அன்பார்ந்த வாசகர்களே… சவுக்கு தளம், கடந்த நான்கு ஆண்டுகளாக, உண்மைகளை வெளிக்கொணர வேண்டும் என்ற ஒரே நோக்கில், பல்வேறு இடையூறுகள், தடைகள், மிரட்டல்களுக்கு இடையே எழுதி வந்திருக்கிறது. உத்தமர் போல வேடமிட்டு, ஊரை ஏமாற்றி, நல்லவர் போல் நடித்து, நாடமாடிக் கொண்டிருக்கும் நீதித்துறையைச் சேர்ந்தவர்களை துணிச்சலாக துகிலுரிந்து வந்திருக்கிறது.
இந்தியாவில் எந்த ஊடகமும் செய்யாத பணி, நீதித்துறையில் உள்ளவர்களை அம்பலப்படுத்துவது. சமூகத்தில் அத்தனை துறைகளிலும் புரையோடிப் போயிருக்கும் ஊழல், நீதித்துறையையும் கடுமையாக பீடித்தே உள்ளது. ஆனாலும், நீதிமன்ற அவமதிப்பு என்ற ஒரே ஆயுதத்தை பயன்படுத்தி, நீதித்துறையின் நீதி நாயகர்கள், ஊடகங்களையும், கருத்து சுதந்திரத்தையும் மிரட்டி வந்துள்ளார்கள். ஆனால், ஏதாவது ஒரு கட்டத்தில் இந்த நீதித்துறையைச் சேர்ந்தவர்கள் செய்யும் ஊழல் மற்றும் முறைகேடுகளை அம்பலப்படுத்த வேண்டும் என்ற முடிவோடு, சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் கீழமை நீதிமன்றங்களில் உள்ள ஊழல் நீதிபதிகளை சவுக்கு தொடர்ந்து அம்பலப்படுத்தி வந்துள்ளது. நீதிபதிகளை அம்பலப்படுத்தும் தொடர் கட்டுரைகளால், ஊழல் நீதிபதிகள் அதிர்ந்து போனார்கள். யாராலும் கேள்வி கேட்க முடியாத கடவுளர்கள் என்று தங்களைக் கருதிக் கொண்டிருந்த நீதியரசர்களின் உண்மை முகத்தை சவுக்கு அம்பலப்படுத்தியதால் என்ன செய்வதென்று தெரியாமல் புலம்பினார்கள்… சவுக்கு தளத்தை முடக்க வழி தேடினார்கள். தங்களை யாராலும் கேள்வி கேட்க முடியாத கடவுளர்கள் என்று இவர்கள் தங்களைக் கருதிக் கொள்வதற்குக் காரணம், நீதிபதிகளின் மீதான ஊழல் புகார்களை விசாரித்து அவர்களை பதவி நீக்கம் செய்வதற்குள், கருணாநிதியையும், ஜெயலலிதாவையும் திருத்தி நல்ல அரசியல்வாதிகளாக்கி விடலாம். இரண்டும் நடக்கவே நடக்காத செயல்கள். இந்த நீதிபதிகள் பணம் வாங்கவதற்கும், சொத்து சேகரிப்பதற்கும் எதிரான ஆதாரத்தை சேகரிப்பது எளிதல்ல. சத்தம் போடாமல் ப்ரோக்கர்கள் மூலமாக பணம் வாங்கும் நீதிபதிகளுக்கு எதிராக எப்படி ஆதாரத்தை சேகரிப்பீர்கள் ? காவல்துறை அதிகாரிகள், ஐஏஎஸ் அதிகாரிகள், அமைச்சர்கள், முதலமைச்சர்கள், போன்ற பதவிகளில் இருப்பவர்கள் ஊழலில் ஈடுபட்டால் எப்படி அரசல் புரசலாக விஷயம் வெளியே கசிகிறதோ, அதே போலத்தான் நீதிபதிகள் ஊழலில் ஈடுபடும் விஷயமும் வெளியே கசிகிறது. மற்ற வர்க்கத்தினரைப் பற்றி கசியும் செய்திகளில் எப்படி உண்மை இருக்கிறதோ…. அதே போல நீதிபதிகளைப் பற்றிக் கசியும் செய்திகளிலும் உண்மை இருக்கிறது. அந்த செய்திகளை ஒரு ஜனநாயக நாட்டில், மக்களோடு பகிர்ந்து கொள்வது, சமூகத்தை நேகிக்கும் ஒவ்வொரு மனிதனும் செய்ய வேண்டிய செயல். இத்தனை நாட்கள் யாரும் செய்யவில்லை என்பதற்காக, சவுக்கு தளமும் அதை செய்யாமல் இருக்கும் என்று எதிர்ப்பார்த்தால் அவர்கள் ஏமாந்து போவார்கள்.
ஜனநாயகத்தில் நீதித்துறையே இறுதிப் புகலிடம். மக்களின் ஒரே நம்பிக்கை நீதித்துறை மட்டுமே. அந்த நீதித்துறையில் ஊழல் புரையேடிப்போய்.. எந்த வழக்கறிஞருக்கு எந்த நீதிபதி நெருக்கம்… எந்த நீதிபதிக்கு எந்த வழக்கறிஞர் ப்ரோக்கர்.. எந்த நீதிபதிக்கு என்ன பலவீனம் என்ற ரீதியில் ஒரு நீதிமன்றத்தின் பெரும்பாலான நீதிபதிகள் இருந்தால் அதைப் பார்த்துக் கொண்டு வாளாயிருப்பவன் மனசாட்சி உள்ள மனிதனாக எப்படி இருக்க முடியும் ? ஊரில் உள்ள அத்தனை அநீதிகளையும், அயோக்கியத்தனங்களையும் அம்பலப்படுத்தும் சவுக்கு இணையதளம், இந்த நீதிபதிகளைப் பற்றி மட்டும் எப்படி கண்டும் காணாமலும் இருக்க முடியும் ? வழக்குகள் அச்சுறுத்தினாலும், நண்பர்கள் தடுத்தாலும், உண்மையை எழுதியே தீர வேண்டும் என்ற பிடிவாதத்துடனே, சவுக்கு தளம் இத்தனை நாட்களாக நடத்தப்பட்டு வந்திருக்கிறது. வழக்கமான அச்சு மற்றும் காட்சி ஊடகங்களுக்கு இருக்கும் நெருக்கடி சவுக்கு போன்ற இணைய தளங்களுக்கு இல்லை. இந்த காரணத்தாலேதான், துணிச்சலாக, உண்மையை உரத்துச் சொல்லி வந்திருக்கிறது சவுக்கு.
மற்ற துறைகளை விட, அதிகம் கவனம் செலுத்த வேண்டிய துறை நீதித்துறையே என்பதற்கான காரணம், மற்ற துறைகளுக்கு இருக்கும் கடிவாளம், நீதித்துறைக்கு இல்லை. ஆத்தலும், அழித்தலும் வல்ல இறைவனாக தங்களை கருதிக் கொள்ளும் நீதிபதிகள் தங்கள் குறைகளைப் பற்றி முணுமுணுப்பதைக் கூட சகித்துக் கொள்வதில்லை.
அப்படிப்பட்ட ஊழல் நீதிபதிகளுக்கு உதவி செய்வதற்காகவே, மனித உரிமை போராளி என்ற வேடத்தில் வலம் வரும், சங்கரசுப்பு போன்ற வழக்கறிஞர்கள் களமிறங்கியிருக்கிறார்கள். சங்கரசுப்பு சவுக்கு தளத்துக்கு எதிராக தொடர்ந்துள்ள வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இன்று ஒத்தி வைக்கப்பட்ட இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சங்கரசுப்பு, இந்த தளத்தில் மாண்புமிகு நீதியரசர்களைப் பற்றி பல்வேறு விஷயங்கள் தவறாக எழுதப்படுகின்றன.. நீதிபதிகளைப் பற்றி அவதூறாக எழுதப்படுகின்றன. இந்தத் தளத்தை நடத்துவதாக சொல்லப்படுபவரை கைது செய்ய காவல்துறை மறுக்கிறது என்றார். அரசு வழக்கறிஞர் எழுந்து, இந்தத் தளத்தை நடத்துபவர் யார் என்ற விபரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. சங்கரசுப்பு சொல்லும் நபர்தான் இந்த தளத்தை நடத்துகிறார் என்பதற்கான ஆதாரங்கள் இல்லை என்றார். உடனே சங்கரசுப்பு, காவல்துறையினர் வேண்டுமென்றே, அவரை காப்பாற்றுகிறார்கள். உடனடியாக சம்பந்தப்பட்ட நபரை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கோரினார்.
இந்த வழக்கை விசாரித்தவர் நீதிபதி சி.டி.செல்வம். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி நியமன உத்தரவு வந்ததும் கொஞ்சமும் வெட்கமே இல்லாமல், தனக்கு நீதிபதி பதவியை வாங்கிக் கொடுத்த கருணாநிதியை சென்று பார்த்தவர். இன்று வரை, கருணாநிதிக்கு தன்னுடைய விசுவாசத்தை தவறாமல் வெளிப்படுத்திக் கொண்டிருப்பவர். 120 நாட்கள், தலைமறைவாக, காவல்துறைக்கு டிமிக்கி கொடுத்து விட்டு ஓடிய மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதிக்கு, கூச்ச நாச்சமில்லாமல் முன் ஜாமீன் மனு அளித்தவர். இப்படிப்பட்ட நீதிபதி சி.டி.செல்வம்தான் இன்று இந்த வழக்கை விசாரித்தார். இன்றும் திமுக வழக்கறிஞர்கள் வந்தால், ஒரு வினாடி கூட தயங்காமல் அவர்களுக்கு தேவையான ஆணைகளை பிறப்பித்து வருகிறார்.
சவுக்கு தளத்தை யார் நடத்தவது என்பதை கண்டு பிடிக்க முடியவில்லை என்று, அரசு வழக்கறிஞர் தெரிவித்ததும், இது மிகவும் சீரியசான விவகாரம். நீதித்துறையைப் பற்றி இப்படி ஒருவரோ, பலரோ எழுதிக் கொண்டிருப்பதை அனுமதிக்க இயலாது என்றார். உடனடியாக ட்ராய் அதிகாரிகள் அடங்கிய ஒரு குழுவை அமைத்து, இதை நடத்துவது யார், அதற்கு காரணமான நபர் ஒருவரா, பலரா, இதன் சர்வர் எங்கே உள்ளது, இதை முடக்குவதற்கு என்ன வழி என்பதை கண்டறிய வேண்டும் என்றும், மூத்த வழக்கறிஞர்கள் இந்தக் குழுவில் இடம்பெற்று, இதற்கு உதவ வேண்டும் என்றும் தெரிவித்து, இதற்கான இடைக்கால உத்தரவை பிறப்பித்தார் நீதிபதி சி.டி.செல்வம்.
சவுக்கு தளம் ஒரு வேளை முடக்கப்பட்டாலும், வேறு புதிய இணைய தளத்தில் இந்தப் பணி தொடரும். இறுதி மூச்சு உள்ளவரை, இந்தப் பணியை நீதிபதி சி.டி.செல்வம் அல்ல.. அவர் தலைவர் கருணாநிதியே நினைத்தாலும் நிறுத்த முடியாது. இது நீதிபதி சி.டி.செல்வத்தின் தானைத் தலைவர் கருணாநிதிக்கே தெரியும். அதனால்தான் 2009 முதல், 2011 வரை, அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்ட பின்னர் அமைதியானார் கருணாநிதி.
சவுக்கு தளம் எத்தனை தடைகள், இடையூறுகள், மிரட்டல்கள், அச்சுறுத்தல்கள் வந்தாலும் தொடர்ந்து தன் பணிகளை மேற்கொள்ளும் என்று வாசகர்களுக்கு அன்புடன் தெரிவித்துக் கொள்கிறது.
நீதிபதி சி.டி.செல்வத்துக்கு சவுக்கு பாரதியாரின் இந்த கவிதையை சமர்ப்பிக்கிறது.
தேடிச் சோறுநிதந் தின்று
பல சின்னஞ் சிறுகதைகள் பேசி
மனம் வாடித் துன்பமிக உழன்று
பிறர் வாடப் பல செயல்கள் செய்து
நரை கூடிப் கிழப்பருவம் எய்தி
கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போலே
நான் வீழ்வே னென்று நினைத்தாயோ ?