப் பொறுத்தவரையில் அதிமுகவின் முக்கிய புள்ளிகள் என்றால், அது கலைராஜன், பாலகங்கா மற்றும் சைதை துரைசாமி. இவர்கள் மூவருக்கும் எதிராக நக்கீரனில் எந்த செய்தியும் வராது என்கிறார்கள் விபரமறிந்தவர்கள். இது சென்னை மாநகரைப் பொறுத்தவரையில் மட்டும். இதர மாவட்டங்களைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். நக்கீரன் காமராஜுக்கு கடந்த ஆட்சியில் பல்வேறு அதிகாரிகளோடு ஏற்பட்ட நெருங்கிய தொடர்பால், இந்த ஆட்சியிலும் அவர்களுக்கு எதிராக எந்த செய்திகளும் வெளியிடுவதில்லை. கடந்த ஆட்சியில் முக்கிய பொறுப்புகளில் இருந்த அதிகாரிகளில் பலர், இந்த ஆட்சியிலும் முக்கிய பொறுப்புகளில் தொடர்வதால், அவர்களுடனான தொடர்பு காரணமாக அவர்களுக்கு எதிராக செய்தி வெளியிட மறுப்பதோடு, அவர்கள் சொல்லும் நபர்களுக்கு எதிரான செய்திகளையும் வெளியிடாமல் தடுக்கிறது நக்கீரன்.
ஜெயலலிதாவை மாட்டுக்கறி சாப்பிடும் மாமி என்று வர்ணித்து செய்தி வெளியிட்ட பின்னரும் கூட, அனுமதி இல்லாமல் கட்டப்பட்ட நக்கீரன் கட்டிடத்தை இது வரை இடிக்கவில்லை என்பதே அதிகாரிகளோடு நக்கீரன் எந்த அளவுக்கு நெருக்கமான தொடர்பில் இருக்கிறது என்பதை உணர்த்துகிறது. இருக்கும் ஊடகங்களிலேயே, நக்கீரனின் வீழ்ச்சிதான், அதிமுக அரசில் ஊடகம் எந்த அளவுக்கு ஊழலில் திளைத்துப் போயுள்ளது என்பதற்கான சான்று.
அவதூறு வழக்குகளை எதிர்கொள்ள நீதிமன்றம் செல்ல வேண்டும். வழக்கறிஞர்களை நியமிக்க வேண்டும். அதற்கு பணம் செலவாகும். அதற்கு பதிலாக, ஜெயலலிதா காலில் விழுந்து மன்றாடினால் பணத்துக்கு பணமும் மிச்சமாகும், ஜெயலலிதாவின் கடைக்கண் பார்வையும் கிட்டும் என்றே பெரும்பாலான ஊடக நிறுவனங்கள் நினைக்கிறார்கள்.
இதன் விளைவு, நியாயமாக செய்யப்பட வேண்டிய விமர்சனங்களை கூட தமிழக அரசின் மீது வைக்க மறுக்கிறார்கள். வாரம் ஒரு முறை பத்திரிக்கையாளர்களை சந்திப்பேன் என்ற சொன்ன ஜெயலலிதா ஏன் அவ்வாறு செய்வதில்லை, வாரா வாரம் செயலாளர்களை மாற்றுகிறார், பத்து நாட்களுக்கு ஒரு முறை அமைச்சர்களை மாற்றுகிறார், வருடத்தில் பாதி நாட்கள் கொடநாட்டில் இருக்கிறார், மின் வெட்டுப் பிரச்சினை, அரசின் படோடாப விளம்பரங்கள், இலவச பொருட்களில் ஜெயலலிதாவின் படத்தை அச்சிடும் கயமைத்தனம் மற்றும் அற்பத்தனம், சட்டம் ஒழுங்கு சீரழிவு, என்று ஊடகங்கள் எழுத எத்தனையோ விஷயங்கள் இருந்தும் கள்ள மவுனம் சாதிக்கின்றன ஊடகங்கள்.
ஒரு ஜனநாயகத்தில் அரசு, அதிகார வர்க்கம், அரசியல்வாதிகள், அதிகாரிகள், நீதித்துறை போன்றவை சோரம் போகலாம். ஆனால், ஊடகங்கள் சோரம் போவது, ஜனநாயகத்தின் அடித்தளத்தையே கரையான் போல அரித்து விடும். புதிய தலைமுறை உள்ளிட்ட ஊடகங்களின் அடித்தளமே ஊழலில் அமைந்துள்ளது. பெரும்பாலான ஊடகங்களின் தொடக்கமே பின்புலம் ஊழலாகவும், வளர்ந்த ஊடகங்கள் ஊழல் மற்றும் மோசடியிலும் கட்டமைக்கப்பட்டிருப்பதால், நேர்மையான செய்திகளை எதிர்ப்பார்ப்பது, முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்படுவதாக இருக்கிறது.
மிக மிக மோசமான சூழலில் தமிழகம் இருக்கிறது. ஊடகங்களின் கைகள் கட்டப்பட்டு, வாய்கள் மூடப்பட்டு, காதுகள் பொத்தப்பட்ட நிலையில், எதிர்க்கட்சிகள் செல்லரித்துப் போய் ஆளுங்கட்சிக்கு எந்த வகையிலும் சளைக்காமல் இருக்கும் நிலையில் இன்னும் நம்பிக்கை ஏற்படுத்துவது சமூக வளைத்தளங்களும், இணைய ஊடகங்களுமே. அச்சு மற்றும் ஒளி ஊடகங்களுக்கு இணையாக பல்வேறு இணையதளங்கள் செயல்பட்டு வருகின்றன. இணையத்தின் வீச்சு இன்னமும் கிராமப்புரங்களையும், பெரும்பான்மை மக்களையும் சென்றடையாத காரணத்தால் அரசு இன்னமும் இணைய ஊடகங்கள் மீது தனது அடக்குமுறையை கட்டவிழ்த்து விடாமல் இருக்கிறது. இணைய ஊடகங்களை புறந்தள்ளி அப்படி ஒன்று இருப்பதையே கவனத்தில் கொள்ளாமல் இருந்த அச்சு ஊடகங்கள், இன்று சமூக வலைத்தளங்களையும், இணைய தளங்களையும் எப்படி கவனத்தில் எடுத்துக் கொள்கிறதோ, அதே போல, அரசும், அரசு இயந்திரங்களும், இணைய ஊடகங்களைக் கண்டு அஞ்சும் நாள் வரத்தான் போகிறது.