“எல்லோருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்” என்றான் டாஸ்மாக் தமிழ்.
“வாப்பா. உனக்கும் வாழ்த்துக்கள். எப்படி இருக்க ? ” என்றார் கணேசன்.
“நல்லா இருக்கேன்ணே. இந்த ஆண்டு எப்படிப் போச்சு…? “
“சிறப்பா போச்சுப்பா. இந்த ஆண்டும் நம்மோட பணியை சிறப்பா தொடரணும்” என்றார் கணேசன்.
“தேர்தல் களம் எப்படிடா இருக்கு ? ” என்று உரையாடலை தொடங்கினான் பீமராஜன்.
“தமிழகத்தைப் பொறுத்தவரை தேர்தல் களம் இன்னும் முழுமையான வடிவம் பெறாமல்தான் இருக்கு. தமிழருவி மணியன் பிஜேபி அணியை வலுவாக்கும் முயற்சியில் தொடர்ந்து இறங்கியிருக்கிறார். கேப்டனை வளைப்பதில்தான் தீவிர முயற்சிகள் இருக்கு. பிஜேபி, திமுக இரண்டு அணியும் கேப்டனை இழுக்க தீவிரமா முயற்சி பண்ணிக்கிட்டு இருக்காங்க.”
“சரி.. வாயைத் திறந்தால் பெரியார் அண்ணா ன்னு பேசுவாரே வைகோ. அவருக்கு பிஜேபியோட சேர்வதில் தயக்கம் இல்லையா ? ” என்றான் ரத்னவேல்.
“2002ல் நடந்த குஜராத் கலவரம் நாட்டில் நியாய உணர்வு உள்ள அத்தனை பேரின் மனசாட்சியையும் உலுக்கியது. அப்படிப்பட்ட, கலவரத்தை நியாயப்படுத்தி வைகோ பாராளுமன்றத்தில் பேசியிருக்கிறார்”
“என்னடா சொல்ற… ? அதை நியாயப்படுத்தியா பேசினார் ? “
“1969ம் ஆண்டு குஜராத்தின் சமூக கலவரங்களில் 600 பேர் கொல்லப்பட்டது உண்மையில்லையா ? அது யாருடைய ஆட்சியில் ? காங்கிரஸ் ஆட்சி. 1970ம் ஆண்டில் 400 பேர் கொல்லப்படவில்லையா ? அது யாருடைய ஆட்சியில் ? காங்கிரஸ் ஆட்சி. 1990ம் ஆணடு 400 பேர் மறுபடியும் கலவரங்களில் கொல்லப்படவில்லையா ? அது யாருடைய ஆட்சியில் ? காங்கிரஸ் ஆட்சி. 1992ம் ஆண்டில் 441 பேர் சமூக கலவரங்களில் கொல்லப்படவில்லையா ? யாருடைய ஆட்சி. காங்கிரஸ். அவர்கள் பதவி விலகினார்களா ? தங்கள் ராஜினாமாவை சமப்பிக்க வந்தார்களா ? இவர்கள்தான் மறுவாழ்வு பற்றியும் நிவாரணம் பற்றியும் பேசுகிறார்கள்” என்று பிஜேபி அரசுக்கு வக்காலத்து வாங்கிப் பேசியவர்தான் வைகோ. கருணாநிதிக்கு எந்த அளவுக்கும் சளைத்தவர் இல்லை வைகோ. எந்த திமுக தன்னை கட்சியை விட்டு வெளியேற்றியதோ, எந்த திமுக வெளியேற்றியதால், கட்சித் தொண்டர்கள் தீக்குளித்தார்களோ, அதே திமுகவோடு கூச்ச நாச்சம் இல்லாமல் கூட்டணி வைத்தவர் இந்த வைகோ. மதவாத சக்திகளுக்கு பல்லக்கு தூக்க வைகோ கொஞ்சமும் தயங்க மாட்டார்.
“சரி கேப்டன் என்ன நிலைபாட்டில் இருக்கார் ? ” என்றான் ரத்னவேல்.
“கேப்டன் ஒரு விஷயத்துல தீர்மானமா இருக்கார். எந்தக் கட்சி நெறய்ய பணம் குடுக்குதோ, அந்தக் கட்சி கூட போறதுன்றதுல தெளிவா இருக்கார். கேப்டன் கிட்டத்தட்ட 300 கோடி கேக்கறதா பேச்சு. பிஜேபி இந்தத் தொகையைக் கேட்டு அதிர்ச்சியாயிட்டாங்க. இவ்வளவு தொகையை கேப்டனுக்கு கொடுக்கறதுக்கு, வேற எங்கயாவது அதை செலவு பண்ணலாம்னு நினைக்கிறாங்க. அது தவிரவும், வைகோவை பிஜேபி பக்கம் இழுத்தா, அவர் விசுவாசமான அடிமையா இருப்பதைப் போல கேப்டன் இருக்க மாட்டாருன்னும் நம்பறாங்க”
“விஜயகாந்த் திமுகவிடம் 19 சீட் கேட்டதா ஒரு பேச்சு வருதே”
“விஜயகாந்த் 19 சீட்டெல்லாம் கேக்கலை. 15 சீட் கேக்கறார். திமுக எட்டுல இருந்து பேச்சுவார்தையை தொடங்கியிருக்காங்க. கேப்டன் கேட்ட தொகையையும் கொடுக்க தயாராயிட்டாங்க. இந்த முறை மத்தியில அதிகாரத்தை கைப்பற்றவில்லை என்றால், மகளையும் கட்சியையும் காப்பாற்ற முடியாதுன்றதுல திமுக தலைமை தெளிவா இருக்கு. அதனால, எப்படியாவது கேப்டனை வளைச்சு போடணும்னு தீர்மானமா இருக்காங்க”
“சரி.. ஜி.கே வாசனும், கேப்டனும் சந்திச்சாங்களே.. என்ன நடந்ததாம் ? “
“அவசரப்பட்டு எந்தக் கூட்டணிக்கும் போய் விடாதீர்கள். பொறுமையாக இருங்கள்” என்று சொல்லியிருக்கிறார். ஆனால் கேப்டன் காங்கிரஸ் கட்சியோடு தன்னால் வர முடியாதுன்றதுல தெளிவா இருக்கார். தன்னோட நிலைப்பாட்டை வெளியில் விடாம வைச்சிருக்க வரைக்கும், ரேட் ஏறும்ன்றதை கேப்டன் நல்லா புரிஞ்சு வச்சிருக்கார்.
கேப்டன் கிட்ட இருந்து பிரிஞ்சு போன எம்.எல்.ஏக்கள் எல்லாம் மாஃபா பாண்டியராஜன் தலைமையில் தனி அணி அமைத்து, கேப்டனுக்கு சவால் விட இருக்காங்க. அதுவும் புத்தாண்டில் கேப்டனுக்கு தொல்லையா அமையும்.”
“ஜெயலலிதாவோட நிலைபாட்டில் மாற்றம் இருக்கா ? “
“ஜெயலலிதா இன்னமும் தனியா போட்டியிடறதில் தீர்மானமா இருக்காங்க. இடது சாரிகளை மட்டும் வச்சுக்கிட்டு போட்டியிட்டு, கண்டிப்பா தேர்தலில் பெரிய அளவில் வெற்றி பெறலாம்னு நம்பறாங்க”
“பாட்டாளி மக்கள் கட்சி என்ன நிலைப்பாட்டில் இருக்காங்க ? ” என்றான் வடிவேல்.
“பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு வரும் 2ம் தேதி நடக்க இருக்கு. பத்துக்கு குறையாத தொகுதிகள் ஒதுக்கப்படணும்னு அவங்க நினைக்கிறாங்க. வைகோ, அதை விட ஒரு தொகுதியாவது வேணும்னு நினைக்கிறார். அந்த கூட்டணியிலயும், பாமக குழப்பத்தை விளைவிக்கும்னு சொல்றாங்க”
“சரி கனிமொழி பிறந்தநாள் வருதே. திமுகவில் ஏற்பாடுகள் பலமா இருக்குமே” என்றான் ரத்னவேல்.
“ஏற்பாடுகள் பலமாத்தான் செய்துக்கிட்டு இருக்காங்க. ஆனா, அவங்க பிறந்தநாள் வரும் ஜனவரி 5 அன்று, கோவையில் செயல்வீரர்கள் கூட்டத்தைக் கூட்டியிருக்கார் ஸ்டாலின். கனிமொழி பிறந்த நாளுக்கு பெரிய அளவில் கூட்டம் கூடிடக் கூடாதுன்னு ஸ்டாலின் முனைப்பா செயல்படுகிறார். இதனால கனிமொழி கேம்ப் கொஞ்சம் எரிச்சலாத்தான் இருக்காங்க”
“ஜெயலலிதா எப்போ திரும்பறாங்க கொடநாட்டில் இருந்து ? “
“ஜெயலலிதா, இப்போ சிகிச்சையில் இருக்காங்க. கொடநாடு எஸ்டேட் உள்ள நடைபயிற்சி, மற்றும் உடற்பயிற்சியில் ஈடுபட்டிருக்காங்க. நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம் முழுக்க பிரச்சாரம் மேற்கொள்ள, உடலை தயார் நிலையில் வைக்கணும்னு முனைப்பா இருக்காங்க. அதனால் எப்படியும் இன்னும் 20 நாட்கள் கழித்துதான் வருவாங்கன்னு சொல்றாங்க. அனேகமா குடியரசு தின விழாவுக்குத்தான் வருவாங்க”
“உள்துறை செயலாளர் மாற்றத்தின் பின்னணி என்னப்பா ? ” என்றார் கணேசன்.
“அண்ணே. உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி, உள்துறைக்கு நியமிக்கப்பட்ட பிறகுதான், அவருக்கு முன்னாடி இருந்த உள்துறை செயலாளர் ராஜகோபால் கட்டி வச்சிருந்த 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோப்புகளை க்ளியர் செஞ்சார். ஆனா, இவருக்கும் டிஜிபி ராமானுஜத்துக்கும் ஏழாம் பொருத்தமா இருக்கு.
டிஜிபி பல விவகாரங்களில் உள்துறை செயலாளரை கலந்து ஆலோசிப்பதில்லைன்னு ஏராளமான புகார்கள் வந்தது. ராமானுஜமும், இதற்கான சந்தர்ப்பத்தை எதிர்ப்பார்த்து காத்திருந்தார். இந்த நேரத்துலதான், நிரஞ்சன் மார்டி தன்னோட புது வீட்டு புகுமனை விழா நடத்தினார். அந்த விழாவுக்கு யாரையும் அழைக்காம ரகசியமா நடந்திருக்கு.
அந்த வீடு கட்டுவதற்கும், இதற்கான பல உதவிகளையும் செய்தது, முன்னாள் புறநகர் ஆணையர் ஜாங்கிட் னு விசாரணையில தெரிய வந்ததும், இதை அப்படியே விசாரணை அறிக்கையா முதல்வருக்கு அனுப்பியிருக்கார் ராமானுஜம். அந்த அடிப்படையிலதான், உடனடியா நிரஞ்சன் மார்டியை மாத்தியதா சொல்றாங்க”
“ஜாங்கிட் மீது லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை இருந்ததே… அது என்ன ஆச்சு ? ” என்றான் பீமராஜன்.
“லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் சதீஷ் குமார் டோக்ரா 31.12.2013ல் ஓய்வு பெற்றார். அவருக்குப் பிறகு, கே.ராதாகிருஷ்ணன், லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநரா வர இருக்கிறதா பேச்சு இருந்தது. ராதாகிருஷ்ணன், லஞ்ச ஒழிப்புத் துறைக்கு வந்தா, ஜாங்கிட் மீதான விசாரணையை தீவிரப்படுத்துவார்னு சொல்லி, அவசர அவசரமா ஜாங்கிட் மீதான விசாரணை முடிக்கப்பட்டு, இறுதி அறிக்கை அரசுக்கு அனுப்பப் பட்டிருக்கு. ஜாங்கிட் மீதான குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்படலைன்னு, அறிக்கை அவசர அவசரமா அனுப்பப்பட்டதா சொல்றாங்க”
“நிரஞ்சன் மார்டி மேல வேற சில குற்றச்சாட்டுகளையும் சொல்றாங்களே ? “
“ஆமா.. அவரோட சக ஐஏஎஸ் அதிகாரிகளை பழிவாங்கும் வகையில் நடந்துக்கிட்டார்னு ஒரு குற்றச்சாட்டு இருக்கு. கடந்த திமுக ஆட்சியில அவருக்கும் அஷோக் வரதன் ஷெட்டிக்கும் போட்டி. யார் ஸ்டாலின் கூட நெருக்கமாகிறதுன்னு. அந்தப் போட்டியில, அஷோக் வரதன் ஷெட்டி ஜெயிச்சுட்டார். அதனால கடும் கோபம் அடைந்த நிரஞ்சன் மார்டி அஷோக் வரதன் ஷெட்டியை பழிவாங்கும் வகையில், அவர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு உத்தரவிட்டு, அதை தொடர்ந்து ஃபாலோ பண்ணிக்கிட்டு இருக்கிறதாகவும் ஒரு குற்றச்சாட்டு. “
“முத்துக் கருப்பன் சட்டம் ஒழுங்கு டிஜிபி ஆகறதா சொல்றாங்களே ? ஜெயலலிதாவுக்கு அவர் மேல இருக்கும் கோபம் குறைஞ்சிடுச்சா என்ன ?”
“முன்னாள் டிஜிபி அலெக்சாண்டரை மண்டபத்துக்கு தூக்கி அடிச்சது இதே ஜெயலலிதாதான். அதே ஜெயலலிதாதான் அலெக்சாண்டரை டிஜிபியா நியமிச்சாங்க. அதே மாதிரி முத்துக் கருப்பனுக்கும் அதிர்ஷ்டம் அடிக்க வாய்ப்பு இருக்கு. முத்துக் கருப்பன் ஒரு சிறந்த அதிகாரி.
2001ம் ஆண்டில் அவர் சென்னை மாநகர ஆணையரா இருந்தப்போ, திமுக பேரணி மீது தாக்குதல், சட்டக்கல்லூரி மாணவர் விடுதியில் தாக்குதல்னு ஏராளமான சம்பவங்கள் நடந்துச்சு. ஆனா, எந்த சம்பவத்தையும் மற்ற அதிகாரிகள் மேல பொறுப்பை சுமத்தி தப்பிச்சுக்க பாக்காம, இது அத்தனையும் என் உத்தரவு, இதற்கு நான்தான் பொறுப்புன்னு ஒரு லீடர் மாதிரி நின்னார். சட்டம் ஒழுங்கை பராமரிப்பதில் சிறந்த அதிகாரி. அவர் டிஜிபியா ஆக்கப்பட்டார்னா, நிச்சயமா சிறப்பா பணியாற்றுவார்.”
“சரி.. அஷோக் குமாரை, உளவுத்துறை டிஜிபியா போட்டுட்டாங்களே.. ராமானுஜத்தின் பலமே உளவுப் பிரிவுதான். அவரை ஏன் அந்தப் பதவியில இருந்து தூக்கிட்டாங்க ? ” என்று வினவினான் ரத்னவேல்.
“ராமானுஜம், சமீப காலமா, தன்னோடு பணியாற்றும் அதிகாரிகளை ரொம்பவும் மோசமா பேசறார்னு ஒரு புகார் இருந்து வருது. எல்லா விஷயங்களையும் தன்னோட கட்டுப்பாட்டில் வைச்சுக்கணும்னு நினைக்கிறார். அஷோக் குமாரும் ஒரு திறமையான அதிகாரியா இருந்தாலும், ராமானுஜம் அவரை மதிப்பதேயில்லைன்னு ஒரு புகார் இருக்கு.
ஏற்கனவே உள்துறைச் செயலளார், நிரஞ்சன் மார்டிக்கும், ராமானுஜத்துக்கும் இருந்த பனிப்போரின் காரணமாக, உளவுத்துறையை ராமானுஜத்திடம் இருந்து பறிக்கணும்னு மார்டி சொல்லிய ஆலோசனை, ஜெயலலிதாவால் ஏற்கப்பட்டிருக்கு. இந்த அதிகாரிகளுக்குள் நடக்கும் இந்த அதிகாரப் போட்டியை ஜெயலலிதா நல்லா பயன்படுத்திக்கிறாங்க”
“சென்னை மாநகர ஆணையர் ஜார்ஜுக்கும், உளவுத்துறை ஐஜி அம்ரேஷ் பூஜாரிக்கும் மோதல்னு சொல்றாங்களே… “
அம்ரேஷ் பூஜாரி
“ஆமாம்… மு.க.ஸ்டாலினோட பினாமி ராஜா சங்கரை ஜார்ஜ் ரகசியமா போய் பாத்திருக்கார். பாத்து, நான் உங்களுக்கு எதிரா செயல்பட மாட்டேன். பேலன்சா நடந்துக்கறேன். எனக்கு எதிரா போராட்டங்களோ, குற்றச்சாட்டகளோ வைக்கக் கூடாதுன்னு சொல்லியிருக்கார். இந்த விவகாரம் உளவுத்துறையால் மோப்பம் பிடிக்கப்பட்டு, பூஜாரி இது தொடர்பா அறிக்கை ஒன்று தயாரிச்சார். அந்த விஷயம் ஜார்ஜுக்கு தெரிந்து, பூஜாரி, உயர் அதிகாரிகளை மதிப்பதில்லை, தான்தோன்றித்தனமாக நடந்து கொள்கிறார்னு நக்கீரன்ல ஒரு பெட்டிச் செய்தி வெளியிட வைச்சார்.
அதுக்கப்புறம் பூஜாரி அந்த அறிக்கையை அனுப்பாமல் நிறுத்திட்டார். இது நடந்ததுக்கு அப்புறம், பூஜாரிக்கும், ஜார்ஜுக்கும் ஏழாம் பொறுத்தமா இருக்கு. சமீபத்துல நடந்த அதிமுக பொதுக்குழுவில் இந்த மோதல் வெளிப்படையா தெரிஞ்சது. ஜார்ஜ் மூத்த அதிகாரியா இருந்தாலும், அவருக்கு சல்யூட் கூட செய்யாம முகத்தை திருப்பிக்கிட்டார் பூஜாரி.”
“வட இந்திய அதிகாரிகளே இப்படி இருக்கிறார்களே.. ? ” என்று அங்கலாய்த்தான் ரத்னவேல்.
“வட இந்திய அதிகாரிகளை விடு…. தமிழ் அதிகாரி ஒருத்தர் என்ன பண்றார்னு சொல்றேன் கேளு. உத்தரப் பிரதேசத்தை கேடரைச் சேர்ந்த தமிழ் அதிகாரி செந்தில் பாண்டியன். அவர் மண்டல பாஸ்போர்ட் அதிகாரியா பணியாற்றிக்கிட்டு இருக்காரு. ஏற்கனவே அவர் மீது ஸ்டார் டிவி பாலா என்கிற நபரோட நெருக்கமா இருக்கார்னு பேச்சு இருந்தது. இப்போ பிரிட்டிஷ் தூதரக அதிகாரியோட மிகுந்த நெருக்கமா இருப்பதாகவும், அவர் கூட எங்கே சென்றாலும் செல்வதாகவும் தகவல் இருக்கு.
செந்தில் பாண்டியன் ஐஏஎஸ்
உள்துறை அமைச்சகத்தின் கீழ் பணியாற்றும் ஒரு அதிகாரி, இது போல வெளிநாட்டு அதிகாரிகளோடு நெருக்கமா இருப்பது சரியானது அல்ல. இவரைப் பற்றி மத்திய உளவுத்துறை அதிகாரிகள் விசாரணையை தொடங்கியிருக்காங்க.
“சரி.. தின இதழ் நிறுவனத்தில் உள்ளவர்கள் வேலை நிறுத்தம் செய்தாங்களாமே… என்ன விஷயம் ? ” என்றான் ரத்னவேல்.
“மீனாட்சி மருத்துவக் கல்லூரி நிறுவனம் எல்லா மருத்துவக் கல்லூரி நிறுவனங்களையும் போல ஒரு சீட்டுக்கு 50 முதல் 60 லட்சம் வரை வாங்கினாங்க. இப்படி சட்ட விரோதமாக சம்பாதிக்கும் பணத்துக்கு ஒரு பாதுகாப்பு வேணும்னு இந்தப் பத்திரிக்கையை தொடங்கினாங்க. எஸ்.ஆர்.எம் குழுமம் புதிய தலைமுறை சேனலைத் தொடங்கி ஒரு பலம் வாய்ந்த ஊடகமா உருவானது போல நாமளும் ஆகணும்னு முடிவெடுக்கிறாங்க. அந்த அடிப்படையில் தொடங்கப்பட்டதுதான் தின இதழ். தின இதழின் பின்னணி பற்றி, கலக்குரல் இணைய தளத்தில் விரிவான கட்டுரை வந்திருக்கு இணைப்பு
இதுக்கு முன்னாடி ஜுனியர் விகடனில் பணியாற்றிக்கிட்டு இந்த விகேஷ் என்பவரை, ஆசிரியராகவும், தலைமை நிர்வாகியாவும் நியமிக்கிறாங்க. விகேஷ் இருந்தவரைக்கும் அந்த பத்திரிக்கையோட விற்பனை நல்லாவே இருந்துச்சு. அதுக்கு அப்புறம், தினகரனில் பணம் கையாடல் பண்ணதா சொல்லப்பட்ற ஜெயக்குமார் என்பவரை சர்குலேஷன் மேனேஜரா நியமிக்கிறாங்க. ஜெயக்குமார், எடிட்டோரியல் உள்ளிட்ட எல்லா விவகாரங்களிலும் தலையிட்றாரு. அந்த சமயத்தில்தான் வருமான வரித்துறை மீனாட்சி கல்லூரியில் சோதனை நடத்தறாங்க. அந்த சோதனையை ஒட்டி, நிர்வாகத்தில் சிக்கல் ஏற்படுது. விகேஷை வெளியே அனுப்பறாங்க.
அதன் பிறகு முத்துப்பாண்டி ன்றவரை ஆசிரியரா நியமிக்கிறாங்க. பேப்பரோட விலையை 2 ரூபாயா ஆக்கறாங்க. அந்த முத்துப்பாண்டிக்கு கொடுக்கப்பட்ட அசைன்மென்ட், விகேஷின் ஆதரவாளராக அறியப்படும் 10 நிருபர்களை வேலையை விட்டு தூக்கறதுதான். ஆனா, முத்துப்பாண்டி யாரையும் வேலையை விட்டு தூக்க மறுத்துட்டாரு. அப்படியே போயிக்கிட்டு இருந்துச்சு.
இந்த நேரத்துல, மீனாட்சி மருத்துவக் கல்லூரி தொடர்பான விவகாரங்களில், தமிழ்நாடு மருத்துவக் கல்வித் துறை விசாரணை நடத்துது. அந்த விசாரணையை நடத்துபவர், மருத்துவக் கல்வித் துறை இயக்குநர் கனகசபை. இந்த கனகசபையோட நெருக்கமான உறவினர்தான் ராமசாமி குமார் என்பவர். மருத்துவக் கல்வித் துறையின் விசாரணையில் உதவ வேண்டுமானால், கனகசபையின் உறவினரான ராமசாமி குமாரை, தின இதழுக்கு ஆசிரியராக நியமிக்க வேண்டும் என்று கனகசபை விடுத்த கோரிக்கையை ஏற்று முத்துப்பாண்டியை ஆசிரியல் பொறுப்பிலிருந்து நீக்குகிறார்கள்.
ராமாமி குமார்
ராமசாமி குமார் ஆசிரியரா பொறுப்பேற்கிறார். ராமசாமி குமார் ஆசிரியரா பொறுப்பேற்ற நாள் முதலாகவே, அங்கே பணியாற்றும் நிருபர்கள் உள்ளிட்ட அனைத்து ஊழியர்களையும் கடுமையா துன்புறுத்தறார். அவதூறா பேசறார். இதனால் கடுமையா கோபமடைந்த அனைத்து ஊழியர்களும், போன வாரம் கொடி தூக்கிட்டாங்க. குமாரை வேலை நீக்கம் செய்தால்தான் பணியாற்றுவோம்னு உள்ளிருப்பு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டாங்க. இதுக்கு அப்புறமும் நிர்வாகம் முரண்டு பிடிச்சது.
இறுதியா, அந்த நிர்வாகத்தின் முதலாளியோட மகன் கோகுல் தலையிட்டு, குமாரை வேலை நீக்கம் செய்யறேன்னு உத்தரவாதம் கொடுத்ததும், இப்போ நாளிதழ் வெளி வந்துக்கிட்டு இருக்கு”
“ஊடகம் தொடங்கறதே இதுக்காகத்தானா ? “
“ஊடகத்தை வைத்து வியாபாரம் செய்வதற்காகத்தான் தொடங்கறதே. ஜெயலலிதாவுக்கு முழு நேர ஜால்ரா அடித்து செய்தி வெளியிடுவது, கட்டுரைகள் எழுதுவது.. இதுதான் தின இதழின் முக்கிய பணி”
“பத்திரிக்கை உலகம் இந்த அளவுக்கு மோசமானதை நினைச்சா ரொம்பவும் வருத்தமா இருக்கு” என்றான் பீமராஜன்.
“சரி.. இந்த வாரம் வேலைகள் அதிகம். சீக்கிரமா போகலாம்ணே… அடுத்த வாரம் இன்னும் நிறைய்ய தகவல்களோட வர்றேன்” என்றான் டாஸ்மாக் தமிழ்.
அனைவரும் ஆமோதித்து விட்டு கிளம்பினர்