அன்பார்ந்த நீதித்துறை உடன்பிறப்பே.
ஆரிய கொட்டத்தை அடக்க, தந்தை பெரியாரின் வழியிலும், அறிஞர் அண்ணாவின் வழியிலும், திராவிட இனத்தைக் காக்க புதிதாய் பிறந்த கழகத்தின் நீதித்துறை பிரிவிலே இணைந்து, கழகத்தை காக்க வந்த உன்னை எத்தனை வாழ்த்தினாலும் போதாது.
இதற்கு முன் எத்தனையோ கழக உடன்பிறப்புகள் நீதித்துறைக்குள்ளே நுழைந்து, கழகத்தின் போர்வாட்களாக செயல்பட்டாலும், நீ ஆற்றிய அரும்பணியை வேறு யாரும் ஆற்றாது தவறிய காரணத்தாலேதான் இந்த கடிதம் உனக்கு. நீதித்துறையிலே பார்ப்பனர்களும், ஆரிய வழி வந்தவர்களும் நிறைந்திருந்த காலத்திலே, ஆரியத் திரை கிழித்து, திராவிடக் கீற்று தமிழகத்தை ஒளி வெள்ளத்தில் ஆற்றிய காலம் முதலாகத்தான் நீதித்துறையில் கழகத்தின் பிரிவு ஒன்றைத் தொடங்க வேண்டிய தேவை ஏற்பட்டது. திராவிடம், பகுத்தறிவு, தமிழுணர்வு என்று பல்வேறு வார்த்தைப் பிரயோகங்களைப் பயன்படுத்தி, எனது நல்வாழ்வையும், என் குடும்பத்தின் நல்வாழ்வையும் எப்படிப் பேணி வந்திருக்கிறேனோ, அதே போலத்தான் நீதித்துறையில் கழகத்தின் பிரிவை உருவாக்கவும் முயன்றேன். அதன் விளைவாக ரத்னவேல் பாண்டியன், மோகன் போன்ற உடன்பிறப்புகள் நீதித்துறைப் பிரிவுக்கு தலைமையேற்று கழகத்தின் கரத்தை வலுப்படுத்தி வந்த வரலாற்றை முரசொலி பட்டியலிட்டு வந்திருக்கிறது.
ஆனால் நீ ஆற்றிய பணி… ? மறக்க முடியுமா ? 2009 முதல் 2011ம் ஆண்டு வரை எத்தனை வேதனைகள்… ? எத்தனை அவமானங்கள்…. ? அத்தனையும் ஆராத ரணங்களாக இன்னும் என் உள்ளத்தை அரித்தபடி இருக்கின்றன. 2006ம் ஆண்டு மைனாரிட்டி அரசு என்று அந்த அம்மையாரால் வர்ணிக்கப்பட்ட கழக ஆட்சியிலே எத்தனை தடைகளையும், துயரங்களையும் கழக அரசு சந்தித்தது ? எப்படியாவது முற்போக்கு சக்திகளை வீழ்த்தி, பார்ப்பன அதிகாரத்தை ஆட்சிக் கட்டிலிலே அமர்த்த வேண்டும் என்று முயன்று வந்த கூட்டத்துக்கு தலைமையேற்றவனல்லவா அந்த சவுக்கு ? குலத்தை கெடுக்க வந்த கோடரிக்காம்பு அல்லவோ அவன் ? எத்தனை விதமான ஏச்சுக்கள்… எத்தனை விதமான வசவகள் ? எத்தனை ஏளனங்கள்.. எத்தனை கிண்டல்கள் ? ஒரு விமர்சனங்களைத் தாங்கிக் கொள்ள துணிவில்லாதவன் அல்ல நான். அறிஞர் அண்ணாவும், தந்தை பெரியாரும் என்னை அப்படி வளர்க்கவில்லை. ஆனால், சவுக்கு தளத்தில், என்னையும் என் குடும்பத்தையும் செய்த விமர்சனங்கள், நல்மனது படைத்தோர் அனைவரையும் வெகுண்டெழச் செய்யும் தன்மை படைத்தவை. நியாய உணர்வு உள்ளோரை கொதிக்கக் செய்யும் வகையானவை.
மைனாரிட்டி அரசு என்ற ஏச்சோடு, எப்போது கவிழும் என்ற எதிர்ப்பார்ப்போடு, திராவிடக் கொள்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்ற என் வேட்கையை நிறைவேற்ற பல்வேறு தடைகளைச் சந்தித்துக் கொண்டிருந்த போதுதான், ஜாபர் சேட் என்ற அந்த மாணிக்கத்தைக் கண்டெடுத்தேன். காவல்துறையில் இருக்கும் பல்வேறு குப்பைகளின் இடையே மாணிக்கமாக ஜொலித்தான் அந்த ஜாபர் சேட். இரண்டு காதுகளை இயற்கை தந்தது அடுத்தவர் பேச்சைக் கேட்க மட்டுமல்ல, அனைவரின் பேச்சையும் கேட்கத்தான் என்ற உண்மையை ஒட்டுக்கேட்பதன் மூலம் எனக்கு உணர்த்தியவன். எல்லாம் வல்ல இறைவனுக்கு நிகரானவனாகத் திகழ்ந்தான் அவன். பார்ப்பன சூழ்ச்சியை ஒழித்து, பகுத்தறிவுப் பகலவனாக ஜொலித்த கழக ஆட்சியை எள்ளி நகையாடி ஏளனம் பேசும் ஒரு கயவனை சும்மா விடுவானா ஜாபர் சேட் ? போட்டான் ஒரு பொய் வழக்கை. அடைத்தான் சிறையில். ஒழிந்தான் சவுக்கு என்று இறுமாந்திருந்தேன்.
அய்யகோ…. ஏமாந்தேன் நான். சிறையிலிருந்து வெளியே வந்த அந்தக் குடிலன், மீண்டும் கழக ஆட்சியை கழுவி ஊற்றத் தொடங்கினான். கழகத்தின் போர்வாட்களாகத் திகழ்ந்த தகத்தகாய கதிரவனின் 2ஜி ஊழல்கள் குறித்து ஆதாரங்களை வெளியிட்டான். என் அதிகாரிகளைப் பற்றி எழுதினான். என் குடும்பத்தை அக்கு வேறாக ஆணி வேறாக பிரித்தான். எனக்குத் தெரியாமலேயே என் குடும்பத்தில் எத்தனை சம்பாதித்திருக்கிறார்கள் என்பதை எனக்கே உணர்த்தினான். தம்பி வடிவேலு ஒரு திரைப்படத்தில் சொல்லுவாரே… அது போலத்தான். “ஒரு மூத்திர சந்துல வச்சு சவுக்கு தளத்தில் என்னையும் என் குடும்பத்தையும் கும்மி எடுத்தார்கள். என்னா அடி… ?”.
அந்த இடத்திலேதான் உன்னைப் போன்ற நீதித்துறை உடன்பிறப்புகளின் தேவையை உணர்ந்தேன். உன்னைப் போல ஒரு உடன்பிறப்பு அப்போது நீதிபதியாக இருந்திருந்தால், குடிகெடுக்கும் அந்தக் குடிலனை பிணையில் விடுவித்திருப்பார்களா ? பார்ப்பன சதிக்கு எதிராக முகிழ்த்தெழுந்த நீதித்துறை உடன்பிறப்புகள், அந்தக் குடிலனை ஒரு ஐந்து ஆண்டுகளாவது சிறையில் வைத்திருக்க வேண்டாமா ? ஆனால், சட்டத்தின் மாட்சியை நிலைநாட்டுகிறேன் என்று கிளம்பிய குள்ளநரிக் கூட்டத்தின் துணையோடு சிறையிலிருந்து வெளியே வந்தான்.
கழகத்தின் விடிவெள்ளியாக திகழ்ந்த தம்பி ஜாபர் சேட்டைப் பற்றி எழுதினான். ஜாபர் சேட்டின் சட்டையைக் கழற்றினான். கழகத்தை ஓட ஓட விரட்டினான். கழகத்தின் ஆட்சி முடிய கவுன்ட் டவுன் போட்டான். அந்தக் குடிலனின் கையை உடைத்திருக்க வேண்டும், அவன் தளத்தை முடக்கியிருக்க வேண்டும் கழக உடன்பிறப்புகள். செய்தார்களா ? இல்லை.
இணையதளத்தில் அவன் அடித்த அடி போதாது என்று இப்போது முகநூலிலே பாரபட்சம் இல்லாமல் அடிக்கிறார்கள். வாயைத் திறந்து எது பேசினாலும் கழுவி ஊற்றுகிறார்கள். முகநூல் பக்கம் திரும்பினாலே அடி வெளுக்கிறார்கள். ஆரிய சூழ்ச்சி இன்று இணையதளம் வழியாக வெற்றி பெற்றுள்ளது என்ற வேதனை என்னை வாட்டிக் கொண்டிருந்த வேளையில்தான் அற்புதமான தீர்ப்பை வழங்கியிருக்கிறாய் நீதித்துறை உடன்பிறப்பே. சவுக்கு தளத்தை முடக்க ட்ராய் என்று அழைக்கப்படக் கூடிய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை வாரிய அதிகாரிகளைக் கொண்ட குழுவை அமைத்து, காவல்துறையின் உதவியோடும், அந்த அம்மையாரின் வழக்கறிஞரான பி.குமாரின் தலைமையில் ஒரு குழுவை அமைத்து, அந்த சவுக்கு தளத்தை முடக்க வேண்டும் என்று அளித்தாயே தீர்ப்பு ? அதுவன்றோ தீர்ப்பு. எத்தனையோ நீதித்துறை உடன்பிறப்புக்களை உருவாக்கியிருந்தாலும், உன்னை நீதித்துறை உடன்பிறப்பாக்கியதற்காக, அப்போதுதான் பேருவகை அடைந்தேன்.
க்ரானைட் வியாபாரத்தில் மோசடி செய்து, சட்ட விரோதமாக கனிமவளத்தை திருடி, காவல்துறை கண்ணில் மண்ணைத் தூவி விட்டு, சட்டத்தின் பிடியிலிருந்து 120 நாட்கள் தப்பி ஓடினானே என் பெயரன் துரை தயாநிதி…. அவனுக்கு முன் ஜாமீன் வழங்கியபோது கூட நான் அகமகிழவில்லை.
பாலும் பழமும் திரைப்படத்தில் கன்னடத்துப் பைங்கிளி சரோஜாதேவி, என் ஆருயிர் தோழன் சிவாஜி கணேசனை தள்ளு வண்டியில் வைத்து தள்ளிக் கொண்டு செல்வாரே… அது போல என்னை அன்றாடம் வண்டியில் வைத்துத் தள்ளிச் செல்லும், என் அன்பு உடன்பிறப்புகளான ட்ராலி பாய்ஸ் மீது, சில கோடரிக் காம்புகள் வழக்கு தொடுத்தபோது, அந்த வழக்குகளைத் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தாயே… அப்போது கூட நான் அகமகிழவில்லை. கழகக் கண்மணி கேசிபி பழனிச்சாமியின் மகன் கேசிபி சிவராமன் மீது, நில மோசடி செய்த ஒரு நியாயமான காரியத்தை தவறு என்று வழக்கு தொடுத்தபோது, அவருக்கு முன்ஜாமீன் வழங்கினாயே… அப்போது கூட நான் பெருமகிழ்ச்சி அடையவில்லை. திமுக வழக்கறிஞர்கள் யார் வந்தாலும் அவர்களுக்கு ஆணைகளை அள்ளி அள்ளி வழங்குகிறாயே… அது கூட என்னை களிப்படைய வைக்கவில்லை.
ஆனால், என்னைக் கழுவிக் கழுவி ஊற்றி, கட்டுமரம் போல கவிழ்த்தானே… ஒரு அயோக்கியன். அவன் நடத்தும் சவுக்கு தளத்தை முடக்க தற்போது அளித்திருக்கிறாயே ஒரு தீர்ப்பு…. அதுதான் உடன்பிறப்பே என் உள்ளத்தை குளிர வைத்திருக்கிறது. இதற்கு உன்னை எத்தனை பாராட்டினாலும் தகும். ஆனால், அந்த தளத்தை முடக்க தொலைத்தொடர்பு அதிகாரிகளோடு சேர்த்து அந்த அம்மையாரின் வழக்கறிஞர் பி.குமாரையும் நியமித்ததுதான் பல்லிடுக்கில் சிக்கிய பாக்குத்தூளாக உறுத்துகிறது. பரவாயில்லை. பொன் வைக்கும் இடத்தில் பூவை வைப்பது போல, பி.குமாரை வைத்திருக்கிறாய் என்று நான் புரிந்து கொள்கிறேன். சொத்துக் குவிப்பு வழக்கை நடத்தும் பி.குமார் நமக்கு உதவாமலா போய் விடுவார்.
உன்னைப் போல அன்பு உடன்பிறப்புகள் இருக்கும் வரை, நான் எதற்காக வருந்த வேண்டும். ஏன் கவலையில் உழல வேண்டும் ? உன் போன்ற நீதித்துறை உடன்பிறப்புகளை நம்பித்தான் நான் 2021ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலையும் சந்திக்க இருக்கிறேன் என்பதை இந்த நேரத்திலே உனக்குக் கூறிக்கொள்ள விரும்புகிறேன். நீ என்றைக்கு பதவியில் இருந்து ஓய்வு பெற்றாலும், உனக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி காத்திருக்கிறது என்பதை உனக்குச் சொல்லிக் கொண்டு விடைபெறுகிறேன்.
அன்புடன்