தமிழ்நாட்டில் ஒரு கிராமத்தில் ஒரு தலித் பெண் இருக்கிறாள். அவள் இரவு நேரத்தில் தனியாகக் செல்கையில், அவளை 10 பேர் சேர்ந்து பாலியல் வன்முறைக்கு உள்ளாக்குகிறார்கள். அவளை அந்த நிலைக்கு ஆளாக்கியதில் 6 பேர் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இரண்டு பேர் தேவர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். ஒருவர் பிள்ளைமார். பாதிப்புள்ளாகிய பெண், தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர்.
இப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை. நடந்ததாக வைத்துக் கொள்வோம். என்ன நடந்திருக்கும் தெரியுமா ?
முகநூலே கொந்தளித்திருக்கும். ஆதிக்க சாதியின் அராஜகம். தலித்துக்கெதிரான ஒடுக்குமுறை என்று ஒரு பக்கம். மற்றொரு பக்கம் பெண் என்றால், அதுவும் தலித் பெண் என்றால் இளக்காரமா.. என்று மற்றொரு பக்கமும் வாரக்கணக்கில் நிலைச் செய்திகள் ஆவேசமாக வெளி வந்தபடி இருந்திருக்கும்.
விடுதலைச் சிறுத்தைகள் சார்பாக ஆர்ப்பாட்டம் அறிவிக்கப் பட்டிருக்கும். முஸ்லீம் அமைப்புகள் வீதியில் இறங்கியிருக்கும். மனித உரிமைப் போராளிகள் மற்றும் நடுநிலையாளர்கள் என்று தங்களை அழைத்துக் கொள்வோர், மாய்ந்து மாய்ந்து கட்டுரைகள் எழுதியிருப்பார்கள். உயிர்மை, காலச்சுவடு போன்ற இதழ்களில், தலித்தியம், பைத்தியம், வைத்தியம், வெங்காயம் போன்ற தலைப்புகளில், படித்தாலே தலை வலி வருகிறார்ப்போல கட்டுரைகள் எழுதுவார்கள். அதைப் படித்து விட்டு, ஆகா ஓகோவென்று சிலாகித்து, முகநூலில் வர்ணிப்பார்கள் முற்போக்காளர்கள். இது தவறு என்று சொல்ல இயலாது. ஒடுக்கப்பட்ட மக்களைச் சார்ந்து முற்போக்காளர்கள் நிற்பதே நியாயமான விஷயம்.
ஆனால், இது எதுவுமே காரைக்கால் விஷயத்தில் நடக்கவில்லை. காரைக்கால் சம்பவம் என்ன ?
“பாண்டிச்சேரியை அடுத்த காரைக்காலுக்கு தோழியுடன் வந்த திருவாரூரைச் சேர்ந்த 21 வயது பெண், அடுத்தடுத்து இரண்டு முறை கூட்டாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டார். இச்சம்பவம் டிசம்பர் 25-ல் நடந்துள்ளது.
தனது நண்பரைப் பார்ப்பதற்காக புதுச்சேரி வந்திருக்கிறார் பாதிக்கப்பட்ட இந்தப் பெண். தன்னுடன் வந்த தோழிக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால், இவர்கள் நண்பரின் வீட்டுக்குச் சென்றனர். அப்போது வெளியே நின்றிருந்த அந்தப் பெண்ணை, மூன்று ஆண்கள் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தனர்.
அந்தப் பாலியல் வல்லுறவுத் தாக்குதல் முடிந்ததும், தகவல் அறிந்து அந்தப் பெண்ணை அவரது நண்பர்கள் மீட்பதற்குள், அப்பெண்ணை மற்றொரு கும்பல் இன்னோர் இடத்துக்கு அழைத்துச் சென்று ஆறு முறை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் தொடக்கம் முதலே காரைக்கால் போலீஸார் கவனம் செலுத்தவில்லை என்று புகார் எழுந்தது. சிலரது யோசனையின் பேரில் வெளியே தெரியாமல் இந்த வழக்கில் பேசித் தீர்வு காண போலீஸார் முயன்றனர். பின்னர், இந்த வழக்கு வெள்ளிக்கிழமை புதுச்சேரி மாநில குற்றப் புலனாய்வுத் துறைக்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் என காரைக்காலைச் சேர்ந்த முகம்மது இர்பான், அப்துல்காசிம், முகம்மது அமீர் அலி, அக்பர் அலி, முகம்மது யூசுப், முப்பாயைத், அப்துல்நாசர், திருநள்ளாறைச் சேர்ந்த மதன், எழிலரசன், பாபுராஜன் ஆகிய 10 பேர்களைக் கைது செய்து வியாழக்கிழமை இரவு காரைக்கால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மீதமுள்ள 5 பேர்களில் இளம் குற்றவாளியை புதுச்சேரி சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். தேடப்பட்ட 4 பேரில் பைசல் என்பவர் வெள்ளிக்கிழமை காரைக்கால் நீதிமன்றத்தில் சரணடைந்தார். ஜெயகாந்தன் என்பவரை வேளாங்கண்ணியில் போலீஸார் கைது செய்தனர்.
இந்நிலையில் ஜெயகாந்தன் அளித்த தகவலின்பேரில் செல்லப்பா என்பவர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார். இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுவிட்ட நிலையில் தலைமறைவாக உள்ள ஆட்டோ ஓட்டுநர் மணி என்பவரை குற்றப்புலனாய்வுத் துறையினர் தேடி வருகிறார்கள்.
சிமென்ட், கம்பி உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களை ஆட்டோவில் ஏற்றிச் செல்லும் வேலையை செய்து வந்தவரான மணிக்கு, நகரில் உள்ள பல்வேறு கும்பலுடனும் தொடர்புள்ளதாம். வேளாங்கண்ணியில் கைது செய்யப்பட்ட ஜெயகாந்தன்தான் முதலில் இளம்பெண்ணை மிரட்டி மணியின் அறையில் வைத்துக்கொண்டு, தனது நண்பர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
ஜெயகாந்தன் மீது ஒரு பெண்ணைத் தாக்கியது உள்ளிட்ட 2 வழக்குகள் உள்ளன. கைது செய்து சிறையிலடைக்கப்பட்டுள்ள அப்துல் நாசர் 1994-ம் ஆண்டு ஒரு பெண்ணை வல்லுறவுக்கு உட்படுத்திய வழக்கில் 3 ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டு, மேல்முறையீட்டில் 18 மாத சிறை தண்டனை பெற்றவர். ரூ.5 ஆயிரம் பிணைத்தொகை கட்டி வெளியே வந்தநிலையில் மீண்டும் வல்லுறவு வழக்கில் அவர் சிக்கியுள்ளார்”.
இதுதான் காரைக்கால் சம்பவம். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளில் சரிபாதி தலித்துகள். சரிபாதி இஸ்லாமியர்கள். ஆனால், இந்த சம்பவம் குறித்து பெருமளவில் கண்டனங்களோ, எழவில்லை.
இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ள இஸ்லாமியர்களில் பெரும்பாலானோர், காரைக்கால் எம்.எல்.ஏ நஜீமின் உறவினர்கள். இந்த சம்பவம் குறித்து டைம்ஸ் நவ் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த நஜீம், பாதிக்கப்பட்ட பெண், விலை மாது, அதையும் காவல்துறை விசாரிக்க வேண்டும் என்று கொஞ்சமும் மனசாட்சி இன்றி பேட்டியளித்தார். இந்தப் பேட்டி மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்க வேண்டும். ஆனால், ஒரு சாதாரண சலனத்தைத் தாண்டி, பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தத் தவறியது.
நஜீம் எம்.எல்.ஏ
திமுகவைச் சேர்ந்த எம்.எல்.ஏ ஒருவர் இப்படிப் பேசியதற்காக, அவரை கட்சி கண்டித்திருக்க வேண்டும். அவர் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அதுவும் நடக்கவில்லை.
முற்போக்காளர்கள் என்று அழைத்துக் கொள்வோரின் கனத்த மவுனம், மிகவும் அதிர்ச்சியை வரவழைத்தது. எம்.எல்.ஏவை கண்டிக்காதது மட்டுமல்ல, அதில் சம்பந்தப்பட்டவர்கள் தலித் என்பதை கூட வெளிப்படையாக ஒப்புக்கொள்ள மறுக்கின்றனர். ஒரு பெண்… அவள் எந்த சமூகத்தைச் சேர்ந்தவளாக இருந்தாலும்…. இப்படிப்பட்ட மோசமான சீரழிவுக்கு உள்ளாகியிருக்கையில், அதில் ஈடுபட்டவர்களை அப்பட்டமாக துகிலுரிந்து அம்பலப்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் அது நடக்கவில்லை.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள் மற்றும் தலித்துகளின் செல்வாக்கு எத்தகையது என்பதை புரிந்து கொள்ளுங்கள். 24ம் தேதி இரவு நடந்த நிகழ்வுக்கு 26ம் தேதி விடியற்காலை வரை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவில்லை. பாலியல் வன்முறை தொடர்பான வழக்குகளில், உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படுவதும், சம்பந்தப்பட்ட பெண்ணை மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்புவதும் எவ்வளவு முக்கியமானது என்பதை அனைவரும் அறிவார்கள். ஆனால், காவல்நிலையத்தில், அந்தப் பெண் மோசமானவள் என்றும், பாலியல் தொழிலாளி என்றும்
தலித்துகளுக்கும், இஸ்லாமியர்களுக்கும் அநீதி நடக்கையில் பொங்கியெழ வேண்டியது, நடுநிலையாளர்கள் மற்றும் மனசாட்சி உள்ளவர்களின் கடமை என்பதில் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது. ஆனால், அதே தலித்துகளும், இஸ்லாமியர்களும், அயோக்கியத்தனங்களில் ஈடுபடுகையில், எவ்வித தயக்கமும் இன்றி அவர்களை விமர்சிக்கவும், கண்டிக்கவும் வேண்டும் என்பதுதான் ஒரு நடுநிலையாளருக்கான அடையாளம்.
அநீதிகளை அரங்கேற்றுபவர்களுக்கு சாதியோ, மதமோ கிடையாது. இந்தியாவே கண்டிராத ஊழலைப் புரிந்த ஆ.ராசா தன்னை ஒரு தலித் என்பதால் கட்டம் கட்டுகிறார்கள் என்றார். ஏழை தலித்துகளின் நிலங்களை அபரித்த அயோக்கிய நீதிபதி பி.டி.தினகரன் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தபோது தான் ஒரு தலித் என்பதால் விமர்சிக்கிறார்கள் என்றார். இது போல, சிறுபான்மை மற்றும் தலித் போர்வையை அயோக்கியர்கள் பயன்படுத்துகையில், அவர்களை கண்டிக்காத சமூகம் என்ன சமூகம் ? நீங்களெல்லாம் என்ன நடுநிலையாளர்கள் ?
தலித்துகள் ஒரு புறம் ஒடுக்கப்படுவது எவ்வளவு உண்மையோ, இஸ்லாமியர்கள் பாரபட்சமாக நடத்தப்படுவது எத்தனை யதார்த்தமோ, அத்தனை உண்மை, வலுவுள்ள தலித்துகள் ஆதிக்கம் செலுத்தி அயோக்கியத்தனங்களில் ஈடுபடுகிறார்கள் என்பதும். இஸ்லாமியர்களுக்கும் இது பொருந்தும். அரசு துறையில், தலித்துகளாக இருக்கும் காவல்துறை மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகளின் செல்வாக்கைக் கேட்டால் பிரமித்து விடுவீர்கள். இதே போல, ஒரு நபர் தீவிரவாதச் செயலில் ஈடுபட்டு, அது நீதிமன்ற விசாரணையில் நிரூபிக்கப்பட்டால் கூட, கண்ணை மூடிக் கொண்டு அது பொய் வழக்கு என்று பெரும்பாலான இஸ்லாமியர்கள் கூறுவதுண்டு. இதே போல, சாத்வி பிரக்யா சிங் மற்றும் கர்னல் புரோகித் ஆகியோர் தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நிலையில், அவர்கள் அப்பாவிகள், அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று இந்து சனாதனவாதிகளின் குரலும் உரத்து ஒலிக்கிறது.
சமூக விரோதச் செயல்களில் ஈடுபடும் நபர் யாராக இருந்தாலும், ஒட்டு மொத்த சமூகத்துக்கு விரோதியே… அவர்கள் கண்டிக்கப்பட வேண்டியவர்கள். தண்டிக்கப்பட வேண்டியவர்கள்.
தருமபுரி இளவரசன் திவ்யா காதல் விவகாரமும், அதையொட்டி நடந்த கலவரம் குறித்தும், வெகு விரிவாக எழுதி களப்பணி ஆற்றிய, பத்திரிக்கையாளர், செயற்பாட்டாளர், உண்மை அறியும் குழு நிபுணர், பெண்ணியவாதி, மற்றும் கவிஞர் இந்தியா டுடேவில் பணியாற்றும் கவின்மலர். இவர், இந்த சம்பவம் குறித்து, இந்தியா டுடேவில் தென் இந்திய நிர்பயா என்று ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அந்தக் கட்டுரையில் “இதற்கிடையே சமூக ஊடகங்களில் காரைக்கால் சம்பவம் தொடர்பாக மத ரீதியாகவும் சாதி ரீதியாகவும் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் தலித்துகளும், இஸ்லாமியர்களும்தான் என்று திரும்ப திரும்ப பிரச்சாரம் செய்யப்பட்டு வருவது குறித்து காவல் துறையினரிடம் கேட்டபோது, “இதில் மற்ற பிற்படுத்தப்பட்ட சாதியினரும் இருக்கிறார்கள்” என்கிறார் காவல்துறை ஆய்வாளர் ராஜசேகர்.”
சிறந்த பத்திரிக்கையாளர் விருது பெறும் கவின்மலர்
இப்படி கவனமாக சம்பவத்தில் ஈடுபட்ட தலித்துகளை பாதுகாப்பதில் கவனமாக இருக்கிறார் கவின்மலர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட தலித்துகள், இத்தனை மோசமான சம்பவத்துக்கு இரண்டு நாட்களுக்கு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாமல் கட்டப்பஞ்சாயத்த செய்யும் அளவுக்கு செல்வாக்கு படைத்தவர்கள் என்பதை வசதியாக மறந்து விட்டார். சரி. இந்தியா டுடேவில் சாதிப் பெயர்களை குறிப்பிடுவதற்கு தடையேதும் உள்ளதா என்று பார்த்தால், இந்தியா டுடேவில் 2013ல் வெளியான காதல் திருமணங்கள் குறித்த கட்டுரையில் முழுக்க முழுக்க சாதிப்பெயர்களைப் பயன்படுத்தியுள்ளார். இணைப்பு.
மற்ற சாதியினர் குற்ற சம்பவங்களில் ஈடுபடுகையில், அவர்கள் சாதியை வெளிப்படையாக குறிப்பிடும் முற்போக்காளர்கள், தலித்துகள் குற்றச் செயல்களில் ஈடுபட்டாலும், வெளிப்படையாக குறிப்பிட வேண்டும். அவ்வாறு குறிப்பிடத் தவறுவது அவர்கள் நடுநிலை என்ற போர்வையில் அயோக்கியத்தனங்களை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டியுள்ளது.
கவிதாவோடு பேச்சுவார்த்தை நடத்தும் வன்னி அரசு
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் மீது பாலியல் புகார் அளித்த கவிதா என்ற பெண்ணோடு, அக்கட்சியின் நிர்வாகி வன்னி அரசு, பேச்சுவார்த்தை நடத்துவதற்கு, அங்கே உள்ள ஒரு பத்திரிக்கையாளரோடு பேசி, அதற்கு ஏற்பாடு செய்தது கவின்மலர். அது மட்டுமல்லாமல், திருமாவளவன்-கவிதா விவகாரம் குறித்து, நெற்றிக் கண் இதழ் தொடர்ந்து எழுதி வந்தபோது, அந்த செய்தியாளரை தொடர்பு கொண்டு, திருமாவளவனைப் பற்றி இப்படி எழுதாதீர்கள்… அவர் ஒரு மிகச்சிறந்த தலைவர் என்று பேசியுள்ளார் கவின்மலர். திருமாவளவன், கவிதா விவகாரம் தனிப்பட்ட விவகாரமாக இருந்தாலும், காவல்துறையிடம் புகார் என்று வந்த பிறகு, அது குறித்து எழுதுவது ஊடகங்களின் கடமை. அதைச் செய்யாதே என்று தடுக்கும் கவின்மலர் போன்றோர்தான், இன்று நடுநிலையாளர் என்ற பெயரில் முற்போக்கு முகமூடிகளை அணிந்து வலம் வருகிறார்கள்.
சாதி வெறியோடு அலையும் ஆதிக்க சாதியினர் சமுதாயத்துக்கு எவ்வளவு ஆபத்தானவர்களோ, அதே போன்ற ஆபத்தானவர்கள்தான் முற்போக்கு முகமூடிகளை அணிந்து தலித்துகளின் தவறுகளை மூடி மறைத்து அவர்களை காப்பாற்ற முயலும் போலி நடுநிலையாளர்கள்.