“வணக்கம் அண்ணே… எல்லாருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்” என்றபடி மாடிக்குள் நுழைந்தான் டாஸ்மாக் தமிழ்.
“வணக்கம் டா.. உக்காரு.. என்னென்ன செய்திகள் எடுத்துக்கிட்டு வந்துருக்க. ஒன்னு ஒன்னா சொல்லு, மொதல்ல தேர்தல் களம் எப்படி இருக்குன்னு சொல்லு” என்று தமிழை வரவேற்றான் ரத்னவேல்.
“நாடு முழுக்க இப்போ ஆம் ஆத்மி அலை வீசுது. டெல்லி தேர்தல் தந்த வெற்றி, ஆம் ஆத்மி பார்ட்டிக்கு பெரிய நம்பிக்கையை குடுத்திருக்கு ஜனவரி 26ம் தேதிக்குள்ள ஒரு கோடி பேரை உறுப்பினரா சேக்கணும்னு தொடங்கியிருக்கிற இயக்கம் வலுவா போயிக்கிட்டு இருக்கு”
“சரி. ஆம் ஆத்மி பார்ட்டி பாராளுமன்றத் தேர்தல்ல பெரிய அளவுக்கு வெற்றி பெறுமா என்ன ? “
“ஆம் ஆத்மி பார்ட்டி தலைமைக்கு பெரிய அளவில் தாக்கத்தை உண்டு பண்ணலாம்னு நம்பிக்கை இருக்கு. அந்த அடிப்படையில் ஒரு 80 சீட்டில் வெற்றி பெறலாம்னு நினைக்கிறாங்க. சமீப காலமா, மோடி Vs ராகுல் ன்னு எழுதிக்கிட்டிருந்த பத்திரிக்கைகள் கேஜ்ரிவால் Vs ராகுல் னு எழுத தொடங்கியிருக்காங்க. பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட மாட்டேன்னு உறுதியா சொன்ன கேஜ்ரிவாலும் அவரோட முடிவை மறுபரிசீலனை பண்ணப் போறார். கேஜ்ரிவால் பிரதமராகும் வாய்ப்பும் இருக்குன்னு அந்தக் கட்சி நம்புது. “
“கேஜ்ரிவால் எப்படிடா பிரதமராக முடியும் ? ” என்று வியப்பாக கேட்டான் வடிவேல்.
“ஒரு மாநிலக் கட்சியோட தலைவரா இருந்துக்கிட்டு, வெறும் 30 சீட்டில் வெற்ற பெற வாய்ப்பு உள்ள ஜெயலலிதாவுக்கே பிரதமர் கனவு இருக்கும்போது, கேஜ்ரிவாலுக்கு இருப்பதில் தப்பு இல்லையே… ? “
“காங்கிரஸ் கட்சி ஆம் ஆத்மி பார்ட்டியை எப்படிப் பாக்கறாங்க ? ” என்றான் பீமராஜன்.
“காங்கிரஸ் கட்சி, ஆம் ஆத்மி பார்ட்டியை தங்களோட வசதிக்காக பயன்படுத்திக்கனும்னு நினைக்கிறாங்க. தனிப்பட்ட முறையில் பேசும் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள், இந்த தேர்தலில் காங்கிரஸ் ஆட்சிக்கு வருவது சாத்தியமே இல்லைன்றதை நல்லாவே புரிஞ்சிருக்காங்க. பத்து வருடம் தொடர்ந்து ஆட்சியில இருந்த பிறகு, மீண்டும் ஆட்சியைப் பிடிப்பது கஷ்டம்னு நல்லாவே அவங்களுக்குத் தெரியுது. பிஜேபியை ஆட்சிக்கு வர விடாமல் தடுப்பதற்கு, ஆம் ஆத்மி பார்ட்டியை பயன்படுத்திக்கணும்னு நினைக்கிறாங்க. ஆம் ஆத்மி பார்ட்டி கணிசமான தொகுதிகளில் ஜெயிச்சா, டெல்லியில உள்ளது போல ஆம் ஆத்மி பார்ட்டிக்கு வெளியில இருந்து ஆதரவு தரணும்னு நினைக்கிறாங்க. அப்படி பண்றதன் மூலமா, மோடியோட கனவில் மண்ணை அள்ளிப் போடலாம்னு திட்டம் போட்றாங்க.”
“சரி. தமிழ்நாட்டுல ஆம் ஆத்மி பார்ட்டி ஏகப்பட்ட குழப்பத்துல இருக்கும் போல இருக்கே ? ” என்று கேட்டான் ரத்னவேல்
“ஆமா… பெரிய குழப்பத்துலதான் இருக்கு. தமிழ்நாட்டுல ஆம் ஆத்மி பார்ட்டி கிறிஸ்டினா சாமின்றவங்க தலைமையில இயங்குது. இவங்க என்.ஜி.ஓ நடத்துவதாகவும், இவங்களோட என்ஜிஓவுக்கு பெல்ஜியம் நாட்டிலிருந்து ஏராளமான நிதி வந்திருப்பதாகவும் தகவல் உலவுது. ஆம் ஆத்மி பார்ட்டியின் சென்னை ஒருங்கிணைப்பாளர் கே.பி.நாராயணன் போன வாரம் பத்திரிக்கையாளர் சந்திப்புக்கு அழைப்பு விடுத்திருந்தார். ஆனா, ஒரு மணி நேரத்தில், கிறிஸ்டினா சாமி, அந்த பத்திரிக்கையாளர் அழைப்பு அதிகாரபூர்வமானது கிடையாது ன்னு அறிக்கை வெளியிட்டாங்க. அந்தக் கட்சியோட தமிழ்நாடு அணியைப் பொறுத்தவரை குழப்பம்தான் நிலவுது.
“சரி… அணு சக்தி எதிர்ப்பு இயக்கத் தலைவர் உதயக்குமார் ஆம் ஆத்மியில் இணைவார்னு பேசப்படுதே… அது எந்த அளவுக்குப்பா உண்மை ? ” என்றார் கணேசன்.
“அண்ணே.. ஆம் ஆத்மி கட்சி உதயக்குமாருக்கு அழைப்பு விடுத்திருப்பது உண்மை. அவர்களும் அதை பரிசீலித்து விட்டு, சில நிபந்தனைகளை விதித்திருக்கிறார்கள். அணு சக்தி கொள்கை என்ன என்பதை தெளிவா கூற வேண்டும், கட்சியின் பெயரை தமிழகத்தைப் பொறுத்தவரை சாதாரண மக்கள் கட்சி என்று மாற்ற வேண்டும் போல சில கோரிக்கைகள் வைத்திருக்கிறார்கள். இதற்கெல்லாம், ஆம் ஆத்மி பார்ட்டி தலைமை என்ன பதில் சொல்லப் போறாங்கன்னு தெரியலை.. உதயக்குமார் ஆம் ஆத்மி கட்சிக்கு தலைமையேற்று போட்டியிட்டார்னா, திருநெல்வேலி, கன்னியாக்குமரி, தூத்துக்குடி தொகுதிகளில், வெற்றி பெறுவதற்கே வாய்ப்பு இருக்கு
ஆம் ஆத்மி பார்ட்டியோட தலைமை கையிலதான் முடிவு இருக்கு. இதுக்கு நடுவுல, அணு உலை எதிர்ப்பியக்கத்தின் சார்பில், ஆம் ஆத்மி கட்சியில் உதயக்குமார், புஷ்பராயன், மற்றும் கஸ்பா உள்ளிட்டோர் சேருவதா, வேண்டாமா என்று மக்கள் கிட்ட கருத்து கேக்கறாங்க.”
“சரி…. மோடி அலை எந்த அளவுக்கு இருக்கு ? ” என்றான் ரத்னவேல்.
“மோடி பிரதமர் ஆனா என்ன நடக்கும்னு சொல்றேன் கேளு. குஜராத்தில் 2500 கோடி ரூபாய் செலவில் கேவடியா ன்ற இடத்தில் வல்லபாய் படேல் சிலை வைக்கிறதா திட்டமிட்டிருக்கார் மோடி. இது உலகத்துலயே உயரமான சிலையாம் மொத்தம் 182 மீட்டர் உயரம். நாற்பது மாசத்துல இந்த சிலையை கட்டி முடிக்க திட்டம். இதுக்காக நாடு முழுவதும், விவசாயிகள் கிட்ட இருந்து இரும்பு வாங்கறதா திட்டம். இது மோடியோட கனவுத் திட்டம்.
இந்தத் திட்டத்துக்கு இரும்பு வாங்கறதுக்காக, ஐஏஎஸ் அதிகாரிகளை நாடெங்கும் அனுப்பு இரும்பு சேகரிக்கச் சொல்லியிருக்கார் மோடி. குஜராத் கேடரைச் சேர்ந்த அதிகாரிகள் நாகராஜ், திலீப் சோனி, ஐஎஃப்எஸ் அதிகாரி, கருப்பசாமி ஆகியோரை அனுப்பி, இரும்பு சேகரிக்க அனுப்பியிருக்கார். ஐஏஎஸ் அதிகாரிகளை இப்படி சிலை அமைக்க அனுப்பும் நபர் பிரதமரானா, நாடு என்ன ஆகும்னு நீயே பாரு…”
“2500 கோடியில சிலையா… மோடி சரியான லூசா இருப்பாரு போல இருக்கே.. ” என்றான் பீமராஜன்.
“இது நமக்குத் தெரியுது… ஆனா, மோடி பிரதமராகனும்னு துடிக்கிறவங்களுக்கு தெரியலையே… “
“அழகிரி பிரச்சினை என்னதான்டா பின்னணி ? அழகிரி ஆதரவாளரை மொத்தமா நீக்கிட்டாங்களே…. ” என்றான் ரத்னவேல்.
“திமுக தரப்புல தேமுதிகவோட பேச்சுவார்த்தை நடந்துக்கிட்டு இருக்கு. தேமுதிகவுக்கு சீட்டுகள் ஒதுக்கப்படுவது வரை முன்னேற்றம் ஏற்பட்டிருக்கு. தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் பல தொகுதிகள் தென் மாவட்டத்தில் ஒதுக்கப்பட்டிருக்கு. குறிப்பா விஜயகாந்த் மதுரை வேணும்னு கேட்டதாகவும், அவருக்கு அதை தருவதற்கு, திமுக தலைமை சம்மதம் தெரிவிச்சதாகவும், தகவல் அழகிரிக்கு போயிருக்கு.
மதுரையில என்னைக் கேக்காம எப்படி வேட்பாளரை போடலாம்.. அதுவும், விஜயகாந்த் கட்சிக்கு கொடுத்தா நான் எப்படி அந்த வேட்பாளருக்கு பிரச்சாரம் பண்றதுன்னு கோபமடைஞ்சுட்டார் அழகிரி. விஜயகாந்துக்கு மதுரையையும், தென் தமிழகத்திலும் தொகுதிகளை ஒதுக்கக் கூடாதுன்னு திட்டவட்டமா சொல்லிட்டாரு. ஆனா, கருணாநிதி இதை காதுலயே வாங்கிக்கல… இதனாலதான் அழகிரி கடுமையா கோபமடைஞ்சு, புதிய தலைமுறை சேனலில், விஜயகாந்தை கடுமையா விமர்சனம் செய்து பேட்டி கொடுத்தார். இது கூட்டணி பேச்சுவார்த்தைகளை பாதிக்கும்னு கருணாநிதி நினைச்சுதான் மதுரை திமுக நிர்வாகிகளை அதிரடியா நீக்கம் செய்திருக்கார்”
“சரி.. இந்த நடவடிக்கைக்கு அழகிரி கோபமடைஞ்சிருக்கனுமே.. ? ஆனா அப்படி ரியாக்ஷன் ஏதும் வரலையே ? ” என்று வியப்பாக கேட்டான் பீமராஜன்.
“அழகிரி, ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததுல இருந்தே பயந்து போயிருக்கார். பொட்டு சுரேஷ் கொலை வழக்குல தன்னை சேத்துடப் போறாங்களோன்னு ரொம்ப பயத்துல இருக்கார். கருணாநிதியை நேரா சந்திச்சப்போ, இந்தப் பிரச்சினையை நான் பாத்துக்கறேன்.. நீ அமைதியா இருன்னு சொல்லியிருக்கார். அதுக்கப்புறம் தான் அழகிரி எதுவும் பேசாம கௌம்பிட்டார்”
“அழகிரியோட அமைதி ஆச்சர்யமா இருக்கே. ? ” என்றான் ரத்னவேல்
“ஆமா. ஆச்சர்யமாத்தான் இருக்கு. 2000ம் வருஷம், இதே மாதிரி ஒரு பிரச்சினை ஏற்பட்டப்போ, அழகிரி ஆதரவாளர்கள் பல பேருந்துகளை கொளுத்தினாங்க. அழகிரி அதிமுகவுல சேரும் அளவுக்கு போனாரு. ஆனா, தன் மகன் மேல எப்போ வழக்கு வந்துச்சோ… அதுல இருந்தே அமைதியாயிட்டாரு. கிட்டத்தட்ட பூனை மாதிரி ஆயிட்டாரு”
“காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத் கருணாநிதியை சந்தித்தாரே … என்னப்பா பின்னணி ? ” என்றார் கணேசன்.
“அண்ணே. அது மரியாதை நிமித்தமான சந்திப்புன்னு அவரே சொல்லிட்டாரே.. “
“விளையாடாதப்பா… விஷயத்தை சொல்லு”
“அண்ணே. குலாம் நபி ஆசாத் சோனியாகிட்ட இருந்து பர்சனலா ஒரு செய்தியை எடுத்துட்டு வந்திருக்கார். நேரடியாவே சொல்லிட்டாங்களாம். உங்க எதிர்காலம், உங்க மகளோட எதிர்காலத்தை மனசுல வச்சுக்கிட்டு ஒரு முடிவை எடுங்க. காங்கிரஸோட உறவை முறிச்சிக்கிறதுக்கு உங்களுக்கு நல்லது இல்லைன்னு நேரடியா சொல்லிட்டாங்க”
“தலைவர்தான் காங்கிஸோட இனி ஒட்டும் கிடையாது உறவும் கிடையாதுன்னு சொல்லிட்டாரே…. ? “
“ஆங்கிலத்தில் ஆர்ம் ட்விஸ்டிங் னு ஒரு விஷயம் இருக்கு. காங்கிரஸ் இந்த மாதிரி ஆர்ம் ட்விஸ்டிங் பண்றதுல கில்லாடி. காங்கிரஸ் கட்சிக்கு சாதகமான முடிவுகளை எடுக்கும் வரை விட மாட்டாங்க. திமுகவோட உறவை முறிச்சதோட பலனை, கனிமொழி அனுபவிக்க ஆரம்பிச்சுட்டாங்க”
“என்னப்பா சொல்ற ? “
“ஆமாம் அண்ணே… கனிமொழி மேல சிபிஐ தாக்கல் செய்த வழக்கு போலவே, அமலாக்கப் பிரிவு சட்ட விரோத பணப் பரிவர்த்தனைக்கு ஒரு வழக்கு தாக்கல் செய்தாங்க. சட்ட விரோத பணப் பரிவர்த்தனை சட்டம் அமலுக்கு வந்தது 1 ஜுன் 2009. 2 ஜி விவகாரத்தில் ஊழல் நடந்தது 10 ஜனவரி 2008ல். அரசியல் அமைப்புச் சட்டம் பிரிவு 20ன் படி, தவறு நடந்த பிறகு, கொண்டு வரப்படும் சட்டத் திருத்தங்களின்படி நடவடிக்கை எடுக்க முடியாதுன்னு இருக்கு. அதன்படி, கனிமொழி உள்ளிட்டோர் மீது சட்டவிரோத பணப்பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் நடவடிவக்கை எடுக்க முடியாதுன்னு ஜுலை 2013ல் மத்திய அரசோட வழக்கறிஞர் மோகன் பராசரன் கருத்து அளித்திருந்தார்.
தற்போது அந்த கருத்தை மறு பரிசீலனை செய்யணும்னு மத்திய அரசு, மோகன் பராசரனிடம் கேட்டாங்க. அந்த அடிப்படையில் மறுபரிசீலனை செய்த மோகன் பராசரன், 2ஜி ஊழலில் பணப் பரிவர்த்தனைகள் நடைபெற்ற காலம் 10 ஜனவரி 2008 முதல் 28 பிப்ரவரி 2011 வரை நடந்திருக்கு. இந்த காலத்துக்குள்ள பணப்பரிவர்த்தனை குறித்த சட்டத் திருத்தம் நடைபெற்றிருக்கு. அதனால, இது கலைஞர் டிவி வாங்கிய 200 கோடிக்கு பொருந்தும்னு கருத்து கூறியிருக்கிறார். இந்த சட்டத் திருத்தத்தின் படி, அதிகபட்ச தண்டனை ஏழு வருஷம்.
இது கனிமொழியை சிறைக்கு அனுப்புவதற்கான ஏற்பாடு. கனிமொழி மீண்டும் சிறைக்கு போவாங்கன்னு தெரிஞ்சா கருணாநிதி ஆடிப்போயிடுவாரு. இப்போ வேற வழியே இல்லாம காங்கிரஸ் கூட கூட்டணி வைச்சே ஆகணும். அமலாக்கப் பிரிவுக்கான அமைச்சர் ப.சிதம்பரம் என்பது குறிப்பிடத்தக்கது.
“அப்போ காங்கிரஸ் திமுக கூட்டணி உறுதியா… ? “
“கிட்டத்தட்ட உறுதியான மாதிரிதான். திமுக, காங்கிரஸ், தேமுதிக, விடுதலைச் சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி, புதிய தமிழகம்னு ஒரு கில்லர் அலையன்ஸை உருவாக்க திட்டமிட்டிருக்கார் கருணாநிதி. “
“அப்போ திமுக கூட்டணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அதிகம்னு சொல்லு… ” என்றான்
“வாக்கு வங்கியை அடிப்படையா வைச்சு பாத்தா இது ஒரு கில்லர் கம்பைன்தான்”
“அம்மா இதை எப்படி சமாளிக்கப் போறாங்க ? “
“அம்மா சமாளிச்சு கிழிச்சாங்க. கொடநாட்டில் ஓய்வு எடுத்துக்கிட்டு இருந்தா, கருணாநிதி அம்மாவை முழுங்கி ஏப்பம் விட்டுடுவார். சென்னை நீலாங்கரை அருகே தமீம் அன்சாரி ன்ற 16 வயது இளைஞனை, சாதாரண திருட்டு வழக்கில் கைது செய்து, அவன் வாயில் துப்பாக்கியை வைத்து ஒரு இன்ஸ்பெக்டர் சுடுகிறார். அந்த ஆளை கைது செய்ய உத்தரவிடாமல், சிறுவனுக்கு ஒரு லட்ச ரூபாய் பணத்தை குடுக்க உத்தரவு போட்டிருக்காங்க. அதுவும் சம்பவம் நடந்து ஏழு நாள் கழிச்சு இதை பண்ணியிருக்காங்க. ஏற்கனவே ஜெயலலிதா மேல எரிச்சலில் இருக்கும் முஸ்லீம் சமுதாயம், இன்னும் எரிச்சலடைஞ்சிருக்காங்க. சம்பந்தப்பட்ட காவல்துறை ஆய்வாளர் இது வரை கைது செய்யப்படவில்லை. போலீஸை வைச்சு போலீஸ் ராஜ்யம் நடத்தி அதன் மூலமாவே ஜெயிச்சிடலாம்னு நினைக்கிறாங்க… விரைவில் இதற்கான பலனை அனுபவிப்பாங்க”
துப்பாக்கியால் சுடப்பட்ட சிறுவன் தமீம் அன்சாரியின் பழைய படம்
“கொடநாட்டில் இருந்தாலும், கோப்புகளையெல்லாம் பாக்கறாங்களே டா” என்று ஜெயலலிதாவை சப்போர்ட் செய்து பேசினான் ரத்னவேல்.
“கொடநாட்டுக்கு ஜெயலலிதா போய் 20 நாட்கள் கடந்துடுச்சு. இது வரைக்கும் அதிகாரிகளோட போக்குவரத்து செலவு மட்டும் கோடிக்கணக்குல ஆகிக்கிட்டு இருக்கு. முக்கியமான பல கோப்புகள் நிலுவையில் இருக்கு. இது மாதிரி ஓய்வு இல்லத்துல உக்காந்துக்கிட்டு ஆட்சி நடத்துற ஒரே முதலமைச்சரா ஜெயலலிதாவாத்தான் இருப்பாங்க.
ஜெயலலிதாவை யாரும் அணுக முடியறதில்லை. இப்படி யாருமே அணுக முடியாம இருக்கிற காரணத்தால, எல்லா அதிகாரிகளும் ஜெயலலிதாவை ஏமாத்தறாங்க”
“என்னப்பா சொல்ற ? “
“ஆமாம்ணே.. தற்போது பணி இடைநீக்கத்தில் இருக்கும் ஜாபர் சேட், ஜெயலலிதா எப்படியாவது சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டிக்கபடனும்னு நினைக்கிறார். அதுக்கான தீவிரமான வேலைகளில் ஈடுபட்டு வர்றார்”
“அவர் என்ன பண்ணிட முடியும் ? “
“என்னண்ணே இப்படி கேக்கறீங்க. ஜாபர் சேட்டோட ஆரம்பத்துல இருந்தே நெருக்கமா இருக்கறது, பழைய கவர்னர் பர்னாலாவோட மகனுக்கு ப்ரோக்கரா இருந்த நஜிம்முத்தீன். இந்த நஜிம்முதின் இப்பவும் செல்வாக்காத்தான் இருக்கார். டெல்லியில நஜிம்முத்தீனுக்கு மவுரியா ஷெராட்டன் ஹோட்டல்ல நிரந்தரமா இரண்டு அறைகள் இருக்கு. நஜிம்முதீனும், நாராயணசாமியோட மகனும் ரொம்ப நெருக்கம்.
நாராயணசாமி மகன் மூலமா ஜாபர் சேட்டுக்கு நாராயணசாமி அமைச்சர் நெருக்கமாயிட்டார். நாராயணசாமிக்கு தொலைபேசி ஒட்டுக்கேட்பு நுணுக்கங்களையெல்லாம் ஜாபர் சேட் சொல்லிக் கொடுத்திருக்கார். இதுக்கு பிரதிபலனா, நாராயணசாமி, ஜாபர் சேட் மேல வழக்க தொடுக்க அனுமதி மறுத்து உள்துறை அமைச்சகம் அளித்த உத்தரவுக்கு உதவி பண்ணியிருக்கார்.
நாராயணசாமி மகன், நஜிம்முத்தீன், மற்றும் ஜாபர் சேட் எல்லாம் சேந்து, காங்கிரஸ் எம்.பியும், முன்னாள் அமைச்சருமான சுபோத் கான் சகாய் வீட்டில் சந்திச்சிருக்காங்க. சந்திச்சு, ஜெயலலிதாவுக்கு எப்படியாவது தண்டனை வாங்கித் தரணும்னு விவாதிச்சிருக்காங்க. சுபோத் கான் சகாயும், தன்னால ஆன உதவிகளை செய்யறதா ப்ராமிஸ் பண்ணியிருக்கார்”
“ஜாபர் சேட் சஸ்பென்ஷன்ல இருக்காரே… அவர் எங்க போறார் வர்றார்னு உளவுத்துறையும் கண்காணிச்சிக்கிட்டு இருக்காங்க. அவர் எப்படி டெல்லி போயிருக்க முடியும்”
“உளவுத்துறையும் இப்படித்தான் நினைச்சிக்கிட்டு இருந்தாங்க. சென்னை வந்த ஜாபர் சேட், சென்னையில இருந்து பெங்களுர் வரைக்கும் நஜிம்முத்தீனோட கார்ல போறார். பெங்களுர்ல இருந்து டெல்லிக்கு விமானத்துல போயிருக்கார். சமீபத்துலதான் இந்த மீட்டிங் நடந்துச்சு. திமுக தரப்புலயும், ஜெயலலிதாவுக்கு எப்படியாவது தண்டனை வாங்கித் தர்றது என் பொறுப்புன்னு சொல்லியிருக்கார்”
“இதெல்லாம் இந்த அம்மாவுக்கு தெரியுமா ? “
“தெரிஞ்சிருந்தா, இந்நேரம் ஜாபர் சேட், கம்பி எண்ணிக்கிட்டு இருப்பார்”
“சரி.. அதை விடு.. ஜாபர் சேட் பத்தி புது விஷயம் சொல்றேன்னு சொன்னியே… என்ன மேட்டர் அது ? “
“ஜாபர் சேட் உளவுத்துறையில் இருந்த காலத்துல, பல முறை டெல்லிக்கு பயணம் மேற்கொண்டிருக்கார். அது எல்லாமே அலுவல் ரீதியான பயணங்கள். அப்படி விமான பயணம் மேற்கொண்ட எல்லாமே முதல் வகுப்பில். முதல் வகுப்பு விமான கட்டணம். இதற்கான பணம் எல்லாமே உளவுத்துறையின் ரகசிய நிதியிலிருந்து எடுக்கப்பட்டது. வழக்கமா இப்படி ரகசிய நிதியில் இருந்து டிக்கெட் எடுப்பது இயல்புன்னாலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பயணம் முடிஞ்சு வந்ததும், பயணப்பட்டியல் (TA Bill) அந்தத் தொகையை திருப்பி குடுத்துடுவாங்க. ஆனா, ஜாபர் சேட், பயணப்பட்டியல் போட்டு, எல்லா பணத்தையும் அவரே எடுத்துக்கிட்டார். அரசாங்கத்துக்கு திருப்பிக் கொடுக்கல. கிட்டத்தட்ட 70 முதல் 80 முறை டெல்லிக்கு பயணம் மேற்கொண்டிருக்கார். இது தொடர்பா விரிவான விசாரணை நடத்தணும்னு ஒரு புதுப் புகார் அரசிடம் அளிக்கப்பட்டிருக்கு. அது தவிரவும் ஜாபர் சேட் டெல்லி போன அத்தனை முறையும் ஒரு தடவை கூட, அரசு விருந்தினர் இல்லமான தமிழ்நாடு இல்லத்தில் தங்கல. ஒவ்வொரு முறையும், ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில்தான் தங்கியிருந்தார். இது குறித்தும் விசாரணை நடத்தணும்னு புகார் அளிக்கப்பட்டிருக்கு”
“விசாரணை நடத்துவாங்களா ? “
“ஜெயலலிதா கொடநாட்டில் இருந்துக்கிட்டு, சசிகலா கூட மட்டும் பேசிக்கிட்டு இருந்தாங்கன்னா எதுவும் நடக்காது. தன்னோட எதிரிகள் யாருன்றதை கூட அடையாளம் கண்டு பிடிக்க முடியாமத்தான் ஜெயலலிதா இருக்காங்க”
“சரி.. தேர்தல் கூட்டணியையாவது இறதி செய்துட்டாங்களா ஜெயலலிதா” என்றான்
“ஜெயலலிதாவை சந்திக்க நேரம் ஒதுக்கும்படி, இடது சாரி தலைவர்களான தா.பாண்டியனும், ஜி.ராமகிருஷ்ணனும் கடிதம் கொடுத்து ஒரு மாசத்துக்கு மேல ஆச்சு. ஆனா, இது வரைக்கும் ஜெயலலிதா தரப்புல இருந்து எந்த ரெஸ்பான்சும் இல்ல. இடது சாரித் தலைவர்கள், நம்பளை இந்த அம்மா தெருவுல உட்டுடும் போல இருக்கேன்னு பொலம்பறாங்க..”
“சரி.. பிஜேபி நிலைமை எந்த மாதிரி இருக்கு ? ” என்றான் ரத்னவேல்.
“தேசிய அளவில் நடந்துக்கிட்டு இருக்கறது உனக்குத் தெரியும். மாநில அளவுல என்ன நடக்குதுன்னு சொல்றேன். தமிழக பிஜேபியின் ஒருங்கிணைப்பு செயலாளர் மோகன்ராஜுலு. பிஜேபியைப் பொறுத்தவரைக்கும் ஒருங்கிணைப்பு செயலாளர்தான் அதிகாரம் மிக்கவர்.
நடுவில் இருக்கும் விபத்து நாயகன் மோகன்ராஜுலு
இந்த மோகன்ராஜுலு, கடந்த வாரம் தன் மனைவியோட, கள்ளக்குறிச்சியில இருந்து, கடையநல்லூர் வரைக்கும் தன்னோட சில்வர் கலர் இன்னோவா கார் TN-09-AB-2307 ன்ற வாகனத்துல போயிக்கிட்டு இருந்தார். அப்போ கடையநல்லூர் அருகே, எதிரே இரு சக்கர வாகனத்தில் வந்த கணவன் மனைவி மேல மோதி, இருவரும் அதே இடத்துல இறந்துட்டாங்க. அவங்க பேரு, ரமேஷ் மற்றும் கல்யாணி. உடனே காவல் நிலையம் போகாம, மோகன்ராஜுலு, சென்னை பிஜேபி அலுவலகமான கமலாலயத்தில் இருக்கும் சிவலிங்கம் என்ற நபரை, அவர்தான் கார் ஓட்டினதா ஒத்துக்க வைச்சிருக்கார். அதன்படி, சிவலிங்கமும், போன வாரம் காவல்துறை முன்னாடி சரணடைஞ்சிட்டார். சிவலிங்கம் எப்பவும், சென்னை கமலாலயத்தில்தான் இருப்பார். சிவலிங்கத்தோட XX05528067 மற்றும் XX50873521 இந்த இரண்டு எண்கணோட டவர் லொக்கேஷனை எடுத்துப் பாத்தா, சம்பவம் நடந்த அன்னைக்கு சிவலிங்கம் சென்னையில இருந்தது தெரிய வரும். அது போக, காரை ஓட்டிக்கிட்டு போன மோகன்ராஜுலு, அந்த வழியில இருக்கும் அனைத்து டோல் பூத்துகளிலும் உள்ள கேமராக்களில் பதிவாகியிருப்பார். இதையும் தாண்டி, காவல்துறை, மோகன்ராஜுலுவுக்கு உதவி பண்ணாங்கன்னா, அதுக்கான விளைவுகளை சந்திச்சுதான் ஆகணும்.
“சரி.. நீதித்துறையில என்னப்பா நடக்குது ? ” என்றார் கணேசன்.
“அண்ணே… நீதிபதிகள் நியமனத்தில் உள்ள ஊழலையும், முறைகேடுகளையும், முதன் முறையா வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது சவுக்கு தளம்தான்”
“அதுக்குதான் நீதிபதிகளெல்லாம் சேந்து, சவுக்கு தளத்துக்கு சவக்குழி தோண்ட முயற்சி பண்ணிக்கிட்டு இருக்காங்களே…? “
“அதைப் பத்தி அப்புறம் பேசலாம். முதலில் நீதிபதிகள் விவகாரத்தை பேசிடலாம். நீதிபதிகள் தேர்வு விஷயமா சென்னை உயர்நீதிமன்றத்தில் போராட்டம் வெடித்திருக்கிறது. போன வாரம், ஒரு முறை நீதிமன்றப் புறக்கணிப்பு போராட்டம் நடத்தினாங்க. இந்த வாரம் வெள்ளிக்கிழமை நீதிமன்றப் புறக்கணிப்பு போராட்டம் அறிவிச்சிருக்காங்க. இந்தப் போராட்டம் தீவிரமடையும்னு சொல்றாங்க. சவுக்கு தளத்தில் வந்த பல செய்திகள், வழக்கறிஞர்கள் மத்தியில தீவிரமா விவாதிக்கப்பட்டு இருக்கு.
இந்த நீதிபதிகள் பட்டியலில் இருக்கக் கூடிய பிரபு ராஜதுரை என்பவர் வழக்கறிஞர் தொழிலை விட்டுட்டு, மூன்று ஆண்டுகள் மும்பையில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றினார். அப்படி பணியாற்றும்போதே, இவர் பெயரில் வக்காலத்தும் நீதிமன்றத்தில் ஃபைல் ஆகியிருக்கு.
மற்றொரு வழக்கறிஞரான எஸ்.எஸ்.சுந்தர் என்பவர் நாடார் சமூகத்தைச் சேர்ந்தவர். நாடார் உறவின் மகாஜன சபை இவரை பரிந்துரை பண்ணியிருக்காங்க. மூத்த வழக்கறிஞர் டி.ஆர்.ராஜகோபாலிடம் ஜுனியரா பணியாற்றியவர்.
மதுரையைச் சேர்ந்த மற்றொரு வழக்கறிஞரான புகழேந்தி என்பவர், சரியான தண்ணி வண்டியாம்.
மூத்த கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் உமாநாத் என்பவரின் மகள் நிர்மலா ராணி வழக்கறிஞர் தொழிலே செய்தது இல்லை. ஒன்றிரண்டு வழக்குகளைத் தவிர, கோர்ட்டு பக்கமே போனது இல்லை. இவங்களுக்கு சிபிஎம் கட்சியிலயே நல்ல பெயர் கிடையாது. ஆனா, இவங்களையெல்லாம், எப்படியாவது நீதிபதியாக்கணும்னு சதாசிவம் துடிக்கிறார்.
வழக்கறிஞர் நிர்மலா ராணி
இவர்களுடைய பெயர் பட்டியலில் போனதும், இந்த வழக்கறிஞர்கள் எல்லாம், தங்களுடைய பெயரை இந்தியில் எழுதி பயிற்றி எடுத்திருக்காங்க”
“அது எதுக்கு… ? “
“நீதிபதியாக நியமிக்கப்படுபவர்கள், இந்தியில் கையெழுத்து போடணும். அதுக்காக எல்லாரும் நீதிபதியாகவே ஆயிட்டதா நினைச்சு, கையெழுத்து போட்டு பயிற்சி எடுத்திருக்காங்க. “
“நீதிபதிகள் நியமனத்தில் வெளிப்படைத் தன்மை வேண்டும் என்னு தொடக்க காலம் முதலாக குரல் கொடுத்துக்கிட்டு, துண்டறிக்கைகள் வெளியிட்டு வரும், வழக்கறிஞர் விஜேந்திரனும், இந்தப் போராட்டத்தில் தீவிரமா ஈடுபட்டிருக்கார். மூத்த வழக்கறிஞர் விஜயக்குமார் தலைமையில், பல வழக்கறிஞர்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்காங்க”
“அப்போ இந்த நியமன உத்தரவுகள் வராதா ? “
“அது சொல்ல முடியாது. நீதிபதிகள் நியமனத்தில், பிராமண சாதியைச் சேர்ந்தவர்கள் அதிகமா பிரதிநிதித்துவப் படுத்தப்படுகிறார்கள்னு மூத்த வழக்கறிஞர் காந்தி ஒரு பொது நல வழக்கு தொடுத்திருக்கிறார் அது நீதிபதிகள் தனபாலன் மற்றும், கே.கே.சசீதரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்துள்ளது”
“அது நல்ல விஷயம்தானே ? ” என்றான் ரத்னவேல்.
“வெளிப்படையாக பாக்கறதுக்கு நல்ல விஷயம் மாதிரி தெரியும். ஆனா, அதுக்கு பெரிய பின்புலம் இருக்கு. வழக்கறிஞர் காந்தி கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவர். அவரும் அதே சமூகத்தைச் சேர்ந்த மற்றொரு மூத்த வழக்கறிஞரான முத்துமணி துரைசாமியும், சமீபத்துல சென்னை வந்த இந்தியாவின் தலைமை நீதிபதியை நேரில் சென்று சந்தித்தாங்க. அப்போ, முத்துமணி துரைசாமியின் மகனை நீதிபதியாக்க வேண்டும், மேலும் கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த நிறைய பேரை நீதிபதியாக்கணும்னு கோரிக்கை வைச்சாங்க. ஏற்கனவே கவுண்டர் சமூகத்தில் நிறைய பேரை சேத்துட்டேன். இப்போ பட்டியலில் உள்ள கிருஷ்ணகுமாரும் கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவர்தான். அதனால இனிமே பிரதிநித்துவம் தர முடியாது ன்னு சொல்லிட்டார் சதாசிவம். இந்த அளவுக்கு சதாசிவத்தோட நெருக்கமா உரையாடக் கூடியவர் காந்தி.
வழக்கறிஞர் பிரபாகரன்
அந்த காந்தி இதற்கெதிரா வழக்கு தொடுத்திருக்கார்னா, அது இந்தப் பட்டியலை எதிர்த்து அல்ல.. இந்த பட்டியலுக்கு ஆதரவாக”
“என்னடா சொல்ற… ? விசித்திரமா இருக்கே… ? “
“ஆமா… காந்திக்காக இந்த வழக்கை வாதாடுனது, தமிழ்நாடு வழக்கறிஞர் சங்கத்தின் தலைவர் பிரபாகரன். பிரபாகரனும், சதாசிவமும் எவ்வளவு நெருக்கம்னு ஊருக்கே தெரியும். அப்படி இருக்கும்போது, இவர்கள் ஏன் இதை எதிர்த்து வழக்கு தொடுக்கிறாங்கன்னா, அந்த வழக்கை சதாசிவத்துக்கு உதவி செய்வதற்காக. சென்னையில் போராட்டங்கள் தீவிரமடைந்ததால, இது போல ஒரு வழக்கை போட்டு, அந்த வழக்கை உச்சநீதிமன்றத்துக்கே மாத்தி, இந்த வழக்கையே சதாசிவம் கையில கொடுப்பதற்கான திட்டம்னு சொல்றாங்க”
“நம்பவே கஷ்டமா இருக்கே… “
“என்ன நடந்துச்சுன்னு பாரு. காந்தி இந்த வழக்கை தொடுக்கிறார். பிரபாகரன் இந்த வழக்குக்காக வாதாடுகிறார். நீதிபதிகள், இந்த வழக்கில் இடைக்கால தடை விதிக்கிறாங்க. இந்த இடைக்கால உத்தரவை எதிர்த்து இந்த வழக்கில் மேல் முறையீடு செய்யுமாறு, சதாசிவம், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அழுத்தம் கொடுத்ததா சொல்லப்படுது. ஆனா, தலைமை நீதிபதி அகர்வால், இதற்கு மறுத்ததாகவும் சொல்லப்படுது. தலைமை நீதிபதி சதாசிவம், சென்னை உயர்நீதிமன்றப் பதிவாளரை நேரடியா தொடர்பு கொண்டு, மேல் முறையீடு செய்யுமாறு அழுத்தம் கொடுத்ததாகவும், அதன்படி மேல் முறையீடு செய்யப்பட்டதாகவும் சொல்லப்படுது. திங்கட்கிழமை இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.எஸ்.சவுஹான் மற்றும் செல்லமேஸ்வர் ஆகிய நீதிபதிகள், சென்னை உயர்நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவுக்கு தடை பிறப்பித்து விட்டு, இந்த வழக்கை மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டிருக்காங்க.
இப்போ இந்த வழக்கு திரும்ப சதாசிவம் கைக்கே போயிடுச்சா ? இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்த காரணத்தால், நீதிபதிகள் நியமனத்துக்கு எந்த தடையும் இல்லை. வழக்கு நிலுவையில் இருக்கும்போதே நீதிபதிகள் நியமனத்தை செய்து முடிச்சிட்டா, அதுக்கு அப்புறம், அந்த வழக்கு பத்து வருஷத்துக்கு விசாரணைக்கு வராது. ஏப்ரல் மாசம் சதாசிவம் ஓய்வு பெறுவதற்குள், அவருக்கு வேண்டிய நபர்களை நீதிபதிகளாக்கிடுவார்.
சதாசிவம் ஓய்வு பெற்றாலும், அவர் நியமித்த 10 பேர், அவருக்கு அடுத்த பத்து ஆண்டுகளுக்கு சதாசிவத்துக்கு விசுவாசமா இருப்பாங்க. தீர்ப்புகளை வாங்கலாம், விற்கலாம். இதுதான் திட்டம்.”
“சரி… போராட்டம் ஒழுங்கா நடக்குமா.. இல்லை அதுவும் படுத்துடுமா ? “
“போராட்டத்தை முன்னெடுத்திருப்பது, கடந்த ஒரு வருடமாவே, நீதிபதிகள் நியமனத்தில் வெளிப்படைத்தன்மை வேணும்னு குரல் கொடுத்துக்கிட்டு வரக் கூடிய, விஜேந்திரன். தற்போது இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கார். மூத்த வழக்கறிஞர் விஜயக்குமார் இந்தப் போராட்டத்தை முன்னெடுக்கிறார். இவர்களுக்கு பல்வேறு வழக்கறிஞர்கள் ஆதரவு தர்றாங்க.
வழக்கறிஞர் விஜயக்குமார்
முதன் முறையா சாதியப் பற்றோடு இருக்கும் உச்சநீதிமன்ற நீதிபதி சதாசிவம் ராஜினாமா செய்யணும் னு கோரிக்கை எழுந்திருக்கு. இதையெல்லாம் மீறி, இந்தப் போராட்டத்தை எப்படியாவது சிதைக்கணும்னு நீதிபதிகள் தரப்பிலும் முயற்சிகள் இருக்கு”
“சரி… வழக்கறிஞர் காந்தி தொடுத்த வழக்கு விசாரணையில் இருந்தப்போ, ஒரு சிங்கம் கர்சித்ததாமே… ? “
நீதிபதி கர்ணன்
“ஆமாம்டா… நீதிபதி கர்ணன் என்ற சிங்கம் கர்ஜித்தது. வழக்கு விசாரணை நடந்துக்கிட்டு இருந்தப்போவே, உள்ளே நுழைந்த கர்ணன், “நீதிபதிகள் தேர்ச்சி முறை நியாயமானதாக இல்லை. நானும் நீதித்துறையில் ஒரு அங்கம்தான். என்னுடைய பெயரிலேயே இது தொடர்பாக ஒரு அபிடவிட்டை தாக்கல் செய்கிறேன். அதையும் கணக்கில் எடுத்துக் கொள்ளுங்கள்” னு திடீர்னு குறுக்கே வந்து பேசினார்.
திங்கள் அன்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், நீதிபதி கர்ணனோட நடத்தைக்கு கண்டனம் தெரிவிச்சிருக்காங்க”
“ஆனா. கர்ணன் நியாயமாத்தானே பேசியிருக்கார் ? “
“அதுக்கு பின்னாடியும் உள்குத்து இருக்கு. நீதிபதி கர்ணன் தற்போது வெளி மாநிலத்துக்கு மாற்றப்படும் பட்டியலில் இருக்கிறார். இந்த மாதிரி ஒரு ஸ்டன்ட் அடிச்சா, இதை வைத்து, தலித் வழக்கறிஞர்கள் மத்தியிலும், மற்ற வழக்கறிஞர்கள் மத்தியிலும் ஹீரோ ஆயிடலாம் னு அவர் போட்ட திட்டம்தான் இது. அவர் திட்டமிட்ட மாதிரியே, கர்ணன் அப்படி பேசிய பிறகு, பல்வேறு வழக்கறிஞர்கள் அவரை சேம்பரில் போய் பார்த்து, வாழ்த்து தெரிவிச்சிருக்காங்க. “
“அப்போ இவருக்கு மாறுதல் இல்லையா…. ? “
“இப்போ உச்சநீதிமன்ற நீதிபதிகள் சொல்லியிருக்கிற கருத்தைப் பாத்தா, அநேகமா, சிக்கிம் உயர்நீதிமன்றம்தான்னு நினைக்கிறேன்” என்று சொல்லிவிட்டு சிரித்தான் தமிழ்.
“சரி… சவுக்கு தளம் பத்தி சொல்லிக்கிட்டு இருந்தியே… என்ன ஆச்சு ? “
“தமிழ் ஊடக உலகிலேயே, ஊழல் நீதிபதிகளைப் பத்தி எழுதக் கூடிய ஒரே தளம் சவுக்கு தளம் மட்டும்தான். இது ஊழல் நீதிபதிகளுக்கு கடுமையான எரிச்சலை ஏற்படுத்தியிருக்கு. இதனால, எப்படியாவது இந்த தளத்தை முடக்கணும்னு கடுமையா முயற்சி எடுத்துக்கிட்டு வர்றாங்க. நீதிபதி சி.டி.செல்வம், இதில் கடும் முனைப்பா இருக்கிறார்”
“நீதிபதி சி.டி.செல்வம் பத்தியே சவுக்கு தளத்தில் வந்திருக்கே…. அப்போ அவர் அந்த வழக்கை விசாரிக்கிறது எப்படி முறையா இருக்கும் ? “
“சி.டி.செல்வம் இந்த மாதிரி நியாயமா நடந்து கொள்ளும் நீதிபதி இல்லைன்ற விவரத்தைத்தான் சவுக்கு தளத்தில் எழுதியிருக்காங்க. இதுதான் நீதிபதி சி.டி.செல்வத்துக்கு எரிச்சலா இருக்கு. அதனாலதான் அவரே இந்த வழக்கை விசாரிக்கிறார். “
“நீதிபதிகளைப் பத்தி எழுதுனா அவங்களுக்கு எரிச்சல் வர்றது இயல்புதான். இதுக்காக, கருத்து சுதந்திரத்தை முடக்கும் வகையில், இப்படி உத்தரவு போடும் நீதிபதிகள் தங்களைத் தாங்களே அம்பலப்படுத்திக்கிறாங்கன்னுதான் சொல்லனும். “
“சரி. போலாமா.. நேரமாயிடுச்சு என்று கூறியபடி, தமிழ் எழுந்ததும், அனைவரும் எழுந்தனர். சபை கலைந்தது”