“வணக்கம்” என்றான் டாஸ்மாக் தமிழ். கோரஸாக “வணக்கம்” என்றபடி கணேசன், வடிவேல், ரத்னவேல் மற்றும் பீமராஜன் தமிழை வரவேற்றனர்
“என்னடா… அழகிரி அதிரடி பேட்டி குடுத்திருக்கார் ? ” என்று விவாதத்தை தொடங்கினான் ரத்னவேல்.
“ஆமாம்டா… அண்ணன் அதிரடியா பேட்டி கொடுத்திருக்கார். ஏகத்துக்கும் தலைமை மேல கடுப்புல இருக்கார் அழகிரி. அதிமுக ஆட்சி வந்ததுல இருந்தே அழகிரியின் செயல்பாடுகள் ரொம்ப மந்தமாகத்தான் இருந்தது. அவர் மகன் மீது க்ரானைட் ஊழல் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டது தெரிந்ததும் ரொம்பவும் பயந்து போயிட்டார் அழகிரி. தமிழகத்தில் தங்காமல், டெல்லியில் உள்ள பண்ணை வீட்டில் தங்கியதும், வெளிநாட்டில் தங்குவதுமாக ஓடிக்கிட்டே இருந்தார் அழகிரி.
காவல்துறை தேடியதும், அழகிரியோட மகன் துரை தயாநிதி, ஓடி ஒளிஞ்சார். அவருக்கு முன் ஜாமீன் கிடைச்ச பிறகுதான், அழகிரி தமிழகத்துக்கே வந்தார். அதற்குப் பிறகும் தொடர்ந்து அடக்கியே வாசிச்சிக்கிட்டு இருந்தார். அழகிரியோட இந்த அமைதியைப் பயன்படுத்திக்கிட்டு ஸ்டாலின், மதுரை மற்றும் தென் மாவட்டங்களில் தன் செல்வாக்கை பலப்படுத்தினார். மதுரை உள்ளிட்ட பல மாவட்டங்கள் ஸ்டாலின் கை வசம் வந்திருச்சு. ஸ்டாலின், தன்னோட ஆதரவாளர்களை அவர் பக்கம் இழுப்பதும், கட்சியில் தன்னோட செல்வாக்கு தொடர்ந்து சரிந்து வருவதும் தெரிந்தும் கூட, அழகிரி அமைதியாத்தான் இருந்தார்.
போன வாரம், மதுரை மாவட்ட திமுக நிர்வாகிகளை கட்சி கூண்டோடு கலைத்ததுதான், அழகிரிக்கு ஸ்டாலின் வைச்ச செக். தன்னை மீறி, மதுரை மற்றும் தென்மாவட்டங்களில் எதுவுமே நடக்காதுன்னு நினைச்சிக்கிட்டு இருந்த அழகிரியை, சுத்தமா ஓரங்கட்டும் வேலைதான் அது.
இதுக்கு அப்புறமும் அழகிரி அமைதியாத்தான் இருக்காருன்னா, அவர் கிட்டத்தட்ட அரசியலுக்கு முழுக்கு போடும் மன நிலைக்கு வந்துட்டார்.
நேற்று புதிய தலைமுறைக்கு அளித்த பேட்டியில், விஜயகாந்த் ஒரு தலைவரே அல்ல. அவரிடம் அரசியல் நாகரீகம் இல்லை. அவரோடு கூட்டணி வைத்தால் திமுக உருப்படாதுன்னு பேசியிருக்கார்.
ஸ்டாலினும், கருணாநிதியும், கேப்டன் காலில் விழாத குறையாக கெஞ்சிக்கிட்டு இருக்கும்போது, அழகிரி இப்படிப் பேசுனது, கருணாநிதிக்கும் ஸ்டாலினுக்கும் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையொட்டித்தான் மதுரை மாவட்ட நிர்வாகிகள் கூண்டோடு கலைக்கப்பட்டனர்.”
“ஆனா.. இந்த பேட்டி வெளியானது 5ம் தேதி. நாலாம் தேதியே நிர்வாகிகளை கலைச்சுட்டாங்களே அது எப்படி ? ” என்றான் ரத்னவேல்.
“அழகிரி இந்த மாதிரி பேட்டி குடுத்துருக்கார்னு புதிய தலைமுறையில இருந்து தகவல் வந்ததுனாலதான் இப்படி ஒரு நாள் முன்னதாகவே கலைப்பு நடவடிக்கை”
“சரி. இதுக்கெல்லாம் தலைவர் என்ன சொல்றார் ? ” என்றான் பீமராஜன்.
“கருணாநிதிதான் இந்த பிரச்சினை அனைத்துக்கும் காரணம். அழகிரிக்கும் ஸ்டாலினுக்கும் இடையே தீராத மோதல் இருந்துக்கிட்டே இருந்தாத்தான், தலைவர் பதவியைப் பத்தி பேச்சு வராதுன்னு கவனமா இருக்கார் தலைவர். கருணாநிதி நினைச்சிருந்தார்னா, மதுரை மாவட்ட நிர்வாகிகள் கலைப்பை நிறுத்தியிருக்க முடியும். ஆனா, இப்படி செஞ்சா, அழகிரி கடுமையா கோபமடைவார், ஏடாகூடமா ஏதாவது செய்வார்னு கருணாநிதிக்கு நல்லா தெரியும். அப்படி செய்வாருன்றது, ஸ்டாலினுக்கும் தெரியும். அதனால ஸ்டாலின் கவனமெல்லாம் அழகிரி மேலதான் இருக்கும். தலைவர் பதவி குடு, பொதுச் செயலாளர் பதவி குடுன்னு ஸ்டாலின் எந்த பேச்சும் பேச மாட்டாருன்றதுதான் இதுக்கு பின்னாடி இருக்கிற ஐடியா…”
“கனிமொழி பிறந்தநாள் எப்படி நடந்தது… ? ” என்றான் வடிவேல்.
“கனிமொழி பிறந்தநாள் சிறப்பாத்தான் நடந்தது. ஆனா, அந்த பிறந்தநாள் அன்னைக்கே, கோவையில் இளைஞர் அணியின் கூட்டத்தை வைச்ச ஸ்டாலினோட அற்பத்தனம் பத்திதான் திமுக பூரா பேச்சு”
“இதுல என்ன அற்பத்தனம் இருக்கு ? “
“கனிமொழி ஸ்டாலினோட தங்கை. அவங்களோட பிறந்தநாள் ஜனவரி 5ம் தேதி வருதுன்னு ஸ்டாலினுக்கு நல்லாத் தெரியும். எங்க பிறந்தநாள் சிறப்பா கொண்டாடப் படப்போகுதோன்ற பயத்துலதான், ஜனவரி 5 அன்னைக்கு கோவையில் இளைஞர் அணி நிகழ்ச்சியை வைத்தார். இதே கருணாநிதி பிறந்தநாள் அன்னைக்கு இப்படி ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு பண்ணுவாரா ? அல்லது இவரோட பிறந்த நாள் அன்னைக்கு வேற யாராவது இப்படி ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு பண்ணா விட்டுடுவாரா ?
அது மட்டுமில்லாம, ஜனவரி 4 அன்றைக்கு, மதுரை மாவட்ட திமுக நிர்வாகிகளை கலைத்ததன் பின்னணியிலயும் ஸ்டாலின் இருக்கறதா சொல்றாங்க”
“ஏன் நாலாம் தேதி கலைச்சா என்ன ? “
“நாலாம் தேதி கலைத்தா, அடுத்த இரண்டு நாட்களும், அதைப் பற்றிய செய்திகள்தான் ஊடகங்களில் வரும். கனிமொழியின் பிறந்த நாள் விழா இருட்டடிப்பு செய்யப்படும்னு அவர் திட்டமிட்டுத்தான் நாலாம் தேதி இந்த அறிவிப்பை வெளியிட்டதாகவும் சொல்றாங்க”
“ஸ்டாலின் இவ்வளவு அற்பத்தனமா நடந்துக்குவாரா என்ன ? ” என்று வியப்பாக கேட்டான் வடிவேல்.
“அரசியலில் எல்லாம் நடக்கும்”
“திமுக முன்னாள் அமைச்சர் ஒருத்தர் புலம்பிக்கிட்டு இருக்காராமே… என்னடா விஷயம்” என்றான் வடிவேல்.
“ஆமான்டா… திமுக முன்னாள் அமைச்சர் எஸ்.எஸ்.பழனி மாணிக்கம்தான் அப்படி புலம்பிக்கிட்டு இருக்கார்”
“என்ன ஆச்சாம் அவருக்கு.. சீட் குடுக்க மாட்டாங்களா ? “
“சீட்டெல்லாம் குடுப்பாங்க. அவர் சமீபத்துல இன்னொரு முக்கிய திமுக பிரமுகர்கிட்ட புலம்பியிருக்கார். நடிகை குஷ்பு கடுமையான பண முடையில் இருப்பதாகவும், அவங்களுக்கு பணம் குடுத்து உதவி பண்ணனும்னு அவருக்கும், டி.ஆர்.பாலுவுக்கும் தலைவர் உத்தரவு போட்டிருக்கார்.
இப்போ குடுக்க மாட்டேன்னு சொன்னா சீட் தர மாட்டாங்கன்னு பழனி மாணிக்கம் ஒரு கோடி ரூபாய் கொடுத்திருக்கார். ஆனா, டி.ஆர்.பாலு பத்து பைசா குடுக்கலையாம். நான் மட்டும் என்ன இளிச்சவாயனா ன்னு கேட்டு புலம்பியிருக்கார் பழனி மாணிக்கம்”
“தலைவர் கட்டளையிட்டா அதை நிறைவேத்தித்தானே ஆகணும்”
“கேப்டன் என்னடா பண்ணிக்கிட்டு இருக்காரு… கூட்டணி குறித்து முடிவு பண்ணிட்டாரா ? “
“கூட்டணி குறித்து இன்னும் எந்த முடிவுக்கும் கேப்டன் வரலை. கடையை விரிச்சு வச்சுக்கிட்டு வியாபாரத்துக்காக காத்திருக்கிறார். சமீபத்தில், ஜி.கே.வாசனை சந்திச்சப்போ, வாசன் கிட்ட, தேர்தலுக்காக 500 கோடி ரூபாய் வேணும்னும், சோனியா காந்தி, தமிழகத்தைப் பொறுத்தவரை விஜயகாந்த் தலைமையில்தான் கூட்டணின்னு அறிவிக்கணும்னு கண்டிஷன் வச்சிருக்கார்.
இதையெல்லாம் கேட்ட ஜி.கே.வாசன், அதிர்ந்து போயிட்டார். வரதட்சிணை கேக்கிற மாதிரி கேக்கறாரே இந்த ஆளு… விஜயகாந்த் தலைமையில், தமிழகத்தில் கூட்டணின்னு நான் சோனியா கிட்ட போயி பேச முடியுமா ? லூசு மாதிரியே பேசறாரே ன்னு பொலம்பியிருக்கார்”
“அவர் லூசு மாதிரி பேசறது என்ன புதுசா ? பொதுக்குழுவில் பேசும்போது, அது என்னமோ ஜிஎஸ்எல்வி ன்னு ராக்கெட் விட்டிருக்காங்க.. அதை சோதனைப் பண்ணி பாத்தாத்தான் அது ஒழுங்கா வேலை செய்யுதா இல்லையான்னு தெரியும்னு விஞ்ஞானி மாதிரியே பேசறார். அவர்கிட்ட போயி என்ன பேசுவ” என்றான் ரத்னவேல்.
“அவர் லூசு கிடையாதுடா… எந்தக் கட்சி அதிகமா பணம் தரத் தயார்னு கிட்டத்தட்ட டெண்டர் விடாத குறையா அறிவிச்சிக்கிட்டு இருக்கார். தான் இல்லாத கூட்டணி ஜெயிக்காதுன்னு எல்லார்கிட்டயும் சொல்லிக்கிட்டு இருக்கார். “
“நீ இப்படி சொல்ற… முக.ஸ்டாலினும், கேப்டனை லூசுன்னு சொல்றாராமே… ? ” என்றான் பீமராஜன்.
“உண்மைதான்டா… திமுகவோட கூட்டணி சேர்றதுக்கு கேப்டன் வச்ச கண்டிஷன் அவரை அப்படி பேச வச்சுடுச்சு”
“என்ன கண்டிஷன் போட்டாராம் “
“திமுக கூட்டணியில் சேர வேண்டும் என்றால், எந்த கல்யாண மண்டபத்தை அவங்க இடிச்சாங்களோ, அதே கல்யாண மண்டபத்துக்கு வந்து, எங்க கூட கூட்டணியில சேருங்கன்னு கேட்கணும். கேட்டாத்தான் வருவேன்னு சொல்லியிருக்காரு. இதைக் கேட்டுட்டு ஸ்டாலின் தலையில அடிச்சிக்கிட்டாராம்”
“சரி.. அம்மா என்ன பண்றாங்க ? ” என்று அம்மா சப்ஜெக்டுக்கு தாவினான் ரத்னவேல்.
“அம்மா கடுமையான கலக்கத்துல இருக்காங்க”
“ஏண்டா என்ன ஆச்சு ? “
“பெங்களுரு சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்ந்து ஜெயலலிதாவை கடுமைய அச்சுறுத்திக்கிட்டு இருக்கு. திங்கள் கிழமை அன்னைக்கு பெங்களுரிலிருந்து நீதிபதி மைக்கேல் குன்னா நேரில் வருகை தந்து, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருக்கும் சிறப்பு நீதிமன்றத்தில், ரிசர்வ் வங்கியில் இருந்த நகைகளை பார்வையிட்டதா தகவல் சொல்றாங்க. ஏராளமான போலீஸ் குவிக்கப்பட்டு கடுமையான பாதுகாப்போட அந்த வளாகம் காட்சியளித்தது.
பத்திரிக்கையாளர்களை தவிர்ப்பதற்காக, சென்னை மாநகர காவல்துறை திட்டமிட்டு வெடிகுண்டு சோதனை என்ற வதந்தியை பரப்பினார்கள். ஆனா, விபரங்கள் எல்லோருக்கும் தெரிந்து, பத்திரிக்கையாளர்கள் அந்த வளாகத்தில் குழுமிட்டாங்க”
“சரி.. இதனால ஜெயலலிதா ஏன் அச்சப்படணும் ? “
“என்னடா இப்படிக் கேக்கற.. நீதிபதி மைக்கேல் குன்னா போற வேகத்தைப் பாத்தா, ஏப்ரல் மாசத்துக்குள்ள தீர்ப்பை வெளியிட்டுடுவார் போல இருக்கு. அவரை எப்படியாவது அணுகலாம்னு ஜெயலலிதா தரப்பு எடுத்த முயற்சிகள் அத்தனையும் தோல்வியில முடிஞ்சுடுச்சு. இப்போ இந்த வழக்கு, இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கு. இனி எந்தக் காரணத்தை சொல்லி, வழக்கை இழுத்தடிக்கிறதுன்னு தெரியலை. வழக்கறிஞர்களோட தீவிர விவாதத்துல இருக்காங்க ஜெயலலிதா”
“சரி.. கூட்டணியில ஏதாவது மாற்றம் இருக்கா ? ” என்றான் பீமராஜன்.
“இப்போதைக்கு ஜெயலலிதாவின் கூட்டணி முடிவுல எந்த மாற்றமும் இல்லை. இடது சாரிகளோட தனியா தேர்தலை சந்திக்கறதுன்றதுல மாற்றம் இல்லை. ஆனா, மற்ற கட்சிகளோட கூட்டணி முடிவுகளை கூர்ந்து கவனிச்சிக்கிட்டு இருக்காங்க. “
“பிரதமர் கனவு எந்த அளவுக்கு இருக்கு ? “
“கனவு காண எல்லோருக்கும் இருக்கும் உரிமை ஜெயலலிதாவுக்கு மட்டும் இல்லாமப் போயிடுமா என்ன ? அவங்களுக்கும் உண்டு. ஆனா, அவங்க கனவை நிறைவேத்தத்தான் கட்சியில ஆள் இல்லை”
“ஏன்டா இப்படி சொல்ற ? “
“நரேந்திர மோடியை தூக்கி நிறுத்த ஆர்எஸ்எஸ், அருண் ஜெய்ட்லி, சுஷ்மா சுவராஜ், இது போக மோடி விளம்பரப்படைன்னு ஒரு பெரிய கூட்டமே இருக்கு. காங்கிரஸ் கட்சி ஒரு மிகப்பெரிய ராட்சத இயந்திரம். நேத்து முளைச்ச ஆம் ஆத்மி கட்சியில கூட, சிறந்த அறிவாளிகள் இருக்காங்க. பிரசாந்த் பூஷண், யோகேந்திர யாதவ், பிஸ்வாஸ் மற்றும் படித்த இளைஞர்கள் ஏராளமானோர் இருக்காங்க. ஜெயலலிதாவுக்கு, வானகரம் வரைக்கும் கட் அவுட் வைக்கும் அடிமைகளைத் தவிர வேற யாருமே இல்லை. ‘நான்தான் பிரதமர், நான்தான் பிரதமர்’ னு இவங்களே சொல்லிக்கிட்டாத்தான் உண்டு. வேணும்னா சசிகலாவை இனிமே அக்கான்னு கூப்புட்றதுக்கு பதிலா, ப்ரைம் மினிஸ்டர் அக்கான்னு கூப்பிட்டுக்கலாம். வேற எதுவும் பண்ண முடியாது”
“சரி.. அம்மா என்ன திட்டம்தான் வச்சிருக்காங்க ? ” என்றான் பீமராஜன்.
“இப்போதைக்கு, என்டிடிவி நிறுவனத்தில் பணியாற்றும் ஜெனிஃபர் அருளை, ஜெயா டிவிக்கு துணை தலைவரா, கே.பி.சுனில் இடத்தில் நியமிக்கலாமான்னு யோசிச்சிக்கிட்டு இருக்காங்க. போன வாரம் ஜெனிஃபர் அருள், ஜெயலலிதாவை சந்திச்சப்போ, இது பத்தி பேசப்பட்டிருக்கு”
“ஜெயா டிவியில வேலைக்கு சேர்றதைப் பத்தி ஜெயலலிதாகிட்ட எதுக்கு பேசணும் ? அவங்களுக்கும், ஜெயா டிவிக்கும்தான் சம்பந்தமே இல்லையே” என்று சொல்லி விட்டு சிரித்தான் ரத்னவேல்.
அவனை முறைத்து விட்டு தொடர்ந்தான் தமிழ். ஜெனிஃர் அருள், ஜெயா டிவிக்கு வந்தா, அவங்க மூலமா, தேசிய ஊடகங்களோட தொடர்பு ஏற்படும், அது நாளைக்கு அவங்களோட பிரதமர் கனவுக்கு பயன்படும்னு நினைக்கிறாங்க ஜெயலலிதா. வெகு சீக்கிரம் ஜெனிஃபர் அருள் ஜெயா டிவியில இணைய இருப்பதா சொல்றாங்க”
“அவங்க சேந்துட்டா மட்டும் ஜெயா டிவியில மாற்றம் வந்துடுமா என்ன ? அவங்களும், ஜெயலலிதா அறிக்கையை கமா, ஃபுல் ஸ்டாப் விடாம படிக்கத்தானே போறாங்க” என்று சொல்லி விட்டு சிரித்தான் ரத்னவேல். “
“கொஞ்ச காலமா கூடங்குளம் அணு உலை பத்தி எந்த செய்தியும் இல்லையே.. என்ன நடக்குது” என்று அடுத்த மேட்டருக்கு தாவினான் வடிவேல்.
“கூடங்குளம் அணு உலையைப் பத்தி எப்போதும் பேசும் நாராயணசாமி இப்போ தேர்தலில் ஜெயிக்கும் கவலையில் இருக்கிறார். பாண்டிச்சேரியில் போட்டியிட்டால் தற்போது காங்கிரஸ் இருக்கும் நிலைமையில் தோத்து விடுவோம்னு பயப்படறார். அதுக்காக, அவருக்கு எதிராக என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளரை நிறுத்தக் கூடாதுன்னு கேட்டு தூது விட்டுக்கிட்டு இருக்கார்”
“அது சாத்தியமா என்ன ? “
“பாண்டிச்சேரி அரசாங்கத்தில் ராகேஷ் சந்திரா என்கிற ஐஏஎஸ் அதிகாரி பணியாற்றிக்கிட்டு இருக்கார். ஐஏஎஸ் அதிகாரிகளின் தலையெழுத்தை தீர்மானிக்கக் கூடிய பணியாளர் மற்றும் பயிற்சித் துறையின் அமைச்சர் நாராயணசாமிதான். இந்த அதிகாரத்தை பயன்படுத்தி, ராகேஷ் சந்திராவை, என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமியிடம் பேசும்படி கேட்டுக்கிட்டு இருக்கார் நாராயணசாமி”
“அதிமுக வீட்டு வசதித்துறை அமைச்சர் அறிவாலயம் போல ஒரு கட்டிடத்தைக் கட்ட திட்டம் போட்டார் போல இருக்கே ? ” என்று கேட்டான் பீமராஜன்.
“ஆமாம் மச்சான். அது உண்மைதான் தஞ்சாவூரில், ஒரு மருத்துவமனை எதிரே அரசு இடம் காலியா இருந்திருக்கு. அந்த இடத்தில் ஒரு பெரிய மின் வாரிய ட்ரான்ஸ்பார்மர் இருந்திருக்கு. அந்த இடத்தை அபகரித்து, அதில் அதிமுக அலுவலகம் கட்ட வீட்டு வசதித்துறை அமைச்சர் வைத்தியலிங்கம் திட்டம் போட்டு, அந்த ட்ரான்ஸ்பார்மரை 75 லட்ச ரூபாய் பணம் கட்டி மாத்தினார். இந்த விஷயம், லோக்கல் தினகரன் நாளிதழில் செய்தியா வந்துடுச்சு. வந்ததும், தினகரன் நாளேடு அலுவலகத்தில் பேசி, தொடர்ந்து அதிமுக விளம்பரங்கள் வருவது போல பாத்துக்கிட்டார் அமைச்சர்”
“தினகரன் ஒத்துக்கிட்டாங்களா ? “
“ஏன் ஒத்துக்காம… விளம்பரம் வருதில்ல ? “
“காவல் துறை செய்திகள் என்ன இருக்கு சொல்லு ? “
“முதல்ல, ஒரு வேதனையான செய்தியை சொல்லிட்றேன். கே.கே.நகர்ல மருத்துவரா இருப்பவர் டாக்டர் இளங்கோவன். இவர் மிகச்சிறந்த தோல் மருத்துவ நிபுணர். இவர் மகனும் ஒரு மருத்துவர். அரசு மருத்துவரா இருந்து ஓய்வு பெற்றவர். இவர் வீட்டோட சேத்து, ராகவேந்திரா கிளினிக் னு ஒரு மருத்துவமனை நடத்திக்கிட்டு வர்றார். மீனாட்சி மருத்துவக் கல்லூரி மற்றும் முத்துக்குமரன் மருத்துவக் கல்லூரியை நடத்துபவர் ராதாகிருஷ்ணன். இந்த ஆள் ஒரு கடைந்தெடுத்த அயோக்கியன். வெறும் பத்தாவது படிச்சிட்டு, தன்னை ஒரு முனைவர் னு சொல்லிக்கிட்டு ஏமாற்றும் ஃப்ராடு. இந்த ஃப்ராடுக்கு பிறந்த இன்னொரு ஃப்ராடு கோகுல் என்கிற கோகுல கிருஷ்ணன். இந்த தறுதலையின் தகப்பனார் கோடிக்கணக்கில் சம்பாதித்து வைத்திருப்பதால், இந்த தறுதலையின் வேலை, தண்ணியடித்து விட்டு ஊர் சுற்றுவது மட்டும்தான். இந்த ஃப்ராடுக் குடும்பத்துக்கு சொந்தமாக இரண்டு மருத்துவக் கல்லூரிகள் இருக்கு.
ஒன்னு மீனாட்சி மருத்துவக் கல்லூரி. இன்னொரு கல்லூரி முத்துக்குமரன் மருத்துவக் கல்லூரி. இந்த இரண்டு கல்லூரிகளும், முறையான கட்டுமான அனுமதிகள் இல்லாமல் கட்டப்பட்டுள்ள மருத்துவக் கல்லூரிகள். இந்த முறைகேடுகளை மறைக்கத்தான், தின இதழ் பத்திரிக்கை தொடங்கி நடத்திக்கிட்டு இருக்காங்க.
இந்த அயோக்கியத்தனங்களை அம்பலப்படுத்துவதற்காக, டாக்டர் இளங்கோவன், பல காலமா தொடர்ந்து போராடிக்கிட்டு இருக்கார். மருத்துவத் தொழிலை வியாபாரமாக்கி இப்படி சம்பாதிக்கிறார்களேன்ற வருத்தத்துல, முறையற்ற இந்தக் கல்லூரியை இழுத்து மூடணும்னு போராடிக்கிட்டு இருக்கார்.
தாக்குதலை விளக்கும் மருத்துவர் இளங்கோவன்
ஞாயிற்றுக் கிழமை காலை 4.30 மணிக்கு, பத்து ரவுடிகளோடு வந்த ராதாகிருஷ்ணனின் மகன் கோகுல், டாக்டரை, அவர் மனைவியை மற்றும் மகனை சராமாரியாக தாக்கியதோடு அல்லாமல், அங்கே இருந்த இரண்டு கார்களையும் அடித்து நொறுக்கி விட்டு சென்றிருக்கின்றனர். தாக்குதலில், கோகுலே நேரடியாக ஈடுபட்டிருக்கிறார். உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும், சம்பவ இடத்துக்கு வந்து, குற்றவாளிகள் மூன்று பேரை கைது செய்துள்ளனர். இதில் தென் சென்னை இணை ஆணையர் திருஞானம், துரிதமாக செயல்பட்டு, உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.
தாக்குதலில் ஈடுபட்ட மன வளர்ச்சி குன்றிய குரங்கு கோகுல்
டாக்டர் இளங்கோவனையும், அவர் மனைவி மற்றும் மகனை கொலை செய்யும் நோக்கத்தோடு வந்தவர்கள் குறித்து, முழுமையான புகார் அளித்தும், கொலை முயற்சிக்கான சட்டப்பிரிவை சேர்க்காமல் எப்ஐஆர் போட்டிருக்கிறார் கே.கே.நகர் ஆய்வாளர் மதியழகன். தற்போது தலைமறைவாகியுள்ள கோகுலை காவல்துறையினர் தேடிக்கிட்டு இருக்காங்க”
மருத்துவர் இளங்கோவன் தாக்கப்படும் சிசிடிவி காட்சிகள்.
“சமூகத்தில் செல்வாக்கு வாய்ந்த ஒரு மருத்துவருக்கே இந்த கதின்னா, சாமான்ய மக்களோட நிலைமையை யோசித்துப் பாரு” என்றான் ரத்னவேல் கவலையோடு.
“அடுத்த செய்தி என்னன்னா, பொருளாதாரக் குற்றப் பிரிவில் பணியாற்றிய காவல் கண்காணிப்பாளர் வெண்மதி பற்றியது. அந்த அம்மா, பொருளாதாரக் குற்றப் பிரிவில் பணியாற்றும்போது, ஏகப்பட்ட மாமூல் வசூல் பண்ணியிருக்காங்க. அங்க இருந்து மாறுதலில் சென்றபோது கூட, அரசுக் காரில் இருந்த சிகப்பு விளக்கையும், கார் ஸ்டீரியோவையும் கழட்டி எடுத்துக்கிட்டு போயிட்டாங்களாம். அளவுக்கு அதிகமா நான்கு வாகனங்களை பயன்படுத்தியிருக்காங்க. இது சம்பந்தமா உள்துறைக்கு புகார் போனதையடுத்து, லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு உத்தரவிடலாமான்னு பரிசீலனை பண்ணிக்கிட்டு இருக்காங்க”
“ஜாபர் சேட் மேல புதுப் புகார் கிளம்பியிருக்குன்னு சொல்றாங்களே… உனக்கு தெரியுமா மச்சான்” என்றான் பீமராஜன்.
“தெரியும். அது பத்தின முழு விபரங்களை அடுத்த வாரம் சொல்றேன்”
“நீதித்துறை செய்திகள் என்னப்பா இருக்கு ? ” என்றார் கணேசன்.
“நீதிபதிகள் நியமனம் பெரிய பிரச்சினையா வெடிக்க இருக்குன்ணே. 12 பேரை நீதிபதிகளா நியமனம் பண்ண, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் பரிந்துரை பண்ணதைப் பத்தி சொன்னேன்.
திங்கட்கிழமை அன்னைக்கு, வழக்கறிஞர்கள் நீதிமன்ற வளாகத்துக்குள்ளயே போராட்டத்தை தொடங்கிட்டாங்க. பல மூத்த வழக்கறிஞர்கள் கலந்துக்கிட்டு பேசினாங்க. ஏப்ரல் மாதம் ஓய்வு பெற இருக்கும் உச்சநீதிமன்ற நீதிபதி சதாசிவத்தோட தேர்வுகள் மோசமா இருக்கிறதால, இந்த 12 பேரின் பரிந்துரையை ரத்து பண்ணனும்னு போர்க்கொடி உயர்த்தியிருக்காங்க.
செவ்வாய்க்கிழமை, உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் கூட்டமும் நடைபெற இருக்கு. இது பெரிய பிரச்சினையா பூதாகரமா வெடிக்கும்னு சொல்றாங்க. இது தொடர்பா வெளியாகியிருக்கும் துண்டறிக்கையும் பெரும் பரபரப்பை கிளப்பியிருக்கு.
“சவுக்கு தளத்தை முடக்க ஒரு வக்கீல் தீவிரமா ஈடுபட்டிருக்காராமே கேள்விப்பட்டியாப்பா ? ” என்றார் கணேசன்.
“கேள்விப்பட்டேன்ணே. மனித உரிமை வழக்கறிஞர்னு பேரெடுத்த சங்கர சுப்புதான் இந்த வேலையில ஈடுபட்டிருக்கார்”
வழக்கறிஞர் சங்கரசுப்பு
“அவர் மனித உரிமைகளுக்காக போராடக்கூடிய வழக்கறிஞராச்சே… அவர் எதுக்கு இந்த வேலையில ஈடுபட்றார் ? “
“அந்த பேரை வச்சுத்தான் அவரை பலரும் நம்பிக்கிட்டு இருக்காங்க. விசாரணை நடத்தும் நீதிபதிகள் பேரைச் சொல்லி பல பேருக்கிட்ட வசூல் பண்ணியிருக்கார். பல வழக்குகளில், நீதிபதிக்கு பணம் குடுத்தா விடுதலை பண்ணிடுவாருன்னு வசூல் பண்ணியிருக்கார். பூந்தமல்லி வெடிகுண்டு வழக்குகள் நீதிமன்றத்தில் நடந்த ஒரு வழக்கில் குற்றவாளிகள் சார்பாக சங்கர சுப்பு ஆஜரானார். அப்போ, அதை விசாரித்த நீதிபதி 20 லட்ச ரூபாய் கேட்கிறார் னு, சம்பந்தப்பட்டவங்க கிட்ட கேட்டிருக்கார். அவங்க கிட்ட பணம் இல்லைன்னு சொன்னதும், நான் நீதிபதியிடம் பேசி விட்டேன். அவர் உங்களை விடுதலை செய்ததே என்னால்தான், அதனால் பணத்தைக் கொடுங்கள் என்று கேட்டுள்ளார். அவர்கள் இல்லை என்று கை விரித்ததும், கோபித்துக் கொண்டு அவர்களுடன் பேசாமல் இருந்தார். பின்னாளில், அந்த நீதிபதி அப்படியெல்லாம் பணம் கேட்கவே இல்லைன்ற விபரம் தெரிய வந்திருக்கு. இயக்குநர் சேரன் மகள் விவகாரத்தில், சந்துருவுக்கு ஆதரவாக, சங்கர சுப்பு ஆஜரானதே, இயக்குநர் சேரனிடம் இருந்து பணம் பறிக்கலாம் என்ற எண்ணத்திலேதான் என்று கூறுகின்றனர் விபரமரிந்தவர்கள்.
அடுத்ததா, சுந்தரமூர்த்தின்னு ஒரு நக்சலைட்டுக்காக வழக்கு நடத்தினார். அந்த வழக்கில், தட்சணாமூர்த்தி ன்ற நீதிபதி, சுந்தரமூர்த்திக்கு ஆயுள் தண்டனை விதிச்சிட்டார். தீர்ப்பு சொன்னதும், சங்கர சுப்பு நீதிமன்றத்திலேயே நீதிபதியைப் பாத்து XXXXX பையா நீயெல்லாம் ஒரு ஜட்ஜாடா ன்னு திட்டினார்” ஒரு மூத்த வழக்கறிஞரே இப்படியெல்லாம் நீதிபதியை பேசினா, மற்ற வழக்கறிஞர்கள் எப்படி நீதிபதிகளை மதிப்பாங்க ? இணைப்பு. சங்கர சுப்பு இப்படிப்பட்ட ஆளுன்னு தெரிஞ்சுதான், சவுக்கு தளத்தில் விமர்சிக்கப்பட்ட சில நீதிபதிகள் சங்கரசுப்புவை பயன்படுத்தி, சவுக்கு தளத்தை முடக்க நினைக்கிறாங்க”
“சரி.. இந்த வழக்கை யாரு விசாரிக்கிறா ? “
“நீதிபதி சி.டி.செல்வம் இந்த வழக்கை விசாரிக்கிறார். “
“அவரைப் பத்தியும் சவுக்கு தளத்தில் எழுதப்பட்டிருக்கே ? “
“அதனாலதான், நீதிபதி சி.டி.செல்வம், இந்த வழக்கை விசாரிச்சு, சவுக்கு தளத்தை முடக்குவதில், மிகுந்த ஆர்வம் காட்டறார். செவ்வாய்க்கிழமை அன்னைக்கு மதியம் 2.15 மணிக்கு, இந்த வழக்கை பிரத்யேகமா, விரிவா விசாரிக்கறேன்னு உத்தரவு போட்டிருக்கார்”
“நீதிபதிகள் செய்யும் அயோக்கியத்தனங்கள் வெளியே தெரிந்து விடக் கூடாது, அதைப் பற்றி யாரும் பேசக் கூடாதுன்றதுல, எல்லா நீதிபதிகளும் கவனமா இருக்காங்க. இதற்காக எந்த எல்லைக்கும் போவாங்க. சரி கௌம்பலாம்பா” என்று சொல்லி விட்டு எழுந்தார் கணேசன். சபை கலைந்தது.