2013ம் ஆண்டு இனிமையாகவே கடந்திருக்கிறது. 2013ம் ஆண்டு சவுக்கு தளத்தைப் பொருத்தவரை, நீதித்துறை ஆண்டாக அறிவிக்கப்பட்டது. நீதித்துறை ஆண்டாக அறிவித்தற்கு ஏற்ப, நீதித்துறையை விமர்சித்து ஏராளமான கட்டுரைகள் எழுதப்பட்டன. ஆண்டின் தொடக்கத்திலேயே நேனே தேவுடு என்ற கட்டுரை, நீதிபதி எலிப்பி தர்மாராவ் அவர்கள் விசாரித்த சில வழக்குகளைப் பற்றி எழுதப்பட்டது. இதையடுத்து, உயர்நீதிமன்ற நீதிபதிகள் தங்களின் அலுவலக உதவியாளர்களை எந்த விதிகளுக்கும் உட்படாமல், அவர்களாகவே நியமனம் செய்து கொள்வதையும், அதை எதிர்த்து தாக்கல் செய்த பொது நல வழக்கை ஆணவத்தோடு கையாண்ட விதமும் எழுதப்பட்ட கட்டுரை கொம்பு முளைத்தவர்கள்.
சவுக்கு தளத்தில் சைதை துரைசாமி குறித்து வெளியான கட்டுரைக்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும் என்று சைதை துரைசாமியின் மனிதநேய அறக்கட்டளை சார்பில் வழக்கறிஞர் அறிவிக்கை அனுப்பப்பட்டிருந்தது. அந்த அறிவிக்கைக்கு பதிலாக, மன்னிப்பு கோர முடியாது என்று தெரிவித்து, சைதை துரைசாமியின் சொத்துக் பட்டியல்களும் வெளியிடப்பட்ட கட்டுரை ஐ யம் வெரி ஹாப்பி. ஸ்டார்ட் மியூசிக். கூடங்குளம் அணு உலை தொடர்பான வழக்குகளை விசாரித்து தீர்ப்பு வழங்கி விட்டு, அந்த வழக்கில் எதிர்மனுதாரராக இருந்த மத்திய சுற்றுச் சூழல் துறையிடமே, பசுமைத் தீர்ப்பாய நீதிபதியாக விண்ணப்பித்த மோசடியான செயலை அம்பலப்படுத்தியது ஜோதி money என்ற கட்டுரை. மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் என்பவர் மற்றும் அவரது குடும்பத்தினரின் ஊழல்களை அம்பலப்படுத்தியது கயமையின் நிறம் சிகப்பு என்ற கட்டுரை. இந்தக் கட்டுரை வாசகர்களிடையே பலத்த வரவேற்பை பெற்றது. சென்னை மாநகர ஆணையாளர் ஜார்ஜ் ஆணவத்தோடு நடந்து கொண்டது பற்றி நீதிபதி ஆறுமுகசாமி கடும் கண்டனங்களை தெரிவித்து, ஜார்ஜ் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று பிறப்பித்த உத்தரவு தொடர்பான கட்டுரை அடங்காமை ஆரிருள் உய்த்து விடும். நீதிமன்ற உத்தரவுக்கு இணங்கை, ஜார்ஜ் கடைசி வரை நீதிமன்றத்தில் ஆஜராகவேயில்லை என்பது, காவல்துறைக்கு இருக்கும் செல்வாக்கைக் காட்டுகிறது. அரசியல் கட்சித் தலைவர்களுக்கு பொங்கல் வாழ்த்துக்களைச் சொல்லி, வரக்கூடிய ஆண்டில் அவர்களிடம் மக்கள் என்ன எதிர்ப்பார்க்கிறார்கள் என்பதை எடுத்துக் கூறிய கட்டுரை பொங்கல் வாழ்த்துக்கள். இந்த ஆண்டு இறுதிவரை, அந்த அரசியல் கட்சித் தலைவர்களின் செயல்பாடுகள் மோசமாகியிருக்கிறதே தவிர, சிறப்பாகவில்லை. நீதிபதி எலிப்பி தர்மா ராவ், தன்னுடைய காரியதரிசிக்கு விதிமுறைகளை மீறி வழங்கிய பதவி உயர்வும், அதை எதிர்த்து தொடரப்பட்ட பொது நல வழக்கும் பற்றிய கட்டுரை வேதனை விரக்தி பரிதாபம். சுரானாஸ் கார்ப்பரேஷன் என்ற நிறுவனம், சட்டவிரோதமாக வைத்திருந்த 400 கிலோ தங்கக் கட்டிகளை சிபிஐ வழக்கு பதிவு செய்து பறிமுதல் செய்ததும், அதை எதிர்கொள்ள, சுரானா நிறுவனம் செய்த பல்வேறு தில்லாலங்கடி வேலைகளையும் பற்றிய கட்டுரை சுரானாஸ் கோல்ட். தன் வாரிசுகளுக்கு இடையே நடைபெற்று வரும் போட்டியை கூர்தீட்டி வளர்த்து விடுவதே கருணாநிதிதான் என்றும், அவர் உயிரோடு இருக்கும் வரை, திமுக தலைவர் பதவியை யாரிடமும் ஒப்படைக்க மாட்டார் என்று கூறும் கட்டுரை வாரிசு மோதல். கருணாநிதி யார் பக்கம். சென்னை உயர்நீதிமன்ற பத்திரிகையாளர்கள், செய்யும் அட்டூழியங்களை பட்டியலிட்டுக் காட்டும் கட்டுரை டார்க் ரூம். இந்தக் கட்டுரை, பத்திரிக்கையாளர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றாலும், அதே நேரத்தில், சில பத்திரிக்கையாளர்களை சவுக்கு தளம் மீது கடும் கோபமடையச் செய்தது. பெரும்பாலான வழக்கறிஞர்கள், இந்தக் கட்டுரைக்கு பலத்த வரவேற்பை அளித்தனர்.
இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே பரபரப்பை ஏற்படுத்திய விவகாரம் விஸ்வரூபம் விவகாரம். ஒன்றும் இல்லாத ஒரு திரைப்படத்துக்காக இஸ்லாமிய அமைப்புகள் ஏற்படுத்திய பிரச்சினைகளும், அதை தமிழக அரசு கையாண்ட விதமும் கடும் விமர்சனத்துக்குள்ளாகியது. இது குறித்து, எழுதப்பட்ட கட்டுரைகள் விஸ்வரூபம், வேண்டாத ரூபம், ஓர் இரவு, அல்லாவின் திருப்பெயரால் மற்றும் சகலகலா வல்லவன் ஆன ஹே ராம் ஆகிய கட்டுரைகள். விஸ்வரூபம் திரைப்படம் தொடர்பாகவும், அது குறித்து நீதிமன்றத்தில் நடந்த வழக்குகள் குறித்தும் விரிவாக எழுதப்பட்டிருந்தது. இந்தக் கட்டுரைகள் பெரும் வரவேற்பை பெற்றாலும், இஸ்லாமியர்களின் கடுமையான எதிர்ப்பை வரவழைத்தது. பல இஸ்லாமியர்கள், சவுக்கு தளத்தை பார்ப்பன அடிவருடி என்று விமர்சிக்கும் அளவுக்கு சென்றார்கள். இருப்பினும், விஸ்வரூபம் பட விவகாரத்தில், உள்ளது உள்ளபடி நியாயமாக எழுதப்பட்டது. பத்தாம் வகுப்பு படிக்கும் ஒரு பள்ளி மாணவியின் உயிரைப் பறித்த கயவனான ஒரு ஆசிரியரைப் பற்றியும், உயர்நீதிமன்றத்தை மோசடி செய்து எப்படி முன் ஜாமீன் பெற்றார் என்ற விபரமும் ஒரு கனவு ஒரு மரணம் என்ற கட்டுரையில் எழுதப்பட்டிருந்தது. இந்தக் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தது போல, அந்த போலியான முன் ஜாமீனை ரத்து செய்ய வழக்கு தொடுக்கப்பட்டும், இந்நாள் வரை அந்த முன்ஜாமீன் ரத்து செய்யப்படவில்லை. இப்படி ஒரு முன்ஜாமீன் பெறுவதற்கு துணையாக இருந்த அரசு வழக்கறிஞர் தம்பிதுரை இன்றும் அரசு வழக்கறிஞராகத்தான் இருக்கிறார். இந்தக் கட்டுரையைப் படித்து விட்டு, அமெரிக்காவில் இருக்கும் ஒரு பெண் நண்பர், அந்தக் குழந்தையின் தங்கைக்கு கல்விச் செலவுக்காக 25 ஆயிரம் வழங்கியதும், அந்தப் பெண்ணின் பெயருக்கு வைப்பு நிதியாக அந்தப் பணம் மாற்றப்பட்டு, அந்தப் பெண்ணின் தாயாருக்கு அது வழங்கப்பட்டதும் மகிழ்ச்சியான தருணங்கள்.
மு.க.ஸ்டாலின் குறித்து குஷ்பு அளித்த பேட்டியும், அதையொட்டி அவர் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலையும் பற்றி எழுதப்பட்ட கட்டுரை வாழும் சகுனி. தன் பதவியையும் அதிகாரத்தையும் தக்க வைத்துக் கொள்ள கருணாநிதி என்னவெல்லாம் செய்வார் என்பதை விளக்கியது அந்தக் கட்டுரை. சைதை துரைசாமியின் மகன் வெற்றி ஒரு நாய்ப் போட்டியில் வெல்வதற்காக என்னென்ன அயோக்கியத்தனங்களையெல்லாம் அரங்கேற்றினார் என்பதை விளக்கிய கட்டுரை அப்பனுக்கு தப்பாமல் பிறந்த பிள்ளை. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், எப்படி ஆளுங்கட்சிக்கு அஞ்சி அஞ்சிச் சாகிறார்கள் என்பதை விளக்கிய கட்டுரை அடிமைகள் மன்றம்.
ஜெயா டிவியில் துணைத் தலைவராக பணியாற்றிய மூத்த பத்திரிக்கையாளர் கே.பி.சுனில் செய்த ஊழல்கள் குறித்து எழுதப்பட்ட கட்டுரை தீதும் நன்றும் பிறர் தர வாரா. இந்தக் கட்டுரை எழுதப்பட்ட பத்து நாட்களில், கே.பி.சுனிலின் பதவி பறிக்கப்பட்டு, அவர் ஜெயா டிவியில் இருந்து ராஜினாமா செய்து வெளியேறும் சூழல் ஏற்பட்டது.
உயர்நீதிமன்ற நீதிபதி தனபாலனின் வீட்டுத் திருமணத்தையொட்டி நடந்த படோடாபமும், ஆடம்பரங்களும், வருமானத்துக்கு அதிகமான செலவுகளும், அப்பட்டமாக தெரிந்த ஊழலும் குறித்து எழுதப்பட்ட கட்டுரை யார் சிறந்த நீதிபதி. இந்தக் கட்டுரை வழக்கறிஞர்கள் மற்றும் நீதிபதிகள் மத்தியில் சிறந்த வரவேற்பு பெற்றது. இந்தக் கட்டுரை வெளிவந்ததையடுத்து, நீதிபதி தனபாலன், வழக்கறிஞர்களை கலந்தாலோசித்து, சவுக்கு தளம் மீது காவல்துறையில் புகார் கொடுத்து கைது செய்ய வைக்கலாம் என்று ஆலோசித்துள்ளார். அப்படிச் செய்வது, நாலு பேருக்கு தெரிந்த விவகாரத்தை நாலாயிரம் பேருக்கு தெரிவிப்பது போலாகும் என்று அறிவுறுத்தப்பட்டதும், அந்த யோசனையை கைவிட்டார் நீதிபதி. இந்த ஆண்டு இறுதியில் நடந்த அவர் வீட்டின் இரண்டாவது திருமணம், எந்த படோடாபமும் இன்றி எளிமையாக நடந்தது என்பது இந்தக் கட்டுரையின் குறிப்பிடத் தகுந்த வெற்றி.
ஈழத் தமிழர் விவகாரத்தில் கருணாநிதியின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்திய கட்டுரை இது வேற வாய்… அது ?
ஈஷா மையம் நடத்தும் யோகப்பயிற்சி வகுப்புகளுக்கு சென்றதில் தெரிந்த ஒரு விவகாரம், இவர்கள் ஏதோ திருட்டுத்தனம் செய்கிறார்கள் என்பது. உடனடியாக, கோவை கிளம்பிச் சென்று, நேரடியாக கள ஆய்வு செய்து, ஈஷா மையத்தின் விதி மீறல்களையும், வன அழிப்புகளையும் ஆதாரத்தோடு அம்பலப்படுத்திய கட்டுரை அத்தனைக்கும் ஆசைப்படாதே. கட்டுரை எழுதுவதோடு நில்லாமல், ஈஷா மையத்தின் மீது தொடர்ந்து மூன்று பொது நல வழக்குகள் தாக்கல் செய்து, சட்டவிரோதமாக கட்டப்பட்ட ஈஷா கட்டிடங்களை இடிக்க வேண்டும் என்று வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது அவ்வழக்குகள். உலக சமாதானம் பேசிக்கொண்டு, ஊரை ஏமாற்றிய ஒரு திருட்டுச் சாமியாரின் உண்மை முகத்தை முதன் முறையாக உலகுக்கு அம்பலப்படுத்தியது சவுக்கு தளமே என்பதில் பெருமை கொள்கிறோம். கிட்டத்தட்ட ஈஷா சாமியாரின் அஸ்திவாரத்தை ஆட்டம் காண வைத்த பெருமை நம்மையே சாரும் என்பதை நினைத்து பெருமை கொள்வோம்.
ஈழம் தொடர்பாக போராடிய மாணவர்களை பொறுக்கி என்று அழைத்து கொச்சைப்படுத்திய சுப்ரமணிய சுவாமியை கண்டித்து எழுதிய கட்டுரை பொறுக்கி. ட்விட்டரில் தன்னிச்சையாக தனிக்காட்டு ராஜாங்கம் நடத்திக் கொண்டிருந்த சுப்ரமணிய சுவாமிக்கு ட்விட்டரிலேயே பதிலடி கொடுத்து, அவரை திணறச் செய்தோம் என்பதில் பெருமை கொள்கிறோம். இந்தக் கட்டுரை தமிழ் உணர்வாளர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. 600 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக நடந்து கொண்டிருக்கும் இடிந்தகரை போராட்டத்தின் பெருமைகளைக் கூறிய கட்டுரை கலங்கரை விளக்கம். ராஜீவ் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு தூக்குக் கொட்டடியில் உள்ள மூவரின் உயிரைக் காக்க வேண்டும் என்று கருணாநிதி குரல் கொடுத்தது கடுமையான கோபத்தையும் எரிச்சலையும் ஏற்படுத்தியது. கருணாநிதி ஆட்சி செய்த காலத்தில் மூவர் உயிரைக் காக்கும் அதிகாரம் இருந்தும், அவ்வாறு செய்யாமல், அமைச்சரவையைக் கூட்டி, கருணை மனுக்களை நிராகரித்த கருணாநிதி, எதிர்க்கட்சியாக ஆனதும், அவர்கள் உயிரைக் காக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்த அயோக்கியத்தனத்தை கண்டித்து எழுதப்பட்ட கட்டுரை, தயவு செய்து இறந்துவிடுங்கள். ஜாங்கிட் மீது ஊழல் வழக்கு பதிவு செய்யச் சொல்லி, சென்னை உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவு குறித்து எழுதப்பட்ட கட்டுரை அடி சறுக்கிய யானை.
பல்வேறு அருமையான தகவல்கள் அவ்வப்போது வந்தாலும், அந்தத் தகவல்களை வைத்து முழுமையான கட்டுரை எழுத முடியாத அளவுக்கு சின்னத் தகவல்களாக இருக்கும். ஜுனியர் விகடன், குமுதம் ரிப்போர்டர், நக்கீரன், தமிழக அரசியல் போன்ற பத்திரிக்கைகள், தங்களின் வாரமிருமுறை இதழ்களில், கழுகார், வம்பானந்தா, போன்ற பகுதிகளில், அவ்வப்போது நடக்கும் பரபரப்பான அரசியல் மற்றும் அதிகார மையங்களின் செய்திகளை வெளியிடுகின்றன. இந்தச் செய்திகளுக்காகவே அந்த பத்திரிக்கைகள் விற்கின்றன என்றால் அது மிகையாகாது. அப்படி சிறப்பான செய்திகளை வாசகர்களுக்கு, இலவசமாக வாரந்தோறும் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தொடங்கப்பட்ட பகுதியே டாஸ்மாக் தமிழ். சவுக்கின் கட்டுரைகள் பெற்றிருந்த வரவேற்பை இந்த டாஸ்மாக் தமிழ் பெறவில்லை. ஆனால், வழக்கறிஞர்கள், நீதிபதிகள், காவல்துறை அதிகாரிகள், ஐஏஎஸ் அதிகாரிகள் மத்தியில் இந்தப் பகுதி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது 30 வாரங்களைக் கடந்து வெற்றிகரமாக வீறுநடை போட்டுக் கொண்டுள்ளது.
அயோக்கியர்களையும், அநியாயம் செய்பவர்களையுமே தொடர்ந்து அடையாளம் காட்டிக் கொண்டு வந்த சவுக்கு தளத்தில், ஊழலை அம்பலப்படுத்தியதற்காக தண்டிக்கப்பட்ட ஒரு நேர்மையான அதிகாரியைப் பற்றி எழுதிய கட்டுரை நேர்மையே உன் விலை என்ன ?. வாசர்கள் இந்தக் கட்டுரைக்கு பெரும் ஆதரவைத் தந்தார்கள். மருத்துவர் ராமதாஸின் சாதி அரசியலையும், பிற்போக்குத்தனத்தையும் விமர்சித்த கட்டுரை வருந்துகிறோம். இந்தக் கட்டுரைக்கு பின்னூட்டமாக, பல வன்னிய நண்பர்கள், பல அவதூறான சொற்களால் அர்ச்சித்தனர் என்பது குறிப்பிடத் தக்கது.
கருணாநிதியின் பிறந்தநாள் அன்று, அவரை ஓய்வு பெறுங்கள் என்று வலியுறுத்தி எழுதிய கட்டுரை ஓய்வு பெறுங்கள். இலக்கிய உலகில் சிறப்பான இடத்தைப் பெற்று, சிறந்த இலக்கியவாதி மற்றும் திறனாய்வாளர் என்று அறியப்பட்ட மனுஷ்யபுத்திரனின் ஆளுமை அதலபாதாளத்தில் இந்த ஆண்டு வீழ்ச்சியடைந்தது. கருணாநிதியின் 90வது பிறந்தநாளில், திமுக கட்சிக்காரர்களை விட, காது கூசும் அளவுக்கு கருணாநிதியின் துதிபாடினார். இதையடுத்து நடுநிலையாளர் என்ற மனுஷ்யபுத்திரனின் முகத்திரை கிழிந்தது. அந்த முகத்திரையை முற்றிலும் கிழிக்கும் விதமாக, யார் இந்த மனுஷ்யபுத்திரன் என்று விரிவாக விளக்கி, அவர் மனுஷ்யபுத்திரன் அல்ல, சொம்படிச் சித்தர் என்பதை உலகுக்கு விளக்கிய கட்டுரை ஒரு கவிஞர் சித்தரான கதை. இந்தக் கட்டுரை வெளியானதை அடுத்து, எரிச்சலின் உச்சத்துக்கு போன மனுஷ்யபுத்திரன், சவுக்கு தளம், ப்ளாக் மெயில் செய்வதற்காவே நடத்தப்படுவதாகவும், ஒரு வழக்கறிஞரிடம் 10 லட்ச ரூபாய் கேட்டு மிரட்டியதாகவும் பொய்யாக எழுதினார். இப்படி பதிலுக்கு பொய்க்குற்றச்சாட்டுகளை சொன்னாலும், வீழ்ந்த அவர் ஆளுமையை அவரால் மீட்டெடுக்கவே முடியவில்லை. முகநூலில் இன்று வரை அவர் சொம்பு என்றே அழைக்ககப்பட்டு சொம்பு என்றாலே மனுஷ்யபுத்திரன் என்று அறியப்படும் நிலைக்கு ஆளாகியுள்ளார்.
அதிமுகவின் நாடாளுமன்ற வேட்பாளராக அறிமுகப்படுத்தப்பட்ட சரவண பெருமாள் கள்ளக்கடத்தல் விவகாரத்தில் ஈடுபட்டவர் என்ற விபரத்தை அறிமுகப்படுத்திய கட்டுரை தலைச்சிறந்த எம்.பி. இந்தக் கட்டுரை வெளியான மறுநாளே சரவண பெருமாள் மாற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
சஞ்சய் பின்டோ என்ற பத்திரிக்கையாளர் ஜெயலலிதாவுக்கு ஜால்ரா அடித்து எழுதிய கட்டுரையை விமர்சித்து, ஜால்ரா அடித்தே மாநிலங்களவை உறுப்பினராகும் கனவை அம்பலப்படுத்திய கட்டுரை, சொம்புக் கட்டுரை எழுதுவது எப்படி. மத்திய உளவுத்துறை அதிகாரி என்று தெரிவித்தும், பத்து காவல்துறையினர் சேர்ந்து சராமாரியாக ஒருவரை தாக்கி கடும் காயங்களை ஏற்படுத்திய விஷயத்தை அம்பலப்படுத்திய கட்டுரை வேட்டை நாய்கள். காவல்துறையினரின் அதிகார துஷ்பிரயோகம் மற்றும் அயோக்கியத்தனங்களை அம்பலப்படுத்தும் அதே நேரத்தில், வழக்கறிஞர்கள் செய்யும் அடாவடித்தனங்களையும் அம்பலப்படுத்த சவுக்கு தளம் தயங்கியதே கிடையாது. கன்னியாக்குமரியில் ஒரு ஹோட்டலில் பில் கொடுக்காமல் தகராறு செய்து, அந்த ஓட்டல் ஊழியர்களை அடித்த வழக்கறிஞர்களைப் பற்றியும், கும்பகோணம் நகராட்சியில் ஐந்து ரூபாய் தர மறுத்து அற்பத்தனமாக சண்டையிழுத்து பெரும் கலவரத்தை உருவாக்கிய வழக்கறிஞர்கள் குறித்தும் கருப்பு ஆடுகள் மற்றும் கருப்பு ஆடுகள் 2 என்ற கட்டுரையில் எழுதப்பட்டிருந்தது. பொதுமக்கள் மற்றும் வாசகர்கள் இக்கட்டுரையை வரவேற்றாலும், வழக்கறிஞர்களில் பெரும்பாலானோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
முகநூலில் நடக்கும் வாய்கால் தகராறுகளை, ஊடக சுதந்திரத்துக்கே விடப்பட்ட சவால் போல, கவிஞர் மனுஷ்யபுத்திரன், பத்திரிக்கையாளர் கவின் மலர் போன்றோர் சித்தரிக்க முயன்றார்கள். அவர்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி, இந்து நாளேட்டில், ஒரு கட்டுரை வெளியிடச் செய்தார்கள். இதற்கு எதிர்வினையாக ஆங்கிலத்தில் எழுதப்பட்ட கட்டுரை, Social Media is a place for grown ups. இயக்குநர் சேரனின் மகள் காதல் விவகாரத்தில், உலகுக்கு காதலைச் சொல்லித்தரும் திரைப்பட இயக்குநர்கள் நிஜ வாழ்வில் வேறு குரலில் பேசுவதும், பாமர மக்களின் வழக்குகளை வேறு மாதிரி கையாளும் உயர்நீதிமன்றங்கள், பிரபலங்களின் வழக்குகளை, பிரத்யேக கவனத்தோடு கையாளும் போக்கையும் விமர்சித்து எழுதப்பட்ட கட்டுரை, மகளைப் பெற்ற அப்பாக்கள். பத்திரிக்கையாளர் என்ற போர்வையில் தொழில் அதிபராக வலம் வரும், காமராஜ் தன்னுடைய கட்டுமான நிறுவனம் மூலமாக ஒரு கல்லூரியை ஒழுங்காக கட்டாமல் ஏமாற்று வேலையில் ஈடுபட்ட விவகாரத்தை அம்பலப்படுத்திய கட்டுரை இடியும் நிலையில் ஒரு பொறியியல் கல்லூரி நீண்ட நாட்களுக்குப் பிறகு, சவுக்கு தளத்தில் திரைப்படம் தொடர்பாக எழுதப்பட்ட கட்டுரை மூடர் கூடம். நீதித்துறையின் மோசடியை அம்பலப்படுத்திய கட்டுரையின் தலைப்பும் மூடர் கூடம். சவுக்கு தளம் மீதான புகார் குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில், நீதிபதி சி.டி.செல்வம் முன்னிலையில் ஒரு வழக்கு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, சவுக்கு தளத்துக்கு எதிராக வாதாடிய மூத்த வழக்கறிஞர் சங்கரசுப்பு, சவுக்கு தளத்தில் வந்த மூடர் கூடம் கட்டுரையை காண்பித்து, நீதிபதிகளைப் பற்றி சவுக்கு தளத்தில் எவ்வளவு மோசமாக எழுதப்படுகிறது என்று வாதிட்டார் என்பது குறிப்பிடத் தக்கது. பெண்ணை பாதுகாக்கிறேன் பேர்விழி என்று, தன்னோடு நெருக்கமாக இருந்த ஒரு பெண் எங்கே செல்கிறாள், யாரோடு பேசுகிறாள் என்று காவல்துறையை வைத்து அவளை பின்தொடர்ந்து அவள் தொலைபேசிகளை ஒட்டுக் கேட்ட நரேந்திர மோடியைப் பற்றி எழுதப்பட்ட கட்டுரை பின்தொடரும் நிழல். இவ்வளவு முக்கியமான ஒரு விவகாரத்தை, தமிழ் ஊடகங்கள் சரிவர கவனிக்காத சூழலில் இப்படியொரு கட்டுரை சவுக்கு தளத்தில் எழுதப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
டெஹல்கா ஆசிரியர் தருண் தேஜ்பால் பாலியல் விவகாரத்தில் சிக்கியது குறித்தும், டெஹல்கா பத்திரிக்கையின் வீழ்ச்சி குறித்தும் எழுதப்பட்ட கட்டுரை தீதும் நன்றும். இந்தக் கட்டுரை, நேர்மையாக எழுதப்பட்ட கட்டுரை என்று பெரும் வரவேற்பை பெற்றது.
கடன் வசூலிக்கச் சென்ற வங்கி அதிகாரிகளை அறைக்குள் அடித்து வைத்து, அடித்து நொறுக்கி, அடாவடி செய்த வழக்கறிஞர்களை அம்பலப்படுத்திய கட்டுரை கருப்பு ஆடுகள் 3. புகார் கொடுக்க வந்தவரை, அலைக்கழித்து, குற்றாளியை அவரிடமே ஒப்படைத்து, ஒரு வாரத்துக்கு தங்கள் பொறுப்பை செய்யாமல் தட்டிக்கழித்த காவல்துறையை அம்பலப்படுத்திய கட்டுரை காவல் துறை உங்கள் நண்பன். அமெரிக்காவில், இந்திய தூதரகத்தில் பணியாற்றி, தன் வேலைக்காரிக்கு உரிய சம்பளத்தைத் தராமல் ஏமாற்றிய தூதரக அதிகாரி தேவயான கோபராகடே கைது செய்யப்பட்டதும், இந்தியாவில் பெரும் பிரளயமே எழுந்தது போல உரத்த குரல்கள் எழுந்தன. இந்தியாவையே அவமானப்படுத்தி விட்டார்கள் என்பது போல இந்திய ஊடகங்கள் இந்த விஷயத்தை பெரிதுபடுத்தப் பார்த்தன. தேவயானி கைதுக்குப் பின்னால் உள்ள அரசியல், தேவயானியும் அவர் தந்தையும் எப்படிப்பட்ட ஊழல் பேர்விழிகள் என்ற உண்மைகளை அம்பலப்படுத்திய கட்டுரைகள் ஆளும் அதிகாரிகள் மற்றும் போலி தலித்துகள். பல தமிழ் ஊடகங்கள் செய்யத் தவறிய பணியை சவுக்கு தளம் செய்துள்ளதாக பாராட்டுக்கள் வந்தன.
ஜெயலலிதாவின் ஆட்சி குறித்து சவுக்கு தளத்தில் முட்டாள் அரசு என்ற தொடர் கட்டுரைகள் வெளியிடப்பட்டு வந்தன. தற்போதைய ஜெயலலிதா அரசின் ஒட்டுமொத்த செயல்பாடுகள் குறித்து முழுமையாக விமர்சிக்கும் அழிவின் பாதையில் என்ற கட்டுரை எழுதப்பட்டது. கடந்த திமுக ஆட்சியை விட தற்போது மிக மோசமான சூழலில் இருக்கும் ஊடகங்களின் நிலை குறித்து ஊழலில் உறங்கும் ஊடகங்கள் என்ற கட்டுரையை பத்திரிகையாளர்களில் பெரும்பாலானோர் வரவேற்றனர். இறுதியாக இந்த ஆண்டு எழுதப்பட்ட இருளில் மூழ்கும் நீதி நீதித்துறையின் இருண்ட பக்கத்தை அம்பலப்படுத்தியது.
2013ம் ஆண்டில் செய்த பணிகளிலேயே சிறப்பாக கருதுவது, நீதித்துறையை சவுக்கு தளத்தை திரும்பிப் பார்க்க வைத்ததே. வழக்கறிஞர்கள், மூத்த வழக்கறிஞர்கள், கீழமை நீதிபதிகள், உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆகியோர் சவுக்கு தளத்தை தொடர்ந்து பார்வையிடுகின்றனர் என்ற செய்தி உள்ளபடியே மகிழ்ச்சியளிக்கிறது. அதே நேரத்தில் வெளியிடப்படும் செய்திகளில் கூடுதல் கவனம் தேவை என்ற பொறுப்பையும் அது அதிகப்படுத்தியிருக்கிறது. தப்பித் தவறிக் கூட, செய்திகளில் பிழை இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய மிகப் பெரிய பொறுப்பை அது சுமத்தியிருக்கிறது. நேர்மையான நீதிபதிகள், சவுக்கு தளத்தில் நீதித்துறை பற்றி வரும் கட்டுரைகளை வரவேற்றாலும், ஊழல் நீதிபதிகள், சவுக்கு தளத்தை வெறுக்கிறார்கள். சவுக்கு தளம் எப்படியாவது முடக்கப்படுமா, அதை எழுதுபவன், விபத்தில் சாக மாட்டானா என்று இறைவனிடம் இறைஞ்சுகிறார்கள்.
இந்த ஆண்டின் செயல்பாடுகளை ஆராய்கையில் கடந்த ஆண்டை விட சுணக்கம் அதிகமாகவே தெரிகிறது. டாஸ்மாக் தமிழ் தொடர் கட்டுரைகள் தவறாமல் எழுதப்பட்டாலும், வழக்கு மற்றும் நடுவில் ஏற்பட்ட விபத்து காரணமாக, தொடர்ந்து கட்டுரைகள் எழுத முடியாமல் போனது. வரும் ஆண்டிலும் வழக்கு மற்றும் இதர நெருக்கடிகள் தொடரவே செய்யும். இருப்பினும், சுணக்கம் தொடராமல் சிறப்பாக பணியாற்ற வேண்டிய கடமை கண் முன் உறுத்துகிறது.
முன் எப்போதையும் விட, சவுக்கு தளத்தின் பணி அத்தியாவசியமானதாகி இருக்கிறது. ஜெயலலிதா ஆட்சியில் சாதாரண விமர்சனங்களைக் கூட செய்வதற்கு ஊடகங்கள் தயங்கி ஊமையாகிப் போயுள்ள நிலையில், சவுக்கு போன்ற இணைய தள ஊடகங்களின் பொறுப்பு மிக மிக அதிகமாகியுள்ளது. அச்சு ஊடகங்கள் உள்ளிட்ட, எந்த ஊடகங்களும் எடுத்து எழுதாத பல விஷயங்களை, சவுக்கு தளம் தொடர்ந்து எழுதி வந்திருக்கிறது.
வரக்கூடிய ஆண்டு தேர்தல் ஆண்டாக இருப்பதால், 2014ம் ஆண்டில் நமது பணிகள் அதிகமாகியுள்ளது. அரசியல் கட்சிகள் மற்றும் தலைவர்களின் அயோக்கியத்தனங்களையும், அவர்களை விட மிக மிக ஆபத்தான அதிகாரிகளின் வண்டவாளங்களை தண்டவாளத்தில் ஏற்றுவதும் மிக மிக அவசியமான பணி.
சவுக்கு தளம் உருவாகி வெற்றிகரமாக நடைபெறுவது, ஆயிரக்கணக்கான வாசகர்கள் மற்றும் அதிகாரிகளின் ஆதரவு மற்றும் ஒத்துழைப்பால் மட்டுமே. தற்போது ஜெயலலிதா அரசின் ஊழல் சகித்துக் கொள்ள முடியாத அளவுக்கு வளர்ந்துள்ளது. இதைப் பற்றி எழுத ஊடகங்களும் தயாராக இல்லாத நிலையில், அரசு அதிகாரிகள் மற்றும் அரசு ஊழியர்கள், ஜெயலலிதா அரசின் செயல்படா தன்மையையும், இந்த அரசில் புரையோடிப் போயிருக்கும் ஊழலை வெளிக்கொணரவும், முன் வர வேண்டும். அதிகாரிகளோ, அரசு ஊழியர்களோ, வெளிப்படையாக தகவல்களைத் தர முடியாது என்பதால், தங்களுக்குத் தெரிந்த தகவல்களை, சவுக்கு தளத்துக்கு மின்னஞ்சல் மூலமாக அனுப்பலாம். அதே போல நேர்மையான வழக்கறிஞர்கள் மற்றும் கீழமை நீதிபதிகள், நீதித்துறையில் நிலவும் அவலங்களை அம்பலப்படுத்த, newsavukku@gmail.com மின்னஞ்சல் மூலமாக சவுக்கு தளத்துக்கு தகவல் அனுப்பலாம்.
ஜனநாயகத்தைக் காப்பாற்றும் பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் உள்ளது. நமக்கென்ன வந்தது என்று நாம் வாளாயிருந்தால், வரலாறு நம்மை மன்னிக்காமல் விடுவதோடல்லாமல், ஒரு பேரழிவை வேடிக்கை பார்த்த குற்றத்துக்கும் ஆளாவோம். நமக்காகவும், நம் சந்ததிகளுக்காகவும், இந்த ஜனநாயகத்தைக் காப்பாற்ற வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு நம் முன்னே இருப்பதால், நாம் சேர்ந்து பணியாற்றுவோம். நாம் அனைவரும் கூடி இழுத்தால், நகராத தேரும் நிச்சயமாக நகரும். சவுக்கு தளத்துக்கு ஊழல்கள் தொடர்பான தகவல்களைத் தருவதன் மூலம், இந்தப் பணியில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்று அரசு ஊழியர்களையும், அரசு அதிகாரிகளையும், உயர் உயர் அதிகாரிகளையும் சவுக்கு கேட்டுக் கொள்கிறது.
2014ம் ஆண்டில், ஊழலை ஒழிக்க நாம் ஒவ்வொருவரும், நமது பங்கை ஆற்றுவோம் என்று உறுதியேற்று, புத்தாண்டை வரவேற்போம்.
அன்பார்ந்த சவுக்கு வாசர்கள் அனைவருக்கும், சவுக்கு தளத்தின் சார்பாக 2014ம் ஆண்டு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். வாழ்த்துக்கள் தோழர்களே.